அடியில் இருப்பது

ஓர் ஆறு. அதன் இரு கரைகளிலும் இரண்டு கிராமங்கள்.

அந்த ஆற்றில் வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாளும் தண்ணீர் அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும். அதைச் சமாளித்து நீந்தி அடுத்த கரைக்குச் செல்வது மிகவும் சிரமம்.

இதனால் அந்த இரு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த ஆபத்தான முயற்சியில் இறங்கவில்லை. அவரவர் தங்களுடைய சொந்தக் கிராமத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். அடுத்த கிராமத்துடன் உறவும் இல்லை, விரோதமும் இல்லை என்கிற நிலைமை.

ஒருநாள் வலது கரைக் கிராமத்துக்கு ஜென் துறவி ஒருவர் வந்தார். அவர் ஆற்றங்கரையில் நின்றபடி இடது கரைக் கிராமத்தைப் பார்த்தார். ‘நான் அங்கே போகணுமே!’ என்றார்.

‘அது சாத்தியமில்லை சாமி’ என்று பதில் வந்தது. ‘இந்த ஆத்துல நீச்சலடிக்கறது தற்கொலைக்குச் சமம்!’

அந்த ஜென் துறவி அதனை ஏற்கவில்லை. ‘ஆற்றைக் காரணம் காட்டி நீங்கள் பிரிந்திருப்பது சரியல்ல. நீங்கள் ஏன் ஒரு பாலம் கட்டக்கூடாது?’ என்றார்.

‘அடப் போங்க சாமி, நீச்சலுக்கே வழியில்லை, பாலம் எப்படிக் கட்டமுடியும்?’

‘நிச்சயமா முடியும். நான் உங்களுக்கு உதவறேன்’ என்றார் அவர். அந்தக் கிராமத்திலிருந்த இளைஞர்கள் நூறு பேரைத் திரட்டிக்கொண்டு வேலையைத் தொடங்கினார்.

அடுத்த பல நாள்கள் ராப்பகலாக வேலை நடந்தது. வெயிலிலும் மழையிலும் அவதிப்பட்டு எப்படியோ அவர்கள் பாலத்தைக் கட்டி முடித்துவிட்டார்கள். இப்போது இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இந்தக் கரைக்கும் அந்தக் கரைக்கும் போய்வரமுடிந்தது. கல்வி, வேலை தேடுவது, திருமணத்துக்குப் பெண் எடுப்பது என்பதுபோன்ற நல்ல உறவுகள் ஏற்பட்டன.

இதனால் அந்த இரு கிராமங்களின் மக்களும் சேர்ந்து அந்த ஜென் துறவியைச் சந்தித்தார்கள். ‘நாங்க எல்லாரும் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த முடிவெடுத்திருக்கோம்!’ என்றார்கள்.

‘வேண்டாம்’ என்றார் அந்தத் துறவி. ’இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கு இருவகையான கற்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். நீங்கள் மேலோட்டமாகப் பார்க்கும்போது பாலத்தின் சிமென்ட் கற்கள்மட்டும்தான் உங்கள் கண்ணுக்குத் தெரியும். ஆனால் மறைமுகமாக அந்தப் பாலத்தைத் தாங்கி நிற்பது ஆற்றுக்குள் அஸ்திவாரமாகப் போட்டிருக்கும் பாறாங்கற்கள்தான்.’

‘அது சரி சாமி. அதுக்கும் நீங்க பாராட்டு விழா வேணாம்ன்னு சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?’

‘வெளியே தெரியாமல் தங்களுடைய வேலையைச் செய்துகொண்டிருக்கும் அந்தப் பாறாங்கற்களைப்போல்தான் நானும் இருக்க விரும்புகிறேன். எனக்கு எந்த விளம்பரமோ பாராட்டோ தேவையில்லை’ என்றார் துறவி.

One comment

  1. Udhayakumar
    #1

    I think he would not have seen our Karunanithi yet….

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: