ஈ இஸ் ஈக்வல் டு எம்சி ஸ்கொயர்

ஒளியின் வேகத்தை மிஞ்சிவிட்டோம்!”

பூமி கிரகத்தின் ஜனாதிபதியும், இன்ன பிற கேபினெட் மந்திரிகளும் வீற்றிருந்த விவேகானந்தா ஆடிட்டோரியத்தின் மையத்திடலில் நின்று கொண்டு, சர்வதேச விஞ்ஞான கழகத்தின் தலைவரும், மூன்று முறை நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் ரே, மிகத் திட்டமாக மிகத் தீர்க்கமாக அறிவித்த போது, அங்கு குழுமியிருந்த பெளதீகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட ஐந்நூற்று சொச்சம் விஞ்ஞானிகளால் நம்பாமல் இருக்க முடியவில்லை; நம்பவும் முடியவில்லை.

ஒரு கணம் ஆழ்ந்த அமைதிக்குப் பின், அந்த‌ வாசகம் ஏற்படுத்திய மெல்லிய அதிர்வுகளும், அதன் ரிப்பிள் எஃபெக்ட் சலசல‌ப்புகளும் அரங்கில் முழுமையாய் விலகாத நிலையில் கடைசி மிடறு நீரை அருந்தி விட்டு டாக்டர் ரே தொடர்ந்தார்.

ஒளியின் வேகத்தை மிஞ்சுவது என்பது மனித குலத்தின் இருநூறு வருடக்கனவு. 1905ல் ஐன்ஸ்டைனின் Does the inertia of a body depend upon its energy-content?” என்ற ஆராய்ச்சிக்கட்டுரையில் தொடங்குகிறது அது. இப்போது கடைசியாய் அதை அடைந்தே விட்டோம். நாம் வாழும் காலத்தின் மகத்தான சாதனை இது.

செயற்கை நீரடைத்த‌ ப்ளாஸ்ட்டிக்‌ புட்டியைக் கொண்டு வந்து ஒயிலாய் அருகில் வைத்து நகர்ந்த‌ காரியதரிசி மீராவை சுலபமாய் அலட்சியப்படுத்தி விட்டு, கூடியிருந்தவர்களைப் பார்த்து ஓர் இடைவெளி விட்டு, மீண்டும் தொடர்ந்தார்.

மூன்று கட்டங்களாக இந்தப் பரிசோதனையை நடத்த‌த் திட்டமிட்டோம். நிறையற்ற ஃபோட்டான் துகள்களை ஒளியின் வேகத்தை மிஞ்சச்செய்வது முதல் கட்டம். எலெக்ட்ரான் போன்ற நிறையுள்ள பருத்துகள்களை அந்த‌ வேகத்தை கடக்கச்செய்வது இரண்டாம் கட்டம். உயிரின‌ங்களை அந்த வேகத்தில் பயணிக்க‌ வைப்பது மூன்றாவது மற்றும் கடைசிக் கட்டம்.

அந்த லீப் வருட ஃபிப்ரவரியின் அழகிய‌ பின்மாலைப்பொழுது ஒன்றினில், அது வரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்தவற்றை கண்ட்ரோல் மற்றும் எஸ் விசைகளை அழுத்தி கோப்பினில் சேமித்து விட்டு, தலையில் கை வைத்து அமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

எழுத ஆரம்பிக்கும் போதே இந்தக் கதை வேறு ஜாதி என்று தெரிந்து விட்டது. கொஞ்ச காலமாய்த் தலை காட்டாதிருந்த ஒற்றைத் தலைவலியைமைக்ரேன்மீண்டும் தந்தது. உடம்புக்கு வயதாவதை அடிக்கடி இது போன்ற உபாதைகள் ஞாபகப்படுத்தியபடியே இருக்கின்றன. கதையை எழுதி முடிக்க முடியுமா?

 

முதலிரண்டு கட்ட‌ங்களையும் வெற்றிகரமாய்க்கடந்து தற்போது மூன்றாவது கட்டத்தின் முனையில் நிற்கிறோம். ஏற்கனவே ஆச்சார்யா என்கிற சிம்பன்ஸி குரங்கினை கடந்த மாதம் டாக்கியான்1 என்ற பிரத்யேகக்கலம் மூலம் ஒளியின் வேகத்தை மிஞ்சி பயணிக்கச் செய்தாயிற்று. அதன் தொழில்நுட்ப விவரணைகள், அறிவியல் முறைககள் அடங்கிய வொய்ட் பேப்பர் விரைவில் பிரசுரிக்கப்படும்.

இன்னும் மனிதனை பயணிக்க வைப்பது மட்டும் தான் பாக்கி. இப்போதைய கூட்டம் அதைப்பற்றியது தான். அடுத்து ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் டாக்கியான்2 என்ற புதிய கலத்தில் அனுப்புவதாகத்திட்டம். இந்தப்பரிசோதனை வெற்றி பெற்றால் பல ஒளி ஆண்டுகள் தூரமிருக்கும் ஆண்ட்ரமீடா போன்ற கேலக்ஸிகளுக்கெல்லாம் சில மாதமாதப்பயணத்தில் மனிதன் சென்று வரலாம்.

இந்தப் பரிசோதனைக்காக‌ ஏற்கனவே நம்மிடம் உள்ள‌ அஸ்ட்ராநாட்களைப் பயன்படுத்தாமல், நம் பொது மக்களிலிருந்தே புதிதாய் இருவரைத் தேர்ந்தெடுத்து, பயிற்சியளித்து, பயன்படுத்த நம் அரசு முடிவு செய்திருக்கிறது. சாமானியனும் சரித்திரத்தில் இடம் பெற இந்த நல்லாட்சி வகுத்த வழிமுறை இது. இப்போது நம் மாண்புமிகு ஜனாதிபதி நூறு கோடி பேரிலிருந்து அந்த இரண்டு அதிர்ஷ்ட சாலிகளைத் தேர்ந்தெடுப்பார். அரங்கில் மெல்லிய கைதட்டல்கள் எழுந்தன.

 

யோசித்துப்பார்த்தார். ஆத்மாவையும் நித்யாவையும் இதில் பயன்படுத்தலாம்.

கதையின் தலைப்பை எழுதினார்ஆத்மா, நித்யா மற்றும் ஐன்ஸ்டைன்”.

 

இருபத்தியிரண்டாம் நூற்றாண்டின் விளிம்பில் நின்ற அந்தக் கோடை காலையில், மூன்றாம் உலகப்போருக்குத் தப்பிய நூறு கோடி உலக மக்கட்தொகையும் தத்தம் வீட்டிலிருந்தபடி இதை பிரம்மாண்ட முப்பரிமாண ரெட்டினாத் திரையில் நேரடி ஒளி/ஒலி/ருசி/மணம் பரப்பாய் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரசாங்கச் செய்திகளை ஒவ்வொரு பிரஜையும் வாரம் ஏழு மணி நேரம் வீதம் கவனிக்க வேண்டும் என்பது அரச கட்டளை. மீறுப‌வர்களுக்கு தண்டனையும் உண்டு. ஆண்களென்றால் ஆசன வாயில் குறைந்த சக்தி லேசர் பாய்ச்சுவார்கள். பெண்களென்றால் தண்டனை வேறு தினுசு. பயந்தே புத்தி வளர்க்கிறார்கள்.

ஜனாதிபதி மெல்லக் கை நீட்டி, தன் எதிரேயிருந்த அந்த ரேண்டம் நம்பர் ஜெனரேட்டரின் விசையை அழுத்த மேடையிலிருந்த AMOLED திரையில் பத்து இலக்க எண்கள் அதிவேகமாய் ஓடி இறுதியில் இரண்டு எண்களை தேர்ந்தெடுத்து கடமையுணர்வுடன் ஓர் எலக்ட்ரானிக் குரல் அறிவித்தது.

பிரஜை எண் 4953690164ஆத்மா

பிரஜை எண் 5281377948நித்யா

ப்ளாஸ்க்கில் இருந்த ஏலக்காயிட்ட மிதச்சுடு தேநீரை ஊற்றி உறிஞ்சினார்.

அற்புதமானதொரு கருவும், நல்லதொரு துவக்கமும் கிடைத்தும், கதையின் போக்கு சரியாய்ப் பிடிபடவில்லை. இந்த நாற்பது வருட எழுத்து வாழ்வில் இது போன்ற குழப்பங்கள் மிக அரிதாகவே நிகழ்ந்திருக்கின்றன‌. ஒன்று மட்டும் மீண்டும் மீண்டும் சிந்தனையில் வந்து போனது. ஒருவரை கதையின் முடிவில் கொன்று விட வேண்டும் என்பதே அது. ஆத்மா, நித்யா இருவரில் ஒருவரை.

 

தங்கள் வீட்டிலிருந்த தொலைக்காட்சித் திரையில் பார்த்துக்கொண்டிருந்த ஆத்மாவும் நித்யாவும் பிரம்மித்தார்கள். உற்சாகத்தில், நித்யா கிட்டத்தட்ட சப்தமாய்க் கத்தியே விட்டாள் (ஹுர்ர்ரேஏஏ!”). என்னவொரு வாய்ப்பு. சாதாரணர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பா இது. நித்யா ஐ.ஐ.டி.க்கு விண்ணப்பித்தே கிடைக்கவில்லை அதுவும் மூன்று முறை. ஆனால் இப்போது அதையெல்லாம் விட பெரிய பாக்கியம் கிடைத்திருக்கிறது.

தேனிலவுக்கு நிலவுக்கு போய் வந்ததோடு சரி. அதற்கு பிறகு ஆத்மா அவளை எங்குமே அழைத்துச் செல்லவில்லை. பணி நிமித்தம் ஒரு முறை ஜூபிடர் வரை போயிருக்கிறாள். அவ்வளவு தான் அவளது சுற்றுலா வரலாறு. இதோ இந்தப் பரிசோதனைப்பயணத்தில் ஆண்ட்ரமீடா வரை போலாம் என்கிறார்கள்.

இந்த அரசு வாழ்க; இதன் விஞ்ஞானம் வாழ்க; இதன் தொழில்நுட்பம் வாழ்க; குறிப்பாய் அந்த ரேண்டம் நம்பர் ஜெனரேட்டர் வாழ்க. இந்த அரசையா 10G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரும் ஊழல் செய்தது என்று சில நக்சல்பாரி ஊடகங்கள் குற்றம் சாட்டி பதவி விலகக் கோரின! பாவம், முட்டாள்கள்.

ஆத்மாவுக்கு உலகமே தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத்தோன்றியது. அரசாங்கத் தொலைக்காட்சியினர் அதற்குள் வீடு தேடி பேட்டியெடுப்பதற்கு வந்துவிட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எப்படி உணர்கிறீர்கள்?”, “மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”, “அரசாங்கத்தைப்பற்றி ஓரிரு வார்த்தைகள்?” போன்ற அசட்டு சம்பிரதாயக் கேள்விகளுக்கு உற்சாகமாய்ப் பதிலளித்தார்கள்.

ஜனாதிபதி அந்தரங்கமாகச் சந்திக்க விரும்புவதாக பூமி அரசின் தலைமைச் செயலகத்திலிருந்து அரசாங்க முத்திரையிட்ட குரல் மின் மடல் அழைப்பு வந்தது. அவர்கள் சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தார்கள். அரசாங்கம் வழங்கி யிருந்த‌ ரேஷன் மதுவை அதிகம் குடித்தார்கள். சம்போகத்திற்கு அனுமதியற்ற காலமாதலால் அன்றைய‌ இரவு ஆத்மா நித்யாவை அழுந்த முத்தமிட்டான்.

 

மனசு கேட்கவேயில்லை. ஆத்மா நித்யா இருவரில் ஒருவரைக் கொல்வதா. என்ன இது. கிட்டதட்ட ஒரு துரோகம் போல். எத்தனை வருடங்களாக என் புனைவுகளின் பாத்திரங்களாக‌ ஆத்மாவும் நித்யாவும் இருந்திருக்கிறார்கள். அவர்களில்ஒருவரை போய்க் கொல்வதாவது. நடக்காது. மீண்டும் மைக்ரேன் சிந்தனையை ஆக்ரமித்தது.

 

பூமியின் ஜனாதிபதியுடனான சந்திப்பு மிகச்சம்பிரதாயமாய், மிகச்சுருக்கமாய் நிகழ்ந்தது. உடன் டாக்டர் ரே இருந்தார். ஜனாதிபதி அரசுத் தொலைக்காட்சியில் பேசும் அதே மின்காந்தம் தோய்ந்த‌ கரகர‌த்த குரலில் துல்லியமாய்ப் பேசினார்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நிலவுப்பயணத்துக்கு ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் தேர்ந்தெடுக்கப்பட்டதைப்போல், செவ்வாய்க்கு ராமன், அப்துல்லா தேர்ந்தெடுக்கப் பட்டதைப்போல் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். சரித்திரம் உங்களை நினைவிற் கொள்ளும். பூமி அரசின் பிரதிநிதியாக உங்களை வாழ்த்துகிறேன்

நன்றி தெரிவித்து, விடைபெற்று கிளம்புகையில் டாக்டர் ரே புன்னகைத்தார்.

நாளை உங்கள் பயிற்சி தொடங்குகிறது.

ஆர்வத்தில் படபடக்கும் அவர்களின் நான்கு கண்களையும் பார்த்து சொன்னார்.

தயாராகுங்கள், உங்கள் வாழ்நாளின் பொற்கணங்களை அனுபவிக்க.”

திருமதி சுஜாதா எடுத்துத்தந்த மாத்திரையைப் போட்டுத் தண்ணீர் குடித்தார்.

என்ன தான் இப்படிப் போட்டு யோசிக்கிறீர்கள்?

சொல்வதா வேண்டாமா என யோசித்துத் தயங்கிப் பின் சொன்னார்.

 

ஆத்மாவுக்கும் நித்யாவுக்கும் பயணத்திற்கான பயிற்சி தலைநகரின் தெற்கே ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த சர்வதேச அஸ்ட்ரோநாட் பயிற்சி மையத்தில் தொடங்கியது. ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வீதம் மிகக்கடுமையான மூன்று மாத காலப்பயிற்சி (பாதியில் பேசாமல் ஓடிப் போய் விடலாமா?” என்று ஆத்மாவிடம் நித்யா ரகசியமாய்க் கேட்டாள்).

முதலில் ஒளியின் வேகம், அதைப்பற்றிய அறிவியல் சித்தாந்தங்கள், அவர்கள் செல்லவிருக்கும் கலம் போன்றவற்றைப்ப‌ற்றி பாடம் எடுத்தார்கள். ஸ்பெஷல் ரிலேட்டிவிட்டி, க்வாண்டம் டன்னலிங், ப்ளாங்க் லெந்த், ஈ.பி.ஆர் பாரடாக்ஸ், ஸ்ட்ரிங் தியரி, ஸ்பேஸ் ஒபேரா என்று புரியாத பாஷையில் பேசினார்கள். பாதிக்கு மேல் புரியாது; இருந்தாலும் சொல்லித் தர வேண்டியது எங்கள் கடமை என்ற முன்னறிவிப்புடன் தான் ஆரம்பித்தார்கள் பேராசிரியர்கள்.

எழுபத்தைந்து மீட்டர் நீளம் கொண்ட நீச்சல் குளத்தில், விண்வெளிக்கான உடைகளும், டென்னிஸ் ஷூக்களும் அணிந்து கொண்டு, சைடு ஸ்ட்ரோக் முறையில் மூன்று முறை தொடர்ச்சியாக நீந்த வைத்தார்கள். நீருக்குள் பத்து நிமிடம் மூச்சடக்கி இருக்கச்சொன்னார்கள். இருபது நொடிகளுக்கு எடையற்ற சூழ்நிலையில் இருக்க‌ச் செய்தார்கள்இப்படி ஒரு நாளைக்கு நாற்பது முறை.

கணேஷ், வசந்த் இருவரில் ஒருவரை சாகடிக்க வேண்டும் என்றால் கூட சுலபமாகத் தீர்மானித்து விடுவேன்வசந்த் என்று. ஆனால் இந்த ஆத்மாவும் நித்யாவும் ரொம்பவே படுத்துகிறார்கள்”, என்றார் மோவாயைத் தடவியபடி.

படுத்துவது ஆத்மாவா? நித்யாவா?”

இருவருமே.

 

கடைசியாய் பயணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளைப் பற்றியும், அந்தப் பயணத்தின் அறிவியல் முக்கியத்துவம் தவிர்த்து அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் குறித்தும் ஒரு வயதான வழுக்கைத்தலைப் பெண் சிரத்தையாக‌ப் பாடம் நடத்தினாள். கிரக‌ப்பற்று, இறையாண்மை இத்யாதி.

பயிற்சி முடியும் தறுவாயில் ஆத்மாவும் நித்யாவும் முழு உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். டிஎன்ஏ ப்ளூப்ரிண்ட் எடுத்து பிசிறுள்ள ஜீனோடைப்புகள் ஜெனிட்டிக் ரீஎஞ்சினியரிங் மூலம் திருத்தி நார்மல் என முத்திரை குத்தினார்கள்.

பயிற்சியிலிருந்த மூன்று மாதங்களில் ஒரு நாள் கூட டாக்டர் ரே கண்ணில் படவில்லை. அவருக்குக்கீழ் நேரடிப்பயிற்சி பெறுவோம் என்று எண்ணியிருந்த‌ இருவருக்கும் அது சற்றே ஏமாற்றமளித்தது. பயணம் பற்றிய எதிர்ப்பார்ப்பும் சந்தோஷமும் எல்லாவற்றையும் மறக்கச் செய்தது. ஆத்மாவும் நித்யாவும் மெல்ல மெல்ல, தட்டுத்தடுமாறி தயாரானார்கள். அந்த மஹாநாளும் வந்தது.

பேசாமல் ஆத்மாவைக் கொன்று விடுங்கள்.

என்ன‌, ஃபெமினிஸமா?”

இல்லை. இன்ஃபாக்ட், இது மேல்ஷாவனிஸம்

எப்படி?”

உங்கள் எதிர்கால எழுத்துக்களுக்கு நித்யா என்பதன் கிளுகிளுப்பு தேவைப்படும்.

 

அந்த நவீன ஏவுதளத்தைப் போர்த்தியிருந்த அதிகாலைப்பனியை உருக்கியபடி பரிதியின் கதிர்கள் பிரவாகித்துப்பாய்ந்தன. வேலை நிமித்தம் மட்டுமேயான பரபரப்புக் குரல்கள் அவசரம் காட்டின. கிட்டத்தட்ட எல்லோருமே ஒருவித ஆன்மீகம் தடவிய‌ பதட்டத்தில் இருந்தார்கள்புய‌லுக்குக் காத்திருக்குமொரு கப்பல் மாலுமியின் பதட்டம். நேரம் சத்தமின்றி நழுவிக் கொண்டிருந்தது.

ஆத்மாவும் நித்யாவும் டாக்கியான்2 என்ற அந்த வினோத வடிவுடைய‌, ஒளிர் வெண்ணிற கலத்தில் புறப்படத்தயாராய் அமர்ந்திருந்தார்கள். பதட்டமில்லாமல் ஏதோ பக்கத்திலிருக்கும் செவ்வாய் கிரகத்துக்கு வார இறுதி விடுமுறையைக் கழிக்க‌ கிளம்புபவர்கள் மாதிரி உதட்டில் ஒரு புன்னகையை ஒட்டியிருந்தார்கள்.

மிஷன் கவுண்ட் டவுன் தொடங்கியது 9 8 7 6 5 4 3 2 1 0

அந்தக்கலம் ஏவுதளத்தை விட்டு சீறிப்பாய்ந்தது. அதன் வேகத்தை ஒப்பிட அதற்கு முந்தைய கணம் வரையிலான பூமி சரித்திரத்தில் உவமையில்லை. நூற்றாண்டுகளாய் மனித இன‌ம் வாசித்துக் கொண்டிருந்த சித்தாந்தங்களை மாற்ற வல்ல ஒரு பயணம். உலகமே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தது.

தம் வாழ்நாளின் மறக்க முடியாத கொண்டாட்டம் ஒன்றிற்கு ஆயத்தமானார்கள் பூமிக்கிரகத்தின் பொதுமக்கள். வரலாற்றாசிரியர்கள் புதிய அத்தியாயம் எழுதத் தயாரானார்கள். விஞ்ஞானிகள் கடவுளை ஒரு கணம் ரத்து செய்தார்கள்.

இதில் இவ்வளவு குழம்ப ஏதுமில்லை.”

“…”

ஒரு கதையில் சாகடித்து விட்டு, அடுத்த‌ கதையில் அதே கதாபாத்திரத்தை உயிருடன் காட்டுவது விஞ்ஞானக் கதைகளுக்கோ, உங்களுக்கோ புதிதில்லை.

ஜீனோவைச் சொல்கிறாயா? ப்ரியாவைச் சொல்கிறாயா? அவை வேறு

ஆத்மா நித்யா பாத்திரங்கள் ஒரே ஆட்களை குறிப்பதல்ல. உங்கள் சில அறிவியல் கதைகளில் ஆத்மா, நித்யா என்ற‌ பெயர் கொண்ட‌ பாத்திரங்கள் வருகின்றன. அவ்வளவே. உற்றுப் பார்த்தால் அவை கதைக்குக் கதை வேறுபடுகின்றன. ஆத்மா நித்யா என்பவை ஓர் அடையாளம் மட்டுமே.

அதனால் தான் அதை அழிக்க பயப்படுகிறேன்.

 

ஐசக் நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ், சங்கர் முனியசாமி ஆகியோர் முன்பு அமர்ந்திருந்த கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியின் கணிதத் துறை லூகாஸியன் பேராசிரியர் நாற்காலியில் அமர்ந்தபடி, மேசையோடு ஒருங்கிணைக்கப்பட்ட‌ தொடுகணிணித்திரையில் டாக்கியான்2 கிளம்பி நகர்வதையும் அதன் வேகக் கணக்கையும் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் ரேவை அவரது அந்தரங்கக் காரியதரிசி மீராவின் உற்சாகக் கீச்சுக்குரல் பரிசுத்தமாய்க் கலைத்தது.

கடைசியாய் சாதித்து விட்டீர்கள் டாக்டர் ரே

அவளை உற்றுப்பார்த்தார் டாக்டர் ரே.

அதில் உனக்கு இவ்வளவு சந்துஷ்டியா?”

என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? ஐ லிவ் ஃபார் யூ, டாக்டர் ரே.

மீரா! உன் இளமையை என் போன்ற ஒரு கிழவனோடு வீணடித்து விட்டாய்

இல்லை ரே. என்ன இது புதிதாய்? நானாய் விரும்பித்தானே எல்லாவற்றுக்கும் ஒத்துழைத்தேன். உங்கள் ஆராய்ச்சிக்காக திருமணமே செய்யாமல் இருந்தீர்கள். இயற்பியலின் மேல் பற்று கொண்ட இந்தக் கத்துக்குட்டிக்கு அதன் பிதாமகரான நீங்கள் ஆதர்ஷ புருஷன். உங்களுக்கு எப்படியோ, எனக்கு நீங்கள் காதலன் தான். இதை விட மகிழ்ச்சியான வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்க சாத்தியமில்லை

மூச்சு விடாமல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியவள் நிதானமாகித் தொடர்ந்தாள்.

உங்களையும் என்னையும் தொடர்புபடுத்தி என் காதுபட பேசியவர்களின் வார்த்தைகளை நான் ரசிக்கவே செய்தேன். உங்களின் அறிவிக்கப்படாத காதலியாய் இருப்பதில் எனக்கு உள்ளூர ஒரு வித‌ பெருமையே. இருபதாம் நூற்றாண்டிற்கு ஒரு ஐன்ஸ்டைன் போல் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு நீங்கள். இந்த ஆராய்ச்சியின் முடிவில் உலகமே இதைத் தான் சொல்லும்.

என்னை இவ்வளவு நேசிக்கிறவளிடம் ஓர் உண்மையை சொல்ல வேண்டும்

கடைசியாய் பக்கத்து வீட்டு நாயிடம் கூட கேட்டுப்பார்த்தாயிற்று. பவ் பவ் பவ் என சற்று விரோதமாய் அல்லது ஏளனமாய்க் குரைத்து விட்டு படுத்துக்கொண்டது.

இவனுக்கு வேறு வேலை இல்லை என்று சொல்லாமல் சொல்வதாய்ப்பட்டது.

 

“இந்த ஆராய்ச்சி வெற்றி பெறவில்லை மீரா. பூமி அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் நான் அப்படி சொல்ல வேண்டியதாகிவிட்டது. இன்றைய அரசாங்கத்தின் மேல் ஏராள‌மான ஊழல் குற்றச்சாட்டுகள். முக்கியமாய் இந்த 10G ஸ்பெக்ட்ர‌ம் ஒதுக்கீடு. மில்லியன் பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஊழல் நடந்திருக்கிறது என்கிறார்கள். அவர்களுக்கு பொதுமக்களின் கவன‌த்தை திசை திருப்ப ஏதாவது விஷயம் தேவைப்பட்டது. இந்தத் தேதிக்கு விஞ்ஞானம் மட்டும் தான் அத்தகைய ஈர்ப்பினை ஏற்படுத்த வல்லது. அதனாலேயே இந்த ஆராய்ச்சியை முடுக்கி விட்டார்கள். என்னை இந்தத் திட்டப்பணிக்குத் தலைவராக‌ நியமித்தார்கள்.

ஆரம்பத்தில் நிஜமாகவே முயற்சி செய்து பார்த்தோம். பின் புரிந்து விட்டது. என் நாற்பத்தியிரண்டு வருட கற்றலில் சொல்கிறேன் ஒளியின் வேகத்தை மிஞ்சவே முடியாது. ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு பொய்க்கவே செய்யாது. E=mc2 என்கிற நிறை ஆற்றல் சமன்பாடு தான் சதி செய்கிறது.

பரிசோதனை வெற்றி பெறாது என்பதால் தான் அரசாங்கத்தின் முடிவுப்படி சாதாரணர்களான ஆத்மாவும் நித்யாவும் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  அவர்கள் பயணிக்கும் கலம், ஒளியின் வேகத்தைத் தொட முனைகையில் வெளிப்படும் உயர் ஆற்றலின் காரணமாக‌ வெடித்துச்சிதறும். A giant explosion.

ஆத்மாவும் நித்யாவும் பயிற்சியிலிருந்த போது கிடைத்த மூன்று மாத கால அவகாசத்தில் என்னால் ஒரே ஒரு விஷயம் செய்ய முடிந்தது. கலம் வெடித்துச் சிதறுகையில் இருவரில் ஒருவர் உயிர் பிழைக்கும் வகையில் ஒரு சிறிய‌ உபகலத்தை இணைத்திருக்கிறேன். அத்தகைய இரண்டு கலங்களை இணைத்து இரண்டு பேரையுமே காப்பாற்றி விடுவது தான் எனது ஆரம்பத் திட்டம். ஆனால் நேரம் போதாமையால் இரண்டாவது கலத்தை செய்ய‌ முடியாமலே போய் விட்டது. பூமி அரசாங்கத்தை எவ்வளவோ முறை மன்றாடியும் பரிசோதனை தேதியை மாற்றுவதற்கு மட்டும் மறுத்து விட்டார்கள்.

எல்லாம் மக்களை ஏமாற்ற வேண்டி செய்யப்படும் அரசியல். என் மனசாட்சி இப்போது உறுத்துகிறது. இந்தப்பதவியிலிருந்து கொண்டு தெரிந்தே ஓருயிரைப் பலி வாங்க ஒத்துழைத்ததை ஏற்கவே முடியவில்லை. நான் சர்வதேச விஞ்ஞான கழகத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.”

அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்த மீரா விரக்தியாய்ச் சொன்னாள்.

“உங்கள் ராஜினாமாவால் எந்த உயிரையும் திருப்பித்தர முடியாது டாக்டர் ரே.”

ஆத்மா, நித்யா மற்றும் ஐன்ஸ்டைன் என்ற தலைப்பை அடித்து விட்டு “E=mc2” என்று எழுதினார் சுஜாதா.

 

வினாடிகளும் அதற்குள்ளிருக்கும் சிறுபிரிவுகளும் வேகமாய்த் தெறித்து ஓடிக்கொண்டிருந்தன. ரே கனத்த‌ மெளனத்துக்குள் ஒளிந்திருந்தார். அந்த அறையில் அவர்கள் இருவர் மட்டும் இருந்தார்கள். அந்த நிசப்தத்தில் அவர்களின் இருதயத்துடிப்பு அவர்களுக்கே மிகத் தெளிவாய்க் கேட்டது.

சகிக்கவொண்ணா மௌனம். மீரா தன் வார்த்தைகளால் அதைத் தகர்த்தாள்.

“கடைசியாய் ஒரே ஒரு கேள்வி டாக்டர் ரே.”

என்ன என்பது போல் பார்த்தார் ரே.

“ஆத்மா நித்யா இருவரில் யார் சாகப்போகிறார்?”

“Survival of the fittest”

பெருமூச்சுடன் சொல்லிவிட்டு அவர் தன் கண்களை மூடிக்கொண்டார்.

திருமதி சுஜாதா அருகே வந்து நின்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு கேட்டார்.

யாரை சாகடிக்கப்போகிறீர்கள்? அல்லது யாரை காப்பற்றப்போகிறீர்கள்?”

கிட்டத்தட்ட இருவரையுமே காப்பாற்றிவிடுவேன் எனத்தோன்றுகிறது

எப்படி?”

சுஜாதா புன்னகைத்தார்.

 

செரன்கோவ், அஸ்கார்யன், காசிமிர், ஸ்கேர்ன்ஹாஸ்ட், ஹார்ட்மான் ஆகிய‌ விளைவுகளை ஏற்படுத்தி விரைந்தது கலம். அதன் நியான் எலெக்ட்ரோ‍-லூமினன்ஸ் பச்சை, வினாடிக்கு மீட்டர்களில் காட்டிய கலத்தின் வேகத்தை ஆத்மாவும் நித்யாவும் கண்ணிமைக்காம‌ல் அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

299792453
299792454
299792455
299792456
299792457

நீங்கள் ஓர் இயற்பியல் மாணவராக இருந்திருந்தால் இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் – நூற்றாண்டுகளாய் கண்ணாமூச்சி காட்டி வரும் ஒளியின் வேகம் என்கிற அந்த மாய எண்ணை ஆத்மாவும் நித்யாவும் பயணிக்கும் டாக்கியான்-2 முத்தமிட‌ இன்னும் வினாடிக்கு ஒரு மீட்டர் அதிக வேகம் தேவை.

அப்போது…

அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட இந்த ஒரு வாரத்தில் எதுவுமே எழுதவில்லை. சோர்வு மிகவும் அழுத்தியது. இந்த சூழ்நிலையே கூட ஒருவனை நோயாளியாக்கி விடும். எல்லோரும் விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள். நோயாளிகள் என்றாலே எப்போதும் தனி மரியாதை தான். அதுவும் பிரபல நோயாளிகள் என்றால் கூடுதல்.

இன்றாவது ஆத்மா, நித்யா கதையை எழுதி முடித்து விட‌ வேண்டும். ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்து விடலாம். இன்று தேதி என்ன? வெகு சுத்தமான மருத்துவமனைச் சுவரில் அறையப்பட்டிருந்த துருவேறாத இரும்பு ஆணியின் வசம் தொங்கிக் கொண்டிருந்த அந்த தினசரி கிழிபடும் கேல‌ண்டரைப் பார்த்தார்.

27 ஃபிப்ரவரி 2008.


[இன்று சுஜாதா நினைவு நாள்.]

 


 


 

ஒளியின் வேகத்தை மிஞ்சிவிட்டோம்!”

பூமி கிரகத்தின் ஜனாதிபதியும், இன்ன பிற கேபினெட் மந்திரிகளும் வீற்றிருந்த விவேகானந்தா ஆடிட்டோரியத்தின் மையத்திடலில் நின்று கொண்டு, சர்வதேச விஞ்ஞான கழகத்தின் தலைவரும், மூன்று முறை நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் ரே, மிகத் திட்டமாக மிகத் தீர்க்கமாக அறிவித்த போது, அங்கு குழுமி

யிருந்த பெளதீகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட ஐந்நூற்று சொச்சம் விஞ்ஞானிகளால் நம்பாமல் இருக்க முடியவில்லை; நம்பவும் முடியவில்லை.

ஒரு கணம் ஆழ்ந்த அமைதிக்குப் பின், அந்த‌ வாசகம் ஏற்படுத்திய மெல்லிய அதிர்வுகளும், அதன் ரிப்பிள் எஃபெக்ட் சலசல‌ப்புகளும் அரங்கில் முழுமையாய் விலகாத நிலையில் கடைசி மிடறு நீரை அருந்தி விட்டு டாக்டர் ரே தொடர்ந்தார்.

ஒளியின் வேகத்தை மிஞ்சுவது என்பது மனித குலத்தின் இருநூறு வருடக்கனவு. 1905ல் ஐன்ஸ்டைனின் Does the inertia of a body depend upon its energy-content?” என்ற ஆராய்ச்சிக்கட்டுரையில் தொடங்குகிறது அது. இப்போது கடைசியாய் அதை அடைந்தே விட்டோம். நாம் வாழும் காலத்தின் மகத்தான சாதனை இது.

செயற்கை நீரடைத்த‌ ப்ளாஸ்ட்டிக்‌ புட்டியைக் கொண்டு வந்து ஒயிலாய் அருகில் வைத்து நகர்ந்த‌ காரியதரிசி மீராவை சுலபமாய் அலட்சியப்படுத்தி விட்டு, கூடியிருந்தவர்களைப் பார்த்து ஓர் இடைவெளி விட்டு, மீண்டும் தொடர்ந்தார்.

மூன்று கட்டங்களாக இந்தப் பரிசோதனையை நடத்த‌த் திட்டமிட்டோம். நிறையற்ற ஃபோட்டான் துகள்களை ஒளியின் வேகத்தை மிஞ்சச்செய்வது முதல் கட்டம். எலெக்ட்ரான் போன்ற நிறையுள்ள பருத்துகள்களை அந்த‌ வேகத்தை கடக்கச்செய்வது இரண்டாம் கட்டம். உயிரின‌ங்களை அந்த வேகத்தில் பயணிக்க‌ வைப்பது மூன்றாவது மற்றும் கடைசிக் கட்டம்.

13 comments so far

 1. anand
  #1

  while i am reading this, the net got disconnected, and before the last box highlighted text, a message was displayed OK server disconnected running on apache http://tamilpaper.net on port 80 , at first i thought it was one of the most suitable climax ever created for a science fiction work, but realizing the disconnection and i refreshed the page, the last para appeared, with out any conclusion. i feel Thiru.Sujatha may appreciate this computer generated climax rather than the typo-graphed one. long live sujatha , sujata is dead. good work mr.saravana karthikeyan

 2. Suresh
  #2

  சுஜாதா சார்.. வீ மிஸ் யு.

 3. virutcham
  #3

  எப்படிச் சொல்லுவதென்றே தெரியவில்லை.
  அருமை. பிரமாதம். விறுவிறுப்பு. கடைசியில் நெகிழ வைத்தது

 4. balamurali47
  #4

  we miss you sujatha, sir

 5. Sekar Parameswaran
  #5

  புரியலை.

 6. jagan
  #6

  சுஜாதா சார்.. வீ மிஸ் யு……

 7. இ.பு.ஞானப்பிரகாசன்
  #7

  அட்டகாசமான கதை! அச்சு அசலாக உயர்திரு.சுஜாதா அவர்களே எழுதுவது போல் இருந்தது நடை. சுஜாதா அவர்கள் எத்தனையோ கதாப்பாத்திரங்களைப் படைத்திருக்கிறார்; ரஜினி முதல் விக்ரம் வரை எத்தனையோ கதாநாயகர்களுக்காக எழுதியிருக்கிறார். ஆனால் அவரையே ஒரு கதாப்பாத்திரமாக வைத்து ஒரு கதை!… அவரையே கதாநாயகனாக்கி ஒரு கதை!… சாதித்து விட்டார் திரு.சரவண கார்த்திகேயன் அவர்கள்! வேறு எந்த எழுத்தாளருக்கும், மறைந்த பிறகு… அதுவும் மறைந்து இத்தனை நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு கௌரவம் கிடைத்திருக்குமா… தெரியவில்லை! இறப்பிற்குப் பின்னும் வாழும் வல்லமையுடையவர் என்பதால்தான் அவரால் இறந்த பின்னும் இப்படிச் சாதிக்க முடிகிறது! எப்படியோ, சுஜாதா அவர்களை இழந்து தவிக்கும் தமிழ் உலகத்துக்கு இதன் மூலம் ஒரு நல்ல வலி நிவாரணியை அளித்துத் தமிழ் உலகில் ஒரு நல்ல இடம் பிடித்திருக்கிறார் சரவண கார்த்திகேயன் அவர்கள்! நன்றி! மிக்க நன்றி! ஆனால் வலி நிவாரணிகள் சிறிது நேரம்தான் பயனளிக்கக் கூடியவை!

 8. முன்பனிக்காலம்
  #8

  நீண்ட நாட்களுக்கு பிறகு சுஜாதா அவர்களின் சிறுகதையையும் இடையிடையில் அவர் கதை எழுதும் வர்ணனையையும் படிக்க கிடைத்தது மகிழ்ச்சி + நெகிழ்ச்சி=இனிய அனுபவம்

 9. krishnamoorthy
  #9

  வேகத்தின் விளிம்பில் எப்போதும் நிறுத்திவைக்கும் எழுத்து பலம் சுஜாதா என்ற எழுத்தை ஆளும் எழுத்தாளனுக்கு உண்டு என்பதில் – என்வயதிர்க்கு சாட்சி சுஜாதா .அவர் பெயரை சொல்லி கொள்வதே ஒரு புத்திசாலிதனமாக நினைப்பை தமிழ் வாசிப்பவனுக்கு ஏற்படுத்தியவர் .
  அவர் ஆத்ம சாந்தி அடையும் .

  என்றென்றும் அன்புடன் ,
  சுகி …

 10. Samudra
  #10

  good one..thanks

 11. Its me!
  #11

  இதனை விட சுஜாதாவிற்கும் அவரது எழுத்தின் இரசிகர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் இல்லை என்றே தோன்றுகிறது. சரவணகார்த்திகேயன் அவர்கள் மேலும் நிறைய எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

 12. பரிசல்காரன்
  #12

  அவர் இன்னும் இருக்கிறார்.

  முதல் கமெண்ட்டை ரசித்தேன். இன்னும் அவர் விதைத்தவைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பதற்கு அதுவே சாட்சி.

 13. navin_iv
  #13

  சாதரணமா போயிட்ருந்த கதை //கிட்டத்தட்ட இருவரையுமே காப்பாற்றிவிடுவேன் எனத்தோன்றுகிறது”// இங்க இருந்து எதிர்பார்ப்ப தூண்டிடிச்சி அதும் ஏமாத்தல…….வெறும் ட்விட்டரா மட்டும் நீங்க அடையாளப்படுத்தக்கூடாதுன்ன்னு எப்பவும் நினைக்கிறேன்…………

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: