பஸ் ஸ்டாப் முத்துமாரி அம்மன்

அங்காளம்மன், முப்பாத்தம்மன் பாளையத்தம்மன், நாகாத்தம்மன் என்று ஆரம்பித்து நம் ஊரில் அம்மன்கள் பெயரில் ஆயிரத்தெட்டு பேருந்து நிறுத்தங்கள் உண்டு. ஆனால் அம்மன் கோயில் பஸ் ஸ்டாப் என்றாலே தமிழ்கூறும் நல்லுலகம் அது கேகே நகர் அம்மன் கோயில்தான் என்று தெரிந்துகொள்ளுமளவுக்குப் புகழ் பெற்றது, சென்னை கேகே நகர் முத்துமாரியம்மன் கோயில்.

நாத்திகரான கலைஞர் கருணாநிதியின் பெயரில் ஊர் அமைந்திருந்தாலும், வளமான மண்ணாக (எப்படியும் ஸ்கொயர்ஃபீட் எட்டாயிரத்தைத் தாண்டிவிட்டது.) கேகே நகர் விளங்குவதற்கு அம்மன் தான் காரணம் என்றால் பேட்டையில் மறுக்க யாரும் கிடையாது. திமுக உறுப்பினர்கள் உள்பட. சிவன் பார்க் ஒரு புறமும் இந்த முத்துமாரியம்மன் கோயில் ஒருபுறமுமாக கேகே நகருக்கு தெய்வீக சாந்நித்தியம் வழங்கிவருகின்றன, பல்லாண்டு காலமாக.

அம்மன் கோயில் பஸ் ஸ்டாப் என்று கேட்டு இறங்கினாலுமேகூட கடைகள் சூழ இருப்பதால் கோயில் சட்டென்று கண்ணுக்குப் புலப்படுவதில்லை. பிரபலத்தின்மீது அம்மனுக்கு அத்தனை ஆர்வமில்லை. சற்றே உள்ளடங்கித்தான் இருக்கிறது ஆலயம். தவிர, அதான் பஸ் ஸ்டாப் பேரிலேயே அம்மன் கோயில் இருக்கிறதே என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ, கோயிலுக்கு வண்டியில் வருவோர், வாகனங்களை நிறுத்த அங்கே வசதி கிடையாது. சாலையோரம் நிறுத்த வேண்டியதுதான். மாசக்கடைசியாக இல்லாத பட்சத்தில் அம்மன் அருளால் வண்டி தப்பிக்கும். அப்படி இருந்துவிடுகிற பட்சத்தில், அம்மன் வெகு நிச்சயமாக டிராஃபிக் போலீசாருக்குத்தான் அருள் பாலிப்பது வழக்கம்.

இந்தச் சில்லறை விவகாரங்களை மறந்து, மூன்று ரூபாய் அர்ச்சனை டிக்கெட் வாங்கிகொண்டு கோயிலுக்கு உள்ளே போகலாம். செருப்புக்கும் இங்கு டோக்கன் கிடையாது. தைரியமாக வெளியே விடலாம். அம்மனைப் பூரணமாக நம்பாதவர்கள் அக்கம்பக்கத்துக் கடைகளிலும் விட்டுவிட்டுச் சொல்லிவிட்டு வரலாம். அர்ச்சனைத் தட்டுகள் வெளியே இருக்கின்றன. வாங்கிக்கொண்டு பிரவேசிக்கலாம்.

கல் தோன்றும் முன், மண் தோன்றும் முன் என்னுமளவுக்கு பழைய கோயில் இல்லை எனினும் கே கே நகர் தோன்றும் முன்னரே இந்த ஏரியாவில் தோன்றிய முதல் கோயில். ஆனாலும் கட்டி 40 வருடங்கள் மட்டுமே ஆன யூத் கோயில்.  அடடே என்று அதனாலேயே செல்போன், மொபைலையெல்லாம் எடுத்துச் சென்றுவிட நினைக்கக்கூடாது. அம்மன் கண்டிப்பாக அனுமதிப்பதில்லை. சுற்றுச் சூழலை எல்லாம் மனதில் வைத்து கற்பூரம் எல்லாம் ஏற்றாமல் எண்ணெய் விளக்கு ஏற்றும் கோயில். பக்தர்கள் அளிக்கும் எண்ணெய்யை எந்நாளும் தாராளமாக தானமாக ஏற்றுக் கொள்கிறது கோயில் நிர்வாகம்.

கே கே நகர் காடாக இருந்த காலத்தில், கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எனச் சொல்வார்களே, கிளம்பிப் போய்விடலாமா என்று வண்டியைக் கிளப்பாமல் ஒரு அம்மன் சிலையை மட்டும் வைத்து சரோஜினி சீனிவாசன் என்னும் நம்மைப் போல் ஒருவர் தொடங்கிய கோயில் இது. அம்மன் மட்டும் எத்தனை காலம் தனியாக இருப்பாள்? ஒரு துணை வேண்டாமா?

நிதானமாக யோசித்து, பத்து வருடங்கள் கழித்து அருகிலேயே ஒரு சோம சுந்தரேஸ்வர் சன்னதியயும் அவரே கட்டியிருக்கிறார். மாறும் காலம், வளரும் ஏரியாவை மனத்தில் கொண்டு பிற்பாடு பொது மக்கள் நிதியுதவியுடன் நாளொரு சிலை பொழுதொரு கடவுள் என விநாயகர், முருகர், ஆஞ்சேயனர், நவகிரகங்கள், பெருமாள், ப்ரத்யங்கிரா, பைரவர் என ஒவ்வொருவராய் என்டரி கொடுத்து  இன்று அம்மன் கோயில் பஸ் ஸ்டாப் கோயில், அமெரிக்க கோயில்கள் போல பல தெய்வங்களைத் தரிசிக்க ஒன் ஸ்டாப் சொல்யூஷன்.

அது மட்டுமல்ல. வேல்யூ சர்வீஸ்களாக ஆவணி அவிட்டம்,  மஹாளய அமாவாசைக்கு பக்தர்களுக்குப் பிரத்யேக பூஜைக்கும் வழிவகை உண்டு. மண் சோறு சாப்பிடுகிறேன் என வேண்டிக் கொள்பவர்கள் இந்தக் கோயிலில் தைரியமாக வேண்டிக் கொள்ளலாம். சுத்தமென்றால் அப்படி ஒரு சுத்தம்.

மன்னர்கள் கட்டாத, மாண்புமிகுக்கள் திறக்காத காரணத்தால் கல்வெட்டுகள் இல்லை. ஆனால் திருச்சிற்றம்பலம், சிவபுராணம் என சுவர் எல்லாம் பக்திப் பாடல் பாடுகிறது. சங்க காலத்தில் பாடப் பெறாத ஸ்தலம் எனும் குறையை சமகால கோடம்பாக்கப் புலவர்கள் யாரேனும் பாடி, பிற்கால சந்ததியினருக்கு இந்தக் குறையை நிவர்த்தி செய்வார்கள் என நம்பலாம்.

அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை –  ஆஞ்சேயனுருக்கு சனிக்கிழமை, முருகனுக்கு கிருத்திகை,  வினாயகருக்கு சதுர்த்தி, சிவனுக்கு ப்ரதோஷம், என இருக்கும் கடவுள்களுக்கு எல்லாம் ஒரவஞ்சனை இல்லாமல் ஏதேனும் காரணம் காட்டி கூட்டம் வருவதால் வருஷம் முழுக்க விஷேசம் தான். ஆனாலும் மூன்று நாட்களில் 5000 பேர் கூடி, கும்மியடிக்கும் ஆடித்  திருவிழா தான் இந்தத் தலத்தின் மெகா திருவிழா. கே. கே நகர் அம்மன் கோயில் என்னும் பெயருக்கேற்ப கே கே நகரைச் சேர்ந்த 40 தெருக்களையும்  சுற்றி அருள் பாலிப்பார்களாம்.

வேண்டும் வரம் தரும் அம்மன் என்னும் அம்புலி மாமா கதைகள் உலாவ வில்லையெனினும் தல விருட்சமாய் இருக்கும் அரச மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில்கள் பல கட்டப்பட்டுள்ளன. மரம் இருக்கிறதே கட்டி வைப்போம் என்ற மனோபாவமல்ல. எந்த வித கிராபிக்ஸ் உதவியுமின்றி மரத்தில் அம்மன் முகம் தெரிவது தான் காரணம்.

நீங்கள்  போய்ப் பார்த்து, கன்னத்தில் இரண்டுக்கு மேலாகவும் போட்டுக் கொண்டும், சரியாகத் தெரியவில்லையெனில் கண்டாக்டரைக் கட்டாயம் பார்க்கவும்.

எல்லாம் சரி மிக முக்கியமான மேட்டரான பிரசாதம் பற்றி இன்னும் சொல்லவேயில்லையே என்று கேட்பது காதில் விழுகிறது.

ஆனால் அப்படியொரு செட்டப் இங்கு கிடையாது. பக்தர்கள் யாராவது வேண்டிக்கொண்டு பிரசாதம் வினியோகம் செய்ய வந்தால்தான் உண்டு.

பிரசாதம் இல்லையெனில் பரவாயில்லை, இராஜ பாளையத்தம்மன் ரேஞ்சுக்கு லோக்கல் பிளேவரில் படம் எடுக்க முத்து மாரி அம்மன் அருள் பாலித்த அதிசய அவதார மகிமைக் கதைகள் ஏதேனும் இருக்குமா என்றால்,  ஒன்றுண்டு.

ஒரு தனி மனுஷி, நகரின் மிக முக்கியமான பகுதியில் 15 லட்ச ரூபாய் சொந்தப் பணம் போட்டு நிலத்தை வாங்கி பிளாட் போடாமல் கோயில் கட்டி, அதை நிர்வகிக்க பத்து பேருக்கு சம்பளம் கொடுத்துக்கொண்டு இருப்பது இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் அதிசயங்களில் ஒன்றல்லவா?

3 comments so far

 1. குருஜி
  #1

  கட்டுரை மிக அருமை, உபயோகமும் கூட . நன்றி.

 2. virutcham
  #2

  பழமை வாய்ந்த கோவில்களுக்கே செல்லும் வழக்கம் என்றாலும் உங்கள் எழுத்து நடையின் நேர்த்திக்காக ஒரு முறை கோவில் செல்லலாமோ என்று எண்ண வைக்கிறது.

 3. Karthik
  #3

  அருகில் இருந்தும் இரு முறையே போய் வந்து இருக்கிறேன். இந்த வாரம் போக வேண்டும்

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: