கண்றாவி!

“சே, என்ன கண்றாவிடா இது” என்றபடியே நுழைந்தான் தினேஷ்

“இந்த கண்றாவின்னு சொல்லறதை விடவா கண்ணராவி?” என பதிலைச் சொல்லி கச்சேரியை ஆரம்பித்தான் சுரேஷ்.

“என்னடா சொல்லற? கண்றாவி தப்பா? எல்லாரும் கண்றாவின்னுதானே பேசறாங்க, எழுதறாங்க. அதையே தப்புன்னு சொல்லற?”

“எல்லாரும் பேசினா எழுதினா சரின்னு ஆயிடுமா? சில வார்த்தைகள் எப்படி உருவாச்சுன்னு தெரிஞ்சா இந்தக் குழப்பம் எல்லாம் வராது. இரும்பை கொண்டு தேய்ப்பதற்குப் பெயர் அராவுதல். இதைத்தான் ராவறது அப்படின்னு மருவிச் சொல்லறோம். யாராவது பேசிப் பேசி கழுத்தை அறுத்தார் என்றால் கூட ஏண்டா இப்படி ராவறான்னு கேட்கறோமே. அதுவும் இந்த அராவுதல் காரணமாத்தான். பேசுவது கழுத்தை ராவுவது என்றால் பார்ப்பது கண்ணை ராவுவது. பார்த்தாலே கண்ணுக்குள்ள இரும்பை வெச்சு தேய்க்கற மாதிரி இருக்குதாம். அதனால அதுக்குக் கண்+அராவி = கண்ணராவி அப்படின்னு சொல்லணும். கண்றாவி என்பது தவறான பயன்பாடு.”

“ஓஹோ. கண்றாவின்னு சொல்லியே பழகிட்டோம். ஆனா அது எப்படி வந்ததுன்னு தெரியலை பார்த்தியா. அதனால வார்த்தையே மாறிப் போயிடுது. இனிமே சரியா கண்ணராவின்னே சொல்லணும்.  இது மாதிரி இன்னும் கொஞ்சம் வார்த்தைகள் பத்திச் சொல்லேன்.”

“கண்ணைப் பார்த்தாச்சு. அடுத்தது காதைக் கவனிக்கலாமா?”

“காதும் காதும் வெச்சா மாதிரி சொல்லு கேட்டுக்கறேன்.”

“சொல்லறது என்ன. பாட்டாவே பாடுவேன். ஆனா நீதான் கர்ணகொடூரமாய் இருக்குன்னு சொல்லுவ.”

“அது என்ன கர்ண கொடூரம். கர்ணன் எங்க இங்க வந்தாரு?”

“கர்ணம் அப்படின்னு சொன்னாக் காது. அவரு குண்டலங்களோட பிறந்தாரு இல்லையா. அதான் அவருக்குக் கர்ணன்னு பேரே வெச்சுட்டாங்க. இந்த கர்ணத்துக்கு கொடூரமாய் இருக்கிறதைத்தான் கர்ணன் கொடூரம் அப்படின்னு சொல்லறது. கண்ணால பார்க்க முடியாதது கண்ணராவி, காதால கேட்க முடியாதது கர்ணகொடூரம். ”

“சபாஷ். இந்த டாபிக் நல்லா இருக்கே. இன்னும் கொஞ்சம் போகலாமா?”

“போகலாம். அதுக்கு முன்னாடி சில விஷயங்களைப் பத்திப் பேசவேண்டியது இருக்கு. ஒரு நண்பர் நீங்க ற / ர பத்திப் பேசும் பொழுது பொருப்பு / பொறுப்பு பத்திப் பேசினீங்க ஆனா பொருத்து, பொறுத்து பத்திச் சொல்லலையே. அதில் எனக்கு ரொம்ப குழப்பம் இருக்குன்னு சொன்னாரு.  நாம இதில் பிழைகள் வருவதை அடிக்கடி பார்க்கறோம். என்னைப் பொருத்த வரையில் அப்படின்னு எழுதும் எழுத்தாளர்களையும் நான் பார்த்து இருக்கேன். பொருத்து அப்படின்னு சொன்னா சேர்க்கறது. சரியா பொருந்துதா அப்படின்னு கேட்கறோம். இல்லையா? இந்த வார்த்தை இங்க சரியா பொருந்துமா? அப்படின்னு கேட்கும் பொழுது கூட இணைந்து வருமா அப்படின்னுதானே அர்த்தம். அதனால் பொருப்பு அப்படின்னு சேர்க்கறது.

ஆனா பொறுத்து அப்படின்னா தாங்கிக்கறது. பொறுமைன்னு சொல்லும் பொழுது நாம ற போடறோம்தானே. அதே அர்த்தத்தில் வர பொறுத்துக்கும் நாம ற தானே போடணும். பொறுத்தார் பூமி ஆள்வார் அப்படின்னு பழமொழி இருக்கு. இனிமேலாவது பொறுத்துப் போக வேண்டிய இடத்தில் பொருத்துப் போகாம இருக்கணும்!”

“முன்னாடி எல்லாம் ஒரு நிறுவனம் ஆதியோட அந்தம் வரை எல்லாத்தையும் அவங்களே செய்யற மாதிரி integratedஆ இருப்பாங்க. ஆனா இப்போ எல்லாம் வெளியிடத்தில் செய்ய வெச்சுடறாங்க. அவ்வளவு ஏன் சின்ன டீக்கடைக்குப் போனா காப்பி கலந்து குடுப்பான். ஆனா ஸ்டார் ஹோட்டலில் எல்லாம் தனித்தனியா தந்து நம்மளையே கலந்துக்க வைக்கறான். ஆனா இவனுக்குத்தான் காசு அதிகம். அதனால இன்னிக்கு பொருத்தார் பூமி ஆள்வார்ன்னு சொல்லறதுதானே சரி?”

“நல்லா கத்துக்கறடா நீ!! ஆள்வார்ன்னு சொல்லும் பொழுதுதான் ஞாபகம் வருது. ஆள்வார் என்றால் ஆளுபவர். ஆனா வைணவத்தில் முக்கியமான பன்னிரண்டு பேரையும் ஆழ்வார்ன்னு சொல்லணும். அவங்க அந்த சமயத்தை ஆளலை. ஆனா இறைவனிடம் ஆழ்ந்த பக்தியோட இருந்தவங்க. அதனால அவங்களை ஆழ்வார்ன்னு சொல்லணும்.”

“அப்போ ஆண்டாள்ன்னா ஆள்வாருக்கு பாஸ்ட் டென்ஸ் மாதிரி இருக்கே. அவங்க ஆள்வாரா இல்லை ஆழ்வாரா?”

“அடப்பாவி, உன் லொள்ளுக்கு அளவே இல்லையா? விட்டா ஆள்வார்ன்னா ஆம்பிளைகள்தானே இருக்கணும். அப்போ அம்மா ஆட்சி வந்தா அவரு பெண்வாரான்னு கேட்ப போல. அப்புறம் பெண்களால்தானே war அப்படினு தாவுவ. இங்க அரசியல் எல்லாம் பேசக் கூடாது, தெரியும்தானே. ஆபீஸ் கேண்டீனில் கூட இவ்விடம் அரசியல் பேசக்கூடாதுன்னு போர்டு மாட்ட வெச்சுடாதே ராசா.”

“அன்னிக்கு நம்ம காலேஜ் சுவத்துல நோட்டீஸ் ஒண்ணு பார்த்தேன். சிரிச்சு சிரிச்சு வயத்துவலியே வந்துடுச்சு.”

”நீ உன் விஷயத்தைச் சொல்லறதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொல்லறேன். சுவத்திலன்னு பேச்சு வழக்கில் சொல்லறதை எழுதும் பொழுது சுவற்றில் அப்படின்னு எழுதறாங்க. அது தப்பு. சுவரில்ன்னுதான் எழுதணும். சுவர்+இல் = சுவரில். இதுதான் சரி. நீயே வயித்துவலின்னு சொன்ன. அதை எழுதும் பொழுது வயிற்றுவலின்னு எழதறோம். வயிறு+வலி = வயிற்றுவலி,  வயிறு+இல் = வயிற்றில், கயிறு+ஆல் = கயிற்றால். இதெல்லாம்தான் சரி. சுவரு+இல் அப்படின்னு வந்தா வேணா சுவற்றில் அப்படின்னு சொல்லலாம். ஆனா சுவரு என்பது சரியான வார்த்தை இல்லை. அதனால சுவரில் அப்படின்னுதான் சொல்லணும்.”

“ஓஹோ!! சில சமயங்களில் கொஞ்சம் அதிகமாகவே அழுத்தி கரடுமுரடா இருந்தால்தான் சரின்னு நம்ம ஆளுங்க ஒரு அழுத்து அழுத்திடறாங்க போல!”

“அதை விடு. நீ சொல்ல வந்ததைச் சொல்லு.”

”அது ஒரு பள்ளிக்கூடத்துக்கு விளம்பரம். ஒரு பக்கம் ஆங்கிலத்திலும் மறுபக்கம் தமிழிலும் இருந்தது. ஆங்கிலத்தில் கடைசியில் Admissions open for boys and girls அப்படின்னு எழுதி இருந்தது. அதை தமிழில் எழுதும் பொழுது, இப்பொழுது ஆண் பெண் சேர்க்கை நடைபெறுகிறதுன்னு போட்டுட்டாங்கடா!”

“அடப்பாவிகளா! மொழி மாற்றத்தின் போது சில சமயங்களில் இப்படி அபத்தம் ஆயிடும். அதனாலதான் ஜாக்கிரதையா இருக்கணும். இல்லைன்னா சாய்கடைதான்..”

“அது என்னடா சாய்க்கடை?”

“சாய்க்கடை இல்லைடா. அது என்னமோ டீக்கடை மாதிரி இருக்கு. இது சாய்கடை. நாம இதைத்தான் தப்பா சாக்கடைன்னு சொல்லறோம். கடைன்னா இடம் அப்படின்னு ஒரு அர்த்தமும் இருக்கு. அதனால சாய்கடைன்னா சாய்வாக இருக்கும் இடம். கழிவு நீர் வழிந்து ஓடுவதற்கு வசதியாக சாய்வாக இருக்கும் இடம் சாய்கடை. இதை சாக்கடைன்னு சொன்னா என்னமோ சாவுக்கு சம்பந்தப்பட்ட மாதிரி இருக்கு.”

“சாக்கடை பூரா கிருமிகள்தானே. அதன் மூலம் சாவு வரும். அதனால சாவு இருக்கும் இடம் சாக்கடை. எனவே சாக்கடை என்பதும் சரிதான்! உனக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் விளக்கம் தரத்தெரியும்ன்னு நினைச்சியா?”

“சரிதான்!! நல்லா இருடா ராசா!! நடு செண்டர், கேட்டு வாசல்ன்னு எல்லாம் சொன்னா சிரிப்பதானே. அந்த மாதிரி ஒரு விஷயம் சொல்லவா?”

”சொல்லு சொல்லு.”

“அண்ணாகயிறு, அருணாகயிறுன்னு எல்லாம் சொல்லுவாங்க தெரியுமா?”

“தெரியாம என்ன, அரைஞாண்கயிறு. அதைத்தானே அப்படி எல்லாம் சொல்லறாங்க. எனக்கு சரியான வார்த்தை தெரிஞ்சு இருக்கு பார்த்தியா?”

“சரின்னு நீ சொல்லற பாரு. அங்கதான் பிரச்சனை இருக்கு. அரைன்னா இடுப்பு. வேட்டி அரையிலேயே நிக்கலைன்னு சொல்லுவாங்க. உடம்பைப் பாதியாப் பிரிக்கிற இடம் என்பதால் அரை என வந்ததோ என்னவோ. ஞாண் என்றால் நாண்ன்னு சொல்லறோமே அதோட திரிபுதான். நாண்ன்னாலே கயிறுதான். வில்லில் பூட்டிய நாண்ன்னு சொல்லுவதில் கூட இந்தப் பொருள்தான். அரைஞாண்ன்னு சொன்னாலே இடுப்பில் கட்டும் கயிறுன்னுதான் அர்த்தம். அது கூட எதுக்கு இன்னும் ஒரு கயிறு? தேவையே இல்லை. அரைஞாண்ன்னு சொன்னாலே போதும்.”

”சரி. இதோட ஆட்ட்த்தை முடிச்சுக்கலாம். போவோமா ஊர்கோலம், பூலோகம் எங்கெங்கும்…”

“டேய். இது கூட தப்புதான் தெரியுமா?”

”டேய். இதுல என்னடா தப்பு. கவிஞர் எழுதினபடிதானே பாடறேன்.”

“எழுதினவர் மேலதாண்டா குற்றச்சாட்டு. உன் மேல இல்லை. பொதுவா கோயில்ல கடிகாரம் போற மாதிரி வலமாத்தானே சுத்துவோம். அந்த நாட்களில் ஊரில் எதாவது பண்டிகை நடந்து ஊரைச் சுற்றி வந்தாங்கன்னா இதே மாதிரி வலமாகத்தான் சுத்துவாங்க. அது ஊர்வலம். ராஜா நகர்வலம் போனாருன்னு கூட படிச்சிருக்கோமே. அதனால ஊர்வலம் அப்படின்னுதான் சொல்லணும். கோலம், வீட்டு வாசலை அலங்கரிக்கப் போடறது. ஊர் மொத்தமும் கோலம் போட்டா வேணா ஊர்கோலம்ன்னு சொல்லிக்கலாம்.”

“சரி சரி. போவோமா ஊர்வலம்தான்னு பாடறேன். நீ கிளம்பற வழியைப் பாரு.”

 • கண்ணராவி – கண்ணை ராவும்படியான காட்சி
 • கர்ணக்கொடூரம் – காதில் விழும் கொடூரமான சத்தம்
 • பொருத்து – இணை, பொறுத்து – தாங்கி
 • ஆள்வார் – ஆளுபவர், ஆழ்வார் – ஆழ்ந்த பக்தியுடையவர்
 • சுவர்+இல் = சுவரில், சுவற்றில் இல்லை
 • சாய்கடை – சாய்வாக இருக்கும் இடம் (கழிவுநீர் செல்வதற்காக)
 • அரைஞாண் – இடுப்பில் கட்டப்படும் கயிறு. அரைஞாண் கயிறு எனச் சொல்வது தவறு
 • ஊர்வலம் – ஊரை வலமாக சுற்றி வருதல். ஊர்கோலம் – தவறான பயன்பாடு

3 comments so far

 1. ராமதுரை
  #1

  இலவச்க் கொத்தனார் பகுதியை நான் தொட்ர்ந்து படிப்பவன். தமிழ் இலக்கணத்தை மிக எளிய முறையில் அளித்து வருகிறீர்கள். க்டினமான விஷய்ங்களை எளிமைப்ப்டுத்தி எவருக்கும் புரியும் வகையில் எழுதுவது என்பது மிகவும் கடினமான விஷய்ம்.
  இது ஒரு புறம் இருக்க இந்த வர்ர்ப் பகுதியில் கர்ணகொடூரம் என்ப்து தான் சரி என்று எழுதியிருக்கிறீர்கள். இது விஷய்த்தில் எனது மாறுபட்ட கருத்தைக் கூற விரும்புகிறேன். கடூரம் என்று தனி சொல் உண்டு. கடூரம் என்றால் கடுமையானது என்று பொருள். அந்த் வகையில் கர்ணம் என்ற சொல்லுடன் கடூரம் சேரும் போது கர்ணகடூரம் ஆகின்றது. காதுக்கு கேட்பதற்கு கஷடமானது என்பது பொருள். ஆகவே அது கர்ணகடூரம் என்று இருக்க வேண்டும். கர்ணகொடூரம் அல்ல என்பது என் கருத்து
  தங்களது பணி தொடர என் வாழ்த்துக்கள். நான் ஏற்கெனவே ஒரு முறை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இப் பகுதியை தனி நூலாக வெளியிட் மீண்டும் கோருகிறேன்.

  ராமதுரை

 2. ஆயில்யன்
  #2

  //இது சாய்கடை//

  புதிதாக இது மட்டுமல்ல நிறையவே தெரிந்துகொண்டோம்! வளர நன்னி 🙂

  ************************

  முன்னாடி ஒரு வாட்டி எடிட்டிங் டிபார்மெண்ட் நன்னி சொன்ன நேரம் நல்ல நேரம் இல்ல போல அதுக்கு பிறகு ஒரே டெரரா இருக்கு

  இங்ஙனம்
  சற்றே வருத்தம் கலந்த முகத்துடன்,
  கொத்தனார் நோட்ஸ் பட ரசிகன்

 3. துளசி கோபால்
  #3

  பொருத்தமான எடுத்துக் காட்டுகளைக் கொடுத்து விளக்குனதுக்கு நன்றி.

  அப்படியே இந்த மதில் / மதிளைப் பற்றி ஆராய்ச்சி செய்து சொல்லுங்க.

  பொறுத்துருப்பேன்.

  கல்கி ‘மதிள்’னு எழுதி இருக்கார். அப்போ இலவசம்’ இல்லை:-))))

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: