சிரிப்பு சூப்பர் ஸ்டார்
அத்தியாயம் 19
” நான் சிவாஜிக்கு அடுத்து நாகேஷிடமிருந்துதான் அதிகம் கற்றுக்கொண்டேன். ஒருவர் யார், எப்படிப்பட்டவர் என்பதைவிட அவர் விஷயம் உள்ளவர் என்று தெரிந்தால் அவரை மதிக்கத் தெரிந்தவர் நாகேஷ். பாராட்டு, ஷீல்டு இதிலெல்லாம் அவருக்கு ஆர்வமில்லை. இவை நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டவற்றில் சில. அவரது உடலைப் பார்த்துவிட்டு ஐந்து நிமிடம்தான் அழுதிருப்பேன். அப்புறம் அவரது அற்புதமான நகைச்சுவை காட்சிகள் நினைவுக்கு வர பக்கத்தில் இருந்தவர்களுடன் அவற்றை நினைவுகூர்ந்து மனம்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தேன். இதுபோல வேறு யாருக்குச் சாத்தியம்? இப்போது இருக்கிறாரே, அந்த உயிரற்ற உடல்போலக்கூட மிகவும் தத்ரூபமாக என் படத்தில் நடித்திருக்கிறார். நம்மவர் படத்தில் அவருடன் நடித்தது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம். அவருக்காக நான் எழுதிய காட்சிகளில் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்ததும், அதற்காக நாகேஷுக்குச் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததிலும் எனக்குதான் பெருமை.”
கமல்ஹாசன் என்னிடம் இப்படி நாகேஷ் பற்றி நெகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்த இடம், சென்னை பெசன்ட் நகர் மின் தகன மையம். நாகேஷின் வீட்டிலிருந்து புறப்பட்ட அவரது இறுதி ஊர்வலம் இன்னும் பெசன்ட் நகர் வந்தடையவில்லை. ஏற்கனவே அங்கே வந்து காத்துக்கொண்டிருந்தார் கமல். “இது பேட்டி காண்பதற்கான இடமோ, தருணமோ இல்லை. ஆனாலும், அடுத்த இதழ் கல்கியில் “நாகேஷ்: சிரிப்பு சூப்பர் ஸ்டார் ” என்று ஒரு கவர் ஸ்டோரிக்குத் திட்டமிட்டிருக்கிறோம். அவரைப் பற்றிய உங்கள் நினைவுகளைச் சொல்லுங்களேன்” என்றபோது கமல் ரொம்ப கேஷுவலாக “நீங்கள் கேட்கவில்லையென்றாலும்கூட நான் இங்கே நாகேஷ் பற்றிதான் உங்களுடன் பேசிக்கொண்டிருந்திருப்பேன்” என்று சொல்லிவிட்டுச் சொன்ன விஷயங்கள்தான் இவை.
நாகேஷ் தன் வாழ்க்கையைப் பற்றி இந்த உலகத்திலேயே என்னிடம்தான் ரொம்ப விரிவாகப் பேசி இருக்கிறார் என்று நான் பெருமையுடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள முடியும். சினிமா மூலம் கோடிக்கணக்கானவர்களைச் சிரிக்கவைத்த, சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிற நாகேஷ் சொந்த வாழ்க்கையில் பட்ட அவமானங்கள், வேதனைகள், ரணங்கள், சந்தோஷங்கள், சவால்கள் என்று சகலமான விஷயங்களையும் அவரே என்னிடம் சொல்ல, அவற்றை எல்லாம் தொகுத்து ஒரு வருடத்துக்கு வாராவாரம் கல்கியில் தொடராக எழுதியது எனக்குக் கிடைத்த அரிய பாக்கியம்.
கல்கியில் அவரது வாழ்க்கை அனுபவங்களை எழுதலாம் என்ற நோக்கத்துடன் அவரைச் சந்தித்துப் பேசியபோது, சுமார் ஒரு மணிநேரம் நிறைய பேசிவிட்டு “இவற்றையெல்லாம் எதற்காகப் பத்திரிகையில் எழுதவேண்டும்? அதனால் யாருக்கு என்ன பயன்? ” என்று ஒரு போடு போட்டார். நானும் உடன் வந்திருந்த புகைப்படக்காரர் யோகாவும் அரை மணி நேரம் பேசி அவரைச் சம்மதிக்கவைத்தோம்.
அதன்பிறகு ஒவ்வொரு சந்திப்பின்போதும் அவர் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது. பழைய விஷயங்களை நகைச்சுவை கொப்பளிக்கத் தேர்ந்த ரசனையுடன் குரலில் ஏற்ற இறக்கம் கொடுத்து அவர் மீண்டும் நினைவு கூரும்போது என்னை மறந்து சிரித்துவிடுவேன்.
நாகேஷின் இயற்பெயர் நாகேஸ்வரன். அப்பா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அரிசிக்கரே என்ற ஊரில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். குடும்பம் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் வசித்தது. அப்பா ரொம்பக் கண்டிப்பான மனிதர். வீட்டில் நாகேஷுக்குச் செல்லப்பெயர் குண்டு ராவ். எஸ்.எஸ்.எல்.சி. முடித்த கையோடு கோவை பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் இன்டெர்மீடியட் சேர்ந்தார். இரண்டாவது வருடப் பரீட்சைக்குச் சில நாள்கள் முன்பாகக் கடும் அம்மை தாக்கியது. அது குணமடையும் தருவாயில் இரண்டாவது தாக்குதல். அடுத்து மூன்றாம் தடவையும் தாக்கியது. பிழைத்ததே பெரிய விஷயம்தான். பால் வழியும் முகத்தில் அம்மை தனது ஆட்டோகிராஃபைக் கிறுக்கிவிட்டுப் போனது. மனம் வெறுத்த நாகேஸ்வரன் வீட்டை விட்டு வெளியேறினான். இலக்கிலா வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. பலவிதமான வேலைகள். ஹைதராபாதில் ஒரு கூலித் தொழிலாளியாகக்கூட வேலை பார்த்திருக்கிறார்.
நாகேஷின் டான்ஸ் மூவ்மென்ட்களைத் திரையில் பார்த்து பிரமித்துச் சிரிக்கிறோமே, அதற்குப் பின்னால்கூட ஒரு கதை இருக்கிறது. ஒரு படத்தில் அவர் சரியாக நடனம் ஆடாதது கண்டு டைரக்டர் நாகேஷின் மனம் புண்படும்படியாக கமெண்ட் அடித்துவிட்டார். அன்று இரவுமுழுக்க அறைக் கதவைச் சாத்திக்கொண்டு, கிராமஃபோன் ரெக்கார்டு ஒலிக்க உண்ணாமல் உறங்காமல் பயிற்சி செய்து மறுநாள் டைரக்டரை ஆச்சரியப்படுத்தி மனதுக்குள் வெட்கப்பட வைத்தார் நாகேஷ்.
மைலாப்பூர் கபாலி கோவில் தெப்பக்குளத்தின் படிகட்டுகளில் உட்கார்ந்துகொண்டு வற்றிப் போன தெப்பக் குளத்தைப் பார்த்து “அந்தப் பழைய நாள்கள் இனிமே வருமா? ஊஹூம்… வராது.. வரவே வராது… ” என்று தனக்குத்தானே புலம்பிய கிருஷ்ணசாமி அய்யர் என்பவர்தான் நாகேஷின் மிகப் பிரபலமான தருமி கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன். டைரக்டர் ஏ. பி. நாகராஜன் தருமி சம்பந்தப்பட்ட காட்சிக்கு ஒரு சின்னக் கோடு போட்டார். நாகேஷ் ரோடு இல்லை, ஒரு தங்க நாற்கரச் சாலையே போட்டுவிட்டார். இன்றைக்கும் டி.வி.யில் தருமி நாகேஷ் – சிவாஜி காட்சியைப் பார்த்து ரசிக்கும் உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா? திருவிளையாடல் படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு நாகேஷுக்கு அழைப்புகூட அனுப்பவில்லை.
ஒருகட்டத்தில் நகைச்சுவையிலிருந்து குணச்சித்திர வேடங்களுக்கு மாறினாலும் அவரது நகைச்சுவை உணர்ச்சிமட்டும் என்றுமே குறையவில்லை. ஒருமுறை இன்றைய நகைச்சுவை நடிகர்கள் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அடித்த நச் கமெண்ட்: “சிலருக்கு டைமிங் சென்ஸ் நல்லா இருக்கு; சிலருக்கு டைம் நல்லா இருக்கு!”
வாழ்க்கையை வெகு எதார்த்தமாக எதிர்கொண்டவர் நாகேஷ். பண விஷயத்தில் அவர் வெகு கறாரான மனிதர் என்று சினிமா உலகில் சொல்வார்கள். ஆனால் தனிப்பட்டமுறையில் மிக எளிமையானவர். “எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே?” என்பார். சினிமா உலகத்தினரது வீட்டு வரவேற்பறையில் அவர்கள் வாங்கிய ஷீல்டுகளை ஷோ கேஸ் அமைத்துக் காட்சிக்கு வைப்பது சகஜம், ஆனால் நாகேஷ் வீட்டில் ஒரு ஷீல்டைக்கூடப் பார்க்க முடியாது. தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது நாகேஷுக்குப் பிடிக்காத விஷயம்.
”சிரித்து வாழ வேண்டும்” என்ற தலைப்பில் வெளியான நாகேஷின் வாழ்க்கை அனுபவத் தொடருடைய முதல் அத்தியாயத்துடன் நாகேஷ், அவரது மூன்று மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் என்று அனைவரும் இருக்கும் ஒரு குரூப் ஃபோட்டோ போட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அந்த ஆசையை அவரிடம் தெரிவித்தபோது “அப்படி ஒரு ஃபோட்டோ இல்லை” என்றார். “பரவாயில்லை. ஒரு நாள் அனைவரையும் உங்கள் வீட்டுக்கு வரச்சொன்னால் ஒரு ஃபேமிலி குரூப் ஃபோட்டோ எடுத்துவிடலாம்!” என்றேன். ஆனால் “அதெல்லாம் சாத்தியமில்லை!” என்று சொல்லிவிட்டார். “இது என்ன சார் பெரிய விஷயம்? ஃபோன் நெம்பர் கொடுங்க! நானே பேசி ஏற்பாடு செய்திடறேன்” என்று வற்புறுத்தியபோது ‘இதை விட்டுடேன்! பிளீஸ்!” என்று சொல்லி அத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
2009 ஜனவரியில் அவர் மரணம் அடைவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே உடல் நலமில்லாமல் இருந்தார். அவ்வப்போது அவரது வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு வருவது என் வழக்கம். அப்படி ஒரு நாள் அவர் வீட்டுக்கு நான் சென்றிருந்த சமயம் இயக்குனர் கே. பாலசந்தரும் அங்கே வந்திருந்தார். தன் நெடுநாளைய நண்பனின் கைகளை வருடிக்கொடுத்தபடி “ராவுஜி! எப்படிடா இருக்கே?” என்று கே.பி. கேட்டார். பேச முடியாத நிலையிலும் நாகேஷின் உதட்டோரத்தில் ஒரு புன்னகை. அந்தச் சிரிப்பு இன்னும் என் மனத்தில் நிழலாடுகிறது.
அன்று நாகேஷைப் பற்றிப் பழைய நினைவுகளை அசைபோட்டார் கே.பி. “நீர்க்குமிழி படப்பிடிப்பின் முதல் நாள் நாகேஷ் என்னை ’சார்’ என்று அழைத்தபோது எனக்குச் சங்கடமாக இருந்தது. இத்தனை நாளும் வாடா போடா என்று பேசுகிற நீ திடீரென்று என்னை சார் என்று கூப்பிட்டால் கிண்டல் பண்ணுவதுபோல இருக்கு” என்று நான் அவனிடம் சொன்னேன். அப்போது அவன் என்னைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய் “நாம ரெண்டு பேரும் நெருங்கின நண்பர்கள்தான். ஆனால் நீ இங்கே டைரக்டர்; நான் நடிகன். நான் உனக்கு மரியாதை தரவேண்டும்; அப்போதுதான் யூனிட்டில் எல்லோரும் உனக்கு உரிய மரியாதை தருவார்கள்” என்றான்.”
”நாகேஷ் ஒரு கிரியேடிவ் ஜீனியஸ். காட்சியைச் சொல்லிவிட்டு ரிகர்சல் பார்க்கிறபோது சொன்னபடி செய்வான். அடுத்து டேக் போகிறபோது தானாகவே இன்னும் ஏதாவது சேர்த்துக்கொண்டு காட்சியைப் பிரமாதப்படுத்திவிடுவான். உதாரணமாக, வணக்கம் சொல்லியபடி உடம்பை வளைக்கிறதுபோல் ஒரு காட்சி. டேக்கின்போது வளைந்துகொண்டே வந்தவன் தானாகவே “இன்னும் கூடக் குனிய முடியும், ஆனா தரை இருக்கு” என்று ஒரு வசனத்தைச் சொல்லி அசத்திவிட்டான்” என்றார் கே.பி. நாகேஷின் மறைவுக்குப்பிறகு கே. பாலசந்தரது கவிதாலயா தியேட்டர்ஸ் அரங்கேற்றிய நாடகத்தின் தொடக்கத்தில் நாகேஷின் படத்தை வைத்து அவரை உருக்கமாக நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார் அவர்.
நாகேஷ் இன்று நம்மிடையே இல்லை; எனது ஆழ்ந்த அனுதாபங்கள்- அவரது குடும்பத்தினருக்கு அல்ல; அந்த மகத்தான கலைஞனை உரிய முறையில் கௌரவிக்கத் தவறிய இந்திய அரசாங்கத்துக்கு.








February 7th, 2011 at 4:52 pm
நாகேஷை மட்டுமா…. நடிகர் திலகத்தையே மதிக்கத் தெரியாத இந்திய அரசு. விருது கொடுத்து ஒன்றும் ஆகாது. ஆனாலும் அரசியலையும், சொந்த விருப்பு வெறுப்பை மீறி விருது வழங்கும் தகுதியை இன்னும் இந்நாடு கற்கவில்லை.
February 7th, 2011 at 11:53 pm
தமிழ்மகன் கூறுகிறார்….
தருமி முதல் தசாவதாரம் வரை
==================================
நாகேஷ் என்றால் நகைச்சுவை. புத்திசாலித்தனமான பாவனை வெளிப்பாடும் டைமிங் சென்ஸும் உடல் மொழியும் அவருடைய நகைச்சுவைக்குத் தனி ஈர்ப்பைத் தருகின்றன.
திருவிளையாடல், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, ஆயிரத்தில் ஒருவன், சர்வர் சுந்தரம் போன்றவை அவருடைய முதல் ரவுண்டு காமெடிகள். உடல் சேட்டைகளும் ஓங்கி ஒலிக்கும் குரலும் பிரதானமாக இருந்தன அதில். அவருடைய இரண்டாவது இன்னிங்ஸ், ஆழ்ந்த அமைதியான உடல் சேட்டைகள் குறைந்த காமெடிகள்.
நான் அவரை இரண்டாவது இன்னிங்ஸ் காலத்தில்தான் சந்தித்தேன். இரண்டொரு முறை பேட்டி கேட்டபோதும் அதை அவர் தவிர்த்துவிட்டார். பேட்டி தருவதில் பெரிய விருப்பம் எதுவுமில்லை அவருக்கு. மிகவும் விருப்பமுள்ளவர்கள் அல்லது ஏற்கெனவே பழகியவர்களிடத்தில் மட்டும்தான் அவர் பேசினார். அப்படிப் பேசும்போது அங்கே தொடர்ந்து நகைச்சுவைப் பட்டாசு வெடிக்கும்.
கமல்ஹாசனின் மகளிர் மட்டும் படத்தில் அவர் நடிப்பதை கமல்ஹாசன் இப்படி அறிவித்தார்:
“இந்தப் படத்தில் நாகேஷ் நடித்திருக்கிறார்…. உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார்” என்றார்.
ஒரு படத்தில் ஒரு நடிகர் முழுவதும் பிணமாகவே நடித்து சிரிக்க வைத்தது உலக சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று தோன்றுகிறது.
’அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலா காதலா’, ‘பஞ்சதந்திரம்,’ ‘தசாவதாரம்’ என கமல் பல படங்களில் நாகேஷைப் பயன்படுத்தியிருக்கிறார்.
படத்தில் நடிப்பதில் அவருடைய பங்கு முக்கியத்துவமானது என்பது மட்டுமல்ல. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவர் தரும் பங்களிப்புக்காகவும்தான் அவருக்கு இந்தத் தொடர்ச்சியான வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்.
‘பஞ்சதந்திரம்’ படப்பிடிப்பின்போது நடைபெற்ற சிறு சம்பவம் இது.
கமல்ஹாசன் எப்போதும் அதிக காரம் சாப்பிட மாட்டார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிக்கன் துண்டில் ஒட்டியிருந்த மசாலாவைத் தவிர்க்கும் விதமாக அதன் கழுத்துப் பகுதியைப் பிடித்துக் கொண்டு தட்டில் தட்டினார். மசாலா விழுவதாக இல்லை. வேகமாகப் பலமுறை தட்டினார். அருகில் இருந்த நாகேஷ் லேசாகத் திரும்பிப் பார்த்து “என்னப்பா… கோழி சரியா சாகலையா. இந்த அடி அடிக்கிறே?” என்றார் கூலாக.
கமல் இதையெல்லாம் ரசிப்பார் என்று நாகேஷுக்குத் தெரியும். நாகேஷ் இப்படியெல்லாம் ரசிக்க வைப்பார் என்று கமல்ஹாசனுக்குத் தெரியும்.
February 7th, 2011 at 11:59 pm
இரும்பு மனசுக்காரர் நாகேஷ் – கலங்கும் கே. பாலசந்தர்
நகைச்சுவை நடிகராக வலம் வந்த நாகேஷை, ஹீரோவாகப் போட்டு பல்வேறு நாடகங்களையும் படங்களையும் இயக்கியவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். நாகேஷின் குருநாதராகவும் நல்ல நண்பராகவும் திகழ்ந்த அவரிடம், நாகேஷ் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னோம். தழுதழுத்த குரலில் ஆரம்பித்தார் கே.பி.
“இறந்தவர்களுக்கு, இருப்பவர்கள் செய்யும் சடங்குகளுள் ஒன்று வாய்க்கரிசி போடுவது. அதைச் செய்து அவரை மயானத்தில் தனியே விட்டுவிட்டு வந்து அசை போட்டுப் பார்க்கிறேன்.
ஆரம்ப காலம் தொடங்கி, அண்மையில் பதினைந்து நாட்களுக்கு முன்பு போய் பார்த்துப் பேசிவிட்டு வந்த சம்பவம் வரை ஒவ்வொரு விஷயமும் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைக்கிறது. ஆத்மார்த்தமாகப் பழகும் அந்த நண்பரை இழந்து மனமொடிந்து போயிருக்கிறேன்.
நான் பத்திரிகைப் பேட்டிக்காகவோ அல்லது ஒப்புக்காகவோ சொல்லவில்லை. நடிப்பில் சிவாஜிக்குப் பிறகு பேர் சொல்லும் பிள்ளையாக இருந்தவர் நாகேஷ். அதிலும் குணச்சித்திரமாகவும் காமெடியாகவும் இணைந்து நடிக்கும் நடிகர், இனிமேல் பிறந்தால் கூட அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். காமெடி டிராக்கில் மட்டும் ஓடிக் கொண்டிருந்த அவரை குணச்சித்திர நடிகனாக்கியது பற்றி நினைத்தால் பல சம்பவங்களைக் கூறத் தோன்றுகிறது.
சின்னச் சின்ன கம்பெனிகள் நடத்தி வந்த சில நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷ் பற்றி நண்பர்கள் சிலர் என்னிடம் சிலாக்கியமாகச் சொன்னார்கள். நானும் அரசுப் பணியில் இருந்தபடியே நாடகங்கள் எழுதி இயக்கிக் கொண்டிருந்தபடியால், இயல்பாக ஏற்பட்ட ஆர்வத்தில் நண்பர்கள் கூறிய நாடகத்தையும் நாகேஷையும் பார்க்கப் போனேன்.
அப்படிப் போன ஒரு நாடகத்தில் நாகேஷின் ஆரம்பக் காட்சியே எனக்கு பிரமிப்பு ஏற்படுத்திவிட்டது. அதாவது யாரோ விரட்டி வருவதுபோல பாவனை செய்தபடி, நீளமான சோபா ஒன்றை அனாயாசமாக தாண்டிக் குதித்தபடி வசனம் பேசுவார். அப்போது அவருடைய அங்கஅசைவுகளும் வசன உச்சரிப்புகளும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. நாடகம் முடிந்ததும் தனியே பார்த்துப் பாராட்டிவிட்டு, `இப்படி நடிப்பது ரிஸ்க் இல்லையா? அடிபட்டால் என்னாகும்?’ என்று அக்கறையுடன் கேட்டேன். அதற்கு நாகேஷ், `அடிபடலாம். அதற்கு பயந்து மெனக்கெடாமல் இருக்கக் கூடாது. ஆல் இன் கேம். அதிலும் நாடகத்திற்கு மற்ற தொழிலில் காட்டும் திறமை மற்றும் அக்கறையைவிட நூறு சதவிகிதம் அதிகம் காட்டினால்தான் ஜெயிக்க முடியும்!’ என்று விளக்கம் சொன்னார்.
அவருடைய நாடகத்தைப் பார்க்கப் போன காலகட்டத்தில் நான் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் நடத்திக் கொண்டிருந்தேன். அதைப் பார்க்க வந்த நாகேஷ், என் நாடகத்தை வெகுவாகப் பாராட்டிவிட்டு, மெதுவாக தனக்கும் என் குழுவில் இடம் வேண்டும் என்று கேட்டார். சின்னச் சின்ன கம்பெனிகளில் நடிக்கும் தனக்கு என் அங்கீகாரமும் ஆதரவும் வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார். குறைந்தபட்சம் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தில் ஒரு கேரக்டர் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டார்.
நான் அவரிடம் `உங்களுக்கான ஒரு ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்து, அதன் மூலம் உங்களை எங்கள் குழுவில் சேர்க்கிறேன்’ என்றதும், சரி என்று போனவர், மறுநாளே என் அலுவலகம் வந்து தனக்கான ஸ்கிரிப்ட் தயாரா எனக் கேட்டார். இவ்வளவிற்கும் சினிமாவில் தலைகாட்டி பிரபல-மாகிவிட்ட அவர், நிஜமாகவே நாடகங்களில் நடிக்க அதுவும் என் நாடகங்களில் நடிக்கக் காட்டிய ஆர்வம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.
அதன் விளைவாக தீவிரமாக யோசித்தபோது, நாகேஷின் முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகளையும் அதனால் நாயகன் படும் மன உளைச்சல்களையும் வைத்து ஒரு கதை பண்ணலாமா என்று நாகேஷிடமே கேட்டேன். இந்த கதைக்களம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. உடனே என்னை அடுத்தடுத்து சந்தித்து ஒரு வகையில் நெருக்கடி கொடுத்து தனக்கான அந்த முழுக் கதையையும் உருவாக்க வைத்துவிட்டார். அதுதான் `சர்வர் சுந்தரம்.’
அந்தக் கதை தயாரானதும் தினமும் ரிகர்சல் பார்க்க சின்சியராக ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி சினிமாவில் பிஸியான நிலையிலும் அவருடைய நாடக ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறுகிய காலத்தில் மெனக்கெட்டுத் தயாரித்த `சர்வர் சுந்தரம்’ நாடகத்தை அரங்கேற்றும் நாளன்று என்னை விட டென்ஷனாக இருந்த நாகேஷ் மெதுவாக, `பாலு, இந்த நாடகத்தோட முதல் டயலாக் தவிர மற்றதெல்லாம் மறந்துடுத்தே’ என்றார். ஆனால் நாடகம் தொடங்கியதும் மடமடவென்று டயலாக்குகளை வீசி அசத்திவிட்டார். குறிப்பாக நாயகிக்கு பொக்கே கொடுத்துவிட்டு, பதிலுக்கு குப்பைக் கூடையை எடுத்துப் போகிறேன் என்று கூறியபோது, ஆடியன்ஸ் தட்டிய கைதட்டல்கள் இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது.
அந்த நாடகத்தின் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும் நாகேஷின் நடிப்பும் மெருகேற்றியதால் கிடைத்த பாராட்டு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது. இந்த நாடகம் நடக்கவிருந்த ஓரிரு நாளில் எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். அவரிடம் நாடகம் பற்றிக்கூறி அனுமதி வாங்கி வந்து நடித்துவிடும் போக்கும் என்னைக் கவர்ந்தது.
`சர்வர் சுந்தரம்’ நன்றாக போய்க்கொண்டிருந்தாலும் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்திலும் தான் பங்குபெற வேண்டும் என்று தொடர்ந்து அடம் பிடித்து வந்தார். அதனால் ஒரு காட்சியில் பேப்பர் போடும் பையன் கேரக்டர் கொடுத்தேன். அதில் வந்தவரை ஆடியன்ஸ் பார்த்து `ஹே, நாகேஷ்’ என்று கத்தினார்கள்.
இதெல்லாம் நடப்பதற்கு முன்பு நானும், நாகேஷும் இணைந்து ஒரு நாடகத்தில் நடித்தோம். முதலாளியாக நானும் வேலைக்காரராக அவரும் நடிக்கும்போது, திடீரென்று இஷ்டத்துக்கு வசனம் பேசி என்னைத் திகைக்க வைத்துவிட்டார். அதிலிருந்து என் நாடகங்களில் இப்படி அதிரடியாக புதிய வசனம் எதுவும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டுவிட்டேன்.
பிறகு, நான் எழுதிய `நீர்க்குமிழி’ நாடகத்தில் நாகேஷ் புகுந்து கலக்கினார். காமெடியனாக வந்த நாகேஷ், இந்நாடகத்தின் மூலம் பார்வையாளர்களை அழ வைத்துவிட்டார். பலமுறை நானே அவரது நடிப்பைப் பார்த்துக் கண்கலங்கியுள்ளேன்.
அந்த நாடகத்தில் பல பரிமாணங்களைக் காட்டி அசத்திய நாகேஷை மனதில் வைத்து `எதிர்நீச்சல்’ நாடகம் எழுதினேன். அதுபற்றி எதுவும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இப்படிப் போன காலகட்டத்தில் `நீர்க்குமிழி’ நாடகத்தைப் படமாக்கினோம். நாடகத்தில் நடித்தவர்களையே பெரும்பாலும் போட்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரான அப்படம் நிறைவான வருவாயும், பேரும் கொடுத்தது. குறிப்பாக இப்படம் பற்றி ஏவி.எம். செட்டியாரும், பாரதிராஜாவும் பிரமிப்புடன் பேசினார்கள்.
அதேசமயம் புதிய நாடகமாக `நவக்கிரகம்’ எழுதினேன். அதுதான் என் கடைசி நாடகமாகிவிட்டது. காரணம், நான் உள்பட நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் சினிமாவில் பிஸியாகிவிட்டதால் நாடகத்திற்குத் தேவையான நேரத்தை எங்களால் ஒதுக்க முடியாமல் போனதுதான்.
ஆனால், சினிமாவில் தனிக் கொடி நாட்டி வெற்றிப் பாதையில் போய்க் கொண்டிருந்த எங்கள் நட்புக்கு யாரோ திருஷ்டி போட்டுவிட்டார்கள். பல ரூபங்களில் வந்த பிரச்னைகளால் பிரிந்துவிட்டோம்.
நாகேஷ் வீட்டில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தால் தனிமையில் வாழ ஆரம்பித்த நாகேஷை வைத்து `வெள்ளிவிழா’ என்ற படத்திற்கு கால்ஷீட் வாங்கினேன். எனக்குக் கொடுத்த கால்ஷீட் தினத்தன்று எனக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். படமொன்றில் நடிக்கப் போயிருந்தார். அந்த விஷயம் தெரிந்து விசாரித்தபோது, அவர் என்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் காயத்தையும், ஆறாத வடுவையும் எனக்குள் ஏற்படுத்திவிட்டது. அதில் கோபமடைந்த நான், நாகேஷின் தொடர்பை அறவே துண்டித்துவிட்டு அவருக்காக உருவாக்கிய கேரக்டரில் புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தினேன். அவர்தான் தேங்காய் சீனிவாசன்.
இந்த `வெள்ளிவிழா’ பட ஷூட்டிங்கின் போது எனக்கு ஹார்ட்-அட்டாக் வந்து நினைவைத் துறந்து பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அப்போது தினமும் நாகேஷ் வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாராம். பின்னாளில் என் மனைவி சொல்லித் தெரிந்துகொண்ட விஷயமிது.
ஆனாலும் வருத்தம் குறையாத நிலையில், நாகேஷ் உறவே இல்லாமல் ஏழெட்டுப் படங்கள் எடுத்து அதில் பல ஹிட் ஆகின. பட வெற்றிவிழா சிலவற்றில் நாகேஷைப் பார்த்துப் பேச ஆரம்பித்த பிறகு சமரசம் ஆகிவிட்டோம்.
அடுத்து `அபூர்வ ராகங்கள்’ படம் எடுக்கும்போது அதில் கண்டிப்பாக தனக்கு ஒரு ரோல் வேண்டும் என்று உரிமையுடன் கேட்டார் நாகேஷ். அவருக்காகவே டாக்டர் ரோலை உருவாக்கினேன். பிறகு அடுத்தடுத்து எங்கள் நெருக்கம் பலப்பட்டு விட்டது. அதே சமயம் நாகேஷ் பற்றி இன்னொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். என் நாடகங்கள் தொடங்கி கேள்விப்பட்ட அனைத்து நாடகங்களையும், சினிமாக்களையும் பற்றி விலாவாரியாக மணிக்கணக்கில் பேசும் நாகேஷ், தன் குடும்ப விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. அந்த வகையில் நாகேஷ் இரும்பு மனசுக்காரர் என்றுதான் சொல்வேன். மொத்தத்தில் நாகேஷ் மறைவு நடிப்பிற்கு இழப்பு!” என்று கூறி கண்களைத் துடைத்துக்-கொண்டார் கே.பி.
February 8th, 2011 at 12:01 am
நாகேஷைப் பற்றி ‘ஆச்சி’ மனோரமா:
”நாகேஷோடு நான் சேர்ந்து நடிச்ச முதல் படம் ‘நாகமலை அழகி’. அப்ப நாகேஷ், ரொம்ப ஒடிசலா இருப்பார். என் கையைப் புடிச்சுக்கிட்டு நாகேஷ் நடிக்கிற காட்சிகளின்போது எங்கம்மாவுக்குப் பயங்கரமா கோபம் வரும். ‘அவரைச் சாதாரணமா நினைக்காதீங்க. திறமைசாலி… நிச்சயம் பெரிய ஆளா வருவார்’னு நான் என் அம்மாவைச் சமாதானப்படுத்துவேன். ஆரம்ப நாட்களில் டான்ஸ் காட்சிகள் என்றாலே நாகேஷூக்கு அலர்ஜி. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷன்ல ‘தெய்வத்தின் தெய்வம்’ படப்பிடிப்பு சமயம், நாகேஷ் நடனக் காட்சிகளில் நிறைய டேக்குகள் வாங்கினார். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆயிட்ட டைரக்டர், அந்தப் பாட்டையே படத்திலிருந்து தூக்கிட்டார். அந்த சம்பவம் நாகேஷ் மனசுல ஆறாத காயத்தை உண்டாக்கிடுச்சு. அனா, அதையே வைராக்கியமா எடுத்துக்கிட்டு, சுந்தரம் மாஸ்டர்கிட்ட சில மாதங்கள் இரவும் பகலும் நடனத்தைக் கத்துக்கிட்டார். அப்புறம் சினிமாவில் ‘நாகேஷ் டான்ஸ்’னு ஒரு புது வகை நடனம் உருவாகிற அளவுக்கு டான்ஸ்ல பிரமாதப்படுத்த ஆரம்பிச்சுட்டார்.
பாலசந்தர் சாரின் ‘நவக்கிரகம்’ படத்தில் நடிக்கும்போது நாகேஷோடு எனக்கு மனஸ்தாபம் ஆயிருச்சு. அதைச் சரிசெய்து, எங்களை நடிக்கவைக்க பாலசந்தர் சார் ரொம்ப முயற்சி பண்ணினார். ஆனா, அவரால முடியலை. அதுக்கப்புறம் முப்பது வருஷத்துக்கும் மேல நான் நாகேஷோடு சேர்ந்து நடிக்கலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விழாவுல நான், நாகேஷ், பாலசந்தர் சார் மூணு பேரும் கலந்துக்கிட்டோம். அப்போ பாலசந்தர் சார், எங்க ரெண்டு பேரையும் மேடைக்குக் கூப்பிட்டு, பக்கத்து பக்கத்துல நிக்க வெச்சுக்கிட்டு, ‘இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்துப் பார்க்க, எனக்கு 30 வருஷத்துக்கு மேலாயிடுச்சு’னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். ‘ஹாலிவுட் நடிகர் ஜெரி லூயிஸ்தான் என் குருநாதர்’னு அடிக்கடி என்கிட்டே சொல்வார் நாகேஷ். நான் ஒரு சமயம் அவர்கிட்ட, ‘ஆனா நீங்க நடிச்ச ‘வைத்தி’, ‘தருமி’ கேரக்டர்களை லூயிஸை நடிக்கச் சொன்னா, அவரால நிச்சயமா முடியாது’ன்னு சொன்னேன். என்னை ஆச்சர்யமா பார்த்தார்.
ஒரு நிமிஷம்கூட சும்மாவே இருக்காம, எப்பவுமே துறுதுறுன்னு சுறுசுறுப்பா இருப்பார். அப்படிப்பட்டவர் இப்போ சலனமே இல்லாம கண்ணாடிப் பெட்டிக்குள்ள படுத்திருக்கிறதைப் பார்க்குறப்போ, ‘சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ’ன்னு கண்ணதாசன் பாட்டுதான் ஞாபத்துக்கு வருது!” கண்ணீரோடு முடிக்கிறார் ஆச்சி.
February 11th, 2011 at 1:02 am
வயிற்று வலி நோயாளி:
இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை “கம்ப ராமாயணம்’ நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார். ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார்.ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார்.
எம்.ஜி.ஆர்., பாராட்டு :
இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்’ என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்.”மேக்அப்’ போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை., பார்த்ததில்லை.
தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. “தாமரைக்குளம்’ இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.
ஆட்டுக்கல்லைப் போல் தான். ஆண்டவன்:
ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?’ என்றார்.
சிரித்தபடியே நாகேஷ், “உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா… அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா… மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல் தான். ஆண்டவன் “அம்மை’ என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது’ என்றார்.
இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. “சிரித்து வாழ வேண்டும்’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார்.
ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு.
June 16th, 2011 at 2:09 pm
சீனிவாசன் உப்பிலி எழுதியுள்ள பதில்கள் ( அப்படித்தானே அதை வைத்துகொள்ள வேண்டும் ) தொடரின் அடுத்த, அடுத்த அத்தியாங்கள் போல இருந்தன. நமது எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து நீங்கா இடம் பிடித்துள்ள நாகேஷ் பற்றிய கூடுதல் விபரங்கள் எந்த பக்கத்திலிருந்து வந்தாலும் சந்தோஷம்தானே? நன்றி சீனிவாசன் உப்பிலி அவர்களே.