துதிப்போர்க்கு வல்வினை போம்!

நேற்று வள்ளுவர் கோட்டத்தில் அய்யன் திருவள்ளுவர் விழாவுக்கு வாழும் வள்ளுவப் பெருந்தகை வந்திருந்தார். ஆனால் அவர் வாய்திறந்து குறளோவியத்தை அள்ளித் தெளிப்பதற்குள் நான் புத்தகக் கண்காட்சிக்குப் புறப்பட்டுவிட்டேன். அப்போது தன்னை ‘வாழும் வள்ளுவன்’ என்றெல்லாம் வாழ்த்தக்கூடாது என்று கருணாநிதி கடிந்துகொண்டதாகக் கேள்வி.

மிக்க நல்லது.

ஆனால் கலாசார மாற்றம் அப்படியெல்லாம் ஓரிரவில் நடந்துவிடக்கூடியதா என்ன? கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத்தில் நடந்திருப்பது என்ன? மேடைகளில் நடப்பது சாதாரணப் புகழ்ச்சியா என்ன? காதுகள் இரண்டும் வலிக்க வலிக்க, கதற்கக் கதற நிகழ்த்தப்படும் வன்புகழ்ச்சி. அப்படி காது குளிரப் புகழ்ந்தால் நமக்கும் நாலு நல்லது நடக்கும் என்று நம்பத்தொடங்கும் காக்கைகள் கா கா என்று கரைவது இயல்பே. இதன் விளைவாக மேடையில் ஏற்றப்படும் நிஜமான அறிஞர்கள்மீது சுமத்தப்படும் அழுத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. அவர்களும் புகழ்ந்து தள்ளவேண்டும். இல்லாவிட்டால் என்ன ஆகிவிடுமோ என்ற பயம்.

இதில் சொந்தத் தொலைக்காட்சிகள் செய்யும் ஆபாசம் கொஞ்சநஞ்சமல்ல. கலைஞரின் உடலில் அதிகப் புண்ணியம் செய்திருப்பது இடதுகைக் கட்டைவிரலா, வலதுகால் சுண்டுவிரலா என்று பட்டிமன்றம் நடத்திக் கொஞ்சுவது அதில் தலையாய ஒன்று. இந்தக் கூத்தில் சொந்தக் கட்சிக்காரர்கள் தாண்டி தோழமைக் கட்சிக்காரர்களும் சேர்ந்துகொள்வார்கள்.

சரி போகட்டும். கருணாநிதியே சொல்லிவிட்டாரே, இன்று முதலாவது இந்த வாழும் வள்ளுவமே, காவியமே, கற்பகமே எல்லாம் அடங்கிப்போய்விடும் என்று பார்த்தால் அது எப்படி?

சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள் அன்று நிகழ்ச்சியில் மேயர் மா. சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, பொது நூலக இயக்குனர் அறிவொளி, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர் கயல் தினகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் மேயர் சுப்பிரமணியனும் கயல் தினகரனும் கட்சிக்காரர்களுக்கே உரித்த தன்மையோடு கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளினர்.

கயல் தினகரன், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவலைச் சொன்னார். ஜெயலலிதா ஆட்சியில், நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது மதன் எழுதிய ‘வந்தார்கள்… வென்றார்கள்…’ புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தாராம். மற்றபடி தமிழகத்திலேயே அண்ணாதுரைக்கு அடுத்து கருணாநிதிதான் படிப்பில் சிறந்து விளங்கும் முதல்வராம். (ஆக, முதல் இரு இடங்கள் உறுதியாகிவிட்டன. ராஜாஜி முதல் பிறர் மூன்றாவது இடத்துக்கு வேண்டுமென்றால் போட்டி போட்டுக்கொள்ளலாம்.)

இப்படித் தொடர்ந்த பேச்சைத் தாங்கமுடியாது, நேராக ‘கலைஞர் செய்திகள்’ சானலில் ‘ஒரு மணியில் ஒரு நாள்’ நேரலை நிகழ்ச்சியில் கிரிக்கெட் பற்றி உரையாடச் சென்றுவிட்டேன்.

மேயர் சுப்பிரமணியன் சொன்னதில் ஒரு உருப்படியான விஷயம். சொத்து வரிமீது வசூலிக்கப்படும் மீவரி (நூலகத்துக்குச் செல்லவேண்டியது) சுமார் 40 கோடி சென்னை மாநகராட்சி தரவேண்டியது இன்னும் நிலுவையில் உள்ளது என்று அறிவொளி கூறியிருந்தார். அதனை உடனடியாகத் தருவதோடு, இனி ஒவ்வோர் ஆண்டும் இந்த நிலை ஏற்படாது உடனடியாகத் தந்துவிடுவதாக வாக்களித்துள்ளார் மேயர். இதனை குடிமக்களாகிய நாம்தான் கண்காணிக்கவேண்டும்.

*

இன்று இறுதி நாள் ஆனதால், நடைபாதைக் கடைகளைப் பார்வையிட்டேன். இன்றுதான் அதற்கு நேரம் கிடைத்தது. முதலில் ஒரு கடையில் பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களாக அழகாக அடுக்கிவைத்திருந்தார் கடைக்காரர். அவரைப் பார்த்தால் படித்த நபராகத் தெரியவில்லை. குத்துக்காலிட்டு பீடி பிடித்தபடி இருந்தார். ஆனால் அவ்வளவு சரியாக அவர் புத்தகங்களை அடுக்கியிருந்தது வியக்கத்தக்கதாக இருந்தது. எப்படி அவருக்கு அந்தப் புத்தகங்கள் கிடைக்கின்றன என்று விசாரித்தேன். தெளிவான பதில் கிடைக்கவில்லை.

பைரேட் செய்யப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள் நிறையக் கிடைத்தன. ராமச்சந்திர குஹாவின் இந்தியா ஆஃப்டர் காந்தி, அமர்த்தியா சென்னின் தி ஐடியா ஆஃப் ஜஸ்டிஸ், நந்தன் நீலகெனி, நாராயண மூர்த்தி என்று எக்கச்சக்கமான புத்தகங்கள் இப்படி. இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

பிற அனைவரும் பழைய புத்தகங்களை 20 ரூ, 30 ரூ, 50 ரூ என்று கூவி விற்றுக்கொண்டிருந்தனர். அவற்றில் ஒருசிலவே மாணிக்கங்கள், மீதம் உபயோகமற்றவை. உட்கார்ந்து தேடினால் மட்டுமே நல்லவை கிடைக்கும். நான் ஒரு புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொண்டேன். காவ்யாவின் பல புத்தகங்கள் கிடைத்தன. ஒரியண்ட் பிளாக்ஸ்வான் முன்னொரு காலத்தில் போட்ட தமிழ்ப் புத்தகங்கள் சில கருக்கழியாமல் கிட்டத்தட்டப் புதிதாகக் கிடைத்தன.

*

இந்தப் புத்தகக் கண்காட்சியின் சிறந்த இரண்டு நாள்கள் முதல் வார இறுதிதான். அதாவது 8, 9 ஜனவரி 2011. அந்த நாளில்தான் பெரும்பாலும் அனைத்துக் கடைக்காரர்களும் தங்கள் சிறந்த விற்பனையைப் பார்த்திருப்பார்கள். பொதுவாக இரண்டாவது சனி, ஞாயிறுதான் எல்லாப் புத்தகக் கண்காட்சிகளிலும் சிறப்பானவையாக இருக்கும். இம்முறை பொங்கல் காரணமாக அது தடைப்பட்டுள்ளது என்பதே என் கருத்து.

*

ஒரு முக்கியமான பரிசோதனையை இந்த ஆண்டு பபாஸி செய்து பார்க்கவேண்டும். ஆறு மாதம் கழித்து ஜூன், ஜூலை மாதவாக்கில், நந்தம்பாக்கம் சென்னை டிரேட் செண்டரில் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்தவேண்டும். ஒரேயடியாக ஜனவரி கண்காட்சியை அங்கே எடுத்துக்கொண்டு போகவேண்டியதில்லை. ஆண்டுக்கு இரு புத்தகக் காட்சிகளை சென்னையில் எளிதாகச் செய்யலாம். தென் சென்னை ஆசாமிகள் வருவதற்கு எளிதாக இருக்கும்.

இதனை இம்முறை வலியுறுத்திப் பேசப்போகிறேன். வேறு சிலருக்கும் இதேபோன்ற கருத்து இருப்பதாகத் தெரிகிறது.

*

ஹரன்பிரசன்னா சொன்னதுபோல, ஒவ்வொரு தினமும் விடாது எழுதுவது, அதுவும் இரவில் நெடுநேரம் விழித்திருந்து செய்வது அசதியாக உள்ளது. ஆனால் எடுத்துக்கொண்டுவிட்டோமே என்றுதான் ஓட்டினேன். படித்திருக்கும் உங்களுக்கும் அப்படியே தோன்றியிருக்கும். இன்றுடன் நிறைவுபெறுகிறது இந்தத் தொல்லை. இனி, பிற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

நன்றி.

16 comments so far

 1. Boston Bala
  #1

  Thx. Nice coverage.

 2. REKHA RAGHAVAN
  #2

  புத்தக காட்சி பற்றிய தங்களின் தினசரி தொகுப்புகளை விடாமல் படித்து வந்தேன்.நன்றி பல

 3. kashyapan
  #3

  நான் நகபுரியில் வசிக்கிறேன்.வயது 75. பயணம் செய்ய துணை வேண்டும். புத்தகக் கண்காட்சி பற்றி நீங்கள் எழுதியது என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதுவும் காணொளி பதிவு நேரில் சென்னையில் இருந்த உணர்வைக் கொடுத்தது. வெளிநாட்டில் இருக்கும் புத்தகப் பிரியர்களுக்கும் நன்மை செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.—carry on comrade!—காஸ்யபன்.

 4. ராமதுரை
  #4

  ராமதுரை எழுதியது
  ஜூன் ஜூலையில் நந்தம்பாக்கத்தில் இரண்டாவது புத்தகக் கண்காட்சி நடத்துவது நல்ல யோசனையாகத் தோன்றுகிறது. ஜனவரி புத்தகக் கண்காட்சி ஒரு பொழுதுபோக்குத் திருவிழாவாக மாற்றப்பட்டு விட்டது.இது தொடர்பாக இன்னொரு யோசனை. ஆண்டு தோறும் ஒரு துறையை எடுத்துக் கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.அதாவது ஓர் ஆண்டில் சுற்றுலா என்ற பொருளை எடுத்துக் கொண்டு அது தொடர்பான புத்தகங்களை பெரிதாகக் காட்சிக்கு வைக்கலாம். இன்னோர் ஆண்டில் வரலாறு என எடுத்துக் கொள்ளலாம். இது புத்தகக் கண்காட்சி என்றால் ஏதோ சிறு கதை நூல்களும் நாவல் நூல்களும் விற்கப்படுகிற இடம் என்ற எண்ணத்தைப் போக்கும். இப்போதுள்ள நிலையில் ஆண்டுதோறும் இலக்கியத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கிறோம். இலக்கியத்தை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. மற்ற பல பொருள்களிலும் தமிழில் புத்தகங்கள் உள்ளன என்பதை சிறப்பாக எடுத்துக் காட்ட முயல வேண்டிய அவசியம் உள்ள்து.
  ராமதுரை

 5. S. Krishnamoorthy
  #5

  முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள், பத்ரி!
  துதிப்போர்க்கு வல்வினை மட்டும்தானா போகும்?
  துன்பமும் போகும்!

 6. Krishnan
  #6

  It was really educative going through your daily posts on book fair. Thanks a lot.

 7. அரவிந்தன் நீலகண்டன்
  #7

  //அவற்றில் ஒருசிலவே மாணிக்கங்கள்,//

  வயிற்றில் பாலை வார்த்தீர்கள் காதில் புகை வருவதை தவிர்த்தீர்கள்.

 8. ram
  #8

  //ர். ஜெயலலிதா ஆட்சியில், நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது மதன் எழுதிய ‘வந்தார்கள்… வென்றார்கள்…’ புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தாராம்.// ‘கொலைபண்றாங்க, கொலைபண்றாங்க’ என்ற வசனத்தோடு நடந்த அந்த கைது படலத்தின் போது கருணாநிதியே டி வி யில் பேசி நான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன். டீப் ஸ்லீப்பு என்று திரும்ப திரும்ப கூறினார். ஆனால் மேடையில் எப்படி புழுகுகிறார்கள் பாருங்கள்.

 9. Badri Seshadri
  #9

  நான் சொல்லவந்தது (கயல் தினகரன்) சொன்னது அதுவல்ல. அவர் தூங்கச் செல்வதற்குமுன், மதனின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தைப் படித்துக்கொண்டார் என்பதுதான் தகவல். ஆக, அவர் டீப் ஸ்லீப்பில் இருந்திருக்கும்போது விழிக்கச் செய்து கைது செய்யப்பட்டிருப்பதில் எந்த உண்மைக் குறைவும் இருக்கத் தேவையில்லை.

 10. ram
  #10

  //நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது // என்றிருந்ததால் குழப்பம். //அவர் தூங்கச் செல்வதற்குமுன்// என்பதை புரிந்து கொண்டேன். நன்றி!

 11. அருண்பிரபு
  #11

  //அப்போது தன்னை ‘வாழும் வள்ளுவன்’ என்றெல்லாம் வாழ்த்தக்கூடாது என்று கருணாநிதி கடிந்துகொண்டதாகக் கேள்வி.//

  நியாயம் தான். வள்ளுவரை அல்லவா வாழ்ந்த கருணாநிதி என்று வாழ்த்த வேண்டும்! விவரங்கெட்ட தனமாக வாழ்த்துவதை பாவம் அவரும் எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்வார்!!

  //கலைஞரின் உடலில் அதிகப் புண்ணியம் செய்திருப்பது இடதுகைக் கட்டைவிரலா, வலதுகால் சுண்டுவிரலா என்று பட்டிமன்றம் நடத்திக் கொஞ்சுவது அதில் தலையாய ஒன்று.//
  அடுத்த பட்டிமன்றத்துக்கு தலைப்பு ரெடிங்கோவ்!

  //உட்கார்ந்து தேடினால் மட்டுமே நல்லவை கிடைக்கும்.//
  மயிலை லஸ் கார்னர் பழைய புத்தகக்கடை ரெகுலர் கஸ்டமர் என்ற முறையில் இதை திட்டவட்டமாக ஆதரிக்கிறேன்.

  கடைசி பத்தியில் சோ எழுதிக் கொடுத்தாரோ?

 12. அருண்பிரபு
  #12

  //ஜூன், ஜூலை மாதவாக்கில், நந்தம்பாக்கம் சென்னை டிரேட் செண்டரில் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்தவேண்டும்.//
  வரவேற்கத்தக்க விஷயம்.

 13. saravanan
  #13

  என்ன பத்ரி நடைபாதை கடையை பற்றி இன்றைக்குத்தான் எழுத தோன்றியதோ. முன்பே எழுதி இருந்தால் பதிவை படிக்கும் பலரும் சில நல்ல புத்தகத்தை வாங்கி இருப்பார்களே!

 14. சரவணன்
  #14

  சோதனை

 15. ப.கனகசபாபதி
  #15

  மிக்க நன்றி. தினசரி புத்தகக் கண்காட்சியை பார்த்து எழுதிய விபரங்கள் நன்றாக இருந்தது.

 16. K.VEL
  #16

  சென்னை நாஞ்சில் விழா ஒளிபதிவு செய்த VCD கேஸட் கிடைக்குமா
  9487599487

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

2 Trackbacks/Pings

Facebook comments: