2 மில்லியன் டாலர் கேள்வி

புது வருடம் யாருக்கு வளமாக அமைந்ததோ இல்லையோ, ஃபேஸ்புக்குக்குப் பேஷாக விடிந்துள்ளது. ஃபேஸ்புக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது, அதன் நிறுவனர் மார்க் சக்கெர்பெர்க்குக்கு ’டைம்’ பத்திரிக்கையின் ’இந்த வருட மனிதர்’ விருது, போன வருடத்தில் வட அமெரிக்காவில் கூகுளைவிட அதிகம் விசிட் செய்யப்பட்ட சைட் போன்ற பைசா பிரயோஜனம் இல்லாத சமாசாரங்களுக்கிடையே ஒரு 450 மில்லியன் டாலர் பம்பர் பரிசு, வால்-ஸ்ட்ரீட்டின் முன்னணி நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸிடமிருந்து!
2007ல் மைக்ரோசாஃப்டைக் கொம்பு சீவிக் கூகுளுடன் மோதவிட்டு 240 மில்லியன் டாலர்களுக்கு 1.6% பங்குகளை விற்றார்கள். அப்போது ஃபேஸ்புக்கின் மொத்த மதிப்பு 15 பில்லியன் டாலர்கள் என்றார்கள். இப்பொழுது கோல்ட்மேன்னின் 450 மில்லியன் டாலர் முதலீடை வைத்து ஃபேஸ்புக்கின் மொத்த மதிப்பு 50 பில்லியன் டாலர் என்கிறார்கள்!
ஆனால் இதெல்லாம் எந்த அளவு உண்மையான கணிப்புகள்? ‘100 மீட்டர் தூரத்தைப் பத்து விநாடிகளில் ஒடுபவர் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை 100 விநாடிகளில் கடப்பார்’ என்று கணக்குப் போடுவதைப் போன்ற அபத்தம் இல்லையோ? அதையெல்லாம் யாரும் காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இல்லை! ’நாங்களே சங்கப் பணத்திலிருந்து 450 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளோம், மேலும் 1.5 பில்லியன் டாலர் மதிப்புவரையிலான பங்குகள் விற்பனைக்கு உள்ளன. இந்தச் சலுகை இங்குமட்டுமே, வேறு எங்கும் இல்லை’ என கோல்ட்மேன் கடை விரிக்குமுன்னே கடை காலியாகும் அளவுக்கு அந்தப் பாக்கிப் பங்குகளுக்கு அடிதடி.
தற்பொழுது தனியார் நிறுவனமான ஃபேஸ்புக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு இது ஒரு முன்னோட்டம், முடிவாக முற்றிப் பங்குச்சந்தைக்கு வரும்போது, இப்பொழுது இறைக்கும் பணத்தை வட்டிக்கு மேலாக அள்ளலாம் என்பதுதான் இந்த அடிதடிக்கு அடிப்படை. குரூப்-ஆன், லிங்கிட்-இன் என மற்ற டெக்னாலஜி கம்பெனிகளும் பங்குச் சந்தை கோதாவில் குதிக்க  முண்டாசு கட்டிக் களத்தில் இறங்கியுள்ளனர் என்பது கொசுறு செய்தி.
ஃபேஸ்புக்கிற்கு 500 மில்லியன் பயனீட்டாளர்கள். ஆகையால் இன்றைய ஃபேஸ்புக்தான் நாளைய கூகிள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் என்று சூதாட்டச் சிந்தனைவசப்படுபவர்கள், இன்றைய ஃபேஸ்புக் நேற்றைய யாகூ, மைஸ்பேஸ், ஆர்குட் போலக் காணாமலும் போகலாம் என்பதையெல்லாம் யோசிப்பதே இல்லை.வரலாறு முக்கியமல்லவா!
பங்குச் சந்தையில் பட்டியல் இடுவதற்குச் செலவாகும் காசு இருந்தால், இன்னும் ஒரு 100 மில்லியன் பயனீட்டாளர்களைத் தாங்கலாம். அல்லது, ‘ஃபேஸ்புக்கே எங்கள் ஐடியாதான், கல்லூரிக் காலத்தில் மார்க் திருடிவிட்டார்’ என்று விடாமல் மறுபடி மறுபடி வழக்குப் போடுகிற விங்கில்வாஸ் இரட்டையரைச் சமாளிப்பதற்கான வழக்குச் செலவுகளுக்குக் கொடுக்கலாம். அதை எல்லாம் விட்டுவிட்டுப் பங்குச் சந்தையில் கம்பெனியின் கடிவாளத்தை  மார்க் கொடுக்கமாட்டார். அவருக்குக் காசைவிட ’கன்ட்ரோல்’தான் முக்கியம். ’இந்த முதலீட்டுப் பணம் திரட்டப்படுவதே பங்குச்சந்தைப் பக்கம் தலை, வால் எதுவும் செல்லாமல் இருக்கதான்’ என்று பலர் ஆருடம் சொல்கிறார்கள்.
இன்னொரு கோஷ்டி இதை வன்மையாக மறுக்கிறது. ‘ம்ஹூம், சான்ஸே இல்லை. இப்படி எல்லாம் பங்கு விற்பதால் கம்பெனியில் 500 முதலீட்டாளர்களுக்கு மேல் வந்துவிடுவார்கள். அப்படி வந்தால் 1934ம் வருடச் சட்டப்படி லாப நஷ்டக் கணக்கை பப்ளிகுட்டி செய்ய வேண்டும். அதற்குச் சந்தையில் பட்டியலிடுவதே மேல்’ என்பது இந்தச் சட்டாம்பிள்ளைகளின் வாதம்.
‘கோல்ட்மேன்னா கொக்கா? ஃபோர்டு கம்பெனியைக் கொண்டுவந்தாங்க, போலோ ரால்ஃப் லோரன்னைக் கொண்டுவந்தாங்க, இ-பே-வைக் கொண்டுவந்தாங்க. அவ்வளவு ஏன், மைக்ரோசாஃப்டைக்கூட இவங்கதான் சந்தைக்குக் கூட்டிவந்தாங்க. சக்கர்பெர்க் எல்லாம் சப்பை மேட்டர். ஃபேஸ்புக்கையும் கொண்டுவருவாங்க. அப்படிக் கொண்டுவந்தால்தானே அதற்கெல்லாம் கமிஷன் கொட்டும்? இதேபோல் இன்னொரு கம்பெனியை உசுப்பேற்றமுடியும், அடுத்த நூற்றாண்டுவரை தொடர்ந்து கோல்டுமேன் கடையை நடத்தமுடியும்?’ என்று நன்னம்பிக்கைமுனையில் கனவுக்கோட்டை கட்டுபவர்கள் ஒரு பக்கம்.
இதையெல்லாம் தாண்டி, நம்மைப்போன்ற சாதாரண முதலீட்டாளர்களுக்கு நிறைய ’2 மில்லியன் டாலர்’ கேள்விகள் இருக்கின்றன. ’கோல்ட்மேன் கொள்ளைக்காரன். கிளையன்ட்டை ஏமாற்றிவிட்டான் என அமெரிக்க செபியே வழக்குத் தொடர்ந்துள்ளது. இவனை நம்பலாமா? எதை வைத்து ஃபேஸ்புக்கிற்கு இவ்வளவு மதிப்பு என முடிவு செய்தார்கள்? ஃபேஸ்புக் காட்டிய கணக்கு சரிதான் என்பதற்கு என்ன கியாரண்டி? இந்தக் கம்பெனிக்கெல்லாம் இவ்வளவு காசு கொடுக்கமுடியாது என்று கோல்ட்மேன்னின் நிதி மேலாளர் ஒருவரே சொல்லியபிறகு கோல்ட்மேன் நமக்கு விற்பதெல்லாம் காதில் பூ சுற்றும் சமாச்சாரமில்லையா?’
’கிட்டத்தட்ட 9% கமிஷன் என்பது பகல் கொள்ளை. அப்படியே கொடுத்தாலும், நம்மைப் போன்ற முதலீட்டாளர்களுக்கு 2013 வரை லாக்-இன் பீரியட். பங்குகளை விற்கமுடியாது. ஆனால் கோல்ட்மேன் எப்பொழுது வேண்டுமானாலும் யாருக்கும் சொல்லாமல் காதும் காதும் வைத்தாற்போல அவர்களுடைய பங்கை விற்கலாம். இது எந்த ஊர் நியாயம்?’
’அதுவும் இல்லாமல் 900 பில்லியன் டாலர் பேலன்ஸ் ஷீட்டில் 450 மில்லியன் டாலர் என்பது கடலில் கரைத்த பெருங்காயம். நமக்கு அப்படியா?’
’அட சந்தைக்கு வந்தாலும் வராவிட்டாலும் கோல்ட்மேன் எப்படியாவது போட்ட முதலை எடுத்துவிடுவான். நம் முதல், முதலை வாயில் போகவில்லை என்பதற்கு என்ன நிச்சயம்? ’
’பத்து வருடங்களுக்குமுன்னர் இப்படிதான் டெக்னாலஜி குமிழில் தாதாக்கள் எல்லாம் பீஸ்-பீஸ் ஆன டெரர் சரித்திரத்தை ஷார்ட் டெர்ம் மெமரி லாஸில் தொலைக்கலாமா?’
போகட்டும். அதென்ன 2 மில்லியன் டாலர் கேள்வி?
இரண்டு மில்லியன் டாலர்களுக்குக் கம்மியாகப் பங்கு வேண்டும் என்று கேட்டவர்களையெல்லாம் ஆட்டத்துக்குச் சேர்த்துக்கொள்வதில்லை என்று கோல்ட்மேன் சாக்ஸ் முடிவு செய்துள்ளதாம்.
இதை முன்னாடியே சொல்றதுக்கு என்னவாம்? நாம போய் பார்ம்வில்லில் அமோக வெங்காய விளைச்சல் செய்வோம்! வர்றீங்களா?

7 comments so far

 1. Narain
  #1

  கோல்ட்மென் சொல்லும் பேஸ்புக் மதிப்பான 50பில்லியன் என்பதை எப்படி கணக்கிட்டார்கள் என்று சொல்லவில்லை. Secondary Market-ல் பேஸ்புக்கின் பங்குகளின் மதிப்பு 35பில்லியன் டாலர்கள் வரை போவதாக ஒரு கணக்கு சொல்கிறது. இதிலும், இது கணக்கிடப்பட்ட முறை தெளிவாக சொல்லப்படவில்லை.

  500 மில்லியன் பயனாளர்கள் கொண்ட பேஸ்புக்கினை 50 பில்லியனுக்கு மதிப்பீடு செய்தால், ஒரு பயனாளரின் மதிப்பு $100 வருகிறது. ஒரு பயனாளரின் வருடாந்திர மதிப்பு ஒசியில் கொடுக்கும்போது $100 வருமா என்பது முதல் மில்லியன் டாலர் கேள்வி? இரண்டாவது இதுவரை பேஸ்புக்கின் வருமானம் என்பது வலதுப்பக்கம் வரும் யாருமே பார்க்காத விளம்பரங்களிலிருந்து தான் வருகிறது (இதே வலதுபக்க ஆட்வேர்ட்ஸ் விளம்பரங்கள் தான் கூகிளின் மதிப்பினை மாற்றியது என்பதையும் மறுக்க முடியாது) ஆனால், கூகுளுக்கும் பேஸ்புக்கிற்கும் அடிப்படை வித்தியாசங்களுண்டு.

  நான் பேஸ்புக் போவது என்னுடைய நண்பனோ, தோழியோ என்ன உளறியிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக, அங்கே விளம்பரங்களுக்கு மரியாதை பெருசாய் இல்லை. அமெரிக்காவில் எப்படி என்று தெரியாது. ஆனாலும், இந்த 50பில்லியன் மதிப்பீடு என்பது கொஞ்சம் ஒவர் தான் என்று தோன்றுகிறது.

 2. Suresh
  #2

  இங்க ஒரு லைக் பட்டன் போடுங்கப்பா 🙂 . வெங்காய விளைச்சல் அமோக வியாபாரம் 🙂

 3. அப்பு
  #3

  கொஞ்சம் ஓவர் இல்லை ரொம்பவே ஓவர். ஆனால் பின்வருவனவற்றையும் நினைவில் கொள்ளலாம்.
  1)குறிப்பிட்ட சில கல்லூரி மாணவர்களைத் தவிர வேறு யாரும் அணுக முடியாமல் இருந்த ஃபேஸ்புக்கின் ஆரம்ப காலத்திலேயே விளம்பரங்களில் காசு வந்தது. அதுவும் விளம்பரம் செய்யும் கம்பெனியால் கூட விளம்பரம் எப்படி இருக்கும் என பார்க்க முடியாமல் இருந்த போதும் விளம்பரம் செய்தார்கள். [அது போல் முன் எப்பொழுதும் பின் எப்பொழுதும் இருந்திருக்காது]
  2)Groupon போல அம்சத்தை உள்ளே கொண்டு வந்தால்[காப்பியடித்தால்] வருமானம் பிய்த்துக் கொண்டு போக வாய்ப்பு உள்ளது! அது வரை 500 மில்லியனையும் கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்க வேண்டும்!

 4. Preti
  #4

  Translate please. 🙂

 5. கிரி
  #5

  பத்தி பிரித்து எழுதுங்கள். படிக்க ரொம்ப சிரமமாக இருக்கிறது 🙁

 6. dr hari
  #6

  you saw the movie ‘ the social network’?
  this article of yours shows your stupidity and absence of ur visionary thinking. mark zuckerberg says in that movie to those twins-‘if u invented facebook it should be there. but it was not.’. thats enough. he may be guilty of stealing others’ idea. but u cant say he’s not a a genius. a genius bigger than bill gates. can u refuse it? he s ahead of everybody.

  if u r a member of facebook u can see how addictive it is. there re even groups fighting against younger people’s facebook addiction. that s his achievement. tmrw there ll be no cell phones and landlines and the only phone ll be facebook phone.

  u r talking abt share market and real value of facebook. u think goldman s a FOOL? they ve financial analysts in numbers more than the neurons in ur brain, and they re better in finance than YOU. just by translating and modifying some two bit financial journalist’s story will not make u a well learned man. remember that. think for ur own and write.

  cant u see? he had a vision. because of his financial status we can say it s the greatest idea ever.

  dont u honestly think facebook made ur life better? u can share everything. even if u scratch ur nose some tell fellows will comment abt that. if u r successful and post it, hundreds of ur old friends who ll never know abt that during pre facebook time will know and appreciate about that. how abt it? how happy you ll be to boast ur success to ur friends?

  u r an indian like me. we know orkut before than facebook. we knew how friends were active in orkut before they joined facebook. now u think ur orkut s busy as olden times? think honestly. never thought facebook s 100 times better and u slowly stopped using facebook? tell me bro.

  and ur essay s naive. u need deeper understanding nidhi(what an irony of ur name. u know shit abt finance)

 7. அப்பு
  #7

  திரு ஹரி அவர்களுக்கு,
  தங்களின் மேலான அறிவுப் பூர்வமான ஆழமான கருத்துக்களுக்கு மேலான நன்றி.

  படம் பார்த்தேன். தமிழ் பேப்பரில் தமிழிலும்[http://www.tamilpaper.net/?p=533] என் பிளாக்கில் ஆங்கிலத்திலும் [http://zenofzeno.blogspot.com/2010/11/social-network_13.html] விமிரிசனமும் எழுதினேன்.

  எந்திரன் படம் பார்த்தேன். அதற்காக ரஜினி ரோபோ கண்டுபிடித்தார் என நான் நம்புவதில்லை!
  திருடுவதில் என்ன ஜீனியஸ் தனம் என்று எனக்கு புரிபடவில்லை.[திருடினாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது]

  பில்கேட்ஸ் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால் பில் கேட்ஸ் ஜீனியஸ் தானா என்ற சந்தேகம எனக்கு உண்டு.

  எனக்கு ஃபேஸ்புக் பைத்தியமில்லை.

  எனக்கு பைனான்ஸில் ஒன்றும் தெரியாது.ஆனால் Recessionக்கு காரணகர்த்தாகளில் Goldman Analystகளுக்கு பெரும் பங்கு உண்டு என்பது எனக்குத் தெரியும். அவர்கள் கிளையண்டுகளுக்கு தொழில் தர்மப்படி வேலை செய்வதில்லை என வழக்கு உண்டு எனத் தெரியும்.

  நீங்கள் குறிப்பிடும் greatest idea எதுவென்று என் சிற்றறிவுக்குப் புரியவில்லை.ஏனெனில் guilty of stealing idea என சொல்லிவிட்டு greatest idea ever என சொல்கிறீர்கள். அப்படி எனில் சிறப்பான ஐடியாவைத் திருடியது தான் greatest idea வா?

  எனக்குத் தெரிந்தவரை பணக்காரன் எல்லாம் புத்திசாலி இல்லை. மேலும் மார்க்கிடமும் அவ்வளவு பணம் இல்லை. அவரிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பை வைத்து தான் அவர் அவ்வளவு பணக்காரர் என சொல்கிறார்கள்

  மூக்கு சொறிவதற்கு வரும் கமெண்ட் எல்லாம் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்பது எனக்கு இவ்வளவு நாள் தெரியாது

  orkut போல ஃபேஸ்புக்கும் காணாமல் போக எந்த உத்தரவாதமும் இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.

  அப்புறம் நிதி என்பது இந்த கட்டுரையின் பிரிவு[category] என் பெயர் அல்ல.என் பெயர் கட்டுரையின் தலைப்புக்கு மேல் உள்ளது!

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: