முதல் போர் முற்றுகை வெறியாட்டங்கள்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 9

downloadபாகிஸ்தான் திட்டமிட்டபடி காஷ்மீரை முற்றுகையிட்ட பழங்குடிப் படையின் கமாண்டர் குர்ஷித் அன்வர், படையை அபோத்தாபாத்தில் குவித்து அதனுடன் முசாபராபாத்துக்குள் நுழைந்தார். அபோத்தாபாத் நகரம் தற்போது பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாவட்டத்தில் ஹசாரா பகுதியில் உள்ளது. அபோத்தாபாத்துக்கு வட கிழக்கு திசையில் அமைந்துள்ள முசாபராபாத் தான் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஆசாத் காஷ்மீரின் தலை நகரம். இதை அடைய அபோத்தாபாத்தில் இருந்து சாலையில் பயணித்தால் சுமார் 77 கிலோமீட்டர்களைக் கடக்க வேண்டும். முசாபராபாத் நகரம் முசாபராபாத் மாவட்டத்தில் ஜீலம், நீலம் ஆகிய நதிகளின் கரைகளில் அமைந்துள்ளது. குர்ஷித் அன்வர் தலைமையில் நடந்த இந்த காஷ்மீர் முற்றுகையைப் பின்னாளில் அக்பர் கான் உறுதி செய்துள்ளார். குர்ஷித் அன்வரும் முஸ்லிம் லீக்கின் தினசரியான டானில் இதைப்பற்றிக் கூறியுள்ளார்.

“திட்டத்தின்படி அக்டோபர் 21 ஆம் தேதி முற்றுகைக்கான தினமாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில தாமதங்கள் ஏற்பட்டு அடுத்த நாள் காலையில் தான் காஷ்மீர் முற்றுகை நடந்தது. என்னுடன் 4000 பேர் இருந்தார்கள். காஷ்மீருக்குள் நுழையும்வரை எங்களுக்கு அதிக தடைகள் இல்லை. அங்கு சென்ற பிறகே கடுமையான எதிர்ப்பை நாங்கள் சந்தித்தோம்.”

பழங்குடிப் படையினர் பஞ்சாப் வரை செல்லும் பிரதான சாலை வழியாக காஷ்மீரை நோக்கி முன்னேறினார்கள். அப்போது அவர்கள் அடைந்த நகரம் டோமெல். பிரதான சாலையில் பயணித்து ஜீலம் நதியின் குறுக்கே இருந்த முக்கிய பாலத்தைக் கடந்தார்கள். அதற்கு அருகில் ஜீலம் நதியும், நீலம் நதியும் கலக்குமிடத்தில் மிகப்பெரிய நகரமான முசாபராபாத் இருக்கிறது. அப்போது அங்கு முஸ்லிம்கள் மிகுதியாகவும், குறைந்த அளவில் இந்துக்களும் சீக்கியர்களும் இருந்தார்கள். இந்து, சீக்கிய மக்களில் பலர் பழங்குடிப் படை வருவதைக் கேள்விப்பட்டு ஊரைக் காலி செய்து புறப்பட்டு விட்டார்கள். மற்றவர்கள் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள். அவர்களில் பலர் கையில் ரைபிள் வைத்திருந்தார்கள் .அதிகாலை இருளில் முற்றுகை நடந்தது .முசாபராபாத்தில் புதிதாக பதவி ஏற்ற கமிஷனரின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கி முழக்கங்கள் கேட்டு கண் விழித்தார்கள். பின்னாளில் கமிஷ்னரின் மனைவி அன்று நடந்ததை விவரித்தார்.

“அக்டோபர் 22 ஆம் தேதி காலை ஐந்து மணி அளவில் நான் கண் விழித்தேன். துப்பாக்கி முழக்கங்கள் மலையில் எதிரொலித்தன. நானும் என் குழந்தைகளும் வெராண்டாவுக்கு சென்று துப்பாக்கி சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தோம். எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டிருந்தன.  சில குண்டுகள் பங்களாவின் வேலியாக இருந்த மரப் பலகைகளைத் துளைத்துக் கொண்டு வந்து விழுந்தன. எதிரிகள் ஏற்கனவே கிருஷ்ண கங்கா பாலத்தைக் கடந்து விட்டார்கள். அவர்கள் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.”

அந்தப் பயங்கரமான படையெடுப்பினால் அமைதியாக இருந்த நகரம் எப்படி பதற்றமடைந்தது என்பதை அவருடைய நேரடி அனுபவம் தெளிவாக  உணர்த்துகிறது. தொடக்கத்தில் இருந்தே சூறையாடல் நடைபெற ஆரம்பித்தது. பிரிகேடியர் அக்பர் கான் பின்னாளில் கூறியபடி படைக்குக் கூலியாக கொள்ளையடிக்கும் பொருள்களை எடுத்துக்கொள்ள படையின் கமாண்டர் குர்ஷித் அன்வரிடம் பழங்குடியினர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதில் முக்கியமானது என்ன வென்றால், அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களின் பொருள்களைத்தான் கொள்ளையடிப்பார்கள்.

காஷ்மீர் சமஸ்தானத்தின் படை எதிர்தாக்குதல் நடத்தி அவர்களை ஓரளவுக்குத்தான் தடுக்க முடிந்தது. ஏனென்றால் சமஸ்தானப் படை வீரர்கள் சிலர் பணிக்கு வராமல் சென்று விட்டார்கள். அவர்கள் பூஞ்சை சேர்ந்த முஸ்லிம்கள். ஒரு பிரிட்டிஷ் தூதுவர் முற்றுகை நடந்த நாளில் கடைசி பஸ்ஸில் ராவல்பிண்டியிலிருந்து பயணித்து ஸ்ரீ நகர் வந்து கொண்டிருந்தார். அவர் முசாபராபாத்தில் சீக்கியர்கள் துப்பாக்கிகளுடன் பழங்குடியினர் படையை எதிர் கொள்ள நின்றிருப்பதைப் பார்த்திருக்கிறார். அவர் கூற்றுப்படி பழங்குடியினர் படை குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டது. குழுக்களை வழி நடத்தியவர்கள் நிச்சயமாக பழங்குடியினர் அல்ல. குழுக்கள் சில நேரங்களில் குழுவின் தலைவர்களை மீறி செயல்பட்டன. குழுத் தலைவர்களாக செயல்பட்டவர்களில் சிலர் வடமேற்கு எல்லை மாகாணத்திலிருந்தும், மேற்கு பஞ்சாபிலிருந்தும் வந்த முஸ்லிம் லீக் தொண்டர்கள் என்பது பின்னாளில் பலருடைய வாக்குமூலங்கள் மூலம் தெளிவானது.

சூறையாடல்களுக்கு இடையே பலர் கொல்லப்பட்டனர். அவர்களில் மிகுதியானவர்கள் சீக்கியர்களும், இந்துக்களும்தாம். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். பல பெண்கள் அவர்களிடம் இருந்து தப்பிக்க தங்கள் குழந்தைகளை ஆற்றில் வீசி விட்டு தாங்களும் அதில் குதித்தார்கள். கமிஷனரின் மனைவி கிருஷ்ணா மேத்தா அப்படி சிலர் தற்கொலை செய்து கொண்டதை நேரில் கண்டிருக்கிறார். அவர்கள் நோக்கம் சூறையாடுவது; கொள்ளையடிப்பது; பெண்களைக் கடத்துவது ஆகியவை தாம். ஆனாலும் இவற்றைத் தாண்டி அவர்களுக்கு உந்து சக்தியாக ஓர் இலக்கு இருந்தது.

1947 அக்டோபர் 26 இல் ஈத் பண்டிகை வருகிறது. அதனை காஷ்மீர் தலை நகர் ஸ்ரீ நகரில் கொண்டாட வேண்டும் என்பது பழங்குடிப் படையினரின் விருப்பம். முசாபராபாத்தில் இருந்து சுமார் 100 மைல்கள் தொலைவில் ஸ்ரீ நகர் உள்ளது. அவர்கள் அக்டோபர் 26 ஆம் தேதி ஸ்ரீ நகர் அடைய வேகமாக செல்ல வேண்டும். ஜீலம் பள்ளத்தாக்கு சாலை பாறைகள் நிறைந்த மலைப் பாங்கான குறுகிய பாதை. அதன் வழியாகத்தான் அவர்கள் செல்ல வேண்டி இருந்தது. குறைவான எதிர்ப்பு இருந்தால் கூட அதில் முன்னேறுவது கடினம்.

இப்போது பழங்குடியினர் படை முசாபராபாத்தில் இருந்து பாரமுல்லாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து அவர்கள் ஸ்ரீ நகர் சென்று தங்கள் புனிதப் போரை முடிக்க வேண்டும். வழியில் அவர்கள் கடந்து செல்ல வேண்டிய மலைப்பாங்கான ஊர் உர்ரி. ஜீலம் நதிக்கரையில் உள்ள அழகிய இந்த ஊர் தற்போது பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருந்து 18 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. மேலும் இது கிட்டத்தட்ட முசாபராபாத்துக்கும், பாரமுல்லாவுக்கும் நடுவில் ஜீலம் பள்ளத்தாக்கு சாலையில் அமைந்துள்ளது.

அக்டோபர் 22 ஆம் தேதி பதான் பழங்குடியினர் படை முசாபராபாத்துக்குள் நுழைந்துவிட்டது. 23 ஆம் தேதி அது உர்ரிக்கு வந்துவிடும். தகவல் அறிந்த காஷ்மீர் சமஸ்தானப் படையின் பிரிகேடியர் ராஜிந்தர் சிங் 200 வீரர்களுடன் ஸ்ரீ நகரில் இருந்து புறப்பட்டார். பழங்குடிப் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த அவருக்கு ஒரே வழிதான் இருந்தது. உர்ரியில் இருக்கும் முக்கிய பாலத்தை சமஸ்தானப் படை தகர்க்க வேண்டும். அதில் அவர் வெற்றி பெற்றார். அப்போது அங்கு காஷ்மீர் படையுடன் இருந்தவர் டெய்லி எக்ஸ்பிரஸின் நிருபர் சிட்னி ஸ்மித். அவர் தொடர்ந்து போர் பற்றிய செய்திகளை பத்திரிகையின் செய்திப் பிரிவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அவருடைய விவரிப்பு, காட்சிகளை நம் கண்முன்னே கொண்டு வருகிறது.

“நானும் அரசர் ஹரி சிங் படையின் பிரிகேடியர் ராஜிந்தர் சிங்கும், உடைந்து நொறுங்கிக்கிடந்த உர்ரியின் இரும்புப் பாலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவருடைய படையினர் முன்னேறி வரும் பழங்குடிப் படைக்கு எச்சரிக்கை விடுத்தபடி இருந்தார்கள். பழங்குடிப் படை நகரைக் கைப்பற்றுவதற்காக 4000 அடிகள் கணவாயில் குவிந்திருந்தார்கள். ஒரு மணி நேரம் நடந்த இடைவிடாத துப்பாக்கிச் சண்டைக்கு இடையே உர்ரி நகரத்துக்கு வந்து சேரும் வழியின் கடைசி மூன்று மைல்களைக் கடந்தார்கள். துப்பாக்கிகளின் முழக்கங்கள் தொடர்ந்து ஒலித்து பனி மூடிய 10,000 அடி உயர சிகரங்களில் எதிரொலித்தன. அவர்கள் வந்த வழியில் இருந்த வீடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. பள்ளத்தாக்கு முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. தப்பி ஓடாமல் அவர்களை எப்படியும் எதிர்கொள்ளலாம் என்று இருந்த, குறைந்த எண்ணிக்கையிலான சீக்கியர்களையும், இந்துக்களையும் அவர்கள் துவம்சம் செய்தார்கள். துப்பாக்கி வெடிப்பது நின்றவுடன் சூறையாடலைத் தொடங்கினார்கள்.

“நான் பைனாகுலர் வழியாகப் பார்த்தபோது கறுப்புத் தலைப்பாகை அணிந்த நபர்கள் உர்ரியின் பஜார் தெருவில் ஒடிக்கொண்டிருந்தார்கள். பிரிகேடியர் ராஜிந்தர் சிங் ஐந்து லாரிகளில் தன் வீரர்களை அனுப்பினார். தொடர்ந்து மூன்று மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இரவு வந்ததும் அவர்கள் நகரைச் சுற்றி இருந்த மலைகளில் ரோந்து சுற்ற ஆள்களையும், கொலையாளிகளையும் அனுப்பினார்கள். காஷ்மீர் படையால் அவர்களைத் தடுக்க இயலவில்லை.

“காஷ்மீர் படையினர் வண்டிகளில் முன் விளக்குகளை எரியவிடாமல் தொடர்ந்து எதிரிகள் இருக்கும் திசையில் குத்துமதிப்பாக ரைபிளால் சுட்டபடி நிலவு ஒளி படர்ந்த மலைச் சாலைக்கு வந்தார்கள். சாலை முழுவதும் அகதிகள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என்று எல்லோரும் இருந்தார்கள். பல கிராமங்களை மக்கள் காலி செய்து விட்டார்கள். போலீஸாரும், அதிகாரிகளும் உர்ரிக்கும் ஸ்ரீ நகருக்கும் இடையே இருந்த இரண்டு ஊர்களை விட்டுச் சென்று விட்டார்கள்.

“பாலத்தை உடைத்ததன் மூலமாக காஷ்மீர் படை பழங்குடிப் படையின் முன்னேற்றத்தை வெகுவாக குறைத்தது. ஆனால் அதை முழுவதுமாக நிறுத்த முடியவில்லை.காஷ்மீர் படையினர் கடுமையாகப் போராடி எதிரிகளைத் தடுக்க முயன்றார்கள். பழங்குடிப் படை உர்ரியைத் தாண்டி அக்டோபர் 25 ஆம் தேதி மஹூராவை அடைந்தது. மஹூராவில் இருக்கும் புனல் மின் நிலையம் தான் ஸ்ரீ நகருக்கு மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கிறது. பழங்குடிப்படை அங்கு சென்ற பிறகு ஸ்ரீ நகருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரமே இருளில் மூழ்கியது. காஷ்மீர் அரசர் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்ந்தார். அவரும் அவர் குடும்பத்தாரும், அவருக்கு நெருக்கமானவர்களும் ஸ்ரீ நகரைக் காலி செய்தார்கள். அரசரும், அவரைச் சார்ந்தவர்களும் அதிக விலைமதிப்புள்ள பொருள்களுடன் ஜம்முவுக்குச் சென்றார்கள்.

“மஹுராவை பழங்குடிப்படை கைப்பற்றிய பிறகு பிரிகேடியர் ராஜிந்தர் சிங் கொல்லப்பட்டார்.பூஞ்ச் கலவரத்தை அடக்க காஷ்மீர் படையின் ஒரு பகுதி அங்கு தங்கி விட்டது.இருக்கும் படை வீரர்களும் படைத் தலைவர் கொல்லப்பட்டதால் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் இழந்தனர். படை மிகவும் மோசமான வலுவிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டது.”

பழங்குடிப்படையின் காஷ்மீர் முற்றுகைக்கும், பூஞ்ச் கலவரத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு. அதனால் தான் ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை, “காஷ்மீர் சமஸ்தானப் படைகளை சிதற வைத்து, பலவீனப்படுத்துவதை உறுதி செய்ய பூஞ்ச் கலவரத்தை விட சிறந்த திட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று எழுதியது.

பழங்குடிப் படையின் காஷ்மீர் முற்றுகை நடக்கும் அந்த வேளையில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் திட்டம் பலருக்கும் புரிய ஆரம்பித்தது. பாகிஸ்தானின் பிரதம மந்திரி ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்தும் மும்முனை தாக்குதல் திட்டத்தின் முதல் பகுதி பூஞ்ச் கலவரத்தின் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்வது; மேலும், அதை எரிபொருள் கொட்டி வளர்த்துவிடுவது. காஷ்மீர் அரசு தன் படைகளை அங்கு அனுப்புவதைத் தவிர வேறு வழி இல்லை. அங்கு நிரந்தரமாக ஒரு படையை நிறுத்திவைப்பதால் தலைநகரின் பாதுகாப்பு சற்று பலவீனப்பட்டுவிடுகிறது. இப்போது பழங்குடிப் படையை திடீர் முற்றுகை இட வைத்து சுலபமாக வெற்றி பெறுவதுதான் பாகிஸ்தானின் நோக்கம். இது தெளிவாகும் போது பூஞ்ச் கலவரத்துக்கும் பாகிஸ்தானுக்கும், எந்தத் தொடர்பும் இல்லை என்ற ஸ்னீடன் போன்றவர்களின் வாதம் உடைந்து போகும்.

0

 

வேதாளம் சொன்ன ‘பிரபாவதி’ கதை (2)

விக்கிரமாதித்தன் கதைகள் / 9

hqdefaultவிக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்து வேதாளத்தைப் பிடித்து தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டான்.

பாதிதூரம் கடந்ததும் ‘கேள், விக்கிரமாதித்தா…’ என்று வேதாளம் மீண்டும் தனது அடுத்த கதையை சொல்லத் தொடங்கியது.

‘யமுனா நதி பாயும் செழுமையான பிரதேசங்களில் பிரம்மபுரம் என்கிற ஊர் மிகப் பிரசித்தி பெற்றது. அங்கே வேதவிற்பன்னரான விஷ்ணுசர்மா என்கிற பிராமணப் பண்டிதர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு ஒரேயொரு மகள். பெயர் பிரபாவதி. மிகச் சிறந்த அழகி.

பாசத்துக்குரிய தனது மகளின் மேல் உயிரையே வைத்திருந்த விஷ்ணுசர்மா பிரபாவதி பருவ வயதை அடைந்ததும் அவளுக்கு மணம் செய்து வைப்பதற்காக பொருத்தமான மாப்பிள்ளையை தேடத் தொடங்கினார்.
உற்றார், உறவினர் அறிந்தோர் தெரிந்தோர் அனைவரிடமும் சொல்லி வைத்ததில் அநேக வரன்கள் வந்ததில், ராஜகுப்தம் என்னும் ஊரிலிருந்து வந்திருந்த மூன்று இளைஞர்களை விஷ்ணுசர்மாவுக்கு மிகவும் பிடித்துப் போனது.

மூவருமே நன்கு படித்த அறிவாளிகள். நற்குணம் கொண்டவர்கள். மிகுந்த திறமைசாலிகள். ஒவ்வொருவருமே பிரபாவதிக்கு மிகவும் பொருத்தமானவர்கள்தான். சரி, இவர்களில் யாரை பிரபாவதிக்குக் கணவனாகத் தேர்ந்தெடுப்பது?

விஷ்ணுசர்மா ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசினார். பிரபாவதியின் அழகில் மனம் பறி கொடுத்திருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தான் பிரபாவதியை திருமணம் செய்து தரவேண்டுமென்று விஷ்ணுசர்மாவை வற்புறுத்தினார்கள். அவளில்லாமல் தங்களுக்கு வாழ்க்கையே இல்லையென்று கெஞ்சினார்கள். அதற்கும் மேலாக பிரபாவதியை தனக்குத் திருமணம் செய்து தராமல் வேறு யாருக்காவது மணம் செய்துதந்தால் அந்த நிமிடமே தனது உயிரை விட்டுவிடுவதாக தற்கொலை மிரட்டலும் செய்தனர்.

விஷ்ணுசர்மா அதிர்ந்து போனார். அவருக்கு என்ன முடிவு எடுப்பதென்றே தெரியவில்லை. யோசித்து பதில் சொல்ல சில காலம் அவகாசம் அளிக்கும்படி இளைஞர்களைக் கேட்டுக் கொண்டார்.

விஷ்ணுசர்மாவின் முடிவு தெரியாமல் அங்கிருந்து செல்லப்போவதில்லை என்று தீர்மானித்து இளைஞர்கள் மூவரும் அங்கேயே தங்கி விட்டனர்.

நாட்கள் ஓடின. இளைஞர்களில் எவன் ஒருவனுக்கு சாதகமாக முடிவெடுத்தாலும் மற்ற இருவர் உயிர் துறந்து விடுவார்களோ என்கிற பயத்தில் விஷ்ணுசர்மாவும் நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.
இளைஞர்களோ தினமும் பிரபாவதியைக் காண்பதும், அவளது அழகை ரசித்து மகிழ்வதுமே தங்களது பாக்கியமாகக் கருதி நாட்களை இனிமையாக நகர்த்திக் கொண்டிருந்தனர்.

அந்தச் சமயத்தில்தான் ஒரு பெரும் துக்கம் நிகழ்ந்தது.

ஒருநாள் சாதாரண ஜுரத்தில் பாதிக்கப்பட்ட பிரபாவதி போகப் போக ஜுரவேகம் அதிகமாகி பின் முற்றிலும் சுயநினைவு இழந்து மூன்றாம் நாள் இறந்தே போனாள்.

பிரபாவதியை நேசித்த மூன்று இளைஞர்களும் இடிந்து மனம் உடைந்து நொறுங்கிப் போனார்கள்.

மூவரில் ஒருவன் பிரபாவதியை தகனம் செய்த மயானத்திலேயே ஒரு குடிசை போட்டுத் தங்கி, பிச்சையெடுத்து சாப்பிட்டுக் கொண்டு அவளது சாம்பலின் மீதே படுத்துறங்கி, காலம் கழிக்கத் தொடங்கினான். மற்றொருவன், பிரபாவதியின் அஸ்திகளை எடுத்துக்கொண்டு கங்கையில் சேர்ப்பிப்பதற்காக காசிக்குப் புறப்பட்டுப் போனான். இன்னொருவனோ மனம் வெறுத்து சந்நியாசியாகி தேசாந்திரம் போனான்.

அப்படி தேசாந்திரம் புறப்பட்டு ஊர் ஊராகச் சென்று சந்நியாசி ஒருநாள் சந்திரபிரஸ்தம் என்னும் ஊரை அடைந்தான். அவ்வூரின் அந்தணர் ஒருவர் இவனைக் கண்டு சந்நியாசியை தனது வீட்டுக்கு உணவருந்த அழைத்துச் சென்றார்.

அந்தணரின் மனைவியும் துறவியை வரவேற்று வேண்டிய உபசரணைகள் செய்து, சாப்பிடுவதற்காக அவனை மனையில் அமர்த்தினாள். பின் அவர் முன் பெரும் வாழையிலையிட்டு சாதம், கறிகாய்கள், பழங்கள் வைத்துப் பரிமாறி, தேவையானதை கேட்டுக் கேட்டு உபசரித்தாள்.

அப்போது அவளின் குழந்தை அழுது அடம் பிடித்து விடாமல் கத்திக் கதறியது. எவ்வளவோ சமாதானம் செய்தும் அடங்காமல் குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அந்தப் பெண்மணி கோபத்துடன் குழந்தையைத் தூக்கி அடுப்பு நெருப்பில் வீசியெறிந்து விட்டாள். வீசிய மாத்திரத்தில் குழந்தை நெருப்பில் பொசுங்கிப் போய் சாம்பலாகிப் போனது.

இதைக் கண்ட வாலிபத் துறவி திடுக்கிட்டுப் போய், அப்படியே சாப்பாட்டிலிருந்து பாதியிலேயே எழுந்துகொண்டு அலறினான். ‘அடிப்பாவி! நீ பெண்தானா? அல்லது பிரம்மராட்சஸியா? தாய் உருவில் வந்த பேயே, ஒரு சிறு குழந்தையைப் போய் இப்படி நெருப்பிலிட்டுப் பொசுக்கி விட்டாயே? ஐயோ! இந்த வீட்டில் சாப்பிடுவதே பெரும் பாவம்! இதற்கு மேல் ஒரு விநாடியும் இங்கிருக்க மாட்டேன்!’ என்று கதறிப் புலம்பியபடி அங்கிருந்து வெளியேற முனைந்தான்.

அப்போது அந்த வீட்டுக்குச் சொந்தக்காரனான அந்தணன், ‘சந்நியாசியைத் தடுத்து நிறுத்தி, சிறு புன்னகையுடன் கூறினார்: ஸ்வாமி! பதறாதீர்கள்! இது இந்த வீட்டில் சகஜமாக நடப்பதுதான். குழந்தைக்கு ஒன்றும் ஆகாது. இதோ இப்போதே எனது மந்திரத்தினால் குழந்தையை உயிர்ப்பித்து விடுகிறேன்! பாருங்கள்.’ என்று சொல்லி, அந்தணன் சஞ்சீவி மந்திரத்தை உச்சரித்து, நெருப்புச் சாம்பலின் மீது கலச நீரைத் தெளிக்க குழந்தை ஒரு சிறு காயமும் இன்றி எழுந்து வந்தது.

வாலிபத் துறவி மிகுந்த ஆச்சரியம் அடைந்தான். அன்றைய இரவை அங்கேயே கழித்த சந்நியாசி, அந்தணனிடம் தனக்கும் அந்த சஞ்சீவி மந்திரத்தை சொல்லித் தரும்படி மன்றாடிக் கேட்டான். மாண்டு போன தனது காதலியை உயிர்பிக்க வேண்டுமென உண்மையைக் கூறி, அவன் அந்தணனிடம் கெஞ்ச, ‘துறவியாரே! நீங்கள் இத்தனை தூரம் கெஞ்சுவதால் நான் உங்களுக்கு அந்த சஞ்சீவி மந்திரத்தை சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு!’ என்றான் அந்தணன்.

‘என்ன நிபந்தனை சொல்லுங்கள். எதுவானாலும் செய்கிறேன்!’ துடிப்புடன் கேட்டான் துறவி.

‘இந்த சஞ்சீவி மந்திரத்தை ஒருமுறை மட்டுமே அதுவும் உனது காதலியை உயிர்ப்பிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மற்றொரு முறை பயன்படுத்தக் கூடாது. சம்மதமா?’

‘சம்மதம். அப்படியே செய்கிறேன். அந்த ஒருமுறைக்கு மேல் சஞ்சீவி மந்திரத்தை பயன்படுத்த மாட்டேன்! இது சத்தியம்!’

அந்தணன், துறவியின் காதில் சஞ்சீவி மந்திரத்தை உபதேசித்து அனுப்பி வைத்தான்.

வாலிபத் துறவி மிகுந்த சந்தோஷத்துடன் இரவு பகலாக நடந்து இடையில் எங்குமே தங்காமல் பிரபாவதியை தகனம் செய்த மயானத்துக்கு வந்து சேர்ந்தான். அதே சமயம் பிரபாவதியின் அஸ்திகளை கங்கைக்குக் கொண்டு சென்ற இளைஞனும் அஸ்திகளை புனித நீராட்டிக் கொண்டு அங்கே ஊர் திரும்பியிருந்தான். முதலாம் வாலிபன் எப்போதும்போல் பிரபாவதியின் சாம்பலைப் பாதுகாத்துக்கொண்டு அங்கேயே இருந்தான்.

வாலிபத் துறவி, மற்ற இருவரிடமும் நடந்ததைக் கூறி, ‘நண்பா, நீ பிரபாவதியின் சாம்பலைக் குவித்து வை. காசிக்குச் சென்று வந்த நீ அவளது அஸ்திகளை சாம்பலிலேயே போடு. நான் சஞ்சீவி மந்திரத்தைச் சொல்லி அவளை உயிர் பிழைக்க வைத்து விடுகிறேன்!’ என்று சொல்லி அது போலவே செய்தான்.

துறவி, சஞ்சீவி மந்திரத்தை உச்சாடனம் செய்து நீர் தெளித்ததுமே பிரபாவதி மாறாத பேரழகுடன் முன் போலவே எழுந்து வந்தாள்.

அதிசயம் நிகழ்ந்த அடுத்த கணமே அங்கே பெரும் சண்டை மூண்டது!

ஆம்! பிரபாவதியின் அழகில் மயங்கி கிறங்கிப் போன மூவரும், உயிருடன் வந்த பிரபாவதி தனக்குத்தான் சொந்தம் என்றும், அவள் தன்னைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினார்கள். ஒவ்வொருவருமே தன்னால்தான் பிரபாவதி உயிர்பிழைத்தாள் என்று கூறி உரிமை கொண்டாடினார்கள்.

‘எனது சஞ்சீவி மந்திரத்தால்தால் பிரபாவதி உயிர் பிழைத்தாள். எனவே அவள் என்னைத்தான் மணந்துகொள்ள வேண்டும்!’ என்றான் ஒருவன். அவளது அஸ்திகளை காசியில் திருமுழுக்காட்டிக் கொண்டு வந்தவனோ, ‘நான் அவளது அஸ்திகளை கங்கை நதியில் முழுக்காட்டிய புண்ணியத்தால்தான் உயிர் பிழைத்தாள். ஆகையால் அவள் எனக்கே மனைவியாவாள்!’ என்று வாதிட்டான். இன்னொருவனோ, ‘நான் பிரபாவதியின் சாம்பலை பாதுகாத்து வந்ததால்தானே அவள் உயிருடன் வருவது நிகழ்ந்தது! இல்லாவிட்டால் அவள் உயிர் பிழைத்தது எங்ஙனம் நிகழ்ந்திருக்கும்? எனவே அவள் எனது உடமை’ என்று அடித்துச் சொன்னான்.’

-இந்த விதமாக கதையை முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது,

‘சொல்லுமய்யா மகாராஜனே! அந்தப் பெண் பிரபாவதி யாருக்குச் சொந்தமாவாள்? அவர்களது வாதத்தில் உள்ள நியாயம் என்ன? விடை தெரிந்தும் சொல்லாவிட்டால் உனது தலை சிதறி விடும்!’ என்று கேட்டது.

விக்கிரமாதித்தன் விளக்கமாக பதில் கூறினான்: வேதாளமே, மந்திரத்தால் அந்தப் பெண்ணை உயிர் பெறச் செய்தவன் நிச்சயமாக அவளது கணவனாக மாட்டான். ஏனென்றால் அவளுக்கு உயிர் கொடுத்தவன் தந்தை ஸ்தானத்துக்கே ஒப்பானவன் ஆவான். அதுபோலவே பிரபாவதியின் அஸ்தி எலும்புகளை கங்கைக்கு எடுத்துச் சென்றவன் அவளுக்கு மகனாவான். அவளது சாம்பலை விட்டுப் பிரியாமல் கட்டித் தழுவி மயானத்திலேயே தங்கி பாதுகாத்துக் கொண்டிருந்தவனே அவளது கணவன் ஆவான்!’ என்று கூறினான்.

விக்கிரமாதித்தனுடைய இந்த சரியான பதிலால் வேதாளம் அவனது தோளிலிருந்து புறப்பட்டு முருங்கை மரத்துக்கே சென்று சேர்ந்தது. முனிவன் ஞானசீலனுக்குக் கொடுத்த வாக்குப்படி வேதாளத்தைப் பிடித்து வர விடாமுயற்சியுடன் மீண்டும் புறப்பட்டான் விக்கிரமாதித்தன்.

இரண்டாம் தந்திரம் – சுகிர்த லாபம்

பஞ்ச தந்திரக் கதைகள்

Digiral_art11முதல் தந்திரமாகிய ‘நட்பைக் கெடுத்துப் பகையை உண்டாக்குதல்’ பற்றி கதைகள் மூலம் பாடம் புகட்டிய பண்டிதர் விஷ்ணுசர்மா அடுத்தபடியாக, இரண்டாம் தந்திரமாகிய, ‘தமக்கு இணையானவர்களுடன் பகையின்றி வாழ்தல்’ குறித்த ஒரு நெடுங்கதையினை அந்த மூன்று இளவரசர்களுக்கும் கூறத் தொடங்கினார்.

‘புத்திசாலியான நண்பர்கள் தங்களிடம் பணம் முதலியன எவையும் இல்லையென்றாலும்கூட அவர்கள் காகம், எலி, ஆமை, மான் ஆகிய நான்கு நண்பர்கள் ஒன்றையொன்று காப்பாற்றிக்கொண்டு வாழ்ந்ததைப் போலத் தங்களுக்குள் உதவி வாழ்வார்கள்’ என்று விஷ்ணுசர்மா கூறினார்.

‘அதெப்படி? என்ன கதை அது?’ என்று அந்த மூன்று இளவரசர்களும் கேட்க, அந்த நான்கு நண்பர்களின் கதையினை விஷ்ணுசர்மா கூறத்தொடங்கினார்.

2. தமக்கு இணையானவர்களுடன் பகையின்றி வாழ்தல்

கோதாவரி ஆற்றங்கரையில் ஒரு பெரிய வன்னிமரம் இருந்தது. அந்த மரத்தில் இலகுபதனன் என்ற காகம் குடியிருந்தது.

ஒரு நாள் விடியற்காலையில் வேடன் ஒருவன் அங்கு வந்தான். அவனைக் கண்டதும் இலகுபதனன், ‘இன்று இந்த வேடன் யாருடைய உயிரைப் பறிக்கப் போகிறானோ?’ என்று நினைத்துப் பயந்தது.

வேடன் தான் கொண்டு வந்த வலையினை கீழே விரித்தான். அதன்மீது தானியங்களைப் பரப்பி வைத்து விட்டு அருகே இருந்த புதருக்குள் சென்று மறைந்துகொண்டான். பறவைகள் வலையில் வந்து சிக்குவதற்காகக் காத்திருந்தான். வெகுநேரம் வரை எந்தப் பறவைகளும் அங்கே வரவில்லை. வேடன் ஏமாற்றத்துடன் வேறு இடத்துக்குச் செல்லலாம் என்றெண்ணி புறப்பட நினைத்தபோது, ஒரு புறாக்கூட்டம் ஒன்று பறந்து வருவதைக் கண்டான். மீண்டும் ஒளிந்து கொண்டான்.

அந்த புறாக்கூட்டத்துக்கு ராஜா சித்திரக்கிரீவன் என்ற புறா. அது தன்னுடைய பணியாளர்களோடு அந்தப் பக்கம் பறந்துவந்தது. அவை இரை தேடி காட்டுப் பகுதியில் சுற்றிவிட்டு எங்கும் இரை கிடைக்காததால் ஆற்றங்கரைப் பக்கமாக வந்தன. தரையில் தானியங்கள் பரப்பியிருப்பதனைப் பார்த்தன. உடனே, ஒட்டுமொத்தமாக அனைத்தும் தரையிறங்கின. தானியங்களை உண்பதற்காக நெருங்கின.

அப்போது புறாக்களின் ராஜாவான சித்திரக்கிரீவன், எல்லாப் புறாக்களையும் தடுத்து, ‘சற்றுப் பொறுங்கள். இந்தப் பகுதியில் இவ்வளவு தானியங்களை ஒரே இடத்தில் யாரோ பரப்பியுள்ளனர். இது இயல்புக்கு மாறானது. இவை எதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை அறியாமல் நாம் இவற்றை உண்பது ஆபத்து’ என்று கூறி எச்சரித்தது.

இதனை அந்த மரத்திலிருந்த காகமாகிய இலகுபதனன் கவனித்துக்கொண்டிருந்தது.

புறாக்கள் தமது ராஜாவிடம், ‘மன்னா! நமக்கு காட்டில் ஏதும் உணவு கிட்டவில்லை. ஆதலால்தான் நாம் இந்த ஆற்றங்கரைப் பகுதிக்கு வந்திருக்கிறோம். இதோ நமக்கு இங்கே இரை கிடைத்துள்ளது. இறைவன் நமக்கு இவற்றைக் கொடுத்துள்ளார் என்று நினைத்து இவற்றை உண்ண வேண்டியதுதானே!’ என்று கூறின. அதற்கு புறாக்களின் ராஜாவாகிய சித்திரக்கிரீவன், ‘உணவுக்கு ஆசைப்பட்டு நாம் ஆராயாமல் இந்தத் தானியங்களை உண்டால், ஒரு பிராமணன் தங்கக் காப்புக்கு ஆசைப்பட்டு புலியால் கொல்லப்பட்டதைப்போல நாமும் ஆபத்தில் சிக்கிக்கொள்வோம்’ என்று கூறினார்.

‘தங்கக் காப்புக்கு ஆசைப்பட்ட பிராமணன் புலியால் கொல்லப்பட்டானா! எப்படி?’ என்று கேட்ட தன் பணியாளர்களுக்கு ராஜா சித்திரக்கிரீவன் அந்தக் கதையினைச் சொல்லத் தொடங்கியது.

2.1. புலியால் கொல்லப்பட்ட பிராமணன்

ஓர் அழகான ஏரிக்கரையில் ஆபத்தான கிழட்டுப்புலி ஒன்று தங்கியிருந்தது. அதற்கு மிகவும் வயதாகிப் போனதால் முன்பு போல அதனால் ஓடியாடி வேட்டையாட முடியவில்லை. அதன் பற்களும் விழுந்துவிட்டன. கால் நகங்களும் மழுங்கிவிட்டன. உடலில் வலு இல்லை. ஆனால், மூளை மட்டும் தந்திரமாக வேலைசெய்தது. இருந்த இடத்திலிருந்தே தனக்கான இரையினைப் பெற அது ஒரு திட்டமிட்டது.

ஒருநாள் ஏரிக்குள் இறங்கி நீராடியது. கையில் ஒரு தருப்பை புல்லினை வைத்துக்கொண்டது. மிகவும் சாதுபோலத் தன் முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தது.

அந்த ஏரிக்கரையின் வழியாக ஒரு பிராமணன் சென்றுகொண்டிருந்தான். புலி அவனை அழைத்தது. அவன் புலியைப் பார்த்ததும் பயந்து ஓட நினைத்தான்.
உடனே, அந்தப் புலி, ‘ஏய் பிராமணனே! ஓடாதே, நில். உனக்காக ஒரு தங்கக் காப்பு வைத்திருக்கிறேன். வந்து வாங்கிச்செல்’ என்று அன்புடன் அவனை அழைத்தது.

‘தங்கக் காப்பு’ என்ற சொல் அவனை நிறுத்தியது. பிராமணன் நின்றான். இருந்தாலும் புலியின் மீது அவனுக்கு பயம் தணியவில்லை.

‘தங்கக் காப்பு வேண்டுமென்றால் நாம் அந்தப் புலியிடம் சென்றாகவேண்டும். நாம் அருகில் சென்றதும் அது நம்மீது பாய்ந்து கடித்துவிட்டால் ஆபத்து. மரணம் என்பது இப்போது இல்லையென்றால் எப்போதாவது வரத்தான் செய்யும். ஆனால், தங்கக் காப்பு?’ என்று தன் மனத்துக்குள் ஆலோசனை செய்தபின்னர், புலியிடம் தொலைவிலிருந்தே பேசினான்.

‘புலியே முதலில் அந்தத் தங்கக் காப்பினை எனக்குக் காட்டு?’ என்று புலியிடம் கூறினான்.

புலி தங்கக் காப்பைக் காட்டியது. ‘சரி, நான் உன்னை நம்புகிறேன். இருந்தாலும் எனக்கு உன் மீது முழு நம்பிக்கை ஏற்படவில்லை’ என்றான்.

‘பிராமணனே! நானும் உன்னைப்போலத்தான் அதிகாலையில் எழுந்து, நீராடி, இறைவனை வணங்கி, என்னால் முடிந்த தரும காரியங்களைச் செய்து வருகிறேன். எனக்கு வேட்டல், ஓதல், கொடுத்தல், தபம், சத்தியம், உறுதி, பொறாமை, ஆசையின்மை ஆகிய எட்டு தருமங்களும் தெரியும். உன்னைப் பார்த்தால் வறுமையில் உள்ளதுபோலத் தெரிகிறது. அதனால்தான் இந்தத் தங்கக் காப்பினை உனக்குத் தரலாம் என்று நினைத்தேன். ஏழைகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் செல்வந்தர்களுக்குக் கொடுக்கலாகாது என்றும் தர்ம சாஸ்திரம் கூறியுள்ளதே! காரணம், நோயாளிக்குத்தான் மருந்து தேவை. நோயில்லாதவனுக்கு மருந்தைக் கொடுத்தால் அதனாலேயே அவன் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. நீ என்னுடைய நல்ல குணத்தினைப் புரிந்துகொள்!’ என்று புலி அவனிடம் ஆசை வார்த்தைகள் பேசியது.

‘புலி மனிதர்களைத் தாக்கிக் கொல்லும் என்று உலகத்தார் பேசிக்கொள்கிறார்களே, அதனால்தான் நான் உன்னை நெருங்க யோசிக்கிறேன்’ என்றான் பிராமணன்.

‘நான் தரும சாஸ்திரம் அறிந்தவன். என் உயிர் எனக்கு எப்படி முக்கியமானதோ அதுபோலவே ஒவ்வொருவருக்கும் அவரவரது உயிர் முக்கியமானது என்பதனை நான் நன்கு அறிவேன். சாதுக்கள் எப்படி பிற உயிர்கள்மீது மிகவும் இரக்க குணத்தோடு இருக்கிறார்களோ அவ்வாறே நானும் மனித உயிர்களின் மீது இரக்கத்தோடு இருக்கிறேன். என்னால் உனக்கு ஒரு துன்பமும் வராது. நானோ வயதானவன். எனக்குப் பல்லுமில்லை நகமும் இல்லை. அவ்வளவு ஏன்? என் உடலில் வலுவும் இல்லையே. என்னால் எப்படி உன்னைக் கொல்லமுடியும்? என்னை நம்பு’ என்றது அந்தத் தந்திரக்காரப் புலி.

புலியின் பேச்சினை நம்பிய பிராமணனின் கவனம் முழுவதும் அந்தத் தங்கக் காப்பின்மீதுதான் இருந்தது. அவன் ஏரிக்குள் இறங்கினான். புலியை நெருங்கினான். அதற்குள் அவன் கால்கள் ஏரியில் இருந்த சகதிக்குள் சிக்கிக்கொண்டது.

‘என்ன பிராமணா! சகதிக்குள் சிக்கிக்கொண்டாயா? நான் வந்து உன்னைக் காப்பாற்றுகிறேன்’ என்று கூறி புலி அவனருகில் வந்தது.

அவனுக்குப் புலியின் திட்டம் புரிந்தது. ‘தீயவர்கள் தரும சாஸ்திரம் படித்திருந்தாலும் வேதத்தின் மீது சத்தியம் செய்தாலும் அவர்களின் வார்த்தைகளை நம்புவது எப்போதுமே ஆபத்துதான்’ என்பதனை அந்தப் பிராமணன் உணர்ந்தான். புலி அவன் மீது பாய்ந்தது. அவனைக் கொன்று, உண்டது.’

ஆகையால் எதையும் மிகவும் ஆழ்ந்து யோசித்த பின்னரே செயலில் இறங்கவேண்டும். அவ்வாறு செயல்படுபவர்கள் நன்மையடைவர் என்று கூறியது புறாக்களின் ராஜாவான சித்திரக்கிரீவன்.

அப்போது கூட்டத்திலிருந்த இளம் புறா ஒன்று, ‘இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டே இருந்தால் நமக்கு இரையே கிடைக்காது மகாராஜா! வெட்கப்படுகின்றவன், பொறாமையுள்ளவன், மகிழ்ச்சியடையாதவன், தீராத சந்தேகப் புத்தியுள்ளவன், பிறர் பொருளைக் கொண்டு வாழ்பவன் போன்றவர்கள் பெரும் துன்பத்தையே அனுபவிப்பார்கள்.’ என்று கர்வமாகக் கூறியது.

உடனே, அனைத்துப் புறாக்களும் அந்தத் தானியத்தை உண்ணச் சென்றன. ஒட்டுமொத்தமாக வேடன் விரித்திருந்த வலையில் அகப்பட்டுக்கொண்டன.
இதனை அந்த மரத்திலிருந்த காகமாகிய இலகுபதனன் வருத்தத்தோடு பார்த்தது.

புறா ராஜா சித்திரக்கிரீவன் சிக்கிக் கொண்ட புறாக்களைப் பார்த்து, ‘என் சொல்லை மீறி நடந்ததால் இப்படி ஆபத்தில் சிக்கிக்கொண்டீர்களே! நான் மட்டும் தனியாக வலையில் சிக்காமல் இருந்து என்ன செய்யப்போகிறேன். உங்களுக்கு நேரும் ஆபத்து எனக்கும் நேரட்டும்’ என்று கூறி அதுவும் அந்த வலையில் வலியப் போய் அகப்பட்டுக்கொண்டது.

அனைத்துப் புறாக்களும் ராஜா சித்திரக்கிரீவனிடம் மன்னிப்புக்கேட்டன. சித்திரக்கிரீவன், ‘சரி, பரவாயில்லை. நடந்தது நடந்துவிட்டது. இனி இதிலிருந்து தப்பிக்க வழி தேடுவோம்’ என்று ஆறுதலாகக் கூறியது.

புதருக்குள் ஒளிந்திருந்த அந்த வேடன் மெல்ல எட்டிப்பார்த்தான். எல்லாப் புறாக்களும் வலையில் அகப்பட்டுக்கொண்டதைப் பார்த்து மகிழ்ந்தான்.
இதையெல்லாம் காகமாகிய இலகுபதனன் கவனித்துக்கொண்டிருந்தது.

புறா சித்திரக்கிரீவன் யோசித்தது. அது தனது பணியாளர்களிடம் ‘இப்போது நாம் இந்த ஆபத்திலிருந்து தப்ப வேண்டுமானால் ஒரேயொரு வழி இருக்கிறது. நாம் எல்லோரும் ஒருசேர இந்த வலையைத் தூக்கிக்கொண்டு, நம்மால் எவ்வளவு வேகமாகப் பறக்க முடியுமோ அவ்வளவு வேகமாகப் பறந்து சென்று வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் தரையிறங்கவேண்டும்’ என்றது.

இந்த யோசனை அனைத்துப் புறாக்களுக்கும் பிடித்திருக்க, சித்திரக்கிரீவன் சொன்னதும் எல்லாம் ஒன்று சேர்ந்து வலையுடன் பறந்தன.

மிகுந்த ஆச்சரியத்துடன் புறாக்களின் பின்னாலேயே இலகுபதனனும் பறந்து சென்றது.

புறாக்கூட்டம் வலையோடு பறந்து செல்வதைக் கண்ட வேடன், புதருக்குள்ளிருந்து வெளிப்பட்டு அந்தப் பறவைகளின் பின்னாலேயே ஓடினான். பறவைகள் விடாப்பிடியாக ஆற்றையும் தாண்டிப் பறந்ததால் தொடர்ந்து துரத்த முடியாமல் மனம் சோர்ந்து நின்றுவிட்டான்.

வானத்தில் பறந்துகொண்டிருக்கும்போதே புறா ராஜா சித்திரக்கிரீவன் மற்ற புறாக்களிடம், ‘இன்னமும் வேகமாகச் செல்லுங்கள்! நாம் செல்லும் வழியில் கண்டகி என்ற ஒரு நதி இருக்கிறது. அதன் கரையில் உள்ள சித்திரவனத்தில் என் நண்பர் எலி ராஜா இரணியகன் என்பார் வளையமைத்து வாழ்ந்து வருகிறார். அவர் நம் கால்களில் சிக்கியுள்ள வலையினைத் தன் கூரிய பற்களால் கடித்து அறுத்துவிடுவார்’ என்று கூறியது. அதுபோலவே அனைத்துப் புறாக்களும் வேகமாகப் பறந்து, எலிராஜா இரணியகனுடைய வளையின் வாசலில் வந்திறங்கின. அவற்றின் பின்னாலேயே வந்த காக்கை இலகுபதனும் அருகில் இருந்த ஒரு மரத்தில் வந்து அமர்ந்துகொண்டது.

பறவைகளின் சப்தம் கேட்ட எலிராஜா, ‘ஏதோ ஆபத்து’ என்று பயந்து, தன்னுடைய நூற்றுக்கும் மேற்பட்ட வாசல்களையும் குறுக்கு வழிகளையும் உடைய மிகப்பெரிய வளைக்குள் சென்று ஒளிந்துகொண்டது.

உடனே, புறா ராஜா சித்திரக்கிரீவன், ‘இரணியகா!’ என்று அன்போடு குரல் கொடுத்து அழைத்தது.

‘அட இது நம் நண்பன் சித்திரக்கிரீவன் குரல் அல்லவா!’ என்று அடையாளம் கண்டு கொண்ட எலிராஜா, உடனே தன் வளையிலிருந்து வெளியே வந்தது. வலையில் சிக்கி நின்ற புறாக்களின் நிலையைப் பார்த்து துயரம் கொண்டது.
புறாக்களின் ராஜாவிடம், ‘என்ன சித்திரக்கிரீவா! நீ மிகவும் புத்திசாலியாயிற்றே! எப்படி இந்த மாதிரியான ஆபத்தில் சிக்கிக்கொண்டாய்?’ என்று ஆச்சரியத்துடன் விசாரித்தது.

அதற்கு சித்திரக்கிரீவன், ‘எந்தக் காலத்தில் எது நடக்க வேண்டுமோ அது எப்படியும் நடந்தேவிடுகிறது. விதி வலிமையுடையது. விதியின் முன் யாருடைய உதவியும் பயன்படுவதில்லை. கடல் சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் அதற்கு ஏது கரை?’ என்று கவலையுடன் கூறியது.

‘நீ கூறுவது உண்மைதான். நெடுந்தொலைவில் உள்ள பொருட்களைக்கூட மிகத் துல்லியமாகக் கணித்துவிடும் திறமை படைத்தவன் நீ. அப்படியிருந்தும் நீ வேடனின் வலையில் சிக்கிக்கொண்டது விதியின் காரணம்தானே! சந்திரனுக்கும் சூரியனுக்கும் ராகுவாலும் கேதுவாலும் துன்பம் ஏற்படுகிறது. யானையும் பறவைகளும் பாம்புக்குக் கட்டுப்பட்டுவிடுகின்றன. புத்திசாலிகளுக்கு வறுமை பீடிக்கிறது. இவையெல்லாம் இறைவனின் செயல்கள்தான்!’ என்று கூறியவாறே வந்த எலிராஜா இரணியகன், புறா ராஜாவின் அருகில் வந்து அவரின் கால்களில் சிக்கியுள்ள வலையினைத் தன் கூரிய பற்களால் கடித்து விடுவிக்க வந்தது.

இரணியகனைத் தடுத்த புறாராஜா, ‘நண்பா! முதலில் என் பணியாளர்களை விடுவித்துவிடு. இறுதியாக என்னை இந்த வலையிலிருந்து விடுவி’ என்றார்.

‘சித்திரக்கிரீவன் தற்போது என் பற்களுக்கு அவ்வளவாக வலிமை இல்லை. ஆதலால், முதலில் உன்னை விடுவித்துவிடுகிறேன்’ என்றது இரணியகன்.

‘இல்லை நண்பா! முதலில் தன்னை நம்பியுள்ள பணியாளர்களைக் காப்பாற்றுவதுதான் ஒரு ராஜாவின் கடமை’ என்றது சித்திரக்கிரீவன்.

‘இல்லை நண்பா! முதலில் தன்னைக் காப்பாற்றிக்கொண்ட பின்னர்தான் நாம் நம்மை நம்பியுள்ளவர்களைக் காப்பாற்றவேண்டும். அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கினுக்கும் முதன்மைத்தேவை உயிர்தான். ஆதலால், உயிரைக் காப்பாற்றிவிட்டால் மற்றவற்றை அடைந்துவிடலாம்’ என்றது எலிராஜா.

‘நண்பா! நீ கூறுவது சரிதான். ஆனால், இப்படிப்பட்ட தருணத்தில் இவர்களைக் காப்பாற்றுவதால்தானே இவர்கள் என்னை ராஜாவாக நினைக்கிறார்கள். ஆதலால், முதலில் இவர்களை வலையிலிருந்து விடுவி’ என்றது சித்திரக்கிரீவன்.

‘சித்திரக்கிரீவா! நீ மிகவும் நல்லவனாக இருக்கிறாய். அடுத்தவர்களை ஆதரித்துக்கொண்டிருக்கிறாய். முதலாளியிடம் விசுவாசமாக இருக்கிற வேலைக்காரர்களும் வேலைக்காரர்களிடம் அன்பாயுள்ள முதலாளியும் எப்பொழுதும் இன்பத்தையே அடைவர்’ என்று கூறிய எலிராஜா, முதலில் மற்ற புறாக்களை வலையிலிருந்து விடுவித்துவிட்டு, இறுதியாகப் புறாராஜாவை விடுவித்தது.

எலிராஜாவுக்கு நன்றி கூறிவிட்டு, அனைத்துப் புறாக்களும் புறாராஜாவின் தலைமையில் தங்களின் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டன.

இவற்றையெல்லாம் மரத்திலிருந்தபடியே கவனித்துவந்த காகமாகிய இலகுபதன், எலியாகிய இரணியகனிடம், ‘நீ மிகவும் நல்லவனாக இருக்கிறாய்’ என்றது. நிமிர்ந்து பார்த்த எலிராஜா பதறிவிட்டார். எலிக்குக் காகம்தானே பரம எதிரி! உடனே, தன் வளைக்குள் நுழைந்து தப்பிக்க நினைத்தார் எலிராஜா.

‘என்னைப் பார்த்து பயப்படவேண்டாம். நான் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன்’ என்று இலகுபதன் எலியைத் தன் வார்த்தைகளால் தடுத்து நிறுத்தியது.

‘நண்பராக இருப்பதா? இந்த உலகத்தில் சமமானவர்களுக்கிடையில்தான் நட்பு உண்டாகிறது. நீ காக்கை இனம். நான் எலி இனம். நான் உனக்கு இரை. நீ என்னை உண்பவன். ஆதலால், நீ எனக்குப் பகை. அப்படியிருக்க நாம் எப்படி நண்பர்களாக இருக்க முடியும்?’ என்று கேட்டது எலிராஜா.

‘நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். நாம் நல்ல நண்பர்களாக இருக்கமுடியும். வேடர்களின் வலையில் அந்தப் புறாக்கூட்டம் அகப்பட்டுக்கொண்டபோது அவற்றுக்கு என்னால் ஏதும் உதவிசெய்ய முடியவில்லை. ஆதலால்தான் நானும் அவற்றுடனேயே பறந்துவந்து இங்குள்ள மரத்தில் அமர்ந்தேன். நீ அப்புறாக்களுக்கு உதவியதனைக் கண்டு மகிழ்ந்தேன். எனவேதான் உன்னுடைய நண்பனாக இருக்க விரும்புகிறேன்’ என்றது இலகுபதன்.

‘இல்லை. உன்னுடைய நட்பு எனக்கு ஆபத்தாக முடிந்துவிடும். நரியின் நட்பால் மான் வலையில் அகப்பட்டதுபோல நானும் துன்பப்படவேண்டிவரும்’ என்றது எலியாகிய இரணியகன்.

‘நரியின் நட்பால் மான் வலையில் அகப்பட்டதா? எப்படி?’ என்று இலகுபதன் கேட்டவுடன், எலிராஜா அந்த மானின் கதையினைச் சொல்லத் தொடங்கியது.

(தொடரும்)

புலிமுகச் சப்பாத்துகள்

சீன இதிகாசக் கதைகள் / 6

0f889dd38d9cad9b9b4c2a8d5caa0d56புலிமுகச் சப்பாத்துகளை சீனாவின் கிராமங்களில் சிறுவர்கள் அணிந்துச்செல்வதை இப்பொழுதுகூட நாம் பார்க்கலாம். இந்தச் சப்பாத்துகள் துணியினால் செய்யப்படுபவை. ஆனால் அதன் முகப்புப் பக்கம் அதாவது கால் விரல்கள் வைக்குமிடத்தின் வெளிப்புறத் தோற்றம் தோலினால் புலிமுகத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்தச் சப்பாத்துகளுக்கு அவ்வளவு கிராக்கி. இதற்குப் பின்னால் விறுவிறுப்பான கதை ஒன்று இருக்கிறது.

முன்னொரு காலத்தில் சீனாவில் பிரபலமாக அறியப்பட்ட சீமைகளில்  ஒன்று யாங்ஷு. பழமையான இந்த நகரத்தில் பிங்யாங் என்ற படகோட்டி வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் பெருந்தன்மையும் பிறருக்கு உதவும் உள்ளமும் கொண்டவன். ஒரு தடவை தன் படகில் பயணம் செய்த பெண் பயணி ஒருத்தி அவனுக்கு அன்பளிப்பாக ஓவியம் ஒன்றைக் கொடுத்துச் சென்றாள். அந்த ஓவியம் மிகவும் அழகாக வரையப்பட்டிருந்தது.

அச்சித்திரத்தில் பேரழகியான ஒரு பெண், ஒரு புலிமுகச் சப்பாத்துக்கு அதன் முகத்தை உருவாக்குவது போல வரையப்பட்டிருந்தது. படகோட்டி இந்த ஓவியத்தை தன் படுக்கையறையில் தன் தலைக்கு நேராக மாட்டி வைத்துக் கொண்டான். காலையில் கண் விழிக்கும்போது, அன்பு மனைவியைப் பார்ப்பது போல அந்த ஓவியத்திலுள்ள பெண்ணை காதல் ததும்பப் பார்ப்பான். அவன் நெஞ்சில் ஆசை அலைகள் எழும்பும். வேலை முடித்து வீடு திரும்பியதும் அச்சித்திரத்தைப் பார்ப்பான். உறங்கும்போதும் அந்தச் சித்திரத்தைப் பார்த்துக் கொண்டே உறங்குவான்.

ஒரு நாள் இரவு கவிந்த வேளையில் பிங்யாங் வீட்டிலே ஓய்வாக தன் படுக்கையிலே படுத்த வண்ணம் அந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது ஓவியப் பெண் உயிர் பெற்று வந்தாள். பிங்யாங் வியப்பிலும் உவகையிலும் ஆழ்ந்தான். அந்தப் பெண் அவனருகே வந்தாள். பனி கொட்டும் பூவைப் போல இருந்தாள். தண்ணீரில் மீன்கள் புரள்வது போல அவள் கண்கள் புரண்டன. நீண்ட கூந்தல் ஒரு பேரலையைப் போல எழுந்து அவனைப் புரட்டிப்போட்டது. அவன் காமச் சாகரத்தில் அடித்துச் செல்லப் பட்டான்.

ஒவ்வொரு நாள் இரவும் அவள் ஓவியத்திலிருந்து எழுந்து வருவாள். இரவு முழுவதும் அவனோடு இருந்து அவனை ஆட்கொண்டாள். புதிதாக அரிந்தெடுத்த அத்திப் பழ இதழ்களால் அவள் முத்தங்கள் பதிப்பாள். அவள் அவனின் ஒவ்வொரு அசைவிலும் ஆலிங்கத்திலும் ஒரு குழந்தையைப் போல மகிழ்வான். தன்னை மறந்து உறங்கி போவான்! காலை விடிவதற்கு முன்பு அவளும் இவனிடமிருந்து பிரிந்து மீண்டும் ஓவியத்தில் போய் அமர்ந்து விடுவாள்.

இருவரின் இன்ப உறவில் ஒவியப் பெண் கர்ப்பம் தரித்தாள். ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றுக்கொடுத்து, பிங்யாங்கை வளர்க்கச் செய்தாள். இரவு வந்தால் ஓவியப் பெண் வந்து தன் குழந்தையைக் கொஞ்சுவாள், சீராட்டுவாள். குழந்தை தன் தாயோடு ஒட்டிக்கொண்டு மகிழ்ச்சியுறும்; தன் தாயின் முகம் பார்த்து குதூகலிக்கும். இவ்வாறு காலங்கள் ஓடின. குழந்தையாய் இருந்தவன் இப்பொழுது இளஞ்சிறுவனாகிவிட்டான்.

அவர்களுடைய இன்ப வாழ்க்கையில் ஒருவன் குறுக்கிட்டான். அவன் அந்த நகரத்தில் அதிகாரம் கொண்ட அதிகாரி. பிங்யாங் ஓவியம் பற்றி கேள்விப்பட்டு அதை அவன் கைப்பற்றிக்கொண்டான். பாவம், பிங்யாங் மிகவும் துயரப்பட்டான். தன் ஆசை மனைவியை இழந்து தத்தளித்தான். அவனுடைய அருமை மகனும் தாயைப் பிரிந்து துடியாய் துடித்தான். தனது தாயைக் கண்டுபிடித்துத் தீரவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தான். அம்மா வெளியூர் சென்றிருக்கிறாள் என்று சொல்லிப் பார்த்தான். ஆனால் மகன் விடுவதாகயில்லை. சரி, எதையாவது சொல்லி வைப்போமென்று அவள் மேற்கு எல்லைக்கு போனதாக சொன்னான் பிங்யாங்.

மகன் உடனே தன்  தாயைப் பார்ப்பதற்கு மேற்கு எல்லைக்கு புறப்பட்டுச் சென்றான். மிக நீண்ட பயணம். பல பகல்கள், இரவுகள் கழிந்தபிறகு, எத்தனையோ ஊர்களை, நதிகளை, வயல்வெளிகளை, காடுகளைக் கடந்தபிறகு மேற்கு எல்லையில் ஒரு காட்டுப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அங்கே தன் தாயை அவன் கண்டுகொண்டான். ஆம், அவள் அங்குள்ள தாமரைக் குளத்தில் அவளைப் போன்ற தேவதைப் பெண்களுடன் நீராடிக் கொண்டிருந்தாள்.

தன் தாயிடம் ஓடோடிச் சென்றான். தன் தாயை அப்படியே தழுவிக் கொண்டாள். தாயும், “என் அருமை மகனே என்னைத் தேடி எவ்வளவு பெரிய பயணத்தை மேற்கொண்டு இங்கே வந்திருக்கிறாய்?” என்றாள். இதைச் சொல்லும்போது அவளையறியாது அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அது மகனின் கன்னங்களில் உருண்டது.

“மகனே. . . . நீ ஊருக்குப் புறப்பட்டுப் போ. உன்னைப் பிரிந்திருப்பது எனக்கு எவ்வளவு துன்பமானது என்பதை நீயறிவாய். நாம் மறுபடியும் சேரவேண்டுமானால் நான் சொல்கிறபடி நடந்துக்கொள்” என்றார். மகனும் “அம்மா. . . என்ன செய்ய வேண்டும்… சொல்லுங்கள்” என்றான்.

“நீ நேராக அந்த அதிகாரியின் படுக்கையறைக்குச் செல். அங்கு தான் அந்த ஓவியம் உள்ளது. அந்த ஓவியத்தில் நான் உனக்காக செய்து வைத்த ஒரு ஜோடி சப்பாத்துகள் இருக்கும். அவற்றை நீ எடுத்து அணிந்துக்கொள். அதுவரை நீ என்னை பார்க்கமுடியாது. இப்பொழுது நீ உன் கண்களை மூடிக்கொள். வீட்டுக்கு உன்னை அனுப்பிவைக்கிறேன்” என்றாள்.

மகன் கண்களை மூடி நின்றான். மீண்டும் கண்களைத் திறந்தபோது வீட்டில் இருந்தாள்.

அதன் பிறகு, அவன் அந்த அதிகாரிக்குச் செய்தி அனுப்பினான். அவனால் அந்த ஓவியத்திலுள்ள அழகுப் பெண்ணை உயிர் உருவமாக எழுப்பச் செய்ய முடியும் என்று கூறினான். இதைக் கேட்ட அந்த அதிகாரி ஆர்வத்தோடு அவனை அழைத்து வரச் சொன்னான். அந்த அதிகாரியின் வீட்டுக்கு மகன் நுழைந்து நேராக அவனுடைய படுக்கையறைக்குச் சென்றான். அங்கே அந்த ஓவியம் இருந்தது. அந்த ஓவியத்தில் காட்சியளித்த தன் தாயைப் பார்த்தான். பின்னர் தன் தாய் செய்து வைத்திருந்த சப்பாத்துக்களை கை நீட்டி எடுத்துக் கொண்டான். தாமதமின்றி அணிந்துக்கொண்டான். தன் தாயின் உயிர்ச்சித்திரத்தையும் பார்த்து, “அம்மா, வாங்க, போய் விடலாம்” என்றான். அவனது தாய் அந்த ஓவியத்திலிருந்து எழுந்து வந்தாள்.

அதிகாரி அவளைப் பார்த்ததும் அப்படியே மலைத்துப் போனான். உடனே அவர்களைத் தடுத்து நிறுத்தினான். மங்கையும் மகனும் அவனிடமிருந்து விலகிச்செல்ல முயன்றனர். அவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. வலுக்கட்டாயமாக அவளைப் பற்றி இழுத்திடப் பாய்ந்தான். ஆனால், அவளது மகனோ, அவனைக் குப்புறத் தள்ளிவிட்டான். சின்னஞ் சிறியவன் தன்னை என்ன செய்யமுடியுமென்று திமிரோடு அந்த அதிகாரி எழுந்தான். மகனைத் தாக்கினான். மகன் அணிந்திருந்த மாய சப்பாத்துகள், ஆம் அந்தப் புலிமுக சப்பாத்துகள் அவனுக்கு இந்தச் சண்டையில் மிகவும் ஆச்சர்யப்படத்தக்க வகையில் உதவின. சப்பாத்துகள் சட்டென்று பெரிய உருவமெடுத்தது. சிறுவனுடைய கால்களுக்குக்கீழே ஒரு பெரிய புலி கர்ஜனை செய்தபடி அந்த அதிகாரி மேல் பாய்ந்தது. அவ்வளவுதான், அந்த அதிகாரி வீழ்ந்தான்.

நகரம் முழுவதும் அந்த அதிகாரி உதவிக் கேட்டு கெஞ்சிய ஈனக்குரலும், புலியின் பயங்கரமான உறுமல் ஓசையும் கேட்டது. மக்கள் திகைத்தனர். திகிலோடு ஓடிவந்தனர். உண்மையைத் தெரிந்துக் கொண்டார்கள். பெண்ணைக் காப்பாற்றிய அந்தப் புலியை அவர்கள் புகழ்ந்தார்கள்.

இருவரும் வீடு திரும்பினார்கள்.  பிங்லாங் தனக்கு மிகவும் வினோத ஆற்றல் வாய்ந்த மனைவியும், பராக்கிரம மகனும் கிடைத்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியில் திளைத்தாள்.

அதுமுதல் அந்த நகரத்து மக்கள் புலி முகம்கொண்ட சப்பாத்துகளை அணியலானார்கள். அப்படி அணிவதால் தங்களின் குடும்பத்துக்கு,  குடும்பப் பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்படும் என்று நம்பிக்கைக் கொண்டார்கள்.

பூஞ்ச் கலவரமும் முதல் போரும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 8

Bangashமுதல் காஷ்மீர் முற்றுகையும் போரும் சிலரால் திடீரென நடத்தப்பட்டவை அல்ல. பாகிஸ்தான் ராணுவத்தினர், பாகிஸ்தானை ஆளும் முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம் கான்ஃபிரன்ஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், பதானிய பழங்குடிப் படையினர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அவை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன.

பாகிஸ்தான் ராணுவமும், முஸ்லிம் லீகும் திட்டம் வகுத்து முக்கியப் பங்காற்றின என்பதற்கு ஆதாரமாக பாகிஸ்தான் ராணுவத்தை வழிநடத்திய மேஜர் அமின் போன்றவர்களின் கூற்றுகள் உள்ளன. காஷ்மீருக்குள் நுழைந்த பழங்குடிப் படையினர் பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர்கள். பஷ்டூன் இனம் ஆப்கனிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் வாழும் ஈரானிய மக்கள் இனம். இந்த இனத்தவர்கள் கிழக்கு ஈரானிய பஷ்டூன் மொழி பேசுபவர்கள்.

1932 இல் ஷேக் அப்துல்லா காஷ்மீரின் முதல் அரசியல் கட்சியான அனைத்து ஜம்மு- காஷ்மீர் முஸ்லிம் கான்ஃபிரன்ஸைத் தொடங்கினார். ஜம்முவையும், காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைப்பதுதான் அதன் நோக்கம். 1939 ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லா கட்சியின் பெயரை அனைத்து ஜம்மு- காஷ்மீர் கான்ஃபிரன்ஸ் என்று மாற்றி, மதச்சார்பற்ற ஒரு புது வடிவத்தை அதற்குக் கொடுத்தார். அப்போது கட்சியின் கொள்கையும் மாற்றி அமைக்கப்பட்டு, காஷ்மீர் தனியாக சுதந்திர காஷ்மீராக இயங்கவேண்டும் என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. 1941 ஜூன் 13 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து பிரிந்து சிலர் மீண்டும் பழைய முஸ்லிம் கான்ஃபிரன்ஸுக்குப் புத்துயிர் கொடுத்தார்கள். அதற்குத் தலைமை ஏற்றவர் சௌத்ரி குலாம் அப்பாஸ். இந்த முஸ்லிம் கான்ஃபிரன்ஸ் ஆட்கள்தாம் முதல் காஷ்மீர் போருக்காக பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து திட்டமிட்டவர்கள்.

போரை ஒருங்கிணைக்க மிகச் சரியான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தான் மேஜர் ஜென்ரல் அக்பர் கான். 1947 இந்திய பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் படையின் பிரிகேடியராக இருந்த அவர் பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர். அவர் பெஷாவர் இஸ்லாமிய கல்லூரியில் பயின்ற பின் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பல நிலைகளில் பணியாற்றி இருக்கிறார். பல போர்களில் ஆற்றிய சிறந்த பணிகளுக்காக விருதுகள் பெற்றிருக்கிறார். நிலத்தைப் பிரித்துக்கொடுத்த பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் முப்படைகளையும் பிரித்துக் கொடுத்தது. அந்தப் பிரிவினையின்போது ஏற்படுத்தப்பட்ட துணைக் குழுவின் உறுப்பினராக அக்பர் கான் இருந்தார். காஷ்மீருக்குள் பழங்குடிப் படையினர் நுழைந்தபோது சாதாரண உடையில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் வந்தார்கள். அதன் பின் நேரடியாக பாகிஸ்தான் ராணுவம் வந்தது. அவர்களை எல்லாம் வழி நடத்தியவர் அகபர்கான்தான். போரின்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட சங்கேதப் பெயர் ‘ஜென்ரல் டாரிக்’.

1947 இந்திய பாகிஸ்தான் போருக்கான காரணம் பதான் பழங்குடிப் படையின் காஷ்மீர் முற்றுகை என்றால் அதற்கான விதை 1947 செப்டெம்பர் மாதமே விதைக்கப்பட்டுவிட்டது. அது விதைக்கப்பட்ட இடங்கள் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ளன. அவை பூஞ்ச் பிரிவில் உள்ள பாக்கும், ரவலாகோட்டும். காஷ்மீர் சமஸ்தானத்தோடு இருந்த பூஞ்ச் மாவட்டத்தின் ஒரு பகுதி முதல் போருக்குப் பிறகு பாகிஸ்தான் வசமும் மற்றொரு பகுதி இந்தியா வசமும் வந்தன.

பூஞ்ச் என்பது காஷ்மீர் பள்ளத்தாக்கோடு இணைந்த இடம் அல்ல. கிட்டத்தட்ட இரண்டே கால் லட்சம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுள்ள காஷ்மீர் சமஸ்தானத்தோடு ஒப்பிடும்போது, சுமார் நாலாயிரத்து எழுநூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பூஞ்ச் ஒரு சிறிய இடம்தான். இருந்தபோதும் பூஞ்ச் நீண்ட சரித்திரம் கொண்டது. 1850 ஆம் ஆண்டு கால்சா தர்பாரின் பிரதம மந்திரியும், ராஜா தயான் சிங்கின் மகனுமான ராஜா மோத்தி சிங் பூஞ்சுக்கு தனி அந்தஸ்து வழங்கினார். 1901 ஆம் ஆண்டு ராஜா பல்தேவ் சிங் ஆட்சிக் காலத்தில் பூஞ்சுக்கு சமஸ்தான அந்தஸ்து வழங்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டு ஜம்முவின் டோக்ரா அரசர் ஹரி சிங் பூஞ்சை காஷ்மீருடன் இணைத்துக் கொண்டார். அதன் பிறகு பூஞ்ச் பகுதிக்கு ‘ஜகிர்’ அந்தஸ்து வழங்கப்பட்டது. பாரசீக மொழியில் ‘ஜ’ என்பது இடத்தைக் குறிக்கும். ‘கிர்’ என்பது வைத்திருப்பதைக் குறிக்கும். அதாவது பூஞ்ச்-ன் ஏழாவது பட்டத்து அரசர் ஜக் தேவ் சிங் வசதிகளை அனுபவித்துக்கொண்டு, காஷ்மீர் அரசர் ஹரிசிங்கின் ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும்.

தேசப் பிரிவினைக்கு முன்பும் பின்பும் நடந்த வன்முறைகள் காஷ்மீரையும் விட்டு வைக்கவில்லை. 1947 பஞ்சாப் இனப்படுகொலைகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கிய அகதிகளும், இந்தியாவிலிருந்து வந்த முஸ்லிம் அகதிகளும் காஷ்மீரில் குவிந்தார்கள். பூஞ்ச் பகுதியை இணைத்துக்கொண்ட காஷ்மீர் அரசர் பூஞ்ச் மக்களைக் கடுமையான வரி விதிப்பால் கொடுமைப்படுத்துகிறார் என்ற புகார் எழுந்தது. காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்ற கோஷம் பூஞ்ச் பகுதி முஸ்லிம்களால் எழுப்பப்பட்டது. அரசரை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்தார்கள்.

காஷ்மீர் அரசர் தன் டோக்ரா படைகளை அனுப்பி கடுமையான தாக்குதல் நடத்தினார். முஸ்லிம் கிராமங்கள் கொளுத்தப்பட்டன. பல்லாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். பூஞ்ச் பகுதி முஸ்லிம் மக்கள் தங்கள் குடும்பத்தினரோடு ஊரைக் காலி செய்து பாகிஸ்தான் சென்றார்கள். அவர்கள் திரும்பி வரும்போது ஆயுதங்களோடு வந்தார்கள். வந்தவர்கள் இந்துக்களையும் சீக்கியர்களையும் கண்மூடித்தனமாகக் கொல்ல ஆரம்பித்தார்கள். செப்டெம்பர் இரண்டாம் வாரத்தில் சுமார் 60,000 அகதிகள் ஜம்மு போனார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டிருந்த இனக்கலவரம் சிலரின் ஒருங்கிணைப்போடு மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதைத்தான் பாகிஸ்தான் எதிர்பார்த்தது. துப்பாக்கிகளை பாகிஸ்தான் பொது மக்களுக்கு விநியோகம் செய்த பிறகு புரட்சி சூடு பிடிக்க ஆரம்பித்தது என்று கூறுகிறார் பாகிஸ்தானின் முன்னாள் மேஜர் அக்பர்கான்.
பாகிஸ்தானை ஆதரிக்கும் சிலரால் எடுத்து வைக்கப்படும் முக்கியமான வாதம் இதுதான்.

“1947 அக்டோபரில் நடந்த பழங்குடிப் படையினரின் காஷ்மீர் முற்றுகைக்குக் காரணம் பூஞ்ச் கலவரமும் அதைத் தொடர்ந்து நடந்த படுகொலைகளும்தாம். எனவே 1947-48 இந்திய பாகிஸ்தான் போருக்கு பழங்குடிப் படையை ஏவிவிட்டு, அதனைப் பின்தொடர்ந்து வந்த பாகிஸ்தான் ராணுவம் காரணமல்ல. பூஞ்ச் கலவரம் தான் அதற்குக் காரணம்”.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நூலாசிரியர் கிரிஸ்டோபர் ஸ்னீடன்  ‘காஷ்மீர் : தி அன் ரிட்டன் ஹிஸ்ட்டரி’ என்னும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தியா கூறுவது போல காஷ்மீர் பிரச்னை பதான் பழங்குடியினரின் படையெடுப்பால் தொடங்கவில்லை. அதன் மூலம் பூஞ்ச் கலவரம்தான். புது தில்லியில் தனது நூலை வெளியிட்ட பின் பாபா உமருக்கு அவர் அளித்த பேட்டி பலரின் கவனத்தை ஈர்த்தது . காஷ்மீர் அரசர் முறைப்படி காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு இந்திய பாகிஸ்தான் முதல் போர் நடக்கிறது. போரின் போது பாகிஸ்தான் காஷ்மீரின் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டது. அதில் மேற்குக் பக்கமுள்ளஆசாத் காஷ்மீர் அதிக பிரச்னைகள் நிறைந்த பகுதி. அது உருவாவதற்கு முக்கிய காரணம் 1947 ஆகஸ்ட் 18 ஆம் தேதி காஷ்மீர் அரசருக்கு எதிராக பூஞ்ச் இல் வெடித்த மக்கள் புரட்சி என்கிறார் ஸ்னீடன்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இடம் பூஞ்ச். அங்கு இருந்தவர்களில் 50,000 பேர் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். அவர்களுக்கு பொருளாதார முன்னேற்றமும், நில உரிமையும் மறுக்கப்பட்டதால் அரசருக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். காஷ்மீர் அரசர் தன் டோக்ரா படைகளை வைத்து அவர்களுடைய ஆயுதங்களைப் பிடுங்கினார். அதனால் அவர்கள் பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாணத்துக்கும், தேரா இஸ்மாயில் கான் நகருக்கும் சென்றார்கள். கிளர்ச்சியாளர்கள் ஆயுத உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்று வந்தார்கள். உள்ளூர் மக்களின் ஆதரவோடு மகாராஜாவின் டோக்ரா படைகளை எதிர்த்துப் போராடி தங்கள் மண்ணுக்கு விடுதலை பெற்றார்கள் என்று சொல்கிறார் ஸ்னீடன்.

1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாகிஸ்தானும், 15 ஆம் தேதி இந்தியாவும் விடுதலை அடைந்து விட்டன.காஷ்மீர் தனியாக இருக்கிறது.பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பூஞ்ச் பகுதியில் கலவரம் வெடிக்கிறது.சிலர் பாகிஸ்தானுக்கு வந்து ஆயுத உற்பத்தியாளர்களிடமிருந்து ஆயுதங்களை வாங்கிச் சென்று காஷ்மீரில் மறுபடியும் போராடுகிறார்கள். அப்போது பாகிஸ்தான் அரசும் ராணுவமும் என்ன செய்து கொண்டிருந்தன என்பதைப் பற்றி அவர் தெளிவாக எதுவும் கூறவில்லை.பாகிஸ்தானுக்கு பூஞ்ச் புரட்சியில் நேரடித் தொடர்பு இருந்ததா இல்லையா என்ற கேள்விக்கு அவர் கூறும் பதில் விநோதமாக உள்ளது.

“பாகிஸ்தானின் அதிகாரபூர்வமற்ற ஆதரவும், சில உள்ளூர் குடும்பங்களின் ஆதரவும் இருந்தது என்பதை நான் உறுதியாகக் கூறமுடியும். பூஞ்ச் மக்கள் தங்களை காஷ்மீர் பள்ளத்தாக்கோடு இணைத்துப் பார்ப்பதைவிட பஞ்சாபோடு இணைத்துப் பார்ப்பதையே விரும்புகிறார்கள். ஜீலம் நதியின் மறு கரையில் இருந்த குடும்பங்கள் புரட்சியாளர்களுக்கு உணவும், தங்கும் இடமும் தந்து உதவின. பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவு ஓரளவு இருந்தது. ஆனால் அது மிகக்குறைந்த அளவில்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அதற்கு தீர்க்கப்படவேண்டிய பல பிரச்னைகள் இருந்தன. கராச்சியில் தலைநகரை அமைக்கும் வேலையில் அது ஈடுபட்டிருந்தது. பெரும்பாலும் உள்ளூர் பூஞ்ச் மக்கள் தாம் கலவரத்துக்குக் காரணமானவர்கள். அவர்கள் மகாராஜாவின் ஆட்சியின் மீது அதிருப்தி அடைந்திருந்தார்கள். அவர்கள் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று விரும்பினார்கள்.”

பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவு ஓரளவுதான் இருந்தது என்று அவர் கூறுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி பூஞ்ச் இல் கலவரம் நடக்கிறது. செப்டெம்பர் முதல் வாரத்தில் பாகிஸ்தான் காஷ்மீரைக் கைப்பற்ற திட்டம் ஒன்றை தயார் செய்து விட்டது. பாகிஸ்தான் எவ்வாறு திட்டமிட்டது என்பதை மேஜர் ஜென்ரல் முகமத் அக்பர்கான்  டிஃபன்ஸ் ஜர்னல் கராச்சி 1985 ஜூன்-ஜூலை இதழில் வெளியான பேட்டியில் விவரிக்கிறார்.

“இந்தியா பாகிஸ்தான் பிரிவினை முடிந்து சில வாரங்கள் கடந்த பின் பாகிஸ்தான் பிரதம மந்திரி லியாகத் அலி கான் சார்பாக முஸ்லிம் லீக் தலைவர் மியான் இப்திகாருதின் என்னை அணுகினார். காஷ்மீரைக் கைப்பற்ற ஒரு திட்டத்தைத் தயாரிக்கும்படி கூறினார். பாகிஸ்தான் ராணுவம் 4000 துப்பாக்கிகளை உள்ளூர் போலீஸுக்குக் கொடுப்பதற்காக வைத்திருப்பதை நான் அறிந்தேன். அதை உள்ளூர் மக்களிடம் கொடுத்தால் காஷ்மீரில் பல இடங்களில் ஆயுதங்களுடன் கலவரத்தை உண்டாக்க முடியும். அதன் அடிப்படையில் நான் ஒரு திட்டத்தைத் தயாரித்து மியான் இப்திகாருதினிடம் கொடுத்து அனுப்பினேன். அதன் பிறகு லாகூரில் லியாகத் அலிகானுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. அதில் என்னுடைய திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு பொறுப்புகள் பலருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. விஷயம் ராணுவத்துக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. 1947 செப்டெம்பர் மாதம் 4000 துப்பாக்கிகளும் காஷ்மீரின் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டன. காஷ்மீர் மகாராஜாவின் படையோடு துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. புரட்சி சூடு பிடித்தது.”

பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் காஷ்மீரில் கலகம் தொடங்க வழி செய்யப்பட்டு போருக்கான காரணம் உருவாக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு ஓரளவு தெரியும் என்று கூறுவது கேலிக்குரியது. தேச விடுதலைக்கு முன்பாக முஸ்லிம் லீக் தொடங்கி வைத்த இனக்கலவரம் இன்னும் முடியவில்லை. பஞ்சாபில் நடந்த இனக்கலவரத்துக்குப் பிறகு காஷ்மீருக்குள் இந்து, சீக்கிய, முஸ்லிம் அகதிகள் நுழைந்த நேரம் அது. அதனால் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தங்கள் வழக்கமான பாணியில் காஷ்மீரில் கலவரத்தை ஏற்படுத்தி, அதை இணைத்துக் கொள்வதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காஷ்மீரின் ஒரு சிறிய பகுதியில் மக்கள் அவர்களாக கிளர்ந்தெழுந்தார்கள். அதன் காரணமாக காஷ்மீரை இந்தியாவிடமிருந்து காப்பாற்ற பாகிஸ்தான் போர் செய்தது என்று உலகம் நம்பவேண்டும் என்பது பாகிஸ்தானின் எதிர்பார்ப்பு. பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு மிக கவனமாக காஷ்மீரில் காய் நகர்த்த ஆரம்பித்தது. காஷ்மீரைக் கைப்பற்றுவது பாகிஸ்தானின் முக்கியமான நோக்கம். அதற்காகவே பூஞ்ச் கலவரம் பெரிதாக வளர வழி செய்யப்பட்டது. அதன் பின் பதான் படையெடுப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது.

இந்திய பாகிஸ்தான் விடுதலைக்கு மூன்று நாள்கள் முன்பாக 1947 ஆகஸ்ட் 12ஆம் தேதி காஷ்மீர் அரசர் ஹரி சிங் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும், அடிப்படை பொருள்கள் வரவு, போக்குவரத்து, தபால் ஆகியவை தொடர வேண்டுகோள் விடுத்து, ‘நிலை தொடரும் ஒப்பந்தம்’ தொடர்பாக தந்தி அனுப்பினார். உடனே சம்மதம் தெரிவித்து பாகிஸ்தான் பதில் தந்தி அனுப்பியது உண்மை. ஆனால் தான் கூறியபடி பாகிஸ்தான் நடந்து கொள்ளவில்லை. அப்போது இருந்த காஷ்மீர் பிரதம மந்திரியின் உதவியோடு காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க சிலரை அனுப்பி முயற்சி எடுத்தது. காஷ்மீர் அரசர் அதற்கு சம்மதிக்க மறுக்கவே அது  தோல்வியில் முடிந்தது. அதனால் பாகிஸ்தான் செப்டெம்பர் மாதம் முதல் காஷ்மீரின் மீது மறைமுக பொருளாதாரத் தடை விதித்தது. அடிப்படை பொருள்கள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டது. தபால், தந்தி சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனை ரோகித் சிங் ‘ஆபரேஷன்ஸ் இன் ஜம்மு அன்ட் காஷ்மீர் 1947-48’ என்ற தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை பொருள்கள் போக்குவரத்து, தகவல் தொடர்புகள் ஆகியவை துண்டிக்கப்பட்டது பற்றி காஷ்மீர் அரசாங்கம் பாகிஸ்தானுக்கும், பிரிடிட்டிஷ் அரசுக்கும் முறையே 1947 அக்டோபர் 15, 18 ,22 ஆகிய தேதிகளில் தந்தி அனுப்பியது. ஆனால் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. அக்டோபர் மாதத்தின் நடுவில் பூஞ்ச் அருகில் பிம்பர், மங்கலா, பீர்பூர், போர்ட் ஓவென் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் நிறைய பேர் தென்பட்டார்கள். அவர்களை காஷ்மீர் அரசாங்கப்படை வெளியேற்றியது. பொருளாதாரத் தடை, ஆக்கிரமிப்பாளர்கள் குவிப்பு ஆகியவற்றால் காஷ்மீர் படையெடுப்புக்கு ஏற்ற சூழலை பாகிஸ்தான் உருவாக்கியது. சுதந்தர பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் வட மேற்கு எல்லை மாகாணத்தில் பதானியர்களின் விடுதலைப் போராட்டத்தை திசை திருப்பி அடக்க வேண்டும். இல்லை என்றால் மத அடிப்படையில் பாகிஸ்தானைப் பிரித்துப் பெற்றதன் நோக்கத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். அதனால் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் பதானிய பழங்குடிப் படையை காஷ்மீரை நோக்கி ஏவி விட்டார்கள்.

பழங்குடியினர் படையெடுப்புக்கான காரணம் ஒரு புதிராக இருக்க அதை அவிழ்த்து உலகுக்கு உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட 1947 இல் துணிச்சல் மிக்க ஒரு பெண்மணி முயன்றார். அதில் வெற்றியும் பெற்றார். அவர்தான் மார்கரெட் பர்க் ஒயிட். அவர் அப்போது அமெரிக்காவின் லைஃப் பத்திரிகை செய்தி சேகரிப்பாளராகவும், புகைப்பட கலைஞராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மேலும் பர்க் ஒயிட் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்களை வைத்து பல நூல்களை எழுதியவர். செய்தி சேகரிப்பாளர் என்ற முறையில் 1947–48 போரின் போது,  பழங்குடிப் படையினரின் காஷ்மீர் முற்றுகை முதல், எல்லா தகவல்களையும் பத்திரிகைக்கு சேகரித்து அளித்தார்.

1949 இல் நியூயார்க்கில் வெளியானது அவருடைய ‘ஹாஃப் வே டு ஃப்ரீடம்’ என்ற நூல். அதில் காஷ்மீர் போரின் காரணங்களைத் தோண்டி எடுத்து வெளிப்படுத்தினார். தன் உயிரைப் பணயம் வைத்து நேரடியாக பல இடங்களுக்குச் சென்று உண்மைகளைக் கண்டறிந்தார். பதான் பழங்குடி படையெடுப்பு தொடங்கியபோது பர்க் ஒயிட் பாகிஸ்தானில் தான் இருந்தார். பாகிஸ்தான் அரசாங்கம் அவர் காஷ்மீருக்குள் நுழைவதை விரும்பவில்லை. நடு நிலை பத்திரிகை ஒன்றின் செய்தி சேகரிப்பாளர் உலகுக்கு உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுவார் என்று அது அஞ்சியது. ஆனால் பர்க் ஒயிட் பழங்குடிப் படையெடுப்பு தொடங்கிய இடத்தைப் பார்க்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். வழி நடத்த வந்த பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக, அழகிய இயற்கை காட்சிகள் தெரியும் ஆள் அரவமற்ற காஷ்மீர் எல்லையில் உள்ள சாலைகளுக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு சென்று புகைப்படம் எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை பர்க் ஒயிட் அறிவார். அதனால் சில நேரங்களில் அவர் அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து நழுவிச் சென்று பதான் பழங்குடிப் படையினரை சந்தித்து உரையாடினார்.

பழங்குடிப்படையில் பல இனப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். முகமது பிரிவின் தலைவர் பாட்ஷா குல்லுடன் பர்க் ஒயிட் உரையாடினார். அப்போது அவர் பல தகவல்களைத் தெரிவித்தார். தான் மட்டும் ஓராயிரம் பேரைத் திரட்டியதாகச் சொன்னார்.  மேலும் டிரக்குகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றை காஷ்மீர் முற்றுகைக்காகக் கொடுத்ததாகவும் கூறினார். காஷ்மீருக்குள் செல்லும் வண்டிகளும் பஸ்களும் ஒன்று அல்லது இரண்டு நாள்களில் கொள்ளையடித்த பொருள்களுடன் திரும்பிவரும். அவற்றில் பழங்குடி ஆள்கள் ஏறிக்கொள்ள மீண்டும் காஷ்மீருக்குப் போகும் என்றார். அவர்கள் காஷ்மீர் சென்று அதன் விடுதலைக்குப் பணியாற்றுவார்கள். அதாவது இந்து, சீக்கிய, முஸ்லிம் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று எல்லோரையும் மிரட்டி அச்சுறுத்தி சூறையாடலைத் தொடர்வார்கள். ராவல்பிண்டியில் உள்ள டாக்சி கம்பெனிகள் இரண்டு முதல் இருபது வண்டிகள் வரை காஷ்மீர் முற்றுகைக்கு வழங்கியுள்ளன.

பழங்குடிப் படை கொண்டு வந்த ஆயுதங்கள் எல்லாம் அவர்களுடையவை. அவர்களுக்கு பாகிஸ்தான் எதையும் கொடுக்கவில்லை என்று பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் கூறி வந்தார்கள். பழங்குடிப் படையினருக்கு ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தன என்ற புதிரை தாமே உடைத்து, உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று முடிவு செய்ததாக பர்க் ஒயிட் எழுதுகிறார்.அதற்காக தான் பல இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறுகிறார். அப்போது அவர் அப்ரீதி பழங்குடிப் பிரிவின் ஆயுதம் தயாரிக்கும் சில கூடங்களைப் படம் பிடித்திருக்கிறார். சிறிய கொட்டகையின் கீழ் ஐந்து பேர் வேலை செய்யும் அளவுக்கு உள்ள ஆயுதத் தயாரிப்பு கூடங்கள் அவை. பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாணத்தில் உள்ள அத்தகைய சிறிய தொழில் கூடங்கள் எல்லாம் சேர்ந்து ஆயுதங்கள் தயாரித்தாலும் பழங்குடிப் படையினர் ஏந்தி வந்த ஆயுதங்களோடு ஒப்பிடும் போது அவை மிகக்குறைவாகத் தான் இருக்கும்.  ஒருவன் அத்தகைய கூடங்களில் ஒரு ரைபிளைத் தயாரிக்க ஒரு மாதம் ஆகும். எனவே பழங்குடிப் படையினர் வைத்திருந்த மோர்டார்களும் (சிறிய பீரங்கி போன்ற ஆயுதம்) கனமான நவீன ஆயுதங்களும், இரண்டு விமானங்களும், சிறிய கொட்டகைகளில் இருந்து வந்தன என்று யாராலும் கூற முடியாது.

விடிவதற்கு முன்பாக பழங்குடிப் படைக்கு, எல்லையை ஒட்டி உள்ள நகரங்களில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. முஸ்லிம் லீகின் தலைமையிடங்கள்தாம் அந்த ஆயுதம் வழங்கும் மையங்கள் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார் பர்க் ஒயிட். ஒவ்வொரு புதன் கிழமையும் பாகிஸ்தானின் தலை நகரில் இருந்து புறப்படும் ரயிலில் செயல் வீரர்கள் காஷ்மீருக்குச் செல்வார்கள். இந்திய ராணுவத்தினரிடம் பிடிபட்ட ஆசாத் காஷ்மீர் வீரர்கள் பையில் பாகிஸ்தான் ராணுவத்தின் சில ஆவணங்கள் இருந்தன என்று குறிப்பிட்டு, பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர்பை அவர் அம்பலப்படுத்துகிறார்.

முதல் போர் : பாகிஸ்தானின் மும்முனை தாக்குதல் திட்டம்

பூஞ்ச் கலவரம் வளர்வதற்கும், பழங்குடியினரின் படையெடுப்புக்கும் முழுக்க முழுக்க பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்தாம் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. அவற்றின் மூலமாக பாகிஸ்தான் காஷ்மீரை தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது.

பூஞ்ச் கலவரம் நடை பெற மூளையாக செயல்பட்டவர்கள் இவர்கள்தாம்.

  1. பாகிஸ்தானின் பிரதம மந்திரி லியாகத் அலி கான்
  2. பஞ்சாபின் முக்கிய அரசியல் பிரமுகர் சர்தார் சௌகத் ஹயத் கான்
  3. பாகிஸ்தான் ராணுவத்தின் பிரிகேடியர் அக்பர் கான்
  4. சர்தார் அப்துல்கயம் கான்
  5. சர்தார் முகமத் இப்ராகிம் கான்.

இவர்கள் எல்லோரும் பாகிஸ்தானின் காஷ்மீரைக் கைப்பற்றும் திட்டத்தை நிறைவேற்ற முக்கிய பங்காற்றியவர்கள். எல்லாவற்றுக்கும் பாகிஸ்தானே காரணம் என்பதை அவர்களின் ஆதாரபூர்வமான ஒப்புதல் வாக்குமூலங்கள் உறுதி செய்கின்றன. பிரதம மந்திரி, ஒரு முதலமைச்சர், ராணுவத்தின் ஒரு முக்கிய பிரிவின் நிர்வாக இயக்குனர் இவர்கள் எல்லோரும் சேர்ந்து திட்டம் வகுத்து இன்னும் பலரோடு சரியான ஒருங்கிணைப்போடு செயல்பட்டிருக்கிறார்கள். காஷ்மீரில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் முற்றுகையை நடத்தி ஒரு பெரும் போர் தொடங்க காரணமாகி இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்திய ராணுவம் காஷ்மீரில் வந்து இறங்கும் வரை பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு அங்கு நடந்தவற்றோடு நேரடித் தொடர்பு கிடையாது. பாவம் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்; அவர்கள் புதிதாக சுதந்தரம் அடைந்த பாகிஸ்தானில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகளில் மூழ்கி இருந்தார்கள். ரகசியமாக காஷ்மீர் முற்றுகைக்கு ஓரளவு உதவினார்கள் என்றெல்லாம் சிலர் சொல்வதும், எழுதுவதும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயல்கள்.

ஜின்னா காஷ்மீர் என்ற கனி அதுவாக பாகிஸ்தான் மடியில் விழும் என்று கூறிக்கொண்டிருந்தார். ஆனால் புதிதாகப் பிறந்த பாகிஸ்தானை ஆள வந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் அந்தக் கனி தானாக விழாது என்று. ஏற்கனவே காஷ்மீர் அரசருக்கு எதிராக ஒரு சிறிய பகுதியில் உருவாகி இருந்த அதிருப்தியை, வெறுப்பை எரியவிட்டு பதற்றத்தை உருவாக்கியது பாகிஸ்தான்.

பூஞ்ச் கலவரத்தின் சூத்திரதாரியாக விளங்கியவர் சர்தார் அப்துல்கயம் கான். அவர் ஆசாத் காஷ்மீரின் ஜனாதிபதியாக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1996 இல் அங்கு பிரதம மந்திரியாகவும் இருந்தவர். அவர் பாகிஸ்தான் அரசியலிலும் முக்கிய நபராக விளங்கியவர். அப்துல்கயம் கான் 1924 ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீர் சமஸ்தானத்தில் உள்ள பாக் (பூஞ்ச்) இல் பிறந்தார். லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவின் பல கல்வி நிறுவனங்களில் அவர் பயின்றுள்ளார். பல நூல்களை எழுதியுள்ள அவர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். இத்தகைய ஒருவர் பாகிஸ்தான் அரசாங்கத்தோடு நல்ல தொடர்பில்தான் இருந்திருக்க வேண்டும்.

அப்துல்கயம் கான் கிளர்ச்சிப் படையைத் திரட்டி காஷ்மீர் அரசரின் டோக்ரா படையை எதிர்த்துப் போராடுவதை வழக்கமாகக் கொண்டார். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி விட்டு வந்த சுமார் 60000 பேரில் பலரை அவர் பயன்படுத்திக் கொண்டார். அப்துல் கயம் கான் படையில் 75% பேர் பூஞ்சில் வசித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள்தாம். அப்துல் கயம் கான் கூற்றுப்படி 1947 பிப்ரவரியில் அரசருக்கு எதிராக படை திரட்டுவது தொடங்கப்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு படையை நகர்த்தி ஆகஸ்டில் அயுதப் புரட்சியை ஆரம்பித்து விட்டோம் என்கிறார் அவர்.

பூஞ்ச் கலவரத்தை நடத்திய மற்றொரு முக்கியமான நபர் முகமத் இப்ராகிம் கான். அவர் முஸ்லிம் லீகின் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் தீவிரமாக இருந்தவர். காஷ்மீர் சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற கொள்கையில் அவர் மிகத் தெளிவாக இருந்துள்ளார். அவர் அதற்காக ஆயுதம் தாங்கிய கொரில்லாப் படை கலவரத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் அவர் 1947 இல் தன் வீட்டில் ஆதரவாளர்கள் முன்னிலையில் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

முதல் இந்திய பாகிஸ்தான் போருக்குப் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்ட ஆசாத் காஷ்மீரின் முதல் ஜனாதிபதியாக 32 வயதில் அவர் தேர்வு செய்யப்பட்டார். 1948 முதல் 1971 வரை ஐ .நா சபையில் ஆசாத் காஷ்மீரின் பிரதிநிதியாகவும் அவர் செயலாற்றி இருக்கிறார். ஆசாத் காஷ்மீரை உருவாக்கியவராகக் கருதப்படும் இவர் 1915 ஆம் ஆண்டு பூஞ்சில் ஹோர்னா மிரா கிராமத்தில் பிறந்தார். அவர் 1943 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பட்டம் பெற்றார். அதன் பின் மிர்பூரில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். அவர் பாரிஸ்டர் பட்டம் பெற்றவுடன் காஷ்மீர் அரசர் அவரை 1944 இல் அசிஸ்டன்ட் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கிறார். முஸ்லிம்களை வெறுப்பவராக சித்தரிக்கப்படும் காஷ்மீர் அரசரின் இந்தச் செயல் அதனை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

அதன் பின் முகமத் இப்ராகிம் கான் அரசாங்கப் பணியிலிருந்து விலகி காஷ்மீர் விடுதலைக்குப் படை திரட்டும் வேலையில் இறங்குகிறார். அவர் பாகிஸ்தானின் முஸ்லிம் லீக் கொள்கைகளைக் கொண்ட முஸ்லிம் கான்ஃபரன்ஸ் கட்சியில் செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்ந்தார். 1946 இல் ராஜிய சபை தேர்தலில் வெற்றி பெற்றார். முர்ரீக்கு சென்ற அவர் காஷ்மீர் அரசரின் ராணுவத்தில் இருந்து வெளியேறிய சில அதிகாரிகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டார். ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் கிளர்ச்சிக்கு ஆட்கள் எடுக்கப்பட்டார்கள். செப்டெம்பரில் ஆயுதங்கள் ஜீலம் நதியைத் தாண்டி காஷ்மீருக்குள் கொண்டு செல்லப்பட்டன என்று அவரே நூலாசிரியர் ஆன்ரூ ஒயிட்ஹெட்டிடம் கூறி இருக்கிறார்.

1947 செப்டெம்பர் மாதத்தில் முர்ரீயில் இருந்தபோது முகமத் இப்ராகிம் கான் பிரிகேடியர் அக்பர் கானுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். அந்த சமயத்தில்தான் அக்பர் கானுக்கு பிரதம மந்திரி லியாகத் அலிகானிடம் இருந்து அழைப்பு வந்தது. செப்டெம்பர் 12 ஆம் தேதி பிரதம மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.அந்தக் கூட்டத்தில் பஞ்சாபின் முக்கிய அரசியல் பிரமுகர் சர்தார் சௌகத் ஹயத் கானும் கலந்து கொண்டார்.

சர்தார் சௌகத் ஹயத் கான் பஞ்சாபில் இருந்து வந்த சாதாரண அரசியல்வாதியல்ல. அவர் பஞ்சாபில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அட்சிசன் கல்லூரியிலும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். அவர் குடும்பப் பாரம்பரியத்தின்படி தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.பிரிட்டிஷ் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற பின் பல நாடுகளில் பணியாற்றி இருக்கிறார். பின்னர் கேப்டனாகவும், மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார். 1942 டிசம்பர் மாதம் அவருடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு ராணுவப் பணியிலிருந்து விலகுகிறார். பஞ்சாபில் அரசியல் பணியாற்ற களம் இறங்குகிறார். முஸ்லிம் லீக் சார்பில் பஞ்சாப் சட்ட சபை உறுப்பினராகத் தேந்தெடுக்கப்பட்டு முஸ்லிம் லீக் அரசில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.

அதன் பின் அரசில் இருந்து விலக்கப்படும் அளவுக்கு முஸ்லிம் லீக் கொள்கைகளில் தீவிரம் காட்டினார். 1946 ஆகஸ்ட் 16 ஆம் தேதி முஸ்லிம் லீக் நடத்திய நேரடி நடவடிக்கை நாள் பிரசாரத்திலும், நிகழ்வுகளிலும், துடிப்புடன் செயல்பட்டு முஸ்லிம் லீகில் புகழ் பெற்றார். இதன் காரணமாக ஜின்னா அவருக்கு சௌகத் பட்டத்தை அளித்தார். ஜின்னாவுடன் மிக நெருக்கமாக இருந்தவர் சர்தார் சௌகத் ஹயத் கான். எப்படிபட்ட நபரை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தெரிவு செய்து பணியை ஒப்படைக்கிறார்கள் பாருங்கள்.

சௌகத் ஹயத் கான் பஞ்சாபில் பிறந்தவர். பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி விட்டு, தந்தை சிக்கந்தர் ஹயத் கான் போன்று பஞ்சாபின் அரசியல் தலைவர் ஆனவர். இவர் பாகிஸ்தான் பிரதம மந்திரியுடன் இணைந்து காஷ்மீரைப் பிடிக்க திட்டமிட்டு செயல்படுகிறார். இவரும் பாரமுல்லாவில் பழங்குடிப் படையோடு காஷ்மீர் முற்றுகைக்கு வந்த சௌரப் ஹயத் கானும் இரு வேறு நபர்கள்.

சௌரப் ஹயத் கான் காஷ்மீரில் பிறந்தவர். அஃப்ரீதி இனத்தைச் சேர்ந்தவரான அவர் இந்திய விமானப் படையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் தனி நாடான போது பாகிஸ்தான் ராணுவத்தில் சேருமாறு அவருக்கு ஆணை வந்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அவர் பாரமுல்லாவுக்கு பழங்குடிப் படையோடு வந்த போது விமானப் படையின் சீருடையில்தான் இருந்தார். எனவே அவர் காஷ்மீர் முற்றுகையில் களப்பணி ஆற்றியவர்.

பஞ்சாப் அரசியல் தலைவரான சௌகத் ஹயத் கான் பெரும்பாலும் திட்டமிடுதலிலும், ஒருங்கிணைப்பதிலும் முழு மூச்சுடன் செயல்பட்டிருக்கிறார். இவர் தனக்குக் கீழே ஜமான் கியானி, மேஜர் குர்ஷித் அன்வர் ஆகிய இரு ராணுவ அதிகாரிகளைத் தளபதிகளாக வைத்துக்கொண்டு காஷ்மீரைப் பிடிக்க ஒரு தனி திட்டத்தைத் தயாரித்து வைத்திருந்தார். காஷ்மீர் அரசருக்கு எதிரான கலவரம், காஷ்மீர் முற்றுகை எல்லாம் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகள்தாம் என்று வெளியே தெரியாதபடி செயல்படவேண்டும் என்று அவருக்கு மேலே இருந்தவர்கள் ஆணையிட்டார்கள். இதை அவரே பின்னாளில் கூறியிருக்கிறார்.

எல்லாவற்றையும் ரகசியமாக செய்வதை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் விரும்பினார்கள். பிரிவினைக்கு முன்பும் பின்பும் அவர்கள் நேரடி குற்றவாளிகளாக வெளியுலகுக்குத் தெரியாதபடி இருக்க, அது பல நேரங்களில் உதவியிருக்கிறது. அதனால்தான் உயர்ந்த பதவியில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், கவர்னர் போன்றோரின் கருத்துகள் கலவரங்களுக்கும், போருக்கும் காரணமானவர்களை இனங்காட்டும் போது, பல இடங்களில் தெளிவில்லாமல், முரண்பாடுகள் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன.

இவற்றின் மூலமாக பூஞ்சில் இருந்த மிக முக்கியமான நபர்கள் காஷ்மீர் அரசருக்கு எதிரான கலவரத்தைத் தொடங்கினார்கள் என்பது தெரிய வருகிறது. பாகிஸ்தானின் பிரதம மந்திரி, ராணுவத்தின் ஒரு முக்கிய பிரிவின் நிர்வாக இயக்குனர் இவர்கள் எல்லாம் பூஞ்ச் கலவரம் தொடர்வதற்கு தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆயுதங்களை வழங்கி இருக்கிறார்கள். மேலும் பூஞ்ச் கலவரம் என்பது பாகிஸ்தான் காஷ்மீரை இணைத்துக் கொள்வதற்காக தீட்டிய மிகப்பெரிய திட்டத்தின் முதல் கட்டம். அதைத் தொடர்ந்துதான் பழங்குடிப்படை காஷ்மீரை முற்றுகையிட்டது.

லாகூர் கூட்டத்துக்கு முன்பாக முஸ்லிம் லீக் தலைவர் மியான் இப்திகாருதின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க காஷ்மீரைப் பிடிப்பதற்கு அக்பர் கான் தன்னுடைய திட்ட வரைவை அனுப்பியிருந்தார். அந்தத் திட்டம் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. காஷ்மீரைப் பிடிக்க பிரிகேடியர் அக்பர் கான் தயாரித்துக் கொடுத்த மும்முனைத் திட்டம் இதுதான்.

1. பூஞ்ச் கலவரத்தைத் தொடர்ந்து நடைபெறச் செய்தல்.
2. ஜம்முவுக்கு தெற்கு திசையில், அதனை இந்தியாவின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் சாலையில் தாக்குதல் நடத்துவது.
3. ஸ்ரீ நகர் விமான தளத்தில் தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றுதல்.

அகபர் கான் தயாரித்துக்கொடுத்த மும்முனைத் திட்டம் என்பது பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் ஏற்கெனவே உருவான ஒரு பெரும் திட்டத்தின் செயல் வடிவம்தான். அதற்குப் பெயர் ஆபரேஷன் குல்மார்க். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் விடுதலை கிடைத்தவுடனே இது ராவல் பிண்டி பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தில் உதித்து விட்டது. அக்பர் கானின் மும்முனைத் திட்ட வரைவு கிடைத்தவுடன், லாகூர் கூட்டத்தில் ஆபரேஷன் குல் மார்க் தயாராகிவிட்டது.

ஆபரேஷன் குல்மார்க்கின் செயல் திட்ட ஆணைகள் அடங்கிய கடிதங்கள் எல்லாவற்றிலும் பாகிஸ்தான் ராணுவத்தின்அப்போதைய பிரிட்டிஷ் ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் சர் ஃபிராங் மெசெர்வியின் கையொப்ப இணை குறி முத்திரை இருந்தது. இதனை ரோஹித் சிங் தனது ‘ஆபரேஷன் இன் ஜம்மு அண்ட் காஷ்மீர் 1947-48’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆபரேஷன் குல்மார்க்கின்படி 1947 செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு பழங்குடி இனமும் ஆயிரம் பதான் வீரர்களைச் சேர்க்க வேண்டும். அரசியல் முகவர்கள், துணை கமிஷனர்கள் இந்தப் பணிகளைப் கவனிப்பார்கள். செப்டெம்பர் முதல் வாரத்தில் லஷ்கர்கள் (படைகள்) பாநு, வானா, பெஷாவர், கோஹத், தால், நவுஷெரா ஆகிய இடங்களில் குவிக்கப்படும். அங்கெல்லாம் உள்ள பாகிஸ்தான் ராணுவ பிரிகேடுகள் ஆயுதம், வெடி பொருள்கள், உடைகள் ஆகியவற்றைக் கொடுக்கும். லஷ்கர் என்பது ஜிகாத் நடத்தும் படை வீரர்களின் தொகுப்பு. ஒவ்வொரு லஷ்கருக்கும் அதன் பழங்குடித் தலைவருக்கு மேல் ஒரு பாகிஸ்தான் ராணுவ மேஜர் நியமிக்கப்படுவார். ஒவ்வொரு மேஜருக்கு கீழும் ஒரு கேப்டனும், பத்து துணை அதிகாரிகளும் இருப்பார்கள்.

அக்டோபர் 18 ஆம் தேதி அபோத்தாபாத்தில் வெடி பொருள்கள் குவிக்கப்பட்டு முற்றுகை நாளான 22 ஆம் தேதி அவை முசாபராபாத்துக்கும், டோமலுக்கும் கொண்டு செல்லப்பட்டன.

ஆபரேஷன் குல்மார்க்கின் படி காஷ்மீரை முற்றுகை இடும் படைகள், மேஜர் ஜெனரல் அக்பர் கான் தலைமையில் செயல்படும். அவர் தலைமையகம் ராவல்பிண்டி ராணுவ தலைமையகத்தின் உள்ளே இருக்கும். வீரர்கள் அனைவரும் பிரயாணிகள் பஸ்களில் இரவில் பயணம் செய்து அக்டோபர் 18 ஆம் தேதி அபோத்தாபாத்தில் குவிந்தார்கள். திட்டம் இதுதான்.

1. ஆறு லஷ்கர்கள் டோமலில் இருந்து ஸ்ரீ நகர் செல்லும்.இவை முதன்மைப் படைகள்.
2. முதன்மைப் படைகளுக்கு அரணாக இரண்டு படைகள் ஹஜ்பீர் கணவாய் வழியாக குல்மார்க் செல்லும்.
3. மேலும் இரண்டு படைகள் ஹந்த்வாரா, சோபோர், பந்திபூர் ஆகியவற்றைக் கைப்பற்ற வேண்டும்.
4. 10 படைகள் பிம்பர், ரவல்கோட், பூஞ்ச் ஆகிய பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்டன. அவற்றின் பணி ரஜவுரி, பூஞ்ச் இரண்டையும் பிடித்துவிட்டு ஜம்முவை நோக்கி முன்னேறுவது.
5. பாகிஸ்தான் ராணுவத்தின் 7 வது காலாட்படைப் பிரிவு படை வீரர்கள் அக்டோபர் 21 ஆம் தேதி இரவு முர்ரியிலும், முசாபராபாத்திலும் குவிய வேண்டும். அவர்கள் பழங்குடிப் படைகளுக்கு உதவியாக ஜம்மு- காஷ்மீருக்குள் சரியான தருணத்தில் நுழைய வேண்டும். மேலும் ஒரு காலாட் படை பிரிகேட் ஜம்முவுக்குள் நுழைய தயாராக இருக்கவேண்டும்.
6.ஆபரேஷன் குல் மார்க்கின் காஷ்மீர் முற்றுகை தினம் 1947 அக்டோபர் 22.

பழங்குடியினர் படையெடுப்பைத்தொடங்கி வைத்தவர்கள்

1. பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாண முதலமைச்சர் கான் கயம் கான்.
2. மாங்கி ஷரிஃப் இன் பீர் என்று அழைக்கப்பட்ட அமின் உல் அசனத்.
3. காஷ்மீரை அடைவதற்காக நியமிக்கப்பட்ட வட பகுதியின் படைத் தலைவர் குர்ஷித் அன்வர்.

இந்த மூவரும் பழங்குடியினரின் படையெடுப்பை நடத்திக் காட்டியவர்களில் மிக முக்கியமானவர்கள். பாகிஸ்தானை மிக எளிதாக நான்கு விதமான இன மக்கள் வாழும் நான்கு பகுதிகளாகப் பிரித்துவிடலாம். வட மேற்கில் இருப்பது பஷ்டூன் அல்லது பதான் இன மக்கள் வாழும் பகுதி. வட கிழக்கில் உள்ளது பஞ்சாபிகள் வாழும் பஞ்சாப். தென் மேற்குகில் பலுச்சி இனமக்கள் வாழும் பலுச்சிஸ்தான் இருக்கிறது. தென் கிழக்கில் சிந்தி இன மக்கள் வாழும் சிந்து அமைந்துள்ளது. தேசவிடுதலைக்குப் பிறகு 1947 நிலவரப்படி வங்காளிகள் வாழும் கிழக்கு பாகிஸ்தானையும் (தற்போது வங்க தேசம்) அந்த நான்கு பகுதிகளோடு ஐந்தாவது பகுதியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பொதுவாக பாகிஸ்தானைப் பிரித்துப் பார்க்கும் முறை.

தற்போதுள்ள பாகிஸ்தானில் அது ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளையும் சேர்த்து மொத்தம் எட்டு நிர்வாகப் பிரிவுகள் உள்ளன. அவற்றுள் பலுச்சிஸ்தான் பாகிஸ்தானின் மொத்த நிலப் பரப்பில் 39.3% கொண்ட மிகப்பெரிய நிர்வாகப் பிரிவாக விளங்குகிறது. எட்டு நிர்வாகப் பிரிவுகளில் உள்ள மற்றொரு பிரிவுதான் வட மேற்கு எல்லை மாகாணம். தற்போது சில பகுதிகள் அதனோடு இணைக்கப்பட்டு கைபர் பக்துன்குவா (கே. பி.கே) என்ற பெயருடன் அந்தப் பிரதேசம் விளங்குகிறது.

வடமேற்கு எல்லை மாகாணம் சுமார் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்போது உள்ள கே.பி.கே சுமார் 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்டதாக இருக்கிறது. இதற்கும் ஆப்கனிஸ்தானுக்கும் இடையே இருப்பது ‘ஃபெடரலி அட்மினிஸ்டர்ட் ட்ரைபல் ஏரியாஸ்’. இதுவும் பாகிஸ்தானின் ஒரு நிர்வாகப் பிரிவுதான். இது 7220 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இந்தக் கூட்டு நிர்வாக பழங்குடி இனப் பிரதேசத்திலும், வட மேற்கு எல்லை பிரதேசத்திலும் வாழும் மக்கள் பஷ்டூன் இனமக்கள். அவர்கள் தாம் காஷ்மீரை முற்றுகை இட்டவர்கள்.

முஸ்லிம் லீக் தனி பாகிஸ்தான் என்ற மிகப்பெரிய கனவை நானவாக்கியதோடு இன்னும் அடைய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சூழலில் பாகிஸ்தானில் இருந்த சிலர் இந்து அரசர் ஆண்டு கொண்டிருக்கும் காஷ்மீருக்கு எதிராக ஜிகாத்தை அறிவித்து வீர முழக்கமிட்டார்கள். அவர்களுள் ஒருவர்தான் வானாவின் பீர். இவர் பாகிஸ்தானின் கூட்டு நிர்வாக பழங்குடி பிரதேசத்தின் தெற்கு வாசிரிஸ்தானைச் சேர்ந்தவர். கூட்டு நிர்வாக பழங்குடி இன பிரதேசத்தின் தெற்குப் பகுதிதான் வாசிரிஸ்தான். அது தெற்கு வாசிரிஸ்தான், வடக்கு வாசிரிஸ்தான் என்ற இரண்டு பிரிவுகளைக் கொண்டது. வாசிரிஸ்தானில் இருப்பவர்கள் பதானியர்கள். வாசிர் என்ற பழங்குடி இனத்தின் பெயரால் அந்தப் பகுதி வாசிரிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது.

தெற்கு வாசிரிஸ்தானைச் சேர்ந்த பழங்குடி இன மதத் தலைவர் வானாவின் பீர், பெஷாவருக்கு வந்து வட மேற்கு எல்லை மாகாணத்தின் முதலமைச்சரை சந்திக்கிறார். இஸ்லாமியர்களின் சரித்திரத்தில் இது மிகவும் முக்கியமான கட்டம். இத்தருணத்தில் தன்னுடைய தொண்டர்களின் சேவையை பாகிஸ்தானுக்கு அளிக்க அவர் முன் வந்தார். அங்கு அவர் நியூயார்க் ஹெரால்டு ட்ரிபியூன் பத்திரிகையின் நிருபர் மார்கரெட் பார்ட்டனுக்குப் பேட்டி அளிக்கிறார். நிருபர் அவர் தோற்றத்தை இவ்வாறு விவரிக்கிறார்.

“சாம்பல் நிற பதானியர்களின் பைஜாமா; சிவப்பு நிறத் தொப்பி; கண்களில் கறுப்புக் கண்ணாடி; தோளில் தோட்டாக்கள் நிறைந்த பெல்ட்; இவற்றோடு தோற்றமளித்தார் நாற்பத்தி ஐந்து வயது நிரம்பிய அந்த வானாவின் பீர்.”

பேட்டியின் போது அவர் காஷ்மீர் பாகிஸ்தானுடன் தான் இணைக்கப்பட வேண்டும் என்கிறார். இந்தப் புனிதப் போருக்காக தான் பத்து லட்சம் பழங்குடி வீரர்களை காஷ்மீருக்குள் அழைத்துச் செல்லத் தயார் என்று வீர வசனம் பேசுகிறார். இதில் கவனிக்கப்பட வேண்டியது, சுதந்திரம் பெற்ற நேரத்தில் பாகிஸ்தானின் ஒரு மாகாண முதல்வர் கெரில்லாத் தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கும் குழுத் தலைவர்களை அழைத்துப் பேசுகிறார் என்பது தான். பாகிஸ்தானின் மிகப் பெரிய திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற சரியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இறுதியில் காஷ்மீர் ஜிகாத்துக்கு ஏற்ற ஒருவர் கிடைத்துவிட்டார். அவர்தான் மாங்கி ஷரிப் இன் பீர். அவர் முஸ்லிம் லீகின் துடிப்புள்ள இளம் உள்ளூர் உறுப்பினராகத் தான் முதலில் வெளிப்பட்டிருக்கிறார். எல்லை மாகாணத்தில் சிறிய கட்சியாக இருந்த முஸ்லிம் லீக் 1946-47 இல் பெரும் சக்தியாக உருவெடுத்தது. அப்போது அவர் மாகாணத்தின் தனிப் பெரும் தலைவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.

தேசப் பிரிவினையின் போது வட மேற்கு எல்லை மாகாணம் பாகிஸ்தான் பக்கம் வர காரணமானவர் மாங்கி ஷரிப் இன் பீர். பிரிவினையை ஒட்டி அந்த மாகாணத்தில் நடந்த மக்கள் கருத்துக் கணிப்பில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்க அவர் உதவி செய்தார். அங்கு பல பழங்குடி இனத் தலைவர்கள் இருந்தாலும் மிகுந்த செல்வாக்கு உடையவராக பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் அறியப்பட்டவர் அவர்தான். அதனால் தான் காஷ்மீரை முற்றுகையிடும் லஷ்கர்களை அனுப்பும் பணிக்கு அவர் தெரிவு செய்யப்பட்டார். இந்த மாங்கி ஷரிப் இன் பீரும் வட மேற்கு எல்லை மாகாண முதலமைச்சர் கான் கயம் கானை சந்தித்து, தனது படையோடு காஷ்மீருக்குள் நுழைந்து ஜிகாத் நடத்த விருப்பம் தெரிவித்திருந்தார்.

1947 செப்டம்பர் 12 ஆம் தேதி லாகூரில், பாகிஸ்தான் பிரதம மந்திரி லியாகத் அலி கான் தலைமையில் நடைபெறுகிறது அந்தக் கூட்டம். அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி மேஜர் குர்ஷித் அன்வர் காஷ்மீர் முற்றுகைக்கு வடக்கு பகுதி கமாண்டராக நியமிக்கப்படுகிறார். பஞ்சாபைச் சேர்ந்த அவர் முஸ்லிம் லீகின் தனிப்படை கமாண்டராக இருப்பவர். இவருக்கும் சௌகத் ஹயத் கான், அக்பர் கான் ஆகியோருக்கும் பதான் பழங்குடியினர் பற்றி மிக நன்றாகத் தெரியும். பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்தபோது 1930 களில் அவர்களுக்கு எதிராக இவர்கள் போர் நடத்தியவர்கள். குர்ஷித் அன்வர் பழங்குடிப் படையை அனுப்ப இருக்கும் மாங்கி ஷரிப் இன் பீர் உடன் இணைந்து முஸ்லிம் லீக்கில் செயல்பட்டவர்.

குர்ஷித் அன்வர் படைத் தலைவராக நியமிக்கப்பட்டவுடன் பெஷாவர் சென்றார். வட மேற்கு எல்லை மாகாண முதலமைச்சர் கான் கயம் கான் உதவியோடு பழங்குடிப் படையைத் திரட்டினார். வீரர்கள் அபோத்தாபாத்தில் குவிந்தார்கள். அவர்கள் அங்கிருந்து முசாபராபாத் சென்று காஷ்மீரை முற்றுகை இட்டார்கள். அப்போது குர்ஷித் அன்வருக்கும், சௌகத் ஹயத் கானுக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது உண்மை.

“குர்ஷித் அன்வர் வேகமாக செயல்பட்டார். என் ஆணையை மதிக்கவில்லை.  வாசிரிஸ்தான் பழங்குடி இனமான மஹ்சூத்தை ஜிகாத்தில் கலந்து கொள்ள அழைத்தார். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து விலகியிருக்கும்படி நான் கூறியதை அவர் காற்றில் பறக்கவிட்டார்” என்றெல்லாம் பின்னாளில் சௌகத் ஹயத் கான் கூறியது தன் கையை மட்டும் கழுவிக்கொள்ள நினைக்கும் வேலையாகத்தான் தெரிகிறது.

பிரிட்டிஷ் அரசிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி சர் ஜார்ஜ் கன்னிங்ஹம் அப்போதுதான் பெஷாவருக்கு வந்திருந்தார். ஜின்னா கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாணத்தின் கவர்னராக இருக்க அவர் சம்மதித்தார். அவர் இதற்கு முன்பு அதன் கவர்னராக இருந்தவர் தான். பிரிட்டிஷ் நூலகத்தில் அவர் நாட்குறிப்பு உள்ளது. அவர் 1947 அக்டோபர் மாதம் ஆயுதங்கள் ஏந்திய பழங்குடிப் படை காஷ்மீருக்குள் சென்று கொண்டிருப்பதாக எழுதியுள்ளார். அக்டோபர் 13 ஆம் தேதி ஹசார் பகுதியிலிருந்து காஷ்மீருக்குள் படை செல்கிறது என்பதை தான் அறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் ரைபிள்களை ஏந்திக்கொண்டு ஒரு திட்டத்தோடு ஜீலம் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியைக் கைப்பற்றச் செல்கிறார்கள். இது இந்திய பாகிஸ்தான் போருக்கு வழிவகுக்கப் போகிறது. அதில் பங்கேற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும். அதனால் தான் அஃப்ரீதி, முகமத் உள்பட அனைத்து இனக் குழுக்களையும் தான் எச்சரித்ததாக எழுதுகிறார்.அதற்குப் பிறகு இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அவர் இவ்வாறு எழுதுகிறார்.

“காஷ்மீர் விவகாரம் கொதித்துக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் தேச பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த குர்ஷித் அன்வர் என்ற பஞ்சாபி காஷ்மீருக்கு எதிரான மும்முனை தாக்குதலை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்…
மேலும் முஸ்லிம் லீகின் மாகாண அரசு, ஜிகாத் செய்யும் படைகளுக்கு லாரிகளில் பெட்ரோலும், உணவுக்காக மாவும் அனுப்பிக்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் கான் கயம் கான் ஆயுதங்களுடன் காஷ்மீர் செல்லும் படையை தான் ஆதரிப்பதாக தனிப்பட்ட முறையில் அறிவித்துவிட்டார். ஆனால் போலீஸும், மற்ற அதிகார வர்க்கத்தினரும் இதில் கலந்து கொள்ளாமல் தான் பார்த்துக்கொள்ளவதாக ஒப்புக் கொண்டார்.”

(தொரும்)

வேதாளம் சொல்லிய ‘பத்மாவதியின் காதல்’ கதை (1)

விக்கிரமாதித்தன் கதைகள் / 8

Vetalவருணா நதியும், அசி ஆறும் ஒன்று கூடும் கங்கையாற்றங்கரையில் அமைந்திருக்கிறது வாரணாசி நகரம். அந்நகரை பிரதாபமகுடன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் வஜ்ரமகுடன். பயமறியா இளங்கன்று. அழகில் மன்மதன். கலா ரசிகன்.
இந்த வஜ்ரமகுடனின் ஆருயிர் நண்பன் புத்திசரீரன். அந்நாட்டு மந்திரியின் மகன். நண்பர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த பிரியம் கொண்டிருந்தார்கள். எங்கும் எப்போதும் இணை பிரியாமல் சுற்றி வந்தார்கள்.

ஒருநாள் இருவரும் வேட்டையாடலாம் என்று காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். ஆசை தீரும் வரை மிருகங்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடினார்கள். பின் களைத்துப் போய் தாகம் தீர்த்துக் கொள்ள நீர்நிலை தேடி அலைந்து சற்று தூரத்தில் ஒரு பெரும் அருவித் தடாகத்தைக் கண்டார்கள். அதை நெருங்கியவர்கள் திகைத்துப் போனார்கள்.

அங்கே, தடாகத்தில் பூத்திருந்த அழகழகான தாமரைப் பூக்களுக்கு மத்தியில் கலகலவென்று சிரிப்பொலியுடன் அநேகம் இளம் பெண்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள். அந்த அழகுப் பெண்களுக்கு மத்தியில் ஈடு இணையற்ற அழகுப் பெட்டகமாக அந்தப் பெண்களின் தலைவி போல் ஒருத்தி தனியே ஜொலித்தாள்.

அவளைப் பார்த்த கணம் இளவரசனான வஜ்ரமகுடன் திகைத்துப் போனான். அபாரமான அவளது அழகுக்கு அடிமையாகிப் போனான். தேவலோகப் பெண்களுக்கே சவால் விடுவது போன்ற அவளது வனப்பில் மெய்மறந்து நின்றான்.

அந்தப் பெண்ணும் வஜ்ரமகுடனைப் பார்த்தாள். வஜ்ரமகுடன் தனது அழகில் மலைத்து நிற்பதைக் கண்டு வெட்கப்பட்டு, மயங்கி நின்றாள். முதல் பார்வையிலேயே அவளுக்கும் வஜ்ரமகுடனை மிகவும் பிடித்துப் போனது. அவனை தனது இதயத்திலே வைத்துப் பூட்டிக்கொண்டாள்.

அந்தப் பெண்ணின் பெயர் பத்மாவதி. அவள் வஜ்ரமகுடனுக்கு தன்னைப் பற்றிய தகவலைத் தெரிவிக்க நினைத்தாள். குறிப்பால் உணர்த்த முயன்றாள். நீரில் பூத்திருந்த ஒரு தாமரை மலரைப் பறித்து தனது காதில் வைத்துக் காண்பித்தாள். பின் அந்தத் தாமரையை காதில் அணிந்துகொள்வதுபோல பாவனை காட்டி, காதணியான தந்தபத்திரம் என்னும் அணிகலனைப் போல அதை சுருட்டிக் காண்பித்தாள். பின் மற்றொரு தாமரைப் பூவைப் பறித்து தனது தலையில் சூடிக்கொண்டாள். அடுத்து தனது மற்றொரு கையை அவளது இதயத்தில் வைத்து வஜ்ரமகுடனைப் பார்த்துச் சிரித்து வெட்கத்துடன் தலை குனிந்தாள். இந்த தனது குறிப்புச் செயல்களை அந்தப் பெண் விளையாட்டுப் போல செய்ததால் அவளது தோழிகள் யாரும் இதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் வஜ்ரமகுடனின் பக்கத்திலிருந்து புத்திசரீரன் அனைத்தையும் கவனித்துப் பதிய வைத்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் நீராடி முடித்த அந்தப் பெண் தனது தோழிகளுடன் வஜ்ரமகுடனை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே புறப்பட்டுச் சென்றாள். வஜ்ரமகுடனோ அவள் செல்வதைப் பார்த்தபடியே தவிப்புடன் நின்றான்.
இயலாமையுடன் தனது நண்பன் மந்திரிகுமாரனிடம் புலம்பினான். ‘தோழா, புத்திசரீரா! எனது இதயம் அவளுடனேயே சென்று விட்டது. ஆனால் அவள் யாரென்றோ, எங்கிருக்கிறாள் என்றோ ஒன்றும் தெரியவில்லை. அவளில்லாமல் இனி என்னால் ஜீவிக்கவே முடியாது. ஆனால் இனி நான் அவளை மீண்டும் எப்படிக் காண்பேன்?’ என்று புலம்பினான்.

புத்திசரீரன் திகைத்துப் போனான். ‘என்ன இப்படிச் சொல்கிறாய் வஜ்ரமகுடா! அந்தப் பெண் தன்னைப் பற்றிய தகவல்களைக் குறிப்பால் உணர்த்தினாளே, நீ அதைக் கவனிக்கவில்லையா?’ என்று கேட்டான்.

‘அப்படியா? இல்லையே! ஏதொன்றையும் நான் கவனிக்கவில்லையே! அடடா! அவள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லையே! நான் அவள் அழகிலேயே மதிமயங்கி இருந்துவிட்டேன் நண்பா! அவள் சொன்னது உனக்கு ஏதும் புரிந்ததா?’ என்றான்.

‘ஆம்! வஜ்ரமகுடா! அவள் சொன்ன குறிப்புகளிலிருந்து எனக்குப் புரிந்ததைச் சொல்கிறேன் கேள். அவள் தாமரைப் பூ ஒன்றைத் தன் காதில் வைத்துக் காண்பித்ததால், ‘தான் கர்ணோத்பலன் என்னும் அரசனுடைய நாட்டைச் சேர்ந்தவள்’ என்பதை அறிவித்தாள். அந்தப் பூவை காதில் அணிந்து கொள்வது போலச் செய்து, தந்தபத்திரம் என்னும் காதணியைப் போலச் சுருட்டிக் காண்பித்ததால், ‘அந்நாட்டில் உள்ள தந்தச் சிற்பி ஒருவனின் மகளாக அவள் இருக்க வேண்டும். அடுத்தும் ஒரு தாமரைப் பூவை எடுத்துத் தலையில் சூட்டிக் கொண்டதால் பத்மாவதி என்பது அவளது பெயராக இருக்கலாம். கடைசியாக தனது கையை மார்பின் மீது வைத்துக் கொண்டு அவள் உன்னை வெட்கப்பார்வையுடன் நோக்கித் தலை குனிந்ததால் காதல் வயப்பட்டு அவளது இதயத்தை உனக்கே தந்துவிட்டாள் என்று அர்த்தமாகிறது!’ என்று விளக்கம் சொன்னான்.

வஜ்ரமகுடன் ஆனந்தத்தில் புத்திசரீரனை கட்டித் தழுவி அவனது புத்திக்கூர்மையைப் பாராட்டினான். ‘என் வயிற்றில் பால் வார்த்தாயடா நண்பா! உன்னை நண்பனாகப் பெற்றது என் பாக்கியம்!’ என்றவன், ‘நண்பா புத்திசரீரா! நான் உடனே அவளை சந்தித்துப் பேச வேண்டும்! நீதான் அதற்கு வழி காட்டவேண்டும்!’ என்று வேண்டினான்.

‘வஜ்ரமகுடா! கலங்காதே! கர்ணோத்பலன் என்னும் மன்னன் ஒருவன் கலிங்க நாட்டை ஆண்டு வருவதை நான் அறிவேன். அந்நாட்டின் சிறந்த தந்த சிற்பிகளுள் ஒருவர் சங்கிராமவர்த்தனன் என்பவர். அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்றும், அவள் மிகுந்த பேரழகி என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அநேகமாக இந்தப் பத்மாவதி அவரது மகளாகத்தான் இருக்க வேண்டும்!’ – மந்திரி குமாரன் இப்படிச் சொன்னதுமே ராஜகுமாரன் பொறுமையிழந்து துடிக்கத் தொடங்கிவிட்டான்.

‘நண்பா! அப்படியானால் ஏன் இன்னும் தாமதிக்கிறாய்? எனக்கு அவளை உடனே பார்த்தாக வேண்டும். இப்போதே புறப்படுவோம் வா!’

இருவரும் கலிங்க நாட்டை நோக்கி குதிரையை விரட்டினார்கள்.

***

மன்னன் கர்ணோத்பலன் ஆண்ட கலிங்க நாட்டை அடைந்த வஜ்ரமகுடனும், புத்திசரீரனும் மிகச் சுலபமாகவே தந்த சிற்பி சங்கிராமவர்த்தனன் இல்லத்தைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் நேரடியாக சிற்பியின் இல்லத்துக்குள் சென்று பத்மாவதியைப் பார்த்து விட முடியுமா என்ன? சமய சந்தர்ப்பம் பார்த்துத்தானே அவளைச் சந்திக்க வேண்டும். அதற்குத் தகுந்தபடி அக்கம் பக்கத்தில் தங்க இடம் தேடினார்கள்.

சிற்பியின் வீட்டுக்கு அருகிலேயே ஒரு வயதான மூதாட்டி ஒருத்தி தனியே வசித்திருந்தாள். வஜ்ரமகுடனும், புத்திசரீரனும் அவளை சிநேகம் பிடித்துக்கொண்டு அவளுக்கு நிறைய பொன்னையும், பொருளையும் கொடுத்து வசப்படுத்திக் கொண்டு அவளது வீட்டிலேயே தங்கினார்கள்.

ஒருநாள் சமயம் பார்த்து மந்திரி குமாரன் மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுத்தான். ‘அம்மா, இவ்வூரில் சிற்பி சங்கிராமவர்த்தனன் என்பவர் இருக்கிறாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா?’

‘என்ன தம்பி இப்படிக் கேட்டு விட்டாய்! நான் அவரது வீட்டில்தான் வேலை பார்க்கிறேன். தாயில்லாத அவரது மகளை குழந்தைப் பருவத்திலிருந்தே செவிலித் தாயாக இருந்து வளர்த்தது நான்தானே!’

‘ஆஹா! தாயே! பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல ஆயிற்று! அம்மா! எங்களுக்காக தாங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும். சிற்பியின் மகள் பத்மாவதியிடம் சென்று, ‘நீ அருவித் தடாகத்தில் பார்த்த இளவரசன் உன்னைத் தேடி வந்திருக்கிறான். அவன் உன்னைத் தனிமையில் சந்தித்துப் பேச ஆவலாக உள்ளான்.’ என்று தகவல் சொல்லி அவளது பதிலைக் கேட்டு வரவேண்டும்!’ என்று கெஞ்சிக் கேட்டான்.

ஏற்கெனவே அவர்கள் தந்த பொன் பொருளில் மயங்கிய மூதாட்டி, மறுமொழி பேசாமல் கிளம்பிப் போனாள். போனவள் சிறிது நேரத்தில் அழுது அரற்றியபடி வீடு வந்து சேர்ந்தாள்.

‘அம்மா, ஏன் அழுகிறீர்கள்? என்ன நடந்தது?’ பதறிப் போய் கேட்டான் ராஜகுமாரன் வஜ்ரமகுடன்.

‘என்ன சொல்வது தம்பி? அவளிடம் போய் நீங்கள் சொன்னதை அப்படியே சொன்னேன். முதலில் எல்லாவற்றையும் சிரித்தபடியே கேட்டுக் கொண்டவள், ‘தனிமையில் எப்போது சந்திக்கலாம்?’ என்று இளவரசன் கேட்டு வரச் சொன்னார்’ என்றதுமே, மிகுந்த கோபத்துடன், என்னைத் திட்டித் தீர்த்ததுடன், கற்பூரக் கரைசலில் அவளது இரண்டு கைகளையும் முக்கியெடுத்து எனது இரண்டு கன்னங்களிலும் அடித்து விட்டாள். இதோ பாருங்கள்!’ என்று காட்டினாள்.

ஆம்! மூதாட்டியின் இரண்டு கன்னங்களிலும் பத்து விரல்களின் அடையாளம் பளிச்சென்று அச்சாகப் பதிந்திருந்தது.

இதைப் பார்த்ததுமே அரசகுமாரன் வஜ்ரமகுடன் முகம் வாடிப் போனது.
உடனே மந்திரி குமாரன் அவனிடம், ‘நண்பா! கலக்கம் கொள்ளாதே! அவள் உன்னைப் புறக்கணிக்கவில்லை. நீ அவளை எப்போது சந்திக்கலாம் என்பதைத்தான் இப்படி பூடகமாகச் சொல்லி அனுப்பியிருக்கிறாள்! இப்போது பௌர்ணமி காலம் என்பதால் நிலா வெளிச்சம் பூரணமாக ஜொலிக்கும் இந்தப் பத்துநாட்களுக்குப் பிறகு அவளைச் சந்திக்கலாம் என்பதைத்தான் கிழவியின் கன்னங்களில் கற்பூரம் தொட்டு அடித்து உணர்த்தியிருக்கிறாள்!’ என்றான்.

அது போலவே பத்து நாட்களுக்குப் பிறகு பத்மாவதி, மூதாட்டியிடம் தனது வீட்டின் நந்தவனத்துக்கு ராஜகுமாரனை நள்ளிரவில் வரும்படி பூடகமாகச் சொல்லியனுப்பினாள். அதை மந்திரி குமாரன் புரிந்து ராஜகுமாரனிடம் சொல்ல, அதன்படியே வஜ்ரமகுடன், இரவில் நந்தவனத்தில் பத்மாவதியைச் சந்தித்தான்.

காதலர்கள் இருவரும் நேரம் போவதே தெரியாமல் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தார்கள். கட்டித் தழுவி முத்தமழை பொழிந்தார்கள். இறுதியில் காந்தர்வ விவாகம் புரிந்து கலவியில் மூழ்கித் திளைத்தார்கள்.

விடியும் நேரம்… வஜ்ரமகுடன் புறப்படத் தயாரானபோது, பத்மாவதி அவனிடம், ‘அன்பரே நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும். அன்று அருவிக்கரை தடாகத்தில் நான் தெரிவித்த சங்கேதக் குறிப்புகளை தாங்களே புரிந்து கொண்டீர்களா அல்லது தங்களது நண்பர் விளக்கினாரா?’ என்று கேட்டாள்.

‘அதையேன் கேட்கிறாய் தேவி? நீ சொன்ன சங்கேதக் குறிப்புகளின் பொருள் எதுவும் எனக்கு விளங்கவேயில்லை. எனது நண்பன் மந்திரி குமாரன் புத்திசரீரன் தான் எனக்கு அவைகளின் பொருளை விளக்கினான்!’ என்று உண்மையைத் தெரிவித்தான்.

‘நல்லவேளை இப்போதாவது சொன்னீர்களே! கடைசியில் அவரால்தானே உங்களை நான் அடைய முடிந்தது. அதனால் அவர் என் சகோதரர் ஆவார். நான் அவருக்கு மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இருங்கள் தங்கள் தோழருக்கு என் அன்பின் காணிக்கையாக கொஞ்சம் பலகாரங்கள் தருகிறேன். கொண்டு தந்து சாப்பிடச் சொல்லுங்கள். அவருக்குக் கொடுத்து விட்டு உடனே இங்கே வந்து விடுங்கள். எனது தாய் தந்தையர் வெளியூருக்குச் சென்றிருப்பதால் எந்தப் பயமுமில்லாமல் இங்கே நாமிருவரும் சேர்ந்து சாப்பிடுவோம்!’ என்றாள்.

வஜ்ரமகுடனும் பத்மாவதி தந்த பலகாரங்களை எடுத்துப் போய் புத்திசரீரனிடம் கொடுத்துவிட்டு, நடந்த விஷயங்களைத் தெரிவித்தான்.
எல்லாவற்றையும் கேட்ட புத்திசரீரன், ‘நண்பா ராஜகுமாரா! நீ பெரும் தவறைச் செய்து விட்டாய். பத்மாவதியின் குறிப்புகளுக்கான விளக்கத்தை நான்தான் உனக்குச் சொன்னேன் என்பதை நீ அவளிடம் சொல்லியிருக்கக் கூடாது. அந்த விஷயத்தை நீ மறைத்திருக்க வேண்டும்!’ என்று கூறினான்.

‘அதனால் என்ன? அவளொன்றும் தவறாக நினைக்கவில்லை. அதனால்தானே உன்னை சகோதரன் என்று ஏற்றுக் கொண்டாள். போகட்டும், உன் சகோதரி கொடுத்தனுப்பிய பலகாரத்தை நீ சாப்பிடு. என்னை உடனே வரச் சொன்னாள்; நான் அவளுடன் உணவருந்தச் செல்கிறேன்!’ என்று சொல்லிப் புறப்பட்டான்.

‘சற்றுப் பொறு நண்பா! இதைக் கவனித்து விட்டுச் செல்!’ என்ற புத்தி சரீரன்,

பத்மாவதி தனக்குக் கொடுத்து அனுப்பிய பலகாரங்களிலிருந்து கொஞ்சத்தை எடுத்து அருகிலிருந்து நாய்க்குப் போட்டான். அதைச் சாப்பிட்ட நாய் உடனே சுருண்டு விழுந்து செத்துப் போனது.

வஜ்ரமகுடன் அதிர்ந்து போனான். ஆத்திரம் கொண்டான்.

‘அட! நாசகாரி! இத்தனை கொடியவளா அந்தப் பத்மாவதி? அவள் எதனால் இப்படிச் செய்தாள்? எனது உயிர் நண்பனையே கொல்லப் பார்த்தாளே! அவளை என்ன செய்கிறேன் பார்!’ என்று கொதித்தான்.

‘பொறுமை நண்பா, கோபப்படாதே! உன் உயிர் நண்பன் என்பதால்தான் அவள் என்னைக் கொல்ல நினைத்தாள். அவளது குறிப்புகளைப் புரிந்து கொண்டதால் எனது புத்திசாலித்தனத்தை உணர்ந்து கொண்ட பத்மாவதி, அதனாலேயே பயந்துபோய், எங்கே அவளிடமிருந்து நான் உன்னைப் பிரித்து விடுவேனோ என்ற சந்தேகத்தில் இதைச் செய்திருக்கிறாள். உன் மீது கொண்ட அவளது அபரிமிதமான காதல்தான் இதற்குக் காரணம்! அதனால் பாவம் அவளை வெறுத்து விடாதே. அவளுக்கு ஒரு சிறு பாடத்தை நான் கற்பிக்கிறேன்! அதற்கு நீ உதவி செய்தால் போதும்!’ என்றான்.

‘என்ன செய்யவேண்டும் சொல். செய்கிறேன்!’ வஜ்ரமகுடன் சொல்ல, இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே நகரத்தின் வீதிகளில் ஏதோ சலசலப்புச் சத்தம் கேட்டது.

இருவரும் வெளியே வந்து பார்க்க, மக்கள் பரபரப்புடன் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

‘நமது ராஜாவின் குழந்தை இறந்து போயிற்றாம்’ என்று எல்லோரும் பதட்டத்துடன் பேசிக் கொண்டார்கள்.

புத்திசரீரன் துள்ளினான். ‘ஆஹா! பத்மாவதிக்கு பாடம் புகட்ட வழி கிடைத்து விட்டது. நண்பா, வஜ்ரமகுடா! நான் சொல்லும்படி செய்தால் பத்மாவதியை அவள் சொந்தபந்தங்களிடமிருந்து பிரித்து ஒரேயடியாக நாம் அழைத்துச் சென்று விடலாம். செய்வாயா?’ என்று கேட்டான்.

‘இதென்ன கேள்வி. சொல், அப்படியே செய்து முடிக்கிறேன்!’ என்றான் வஜ்ரமகுடன்.

‘நண்பா ராஜகுமாரா, நீ இப்போதே புறப்பட்டு பத்மாவதியிடம் செல். அவளுடன் அன்பாகப் பேசிச் சல்லாபித்து சந்தோஷமாக இருந்துவிட்டு, மெல்ல மெல்ல அவளுக்கு மதுவைப் புகட்டி விடு. மது மயக்கத்தில் அவள் நினைவிழந்து கிடக்கும்போது அவளது இடுப்பில் உனது நகங்களால் திரிசூலம் போல கீறல் போட்டு அடையாளம் ஏற்படுத்தி விட்டு அவளது நகைகளில் விலையுயர்ந்த நகை ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து விடு. பிறகு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்!’ என்று சொல்லியனுப்பினான்.

வஜ்ரமகுடன் அதுபோலவே செய்து முடித்து, பத்மாவதியின் நகைகளில் விலை உயர்ந்ததான முத்துமாலையை எடுத்துக் கொண்டு வந்து மந்திரிகுமாரனிடம் கொடுத்தான்.

***

அடுத்தநாள் காலையில் மந்திரி குமாரன் ஒரு சந்நியாசி போல வேடமிட்டுக் கொண்டு அவ்வூர் மயானத்துக்குச் சென்று அமர்ந்து கொண்டான். ராஜகுமாரன் சந்நியாசியின் சீடன் போல வேடம் பூண்டிருந்தான்.

மந்திரிகுமாரன், வஜ்ரமகுடனிடம் பத்மாவதியின் முத்துமாலையைக் கொடுத்து, ‘நண்பா, இந்த முத்துமாலையை கடைத் தெருவுக்குக் கொண்டு சென்று எல்லோரும் பார்க்கும்படியாகக் காண்பித்து விலை பேசு. நகையை வாங்க வருபவர்களிடம் வேண்டுமென்றே மிக அதிகமாக விலை கூறு. இதனால் கடைத் தெருவில் சலசலப்பு ஏற்படும். அரசாங்கக் காவலர்கள் உன்னை வந்து விசாரிப்பார்கள். எனக்கு ஒன்றும் தெரியாது. இதை என் குருநாதர்தான் கொடுத்தனுப்பினார் என்று சொல்லி விடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்!’ என்று சொல்லியனுப்பினான்.

வஜ்ரமகுடன், மந்திரிகுமாரன் சொன்னபடியே செய்தான். அவன் முத்துமாலைக்கு மிக மிக அதிகமாக விலை கூறியதும் காவலர்கள் வந்து அவனைப் பிடித்துக் கொண்டு சென்று நகர காவல் தலைவன் முன் நிறுத்தினர்.

காவல் தலைவன் முத்துமாலையை வாங்கிப் பார்த்தான். இது தந்த சிற்பி சங்கிராமவர்த்தனன் வீட்டு முத்துமாலைதான் என்பது அவனுக்கு ஊர்ஜிதமாகத் தெரிந்தது. அந்த முத்துமாலை காணாமல் போய் விட்டதாக முன்னதாகவே அவனுக்குப் புகார் வந்திருந்தது.

காவல் தலைவன் தன் முன் நின்றிருந்த வஜ்ரமகுடனிடம் ‘சந்நியாசியே பொய் சொல்லாமல் சொல். உனக்கு ஏது இந்த முத்துமாலை?’ என்று கேட்டார்.

‘ஐயா, எனது குருநாதர்தான் இந்த முத்துமாலையை என்னிடம் தந்து விற்று வரச் சொன்னார். அவர் இப்போது இவ்வூர் மயானத்தில்தான் இருக்கிறார். நீங்கள் எதைக் கேட்க வேண்டுமானாலும் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்!’ என்றான்.

நகர காவல் தலைவன் வீரர்கள் சிலருடன் புறப்பட்டு, வஜ்ரமகுடனுடன் மயானத்துக்கு வந்தான்.

அங்கே சந்நியாசி வேடத்திலிருந்த மந்திரி குமாரனிடம் முத்துமாலையைப் பற்றி விசாரித்தான்.

அப்போது சந்நியாசி கோலத்திலிருந்த மந்திரிகுமாரன் அவனிடம், ‘காவல் தலைவரே நேற்று நள்ளிரவில் நான் மயான பூஜைக்காக இங்கே வந்தபோது சில மோகினிப் பிசாசுகள் இருப்பதைக் கண்டேன். அதிலொரு மோகினி தனது மடியில் இவ்வூர் அரசனின் மகனைக் கிடத்திக்கொண்டு, அவளது கூரிய நகங்களால் அந்தப் பாலகனுடைய நெஞ்சைக் கிழித்து அவனது இதய மலரை எடுத்து காலபைரவனுக்குச் சமர்ப்பித்து பூஜித்துக் கொண்டிருந்தாள்.
அதை நான் பார்த்துவிட்டதால் தனது கூட்டத்தாருடன் வந்து எனக்கும் தொல்லை கொடுக்க முனைந்தாள். உடனே நான் கோபத்துடன், எனது திரிசூலத்தால் அவளது இடைப் பகுதியில் சூடு வைத்துத் துரத்தி விட்டேன். அப்போது அந்த மோகினியின் கழுத்திலிருந்து அறுந்து விழுந்த முத்துமாலைதான் இது! சந்நியாசியான நான் இந்த ஆபரணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன்? அதனால்தான் எனது சீடனிடம் கொடுத்து விற்று வரும்படிச் சொன்னேன்! ’ என்றார்.

இதைக் கேட்ட காவலர் தலைவன் பதறிப் போனான். திகிலில் ஆழ்ந்தான்.
இந்த முத்துமாலைக்கு சொந்தக்காரி பத்மாவதி. அப்படியானால் அவள் மோகினிப் பிசாசா? அவள்தான் மன்னனின் மகளைக் கொன்றாளா?

அடுத்த நொடி காவல் தலைவன் அரண்மனைக்குப் பறந்தோடிப் போய் மன்னனிடம் நடந்தது அனைத்தையும் கூறினான்.

மன்னனும் அதிர்ந்து போனான். சந்நியாசி சொன்னது உண்மைதானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக பத்மாவதியை அழைத்து வரச் சொல்லி, பணிப்பெண்களை விட்டு அவளை சோதிக்கச் சொன்னான்.

பணிப்பெண்கள் பரிசோதித்து விட்டு சந்நியாசி சொன்னதுபோலவே பத்மாவதியின் இடுப்பில் அவர் சூடு போட்ட திரிசூலக் குறி இருக்கிறது என்று கூற, பத்மாவதி மோகினிப் பிசாசுகளில் ஒருத்தி என்கிற முடிவுக்கு வந்தான் அரசன்.

அவள்தான் தனது மகனைக் கொன்றவள் என்பதால் அவளுக்கு என்ன தண்டனை விதிப்பது என்று ஆலோசித்தபோது, போலி சந்நியாசியான மந்திரிகுமாரன் சபைக்கு வந்து மன்னனிடம் கூறினான்.

‘அரசே, இந்தப் பெண் பூர்வ ஜென்ம சாபத்தால் மோகினிப் பிசாசு ஆனவள். இவளைக் கொன்று நீ பெரும் பழிக்கு ஆளாகி விடாதே. இப்பெண்ணை உனது நாட்டை விட்டு துரத்தி விடு. அது போதும்!’ என்று சொல்ல மன்னனும் அது போலவே பத்மாவதியை நாடு கடத்த உத்தரவிட்டான். பத்மாவதியின் பெற்றோர்கள் அழுது கதறி முறையிட்டும், அவன் மனம் இரங்கவில்லை.
காவலர்கள் பத்மாவதியை கட்டிய புடவையுடன் இழுத்துச் சென்று நடுக்காட்டில் விட்டு விட்டு ஊர் திரும்பினார்கள்.

அடர்ந்த காட்டில் தன்னந்தனியே நிர்க்கதியாக விடப்பட்ட பத்மாவதிக்கு இது அத்தனையும் மந்திரிகுமாரன் சூழ்ச்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தாலும், வேறு போக்கிடம் இல்லாததால் எதிர்காலத்தை நினைத்து பயந்து கண்ணீர் விட்டாள்.

அப்போது அங்கு வந்த வஜ்ரகுமாரனும், புத்திசரீரனும் அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினார்கள். பத்மாவதிக்கு சிறு பாடம் கற்பித்து அரசகுமாரனுடன் ஒன்று சேர்ப்பதற்காகவே இவ்விதம் நடந்து கொண்டதாகச் சொல்லி புத்திசரீரன் பத்மாவதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
பின் வஜ்ரமகுடன் பத்மாவதியை தனது ராஜ்ஜியத்துக்கு அழைத்துப் போய் அவளை மணந்து கொண்டு ஆனந்தமாக வாழ்ந்தான்.

ஆனால், இது எதுவும் தெரியாமல் காட்டில் பத்மாவதியை தேடித் திரிந்த அவளது பெற்றோர்கள் காட்டு மிருகங்கள் அவளைக் கொன்று தின்று விட்டதாக முடிவெடுத்து கலங்கிப் போனார்கள். அந்த வருத்தத்திலேயே தந்த சிற்பி மனம் உடைந்து இறந்து போனார். கணவன் இறந்த துயரத்திலேயே மனைவியும் அடுத்த சில நாட்களில் மாண்டு போனாள்.’

– என்று கதை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம், கேள்வி கேட்டது.

‘இந்தக் கதையில் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உண்டு. அதை நீர்தான் தீர்த்து வைக்க வேண்டும். பத்மாவதியின் பெற்றோர்கள் இறந்த தோஷமானது யாரைச் சேரும்? வஜ்ரமகுடனையா? புத்திசரீரனையா? பத்மாவதியையா? பதில் சொல்! விடை தெரிந்தும் நீ சொல்லாவிட்டால் உனது தலை வெடித்துச் சிதறி விடும்!’ என்றது.

விக்கிரமாதித்தன் மெல்லச் சிரித்தபடி, ‘பெரும் சாமர்த்தியசாலியான வேதாளமே சொல்கிறேன் கேள்! பத்மாவதியின் பெற்றோர்கள் இறந்த பாவமானது நீ சொன்ன மூவரையுமே சேராது. அந்தப் பாவம் மன்னன் கர்ணோத்பலன்னையே சேரும்.’ என்றான்.

‘உன் பதில் விசித்திரமாயிருக்கிறது! நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் காரணம் இந்த மூவர்தான். அதனால்தானே அந்த முதியோர்கள் மனம் உடைந்து மாண்டு போனார்கள்? பாவம்! இதில் அரசன் என்ன செய்தான்?’

‘சொல்கிறேன் கேள் வேதாளமே! மந்திரிகுமாரன் தனது நண்பனும் எஜமானனுமான அரசகுமாரனுடன் பத்மாவதியை சேர்த்து வைப்பதற்காகத்தான் அனைத்தையும் செய்தான். அது அவனது கடமையும்கூட! அதேபோல ராஜகுமாரனும் பத்மாவதியும் ஆழ்ந்த காதல் மோகத்தின் காரணமாகவே இப்படி நடந்து கொண்டார்கள். அவர்களைப் பொருத்தவரை வாழ்க்கையில் தாங்கள் ஒன்று சேர்வதற்காகவே செய்த எதுவும் பாவமில்லை.

ஆனால் ஒரு நாட்டின் மன்னன் என்பவன் எது ஒன்றையும் தீர விசாரிக்காமல் செயல்படக்கூடாது. அதை கர்ணோத்பலன் மன்னன் மறந்துவிட்டான். அவன் தனது ராஜதர்மத்தைக் கைவிட்டு ஆழ்ந்து யோசிக்காமலும் தீர விசாரிக்காமலும் தவறான முடிவுக்கு வந்து அநியாயமாகத் தீர்ப்பளித்து விட்டான். அதனாலேயே பத்மாவதியின் பெற்றோர் உயிர் இழக்க நேர்ந்தது. எனவே அந்தப் பழி பாவம் முழுவதும் மன்னனையே சேரும்!’ என்றான்.

விக்கிரமாதித்தனுடைய இந்தச் சரியான பதிலாலும், அவனது மௌனம் கலைந்து போனதாலும் அவனுடைய தோளில் இருந்த வேதாளம் புறப்பட்டு மீண்டும் முருங்கை மரத்துக்கே சென்று ஏறிக் கொண்டது.

விக்கிரமாதித்தனும் விடாமுயற்சியுடன் மீண்டும் முருங்கை மரத்துக்குச் சென்று தலைகீழாகத் தொங்கிய வேதாளத்தைப் பிடித்து வரப் புறப்பட்டான்.

(தொடரும்)

குரங்குக்கு அறிவுரை கூறிய கொக்கு

பஞ்ச தந்திரக் கதைகள் / 1.10

the-speaking-tree_med_hrஅது ஒரு குளிர்காலம். இரவு நேரம். காட்டில் இருந்த ஒவ்வொரு விலங்கும் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கூனிக்குறுகித் தவித்தன.

அப்போது ஒரு மரத்தில் தங்கியிருந்த குரங்குக் கூட்டம் ஒன்று தொலைவில் உள்ள ஒரு குளத்தின் கரையில் நெருப்புப் பொறிகள் பறப்பதைக் கண்டது.

‘ஆகா! அங்கே நெருப்பு உள்ளது. நாம் அனைவரும் அங்கு சென்று நெருப்பில் குளிர் காயலாம்’ என்று நினைத்து அந்த இடத்துக்கு விரைந்தன.

அந்தக் குளத்தின் கரையில் சுமுகன் என்ற ஒரு கொக்கு இருந்தது. அதற்கு நன்றாகவே தெரியும், குளக்கரையில் பறக்கும் பொறிகள் நெருப்புப்பொறிகள் அல்ல அவை மின்மினிப்பூச்சிகள்தான் என்று.

குரங்குக் கூட்டம் குளக்கரைக்கு வந்ததும், நெருப்புப் பொறிகள் என்றெண்ணி மின்மினிப் பூச்சிகளை நெருங்கி குளிர் காய முயற்சிக்க, இதனைக் கண்ட சுமுகன், அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு குரங்கிடம், ‘நீங்கள் நினைப்பது போல இவை நெருப்புப்பொறிகள் அல்ல. இவை மின்மினிப்பூச்சிகள்’ என்று அறிவுரை கூறியது.

உடனே, அந்தக் குரங்கு கோபப்பட்டு, ‘நீ யார்? எனக்குப் புத்திசொல்ல? உனக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று கேட்டு, அந்தக் கொக்கின் கழுத்தைப் பிடித்து, நெறித்து அருகில் இருந்த பாறையில் அடித்துக் கொன்று விட்டது.

‘ஆதலால், தீயவர்களுக்குப் புத்திகூறுவது நமக்கே துன்பமாக முடிந்துவிடும்’ என்று நரியாகிய கரடகன் கூறியது. இதனைக் கேட்ட வருந்திய சகோதர நரி தமனகன், ‘ஆம்! நான் தவறுசெய்துவிட்டேன்’ என்று துக்கப்பட்டது.

‘இப்போது நீ வருந்தி என்ன பயன்? உன் தீய புத்தியால் நீ அழியப்போகிறாய். எப்படித் தெரியுமா? நல்லவனும் தீயவனும் கண்டெடுத்த புதையல் கதைபோலத்தான்’ என்றது கரடகன்.

‘நல்லவனும் தீயவனும் எந்தப் புதையலைக் கண்டெடுத்தனர்?’ என்று கேட்ட தமனகனுக்கு, கரடகன் அந்தக் கதையினைக் கூறத் தொடங்கியது.

1.11. இரண்டு நண்பர்கள் கண்டெடுத்த புதையல்

ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் ஒருவன் நல்லவன். மற்றொருவன் தீயவன். அவர்கள் இருவரும் வணிகம் செய்வதற்காக வேறு ஓர் ஊருக்குச் சென்றனர். செல்லும் வழியில் ஒரு புதையலைக் கண்டெடுத்தான் நல்லவன். அதனை அவன் தீயவனான தன் நண்பனிடம் தெரிவித்தான்.

தீயவன், ‘நண்பா! இந்தப் புதையலை நாம் இப்போது நமது ஊருக்குக் கொண்டுசெல்லவேண்டாம். இதில் உள்ள பணத்தில் சிறிதளவு மட்டும் நமது செலவுகளுக்காக எடுத்துக்கொண்டு, மற்றவற்றை இங்குள்ள ஒரு மரத்தடியில் புதைத்து வைத்துவிட்டுச் செல்லலாம்’ என்று தந்திரமாகக் கூறினான்.

தீயவனின் பேச்சை நம்பிய நல்லவன், அதுபோலவே செய்யலாம் என்று கூற, இருவரும் அந்தப் புதையலில் இருந்து சிறிதளவு பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, புதையலை ஒரு மரத்தடியில் புதைத்துவைத்துவிட்டு ஊருக்குத் திரும்பினர்.

மறுநாள் தீயவன் மட்டும் அந்த மரத்தடிக்குச் சென்று அந்தப் புதையலை எடுத்து வந்து வேறிடத்தில் ஒளித்துவைத்துவிட்டான்.

சில நாட்கள் கழித்து தீயவன் தன் நண்பனிடம் சென்று, ‘நாம் ஒளித்துவைத்த புதையலை எடுத்து வருவோம் வா!’ என்று தந்திரமாகக் கூறி, அவனையும் அழைத்துக்கொண்டு மரத்தடிக்குச் சென்றான்.

நல்லவன் அந்த இடத்தினைத் தோண்டினான். புதையல் இல்லை.

உடனே, தீயவன் தன் நண்பனைப் பார்த்து, ‘நீதான் எனக்குத் தெரியாமல் இங்கு வந்து இந்தப் புதையலை எடுத்துக்கொண்டு விட்டாய். எனவே எனக்குரிய பங்கினை உடனே தந்துவிடு. என்னை ஏமாற்ற நினைக்காதே!’ என்று கூறிச் சண்டையிட்டான்.

நல்லவன் எவ்வளவோ எடுத்துக்கூறியும் தீயவன் சமாதானமாகவில்லை. தீயவன் ராஜாவிடம் சென்று தனக்கு நீதிவேண்டும் என்று முறையிட்டான்.
ராஜா, நீதிபதியை அழைத்து இவர்களை விசாரித்து, இந்தச் சிக்கலுக்குத் தீர்வுகூறுமாறு கட்டளையிட்டார். நீதிபதி தாம் ஐந்து நாட்களுக்குள் இந்தச் சிக்கலுக்குத் தீர்வுகூறுவதாக ராஜாவிடம் வாக்களித்துவிட்டு, இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்தார்.

இருவரும் நடந்தவற்றை நீதிபதியிடம் கூறினர். தீயவன், தன்னிடம் ஒரு சாட்சி இருப்பதாகக் கூறினான். நாளை அந்த சாட்சியை அழைத்துவருமாறு கூறிய நீதிபதி, இருவரையும் அனுப்பிவைத்தார்.

தன் வீட்டிற்கு வந்த தீயவன், தந்தையிடம் சென்று, ‘அப்பா! நீங்கள் நாளை எனக்காகப் பொய்சாட்சி கூறினால் எனக்குப் பெரிய புதையல் சொந்தமாகிவிடும்’ என்றான்.

‘எவ்வாறு பொய்சாட்சி சொல்லவேண்டும்?’ என்று கேட்ட தந்தைக்கு அவன் தன் திட்டத்தைக் கூறினான். ‘நீங்கள் நாளை அந்த மரத்தடியில் உள்ள ஒரு பொந்தில் சென்று மறைவாக அமர்ந்திருங்கள். நான் அந்த நீதிபதியையும் என் நண்பனையும் மற்றும் சிலரையும் அழைத்துக் கொண்டு அங்கு வருவேன்.

நீதிபதி அந்த மரத்திடம், ‘அந்தப் புதையலை யார் கொண்டுசென்றது?’ என்று விசாரிப்பார். அப்போது நீங்கள், அந்த மரம்பேசுவதுபோலவே ‘என் நண்பன்தான் எடுத்துச் சென்றான்’ என்று கூறவேண்டும்’ என்று அந்தத் திட்டத்தினை எடுத்துக்கூறினான்.

அதற்கு அவனின் தந்தை, ‘தகாத காரியம் செய்து சுகமாக இருக்கவேண்டும் என நினைத்து, கொக்கு செய்த முட்டாள்தனமான காரியம் போலவே, நீ செய்யும் காரியமும் இருக்கிறது’ என்று கூறினார்.

‘அப்படி கொக்கு செய்த முட்டாள்தனமான காரியம் என்ன?’ என்று கேட்ட தன் மகனுக்குத் தந்தை அந்தக் கொக்கின் கதையினைக் கூறத் தொடங்கினார்.

1.11.1 . முட்டாள் கொக்கு

ஓர் அழகான ஏரிக்கரையில் இரண்டு கொக்குகள் வாழ்ந்து வந்தன. பெண் கொக்கு முட்டையிட்டுப் பொரிக்கும் குஞ்சுகளையெல்லாம் ஒரு பாம்பு விழுங்கிவந்தது. அந்தப் பாம்பினைத் தடுக்கும் வலிமையும் அறிவும் இல்லாத முட்டாளாகிய ஆண் கொக்கு வருத்தத்தோடு இருந்தது.

‘இனிமேல் முட்டையிட்டுப் பொரிக்கும் குஞ்சுகளையாவது காப்பாற்றிவிட வேண்டும்’ என்று உறுதியெடுத்துக்கொண்டது.

நாட்கள் கடந்தன. பெண் கொக்கு புதிதாக முட்டையிட்டுக் குஞ்சுகள் பொரித்தது. ‘அவற்றைக் காப்பாற்ற வழியுண்டா?’ என்று ஆண் கொக்கும் பெண் கொக்கும் ஆலோசித்தன. அப்போது, ஆண் கொக்கின் நண்பனான குளிரன் என்ற நண்டு அங்கே வந்தது.

நண்டு குளிரன், அந்த இரண்டு கொக்குகளையும் பார்த்து, ‘என்ன ஆழ்ந்த யோசனையில் இருக்கிறீர்கள்?’ என்று விசாரித்தது. ஆண் கொக்கு நடந்தவற்றை அதனிடம் தெரிவித்து, ‘எப்படியாவது இம்முறை எங்களின் குஞ்சுகளைக் காப்பாற்றவேண்டும். ஆனால் என்ன வழி என்றுதான் புலப்படவில்லை!’ என்று கவலையுடன் கூறியது.

அதற்கு குளிரன் சற்று யோசித்துவிட்டு, ‘பாம்பைக் கொல்கிற வழியினை நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று கூறியது. இரண்டு கொக்குகளும் ஆர்வத்தோடு, ‘என்ன வழி?’ என்று கேட்டன.

‘நமது ஏரிக்கரையில் உள்ள கீரிப்பிள்ளையின் வளை முதல், பாம்பின் புற்று வரை மீன்களை இறைத்து வைத்துவிடவேண்டும். அவ்வாறு செய்துவிட்டால் பாம்பு இறந்துவிடும்’ என்று தன் திட்டத்தினைக் கூறியது குளிரன்.

இந்தத் திட்டத்தினைக் கேட்ட கொக்குகள் மிகவும் மகிழ்ந்தன. ஆண்கொக்கு உடனே செயலில் இறங்கியது.

அது ஏரியிலிருந்து மீன்கள் பலவற்றைப் பிடித்துக் கொண்டு வந்து கீரிப்பிள்ளையின் வளை முதல் பாம்பு இருக்கும் புற்றுவரை தொடர்ந்து இறைத்து வைத்தது.

மீன் வாசத்தை நுகர்ந்த கீரிப்பிள்ளை தன் வளையை விட்டு வெளியே வந்தது. வரிசையாக இருந்து மீன்களைத் தின்றுகொண்டே பாம்பின் புற்று வரை வந்தது. புற்றிலிருந்து வெளியே வந்த பாம்பினையும் கடித்து, அதனைக் கொன்றது. பின்னர் கொக்கின் குஞ்சுகள் இருக்கும் பகுதிக்கும் வந்தது. கொக்கின் குஞ்சுகளையும் பிடித்துத் தின்றது.

‘இப்படி, ஓர் எதிரியை அழிக்கத் திட்டமிட்டு, புதிதாக ஓர் எதிரியை உருவாக்கிக்கொண்ட முட்டாள் கொக்கைப்போல நீ திட்டமிடுகிறாய்’ என்று தன் மகன் தீயவனுக்கு அவனது தந்தை அறிவுரை கூறினார்.

தீயவன் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. வலுக்கட்டாயமாக அவரை இழுத்து வந்து அந்த மரப் பொந்தில் மறைவாக உட்காரவைத்தான்.

மறுநாள், அந்தத் தீயவன் நீதிபதி முதலானவர்களையும் தன் நண்பனையும் அழைத்துக்கொண்டு அந்த மரத்தடிக்கு வந்தான்.

எல்லோரிடமும் அந்த மரத்தைக் காட்டி, இதுதான் எனக்குச் சாட்சி என்றான்.

நீதிபதி அந்த மரத்தினை ‘தெய்வீக மரம்’ என்று நினைத்து, அதனிடம் விசாரித்தார்.

மரப்பொந்தில் ஒளிந்திருந்த தந்தை, ‘தீயவனின் நண்பன்தான் புதையலைக் கொண்டுசென்றான்’ என்று மரம்போலவே பேசிச் சாட்சியளித்தார். நீதிபதி மரத்தின் சாட்சியை ஏற்றுக்கொண்டார்.

ஆனால், நல்லவனோ அந்த மரத்தில் ஏதோ சூழ்ச்சி உள்ளதாக நம்பினான். அவன் மரத்தைச் சுற்றிவந்து ஆராய்ந்தான். அதில் ஒரு பொந்து இருப்பதனைக் கண்டான். உடனே, அந்த மரப்பொந்தில் தீயை வைத்தான்.

தீயவனின் தந்தை தீயின் வெப்பத்தைப் பொறுத்துக்கொண்டு சிறிது நேரம் அந்தப் பொந்திலேயே அமைதியாக இருந்தார். பின்னர் வெப்பம் அதிகமானவுடன் அவர் உடல் தீப்பற்றிக் கொண்டது. வேறு வழியின்றி அலறியடித்துக்கொண்டு, பொந்தைவிட்டு வெளியே வந்தார்.

அவர் நீதிபதியிடம் உண்மையைக் கூறினார். உடலில் தீக்காயம் அதிகமாக ஏற்பட்டதால் இறந்துவிட்டார்.

நடந்த விஷயங்களை நீதிபதி மன்னனிடம் கூறினார். மன்னன் தானே நேரடியாக அந்தத் தீயவனை விசாரித்தார். அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். புதையலைத் தன் நண்பனிடம் ஒப்படைத்தான். ராஜா தீயவனுக்கு மரணதண்டனை விதித்தார்.

இவ்வாறு இரண்டு நண்பர்கள் கண்டெடுத்த புதையல் கதையினைக் கூறிய கரடகன், தமனகனைப் பார்த்து, ‘பாம்பினை எவ்வளவு நாட்கள் பாலூற்றி வளர்த்தாலும் அது தன்னை வளர்த்தவரையும் இரக்கமின்றிக் கொத்தத்தான் செய்யும். அதுபோலத்தான் நீயும். உன்னுடன் இருக்க எனக்கு பயமாகவே உள்ளது. இனிமேல் நான் உன்னிடம் தேவதத்தனைப் போலத்தான் நடந்துகொள்ள வேண்டும்’ என்றது.

‘யார் அந்த தேவதத்தன்? அவன் எப்படி நடந்துகொள்வான்?’ என்று தமனகன் கேட்க, கரடகன் தேவதத்தன் கதையைச் சொல்லத் தொடங்கியது.

1.12. தேவதத்தனின் புத்திசாலித்தனம்

ஒரு நகரத்தில் தேவதத்தன் என்ற இரும்பு வியாபாரி ஒருவர் வாழ்ந்துவந்தார். அவரது வியாபாரத்தில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. எனவே இந்த இரும்புத் தொழிலை விட்டுவிட்டு வேறொரு நகரத்துக்குச் சென்று ஏதாவது ஒரு புதிய தொழிலைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டார்.

அப்படிச் செல்வதற்கு முன்பாக தன்னிடம் மீதமிருந்த இரும்புகளைத் தன் நெருங்கிய நண்பரிடம் ஒப்படைத்துவிட்டு, பிறகு வந்து பெற்றுக் கொள்வதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்ட தேவதத்தன், பக்கத்திலிருந்த வேறு ஒரு நகரத்துக்குச் சென்றார். அங்கு ஒரு புதிய தொழிலினைத் தொடங்கி நடத்தினார்.

ஆனால் தேவதத்தனின் துரதிஷ்டம், அந்தத் தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டது. ஆதலால், அவர் மீண்டும் தன்னுடைய பழைய நகருக்கே திரும்பினார்.

மீண்டும் தன்னுடைய பழைய தொழிலையே தொடங்க விரும்பிய தேவதத்தன், தன் நண்பரிடம் சென்று தாம் முன்பு கொடுத்துவைத்திருந்த இரும்புகளைத் திரும்பத் தருமாறு கேட்டார்.

அதற்கு அவரது நண்பர், ‘உங்கள் இரும்புகளையெல்லாம் என் வீட்டில் சுற்றித் திரிந்த எலிகள் தின்றுவிட்டன’ என்று கூறி அவரை ஏமாற்றினார்.

‘எலிகள் எப்படி இரும்பை உண்ணும்?’ என்று அவரிடம் தேவதத்தன் கேட்டதற்கு, அவர் ‘என் வீட்டு எலிகள் இரும்பை உண்ணும்’ என்று உறுதிபடக் கூறினார்.

தனது நண்பர் தன்னை ஏமாற்றுகிறார் என்பதைப் புரிந்துகொண்ட தேவதத்தன் அவரிடமிருந்து தன்னுடைய இரும்புகளை மீட்க வழியில்லாமல் தவித்தார்.

மனத்தில் கோபம் எழ, ‘தன்னை ஏமாற்றிய நண்பரைத் தானும் ஏமாற்ற வேண்டும்’ என்று முடிவுக்கு வந்தார்.

ஒருநாள், தனது நண்பருக்குத் தெரியாமல் அவரின் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வேறு ஒரு வீட்டுக்குச் சென்ற தேவதத்தன், அவர்களை அங்கேயே விளையாடச் செய்துவிட்டு தனது வீட்டுக்குத் திரும்பினார்.
அப்போது தன்னுடைய பிள்ளைகளைக் காணாமல் அவர்களைத் தேடிய அலைந்த தேவதத்தனின் நண்பர், தேவதத்தனின் மீது சந்தேகப்பட்டு அவரின் வீட்டிற்கு வந்து விசாரித்தார்.

தேவதத்தன், ‘ஆமாம்! உனது பிள்ளைகள் இங்குதான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது உன் பிள்ளைகளைப் பறவையொன்று தூக்கிச் சென்றுவிட்டது’ என்று கூறினார்.

‘என்ன விளையாடுகிறாயா? அது எப்படி பிள்ளைகளைப் பறவை தூக்கிச் செல்லும்?’ என்று கேட்ட நண்பரிடம் தேவதத்தன், ‘அது அப்படித்தான். சில பறவைகள் பிள்ளைகளைத் தூக்கிச் செல்லும்’ என்று உறுதிபடக் கூறினார்.

தேவதத்தன் தன்னை ஏமாற்றுகிறார் என்பதனை உணர்ந்த அவரது நண்பர், ஊர்த்தலைவரிடம் சென்று முறையிட்டார். ஊர்த் தலைவர் அழைத்து விசாரித்தார். அவரிடம் அதே பதிலையே கூறினார் தேவதத்தன்.

அதற்கு ஊர்த் தலைவர், ‘இது என்ன அதிசயம்? பிள்ளைகளைப் பறவை தூக்கிச் செல்லுமா?’ என்றார். அதற்கு தேவதத்தன், ‘இது ஒன்றும் அதிசயம் இல்லை. இரும்பை எலி தின்பதுதான் அதிசயம்’ என்று கூறினார்.

‘இரும்பை எலி உண்ணுமா?’ என்று கேட்ட ஊர்த்தலைவரிடம் தேவதத்தன், ‘இரும்பை எலி தின்றதாகத்தான் என் நண்பர் கூறினார். நீங்கள் வேண்டுமானால் அவரிடமே விசாரியுங்கள்’ என்றார்.

உடனே, தேவதத்தனின் நண்பர் தன்னுடைய தவறினை ஊர்த் தலைவரிடம் ஒப்புக்கொண்டார். தேவதத்தனின் இரும்பினைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதியளித்தார். உடனே, தேவதத்தன் தன் நண்பரின் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கும் இடத்தினைத் தெரிவித்தார்.

இவ்வாறு அந்தக் கதையினைச் சொல்லி முடித்த கரடகன், தமனகனைப் பார்த்து, ‘கூறிய பொருளைத் தெரிந்துகொள்ளாதவன் கல்லுக்குச் சமம். அவனுக்கு அறிவுரை கூறுவதில் எந்தப் பயனும் இல்லை’ என்று கூறியது.

பின்னர் இருவரும் சிங்கராஜாவின் குகைக்குச் சென்றனர். அங்கு சஞ்சீவகன் பிணமாகக் கிடந்தான். அதன் அருகில் சிங்கராஜா கவலையோடு அமர்ந்திருந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த கரடகனுக்கு அழுகை வந்தது.

ஆனால், தமனகனோ மகிழ்வோடு, ‘ராஜா! ஏன் வருத்தப்படுகிறீர்கள்? தாங்கள் தங்களின் எதிரியைத்தான் கொன்றுள்ளீர்கள். எதிரியைக் கொல்லவேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்லியுள்ளன. ராஜாவைக் கொல்லத் துணிந்தவன் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்லும் உரிமை ராஜாவுக்கு உள்ளது. ராஜாவுக்கும் ராஜாங்கத்திற்கும் துரோகம் செய்கிறவர்களை ராஜா கொலை செய்யலாம். அதில் தவறில்லை. இதற்காகத் தாங்கள் கவலைப்படவேண்டியதில்லை. மெய், பொய், கடுமை, மென்மை, கொலை, இரக்கம் போன்ற அனைத்தும் ராஜாவுக்கு இருக்கவேண்டும் என்று ராஜநீதி கூறியுள்ளது’ என்று கூறி தமனகன் ராஜாவை மகிழ்வித்தது.

சிங்கராஜாவும் தமனகனின் கருத்தினை ஏற்றுக்கொண்டு தன் கவலையைவிட்டார். முன்புபோலவே மகிழ்வுடன் தன் ராஜாங்கத்தை அந்தக் காட்டில் நடத்தினார்.

(தொடரும்)