காதல் புராணம் 10

10. குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

அரிவை [வயது : 20-25]

91

கடிதமெழுதுகையில்

வேண்டுமென்றே

பிழைகள் விடுகிறேன் –

இர‌ண்டாம் முறை

நீ படிப்பதற்காக.

92

உனக்காக எழுத உட்கார்ந்தால்

மசிதீர்ந்த பேனாவும் சுரக்கிறது

தாய்மையுணர்ந்திராதயென்‌

முலைச்சோடிகளைப் போல்.

93

காதலித்த பிறகு தான் புரிகிறது –

கன்னம் வழியே கண்ணீர் வழிய‌

அழுவது எத்தனை சுகமென்று.

94

யாரை வேண்டுமானாலும்

ஓரப்பார்வை பார்த்துக்கொள்ள

உனை அனுமதித்திருப்பது

உன் மீதான நம்பிக்கையன்று –

என் மீதான நம்பிக்கையது.

95

ந‌ம் காதலொரு மகாவிபத்து

என்பதற்காகவே இன்னமும்

நம்புகிறேனந்தக் கடவுளை.

96

அம்மா அப்பா தம்பி நான் என‌

நால்வர் வாழும் சிறுவீட்டின்

மழைக்கால மாலைப்பொழுதில்

ஐவருக்குத் தயாரித்த தேநீரில்

ஒளிந்திருப்பது நீயுமுன் மீதான‌

என் புனிதம் கெடாத பிரியமும்.

97

பேசிப்பிரிகையில் நிகழுமொரு

வல்லிய இறுதிக்கண மௌனம்

பேசி விடுகிறது – பேச நினைத்துப்

பேசாது விடுத்த அனைத்தையும்.

98

உந்தன் கடிநினைவுகளின்

ஏதோவொரு சூட்சமத்தில்

தெறித்ததென் ஆதிகவிதை.

99

உன் மென்பார்வைகளற்ற

இந்நாட்களின் வறட்சியை

நிரப்பிக்கொண்டிருக்கிறது

நீய‌ழுந்தத்தந்த முத்தத்தின்

கடைசித்துளி எச்சிலினீரம்.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: