தோழர்

அத்தியாயம் 17

 

போராடும் பிரிட்டிஷ் மக்கள்

எங்கெல்ஸுக்கு இப்போது பிரிட்டனில் பல நண்பர்கள் உருவாகியிருந்தனர். சாகன இயக்கத்துடனும் நல்ல தொடர்பு ஏற்பட்டிருந்தது. இயக்கத்தில் உள்ள பலரிடம் எங்கெல்ஸ் நெருங்கிப் பழகி, தன் கரூத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்திருந்தார். இயக்கத்தின் பத்திரிகைக்கு எங்கெல்ஸ் கட்டுரைகள் எழுதித் தந்தார்.  சாசன இயக்கத்தில் அவர் ஓர் உறுப்பினர் கிடையாது என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.

ராபர்ட் ஓவனின் கருத்துகளை மக்களிடையே கொண்டு செல்லும் சோஷலிச அமைப்பு ஒன்று பிரிட்டனில் செயல்பட்டு வந்தது. (ஓவனின் சோஷலிசத்தை கற்பனாவாத சோஷலிசம் என்று அழைக்கலாம். எதிர்கால சமூகம் குறித்து ஓவன் உருவாக்கிய கருத்தாக்கம், நடைமுறைக்கு ஒவ்வாததாக இருந்ததால் இந்தப் பெயர் கிடைத்தது). எங்கெல்ஸ் இவர்களையும் சென்று சந்தித்தார். சாசன இயக்கம் முன்வைத்த புரட்சிகர கருத்துகளும் ஓவனின் சோஷலிச சிந்தனைகள்   மான்செஸ்டரில் பல பகுதிகளில் பரவியிருந்ததை எங்கெல்ஸ் கண்டுகொண்டார்.

தன் அனுபவங்களை ஒரு ஜூரிச் இதழக்கு மே தொடங்கி ஜூன் 1843 வரை தொடர்ச்சியாக எழுதி அனுப்பினார் எங்கெல்ஸ். ‘இங்கிலாந்தில் இருந்து கடிதங்கள்’ என்னும் தலைப்பில் அவை வெளிவந்தன. உழைக்கும் மக்களிடம் இருந்தும் அவர்களுடைய போராட்டத்தில் இருந்தும் என் கட்டுரைகள் பலம் பெறுகின்றன என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார். சோஷலிஸ்டுகளையும் சாசன இயக்கத்தினரையும் எங்கெல்ஸ் பாராட்டி எழுதினார். ரூஸோ, வால்டேர் ஆகிய 18ம் நூற்றாண்டு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ளும் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே என்றார்.

அதே சமயம், இந்த இரு இயக்கத்தின் குறைபாடுகளையும் எங்கெல்ஸ் கண்டறிந்து வெளிப்படுத்தினார். சாசன இயக்கமும் சோஷலிச இயக்கமும் பிரிட்டனைச் சுற்றியே இயங்கி வருகின்றன. பிரிட்டனில் நடைபெறும் போராட்டங்களையும், பிரிட்டிஷ் தொழிலாளர்களின் பிரச்னைகளையும் அவை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. ஆனால், தொழிலாளர்களின் போராட்டக் களம் மிகப் பெரியது. ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச இயக்கம் பரவிக்கொண்டிருக்கிறது. அதை நாம் கண்காணிக்கவேண்டும். கற்றுக்கொள்ளவேண்டும். நம் பார்வையை விரிவாக்கிக்கொள்ளவேண்டும்.

குறிப்பாக, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அறிமுகமாகியிருக்கும் சோஷலிச சிந்தனைகளை பிரிட்டனின் சாசன இயக்கத்தினரும் சோஷலிச இயக்கத்தினரும் கிரகித்துக்கொள்ளவேண்டும் என்று எங்கெல்ஸ் விரும்பினார். வெவ்வேறு நிலப்பரப்புகளில் பரவியிருக்கும் ஒத்த கருத்தாக்கம் கொண்டிருப்பவர்கள் ஒன்றிணைந்து விவாதிக்கும்போது அறிவுப்பரப்பு மேலும் விரிவாகும் என்று எங்கெல்ஸ் நம்பினார்.

நவம்பர் 1843ம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதிய ஒரு கட்டுரை கம்யூனிசம் குறித்த அவருடைய தொடக்ககால சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. பிரிட்டிஷ் சோஷலிச இயக்கத்தின் ஆங்கில ஏடான The New Moral World-ல் வெளியான அந்தக் கட்டுரையின் தலைப்பு, Progress of Social Reform on the Continent. பிரிட்டன் சோஷலிஸ்டுகள் மத்தியில் இந்தக் கட்டுரைக்கு உவப்பான வரவேற்பு கிடைத்தது. அதே ஆண்டு, தி நார்தர்ன் ஸ்டார் என்னும் பத்திரிகை இந்தக் கட்டுரையை மறுபிரசுரம் செய்தது.

ஐரோப்பாவின் மூன்று முக்கிய நாடுகளை மேற்கூறிய கட்டுரையில் எங்கெல்ஸ் ஆராய்ந்தார். ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ். இந்த மூன்று நாடுகளும் தொழில்மயமாக்கலில் ஆர்வம் செலுத்துகின்றன. கனரக தொழிற்சாலைகள் பலவற்றை இந்த நாடுகள் உருவாக்கி வருகின்றன. பெரும் செல்வந்தர்களும் அரசுக் குடும்பத்தினரும் இந்நாடுகளில் பகட்டாக வசிக்கின்றனர். மற்றொரு பக்கம், உணவுக்கு வழியின்றி ஏழைகள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். சமனற்ற நிலை. கொடூரமான சுரண்டல். விளைவாக, உழைப்பாளிகளுக்கும் ஆலை அதிபர்களுக்கும் இடையில் போராட்டங்கள் வெடிக்கின்றன. பொருளாதார மாற்றம் வேண்டியும் அரசியல் மாற்றம் வேண்டியும் போராட்டங்கள் வலுக்கின்றன. நிலவிவரும் சமூக நிலை மாறவேண்டும் என்று இந்த மூன்று நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் விரும்புகின்றனர். புரட்சி மட்டும்தான் அதை சாத்தியமாக்கும் என்று அவர்கள் முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

எங்கெல்ஸை ஆச்சரியப்படுத்திய விஷயம் புரட்சி குறித்து அவர்கள் எடுத்த முடிவு. ஒரே சமயத்தில், பிரிட்டனும் பிரான்ஸும் ஜெர்மனியும் இந்த முடிவை எடுத்திருக்கிறது வியப்பல்லவா? எப்படிச் சாத்தியமானது? இத்தனைக்கும் தொழிலாளர்கள் மத்தியில் இந்த மூன்று நாடுகளுக்கு இடையில் எந்தத் தொடர்பும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனில், இதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டியது என்ன? கம்யூனிசம் என்பது மறுக்கமுடியாத நிதர்சனம். தவிர்க்கமுடியாத விளைவு. கம்யூனிசம் குறிப்பிட்ட நாட்டுக்குத்தான் ஒத்துவரும் என்பது போன்ற கருத்துகள் தவறானவை. சமூகச் சூழல்தான் கருத்தாக்கங்களை உருவாக்குகிறது.

நடைபெற்றுக்கொண்டிருப்பது பொருளாதார சமநிலைக்கான போராட்டம். சமூகப் போராட்டம். உரிமைகளுக்கான போராட்டம். அந்த வகையில், இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் ஒன்றிணையவேண்டும். விவாதிக்கவேண்டும். அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும். மூன்று நாடுகளையும் ஒன்றிணைக்கும் விஷயங்கள் என்னென்ன, பிரிக்கும் விஷயங்கள் என்னென்ன போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.

எங்கெல்ஸ் தொடங்கிவைத்தார். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளிலும் பரவியிருக்கும் வெவ்வேறு விதமான கற்பனாவாத சோஷலிச, கம்யூனிச சிந்தனைகளைத் திரட்டி சேகரித்து வாசித்தார். ஒவ்வொன்றிலும் உள்ள நிறை, குறைகளை சீர்தூக்கிப் பார்த்தார். பிரான்ஸில், செயிண்ட் சைமன், சார்லஸ் ஃபூரியர் இருவருடைய சிந்தனைகளையும் எங்கெல்ஸ் ஆர்வத்துடன் வாசித்தார். சைமனின் எழுத்துகளில் படர்ந்திருக்கும்  உள்ளுணர்வு சார்ந்த விஷயங்கள் அவர் சிந்தனைகளை பலவீனமாக்கியுள்ளன என்றார் எங்கெல்ஸ். பொருளாதாரச் சிந்தனைகளில் உள்ள குறைபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். ஃபூரியரின் சமூகத் தத்துவத்தால் எங்கெல்ஸ் கவரப்பட்டார். அதே சமயம், சொத்துடைமை குறித்து அவர் வந்தடைந்த முடிவுகள் தவறானவை என்றார். இருவருக்கும் பொதுவான ஒரு குறைபாட்டை எங்கெல்ஸ் கண்டறிந்தார். செயிண்ட் சைமன், ஃபூரியர் இருவரும் அரசியல் துறையை நிராகரித்துவிட்டனர். எனவே, அவர்களுடைய வழிமுறைகள் குறுகிய கண்ணோட்டம் கொண்டவையாக அமைந்துவிட்டன.

மற்றொரு முக்கியச் சிந்தனையாளரான, பிரௌதனின் சிந்தனைகளால் எங்கெல்ஸ் ஈர்க்கப்பட்டார். தனிச்சொத்துடைமை குறித்தும் போட்டி மனப்பான்மை குறித்தும் ஏழைமை குறித்தும் பிரௌதன் கொண்டிருந்த கருத்துகள் புரட்சிகரமானவை என்று அவர் நம்பினார். விரைவில் அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டியிருந்தது. முதலாளித்துவ சமூகத்தை புரோதன் விமரிசனம் செய்திருந்தாலும், தொழிலாளர்களுக்காக அவர் முன்வைத்த தீர்வு யதார்த்தத்தை மீறியதாக இருந்தது. அந்த வகையில், பிரௌதனின் தத்துவமும் கற்பனாவாதத் தன்மை கொண்டிருந்தது.

ஜெர்மானிய சிந்தனையாளரான, வில்ஹெம் வீட்லிங் (Wilhelm Weitling) செல்வாக்கு மிக்கவராக இருந்தார். கற்பனாவாத சோஷலிசத்தையே அவரும் முன்வைத்தார் என்றாலும், ஜெர்மானிய கம்யூனிச சிந்தனையின் தொடக்கப்புள்ளி அவரே என்று பாராட்டினார் எங்கெல்ஸ். மற்றபடி, ஜெர்மனியின் இளம் ஹெகலியவாதிகளின் கருத்துகள் எங்கெல்ஸுக்கு முன்னரே பரிச்சயமாகியிருந்தன. இவர்கள் போக, ஜெர்மனியின் முக்கியச் சிந்தனையாளர்கள் என்று எங்கெல்ஸ் சிலரை ஏற்றுக்கொண்டார். ஹெஸ், ரூஜ், ஹெர்வே,‘மார்க்ஸ் மற்றும் நான்.’

League of the Just என்னும் ரகசிய அமைப்பின் தலைவர்களை 1843ம் ஆண்டு மே மாதம் எங்கெல்ஸ் சந்தித்தார். பல ஜெர்மானிய கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் இந்த அமைப்பில் இணைந்திருந்தனர். அவர்களில் மூவரை எங்கெல்ஸ் சந்தித்து உரையாடினார். ஒருவர் அச்சு கோக்கும் பணியில் இருந்தவர். இரண்டாமவர், செருப்பு தைப்பவர். மூன்றாமவர், கடிகாரம் செய்பவர். ‘நான் முதல் முதலில் சந்தித்த மூன்று  புரட்சிகர தொழிலாளர்கள் இவர்களே. அவர்களுடைய கருத்துகளை என்னால் ஏற்கமுடியாமல் போனாலும், மூவரும் என் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களை என்னால் மறக்கவே முடியாது.’  எங்கெல்ஸ் அவர்களுடைய பெயர்களை நன்றியுடன் குறித்து வைத்தார். Karl Schapper, Heinrich Bauer, Joseph Moll. எங்களுடன் சேர்ந்துவிடுங்கள் என்று இந்த ரகசிய இயக்கத்தினர் கேட்டுக்கொண்டபோது எங்கெல்ஸ் மறுத்துவிட்டார். மன்னிக்கவும், நாம் வெவ்வேறு பாதையில் பயணம் செய்துகொண்டிருக்கிறோம்.

கற்பனாவாதத்தை எங்கெல்ஸ் முற்றாக இன்னமும் நிராகரிக்கவில்லை. கம்யூனிசத்தின் மீது அவருக்கு நாட்டம் இருந்தாலும், மயக்கம் அளிக்கும் கற்பனாவாத சோஷலிச உலகத்தின் மாயையில் இருந்தும் அவர் மீளவில்லை. ஓவனின் சோஷலிசம், சாசன இயக்கம், நாத்திகவாதம், பொருள்முதல்வாதம் என்று பல சிந்தனைகளின் தாக்கத்துக்கு ஆளாகியிருந்த எங்கெல்ஸ், கம்யூனிசம் குறித்து ஒரு தெளிவான பாதையை அமைத்துக்கொண்டார். பிரிட்டன் அளித்த அபூர்வமான அனுபவங்கள் அதைச் சாத்தியமாக்கின.

(தொடரும்)

One comment

  1. K. Rajesh
    #1

    ஒரு கம்யூனிஸ்டாக எங்கெல்ஸ் மாறியதன் பின்னணி பிரமாதம். முதலாளிததுவ நாடான இங்கிலாந்து தான் அவருடைய கம்யூனிச சிந்ததாந்தத்தின் பின்னணியாக இருந்தது என்பது வியப்புக்குரியது

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: