கோ – விமரிசனம்

படத்தைப் பற்றி சொல்லும் முன் படத்தில் முதலில் போடும் டைட்டில் கார்டைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.பத்திரிக்கை போட்டோகிராபர் படக்கதை என்பதை உணர்த்தவோ என்னவோ, தெண்டுல்கர், த்ரிஷா, இரஜினி எனப் பலரையும், பலதையும் டைட்டில் கார்டின் பேக் கிரவுண்டில் கோலஜாகக் காட்டுவது கவிதை. சண்டைப் பயிற்சி, பீட்டர் ஹையின் எனக் காட்டும் போது இரண்டு நாய்கள் சண்டையிடும் படம், வசனம் சுபா எனக் காட்டும் போது ஜெயகாந்தன் படம் எனக் காட்டுவதென ஒவ்வொரு ப்ரேம்மையும் கவனம் காட்டி செதுக்கியிருப்பது கடைசிக் காட்சியில் குறளைக் காட்டுவது வரை தொடர்கிறது.

எதேச்சையாக சிக்னலில் நிற்கும் போது பேங்க் கொள்ளை நடக்கிறது என  சமயோசிதமாக யூகித்து போட்டோ எடுக்க துரத்தும் ஜீவா. எடுத்தப் பின், தன் பத்திரிக்கைக்குத் தான் எக்ஸ்கூளிசிவாய் தர வேண்டும் என்று சுயநலமாய் இல்லாமல் போட்டோவை முதலில் போலீசிடம் தரும் சமூகப் பிரக்ஞையுள்ள பத்திரிக்கை போட்டோகிராபர். இந்தப் படத்தில் மிக அழகாகவும் தெரிகிறார்.

பியா, ஜீவாவுடன் பணி செய்யும் “லூசுப் பெண்ணாய்”,  “அழகான இராட்சசியாய்” . என்ன தான் கதையின் திருப்புமுனையளவுக்கு வெயிட்டான கேரக்டர், மிகவும் பொருத்தமான கேரக்டர் என்றாலும் பியாவை பாதிப் படத்தில் பேக்கப் செய்ததை பொருத்துக் கொள்ள முடியவில்லை. கார்த்திகாவை கட் செய்து, பியாவையே கதாநாயகி ஆக்கி டூயட் பாட வைத்திருக்கலாம் என்றெல்லாம் பீர் போல பியாவின் மேல் பொங்கும் பாசம் எழுத வைக்கிறது.

கார்த்திகா, இலங்கை விவகாரமெல்லாம் கவர் செய்கிறவர், கதாநாயகனுக்கு காதல் பொங்கும் கதாநாயகி ஆகப் போகிறவர், என்பதாலே சேலை சுடிதார் என கட்டிவிடுகிறார்கள். கொடுத்த காசுக்கு கூவ வைக்க வேண்டுமென்று சோகம் பொங்கி கண்ணீரில் அழும் போதும் கூட தண்ணீரில் நனையும் டூயட் வைத்திருக்கிறார்கள். நூலைப் போல இல்லாத சேலை, ஆனால் கார்த்திகா தீபம் போக போக பிரகாசமாய் எரியும் என நம்புவோமாக.

கதாநாயகிகளை கவர் செய்வதை கட் செய்து மற்றவர்களைப் பார்த்தால், பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ், போஸ் என ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒன்றையொன்று நடிப்பில் காலி செய்கிறார்கள். அஜ்மல் அபாரம்.

அந்த பப்ளிஷர், ஆசிரியர்.போட்டோ எடிட்டர், ஆன்மிக நிருபர் என பத்திரிக்கை ஆபிசில் ஒவ்வொரு கேரக்டரும் கலக்குகிறது.

தன்னால் அப்ரூவ் செய்யப்பட்ட செய்தியின் தவற்றுக்கு தான் தார்மீக பொறுப்பெற்றும் தான் தனக்கு கீழே இருக்கும் நிருபர் வேலையை விட்டு தூக்கப்படுவதால் அன்றைய இரவின் பேப்பரை புரூப் பார்த்து விட்டு பத்திரிக்கை ஆசிரியர் இராஜினாமா கடிதம் எழுதுவதை எல்லாம் விஷுவலாக மட்டுமே காட்டுவதில் கே. வி ஆனந்த, டைரக்ஷனில் கோவாகி விடுகிறார்.(கோ என்றால் கிங் என்று அர்த்தமாம்!)

வசனம் எழுதும் படங்களில் ஒரு கதாபாத்திரமாக வருவதை எழுத்தாள வசனகர்த்தாக்கள் ஏன் விரும்புகிறார்கள் என்ற மர்மம் எனக்குப் புரியவில்லை? பாலகுமாரன் வரிசையில் சுபாவின் சுரேஷ் இதில் நடித்திருக்கிறார். வசனம் எல்லாம் வாரே வாவ்!

நான் Fire party இல்லப்பா, அவனா நீ என்ற பியாவின் டயலாக் ஆகட்டும், ஒரு பொண்ணு ஐ லவ் யூ சொன்னா  பசங்க கிட்ட செருப்பு இல்லையா என இளமை கொஞ்சம் ஒவராக கொப்பளிக்கும் வசனம் ஒரு பக்கம். நாங்க மட்டும் தான் இலவசம் தர்றோமா, நீங்க கொடுக்கறதுல்ல சோப்பு எண்ணெய் என்று பத்திரிக்கையாளனிடம் அரசியல்வாதி கேக்கும் கேள்வி. குவார்ட்டர் இல்லாமல் வந்திருக்கும் கோமான்களே, யார்றா அரசியல பாத்துப்பாங்க என்ற கேள்விக்கு பன்ச் டயலாக் பேசும் நடிகர்கள் காப்பாற்றுவார்கள் என்று டரியலான டயலாக்குகளுக்கு மட்டுமே தனி பாராட்டுரை எழுதலாம்!

ஆனா இனி வரும் எல்லா வசனகர்த்தாக்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள், அமெரிக்க எம்பஸியில விசாக்காக காலைல மூணு மணிக்கு க்யூல நிக்கறாங்கன்னு க்ளிஷேவா எழுதறதை இன்னியோட நிப்பாட்டுங்க. ஆன்லைன்ல அப்பாயிண்ட்மெண்ட்டு வாங்கி அரை மணி  நேரத்துக்கு முன்னாடி போனா போதும்

நிஜ சம்பவங்கள் பலதை கண் முன் கொண்டு வரும் திரைக்கதைக்கு, Assistant editorஐ செல்லமாய் சுருக்கி முதல் மூன்றெழுத்தில் கூப்பிடுவது, சோனாவை “ஓட்டு” கேக்க வைப்பது, பக்கத்து வீட்டு பெருச்சாளிப் பையன்,காற்று பிரிய வைக்கும் கப்ப்பு கேமரா மேன் போன்ற சமாச்சாரங்கள் திருஷ்டி பொட்டாகி விடுகிறது.

அஜ்மல் அடி வாங்கிய பின் கூட்டம் கூடும் போது முதல்வன் படமும், அஜ்மல் கை கொடுக்கும் போது பிரகாஷ்ராஜ் விலகிச் செல்வதும் இனி மேல் தான் ஆரம்பம் எனச் சொல்லும் போது  ஆய்த எழுத்தும், போஸ் க்ளைமாக்ஸில் பேசும் போது குருதிப்புனலும் நினைவிற்கு வந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை.

அனைத்து பாடல் காட்சிகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தாலும், (லொகஷேன் மற்றும் கேமிராவைச் சொல்கிறேன்), ஹைஹையோ ஹைஹையோ எனக்கு பிடிச்சுருக்கு என பாடல்களைப் பற்றி என்னால் சொல்ல முடியவில்லை . ஒரு பாடலில் ஹாரிஸ் ஜெயராஜ் வருகிறார். ஆனால் பாடல்களில் அவர் எனக்கு தென்படவில்லை. முதல் முறையாய் தியேட்டரில் கேட்டது காரணமாயிருக்கலாம். ரீலிஸான முதல் இப்பட பாடலை பைத்தியம் பிடித்ததுப் போலக் கேட்கிறேன், என் ரிங் டோன் அந்தப் பட பாடல் தான் என நண்பர்கள் சிலர் புகழ் பாடுகின்றனர். என்ன செய்ய  என் கற்பூர வாசனை அவ்வளவு தான்.

இவன் படத்தோட ஹீரோ திருடுவானாம் பின்னாடி கஸ்டம்ஸ் ஆபிசர் ஆயிடுவானாம். என்னாப் படம் எடுக்கிறான்? இந்த டைரக்டர் படத்திற்கு 1/2 ஸ்டார் போட்டதே பெரிசு என படத்தில் ஒரு டயலாக் வருகிறது. ஆனால் மேற்சொன்ன குட்டி குட்டி குறைகளுக்காக மட்டும் பைவ் ஸ்டாரில் ஒரு  அரை ஸ்டாரை மட்டுமே குறைக்க முடியும். மற்றபடி படம் ஒரு நாலரை ஸ்டார் தங்கம்.

ஸ்டார் எல்லாம் சரி கதையைக் காணோம் எனக் கேட்பவர்களுக்காக,
ஆட்சிக்கு வருவதற்காக பதிமூன்று வயதுப் பெண்ணையும் திருமணம் செய்யத் தயாராக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், கட்சியின் கொ.ப.செ உங்களுக்கு மகள் போல என்றால் அம்மா யாரென கேட்கும் பத்திரிக்கையாளரை(ஆடிட்டரை அல்ல) பப்ளிக்காக செருப்பாலடிக்கும் முதல்வர்,
இவர்களை எதிர்த்து தேர்தலில் நிற்கும் படித்த இளைஞர்கள், பத்திரிக்கை தர்மத்தை மீறாமல் அவர்களுக்கு உதவி செய்யும்  பத்திரிக்கை போட்டோகிராபர். இளைஞர்கள் ஆட்சியைப் பிடித்தார்களா, தேர்தலுக்குப் பின் நடந்தது என்ன என்பது எல்லாம் திரையில் மட்டுமே த்ரில்லராய்ப் பார்க்க வேண்டிய ஒன்று!

பி.கு: படத்தை தேர்தலுக்குப் பின் தான் வெளியிட வேண்டும் என முடிவு செய்தது ரெட் ஜெயிண்ட்டா இல்லை தேர்தல் கமிஷன் தடை விதித்திருந்ததா ? ஒரு வேளை விஜய் நடித்திருந்தால் பல டயலாக்குகளையும் காட்சிகளையும் கட் செய்திருப்பார்களோ!

3 comments so far

 1. sathish
  #1

  Nice re view inetnds to watch the movie. K.v ANNAND Kitta ETHUVUM POTTI VAANGIDILIYE! 🙂

 2. Lakkshme
  #2

  Very Nice Review.. Captured even a small detailing from the movie.. Gud one 🙂

 3. அப்பு
  #3

  லக்‌ஷ்மி,
  மிக்க நன்றி

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: