பதில் சொல்லுங்கள் ரஜினிகாந்த்!

நம் நாட்டில் மக்களின் வாழ்க்கையோடு கலந்திருக்கிறது சினிமா. பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கு சினிமாவைத் தவிர வேறில்லை.. 1989-ம் ஆண்டில் இந்தியாவில் யார் பிரதமர் யார் என்று கேட்டால் சற்று யோசிப்போம். ஆனால் ’அண்ணாமலை’ எந்த வருடம் ரிலீஸானது என்றால் சட்டென்று சொல்லிவிடுவோம். பார்த்த படங்கள் மட்டுமில்லை, இனி வரப் போகும் படங்கள், யார் நடிகர்கள், யார் டைரக்டர், எவ்வளவு செலவானது என்பது வரை எல்லாமே நமக்கு அத்துப்படி.

அதெல்லாம் இருக்கட்டும், சினிமாவில் பெண்களைப் பற்றி எப்படிச் சித்தரிக்கிறார்கள், நடிகைகளை எவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள் என்பது தனியாகவும் விரிவாகவும் பேசப்பட வேண்டியவை. பொதுவாக சினிமாவில் காட்டப்படும் விஷயங்களைக் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டிருந்தாலும் சில சம்பவங்கள் நின்று யோசிக்க வைத்துவிடுகின்றன.

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், ’எந்திரன்’ படம் மூலம் இன்று இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டாராகிவிட்டார் என்கிறார்கள். அவர் பல் தேய்ப்பதிலிருந்து படுக்கப் போவது வரை இங்கு செய்திகள். குழந்தை முதல் பெரியவர் வரை அவருக்குத் தீவிர ரசிகர்கள். ரஜினிக்கு சினிமாவிலும் வெளியுலகிலும் இருக்கும் செல்வாக்கு எல்லோரும் அறிந்ததே.

ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்குகள் எல்லாம் அந்தந்த காலகட்டங்களில் பரவலாக வரவேற்பு பெற்றிருக்கின்றன. மேனேஜ்மெண்ட்டுக்கு உதவக்கூடிய வகையில் பஞ்ச் டயலாக்குகள் இருக்கின்றன என்று கொண்டாடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில்தான், ‘ரஜினி என்றால் பெண்களை உயர்வாக மதிப்பவர்’ என்ற கருத்து இருக்கிறதே, அவர் பெண்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று ஆராயத் தோன்றியது.

பொம்பள, அரசியல்வாதி ரெண்டு பேரும் நினைக்கறதை அடையறதுக்கு எதுவும் செய்வாங்க. ஆனா என்ன நினைக்கிறாங்கன்னு அவுங்களுக்கே தெரியாது.

இந்த வசனத்தை ஏதோ ஒரு படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்குச் சொல்லியிருக்கிறார் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ‘பொம்பள’ என்று பொதுவாகத்தான் சொல்லியிருக்கிறார். பொம்பளை – அரசியல்வாதி என்ன விதமான ஒப்பீடு என்றே தெரியவில்லை. நினைக்கிறதை அடைவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், ஆனால் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. முதலில் சொன்ன வரியை, அடுத்த வரியிலேயே காலி செய்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று அவருக்கே தெரியாது போலிருக்கிறது!

‘பொம்பளைங்க வீட்டு நிலமையை புருஷன்கிட்ட சொல்றதோட நிறுத்திக்கணும். அத தீர்க்குறது புருஷனோட கடமை.

பெண்கள் என்றால் கணவனுக்கு அடங்கி நடப்பவள். வீட்டைப் பார்த்துக்கொள்பவள். வாரிசைப் பெற்றுத் தருபவள். அவள் எந்த விஷயத்தையும் கணவனிடம் சொல்வதோடு நிறுத்த வேண்டுமே தவிர, அதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கக்கூடாது. ’அடிமையின் பிரச்னையைத் தீர்ப்பது ஆள்பவரின் கடமை’ என்ற மனோபாவத்தில் புருஷனின் கடமை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி அவள் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை, உரிமையும் இல்லை.

‘ஒரு பொண்ணு வீட்டைவிட்டு வெளிய போனா புருஷன் கூட போகணும். இல்லேன்னா நாலுபேரு தூக்கிட்டுப் போகணும்.

ஒரு கணவன் எவ்வளவு கொடுமை செய்தாலும் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லக்கூடாது. கணவனின் கெளரவத்தைக் காப்பாற்ற வேண்டும். முடியாவிட்டால்? செத்துப் போய்விட வேண்டும். அதைத் தாண்டி வெளியே வந்து, தனியாக வாழக்கூடாது.

‘பொம்பளைய அடிக்கறவனுக்கும் ஊனமுற்றவங்களை அடிக்கிறவனுக்கும் என் அகராதியில் பொட்டைன்னு அர்த்தம்.

கோழையாகச் செய்யும் எந்தச் செயலும் இங்கு ‘பொட்டை’ என்ற அடைமொழியில் கேவலப்படுத்தப்படுகிறது. பெண்களை அடிக்கிறவனைக் கண்டிக்கும் தொனியில், பெண்களையே கேவலப்படுத்தி ‘பொட்டை’யாக்கி விடுகிறார்.

‘பொண்டாட்டிய புருஷன் மதிக்கலேன்னா நரகம். புருஷனை பொண்டாட்டி மதிக்கலேன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நரகம்.

புருஷனைப் பொண்டாட்டி மதித்து நடக்க வேண்டும் என்பதை வேறு விதமாக தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் மதிக்காவிட்டால் நரகம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் பொண்டாட்டி மதிக்காவிட்டால் ஏழேழு ஜென்மத்துக்கும் நரகமாம்! என்ன கொடுமை இது!

‘பொம்பள எவ்ளோ படிச்சிருந்தாலும் எவ்ளோ பெரிய வேலையில இருந்தாலும் வீட்டு வேலை செய்யாதவ பொம்பள இல்ல.

ஆமாம், நாட்டுக்கே பிரதமராக இருந்தாலும் எனக்கு நீ அடிமைதான். பெண்களுக்கு என்று இருக்கும் இலக்கணங்களில் முக்கியமாக இருப்பது வீட்டு வேலை செய்வதுதான். எவ்வளவு படித்திருந்தாலும் எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் வீட்டு வேலை செய்யவில்லை என்றால் அவளை எப்படிப் பொம்பளை என்று ஏற்றுக்கொள்வது? அடடா!

ஒரு தப்பை தண்டிச்சு பல கெட்ட காரியங்கள் நடக்க காரணமா இருக்கிறதைவிட, ஒரு தப்பை மன்னிச்சு பல நல்ல காரியங்கள் நடக்க காரணமா இருக்கலாம்.’

மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல பஞ்ச் போலவே தோன்றும். ஆனால் இந்த வசனத்தை, தன் தம்பியால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் பேசுகிறார். சிறையில் இருக்கும் அவர் தம்பியைக் காப்பாற்றும் விதத்தில்…

கெடுத்தவனுக்கே அந்தப் பெண்ணைக் கட்டி வைக்கும் அபூர்வ நீதியை  சினிமா இன்னமும் பாதுகாக்கவே செய்கிறது. தவறு செய்தவன் தண்டனையில் இருந்து தப்ப வேண்டும், அவனுக்கு அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லி, பாதிக்கப்பட்டவளுக்கே போனஸ் தண்டனை அளிக்கிறார்கள்.

‘புருஷன் வீட்டுல நடக்குறதை பிறந்த வீட்ல சொல்றவ பொம்பளை இல்லை.

புருஷன் வீட்டில் பிரச்னை இல்லையென்றால் பிறந்த வீட்டில் சொல்வதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? கஷ்டமோ, நஷ்டமோ கணவன் வீட்டில் என்ன நடந்தாலும் வெளியில் சொல்லக்கூடாது. எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, கணவனின் பெருமையைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் அவள் பொம்பளையே இல்லை.

‘ஒருத்தனை காதலிச்சிட்டு புருஷனாக்குறதை விட, புருஷனாக்கிட்டு காதலிக்கிறது நல்லது.

பெண்கள் காதலிப்பது தவறு.

‘பொம்பளைக்கு பொறுமை வேண்டும், அவசரப்படக்கூடாது. அடக்கம் வேணும், ஆத்திரப்படக்கூடாது. அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது. கட்டுப்பாடு வேணும், கத்தக்கூடாது. பயபக்தி வேணும், பஜாரித்தனம் கூடாது. மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கணும்.

இதில் பொம்பளை என்று வரும் இடங்களில் எல்லாம் ஆம்பிளை என்று போட்டாலும் ஒன்றும் வித்தியாசம் வந்துவிடப் போவதில்லை. ஆனால் பொறுமை, அடக்கம், அமைதி, கட்டுப்பாடு, பயபக்தி எல்லாம் இருந்தால்தான் அவள் பொம்பளை. இதில் எந்த ஓர் இலக்கணத்தை மீறினாலும் அவள் பெண்ணே இல்லை.

‘அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளயும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.

அப்படி என்றால் பொம்பளை அதிகமா ஆசைப்படலாம், ஆண்கள் அதிகமாகக் கோபப்படலாமா? அதிகமா ஆசைப்படுகிற மனிதர்களும் அதிகமா கோபப்படுகிற மனிதர்களும் நல்லா வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று சொன்னால் என்ன?

‘பொம்பள புள்ளைங்க ஊர் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பள புள்ளைங்க வீட்டைச் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க.

அதாவது ஆண்கள் வெளியில் சென்று சம்பாதிக்க வேண்டும். பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு இருக்க வேண்டும். ஆண்கள் வீட்டில் இருந்தாலோ, பெண்கள் வெளியில் சென்றாலோ கெட்டுப் போய்விடுவார்கள். இந்தக் காலத்திலும் எவ்வளவு தைரியமாக இதுபோன்ற வசனங்களை அவரால் பேச முடிகிறது?

**

பெண்மை போற்றும் ரஜினியின் இந்த பஞ்ச் டயலாக்குகள், அவருடைய படங்களின் கால வரிசைப்படிதான் இங்கு அமைந்துள்ளன. ஆரம்ப காலங்களில் ரஜினி நடித்த படங்களில், இதுபோன்ற வசனங்களை அவரால் மறுக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் விரைவிலேயே பெயரும் புகழும் கிடைக்கத் தொடங்கிவிட்டது. சூப்பர் ஸ்டார் அந்தஸ்து வந்துவிட்டது. அவருக்கு எந்த விஷயத்தையும் தீர்மானிக்கக்கூடிய சக்தி கிடைத்துவிட்டது. இதுபோன்ற வசனங்களைப் பேச மாட்டேன் என்று சொல்ல முடியும். கண்ணியமாக வசனங்களை எழுதச் சொல்லிக் கேட்க முடியும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. (வசனம் என்னுடையதல்ல, வசனகர்த்தாவின் பொறுப்பு என்று சொல்லிவிட்டு, இமயமலைக்கு ஓடி விட முடியாது. மற்ற வசனங்களின் புகழ் எல்லாம் எப்படி அவரைச் சேருகிறதோ அதே போலத்தான் இந்த வசனங்களுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும்.)

சாதா ரஜினியாக இருந்து இன்று விஸ்வரூப வெற்றியாளராக வலம் வரும் ரஜினியிடம் தொழில்முறையில் பிரமாதமான பரிணாம வளர்ச்சி தெரிகிறது. அப்படி இருக்கும்போது அவருடைய பாபா, படையப்பா போன்ற சமீபகால படங்களில் கூட பெண்களைப் பற்றி இப்படி வசனம் பேசுவது எந்தவிதத்தில் நியாயம்?

ரஜினியிடம் சில கேள்விகள்…

* உங்கள் வீட்டிலும் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்தக் கொள்கைகளின் படியா வைத்திருக்கிறீர்கள்?
* உங்கள் மனைவியோ, மகள்களோ வீட்டுப் பிரச்னைகளைச் சொல்லிவிட்டு, கணவர்கள்தான் தீர்க்க வேண்டும் என்று காத்திருக்கிறார்களா? எந்த முடிவும் அவர்களாக எடுப்பது இல்லையா?

* பள்ளி, பிஸினஸ் என்று கொடிகட்டி பறப்பவர்கள், வீட்டு வேலைகளையும் செய்கிறார்களா?

* ’காதலிச்சிட்டு புருஷனாக்குறதை விட, புருஷனாக்கிட்டு காதலிக்கிறது நல்லது’ என்று சொன்ன உங்கள் வீட்டில் மனைவி, மகள்கள் அத்தனைபேரும் காதலித்துதானே திருமணம் செய்துகொண்டார்கள். ‘நல்லது’ என்றால் அதை உங்கள் வீட்டிலேயே பின்பற்றலாமே?

* பெண் என்றால் புடைவை கட்டி, கையெடுத்துக் கும்பிடத் தோன்ற வேண்டும் (சாத்வீகம்) என்று சொல்லும் நீங்கள், உங்கள் வீட்டில் அப்படித்தான் இருக்கிறார்களா என்று சொல்ல வேண்டும்.

ரஜினி பேசிய இந்த வசனங்களுக்கு உண்மையில் அவருடைய வீட்டில் இருந்தே எதிர்ப்பு வந்திருக்க வேண்டும்.

**

ரஜினி நிற்பது, பேசுவது, நடப்பது என்று ஒவ்வொரு விஷயத்தையும் ரசிப்பதோடு, கடைபிடிக்கவும் செய்கிறார்கள். டயலாக்குகளை மனப்பாடமாகச் சொல்கிறார்கள். கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். காவடி எடுக்கிறார்கள். கற்பூரம் காண்பிக்கிறார்கள். எதைச் சொன்னாலும் நம்புகிறார்கள். படித்தவர், படிக்காதவர், கிராமம், நகரம் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் பஞ்ச் வசனங்களைக் கொண்டாடுகிறார்கள். அப்படி இருக்கும்போது பெண்களைப் பற்றிய இதுபோன்ற வசனங்கள் அவர்கள் மனத்தில் எவ்வளவு மோசமான பிம்பங்களை ஏற்படுத்தியிருக்கும்!

’ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.’ ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும். பன்னிங்கதான் கூட்டமா வரும்.’ –  இதுபோன்ற பஞ்ச் வசனங்களைப் பேசினால் யாருக்கும் எந்தவித நஷ்டமும் இல்லை. புகழின் உச்சியில் இருந்துகொண்டு நல்ல விஷயங்களைச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, நச்சு விதைக்காமல் இருக்கலாம்.

19 comments so far

 1. haranprasanna
  #1

  ஒரு பெண் கேள்வி கேட்டு சூப்பர் ஸ்டார் பதில் சொல்லவேண்டுமா? இன்னும் ஏன் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது? ஐயோ (ஆண்) கடவுளே!

 2. Raj Chandra
  #2

  நான் ரஜினி ரசிகன் இல்லை…ஆனால் கொஞ்சம் common sense உபயோகித்ததில் எழுந்த கேள்விகள் இவை:

  என்னமோ ரஜினி வந்துதான் பெண்களை மட்டமா ட்ரீட் பண்றா மாதிரியும், அதுக்கு முன்னாலே ‘எல்லோரும் ஒர் நிறை’ மாதிரியும் இந்த கட்டுரை இருக்கிறது என் பிரமையா?

  லஷ்மி, அனுராதா ரமணன் இவங்க் எல்லாம் பெண்கள் அடக்க ஒடுக்கமா இருக்கிற மாதிரி சரடு (கதை) விட்டப்போ அந்த புத்தகங்களையெல்லாம் வாங்கி அமோக ஆதரவு கொடுத்தது எனக்குத் தெரிஞ்சு அபலை ஆண்கள் மட்டும் அல்ல?

  இந்த மாதிரி மூணாம் தர சினிமாவையெல்லாம் சீரியஸா எடுத்துக்கப் போறதை எப்ப நிறுத்தப் போறீங்க? மக்கள் தெளிவாத்தான் இருக்காங்க, சினிமா எண்டர்டெய்ண்மெண்ட்-க்கு மட்டும் என்று. இந்த மாதிரி பக்கத்தை நிரப்ப ஆசைப்படறவங்க மட்டும்தான் கூப்பாடு போடுறது?

  Last but not the least, டீவி-யிலே வர சீரியல்கள் மட்டும் என்ன பெண்களை கோபுரத்திலயா வெச்சுக் கொண்டாடுது? In fact, டீவி-யில் தான் சைக்கோத்தனமாகப் பெண்களைக் கேவலப்படுத்துகிறார்கள். அதெல்லாம் தெரியலையா?

  >>ரஜினி பேசிய இந்த வசனங்களுக்கு உண்மையில் அவருடைய வீட்டில் இருந்தே எதிர்ப்பு வந்திருக்க வேண்டும்.

  – வ்ராது. அவர்கள் புத்திசாலிகள். சினிமாவையெல்லாம் (அதுவும் ரஜினி படங்களை) சீரியஸாக எடுத்துக் கொண்டால் அவர்கள் புத்தி பேதலித்துவிடும்.

 3. மோகனா
  #3

  அன்புள்ள சுஜாதா அவர்களுக்கு வணக்கம். பதில் சொல்லுங்கள் ரஜனிகாந்த படித்தேன். அதற்கு வந்த பின்னூட்டங்களும் படித்தேன். யார் என்ன சொன்னாலும், சினிமாவைப் பார்த்துவிட்டு அதனை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. தற்கால கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றில், சினிமா
  எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். அது மட்டுமல்ல, சினிமா அந்தந்த காலத்தின் பதிவு. சிவாஜி படத்தை இன்று பார்த்து ரசிப்பவர்கள் அவ்வளவாக இல்லை. அது இன்றைய கால கட்டத்தில், ஓவர் ஆக்‌ஷன் என்றும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல, சுதந்திரத்திற்கு முன் வந்த படங்கள், சுதந்திர தாகம், வேட்கையை உண்டுபண்ண உதவின என்பது 100% உண்மை. சினிமா தாக்கத்தை ஏற்படுத்துவதை,முக்கியமாக இளைஞர்களின் மனத்தை மிகவும் பாதித்துள்ளாது என்பதை மறுக்க முடிதாது. இது தவிர்க்க முடியாததும் கூட. ரஜினி நினைத்திருந்தால், பெண்களைப் பற்றி மதிப்பு குறைவாக பேசுவதை, மறுத்திருக்க முடியும். சூப்பர் ஸ்டாரானதிற்கும் பிறகும், வசனம் எழுதுபவரின் மேல் மட்டுமே, பழி போடுவதை, ஒத்துக்கொள்ள முடியாது. அவர் பேசுவது, அவர் கருத்தாகவும்தான்,இருக்க முடியும்.

 4. subbu
  #4

  அவரு தான் ஏற்கனவே குசேலன்-ல சொல்லிட்டாரே … டைரக்டர் எழுதி தர்றத பேசுறேன் , ரசிகர்கள் நான் பேசுறதா நெனச்சா அது அவங்க தப்பு-ன்னு . வேத வாக்காக நினைக்கும் அவருடைய ரசிகர்கள் தன் இதை யோசிக்க வேணும்

 5. Anand
  #5

  நான் பதில் சொல்கிறேன்…

  (சினிமா என்பது பொழுதுபோக்கே தவிர, குடும்பத்தில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறி அல்ல. ஆண்-பெண் இருவருக்குமே 6-அறிவு இருக்கிறதல்லவா? பகுத்தறிந்து நல்லதை எடுத்துக் கொண்டு தீயதை விட்டுவிடுங்கள். சாலையில் விபத்து நடக்கிறதென்று – தினம் வேலைக்கு போகாமல், காய்கறி வாங்க கடைத்தெருவுக்கு போகமல் இருக்கிறீர்களா என்ன? அதுபோலத்தான்…)

  கேள்வி 1: ’பொம்பள, அரசியல்வாதி ரெண்டு பேரும் நினைக்கறதை அடையறதுக்கு எதுவும் செய்வாங்க. ஆனா என்ன நினைக்கிறாங்கன்னு அவுங்களுக்கே தெரியாது.’

  பதில்: இங்கு சொல்லப்பட்ட விதம் பார்த்தீர்களானால், பெண் என்பவள் ஒரு குடும்பம் நல்லபடியாக வாழ்வதற்கு காரணமாகவும், அதே குடும்பம் சீரழிந்து போவதற்கும் காரணமாக அமைகிறாள் என்றுதானே இருக்கிறது.

  எத்தனையோ குடும்பங்களில் பார்த்தீர்கள் என்றால் குழந்தை பெற்றொடுக்கத் தானும் ஒரு காரணம் என்பதோடு குடும்பத்தை மறந்து குடித்து, போதைப் பழக்கம், தீய நண்பர்களிடம் ஊர் சுற்றுதல் என்று கணவன்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட கணவன்மார்களுக்கு மனைவியானவள், தன் குடும்பமும், தன் பி்ள்ளைகளும் உயர்ந்த நிலைமைக்கு வரவேண்டுமே என்று நினைத்ததை அடைய எதையும் செய்ய தயாராகத்தான் இருக்கிறார்கள். என்றும் இருப்பார்கள்.

  அரசியல்வாதியைப் பற்றித்தான் அனைவருக்கும் தெரியுமோ?

  கேள்வி 2: ‘பொம்பளைங்க வீட்டு நிலமையை புருஷன்கிட்ட சொல்றதோட நிறுத்திக்கணும். அத தீர்க்குறது புருஷனோட கடமை.’

  பதில்: உண்மைதானே. பிரச்னைகள் இல்லாத வீடுகள்தான் எத்தனை? பிரச்னைகளை தீர்க்க இருவரும் வழிப் பார்க்க வேண்டுமே தவிர, வேண்டாவாதம் கூடாது. ஆண்களாலும் இயற்கையிலே குழந்தை பிறக்க சாத்தியம் இருந்தால் நாங்கள் என்ன மாட்டோமா என்கிறோம்… இப்போது பெண்ணியம் பேசும் பெண்கள் எல்லாம் குழந்தை பெற்றெடுத்தால் தன் அழகு போய்விடுமே என்று அதை ஒரு பாரமாகத்தானே நினைக்கிறீர்கள்…

  கேள்வி: ‘ஒரு பொண்ணு வீட்டைவிட்டு வெளிய போனா புருஷன் கூட போகணும். இல்லேன்னா நாலுபேரு தூக்கிட்டுப் போகணும்.’

  பதில்: அமெரிக்க கலாச்சாரத்தை பின்பற்றி சென்று கொண்டிருக்கும் இந்தியாவில் குறிப்பாக சென்னையில், ஓசோன் படலத்தில் ஓட்டை போட்டதுபோல, ஒவ்வொரு குடும்பத்தி்லும் ஓட்டை போட்டுக் கொண்டிருப்பது ஃபேஷன் என்ற ஒன்று டேட்டடிங். இப்போது நடுத்தர வர்க்கத்தினரையும் விட்டு வைக்கவில்லை.

  எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள் குடும்பத்தை விட்டு வெளியேறி, ஒரே ஆணுடன் ஒரே பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார்கள் என்று சொல்ல முடியுமா? சினிமாவிலும் சரி, பொது வாழ்விலும் சரி…

  கேள்வி: ‘பொம்பளைய அடிக்கறவனுக்கும் ஊனமுற்றவங்களை அடிக்கிறவனுக்கும் என் அகராதியில் பொட்டைன்னு அர்த்தம்.’

  பதில்: முதலில் யாரையும் அடிக்கக் கூடாது. பொம்பளையாக இருந்தாலும், ஊனமுற்றவர்களாக இருந்தாலும். பிறகு ஏன் விவாதம்.

  கேள்வி: ‘பொண்டாட்டிய புருஷன் மதிக்கலேன்னா நரகம். புருஷனை பொண்டாட்டி மதிக்கலேன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நரகம்.’

  பதில்: இருவரும் மதித்து நடக்காவிட்டால் பிறக்கப்போகும் குழந்தை உங்கள் இருவரையும் மிதித்து நடக்கும்.

  கேள்வி: ‘பொம்பள எவ்ளோ படிச்சிருந்தாலும் எவ்ளோ பெரிய வேலையில இருந்தாலும் வீட்டு வேலை செய்யாதவ பொம்பள இல்ல.’

  பதில்: வீட்டு வேலை என்றால் நீங்கள் சமையல் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். பெண்களின் மனோபாவம் எப்படி இருக்கிறது என்பது உங்களின் கருத்தில் நன்றாகத் தெரிகிறது.

  கேள்வி: ‘ஒரு தப்பை தண்டிச்சு பல கெட்ட காரியங்கள் நடக்க காரணமா இருக்கிறதைவிட, ஒரு தப்பை மன்னிச்சு பல நல்ல காரியங்கள் நடக்க காரணமா இருக்கலாம்.’

  பதில்: கெடுத்தவனுக்கே அந்தப் பெண்ணைக் கட்டி வைக்கும் அபூர்வ நீதியை சினிமா இன்னமும் பாதுகாக்கவே செய்கிறது. தவறு செய்தவன் தண்டனையில் இருந்து தப்ப வேண்டும், அவனுக்கு அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லி, பாதிக்கப்பட்டவளுக்கே (மனத்தை நல்வழிபடுத்தி வாழ்க்கை நடத்த காரணமாக அமைய) அவளை திருமணம் செய்து வைப்பதற்கு உங்களின் புரிந்துகொள்ளுதல் போனஸ் என்றால், திருமணமான இன்னொருத்தனுக்கு இரண்டாவது, மூன்றாவது என்று வாழ்க்கை நடத்துவதற்கு என்ன பெயர் இன்ங்ரிமென்டா………..? இல்லை செட்டில்மெண்ட்டா?…

  கேள்வி: ‘புருஷன் வீட்டுல நடக்குறதை பிறந்த வீட்ல சொல்றவ பொம்பளை இல்லை.’

  பதில்: மனைவியுடன் பிரச்னை என்றால் கணவன்மார்கள் யாரும் பிறந்த வீட்ல சொல்வதில்லையே…!

  கேள்வி: ‘ஒருத்தனை காதலிச்சிட்டு புருஷனாக்குறதை விட, புருஷனாக்கிட்டு காதலிக்கிறது நல்லது.’

  பதில்: காதலிப்பது தவறில்லை. காதல் செய்தவனை கல்யாணம் பண்ணாமல் வேறொருத்தனை கல்யாணம் பண்ணிக் கொள்வதுதான் தவறு. காதல் என்ற கடலில் நீ்ந்துவதற்கு காரணமானவர்களே பெண்கள்தானே. அப்படியிருக்கும்போது, பெண்கள் காதலிப்பது தவறா? எத்தனை பெண்கள் காதலிக்காமல் இருக்கிறார்கள். இருப்பார்கள். எழுதுகிற உங்களுக்கே இது ஓவராக இல்லையா?

  கேள்வி: ‘பொம்பளைக்கு பொறுமை வேண்டும், அவசரப்படக்கூடாது. அடக்கம் வேணும், ஆத்திரப்படக்கூடாது. அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது. கட்டுப்பாடு வேணும், கத்தக்கூடாது. பயபக்தி வேணும், பஜாரித்தனம் கூடாது. மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கணும்.’

  பதில்: ஆண் என்றால் எப்படியிருக்க வேண்டும், பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் இலக்கு வகுத்து நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்.

  கேள்வி: ‘அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளயும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.’

  பதில்: கோபப்பட்டாலும் சரி, அதிகமாக ஆசைப்பட்டாலும் சரி, நீடூழி வாழ முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? எனக்கு இதுவரை தெரியாது. உண்மையா?

  கேள்வி: ‘பொம்பள புள்ளைங்க ஊர் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பள புள்ளைங்க வீட்டைச் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க.’

  பதில்: அப்படி இல்லையென்றால் ஒன்று செய்வோமா….? பெண்கள் எல்லாம் வேலைக்கு சென்று வாருங்கள்… ஆண்கள் உங்களுக்கு தேவையான துணிகளைத் துவைத்து, சமையல் செய்து நீங்கள் விரும்புகிற மாதிரி நடக்கிறேம். எப்படி இருந்தால் என்ன? இருவரும் தன்னுடைய சொந்தக் குடும்பத்துக்காக தானே கஷ்டப்பட வேண்டும்…

  அப்படி செய்தாலும், பெண்ணியம் பேசும் பெண்கள் வேறொரு கருத்தை முன்வைப்பார்கள்.

  கணவனைப் பிடிக்காத மனைவிமார்களுக்கு கை பட்டாலும் குற்றமாகத்தான் தெரியும், கால்பட்டாலும் குற்றமாகத்தானே தெரியும்…

 6. MSK
  #6

  இந்த டயலாக் எல்லாம் ரஜினி எதாவது மேடையிலோ அல்லது பொது இடத்திலோ கூறினாரா?? இதெல்லாம் அந்த அந்த படங்களில் அந்த பாத்திரத்திற்கு ஏற்ப அவர் பேசியவை. இதெல்லாம் அவர் மக்களுக்கு சொன்னதா புத்தி உள்ள எவனும் சொல்ல மாட்டான்.

 7. அ.தமிழ்ச்செல்வன்
  #7

  ரஜினி ஒரு காரியக்காரர், தன் சுயநலத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். எந்திரன் இந்தி பதிப்பு மும்பையில் ஒடவேண்டும் என்பதற்காக தமிழர்களை ஓடஓட விரட்டிய பால்தாக்ரேயை ”என் கடவுள்” போன்றவர் என்பார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பார். அதே ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தைரியலட்சுமி என்பார்.ரஜினி போன்ற சினிமா வியாபாரிகளிடம் இருந்து நியாயமான பதில்களை எதிர்பார்க்க முடியாது.

 8. maha
  #8

  அண்ணாமலை படத்தில் ஒரு காட்சி:
  பால்காரராக வாழ்க்கையை ஆரம்பித்து பணக்காரராக ஆன ரஜினிகாந்த், ஆயிரங்களை லட்சமாக்கி, லட்சத்தைக் கோடியாக்கி, கோடியை அதற்கு மேலும் பெருக்குவதற்காக படம் பூராவும் இடமும் வலமுமாக ஓடிக் கொண்டேயிருப்பார். அப்போது அவருடைய மனைவி பாத்திரத்தில் நடித்த குஷ்புவாகப்பட்டவர், ‘வாங்க கோயிலுக்குப் போகலாம்…’ என்று ரஜினி பின்னால் ஓடியபடியே வந்து கேட்பார். ரஜினி ஒரு நொடி நிற்பார். தூரத்தில் அம்மா வேடமேற்ற மனோரமா ஆச்சி கையைப் பிசைந்தபடி நின்றுகொண்டிருப்பார். உடனே ரஜினி அவரைப் பக்கத்தில் வரச் சொல்லுவார். காலில் விழுந்து கும்பிடுவார். விட்ட இடத்தில் இருந்து தன் ஓட்டத்தைத் தொடருவார். இந்தக் காட்சியைப் பார்த்தபோது என் உடல் அப்படியே ஃபுல்லாக புல்லரித்தது (இப்போது இதை எழுதும் போது கூட ஃபுல்லும் அரிக்கிறது). தாயிற் சிறந்த தெய்வமும் இல்லை என்ற நம் முன்னோர்கள் சொன்ன வேத வாக்கை, பெண்ணின் பெருமையை, மாதர் குலத்தின் மகிமையை, அவர்தம் மீதான மரியாதையை இதைவிட அழகாக, அழுத்தமாக யாரால் காட்ட முடியும். அப்பேர்ப்பட்ட ரஜினியைப் போய் இப்படிச் சொல்கிறீர்களே. உலகம் முழுவதும் பரந்து விரிந்து பறக்கும் ஒரு கொடியில் உங்கள் கண்ணில் படும் பகுதியை மட்டும் பார்த்து அதன் நிறத்தைச் சொல்கிறீர்கள். மஞ்சக் கண்ணாடி போட்டுப் பார்த்தா உலகம் மஞ்சளாத் தெரியும். கறுப்புக் கண்ணாடி போட்டுப் பார்த்தா உலகம் கறுப்பாத் தெரியும். உலகம் கறுப்பும் இல்லை… மஞ்சளும் இல்லை. கறுப்பும் மஞ்சளும் இல்லாமலும் இல்லை… அய்யோ அய்யோ!

 9. anvarsha
  #9

  இது போன்ற பத்தாம் பசலித்தனமான வசனங்களை எந்த படத்திலுமே வைக்க கூடாது!

 10. haranprasanna
  #10

  யார் இந்த மஹா? பெண்ணிய அரிச்சுவடி தெரியாமல் பிதற்றிச்சென்ற அவரது கமெண்ட்டை என்னவென்று சொல்வது? பெண்ணியம் என்பது மனைவி, காதலி, மருமகள்களுக்கானதே ஒழிய அம்மா, மாமியார், அக்காக்களுக்கானதல்ல என்பதுகூடத் தெரியாமல் என்ன கமெண்ட் வேண்டி கிடக்கிறது?

 11. கோதண்டராமன் பாலாஜி
  #11

  ரஜினியின் பஞ்ச்களை பார்த்து சீரியஸாக எடுத்துக்கொள்ளாதவர்களைப் பற்றி இங்கு பேச வேண்டியதில்லை. ஆனால், ஆனந்த் என்ற ரசிகரின் பதில்களைப் பார்த்தாலே அவர் எவ்வளவு அறியாமையில் இருக்கிறார் என்பது தெரிகிறது. இதுபோன்ற ரசிகர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் தேசத்தில் எதைச் செய்தாலும் கவனமாகச் செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அம்மா மீது வைக்கும் பாசத்தைக் கூட ரஜினி சொன்ன பிறகுதான் தெரியும் என்கிறார் மஹா. இது போன்றவர்களுக்குத்தான் இந்தக் கட்டுரை.

  ரஜினியின் பஞ்ச் டயாலாக்குகள் புத்தகமாக வந்துள்ளது, அவர் பேசிய வசனங்கள் முழுவதும் வேறு மாதிரி விளக்கம் கொடுத்து இன்னொரு பதிப்பகத்தில் வந்திருக்கிறது… இப்படி எல்லாம் நடக்கும்போது இந்தக் கட்டுரைக்கான தேவையும் இருக்கத்தான் செய்கிறது.

 12. மாயவரத்தான்....
  #12

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….யப்பா… நாராயணா….

 13. Kreshna
  #13

  This blogger is an anti Rajini. So what if he says that, not happy with his dialogues, don’t watch his movies…Its simple as that…. Get it!!

 14. கிரி
  #14

  @தமிழ் சுஜாதா ரொம்ப நல்லா இருக்கு கேள்விகள். நான் ரஜினி ரசிகன் என்றாலும் ரஜினி இப்படி கூறுவதில் வருத்தமுண்டு. ரஜினி இதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

  //அப்படி இல்லையென்றால் ஒன்று செய்வோமா….? பெண்கள் எல்லாம் வேலைக்கு சென்று வாருங்கள்… ஆண்கள் உங்களுக்கு தேவையான துணிகளைத் துவைத்து, சமையல் செய்து நீங்கள் விரும்புகிற மாதிரி நடக்கிறேம்.//

  ஹலோ ஆனந்த்! இப்பவே பலர் இப்படித்தான் இருக்கிறதா சொல்றாங்க ஹா ஹா ஹா 🙂

 15. Anand
  #15

  நீங்களுமா?

 16. Rekha
  #16

  Mr.Giri,

  After reading your first para, I respected you.

  After reading your 2nd para, I regret for respecting you.

  You may very well think what matter if some unknown person respects you or not.

  But request you to think before you key-in your words.

 17. சீனு
  #17

  கேனத்தனமான பதிவு.

  //‘ஒரு பொண்ணு வீட்டைவிட்டு வெளிய போனா புருஷன் கூட போகணும். இல்லேன்னா நாலுபேரு தூக்கிட்டுப் போகணும்.’
  ஒரு கணவன் எவ்வளவு கொடுமை செய்தாலும் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லக்கூடாது. கணவனின் கெளரவத்தைக் காப்பாற்ற வேண்டும். முடியாவிட்டால்? செத்துப் போய்விட வேண்டும். அதைத் தாண்டி வெளியே வந்து, தனியாக வாழக்கூடாது.//

  இதுக்கு இப்படியா அர்த்தம்?

 18. virutcham
  #18

  கிட்டத்தட்ட இதே கருத்தைக் கொண்ட பதிவுகள் இங்கே

  http://www.virutcham.com/2010/08/ஆண்மையை-அடையாளப்படுத்து/
  http://www.virutcham.com/2010/04/காலத்தில்-மடிந்த-ரஜினி-ப/

 19. sivabalan
  #19

  சிங்கம் single-லா வரது! புலிதான் single-லா வரும். அதனால தான் சிங்கம் ராஜா. கூட்டம் இருந்ததானே ராஜா…

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: