நிறுத்தினால் கிடைக்கும்
ஜென் அறிஞர் ஒருவர் முழுமையான ஞானம் எது எனத் தெரிந்துகொள்ள விரும்பினார். அதற்காக ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டார்.
அவர் முதன்முதலாகச் சந்தித்தது ஒரு துறவியை. அந்தத் துறவி இவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ’இப்படிப் பளபளான்னு பட்டு உடுத்திகிட்டுச் சுத்திவர்றியே, உனக்கெல்லாம் எப்படி ஞானம் கிடைக்கும்?’ என்றார்.
அறிஞருக்குத் தூக்கிவாரிப்போட்டது. உடனடியாகத் தனது பகட்டான ஆடைகளைத் துறந்தார். எளிமையாக உடுத்த ஆரம்பித்தார்.
ஆனால் அப்போதும் அவருக்கு ஞானம் கிடைக்கவில்லை. இன்னொரு குருவிடம் சென்றார்.
இந்தக் குருநாதர் அவரிடம் ’காலையில என்ன சாப்பிட்டே?’ என்று விசாரித்தார்.
’ஏன் சாமி கேட்கறீங்க? பக்கத்துத் தெரு சரவணபவன்ல ரெண்டு இட்லி சாப்டேன்.’
’முட்டாளே! ஞானம் சரவணபவனிலா கிடைக்கும்? இனிமேல் நீ பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடிதான் சாப்பிடவேண்டும்.’
’உத்தரவு குருவே. அப்படியே செய்கிறேன்.’
இதேபோல் வெவ்வேறு குருநாதர்களைச் சந்தித்த அவர் குளிப்பதை நிறுத்தினார், துணி துவைப்பதை நிறுத்தினார், தாடி, மீசை மழிப்பதை நிறுத்தினார், உலக சுகங்களையெல்லாம் துறந்துவிட்டார். ஆனாலும் அவர் தேடிய ஞானம்தான் கிடைத்தபாடில்லை.
கடைசியாக அவர் ஒரு மரத்தடியில் போய் உட்கார்ந்தார். தன்னுடைய நிலைமையை எண்ணித் தனக்குத்தானே புலம்ப ஆரம்பித்தார்.
அதே மரத்தடியில் ஒதுங்கியிருந்த இன்னொருவர் இவருடைய புலம்பலைக் கேட்டுவிட்டு வாய்விட்டுச் சிரித்தார். ’அட உலகமகா மேதாவியே, ட்ரெஸ்ஸைத் தொலைச்சே, சாப்பாட்டைத் தொலைச்சே, இன்னும் எதையெல்லாமோ தொலைச்சே, ஆனா நாம ஞானம் தேடறோம்ங்கற எண்ணத்தைத் தொலைக்கலியே. முதல்ல தேடறதை நிறுத்து. அப்புறம் ஞானம் தானாக் கிடைக்கும்.’







