ஆழி பெரிது

18. ப்ருத்வி

புவியை ஏந்திய வராக மூர்த்தியின் சிற்பம்

வேதம் சொல்லும் இன்னொரு முக்கிய பெண் தெய்வம் குறித்து நாம் பார்ப்பதற்கு முன்னால், இன்னொரு பண்பாட்டின் அடிப்படை ஐதீகத்தை காண்போம். அந்த ஐதீகத்திலிருந்து முளைத்தெழுந்த அமைப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் காண்போம்.

ஏதோ ஒரு தருணத்தில் மனிதன் பூமிக்கு அன்னியமானான். மனிதன் சுய உணர்வை கொண்டதே அத்தருணம். இதர புவி உயிர்களிடமிருந்து அவன் பிரிந்தான். அதுவரை அனைத்து உயிர்களின் தோட்டக்காரனாக இருந்தவன் மனிதன். இப்போதும் அவனே எஜமானனாக இருக்கும் தகுதி பெற்றவன். ஆனால் அந்நிலை இழந்தான். அவன் வாழ்க்கை போராட்டமாக மாறியது. அவன் வாழ அவன் அழிக்க வேண்டும். அவன் உண்ண அவன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ வேண்டும். ஆதிபாவம் எனும் ஆபிரகாமிய ஐதீகம் அளிக்கும் உலகப்பார்வை இது. ஆதி பாவத்தின் அத்துமீறல் சர்ப்பத்தாலும் ஏவாளாலும் நிகழ்ந்தது. இவை இரண்டுமே பெண்மையின் குறியீடுகள். பெண் நிலத்தின் பூமியின் குறியீடு. இரண்டாயிரம் ஆண்டுகளாக பூமி எனும் இயற்கைக்கு எதிராக ஒரு இறையியல் கட்டமைக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளாக அது ஒரு அதிகார அமைப்பாக உருவாக்கப்பட்டது. கீழே விழுந்த மனிதனின் மீட்பு மீண்டும் ஒரு பெண் ஆண் தெய்வத்தின் முன் தலை வணங்கியதால் கிட்டியது. புனித மரங்கள், நாக வழிபாடுகள், புனித வனங்கள், பெண் தெய்வ வழிபாட்டாளர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வேட்டையாடி அழிக்கப்பட்டனர்.

அறிவியல் மேலெழுந்த போது அதுவும் ஒரு அதிகார நிறுவனமாக உயர்ந்தெழுந்தது. சூழலியல் ஒரு முக்கிய அறிவியல் புலமாக உருவான போது அதன் கண்டடைவுகள் அறிவியலில் அடிப்படை பார்வை மாற்றங்களை கோரியது. சூழலியல் பிரச்சனைகளுக்கு வெறும் குறுக்கல் பார்வையிலான தொழில்நுட்ப தீர்வுகள் உதவாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். முழுமைப் பார்வையை அளிக்கும் சட்டகங்களைத் தேடினர். அத்தகைய ஒரு சட்டகம்தான் கய்யா – Gaia. பண்டைய கிரேக்கத்தின் புவித் தெய்வம். இப்புவியை ஒரு பெரும் உயிரியல் இயக்கமாக காணும் பார்வை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின் ஐரோப்பியம் தான் மறந்த ஒரு தாய் தெய்வத்தை இன்னொரு வடிவில் தரிசிக்கிறது.

வேதத்தின் பெண் தெய்வங்களில் மற்றொரு மகத்தான தெய்வம் பிருத்வி எனும் பூமி. புவி எனும் பிருத்வியும் வானுமே நம் பெற்றோர். மனிதர்களுடைய பெற்றோர் மாத்திரமல்ல. பிற உயிரினங்களின் பெற்றோர் மாத்திரமல்ல. தெய்வங்களும் அவற்றின் குழந்தைகளே. ரிக் வேத கவி பாடுகிறார்:

சுமை மிக்க பர்வதங்களைத் தாங்கி நிற்பவளே நன்னீர் பெருக்குகள் உன்னிலிருந்தே உருவாகி ஓடுகின்றன. உன்னில் விதைகள் வேகமாக பல்கிப் வளம் பெருக்குகின்றன.

ஓங்கி ஒலிக்கும் எம் பாடல்கள் உன் புகழை இன்று பாடுகின்றன. எங்கும் பரந்து விளங்கும் வெண்ணொளி கொண்ட பூமியே (பிருத்வியே). கனைக்கும் குதிரையைப் போல நீ புயல் மேகங்களை செலுத்துவாயாக.

உனது மேகங்களிலிருந்து புயலடித்து பெரும் மழை பெய்யும் போது உன் ஆற்றலினாலேயே நீ மரங்களையும் பெரும் வனங்களையும் வீழாமல் காப்பாற்றுகின்றாய். (ரிக் வேதம் 5:84: 1-3)

பூமியை தாயாக மட்டுமல்ல பெரும் சக்தியாக உலகின் அனைத்து உயிர்களுடனும் வளி மண்டலத்துடனும் தொடர்புடைய இயக்க சக்தியாக உருவகிக்கிறது இப்பாடல். மரங்களை வேருடன் பிடுங்கும் சக்தி கொண்ட புயல் மழைகளை கொட்டும் மேகங்களும் அவளுடைய ஆற்றலே. அப்புயலையும் மிஞ்சி மரங்கள் மண்ணில் வேரூன்றி பலமாக நிற்க வைப்பதும் அவளது ஆற்றலே. இன்றைய Gaia சூழலியல் சட்டகத்தை எதிர்நோக்கும் ஒன்றாகவே திகழ்கிறது.

அவள் விண்ணுடன் இணைந்து அனைவருக்கும் வாழ்வளிப்பவள். அனைவரையும் காப்பாற்றுபவள். (ரிக் 1.160.1,2) இந்த தெய்வீக இணைப்பின் குழந்தைகளே ரிக் வேத கவிகள் அவர்கள். விண்ணும் பூமியும் காளையும் பசுவுமாக உருவகிக்கப்படுகின்றன. அவற்றின் பாலை கறந்து அளிப்பவனாக ரிக்வேத கவி காட்டப்படுகிறார். (1.160.3)

பிருத்வி வாழ்வளிப்பவள் மட்டுமல்ல வாழ்க்கையின் முடிவில் மனிதனை அவள் மீண்டும் அரவணைத்துக் கொள்கிறாள். ஒரு அன்னை தன் குழந்தையை தன் ஆடையாலேயே மூடிக்கொள்வது போல பிருத்வி மரணமடைந்தவனை அரவணைத்துக் கொள்கிறாள் என்கிறார் வேத கவி (ரிக் 10.18.10)

பிருத்விக்கு மற்றொரு முக்கிய பரிணாம வளர்ச்சியும் இருந்தது. கலை வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் வரலாற்றாசிரியர் வித்யா தெஹேஜா என்பவர் பிருத்வி எனும் பெண் தெய்வமாக நிலத்தை காணும் பார்வை பெரும்பாலான இந்திய நிலத்தோற்றங்களுக்கு பெண் பெயர்களை அளித்ததது என்றும் இதுவே இந்தியாவை பாரத அன்னையாக காணும் பார்வையாக உருபெற்றது என்றும் கூறுகிறார். பாரத அன்னை எனும் கருத்தாக்கத்தின் வேரில் பிருத்வி எனும் புவியனைத்தையும் அன்னையாக காணும் பார்வை இருப்பதாக டேவிட் கின்ஸ்லே எனும் ஆராய்ச்சியாளரும் கூறுகிறார். இதில் ஒரு சுவாரசியமான பண்பாட்டு உளவியல் பரிணாமம் உள்ளது.

பின்னாட்களில் பிருத்வி குறித்த முக்கியமான தொன்ம-சிற்ப வடிவாக்கங்களில் முதன்மையானது விஷ்ணு வராக வடிவமாக பிருத்வியை காப்பாற்றுவதாகும். இதில் பிருத்வி விஷ்ணுவின் அரவணைப்பில் அல்லது பாதுகாப்பில் இருக்கும் தெய்வமாகவே காட்டப்படுகிறாள். பாரத விடுதலை இயக்கத்தின் போது பிருத்வி பாரத அன்னையாக காட்டப்படலானாள். அப்போது அவள் எவ்வித ஆண் தெய்வ பாதுகாப்பும் இல்லாத தனிப்பெரும் தெய்வமாக வரைபடங்களில் வெளிப்பட்டாள். பாரத அன்னையாக இந்தியா உருவகிப்படுவது குறித்த தன்னுடைய அண்மை நூலில் சுமதி ராமசாமி இந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்டி இது புதிய தேசபக்தியின் உத்வேகத்தால் விளைந்ததாக கூறுகிறார். ஆனால் வேதம் அளிக்கும் பிருத்வியின் சித்திரத்தை காணும் போது என்ன தோன்றுகிறது? அவள் பல பாடல்களில் விண்ணுடன் இணைத்துப் பேசப்பட்டாலும் கூட அவளைக் குறித்த மூன்று தனிப்பாடல்கள் அவளை தனித்தியங்கும் பேரியக்க சக்தியாக உருவகிப்பதை காண்கிறோம். இந்திய தேசிய இயக்கம் உருவாக்கிய ‘புதிய’ புவி அன்னையாகிய பாரதமாதா எனும் தனிப்பெரும் பெண் தெய்வத்தின் வடிவ சாத்தியம் வேதத்திலிருந்து உருவானதாகவே கருத வேண்டும்.

இந்தியாவின் அனைத்து சக்தி பீடங்களுமே சதி தேவியின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் எனும் பின்னாள் புராணக் கதை பார்வதியை பிருத்வியுடன் இணைக்கிறது. ஆக அனைத்து பெண் தெய்வ பரிணாம சாத்தியங்களையும் வேத பிருத்வி தன்னுள் கொண்டிருந்தாள்.

இந்த பிருத்விக்கு இணையான தொல்-ஐரோப்பிய பெண் தெய்வம் கய்யா (Gaia). பிருத்வியையும் Gaia வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏன் ஐரோப்பிய பாகனீயத்தை ஆபிரகாமியம் அழித்தொழிக்க முடிந்தது என்பதை ஒருவாறு ஊகிக்கலாம்.

உதாரணமாக, ஹெஸியாட் (Hesiod கிமு ஏழாம் நூற்றாண்டு) என்கிற கிரேக்க கவி பண்டோரா எனும் முதல் பெண்ணை விண் இறைவனான ஸீயஸ் தெய்வம் மனிதனுக்கு தண்டனை அளிக்க படைத்ததாகவும் அவள் வெளியே அழகாகவும் உள்ளே மண்ணால் நிறைந்திருந்ததாகவும் கூறுகிறார். இந்த மண் கய்யா எனும் புவித்தெய்வம். பெண்ணை சாபமாக பார்க்கும் இந்த போக்குக்கு நேர் எதிரான போக்கை இந்திய வேத தொன்மத்தின் வளர்த்தெடுப்பில் காண்கிறோம். இங்கும் பெண்ணை சாபமாகவும் மாயப்பிசாசாகவும் பார்க்கும் போக்குகள் இருந்தன. ஆனால் அதற்கு எதிராக பெண் தெய்வத்தை பிரதானப்படுத்தும் போக்கும் இங்கு இருந்து கொண்டே இருந்தது.

பூமி தெய்வத்தை அதன் அனைத்து சிறப்புகளுடனும் துதிக்கும் துதி அதர்வண வேதத்தில் உள்ளது. அதன் சிறப்பான தமிழ் மொழி பெயர்ப்பு எழுத்தாளர் ஜடாயுவால் செய்யப்பட்டுள்ளது. அது காட்டும் சில விஷயங்கள் குறித்து அடுத்து காணலாம்.

மேலதிக விவரங்களுக்கு:

ஸ்ரீ அரவிந்தர், The Secret of the Veda, ஸ்ரீ அரவிந்தர் ஆஸிரமம் பாண்டிச்சேரி

Madhu Bazaz Wangu, Images of Indian goddesses: myths, meanings, and models, Abhinav Publications, 2003

சுமதி ராமசாமி, The Goddess and the Nation: Mapping Mother India, Duke University Press, 2010

ராய்முண்டோ பணிக்கர், The Vedic experience: Mantramañajari: an anthology of the Vedas for modern man and contemporary celebration, மோதிலால் பனார்ஸிதாஸ், 1983

வேதம் சொல்லும் இன்னொரு முக்கிய பெண் தெய்வம் குறித்து நாம் பார்ப்பதற்கு முன்னால், இன்னொரு பண்பாட்டின் அடிப்படை ஐதீகத்தை காண்போம். அந்த ஐதீகத்திலிருந்து முளைத்தெழுந்த அமைப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் காண்போம்.

ஏதோ ஒரு தருணத்தில் மனிதன் பூமிக்கு அன்னியமானான். மனிதன் சுய உணர்வை கொண்டதே அத்தருணம். இதர புவி உயிர்களிடமிருந்து அவன் பிரிந்தான். அதுவரை அனைத்து உயிர்களின் தோட்டக்காரனாக இருந்தவன் மனிதன். இப்போதும் அவனே எஜமானனாக இருக்கும் தகுதி பெற்றவன். ஆனால் அந்நிலை இழந்தான். அவன் வாழ்க்கை போராட்டமாக மாறியது. அவன் வாழ அவன் அழிக்க வேண்டும். அவன் உண்ண அவன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ வேண்டும். ஆதிபாவம் எனும் ஆபிரகாமிய ஐதீகம் அளிக்கும் உலகப்பார்வை இது. ஆதி பாவத்தின் அத்துமீறல் சர்ப்பத்தாலும் ஏவாளாலும் நிகழ்ந்தது. இவை இரண்டுமே பெண்மையின் குறியீடுகள். பெண் நிலத்தின் பூமியின் குறியீடு. இரண்டாயிரம் ஆண்டுகளாக பூமி எனும் இயற்கைக்கு எதிராக ஒரு இறையியல் கட்டமைக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளாக அது ஒரு அதிகார அமைப்பாக உருவாக்கப்பட்டது. கீழே விழுந்த மனிதனின் மீட்பு மீண்டும் ஒரு பெண் ஆண் தெய்வத்தின் முன் தலை வணங்கியதால் கிட்டியது. புனித மரங்கள், நாக வழிபாடுகள், புனித வனங்கள், பெண் தெய்வ வழிபாட்டாளர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வேட்டையாடி அழிக்கப்பட்டனர்.

அறிவியல் மேலெழுந்த போது அதுவும் ஒரு அதிகார நிறுவனமாக உயர்ந்தெழுந்தது. சூழலியல் ஒரு முக்கிய அறிவியல் புலமாக உருவான போது அதன் கண்டடைவுகள் அறிவியலில் அடிப்படை பார்வை மாற்றங்களை கோரியது. சூழலியல் பிரச்சனைகளுக்கு வெறும் குறுக்கல் பார்வையிலான தொழில்நுட்ப தீர்வுகள் உதவாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். முழுமைப் பார்வையை அளிக்கும் சட்டகங்களைத் தேடினர். அத்தகைய ஒரு சட்டகம்தான் கய்யா – Gaia. பண்டைய கிரேக்கத்தின் புவித் தெய்வம். இப்புவியை ஒரு பெரும் உயிரியல் இயக்கமாக காணும் பார்வை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின் ஐரோப்பியம் தான் மறந்த ஒரு தாய் தெய்வத்தை இன்னொரு வடிவில் தரிசிக்கிறது.

வேதத்தின் பெண் தெய்வங்களில் மற்றொரு மகத்தான தெய்வம் பிருத்வி எனும் பூமி. புவி எனும் பிருத்வியும் வானுமே நம் பெற்றோர். மனிதர்களுடைய பெற்றோர் மாத்திரமல்ல. பிற உயிரினங்களின் பெற்றோர் மாத்திரமல்ல. தெய்வங்களும் அவற்றின் குழந்தைகளே. ரிக் வேத கவி பாடுகிறார்:

சுமை மிக்க பர்வதங்களைத் தாங்கி நிற்பவளே நன்னீர் பெருக்குகள் உன்னிலிருந்தே உருவாகி ஓடுகின்றன. உன்னில் விதைகள் வேகமாக பல்கிப் வளம் பெருக்குகின்றன.

ஓங்கி ஒலிக்கும் எம் பாடல்கள் உன் புகழை இன்று பாடுகின்றன. எங்கும் பரந்து விளங்கும் வெண்ணொளி கொண்ட பூமியே (பிருத்வியே). கனைக்கும் குதிரையைப் போல நீ புயல் மேகங்களை செலுத்துவாயாக.

உனது மேகங்களிலிருந்து புயலடித்து பெரும் மழை பெய்யும் போது உன் ஆற்றலினாலேயே நீ மரங்களையும் பெரும் வனங்களையும் வீழாமல் காப்பாற்றுகின்றாய். (ரிக் வேதம் 5:84: 1-3)

பூமியை தாயாக மட்டுமல்ல பெரும் சக்தியாக உலகின் அனைத்து உயிர்களுடனும் வளி மண்டலத்துடனும் தொடர்புடைய இயக்க சக்தியாக உருவகிக்கிறது இப்பாடல். மரங்களை வேருடன் பிடுங்கும் சக்தி கொண்ட புயல் மழைகளை கொட்டும் மேகங்களும் அவளுடைய ஆற்றலே. அப்புயலையும் மிஞ்சி மரங்கள் மண்ணில் வேரூன்றி பலமாக நிற்க வைப்பதும் அவளது ஆற்றலே. இன்றைய Gaia சூழலியல் சட்டகத்தை எதிர்நோக்கும் ஒன்றாகவே திகழ்கிறது.

அவள் விண்ணுடன் இணைந்து அனைவருக்கும் வாழ்வளிப்பவள். அனைவரையும் காப்பாற்றுபவள். (ரிக் 1.160.1,2) இந்த தெய்வீக இணைப்பின் குழந்தைகளே ரிக் வேத கவிகள் அவர்கள். விண்ணும் பூமியும் காளையும் பசுவுமாக உருவகிக்கப்படுகின்றன. அவற்றின் பாலை கறந்து அளிப்பவனாக ரிக்வேத கவி காட்டப்படுகிறார். (1.160.3)

பிருத்வி வாழ்வளிப்பவள் மட்டுமல்ல வாழ்க்கையின் முடிவில் மனிதனை அவள் மீண்டும் அரவணைத்துக் கொள்கிறாள். ஒரு அன்னை தன் குழந்தையை தன் ஆடையாலேயே மூடிக்கொள்வது போல பிருத்வி மரணமடைந்தவனை அரவணைத்துக் கொள்கிறாள் என்கிறார் வேத கவி (ரிக் 10.18.10)

பிருத்விக்கு மற்றொரு முக்கிய பரிணாம வளர்ச்சியும் இருந்தது. கலை வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் வரலாற்றாசிரியர் வித்யா தெஹேஜா என்பவர் பிருத்வி எனும் பெண் தெய்வமாக நிலத்தை காணும் பார்வை பெரும்பாலான இந்திய நிலத்தோற்றங்களுக்கு பெண் பெயர்களை அளித்ததது என்றும் இதுவே இந்தியாவை பாரத அன்னையாக காணும் பார்வையாக உருபெற்றது என்றும் கூறுகிறார். பாரத அன்னை எனும் கருத்தாக்கத்தின் வேரில் பிருத்வி எனும் புவியனைத்தையும் அன்னையாக காணும் பார்வை இருப்பதாக டேவிட் கின்ஸ்லே எனும் ஆராய்ச்சியாளரும் கூறுகிறார். இதில் ஒரு சுவாரசியமான பண்பாட்டு உளவியல் பரிணாமம் உள்ளது.

பின்னாட்களில் பிருத்வி குறித்த முக்கியமான தொன்ம-சிற்ப வடிவாக்கங்களில் முதன்மையானது விஷ்ணு வராக வடிவமாக பிருத்வியை காப்பாற்றுவதாகும். இதில் பிருத்வி விஷ்ணுவின் அரவணைப்பில் அல்லது பாதுகாப்பில் இருக்கும் தெய்வமாகவே காட்டப்படுகிறாள். பாரத விடுதலை இயக்கத்தின் போது பிருத்வி பாரத அன்னையாக காட்டப்படலானாள். அப்போது அவள் எவ்வித ஆண் தெய்வ பாதுகாப்பும் இல்லாத தனிப்பெரும் தெய்வமாக வரைபடங்களில் வெளிப்பட்டாள். பாரத அன்னையாக இந்தியா உருவகிப்படுவது குறித்த தன்னுடைய அண்மை நூலில் சுமதி ராமசாமி இந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்டி இது புதிய தேசபக்தியின் உத்வேகத்தால் விளைந்ததாக கூறுகிறார். ஆனால் வேதம் அளிக்கும் பிருத்வியின் சித்திரத்தை காணும் போது என்ன தோன்றுகிறது? அவள் பல பாடல்களில் விண்ணுடன் இணைத்துப் பேசப்பட்டாலும் கூட அவளைக் குறித்த மூன்று தனிப்பாடல்கள் அவளை தனித்தியங்கும் பேரியக்க சக்தியாக உருவகிப்பதை காண்கிறோம். இந்திய தேசிய இயக்கம் உருவாக்கிய ‘புதிய’ புவி அன்னையாகிய பாரதமாதா எனும் தனிப்பெரும் பெண் தெய்வத்தின் வடிவ சாத்தியம் வேதத்திலிருந்து உருவானதாகவே கருத வேண்டும்.

இந்தியாவின் அனைத்து சக்தி பீடங்களுமே சதி தேவியின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் எனும் பின்னாள் புராணக் கதை பார்வதியை பிருத்வியுடன் இணைக்கிறது. ஆக அனைத்து பெண் தெய்வ பரிணாம சாத்தியங்களையும் வேத பிருத்வி தன்னுள் கொண்டிருந்தாள்.

இந்த பிருத்விக்கு இணையான தொல்-ஐரோப்பிய பெண் தெய்வம் கய்யா (Gaia). பிருத்வியையும் Gaia வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏன் ஐரோப்பிய பாகனீயத்தை ஆபிரகாமியம் அழித்தொழிக்க முடிந்தது என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். உதாரணமாக ஹெஸியாட் (Hesiod கிமு ஏழாம் நூற்றாண்டு) என்கிற கிரேக்க கவி பண்டோரா எனும் முதல் பெண்ணை விண் இறைவனான ஸீயஸ் தெய்வம் மனிதனுக்கு தண்டனை அளிக்க படைத்ததாகவும் அவள் வெளியே அழகாகவும் உள்ளே மண்ணால் நிறைந்திருந்ததாகவும் கூறுகிறார். இந்த மண் கய்யா எனும் புவித்தெய்வம். பெண்ணை சாபமாக பார்க்கும் இந்த போக்குக்கு நேர் எதிரான போக்கை இந்திய வேத தொன்மத்தின் வளர்த்தெடுப்பில் காண்கிறோம். இங்கும் பெண்ணை சாபமாகவும் மாயப்பிசாசாகவும் பார்க்கும் போக்குகள் இருந்தன. ஆனால் அதற்கு எதிராக பெண் தெய்வத்தை பிரதானப்படுத்தும் போக்கும் இங்கு இருந்து கொண்டே இருந்தது.

பூமி தெய்வத்தை அதன் அனைத்து சிறப்புகளுடனும் துதிக்கும் துதி அதர்வண வேதத்தில் உள்ளது. அதன் சிறப்பான தமிழ் மொழி பெயர்ப்பு எழுத்தாளர் ஜடாயுவால் செய்யப்பட்டுள்ளது. அது காட்டும் சில விஷயங்கள் குறித்து அடுத்து காணலாம்.

மேலதிக விவரங்களுக்கு:

ஸ்ரீ அரவிந்தர், The Secret of the Veda, ஸ்ரீ அரவிந்தர் ஆஸிரமம் பாண்டிச்சேரி

Madhu Bazaz Wangu, Images of Indian goddesses: myths, meanings, and models, Abhinav Publications, 2003

சுமதி ராமசாமி, The Goddess and the Nation: Mapping Mother India, Duke University Press, 2010

ராய்முண்டோ பணிக்கர், The Vedic experience: Mantramañajari: an anthology of the Vedas for modern man and contemporary celebration, மோதிலால் பனார்ஸிதாஸ், 1983

3 comments so far

  1. கந்தர்வன்
    #1

    அரவிந்தன் அவர்களே,

    வெள்ளிக் கிழமை தோறும் சுவையான தகவல்கள் பலவற்றைத் தந்து வருகிறீர்கள். இக்கட்டுரையும் ஆர்வமூட்டும் வண்ணம் உள்ளது. ஒரே ஒரு ஆட்சேபம்:

    //
    பின்னாட்களில் பிருத்வி குறித்த முக்கியமான தொன்ம-சிற்ப வடிவாக்கங்களில் முதன்மையானது விஷ்ணு வராக வடிவமாக பிருத்வியை காப்பாற்றுவதாகும். இதில் பிருத்வி விஷ்ணுவின் அரவணைப்பில் அல்லது பாதுகாப்பில் இருக்கும் தெய்வமாகவே காட்டப்படுகிறாள்.
    //

    வராக அவதார விஷயம் பின்னாட்களில் ஏற்பட்டவை அன்று. வேத சம்ஹிதையிலேயே உண்டு. ஆங்கில மொழிபெயர்ப்புகளை வைத்தே பார்க்கலாம்:

    (1) கிருஷ்ண யசுர் வேத தைத்திரீய சம்ஹிதையில் 7.1.5: “This was in the beginning the waters, the ocean. In it Prajapati becoming the wind moved. He saw her, and becoming a boar he seized her. Her, becoming Viçvakarma, he wiped. She extended, she became the earth, and hence the earth is called the earth (lit. ‘the extended’)”

    (2) சதபத பிராமணம், 14.1.2.11: “for, indeed, only so large was this earth in the beginning, of the size of a span. A boar, called Emûsha, raised her up, and he was her lord Pragâpati: with that mate, his heart’s delight, he thus supplies and completes him”

    (3) தைத்திரீய ஆரண்யகம், 10-ஆம் பிரச்னம், முதல் அனுவாகம்: “The earth is the giver of happiness like the milch cow, the sustainer of life and support for all living beings. (Represented as such the earth is addressed): Thou wert raised up by Krishna in His incarnation of the boar having hundred hands.”

    இது தவிர சங்ககாலத்தில் பரிபாடல் முதலானவற்றில் வராக அவதாரம் குறிப்பிடப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பூமித் தாயை வராகமாக வந்து விஷ்ணு காப்பாற்றினார் என்பது அடிமைத்தனத்தைக் குறிப்பதாக எனக்குத் தெரியவில்லை, ஆகையால் தீவிர பெண்ணிய வாதிகள் இந்து மதத்திற்கு எதிராக இதை முன்வைக்க இடமில்லை. வராகம் பரமாத்மாவின் அவதாரம் என்ற நம்பிக்கை உள்ளதால், அதற்கும் லோக விஷயமான ஆண்-பெண் உறவுக்கும் தொடர்பு இல்லை என்றே தோன்றுகிறது. அதே பூமிப் பிராட்டியின் அவதாரமாக ஆண்டாளைக் கருதுவதும், அவளையே “ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்” சொல்லி ஆண்களாக அவதரித்த ஆழ்வார்களை விட அவளுக்குப் பெருமை அதிகம் என்று பார்க்கும் இந்திய மரபும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

    கைகேயி தசரதனைப் போரிலிருந்து மாண்டு போகாமல் பாதுகாத்து இருக்கிறாள். இங்கு ஒரு ஆணைப் பெண் நேரே வந்து காப்பாற்றியது சொல்லப்பட்டுள்ளது. இம்மாதிரி ஏதாவது உதாரணம் காட்டலாமே?

    மற்றபடி ஏட்டிக்குப் போட்டியாக பல “தனித்தியங்கும் பேரியக்க சக்திகள்” இருக்கின்றன என்பது வேதக் கொள்கையே ஆகாது. எல்லாம் ஒரு பரமாத்மாவின் சக்தியே என்பது தான் வேதக் கொள்கை.

  2. SATHISH
    #2

    அ.நீ
    என்ன சொல்ல விரும்பறீங்க? கடவுள் இருக்காறா இல்லையா? தீர்ந்தது விஷியம்! ஏன்னா இந்து மதமே கடவுள் என்ற் ஒரு சித்தாத்தினால் கட்டப்பட்டதே!

  3. Sriram
    #3

    மற்ற மதங்கள் எல்லாம் எந்த சித்தாந்தத்தில் கட்டமைக்கப்பட்டது என்பதையும் சொல்லி விடுங்கள் சதீஷ்.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: