எலக்ட்ரானிக் காந்தி
காந்தி சிரிக்கிறார். காந்தியின் பொக்கைவாய்ச் சிரிப்போடு கூடிய ஒரு தாள் என் பாக்கெட்டிலும் இருந்தால், நானும் சிரிப்பேன். காந்தி நோட்டில் சிரிப்பது அவரவர்களின் நிலைமைக்கு ஏற்ப, சந்தோஷமோ, நக்கலோ, துக்கமோ, இன்னபிறவாகவோ இருக்கலாம். ஆனால், காந்தி உங்கள் பர்ஸில் சிரிக்காமல், உங்களுக்குச் சிரிப்பு வராது.
விடாது கருப்பு மாதிரி இந்தப் பணப் பரிமாற்றம் என்னை விடாது துரத்துகிறது. உங்களுடைய சம்பளம் வங்கியில் நேரடியாகச் சேர்கிறது. உங்களுடைய ECS நேரடியாகக் கழிகிறது. மென்பொருள் துறையில் இருக்கும் பெரும்பாலான நணபர்களின் புலம்பல் இதுதான். “பணம் வர்றத்தும் தெரியல, போறதும் தெரியல, எல்லாம் அதுவே ஆட்டோ கிரெடிட்/டெபிட் ஆகுது, கையில எதுவும் நிக்க மாட்டேங்குது. அப்படி போகுது வாழ்க்கை.”
காந்தி பைனரியில் பிரயாணம் செய்து, பைட்டுகளாக மாறி, அதிர்ஷ்டமிருந்து பெறுனராக நீங்கள் இருந்தால், ஸ்டாஸ்டிக்காக உங்கள் வங்கிக் கணக்கில் பிரகாசமாய் சிரிப்பார். இதற்குக் காரணம் ரெண்டே சேவைகள்; NEFT & RTGS
இந்த ஆட்டோ டெபிட்/கிரெடிட் சமாசாரங்கள், சம்சாரத்திற்குத் தெரியாமல் நடப்பதை டார்டாய்ஸினை கையிலெடுத்துக் கொண்டு கொஞ்சம் ப்ளாஷ்பேக்கலாம்.
அக்டோபர் 2005ல் ரிசர்வ் வங்கி ஆரம்பித்து வைத்ததுதான் இது. ஒரு வங்கிக் கிளையிலிருந்து, இன்னொரு வங்கியின் கிளைக்கு மிகவும் பாதுகாப்பாகவும், துரிதமாகவும் பணத்தினை அனுப்ப ஆரம்பிக்கப்பட்டதுதான் NEFT – National Electronic Fund Transfer – தேசிய மின் பணப்பரிமாற்ற சேவை. தமிழ் அக்ரானிம்களுக்கு ஒரு மோசமான மொழியாக இருப்பதால் (திமுக, அதிமுக, பாமக தவிர) ஆங்கிலத்திலேயே குறிப்போம்.
NEFT
NEFT இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்தியன் பைனான்ஷியல் நெட்வொர்க், சுருக்கமாய் INFINET (Indian Financial Network) வழியாக இயங்குகிறது. இன்பிநெட் PKI (Public Key Infrastructure) என்கிற தொழில்நுட்பத்தின் வழியாக, இருமுனை பாதுகாப்பு விஷயங்களோடு இயங்கும் ஒரு விஷயம்.இது பற்றிப் பேசவேண்டுமானால், தனியாக ஒரு நாள் ரூம் போட்டு என்க்ரிப்ஷன், அல்காரிதம், டபுள் கீ, ஹாக்கிங், சர்வர்/கிளையண்ட் சைட் செக்யுரிட்டி என்றெல்லாம் ஜல்லியடிக்க வேண்டும். இப்போதைக்கு இது தெரிந்தால் போதும்.
NEFT தான் இந்தியாவின் முதன்மையான மின் பணப் பரிமாற்ற சேவை. RTGS இதனுடைய சற்றேறக் குறைய லார்ஜர் வெர்ஷன். இரண்டுக்கும் அடிப்படை IFSC. அதென்ன IFSC, SSLC மாதிரி?
IFSC – Indian Financial System Code. ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட வங்கி கிளைகளுக்கான ஒரு எண்ணெழுத்து (alpha numeric) குறியீட்டு எண் தான், உதாரணத்துக்குச் சொன்னால், இப்படி இருக்கும் – BKID0008010
இது ஒரு 11 இலக்கங்கள் கொண்ட எண்ணெழுத்து. இதன் முதல் நான்கு இலக்கங்கள் எழுத்தாய் இருக்கும், முக்கியமாய் வங்கியின் பெயராய் இருக்கும். (மேலே சொன்னது பாங்க் ஆப் இந்தியா.) இந்த நான்கு இலக்கங்களுக்குப்பின் கட்டாயமாய் 0 வரும். பின் வரும் ஆறு இலக்கங்கள், வங்கிக் கிளைக்கானது. மேற்சொன்ன எண் பாங்க் ஆப் இந்தியா, தமிழ்நாடு, சென்னை, அடையார் கிளைக்கானது. இது தான் IFSC-இன் படம் வரைந்து பாகங்களைக் குறிக்காமல் விளக்கும் விவரம். இந்த எண்ணெழுத்துதான் உங்கள் வங்கிக் கணக்கின் மின் பணப் பரிமாற்றத்தினை நிர்ணயிக்கும் காரணகர்த்தா.
உங்கள் செக்புக்கில் முக்கால்வாசி வலதுப் புற முலையில் தேமே என்று IFSC/RTGS Code இருக்கும். இல்லையென்றால், வங்கிக் கணக்கின் IFSC எண் தெரிந்து கொள்ள இந்த தளத்திற்குப் படையெடுங்கள்.
NEFT அடிப்படையில் ரொம்ப சுலபம். உங்களுக்கு தெரிய வேண்டியதெல்லாம், ரெண்டே விஷயங்கள்தான். நீங்கள் யாருக்குப் பணம் அனுப்பப் போகிறீர்களோ, அவர்களுடைய வங்கிக் கணக்கு எண்/கிளை, பெயர் மட்டுமே. இன்றைக்கு பெரும்பாலான வங்கிகளின் இணையத்தளங்கள், நீங்கள் பெயர் மற்றும் வங்கிக் கிளை கொடுத்தாலே, IFSC எண்ணிணை உடனடியாகத் தந்துவிடும். நீங்கள் அந்த நபரை Beneficiary யாகச் சேர்த்துக் கொண்டால் போதும். அதன்பிறகு எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப முடியும். எவ்வளவு நபர்களை வேண்டுமானாலும், உங்கள் கணக்கில் நீங்கள் Beneficiaryயாகச் சேர்த்துக் கொள்ள முடியும். டிவிட்டரில் டிஎம் அனுப்பினால், என் விவரங்களை தருகிறேன். உங்கள் மனம் போல் அனுப்பலாம்.
NEFT எப்படி வேலை செய்கிறது?
- நீங்கள் உங்கள் இணைய வங்கி சேவையினை உபயோகித்தோ, அல்லது கிளைக்குச் சென்றோ NEFT பயன்படுத்தமுடியும். பெறுநரின் பெயர், வங்கி கணக்கு எண், வங்கிப் பெயர், கிளை போன்றவற்றைக் கொடுத்தால் போதுமானது. ஏடிஎம்-களின் வழியாகவும் இதைப் பயன்படுத்த சில வங்கிகள் அனுமதிக்கின்றன. (எ.கா. நாராயணனுக்கு இதைப் படிப்பவர்கள் அனைவரும் உடனடியாக வங்கிக்குச் சென்று ரூ.1000 அனுப்புவார்கள்.)
- வங்கி, நீங்கள் நாராயணனுக்குக் கொடுக்கவேண்டிய ரூ.1000த்தைப் பெற்றுக் கொண்டோ, அல்லது உங்கள் கணக்கிலிருந்து கழித்துக் கொண்டோ, நாராயணனின் வங்கிக்கு ஒரு செய்தி அனுப்புவார்கள். இந்தச் செய்தி நேரடியாக நாராயணின் வங்கியின் கிளைக்குப் போகாது. இது போகக்கூடிய இடம் NEFT சேவை மையம்.
- இதைப் பெற்று கொள்ளும் சேவை மையம், இதை NEFT Clearing Centreக்கு அனுப்பும். இந்த பட்டுவாடா மையத்தினை ரிசர்வ் வங்கியின் கீழுள்ள தேசிய பட்டுவாடா இயக்ககம் (National Clearing Cell) பெற்றுக் கொண்டு, அடுத்த சுற்றிற்காகக் காத்திருக்கும். இந்தச் சுற்று கதைக்கு அப்புறம் வருவோம்.
- பட்டுவாடா மையம், வங்கி- வாரியாக, கணக்கு முறையினை ரெடி செய்யும். எந்த வங்கியிலிருந்து கழிக்க வேண்டும், எந்த வங்கிக் கணக்கில் பெருக்க வேண்டும் என்றொரு லிஸ்ட் வரும். இது ரெடியானபின், பணத்தினைப் போட வேண்டிய வ்ங்கிகளுக்கான லிஸ்டினை ரெடி செய்து, அதனை NEFT சேவை மையத்திற்கு அனுப்பும்.
- சேவை மையத்திலிருந்து குறிப்பிட்ட பணம் பெறும் வங்கிகளுக்குச் செய்தி வந்தவுடன், வங்கிகள் அந்த பணத்தினைக் குறிப்பிட்ட வங்கி எண்ணில் கிரெடிட் செய்துவிடும். நாராயணன் சந்தோஷமாகி விடுவான்
சுற்று மேட்டருக்கு வருவோம். NEFT என்பது DNS (Deferred Net Settlement) அடிப்படையில் இயங்குகிறது. தமிழில் சொன்னால், இது அஞ்சலகம் மாதிரி. அஞ்சலகத்தில் தபால்கள் வந்தவுடன், அதை மொத்தமாகப் பிரித்து, அதன்பின் டெலிவரிக்குப் போகும். அந்த மாதிரி, ஒவ்வொரு பணப் பரிமாற்றமும், மேற்சொன்ன வகையில் பட்டுவாடா மையத்திற்குப் போய்விடும். மையம் இதை உடனடியாகச் செயல்படுத்தாது; மொத்தமாக ஒரு குறிப்பிட்ட பரிமாற்றங்கள் வந்தவுடன், மொத்தமாய்ச் செயல்படுத்தி திருப்பி அனுப்பும். கேட்க இதென்னவோ தாசில்தார் ஆபிஸில் சாதிச் சான்றிதழ் பெறுவது போலக் கடினமாக இருந்தாலும், இது அத்தனையும் தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுவிட்டது.
NEFTஇல் இப்போது 6 சுற்றுகள் இருக்கின்றன. வார நாட்களில், காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.00 மணிவரை 6 சுற்றுகள் ஒடும். 9.00 / 11.00 / 12.00 / மதியம் 1.00 / 3.00 / 5.00. சனிக்கிழமைகளில் 3 சுற்றுகள் 9.00 / 11.00 / 12.00. நீங்கள் ஒருவேளை 12.13க்கு அனுப்பினால், அது 1.00 மணி சுற்றில் சேர்ந்துவிடும், 3.00 மணிக்குள் நீங்கள் அனுப்பியவரின் கணக்கில் வரவு வைக்கப்படும். IFSC எண் இருக்கிற எந்த வங்கியிலிருந்தும் இன்னொரு வங்கிக்கு இதன் மூலம் பணம் அனுப்பலாம். காலையில் அனுப்பினால், மதியத்திற்குள் போய் சேர்ந்து விடும். குறைந்த பட்ச தொகை என்று எதுவும் கிடையாது. ரூ.10 கூட அனுப்பலாம்.
NEFT இன்றைக்கு இந்தியாவின் முக்கியமான மின் பணப் பரிமாற்றம். 107 வங்கிகள், தங்களின் 80000+ கிளைகளில் இன்றைக்கு மின் பணம் சாத்தியம். சில மணி நேரங்களில் இந்தியாவில் யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பணத்தினை அனுப்ப முடியும், பெற முடியும்.
NEFT-ல் நேபாளத்திற்கும் காசு அனுப்பமுடியும், சோப்ராஜ் உங்கள் சொந்தகாரராய் இருந்தால் கொஞ்சமாய் ட்ரான்ஸ்பர் பண்ணுங்கள். இது தாண்டி, நீங்கள் வெளிநாடு வாழ் இந்தியராய் இருந்து NRE, NRO கணக்குகள் வைத்திருந்தால், விதிமுறைகளின் கீழ் நீங்களும், இந்திய வங்கி கணக்குக்குப் பணம் அனுப்பமுடியும். நான் டாலரோ, திர்ஹாமோ, யூரோவோ எதுவாயிருந்தாலும் பெற்று கொள்கிறேன்.
NEFT சேவைக்கான கட்டணங்கள்
இன்கமிங் கால் இலவசம் என்பது மாதிரி, உங்கள் கணக்கிற்கு வரும் பணத்திற்கு எந்தக் கட்டணமும் இல்லை. (ஆனால் சேர்த்து வைத்து வருடக் கடைசியில், வருமானவரி மாமாக்கள் தீட்டிவிடுவார்கள் என்பது வேறு விஷயம்.) பணத்தினை அனுப்புவருக்குத்தான் கட்டணம்.
முந்தாநாளிலிருந்து (நவ.15) NEFT-ன் கட்டணத்தில் ஒரு சிறிய மாற்றம் வந்திருக்கிறது. இந்த நடு ஒரு லட்சம் – இரண்டு லட்சம், முந்தாநாள் வரை கிடையாது.
ஒரு லட்சம் ரூபாய் வரை ரூ. 5 + சேவை வரி*
ஒரு லட்சம் – இரண்டு லட்சம் ரூ.15 + சேவை வரி
இரண்டு லட்சத்திற்கு மேலாக ரூ.25 + சேவை வரி
* இப்போதைக்கு இந்தியாவில் சேவை வரி என்பது 10.3% உள்ளது. நீங்கள் அனுப்பும் தொகையோடு, சேவைக் கட்டணம் + சேவை வரியும் சேர்த்து உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
RTGS
RTGS – Real Time Gross Settlement (உடனடிப் பரிமாற்றம்) என்பது NEFT-இன் பெரியண்ணன். சில்லறை ஆட்களுக்கு இங்கே இடமில்லை. இதுவும் மின் பணப் பரிமாற்றம் தான், ஆனால் பரிமாற்றம் நடக்கும் தொகை கொஞ்சம் அதிகம். பெரிய வித்தியாசம் என்னவெனில், இதுவும் இன்பிநெட் சார்ந்து இயங்கினாலும், இது ரியல் டைம் பரிமாற்றம். NEFT-இல் அஞ்சலக வேலைகள் எல்லாம் இருக்கின்றன. RTGS-ல் கிடையாது. சுருக்கமாய், RTGS என்பது மேகி நூடுல்ஸ் மாதிரி. இன்ஸ்டண்ட் பரிமாற்றம். அதிகபட்சம் 10-15 நிமிடங்களில் உங்களுடைய பெறுநருக்குப் போய்விடும். அப்படி எதாவது சொதப்பினால், ரிசர்வ் வங்கியின் கட்டளைப்படி, இரண்டு மணி நேரத்துக்குள், உங்கள் வங்கிக் கணக்கிற்கே திரும்பி வந்துவிடும். RTGSயில் அல்ப்பையாய் பணம் அனுப்ப முடியாது. குறைந்தபட்ச பரிமாற்றத் தொகை ஒரு லட்சம். அதிகபட்சமாய் உங்கள் சொத்தினை எழுதிவைத்தாலும், நான் சுணங்காமல் வாங்கிக் கொள்வேன்.
இந்தியாவின் பெரு நிறுவனங்கள் அனைத்தும் RTGS நம்பியே இருக்கின்றன. எல்லாம் பல கோடிகளில் பரிவர்த்தனைகள் நடத்துபவை. RTGSஇன் நேரம் NEFTனை விட குறைவு. வார நாட்களில், காலை 9.00 முதல் மாலை 4.30 வரை. சனிக்கிழமைகளில் காலை 9.00 முதல் மதியம் 12.30 வரை. NEFT போல சுற்றுகள் எல்லாம் கிடையாது. இங்கிலிஷ் பட கிஸ் போல, இடைவெளி என்பதெல்லாம் RTGSல் கிடையாது. பணம் வர வர, கைமாறிக் கொண்டேயிருக்கும். பெரியதாய் ஒன்றுமில்லை, ஒரு நாளைக்கு இந்தியாவில் RTGS வழியாக, சராசரியாக 60,000 பரிவர்த்தனைகள் நடக்கின்றன. பரிமாற்றம் செய்யப்படும் பணம், ஜஸ்ட் 2,700 கோடிகள்தான்.
RTGS சேவைக்கான கட்டணங்கள்:
NEFT-இல் சொன்னது போல இங்கேயும் பெறுநருக்கு கட்டணமில்லை.
ஒரு லட்சம் – இரண்டு லட்சம் ரூ. 0
இரண்டு லட்சம் – ஐந்து லட்சம் ரூ.25 + சேவை வரி
ஐந்து லட்சத்திற்கு மேல் ரூ.50 + சேவை வரி
NEFT / RTGS ஆறு வித்தியாசங்கள்
- NEFT சேவையினை நீங்கள் NRE, NRO கணக்கு வைத்திருந்தாலும் பயன்படுத்த முடியும். RTGS-ல் முடியாது.
- NEFT ஒரு நாளுக்குள் வந்து சேரும். RTGS-மேகி நூடுல்ஸ் போல, உடனடியாக வந்து சேரும்.
- NEFT சேவையினை வைத்துக்கொண்டு நேபாளத்தில் இருக்கும் நபர்களுக்கும் பணத்தினை மாற்ற முடியும்.RTGS-ல் முடியாது.
- NEFT-ல் குறைந்தபட்சம் என்று எதுவும் இல்லை, ரூ.10 கூட மாற்ற முடியும். RTGS-ல் குறைந்தபட்சம் ஒரு லட்சம் இருக்க வேண்டும். எனக்கு அனுப்புவோர் தயவுசெய்து RTGS உபயோகப்படுத்துங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
- NEFT சேவை (80,000 வங்கி கிளைகள், 99 வங்கிகள்), RTGS சேவையினை (71,045 வங்கி கிளைகள், 107 வங்கிகள்) விட பரவலாக எல்லா வங்கிகளிலும் கிடைக்கும்.
- NEFT சேவையினை வைத்துக்கொண்டு உங்களின் கிரெடிட் கார்ட் பில்லினைச் செலுத்த முடியும். RTGS-ல் முடியாது.
இவ்வாறாக, கலியுகத்தில் காந்தியின் சிரிப்பு சர்வர்களில் அமுக்கப்பட்டு, அலைவரிசையாய் மாறி, பைனரியாய் `ராச வாழ்க்கை` வாழ்கிறது என்று இந்த வியாசத்தினை முடித்துக் கொள்கிறேன்.
Image Credit: Opatija.net








November 17th, 2010 at 10:32 am
>> நாராயணனுக்கு இதைப் படிப்பவர்கள் அனைவரும் உடனடியாக வங்கிக்குச் சென்று ரூ.1000 அனுப்புவார்கள்
நான் அனுப்புன ஆயிரம் ரூபா கிடைச்சுதுங்களா ?
>> நாராயணன் சந்தோஷமாகி விடுவான்
ஆமா…! ஆமா…! அவரு சந்தோசமா தான் இருப்பாரு!
>> குறைந்தபட்ச பரிமாற்றத் தொகை ஒரு லட்சம். அதிகபட்சமாய் உங்கள் சொத்தினை எழுதிவைத்தாலும், நான் சுணங்காமல் வாங்கிக் கொள்வேன்
சேமிப்பு கணக்கில் அவ்வளவு பணம் இல்லைன்னு சொல்லுது. அதுக்கு என்ன பண்றதுன்னே நம்ம கட்டுரைல சொல்லவே இல்ல?
November 17th, 2010 at 11:22 am
//NEFT ஒரு நாளுக்குள் வந்து சேரும்//
பல தேசிய உடைமை வங்கிகளில் ஒரு முழு நாளே ஆகிறது.
//ஒரு லட்சம் ரூபாய் வரை ரூ. 5 + சேவை வரி*//
ஒரு லட்சம் ரூபாய் வரை இலவசமாகவே செய்யலாம்.
நல்ல கட்டுரை. வங்கிகள் NEFT சேவையை இன்னும் முனைப்பாக விளம்பரபடுத்த வேண்டும். சிறு வணிக்ங்களுக்கு இது நல்ல பயன்பாடு. வெறும் 1000, 2000 ரூ.க்கெல்லாம் செக் எழுதி, கொரியரிலோ, நேரிலோ கொடுப்பது – அதை வங்கிக்கு சென்று டெபாசிட் செய்வது – பணமும், நேரமும் விரயம்.
UK வில் 2018லிருந்து செக் கிழித்து தரப்படும் முறை காலாவதியாகப்போகிறதாமே?
-ஜெகன்
November 17th, 2010 at 2:44 pm
நன்றி!எளிமையாக புரியும் படி இருந்தது. MICR code பற்றியும்,அதன் உபயோகம் பற்றியும் சொல்லுங்களேன்.
November 18th, 2010 at 4:31 am
//சேவை வரி என்பது 10.3%??
இது அதிகமாக தெரிகிறதே? ஒரு லட்சத்திற்கு பத்தாயிரமா?
November 18th, 2010 at 3:15 pm
நவநீதன், ஜெகன், தென்னரசு நன்றிகள்.
@navan சேவை வரி என்பது நீங்கள் பரிமாற்றம் செய்யும் தொகைக்கானது அல்ல. மேற்சொன்ன உதாரணத்தில் சேவை கட்டணம் ரூ.25ஆக இருந்தால், உங்களின் சேவை வரி (10.3%) இந்த ரூ.25க்கு மட்டுமே. நீங்கள் இதில சற்றேறக்குறைய ரூ.3 சேவை வரியாக செலுத்துவீர்கள், அவ்வளவே.