அதென்ன ஹோம்லி கேர்ல்?
தோழிக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. வெளிர் நீல நிறத்தில் குழந்தைக்கான டிரெஸ், குல்லா, சாக்ஸ், க்ளவுஸ் எல்லாம் வாங்கியிருந்தேன். அமெரிக்காவுக்குக் கிளம்பும் அவசரத்திலும் ஆசையுடன் கவரை வாங்கிப் பிரித்தாள். அவள் முகம் சட்டென்று மாறிவிட்டது.
‘என்ன ஆச்சு?’
‘பெண் குழந்தைக்கு பிங்க் கலர்லதான் டிரெஸ் வாங்குவாங்க. ஆண் குழந்தைக்குத்தான் ப்ளூ. உனக்குத் தெரியாதா?’
‘எனக்கு அதெல்லாம் தோணலை. நல்லா இருந்தது வாங்கினேன்.’
‘சாரி, இதை வேற யாருக்காவது கொடுத்துடு. எனக்கு வேண்டாம். தப்பா நினைச்சுக்காத. அமெரிக்காவுல இந்த கலர்ல போட்டா சிரிப்பாங்க.’
**
நிறமாகட்டும் பெண்களின் உடையாகட்டும் இது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யார்தான் மூளையைக் கசக்கிக்கொண்டு யோசித்திருப்பார்கள்?
பிறந்த குழந்தைக்குத் துணி வாங்கும்போதே இந்தப் பிரிவினை வந்துவிடுகிறது. பெண் குழந்தைகள் என்றால் கண்கவர் வண்ணங்களில் பூக்களும் கார்ட்டூன்களும் நிறைந்த உடைகளாகவும் ஆண் குழந்தைகளுக்கு வெளிர் நிறங்களில் சிம்பிளான டிசைன்கள் உள்ளவையாகவும் உடைகள் இருக்கின்றன.
மிகச் சிறிய வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்றும் இப்படித்தான் உட்கார வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அப்போதே உடை மீது கவனம் வந்துவிடுகிறது. வளர வளர இந்தக் கவனம் இன்னும் அதிகமாகிறது. தாவணியோ, புடைவையோ விலகாமல் கண்கொத்திப்பாம்பு போல கவனமாக இருக்கவேண்டும். நாளடைவில் இந்தக் கவனம் அன்னிச்சைச் செயலாகவே மாறிவிடுகிறது. உடை சரியாக இருந்தாலும் கூட ஆண்களைக் கண்டவுடன் கை தானாகவே சென்று சரிசெய்ய ஆரம்பித்து விடுகிறது. பகல் வேளைகளில் இப்படி என்றால் இரவுகளில் இன்னும் கவனம் அதிகம் தேவைப்படுகிறது. கொளுத்தும் கோடையாக இருந்தாலும் பெண்கள் போர்வையைப் போர்த்திக்கொண்டுதான் உறங்க வேண்டும். தூக்கக் கலக்கத்தில் கூட உடை விலகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கவுன், அரைப்பாவாடை, முழுப்பாவாடை, தாவணி, (இப்போது சுடிதார்) புடைவை என்று பல பரிமாணங்களை அடைகிறது பெண்களின் உடைகள். ஆனால் இவை எல்லாம் எவ்வளவு தூரம் வசதியாக இருக்கின்றன?
வாசுகி ஓட்டப் பந்தைய வீராங்கனை. போட்டியில் பங்கு பெறும்போது கூட அவள் அரைப்பாவாடையோ, ட்ராக் ஷுட்டோ போடுவதற்கு அவள் வீட்டில் அனுமதி இல்லை. உள்பாவாடை, வெளிப்பாவாடை என்று இரண்டு பாவாடைகளைக் கட்டிக்கொண்டு வேகமாக ஓடுவது மிகவும் கஷ்டம். சில நேரங்களில் பாவாடைத் தடுக்கி கீழே விழுந்து பரிசைத் தவற விட்டிருக்கிறாள். அத்துடன் சக மாணவ, மாணவியரின் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறாள்.
சைக்கிள், இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது பாவாடை, புடைவை இரண்டுமே வசதியாக இருக்காது. பெடலில் புடைவை சிக்கக்கூடாது, அதே நேரம் புடைவையைத் தூக்கிச் செருகவும் கூடாது. புடைவை கட்டிக்கொண்டு வண்டி ஓட்டும் பெண்கள் தோளில், இடுப்பில் என்று நான்கு ஐந்து ஊக்குகளைக் குத்திக்கொண்டுதான் தினமும் பயணிக்கிறார்கள்.
தோட்ட வேலைகளை அத்தனை சுத்தமாகச் செய்வார் மயிலம்மாள். எத்தனை உயரமான தென்னை மரங்களாக இருந்தாலும் ஒரு சில நிமிடங்களில் ஏறி, உச்சியை அடைந்துவிடுவார். வேகமாக வேலையை முடித்துவிட்டுக் கீழே இறங்குவார்.
‘ரொம்ப அழகா மரம் ஏறுறறீங்க!’
‘இந்தச் சேலை கட்டிருக்கறதால மரம் ஏறுறது ரொம்பக் கஷ்டம். அதனாலதான் பொம்பளைங்க இந்த வேலைக்கு யோசிக்கிறாங்க. துணியைச் சரி பண்ணறதா, கீழே விழாம மரத்தைப் பிடிக்கிறதான்னு குழப்பமா இருக்கும்மா. இதுல சில வூட்டு ஆம்பளைங்க நான் எப்படி வேலை செய்யறேன்னு பார்க்கறதுக்காகத் தோட்டத்துல வந்து நின்னுடுவாங்க. ரொம்பச் சங்கடமா இருக்கும். ’
மரம் ஏறுவது மட்டுமல்ல, நாற்று நடுவது, களை பறிப்பது, துவைப்பது, பெருக்குவது என்று எந்த வேலைக்குத்தான் இந்தச் சேலை வசதியாக இருந்திருக்கிறது? 6 மீட்டர் துணியைச் சுற்றிக்கொள்வது என்ன மாதிரியான உடை? இதில் சிலர் சேலைக்கு மேல் பர்தாவை அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்தியா போன்ற வெப்பப் பிரதேசங்களில் சேலை கட்டுவதே அவஸ்தையாக இருக்கும்போது, அந்தச் சேலைக்கு மேல் கறுப்பு பர்தா எப்படி இருக்கும்?
வசதி என்ற ஒரே காரணத்தால் மட்டுமே இன்று கிராமங்கள் வரை சுடிதார் மிக வேகமாக ஊடுருவி இருக்கிறது.
இவை ஒருபுறமிருக்க, பெண்களின் உடைகளைப் பற்றிச் சொல்லப்படும் கருத்துகள் என்னென்ன?
ஐம்பது ஆண்டுகளாக ஒரே பல்லவியைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். சுடிதார், ஜீன்ஸ், மிடி என்று பெண்கள் மற்ற உடைகளின் மேல் கவனம் செலுத்தும்போதெல்லாம் இந்த விஷயம் சொல்லப்படுகிறது.
‘பெண்கள் என்றால் சேலை கட்டி, தலை பின்னி பூ வைத்து அம்மன் மாதிரி காட்சியளிக்க வேண்டும். இப்படி இருக்கும் பெண்களைக் கண்டால் ஆண்களுக்கு மரியாதை வரும். கை எடுத்துக் கும்பிடுவார்கள்.’
இந்த டயலாக் ஏதோ திரைப்படங்கள், சீரியல்களில் மட்டும் சொல்லப்படுவதில்லை. இயல்பு வாழ்க்கையிலும் ஆண்களால் அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்படுகிறது.
சினிமாக்களிலும் சரி, சீரியல்களிலும் சரி, அடங்காப்பிடாரியாக, வில்லியாக, ஹீரோவை எதிர்த்துப் பேசுபவராக நடிக்கும் பெண்களுக்கு மாடர்ன் டிரெஸ்களைக் கொடுத்து விடுகிறார்கள். சில துடுக்கான கேரக்டர்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கும் இது பொருந்தும். அவர்கள் திருந்தும்போதோ, ஹீரோவைக் காதலிக்க ஆரம்பிக்கும்போதோ சட்டென்று புடைவை கட்டி விட்டுவிடுகிறார்கள். அதாவது அந்தப் பெண் இப்போதுதான் முழுப்பெண்ணாக மாறுகிறாளாம்!
சேலை கட்டினால்தான் (குடும்பப்)பெண்ணாக இருக்க முடியும் என்று காட்டும் அதே சினிமாவில், பாடல்களில் அப்படியே எதிர்மறையான பொருள்கொள்ளும்படி சேலையைக் கவர்ச்சிப் பொருளாக மாற்றிவிடுகிறார்கள். அதே போல மழை, தண்ணீரில் நனையும் காட்சிகளிலும் சேலைதான் பயன்படுத்தப்படுகிறது.
இப்படி ஊடகங்களைப் பார்த்து வளரும் குழந்தைகள், தன் அம்மா நைட்டி போடுவதையோ, சுடிதார் அணிவதையோ விரும்புவதில்லை. சில குழந்தைகள் அம்மாவை புடைவை கட்டச் சொல்லி, அழுது அடம் பிடிக்கிறார்கள்.
இந்தியாவில் விளையாட்டுத் துறைகளில் பெண்கள் வருவதே அரிது. அதிலும் உலக அளவில் புகழ் பெறுவது அரிதிலும் அரிது. டென்னிஸ் என்பது மேலைநாட்டு விளையாட்டு. அந்த விளையாட்டுக்கு என்று இருக்கும் உடையோ அல்லது வசதியாக இருக்கும் உடையையோதான் அணிந்து ஆட முடியும். சானியா மிர்சாவின் விளையாட்டைப் பற்றி விமர்சித்தால் பரவாயில்லை, அவருடைய உடைகளைப் பற்றித்தான் அதிகம் விமர்சிக்கிறார்கள்.
அலுவலகத்திலோ, சாலைகளிலோ மாடர்ன் உடைகளை அணியும் பெண்களைக் கண்டதும் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் கூட, ‘இப்படி டிரெஸ் பண்றதாலதான் ஆண்கள் தப்பாகப் பார்க்கிறார்கள். அவர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள். அவர்களை அப்படி நடந்துகொள்ளத் தூண்டியதே பெண் அணியும் உடைதான்’ என்கிறார்கள்.
பழங்குடி மற்றும் ஏழை எளிய பெண்கள், பெண் குழந்தைகள் எல்லாம் நம் நாட்டில் வக்கிரமான ஆண்களால் பலாத்காரம் செய்யப்படுகிறார்களே, அவர்கள் எல்லாம் மாடர்ன் உடைகளையா அணிந்திருக்கிறார்கள்? அவர்களின் உடையால்தான் இத்தகைய கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? அவர்கள் எல்லாம் நீங்கள் புனிதமாகக் கருதும் புடைவையைத்தானே அணிந்திருந்தார்கள். அப்படி என்றால் அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டிருக்க வேண்டாமா?
இங்கு மாற்றம் அடைய வேண்டியது பெண்களின் உடைகள் அல்ல; ஆண்களின் பார்வையே! பார்வையில் கோளாறு வைத்துக்கொண்டு, உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகப் பெண்களின் உடைகள் மீது குறை சொல்லாதீர்கள். அறிவுரை வழங்காதீர்கள். பெண்களுக்கு வசதியான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிய உரிமையும் புத்தியும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆண்கள் அணியும் உடைகளில் எந்தப் பெண்ணாவது கருத்துச் சொல்கிறாளா? ஆண்களுக்கு வேஷ்டிதான் நன்றாக இருக்கிறது, பாரம்பரிய உடை என்று சொன்னால் ஆண்கள் கேட்டுக்கொள்வார்களா?
திருமணத்துக்கு வரன் தேடும் பெரும்பாலான ஆண்கள், ஹோம்லி கேர்ளாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அது என்ன ஹோம்லி கேர்ள்? சுடிதார், புடைவைகளை அணிந்து, பவ்யமாக இருக்க வேண்டுமாம். சுடிதார் வரைக்கும்தான் இதுவரை ஆண்களின் மனம் விரிவடைந்திருக்கிறது! மற்ற உடைகளைப் போடுபவர்கள் எல்லாம் குடும்பப் பெண்கள் இல்லையா? ஹோம்லி பாய் அல்லது குடும்ப ஆண்கள் என்ற வார்த்தைகள் எல்லாம் ஏன் உருவாகவில்லை?
ஜீன்ஸ் அணிபவர்கள், டைட்ஸ் போடுபவர்கள், துப்பட்டா போடாதவர்கள் எல்லாம் பெண்களின் இலக்கணத்துக்குக் குந்தகம் விளைவிக்க வந்தவர்கள் என்றும் கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கலாசாரக் காவலர்களாக மாறி, தீர்ப்பு வழங்குவதற்கு இவர்கள் யார்?








December 9th, 2010 at 2:10 pm
ஆணாக இருக்கிற காரணத்தினால், உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பெண்ணின் மன பக்குவம் வெளிப்படுவதால் ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடியவில்லை.
December 9th, 2010 at 8:55 pm
அருமை… நல்ல பதிவு…. என்னுடைய நீண்ட நாள் எண்ணத்தை பிரிதிபலிப்பதாக இருக்கிறது… நன்றி…
December 10th, 2010 at 2:24 am
இந்த பதிவு ஒரு 10-15 வருஷம் முன்னே வந்திருக்கணுமோ? சமீபத்தில் எந்த தமிழ் திரைப்படத்திலும் ஹீரோயின் புடவை கட்டி பார்த்த மாதிரி ஞாபகம் இல்லை.
December 10th, 2010 at 10:34 am
பெண்களின் உடை மீது ஏற்பட்ட மாற்றங்கள் சில ஆயிரமாண்டுகளை தாண்டியது. இன்றும், ஒரு அறைகச்சையை கட்டிய ஆணிடம் ஒரு பெண் கவர்ச்சியை காண்பதில்லை. ஆனால் புடைவை முழுவதும் சுற்றிய பின்னும் கொசுவத்தின் நடுவில் தெரியும் இடையழகை ஆண் ரசிக்க தவறியதில்லை. இயற்கையே பெண்ணை அந்த உடலமைப்போடு படைத்ததும், அந்த பெண்மீது ஆணின் ஈர்ப்பும் அதற்கு காரணம்; வயசு கோளாறு என்று சொல்வார்களே அது…
“தூணுக்கெல்லாம் சேலை கட்டி தொட்டு பார்க்கும் வயசு” என்று ஒரு கவிஞர் எழுதியதாக ஞாபகம்.
இஸ்லாம் நண்பர்களின் ஒரு கோட்பாடு இங்கே பகிரப்படவேண்டிய ஒன்று. “பர்தா” என்ற ஒரு கட்டமைப்பு; கூடவே, எந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணின் பின்னால் செல்லக்கூடாது. இந்த ஒரு கோட்பாடு மதத்தின் பேரில் திணிக்கவேண்டிய காரணம் என்ன?
மேல் சொன்ன இயற்கை ஈர்ப்பை செயற்கையாக மாற்ற முனைவது. நன்மைக்காகதான்!
மானுடம் நாகரீகம் கற்றுக்கொண்டு இந்நாள் வரை உடை விஷயத்தில் பெண்களின் உடைகள் மாபெரும் மாற்றங்களை அடைந்தது. இது உலகளாவிய பார்வையில் இன்னும் பெரிது. இதே ஆண் விஷயத்தில் ஆராய்ந்து பார்த்தால், உங்களுக்கு ஒரு பக்கெட் அளவு தகவல் கூட கிடைக்காது.
“தூணுக்கெல்லாம் சேலை கட்டி தொட்டு பார்க்கும் வயசு” என்று சொல்லும் அளவுக்கு ஒரு ஆணுக்குள் அந்த உணர்ச்சிகளை புகுத்தியவர் யார் என்று கண்டு சொன்னால், அவரிடம் கேட்கலாம் ஹோம்லி கேர்ள் என்றால் என்னவென்று?
December 10th, 2010 at 11:30 am
Homely => plain, unattractive. பிறரை வசீகரிக்க முனையாத பெண் என்று பொருள் கொள்ளலாம்.
மாடர்ன் ஆடை பற்றி இவ்வளவு கவலைப்படுகிறீர்களே, முடிந்த வரை குறைப்பதுதான் இப்போதைய ஃபேஷன். உள்ளாடையின் எலாஸ்டிக் பட்டை தெரியும்படி மேலாடை அணிவது லேட்டஸ்ட். அப்படி உடையணிந்தால் பலித்தால் பார்க்கலாம் என்றபடி அலைவோர் பலித்தவரை பார்க்கத்தான் செய்வர்.
கிடக்கட்டும் தமிழ் சு்ஜாதா! கிராமத்தில பொம்பளை ஆளுக சேல கட்டித் தானே களத்து மேட்ல இருந்து கொளுத்துவேல வரைக்கும் பாக்குறாங்க…. என்னமோ அது uneasyன்னு எழுதறீங்களே? இந்தியாவின் இதயத்தில் வேலை செய்யும் நாடி நரம்பூகளைக் கேட்டுப் பார்த்துவிட்டு எழுதுங்கள்.
December 10th, 2010 at 12:22 pm
இது எப்படி இருக்குன்னா … நான் புலிக்கு முன்னாடி போய் நிப்பேன் …. புலிக்கு தான் புத்தர் மாதிரி ஞானம் வந்து என்னைய ஒண்ணும் செய்யக் கூடாது …. ஏங்க, எல்லா ஆம்பிளைங்களும் ஒன்னும் ராம்ன் இல்லீங்க …. இன்னும் எவால்வ் ஆகணும் …. அது வரைக்கும் நாமதான் பாதுகாப்பா இருக்கணும் …. பெங்களூர்ல ஒரு பீ.பீ.ஓ. பொண்ணை ராத்திரி 2மணிக்கு டிரைவர் கற்பழிச்சு கொன்னுபோட்டாருன்னு டீவீல மெழுகுவத்திலாம் ஏத்தி நியூஸ் போட்டாங்க …. பாவம்தான் …. தப்புதான் …. ஆனா கொலை நடந்த சம்பவ நாள் பேப்பரப் பாருங்க …. அந்த பொண்ணு எந்த மாதிரி ட்ரெஸ் போட்டுருந்துச்சுன்னு…. சம்பவத்தை நான் நியாயப்படுத்தல … காட்டு விலங்கு போல் அலையும் மனிதர் இன்னும் வாழும் ஊருல … நாமதான் சூதானமா நடந்துக்கனும் …. லா பாய்ன்டெல்லாம் வேலைக்காவாது
December 13th, 2010 at 5:06 pm
வணக்கம் சுஜாதா. அற்புதமாக பெண்களின் உடை பற்றி எழுதி உள்ளீர்கள். ஒரு தகவல். பெண்கள் அணியும் உடைகளிலேயே, மிகவும் கவர்ச்சியானது சேலைதான். அதுவும் மடிசார்தான். அங்கங்கே உடலை காண்பித்து, கவ்விப் பிடித்து..! வசதி என்பதற்காக மட்டும் அல்ல.நாகரிகமானதும் சுடிதார்தான்.
//இங்கு மாற்றம் அடைய வேண்டியது பெண்களின் உடைகள் அல்ல; ஆண்களின் பார்வையே!//