வரலாறை எப்படி அணுக வேண்டும்?

Circa 2006. துபாயில் நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு, இந்தியாவின் வளர்ச்சி, பெங்களூரின் வாழ்நிலை, இன்னபிற லெளகீகங்களைச் சுற்றி வந்தது. பெங்களூர் மாதிரியான ஊர்களில் இருக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், விரிவாகும் பணரீதியான பிளவுகளும், கூடிய விரைவில் இந்தியாவில் மக்கள் போரினைக் கொண்டு வந்துவிடும் என்று பேசினோம். அப்போது யூகிக்காமலும் பேசாமலும் போனது, இதைவிட மோசமான ஏற்றத்தாழ்வுகளில்தான் மத்தியக் கிழக்கு நாடுகளும், வட ஆப்ரிக்காவும் இருக்கிறது என்பது.

வரலாறு ஒரு மோசமான ஆசான். அது கற்றுக் கொடுப்பதும், கற்றுக் கொள்ள முற்படுவதும் கஷ்டமான விஷயம். நமக்கு மண்டையில் ஏறவே ஏறாது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என்பது ஏதோ ஒரு பகுதிக்கான பிரச்னை மட்டுமல்ல. இன்றைக்கும் மேற்கு ஜெர்மனியின் பெருசுகள், கிழக்கு ஜெர்மனி இணைந்ததே தங்களின் வீழ்ச்சியாகப் பார்த்து, உள்ளுக்குள் குமைகிறார்கள். வட கொரியா, தென் கொரியாவின் வளர்ச்சியினைப் பார்த்து எரிச்சல் பட்டு, எல்லையில் ராக்கெட் விட்டு சீண்டுகிறார்கள். உள்ளூரில், வளர்ச்சியின் விகிதம் கண்டுதான், பங்களாதேஷின் எல்லை தாண்டி, மேற்கு வங்கத்தில் ஆட்கள் வந்து இப்போதுப் பொதுத் தேர்தலில் தனித் தொகுதி கேட்கும் அளவிற்கு வீரியமாக இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படையான காரணம் ஒன்றே ஒன்றுதான் – வளர்ச்சி.

இதனால்தான், தமிழகத்தின் தலைமைச் செயலகம் கட்ட பீகாரிலிருந்தும், உத்ராஞ்சலிலிருந்தும் ஆட்கள் வந்து வேலை செய்கிறார்கள். மூக்கடங்கிய வட இந்திய விடலைப் பையன்கள், செட்டிநாடு ஹோட்டல்களில் டேபிள் துடைக்கிறார்கள். இதையெல்லாம் ஒரு காலத்தில், தமிழகத்தின் தென் மூலையில் இருந்த ஆட்கள் சென்னைக்கு வந்து செய்துகொண்டிருந்தார்கள். இன்றைக்கு அவர்களைக் காணவில்லை. காரணம் – அவர்களின் பொருளாதார வளர்ச்சி.

1991லிருந்து இன்றைக்கு இரண்டு தசாப்தங்கள் பார்த்த பொருளாதார சீர்திருத்தத்தின் ரேகைகள், நாடெங்கிலும் பரவியிருக்கின்றன. 1969 இந்தி எதிர்ப்புப் போராட்டம்போல மக்கள் உள்ளடங்கிய போராட்டங்கள் இனி இந்தியாவில் வருவது சந்தேகம். இனி வந்தால், அது ஊடகங்களால் தூண்டிவிடப்பட்ட போராட்டங்களாக மட்டுமே அமையும். மற்றெல்லாம் பிரியாணி-லாரி கூட்டங்கள். நம்முடைய வாழ்க்கை என்பதைக் கட்டமைப்பது யார் யாரோவாக இருந்தாலும், குறைந்தபட்ச சலுகைகள் நமக்கு உண்டு. அது இவர் ஒழிக, அவர் ஒழிக என்று கத்தலாம்; ப்ளடி பாலிடிஷியன்ஸ் என்று டிவிட்டரில் அலம்பலாம்; மாற்றம் வரும், புரட்சி வரும் என்று சிக்னலில் உண்டி ஏந்தலாம்; எல்லாம் முடித்து வீட்டுக்குப்போய் சன் டிவியில் புதுப் படம் பார்க்கலாம்.

சராசரி மனித வாழ்க்கை என்பது ஒரு காமன் மினிமம் ப்ரோக்ராம். அது ப்ரோக்ராம் செய்யப்பட்டு சலிக்காமல் 24 மணி நேரமும் செக்குமாடு வாழ்க்கையினை வாழும் உத்தரவாதத்தை அளிப்பது. 21ஆம் நூற்றாண்டில் எங்கெல்லாம் இந்த செக்குமாடு ப்ரோக்ராம் இல்லையோ, அங்கெல்லாம் சத்தம் எழுவது வாடிக்கை. அந்த வகையில் துனிசியாவில் ஆரம்பித்து, இன்றைக்கு லிபியாவின் மீது அமெரிக்கக் கூட்டணிப்படைகள் விமானத் தாக்குதல் நடத்துவதைப் பார்த்தபடி ஒபாமா, ஹாலிவுட் திரை பிரசிடெண்டுகள் மாதிரியே டிவியில் பேசுவதுவரை நடந்த / நடந்துகொண்டிருக்கக்கூடிய சமாசாரங்களின் பின்னணியில் இருக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றியதுதான் பா. ராகவனின் ‘2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு’ என்ற இந்தப் புத்தகம்.

ஒரு துனிசிய கறிகாய் வியாபாரியின் பெயர் இனி இந்த மக்கள் எழுச்சியினை ரீம் ரீம்களாக, டிஜிட்டல் பைட்டுகளாக எழுதித் தள்ளப்போகும் பிற்கால வரலாற்று ஆசிரியர்களுக்கான ஆரம்பப் புள்ளி என்று ஆரம்பிப்பதில் நிமிர்ந்தெழுந்து, துனிசியா, எகிப்து என ஆரம்பித்து 19 மத்தியக் கிழக்கு & வட ஆப்ரிக்க தேசங்களின் மக்கள் எழுச்சியினைப் பற்றி முன்கதை சுருக்கம், பின் கதை நிகழ்வுகள் என நீளும் புத்தகத்தில், பக்கங்களின் வழியே வரலாறு நைல் நதியாகப் பிரவகிக்கிறது. மிகத் தெளிவாக, அதே சமயத்தில் சுருக்கமாக ஒவ்வொரு நாட்டிலும் என்ன பிரச்னை, வாழ்வாதாரம் எப்படி இருந்தது, ஏன் மக்கள் எழுச்சியடைந்தார்கள் என்பதை சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். லிபியாவின் கடாபி பற்றி எழுதியிருப்பது தமிழில் பதியப்பட்ட மிக நேரடியான, நேர்த்தியான தகவல்.

மக்கள் எழுச்சியினை எழுதுவது கடினம். ஒவ்வொரு நாட்டிலும், சூழலுக்கு ஏற்ப காரணங்கள் வெவ்வேறாக இருக்கும். இஸ்லாமிய லிபரல் தேசமான துனிசியாவிற்கும், தீப்பெட்டி சைஸ் தேசங்களுக்கும் இருக்கக்கூடிய பிரச்னைகள் எஸ்கலேட்டர் வைத்தாலும் எட்டாது. இதை ஒட்டுமொத்தமாக ஒரே புத்தகத்தில் அடக்குவது எழுத்தாளனுக்கு இருக்கிற மிகப்பெரிய சவால். அது ரோட்டோரத்தில் அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் வித்தைக்காரனுக்கு உள்ள சாமர்த்தியம். அதை பா.ராகவன் தெள்ளத் தெளிவாகச் செய்திருக்கிறார்.

நம் வாழ்நாளில், நம் கண்முன்னே நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கும் ஒரு சமூக மாற்றத்தினை, அதன் தீவிரம் குறையாமலும், வளவளவென்று இழுக்காமலும் குறும்பட ஷாட்களுக்கு இணையாகச் சொல்லியிருக்கிறது இந்தப் புத்தகம். மாற்றங்களினாலேயே நம்மினம் ஜீவிக்கிறது. அந்த மாற்றங்கள் எந்தச் சூழலில், நிகழ்வில், சிறு துளியில், குறுகிய பகர்வில் ஆரம்பித்து, விரிவடைந்து நம்மைவிடப் பெரியதாக மாறி, நம்மை ஆட்கொள்கிறது, நம் வருங்காலத்தைப் புரட்டிப் போடுகிறது என்பது அது ஆரம்பிக்கும்போது தெரியவே தெரியாது.

இந்த 19 நாடுகளுக்கும் இது பொருந்தும்.

ஆனால், உலகமெங்கும் புரட்சி என்று ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். புரட்சி என்பது ஒட்டு மொத்த தேசத்தினைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, அதன் எதிர்காலத்தையும், ஆட்சியாளர்களையும், அமைப்பினையும் நிர்ணயிப்பது. இப்போது இந்த தேசங்களில் நடந்துவருவது புரட்சியின் கீழ் வருமா என்பது சந்தேகமே. எகிப்தில் ஹோஸ்னி முபாரக் போய், ராணுவ ஆட்சியின் கீழ் வந்து, அவர்கள் பொதுத் தேர்தலைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். துனிசியாவின் ஆட்சியாளர் ஓடிப் போய், இன்னொருவரை உட்கார வைத்தாகிவிட்டது.

அடிப்படையில் மாற்றங்கள் நிகழ்ந்து, சடாலென மக்களாட்சிக் கனவுகள் உயிர்பெறுகிறதா என்றால் அது இல்லை. எனக்கு நீ தேவையில்லை. உன்னுடைய ஆட்சி சகிக்கவில்லை. வெளியே போ. மிச்சத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிற அளவில்தான் இப்போதைய எழுச்சிகள் நடந்திருக்கின்றன. இதிலும் இரண்டு தேசங்களைத் தவிர மற்ற எல்லா தேசங்களிலும் ஆட்சியாளர்கள், திமுக அரசின் இலவசத் திட்டங்களை மிஞ்சுவது போல திட்டங்களை அறிவித்து இப்போதைக்கான தற்காலிக நிம்மதியில் அரசணையினைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது எத்தனை நாளைக்கு நிலைக்கும் என்று சொல்லமுடியாது.

ஊர் ஊருக்கான காரணங்கள் வேறாக இருந்தாலும், அடிப்படையான காரணம் வேலை வாய்ப்பின்மையும், உலக மயமாக்கலும்தான். கோடிகள் கொட்டிக் கொழித்தாலும், சவுதி அரேபியாவில் ஒரு குவார்ட்டர் கூட வாங்கிக் குடிக்க முடியாது. எழுச்சி எழுந்த அத்தனை தேசங்களும் இஸ்லாமிய தேசங்களாக இருப்பதில் வியப்பில்லை. இஸ்லாமிய தேசங்களின் அரசர்கள், அவர்களுக்கு ஏற்றாற்போலத் திருமறையினை கஸ்டமைஸ் செய்து கொண்டதின் உச்சக்கட்ட வெறுப்புதான் இது.

அமெரிக்கா, ஒரு மாதிரியான – அதிமுக ரேஞ்ச் தேசம் என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. துனிசிய அதிபரை ஆதரித்ததும், பின்னால் எச்சரித்ததும், ஹோஸ்னி முபாரக்கைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியதும், பின்னால் எகிப்து ராணுவம் செய்தது அற்பமான செயல் என்று ஒபாமா வாய் மலர்ந்ததும் என்று நீளும் வரலாற்றில், அமெரிக்காவின் இரட்டை நாக்கு அயோக்கியத்தனத்தையும், தங்களின் முதலாளித்துவ விஸ்தரிப்பையும், நுகர்வோர் கலாசார பலப்படுத்துதலையும் ஆழமாகச் சொல்லவில்லை. ஒட்டுமொத்த மக்களின் உச்சக் கடுப்புக்கு அடிப்படையான காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும். ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும், பின் வெளிநாடுகளில் குடியேறி தன்னாட்டு மக்கள் அனுபவிக்கும் வசதிகளையும் கண்ட மத்திய தர வர்க்கத்தினரின் கோபமும், இயலாமையும், சகிப்புத்தன்மையின் உச்சமும்தான் இந்த வெடிப்புக்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

‘அல்லாஹூ அக்பர்’ என்கிற கோஷத்தில்தான் எல்லா போராட்டங்களும் ஆரம்பித்தன. அல்லாஹ் மிகப் பெரியவன் என்பதுதான் அதன் அர்த்தம். இது திருமறையில் சொல்லப்பட்டதற்கான விளக்கம் – எதுவும் நம்மால் நடப்பதில்லை. எல்லா காரியத்திற்கும் அவனே காரணமாக இருக்கிறான். நம்மால் ஆவது என்பது உழைப்பைத் தவிர வேறெதுவுமில்லை. முடிவு அவன் கையில். அல்லாஹ் மிகப் பெரியவன். அவனடியில் தான் நாம் அனைவரும் என்பதே. இதை உணராத, புரிந்துகொள்ளாத அதிபர்களுக்கு, அனைத்தையும்விட மக்கள் சக்தி பெரிது என்பது இதன் மூலம் உணர்த்தப்பட்டிருக்கிறது.

சமகால வரலாற்றினை அதன் தீவிரத்தோடும், நேர்மையோடும், அதன் வெவ்வேறு பார்வைகளோடும் ஒரு சேரக் கொண்டு வருதல் மிக முக்கியமான காரியம். அந்த வகையில் இந்தப் புத்தகம் வரலாற்றினை அதன் நேர் / எதிர்மறைகளோடு அணுகுகிறது. 21ம் நூற்றாண்டின் மக்கள் எழுச்சியினைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், இந்தப் புத்தகம் ஓர் அற்புதமான தொடக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு… | பா. ராகவன் | விலை ரூ. 80

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே செல்லவும்.

One comment

  1. அரவிந்தன் நீலகண்டன்
    #1

    //எதுவும் நம்மால் நடப்பதில்லை. எல்லா காரியத்திற்கும் அவனே காரணமாக இருக்கிறான். நம்மால் ஆவது என்பது உழைப்பைத் தவிர வேறெதுவுமில்லை. முடிவு அவன் கையில். அல்லாஹ் மிகப் பெரியவன். அவனடியில் தான் நாம் அனைவரும் //

    அட்டகாசம். இதையெல்லாம் விட்டுவிட்டு சில அசடுகள், வரலாற்றை சமூகவியல், பொருளாதாரம், காலனியம் அது இதுன்னு பாத்து குழம்பிட்டிருக்கு. தலைப்பு ‘வரலாற்றிலிருந்து தக்கியாவுக்கு’ன்னு போட்டிருந்திருக்கலாம். 🙂

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: