இதுவா அதுவா?

‘ச்சேய்!’ எரிச்சலோடு வீட்டினுள் நுழைந்தாள் வனிதா. தோளில் மாட்டியிருந்த பையைத் தூக்கி சோஃபாமீது வீசினாள். பக்கத்திலேயே பொத்தென்று விழுந்தாள்.

‘ஜென் ஃபார் டம்மீஸ்’ என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த அவளுடைய தாத்தா சிரிப்போடு நிமிர்ந்து பார்த்தார். ‘என்னாச்சும்மா? யார்மேல கோவம்?’

‘எங்க ப்ரொஃபஸர்மேலதான்!’ என்றாள் வனிதா. ‘அந்தாளை நினைச்சாலே எரிச்சலா வருது. இவரோட ஒப்பிட்டா எங்க பழைய ப்ரொஃபஸர் எவ்வளவோ பெட்டர்!’

‘பழைய ப்ரொஃபஸர்? புது ப்ரொஃபஸர்? ஒண்ணும் புரியலையேம்மா. கொஞ்சம் தெளிவாச் சொல்லு!’

’தாத்தா, போன மாசம்வரைக்கும் எங்களுக்குப் பாடம் எடுத்துகிட்டிருந்த ப்ரொஃபஸர் ரிடையராகிட்டார். அவருக்குப் பதிலா இன்னொருத்தரை நியமிச்சிருக்காங்க!’

’சரி. அவர்மேல உனக்கு ஏன் கோவம்?’

‘பின்னே என்ன தாத்தா? எங்க பழைய ப்ரொஃபஸர் எல்லா விஷயங்களையும் சிம்பிளாப் புரியறமாதிரி ஒழுங்குபடுத்தி விளக்குவார். இதுதான் மேட்டர்ன்னு சட்டுன்னு புரியும். ஆனா இவர் அப்படி இல்லை, ஒரே விஷயத்தை இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம்-ன்னு ரெண்டுவிதமாச் சொல்லி எது சரின்னு எங்களையே யோசிக்கச் சொல்றார்!’

‘நல்ல விஷயம்தானே? யோசிச்சுப் பழகுங்களேன்!’

’காமெடி பண்ணாதீங்க தாத்தா, எது சரின்னு நாங்களே யோசிச்சுத் தெரிஞ்சுக்கணும்ன்னா, இந்த வாத்தியார் எதுக்கு வெட்டியா?’

தாத்தா மெல்லச் சிரித்தார். ‘கண்ணு, உங்க பழைய ப்ரொஃபஸர் எல்லாத்தையும் எளிமைப்படுத்திச் சொல்லி உங்களைக் கெடுத்துட்டார். பின்னாலே அவர் சொன்னபடி நிஜ வாழ்க்கையில நடக்கலைன்னா நீங்க ஏமாந்துபோவீங்க. இப்ப என்ன செய்யறதுன்னு புரியாம திணறுவீங்க!’ என்றார். தன்னுடைய கையில் இருந்த புத்தகத்தை உயர்த்திக் காட்டியபடி தொடர்ந்து சொன்னார். ‘ஜென் என்ன சொல்லுது தெரியுமா? உண்மையான உண்மைன்னு எதுவும் இல்லை. ரெண்டு பக்கங்களையும் தெரிஞ்சுவெச்சுகிட்டாதான் எந்தச் சூழ்நிலையிலும் பதற்றமில்லாம யோசிக்கமுடியும், சரியான முடிவெடுக்கமுடியும். அதுக்குப் பயிற்சி தர்ற இந்தப் புது ப்ரொஃபஸரைத் திட்டாதீங்க, பாராட்டுங்க!’

No comments yet

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: