உச்சி

டங்ஷன் லியாங்ஜெ என்பவர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற ஜென் துறவி. அவரைச் சந்திப்பதற்காக உலகின் பல மூலைகளில் இருந்தும் மக்கள் வந்து சென்றார்கள்.
அப்படி ஒரு பயணியிடம் டங்ஷன் கேட்டார். ‘நீங்க எங்கிருந்து வர்றீங்க?’
’அதோ அந்த மலையிலேர்ந்து.’
’ஓ! உங்களுக்கு மலை ஏறின அனுபவம் உண்டா?’
‘நிறைய!’
‘மலை உச்சியைப் பார்த்திருக்கீங்களா?’
’பலதடவை பார்த்திருக்கேன்.’
‘அங்கே யார்  இருக்காங்க?’
‘யாருமே இல்லை!’
‘அப்படீன்னா, நீங்க மலை உச்சியைப் பார்க்கவே இல்லைன்னு அர்த்தம்’ என்றார் டங்ஷன். ‘நீங்க மலை உச்சியை அடைஞ்சிருந்தா அங்கே நீங்க ஒருத்தர்மட்டுமாவது இருந்திருப்பீங்க, யாருமே இல்லை-ங்கறது பொய்.’
’இல்லை. நான் மலை உச்சிக்குப் போனது உண்மைதான்’ என்றார் அந்தப் பயணி. ‘இல்லைன்னா, அங்கே யாரும் இல்லை-ங்கறது எனக்கு எப்படித் தெரிஞ்சிருக்கும்?’
‘சரி. மலை உச்சிக்குப் போன நீங்க அங்கேயே இருந்துடவேண்டியதுதானே? ஏன் இங்கே திரும்பி வந்தீங்க?’
‘நான் அங்கேயே தங்கியிருந்தா புத்தருக்குக் கோவம் வந்திருக்கும்.’
இந்த பதிலைக் கேட்டவுடன் டங்ஷனுக்கு மகிழ்ச்சி. ‘நீங்கள் உண்மையான ஞானி’ என்று பாராட்டினார்.
என்ன காரணம்? எதற்கு இந்தப் பாராட்டு?
மலை உச்சியைமட்டுமில்லை, எந்த ஒரு விஷயத்திலும் கஷ்டப்பட்டு உச்சியை அடைந்தவர்கள் அங்கேயே தங்கிவிடக்கூடாது. கீழே இறங்கிவந்து அந்த ஞானத்தை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும். அதைத்தான் புத்தர் விரும்புவார்!

No comments yet

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: