பணமாத்மா!
அத்தியாயம் 4
காரேஜில்தான் கம்பெனி என்றாலும் அதற்கும் காசு வேண்டும். ஆளுக்கு 500 டாலர் உஷார் செய்ய வேண்டும்.தன்னுடைய 500 டாலர் முதலீட்டுக்கு வாஸ் அவரிடம் இருந்த ஒரு HP கால்குலேட்டரை 500 டாலருக்கு விற்றார். ஸ்டீவ் ஜாப்ஸ் அவருடைய வோல்கஸ் வேகன் பஸ்ஸை 1000 டாலருக்கு விற்றார். வாங்கியவன் அட்வான்ஸான 500 டாலர் மட்டும் தான் கொடுத்தான். வாங்கிய சில வாரங்களில் எஞ்ஜின் வெடித்தால் மீதிக்காசை எவன் தருவான்?
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு காசைத் தேற்றி ஹோம் புரூ கிளப்பில், ஐயா வாங்க இதைப் பாருங்க என்று கடை விரித்த ஸ்டீவ்களிடம் கொள்ள வந்தார் பவுல் டெரல்.
ஹோம் புரூ கூட்டங்களுக்கு வந்து போய்க் கொண்டிருந்த பவுல் டெரல் என்பவர் பைட் ஷாப் என்னும் கடையை திறக்கவிருந்தார். அவருக்கும் வாஸ் தயாரித்த பொருளுக்கு நல்ல கிராக்கி இருக்கும் எனத் தோன்றியது. என்னிடம் வந்து அவ்வப்பொழுது பார்த்து பேசிக்கொண்டிரு என ஸ்டீவ்விடம் சொல்லி விட்டுப் போனார். அவ்வப்பொழுதா? அது வரை எல்லாம் பொறுக்க முடியாது என அடுத்த நாளே போய் நின்றார், ஸ்டீவ். முழு கம்புயூட்டராக கிடைக்குமெனில் ஒன்றுக்கு 500 டாலர் தருவதாகவும் 100 கம்புயூட்டர்கள் வேண்டுமென்றார். அவர் கையில் கம்புயூட்டர் இவர்களின் கையில் காசு என்றார். ஜாப்ஸின் அடக்க விலை அதிகமில்லை 220 டாலர் தான்!
ஆர்டர் வாங்கியாகிவிட்டது. டெலிவரி செய்ய வேண்டுமென்றால் தயாரிக்க வேண்டும். பார்ட்ஸ் வாங்க வேண்டும். அதற்குக் காசு வேண்டும். அப்போதைய சிலிக்கன் வேலி எல்லாம் கால் கடுக்க நடந்தார், ஸ்டீவ் ஜாப்ஸ். கடைசியாய் ஒரு வழியாய் ஒரு கடையைப் பிடித்தார். பக்கிப் போலிருந்த ஸ்டீவ்வையும் மதித்து பேசினார். பவுல் டெரலிடம் ஆர்டர் வாங்கியிருக்கிறேன் என்று சொன்னதை அவரிடம் பேசி கன்பர்ம் செய்து விட்டு பொருட்களை முப்பது நாட்கள் கடன் தவணையில் தருகிறேன் என்றார் அந்தக் கடைக்காரர். பவுலுக்கு போன் செய்யும் வரை பக்கம் நகர்வதாயில்லை என்ற ஸ்டீவ் ஜாப்ஸ் பார்ட்ஸை வாங்கிக் கொண்டு தான் கடையை விட்டு வந்தார்.
ஒரு வழியாய் தயார் செய்து பவுல் டெரலிடம் காட்டினால் கம்புயூட்டர் எங்கே என்றார். ஸ்டீவ் விட்ட கதையில் அவர் எதிர்பார்த்திருந்தது வேறு.ஆனால் இவர்கள் செய்துக் கொடுத்தது வேறு. ஆனால் அவர் தன் தலையில் அடித்துக் கொண்டு பிரச்னை எதுவும் செய்யாமல் சொன்னவாறு பணம் கொடுத்தார். ஆப்பிள் என்ற விருட்சத்திற்கு அவரும் உரம் போட்டு அவரால் முடிந்தளவு தண்ணீர் ஊற்றினார்.
கம்பெனி ஆரம்பித்து விட்டோமே. பெயர் வேண்டாமா என்று இரண்டு ஸ்டீவ்களூம் ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில், .ஒரிகன் [oregan] என்னுமிடத்தில் ஆப்பிள் தோட்டங்களுக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் போய் வந்து கொண்டிருந்தார், ஆப்பிள் என பெயர் வைத்தால் என்ன என்றார்? அச்சோ பீட்டிள்ஸ் ஆப்பிள் ரெக்கார்ட் என்று ஒன்றை வைத்துள்ளார்களே, பின்னால் பிரச்னை வருமே என்று வாஸ் அப்பொழுதே சொன்னார். எங்கே கேட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். வாஸ் சொன்ன வாய் முகூர்த்தம் பீட்டிள்ஸோடு ஆப்பிளின் முட்டல் மோதல் தொடர்ந்தது. பேருக்கு மொத்தமாய் சொந்தம் கொண்டாட முப்பது வருடங்கள் பிடித்தது.
ஸ்டீவ்வுக்கு ஏன் அந்தப் பிடிவாதம்? ஆப்பிள் [apple] எனப் பெயர் வைத்தால் அப்பொழுது அவர் வேலை செய்துகொண்டிருந்த அட்டாரியின் பெயருக்கு முன்னால் டெலிபோன் டைரக்டரியில் வரும் என்ற சின்னப்புள்ளத்தனமான எண்ணம் தான்.
முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1, 1976 வருடம் ஆரம்பித்த ஆப்பிளின் ஆரம்ப கால வரலாற்றில் மூன்று முட்டாள்கள், ரான் வேய்னே, ஹெச்பி கம்பெனி, கனடாவை சேர்ந்த கம்மோடர் என்னும் கம்பெனி.
ரான் வாய்னே. ஆப்பிள் கம்புயூட்டர் கம்பெனி என்பதற்கு பத்திரம் அடித்தவரே இந்த ரான் வாய்னே தான். ஜாப்ஸூக்கு 45, வாஸ்ஸுக்கு 45 அவருக்கு 10 பர்செண்ட் என பார்ட்னர்ஷிப் டீல். ஆரம்ப காலத்தில் சில பல வேலைகளில் மிகவும் ஒத்தாசையாக இருந்தார். ஆனால் அவருக்கு ஆரம்ப கால கஷ்டங்கள் பெரிதாகவும் லாபம் மிகவும் குறைவாகவும் பட்ட காரணத்தினால் வெறும் 800 டாலர் வாங்கிக் கொண்டு விலகிச் சென்று விட்டார்.
வாஸ் HP கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தார். சட்டப் பிரகாரம் வாஸ் செய்யும் டிசைன்கள் எல்லாமே HP கம்பெனிக்குத் தான் சொந்தம். ஆப்பிள்-1 ஐ விற்கலாம் என்று முடிவு செய்தபோது, இப்படி ஒரு டிசைனை நான் செய்துள்ளேன். கம்பெனி இதைத் தயாரிக்க வேண்டும் என நினைக்கிறேன் என்று வாஸ் சொன்ன போது, இது எல்லாம் நம் கம்பெனி தரத்திற்கு இல்லை. எங்களுக்கும் இதற்கும் துளி சம்பந்தமில்லை எனச் சொல்லி விட்டார்கள். பின்னர் ஹெச்பி கம்புயூட்டர் தயாரிக்கலாம் என முடிவு செய்த போதும் ஆட்டத்திற்கு என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என வாஸ் எவ்வளவோ கெஞ்சிக் கேட்ட போதும் செல்லாது செல்லாது என அவனை நிராகரித்து விட்டார்கள். ஹெச்பியின் நஷ்டம்.ஆப்பிளின் லாபம்.
கம்பெனி களை கட்ட ஆரம்பித்தும், ஸ்டீவ் ஜாப்ஸின் வீட்டு காரேஜ் தான் ஆப்பிளின் தலைமையகமாக இருந்தது. கிளைகள் எல்லாம் வளர்ப்பதற்கு காசைத் தேற்றும் பொருட்டு அந்த காரேஜ்ஜில் ஆப்பிள்-1 மற்றும் ஆப்பிள்-11 ஐ கனடாவை சேர்ந்த கம்மோடர் கம்பெனிக்கு டெமோ காட்டிக் கொண்டிருந்தார்கள். கம்பெனியை மொத்தமாய் விற்பதற்கு சில லட்சம் டாலர்கள் என ஸ்டீவ் சொன்ன விலையைக் கேட்டு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுகிறானே என வாஸ்ஸே வருத்தப்பட்டார். முட்டாள் என மனதில் ஸ்டீவ் ஜாப்ஸை திட்டிக் கொண்டே நடையைக் கட்டினார்கள் அந்த முட்டாள்கள். [பின்னொரு காலத்துல் யாகூவின் ஜெரி யாங்க்கும் இப்படித் தான் மிக சல்லிசாய் மில்லியன் டாலருக்கு விலைக்கு வந்த கூகிளை விலை அதிகம் என கோட்டை விட்டு விட்டு வடை போச்சே என புலம்பிக் கொண்டிருந்தார்]
ஆப்பிள் I, ஆப்பிள் II ஆ? ஆம் முதன் முதலில் பவுல் டெரல்லுக்கு விற்ற கம்புயூட்டருக்கு வாஸ் வைத்த பெயர் ஆப்பிள் I. பவுலைத் தவிர மற்றவர்களுக்கு விற்பதற்கு வாஸ் வைத்த விலை, சைத்தானின் நம்பர் என்றறியப்படும் 666.66 டாலர்.
ஆப்பிள்-I என்று பெயர் வைத்திருக்கிறோம்.ஆப்பிள்-II தயாரிக்க வேண்டாமா என்ற எண்ணமோ அல்லது, முழுமையான கம்புயூட்டர் எங்கே என்று பவுல் டெரல் கேட்டது காரணமா அல்லது தான் செய்தவற்றை மேலும் மேலும் சிறப்பாக்க வேண்டும் என்ற வாஸ்ஸின் இயல்பான எண்ணமா எது காரணம் எனத் தெரியவில்லை.ஆப்பிள்-I-ஐ தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஆப்பிள்-II ஐத் தயார் செய்தார் வாஸ்.
பிளாக் அண்ட் ஒயிட்டில் இருண்ட காலத்தில் இருந்த கம்புயூட்டர்களுக்கு ஆப்பிள்-11-ல் கலர் அடித்தார், வாஸ். கம்புயூட்டர் இயக்குவதற்கு தேவையான பேஸிக் புரோகிரமைத் தானே தயார் செய்து, கம்புயூட்டரை ஆன் செய்தவுடன் பயன்படுத்துவதற்கு ஏதுவாக செய்து வைத்திருந்தார். பேசிக்கிற்காக பில் கேட்ஸிடம் போய் நிற்கும் அவசியம் அப்பொழுது ஏற்படவில்லை. [பில் கேட்ஸை எல்லாம் ஒரு பொருட்டாய் மதித்து அவரிடம் கையேந்தும் நிலைமையில் ஆப்பிள் அப்பொழுதில்லை.பின்னாளில் ஏற்பட்டது]கடையில் வாங்கி வீட்டிற்கு கொண்டு போனவுடன் அதில் வேலை செய்யுமளவுக்கு முழுமையாக இருந்த உலகின் முதல் கம்புயூட்டர் இது தான். அது மட்டுமல்ல பல அம்மாக்களின் வயிற்றெரிச்சல் வளரவும் விதை போட்டார், வாஸ். கம்புயூட்டரில் கேம்ஸ் ஆடுவதற்கு வழி வகை செய்து வைத்திருந்தார்.
இவ்வளவு சிறப்பாக செய்திருந்த கம்புயூட்டருக்கு சரியான மரியாதை செய்யவும், வியாபாரத்தை வளர்க்க வேண்டுமென்றாலும் ஹோம் புரு கிளப்பில் எல்லாம் இதை அறிமுகப்படுத்தினால் சரி வராது என்று முதல் பெர்ஸன்ல் கம்புயூட்டர் திருவிழா நடந்த அட்லாண்டிக் சிட்டிக்கு கிளம்பினார்கள்.
அங்கு ஸ்டீவ் கற்ற முதல் பிஸினஸ் பால பாடம் – சிறப்பான பொருள் இருந்தால் மட்டும் போதாது. அதற்கு விளம்பரம் செய்ய வேண்டும். நாம் கம்பெனி என்று சொல்லிக் கொண்டு வளர்வதற்கு நிறைய காம்ப்ளான் குடிக்க வேண்டும்; போக வேண்டிய தூரம் மிக மிக அதிகம் எனப் புரிந்தது. அனைத்திற்கும் கடவுளான காசு கைக்கொள்ளா அளவு வேண்டும்.
மீண்டும் பயணத்தைத் தொடங்கினார், ஸ்டீவ் ஜாப்ஸ், காசிக்கு அல்ல, கடவுளான காசைத் தேடி, சிலிக்கன் வேலியில்!
- தொடரும்
O
அப்பு









June 1st, 2011 at 6:45 pm
முந்தைய அத்தியாயங்களின் லிங்கை கொடுக்கமுடியுமா?
June 2nd, 2011 at 9:00 am
You can find them here
http://www.tamilpaper.net/?cat=555
June 6th, 2011 at 9:38 am
||பேருக்கு மொத்தமாய் சொந்தம் கொண்டாட||
||வளர்வதற்கு நிறைய காம்ப்ளான் குடிக்க வேண்டும்||
அருமையான கட்டுரைத் தொடர்,மேற்கண்டது போன்ற தேவையற்ற உவமான உவமேயங்களைத் தவிர்த்தால்…அவை கட்டுரையின் வேகத்தைப் பெருமளவு தடை செய்கின்றன…