தோழர்

அத்தியாயம் 19

 

ஏழைமை தவிர்க்க இயலாதது

மக்கள் தொகை பெருக்கம் பற்றிய தாமஸ் மால்தஸின் தத்துவத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பொதுப்புத்தியைச் சமாதானப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது அவரது வாதம். முதலாளிகளையும் இது திருப்திபடுத்தியது. நாம் என்ன செய்யமுடியும், மக்கள் தொகை பெருகுவதால்தானே ஏழைமை பெருகிறது என்று அவர்கள் பிரச்னையில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்கள். 1798 முதல் 1826 வரை, மால்தஸின் An Essay on the Principle of Population ஆறு பதிப்புகள் கண்டது.

தத்துவார்த்த ரீதியில், ஐரோப்பாவில் அப்போது நிலவிவந்த பெரும்பான்மையினரின் கருத்துகளோடு மால்தஸ் முரண்பட்டார்.  ஐரோப்பா தங்குதடையற்ற வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்னும் கருத்து அப்போது ஆதிக்கத்தில் இருந்தது.  சமூகத்தை மேன்மைப்படுத்துவதற்கு அளவற்ற வழிகள் உள்ளன, மனித குலம் அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்றார் வில்லியம் காட்வின் என்னும் பிரிட்டிஷ் எழுத்தாளர் (தத்துவ ஆசிரியர், பத்திரிகையாளர்). சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கவேண்டுமானால், மேட்டுக்குடியினரிடம் உள்ள சொத்துக்களைப் பறித்து, பொதுவில் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கவேண்டும் என்றார் காட்வின்.

பிரெஞ்சு தத்துவவியலாளர் ரூஸோவின் கருத்தும் கூட இதுவே. மனிதர்கள் தங்களைப் பிணைத்துள்ள சங்கிலிகளில் இருந்து விடுபடவேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர் ரூஸோ. அதே சமயம், மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்று இவர் நம்பினார். சமூக ஒப்பந்தம் மூலம் மனிதர்களைப் பிணைத்துவிடமுடியும் என்பது ரூஸோவின் கருத்து.  மொத்தத்தில், சில பல பிரச்னைகளைக் களைந்துவிட்டால் சமூகம் சரியாகிவிடும் என்று ஐரோப்பியா நம்பியது.

பிரச்னைகள் தீராது, பெருகவே செய்யும் என்றார் மால்தஸ். காட்வினின் வாதத்தை மால்தஸ் நிராகரித்தார். செல்வந்தர்களின் உடைமைகளைப் பறிப்பதன் மூலம் பிரச்னை தீராது. உங்களால் எவ்வளவு செல்வத்தைப் பகிர்ந்தளிக்கமுடியும்? ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ப ஊதியம் கிடைக்கும் என்று ஆகிவிட்டால் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுமா? நீங்கள் குறிப்பிடும் அந்தக் கனவுலகம் சாத்தியம் தானா? அது நம் காலத்தில் ஏற்பட்டுவிடுமா? அப்படியே ஏற்பட்டாலும் அந்தக் கனவுலகில் ஏற்றத்தாழ்வு இருக்காது என்பதற்கு என்ன நிச்சயம்? மக்கள் தொகை பெருகிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் போடும் எந்தவொரு திட்டமும் செயல்படாது. எந்தவொரு புரட்சிகர நடவடிக்கைக்கும் இடமில்லை.

’ஏழைகளுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது’

நோய், யுத்தங்கள் ஆகியவை பெருகினால் ஒழிய மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தமுடியாது என்றார் மால்தஸ். இறை நம்பிக்கை மிகுந்த மால்தஸ், இந்தப் பிரசன்னைக்குக் காரணம் கடவுளே என்றார். மக்கள் தொகை பெருக்கத்தைக் கடவுள் நம் மீது திணித்திருக்கிறார். நமக்குப் பாடம் புகட்டுவதற்காக இந்த ஏற்பாட்டை அவர் செய்திருக்கிறார். ஒவ்வொரு சமூகத்திலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏழைகள் இருந்திருக்கிறார்கள். இருக்கவே செய்கிறார்கள். இதைத் தவிர்க்கமுடியாது.

மக்களின் இனப் பெருக்கத்தைத் தடுப்பது மட்டும் நம் கையில் உள்ள ஒரே வழி. போரும் வியாதிகளும் இறப்பு விகிதத்தைப் பெருக்கிக்கொண்டிருக்கும்போது, நாம் நம்மால் முடிந்த அளவுக்கு பிறப்பு விகிதத்தைக் குறைக்க முயற்சி செய்யவேண்டும். குழந்தை பிறப்பைத் தடுக்கும் முறைகளை நாம் கடைபிடிக்கவேண்டும். கருக்கலைப்பு அதிகரிக்கப்படவேண்டும். இச்சைகளை அடக்கவியலாத பட்சத்தில், பாலியல் சார்ந்த தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  திருமணத்தையும் இயன்ற அளவுக்குத் தள்ளிப்போடவேண்டும். சிறந்தது, பிரமச்சரியத்தைக் கடைபிடிப்பது.

சரி கடவுள் எதற்காக ஏழைமையை உருவாக்கவேண்டும்?  எதற்காக உணவற்றவர்களை உருவாக்கவேண்டும்? எதற்காகப் பசியையும் பிணியையும் பரவச் செய்யவேண்டும்? நம்மை நல்வழிப்படுத்துவதற்குத்தான் என்றார் மால்தஸ். நீ ஒழுக்கமாக வாழ மறுத்தால் இதுதான் உன் கதி என்று காட்டி மிரட்டுவதற்காக இந்தச் சபிக்கப்பட்டவர்களை அவர் உருவாக்கினார். கடினமாக வேலை செய்யாவிட்டால் உனக்கு உணவு கிடைக்காது என்னும் உண்மையை போதிப்பதற்காக உணவற்றவர்களை அவர் சிருஷ்டித்திருக்கிறார்.

எதற்காக தீமையை உருவாக்கினார்? நன்மையின் அவசியத்தை உணர. நன்மையை நாடிச் செல்லவேண்டும் என்னும் விருப்பத்தை உருவாக்க. அந்த வரிசையில், உணவுத் தட்டுப்பாடு இருப்பதும் அவசியமே. மக்கள் தொகை பெருகுவதற்கு ஏற்ப உற்பத்தியும் உணவும் பெருகினால் என்ன ஆகும்? மனிதன் காட்டுமிராண்டியாகவே வாழவேண்டியிருக்கும். வேறு எதிலும் அவனுக்கு நாட்டம் போகாது. எதையும் புதிதாக முயன்று பார்க்கமாட்டான். போராடும் எண்ணம் இருக்காது. நாளடைவில் அவன் துருப்பிடித்துவிடுவான். இந்த நிலையைத் தடுப்பதற்காகத்தான் கடவுள் சில இடைவெளிகளை உருவாக்கினார். மனிதன் எட்டிப்பிடிக்கமுடியாத அளவுக்கு உணவுப் பொருள்கள் சுருங்கின. மற்றொரு பக்கம், மனித உற்பத்தி பெருகிக்கொண்டே சென்றது.

தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் மிகுந்த துயரங்களை அனுபவிக்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், அதிலுள்ள சூசகமான உட்கருத்தை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. குறைந்த கூலி பெற்று வரும் தொழிலாளர்களுக்கு அதிகக் கூலி வழங்கினால் என்ன ஆகும்? அவர்கள் வாழ்க்கைத் தரம் உயரும், சரி. பசியும் பட்டினியும் மறையும், சரி. அடுத்து? குழந்தை பிறப்பு அதிகரிக்கும் அல்லவா? கூடுதலாகக் குழந்தைகள் பெற்றெடுத்தாலும் அவர்களுக்கு உணவளிக்கமுடியும் என்று அவர்கள் நம்பிக்கை பெற்றுவிடுவார்கள் அல்லவா? அது மட்டுமா? பிறப்பு விகிதம் பெருகுவது போல் இறப்பு விகிதமும் குறைய ஆரம்பிக்கும். இது ஏன் ஒருவருக்கும் புரியவில்லை?

எங்கெல்ஸுக்குப் புரிந்தது. மால்தஸின் வாதம் எந்தப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது.  எனவே, மால்தஸின் ‘கண்டுபிடிப்புகள்’ ‘இகழ்ச்சியானவை’ என்றார். மனித குலத்தையும் இயற்கையையும் மால்தஸால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ‘எனவே, அவருடைய தத்துவம் அர்த்தமற்றதாக இருக்கிறது.’

மால்தஸின் சித்தாந்தம் பிரிட்டிஷ் உயர் வர்க்கத்தினரின் வரவேற்பைப் பெற்றிருந்ததை எங்கெல்ஸ் உணர்ந்திருந்தார். ஏழைகளுக்கு இருப்பதைப் போன்ற நெருக்கடிகள் இவர்களுக்கு இல்லை. எத்தனை பெரிய குடும்பத்தையும் இவர்களால் நிர்வகிக்கமுடியும். ஒரு ஏழை, பெருகிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரின் வயிற்றை நிரப்ப தொடர்ச்சியற்ற போராட்டங்களை நடத்துகிறான் என்னும் மால்தஸின் வாதம் இவர்களிடம் எடுபடாது. திருமணத்துக்குப் பிறகும் இவர்களுடைய சல்லாப வாழ்க்கை தொடர்கிறது. ஆசைக் காதலிகள், ரகசிய குடும்பங்கள் என்று உல்லாசமாக இருக்கிறார்கள். ஒரு ஏழைக்கு எழக்கூடிய அறம் சார்ந்த கேள்விகள் இவர்களுக்கு முளைக்காது. காரணம், இவர்களிடம் பணம் இருக்கிறது. ஏழைகள் வர்க்கம் பெருகினால் அது ஏழைகளைப் பாதிக்கும். பணக்காரர்கள் பெருகினால் பாதிப்பு இல்லை.

மால்தஸின் கருத்தை அரசும் செல்வந்தர்களும் தங்களுக்குச் சாதகதமாக, சாமர்த்தியமாகப்  பயன்படுத்திக்கொண்டதை எங்கெல்ஸ் கண்டார். ஏழைகள் சட்டம், 1834 என்றொரு சட்டம் பிரிட்டனில் உருவாக்கப்பட்டது. இதன்படி, ஆதரவற்ற ஏழைகள் அரசாங்கத்தை அணுகவேண்டும். அரசாங்கம் அவர்களுக்கு சிறப்பு பணிமுகாம்களை  அமைத்துக்கொடுக்கும். பணிமுகாமின் மற்றொரு பெயர், சிறைச்சாலை. கடுமையான சூழலில் இவர்கள் வேலை செய்யவேண்டியிருக்கும். பெயருக்கு, சொற்ப கூலியை அரசு அளிக்கும். இந்தச் சட்டத்தின் மூலம் அரசுக்கு இரட்டிப்பு நன்மை கிடைத்தது. ஒன்று, சுலப ஊதியத்தில் அதிகப் பணி. இரண்டு, ஏழைகளுக்கு உதவுகிறோம் என்னும் நல்ல பெயர்.

மால்தஸின் சிந்தனையே இந்தச் சட்டத்தின் அடித்தளமாக இருந்ததை எங்கெல்ஸ் கண்டார். எவ்வளவு முயற்சி செய்தாலும், எவ்வளவு பணம் செலவிட்டாலும், ஏழைமை ஒழியப்போவதில்லை என்றாகிவிட்டது. ஏழைமை மேலும் ஏழைமையைக் கொண்டு வரும். ஏழைகள் ஏழைகளை உற்பத்தி செய்வார்கள். அப்படியிருக்க, எதற்காக அரசு அநாவசியமாக ஏழைகளுக்கு உதவ வேண்டும்? எதற்காக அவர்களுக்குச் சலுகைகள் அளிக்கவேண்டும்? எதற்காக அவர்கள் பொருட்டு தேவையற்று சிந்திக்கவேண்டும்?

மால்தஸின் மக்கள் தொகை சித்தாந்தம்,‘பாட்டாளி வர்க்கத்தின் மீது பூர்ஷ்வா வர்க்கம் தொடுக்கும் போர்’ என்றார் எங்கெல்ஸ். மால்தஸின் வாதத்தை இவர் வலுவுடன் எதிர்த்தார். ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் உருவாவதற்குக் காரணம், மக்கள் தொகை பெருக்கமல்ல, முதலாளித்துவம். சமமற்ற பொருளாதார நிலைக்கு இன்னும், இன்னும் என்று துடிதுடிக்கும் முதலாளிகளின் மனப்பான்மையைத்தான் குற்றம் சொல்லவேண்டும். தனிச்சொத்துடைமையைக் குற்றம் சொல்லவேண்டும். முதலாளித்துவத்தின் நோக்கங்களை, லாப வெறியைக் குற்றம் சொல்லவேண்டும். மனித குலம் வாழ்வதற்கான செல்வம் இயற்கையில் இருக்கிறது. ஆனால், அது பரவலாக அனைவரிடமும் இல்லாமல், சில இடங்களில் மட்டும் குவிந்திருக்கிறது என்றார் எங்கெல்ஸ்.

பெருகும் மக்கள் தொகையை ஈடுகட்டும் வகையில் மனிதர்களால் உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ளமுடியும். உதாரணத்துக்கு, உணவுத் தேவையை ஈடுகட்ட வேளாண்மையில் உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ளலாம். தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கொண்டு நமக்குத் தேவையானதை உற்பத்தி செய்துகொள்ளமுடியும். பிரச்னை அதுவல்ல. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருள்களும், விநியோகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் சரியாகப் பங்கிடப்படுகிறதா? பண்டங்களை உருவாக்கும் உழைப்பாளிகளுக்குக் குறைவான கூலியும், உற்பத்திக் கருவிகளைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் ஆலை முதலாளிகள் முழுமையான லாபத்தையும் பெற்றுக்கொள்வது எந்த வகையில் சரியானது?

இந்த ஏற்றத்தாழ்வை, சமமின்மையை யார் உருவாக்கியது? இயற்கையா? கடவுளா? சமூகமா? முதலாளிகள் தானே? உண்மை இவ்வாறிருக்க, ஏன் ஏழைகள் மீது பழி போடவேண்டும்? ஏன் அவர்களை மேலும் வதைக்கவேண்டும்? இயற்கை நியதி என்றும் கடவுளின் சாபம் என்றும் ஏன் அவர்களைக் குழப்பவேண்டும்?

சீற்றத்துடன் எங்கெல்ஸ் முன்வைத்த வாதத்தை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இவர் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறதே!

(தொடரும்)

One comment

  1. Ram Mohan K
    #1

    இது வரை நீங்கள் எழுதியதில் சிறப்பானது இதுவே. ராபர்ட் மால்தஸை எங்கெல்ஸ் எதிர்கொண்டு எதிர்த்த விதம அருமை. எதற்கும் ஏழைகளை குற்றம் சொல்லும் போக்கு இன்று வரை மாற வில்லை என்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். விலை ஏற்றத்துக்கு காரணம் ஆசியர்கள் அதிகம் சாப்பிட ஆரம்பித்தது தான் என்று புஷ் சொல்லவில்லையா?

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: