வாங்கிப்போடு, பார்த்துக்கலாம்!

ஷேர் ஹோல்டர் பணமே ஸ்கைப்பை வாங்குவோமே என 8.5 பில்லியன் டாலரை அசராமல் அள்ளி இறைத்து ஸ்கைப்பை வாங்கியுள்ளார், மைக்ரோசாப்ட்டின் ஸ்டீவ் பால்மர்.

அழையாத விருந்தாளியாக ஸ்கைப்பின் கம்பெனிக் கதவைத் தட்டி, விற்று விடுங்கள் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று ஆறே வாரங்களில் சம்பந்தத்தை நிச்சயம் செய்து ஏப்ரல் 18-ம் தேதி தட்டு மாற்றியிருந்தும் மே 10-ம் தேதி அன்று தான் உலகுக்கு சொன்னார்கள்.

வாங்கியவுடன் சொல்லாமல் ஏன் ஆறப்போட்டு சொன்னார்கள் என்று பார்த்தால், அன்று தான் கூகிள் ஒரு மாநாட்டை ஆரம்பித்து ஆண்ட்ராய்ட்டைப் பற்றி சில பல அறிவிப்புகள் செய்யும் நாள். அன்று ஸ்கைப்பை ஸ்வாஹா செய்தது பற்றி சொன்னால் கூகிளின் பப்ளிக்குட்டி கொஞ்சம் பாழாகும் என்ற சின்னப்புள்ளதனமான எண்ணம் தான். பெரிதாக காரணம் வேறில்லை. [கூகிள் க்ரோம் நோட்புக்கை கூட அந்த மாநாட்டில் தான் கூகிள் அறிமுகப்படுத்தியது]

ஸ்கைப்பின் எதிர்காலத்தை ஆராயும் முன், சுருக்கமான சரித்திரம்.

ஸ்வீடனைச் சேர்ந்த நிக்லஸ் ஜென்ஸ்ட்ராம் மற்றும் ஜானஸ் ப்ரையஸ் என்ற இருவரும் 2003-ல் ஸ்கைப்பைத் தொடங்கினார்கள். கம்புயூட்டர் இருக்கிறதா, சரி. நெட், இருக்கிறது. மைக், இருக்கிறது.வாய் கொஞ்சம் அதிகமாக. அப்ப சரி. வருஷம் 365 நாள், 24 மணி நேரமும் காசில்லாம ஸ்கைப்பில் பேசலாம் என்றார்கள். கம்புயூட்டரில் இருந்து போனிற்கு பேச கொஞ்சமாய் காசு கொடுத்தால் போதும் என்றார்கள். ஒசி என்பதால் உலகம் ஓடோடி வந்தது. ஒசிக்கு ஓடோடி வருவது உலக பொதுமுறை வழக்கம், நமக்கு மட்டும் தான் என்று நாம் தான் தப்புக் கணக்கு போடுகிறோம்!

ஸ்கைப்பை சகலரும் பயன்படுத்துவதை இ.பே பார்த்தார்கள். இதை வாங்கிப் போட்டால் நம்ம சைட்டில் கொடுக்கல் வாங்கல் செய்பவர்கள் கலந்து பேச உதவும்.வியாபாரம் வானளவு உயரும் என 2.5 பில்லியன் டாலர்கள் கொடுத்து 2005-ல் ஸ்கைப்பை இ.பே வாங்கியது. வியாபாரத்தை வளர்க்க வாங்கியது உயிர் ஆதாரத்திற்கு உலை வைக்கும் விதமாய் இம்பேர்மெண்ட்[Impairment] செலவு என 2007-ல் இ.பேவிற்கு ஒரு 1.4 பில்லியன் டாலர் வேட்டு வைத்தது, ஸ்கைப்.

இந்த செலவை எல்லாம் சரி கட்ட விற்றுத் தொலைத்தால் தான் என்ன என யோசித்தார்கள். யார் வாங்குவார்கள்? பங்குச் சந்தையில் போடுவோம். ஆலாய்ப் பறந்து மக்கள் வாங்குவார்கள் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கையில் ஸ்கைப்பை விற்றவர்கள், கம்பெனியைத் தான் விற்றோம், கம்பெனியின் பேடண்ட்களை விற்கவில்லை என்று வில்லன்களாய் வில்லங்கம் செய்தனர். இப்படி எல்லாம் பிரச்னை இருக்கும் போது பங்குச் சந்தையில் பைசா பெயராது. அதற்கு மேல், பங்குச் சந்தை நிலவரமும் அவ்வளவு பிரகாசமாய் இல்லை.

பங்குச் சந்தை போனால் பரவாயில்லை என கம்பெனியின் 70% பங்கை இ.பே  2009-ன் முடிவில், கம்பெனியை முதன் முதலில் உருவாக்கியவர்களுக்கு கொஞ்சம், கனடாவைச் சேர்ந்த பென்சன் குரூப்பிற்கு கொஞ்சம், சில்வர்லேக் என்னும் முதலீட்டுக் கம்பெனிக்கு கொஞ்சம் என பங்குப் போட்டு 2 பில்லியன் டாலருக்கு விற்றது.[நான்கு வருடங்களுக்கு முன் ஸ்கைப்பின் 100% பங்கை 2.5 பில்லியன் டாலருக்கு இ.பே வாங்கியது என்று முந்தின பாராவில் படித்தது நமக்கு மறக்கலாம். இ.பே விற்கு மறக்குமா?]

இப்படி ஒரு பாரம்பரியமிக்க, நஷ்டத்திலும் கடனிலும் ஒடிக் கொண்டிருக்கும் கம்பெனியை இவ்வளவு விலை கொடுத்து மைக்ரோசாப்ட் வாங்க காரணம் என்ன?

பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்தவன் எவ்வளவு நாள் தான் பொறுப்பான்? பங்குச் சந்தை தான் பிரகாசமாகி விட்டதே. சந்தையில் கடை விரிப்போம். இறைத்ததை மக்களிடமிருந்து அள்ளுவோம் என அதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருந்தனர்.

விற்பது என அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். மறு பேரம் பேச முடியாத தொகை, அதை கையோடு தரும் எங்களுக்கு ஏன் கொடுக்க கூடாது என கேட்டு மைக்ரோசாப்ட் வாங்கியது. அவ்வளவு தான்.

விற்பனையின் லாப நஷ்ட கணக்கைப் பார்த்தால்,இவ்வளவு நாள் ஸ்கைப்பை கட்டி வாழ்ந்ததன் பயனாய், ஆரம்பத்தில் நஷ்டப்பட்டாலும் முடிவில் லாபம் என இ.பே வை பொறுத்தவரை எல்லாம் சுபம். கனடா பென்சன் குரூப்பிற்கும் ஸ்கைப்பை உருவாக்கியவர்களுக்கும் கூட நல்ல லாபம். பணலாபத்தை விட மிக முக்கியமான ஒன்று. உலகம் உருண்டை என்ற பிலாசபியும் இந்த விற்பனை மூலம் நிஜமாகியிருக்கிறது.

சில்வர்லேக் முதலீட்டு குரூப்பில் மார்க் ஆன்டிரசன் என்பவர் ஸ்கைப்பை வாங்க ஒரு 50 மில்லியன் டாலர் கைக்காசைப் போட்டிருந்தார் அது மும்மடங்காக பெருகியிருக்கிறது. 2 பில்லியன் டாலருக்கு வாங்கி 8.5 பில்லியன் டாலருக்கு விற்றால் விற்ற அனைவருக்கும் லாபம். அதில் மார்க்கின் லாபத்திற்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் என கேட்கும் முன் யாரிந்த மார்க் என்பது முக்கியமாகிறது.

90 களின் மத்தியில் நடந்த மொஸைக் வார்ஸில், மைக்ரோசாப்ட்டால் ஒழிக்கப்பட்ட நெட்ஸ்கேப் நேவிகேட்டர் என்ற பிரவுஸரை உருவாக்கியவர் தான் இந்த மார்க் ஆன்டிரசன். அன்று அவருக்கு வருமானத்தில் உலை வைத்த மைக்ரோசாப்ட் இன்று வாரி வழங்கியிருக்கிறது. ஆண்டவன் கணக்கு தனி கணக்கு.

ஸ்கைப்பை வைத்துக் கொண்டு மைக்ரோசாப்ட் என்ன தான் செய்யும்?

 • மைக்ரோசாப்ட்டின் கேமிங் டிவைஸ் மற்றும் மற்ற ஸர்வீஸ்களில் இணைக்கலாம்.
 • அலுவலகங்களுக்கு ஸ்கைப் சொல்யுஷன் கொடுத்து காசு பார்க்கலாம்.
 • நம்மைப் போன்ற கன்ஸ்யுமர்களுக்கு இலவசமாக தந்து விளம்பரங்களில் காசு பார்க்கலாம்.[170 மில்லியன் பயனீட்டாளர்கள் என்றால் சும்மாவா]

காசு பார்க்க முடியாவிட்டாலும் பின்வருவனவற்றை செய்யலாம்.

 • விண்டோஸ் மற்றும் விண்டோஸ் போனில் மட்டும் தான் கிடைக்கும். ஆண்டிராய்ட், மேக் இவற்றுக்கு எல்லாம் டாட்டா காட்டலாம்.[அப்படி எல்லாம் செய்ய மாட்டோம் என உறுதி கொடுத்திருக்கிறார்கள்]
 • ஃபேஸ்புக்கில் ஸ்கைப்பை எளிதாக பயன்படுத்த வழிவகை செய்து கூகிள் வாய்ஸிற்கு குடைச்சல் கொடுக்கலாம். [ஃபேஸ்புக்கில் மைக்ரோசாப்ட் முதலீடு செய்திருப்பதை மனதில் வைத்துக் கொள்ளலாம்]
 • ஸ்கைப்பை வாங்கியதன் மூலம் சொந்தமான பேட்டண்ட்களை காரணம் காட்டி அதை பயன்படுத்துகிறாய், இதை பயன்படுத்துகிறாய், நஷ்ட ஈடு கொடு, லைசன்ஸ் எடு என மற்ற கம்பெனிகளின் மீது கேஸ் போட்டு குண்டாயிசம் செய்யலாம்.

நம்மைப் போன்றவர்களுக்கு இதனால் லாபமில்லை நஷ்டம் தான்.

அலுவலகங்களில் ஸ்கைப் வந்தால், மொபைலிற்குப் பதிலாய் ஸ்கைப்பில் கூப்பிட்டு சுடுவார்கள். சாரி, திட்டுவார்கள்.

பர்சனல் பயன்பாடுகளில், மைக்ரோசாப்ட் பிராடக்ட் என்னும் பெயரை கட்டி காப்பாற்றும் பொருட்டு அடிக்கடி க்ராஷ் ஆகித் தொலைக்கலாம்.குறிப்பாக கடல் கடந்து காதலியிடம் கடலை போட்டுக் கொண்டு இருக்கையில்!

O

பிரதீப்குமார்

6 comments so far

 1. ram
  #1

  //அலுவலகங்களில் ஸ்கைப் வந்தால், மொபைலிற்குப் பதிலாய் ஸ்கைப்பில் கூப்பிட்டு சுடுவார்கள். சாரி, திட்டுவார்கள்.// ha ha unmai.

 2. thendral
  #2

  ///பர்சனல் பயன்பாடுகளில், மைக்ரோசாப்ட் பிராடக்ட் என்னும் பெயரை கட்டி காப்பாற்றும் பொருட்டு அடிக்கடி க்ராஷ் ஆகித் தொலைக்கலாம்.///

  Konjam over anney!

 3. Narain
  #3

  சில அடிப்படை தவறுகள்

  ஸ்கெப் உருவாக்கப்படவில்லை. உண்டாக்கப்பட்டது. நேப்ஸ்டரை ரெக்கார்டிங் கம்பெனிகள் காலி பண்ண சமயத்தில், காஸா (Kazaa) என்கிற P2P தளத்தினை தான் முதலில் இருவரும் நிறுவினார்கள். ரிக்கார்டிங் நிறுவனங்கள் காப்பிரை பிரச்சனைகளை உண்டாக்கியதால், என்ன செய்வது என்று யோசித்தப்போது காஸாவில் பயன்படுத்திய P2P நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவானது தான் ஸ்கெப்.

  மைக்ரோசாப்ட்டை முட்டாள் நிறுவனமாக சித்தரிக்கும் ஸ்ட்ரீயோடைப் கட்டுரையாக இருக்கிறது. மைக்ரோசாப்ட் முட்டாள் நிறுவனமல்ல. ஊரே கேலியாக சிரித்த போது $100 மில்லியன் பேஸ்புக்கில் போட்டு, பேஸ்புக்கின் விளம்பரத்தை பிங் வழியாக வழங்கப் போகும்போது தான் அதன் சாமர்த்தியம் புரிந்தது.

  கம்யுட்டர் கம்பெனிக்கு எதற்கு கேமிங் என்று எள்ளி நகையாடி, ஊரே கைக் கொட்டி சிரித்து, காசை முதல் மூன்று வருடங்கள் கரியாக்கிய பின்னர் தான், இன்றைக்கான x box எழுகிறது. ஜப்பானிய நிறுவனங்கள் கோலோச்சின [சோனி, நிடெண்டோ] கேமிங் கன்சோல் துறையில், இன்றைக்கு மைக்ரோசாப்ட் ஒரு சவாலான நிறுவனம்

  பிங் கின் பல்வேறு கூறுகளை கூகிள் காப்பியடித்தது தான் வரலாறு.

  ஸ்கெப்பினை மைக்ரோசாப்ட் வாங்கியதற்கான முக்கிய காரணம், மொபைல். ஸ்கெப் கிட்டத்திட்ட 170 நாடுகளின் தரைவழி, மொபைல் நிறுவனங்களோடு தொடர்புடையது. இது மைக்ரோசாப்ட் தலைகீழாய் நின்றாலும் கிடைக்காது. இணையவழி பேச்சு சேவைகள்(VOIP)+ விண்டோஸ் 8 என்பது செம பேக்கேஜ். இது நாள் வரை எந்த மொபைல் கேரியரும் நேரடியாக கொடுக்காதது. அது இப்போது சாத்தியப்படலாம். இன்னமும், ஒரு படி மேலே போய், 3ஜி அலைக்கற்றை பயன்படுத்தும் நாடுகளில், பேச்சு என்பதையே வாய்ப் வழியாக தரமுடியும், பேச்சின் டேட்டா பைட்கள் மிச்சம்.

  உலகம் மிக முக்கியமாக இயங்குவது பகிர்ந்தளிப்பில் (Sharing Economy) அந்த பகிர்ந்தளிப்பினை துரிதப்படுத்துவது P2P நுட்பம். அதை வைத்துக் கொண்டு செய்யக்கூடிய சாத்தியங்கள் ஏராளம். ஆகவே, தொலை நோக்கு பார்வையில் மைக்ரோசாப்ட் செய்தது ஒரு சாமர்த்தியமான விஷயமே.

 4. மாயவரத்தான்....
  #4

  ஷோபனா ரவி நியூஸ் வாசிக்கிறது மாதிரி இருக்குது நம்ம நரைய்ன் (வித்தியாசமா சொல்லனும்லே!) ஸ்கெப் என்று சொல்வதும்!

 5. மாயவரத்தான்....
  #5

  “Skype rhymes with ripe and type.”

  இப்படித் தான் சொல்கிறது குதிரை அதன் வாயாலேயே!

  http://forum.skype.com/index.php?showtopic=58031

 6. அப்பு
  #6

  Narain,

  Kazaa developerகள் தான் இதையும் உண்டாக்கினார்கள் என்பது எல்லாம் கட்டுரையைக் கடந்தது என விட்டு விட்டேன் 🙁

  போட்ட 100 மில்லியனில் எவ்வளவு எடுத்திருப்பார்கள்? [மீண்டும் ஒரு டாட்காம் பஸ்ட்டை நோக்கித்தான் சிலிக்கன் வேலி செல்கிறது எனவும் எனக்கு ஒரு எண்ணம் உண்டு]

  பிங், கூகிளின் results-ஐ காப்பியடிக்கிறது என்று கூகிள் கூப்பாடு போட்டதாக நினைவு? இல்லையா?

  எத்தனை windows8 மொபைல்கள் புழக்கத்தில், பயன்பாட்டில் இருக்கும்?

  மைக்ரோசாப்ட்டின் லிங்க் இருக்கும் போது இது தேவையா? அதுவும் அதுவும் ஸ்கைப்பை விட மிக சிறப்பாக இருக்கிறது என ஒரு சாரார் கூறும்போது!

  என் எண்ணமெல்லாம், முதலில் வாங்கியிருக்க வேண்டுமா? ஆம் எனில் இந்த விலை அவசியமா?

  மைக்ரோசாப்ட்டின் வரலாற்றில் இப்படி வாங்கிப் போட்டவற்றை வீணடிக்காமல் உபயோகப்படுத்தியது மிகக் குறைவு.இல்லையென்று சொன்னால் தெரிந்துக் கொள்கிறேன் 🙂

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: