எந்திரன்

டெல்லி எருமை என்று திட்டினால் கோபம் வரும், அதையே கொஞ்சம் மாற்றி பசு போல என்று சொன்னால் பெருமையாக நினைத்துக்கொள்வார்கள் என்பார்கள். அதேபோல, காதில் பூ சுற்றிப் படம் பார்க்கச் சொன்னால் கோபப்படுவார்கள். அதையே அறிவியல் புனைகதை என்று சொல்லிப் பார்க்கச் சொன்னால், அந்தப் படம் நன்றாகவும்  இருந்துவிட்டால், பெருமையாகப் பார்த்துவிட்டுப் போவார்கள். எந்திரன் – அறிவியல் புனைகதையின் வழியே நம் காதில் பூ சுற்றுகிறது. இதுவரை ஆங்கிலப் படங்கள் சுற்றி வந்த அதே பூவை ஒரு தமிழ்ப்படம் சுற்றுகிறது. அது நமக்குத் தெந்திருந்தும், வியப்பு ஏற்படாமலில்லை. ஏனென்றால் 150 கோடி பெறுமானமுள்ள பூ இது.

பொதுவாகவே ரஜினியின் திரைப்படங்களில் அவர் தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்டாகவும் சூப்பர்மேனாகவும்தான் வலம் வருவார். ஒரு அடி அடித்தால் பத்து பேர் எப்படி எகிறி விழுவார்கள் என்று சீரிய திரை விமர்சகர்களும் ஆய்வாளர்களும் ரஜினியை மட்டும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அறிவியல் புனைகதை என்று சொல்லி அதற்கு சாமர்த்தியமான ஓர் அடித்தளத்தைக் கொடுத்து அவர்கள் வாயையும் அடைத்துவிட்டார் ஷங்கர். ஆனாலும் அவர்கள் சும்மா இருக்கப்போவதில்லை. இப்படத்தில் இருக்கும் அறிவியல் ஓட்டைகளையும், கலாசாரப் பழமைவாதத்தையும், சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் காட்சிகளையும் எப்படியாவது கண்டுபிடித்து எழுதுவார்கள். நாம் ரோஜாவை ரோஜாவாக அணுகுவோம்.

அறிவியல் புனைகதை என்னும் அடித்தளத்தை அமைத்துக்கொண்டு, தனது ஆதர்ச சூப்பர் ஹீரோவான ரஜினியை என்னவெல்லாம் செய்ய வைக்க முடியுமோ அதையெல்லாம் செய்து பார்க்க ஆசை கொண்ட ஷங்கர், அதில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். ஒன்றிரண்டு காட்சிகளில் அந்த ஆசை கொஞ்சம் மீறிப்போய், விட்டலாச்சாரியா படங்களுக்கு அருகில் சென்றாலும்கூட, தொழில்நுட்ப வல்லமையைக் கொண்டு அதனைச் சமன் செய்கிறார். பொதுவாக இதைப் போன்ற படங்களையெல்லாம் கமலை வைத்து மட்டுமே பார்த்துப் பழகிப் போன ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவர் இப்படி வருவதைப் பார்த்து எந்தக் காட்சியில் கை தட்டவேண்டும் என்பதைக் கூட அறியாமல் மெய்ம்மறந்து பார்க்கிறார்கள்.

படப்பிடிப்பில்...

ஏற்கெனவே பல நேர்காணல்களில் ரஜினி சொன்னது போல எதிர்பாத்திரம் அவரை அதிகம் ஈர்க்கிறது என்பதை இப்படத்திலும் காணமுடிகிறது. கடைசி 45 நிமிடங்கள் ரஜினி எடுக்கும் விஸ்வரூபம் அசரச் செய்கிறது. ரஜினிக்கு இணையாக அக்காட்சிகளில் தொழில்நுட்பமும் இசையும் கொள்ளும் எழுச்சி, நாம் ஓர் இந்தியப் படத்தை, அதுவும் தமிழ்ப்படத்தைப் பார்க்கிறோமா அல்லது அமெரிக்கத் தரத்திலான ஹாலிவுட் படத்தைப் பார்க்கிறோமா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறது.

தங்களது படங்களில் வரும் பாடல் காட்சிகளில் கிராபிக்ஸை ஊறுகாய் போல மட்டுமே தமிழ் இயக்குநர்களுக்குப் பயன்படுத்தத் தெரியும் என்ற வசைச்சொல் பல காலமாக இருந்தது வந்தது. அதனை ஓரளவு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் போக்கியது. இத்திரைப்படம், தமிழ்த் திரைப்படங்களில், கிராபிக்ஸில் பெரிய சாதனையையே நிகழ்த்தியிருக்கிறது.

பெரிதினும் பெரிது கேள் என்பதை ஷங்கர் தன் வழியில் புரிந்துகொண்டிருக்கிறார். இரண்டு ரஜினி போதாது என்று நினைத்தாரோ என்னவோ, கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்குத் திரையெங்கும் ரஜினியின் உருவங்கள். ஒரு ரஜினி ரசிகனுக்கு இது வாழ்நாள் ட்ரீட்டாக இருக்கும். அத்தனை ரஜினியைப் பார்த்து ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் மூழ்கிப் போன நான் இன்னும் அதே நினைப்பிலேயே இருக்கிறேன்.

திரைக்கதையின் வேகத்தில் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஷங்கர் இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. அடுத்தடுத்து வரும் காட்சிகளின் வேகம் பிரமிப்பைத் தருகிறது. நிர்வாணமான பெண்ணை ரோபோ தூக்கி வரும் காட்சி ஒரு எடுத்துக்காட்டு. ரோபோவின் நம்பகத்தன்மை நிமிடத்துக்கு நிமிடம் மாறும் காட்சி அது. அதேபோல் இன்னொரு கவிதையான காட்சி என்றால், ரோபோ கவிதை சொல்லும் காட்சி.

படத்தில் சில காட்சிகள் தேவையில்லாமல் நுழைந்து எரிச்சலை ஏற்படுத்துகின்றன. கொசு வரும் காட்சி, ஐஸ்வர்யா ராயை ரோபோ கடத்தும்போது வரும் கார் சேஸிங் காட்சி, கிளிமாஞ்சாரோ பாடலுக்கு முன்னால் கலாபவன் மணி வரும் காட்சி போன்றவை. அதேபோல் நம்மை அசர வைக்கும் காட்சிகளும் உண்டு. திரையெங்கும் ரஜினி உருவங்கள் ஆக்கிரமிக்கும் காட்சி, நல்ல ரோபோவாக ரஜினி விகல்பமில்லாமல் நடிக்கும் காட்சிகள் போன்றவை. அதிலும் மறக்கமுடியாத ஓரிடம், ரஜினியின் உடலைச் சுற்றி அம்மன் போல வேல் கத்தி சூலம் போன்றவை நிற்கும் காட்சி. ஷங்கரின் கற்பனை உச்சத்தைத் தொட்ட இடம் இது.

பெரிய மாஸ் ஓப்பனிங் இல்லாமல், ஓப்பனிங் பாடல் இல்லாமல், பஞ்ச் டயலாகுகள் இல்லாமல் இந்நாட்களில் ஒரு ரஜினி படம் வரமுடியும் என நிரூபித்திருக்கிறது இப்படம். வில்லனை எதிர்த்து சண்டை போடாமல் ரஜினி ஓடும் காட்சியும் கூட இதே ரகம்தான். எல்லாவற்றையும் ரஜினி ரசிகர்களுக்காக வட்டியும் முதலுமாகச் செய்து தீர்க்கிறார் ரோபோ ரஜினி.

ரோபோ கெட்டவனாக மாறும்போது, மாறும் ரஜினியின் நிறமும் அவரது உடல்மொழியும் மிரட்டுகின்றன. ரஜினியை சூப்பர் மேனாகப் பார்க்கும் சிறுவர்கள் இந்தப் படத்தை தங்கள் வாழ்நாள் முழுக்க மறக்காமல் வைத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

அங்கங்கே தனித்துத் தெரியும் பளிச் வசனங்கள் சுஜாதாவை நினைவூட்டுகின்றன. ரோபோஸெப்பியன்ஸ், நக்கல்-நிக்கல் போன்றவை சில உதாரணங்கள். ரோபோவை அறிமுகப்படுத்தும் காட்சியில் சட்டென ஒரு ராகத்தைப் பாடும் ஒரு முதியவரும், கடவுள் இருக்காரா இல்லையா என ஒலிக்கும் குரலும் சந்தேகமேயின்றி சுஜாதாவேதான்.  ஏ.ஆர். ரகுமானின் இசையும், ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், ஓர் உலகத்தரமுள்ள திரைப்படத்துக்கு எப்படி ஒத்துழைக்கவேண்டுமோ அப்படி அமைந்திருக்கின்றன.

இதே படத்தில் கமல் நடித்திருந்தால் அது வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கும். கூடவே கமலின் சில தன்முனைப்பு எரிச்சல்களும் சேர்ந்திருக்கும். இயக்குநரின் நடிகரான ரஜினி நடித்ததில், இப்படம் வேறொரு பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. கூடவே ரஜினியின் மாஸும் சேர்ந்துகொண்டதில், இப்படம் மிகப் பெரிய பிரம்மாண்டத்தைக் கண்முன் நிறுத்திவிட்டது.

மொத்தத்தில் எந்திரன் – தி மாஸ்.

37 comments so far

 1. பிச்சைக்காரன்
  #1

  அருமை. அட்டகாசம்…
  நல்ல விமர்சனம்… தமிழை உலக அரங்கிற்கு எடுத்து செல்ல்ல உதவுவது தமிழ் பண்பாடு தெரிந்த ரஜினி போன்றோர் தான்.. பண்பாடுடன் நடந்து கொள்வதை அசிங்கம் என நினைக்கும் சில இலக்கியவாதிகள் அல்ல என்பதை விமர்சனம் சுட்டிக் காட்டுகிறது

 2. ஆனந்தம்
  #2

  ஒரு முழுமையான விமர்சனம். எல்லா அம்சங்களையும் அலசி உள்ளது. நன்றி.

  ~ஆனந்தம்

 3. லாவண்யா
  #3

  எந்திரன் .. கடந்த இரண்டு வருடங்களாக ஒட்டு மொத்த திரையுலகையும் எதிர்பார்க்க வைத்த படம் .. ரஜினி அவர்கள் ஒருமுறை சொன்னார் இது ஒரு அனுபவம் என்று .. ஆமாம் இது ஒரு அனுபவம்தான் அவருக்கு மட்டும் அல்ல டைரக்டர் ஷங்கருக்கும் இது ஒரு அனுபவமே .. அனால் ரசிகர்களுக்கோ இது மிகப்பெரிய ஏமாற்றம் .. பத்து இருபது வருடங்களுக்கு முன்பே பார்த்து விட்ட ஹாலிவுட் படங்களின் காட்சிகளை இப்போது பற்பதினால் மட்டும் அல்ல இதைப்போய் ஹாலிவுட் படங்களை மிஞ்சி விட்ட காட்சிகள் என்று வாய் கூசாமல் திரும்பத்திரும்ப அலறிக்கொண்டிருப்பதைத்தான் தாங்கவே முடியவில்லை.

  எல்லோரும் உயிரைக்கொடுத்து உழைத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை .. என்னுடைய கோபமெல்லாம் இவ்வளவு உழைப்பையும் பணத்தையும் செலவு செய்ய ஒரு சொந்த கதையை உருவாக்க முடியவில்லையா ஷங்கரால் ?
  Bicentennial Man (1999) ,
  Terminator 2: Judgment Day (1991) ,
  I, Robot (2004)
  Endhiran Movie [2010] Torrent Free Download_Robo_Hindi_Telugu_Tamil.rar

  போன்ற படங்களிலிருந்து கதையை மட்டும் அல்ல காட்சிகளையும் சுட்டிருப்பது தமிழனுக்கு அழகு சேர்க்கவில்லை மாறாக மேலை நாட்டவர் நகைக்கவே வழி வகுத்திருகிறது ..
  மேலே குறிப்பிடப்பட்ட படங்கள் எல்லாம் ரோபோவை மையப்படுத்திய படங்கலேன்றலும் ஒன்றுகொன்று மாறுபட்டவை .. ஒன்றின் நகல் மற்றொன்று என்று எவராலும் நினைக்க முடியாது.
  அனால் எந்திரன் ?

  கதையை விட்டுவிட்டு பார்த்தால் அனைவரின் உழைப்பு தெரிகிறது .. விசுவல் எபக்ட்ஸ் மட்டும் சில இடங்களில் பல்லை இளிப்பது, கடைசி நேரத்தில் வந்தது வரை போதும் என்று அவசரப்பட்டது தெரிகிறது.

  சுஜாதா அவர்களின் இழப்பு ஷங்கரை ஒரு கை இழந்தவராக பாதித்திருப்பது கண்கூடு.

  எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படம் பார்க்க போகும் மிகச்சாதாரண மனிதர்கள் காட்சிக்கு காட்சி ரசித்து பரவசமடைவார்கள்.. அனால், தொலைக்காட்சி வழியாக மேலைநாட்டு படங்களை தமிழிலேய பார்த்து ரசித்து பழகிவிட்டவர்கள் காட்சிக்கு காட்சி எள்ளி நகைப்பார்கள் .. அதையும் காட்சிக்கு காட்சி மக்கள் ஆரவாரம் என்று தொலைகாட்சியில் வெட்கமே இல்லாமல் விளம்பரப்படுத்துவர்கள் ..

  இத்தனைப்பெரிய மனிதர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் நகைப்பிற்க்குரியதாகி விட்டதுதான் மிகப்பெரிய சோகம்.

  ஆம் ரஜினி சொன்னது போல் இது ஒரு அனுபவம்தான்.. இப்படத்திற்காக இராப்பகலாக உழைத்த அவருக்கும், மற்றவர்களுக்கும்.

  ஷங்கருக்கு இது ஒரு பாடம்.. உலகத்தரத்தை இரண்டே இரண்டு விஷயங்களில் மட்டும்தான் இவரால் எட்ட முடியவில்லை. 1. கதையிலும் காட்சிகளிலும் சுயம் இல்லாதது 2. விசுவல் எபக்ட்ஸ்.

  ரஜினி மற்றும் இப்படத்தில் வேலை பார்த்த அணைத்து பெரிய மனிதர்களுக்கும், குழுவினருக்கும் அவர்களின் உன்னதமான உழைப்பிற்காக வாழ்த்துக்கள்..

  நான் பிறந்தது முதல் ரஜினிக்கு இரசிகன், ஜென்டில்மேனில் இருந்து ஷங்கருக்கு இரசிகன்..

  அனாலும், பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் ஷங்கர் சார் .. !

 4. Rama
  #4

  i accept ur opinion……

 5. mathi
  #5

  நமது தமிழர்களுக்கு தலைவர்கள் என்றால் மிகவும் பிடிக்கும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களுக்கு ஏதாவது குற்றங்குறைகள் நடந்துவிட்டால் தலையை மொட்டை அடித்து கொள்வார்கள். நெருப்பு மிதிப்பார்கள், பெட்ரோலை ஊற்றி தங்களையும் எரித்து கொள்வார்கள். மற்றவர்களையும் எரித்து பார்ப்பார்கள். சோறு போட்ட அப்பனை அடித்து போட்டு மனங்கவர்ந்த தலைவர்களின் சினிமா படத்திற்கு காத்து கிடக்கும் எத்தனையோ தமிழர்களை நாம் அன்றாடம் பார்க்கின்றோம், இது தமிழனுக்கு இன்று நேற்று ஏற்பட்ட வியாதியல்ல, சங்ககாலத்திற்கு முன்பே பற்றி கொண்ட தீராத வியாதியாகும், பக்கத்து நாட்டு அரசன் பையனுக்கு பெண் தரவில்லை என்று போருக்கு கிளம்பி. தோற்றுபோவான் மன்னன், மன்னன் தோற்றுவிட்டானே என்று எங்கோ மூலையில் இருக்கும் இளைஞன் தன் உயிரை மாய்த்து கொள்வான், இது நேற்றயை தினதந்தி செய்தியல்ல, சங்ககால வரலாற்று பதிவாகும்,

  பல் போகும் காலம் வரையில் மற்றவனுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்ட தமிழனை. தலைவன் என்பவன் கடவுளுக்கு சமமானவன் என்று தூக்கி வைத்து கொண்டாடும் தமிழனை. தலைவனின் நலத்திற்காக தன் பெண்டாட்டி. பிள்ளையை கூட பலி கொடுக்க தயங்காத தமிழனை பார்த்த கணியன் பூங்குன்றனார் நெஞ்சு பதபதைக்க பார்த்து தலைவன் என்பவன் தனியான ஒரு இனமல்ல உன்னை போலவும். என்னை போலவும் சாதாரண மனிதன் தான். நீயும். நானும் அம்மாவின் வயிற்றில் பத்துமாதம் இருந்தது போலவே தான் அவனும் இருந்தான், தலைவன் என்பதற்காக பதினைந்து மாதம் கருவறை வாசம் அவனுக்கு கிடையாது, விதி என்ற நதியில் உருண்டு ஓடும் பல கட்டைகளில் ஒரு கட்டை தான் அவன், அவனுக்கென்று தனியாக மரியாதை தருவதோ. அவனுக்காக மற்றவர்களை அவமரியாதை செய்வதோ சரியான முறையல்ல, எல்லோரையும் சமமாக பார்க்க பழகி கொள்

 6. kggouthaman
  #6

  // நாம் ரோஜாவை ரோஜாவாக அணுகுவோம்.//

  நல்ல அணுகுமுறை.

 7. saran
  #7

  தமிழின் புது வரவுக்கு வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். எந்திரன் உலக அளவில் உலக தமிழர்கள் ரசிக்கும் ஒரு தமிழ் படம் அவ்வளவே. இந்திய பணக்காரர்களில் 17 வது இடத்தில் இருக்கும் தென் இந்தியாவின் ரூபர்ட் முர்டாக் கலாநிதி மாறன் முகேஷ் அம்பானியை மிஞ்சுவார் என்பதும் திண்ணம். இவற்றை எல்லாம் தாண்டி நாம் பார்க்கவேண்டிய/சிந்திக்கவேண்டிய ஒன்று தமிழக அரசியலில் ஒரு புதிய கூட்டணி உருவாகுவதற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்குமோ? கலாநிதி மாறன், தயாநிதி மாறன், ரஜினி காந்த் மற்றும் காங்கிரஸ் என ஒரு புது கூட்டணி உருவாக வாய்ப்பும் உள்ளதாகவே தெரிகிறது.

  டெல்லி இல் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி க்காக விரைவில் சிறப்பு காட்சியும் ரஜினி யும், தயாநிதி யும் போட்டு காண்பித்தாலும் வியப்பில்லை.
  மீண்டும் திரைத்துறையில் இருந்து ஒரு முதல்வரா?????

 8. isaipiththan
  #8

  கட்டுரை அருமை. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. படத்தை பார்த்துவிட்டு மீண்டும் ஒரு முறை இதை வாசித்து பார்க்கிறேன்.

 9. கார்த்திக்
  #9

  மிக அருமையான விமர்சனம்
  //கமலின் சில தன்முனைப்பு எரிச்சல்களும் சேர்ந்திருக்கும்// ஒத்துக்கொள்கிறேன்

 10. வற்றாயிருப்பு சுந்தர்
  #10

  //கமலின் சில தன்முனைப்பு எரிச்சல்களும் சேர்ந்திருக்கும்// இங்க மட்டும் ஏன் ரோஜாவை ரோஜாவாகப் பார்க்கத் தோன்றவில்லை என்று நான் கேட்க மாட்டேன்! 🙂

 11. vajra
  #11

  இந்தப்படத்தில் மட்டும் கமல் நடித்திருந்தால்

  “ரோபோ பாதி, மனிதன் பாதி,
  கலந்து செய்த கலவை நான்
  உள்ளே மனிதன், வெளியே ரோபோ
  விளங்கவே விளங்காத கவிதை நான்”

  என்று பாடியிருப்பார். ஆளவந்தான் பெற்ற உலக மகா வெற்றியை இந்தப் படம் பெற்றிருக்கும்.

 12. saravanan
  #12

  ITS a nice film review.Really evaluated robo in a wonderful way and i enjoyed the first para very much…

 13. R.Gopi
  #13

  ஹரன்பிரசன்னா…

  மிக அழகாக நடுநிலையுடன் எழுதியுள்ளீர்கள்…

  அதற்காக ரஜினி ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்…

  ஒரு மிகப்பெரிய டீம் கடுமையாக உழைத்து அந்த உழைப்பை இது போன்று நிறைவான படைப்பாக தரும்போது, திரையில் நிறைய கைத்தட்டல் கிடைக்கும்…. அது இந்த படத்திற்கு நிறையவே கிடைத்தது…

  மத்திய கிழக்கு நாடுகளில் (நான் பார்த்தது துபாயில்) ஒரு நாள் முன்னதாகவே எந்திரன் வந்துவிட, எல்லோரும் 30.09.10 அன்றே பார்த்துவிட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் நிறைய பேர்க்கு அப்டேட் செய்து விட்டனர்…

  ஏற்கனவே திரையிட்ட அனைத்து இடங்களிலும் “எந்திரன்” வெற்றிவாகை சூடியுள்ள நிலையில், ஹிந்தியின் டப் வெர்ஷன் “ரோபோட்” பற்றி கூட அங்குள்ள சேனல்களில் பாசிடிவ் டாக் கொடுத்துள்ளார்கள்… ஸோ, அங்கும் ஹிட் ஆக வாய்ப்புள்ளது..

  மொத்தத்தில் “எந்திரன்” எட்டு திக்கும் வெற்றி முரசு கொட்டும் மந்திரன்.

 14. ssrsukumar
  #14

  kadaiseela neengalum rajani rasikar aaka maaritteenga.vaazhththukkal.

 15. கிரி
  #15

  முதலில் தளத்திற்கு வாழ்த்துக்கள்.

  எந்திரன் படம் ரஜினி ரசிகர்களை பெருமையடைய வைத்த படம்.

  @லாவண்யா ஏன் இந்த கொலை வெறி! 🙂

 16. d
  #16

  முதலில் add to any sharing buttonஐ தூக்குங்கள். அதற்கு பதிலாக ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் tell a friend sharing buttonஐ வையுங்கள். அனைத்து sharing buttonகளையும் நான் உபயோகித்து பார்த்திருக்கிறேன். அவற்றில் readersகளுக்கு மிக மிக user friendlyயானது tell a friend sharingஏ ஆகும். இதனுடைய பயனை ஒவ்வொன்றாய் டைப் அடிக்க என்னால் முடியாது. so, place tell a friend sharing button instead of addtoany sharing button.

  http://tellafriend.socialtwist.com/products/taf-for-free

 17. marimuthu
  #17

  அருமையான விமர்சனம்! இதுதான் நிதர்சனம்,!

 18. marimuthu
  #18

  நல்ல விமர்சனம் ! இதுதான் நிதர்சனம்!

 19. puratchithalaivan
  #19

  ஹரன்பிரசன்னா…

  மிக அழகாக எழுதியுள்ளீர்கள்…

 20. maduraisaravanan
  #20

  good review

 21. maduraisaravanan
  #21

  super review .thanks for sharing.

 22. Senthil
  #22

  சன் குழுமத்தின் ஆதித்யா,நவ்வுலு,சுட்டி போன்ற சேனல்களுக்காக பிரித்யேகமாக எடுக்கப்பட்ட படமே இந்த எந்திரன்.வழக்கமான ஷங்கரின் மசாலா தோரணமே இதுவும்.சிறு பிள்ளைகள் செய்யும் சேட்டைகளை போல ரஜினியையும் நினைத்து விமர்சனம் எழுதப்பட்டு இருக்கிறது.ஒரு சாதாரண கமலின் காமெடி படத்திற்கு காட்டும் காட்டம் கூட இதில் இல்லை.ஷங்கரை ஒரே அடியாக தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள் ஏனோ? அடுத்த தடவை நேர்மையா விமர்சனம் எழுதுங்கப்பா.
  நல்லவேளை கமல் இந்த படத்தில் நடிக்கவில்லை.சந்தோசம்.///பொதுவாக இதைப் போன்ற படங்களையெல்லாம் கமலை வைத்து மட்டுமே பார்த்துப் பழகிப் போன ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவர் இப்படி வருவதைப் பார்த்து எந்தக் காட்சியில் கை தட்டவேண்டும் என்பதைக் கூட அறியாமல் மெய்ம்மறந்து பார்க்கிறார்கள்.///–இந்த லைன் நல்ல இருக்கு..!!!

  //இதே படத்தில் கமல் நடித்திருந்தால் அது வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கும்.//உண்மை,கமலின் தன்முனைப்புடன் இன்னும் சிறப்பு பெற்றிருக்கும்.

 23. Mohan
  #23

  இப்ப ஆங்கிலப்படம் மாதிரி இருக்கிற எந்திரன்,கமல் நடிச்சிருந்தா ஆங்கிலப்படங்களையே மிஞ்சியிருக்கும்:-).

 24. "ஸஸரிரி" கிரி
  #24

  சிலப்பல விஷயங்களைக் குறித்த பார்வைகள் விட்டுப் போயிருந்தாலும், ஒரு நிறைவான விமரிசனம். நன்றி.

  பை தி வே, இறுதியில் தேவையில்லாமல் கமல் காழ்ப்புணர்ச்சி ஏன்? இயக்குனரின் நடிகராக கமல் நடித்த “வேட்டையாடு விளையாடு” மறந்து போனதா என்ன?

 25. Manikandan
  #25

  உங்களுடைய விமர்சனம் படித்தேன். ஆரம்ப விமர்சனம் நம்மை நாமே கேவலபடுத்தியது போல உள்ளது. ஒரு புதுமனையான முயற்சி இதற்கு நாம் ஆதரவு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். தமிழ் சினிமாவை உலக சினிமா உயரத்திற்கு கொண்டு செல்லும் சினிமா எந்திரன்.
  இந்த படத்தை நான் இரண்டாவது நாள் பார்த்தேன் இந்த அளவுக்கு ஒரு தமிழ் படம் இதுவரை வந்ததில்லை. கதை மிக சாதாரணமானது ஆனால் அதை சொன்ன விதம் மிகவும் வித்தியாசம். ரசிகர்களுக்கு எந்த இடத்தில் கை தட்ட தெரியவில்லை என்பது போல எழுதியுள்ளிர்கள். அது ரசிகர்களுக்கு தெரியவில்லை என்று அர்த்தமில்லை…ரசிகர்கள் மெய்மறந்து படம் பார்க்கிறார்கள் என்று அர்த்தம்…இதுவே படத்திற்கு வெற்றி.
  கமல் நடித்திருந்தால் வேறு ஒரு பரிணாமம் வந்திருக்கும் என்று எழுதி உள்ளீர்கள்…கண்டிப்பாக ஒத்து கொள்கிறேன்…ஆனால் ரஜினி வேறு கமல் வேறு…They are railway track … they cannot meet each other …they are two different extend .
  Behindwood, Mirror போன்ற பத்திரிகைகள் இந்த புது முயற்சியை பாராட்டியுள்ளார்கள்….நீங்கள் பாராட்ட வேண்டாம் தயவு செய்து பழிக்காதிர்கள்.

 26. sasikumar
  #26

  fine

 27. tamilselvan
  #27

  தமிழ் பேப்பரை வரவேற்கிறேன்

 28. rajmohan
  #28

  நச்சச்ச்ச்ச் விமர்சனம் பாஸ் . ரஜினி தி மாஸ் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். தமிழ் சினிமா வேறொரு தளத்திற்கு சென்று கொண்டிருப்பதை யாராலும் மறுக்க இயலாது. ஹாலிவுட் படம் போல இருக்கு என்று சொல்லும் காலம் போய் தமிழ் சினிமா மாதிரி எடுத்து இருக்கிறார்கள் என்று உலகமே சொல்லும் காலம் வர வேண்டும்.அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

 29. jayachandran
  #29

  எந்திரன் விமர்சனம், சிறப்பு… ஆனால் சிலசித்தரிப்புகளில் வரும் மதிப்பீடுகள் எனக்கு சில கேள்விகளை எழுப்புகிறது. உணர்வுகள் வர ரோபோ ஏன் ரிக்வேதம் படிக்கவேண்டும்? ஏன் குப்பத்தில் இருப்பவரை சமூக அக்கறை இல்லாதவர்களாகவே ஷங்கர் தன் பல படங்களில் சித்தரிக்கிறார்? மருத்துவம் பயிலும் நாயகி பிட்டடிப்பதை, படம் எந்த நிலையில் (மதிப்பீட்டில்) பிரதிபலிக்கிறது?. பல்லாயிரக்கணக்கில் உயிர் சேதம் ஏற்படுகிறது என்பதன் வலியை இப்பபடத்தில் எங்கு உணரமுடிகிறது? ரோபோக்கள் வந்தாலும், போரும் ராணுவமும் தேவையென்பதை இப்படம் நியாயப்படுத்தவில்லயா?
  நாயகி கதறியதும் பாட்டரி ரீசார்ஜ் செய்துகொண்டு பறந்து வந்து அடிக்கும் விஞ்ஞான மசாலாவாகத்தான் பலசமயங்களில் தோன்றுகிறது.

 30. B. பாஸ்கர்
  #30

  //மொத்தத்தில் எந்திரன் – தி மாஸ்.//

  சரியான வார்த்தை, உண்மையில் ரஜினி படம்தான் என்று இப்போதலை சுத்தும் பாரு போன்ற வெறும் சில சீன்களில் மட்டுமே தெரிந்தது. ஆனால் ரஜினி தி மாஸ் என்பது எல்லாம் படையப்பா, பாஷா, இன்னும் பல படங்களில்தான்.

 31. FIRTHOUSE RAJAKUMAAREN
  #31

  எந்திரன் .. கடந்த இரண்டு வருடங்களாக ஒட்டு மொத்த திரையுலகையும் எதிர்பார்க்க வைத்த படம் .. ரஜினி அவர்கள் ஒருமுறை சொன்னார் இது ஒரு அனுபவம் என்று .. ஆமாம் இது ஒரு அனுபவம்தான் அவருக்கு மட்டும் அல்ல டைரக்டர் ஷங்கருக்கும் இது ஒரு அனுபவமே .. அனால் ரசிகர்களுக்கோ இது மிகப்பெரிய ஏமாற்றம் .. பத்து இருபது வருடங்களுக்கு முன்பே பார்த்து விட்ட ஹாலிவுட் படங்களின் காட்சிகளை இப்போது பற்பதினால் மட்டும் அல்ல இதைப்போய் ஹாலிவுட் படங்களை மிஞ்சி விட்ட காட்சிகள் என்று வாய் கூசாமல் திரும்பத்திரும்ப அலறிக்கொண்டிருப்பதைத்தான் தாங்கவே முடியவில்லை.

  எல்லோரும் உயிரைக்கொடுத்து உழைத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை .. என்னுடைய கோபமெல்லாம் இவ்வளவு உழைப்பையும் பணத்தையும் செலவு செய்ய ஒரு சொந்த கதையை உருவாக்க முடியவில்லையா ஷங்கரால் ?

  FIRTHOUSE RAJAKUMAAREN.Coimbatore

 32. அனீஸ்
  #32

  ஹரன் பிரசன்னா ரஜினி ரசிகராக இருப்பார் போல… புகழ் மசாலா கொஞ்சம் ஓவரா இருக்கு.
  ரோபோவிடம் எல்லோரும் கேள்வி கேட்பார்கள். நமக்கும் ஒரு கேள்வி கேட்க வேண்டும்… “நம்ம தலைவர் எப்ப அரசியலுக்கு வருவார்?”
  (எப்படி ரோபோவினாலேயே பதில் சொல்ல முடியாத கேள்வியைக் கேட்டுட்டோம்ல…)
  மு.அனீஸ்
  மதுரை

 33. kiran
  #33

  Avatar story line was even worse… but our so called ‘intelligent ppl’ never opened their mouth.

 34. shahji
  #34

  எத்தனையோ ஆங்கிலப் படங்களிலிருந்து துண்டுகளை நகலடித்தது பற்றி பலர் எழுதி விட்டார்கள். ஆனால், Short Circuit திரைப்படத்திலிருந்து முக்கியமான சில காட்சிகள் நகலடித்தது பற்றி யாரும் குறிப்பிடவில்லை. அநேகமாக பலரும் அதைப் பார்க்கவில்லை என்று புரிகிறது. அது ஒரு புறம் இருக்க, பெரிய பேனர் படங்கள் என்றாலே அதைப் போற்றிப் புகழ வேண்டும் என்று எழுதப்படாத விதிகளை பல விமர்சகர்கள் ஏற்றுக் கொண்டிருப்பது அண்மைக் காலங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. அதற்கு அவர்களுக்கே உரிய காரணங்களும் லாபங்களும் இருக்கலாம். அதைப்பற்றி சாதாரண ரசிகனுக்குக் கவலை இல்லை என்பதே இப்படிப்பட்ட போற்றுரை விமர்சனங்களை ஊக்குவிக்கவும் செய்கிறது.

  தமிழில் இதுவரை இல்லாத அளவுக்கு கிராஃபிக்ஸ் காட்சிகள் இதில் உள்ளன, அதற்காக ஒருமுறை பார்க்கலாம், நம் தமிழன் என்ன செய்திருக்கிறான் என்பதற்காக – அதற்கு மேல் இதில் ஒன்றுமில்லை.

  கதையில் எத்தனையோ அபத்தங்கள் உண்டு. மிகப்பெரிய அபத்தம் – குப்பைக்கூளத்தில் நொறுக்கிப் போடப்பட்ட எந்திரன் எப்படி தன்னைத்தானே சரிசெய்து கொள்வது – இதைப்பற்றி ‘இந்த நடுநிலையான விமர்சகர்’ எப்படி மறந்து விட்டார் என்பது புரியவில்லை. இதுதான் இந்தத் திரைப்படத்தின் முக்கியத் திருப்பம். எந்திரன் தானே சரியாகிக்கொண்டு டேனி டென்சாங்போவை சந்தித்திராவிட்டால் அந்த வில்லன் ஆயுள் முழுக்கத் தேடியிருந்தாலும் அந்தக் குப்பைகூளத்திலிருந்து எந்திரன் கிடைத்திருக்காது. கதையே இல்லை. இவ்வளவு பெரிய ஓட்டையை விட்டு விட்டு ஆளாளுக்கு போற்றி போற்றி மாலைகள் சாற்றுவதன் ரகசியம் எவ்வளவு பெரிய ‘உறை’யாக இருந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது.

  கமலின் ஏதோ ஒரு நகைச்சுவைப் படத்தில் ஒரு வசனம் வரும் – பழமொழி சொன்னா ரசிக்கணும், ஆராயக்கூடாது. அப்படி, ரஜினி கதைன்னா கண்ணைமூடிட்டு – இல்லை இல்லை – கண்ணைத் திறந்துட்டு ரசிக்கணும், கதை கிதைன்னு கேள்வி கேக்கக்கூடாது என்று ஒரு வரியையும் சேர்த்திருக்கலாம்.

  நான் கமல் ரசிகனும் அல்ல, ரஜினி ரசிகனும் அல்ல. இருவரின் படங்களிலும் நல்ல சிலவற்றை ரசிப்பவன், அவ்வளவே. இருப்பினும் இந்த விமர்சனத்தில் எழுதியவருக்கு கமல் மீதான ‘எரிச்சல்’ தொனிக்கிறது. அதுவும் தேவையே இல்லாதபோது.

  என்ன செய்ய, இதுதான் விமர்சனத்தின் இலக்கணமாகி விட்டதே.
  ஷா

 35. Senthil
  #35

  Well said

 36. sheik
  #36

  eanna kodmai sir idhu…kamal d best

 37. Rajan
  #37

  நண்பரே! நல்ல விமர்சனம். இதனை நான் ஒரு வருடத்துக்கு பிறகு படிக்கிறேன் என்றாலும் நான் அமெரிக்காவில் இந்த படத்தை முதல் காட்சி பார்த்த நிமிடத்தை நினைவு படுத்தியது.

  /*
  ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவர் இப்படி வருவதைப் பார்த்து எந்தக் காட்சியில் கை தட்டவேண்டும் என்பதைக் கூட அறியாமல் மெய்ம்மறந்து பார்க்கிறார்கள்.
  */

  இந்த வரிகள் மிக சரியாக என்னுடன் முதல் காட்சி பார்த்த நண்பர்கள் சொன்ன அதே வார்த்தைகள்.

  வாழ்த்துக்கள்

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: