‘கலகம் இனி இல்லை’ – ரோசா வசந்த்

தமிழ் பேப்பர் தீபாவளி சிறப்பிதழுக்கு ரோசா வசந்திடம் ஒரு பேட்டி கேட்டிருந்தோம். வசந்த், தன் வழக்கப்படி புகைப்படம் வெளியாவதை விரும்பவில்லை. எனவே தமிழ் பேப்பர் வழக்கப்படி ஒரு  ‘பொருத்தமான’ புகைப்படம், அருகில்.

நீண்ட காலமாக ஒரு விமரிசகராகத் தமிழிணையத்தில் இயங்கி வருபவர் நீங்கள். தமிழ் அரசியல், தமிழ் இலக்கியத் தளங்களில் நடைபெறும் சச்சரவுகளுக்கும் தமிழ் இணைய சச்சரவுகளுக்கும் நீங்கள் காணும் வித்தியாசம் என்ன?

விமர்சகன் என்று எந்த அர்த்தத்தில் என்னை அங்கீகரிக்கிறீர்கள் என்று குழப்பமாக இருக்கிறது. உருப்படியாக எழுதாமல் பிரச்னை செய்பவன் என்ற அர்த்தம் மட்டும் பொருந்தி வருவதாக நினைக்கிறேன். எப்படியிருப்பினும் உங்கள் பரந்த மனத்துக்கு நன்றி.

நான் கலந்துகொண்ட சர்ச்சை தவிர, அண்மைக்கால வலைப்பதிவு சர்ச்சைகளை வாசித்ததில்லை. விதிவிலக்காக சந்தனமுல்லை மீதான தாக்குதலைத் தொடர்ந்து நடந்த சர்ச்சைகளை மட்டும் முழுவதும் வாசித்தேன். அடிப்படையில் ஒரு பெண் மீதான தாக்குதல் என்பதைத் தவிர, அந்தப் பிரச்னையில் பக்கவிளைவாக நடந்த மற்ற அனைத்தும், ‘சச்சரவு அரசியல்’ என்று தனியாகத் தலைப்பிட்டு  அலசும் வண்ணம், பல பரிமாணங்கள் கொண்டதாக இருக்கிறது.

இலக்கியவாதிகள் இணையத்தில் சண்டை போடத் தொடங்கிவிட்ட பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொள்ளவேண்டும். திண்ணை இதழ் பிரபலபமாக இருந்த 2000த்தின் தொடக்க காலத்திலேயே, முக்கிய சண்டைகளின் மையமாக ஜெயமோகன் இருந்திருக்கிறார். ஒருமுறை சாருநிவேதிதா கூட காட்டமாக  ‘How do you know I don’t f***?’ என்றெல்லாம் கேட்டு ஒரு கட்டுரை திண்ணையில் எழுதினார். அந்த வகையில், முந்தைய அரசியல்/இலக்கிய சச்சரவுகள் சாராமல், இணைய சச்சரவுகளுக்கு ஒரு தனி அடையாளம் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலோட்டமாக இலக்கியம் சாராத வலைப்பதிவு சண்டைகளையும்  மற்ற அரசியல்/இலக்கிய சண்டைகளையும் ஒரு வசதிக்கு வகைப்படுத்தி ஒப்பிட்டால், எனக்குத் தெரியும் வித்தியாசம் ஒன்றுதான். சிறு பத்திரிகை சார்ந்த சண்டைகளில் நாம் காணக்கூடிய ஒரு ஆழமான வெறுப்பை இந்த வலைப்பதிவு சண்டைகளில் காண முடியாது. எதிர் தரப்பு என்பதாகக் கட்டமைத்துக்கொண்ட ஒன்றின், தீவிர உழைப்பில் விளைந்த பொருளை, முற்றிலும் நிராகரிப்பது இந்த வெறுப்பின் முக்கியக் காரணியாகவும் இயங்குதலாகவும் இருக்கிறது. தமிழில் முக்கிய கவிஞர் அல்லது முக்கிய அறிவுஜீவி என்று ஒரு குறிப்பிட்ட தரப்பு நினைக்கும் ஒருவரை, அடுத்த தரப்பு ‘முழு குப்பை’ என்று சொல்வது சர்வ சாதாரணம். பொருள் ஈட்டும் போட்டி, அதிகாரம் போன்ற எதுவும் கலக்காமல், ஒரு அறிவுவெளியில் எதிர்த்தரப்பு நபரை ‘காலி செய்யும்’ ஆத்திரத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. ஒரு கட்டுரை எழுதி, ‘அந்தாளை காலி பண்ணிட்டேன்’ என்று ஒருவர் சொல்வதைக் கேட்பது, தமிழ் அறிவுலகில் ரொம்பச் சாதாரணம்.  இந்த நோய், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இலக்கிய/அரசியல் செயல்பாடுகளில் பின்னர் பரவியதும், வேறு வழிகளில் உருவாகியதும் மிகவும் துரதிர்ஷ்டம். இத்தகைய வெறுப்பும்  நிராகரிக்கும் தன்மையும் தீவிரமான முறையில் வலைப்பதிவு சண்டைகளில் இடம்பெறுவதில்லை என்று நினைக்கிறேன்.

வலைப்பதிவு சண்டைகளின் பிரச்னைகள் நம் வெகுஜன சமூகத்தின் பிரச்னைகளுடன் நேரடித் தொடர்புள்ளவை; நம் சினிமாவின் பொலிடிகல் கரெக்ட்னெஸ் பிரச்னைகள் மாதிரி; இலக்கிய அரசியல் சண்டைகளில் இல்லாத ஒரு வெகுளித்தனமும் அதில் அடங்கி இருப்பதைக் காணலாம்.

வித்தியாசம் பற்றிக் கேட்டதால் இதைச் சொல்கிறேனே தவிர, பல இலக்கிய/அரசியல் சச்சரவுகளை  முக்கியமானதாக, வாசித்து பயனும் பாடமும் பெறவேண்டியதாகவே கருதுகிறேன்.

தீவிரமான அறிவுத்தளத்தில் செயல்பட விரும்பக்கூடியவர்களுக்கு இணையம் சரியான ஊடகமாக இல்லை என்று சொல்லப்படுவது குறித்து உங்கள் பார்வை என்ன?

அறிவுச் செயல்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள்தான், அதற்கான வெளியை இணையத்தில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். தீவிர அறிவுப் பரிமாற்றங்கள் இணையத்தில் நடப்பதை அறிவுத்துறைகள் சார்ந்த அனைவரும் அறிவர். தமிழ் வலைப்பதிவுகளின் பின்னூட்டக் களத்துக்குப் போய், அறிவுச் செயல்பாடு சாத்தியமில்லையே என்று புகார் செய்வதில் அர்த்தமில்லை.

இணையத்தின் பிரச்னை, மலிவாகக் கிடைக்கும் ஏகப்பட்ட விஷயங்கள். புத்தம் புதிதாக, அறிவுரீதியாகச் சொல்லப்பட்ட ஒரு மிக முக்கியமான கருத்தை, எளிதாகத் தாண்டிச் சென்று வேறு விஷயத்தைப் பேசப் போய்விடுவார்கள். மேலும் வாசிப்பவர் தீவிர கவனம் செலுத்தும் நிலையில் இல்லாமல், இணையத்தில்  வேறு வேலைகளுக்கு இடையில் மேய்ந்துகொண்டிருக்கலாம்.

ஆனால் நமது அடிப்படைப் பிரச்னை இணையத்தில் இல்லை.  தீவிரமான அறிவுச் செயல்பாட்டுக்குத் தமிழ் சூழலிலேயே ஆரோக்கியமான வெளி இருப்பதாகத் தெரியவில்லையே. முன்பைவிடப் பரவாயில்லை என்று சொல்கிற அளவில் இருக்கிறதே தவிர, நிலைப்பாட்டுச் சாய்வுகளின் முழு ஆதிக்கமில்லாமல், புதிய அறிவுச் சிந்தனையை அணுகும் மனோபாவம் இணையத்துக்கு வெளியேவும் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் அறிவுரீதியாகக் கவனம் செலுத்துபவர்களே மிகவும் குறைவு;  அவ்வாறு கவனம் செலுத்துபவர்களும் எந்த வகையில் ஒரு பாயிண்ட்டைப் பிடித்து, ஏற்கெனவே கொண்டிருக்கும் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப, எப்படி ஒன்றை நிராகரிக்கலாம் அல்லது எப்படி ஒன்றைத் தூக்கிப் பிடிக்கலாம் என்றுதான் இருக்கிறார்கள். தங்கள் நிலைப்பாடுகளுக்கு ஒவ்வாத அறிவுச் செயல்பாட்டுக்கு இடமளிக்க யாரும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. எந்தப் புதிய கருத்தையும் எழுதிவிடக்கூடிய இடம் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு விதிவிலக்கான தரப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தவகையில் இணையம் அறிவுச் செயல்பாட்டுக்கு மேலான இடமாகவே தெரிகிறது.

சிம்புவின் ஆண்குறி முதல் சமீபத்திய மலப்புழு வரை உங்களுடைய கட்டுரைகளின் தலைப்புகளில் நீங்கள் வெளிப்படுத்துகிற உக்கிரம், அதிர்ச்சி மதிப்புக்காகச் செய்யப்படுவதா? நீங்கள் எழுதும் பல தீவிரமான விஷயங்கள் இம்மாதிரியான பிரயோகங்களின்மூலம் மேலோட்டமான சர்ச்சைகளுடனேயே முடங்கிவிடுவதாக நீங்கள் கருதுவதில்லையா?

என்னைக் கேட்டால் வேறு என்ன சொல்லப் போகிறேன்? அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எதையும் செய்யவில்லை என்றுதான் சொல்வேன். வாசிப்பவர்கள்தான் முடிவு செய்யவேண்டும். உக்கிரமான வார்த்தைப் பிரயோகங்களுடன், என் தரப்பு தர்க்கத்தையும் தராமல் இருந்ததில்லை. அந்தத் தர்க்கத்தைக் கண்டுகொள்ளாமல், வார்த்தைகளை மட்டும் பிடித்துச் சிலர் தொங்கமுடியும் என்கிறபோது, அதற்கான வாய்ப்பாக அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகவோ, கவனத்தைக் கவருவதற்காகவோ, இதைச் செய்வதில் இழப்பு எனக்குத்தானே.

விவாதங்களில் கடுமையான வார்த்தைகளில் எதிர்த்தரப்பை எதிர்கொள்ளக் கூடாது என்பதுதான் நான் கொண்டிருக்கும் நிலைப்பாடு. அதைச் செயலில் பல நேரங்களில் காட்ட முடிவதில்லை.  நீங்கள் குறிப்பிடும் வார்த்தைகள் எந்த வகை உரையாடலும் சாத்தியமில்லை என்று முடிவுக்கு வந்த கட்டத்திலேயே வருகிறது. அந்த எல்லாக் கட்டங்களிலும் எனக்கான நியாயம் ஒன்றை வைத்திருக்கிறேன்; என் பார்வையில்,  நாம் எதிர்வினை செய்யும் விஷயத்தைவிட மோசமாக எதையும் சொல்வதில்லை என்பதுதான் அது. இந்த நியாயத்தை எல்லாக் கட்டங்களிலும் என் தரப்பிலிருந்து விளக்கியிருக்கிறேன்.

இப்படிச் சொன்னாலும் நான் செய்த பல எதிர்வினைகள் தவறான முன்னுதாரணம் என்றுதான் இப்போது கருதுகிறேன். எல்லா தரப்புகளுடனும் உரையாடலுக்கான சாத்தியத்தை வளர்த்தெடுப்பதுதான் நோக்கமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது இல்லாவிட்டாலும், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உரையாடல் சாத்தியமாகலாம். இத்தகைய கடுமையான எதிர்வினைகள், எல்லா வாசல்களையும் அடைப்பதோடு, எதிர்த்தரப்பில் கருணைகொள்ளும் வேறு பலருடன் உரையாடுவதையும் சாத்தியமில்லாததாக ஆக்குகிறது. ஆகையால் நான் செய்ததற்கு, அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எனக்கான நியாயங்களை வைத்திருந்தாலும், அதை இப்போது சரி என்று நியாயப்படுத்த மாட்டேன்.

நீங்கள் கணிதத் துறையில் இயங்குபவர். ஒருபோதும் அதுகுறித்து எழுதாதது ஏன்? அறிவியல் தமிழின் அவசியம்போல கணிதத் தமிழும் அவசியம் என்று நீங்கள் கருதுவதில்லையா?

சில வருடங்கள் முன்பு, அரவிந்தன் நீலகண்டனுடன் நடந்த ஒரு சிறுபிள்ளைத்தனமான அற்பச் சண்டையில், சில தவறான தகவல்களை விளக்கும் பொருட்டு, திண்ணையில்  எழுதவென்று, கணிதச் சட்டகம் குறித்த ஒரு தொடர் கட்டுரை எழுதத் தொடங்கினேன்.  சில காரணங்களால் தொடரவில்லை. (சண்டையில் சிறுபிள்ளைத்தனமும் அற்பத்தனமும் என்னுடையது; தவறான தகவல்கள் அரவிந்தனுடையது.)

தமிழ் மணம்  நட்சத்திரமாக ஒரு வார அந்தஸ்து அளித்தபோது, குவாண்டம் கணித்தல் பற்றி ஒரு பதிவு எழுதினேன். ஒரு ஐந்து பதிவுக்காவது அதை இழுக்கவேண்டும் என்று நினைத்ததை இன்றுவரை தொடரவில்லை.

இதைத் தவிர, கணிதம் குறித்து எழுதாதற்கான முதல் காரணம் என் சோம்பேறித்தனம். தீவிர உழைப்பை அடிப்படையாகக் கொண்டு நான் இன்னும் எதுவுமே எழுதவில்லை. நான் எழுதும் விஷயங்களுக்கான அதிகபட்ச உழைப்பு யோசிப்பதும் தட்டச்சுவதும் மட்டுமே.  தமிழில் கணித சமாசாரங்கள் சிலவற்றை எழுத கலைச்சொற்கள், அதற்கான பாணி என்று பலவற்றைப் புதிதாக உருவாக்கவேண்டும். ஆரம்பக் கட்டம் என்று சொல்கிற நிலையில்கூட இல்லாமல், இதற்கான களஞ்சியம் வெற்றிடமாக இருப்பதால், பெரும் நேரமும் உழைப்பும் தேவைப்படும். அப்படிச் செய்தாலும் அது எத்தனைப் பேரைச் சென்றடையும், அதன் பயன் என்ன என்பது வேறு கேள்விகள்.

அடுத்த காரணம், Number theory எனப்படும் எண்ணியல் தவிர, சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த நவீன கணிதத்தின் எந்த முன்னேற்றத்தைப் பற்றியும், கணிதத்துடன் எந்தச் சம்பந்தமும் இல்லாத ஒருவருக்கு மேலோட்டமாகவாவது எப்படி விளக்குவது என்ற கேள்வி; இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவம் போன்றவற்றில் மேலோட்டமாக என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்று உத்தேசமாகச் சொல்ல முடியும்;  நவீன கணிதத்தில் அந்தச் சாத்தியம் கிட்டத்தட்ட பூஜ்யம்.

பெங்களூருவில் ஒரு டாக்டரிடம் சிகிச்சைக்குச் சென்றபோது, என் வேலை பற்றி விசாரித்தார். நான் கணிதத்தில் ஆராய்ச்சி செய்வதாகச் சொன்னேன். ‘மேதமெடிக்ஸ்ஸில் எல்லாம் ரிஸர்ச் பண்ண முடியுமா? ஐ நெவர் ந்யூ திஸ்’ என்று ஆச்சரியப்பட்டார். அது எப்படிச் செய்ய முடியும் என்று, அந்தக் கொஞ்ச நேரத்தில்,  விளக்க முயன்றேன். நான் ஏதோ விளக்கி முடித்தபின்,  ‘புதுப் புது ஃபார்முலா கண்டுபிடிப்பீங்களா?’ என்று கேடடார். இன்னும் பலர் இது குறித்து என்னிடம் கேட்டபோதும், நிறைவாக விளக்க முடிந்ததில்லை. இதில் இன்னொரு பக்கம் என்னவென்றால், ‘கணிதச் சட்டகத்துக்குள் செய்யப்படுவது மட்டுமே ஆராய்ச்சி, மற்றதெல்லாம் ஏற்கெனவே இருப்பதைத் திரும்பச் சொல்வது அல்லது கணிதத்திடம் தொழுதுண்டு வாழ்வது’ என்று நம்பும் கணித அடிப்படைவாதிகள் பலர் இருக்கிறார்கள்.

இன்னும் சுவாரசியமான ஒன்றை அண்மையில் எதிர்கொண்டேன். இயற்பியலின் பல தீர்வுகளும் கண்டுபிடிப்புகளும் கணிதச் சட்டகத்திலேயே நிகழ்கின்றன. நவீன கணிதத்தின் பல பிரிவுகளை அடித்தளமிட்டு, சட்டகத்தை உருவாக்கியவர்கள் பலரும் இயற்பியலாளர்களே. இயற்பியலாளர்களாகத் தொடங்கி, முழுமையாகக் கணிதவியலாளர்களாக மாறியவர்களும் உண்டு.

சில வாரங்கள் முன்பு, இந்தியாவின் முன்னணிக் கல்வி நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கும் இயற்பியலாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய சமாசாரமான கால்குலஸில்  உள்ள சில கருத்தாக்கங்களின், கணிதக் கறாரான வரையறைகளுடன்கூட அவருக்குப் பரிச்சயமில்லை என்று தெரிந்தது.  ஆனால் ஆர்வமும் தேவையும் இருந்ததால், காப்பி நேரத்தில் சந்திக்கும்போதெல்லாம் மொக்கை போட்டு, பல விஷயங்களை விளக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.  பல சந்தர்ப்பங்களில்,   ‘இப்படியெல்லாம் கறாராக எதற்கு இதை அணுகவேண்டும்’ என்பது போன்ற  கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுத் திணறடித்தார்.  அவர் பல நவீன கணித சமாசாரங்களைச் சரளமாகத் தனது ஆராய்ச்சி முடிவுகளுக்குப் பயன்படுத்துபவர். ஆனால் அதையெல்லாம் ஒரு கறாரான சட்டகத்தில் ஏன் செய்யவேண்டும் என்ற அவருடைய அபத்தமான கேள்விக்கான பதிலை என்னால் விளக்க முடியவில்லை.

ஆகையால் இந்த விஷயங்களை எல்லாம் மேலோட்டமான முறையில், பரந்த வெகுஜனப் பார்வைக்கு, அதுவும் தமிழில் செய்வது எப்படி என்பது சிக்கலான கேள்வி. இந்தச் சிக்கலை அணுகுவது ஒருவரின் வாழ்க்கை நேரத்தை விலை கேட்பதாகக்கூட இருக்கலாம். எனக்குக் கணிதத்தை வெகுஜனப்படுத்திப் பரப்புவதைவிட, இலக்கியத்திலும் அரசியலிலும்தான் ஆர்வம்.  எனினும் முன்பு செய்ய நினைத்த சில வேலைகளை எதிர்காலத்தில் மீண்டும் தொடங்கி முடிக்கும் நோக்கம் உண்டு.

சிறு பத்திரிகைக் குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் பழகியிருக்கிறீர்கள், இணைந்து செயலாற்றியிருக்கிறீர்கள். இன்றைய சிற்றிதழ் உலகு குறித்த உங்கள் பார்வை என்ன?

சிறு பத்திரிகை சார்ந்த சில நட்புகள் இன்னமும் உண்டு எனினும், இன்றைய (காலச்சுவடு, உயிர்மை, உன்னதம் போன்று  அடையாளத்தை உதிர்த்துவிட்டவை அல்லாமல் நிஜ) சிறுபத்திரிகைகளுடன் எனக்குத் தொடர்பு இல்லை. லக்ஷ்மி மணிவண்ணனின் ‘சிலேட்’ இதழ்கள், தி.கண்ணனின் ‘பிரம்ம ராக்ஷஸ்’, கடந்த 5 வருடங்களில் நான் பார்க்க நேர்ந்த சிற்றிதழ்கள். அதனால் இன்றைய நிலைமை குறித்துக் கருத்துச் சொல்ல முடியவில்லை. அறிவுச் செயல்பாட்டை விரிவாக்கவும் எளிதாக்கவும் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் சிற்றிதழ்கள் இணையத்துக்கு வரவேண்டும் என்பது என் கருத்து. அவை சம்பிரதாயச் சிற்றிதழ் அடையாளத்தை இழக்க நேரிடலாம் என்பது வேறு விஷயம்.

இணையத்தில் வாசிக்கக் கிடைக்கும் உங்களுடைய பல கவிதைகளில் ஆச்சரியமூட்டக்கூடிய வடிவ அமைதியும் வெளிப்பாட்டு நேர்த்தியும் உள்ளன. ஒரு கவிஞனாக உங்களுடைய முயற்சிகள் ஏன் தொடர்ச்சியாக வெளிப்படவில்லை?

கவிதைகளுடனான என் உறவு என்றும் முழு சுமுகமாக இருந்ததில்லை. எழுதுவதைப் பற்றிச் சொல்லவில்லை; கவிதை வாசிப்பதை பற்றிச் சொல்கிறேன். 1990-களின் மத்தியில், சில வருடங்களுக்கு, தமிழின் முக்கிய கவிஞர்களைத் தீவிரமாக வாசித்திருக்கிறேன். அதற்குப் பிறகு அபூர்வமாகத்தான் வாசிப்பது உண்டு. வருடக்கணக்கில் ஒரு கவிதைகூட வாசித்திராமல் கழிந்ததும் உண்டு.

சென்ற வருட இறுதியில், மன அழுத்தத்திலிருந்து விடுபட மகாபலிபுரம் போவது, சினிமா பார்ப்பது, வாசிப்பது என்று கழித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஜாலியாக, ஒரு அனுபவத்தை வைத்து ‘மறதி’ என்ற கவிதையை எழுதினேன். எனக்கும் பிடித்திருந்தது. சில நண்பர்கள் பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். ராஜன்குறை பிடித்திருப்பதாகப் பின்னூட்டமிட்டார்.  கவிஞர் சங்கர ராம சுப்பிரமணியன், அவரே வந்து  நன்றாக இருப்பதாகச் சொன்னார். இப்படி உசுப்பிவிட்டதில், பின்னர் இன்னும் சில எழுதினேன்.  மற்றபடி கவிதை தொடர்ந்து எழுத, தீவிரமாகத் தொடர்ச்சியாகப்  பலவகைக் கவிதைகளை வாசிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது நீங்களும் நல்லவிதமாகச் சொல்கிறீர்கள். எதிர்காலத்தில் ஏதாவது நடந்தாலும் நடக்கும்.

பல இணைய சர்ச்சைகளின் தொடக்கப்புள்ளியாகவோ, பங்கேற்பாளராகவோ,  பதில் சொல்பவராகவோ இருந்து வருகிறீர்கள். இது உங்களுக்கு அலுப்பாக இல்லையா? பக்கம் பக்கமாகச் சர்ச்சைகளில் செலுத்தும் கவனத்தில் வேறு உருப்படியாக எழுதலாமே என்று தோன்றாதா உங்களுக்கு?

கடந்த சில வருடங்களாக வலைப்பதிவுகளில் புழங்காததால், சர்ச்சைகளில் ஈடுபடவில்லை. அதற்குமுன் எழுதியவற்றில் பெரும்பாலானவை சர்ச்சைகள் மட்டுமே.

சர்ச்சைகளில் ஈடுபடுவது என்பது முடிவு செய்து இறங்கிய விஷயமல்ல; பல நேரங்களில் தெருவில் வலித்துக்கொள்ளும் சண்டை போலத்தான். எதையாவது தடாலடியாகச் சொன்னபின் அல்லது, காட்டமாக எதிர்வினை செய்தபின், மேலும் மேலும் அதைத் தொடர்வது என்றுதான் இவை நிகழ்ந்தன. ஈகோ அல்லது நம் தரப்பைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற மதப்பற்றைப் போன்ற உணர்வு, இந்தச் சர்ச்சைகளை இழுத்துச்  சென்றன; பதில் சொல்லப்படாமல் எதிர்த்தரப்பின் பின்னூட்டம் இணையத்தில் இருப்பது, ஏதோ நாம் தோற்றுவிட்டது போன்ற பாதுகாப்பற்ற உளவியலை ஏற்படுத்துவதால், பணி சார்ந்த கட்டாயங்களை அலட்சியப்படுத்திவிட்டு சர்ச்சையில் ஈடுபடவைக்கிறது. இப்படிப்பட்ட தீவிரத்துடன் உருப்படியான வேலைகளைச் செய்ய முடிந்ததில்லை. உருப்படியான வேலை செய்வதற்கு முன்திட்டமும் தேவைப்படுகிறது.

ஆனால் சர்ச்சைகள் முழுக்கப் பயனற்றவை என்று நான் நினைக்கவில்லை.  அதை இன்னும் பொறுமையாக, உரையாடல்களுக்கான சாத்தியங்களுடன் எடுத்துச் செல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.  இப்போது என் தரப்பைக் காப்பாற்றுவது அத்தனை முக்கியமில்லை  என்ற மனநிலைக்கு வந்து, அந்த மனநிலையைச் செயலிலும் வெளிப்படுத்தப் பயிற்சி செய்து வருகிறேன்.

ஈழம் குறித்த மிக ஆழமான அக்கறையைத் தொடக்கம் முதல் வெளிப்படுத்தி வந்திருக்கிறீர்கள். தமிழகத்தில் உங்களைப் போன்றவர்களின் இந்த அக்கறை உணர்வை ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்று நம்புகிறீர்களா? அரசியல்வாதிகளின் போலி அக்கறை எடுபடுமளவு, அறிவுஜீவிகளின் கருத்துகள் சென்று சேர்கின்றனவா?

ஈழத்தில் கற்பனைக்கு அப்பாற்பட்ட பயங்கரங்கள் நடந்ததைக் கையாலாகாமல் செயலற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். இதில்  நம் அக்கறை உணர்வை, ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்கிறார்களா என்றெல்லாம் யோசிப்பதில் அர்த்தமும் நியாயமும் இல்லை.

எல்லாவகை அரசியல்வாதிகளும் ஈழத்தமிழர்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டார்கள். இதில்  காங்கிரஸ் போன்ற நேரடியான எதிரிகள் தொடங்கி, திமுக போன்று அரசியல் சுயநலத்துக்காகத் துரோகம் செய்தவர்கள் ஊடாக, தீவிர ஈழ ஆதரவு நிலைப்பாடு கொண்டிருக்கும் சீமான், நெடுமாறன் வரை அடக்கம். தற்போது நிலவும் யதார்த்தத்தில்,  இன்னமும் புலிகள் உயிர்த்தெழுந்து ஈழ லட்சியத்தைச் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தே பொய் சொல்லிக்கொண்டிருப்பவர்கள்தான், இதில் மிகவும் ஆபத்தானவர்கள். தமிழக அரசியல்வாதிகள் இனி உண்மையாக அக்கறை காட்டினால்கூட அதை ஈழத்தமிழர்கள் சீரியசாக எடுத்துக்கொள்வார்கள் என்று தோன்றவில்லை. (அதேநேரம் நம்பி ஏமாறாமல்,  தேவைப்பட்டால் அதைச் சாதூரியமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் என் பரிந்துரை.)

தமிழகத்து அறிவுஜீவிகளை ஈழத்தமிழர்கள் தொடர்ந்து கவனிக்கிறார்கள்; அதன்  பாதிப்பும் அவர்கள் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் இருக்கிறது.  அ.மார்க்ஸ் தொடங்கி ஜெயமோகன் வரை அவர்கள் இடம் அளித்து வருகிறார்கள்.  வளர்மதி எழுதுவதைக் கவனிக்கிறார்கள். நாகார்ஜுனன் ஈழப்பிரச்னை தீவிரமாக இருந்தபோது நிறைய எழுதி, அவை விவாதிக்கவும்பட்டன.

நான் துண்டுக் கருத்துகளாக எழுதி, என் கோபத்தைக் காட்டியிருக்கிறேன்; பிரச்னைகளை அலசும் விதமாக எதுவும் எழுதவில்லை. பலமுறை எழுதத் தொடங்கி, என் மனக் குழப்பங்களால் தொடரவில்லை. நான் இன்னும் என்னை நிறைவாக வெளிப்படுத்தியிராததால், என்னை சீரியசாக எடுத்துக்கொள்ளக் காரணம் இல்லை.  ஆனால் பாரிஸிலும் டொரண்ட்டோவிலும் சந்தித்த ஈழத்தமிழர்கள், என்னைப் போன்ற ஒருவனின் கருத்துகளை அறிவதிலும், சீரியசாக எடுத்து விவாதிப்பதிலும் மிகவும் ஆர்வமாகவே இருந்தார்கள்.

தமிழ்நாட்டின் அடுத்த சட்டமன்றத் தேர்தல் பற்றி இன்னும் யாரும் பேசத் தொடங்காத சூழலில் நீங்கள் அதை ஆரம்பித்து வைக்கலாமே? அடுத்து வரும் தேர்தல் எம்மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்கள்? வரும் தேர்தலைத் தீர்மானிக்கும் காரணிகளாக எவை இருக்கக்கூடும்?

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நான் தீவிர திமுக ஆதரவாளன். 1996-ல் திமுக வென்றபோது அண்ணா சாலையில் திமுகவின் தெருக்கொண்டாட்டங்களில் ஒரு ரசிகனாகக் கலந்துகொண்டேன்; 2001-ல் திமுக தோற்றபோது அழுகையே வந்தது; 2006 பற்றிப் பதிவுகள் எழுதியிருக்கிறேன்.

இதற்கு மாறாக, சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஈழப்பிரச்னை சார்ந்து, காங்கிரஸ்-திமுக கூட்டணி,  ஜெயலலிதாவை ஆதரித்தாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற என் கருத்தை எழுதியிருந்தேன். தற்போதைய யதார்த்தம் வேறு என்றாலும்,  இந்த ஆட்சி ஒழியவேண்டும் என்பதுதான் என் கருத்து.

எந்த அரசியலுக்காக, நாம் ஊழலுக்கும் இன்னும் பல சீர்கேடுகளுக்கும் பல சமூகவியல் விளக்கம் கொடுத்து திமுகவைத் தூக்கிப் பிடித்தோமோ, அந்த அரசியலுக்கு திமுகவால் இனி நன்மை எதுவும் நடக்கும் என்று தோன்றவில்லை. அடுத்து எல்லோருக்கும் தெரிந்த விஷயமான, ஒட்டுமொத்த தமிழகத்தின் எல்லா அதிகாரத்தையும், நுகர்வுக் களங்களையும்  ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆக்ரமித்திருப்பது. திமுக அனுதாபியான ஒரு நண்பன் சொன்னான்: ‘என்னமோ கலைஞர் குடும்பம்தான் தின்னு கொழிக்கறதாச் சொல்றாங்க, திருச்சில நேருதான் எல்லாம், யாராவது தலையிடறாங்களா?’ அதாவது குடும்பம் போக, இப்படி அடுத்த கட்டமாக ஒரு கூட்டத்துக்கும் கொள்ளையில் பங்கு கொடுக்கவேண்டி இருப்பதை,  எப்படி ஒரு பாசிடிவ் விஷயமாகச் சொன்னான் என்று எனக்குப் புரியவில்லை.  ஆகையால் இந்த ஆட்சி போகவேண்டியதற்கான காரணங்களை அடுக்க வேண்டியதில்லை.

நாம் கவனிக்க வேண்டிய விஷயம் வேறு. கலைஞர் குடும்பத்தின் இந்த ஆக்ரமிப்பையும் கொழிப்பையும் அனைத்து தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். ஆனாலும் தீவிர எதிர்ப்பலை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சரியாகச் சொல்லவேண்டுமானல், ஒரு காலத்தில் மழை பொய்த்தால்கூட கருணாநிதியைத் திட்டும் மக்களும்  மாறிவிட்டதாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம்  கலர் டிவி, கேஸ் சிலிண்டர், ஒரு ரூபாய் அரிசி, காப்பீடு போன்றவை மட்டுமின்றி, இந்த அரசால் பணிநியமனம் போன்று பல்வேறு வகைகளில் லாபம் அடைந்திருப்பதாகவே தெரிகிறது. என் புரிதலில் இதுவரையிலான அரசுகளில், தங்களுக்கு ஏதாவது செய்த அரசாக மக்கள் இந்த அரசைப் பார்க்கிறார்கள். இது, திமுகவினர் திட்டமிட்டுச் செய்ததுதான்; ஆனால் அதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தக் காரணங்களால் இதை நல்லாட்சி என்று சொல்லவரவில்லை. வேறு பக்கம் மக்கள் மிகத் தீவிரமான பொருளாதாரப் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்; கொள்ளையடிப்பதில் எந்த விஷயம் எதிர்காலத்துக்குத் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்றுகூடத் தெரியவில்லை. காவிரி போன்ற பிரச்னைகளில் முனகும் டெசிபல்களிலாவது குரல் கொடுக்கவேண்டும் என்று ஆள்பவர்களுக்குத் தோன்றவில்லை.

ஆனாலும் இந்தச் சூழலில் ஜெயலலிதா வெற்றி பெற்றால், முதலில் அதன் மூலம் கருணாநிதி குடும்பம் கொழிப்பதைத் தடுத்துவிட முடியாது. மத்திய ஆட்சியில் அவர்கள் கொண்டிருக்கும் பங்கு காரணமாக, அவர்களின் ஆக்ரமிப்புகள்  தொடரத்தான் செய்யும். அதேநேரம், மக்கள் லாபமடையும் வகையில் திமுக செய்ததை எல்லாம் கழுவித் துடைத்து, பின் புதிதாக குண்டக்க மண்டக்க என்று ஏதாவது ஜெயலலிதா செய்வார். மக்களுக்கும் இது குறித்த பயம் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. அதனால் அவர்கள் திமுகவைத் தோற்கடிக்க முன்வருவார்களா என்பது சந்தேகமே.

ஜெயலலிதா வெற்றி பெறாமல் திமுக ஆட்சியை அகற்றுவது என்ற வாய்ப்பு  இன்னமும் யதார்த்தத்தில் இல்லாததால்,  இந்தத் தேர்தலை எப்படி அணுகுவது என்று குழம்பம் உள்ளது.  ஈழப்பிரச்னையில் செய்த துரோகத்தை மட்டும் மனத்தில் வைத்து, இப்போது திமுக ஆட்சி போகவேண்டும் என்பதில் விவேகம் எதுவுமில்லை.

சென்ற தேர்தல்போல ஜெயலலிதா ஜெயித்தாலும் சரி, இந்த ஆட்சி போகவேண்டும் என்று நான் எண்ணவில்லை. ஒருவேளை கூட்டணிக் கட்சிகளின் பங்கு இல்லாமல் திமுக ஆட்சி அமைக்க முடியாது என்ற ஒரு நிலை வந்தால் நல்லதாக இருக்கலாம்.  தேர்தல் நெருங்க நிலைமை மேலும் தெளிவாகலாம்.

தனிப்பட்ட முறையில் உங்களை அறியாத யாரும் உங்களை நெருங்க அஞ்சக்கூடிய தோற்றத்தைத்தான் உங்களுடைய இணையச் செயல்பாடுகள் இதுகாறும் பெருமளவு அளித்துவந்திருக்கின்றன. ஒரு கிளர்ச்சியாளராக அறியப்படுவதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லது, இது உங்கள்மீது வலியத் திணிக்கப்பட்ட பிம்பமாக உணர்கிறீர்களா?

என்னை நெருங்க யாராவது அஞ்சினார்களா என்று நான் கேள்விப்பட்டதில்லை. மற்றபடி இணையத்தில் செய்வதெல்லாம் கிளர்ச்சியா? எந்த அர்த்தத்திலும் நான் கிளர்ச்சி செய்பவனாக என்னை உணர்ந்ததில்லை. இணையத்தில் கிளர்ச்சி செய்யும் சாத்தியம் இருப்பதாகவும் தெரியவில்லை. ஒரு குட்டி பூர்ஷ்வா வாழ்க்கையையும் வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு, இணையத்தில் ஆக்ரோஷமான மொழியில் எழுதுவதில் கலகம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ‘குட்டி பூர்ஷவாவின் கலகம்’ என்று என் வலைப்பதிவுக்குத் தலைப்பிட்டது ஒரு சுய எள்ளல் மட்டுமே;  ‘நமக்குத் தொழில் முடிந்தவரை கலகம்’ என்று எழுதியிருப்பேன். கலகம் என்பது முடிந்தவரை செய்யக்கூடிய ஒரு வேலையா? அதன் சுய எள்ளலைப் புரிந்துகொள்ளாமல் நான் கலகம் செய்வதாகச் சிலர் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் புரிந்துகொண்டார்கள்.

இப்போது கலகம் என்ற வார்த்தையையும் நீக்கி விட்டேன். இனி அதுபோலச் செயல்படுவதில்லை என்பதுதான் என் உத்தேசம்.

மதம், சடங்குகள், சம்பிரதாயங்கள், கடவுள் சார்ந்த உங்கள் நம்பிக்கைகள் அல்லது நம்பிக்கையின்மை அனைவருக்கும் தெரியும். உங்கள் சிறு வயதைத் திரும்பிப் பார்த்து, அங்கிருந்து இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்த விதத்தை விவரிக்க முடியுமா?

சிறு வயதில் மிகத் தீவிரக் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தேன்;  ஒருநாளின் பெரும் பொழுதை பெருமாள் வழிபாட்டில் செலவழித்த காலம் உண்டு. ஆழ்ந்த பக்தியும் மத நம்பிக்கையும் கொண்ட என் பெற்றோருக்கே கவலை அளிக்கும் அளவுக்கு என் பக்தி  தீவிரமாக இருந்தது.  சுஜாதாவின் பாதிப்பில், பல விஞ்ஞான சமாசாரங்களைத் தேடிப் படித்த பிற்காலங்களில்,  இந்தத் தீவிர நம்பிக்கைகள் அடிவாங்கின. கல்கி(?)யில் தொடராக வந்த ‘சித்ரலேகா’ என்ற ஹிந்தி(?) மொழிபெயர்ப்பு நாவலின்,  வெட்டி பைண்ட் செய்யப்பட்ட பிரதி பக்கத்து வீட்டிலிருந்து வாசிக்கக் கிடைத்தது. அதில் வாசித்த கடவுள், நீதி, தர்மம்  பற்றி நடக்கும் பல விவாதங்கள் என்னைப் பாதித்தன. என்னளவில் நானே சிந்தித்து முடிவுக்கு வந்து, கடவுள்/மத நம்பிக்கையில் இருந்து வெளிவர அந்த நாவல் ஒரு தூண்டுதலாக இருந்தது.

அதேநேரம், சூழல் காரணமாகவும் பொதுவாகத் தீவிர நிலைப்பாடுகளை எடுக்கும் என் குணம் காரணமாகவும், என்னிடம் சிறுவயதில் இந்துத்துவக் கருத்தியல் இயற்கையாக வந்து சேர்ந்திருந்தது. 14 வயதில், போப் இந்தியாவுக்கு வந்தபோது, நானும் ஒரு RSS நண்பனும், ‘போப்பை செங்கொடி காட்டி வரவேற்போம்’ என்று இரவு சுவர்களில் எழுதினோம்.

கல்லூரி முதல் ஆண்டில் கஞ்சா புகைக்கும் பழக்கத்துக்கு ஆட்பட்டேன். வட்டமாக கஞ்சா புகைக்க மாலை கூடும் கூட்டங்களில், திக நண்பர் ஒருவரும் வருவார்; சில விவாதங்களும் நட்புடன் நடக்கும்.  அவர் மூலம்  ‘மின்சாரம்’ என்ற திக எழுத்தாளர் எழுதிய, ‘சோ என்ற இரட்டை நாக்கு பார்ப்பனர்’ என்ற புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது. நீண்டகால துக்ளக் வாசகனான என்னை, அந்தப் புத்தகம் கொதிநிலைக்குக் கொண்டுபோனது. மிக ஆக்ரோஷமாக அந்த நண்பரிடம் சண்டை போட்டேன். எல்லாவற்றையும் அவர் நிதானமாக எதிர்கொண்டதில், நான் எனக்குள் அந்தப் புத்தகத்தை எதிர்கொண்டு, தர்க்கம் செய்யவேண்டியிருந்தது. இதன் விளைவான சுயவிமர்சனத்தில் என் பல கருத்துகள் மாறத் தொடங்கின. அதற்குப் பின் சுற்றி  நடந்த பல சம்பவங்களும், என் தொடர்ந்த சிந்தனைகளும், தூத்துக்குடி மாவட்ட நூலகத்தில் வாசித்த அனைத்து பெரியார் தொகுப்புகளும் முற்றிலும் என்னை மாற்றிப்போட்டன. பிறகு பல நண்பர்கள், நிறப்பிரிகை என்று இந்தப் பாதிப்பு  பல விதங்களில் தொடர்ந்தது.

இன்னமும் கடவுள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளவைக்கும் அதிசயம் எதுவும் நிகழவில்லை என்றாலும், கடவுளை மறுப்பது எனக்கு இப்போது ஒரு முக்கியப் பிரச்னை இல்லை. அன்றாட வாழ்க்கையின் உணர்வுகளில் இருந்து வேறுபட்ட உணர்வுகளைப் பெற, ஜாலியாகக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்வதுண்டு; சேவிப்பதில்லை. (கோயிலுடனான பிரச்னையும் கடவுள் அல்ல, இன்னமும் கோயிலுக்குள் அதிகாரத்துடன் நிலைகொண்டிருக்கும் பார்ப்பனியம் மட்டுமே.)

இறுதிக்கேள்வி. வீட்டில் நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்களா? உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தாரின் மதிப்பீடு என்ன?

என் பெற்றோர் என்னை என்றும் புரிந்துகொண்டது கிடையாது. முழு அர்ப்பணிப்புடனான பக்தி,  கடவுள் மறுப்பு, எல்லாமே அவர்களைக் கலங்கடிக்கச் செய்தது. நான் கஞ்சா அடிப்பதைவிட, பெரியார் புத்தகத்தைப் படித்தது, அவர்களைப் பெரிதும் பாதித்தது. இதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.  ஆனால் நான் அவர்களுக்காகச் செய்த சில சமரசங்களையும்கூட அவர்கள் புரிந்துகொண்டதில்லை.  இன்றளவுக்கும் இதெல்லாம் தீவிரப் பிரச்னையாகவே இருக்கிறது.  இப்போதைய வாழ்க்கையில், மத நம்பிக்கையின்மையில் மட்டுமின்றி, என் அரசியல் நிலைப்பாடுகளையும் என் துணைவி முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறார்.

துணைவி கடவுள்(கள்) நம்பிக்கை கொண்டவர்; சரியாகச் சொல்லவேண்டுமானால் அந்த வசதியை இழக்க விரும்பாதவர். ஆயினும் எனது நிலைப்பாடுகள் எந்தப் பிரச்னையையும், வருத்தத்தையும், என்னைக் கட்டாயப்படுத்தும் எதிர்பார்ப்பையும் அவருக்கு அளித்ததில்லையாம்; எல்லாச் சந்தர்ப்பங்களிலும், எல்லாவற்றையும் சீரியசாகவே நான் அணுகுவது மட்டுமே, தனக்குக் கடுப்படிக்கும் பிரச்னையாக இருப்பதாக, இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்படி அவரைக் கேட்டபோது சொன்னார்.

கேள்விகள்: தமிழ் பேப்பர் குழு

8 comments so far

 1. நாகை பிரசாத்
  #1

  மிக அருமையானப் பேட்டி. திரு. ரோசா வசந்த் அவர்கள் பேட்டியில் மிகவும் வெளிப்படையாகவும் உண்மையாகவும் பேசியிருக்கிறார். அவர் ஒரு கணித வல்லுநர் என்பது எங்களுக்கு புதிய விஷயம். அறிமுகப்படுத்திஅதற்கு நன்றிகள்.

 2. மயிலாடுதுறை சிவா
  #2

  நண்பர் ரோசவசந்தின் வெளிபடையான பேட்டி மனதை தொடுகிறது.

  கஞ்சா / பெரியார் / கடவுள் மறுப்பு / திமுக எதிர்ப்பு என்று மிக வெளிபடையாக பேசியது பாராட்டுக்குரியது.

  நன்றி தமிழ்பேப்பர் குழுவிற்கு,

  மயிலாடுதுறை சிவா…

 3. Haranprasanna
  #3

  //எல்லாச் சந்தர்ப்பங்களிலும், எல்லாவற்றையும் சீரியசாகவே நான் அணுகுவது மட்டுமே, தனக்குக் கடுப்படிக்கும் பிரச்னையாக இருப்பதாக//

  :))) நல்ல பதில். பொதுவாகவே இப்படி சிந்திப்பவர்கள் குறித்த பொதுப்பிம்பம் ஒன்று உண்டு, எப்போதும் சீரியஸாக இருப்பார்கள் என. அது வீட்டில் கடுப்படிப்பதுதான்!

 4. மணிவண்ணன்
  #4

  இவர் கனடாவிலா வசிக்கின்றார்?

 5. அரவிந்தன் நீலகண்டன்
  #5

  கருத்துக்களை ஏற்க முடிகிறதோ இல்லையோ ரோசாவின் நேர்மை பிரகாசிக்கிறது.

 6. ganesh
  #6

  (கோயிலுடனான பிரச்னையும் கடவுள் அல்ல, இன்னமும் கோயிலுக்குள் அதிகாரத்துடன் நிலைகொண்டிருக்கும் பார்ப்பனியம் மட்டுமே.)

  புரியவில்லை…./

 7. ISI
  #7

  (கோயிலுடனான பிரச்னையும் கடவுள் அல்ல, இன்னமும் கோயிலுக்குள் அதிகாரத்துடன் நிலைகொண்டிருக்கும் பார்ப்பனியம் மட்டுமே.)

  புரியவில்லை…./

  என்ன சார் ஒன்னும் புரியாதவரா இருக்கீங்க! கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு பார்பனீயம் (பார்பனர் இல்லையாம் பார்பனீயமாம் ) பத்தி பேசலைனா கொள்கையோட பப்பு வேகாதுல்ல…

  தூத்துக்குடி கஞ்சா கணிதம் பெங்களூர் ISI – ரொம்ப நாள் கழித்து கண்ட நண்பருக்கு தீபாவளி வாழ்த்துக்கள்

 8. சுகுமார்,s
  #8

  அவரைப்பற்றி அவரே குழம்பியிருக்கிறார்.உயர் நிலையில் இருப்பவர்களுக்கு இது சகஜமே.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: