பூக்கள் பூக்கும் தருணம்

ஒரு ஜென் துறவி. சிறு மலைக்குன்று ஒன்றின் அடிவாரத்தில் அவரது அழகிய ஆசிரமம் அமைந்திருந்தது.

அந்தத் துறவியின் சீடர்கள் ஆசிரமத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட மலர்ச் செடிகளை வளர்த்திருந்தார்கள். அங்கே வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாள்களும் பல வண்ணங்களில் அழகழகான செடிகள் தென்படும்.

துறவிக்கு அந்த மலர்த் தோட்டம் மிகவும் பிடித்திருந்தது. தினமும் அங்கே சில மணி நேரங்களைச் செலவிடுவார். ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் ஊற்றுவார். பூக்களோடும் இலைகளோடும் பேசிக்கொண்டிருப்பார்.

இதைப் பார்த்த ஒருவர் துறவியிடம் ஆச்சர்யமாகக் கேட்டார். ‘ஐயா, இந்தச் சாதாரணமான தோட்ட வேலையை நீங்கள்தான் செய்யவேண்டுமா? உங்களுடைய சீடர்களிடம் சொன்னால் செய்யமாட்டார்களா? அவர்கள் செய்யாவிட்டாலும் காசை வீசி எறிந்தால் நூறு பேர் ஓடி வருவார்களே!’

துறவி சிரித்தார். ‘ஏன்? நானே இந்த வேலையைச் செய்தால் என்ன தப்பு?’

‘தப்பில்லை. ஆனால் நீங்கள் பெரிய சிந்தனையாளர். உங்களுடைய நேரத்தை வேறு உருப்படியான வேலைகளில் செலவிடலாமே!’

‘நண்பரே, நான் தோட்ட வேலை செய்வதாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்! ஆனால் உண்மையில் நான் இங்கே தியானம் செய்கிறேன்’ என்றார் துறவி. ‘ஒவ்வொரு நாளும் இந்தச் சில மணி நேரங்களுக்காகவே நான் ஏங்குகிறேன். இங்கேதான் வேறு சிந்தனைகளே இல்லாமல் இந்தச் செடிகளோடு மட்டுமே என் நேரத்தைச் செலவிடமுடிகிறது. அந்தக் கவனக்கூர்மை வேறு எங்கேயும், எப்போதும் சாத்தியப்படுவதில்லை!’

No comments yet

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: