பால்கனி முத்தம்

கேட்டி என்றழைக்கப்படும் கேத்தரீன் மிட்டில்டன் என்ற அந்தப் பெண்ணின் கல்யாணம், உலகே உற்றுப் பார்த்த காஸ்ட்லியானதாக கல்யாணம். கல்யாண செலவுகளைக் கழித்து கல்யாணத்திற்கு லீவு எடு கொண்டாடு என்பதினால் மட்டுமே பிரிட்டனுக்கு ஐந்து பில்லியன் பவுண்டு பாழாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.[கிட்டத்தட்ட 2 லட்சம் 2G]

மாமியாரைப் போலவே, ஒரு குடிமகள், கோமகளாவது, முப்பது வருடங்களுக்குப் பிறகு நடந்திருக்கிறது என்பதை விட இப்படி நடப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் என்பது இந்த கல்யாணத்தை  வரலாற்று சிறப்பு மிக்கதாக்கலாம். சர்வாதிகாரிகளை எல்லாம் சுவாஹா செய்யும் இந்தக் காலத்தில் மன்னராட்சி மகுடம் எல்லாவற்றையும் மண்ணாக்க வேண்டும் என குரல் வலுத்துக் கொண்டிருப்பது தான் காரணம்.

கோக்குமாக்கான இது போன்றவற்றை விட்டு விட்டு கோலோகலமான கல்யாண கொண்ட்டாட்டக் கதைகளை இனி பார்க்கலாம்.

டிவிட்டர், ப்ளிக்கர், ஃபேஸ்புக், யூடூப், தனி வெப்சைட்,5 டாலருக்கு கல்யாண அப்ளிகேஷன் என தனிமனிதர்கள் பலரைத் தொட்ட முதல் டிஜிட்டல் அரச கல்யாணம்.

இப்படி சோஷியல் நெட்வொர்க்களில் கல்யாணத்தைப் பற்றி பல விஷயங்கள் பரவலாக பரப்ப பட்டிருந்தாலும் பொத்தி பொத்தி மிகவும் இரகசியமாக வைக்கப்பட்ட சமாசாரம், மணப்பெண்ணின் கல்யாண உடை. அது எப்படி இருக்குமென  மாப்பிள்ளை வில்லியம்முக்கே தெரியாமல் பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பாரதிராஜா படத்து வெள்ளை உடை தேவதை போல வந்திறங்கிய கேட்டியைப் பார்த்து வில்லியம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க என்று சொன்னதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனால் ஆ வென பல பெண்களை வாய் பிளக்க வைக்கும் சமாசாரம் ஒன்று உண்டென்றால் அது கேட்டியின் மேக்கப். பார்லருக்கு எங்கும் செல்லாமல் அவரே செய்து கொண்டது! இது தெரிந்த நமக்கு தெரியாத விஷயம், அவர் மேக்கப்பிற்கு எடுத்துக் கொண்ட நேரம்!

அதே போல், எதிர்கால மனைவியிடம் வழிந்த கையோடு, அவள் கைப்பிடித்து வந்த மாமனாரிடம், ”சின்ன பேமிலி பங்ஷன்” என இளவரசர் வில்லியம் சொன்னது மாப்பிள்ளை ஜோரில் சேர்த்தியா என்பதும் நமக்கு புரியாத ஒன்று.

கேட்டியின் கல்யாண உடைக்கு அடுத்தப் படி அனைவரின் கண்ணைப் பறித்த அயிட்டம், பெண் தோழியான கேட்டியின் தங்கை, பிப்பா. பிப்பாவை யப்பா எனப் பார்த்து வழிந்த ஜொள், பல லிட்டர் இருக்கும். அவருக்கும் மாப்பிள்ளைத் தோழரான வில்லியம்மின் தம்பி ஹாரிக்கும் பத்திக்கும் என பெட் கட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.!

லண்டனின் சொல்லாமல் கொள்ளாமல் மழை வந்து விடும். மழை வந்து கொண்டாட்டத்தைக் கெடுத்து விடுமோ என கல்யாணத்தைக் காண வந்திருந்த மில்லியன் மக்களும் ரெயின் ரெயின் கோ அவே பாடியிருப்பார்கள் போல. மழை எட்டிப்பார்க்கவில்லை.

எல்லாருக்கும் மேலாக வில்லியம் மிக சந்தோஷப்பட்டிருப்பார். கல்யாணத்திற்குப் பிறகு முதன் முறையாக தன் அதிகாரபூர்வ வீட்டிற்கு கமான் கேட்டி எனத் திறந்த காரில் கூட செக்யூரிட்டி யாருமில்லாமல் கூட்டிப் போனார். காரின் நம்பர் பிளேட் JU5T WED. சரியான சினிமாத்தனம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பைலட் மனைவியை முதல்முறையாய் காரில் கூட்டிப் போனார் என்ற அவச் சொல்லுக்கு ஆளாகி விடக் கூடாது என வில்லியம் வேலை செய்யும் விமானத் துறை நினைத்ததோ என்னமோ, காரை பின் தொடர்ந்து வானத்தில் விமானங்களைப் பறக்க விட்டனர்.

இந்த விமானங்களை விட வெயிட்டான மேட்டர் என்னவெனில், வானத்திலிருந்து வந்த வாழ்த்துச் செய்தி தான். வாழ்த்தியது வானத் தூதர்களல்ல. கல்யாணத்திற்கு முந்தைய நாள் இங்கிலாந்து மேல் பறந்த விண்வெளிக் கலத்திலிருந்த விண்வெளி வீர்ர்கள்.

கட்டிங், பிரியாணி, விருந்து என எதுவுமில்லையென்றாலும் பரவாயில்லை என கல்யாணத்திற்கு மில்லியன் மக்கள் வந்திருந்தாலும் அதிகாரபூர்வ அழைப்பு 1900 பேருக்கு மட்டும் தான். ஒரு மில்லியன் மட்டுமே மக்கள் தொகை கொண்ட ஸ்வாசிலாண்ட் என்ற ஊர், சாரி நாட்டின் மன்னரும் இந்த 1900 பேரில் ஒருவர். இது எங்கே இருக்கிறது என்பது திருமண தம்பதிகளுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. இவரை எல்லாம் கூப்பிட்ட அரச குடும்பம், அம்மாம்பெரிய அப்பாடக்கர் அமெரிக்க அதிபர் நோபல் பரிசு வின்னர் ஒபாமாவைக் கூப்பிடவில்லை!

வில்லியம் பட்டத்து வாரிசு இல்லை ஆகையால் இது அரச கல்யாணமில்லை, அதனால் அவரைக் கூப்பிட வேண்டிய அவசியமில்லை எனக் காரணம் சொல்கிறார்கள். இல்லை ஒரு வேளை, ஒபாமாவின் அமைச்சரவையில் இருக்கும் ஹில்லாரியே அவரின் மகள் கல்யாணத்திற்கு ஒபாமாவைக் கூப்பிடவில்லை நாம் ஏன் கூப்பிட வேண்டும் என நினைத்திருப்பார்கள் போல. ஓபாமாவைக் கல்யாணத்திற்கு கூப்பிடுவதில் எல்லாருக்கும் என்ன கஷ்டமோ! அங்கு அவருக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடியில் கிப்ட் செலவு ஏன் வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்  கூடக் காரணமாயிருக்கலாம்.

ஒபாமாவைக் கூப்பிடாவிட்டாலும் பக்கத்து அயர்லாண்டில் ஒரு கத்தோலிக்க கார்டினலைக் கூப்பிட்டிருக்கிறார்கள். கத்தோலிக்கர்களுக்கு அரியணை ஏறும் உரிமையில்லை என சட்டம் இயற்றி வைத்திருக்கும் பிரிட்டன் அரச குடும்பத்து கல்யாணத்துக்கு ஒரு பெரிய ஐரிஷ் பிஷப் வருவது இதுவே முதல் முறை.

அன்று டயானா சார்லஸ் கல்யாணத்தைப் பார்க்க கூட்டத்தோடு கூட்டமாய்  இரவோடிரவாய் இலவு காத்த கிளியாய் காத்திருந்தவர்களில் ஒருவர் இன்று பிரிட்டனின் பிரதமர். அன்று கூட்டத்தில் தானே பார்த்தீர்கள், இன்றும் அப்படியே பாருங்கள் என சொல்லாமல்,நல்ல வேளை அவரைக் கூப்பிட்டிருந்தார்கள்.

கல்யாண வைபவங்களில் அனைவரும் ஆவலாய் எதிர் பார்த்துக் கொண்டிருந்த மிக முக்கியமான மேட்டர், முத்தம். கல்யாணம் முடிந்து அரண்மனை பால்கனியில் அரச குடும்பம் காட்சியளிக்கும் போது தம்பதியினர் கொடுத்துக் கொள்ளும் முத்தம்.

பால்கனியில் காட்சி தந்த போது, முத்தம் முத்தம் என மொத்த கூட்டமும் கத்த முத்தத்தை பரிமாறிக் கொண்டார்கள். அவர்களிருவரில் யார் மைண்ட்வாய்ஸ் யாருக்கு கேட்டதோ என்னமோ, கூட்டம் ஒன்ஸ் மோர் கேட்காமலே அவர்கள் வாயோடு வாய் கலந்தனர். அப்பொழுது அந்த சத்தத்தை [இது கூட்டத்தின் கூச்சல்] கேட்க விரும்பாமல் அங்கு இருந்த குட்டிக் குழந்தை, காதை மூடிக் கொண்டது. வில்லியம் அந்தக் குழந்தையின் காட்பாதர்.

பப்ளிக்கில் முத்தமா? அங்கே கலாசாரக் காவலர்கள் இல்லையா என்ற கேள்வி எழலாம். முத்தமிட்டிருக்காவிட்டால் தான் அந்த ஊர் கலாசார காவலர்கள் கோதாவில் குதித்திருப்பார்கள். ஹும் அங்கே, முத்தமிடல் ஒரு பாரம்பரிய சம்பிரதாயம்

அந்த சம்பிரதாய முத்தக் காட்சி பலரை முப்பது வருடங்கள் பின்னோக்கித் தள்ளியிருக்கலாம். ஏனெனில் அதே பால்கனியில் தான் டயானாவும் சார்லஸூம் முத்தமிட்டுக் கொண்டனர். இரண்டு கல்யாணங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை இதோடு முடிந்து சரித்திரம் மறுபடி மற்ற விஷயங்களில் ரீப்பிட் ஆகாமல் இருக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும் பிரார்த்தனையும்.

முத்தத்தை தாண்டி இப்பொழுது அனைவரின் அடுத்த எதிர்பார்ப்பு என்னவெனில், இப்பொழுது இருக்கும் இராணிக்கு பிறகு அரியணை ஏறுவதற்கு வாய்ப்பு கேட்டிக்குக் கிட்டுமா அல்லது கேட்டி கொடுக்கவிருக்கும் குலவிளக்குக்கா?

No comments yet

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: