ஒண்ணு விட்டா போச்சு!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு

“என்னடா சுரேஷ், கையில் என்ன கட்டு?”

“அது ஒண்ணும் இல்லைடா. எங்க காலனியில் இன்னிக்கு ரத்த தான முகாம். அதுல கலந்துக்கிட்டு ரத்தம் குடுத்துட்டு வரேன்.”

“உங்க காலனியிலுமா? மத்திய மந்திரி ஒருத்தர் பிறந்த நாளை ஒட்டி ரத்த தான முகாம்ன்னு ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி இருந்தாங்களே.”

“சரியாப் பார்த்தியா? நானும் பார்த்தேன். அவங்க என்ன எழுதி இருந்தாங்க தெரியுமா? அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்தான முகாம்ன்னு எழுதி இருந்தாங்க.”

“ஆஹா! இதை நான் சரியாப் பார்க்கலையே. ஒரு எழுத்து விட்டதுனால ரத்ததான முகாம் ரத்தான முகாமா ஆயிடுச்சே!”

”தமிழை ஒழுங்கா எழுதுன்னு நான் சொன்னா சிரிப்பியே. இப்போ பாரு ஒரே ஒரு எழுத்து விட்டதுக்காக இவங்களைப் பார்த்து நீயே சிரிப்பா சிரிக்கற. இதே மாதிரி நான் இந்த வாரம் ஒரு வலைப்பதிவைப் பார்த்து சிரிச்சேன்.”

“உனக்குத்தான் எழுத்துப்பிழைன்னா அல்வா மாதிரியாச்சே. என்ன விஷயம் சொல்லு.”

“யாரோ நல்ல காரியம் ஒண்ணு செஞ்சதை இவரு பாராட்ட பதிவு எழுதறாரு. அதில இன்னார் செஞ்சது பாராட்டுக்குறியது அப்படின்னு போட்டு இருக்காரு. இதுக்கு விலாவாரியா விளக்கம் சொன்னா பாரா கல்லெடுத்து அடிப்பார். அதனால எழுத்துப்பிழை இல்லாம எழுத வேண்டியது அவசியம்ன்னு சொல்லிட்டு அடுத்த மேட்டரைப் பார்க்கலாம்.”

“இதெல்லாம் எழுத்துப்பிழைகள். புரியுது. ஆனா பொதுவா பயன்பாட்டில் இருக்கிற வார்த்தை எதாவது தப்பா இருக்கா?”

“இருக்கே. நிறையா உதாரணம் சொல்லலாம். ஒண்ணு சொல்லறேன் கேளு. அருகாமை. உங்கள் வீடு தொலைவில் இருக்கிறதான்னு கேட்டா, இல்லை அருகில் இருக்கிறதுன்னு சொல்லுவோம். ஆனா அதை அருகாமையில் உள்ளது அப்படின்னு சொன்னா இலக்கிய வாசனை அடிக்குதுன்னு நிறையா பேரு நினைக்கறாங்க.”

“ஆமா. அருகாமைங்கிறது பரவலா எல்லாரும் சொல்லறதுதானே. அதுல என்ன பிரச்சனை?”

“அதுதாண்டா பிரச்னை. அருகில் இருக்கிறதுன்னு சொன்னா சரியா இருக்கு. அது என்ன அருகாமை? முயலாமைன்னு சொன்னா முயலாமல் இருப்பது. செய்யாமைன்னா செய்யாமல் இருக்கிறது. இப்படிப் பார்த்தா அருகாமைன்னா அருகாம இருக்கிறது. அருகுவதுன்னா குறைவது. அருகாமைன்னா குறையாம இருப்பதுன்னு வேணா சொல்லலாம்.”

“அருகாமைன்னு சொல்லறதே தப்பா? ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கே.”

“அடகுக்கடை எதாவது தெரியுமா?”

“தெரியாம என்ன? உனக்கு எதுக்குடா அடகுக்கடை எல்லாம்? எதாவது பிரச்னை இருந்தாச் சொல்லேன். நான் உதவி பண்ணறேன்.”

“எனக்கு பிரச்னை எதுவும் இல்லைடா. இந்த அடகுக்கடைன்னு சொல்லறதுதான் பிரச்னையே.”

“என்னடா சொல்லற? அது எதாவது மார்வாடி வார்த்தையா? அதான் அவங்க இந்த மேட்டரில் சக்கை போடு போடறாங்களா?”

“நம்ம ஆளுங்க மார்வாடிகளுக்குக் குறைச்சலே இல்லை. அதை விடு. விஷயத்தைச் சொல்லறேன் கேளு. ஒரு சாமானை ஒருத்தர் கிட்ட குடுத்துட்டு அதோட மதிப்புக்கு கடன் வாங்கறதுக்கு தமிழில் பெயர் அடைவு. இதை சொல்லும் போது அடவுன்னு சொல்லறது உண்டு.”

“ஓஹோ! அப்போ இதெல்லாம் அடவுக்கடையா? அதைத்தான் நாம அடகுக்கடைன்னு சொல்லறோமா?”

“ஆமாம். அதனாலதான் அடைமானம் வைக்கறதுன்னு சொல்லறோம். அடைத்தல், அடைக்கலம்ன்னு சொல்லும் போது கூட இதே பொருள் வருது பாரு.”

”ஆமாம். அடைவு சரி. அப்போ அடகுன்னா என்ன?”

அடகுன்னா ஒரு வகைக் கீரை. அடகுக்கடைன்னா கீரைக்கடைன்னு அர்த்தம். அங்க கீரையா விக்கறாங்க?  ஆனா இன்னிக்கு அடகு என்பது எல்லாரும் பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஆயிட்டதுனால அகராதிகளில் கூட இந்த அர்த்தமும் தர ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா அடைவு என்பதுதான் சரியான சொல்.”

“ நம்மாளுங்க எல்லாத்தையும் யோசிச்சு வைச்சு இருக்காங்கப்பா!”

“ஆனா அதை நாம பாதுகாக்காம விட்டுடறோம். எவ்வளவுதான் மம்மி டாடி சொன்னாலும் அப்பா அம்மா நம்ம தமிழில் இருக்கத்தான் செய்யும். ஆனா இது போல உறவினர்களுக்கு எல்லாம் இருக்கும் பெயர்கள் மறைந்து போய் எல்லாருமே அங்கிள் ஆண்ட்டி ஆகக்கூடிய அபாயம் இருக்கு.”

“ஆமாம். நாம் உறவுகளைச் சொல்லத்தான் எவ்வளவு வார்த்தைகள் இருக்கு இல்லையா?”

“உறவுகள் இருக்கட்டும். இன்னிக்கும் ஒரு கல்யாணம்ன்னு வந்தா உங்கள் உற்றார் உறவினருடம்  வந்து அப்படின்னுதானே எழுதறோம். உறவினர்ன்னா சரி. உற்றார்ன்னா என்ன? தெரியுமா?”

“ஆமாண்டா, உற்றார் உறவினர்ன்னு சொல்லறோம். ஆனா உற்றார்ன்னா யாருன்னு தெரியலையே.”

“நீ உறவினர்ன்னா relatives அப்படின்னு சொல்லுவ. ஆனா நம்ம ஆட்கள் இவர்களை ரெண்டு விதமாப் பிரிச்சு இருக்காங்க. Relatives by birth and relatives by choice.

அதாவது நம் பிறப்பினால் நமக்கு உறவானர்வகள் உற்றார். இதுல நமக்கு சாய்ஸே கிடையாது. நம்ம அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, அக்கா, தங்கை என நம் பிறப்பினால் நமக்குக் கிடைத்த உறவுகள்தான் உற்றார்.

உறவினர்ன்னா  கொண்டு கொடுத்து உறவாக வருபவர்கள். உறவு என்றாலே சம்பந்தம் என்றுதான் பொருள். உறவினர் என்றால் இது போன்ற சம்பந்தத்தின் மூலம் வரும் உறவுகள்.”

“இதைத்தானேடா இன்னிக்கு வாய்ச்சதும் வந்ததும்ன்னு சொல்லறோம். தமிழ் ரொம்பவே அழகா இருக்குடா!” ’

“தமிழ் என்றாலே இனிமை என்றுதானேடா அர்த்தம். அது அழகா இருக்கறதுல என்ன ஆச்சரியம்?

’மேல சொல்லு.”

“இன்னும் சில வார்த்தைகளை எடுத்துக்கோ. அதோட ஒரிஜினல் விதத்தில் இருந்து மாறிப் போய் தவறான வடிவமே நிலைபெற்று விடும். உதாரணத்துக்கு நாம சதைன்னு சொல்லறோம். அதோட உண்மையான வடிவம் என்ன?”

“என்ன? தசைதானே?”

“ஆமாம். தசைதான். அதனாலதான் தசையோட சேர்ந்து இருக்கிற நரம்பை எல்லாம் சேர்த்து தசைநார்ன்னு எல்லாம் சொல்லறோம். ஆனா நாளாவட்டத்துல இந்த தசைன்னு சொல்லறது சதைன்னு மாறிப்போச்சு.”

“ஆமாம். இப்போ நாம சதை, சதைப்பற்றுன்னுதானே சொல்லறோம்.”

“சதைத்தல்ன்னா நசுக்குதல்ன்னு அர்த்தம். இன்னிக்கும் திருநெல்வேலி பக்கம் நசுக்கிடுன்னு சொல்ல சதைச்சுடுன்னு சொல்லுவாங்க. இந்த சதை என்பதை தசை என்ற பொருளில் சொல்லறதே தப்புதான்.”

“ம்ம். இண்டரெஸ்டிங்”

“சேலை கட்டும் பெண்ணிற்கொரு வாசமுண்டு. கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?”

“வாசத்தைப் பார்க்க முடியுமா? அதானே சொல்லப் போற?”

“இல்லைடா!! சேலை என்ற சொல் எங்க இருந்து வந்தது தெரியுமா?”

”தெரியலையே. நீயே சொல்லு.”

“சீலை அப்படின்னு கிராமங்களில் சொல்லுவாங்க. கல்யாணத்துக்கு சீலை எடுத்தாச்சான்னு கேட்பாங்க. ஆனா இந்த சீலையும் கூட சீரை என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது.”

“சீரையா? அப்படின்னா என்னடா?”

“சீரைன்னா மரப்பட்டைகளிலான உடை. சீரை சுற்றித் திருமகள் பின் செல அப்படின்னு கம்பர் சீதையைப் பத்திச் சொல்லுவாரு. சிறப்பினை தரும் மரவுரி. அதை சீரை என்று சொல்லுவார்கள். இந்த சீரைதான் சீலை என்று மருவி இன்றைக்கு சேலை என்றும் ஆனது.”

“சரி. இனிமே சீரைக் கட்டும் பெண்ணிற்கொரு வாசமுண்டான்னே பாடறேன். போதுமா?”

“இதெல்லாம் இன்னிக்கு தமிழாகிப் போச்சு. அதனால மாத்தணுமா வேண்டாமான்னு யோசிக்கணும். ஆனா இது எல்லாம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். தமிழில் இந்த மாதிரி மாறிப் போனாலும் சரின்னு சொல்லும் வார்த்தைகள் எத்தனையோ இருக்கு தெரியுமா?”

“மாறினாலும் சரியா? அது என்னடா?”

“இப்போ பவளம், பவழம் – இதுல எது சரி?”

“தெரியலையே. நீயே சொல்லு.”

“நான் பவழம்தான் சரின்னு சொன்னேன் வெச்சுக்கோ. பவளம் என்ற சொல் பழங்காலத்திலேர்ந்தே இருக்குன்னு சுட்டி எல்லாம் குடுத்து அமர்க்களப்படுத்துவாங்க. அதே நான் பவளம்தான் சரின்னு சொன்னா, பவழம் கோஷ்டியினர் வந்து இதே மாதிரி சுட்டி எல்லாம் தருவாங்க.”

“அப்போ எதுதான் சரி?”

“ரெண்டுமே சரிதான் என்றுதான் நாம இன்னிக்கு சொல்லறோம். பவளம், பவழம் எப்படி எழுதினாலும் சரிதான். அதே மாதிரிதாம் மங்கலம், மங்களம் என்று எழுதுவதும்.”

“நைசா இன்னிக்கு பேச வேண்டியதுக்கு இப்படி மங்களம் பாடிட்ட போல.”

“அதே. அதே. பை!”

 • பாராட்டுக்கு உரியது என்பதை பாராட்டுக்குரியது என்று எழுத வேண்டும். பாராட்டுக்குறியது என்பது பிழை.
 • அருகில் என்பதே சரி. அருகாமை என்பது பிழையான ஒரு சொல்.
 • அடைவு என்பது அடவு என்று மருவி இன்றைக்கு அடகு என்று ஆனது. அடகு என்றால் கீரை. அடைவு என்பதே ஒரு பொருளை கொடுத்து அதன் மதிப்புக்கு ஈடாக கடன் பெறுவது.
 • உற்றார் என்பவர் பிறப்பின் மூலம் வரும் சொந்தம். உறவினர் என்பது திருமணத்தின் மூலம் வரும் சொந்தம்.
 • தசை என்பதே சரியான சொல். அது சதை என்று மருவிப் போனது. சதை என்றால் நசுக்கு என்று பொருள்.
 • சீரை என்றால் மரவுரி. அது சீலை என்று மருவி இன்றைக்கு சேலை என்று வழங்கப்படுகிறது.
 • பவளம்/ பவழம், மங்கலம்/ மங்களம் என்ற இரு வகைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

7 comments so far

 1. R.Vijay
  #1

  ஹலோ சார், எவ்வளவோ உதாரணங்களை சொல்லிவிட்டு கடைசியில் “சேலை கட்டும் பெண்ணிற்கொரு வாசமுண்டு. கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?” – இதற்குப் போய் படம் போட்டுள்ளீர்களே?? ஏன் பாஸ் வேற படமே தோணலையா?? தினத்தந்தியை நினைவுபடுத்துகிறது….!!!!!! தமிழ் பேப்பர்.நெட்டில்

 2. dharumi
  #2

  ஐயா,
  //அடகுக்கடைன்னா கீரைக்கடைன்னு அர்த்தம்.// 55 ஆண்டுக்கு முன்னால் எங்க தமிழ் ஐயா சொன்னது நினைவுக்கு வந்தது. அதன்பின் இப்போதுதான் இந்த விளக்கம் கேட்கிறேன்.

  தசை = muscle (fibre); சதை = flesh என்ற பொருளில் வராதா?

  உங்களுக்கு … என்ன சொல்லணும் – வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?

 3. middleclassmadhavi
  #3

  ர, ற பிரயோகம் மாதிரி, எந்தெந்த சொற்களிடையே ஒற்று வர வேண்டும் என்றும் ஒரு பதிவு இடுங்களேன். புத்தாண்டு கோரிக்கை..!

 4. Jai
  #4

  arumayana vilakam for selai 🙂

 5. திவாசுதேவன்
  #5

  ரங்கமணிக்கு தங்கமணி உறவினரா இ.கொ?

 6. Rathinavelu
  #6

  ■பவளம்/ பவழம், மங்கலம்/ மங்களம் என்ற இரு வகைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.(தவறு)
  ….. கூடியவையே (சரி)

 7. துளசி கோபால்
  #7

  எல்லாம் ரொம்பச் சரி.

  ஆமாம்……….. இது என்ன ? உறவினருடம்

  //உறவுகள் இருக்கட்டும். இன்னிக்கும் ஒரு கல்யாணம்ன்னு வந்தா உங்கள் உற்றார் உறவினருடம் வந்து அப்படின்னுதானே எழுதறோம். //

  உறவினருடன் என்று வரணுமோ!!!

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: