அல்வா

அத்தியாயம் 24

 

பின்னிரவு நேரம் என்றாலும் இருட்டு இல்லை. தெருவைப் பத்தடிக்கு ஒரு ஹேலோஜன் மஞ்சளாக்கிக்கொண்டிருந்தது. நகரத்தின் பெரிய சாலைகளில் இருந்து விலகி சிறு சாலைகளுக்குள் வண்டியை விரட்டினான் அமீர். மீக் ஜி பி எஸ்ஸையே பார்த்துக்கொண்டிருந்தான். ”அடுத்த லெஃப்டா?”

அமீர், “நாம் போகும் இடத்தை இதில் ப்ரோகிராம் செய்யவில்லை. என் கார் ஷெட்டைக் காட்டுகிறது அது” சிரித்தான்.

நகரத்தின் சந்தடிகள் தாண்டியதை கட்டடங்களுக்கு இடையே இருந்த இடைவெளி சொன்னது. அங்கங்கே பச்சைப் புல் போட்டு மழுப்பி இருந்தாலும் அதையும் மீறிப் பாலைவன மணல் இரவிலும் வெளேரெனத் தெரிந்தது.

வேகத்தைக் குறைக்காமலே சந்து ஒன்றில் திருப்பினான். மணலில் காரை ஏற்றிசடாரெனெ ப்ரேக் போட்டு நிறுத்தினான்.

மீக் “இங்கேயா? இங்கே ஒரு கட்டடத்தையும் காணோமே”

“மீக், ஏகே உன் உதவிக்கு ரொம்ப நன்றி சொல்லிவிடச் சொன்னார்.”

மீக்குக்கு சுர்ரென்றது. பரிச்சயமான உணர்வுதான். பயம். அடிவயிற்றில் திடீரென ஒரு வெற்றிடம்.

“உன் உதவிக்கு நன்றி சொல்லும் விதமாக, பெயின்லெஸ்ஸாக முடிக்கச் சொன்னார்.”

மீக் சக்தியைத் திரட்டிக்கொண்டு “ஏன்?”

“நாங்கள் உன்னை நம்பியது தற்காலிகமாக. முழுமையான நம்பிக்கை எப்போதும் வரவே இல்லை. நீ எங்களுக்கு நல்லவனாக இருக்கலாம், கெட்டவனாக இருக்கலாம். வேலை முடிந்தாகிவிட்டது. இனி எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்” ரிவால்வரின் சேஃப்டி காட்சை விடுவித்தான்.

மீக்குக்கு மூளை வேலை செய்யவில்லை. ஓடலாம் என்றால் நாலுபுறமும் வெட்டவெளி.

சைலன்ஸர் இருந்ததால் சத்தம் அதிகமாகக் கேட்கவில்லை. புய்க் என்று சிறு சத்தம்.

மீக் கீழே விழுந்தான்.நெற்றிப்பொட்டில் இருந்து ரத்தம் எட்டிப்பார்த்தது.

***

மோனிகா காரை ஓட்டிப் பழகிக்கொண்டிருந்தாள். பழக்கமில்லாத கார். ஸ்டியரிங் வீல் அனியாயத்துக்கு ஒல்லியாக இருந்தது. பிக் அப் மாடலாக இருந்தாலும் பின் பக்கம் ஹார்ட் டாப்புடன் கூரை இருந்தது. வேகமாக ஓட்டி ப்ரேக் அடித்தாள். பரவாயில்லை.பழகிவிடும்.

***
ரெனே கண்களை மூடிக்கொண்டிருந்தான். வெளியே ஆள் வரும் சத்தம் கேட்டது. சகல புலன்களும் சுறுசுறுப்பானாலும் கண்களைத் திறக்கவில்லை.

“டெரி.. வேக் அப்” என்றான் குறைந்த குரலில்.

“என்ன?” டெரியும் தூங்கவில்லை.

“யாரோ வருகிறார்கள்”

டேனி கதவைத் திறந்து உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டான். சுவாதீனமாகப் புரண்டு படுத்தான் ரெனே.
அமீர் டெரியை உலுக்கினான். ”எழுந்திருங்க்ள். உங்கள் வேலை முடிந்தது”

டெரி இயல்பாக “காலை ஆகிவிட்டதா என்ன?” என்றார் சோம்பல் முறித்துக்கொண்டு.

ரெனே கண்களை மிகச்சிறிய அளவு திறந்துகொண்டு நோட்டம் விட்டான். அமீரின் இடுப்பில் தெரிந்த மேடு பரிச்சயமான மேடு. டேனியிடம் ஆயுதம் எதுவும் கண்ணில் படவில்லை.

“இல்லை. உங்களை அலெக்ஸாண்டிரியாவில் விடப்போகிறோம். யூ ஆர் ஃப்ரீ”

அலெக்ஸாண்டிரியா. கீ வார்ட். இதற்குத்தானே காத்திருந்தேன். ரெனே துள்ளி எழுந்தான்.எழுந்த வேகத்தில் டிவி பெட்டியைத் தூக்கி அமீரின் இடுப்பில் போட்டான். அமீர் சரிய, எழுந்துகொள்ள அவகாசமே கொடுக்காமல் மண்டை உச்சியில் மீண்டும் அடித்தான்.எத்தனை முறை மனதிற்குள் போட்டிருப்பான் இந்தச் சண்டையை?

டேனி சுறுசுறுப்பாகி ரெனேவை அடிக்க வர, ரெனே தயாராக இருந்தான். டிவி பெட்டியைக் கீழே போட்டு காலால் சோலார் ப்ளெக்ஸஸில் ஒரு உதை விட்டான். டேனி கொஞ்ச தூரம் தள்ளிப்போய் விழ, அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு அமீர் இடுப்பில் இருந்த துப்பாக்கியைக் கவர்ந்தான். எடுத்த வேகத்தில் சேஃப்டி காட்சை ரிலீஸ் செய்து எழுந்து கொள்ள முயற்சித்த டேனியைச் சுட்டான்.

அமீர் அசைய அவன் முன்மண்டையில் துப்பாக்கியால் அடித்தான். “மீக் எங்கே?”

அமீர் பதில் சொல்லவில்லை. வெளியே இருந்த பாடிகார்ட்கள் உள்ளே ஓடிவந்தார்கள், துப்பாக்கியைப் பார்த்தான் ரெனே. இன்னும் எத்தனை குண்டு இருக்கும்?

அமீர் தலைமேல் துப்பாக்கியை வைத்துக்கொண்டு “டெரி, என் பின்னால் வந்துவிடுங்கள்”

அமீரைத் துப்பாக்கி முனையில் எழுப்பி பாடிகார்டுகளுக்கு வழிவிடச் சொல்லி சைகை காட்டினான்.

அமீர் “நீ தப்பித்துவிட முடியாது. எவ்வளவு தூரம் போய்விடுவாய்” முனகினான்.

“யார் என்னைத் துரத்த முடியும்?” புய்க் என்றது துப்பாக்கி. பாடிகார்ட் ஒருவன் சரிந்தான். இன்னும் இருவர். அமீரோடு சேர்த்தால் மூன்று. மூன்று குண்டு இருந்தால் போதும்.துப்பாக்கியை ஆட்டிப்பார்த்தான். வெயிட் படிப் பார்த்தால் இருக்கவேண்டும்.

பாடிகார்டுகள் தொழில்காரர்கள். எதிரே எவ்வளவு ரத்தம் இருந்தாலும் பயப்படாமல் மெதுவாக ரெனேவை நோக்கி வந்தார்கள். ரெனேவுக்குத் தெரியும். அவர்கள் குறி வீக் லிங்க்தான். “டெரி.. ரூமுக்குள் போங்கள்”

ரிஸ்க் எடுக்கலாம். இன்னொரு குண்டு. இன்னொரு பாடிகார்ட்.

அமீரை துப்பாக்கியின் பின்புறத்தால் ஒன்று போட்டான். “மீக் எங்கே”

அமீர் முனகிக்கொண்டே “சொர்க்கத்தில்” என்றான்.

ரெனே கோபமாகி இன்னொரு பாடிகார்டையும் சாய்த்தான்.”எப்போது?”

“பத்து நிமிடம் முன்பு. அவன் உன் ஆள்தானா?”

ரெனே பதில் சொல்லவில்லை.

“நல்லவேளை. எங்கள் ஆளைக் கொல்லவில்லை” சிரிக்க முயற்சி செய்தான். “இவர்களைக் கொன்றுவிட்டால் நீ தப்பித்துவிடமுடியுமா? இன்னேரம் என் பேக் அப் டீமுக்குத் தகவல் போயிருக்கும். இங்கே நடப்பதை அவர்கள் பார்க்கிறார்கள்” அறையின் மேலிருந்த கேமராவைக் காட்டினான்.

“அந்த ரிஸ்க்கை நான் எடுத்துக்கொள்கிறேன்.” துப்பாக்கியை நேராகப் பிடித்து “உன்னை இவ்வளவு சுலபமாகக் கொல்வது எனக்குப் பிடிக்கவில்லைதான். என்ன செய்வது? நேரம் இல்லை” புய்க் என்றது துப்பாக்கி.

”டெரி.. மூவ் ஃபாஸ்ட்”

மாடிப்படியில் வேகமாக இறங்கினார்கள். லிஃப்ட் ரிஸ்க்.தெருவுக்கு வந்ததும் இரண்டு பக்கமும் பார்த்தான்.

டெரிக்கு படி வேகமாக இறங்கியதில் மூச்சிறைத்தது. “எதாவது வாகனம் கிடைக்குமா?”

”பார்க்கலாம்.” பின்னிரவு நேரம். வாகன நடமாட்டமே இல்லை. தூரத்தில் ஒரு பிக் அப் கார் தெரிந்தது.

ரெனே கையைக் காட்ட வேகமாக அவர்களிடம் வந்து நின்றது.

“தேர் ஷீ இஸ். ஹாய் டார்லிங். இவர்தான் டெரி. டெரி.. திஸ் இஸ் மோனிகா, என் வைஃப்”
***

”நூறு லொக்கேஷன்கள்” என்றார் ஒரு கோட் ஆசாமி. உலகப்படம் இன்னும் அதிகப் புள்ளிகளுடன் ஒளிர்ந்தது.

“யெஸ். தட்ஸ் இட். எல்லா டீமுக்கும் கோ அஹெட் கொடுத்து விடுங்கள். ரெட் அலெர்ட். அத்தனை பேரும் தீவிரவாதிகள். கொல்லத் தயங்கமாட்டார்கள். உயிருடன் பிடிக்க முடிந்தால் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை.”

“யெஸ் சார்” என்ற்வர் மைக்கில் இருந்து கையை எடுத்து கட்டளைகள் பிறப்பிக்க ஆரம்பித்தார்.

ஜூலியன் எல்லாவற்றையும் வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன பார்க்கிறீர்கள். மேஜர் ஆபரேஷன். இத்தனை தீவிரவாதிகளை ஒரே நாளில் கண்டுபிடிக்க, முடிக்க உதவியது டெரியின் டெக்னாலஜிதான். உலகம் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது”

“இப்போது அவர்?”

“ஆ.. சொல்ல மறந்துவிட்டேனே” என்று கம்ப்யூட்டர் திரையைத் தட்டினார். “டெரியும் ரெனேவும் சேஃப். இப்போது அவர்கள் ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள். பேசுகிறீர்களா?”

***
மோனிகாவின் ஐ ஃபோன் சிணுங்கியது. “பேஸ்” என்றாள் ரெனேவிடம் எண்ணைப் பார்த்து.

ரெனே ஃபோனை வாங்கி “யெஸ் சார். நாங்கள் பிழைத்துவிட்டோம்”

“மீக்?” என்றது பேஸ்.

“கில்டு இன் ஆக்‌ஷன். அவர்கள் என்னைப்பார்க்க வரும்போதே மீக்குடன் தான் வருவார்கள் என்று நினைத்தேன். அதற்கும் முன்பே..”

“ஐ ஆம் ஸாரி.. உங்கள் க்ளோஸ் அசோசியேட் இல்லையா?”

“அசோசியேட் இல்லை. அதற்கும் மேல். என் ஒரே நண்பன்” ரெனேவுக்குக் குரல் கம்மியது.

பேஸ் புரிந்துகொண்டது. “ஜூலியனுக்கு டெரியிடம் பேசவேண்டுமாம்”

ரெனே ஃபோனை டெரியிடம் கொடுத்துவிட்டு கண்ணைத் துடைத்துக்கொண்டான்.

மோனிகா பேச்சை மாற்ற விரும்பினாள். “எனக்கு என்ன நடக்கிறது, நடந்தது என்றே புரியவில்லை. அப்டேட் மீ”

ரெனே ”சொல்கிறேன். எங்கிருந்து சொல்லவேண்டும்?”

”முதலில் இருந்து”

– அடுத்த அத்தியாயம் வரை தொடரும்

2 comments so far

 1. jagan
  #1

  ஆமா சாமி. முதல்ல இருந்து சொல்லுங்க. டெரி, ரெனே, மீக், அமிர் – இபப்படி குட்டி குட்டி பேரெல்லாம் கொழப்பிடிச்சு. 🙂

 2. ராம்சுரேஷ்
  #2

  ஜெகன்,

  :)))))))

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: