குங்ஃபூ பாண்டா

அடுத்த இராஜாவைத் தேர்ந்தெடுக்கச் சென்ற யானை, தலைநகரை வேடிக்கைப் பார்க்க வந்த சமையக்காரன் பையனை இராஜாவாக்கி விடுகிறது. இராஜகுரு கடுப்பாகிவிடுகிறார். இராஜா சாகுந்தறுவாயில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இராஜாவை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு சூப்பராக மாற்றுமாறு சத்தியம் வாங்கிக் கொண்டு செத்து விடுகிறார்.

சமையக்கார பையன் சூப்பர் சுப்புவாக தயாரான தருணம், வில்லன் வீட்டு வாசலில் நிற்கிறான். வில்லன் வேறு யாருமில்லை. அடுத்த இராஜா நீ தான்

என ஆசை காட்டி மோசம் செய்யப் பட்ட இராஜ குருவின் தத்துப் பிள்ளை. நாட்டை அபகரிக்க நினைக்கும் அவனை வென்று இராஜாவாகிவிடுகிறான் சமையக்காரன் மகன்.

மாதம் மும்மாரி பெய்ய நல்லாட்சி புரிந்துகொண்டிருக்கும் வேளையில், அடுத்த சோதனை. மற்றோரு வில்லன். அவனோடு முதல் முறை சண்டை போடும் போது தோற்றுப் போக, கைதியாக பிடிபட்டு இருக்கும் போது வில்லன் டார்டாய்ஸ் கொளுத்துகிறான். பிளாஷ்பேக்.

கதாநாயகனால் தான் செத்துப் போவோம் என கோடங்கி குறி சொன்னதால் கதாநாயகனை குழந்தையாய் இருக்கும் போதே கொன்று விட முயற்சி செய்தது. கதாநாயகன் அநாதையானது தத்துப் பிள்ளையானது என எல்லாம் வெளி வருகிறது.

அப்புறமாய் கோவம் வந்து தப்பிக்கவில்லையானால் அவன் எல்லாம் கதாநாயகன்? அப்படி தப்பிக்கும் போது கன்னாபின்னாவென அடி வாங்கிவில்லையெனில் கதை எப்படி வளரும். அடிபட்டு இருக்கும் கதாநாயகனுக்கு கோடங்கி உதவி செய்ய, தேறி வரும் கதாநாயகன் வில்லனைக் கொல்ல சுபம்.

இந்த கதையை அங்கே இங்கே அப்படி இப்படி மாற்றி மெருகேற்றி திரைக்கதையை தக தகவென தயார் செய்ய வேண்டியது. அதில் ஆக்‌ஷன், கொஞ்சமாய் நெஞ்சைத் தொடும் செண்டிமெண்ட், நிறைய காமெடி ,ரொமான்ஸ் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் சமச்சீர் விகிதத்தில் கலந்து விட வேண்டும்.

அப்புறமாய் கதாபாத்திரங்களை மிருகங்களாகி மாற்றி விட வேண்டும். புலி குரங்கு, வாத்து, காண்டாமிருகம், ஆடு, ஒநாய், ஏன் மயிலை வில்லனாக கூட வைத்துக் கொள்ளலாம். இது என்ன இராமநாராயணன் படமா எனக் கேட்டு இராமநாராயணனைக் கேவலப் படுத்த வேண்டாம்.;)

கதாபாத்திரங்களை அனிமேஷனில் மிருகங்களாக மாற்றி விட்டாலும், அப்படி மாற்றாமலிருந்தால் அந்த பாத்திரத்திற்கு யார் நடித்திருப்பார்களோ அவர்களையே குரல் கொடுக்க வைக்க வேண்டும்.

ஜாக்கிசானின் பாத்திரம் குரங்காகி மாறியிருந்தாலும் கூட. புலியை பெண்புலியாக்கி விட வேண்டும். ஏஞ்சலினா ஜோலியைக் குரல் கொடுக்க வைக்க வேண்டுமல்லவா. இப்படி எல்லாம் பெரிய பெரிய நட்சத்திரங்கள் தான் கண்டிப்பாய் குரல் கொடுக்க வேண்டும். குழந்தைகள் படம் என காம்பரமைஸ் எல்லாம் செய்யக் கூடாது.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக, சமையக்கார மகனாக ஒரு சாப்பாட்டு பண்டாரம், மன்னிக்கவும் பாண்டா, இராஜாவாவதற்கு பதிலாக குங்ஃபூ வாரியர்.

அவ்வளவு தான் முதல் இரண்டு பாராவில் குங்ஃபூ பாண்டா. பின்னர் வருவதில் குங்ஃபூ பாண்டா பார்ட் டூ ரெடி. பார்ட் த்ரீக்கு அச்சாரமாக, கிளைமாக்சில் பாண்டாவின் அப்பாவிற்கு தன் பையன் உயிரொடு இருப்பது தெரிய வருவதாக காட்ட வேண்டும்.

அட இதற்குத் தான் குங்குமப்பூ போண்டா படம்  பிரமாதம் என ஊரெல்லாம் அல்லோகலமா என்று கேட்டால், இல்லை!

அது எப்படி இது எப்படி என எதையும் யோசிக்க விடாமல், ராக்கெட் வேக விறுவிறுப்பான  திரைக்கதை. ஒவ்வொரு காட்சியையும் கதாபாத்திரத்தையும் கண்ணும் கருத்துமாக கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

யாரையும் அடிக்காமல், அடிவாங்காமல், கெட்ட வார்த்தைகள் இல்லாமல், நெளிய வைக்கும், முகம் சுளிக்க வைக்கும் வசனம் இல்லாமல் நம்மையறியாமல்  குபீர் சிரிப்பை வரவைக்கும் வசனங்கள். தியேட்டர் அதிர்கிறது.

இவற்றுக்கு பக்கபலமான பிண்ணணி  இசை. ஹான்ஸ் ஜிம்மர்.

அனைத்திற்கும் மேலாக “வாடா செல்லம்” என்று கொஞ்ச வைக்கும் ,“போ” என பெயர் கொண்ட  அந்த பாண்டா கரடி.  அதுவும் அதன் முழியும் பேச்சும் அடடா அடடா, அட்டகாசம் அட்டகாசம்.

அனிமேஷன் கண்ணுக்குத் தெரியாத அளவு ரொம்ப தத்ரூபமான சூப்பரான சண்டைக் காட்சிகள்.

படத்தை பார்க்கும் போது பல சமயம் பல காட்சிகளில் தமிழ் சினிமா பார்ப்பது போலத் தோன்றலாம். ஆனாலும் இந்த படத்திற்கு தமிழ் டப்பிங்கிற்கு வசனம் எழுதுபவர்களும் குரல் கொடுப்பவர்களும் அசலுக்கு  அசிங்கம் செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!

இந்தப் படத்திற்கு இந்த வருட ஆஸ்கார் கிடைக்காமல் போகலாம்.ஆனால். இந்தப் படத்திற்கு  பிள்ளைகளை அழைத்துச் செல்லாத பெற்றோருக்கு, அவர்களின் பிள்ளைகளிடமிருந்து இந்த வருடத்தின் கெட்ட அப்பா அம்மா விருது நிச்சயம்.

இப்படிக்கு சற்றே பெரிய்ய்ய குழந்தை!

O

பிரதீப்குமார்

3 comments so far

 1. சந்தான இலட்சுமணன்
  #1

  எல்லோருக்கும் புரியும் படி simple and lucid ஆக எழுதினால் நலம். Complex writing is not great writing. இதை தமிழ் எழுத்தாளர்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ ?

 2. Pradeep
  #2

  என்னையும் ஒரு எழுத்தாளன், அதுவும் தமிழ் எழுத்தாளன் என்று சொன்னதற்கு மிகவும் நன்றி

 3. விஜய்வீரப்பன் சுவாமிநாதன்.
  #3

  விமர்சனம் படிக்கிறததுக்கு முன்னாடி, “ஐய்யையோ விமர்சனம் படிச்ச கத தெரிஞ்சுடுமேன்ணு பயந்தேன்”.. ஆனா இத படிச்சத்துக்கு அப்புறம் சத்தியமா ஒண்ணுமே புரியல. கொஞ்சமாச்சு மனசாட்சியோட எழுதுங்க சாமிகளா…

  பாரா – இன்னும் இந்த மாதிரி நாலு கட்டுரை வந்துது, அப்புறம் தமிழ் பேப்பேர் அவ்ளோதான். எடிட்டிங் எடிட்டிங் சொல்லுவீங்களே, அது எங்கங்க?

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: