கள் மேட்டர்

அம்புஜாக்‌ஷி

”சுரேஷ், எந்த நேரத்தில் நீ போஸ்டர்களில் எழுத்துப்பிழைகள் பத்தி சொன்னியோ. இப்போ எல்லாம் எந்த போஸ்டரைப் பார்த்தாலும் எழுத்துப்பிழை எதாவது இருக்கான்னுதான் பார்க்கத் தோணுது.”

“அடுத்தவங்க செய்யற தப்பு நம்ம கண்ணில் பட்டா, நாம அந்தத் தப்பைச் செய்யாம இருப்போம். அதனால பாரு பாரு. தப்பே இல்லை. அது இருக்கட்டும். இப்போ எதாவது கண்ணில் பட்டுச்சா?”

“வெண்ணீர், தீவணம், சமர் பணம், சமர் பனம் அப்படின்னு வகை வகையா தப்பு கண்ணில் படுது. ஆனா அதை எல்லாம் விடு. எனக்கு ரொம்ப நாளா குழப்பற விஷயம் ஒண்ணு இருக்கு. வாழ்த்துக்கள் அப்படின்னு எழுதணுமா? இல்லை வாழ்த்துகள்ன்னு சொல்லணுமா?”

“இது உனக்கு மட்டும் வர சந்தேகம் இல்லை. எங்க பார்த்தாலும் இந்த பிரச்சனை கண்ணில் பட்டுக்கிட்டேதான் இருக்கு. இதுக்கு பதில் சொல்லறதுக்கு முன்னாடி உன்னை ஒரு கேள்வி கேட்கறேன். ஒருத்தரைப் பத்தி கிசுகிசுவாப் பேசினா வம்புன்னு சொல்லுவோம். இதோட பன்மை என்ன?”

“என்னடா சீரியஸா ஒரு சந்தேகம் கேட்டா வம்பு பேசிக்கிட்டு இருக்க?”

“இல்லை. உன் கேள்விக்கான பதில்தான் இது. வம்பு – இது ஒருமை. இதோட பன்மை வம்புகள். அதே மாதிரி அம்புஜாக்‌ஷியை அம்புன்னு கூப்பிடலாம். அவங்களோட அம்புஜமும் வந்தா அம்பு + அம்பு = அம்புகள்ன்னுதான் சொல்லுவோம். இல்லையா?”

“ஆமாம். வம்புக்கள், அம்புக்கள்ன்னா தப்புதானே!”

“இதுல இவ்வளவு தெளிவா இருக்க. அப்போ வாழ்த்து ஒருமை அதோட பன்மைக்கு மட்டும் ஏன் இவ்வளவு குழப்பம்?”

“வாழ்த்துகள்ன்னுதான் சொல்லணுமா?”

“ஆமாம். வாழ்த்துகள்ன்னுதான் சொல்லணும். அதே மாதிரிதான் பாட்டுகள், எழுத்துகள் எல்லாமே. இங்க எல்லாம் வலி மிகாது.”

“வாழ்த்துக்கள்ன்னு சொன்னா தப்பா? “

“தப்பே இல்லை யார் சொன்னா தப்புன்னு? இப்போ எதாவது ஒரு விஷயம் நடந்தா பார்ட்டி குடுக்கறது வழக்கமா இருக்கே. பார்ட்டின்னா பியர், விஸ்கின்னு சரக்கு இல்லாம இருக்கறது இல்லை. இதையே கொஞ்சம் தமிழ் மண் வாசனையோட பார்ட்டி தரணும்ன்னா இந்த விஸ்கிக்குப் பதிலா கள்ளு குடுக்கலாம். ஒருவரை வாழ்த்தத் தரும் கள் என்பதால் அதை வாழ்த்துக்கள்ன்னு சொல்லலாம். ”

“வாழ்த்துகள்ன்னா வாழ்த்துவது. வாழ்த்துக்கள்ன்னு சொன்னா அப்படியே சியர்ஸ் சொல்லி வாய்க்குள்ள கவுத்திக்கிறது. ஆஹா! இப்போ நல்லாப் புரியுதுடா.”

“இப்படி எல்லாம் சொன்ன நல்லாப் புரியுமே. ஆனா இந்த தப்பு எல்லா இடத்திலேயும் நடக்கறதுதான். ஒரு சினிமாப் பாட்டு பார்க்கலாமா?”

“சினிமாப்பாட்டு வேற இருக்கா? சொல்லு!”

“பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்ன்னு ஒரு பாட்டு இருக்கு தெரியுமா?”

“தெரியாம என்ன. சமீபத்தில் கூட ரீமிக்ஸ் பண்ணி இருக்காங்களே!”

“ரீ மிக்ஸ் பத்திப் பேசாதே. அந்தப் பாட்டுகளை எல்லாம் கேட்டா பத்திக்கிட்டு வருது. அதை விடு. அந்தப் பாட்டில் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்ன்னு ஒரு வரி வரும். முத்துன்னு சொன்னா அதோட பன்மை முத்துகள்தான். ஆனா சந்தத்துக்காக அதை முத்துக்கள்ன்னு போட்டு இருப்பாங்க. இலக்கணப்படி முத்துக்கள் தப்புதான்.”

“எழுத்துக்கள் கூட தப்பா? எழுத்துகள்தான் சரியா?”

“எழுத்தாளர்கள் சில பேரு எப்பவும் நான் இந்த பாருக்குப் போனேன் அந்த சரக்கை அடிச்சேன்னு குடிக்கிறதைப் பத்தியே எழுதுவாங்க பாரு. அதை வேணா எழுத்துக்கள்ன்னு சொல்லலாம். ஆனா எழுத்து என்பதன் பன்மை எழுத்துகள்தான்.”

“புரியுது. இந்த மாதிரி வேற எதாவது விஷயம் இருக்கா?”

“முன்னாடி ஓர் – ஒரு பத்திப் பேசினோம் ஞாபகம் இருக்கா? அந்த மாதிரி இந்த ஒருமை – பன்மை விஷயத்திலும் சில ரூல்ஸ் இருக்கு.”

“யப்பா, இந்த ரூல்ஸுக்கு முடிவே இல்லையா? சொல்லு!”

“ ஒரு உதாரணம் சொல்லறேன். என் கையில் இருக்கும் புத்தகம் என்னுடையது அல்ல.”

”அதுல என்ன தப்பு? அது நீ வித்யா கிட்ட இருந்து இரவல் வாங்கினதுதானே.”

“டேய். அதைச் சொல்லலைடா. ஒரு புத்தகம்ன்னு சொல்லும் போது அல்லன்னு சொல்லக் கூடாது. இந்தப் புத்தகங்கள் என்னுடயவையல்ல. இப்படிச் சொன்னால்தான் சரி.”

“அப்போ ஒரு புத்தகத்துக்கு என்ன சொல்லணும்?”

“இந்தப் புத்தகம் என்னுடையதன்று. இப்படித்தான் சொல்லணும்.”

“அதாவது ஒருமைக்கு அன்று. பன்மைக்கு அல்ல. இப்படித்தான் சொல்லணும். இல்லையா?”

“ஆமாம். அன்று எல்லாம் இன்னிக்குப் பழக்கத்தில் இல்லைன்னாலும் இலக்கணப்படி எழுதும் பொழுதாவது சரியா எழுதணும். இதே மாதிரி அவன் தன் வேலையைச் செய்தான்னு எழுதணும். அதையே அவர்ன்னு வந்தா அவர் தம் வேலையைச் செய்தார்ன்னு சொல்லணும். அவர்கள்ன்னு பன்மையா வந்தாலும் இதே மாதிரி அவர்கள் தம் வேலையைச் செய்தனர்ன்னு எழுதணும்.”

“ம்ம். இதனாலதான் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா அப்படின்னு பாட்டு எழுதினாங்களா?”

“ஆமாம் எந்தன், உந்தன், அவர்தம், அவர்கள்தம் அப்படின்னு எழுதினாத்தான் இலக்கணப்படி கரெக்ட். ஆனா இப்படி எல்லாம் இன்னிக்கு யாரு எழுதறாங்க சொல்லு.”

”எனக்கு ஒரு சந்தேகம்டா. இந்த இலவசம் இலவசம்ன்னு சொல்லறோமே. அதுக்கு எதாவது கதை இருக்கா?”

“இல்லாம என்ன, இன்னிக்குக் கூட கல்யாணம் மாதிரி விழாக்கள் ஆகட்டும் இல்லை ஒரு குருவைப் பார்க்கப் போகும் போது ஆகட்டும் வெற்றிலை பாக்கு எல்லாம் ஒரு தட்டில் வைத்துதான் பரிசு தரோம் இல்லையா? அதுக்கு இது உங்களுக்கானது. நீங்கள் திருப்பித் தர வேண்டாம் அப்படின்னு அர்த்தம். இப்படி இலையின் மூலம் தரும் பரிசுக்கு இலை வயம் என்று சொல்லி அது இலவசம்ன்னு ஆச்சு.”

“இப்போ இலை கட்சி மட்டும் இல்லை. எல்லாருமே இலவசமாத் தராங்க!”

”கட்சின்னு சொன்ன உடனே ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுடா. தேர்தல் வரப் போகுது. இப்பவே எதிர்மறையா பிரச்சாரம் செய்யக்கூடாது. நேர்மறையா செய்யுங்கன்னு சிலர் சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க. இது ரொம்பத் தப்பான விஷயம்.”

“என்னடா சொல்லற? எதிர்மறையா பேசாதேன்னு சொன்னா நல்லதுதானே?!”

“எதிர்மறையா பேசாதேன்னு சொல்ல வேண்டியதுதான். ஆனா அதுக்காக நேர்மறையாப் பேசுன்னு சொல்லக் கூடாது. ஏன்னா நேர்மறைன்னு தமிழ்ல ஒரு வார்த்தையே கிடையாது. எதிர்மறைக்கு எதிரா இருக்கணும்ன்னு நேர்மறைன்னு சொல்லறாங்க.  உண்மையில் speak positively அப்படின்னு சொல்லணும்ன்னா அறப்பேசு அப்படின்னு சொல்லலாம். நேராகப் பேசு, நல்லவிதமாகப் பேசுன்னு எல்லாம் சொல்லலாம். ஆனா நேர்மறைன்னு சொல்லக் கூடாது.”

“மறைன்னா வேதம்தானே. அது எங்க இங்க வந்தது?”

“மறைன்னா சொல் அப்படின்னு ஒரு அர்த்தம் இருக்கு. எதிர்மறைன்னு சொல்ல அது காரணமா இருக்கும். ஒண்ணு ஞாபகம் வெச்சுக்கோ. நேர்மாறுன்னு சொன்னா முற்றிலும் எதிரானது. எதிர்மறைக்கு நேர்மாறானது நேர்மறை இல்லை!”

“எதிர்மறை கூட சேர்த்துதான் எழுதணும். எதிர் மறைன்னு எழுதினா முன்னாடி இருக்கும் வேதம் அப்படின்னு பொருளாகிடும் இல்லையா?”

“ஆமாம். சேர்த்துதான் எழுதணும். இன்னும் ஒண்ணு கூட சொல்லணும்ன்னு நினைச்சேன். மங்கலம் / மங்களம், பவளம் / பவழம் – இது எப்படி எழுதினாலும் சரிதான்னு பேசினோமே. அதே மாதிரி மதில் / மதிள், உளுந்து / உழுந்து – இதெல்லாம் கூட எப்படி எழுதினாலும் சரிதான்.”

“உழுந்து கூட சரியா? இது அவ்வளவா கேள்விப்பட்ட மாதிரி இல்லையே.”

“இப்போ பல பேருக்கு வாழைப்பழம்ன்னு சொல்ல வராம வாயப்பயம்ன்னு சொல்லறாங்க. இதுல உழுந்துன்னு யாரு சொல்லப் போறா. ஆனா கம்பராமாயணத்தில்

உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் அப்படின்னு கம்பரே எழுதி இருக்காரு. இந்த மாதிரி ஒரு எழுத்து வர வேண்டிய இடத்தில் வேற ஒரு எழுத்து வந்தாலும் பொருள் மாறாமல் வந்தா அதுக்குப் போலின்னு பேரு.”

“போலியா? சாதாரணமா ஒரிஜினலா இல்லைன்னாத்தானே போலின்னு சொல்லுவோம்.”

“அதே அர்த்தம்தான். ஒன்று போல இருக்கும் மற்றொன்று அப்படின்னு சொல்லணும்ன்னா அதை போல் +இருப்பது = போலிருப்பதுன்னு சொல்லறோமே. அதோட சுருக்கம்தான் போலி. எந்த எழுத்து மாறி வருதுன்னு பார்த்து அதை முதற் போலி, இடைப் போலி, கடைப் போலின்னு மூணு விதமாப் பிரிக்கலாம். ஞாயிறுன்னு சொல்லறோம். அதை நாயிறுன்னு சொன்னா முதல் எழுத்து மாறி வருது. அதனால அது முதற் போலி. முன்னாடி பார்த்த பவழம் / பவளம், உளுந்து / உழுந்து எல்லாம் நடுவில் இருக்கும் எழுத்து மாறி வரதுன்னால இடைப் போலி. மதில் / மதிள் – இதுல கடைசி எழுத்து மாறிப் போகறதுனால இது கடைப் போலி.”

“வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் போளி நல்லா இருக்கும். அதனால அது போளிக் கடை. டாப் கிளாஸ் போளி கிடைக்கும். அது முதற் போளி. ஆனா அவங்களைப் பார்த்து வேற ஒருத்தன் ஸ்டால் போட்டா அது போலிக் கடை. அதையே கடை போலின்னும் சொல்லலாம்.”

“ நீ விளையாட்டா சொன்னாலும் அதுல ரெண்டு விஷயம் இருக்குடா. போளி – போலி ஒரு எழுத்து மாறினாலும் அதோட அர்த்தமே மாறுது. அதனால இது போலி இல்லை. ரெண்டாவது, கடைப் போலி / கடை போலி – வலி மிகுந்து வர வேண்டிய இடத்தில் சரியா எழுதலைன்னா எப்படி  மீனிங் மாறுதுன்னு பாரு. இதனாலதான் தமிழ் எழுதும் பொழுது தப்பில்லாம கவனமா எழுதணும்ன்னு சொல்லறேன்.”

”ஆமாண்டா. நீ இதை எல்லாம் சொல்லும் போது எனக்குத் தமிழ் மேல தனி மரியாதையே வருது.”

“தமிழ் மேல மரியாதை வரது இருக்கட்டும். எப்போப் பாரு கேண்டீனிலே இருக்க, உன் மனசில் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கன்னு மேனேஜர் திட்டறான். தமிழுக்கு தனி மரியாதை வர நேரத்தில் நம்ம மரியாதை காத்தில் போயிடும் போல இருக்கு. அதனால இதுக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டுட்டு தொழிலை கவனிக்கலாம்.”

“ஆமாண்டா. என் பாஸ் கூட முறைக்கறான். எதாவது சந்தேகம் வந்தா மெயில் அனுப்பறேன். எப்பவாவது வீட்டுக்கு வருவ இல்லை. அப்போ மொத்தமா சேர்த்து வெச்சு அதுக்கெல்லாம் பதில் சொல்லு.”

“சரிடா. இப்போ பார்க்கலாம். பை”

“பை”

 • வாழ்த்துகள் என்பதுதான் சரி. வாழ்த்துக்கள் என்பது தவறு.
 • இதே போல் எழுத்துகள், முத்துகள், பாட்டுகள், வார்த்தைகள் என்றுதான் எழுதுதல் சரி.
 • ஒருமைக்கு அன்று. அல்ல பன்மைக்கு. (என் புத்தகமன்று, என் புத்தகங்களல்ல)
 • ஒருமைக்கு தன், பன்மைக்குத் தம் (அவந்தன், அவர்தம், அவர்கள்தம்)
 • இலை வயம் தரப்படும் பரிசு என்பதே இலவசம் என்றானது. வெற்றிலையில் வைத்துத் தரப்படும் பரிசைக் குறிப்பது இது.
 • எதிர்மறை என்பதை எதிர் மறை என எழுதுதல் கூடாது.
 • நேர்மறை என்ற வார்த்தை தமிழில் இல்லை.
 • மதில் / மதிள், உளுந்து / உழுந்து – எப்படி எழுதினாலும் சரியே
 • ஒரு வார்த்தையில் ஒரு எழுத்து வர வேண்டிய இடத்தில் வேறு ஒரு எழுத்து வந்து பொருள் மாறாமல் இருந்தால் அது போலி எனப்படும்
 • மாறும் எழுத்து இருக்கும் இடத்தைப் பொருத்து முதற் போலி, இடைப் போலி, கடைப் போலி என மூன்று வகையாகப் பிரிக்கலாம்

[கொத்தனாரின் இலக்கண நோட்ஸ் இந்த வாரத்துடன் நிறைகிறது. அடுத்த படையெடுப்பு விரைவில்.]

10 comments so far

 1. உண்மைவிரும்பி
  #1

  ‘இலவசத்தை’ பத்தி இந்த பாடத்தில் இருக்கும்போதே நினைத்தேன் நோட்ஸ் முடிவுக்கு வருதோன்னு.

  இது மிக அருமையான பகுதி, மிகவும் பயனுள்ள பகுதி, நான் கண்டிப்பாக நிறையவே கற்றுக்கொண்டேன். தமிழ் பேப்பரில் நான் விரும்பி விடாமல் படித்த ஒரே பகுதி. ஆசிரியர் கொத்தனாருக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள். எப்போ வாழ்த்துக்’கள்’ சொல்ல போறீங்க எங்களுக்கு :-)))

  உங்களின் அடுத்து தொடரை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  நன்றி
  உண்மைவிரும்பி

 2. ஆயில்யன்
  #2

  //கொத்தனாரின் இலக்கண நோட்ஸ் இந்த வாரத்துடன் நிறைகிறது. அடுத்த படையெடுப்பு விரைவில்.//

  !!!??

 3. துளசி கோபால்
  #3

  ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்…..
  ……………………………………..
  இலக்கணம் படிக்கவில்லை…..தலைக்கனமும் எனக்கு இல்லே….

  இங்கேயும் சினிமாப் பாட்டுதான் உதவுது!

  நம்ம ‘க்’ ஒரு கருவேப்பிலை(யா..இல்லை )கறிவேப்பிலை(யா? அதுக்கும் சொல்றது) மாதிரி. வேணுன்னா முழுங்கலாம் வேணாமுன்னா எடுத்து எறியலாம்.

  இப்போதைக்கு ஆங்கிலக்குடியுடன் இருக்கட்டும்.

  வாழ்த்து(க்)கள்.

 4. திவாசுதேவன்
  #4

  இலவசம் பத்தி சொன்னீங்க; கொத்தனார் பத்தி சொல்லலையே?
  நல்ல உபயோகமான பதிவுகள்! நன்றி இ.கொ.
  அடுத்து?…. ம்ம்ம் ஆங்கிலம் கலக்காத தமிழ் எழுத பேச சொல்லி கொடுத்தா நல்லா இருக்கும். டூ மச்சோ?

 5. kannabiran Ravi Shankar (krs)
  #5

  கொத்தனார் வாழ்க!
  அவர் இலை வயம் வாழ்க வாழ்க!

  //அடுத்த படையெடுப்பு விரைவில்//

  யார் மீது? – இலக்கணம் முடிஞ்சி இலக்கியமா? 🙂

 6. revathinarasimhan
  #6

  இலக்கணம் முடிந்தது. வாழ்த்துகள்.

 7. Geetha Sambasivam
  #7

  வாழ்த்துகள்ன்னா வாழ்த்துவது. வாழ்த்துக்கள்ன்னு சொன்னா அப்படியே சியர்ஸ் சொல்லி வாய்க்குள்ள கவுத்திக்கிறது. ஆஹா! இப்போ நல்லாப் புரியுதுடா.”.//

  ஹிஹிஹி, அது சரி, எல்லாத்தையும் தொகுத்து புத்தகமாப் போடும்போது எனக்கு ஒரு இலை வயம் கொடுத்துடுங்க, சரியா?? :)))))

 8. Srinivasan
  #8

  இவ்வோலோவு சரக்கை இனாமா சத்தாக குடுத்த கொத்தனாருக்கு நொம்ப நன்றிங்கோ.
  இத்தனை உபயோகமான ஒரு தமிழ் நடையை, இது நாள் வரை கண்டதில்லை.
  வாழ்க அவரது சேவை. பாராட்டும் யோக்யதை இல்லை. எனவே, வணங்கி மகிழ்கிறேன்.
  நன்றி.
  வணக்கம்.
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்,
  சீனுவாசன்.
  பெர்த், ஆஸ்திரேலியா.

 9. Rathinavelu
  #9

  ஒரு எழுத்து தவறு; ஓர் எழுத்து சரி

 10. Bala
  #10

  அருமையான தளம். முத்துக்கள் . முத்து எனும் ஆள் விற்கும் கள்.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: