ஒரு லவ்வு இஸ்டோரி

காதலியைக் கழட்டிவிடுவாரா, கைப்பிடிப்பாரா?  கைப்பிடிப்பார் என்றால் எப்போது? பலரைக் குடைந்துகொண்டிருந்த கேள்வி, கேத்தரீன் மிடில்டனுக்கும் இளவரசர் வில்லியம்ஸுக்கும் நிச்சயமாகி விட்டது என்று அதிகாரபூர்வமாக வேல்ஸின் இளவரசர் சார்லஸ் அறிவித்தபோது காணாமல் போனது.

கல்யாண செய்தியை விட ஆச்சரியமானது செய்தியை வெளிப்படுத்திய விதம். வில்லியம்ஸ், மணப்பதற்கு பெண்ணின் தந்தையின் அனுமதியை கேட்டிருப்பதை[என்னவோ அவர் இராணி வீட்டு சம்பந்தம் வேண்டாம் எனவும் மாப்பிள்ளையாக இளவரசர் வேண்டாம் எனவும் சொல்வார் போல] எல்லாம் சுட்டிக் காட்டி பாரம்பரியத்திற்கும் சம்பிரதாயத்திற்கும் முக்கியத்துவம் தரும் அரச பரம்பரை அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டது டிவிட்டரில்! அதுவும் சார்லஸின் அறிவிப்பாக மணமகன் வில்லியத்தின் அதிகார பூர்வ டிவிட்டரிலிருந்து. அடுத்த சில நிமிடங்களில் எலிசபத் மகாராணியாரும் வாழ்த்தியது டிவிட்டரில் தான்! மகாராணியாரின் பேஸ்புக் வாலில் வாழ்த்துகள் குவிந்துக் கொண்டிருக்கின்றன.

யாரிந்த கேத்தரீன் மிடில்டன்?  பக்கெல்பரி என்னும் ஊரில், குழந்தைகள் பார்ட்டிக்கு பொருட்கள் சப்ளை செய்யும் மைக்கேல் மற்றும் கரோல் மிடில்டன்னின் மூத்த மகள் தான், கேத்தரீன் மிடில்டன். என்ன தான் இவர்கள் மில்லியனர்களாக இருந்தாலும், அரச குடும்பத்தோடு ஒப்பிட்டால் மிடில்டன் குடும்பம் மிடில் க்ளாஸ் குடும்பம் தான். அதுவும் கேத்தரீனின் தந்தை முன்னாள் பைலட். தாயார் முன்னாள் ஏர் ஹொஸ்டஸ். கேத்தரீன் வில்லியம்ஸை டேட் செய்து கொண்டிருந்ததைக் கண்டு புகைந்தவர்களுக்கு, இந்தச் செய்தி வாய்க்கு அவல்.

இளவரசர் வில்லியம்ஸ் ஆண்ட்ரு பல்கலைக்கழகத்தில் படிக்கப் போகிறார் என நன்றாகத் தெரிந்து தான் தன் மகளை அங்கே படிக்க அனுப்பினார் என்று எல்லாம் அளந்து விட்டவர்களும் உண்டு. ஆம்,கல்வி கற்க சென்ற இடத்தில் தான் இருவருக்கும் காதல் அரும்பியது!

ஆண்ட்ரு பல்கலைக்கழகத்தில் ஆர்ட்ஸ் படித்துக் கொண்டிருந்தபோது, முதல் வருடம் முடிந்த பின்னர்,  “இது எல்லாம் சரிப்பட்டு வராது படிப்புக்கு குட்பை சொல்லலாம்” என வில்லியம்ஸ் பிளான் செய்துக் கொண்டிருந்தபோது, ஆர்ட்ஸ் வராட்டி படிப்புக்கு டாட்டாவா? பப்பி ஷேம். உனக்குள்ள ஏதாவது திறமை இருக்கும்டா என்ற கேத்தரீனின் அறிவுரையினால் தான் திரிஷா இல்லாட்டி திவ்யா, ஆர்டஸ் இல்லாட்டி ஜியாகிரபி என படிப்பைத் தொடர்ந்தார் வில்லியம்ஸ்.

நண்பி கேத்தரீனின் அறிவாளி என்பது எல்லாம் படிப்பில் மனதை மாற்றியது மூலம் வில்லியம்ஸூக்கு உறைத்தாலும், அழகியாக கண்ணுக்கு பட்டு, பட்டாம்பூச்சி பறந்து மண்டையில் பல்பு எரிந்து காதலியானது எல்லாம் கேத்தரீன் ஒரு நாள் கேட் வாக்கிய போது தான். அன்று கேத்தரீனின் அழகு ஊரில் இருக்கும் எல்லார் கண்ணுக்கும் பட்டது என்பது வேறு விஷயம். வார இறுதிகளில் வீட்டுக்கு கூட்டி வந்து, தந்தைக்கு அறிமுகப்படுத்தி, சேர்ந்து வாழ்ந்து, ஸ்விஸ்ஸுக்கு சுற்றுலா என்றெல்லாம் காதல் களை கட்டியதில் ஆரம்பத்தில் இராஜா வீட்டுக் கன்னுக் குட்டியின் மேய்ச்சல், இதுவும் கடந்து போகும் என்ற நெருங்கியவர் கருத்தெல்லாம் கருகிப் போனது.

காதல் கத்திரிக்காய் முற்றி சந்தைக்கு வந்த போது இருந்து எல்லாக் கேமரா கண்களும் இவர்கள் மீது தான். கண் போடாதீர்கள் கண் போடாதீர்கள் என கேமராக்களுக்கு வேண்டுகோள், சட்ட வில்லங்கம் எல்லாம் வைத்தும் கண் போட்ட விளைவு நான்கு வருட காதலுக்கு இருவரும் குட்பை சொன்னார்கள். காதல் கைகூட வில்லையெனில் என்ன, கவலைப்படாதே சகோதரி என கேத்தரீனும் அவரின் சகோதரியும், வேர் இஸ் த பார்ட்டி என போட்ட ஆட்டமும் வெளிவந்த போட்டோக்களும், வில்லியம்ஸின் பசலைத்தீக்கு பெட்ரோல் ஊற்றியது.

விளைவாக ஊடல் முடிந்து கூடினார்கள். [அந்தப் போட்டோவையெல்லாம் இங்கு வெளியிட்டால் தமிழ்பேப்பர் மஞ்சப் பேப்பர் ஆகிவிடும்]

கூடியவுடன் கல்யாணந்தான் கட்டிக்கலாமா என வில்லியம்ஸ் இப்போ கேட்பார், எப்போக் கேட்பார் என்று காத்திருந்த கேத்தரீனிடம் கடைசியில் கென்யாவில் தன் அம்மா டயானாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை நீட்டி கல்யாணத்தை கன்பர்ம் செய்தார்.

ஒருவழியாய் கல்யாணம் என்று எல்லாரையும் விட சந்தோஷப் பெருமூச்சு விடுவது வில்லியம்ஸின் தம்பி ஹாரி. தனக்கு ரூட் கிளியர் என்பதால் அல்ல. இதன் மூலம் அக்கா வேண்டுமென்ற அவரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியிருக்கிறதாம். பல வருடங்களுக்கு முன்னே அப்பாவிடம் சொல்லியிருக்கலாம்!

இன்னொரு குரூப், இவர்கள் காதலின் மீது இவர்களை விட அதிகமாய் நம்பிக்கை வைத்து பயங்கரமாய் முதலீடு செய்து இருவர் புகைப்படம் இருக்கும் காபி மக், டவல் என நினைவுப் பொருட்களை எல்லாம் எப்பொழுதோ தயார் செய்து வைத்தவர்கள்.

கல்யாண அறிவிப்பிற்குப் பின் இருவரும் அளித்த பேட்டியில் காதல் கொப்பளித்தது. கல்லூரிக் காலத்தில் அவளுடைய சுவரில் என்னுடைய பத்து இருபது போட்டோக்கள் இருக்கும் என வில்லியம்ஸ் சொன்னதும், சே சே அது எல்லாம் லெவிஸ் விளம்பரம் என கேத்தரீன் சொன்னதும், ஆமாம் நான் லெவிஸ் அணிந்த போட்டோக்கள் அவை என வில்லியம்ஸ் சொல்லியது எல்லாம் அட அட! இவளை இம்ப்ரஸ் செய்ய சமையல் எல்லாம் செய்தேன். முதலில் அவள் அப்பாவிடம் கல்யாணம் பற்றிக் கேட்டால் வேண்டாம் என சொல்லி விடுவாரோ என பயந்தேன் என்றெல்லாம் சொல்லும் போது சாதாரண சாமானியனாகத் தெரியும் வில்லியம்ஸ், அவளுக்குப் பிடிக்கவில்லையெனில் விலக வாய்ப்பு இருக்க வேண்டுமென்றுதான் இவ்வளவு நாட்கள் காதலித்தும் கல்யாணத்திற்கு காலம் கடத்தியதற்கு காரணம் என்று தெரிவிக்கும் போது சாம்ராஜ்யாதிபதி ஆகிவிடுகிறார்!

எப்பொழுது கல்யாணம் என்று தக்க சமயத்தில் அறிவிக்கிறோம் என சொல்லியிருந்தாலும். அடுத்த வருடம் ஆகஸ்ட்டில் என்று ஆருடம் சொல்லுகிறார்கள். எந்த தேதியில் என்று புக்கிங் கொடி கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது.

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நடக்கும் அரச குடும்பத்துக் கல்யாணம் [கிழவி கேமிலா கல்யாணம் எல்லாம் கணக்கில் இல்லை] என்பதால் கோலாகலம் கொடி கட்டிப் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் சமயத்தில் ஆடம்பரம் தேவையா என்று கேள்வி கேட்பவர்களுக்கு, இது முதலீடு, இதனால் டூரிசம் வளரும், டிவியில் காட்டி விளம்பரத்தில் காசு பார்க்கலாம், ஜாலி மூடில் மக்கள் செலவு செய்தால் மந்தமாவது மண்ணாங்கட்டியாவது என்று பதில் பீரங்கி குண்டாய் வருகிறது. இதற்கு முன் நடந்த பல அரசகுடும்பத்துக் கல்யாணங்கள் பொருளாதார மந்தகதிக்கு நடுவில் தான் என வரலாறு கூறுகிறது!

பத்து வருட நட்பு, எட்டு வருடக் காதல், நடுவில் பிரிவு, எவ்வளவோ பிரச்னைகள், எதற்கும் கலங்காமல் கடுப்படையாமல் ஒரு வார்த்தை வெளியில் சொல்லாமல் இருந்தவர், இனி மேல் எதையும் பார்ப்பார் என மிடில் கிளாஸ் மிடில்டன், இராயல் பேமிலிக்கு ஒத்து வருவாரா, மீடியாவைத் தாக்குப் பிடிப்பாரா, கல்யாணம் காலத்தைக் கடந்து நிற்குமா என்ற சந்தேகங்கள் புறந்தள்ளப்படுகின்றன.

பெண்ணின் கல்யாண உடை எப்படியிருக்கும் அரசாங்க விடுமுறை இருக்குமா என்ற பைசா பிரயோஜனம் பெறாத எதிர்பார்ப்புகளை விட அனைவரும் வேண்டிக் கொள்வது , அரச குடும்பத்திலிருந்து பெண் எடுக்காதது ஒன்று மட்டும்தான் வில்லியம்ஸுக்கும் அவர் அப்பா சார்லஸுக்கும் இருக்கும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பது!

2 comments so far

  1. பாலா
    #1

    “வில்லியம்ஸ்” அல்ல வெறும் “வில்லியம்” மட்டுமே.

  2. ராம்
    #2

    எடுத்துறைத்தல் நன்றாக இருக்கிறது. சிறு சிறு நிகழ்வுகளை கோர்த்திருக்கும் விதம் நன்று.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: