இருட்டில் அழுதார்!
அத்தியாயம் 8
“உலகை மாற்றுவது போன்ற மிக முக்கியமான வேலைகளை செய்யப் போகிறாயா அல்லது உன்னுடைய மீதி வாழ்க்கையை சர்க்கரை தண்ணியை விற்று கழிக்கப் போகிறாயா?”
இப்படி ஒரு கலக்கலான கேள்வியைக் கேட்டு தான் பெப்சியின் தலைவராய் இருந்த ஜான் ஸ்கல்லியை ஆப்பிளின் தலைவர் பதவிக்கு அழைத்து வந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
ஐபிஎம் போன்ற பெரிய கம்பெனிகளோடு போட்டி போடுமளவுக்கு ஆப்பிள் வளர வேண்டுமென்றால் பெரிய கம்பெனிகளை கட்டி மேய்த்தவர்கள் வேண்டும். கம்புயூட்டர் கம்பெனி மக்களை விட உலகெங்கிலும் கோடானு கோடி மக்களை சென்றடையும் பெப்ஸி போன்ற கம்பெனி ஆட்களை அழைத்து வந்தால் என்ன?
இப்படி எல்லாம் யோசித்து தான் பெப்சியின் ஜான் ஸ்கல்லிக்கு சேர்வதற்கு 1 மில்லியன் டாலர், சம்பளமாக 1 மில்லியன் டாலர், ஆப்பிள் ஷேர்களில் ஒரு மில்லியன், வீடு வாங்க 2மில்லியன் டாலர் கடன் என்று கொட்டிக் கொடுத்து கூட்டி வந்தார்.
வந்த ஜான் ஸ்கல்லி செய்ததில் மிக முக்கியமான வேலை, ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளை விட்டு விலகுமாறு செய்தது.
அமர்க்களமாய் அறிமுகப் படுத்தப்பட்ட மேக் கம்புயூட்டர் ஆரம்ப நாட்களில் மிக நன்றாகத் தான் விற்றது. ஆனால் ஆரம்பக் கால வருமானத்தையும் அறிமுக செலவையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாய் வரவில்லை. நாட்கள் போக போக விற்பனை கட்டெறும்பாய் தேய்ந்து கடிக்க ஆரம்பித்தது.
சுடும் உண்மை நிலவரம் சங்கு சத்தம் என்பது ஸ்டீவ்வின் காதுகளுக்கு விழவே இல்லை.வழக்கம் போல சக்கரவர்த்தியாய் நாட்டாமை செய்துக் கொண்டிருந்தார்.மேக் மக்களே மேன்மையான மக்கள், மற்றவர்கள் எல்லாம் மக்குகள் என்றார்.
அவன் என்னை கிள்ளி விட்டான் என மேக் மக்கள் யாராவது ஸ்டீவ் ஜாப்ஸிடம் போய் சொன்னால் போதும். என் சங்கத்து ஆளை அடித்தவன் எவன் என டாபர்மேனாய் கடித்துக் குதறினார்.
மேக்கின் மூலம் வருமானத்திற்கு வழி செய்யாமல் இப்படி பலவாறாக அட்டூழிய ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். வாஸ் உருவாக்கிய பழைய ஆப்பிள் II தான் கம்பெனி கல்லாவை நிரப்பிக் கொண்டிருந்தது. ஆப்பிளை அழகாய் வைத்திருந்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை பாதாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. இப்படியே போனால் ஆப்பிள் அழுகி விடும் அபாயம் இருந்தது.
சேர்மனாய், ஸ்டீவ் ஜாப்ஸ் நடத்திக் கொண்டிருந்த ஒரு போர்டு மீட்டிங்கில்.போர்டு மீட்டிங்கில், கம்பெனி காலியாகி விடும் போல் இருக்கிறதே என்று பேச்சு எழுந்தது. மேக்கை மேய்த்தால் தான் சரி வரும் போல் இருக்கிறது. நீ பாட்டுக்கு தேமே என இருக்கிறாயே என்று ஜான் ஸ்கல்லியை குடைந்தார்கள்.
ஜான் ஸ்கல்லி, அமைதியாய், என்னுடைய பாஸான, சேர்மன் ஸ்டீவ் ஜாப்ஸ் தான் மேக் குரூப்பிற்கு தலைவராய் இருக்கிறார். அவரை நான் எப்படி அதிகாரம் செய்வது. அபச்சாரம். அநியாயம் என்றார். உடனே அனைவரும், அதானே. சேர்மன் சேர்மன்னாக மட்டும் இருக்கட்டும். மேக்கிற்கு தேவை தனி தலைவர் என்றார்கள்.
ஸ்டீவ் ஜாப்ஸ் சற்றும் எதிர்பார்க்காத தாக்குதல். தன் கம்பெனியில் தான் விரும்பும் வேலையை செய்ய முடியவில்லை. முன்னர் லிசாவில் இருந்து தூக்கினார்கள். இப்பொழுது மேக்கிலிருந்தும்.
என்னையா மேக்கிலிருந்து தூக்குகிறாய்.நான் உன்னை கம்பெனியிலிருந்து தூக்குகிறேன் பார் என கோதாவில் இறங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
ஜான் ஸ்கல்லியும் சளைக்காமல், யாரெல்லாம் என் பக்கம் யாரெல்லாம் ஸ்டீவ் பக்கம் என சின்னப் புள்ளத்தனமாய் பலப் பரீட்சை எல்லாம் நடத்தினார். ஸ்டீவ் ஜாப்ஸும் ஏட்டிக்கு போட்டியாய் சில்லறைத்தனத்திற்கு குறை வைக்கவில்லை.
கம்பெனியை ஆரம்பித்தவர், கம்பெனியின் சேர்மன்,ஆப்பிள் நிறுவனத்தில் அதிக பங்குகள் வைத்திருக்கும் பங்குதாரர் என்றெல்லாம் இருந்தாலும், நினைத்தேன் தூக்கினேன் என ஜான் ஸ்கல்லிக்கு ஸ்டீவ் ஜாப்ஸால் கல்தா கொடுக்க முடியாது. போர்டு மெம்பர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஏன் போயும் போயும் ஸ்டீவ் ஜாப்ஸ் பேச்சைக் கேட்பார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை கொஞ்ச நாள் முன் வரை, ஸ்டீவ் ஜாப்ஸ் போதை மருந்து சாப்பிட்டுக் கொண்டு ஜடாமுடி வளர்த்துக் கொண்டிருந்த பச்சா. ஏதாவது வேண்டும் என்றால் அவ்வப் பொழுது அழுது அடம் பிடிக்கும் சின்னக் குழந்தை.ஸ்கல்லியோ பெப்ஸியில் தம் கட்டியவர்.
பலப் பரீட்சையில், கடைசியில் ஜான் ஸ்கல்லியே வென்றார். கம்பெனியின் அதிகார வரைபடத்தை மாற்றினார். கம்பெனியின் அன்றாட அலுவல்கள் அதிகாரங்கள் அனைத்திலும் இருந்தும் ஜாப்ஸ் விடுவிக்கப்பட்டார்.
ஜாப்ஸ் கடுப்பாகி விட்டார் வெறுத்துப் போய் விட்டார் என்று எல்லாம் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது ஜாப்ஸின் அன்றைய நிலைமையை.
அன்று இரவு ஸ்டீவ் ஜாப்ஸ் தற்கொலை செய்துக் கொள்வாரோ என்றுக் கூட அவரின் நண்பர் ஒருவர் பயந்ததாகவும், மாடிப்படி ஜன்னல் வழி இறங்கிப் பார்த்தால் இருட்டில் தரையில் பாயில் படுத்திருந்த ஜாப்ஸ் இருட்டிலே அழுததாகவும் செவி வழி செய்திகள் உண்டு!
ஆனால் சேர்மன் அவர் தான். சப்பாணி இராஜா தான். ரொம்ப சிம்பிளாக ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மன்மோகன் சிங்!
கம்பெனியை விட்டு கிளம்புகிறேன் என குதித்த ஜாப்ஸை சமாதானப் படுத்தினார்கள். என்ன இருந்தாலும் நீ தான் சேர்மன், சேர்மன் கம்பெனியை விட்டு போவதா என்றார்கள். ஆனால் யாரும் எதற்கும் அவரை சீண்டவில்லை. சம்பிரதாயமாகவோ தவறியோ கூட என்ன நடக்கிறது என்று சொல்லவில்லை. சுருக்கமாய் ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், மன்மோகன் சிங்.
கம்பெனியின் உட்கட்சிப் பூசல்களை எல்லாம் தவிர்க்க வெளிநாட்டுப் பயணம் சென்றார். பிரான்ஸ் பல்கலைகழகங்களில் மேக்கை விற்க முயன்றார். இரஷ்யாவில் கம்புயூட்டர் விற்க முடியுமா என்று எல்லாம் இறங்கிப் பார்த்தார்.அரசியலில் இறங்கலாமா என்று ஆராய்ச்சி செய்தார். விண்வெளிப் பயணம் செய்ய விருப்பம் என்றார். எந்த பருப்பும் வேகவில்லை.
இதை விட கொடுமையாக,புரொபஸராக விருப்பமா என்று எல்லாம் விண்ணப்பங்கள் வந்தன. நல்ல வேளை, நல்ல காமெடி சார் என ஸ்டீவ் ஜாப்ஸே வந்ததை வேண்டாம் என சொல்லி எதிர்கால சந்ததியினரை காப்பாற்றினார்.
எவ்வளவு நாள் தான் அவரும் பிஸியாய் இருப்பது போல் காட்டிக் கொள்வது. எதையாவது செய்ய வேண்டும் என மனம் விரும்பியது. நமக்கு எது வரும் என உட்கார்ந்து யோசித்தார். அழகான புதிய கம்புயூட்டர்களை உருவாக்குவது.
அவ்வளவு தான் கிளம்பினார், கல்லூரிகளுக்கான கம்புயூட்டர்கள் தயாரிக்க. அதற்கு ஆட்களையும் சேர்த்துக் கொண்டார். அப்புறம் தான் அவருக்கு நினைவுக்கு வந்தது. அடடா, நாம் ஆப்பிளின் சேர்மன். நாம் இப்படி எல்லாம் தனிக் கடை ஆரம்பிக்க வேண்டுமென்றால் போர்டு டைரக்டர்களிடம் சொல்ல வேண்டும்.
போர்டு டைரக்டர்களிடம் சொன்னவுடன், அதற்கென்ன பேஷ் பேஷ், தாராளமாக, ஆப்பிளும் அதில் பத்து சதவிகிதம் முதலீடு செய்ய அனுமதி தர வேண்டும் எனக் கேட்டார்கள். சேர்மன் பதவியிலிருந்து எல்லாம் விலக வேண்டாம். ஒரு வாரம் யோசனை செய்யுங்கள் என்றார்கள்.
ஆனால் அடுத்த நாள் ஸ்டீவ் ஜாப்ஸின் புதுக் கடையில் சேரவிருக்கும் சங்க உறுப்பினர்களின் பெயர்களை பார்த்தவுடன் ஜான் ஸ்கல்லி ஷாக் ஆகிவிட்டார். இந்த விஷயம் எல்லாம் விஷமாய் பரவ ஆரம்பித்தது. ஆப்பிள் ஆட்டம் கண்டது.
ஜாப்ஸை தூக்கி விடுவார்கள் என்று விஷயம் பரவியது. பார்த்தார், ஸ்டீவ் ஜாப்ஸ். நீங்கள் என்னடா தூக்குவது, நான் விலகுகிறேன் என முடிவு செய்தார்.
கம்புயூட்டர்களோடு லேசர் பிரிண்டர் வேண்டும் என்ற ஆசைப்பட்ட அதை நனவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உருவாக்கிய மேக்கில் தன்னுடைய இராஜினாமா கடிதத்தை டைப் செய்து லேசர் பிரிண்ட் அவுட் எடுத்தார்.
தபால் தந்தி எதுவும் இல்லாமல் தன்னுடன் சேர்ந்து கம்பெனியை உருவாக்கிய மைக் மார்க்குலாவிடம் தன் கைப்பட இராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
23 வயதில் மில்லியன் டாலர், 24 வயதில் பத்து மில்லியன் டாலர்,25 வயதில் நூறு மில்லியன் டாலர் என வளர்ந்தவர், தன் முப்பதாவது வயதில், தன் சொந்த கம்பெனியிலிருந்து வெளியேறியிருந்தார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எல்லார் மனதிலும் எழுந்த கேள்விக்கு கிடைத்த பதில் தான், NEXT. ஜாப்ஸின் அடுத்த கம்பெனி.
(தொடரும்)
0
அப்பு








June 29th, 2011 at 10:11 pm
விறுவிறுப்பாக இருந்தது இந்த அத்யாயம் …. நனி நன்று … தொடரட்டும் …
June 29th, 2011 at 10:47 pm
இனிமேல் மன்மோகன் சிங் அவர்களை எதற்கும் பிரயோஜன்படாதவ்ர் என்று யாரும் கூறிவிட முடியாது. என்ன்வொரு அற்புதமான உதாரணம் காட்ட கூடிய ‘உதாரண புருஷராக’ அவரை உயர்த்தி காட்டி உள்ளீர்கள். உங்களுக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது
ஒரு அழகிய பெண் உங்களுடன் கைகோர்த்து வருவது போல் நகைச்சுவை உங்கள் எழுத்துடன் கூடவே வருகிறது. உங்கள் எழுத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.
அது சரி பெப்சி என்ற மாபெரும் நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும், அதை விட்டு விட்டு… ஆப்பிள் போன்ற ஐ.டி. காம்பெனியில் சேர்ந்தால்..உடனே லோன் போட்டு வீடு வாங்க வேண்டியதுதானா? அதற்கு முன்பு அவருக்கு வீடே இருக்காதா?
ஐ.டி. அல்லது சாஃப்ட்வேர் கமபெனியில் வேலைக்கு சேர்ந்த உடன் லோன் போட்டு வீடு வாங்க வேண்டும் எனப்து சாபகேடா அல்லது நேர்ந்து விட்ட கடனா?
தன் சொந்த கம்பெனியிலிருந்து வெளியேறியிருந்தார்.. என்ற் வரி கொஞ்ச்ம் “TOUCHING” ஆகத்தான் இருந்தது.
ஸ்டீவ் ஜாப்ஸ் அடுத்து என்ன செய்யபோகிறார் என்பதை NEXT என அவரது கம்பெனி பெயரிலேயே “தொடரும்” போட்டுள்ளீர்களே உங்களுக்கு ஸஸ்பென்ஸும் நல்லா வருது.
July 1st, 2011 at 2:45 am
“ஆனால் சேர்மன் அவர் தான். சப்பாணி இராஜா தான். ரொம்ப சிம்பிளாக ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மன்மோகன் சிங்!”
Brilliant, Timing is good!! Manmohan singh is used atleast here.
July 2nd, 2011 at 9:02 am
படிக்க விறுவிறுப்பாக இருந்தது.. உண்மையாகக் கூறினால் விரைவில் முடிந்து விடப்போகிறதே இன்னும் கொஞ்சம் நீண்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்து தான் படித்தேன்.
கலக்கல் போங்க!
July 5th, 2011 at 3:20 pm
சிவா,
நன்றி, நிச்சயம் தொடரும். ஆதரவுக்கு மிக்க நன்றி.
tanuthias-க்கு
நகைச்சுவை சஸ்பென்ஸ். என்ன வச்சு காமெடி எதுவும் இல்லியே? அந்த அழகிய பெண் மட்டும் யாரென சொல்லுங்கள்
Saravanan,
நன்றி! நன்றி
கிரி,
நீண்டால் நன்றாக இருக்குமா எனத் தெரியவில்லை! பார்க்கலாம். எல்லாம் ஆப்பிள் செயல்!