ஆழி பெரிது!

19. பூமி தியானம்

அதர்வ வேதத்தின் பூமி சூக்தம் ஓர் அதி அற்புதமான புவி வணக்கம். இதிலிருக்கும் சில வரிகளை மட்டும், அவற்றிலிருந்து கிடைக்கும் அகவிரிவுகளின் சாத்தியங்களை, சற்றே தியானிக்கலாம்.

சத்தியம், மகத்தானதும் மாறாததுமான முடிவில்லாத பிரபஞ்ச லயம்,

புனிதம், தவம், தெய்வீக ஆற்றல், வேள்வி

இவையே பூமியைத் தாங்குகின்றன.

கடந்தவைகளுக்கும் வருபவைகளுக்கும் அரசியான அவள்

நமக்காக, வாழும் உலகமாய்ப் பரந்திடுக. (1)

புவியைத் தாங்கும் முடிவில்லாத பிரபஞ்ச லயம் குறித்து நாம் ஏற்கெனவே இத்தொடரில் பார்த்துள்ளோம். ரிதம் எனும் அது சத்தியத்துடன் தொடர்புடையது. இங்கு வேள்வியும் கூறப்படுகிறது. வேள்வி வேத காலம் முதல் ஒரு முக்கியமான குறியீடாக உள்ளது. சக-சிருஷ்டி என்பதற்கான குறியீடு அது, எந்தச் செயலும் ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் கொண்டே நடைபெறுகிறது. அது ஒரு இயற்கை நியதி. இயற்கையின் பல அமைப்புகள் இந்த ஒருங்கிணைந்த ஒத்துழைப்பாலேயே உருவாகின்றன. இந்த ஒருங்கிணைந்த சக-சிருஷ்டியே அடிப்படை இயக்கம் என வேதம் கருதுகிறது.

ஒன்றையொன்று பேணும் இப்போக்கினை பூமியின் அடிப்படை நியதிகளில் ஒன்றாக வேதம் சொல்கிறது, இப்புவி எப்போதும் தன்னைத்தானே புத்துருவாக்கம் செய்து கொண்டிருக்கிறது, உயிர்கள் தோன்றுகின்றன. உயிர்கள் அழிகின்றன. நாமும் அவ்விதமே. இதோ இப்புவியின் கண் சிமிட்டுதலில் நாம் உருவானோம். யார் அறிவார்? அடுத்த கண் சிமிட்டுதலில் மானுடம் ஒரு நினைவாகக் கூட இருந்திடாது யாதும் சுவடு படாமல் அழிந்துவிடலாம். இப்போது இந்தத் தருணத்தில் இப்புவி நம் வாழ்க்கைக்கு வளம் அளிக்கும் இடமாக இருக்கட்டும் என்று மட்டுமே இயற்கை எனும் அந்த மகத்தான சக்தியிடம் இறைஞ்சிட முடியும்.

உச்சிகளும், சரிவுகளும்

மனிதர்களைப் பிணைக்கும் பல சமவெளிகளும் கொண்ட பூமி

பல்வேறு சக்திகள் பொருந்திய மூலிகைகளைத் தாங்கும் பூமி

நமக்காகப் பரந்து வளம் பொருந்தியதாகுக (2)

பூமியின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களைக் குறித்து பேசும் இப்பாடல் அம்மக்களை பிணைக்கும் நிலப்பரப்புகளை கொண்டதாக பூமியை கூறுகிறது. இப்பூமியில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ சக்திகள் கொண்ட தாவர வளங்கள் உள்ளன. மனிதன் அவற்றையெல்லாம் கண்டுபிடிப்பதன் மூலம் தன்னுடைய வாழ்க்கையை வளமும் ஆனந்தமும் கொண்டதாக ஆக்க முடியும். இங்கு பூமி மனிதர்களைப் பிணைக்கும் சக்தியாகவும் அவர்களுக்கு வளமளிக்கும் இயற்கை செல்வங்களை கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று, இது பூமியின் மீதான ஆக்கிரமிப்பை அல்ல; அமைதி நிறைந்த நல்வாழ்க்கையையே கோரி நிற்கிறது.

நன்னீர் நிலைகளும் ஓடும் ஆறுகளும் பெருங்கடலும் கொண்டது இப்பூமி! இதிலிருந்தே எழுந்தன உணவும் அனைத்து மானுட குழுக்களும்! இதிலேயே வாழ்கின்றன சுவாசிப்பன முதல் நகர்வன வரை என அனைத்து உயிர்களும்! இப்புவி நமக்கு நீர் அருந்த முதன்மை அளிக்கட்டும். (3)

இங்கு ஓர் உன்னதமான வேத சிந்தனை வெளிப்படுகிறது. அனைத்து உயிர்களும் நீரில் தோன்றின. அவ்வாறே அனைத்து மனிதர்களும் அவர்களின் உணவுகளும் நீரிலேயே நிலை பெறுகின்றன. நீர் எப்படி உணவாகிறது? நீரே உணவாகிறது என்பது பாரத சிந்தனை முழுவதும் உள்ள ஒன்று. துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி – உண்பார்க்கு நல்ல உணவுகளை உளதாக்கி; துப்பார்க்கு துப்பு ஆயதூஉம் மழை – அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. இது பரிமேலழகர் உரை. புறநானூற்றில் ஒரு பாடல் ”உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே” எனக் கூறுகிறது.

இன்றைக்கு சூழலியலில் உள்ளுறை நீர் (embedded water) என்கிற கோட்பாடு முக்கியத்துவம் பெற்று வருகிறது. இன்றைக்கு எந்த உணவுப் பதார்த்தத்தின் விலையுடனும் அதன் உள்ளுறை நீரும் கணக்கிடப் படவேண்டும் என்கின்றனர் சூழலியல் வல்லுனர்கள். இந்தக் கோணத்தில் நோக்கும் போது இந்த தொன்மையான பிரார்த்தனை திருக்குறளைப் போலவே ஒரு புதிய பரிமாணம் பெறுகிறது.

ஆதியில் அவள் ஆழ்கடலின் நீருள் இருந்தாள்

மெய்யுணர்ந்த ரிஷிகள் தம் அற்புத சக்திகளால் அவளை நாடினர்

அமுதமயமான அழிவற்ற சத்தியத்தால் மூடப்பட்டு

அவள் இதயம் அப்பால் உள்ள ஆகாயவெளியில் இருந்தது.

அந்த பூமி நமக்கு உன்னதமான தேசத்தையும்,

அதில் ஒளியையும், வலிமையும் அளித்திடுக. (4)

கவித்துவம் கொண்ட பல படிமங்களைக் கொண்ட இப்பாடல் ஒரு பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது. நம் தேசங்கள் பூமியால் அளிக்கப்பட்டவையே. குறுகிய தேசியவாதிகள் தங்கள் தேசமே பூமியின் மற்றனைத்து தேசங்களைக் காட்டிலும் உயர்ந்ததெனக் கருதலாம். ஒவ்வொருவருக்கும் தான் பிறந்து வளர்ந்த தேசத்தின் மீது அன்பு வருவது இயற்கையே. ஆனால் அது பிற தேசங்கள் மீதான இகழ்ச்சியாக மாறும் போது ஒவ்வொரு தேசமும் பூமி எனும் பெரும் அருட்சக்தியின் அங்கமே என்பதை நினைவுறுத்துகிறது இப்பாடல். தேசத்தின் ஒளியும் வலிமையும் எந்த அளவுக்கு பூமியில் அது ஒரு பாகம் என்பதை உணர்ந்து செயல்படுகிறோமோ அந்த அளவே நிலவும்.

இவ்வாறு இப்பூமி சூக்தமெங்கும் பல அழகிய சிந்தனைகள் இவ்விதமாக கூறப்படுகின்றன. ஒவ்வொன்றையும் தியானிக்க தியானிக்க, அவை நம்முடன் வளரும், நம் சிந்தனைகளை ஆழப்படுத்தும் தன்மை கொண்டவை. உதாரணமாக,

பூமி தாய்; நான் புவியின் மகன். தந்தை வடிவான வானம் நம்மை நிறைத்திடுக. (11-12)

பூமி, உன்னிடமிருந்து எதைத் தோண்டினாலும் அது விரைவில் வளரட்டும். உனது இதயத்தையும், மர்மஸ்தானங்களையும் நாங்கள் சேதப் படுத்தாதிருப்போமாக.(35)

மனிதனின் மிகப்பெரிய அடையாளம் இதுவே. ஹிந்து, கிறிஸ்தவன், இந்தியன், பாகிஸ்தானி, தமிழன், மலையாளி, கறுப்பினத்தவன், வெள்ளைத் தோலன் எனும் அனைத்துக்கும் மேலாக விளங்கும் அடையாளப் பிரகடனம் இது “பூமி என் தாய் நான் புவியின் மைந்தன்,” வேதம் மானுடத்துக்கு தந்த மாபெரும் அடையாளம் இதுவே. வீர சாவர்க்கர் சொல்கிறார்: “ஒரு ஹிந்து அவன் ஹிந்துத்துவத்தின் உன்னத உச்சத்தில் ஹிந்துவாக நீடிப்பதில்லை. ஒரு கபீருடன் இவ்வுலகனைத்தும் தன் வாரணாசி என அவன் பாடுவான் அல்லது துகாராமுடன் ”என் தேசமா சகோதரரே? என் தேசம் என்பது இப்பிரபஞ்சத்தின் எல்லைகள் தொடுமிடமனைத்தும் என் தேசமே” என கொண்டாடுவான்.” என்கிறார்.

ஆனால் இது வெறும் உணர்ச்சிகரமான யதார்த்தவாதமற்ற சர்வதேசியமன்று. பூமியின் புனிதத்துவத்தை அனைவரும் உணர்வதால் ஏற்படும் சத்திய உணர்ச்சி. அதற்கு மிகவும் அதிகமாகவே யதார்த்த உணர்வு தேவை, எனவேதான் பூமி சூக்தம் இதையும் சொல்கிறது:

ஆண்களிலும், பெண்களிலும் உள்ள உனது நறுமணம் எதுவோ

இளைஞனின் ஒளியும், கம்பீரமும் எதுவோ

வீரர்களிலும், புரவிகளிலும் உள்ளது எதுவோ

வனமிருகங்களிலும், யானைகளிலும் உள்ளது எதுவோ

கன்னிப் பெண்ணின் இளமை ஒளி எதுவோ

பூமி, இவற்றுடன் எம்மை ஒன்றுகூட்டுவாய்

யாரும் என்னை வெறுக்காதிருக்கட்டும்.

வீரமும் ஒளியும் வலிமையும் கம்பீரமும் கொண்டு வெறுப்பினை வெல்ல வேண்டும். என்பதை வலியுறுத்துகிறது. நாம் எவரையும் வென்று அடக்க வேண்டாம். ஆனால் எவரும் நம்மை அச்சுறுத்தவும் வெறுக்கவும் வேண்டாம். அதற்கான வலிமையுடன் நாம் அனைவரையும் பூமியின் மைந்தர்களாக அன்பு செய்வோம்.

கருமையும் வெண்மையும் இணைந்து

இரவு பகல்களாக பூமி மீது படர்கின்றன.

மழை அவளைத் திரையிட்டு மூடுகிறது.

ஒவ்வொரு அன்பு ததும்பும் வீட்டிலும்

பூமியாகிய அவள் நமக்கு இன்பம் அளிக்கட்டும். (52)

இப்புவி எனும் பேருணர்வு எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதையும் கவி சுட்டுகிறார். ஒவ்வொரு அன்பு ததும்பும் வீட்டிலும் அது நிகழ்கிறது. இன்றைக்கு குழந்தை முதலே earth consiciousness குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படவேண்டுமென சொல்கிறார்கள். தாயைக் காட்டிலும் யார் அதைச் சொல்லிக் கொடுக்க முடியும்? தாயன்பு நிலவும் குடும்பச்சூழல் பூமி மானுடத்துக்கு வளங்குன்றா வளமையை வழங்க ஒரு அடிப்படை நியதி.

பூமி மீது

கிராமங்களிலும் காடுகளிலும்

சபைகளிலும் குழுக்களிலும் கூட்டங்களிலும்

உனக்கு இனியதையே பேசுவோம்.

இப்போது அந்த அன்பின் வட்டம் விரிகிறது. இன்சொல் என்பது ஒரு முக்கிய விழுமியமாக பாரத பண்பாடு என்றைக்கும் முன்வைத்து வருகிறது. இனிய பேச்சுக்கள். பூமிக்கு இனிய பேச்சுக்கள். அனைத்து மக்கள் மன்றங்களிலும் அந்த அன்பே உரையாடல்களின் அடிப்படையாக வேண்டும். இங்கு கவி காடுகளையும் சேர்க்கிறார். வனமும் சமுதாயத்தின் ஒரு அங்கம் எனும் சிந்தனை எழுகிறது.

தான் பிறந்தது முதல்

பூமி நிலத்தில் வாழும் மக்களை (பல்வேறு இடங்களிலும்) சிதறச் செய்தாள்

குதிரை தன் காலால் புழுதியைச் சிதறடிப்பது போல.

பின் அவள் மகிழ்ச்சியுடன் விரைந்தாள்.

உலகைக் காப்பவள்

காட்டு மரங்களையும், செடிகளையும் அரவணைப்பவள். (56-57)

மானுடத்தின் பரவல் ஒரு தொல்-வரலாற்று சத்தியம், இன்றைக்கும் தொடரும் யதார்த்தம். எந்த மனிதக்குழுவும் ஓரிடத்தில் தங்கி வாழவே விரும்பும். ஆனால் கட்டாயங்களே அவர்களை நகர செய்யும். மனிதக்குழுக்கள் உலகெங்கும் செல்கிறார்கள் பரவுகிறார்கள். அவர்களை அப்படி செய்வது பூமியே. மழையின்மையோ அல்லது மேய்ச்சல்நிலத் தேவையோ அல்லது இயற்கை பேரிடரோ மானுடத்தை வாழ வழி தேடி புவியெங்கும் செல்ல வைக்கிறது. அவ்வாறு சென்ற இடங்களிலெல்லாம் அவளே மானுடத்தை வாழவும் வைக்கிறாள்.

அழகிய பூமி சூக்தத்திலிருந்து சில வரிகளை இங்கே தியானித்தோம். இன்றைக்கும் ஒருவேளை இன்னும் பல நூற்றாண்டுகள் கழிந்தும் கூட, ஏன் இன்னொரு கிரகத்தில் மானுடம் குடியேறினாலும் கூட இப்பூமி சூக்தம் அப்போதும் தரிசன சாத்தியங்களை உள்ளடக்கிய ஒரு பெட்டகமாகவே விளங்கும் என்றே தோன்றுகிறது.

(இங்கு எடுத்தாளப்பட்ட பூமி சூக்த மொழி பெயர்ப்புகளைச் செய்தவர் ஜடாயு.)

One comment

  1. Amruthaputran
    #1

    Excellant. Keep on writing. Now I understood, why Hindus don’t tell “Hindus Bhavanthu sukinaha”, they always tell “Sarve Bhavanthu sukinaha”.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: