வரைபடம்

’மாணவர்களே, எல்லோரும் வந்துவிட்டீர்களா? இன்றைய பாடங்களைத் தொடங்கலாமா?’

குருநாதரின் கம்பீரமான குரல் கேட்டதும், அவருடைய மாணவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். அவர் சொல்லப்போகும் விஷயங்களைக் குறிப்பெடுப்பதற்காக நோட்டுப் புத்தகங்களைப் பிரித்துவைத்துக்கொண்டார்கள்.

‘இன்றைக்கு நாம் ஜென் கடவுள் தன்மையைப்பற்றிப் பேசப்போகிறோம்’ என்றார் குருநாதர். ‘கடவுள் என்று சொன்னதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?’

முதல் வரிசையில் ஒரு மாணவன் கை உயர்த்தினான். அவன் பதில் சொல்ல ஆரம்பிப்பதற்குள் அவனுடைய நாற்காலியிலிருந்து ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து குருநாதரின் மேஜைமேல் உட்கார்ந்தது.

அதைக் கவனித்த குருநாதர் பக்கத்திலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கரப்பான்பூச்சியை ஓரமாகத் தள்ளிவிட்டார். எதுவுமே நடக்காததுபோல் வகுப்பைத் தொடர்ந்தார்.

ஆனால், அவருடைய மாணவர்கள் இதைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்கள். ‘குருவே, இதென்ன அநியாயம்?’

‘என்னது? அநியாயமா? எது?’

’உங்கள் கையில் இருப்பது அரிய ஜென் தத்துவங்கள் அடங்கிய ஒரு புனிதமான நூல். அதன் பெருமைகளைப்பற்றி நீங்களே பலமுறை சொல்லியிருக்கிறீர்கள்’ என்றான் ஒரு மாணவன். ‘ஆனால் இப்போது, நீங்களே அதைக்கொண்டு ஒரு கரப்பான் பூச்சியைத் தள்ளிவிடுகிறீர்களே. இது அநியாயம் இல்லையா? அந்தப் புத்தகத்துக்குச் செய்கிற அவமானம் இல்லையா?’

குருநாதர் மெல்லச் சிரித்தார். ‘நான் அடையவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டேன். இனிமேல் வரைபடங்கள் எதற்கு?’

No comments yet

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: