‘எனக்கு எதற்கு சன்மானம்?’
திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் எதிரே இருக்கும் வல்லப அக்ரஹாரத்தில் உள்ள மேன்ஷனில் ஆறாம் நெம்பர் அறைக்குப் போகாத பத்திரிகையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்; பல மூத்த பத்திரிகையாளர்களை நான் முதல் முறையாக சந்தித்தது அந்த அறையில்தான். தமிழ் நாட்டு அரசியல் பற்றியோ அல்லது தேர்தல் நேரத்திலோ சென்னைக்கு வரும் வடநாட்டுப் பத்திரிகையாளர்கள் அந்த அறைக்குப் போகாமல் ஊருக்குப் புறப்பட மாட்டார்கள். தி.மு.க. காங்கிரஸ், ம.தி.மு.க. கம்யூனிஸ்ட் என்று பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களில் நேரம் கிடைக்கும்போது அந்த அறைக்கு வந்து அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் செல்பவர்கள் சிலர் என்றால், இன்னும் சிலரோ வாரம் ஒரு நாள் டைம் டேபிள் போட்டுக்கொண்டு வந்துவிட்டுப் போவார்கள். நக்கீரன் கோபால் தன் ஆபீசுக்குப் போகிறாரோ இல்லையோ,அந்த அறைக்கு வந்து தினம் வந்து அவரை நலம் விசாரித்துவிட்டுப் போவார். அந்த அறையில் வாழ்ந்தவர், சின்னக்குத்தூசி என்கிற தியாகராஜன்.
கடந்த ஓராண்டு காலமாக மருத்துவமனையிலேயே வாசம் செய்து, சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று [மே 22] அன்று காலை காலமானார். அவரது உடல் அவர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த நக்கீரன் அலுவலக வளாகத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு, மாலையில் தகனம் செய்யப்பட்டது.
கலைஞர் கருணாநிதியையோ, தி.மு.க.வையோ விமர்சனம் செய்தால், மனுஷர் வரிந்து கட்டிக்கொண்டு பதிலுக்குக் கடுமையாக விமர்சனம் செய்வார். படிப்பவர்களுக்கு அவர் பேனாவுக்கு இங்க் ஊற்றுவாரா? இல்லை பச்சை மிளகாய் சாறை ஊற்றுவாரா? என்று சந்தேகம் வரும். அவரது காரசாரமான எழுத்துகளைப் படித்துவிட்டு, அவரை நேரே பார்த்தால், ‘இந்த சாந்த சொரூபியா இப்படி எழுதிகிறார்?” என்று நம்ப மறுப்பார்கள். வெள்ளை வேட்டி; வெள்ளை கதர் சட்டை. மெலிந்த தேகம். பேச்சில் ரொம்பவும் சாஃப்ட். பெரியாரது கடவுள் மறுப்புக் கொள்கைக்கு வாரிசு.
அவரது அறைக்குச் சென்றால், இரண்டு கட்டில், இரண்டு நாற்காலிகள் இருக்கும். அதிலும் ஒரு கட்டில் முழுக்க புத்தகங்களும் பத்திரிகைகளும்தான். நியூஸ் பேப்பர்களிலிருந்து எடுத்துவைக்கப்பட்ட முக்கியமான செய்திகள், கட்டுரைகள் அறையெங்கும் இருக்கும். அவர்தான் உண்மையான புத்தகப்புழு. ஒருகட்டத்தில் அந்த அறையில் இதற்கு மேல் புத்தகங்களும், பத்திரிகைகளும் வைக்க இடமில்லை என்ற சூழ்நிலையில், அடுத்த அறையையும் அவர் ஆக்கிரமிக்கும்படி ஆனது.
சில ஆண்டுகளுக்கு முன்னால், அந்த மேன்ஷனுக்கு அருகாமையில் இருக்கும் இன்னொரு லாட்ஜுக்கு இடம்பெயர்ந்துவிட்டார். கீழே வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுவிட, கடந்த சில மாதங்களாக அவரது ஜாகை பில்ராத் ஹாஸ்பிடல். அவருக்கு உடம்புக்கு ரொம்ப முடியாமல் இருந்தது. எப்போது போனாலும் மணிக்கணக்காகப் பேசிக்கூடிய அவர், சில காலமாக பேச மிகவும் சிரமப்பட்டார். ஆஸ்பத்திரிப் படுக்கையில் இருந்தபடியே முரசொலிக்கு எழுதிக்கொண்டிருந்தவரால், கடைசிக் காலத்தில் எழுதவே முடியவில்லை. ஆள் அனுப்பி அவர் சொல்லச் சொல்ல எழுதி எடுத்துக் கொண்டுபோனார்கள்.
சின்னக் குத்தூசியின் நினைவாற்றல் அபாரமானது. ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஜெயின் கமிஷனின் அறிக்கை ரகசியமாக வெளியாகி, சந்தேக ஊசி தி.மு.க. பக்கம் திரும்பிய நேரத்தில், குமுதத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் நாட்டில் அமைக்கப்பட்ட பல்வேறு விசாரணைக் கமிஷன்கள், அவற்றின் அறிக்கைகள், அதன் மீதான நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைத் தொகுத்து ஒரு கட்டுரை எழுத வேண்டி இருந்தது. சின்னக்குத்தூசி இருக்கும் தைரியத்தில், கட்டுரை எழுதித் தர ஒப்புக்கொண்டுவிட்டேன்.
அவரைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னதும், “நோ பிராப்ளம்! நாளைக்கு வாங்க! உங்களுக்கு வேண்டிய தகவல் தறேன்!” என்றார். மறுநாள் போனபோது, பஞ்சாப் முதலமைச்சராக இருந்த பிரதாப் சிங் கெய்ரான் மீது கூறப்பட்ட லஞ்ச ஊழலை விசாரிக்க போடப்பட்ட சுதந்திர இந்தியாவின் முதல் விசாரணக் கமிஷனில் தொடங்கி, ஜெயின் கமிஷன் வரை ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தார். ஒவ்வொரு கமிஷனும் எதற்காகப் போடப்பட்டது? யார் நீதிபதி? கமிஷனின் விசரணையின் போக்கு, அதில் நடந்த அரசியல் தலையீடுகள், அறிக்கைகளின் ஹை லைட்ஸ், அதன் பிறகு அந்த விசாரணைக் கமிஷன் அறிக்கை என்னவாயிற்று? என்பது வரை ஒரு குழந்தைக்குச் சொவது போல விளக்கினார். “நீங்க எழுதினப்புறம், எடுத்துக்கிட்டு வாங்க! ஒரு தடவை படிக்கிறப்போ, ஏதாவது விட்டுப் போனது ஞாபகம் வரும்” என்றார். மறுநாள் சில திருத்தங்கள், புது தகவல்கள் சொன்னார். கட்டுரையில் அவரது பெயரை குறிப்பிட விரும்புவதாகச் சொன்னபோது, “எனக்குத் தெரிஞ்ச பழைய விஷயங்களை உங்களுக்குச் சொன்னேன். நீங்க எழுதறீங்க! என் பெயர் எதுக்கு?” என மறுத்துவிட்டார்.
அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் என்னை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் உண்டு. தமிழறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் மறைந்த சமயம் விகடன் நிருபர் சின்னக் குத்தூசியை சந்தித்து, கி.ஆ.பெ. பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொண்டுபோய் ஒரு அஞ்சலிக் கட்டுரை எழுதினார். கட்டுரை வெளியானவுடன், விகடனிலிருந்து ஒரு காசோலையைக் கொண்டுவந்து கொடுத்தார் நிருபர். “கி.ஆ.பெ. பத்தி எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்கு சொன்னேன், நீங்க கட்டுரை எழுதினீங்க! எனக்கு எதுக்கு சார் சன்மானம்?” என்று சொல்லி அந்த செக்கை வாங்க மறுத்துவிட்டார்.
“எனக்குத் தெரியாது. ஆபீஸ்ல உங்களுக்கு ஒரு செக் கொடுத்தாங்க! உங்ககிட்டே கொடுத்திட்டேன்” என்று நிருபர் சொல்லி அவர் பக்கத்தில் செக்கை வைத்துவிட்ட போதிலும், “எனக்கு பேங்க் கணக்கு இல்லை; இந்த செக் வேணாம்” என்று நிருபரது கையில் செக்கை திருப்பிக் கொடுத்துவிட்டார். புறப்பட்டுப் போன நிருபர், இரண்டு நாட்களில் அந்த செக்குக்கு உரிய பணத்தை ரொக்கமாக எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். “இந்தப் பணத்தை நான் வாங்கிக்கறது நியாயமில்லை” என்று குத்தூசி எவ்வளவோ மறுத்தும், நிருபர் அந்தப் பணத்தை அவரிடமே விட்டுவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.
அந்தப் பணத்தை குத்தூசி என்ன செய்தார் தெரியுமா? அன்றைக்கு நியூஸ் பேப்பரில் ஒரு சிறுமியின் இதய அறுவைச் சிகிச்சைக்கு பண உதவி கேட்டு வெளியாகி இருந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
சின்னக்குத்தூசி நல்ல சிறுகதைகளின் பரம ரசிகர். பல எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை நினைவு கூர்ந்து படிக்கிற சுவாரசியத்துடன் கதைகளை நினைவு கூறுவார். பெரியார் பற்றியும், காமராஜர் பற்றியும், அண்ணா, கலைஞர் பற்றியும் ஏராளமான விஷயங்களை இளம் பத்திரிகையாளர்களுக்குச் சொல்வதில் அவருக்கு மிகுந்த ஆர்வம். பல ஆண்டுகளுக்கு முன்னால் காலச்சுவடு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் மிகவும் விரிவாகப் பேசி இருந்தார்.
அவரது அறையை ஊடகத்துறை வேலைவாய்ப்பு அலுவலகம் என்றால் மிகை இல்லை. திடீரென்று பத்திரிகை முதலாளிகளால் வேலை நீக்கம் செய்யப்பட்ட பல பத்திரிகையாளருக்கு அவர் வேலைக்கு ஏற்பாடு செய்துகொடுத்திருக்கிறார். அவரது அறைக்கு வருகிறபோது, சந்தித்து, காதலித்து திருமணம் செய்துகொண்ட பத்திரிகையாளர்கள் கூட உண்டு.
“கிணற்றுத் தவளை” என்ற தன்னை வர்ணித்துக் கொள்ளும் சின்னக்குத்தூசியின் அறைக்கு வரும் விசிட்டர்களுடனான உரையாடலின் முக்காலே மூணு வீசத்தில் அரசியல் நெடி வீசும் என்றாலும், தேர்தெடுத்த சிலரிடம் கிரிக்கெட், கர்நாடக இசை மற்றும் இலக்கியம் பற்றிப் பேசுவார். வெகு அபூர்வமாக தன் சொந்தக் கதையைக் கூட சுவையாக சொல்லுவார். திருவாரூர்க்காரர். அவரது அப்பா ராமநாதன் சமையல்காரர். அம்மா கமலம் வசதியானவர்கள் வீடுகளில் சமையல் வேலை செய்வார். அந்த வீடுகளிலிருந்து அம்மா வாங்கிவந்த விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளை படித்ததால், ஏற்பட்ட பத்திரிகைகள் மீதான ஆர்வம், அவரை அந்த வயசிலேயே கதைகள் எழுதுவதற்குத் தூண்டியது. கண்ணதாசனின் தென்றல், தாமரை, பிரசண்ட விகடன் போன்ற பத்திரிகைகளில் சொந்தப் பெயரிலும், திருவாரூர் அன்புத்தம்பி என்ற புனைப்பெயரிலும் கதைகள் எழுதி இருக்கிறார்.
பெரியார் நடத்திவந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று, கொஞ்ச காலம் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்திருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாது. தமிழ் செய்தி, நவசக்தி, எதிரொலி, முரசொலி என்று பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்; தலையங்கம், அரசியல் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். அவருக்கு கொக்கரக்குளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கினியன் போன்ற புனைப்பெயர்களும் உண்டு. ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது, நரசிம்ம ராவ் குறித்த சின்னக்குத்தூசியின் விமர்சனக் கட்டுரையை கலைஞர் ரசிக்கவில்லை. காங்கிரஸ் குறித்து விமர்சிக்க வேண்டாம் என குத்தூசிக்கு ஒரு குறிப்பு அனுப்பினார். தொடர்ந்து கலைஞர் போனில் பேசியபோது, தலையங்கம் எழுதும் பொறுப்பிலிருந்து விடுவிக்கும்படிக் கேட்க, கலைஞர், ‘நானே தலையங்கம் எழுதுவேன்” என்றபோது, ” நீங்கள் எழுதினால், தலையங்கம் இன்னும் சிறப்பாக இருக்கும்; நிறைய பேர் படிப்பார்கள்” என்று பட்டென்று சொல்லிவிட்டு, ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார். அதன் பிறகுதான் அவரது எழுத்துகள் நக்கீரனில் வெளியாக ஆரம்பித்தன. ஜெ ஆட்சிக்கு வந்தபோது, நடத்திய நள்ளிரவு கலைஞர் கைது நடவடிக்கையை அடுத்து, பழசையெல்லாம் மறந்துவிட்டு முரசொலிக்கு மீண்டும் போக ஆரம்பித்தார்.
செம்பை, முசிறி, மதுரை மணி அய்யர், எம்.எஸ். செம்மங்குடி, யேசுதாஸ் என்று பலரது இசை கேசட்களை கேட்டு ரசிப்பார். அப்போது அந்தந்த வித்வான்களைப் பற்றி – அவர்களது விசேஷ குணாதிசயங்கள், கச்சேரி அனுபவங்கள், அவர்களைப் பற்றிய அந்தக்கால விமர்சனங்கள் என்று நிறைய, மிகவும் சுவாரசியமான விஷயங்களைச் சொல்லுவார். அவரது இசை ஆர்வத்தைப் பாராட்டினால்,” காவேரி தண்ணி குடிச்சா தானா சாவேரி பாட வரும்” என்று பழமொழி சொல்லிவிட்டு, ” நான் வெறும பேசறேன்; பாடலியே!” என்பார்.
கபில்தேவ், சச்சின் இரண்டுபேரும் அவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர்கள். இன்னொருபக்கம் அந்தக் காலத்து எழுத்தாளர்கள் கல்கி, தொடங்கி அகிலன், நா.பா. , மௌனி, கரிச்சான் குஞ்சு, வல்லிக் கண்ணன் ஊடாக சாரு நிவேதிதா வரை பலரைப் பற்றியும் நிறைய பேசுவார்.
அவரது அறையில் வெள்ளைவெளேரென்று சலவை செய்யப்பட்ட சில கதர் வேட்டி, சட்டைகள் ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒரு நாள் அவரது வேட்டியில் இருந்த சலவைக் குறி அவரது பெயருக்கு சம்மந்தமில்லாத ஒன்றாக இருப்பதை கவனித்துவிட்டு, அதுபற்றி விசாரித்தபோது ஒரு சுவாரசியமான தகவலைச் சொன்னார். சின்னக் குத்தூசியும், ஈ.வி.கே. சம்பத்தும் ரொம்ப குளோஸ். சம்பத், தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கியபோது, அவரது செயலாளராக கூடவே இருந்தார்; தமிழ்நாடு முழுக்க இருவரும் ஒன்றாக டூர் போவார்கள்; இருவரும் ஒன்றாகவே இருந்தார்கள். சம்பத்தின் உடைகளை வெளுக்கும் தொழிலாளி, ஒரே வீட்டுத் துணிதானே என இரண்டு பேரது வேட்டி, சட்டைகளிலும் ஒரே மை குறியை போட்டுவிட்டாராம். சம்பத் மறைவுக்குப் பிறகும், இவரது உடைகளில் அதே சலவைக் குறி தொடர்ந்தது. “சம்பத் அண்ணன் ஞாபகமா இருந்திட்டுப் போகட்டும்னு நானும் அப்படியே விட்டுட்டேன்” என்று சொன்ன போது அவரது குரலில் நெகிழ்ச்சி இருந்தது!
O
எஸ். சந்திரமௌலி








