இது என்ன நியாயம்?

இந்தியாவின் மிகமுக்கிய மருத்துவ நிறுவனம். அதன் தென்மாநில மனிதவள மேம்பாட்டு அதிகாரி சுஷ்மா. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது ஊழியர்களைச் சந்திக்கும் வேலை சுஷ்மாவுக்கு வந்துவிடும். போன், இமெயில் என்று எப்போதும் அவர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.

ஹைதராபாத்தில் மீட்டிங் முடிந்து, ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தபோது,  சேகரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான் கார்த்திக்.

‘சுஷ்மா  ரொம்ப நல்லா பழகறாங்க… அக்கறையா வீட்டைப் பத்தியும் என்னைப் பத்தியும் விசாரிச்சாங்க…’

‘ப்ரிலியண்ட் லேடி! எவ்வளவு பெரிய பிரச்னையை அவங்ககிட்ட கொண்டு போனாலும் ரெண்டே நிமிஷத்துல தீர்வு சொல்லிடுவாங்க. ஆபிஸ் வேலையா இருந்தாலும் சரி, சொந்தப் பிரச்னையா இருந்தாலும் சரி. நீ இப்பத்தானே சேர்ந்திருக்க… போகப் போக இன்னும் நல்லா புரிஞ்சுப்ப.’

‘அறிவு மட்டுமில்ல,  அழகாவும் இருக்காங்க!’

‘ஆரம்பத்துல அவங்க அழகைக் கண்டு நானும் திகைச்சிருக்கேன். பழகப் பழக அவங்க ஒரு பெண்ணுனோ, அழகுன்னோ எல்லாம் மறந்தே போச்சு.’

கார்த்திக் அடிக்கடி போன், மெயில் என்று தொடர்பில் இருந்தான். தம்பிக்கு வேலை, தங்கையை என்ன கோர்ஸ் சேர்த்துவிடுவது என்பதில் இருந்து சகலத்தையும் சுஷ்மாவிடம் ஆலோசிக்க ஆரம்பித்தான்.

புது ப்ராடக்ட் லாஞ்ச் செய்வதற்காக ஒரு கூட்டம். மூன்று நாள்கள் கொச்சியில். சுஷ்மா ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும். அவர்களை அடுத்த வெற்றிக்குத் தயார் செய்ய வேண்டும்.

மீட்டிங் இல்லாத அதிகாலை,  உணவு இடைவேளை, மாலை, இரவு நேரங்களில்தான் சுஷ்மாவால் ஊழியர்களைச் சந்திக்க முடியும். இரண்டாவது நாள் காலை 6 மணிக்கு போன் செய்து கார்த்திக்கிடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டாள். அவன் குளித்து முடித்து வருவதற்குள் ஏழு மணியாகி விட்டது.

‘கார்த்திக், நாம லஞ்ச்ல மீட் பண்ணுவோம். இப்ப எனக்கு வேற அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு’ என்று கிளம்பிவிட்டாள் சுஷ்மா.

‘என்னடா, ஏழு மணிக்கு எல்லாம் ரெடியாயிட்டே, என்ன விஷயம்?’

‘சுஷ்மா வர்றேன்னாங்க… அதான்…’

‘சுஷ்மா என்ன உன்னை மாப்பிள்ளை பார்க்கவா வர்றா? அடுத்த டார்கெட் பத்திப் பேசப் போறா!’

‘உனக்குத் தெரியாது. நாங்க ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். ஆபிஸ் வேலை தாண்டி நிறையப் பேசியிருக்கோம். இப்ப எல்லாம் அவளே கூட என்னை போன்ல கூப்பிடறா… அக்கறையா பேசுறா. என் குடும்பத்தைப் பத்தி விசாரிக்கிறா…’

‘அவ நம்மள மாதிரி ஆளு இல்லடா. உன்னைவிட டபுளா சம்பாதிக்கிறா… நிறைய படிச்சிருக்கா. நீ அதிகமா கற்பனை பண்ணிக்காதேடா….’

மதிய உணவு வேளையிலும் சுஷ்மாவால் கார்த்திக்கைச் சந்திக்கமுடியவில்லை.

‘சாரி கார்த்திக். ரொம்ப டைட்டா இருக்கு. நீங்க எப்ப தூங்குவீங்க?’

‘நீங்க வர்றதுன்னா ராத்திரி முழுவதும் முழிச்சிட்டே இருக்கேன்…’

‘நான் ஒன்பது மணிக்கு வர்றேன். முக்கியமான விஷயம்.’

இரவு ஒன்பது மணிக்கு மீண்டும் குளித்து, நல்ல உடை அணிந்து காத்திருந்தான் கார்த்திக்.

பத்து மணிக்கு வந்தாள் சுஷ்மா.

இரவு நேரத்தில் எந்தவிதத் தயக்கமும் இன்றி கட்டிலில் அமர்ந்து பேச ஆரம்பித்தாள் சுஷ்மா. வீடு, அவன், அலுவலக வேலைகள் என்று கலந்துகட்டிப் பேசிக்கொண்டிருந்தாள். மணி பதினொன்று முப்பது.

‘கார்த்திக், நான் கிளம்பறேன். காலையில் பார்க்கலாம்.’

‘ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் சுஷ்மா…’

‘சொல்லுங்க..’

‘ஏன் இந்த வேலைக்கு வந்தோம்னு எப்பவாவது நீ கவலைப்பட்டதுண்டா?’

‘இந்த வேலை இப்படி இருக்கும்னு தெரிஞ்சுதான் வந்திருக்கேன் கார்த்திக். உங்களுக்கு என்ன திடீர்னு கவலை?’

’சுஷ்மா,  உனக்கு இருக்கற அழகுக்கும் அறிவுக்கும் நீ கஷ்டப்படாம வாழவேண்டியவ. கண்ட நேரத்துலயும் ஆம்பிள்ளை தனியா இருக்கிற இடத்துக்குப் போய் நீ பேச வேண்டியதை நினைச்சா எனக்குக் கவலையா இருக்கு.’

‘என்ன உளர்றே? ஆம்பிள்ளைகளும் மனுஷங்கதானே? என் வேலை விஷயமாத்தானே ரூமுக்குப் போறேன். உனக்கு என்ன குழப்பம்?’

‘உன்னை எனக்குப் புடிச்சிருக்கு. என்னை நீ கல்யாணம் செஞ்சுக்கிட்டா ராணி மாதிரி நான் உன்னைக் காப்பாத்துறேன்.’

‘என்ன பேசற கார்த்திக்? என் வேலையைப் பத்தி உனக்குக் கேவலமான அபிப்ராயம் இருக்கு. அதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது. ஏதோ நான் குடும்பத்துக்காகக் கேவலமான வேலை செய்யறதாவும், என்னை நீ காப்பாத்தறதாகவும் கற்பனை பண்ணிக்காத.’

‘நீ என் குடும்பம், என்னைப் பத்திக் கவலைப்படும்போது நான் உன்னைப் பத்திக் கவலைப்படக்கூடாதா?’

‘உன் குடும்பப் பிரச்னை உன் வேலையைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகத்தான் நான் உனக்கு உதவி செஞ்சேன். இங்க இருக்கிறவங்களை விட நீ ரொம்பச் சின்னவன். அனுபவம் குறைவு. புத்திசாலித்தனம் இருந்தாலும் கொஞ்சம் சோம்பேறி. உன்னை மேலே கொண்டு வருவது என்னுடைய வேலை. அதுக்காக உனக்கு விருப்பமான விஷயங்களைப் பேசி,  நடுவில் உன் வேலையையும் கவனமா செய்ய வைக்கிறதுதான் என்னோட வேலை. அதை நான் சரியா செஞ்சிருக்கேன்.’

‘அப்ப என்னை நீ லவ் பண்ணலையா?  போன் பண்ணினது, மெயில் அனுப்பியது, சிரிச்சது எல்லாம் பொய்யா?’

‘எதுவும் பொய்யில்லை. ஆனா அதுக்கு லவ் என்ற அர்த்தமும் இல்லை.’

‘என்னை உனக்கு ஏன் பிடிக்கலை?’

‘இங்க பாரு கார்த்திக்,  நீ விரும்பினா நான் ஒண்ணும் பண்ண முடியாது. நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் உங்கிட்ட அப்படி நடந்துக்கல. உன் புரிதல் ரொம்ப மோசமா இருக்கு… நான் வரேன். இந்த டார்கெட்டை நல்லா பண்ணினா உனக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கு…’

‘நீ யாரையாவது கல்யாணம் செய்யத்தானே போறே? என்னைப் பண்ணிக்கக்கூடாதா?’

‘முட்டாள்தனமா பேசாதே. என் கல்யாணம் எல்லாம் என் விருப்பம். அதில் உனக்கு ஒரு ரோலும் இல்லை.’

‘எனக்கு என்ன குறை? அழகில்லையா, படிப்பில்லையா?’

‘உலகத்துலயே நீ உன்னதமான ஆணாக இருந்தாலும் என்னை நீ நிர்பந்திக்க முடியாது.’

‘ஒரு நியாயமான காரணம் சொல், நான் விட்டுடறேன்.’

‘எனக்குத் திருமணம் ஆச்சு. குழந்தைகூட இருக்கு.’

‘நான் நம்ப மாட்டேன். எந்தப் புருஷனும் பணத்துக்காக இப்படி ஒரு வேலைக்கு பொண்டாட்டிய அனுப்ப மாட்டான்.’

‘உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்லா தூங்கு. நேரமாச்சு. எனக்கு ஆறு மணிக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. குட் நைட்.’

மறுநாள் காலை –

‘என்னடா, நேத்து நைட் சுஷ்மா கூட ரொம்ப நேரம் கடலை போலருக்கு! என்ன சொன்னா?’

‘ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். திடீர்னு கை பிடிச்சு இழுத்துட்டா. ஆடிப் போயிட்டேன். சாரி சொல்லி அனுப்பிட்டேன். இந்த மாதிரி பொண்ணுங்களை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. தப்பிச்சேன் வின்செண்ட்…’

***

அது ஒரு பெரிய விளம்பர நிறுவனம். எம்.டி-யின் மகள் காவ்யா. சமீபத்தில்தான் அவர் நிறுவனத்தில் சேர்ந்திருந்தார். முதல் இரண்டு ஆண்டுகள் மேனேஜர்,  நிர்வாக அதிகாரி, ஜாயிண்ட் எம்.டி என்று பொறுப்பு ஏற்றுக்கொண்டவர்,  இன்று நிர்வாக இயக்குநர்.

காவ்யா சேர்ந்த புதிதில் ஏற்கெனவே பல வருடங்களாக வேலை பார்த்தவர்கள் எல்லாம் அவருக்குச் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அந்த நேரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேர்ந்திருந்த மாதவன் மற்றவர்களை விட வித்தியாசமாகத் தெரிந்தான். போட்டி விளம்பர நிறுவனங்களைப் பற்றிய செய்திகளைச் சொல்வான். புதுப்புது உத்திகளைப் பற்றிப் பேசுவான். வேலையைப் பற்றிய விஷயங்களை விரல் நுனியில் வைத்திருந்தான்.

காவ்யாவுக்கு அவனுடைய அணுகுமுறை பிடித்திருந்தது. பல மீட்டிங்களுக்கு மாதவனை அழைத்தார். பல கஸ்டமர்களை இருவருமாகச் சேர்ந்து சென்று சந்தித்தார்கள். நிறைய ஆர்டர்கள் பெற்றார்கள். நேரம், காலம் பார்க்காமல் காவ்யாவுடன் மாதவன் வேலை செய்ததால் காவ்யாவுக்கு மிகவும் பிடித்துப் போனது. நல்ல புரிதலும் சுலபமான அணுகுமுறையும் இருப்பதால் வேலை செய்வது எளிதாக இருந்தது.

மாதவனின் வளர்ச்சி அலுவலகத்தில் பலருக்குப் பொறாமையை ஏற்படுத்தியது. கண்ணாடி அறையில் அவர்கள் கண்ணெதிரே காவ்யா – மாதவன் அமர்ந்து பேசினாலும் கூட வெளியில் மோசமான கமெண்ட்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாக எல்லா இடங்களிலும் சுலபமாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு காவ்யாவும் ஆளானார்.

அதுவரை ஒழுங்காக இருந்த மாதவனின் புத்தி கொஞ்சம் கோணலாக ஆரம்பித்தது.

‘மேடம் வீட்டுக்குப் போன பிறகும் கூட நான் போன்ல ஒரு மணிநேரம், ரெண்டு மணிநேரம் பேசிட்டே இருப்பேன். நேரம் போறதே தெரியாது!’

’நேத்து நானும் அவங்களும் கோயிலுக்குப் போனோம்.’ (புது ப்ராஜெக்ட் கையெழுத்து இடப் போகும்போது, வழியில் இருந்த பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிட்டுச் சென்ற விஷயத்தை மறைத்து…)

‘மேடமும் நானும் பாம்பே போனபோது தாஜ் ஹோட்டலில் போட்டோ எடுத்தோம்.’

இப்படி வெறும் வாயை மென்றுகொண்டிருந்தவர்களுக்கு அவலைப் போட்டான் மாதவன். மாதவனின் செயலும் தெரியாமல், ஊழியர்களின் பேச்சும் தெரியாமல் நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தார் காவ்யா.

வருடங்கள் சென்றன. மாதவனுக்குப் பல ப்ரமோஷன்கள் வந்தன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் திறமைக்குக் கிடைத்த ப்ரோமோஷன்களாகப் பார்க்கப்படவில்லை. காவ்யா – மாதவன் உறவுக்குக் கிடைத்த பரிசாக பேசித் தீர்த்தார்கள்.

பணப்பிரச்னை காரணமாக வெளியேற்றப்பட்ட நிகில், ‘காவ்யா எல்லாம் பொம்பளையா? மாதவன் மாதிரி நினைச்சிட்டா… என்னைக் கூப்பிட்டா. வரலைன்ன உடனே பொய்க் காரணம் சொல்லி அனுப்பிட்டா’ என்றான்.

‘என்னைக் கூட ஒரு முறை பாம்பேல மீட்டிங்னு சொல்லி கூப்பிட்டாங்க. நான் உஷாராகி வரமாட்டேன்னு சொல்லிட்டேன்…’

**

ஒரு பெண் தன்னை ஒருவன் கூப்பிட்டான் என்று சொல்ல முடியாது. அது மிகக்கேவலமான விஷயம். ஆனால், ஒரு பெண் தன்னைக் கூப்பிடுகிறாள் என்பதில் ஓர் ஆண் பெருமைகொள்கிறான். தன்னிடம் நட்பாகப் பழகும் ஒரு பெண்ணைப் பற்றி, அந்த நட்புக்குக் களங்கம் கற்பிக்கும் வேலையை ஆண் தயக்கமின்றிச் செய்கிறான்.

பெரிய படிப்பு படித்து, நல்ல அறிவாளியாக இருக்கும் பெண்ணைக் கண்டு காதலிக்கும் நேரத்தில், அவள் செய்யும் வேலையைக் கேவலமாகப் பார்க்கும் பார்வை ஓர் ஆணுக்கு இருக்கிறது. அவன் ஏதோ அவளைக் காப்பாற்ற வந்த தேவதூதன் போலக் கற்பனை செய்துகொண்டு, அவள் விருப்பம் என்ன என்று அறியாமலே அவள் மீது உரிமைகொள்கிறான். தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறான்.

‘அந்தப் பொண்ணுகிட்ட கொடுத்து ஜிஎம் கிட்ட கையெழுத்து வாங்கச் சொன்னா, ஜிஎம் கண்ணை மூடிட்டு கையெழுத்துப் போட்டுடறார். நாம போனா நாலு தடவை கரெக்‌ஷன் போடச் சொல்லி அனுப்பிடுவார்…’

’என்னதான் எம்டி கூடப் பேசறதுக்கு விஷயம் இருக்குமோ தெரியலை. எப்பப் பார்த்தாலும் இந்தம்மா போய் கடலை போடுது. அவரும் ஈன்னு சிரிச்சிப் பேசிட்டு இருக்கார்…’

‘ஒரு பர்மிஷன், லீவு கேட்டா சார் எவ்வளவு கத்தறார்? அந்தப் பொண்ணு போய் ஒரு சிரிப்பு சிரிச்சான்னா, உடனே கொடுத்துடறார்… எல்லாம் நேரம்…’

’அழகுங்கற தகுதியை வச்சிட்டு அது வேலைக்குச் சேர்ந்திருச்சு.’

‘பொண்ணுன்னு ஒரு தகுதியை வச்சிட்டு என்னம்மா ஆடறாங்க. அவ எல்லாம் என்ன எழுதறா? கதை, கவிதை எல்லாம் நிறைய பத்திரிகைகளில் வருது. யாரைக் கைக்குள்ள போட்டிருக்காளோ…’

‘இலக்கிய கூட்டம், நண்பர்கள் வட்டம்னு அந்தப் பொண்ணு சுத்தாத இடமில்லை. இவ கூட எல்லாம் புருஷன் எப்படித்தான் வாழறான்னோ தெரியலை.’

’பெண்ணியம் பேசறவங்க எல்லாம் பாலியல் சுதந்தரத்துலதான் வந்து நிப்பாங்க.’

‘போன தடவை அவளை வேறொருத்தன் கூடப் பார்த்தேன். இந்தத் தடவை இன்னொருத்தன் கூட. கேட்டால் ஆண் – பெண் நட்பைத் தப்பா பார்க்காதீங்கன்னு சண்டைக்கு வந்துடுவாங்க.’

***

பெண்கள் தலைமை பொறுப்பில் இருப்பதைச் சகிக்காதவர்கள் இயலாமையாலும் பொறாமையாலும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்தான் ஒழுக்கம் பற்றிய  விமரிசனங்கள். இதில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் புறம் பேசுகிறார்கள். தாங்கள் பேசுவது தங்களைப் போன்று இன்னொரு பெண்ணைப் பற்றி என்று கூட பிரக்ஞை இன்றிப் பேசுகிறார்கள்.

ஒரு சிரிப்பு, ஓர் உரசல், கொஞ்சம் நெருக்கம் காட்டி எதையும் ஒரு பெண்ணால் சாதிக்க முடியும் என்று நினைக்கும் ஆண்கள், பெண்களை மட்டும் கேவலப்படுத்தவில்லை. ஆண்களையும் மிகமிக மோசமாகக் கேவலப்படுத்துகிறார்கள். ஒரு சிரிப்புக்கும் உரசலுக்கும் ஆண்கள் மசிந்துவிடுவார்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

படிப்பு, திறமை, உழைப்பு இருந்தால் ஆணோ, பெண்ணோ உயர்ந்த நிலையை அடைய முடியும். பெண் சொந்தத் திறமையால் முன்னேறிச் செல்வதைக்கூட, பாலினத்தைக் காரணம் காட்டி, அதன் மூலம் உயர்ந்த நிலையை அடைவதாகக் கூறி, தங்களைத் தாங்களே இழிவு செய்துகொள்கிறார்கள்.

ஓர் ஆணும் பெண்ணும் நட்பாக இருப்பது இந்தச் சமூகத்தில் மிக கஷ்டமான காரியமாகவே இருக்கிறது. கல்வி, தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் முன்னேறினாலும் ஆழ்மனத்தில் பெண்களைப் பற்றிய பார்வைகள் மாறாத வரை இங்கு உண்மையான நட்பு நீடிக்க சாத்தியமே இல்லை. கண்காணாத தேசங்களில் இருந்து இணையத்தின் மூலம் ஏற்படும் ஆண் – பெண் நட்பு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஏதோ பிரச்னை காரணமாக விரிசல் விடும்போது, அதன் உண்மை சொரூபம் தெரிய ஆரம்பிக்கிறது. நட்பாக இருந்த காலகட்டத்தில் பேசிய விஷயங்கள், கடிதங்கள் அனைத்தையும் பொதுவெளியில் காட்டி, ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொள்கிறார்கள்.

நல்ல நட்புக்குப் பிரச்னை வராது. அப்படியே வந்தாலும் ஒருவரை ஒருவர் காயப்படுத்தாது. நாம் பழகுவது பெண் என்றோ, ஆண் என்றோ தோன்றாததுதானே சிறந்த நட்பாக இருக்க முடியும். அந்த நட்பில்தானே நம்பிக்கை இருக்கும்.

பெண் எதைச் செய்தாலும் சமூகம் அவளை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. அவள் இப்படித்தான் ஆணுடன் பழக வேண்டும். இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று எழுதப்படாத விதியை வைத்திருக்கிறது. பெண் எப்போதும் யாரும் தப்பாக நினைத்துவிடக்கூடாதே என்ற எண்ணத்தில் சர்வ ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் மீறும் பெண்கள் மிகப்பெரிய சர்ச்சைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெண் எப்படிப் பழக வேண்டும், எப்படி எழுத வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்?

சமூகத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதே போலத்தான் பெண்களின் ஒழுக்கம், நட்பு சார்ந்த விஷயங்களிலும் மாற்றம் வரும்போது இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்னைகளைக் கண்டு அஞ்சி, பின்வாங்காமல், முன்னோக்கிச் செல்வதுதான் வரும் தலைமுறை பெண்களுக்குச் செய்யும் அற்புதமான காரியமாக இருக்க முடியும். இழக்காமல் எதையும் பெற முடியாது என்பது போல, இதுபோன்ற தடைகளைத் தாண்டி பெண்கள் வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு பெண்ணும் தன்னால் முயன்ற அளவு சிறு நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

[பெண்மனம், இந்த சீசனுக்கு இதோடு முற்றும்]

6 comments so far

 1. ஜானகி ராமன்
  #1

  //இதில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் புறம் பேசுகிறார்கள். தாங்கள் பேசுவது தங்களைப் போன்று இன்னொரு பெண்ணைப் பற்றி என்று கூட பிரக்ஞை இன்றிப் பேசுகிறார்கள்.//

  இந்த இடத்தில் மட்டும் முதன் முறையாக நடுநிலைமையாக எழுதியிருக்கிறீர்கள்

 2. மோகனா
  #2

  வணக்கம் சுஜாதா. இது என்ன நியாயம் ? ரொம்ப இயல்பாக இருக்கிறது.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பெண்கள் உயர்ந்த இடத்திற்கு உயரும்போது, சுற்றிலும் வாழும் மற்றவர்களால் அதனைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அந்த பெண்ணைப் பற்றி அவதூறு பேசி, தங்களின் மனநிலையை நிலைநாட்டுகிறார்கள். அதில் மன மகிழ்வு அடைகிறார்கள். இந்த சமூகம் இப்படித்தான் இருக்கிறது.இதில் ஆண், பெண் என்ற வேறுபாடே இல்லை. புறணி பேசினால்தான் அவர்களுக்கு நிம்மதி.அந்த பெண், தவறானவளாய் இருப்பதால்தான், அவளுக்கு முன்னேற்றம் என்று பேசுவதில் ஒரு குரூர திருப்தி.ஏன் பெண்மனம் இந்த கட்டுரையுடன் முடிகிறது. அது என்ன சீசன் கட்டுரைகள்?

  //பெண்கள் தலைமை பொறுப்பில் இருப்பதைச் சகிக்காதவர்கள் இயலாமையாலும் பொறாமையாலும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்தான் ஒழுக்கம் பற்றிய விமரிசனங்கள். இதில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் புறம் பேசுகிறார்கள். தாங்கள் பேசுவது தங்களைப் போன்று இன்னொரு பெண்ணைப் பற்றி என்று கூட பிரக்ஞை இன்றிப் பேசுகிறார்கள்.//சமூகத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதே போலத்தான் பெண்களின் ஒழுக்கம், நட்பு சார்ந்த விஷயங்களிலும் மாற்றம் வரும்போது இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்னைகளைக் கண்டு அஞ்சி, பின்வாங்காமல், முன்னோக்கிச் செல்வதுதான் வரும் தலைமுறை பெண்களுக்குச் செய்யும் அற்புதமான காரியமாக இருக்க முடியும்//.

 3. மோகனா
  #3

  வணக்கம் சுஜாதா. இது என்ன நியாயம் ? ரொம்ப இயல்பாக இருக்கிறது.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பெண்கள் உயர்ந்த இடத்திற்கு உயரும்போது, சுற்றிலும் வாழும் மற்றவர்களால் அதனைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அந்த பெண்ணைப் பற்றி அவதூறு பேசி, தங்களின் மனநிலையை நிலைநாட்டுகிறார்கள். அதில் மன மகிழ்வு அடைகிறார்கள். இந்த சமூகம் இப்படித்தான் இருக்கிறது.இதில் ஆண், பெண் என்ற வேறுபாடே இல்லை. புறணி பேசினால்தான் அவர்களுக்கு நிம்மதி.அந்த பெண், தவறானவளாய் இருப்பதால்தான், அவளுக்கு முன்னேற்றம் என்று பேசுவதில் ஒரு குரூர திருப்தி. ஏன் பெண் மனம் இந்த கட்டுரையுடன் முடிகிறது ? அது என்ன சீசன் ?
  //பெண்கள் தலைமை பொறுப்பில் இருப்பதைச் சகிக்காதவர்கள் இயலாமையாலும் பொறாமையாலும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்தான் ஒழுக்கம் பற்றிய விமரிசனங்கள். இதில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் புறம் பேசுகிறார்கள். தாங்கள் பேசுவது தங்களைப் போன்று இன்னொரு பெண்ணைப் பற்றி என்று கூட பிரக்ஞை இன்றிப் பேசுகிறார்கள்.//
  //ஒரு பெண் தன்னை ஒருவன் கூப்பிட்டான் என்று சொல்ல முடியாது. அது மிகக்கேவலமான விஷயம். ஆனால், ஒரு பெண் தன்னைக் கூப்பிடுகிறாள் என்பதில் ஓர் ஆண் பெருமைகொள்கிறான். தன்னிடம் நட்பாகப் பழகும் ஒரு பெண்ணைப் பற்றி, அந்த நட்புக்குக் களங்கம் கற்பிக்கும் வேலையை ஆண் தயக்கமின்றிச் செய்கிறான்.//

 4. Sriram
  #4

  அப்பாடா… அடுத்த சீசனுக்கு இருபத்திஒன்றாம் நூற்றாண்டைப் பற்றி எழுதுங்கள்.

 5. சஹ்ரிதயன்
  #5

  //ஒரு பெண் எப்படிப் பழக வேண்டும், எப்படி எழுத வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்?//

  ஆண் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும் இவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் , அந்த ஷேபிங் வெளியே தெரியவில்லை
  அவன் ஜீரணித்து கொள்கிறான் அதான் வித்தியாசம்

  இந்த தொடரும் மிக்க நன்றாக வந்திருந்தது !

 6. பிரபா
  #6

  இயல்பான நடை , எளிமை , அழகு … தீவிரம்… நாம் பழகுவது பெண் என்றோ, ஆண் என்றோ தோன்றாததுதானே சிறந்த நட்பாக இருக்க முடியும். அந்த நட்பில்தானே நம்பிக்கை இருக்கும்…. அருமை !

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: