தீ

அவர் ஒரு பெரிய வியாபாரி. நல்ல தர்ம மனப்பான்மை கொண்டவர். தன்னைத் தேடி வருகிற எல்லோருக்கும் வயிறு நிறையச் சாப்பாடு போட்டு, வேண்டிய பொருள்களை அள்ளித்தந்து வழியனுப்புகிறவர்.

ஒருநாள், ஜென் துறவி ஒருவர் அந்த ஊருக்கு வந்தார். அந்த வியாபாரியின் வீட்டில் தங்கினார்.

ஏனோ, அந்தத் துறவிக்கு வியாபாரியைப் பிடிக்கவில்லை. அவருடைய வீட்டில் இருக்கும் செல்வச் செழிப்புகளையெல்லாம் அருவருப்போடு பார்த்தார். ‘இவனிடம் காசு கொட்டிக்கிடக்கிறது. ஆனால் நான், ஞானத்தின் அதிபதி. இவன் என்னுடைய கால் தூசுக்குச் சமம்!’ என்று நினைத்துக்கொண்டார்.

மறுநாள் காலை, முனிவர் பக்கத்தில் இருக்கும் நதியில் நீராடுவதற்காகச் சென்றார். அப்போது அந்த வியாபாரியும் அங்கே குளித்துக்கொண்டிருந்தார்.

முனிவர் ஆற்றில் இறங்கப்போகும் நேரம். அவருக்குப் பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் அந்த வியாபாரியின் வீடு தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.

‘அச்சச்சோ’ என்று அலறினார் முனிவர். ‘என்னுடைய சட்டை, வேட்டி, ஜபமாலை, புத்தகங்களெல்லாம் அங்கே இருக்கிறதே. அதெல்லாம் நெருப்பில் எரிந்து வீணாகிவிடுமே’ என்று பயந்துபோனார். திரும்பி ஓடப் பார்த்தார்.

ஆனால் அதேசமயம், அந்த வியாபாரியின் முகத்தில் துளி அதிர்ச்சியோ பதற்றமோ இல்லை. அவர் எதுவுமே நடக்காததுபோல் தொடர்ந்து குளித்துக்கொண்டுதான் இருந்தார்.

இதைப் பார்த்த முனிவர் அதிர்ந்து நின்றார். ’அத்தனை பெரிய மாளிகையே பற்றி எரியும்போதும் இவன் பதற்றமில்லாமல் இருக்கிறான் என்றால், அது தன்னுடையது என்ற ஒட்டுதல் இவனிடம் இல்லை என்று அர்த்தம். ஆனால் நான்? என்னைத் துறவி என்று சொல்லிக்கொள்கிறேன். ஆனால் என்னுடைய அரை முழத்துணி நெருப்பில் எரிந்துவிடுமோ என்று பயந்து நடுங்குகிறேன். என்னைவிட இவன் பலமடங்கு உயர்ந்தவன்!’

One comment

  1. anvarsha
    #1

    இது ஜனகனின் கதை இல்லையோ?

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: