பட்ஜெட் 2011 – வீட்டுச் சாப்பாடு

338 ரன்கள் அடித்தும், நம் பவுலர்களின் சொதப்பலால், கிட்டத்திட்டத் தோற்று, பின் டை-யாகி, பலபேர் dieஆகாமல் காப்பாற்றிய இரவில் பாதி பேருக்கு பிபி ஏறி, இறங்கி ஒரு வழியாய் டிவியை அணைத்துப் படுத்தெழுந்து, பல் தேய்த்து டிவி ஆன் செய்தால் ஆஸ்காரா இல்லை இந்தியாவின் போன வருஷ பேலன்ஸ் ஷீட்டா என்கிற கேள்வி.

பிரணாப் முகர்ஜி, இந்தியாவின் நிதியமைச்சர், இந்த ஆட்சியில் மூன்றாவது முறையாக பட்ஜெட் சமர்ப்பிக்கிறார். 20/20யின் எதிர்பார்ப்பும், ஒரு நாள் ஆட்டத்தின் பரபரப்பையும், என்றைக்கும் பிரணாப் தாவிடம் பார்க்கமுடியாது. பிரணாப் தா, ராகுல் டிராவிட் மாதிரி டெஸ்ட் ப்ளேயர். சூழல் எதுவோ, அதற்கு ஏற்றாற்ப்போல தேர்ந்தெடுத்து, தன் ஆட்டத்தை மட்டும் பார்க்க வைத்து, தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத சூட்சுமத்தினைக் கற்றுத் தேர்ந்தவர்.

இந்த பட்ஜெட் முக்கியமான ஒரு நேரத்தில் வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆண்ட்ரிக்ஸ் – டேவாஸ் பிரச்சனை, அசோக் சவான், கல்மாடி கைங்கரியங்கள், பணவீக்கம், நிதிநிலைக் குறைபாடு, விலைவாசி உயர்வு இது தாண்டி, காங்கிரஸின் முன் இந்த வருடம் 3 முக்கியமான மாநிலங்களில் தேர்தலும் அடுத்த வருடம் இரண்டு தேர்தலும் ஆக முக்கியமான 5 மாநிலத் தேர்தல்கள். ஒரு பக்கம் இந்தப் பிரச்சனைகள் என்றால், இன்னொருப் பக்கம், நிறுவனங்கள், தனிநபர்கள் பணவீக்கத்தால், உலகளாவிய மந்தத்தால் பாதிக்கப்பட்டு நிறைய சலுகைகளை எதிர்பார்த்து நிற்கிறார்கள். அரசியல், ஊழல், தேர்தல், மக்களின் எதிர்பார்ப்பு, இந்திய-இங்கிலாந்து மேட்சினை விட நகம் கடிக்க வைக்கும் வேலையினை சர்வ அலட்சியமாகச் செய்து முடித்திருக்கிறார் பிரணாப் தா.

ஒரு வரியில் சொல்வதானால், கத்தியின் மீது நடப்பதை திறமையாய் செய்திருக்கிறார். பாஸ்ட் புட்டையும், இன்ஸ்டண்ட் நூடுல்ஸையும் எதிர்பார்த்த அனலிஸ்டுகள், சந்தை விற்பனர்கள், தொழில்துறை சிஈஒக்கள் இதை ஒரங்கட்டினாலும், வீட்டு சாப்பாடு மாதிரி ஆஹா ஒஹோ என்று பிரம்மாண்டங்கள் இல்லாத, ஆனால் வயிற்றினைக் (பர்ஸினை) கெடுக்காத பட்ஜெட்..

“I seek the blessings of Lord Indra to bestow on us timely and bountiful monsoons, I would pray to Goddess Lakshmi as well. I think it is a good strategy to diversify one’s risks.” இப்படி ஆரம்பித்ததின் விரிவாக்கம் தான் கீழே.

என்ன சொல்லியிருக்கிறார் பட்ஜெட்டில்? மேக்ரோ பொருளாதார சங்கதிகளை விட்டு விடலாம்.

முதலில்

தனி நபர்கள் / + விஷயங்கள்

 • ரூ.1,60,000 திலிருந்து வருமான வரி விலக்கு ரூ1,80,000காக உயர்த்தப் படுகிறது. ரூ.2000 வரை வரி சேமிப்பு உண்டு.
 • பெண்களுக்கான வரி விதிப்பில் (ரூ.1,90,000) மாற்றமில்லை. பெண்கள் பிரணாப் முகர்ஜியினை ஆணாதிக்கம் பிடித்தவர் என்று இதன் மூலம் சொல்லலாம்.
 • மூத்தோர்கள் (senior citizens) வயது வரம்பினை 65லிருந்து 60 தாக குறைத்திருப்பது, முக்கியமானது. ரூ.2,50,000 வரை வரிச் சலுகையுண்டு.
 • இன்னமும், 80 வயதுக்கு மேலான மூத்தோர்கள் என்றொரு வகையினை உருவாக்கி, அவர்களுக்கான வரிச் விதிப்பு ரூ.5,00,000 மேலே மட்டுமே.
 • கட்டமைப்பு பாண்டுகளில் முதலீடு செய்யும் ரூ.20000 வரைக்குமான வரி சேமிப்பு, இன்னும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.
 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் தரப்படும் சம்பளம், இனி நுகர்வோர் விலை பட்டியையொட்டி(Consumer Price Index) மாறும். இண்டெக்ஸேஷன் சலுகைகள் உண்டு.
 • நேரடி வரி கோட் (Direct Tax Code) அடுத்த வருடத்திலிருந்து கொஞ்சம்கொஞ்சமாய் புழக்கத்துக்கு வரும்.
 • சொந்தமாக தொழில் முனைவோர்கள் மற்றும் தனி நபர் வருமானம் ரூ.60 லட்சம் வரை இருப்பவர்கள் கட்டும் வரி இனிமேல் தணிக்கை செய்யத் தேவையில்லை.
 • முன்னுரிமையுள்ள வீட்டுக்கடன்களின் தொகை ரூ.20 இலட்சத்திலிருந்து. ரூ.25 இலட்சமாக உயருகிறது.
 • சம்பளம் மட்டுமே ஒரே வருமானமாய் இருந்து, அதிலும் வரி முன்னமே பிடிக்கப்பட்டால் (TDS), இனி மேல் தனியாய் வரி ரிடர்ன் செலுத்தத் தேவையில்லை.
 • சிகரெட்டின் மீது வரி ஏற்றப்படவில்லை. டாய்லெட்டில் தாராளாமாய் புகைக்கலாம். எக்ஸெஸ் டூட்டி குறைவினால், பெண்களுக்கான சானிடரி நாப்கின், குழந்தைகளின் டயாபர்கள், ஹோமியோபதி மாத்திரை/மருந்துகள், அகர்பத்தி, சூரியஒளி விளக்குகள், எலீடி விளக்குகள், ஊசி, ஊசிப் போடும் சிரின்ஜ்கள், இங்க் ஜெட், லேசர் பிரிண்டர்கள், விவசாய உபகரணங்கள், பம்பு செட்டுகள் விலை குறையும்.
 • 80 வயது மேல் மாதாமாதம் அரசு பென்ஷன் வாங்கும் தாத்தாக்கள், பொக்கை வாயால் தாராளாமாய் சிரிக்கலாம். ரூ.300லிருந்து ரூ.500க்கு உயர்த்தப்படுகிறது.
 • ஸ்மார்ட் கார்ட், வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு வழங்கப்படும். நந்தன் நீலகேணி மனசு வைக்க வேண்டும். இனிமேல் மானியங்கள் பணமாக, நேரடியாக ஸ்மார்ட் கார்ட் வழியே தரப்படும். சேட்டு கடைகளில் ரேஷன் கார்டுக்கு பதில் ஸ்மார்ட் கார்டும் வாங்கப்படலாம். மண்ணெண்ணெய், உரம் போன்றவைகளும் ஸ்மார்ட் கார்ட் வழியே தர உத்தேசித்திருக்கிறார்கள்.

2012க்கான வருமான வரி டேபிள் இங்கே

தனி நபர்கள் / – விஷயங்கள்

 • சேவை வரிக்குக் கீழே ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் (ஹோட்டல் வாடகை ரூ.1000/தினத்துக்கு மேலிருந்தாலே), சரக்கு சப்ளை செய்யும் ஏசி உணவகங்கள், செக்கப் சென்டர்கள், ஹாஸ்பிடல்கள் (25 படுக்கைகளுக்கு மேல்) கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் இனிமேல் அங்கேப் போனால், பில் எகிறும்.
 • உடல்நல செக்கப்புகள், மருத்துவமனைகளில் இனிமேல் 5% சேவை வரி உண்டு. நேரடியாய் இது 10% சேவை வரி தான். ஆனாலும், மருத்துவ சேவைகளுக்கு 50% சலுகைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரலுக்கு மேல் செக்கப் போய் 10% சேவை வரிப் போட்டால், தள்ளுபடி கேளுங்கள். அதிகமாய் பேசினால், பிரணாப் தாவின் பட்ஜெட் தாக்கலை எடுத்துக் காட்டுங்கள். இது தனியார் சேவைகளுக்கு மட்டுமே. அரசு மருத்துவமனைகள் சேவை வரியிலிருந்து விலக்குக் கொடுக்கப்பட்டவை.
 • காப்பீட்டின் ப்ரீமியம் ஏறும்.யுலிப்-களின் முதலீடு தவிர்த்த ப்ரீமியத்தின் மீதான வரி, 1%லிருந்து 1.5% மாறுகிறது.
 • இதுவரை எதுவுமே வரிக்கட்டாமல் தப்பித்த கிட்டத்திட்ட 130 எக்செஸ் ஐட்டங்களுக்கு 1% வரி உண்டு. அந்த சமாச்சாரத்தில் ஏதாவது நீங்கள் உபயோகித்தால் விலை ஏறும்.
 • ப்ராண்ட்டட் நகைகள் (தனிஷ்க், அஸ்மா, டி-டமாஸ் இன்னபிற), ஆடைகள் (ஆலன் சோலி, வான் ஹுசேன் இன்னபிற) விலை ஏறும்.
 • சூசகமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு பட்ஜெட்டுக்கு பின் என்று சொல்லி விட்டார். டீசல் விலையை கொஞ்ச கொஞ்சமாக ஏற்றி, பெட்ரோலுக்கு இணையாகக் கொண்டு வந்துவிடுவார்கள். அதனால் அது off budget ஐட்டமாக மாறி ஏறலாம்ஷேர் ஆட்டோவில் விலை மாறும். பர்ஸ் கிழியும்.
 • இப்போதைக்கு ஆயில் விற்பனைச் செய்யும் நிறுவனங்கள் வார இறுதியில் லிட்டருக்கு ரூ.4 பெட்ரோலுக்கு விலை ஏற்றலாம். நண்பர் பத்ரி, ’நீயா நானா’வில் காட்டுக் கத்தலாய் கத்தினாலும், அரசாங்க வரி. எக்செஸ் சமாச்சாரங்கள் பெட்ரோல்/டீசலில் குறையவில்லை. குறையப் போவதுமில்லை.
 • இந்தியாவுக்குள் விமானப் பயணம் செய்தால் ரூ.50ம், வெளிநாட்டுக்கு பயணம் செய்தால் ரூ.250ம் சேவைக் கட்டணமாக, கூடுதலாகத் தர வேண்டும். இது சசி தரூர் நக்கலாக சொன்ன ‘கேட்டில் கிளாஸ்’ அதாவது எகானமி. பிஸினஸ் கிளாஸில் பயணித்தால் 10% அழவேண்டும்.

தொழில் துறைகள்

 • சேவை வரி, எக்ஸெஸில் மாற்றங்கள் இல்லை. அவையிரண்டும் 10%
 • கார்ப்பரேட் நிறுவங்களுக்கான வரியின் சர்-சார்ஜ் 7.5%லிருந்து 5% குறைக்கப்பட்டிருக்கிறது குறைந்தப் பட்ச மாற்று வரி 18% லிருந்து 18.5% மாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்த மாற்று வரியின் ஏற்றத்தை உணர்வார்கள்.
 • STPI யின் வருடாந்திர வரி சலுகை நீட்டிப்பு இந்த முறைச் செய்யப்படவில்லை. அதனால் இதுநாள் வரை இருந்த வரிச்சலுகை இந்த வருடத்தோடு முடிகிறது. இன்போஸிஸின் மோகந்தாஸ் பை அதைக் காரணம் காட்டியே பட்ஜெட்டில் ஒன்றுமில்லை என்கிறார். இதன்மூலம், பெரு நிறுவனங்கள் அவசர அவசரமாக தங்களுடைய பணிகளை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மாற்றும் வாய்ப்புகள் அதிகம். சின்ன நிறுவனங்கள், நைந்து நாசமாய் போகும்.
 • பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு 2011-12ல் 24% ஏறி, ரூ.52,057 கோடிகளாகிறது. பள்ளிச் சார்ந்த நிறுவனங்கள் NIIT, Educomp, Everonn போன்றவைகளுக்கு இது நல்ல நேரம். குரு எட்டில் இருக்கிறார். அமோகமாய் வணிகத்தை விரிவு செய்யலாம்.
 • ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஜாக்பாட். ஹைப்ரிட் வாகனங்கள் (எரிபொருள் + மின்சாரம்/பேட்டரி) இந்தியாவில் உருவாக்கினால், அதற்கு சலுகைகள் உண்டு.
 • இரும்பு தாது ஏற்றுமதிக்கு 20% வரி. இந்திய ஸ்டீல் நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம். வெறும் ட்ரேடர்களுக்கு திண்டாட்டம்.
 • கட்டமைப்பு என்று சொல்லி என்ன குப்பையைச் செய்தாலும், இன்றைக்கு இந்தியாவில் முதல் மரியாதை உண்டு. 23% ஏறி, ரூ.2,14,000 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வரியில்லா கட்டமைப்பு பாண்டுகள் ரூ.30,000 கோடி மதிப்பில், பல்வேறு அரசு அமைப்புகள் வெளியிடும். உரம் சார்ந்த சிலவும் கட்டமைப்பின் கீழ் வரும்.
 • நிதியினைப் பொறுத்தவரை, பரஸ்பர நிதி நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்யலாம். இது ஈக்விடி அளவை அதிகரிக்கும். வெளிநாட்டு பெருமுதலீட்டாளர்கள் (FII – Foreign Institutional Investors) பரஸ்பரநிதி வழியே உள்ளே வரலாம். ஆனாலும், சில்லரை வர்த்தகத்திலும், காப்பீட்டு துறையிலும் இன்னமும் அன்னிய முதலீட்டினை அனுமதிக்காதது பல லாபி குரூப்களுக்கு வருத்தம்.

பொது

 • நிதியாண்டு’12ல் பொருளாதாரம் 8.75% – 9.25% வளரும்
 • பணவீக்கம் 7% குள் கொண்டு வரப்படும்
 • மற்றபடி Fiscal குறைபாடுகள், வருமானக் குறைபாடுகள், பணப்புழக்கப் பிரச்சனை என எல்லாவற்றுக்கும் பிரணாப் தா சகல ரோக சஞ்ஜீவினி மாதிரி எண்களையும், விகிதங்களையும், விழுக்காடுகளையும் கொடுத்திருக்கிறார்.

மேல்நோக்காய் பார்த்தால், யாரையும் அவமதிக்காமல், அதை சமயம் யாரையும் விட்டு விடாமலும் உப்பு, புளி, மிளகாய் சரி விகிதத்தில் வீட்டுச் சாப்பாடு செய்திருக்கிறார். வேண்டிக் கொண்ட இந்திரனும், லட்சுமியும் இனி வரப்போகும் காலங்களில் என்னச் செய்யப்போகிறார்கள் என்றுப் பார்ப்போம்.

விரிவாய் இன்னும் ஒரு கட்டுரையில் இதன் சாதக, பாதகங்கள், குறுகிய, நடுத்தர, நீண்டக்கால விளைவுகளை அலசலாம்.

4 comments so far

 1. கிரி
  #1

  வருமான வரிச்சலுகைகளில் ரூ.11500 கோடி நஷ்டம் என்று சொல்லிவிட்டு service tax வருமானம் ரூ.11300 கோடி எதிர்பார்க்கிறார்.அதாவது வருமான வரி கட்டுபவர்களுக்கு வருமானம் அதிகம் இல்லாதவர்களும் சேர்ந்து கொடுக்க வேண்டும் என்கிறார்!

 2. Narain
  #2

  கிரி,

  அது நியாயமாகத் தான் தெரிகிறது. வருமான வரி உச்சவரம்பினை இன்னமும் மேலேக் கொண்டுப் போக வேண்டும். அப்போது தான் மக்கள் பொருட்களை/சேவைகளை வாங்குவார்கள். சேவை வரியின் வழியே அரசுக்கு பணம் போகுதல் நல்லது தான்.

  சரியாக எந்த கமிட்டி என்று நினைவில்லை. அவர்கள் நிதியமைச்சரிடம் கொடுத்தது. நிறைய சேவைகளை சேவை வரியின் கீழ் கொண்டுவந்து, சேவை வரி விகிதத்தை குறைக்கலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். இப்போதைய 10% என்பது 8%, பின்னர் 6%,பின்னர் 5% க்கு கொண்டு செல்லப்படலாம். அடுத்த ஆண்டாவது இதை செய்வார்களா என்றுப் பார்க்க வேண்டும்.

 3. ganesh
  #3

  சார்
  ஒரே ஒரு சந்தேகம். நிதியாண்டின் பொருளாதாரம் வளரும் என்று கூறியருக்கிறார்கள். இது உண்மையாகவே இருக்கிறாதா… இல்ல சும்மா ஒட்டுறாங்களா…
  அப்புறம் அச்சுத் தாள்கள் விலையேறும். கிழக்கிற்கு இதன் தாக்கம் என்ன?

 4. Narain
  #4

  கிழக்குப் பற்றிய கேள்விக்கு எடிட்டரோ, பத்ரியோ பதில் சொல்வார்கள் 🙂

  நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி என்பது நாம் எப்படி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்பதில் முக்கியமாய் இருக்கிறது. கட்டமைப்பு நிறுவனங்களுக்கு அன்னிய முதலீடும், ரூ.30000 கோடி பாண்டும் தர இருப்பதால், கட்டமைப்புச் சார்ந்த தொழில்கள் வேகமாக வளரும். 24% அதிகப்படியான ஏற்றத்தினைக் கல்விக்கு கொடுத்திருப்பதால், அங்கும் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்று நம்பலாம். உலகளாவியப் பொருளாதாரத்தில், எங்கே அடித்தாலும் நமக்கும் கொஞ்சமாய் அடி விழும். பெட்ரோலியப் பொருட்களின் விலையுயர்வை நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதில் தெளிவில்லை. இப்போது இருக்கும் லிக்விடிடியை ரிசர்வ் வங்கி உறிய ஆரம்பித்தால், வங்கிகள் தங்களுடைய வட்டிவிகிதத்தை ஏற்றும். ஏற்கனவே கடந்த 6 மாதங்களில் வைப்பு நிதிக்கான வட்டி ஏறியிருக்கிறது. இந்நிலையில் நாம் உலகையும், உள்ளூரையும் கவனமாக பார்க்க வேண்டி இருக்கிறது. 5 மாநிலத் தேர்தல்கள், அள்ளி வழங்கியிருக்கும் இலவசங்கள் அதற்கான செலவுகள் இவற்றினைக் கொண்டுப் பார்த்தால் 8.75-9.25% என்று சொன்னது சரியான வளர்ச்சி விகிதமா என்று தெரியவில்லை. உலகம் எப்போக்கில் போகுதோ, அதேப் போக்கில் தான் நாமும் போவோம்.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: