இதற்கு உண்டா பத்மபூஷண்?

“எழுந்து எவ்வளவு நேரமாச்சு, காப்பி கொண்டு வாடி” என்ற காலைப் பொழுதை துவங்கினான் தினேஷ்.

“என்ன, என்னிக்கும் இல்லாத திருவிழாவா இன்னிக்கு அதிகாரம் தூள் பறக்குது?” என்ற பதிலோடு களத்தில் இறங்கினாள் வித்யா .

“நான் உனக்கு ஆம்படையான். ஆம்படையான்னா என்ன தெரியுமா? ஆண்+படையான். படை வீரன்னா ஒரு கெத்து வேண்டாமா? ஒரு வீரம் வேண்டாமா?”

“என்ன பேத்தற? மனைவியைக் கூடத்தான் ஆம்படையாள்னு சொல்லுவாங்க. அப்படின்னா ஆண்+படையாள்ன்னு எடுத்துக்கிட்டு நாங்க பொம்பளப்பிள்ளைங்களாப் பெத்துப் போடணுமா?”

“அடடே, நல்ல நேரத்தில்தான் வந்திருக்கேன் போல. கணவனும் மனைவியும் என்னமோ தர்க்கத்தில் இருக்கிற மாதிரி இருக்கே” என்றபடி எண்ட்ரி தந்தான் சுரேஷ்

“வாங்கண்ணா, உங்களோடு சேர்ந்து இவரும் வார்த்தைகளைப் பிரிக்கறேன்னு அபத்தமா உளறிக் கொட்டிக்கிட்டு இருக்காரு.”

“என்னோட சேர்ந்து அபத்தமா உளறரானா? ஏம்மா, அவனை மட்டும் சொல்லறியா, இல்லை இதுல வேற உள்குத்து எதாவது இருக்கா?”

“ஐயோ அப்படி அர்த்தம் வருதா? நான் உங்களைச் சொல்லுவேனா. நீங்க சரியாப் பிரிப்பீங்க. ஆனா இவரு பேசறது லூசுத்தனமால்ல இருக்கு. நீங்களே இந்த ஆம்படையான், ஆம்படையாள் விஷயத்தைப் பத்திச் சொல்லுங்க.”

“ஓஹோ. விஷயம் அப்படிப் போகுதா. இது பொதுவா பிராமணர்கள் பேசும் முறை. ஆத்துக்கு வா, அவ ஆம் எங்க இருக்குன்னு எல்லாம் கூடப் பேசுவாங்க. இல்லையா? அது தமிழ் மாதிரியே இல்லையேன்னு தோணினாலும் அது சுத்தமான தமிழ்தான். ஆனா கொஞ்சம் மருவிப் போச்சு. இது எல்லாத்துக்கும் முக்கியமான வார்த்தை அகம். இதுக்கு பல அர்த்தங்கள் இருக்கு. இங்க நமக்கு வேணுங்கிற அர்த்தம் வீடு.

இந்த அகம் தான் ஆம் என்று மருவி இருக்கு. அகம் உடையான், அகம் உடையாள் என்பது வீட்டின் தலைவன், தலைவி என்ற பொருளைத் தருது. இதுதான் ஆம்படையான், ஆம்படையாள்ன்னு ஆயிருச்சு. இந்த விஷயம் தெரியாம அது தமிழ் இல்லைன்னும் சொல்லக் கூடாது. படை வீரன், பெண்குழந்தைகளை மட்டும் பெற்றுத் தரும் தாய்ன்னு எல்லாம் கன்னாப்பின்னான்னு சண்டை போடக் கூடாது!”

“ஏண்டா சுரேஷ், நேத்து வரேன்னு சொன்ன, ஆனா இன்னிக்குத்தான் வர. என்ன ஆச்சு?”

“ஆணி புடிங்கறது அதிகமாயிருச்சு. அதான் நேத்து நைட் வர முடியலை.”

“ஆணி புடுங்கறதா? அப்படின்னா என்ன அண்ணா?”

“வித்யா, வேலை பார்க்கறதை ஆணி புடுங்கறது அப்படின்னு சொல்லறது இந்த கம்ப்யூட்டர் தொழிலில் இருக்கிறவங்களோட பாஷை. என்னமோ சினிமாவில் வடிவேலு விஜய் சூர்யாவை எல்லாம் ஆணி புடுங்க வைப்பாராமே. அதனால அப்படி சொல்லிக்கறாங்க போல.”

“யப்பா, எப்படி எல்லாம் அடுத்தவங்களுக்குப் புரியாத மாதிரியே பேசிக்கறீங்க.”

“ஏம்மா வித்யா அலுத்துக்கற. இது எல்லா இடத்திலேயும் நடக்கறதுதான். இதுக்கு ஒரு தனி பெயர் கூட இருக்கு தெரியுமா?”

“என்னடா சொல்லற, நாம ஆணி புடுங்கறதுன்னு பேசறதுக்குக் கூடவா தனியா பெயர் இருக்கு? அந்தக் காலத்திலேயே இப்படி எல்லாம் வரும்ன்னு தெரிஞ்சு பேரு வெச்சுட்டாங்களா? தமிழ் இஸ் க்ரேட்!”

“டேய், அடங்குடா. இந்த மாதிரி ஒரு குழுவினர் மட்டும் அவங்களுக்குள்ள பேசிக்கிறது மாதிரி இருக்கற வார்த்தைகளுக்குக் குழூஉக்குறி அப்படின்னு பேரு.”

“தினேஷை விடுங்கண்ணா, நீங்க சொல்லுங்க. இது என்ன குழூஉக்குறி?”

“ஒரு குறிப்பிட்ட கூட்டத்துக்கு மட்டும் புரியற மாதிரி பேசறதுக்குப் பெயர்தான் குழூஉக்குறி. உதாரணமா சந்தைக்குப் போனா காய்கறி மொத்த வியாபாரம் பேசுவாங்க. அவங்க பேசறது நமக்குப் புரியவே புரியாது. அவ்வளவு சங்கேத பாஷை இருக்கும். அதே மாதிரி வியாபாரிகள், தங்க ஆசாரிகள், யானைப்பாகன்கள் இப்படி பல தொழிலில் இருக்கிறவங்க பேசறதுல பல வார்த்தைகள் நமக்குப் புரியாது. இப்படி ஒவ்வொரு குழுவினரும் தமக்கான சில சொற்களை வெச்சு இருப்பாங்க. அதுக்குப் பேருதான் குழூஉக்குறி.”

“நாம தமிழ்ல ஜார்கன்னு சொல்லறோமே. அது மாதிரியா? சுவாரசியமாத்தான் இருக்கு. இந்த மாதிரி வேற எதுனாக் கூட இருக்காடா?”

”ஜார்கன்னு தமிழ்ல சொல்லறோமா? நல்லா இரு!! இன்னும் இது மாதிரி சில விஷயங்கள் இருக்கே. மங்கலம் அப்படின்னு ஒண்ணு இருக்கு. தினேஷ், நீ மங்களமா, இதோட ஆட்டம் க்ளோசான்னு கேட்கறதுக்கு முன்னாடியே பதில் சொல்லிடறேன். இது மங்கலம். ஆனா மங்களம் மங்கலம் ரெண்டுமே ஒரே அர்த்தம்தான். நல்ல விஷயம் அப்படின்னு பொருள். இந்த குழூஉக்குறியோட சொல்லும் பொழுது மங்கலம்ன்னா நல்லது இல்லாத விஷயத்தைச் சொல்லும் பொழுது கூட நல்ல வார்த்தைகளைக் கொண்டு சொல்லறதுன்னு அர்த்தம்.”

”கெட்ட செய்தியை நல்ல வார்த்தைகள் கொண்டு சொல்லறதா? அது எப்படிடா?”

“சொல்லறேன். ஒருத்தர் இறந்துட்டார்ன்னு வெச்சுக்கோ, அப்போ போஸ்டர் அடிக்கும் பொழுது என்ன அடிப்பாங்க? இன்னார் இறந்துவிட்டார் அப்படின்னா சொல்லுவாங்க? இறைவனடி சேர்ந்தார்ன்னு சொல்லுவாங்க. இல்லை, போஸ்டர் அடிக்கறவங்க  நம்ம கமல் மாதிரி பகுத்தரறிவு, ச்சே, பகுத்தறிவு பார்ட்டியா இருந்தா அவங்க கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களா இருந்தா இயற்கை எய்தினார்ன்னு சொல்லுவாங்க. கொஞ்சம் பழைய காலத்து ஆசாமிங்க ’துஞ்சினார்’ அப்படின்னு சொல்லுவாங்க.”

“அண்ணா துஞ்சினார்ன்னா என்ன?”

“அதுவாம்மா, துஞ்சினார்ன்னா தூங்கினார்ன்னு அர்த்தம். மீளாத் துயிலில் ஆழ்ந்தார்ன்னு சொல்லறது இல்லையா? அந்த துயிலில் ஆழ்பவரைத் துஞ்சினார்ன்னு சொல்லுவாங்க. . அதே மாதிரி சில வீடுகளில் விளக்கை அணைக்கலாமான்னு கேட்க மாட்டாங்க. விளக்கு அணைவது அபசகுனம் என்பதால் விளக்கைப் பார்க்கலாமான்னு கேட்பாங்க. பூவை வேண்டாம் எனச் சொல்லாமல் பூ மிஞ்சி இருக்கிறதுன்னு சொல்லுவாங்க. இப்படி பல அபசகுனமான விஷயங்களைச் சொல்லும் பொழுது நெகடிவான வார்த்தைகளைப் போடாம நல்ல வார்த்தைகளைக் கொண்டு உணர வைப்பதுதான் மங்கலம்.”

“எங்க ஆபீசில் வேலையை விட்டுத் தூக்கினா You are fired அப்படின்னு சொல்லாம, you have an opportunity to look out for a better careerன்னு சொல்லுவாங்க. அதுவும் இந்த மங்கலம் வகையில் சேர்த்துக்க வேண்டியதுதான் போல.”

“ஏண்டா இப்போ வேலை போகறதைப் பத்தி எல்லாம் ஞாபகப்படுத்திக்கிட்டு. அதை விடு. இந்த குழூஉக்குறி, மங்கலம் கூட இன்னும் ஒரு விஷயம் இருக்கு. அதுக்குப் பேரு இடக்கரடக்கல்!”

“என்ன கல்லு?”

“தோசைக்கல்லு. சொல்லறதைக் கேளுடா. அதுக்குப் பேரு இடக்கரடக்கல். பிரிச்சுப் பார்த்தா ஈசியாப் புரியும். இடக்கர் + அடக்கல் = இடக்கரடக்கல்.”

“இடக்கர்ன்னா என்ன? வலக்கருக்கு எதிர்த்தாப்புல இருக்கறதா?”

“இந்த மாதிரி இடக்கா பேசறதானே. இந்த இடக்கா பேசறதுன்னு சொல்லறது இன்னிக்கு நக்கலாப் பேசறதுன்னு அர்த்தம் வர மாதிரி சொல்லறோம். ஆனா உண்மையில் அது தகாத சொற்களைப் பேசறதுன்னு அர்த்தம். இந்த மாதிரி தகாத சொற்களைப் பேசறவங்களைத்தான் இடக்கர்ன்னு சொல்லறது.”

“ஓஹோ! அப்போ இந்த இடக்கர்களை அடக்கறதுதான் இடக்கரடக்கலா?”

“யெஸ்ஸு! அதேதான். பொதுவான இடங்களில் சொல்லத் தகாத வார்த்தைகளைச் சொல்லாம அதுக்குப் பதிலா வேற வார்த்தைகளைச் சொல்லிப் புரிய வைக்கறதுக்குப் பேர்தான் இடக்கரடக்கல்.”

“இதுக்கும் எதாவது உதாரணம் தாங்களேன் அண்ணா”

“பலரும் இருக்கும் இடத்தில் மலம் கழிப்பதைப் பற்றியோ, சிறுநீர் போவதைப் பற்றியோ சொல்ல தயக்கப்பட்டாலும் ஒன்றுக்குப் போகிறேன், கால் கழுவி வருகிறேன் என்றால் தயக்கம் இல்லாமல் இருக்கு இல்லையா. இந்த மாதிரி சில வார்த்தைகளைத் தவிர்க்க வேறு வார்த்தைகளைப் போட்டால் அதுக்கு இடக்கரடக்கல்ன்னு பேரு.

இப்போ சாகித்ய அகாடமி விருது வாங்கி இருக்காரே நாஞ்சில் நாடன். அவரு ஒரு சமயன் எழுதினாரு – கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ, குஷ்பு’ என்றெழுதினால் பத்மபூஷண் விருதுக்குக் கோளுண்டு. ஆனால் முலை எனில் தீட்டு; குண்டி, பீ, மூத்திரம் எல்லாம் அமங்கலம். என்னுடைய சிறுகதை ஒன்றினைப் பிரசுரித்தவர் பீ, மூத்திரம் என வரும் இடங்களை வெட்டிவிட்டார். நேரில் பார்த்தபோது கேட்டேன், “உமக்கு அதுவெல்லாம் வருவதில்லையா? ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் என்றுதான் வருமா?’ என.

அவ்வளவு பெரிய எழுத்தாளர். அவர் எழுதினதுக்கே வெட்டு விழுந்தது. அதனால அமங்கலமான் சொற்களைப் பேசாமல் அதுக்கு தகுந்தாற்போல நல்ல வார்த்தைகளாப் போட்டுப் பேசறது நாகரிகம். இதுக்கு அந்தக் காலத்திலேயே விதிகளை எல்லாம் போட்டு பேரும் வெச்சு இருக்காங்க நம்ம ஆளுங்க.”

“ம்ம். இன்னும் ஒரு கேள்வி. நீ இப்போ நாகரிகம்ன்னு சொன்னியே. அது நாகரிகமா இல்லை நாகரீகமா?”

“நாகரீகம் எல்லாம் இல்லை நாகரிகம்தான். இதே மாதிரி தேசீயம், மார்க்கசீயம், காந்தீயம் அப்படின்னு எழுதறாங்க. இது எல்லாமே தப்பு. தேசியம், மார்க்கசியம், காந்தியம் இப்படித்தான் எழுதணும். இயம் அப்படின்னா ஆங்கிலத்தில் -ismன்னு சொல்லற மாதிரி. அதை ஈயம் பித்தளைன்னு சொல்லக்கூடாது.”

“தமிழ் கத்துக் குடுக்கச் சொன்ன நைசா அரசியல் எல்லாம் நுழைக்கக் கூடாது. காப்பி போட்டு வெச்சு நேரமாகுது. அதைக் குடிச்சுட்டு ரெண்டு பேரும் ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வர வழியைப் பாருங்க.”

 • ஆம், ஆம்படையான், ஆம்படையாள் என்பது அகம், அகமுடையான், அகமுடையாள் என்ற சொற்கள் மருவி வந்தது.
 • ஒரு குழுவினருக்கு மட்டும் புரியும்படியான சொற்களுக்குப் பெயர் குழூஉக்குறி (ஆணி புடுங்குதல் = வேலை பார்த்தல், கணினித் துறை)
 • அபசகுனமான விஷயங்களை சுபமான வார்த்தைகளைக் கொண்டு சொல்வதற்குப் பெயர் மங்கலம் ( இறைவனடி சேர்ந்தார்)
 • தகாத வார்த்தைகளைச் சொல்வதற்குப் பதிலாக வேறு வார்த்தைகளைச் சொல்லிப் புரிய வைப்பதற்குப் பெயர் இடக்கரடக்கல் (சிறுநீர் கழித்தேன் = ஒன்றுக்குப் போனேன்)
 • நாகரீகம், தேசீயம், மார்க்சீயம், காந்தீயம் எல்லாம் தப்பு. நாகரிகம், தேசியம், மார்க்சியம், காந்தியம் என்றுதான் எழுதவேண்டும்.

9 comments so far

 1. eramurukan
  #1

  >விளக்கு அணைவது அபசகுனம் என்பதால் விளக்கைப் பார்க்கலாமான்னு கேட்பாங்க

  எங்க (சிவகங்கை) பக்கம் ‘விளக்கை /தீபத்தை வளர்க்கறது’ம்பாங்க

 2. துளசி கோபால்
  #2

  நல்ல பதிவுதான். பாத்ரூம் போயிட்டு வந்து படிக்கப்போறேன்!

 3. ஆயில்யன்
  #3

  நாகரீகம்,மார்க்சீயம்,காந்தீயம் இந்த வார்த்தைகளினை எழுதும்போது டாண்’னு வர்ற குழப்பம் இன்னியோட தீந்துச்சு!

  இடக்கரடக்கல் – டக்கரு!
  இடக்கரடக்கல்ன்னு சொன்னாலே ஏதோ திட்டுறமாதிரியே இருக்கு ! 🙂

 4. kannabiran Ravi Shankar (krs)
  #4

  //குழூஉக்குறி//

  அண்ணா, அப்படியே இதையும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க! அது என்ன “குழூஉக்குறி”? குழுவா தங்களுக்குள்ளாற பேசிக்கறது குழுக்குறி-ன்னு சொன்னா தப்பா? எதுக்கு குழூஊஊஊஊ-ன்னு இம்புட்டு இழுக்கறாங்க செயற்குழூஉ, பொதுக்குழூஉ கணக்கா? 🙂

 5. Ananthu
  #5

  கால் கழுவி வந்தான்; வாய் பூசி வந்தான் .. ONE;TWO

  @krs- அது அளபெடை … எழுது வகைகள் 11 ..உயிர் மெய் உயிர்மெய் ஆய்தம் உயிரெளபெடை ஒற்றளபெடை குற்றியலுகரம் குற்றியலிகரம் etc.

 6. ஸ்ரீதர் நாராயணன்
  #6

  மங்கலத்திற்கு இன்னோர் உதாரணம் – தாலி பெருக்குதல். தாலிச்சரடை மாற்றும்போதோ, அல்லது தவறுதலாக இற்றுப்போய் விழுந்துவிட்டாலோ அதை சுபமாக சொல்வதற்கு ‘தாலி பெருகிவிட்டது’ என சொல்வார்கள்.

  அதே போல் ‘மங்கலம்’ என்பது குடியிருப்புகளைக் குறிக்கும். பல ஊர்களுக்கு மங்கலம் என பெயரிட்டிருப்பதை பார்க்கலாம்.

 7. kekkepikkunni
  #7

  விளைக்கை அணை என்று சொல்லாமல், “(பூக் கொண்டு) மலையேற்றி விடு” என்பார்கள் எங்கள் வீடுகளில். அல்லது, விளக்கு அணைகிறது என்று சொல்வதற்கு பதிலாக, “விளக்கு மலையேறுகிறது போலிருக்கிறது” என்பதும்.

 8. ஜெயக்குமார்
  #8

  அட, பாடம் நல்லாத்தான் இருக்கு.. சரி, இந்தக் கட்டுரைக்கும், அந்தம்மா படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சிட்டிருக்கேன்.. எதாச்சும் குளூவுக்குறியா இல்லை இடக்கரடக்கலா, இல்லாட்டி ஏதாச்சும் ஒரும் இயமா?

 9. அருண்பிரபு
  #9

  மேலாக்கு என்பதை புடவையை மேலே ஆக்கு என்று புரிந்து கொண்டு தலைக்கு மேலே தூக்கிக் கொள்ளக் கூடாது என்று படம் போட்டுப் பொருள் விளக்கம் தருகிறார்கள் போலும்!

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: