பாம்பைக் கொன்ற காகம்

பஞ்ச தந்திரக் கதைகள் / 1.5

Crane-Bird-Coloring-Pictures-for-Kids-Print-2புதர்கள் மண்டிய ஒரு சோலைவனம். அதில் உள்ள ஒரு பெரிய மரத்தின் சிறிய கிளையில் ஓர் ஆண் காக்கையும் ஒரு பெண் காக்கையும் இணைந்து கூடுகட்டி வாழ்ந்துவந்தன.

அதே சோலைவனத்தில் காக்கைகள் வசித்த மரத்தின் அடியிலேயே பாம்புப் புற்று ஒன்று இருந்தது. அந்தப் புற்றில் ஒரு நாகப்பாம்பு தங்கியிருந்தது.
நாள்தோறும் ஆண் காக்கை இரைதேடி நெடுந்தொலைவு சென்றுவிடும். பெண் காக்கை தினமும் முட்டையிட்டுவிட்டுச் சற்று தூரம் பறந்து சென்று இரைதேடும்.

இதனைக் கண்காணித்த அந்த நாகப்பாம்பு, காக்கையின் முட்டைகளை உண்ண நினைத்தது. இரண்டு காக்கைகளும் இல்லாத நேரத்தில் மரத்தில் ஏறிய அந்த நாகப்பாம்பு, காகத்தின் முட்டைகளை உடைத்துக் குடித்துவிட்டது.
இரைதேடித் திரும்பிய பெண் காக்கை தன் முட்டைகள் உடைக்கப்பட்டு, உண்ணப்பட்டிருப்பதைப் பார்த்து மிகவும் மனம் வருந்தியது. இதனை அறிந்த ஆண் காக்கையும் மனம் வெதும்பியது.

இவ்வாறு செய்தது யாராக இருக்கும்? என்பதனை அறிவதற்காக பெண் காக்கை, ஒருநாள் முட்டையிட்டுவிட்டு, வழக்கம்போல இரைதேடிச் செல்வதைப் போலத் தன் கூட்டைவிட்டு வெளியே சென்றது. பின்னர், அது பக்கத்து மரத்தின் கிளையில் மறைந்து அமர்ந்தபடி, தன் கூட்டைக் கவனித்தது.

அப்போது, அந்தப் புற்றுக்குள்ளிருந்த நாகப்பாம்பு வெளியேவந்து, மரத்தில் ஏறி காக்கையின் கூட்டினுள் இருந்த புதிய முட்டைகளை உடைத்துக் குடித்தது. தன் கண் முன்னே தன் முட்டை அழிக்கப்படுவதைப் பார்த்த காக்கை பதறியது. ஆனாலும், அதனால் அந்த நாகப்பாம்பினை ஒன்றும் செய்யமுடியவில்லை. தன்னுடைய இணையான ஆண் காக்கை கூடுதிரும்பியதும் நடந்ததைக் கூறியது.

‘இந்த நாகப் பாம்பினை எப்படித் தடுப்பது? தங்களது முட்டைகளை அதனிடமிருந்து எப்படிப் பாதுகாப்பது?’ ஆண் காக்கைக்கு ஒரு யோசனையும் தோன்றவில்லை.

உடனே, அதற்கு தன்னுடைய அறிவாளி நண்பனான நரியின் ஞாபகம் வந்தது. அதனிடம் சென்று இதற்கு ஒரு வழி சொல்லும்படிக் கேட்கலாம் என்று நினைத்து நரியிடம் சென்றது. அதனிடம் தங்கள் பிரச்னையைக் கூறியது.

‘நண்பா! அந்தப் பாம்பு இப்படிச் செய்வதால் எனது வம்சமே இல்லாமல் ஆகிவிடும் போலிருக்கிறது. அந்த நாகப்பாம்பிடமிருந்து எங்களது முட்டைகளைக் காப்பாற்றிக்கொள்ள நீதான் எனக்கொரு வழி சொல்லவேண்டும்’ என்று கேட்டது.

’நண்பனே கலங்காதே! இதற்கொரு வழி இருக்கிறது!’ என்று ஆண் காகத்துக்கு ஆறுதல் கூறிய நரி, ‘ஒரு நண்டு பேராசை காட்டி கொக்கைக் கொன்றது போலத்தான் நாமும் ஒரு தந்திரத்தால் அந்த நாகப்பாம்பினைக் கொல்ல வேண்டும்’ என்று கூறியது. ஆண் காகத்துக்குப் புரியவில்லை.

‘அது என்ன கதை? நண்டு எப்படிக் கொக்கைக் கொன்றது?’ என்று அது நரியிடம் கேட்டது.

நண்டு கொக்கைக் கொன்ற கதையினை நரி, ஆண் காக்கைக்குக் கூறத் தொடங்கியது.

1.5.1. கொக்கைக் கொன்ற நண்டு

ஓர் அழகான குளம் ஒன்றில் மீன்கள் ஏராளமாக இருந்தன. அந்தக் குளத்தின் மீன்களை அவ்வப்போது சாப்பிட்டு ஜீவித்து வந்த வயதான கொக்கொன்று அன்றும் அந்தக் குளக்கரையில் வழக்கம் போல அமர்ந்திருந்தது. ஆனால், அன்று அது தன் மனத்தினுள் ஒரு திட்டத்தோடு அமர்ந்திருந்தது. அத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அது தன் முகத்தினைச் சோகமாக வைத்துக்கொண்டு துயரமாக இருப்பது போல நடித்தது.

குளத்திலிருந்த மீன்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவை தங்களுக்குள் ஒன்றுகூடி, ‘வழக்கமாக நம்மில் சிலரை இந்தக் கொக்கு இன்னேரம் சாப்பிட்டுத் தீர்த்திருக்குமே! ஏன் இன்று சோகமாக இருக்கிறது?’ என்று பேசிக் கொண்டன.

அவற்றில் ஒரு தைரியமான மீன், கொக்கிடம் தங்களது சந்தேகத்தை கேட்டே விட்டது. ‘என்ன கொக்கே! இன்று என்னாயிற்று? எங்களில் யாரையுமே உண்ணாமல் சோகமாகக் குளக்கரையிலேயே உட்கார்ந்திருக்கிறாயே?’ என்றது. கொக்கு தந்திரமாகப் பதில் கூறத்தொடங்கியது.

‘காலையில் நான் பக்கத்து ஊர் வழியாகப் பறந்து வரும்போது வழியில் ஒரு மீன்பிடிப்பவன், தன் தோழனிடம் பேசிக்கொண்ட செய்தியைக் கேட்டேன். அதனால்தான் நான் சோகமாக இருக்கிறேன்’ என்றது.

‘என்ன பேசினான்?’ என்றது மீன்.

‘இன்று மாலை அவன் இந்தக் குளத்திலுள்ள அனைத்து மீன்களையும் வலைபோட்டுப் பிடித்துச் செல்லப் போவதாகக் கூறினான்’ என்றது கொக்கு.

‘ஐயோ! அப்படியா? அப்படியானால் எங்கள் வாழ்க்கை இன்றோடு முடியப்போகிறதா?’ என்று அஞ்சியது மீன்.

‘ஆம்! நீங்கள் அனைவரும் அந்த மீன் பிடிப்பவனால் இன்று இறக்கப்போகிறீர்கள்! அதன் பின்னர், எனக்கு இரை கிடைக்காது என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. உங்கள் அனைவரையும் நான் இன்றோடு பிரியப் போகிறேனே என்பதால்தான் நான் வருத்தப்படுகிறேன். உங்களைக் காப்பாற்ற ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று வஞ்சகமாகக் கூறியது கொக்கு.

கொக்கு சொன்ன செய்தியை அந்த மீன் குளத்திலிருந்த மற்ற அனைத்து மீன்களிடமும் கூறியது. எல்லா மீன்களும் பயந்துபோய் கொக்கிடம், ‘கொக்கே! நாங்கள் அனைவரும் உயிர்ப்பிழைக்க நீங்கள்தான் ஏதாவது ஒரு வழிசொல்ல வேண்டும்’ என்று கெஞ்சின.

‘இந்த ஊருக்கு வெயியே காட்டுக்குள் ஒரு மிகப்பெரிய குளம் உள்ளது. அங்கு மீன்கள் பல மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றன. மீன்பிடிப்பவர்கள் அந்தக் குளத்துக்குச் செல்வதே இல்லை. நீங்கள் அனைவரும் அந்தக் குளத்திற்குச் சென்றுவிட்டீர்கள் என்றால், ஆபத்திலிருந்து தப்பி விடலாம்!’ என்று கொக்கு யோசனை கூறியது.

‘நாங்கள் எப்படி அந்தக் குளத்திற்குச் செல்வது? அதற்கு நீங்கள்தான் வழி கூறவேண்டும்’ என்றன மீன்கள்.

‘நான் என் சொண்டால் (வாய், அலகு) உங்கள் ஒவ்வொருவரையும் கவ்விக்கொண்டு அந்தப் பெரிய குளத்துக்குச் சென்று விட்டுவிடுகிறேன். இன்று மாலைக்குள் உங்கள் அனைவரையும் என்னால் அந்தக் குளத்துக்கு அழைத்துச் சென்றுவிட முடியும்’ என்றது கொக்கு.

கொக்கின் தந்திரத்தை அறியாத அனைத்து மீன்களும் கொக்கின் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டன. கொக்கு ஒவ்வொரு மீனாகக் கவ்விக்கொண்டு பறந்துசென்றது. செல்லும் வழியிலேயே சில மீன்களை உண்டுவிட்டது. சில மீன்களைப் பாறையின் மீது உலர்த்தி வைத்தது. கொக்கின் இச் செயல்களை அறியாத மீன்கள், ‘கொக்கு நம்மைக் காப்பாற்றுகிறது’ என்று நம்பி கொக்கிடம் அகப்பட்டு இறந்து கொண்டிருந்தன.

அந்தக் குளத்தில் அந்த மீன்களுடன் விளையாடிவந்த ஒரு நண்டு, இந்தச் செய்தியை அறிந்தது.

‘மீன்கள் வேறு குளத்திற்குச் சென்றுவிட்டால் நாம் யாருடன் விளையாடுவது?’ என்ற சிந்தித்த அந்த நண்டு, ‘என்னையும் அந்தப் புதிய குளத்திற்குக் கொண்டு செல்வாயா?’ என்று கொக்கிடம் கேட்டது.

இதுவரை மீன் கறி உண்ட கொக்கிற்கு நண்டுக் கறி உண்ண ஆசைபிறந்தது. உடனே, ‘சரி’ என்றது கொக்கு.

நண்டினைத் தன் சொண்டில் கவ்விச்செல்வது கொக்குக்கு வசதிப்படவில்லை. அதனால், அது நண்டைத் தன் முதுகில் சுமந்துகொண்டு செல்ல நினைத்தது. நண்டு, கொக்கின் முதுகில் அமர்ந்து, அதன் கழுத்தினைப் பிடித்துக் கொண்டு சவாரிசெய்தது.

பறந்து செல்லும் வழியில், தரையில் பாறைகளின் மீது மீன்கள் கிடப்பதையும் மீன் முட்கள் சிதறிக் கிடப்பதையும் நண்டு பார்த்துவிட்டது. கொக்கின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட நண்டு, ‘எப்படி இந்தக் கொக்கிடமிருந்து தப்பிப்பது?’ என்று சிந்தித்தது.

‘பறந்துகொண்டிருக்கும் போதே நாம் கொக்கைக் கடித்துக்கொன்றால், நாம் உயரத்திலிருந்து தரையில் விழுந்து இறந்துவிடுவோமே! நாம் இறக்காமல் இந்தக் கொக்கினை எப்படிக் கொல்வது?’ என்று யோசித்தது.

உடனே, நண்டு அந்தக் கொக்கிடம், ‘கொக்கே! நீ எவ்வளவு நல்லவனாக இருக்கிறாய். நீ எவ்வளவு மீன்களைக் காப்பாற்றியிருக்கிறாய். இப்போது என்னையும் காப்பாற்றியுள்ளாய். இதுபோலவே நீ என் நண்பர்களையும் காப்பாற்ற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டது.

கொக்குக்கு எச்சில் ஊறியது. ‘ஆகா! ஒரு நண்டு கிடைத்தது என்று நினைத்தோம். இப்போது ஒரு நண்டுக் கூட்டமே நமக்குக் கிடைக்கப் போகிறதே! என்று நினைத்து கொக்கு மகிழ்ந்தது.
அது நண்டிடம், ‘உன் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எனக்குக் காட்டு.

அவர்களையும் நான் காப்பாற்றுகிறேன்’ என்று சந்தோஷமாகச் சொன்னது.

‘என்னை மீண்டும் அந்தப் பழைய குளத்துக்கே அழைத்துச்செல். நான் என் நண்பர்களை உனக்கு அறிமுகம் செய்துவைத்து, உன்னுடன் அனுப்பிவைக்கிறேன்’ என்று நயமாகப் பேசியது நண்டு.

நண்டின் வார்த்தைகளை நம்பிய கொக்கு, மீண்டும் பழைய குளத்துக்கே அந்த நண்டை அழைத்துச் சென்றது. குளத்துக்கு மேல் கொக்கு பறக்கும்போது, நண்டு கொக்கின் கழுத்தைக் கடித்துக் கொன்றது. பின்னர், நண்டு அந்தக் குளத்துக்குள்ளே விழுந்து உயிர் பிழைத்தது.

‘இவ்வாறு, நாமும், அந்த தந்திரக்கார நண்டினைப் போல பாம்பைக் கொன்று நாமும் பிழைத்துக் கொள்ளவேண்டும்’ என்று நரி அந்த ஆண் காகத்திடம் கூறியது. பாம்பைக் கொல்ல திட்டத்தையும் வகுத்தது.

அது ஆண் காகத்திடம், ‘காகமே! நீ நம் நாட்டில் உள்ள ராஜகுமாரி தங்கியிருக்கும் அந்தப்புரத்திற்குச் செல். அங்கு ராஜகுமாரி குளிக்கும் முன்னதாக தன்னுடைய நகைகளைக் கழற்றி வைப்பார். நீ அந்த நகைகளுள் ஒன்றினை உனது அலகால் கொத்தி எடுத்துக்கொண்டு, வீரர்கள் பார்க்குமாறு பறந்து வா. அவர்கள் உன்னைத் துரத்தி வருவார்கள். அவர்களிடம் சிக்காமல் வீதி வழியாகப் பறந்துவந்து, சோலைவனத்தில் உனது மரத்தின் கீழ் அந்தக் கொடிய பாம்பு வசிக்கும் புற்றுக்குள் அந்த நகையினைப் போட்டுவிட்டுப் பறந்து சென்றுவிடு’ என்று கூறியது.

‘அந்தப்புரத்திற்குச் சென்று நகையினைத் திருடுவதா!’ என்று நினைத்தவுடன் காகத்துக்கு வியர்த்துவிட்டது. இருந்தாலும் அந்த நாகப்பாம்பினைக் கொல்லவேண்டுமே! தம் முட்டைகளைக் காப்பாற்றவேண்டுமே! ஆதலால், நரி கூறிய திட்டத்துக்குச் சம்மதித்தது காகம்.

காகம், அரண்மனையின் அந்தப்புரத்துக்குச் சென்றது. குளிக்கச்சென்ற ராஜகுமாரியின் நகைகளுள் ஒன்றினை தனது அலகால் கொத்தியெடுத்துக் கொண்டு பறந்தது. நரி சொன்னது போலவே தன்னை துரத்தி வந்த வீரர்கள் பார்க்கும்படியாக நகர வீதி வழியாகத் தாழ்வாகப் பறந்தபடியே சோலைக்குள் புகுந்தது. அந்தப் பாம்புப் புற்றுக்குள் போட்டுவிட்டுப் பறந்து சென்று மறைந்துகொண்டது.

காகத்தைத் துரத்திவந்த வீரர்கள் காகத்தின் வாயிலிருந்து புற்றுக்குள் விழுந்த நகையினை எடுப்பதற்காக, வேல்கம்பினைப் புற்றுக்குள் நுழைத்தனர். ‘தம்மை யாரோ வேல்கம்பால் தாக்குகிறார்களே!’ என்று நினைத்த நாகப்பாம்பு கோபத்துடன் சீறிக்கொண்டு புற்றுக்கு வெளியே வந்தது. ‘நாகப்பாம்பு நம்மைக் கொத்திவிடுமே!’ என்று பயந்த வீரர்கள் அதனை அடித்துக் கொன்றனர்.

பின்னர், புற்றை உடைத்து, ராஜகுமாரியின் நகையினை எடுத்துச் சென்றனர்.
நாகப்பாம்பும், புற்றும் அழிந்ததால், இரண்டு காகங்களும் நிம்மதியாக முட்டைகள் இட்டு, குஞ்சுகள் பொறித்து, தமது குழந்தைகளை வளர்த்து நெடுநாள் வாழ்ந்தன.

‘புத்தியுடன் கூடிய முயற்சியிருந்தால் நமக்கு எல்லாமே கைவசப்படும். புத்தியுடையவனே பலம் வாய்ந்தவன். புத்தி இல்லாதவனுக்குப் பலமிருந்தும் பயனில்லை’ என்று கூறிய தமனகன், ‘ஒரு முயல் தன் புத்தியால் ஒரு சிங்கத்தைக் கொன்றது உனக்குத் தெரியுமல்லவா?’ என்று கரடகனிடம் கேட்டது.

‘எனக்குத் தெரியாது. ஒரு சிறு முயலால எப்படி சிங்கத்தைக் கொல்லமுடிந்தது?’ என்று தமனகனிடம் கேட்டது.

குட்டிநரி தமனகன் தன் தம்பி கரடகனுக்குச் சிங்கத்தைக் கொன்ற முயலின் கதையினைக் கூறத் தொடங்கியது.

(தொடரும்)

வினோத ராட்சசர்கள்

கிரேக்க இதிகாசக் கதைகள் / 3

h

h

இந்து புராணத்தில் ராவணனுக்குப் பத்துத் தலைகள் இருக்கும். காளிக்கும் பத்து தலைகள். ஆனால், கிரேக்க இதிகாசத்தில் யுரேனஸ் என்னும் தலைமைக் கடவுளுக்கும் ஜீயாவுக்கும் பிறந்தவர்களான வினோத ராட்சசர்களுக்கு ஐம்பது தலைகள் உள்ளன. கைகளோ நூறு.  இப்படிப் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று பேர். வினோதமான பிரமாண்டமான தோற்றம் கொண்ட இவர்களுடைய பெயர்கள், ப்ரியாருஸ், கைஸ் மற்றும் கோட்டஸ். ப்ரியாருஸுக்கு ஏஜியான் என்ற பெயரும் உண்டு.

இவர்களுடைய அமானுஷ்ய ஆற்றலையும் தோற்றத்தையும் கண்டு பொறாமை கொண்ட இவர்களுடைய தந்தை யுரேனஸ் இவர்களைப் பூமி மடிக்குள் அதாவது இவர்களைப் பெற்ற ஜீயாவின் வயிற்றுக்குள் அழுத்தித் திணித்து மறைத்து வைத்தானாம். இதனால் ஜீயாவுக்குச் சொல்லமுடியாத அளவுக்கு வலியும் வேதனையும் ஏற்பட்டதாம். யுரேனஸுக்கும் அவன் பெற்ற மக்களான டைட்டன்களுக்கும் ஏற்பட்ட வெறுப்பின் விளைவு க்ரோனஸ்ஸின் நெஞ்சில் குமுறி வெடித்து யுரேனஸை வீழ்த்த வழி தேடியபோது ஜீயா தானாக வந்து, தன் வேதனை தீரவும் யுரேனஸின் கொடுமை ஓயவும் கைகொடுத்தாள்.

ஒருவழியாக யுரேனஸ் தேவனை ஒழித்துக் கட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய க்ரோனஸ் பின்னர் தன் தாயுடன் பிறந்த மாமனான டார்டரஸிடம் இந்த வினோத ராட்சசர்களையும் ஒற்றைக் கண் மாமல்லர்களான சைக்கிளாப்ஸ்களையும் ஒப்படைத்துச் சிறைவைக்கச் செய்கின்றான். அதன் பிறகு க்ரோனஸ் ஆட்சிக் காலத்தின் முடிவில் ஸீயஸ் புரட்சி செய்தபோது, க்ரோனஸ்ஸையும் அவனுக்குத் துணை நிற்கும் அவனது உடன் பிறப்புகளான டைட்டன்களையும் வென்று வாகைசூட ஸீயஸின் பாட்டியும் க்ரோனஸின் தாயுமான ஜீயா ஸீயஸுக்கு இவர்களை எல்லாம் அதாவது வினோத ராட்சசர்களையும் ஒற்றைக்கண் மாமல்லர்களையும் டார்டரஸிடமிருந்து விடுவிக்க அறிவுரை கூறுகின்றான். அதன்படி இவர்கள் விடுவிக்கப்பட்டு டைட்டன்களைத் தோற்கடிப்பதில் பெரும்பங்கு வகித்து வெற்றிக்கனியை ஸீயஸுக்கு அளித்தனர். ஆனால் மீண்டும் இவர்கள் டார்டர்ஸ் திரும்பி முறியடிக்கப்பட்ட டைட்டன்களை எல்லாம் சிறையிலிட்டு அந்தச் சிறையைச் சுற்றி காவல் காத்து வருகின்றார்கள்.

முதலாலவன் ப்ரியாரூஸ் ஸீயஸுக்குத் துணை நின்ற வினோத ராட்சசர்களில் தலையானவன். போரின்போது பேருதவியாக இருந்த இவனுக்கு ஸீயஸ் தன்னுடைய மகளான ஸிம்போலா என்பவளைப் பரிசாக அளித்தான். ஒருசிலர் இவனையும் மற்ற இருவரையும் போசைடோனுக்கும், யுரேனஸ்ஸுக்கும் பிறந்தவர்கள் என்பர். வினோத ராட்சசர்களான கோட்டோஸ், ஜீஸ்  ஆகியோரைப் பற்றிய விவரம் எதுவுமில்லை. ஆயினும் இந்த மூவரோடு என்செலாடஸ் என்னும் மற்றொரு வினோத ராட்சசனைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன. இவன் டார்டரஸுக்கும் ஜீயாவுக்கும் பிறந்த நூறு கைகள், ஐம்பது தலைகளைக் கொண்ட மற்றொரு வினோத ராட்சசர்களிலே மிகுந்த வலிமையுடையவன் இவனே. ஒருசமயம் இவன் ஸீயஸுக்கு எதிரே சதி செய்தான். எனவே ஸீயஸும், அவனது படைகளும் மேசிடோனியாவில் உள்ள ப்ளேக்ராவில் வைத்து இவனை வீழ்த்தினர். இவன்மேல் ‘ஏட்ணா’ மலையை எடுத்து வீசிக் கொன்றதாகச் சொல்வர். இந்த ராட்சசன் விட்ட மூச்சு எரிமலைகள் கக்கும் நெருப்புச் சுவாலையாக வெளிவரும். ஸீயஸ் இவனை அதிக சக்தி வாய்ந்த மின்னலைக் கொண்டு கொன்றான் என்றும், இவன் மேல் “அத்தீனா தேவி”  சிசிலித் தீவை எறிந்து கொன்றாள் என்றும் கூறுவர்.

ஒற்றைக் கண் மல்லர்கள் (Cyclopes)

இவர்கள் யுரேனஸுக்கும் ஜீயாவுக்கும் பிறந்த அதிசயப் பிறவிகள். விநோதத் தோற்றமும் விலங்குகளின் குணமும் முரட்டு ஆகுதியும் நெற்றியின் நடுவில் அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ள வட்டமான ஒற்றைக் கண்ணோடும் இருப்பவர்கள். (சைக்கிளாப்ஸ் என்றால் வட்டமான கண்ணுடையவர் என்று அர்த்தம்) இவர்கள் புரோன்டஸ், ஸ்டீரிப்யாப்ஸ், அர்கஸ் என்னும் மூவர்கள் என்று கூறுவர். ஆனால் இந்தப் பெயர்களைத் தவிர வேறு சில பெயர்களும் கூறப்படுகின்றன. இவர்களில் போலிபிமஸ் (Polyphemus) மிகவும் பிரசித்திப் பெற்றவன். சிசிலியின் கடற்புறங்களில் இவனது ஆட்சி கொடி கட்டிப் பறந்ததாம். ஹோமர் இவர்களை ஒற்றைக்கண் கொண்டவர்களாக வர்ணிக்கவில்லை. போலிபிமஸ் மட்டுமே அப்படிப்பட்டவனாக இவரது காவியங்களில் காட்டப்பட்டுள்ளான்.

இவர்கள் சட்டத்துக்கோ வேறு வகை கட்டுப்பாடுகளுக்கோ அடங்காதவர்கள். இவர்கள் யுரேனஸின்கீழ் அடிமைகளாகக் கிடந்தனர். ஸீயஸ் விடுவிக்கப்பட்டு அவனது வெற்றிக்குக் கட்டியம் கூறியவர்கள். ஸீயஸால் எதிர்த்த டைட்டான்களைப் புறுமுதுகிடச் செய்தவர்கள் இவர்கள். அதன்பின் ஸீயஸிடம் சேவையாற்றினர். பின்னர் ஒரு காலத்தில் இவர்கள் ஹேபடஸ்ஸின் அடிமைகள் என்று கூறுவர்.

அரக்கர் உலகம்

இயற்கையின் இலக்கணத்தை மீறிய உடல் அமைப்பும், பிரமிக்க வைக்கும் ஆற்றலும், மலைக்க வைக்கும் முரட்டுத்தனமும், மிருகங்களே மிரளும் மூர்க்கத்தனமும் கொண்டவர்கள் அரக்கர்கள். இவர்களை மான்ஸ்டர்ஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவர். இவர்கள் மலைகளை எடுத்து பந்து விளையாடுவர். எறும்புகளை நசுக்குவதுபோல யானைகளை ஒற்றை விரலில் நசுக்கிக் கொல்வர். பசி எடுத்தால், மாமிச விரும்பிகளாக இருந்தால் பெரிய மிருகங்களைக்கூட உயிரோடு எடுத்து ஒரே விழுங்காக விழுங்குவர். பின் ஆலமரத்தை எடுத்துப் பல்குத்திக் கொள்வார்களாம். இவர்களிலே பலவகையினர் உண்டு. மனிதர்களைச் சாப்பிடும் நர மாமிசர்களும்கூட உள்ளனர். இவர்கள் மூச்சு விடும்போது நெருப்பு பற்றி எரியுமாம். இப்படியெல்லாம் இவர்களைப் பற்றி விவரிக்கப்படுகின்ற கிரேக்கப் புராணங்களில் காணப்படுகின்ற சிலரைக் குறித்து இதோ சில குறிப்புகள்:

ஜார்கான்கள் (Gorgons)

மூன்று அரக்கியர்களைக் குறிப்பிடும் சொல் இது. ஸ்தெனோ, யூரியேல், மெடூஸா ஆகியவை இவர்களுடைய பெயர்கள். இம்மூவரும் Phorcys மற்றும் Ceto ஆகியோருக்குப் பிறந்தவர்கள். மேற்படி இருவரும் போண்டஸ் மற்றும் ஜியாவுக்குப் பிறந்த அண்ணன், தங்கைதான்.  ஆயினும் அரக்க உலக வழக்கப்படி இவர்கள் இணைந்து மூன்று அரக்கியரைப் பெற்றெடுத்தனர். அவர்களே இந்த மூவர். மெடூஸா தவிர்த்து ஏனையோர்கள் இறவா வரம் பெற்றவர்கள். இவர்களுடைய கூந்தல் உயிர்ப் பாம்புகளாகச் சீறி எழுந்திருக்கும். கைகள் வெங்கலத்தால் ஆனவை. இவர்களுடைய உடலில் குத்திக் கிழித்துவிடும் ரம்பம் போன்ற செதில்களால் மூடப்பட்டிருக்கும். செம்பால் ஆன பயங்கரமான கூரியக் கடப்பாறை போன்று அமைந்த பற்கள் வாய்க்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்க, தூக்கலான காட்டுப் பன்றியின் முகவாய் போன்ற மூக்கும் கொண்டவர்கள். இவர்கள் யாரையாவது பார்த்துவிட்டால் அவர்கள் கல்லாகச் சமைந்துவிடுவார்களாம்.

வேறுசில புராணங்களில் மெடூஸா அழகுமிக்க கன்னிப் பெண். போசைடானுக்கு இவள் ஒரு பிள்ளையைக் கருச்சுமந்து பெற்றெடுத்தாள். அந்தப் பிரசவம் அத்தீனா ஆலயத்தில் நடந்துவிட்டதால் கன்னி தெய்வம் அத்தீனா கோபமுற்று இவளைச் சபிக்க இவளுடைய கூந்தலின் ஒவ்வொரு இழையும் ஒவ்வொரு பாம்பாக மாறியதோடு அகோரத் தோற்றம் கொண்டவளாகவும் மாறிவிட்டாளாம். இதன் பின் இவள் யாரைப் பார்த்தாலும்சரி, அவர்கள் அக்கணமே கல்லாய்ச் சமைந்துவிடுவார்கள்.

ஸீயஸுக்கும் டானேவுக்கும் பிறந்து மைசினா, டிரின்ஸ் ஆகிய பகுதிளை ஆளும் சிற்றரசன் பெர்சுயஸ். இவன் மன்னன் போலிடக்ட்ஸ் என்பவனுக்கு யாராலும் முடியாத, சாத்தியமே இல்லாத ஒரு காரியத்தை செய்துகொடுப்பதாக வாக்குறுதி தருகிறான். கோர்க்கான் மெரூசாவின் தலையைக் கொய்து வருவதாக ஒரு வாக்குறுதியை தருகின்றான். சோர்க்கான் மெரூசா பார்த்தாலே கல்லாய் மாறிவிடும்போது, அதையும் தாண்டி அதன் தலையை அறுக்க வேண்டுமானால் பறந்து செல்ல வேண்டும். அதோடு சேர்க்கான் மெரூசா, அரக்கியின் சகோதர அரக்கிகள் தங்கள் சகோதரியை யாராவது தாக்க வந்தால் சும்மா விடுவார்களா? அவர்களும் பறக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அவர்கள் பறந்துவந்து எதிரியை தொலைத்து விடுவார்கள். எனவே மெரூசாவின் தலையை வெட்டிவருவது என்பது யாராலும் நிறைவேற்றிடமுடியாத ஒன்று. அதை நிறைவேற்றியே முடிப்பேன் என்று பெர்சுயஸ்  சில மோகினிகளின் உதவியால் பறக்கும் பாதரட்சைகள் கொண்டு கண்ணுக்குப் புலப்படாமல் செய்துவிடும் தொப்பியை அணிந்தும் ஹெர்மெஸியிடமிருந்து பெற்ற வாளைக் கொண்டும் அவன் செய்த சபதத்தை நிறைவேற்றினான். மெடூஸாவின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு பாலிடெக்டஸ் அவைக்கு அவன் வந்தபோது எல்லோரும் ஸ்தம்பித்து விட்டார்கள். மெடூஸாவின் ரத்தத்திலிருந்து பெகாஸஸ் என்ற பறக்கும் குதிரை பிறந்து வந்தது.

(தொடரும்)

இந்திய தேசியவாதம் எப்படிப்பட்டது?

நவீன இந்தியா / அத்தியாயம் 7

6a00d8341c464853ef019101fb0f25970c-500wi1905ம் ஆண்டு முதல் தேசியவாத தலைவர்களும் அறிவுஜீவிகளும் சுயாட்சி குறித்து விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதை ஒரு கோரிக்கையாக மக்கள் முன்வைக்கவும் அவர்கள் தயாராயினர். முதல் உலகப் போர் முடிவில், 1918ம் ஆண்டு அவர்கள் வயது வந்தவர்களுக்கான வாக்குரிமை பற்றியும் அரசாங்கத்தில் பங்கேற்பதன் அவசியம் பற்றியும் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். 1929ம் ஆண்டு முழுமையான சுதந்தரத்தை இந்திய தேசியவாத இயக்கம் முன்வைத்தது. இதையே தனது அரசியல் நோக்கமாகவும் அது வரித்துக்கொண்டது என்கிறார் பிபன் சந்திரா. இந்தப் போராட்டம் பல கட்டங்களில் நடைபெற்றது. இறுதிக் கட்டத்தில்தான் பெரும் திரளமான மக்கள் பங்கேற்பு இருந்தது. இதுவே விடுதலைப் போராட்டத்தை உந்தி முன் தள்ளவும் செய்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பின் பங்கு இதில் குறிப்பிடத்தக்கது என்கிறார் பிபன் சந்திரா. தேசியவாத இயக்கத்தை ஒரு விரிவான கோட்பாட்டுத் தளத்தில் வைத்து ஆராய்ந்த வரலாற்றாசிரியர்களில் இவர் முக்கியமானவர். சுதந்தரப் போராட்டத்தை முன்னின்று ஒருங்கிணைத்த காங்கிரஸின் பாத்திரத்தை விரிவாக ஆராயும்போது சில முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுகிறார் பிபன் சந்திரா. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி ஒரு நாடாளுமன்ற அமைப்பின் வடிவமாகவே இருந்தது வந்தது. அதன் செயல்பாடுகளில் ஜனநாயகத்தன்மை இருந்தது. வெவ்வேறு சிந்தனையோட்டம் கொண்டவர்கள் அதில் அங்கம் வகித்தபோதும் தொடக்கம் முதலே எதேச்சதிகாரப் போக்கு அமைப்பில் பரவவில்லை.

தேசத்தின் பிரச்னைகள் சீரானமுறையில் விவாதங்கள்மூலம் அலசப்பட்டன. இந்தச் சந்திப்புகள் அனைத்தும் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டன. குறிப்பிட்ட ஒரு முடிவு எடுக்கப்பட்ட பிறகு அது வாக்களிப்புக்கு விடப்பட்டது. அனைவரின் ஒப்புதலும் பெற்றபிறகே திட்டம் நடைமுறைக்குச் சென்றது. ஜனநாயகமும் மதச்சார்பற்ற தேசியவாதமும் அமைப்பின் அடிப்படைகளாகத் திகழ்ந்தன. இந்த அடிப்படைகள் முக்கியமானவை; வெவ்வேறு பிரதேசங்களில், வெவ்வேறு மொழிகள் பேசும், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றும், வெவ்வேறு சமூகப்பொருளாதாரப் பின்னணியில் வாழும் மக்களை ஒன்றுதிரட்ட இந்த நோக்கங்கள் பயன்பட்டன.

இந்தியா முழுக்க உள்ள பொதுவான பிரச்னைகளை எடுத்துப் பேசினால்தான் அனைவரும் திரள்வார்கள் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கணக்கிட்டது. சமூக சீர்திருத்தத்தை இப்போதைக்கு காங்கிரஸ் எடுத்துக்கொள்ளாது என்று தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தினார் தாதாபாய் நவுரோஜி. இதில் பலருக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்ததுதான் இதற்குக் காரணம். ‘ஒட்டுமொத்த தேசமும் நேரடியாகப் பங்கேற்கும்படியான விஷயங்களை மட்டுமே தேசிய காங்கிரஸ் கையாளவேண்டும். நம்முடைய அரசியல் விழைவுகளை நம்முடைய ஆட்சியாளர்களுக்குப் பிரதிபலிப்பதற்காகத்தான் ஓர் அரசியல் அமைப்பாக நாம் திரண்டிருக்கிறோம்.’ இந்தத் திரட்சி சாத்தியமாகத் தொடங்கிய பிறகே சமூக மாற்றம், பொருளாதாரம், சமூக நீதி உள்ளிட்ட அம்சங்களில் காங்கிரஸ் கவனம் செலுத்தத் தொடங்கியது என்கிறார் பிபன் சந்திரா.

கலாசாரத்தை மையமாக வைத்து தேசியவாத இயக்கத்தைக் கட்டமைக்கும் போக்கையும் காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்திய வேற்றுமையின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருந்ததால் மதம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் புதிய தேசத்தை அவர்கள் நிர்மாணிக்க விரும்பவில்லை. மதச்சார்பின்மையே இந்தியாவின் அடையாளமாக இருக்கும் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர். மதச்சார்பின்மையை வலியுறுத்தினால்தான் பல்வேறு மதப் பிரிவினரும் ஒருங்கிணைந்து வாழ்வது சாத்தியம் என்று அவர்கள் நம்பினர்.

பெரும்பாலான இந்திய மக்கள் அப்போது படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர் என்பதால் அவர்களுக்குப் புரியும்படியான அம்சங்களைக் கொண்டு அவர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களால் ஏற்கமுடியாதவற்றை ஒதுக்கித் தள்ளவும் தேசியவாதத் தலைவர்கள் தயாராகயிருந்தனர். மதத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட தேசியவாத எழுச்சிகளை காங்கிரஸ் ஏற்கமுன்வரவில்லை. இந்து தேசியவாதம், சீக்கிய தேசியவாதம், இஸ்லாமிய தேசியவாதம் என்று அவற்றை அழைக்காமல் வகுப்புவாத எழுச்சிகள் என்றே அவற்றை காங்கிரஸ் அடையாளப்படுத்தியது. அமைப்பில் இருந்த வகுப்புவாதச் சக்திகளை அடையாளம் கண்டு 1938ம் ஆண்டு வெளியேற்றியது காங்கிரஸ். இதன்மூலம் வகுப்புவாதத்துக்கு இடமில்லை என்பதையும் அது உறுதிபடுத்தியது.

அதே சமயம், இந்திய தேசிய காங்கிரஸால் வகுப்புவாதத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. (இது பற்றி நாம் பின்னர் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம்). காலனியாதிக்கத்தை எதிர்த்ததைப் போல் வகுப்புவாதத்தை ஒரு வலுவான செயல்திட்டத்தை வடிவமைத்து எதிர்க்க காங்கிரஸ் முன்வரவில்லை. 1946-47ல் வெடித்த வகுப்புவாத மோதல்களும் பாகிஸ்தான் பிரிவினையும் உணர்த்தும் உண்மை இதுவே.

பிபன் சந்திராவைப் பொருத்தவரை, இந்திய தேசிய காங்கிரஸின் முதன்மையான வெற்றி என்பது ஒரு வலுவான தேசியவாத இயக்கத்தைக் கட்டமைத்து காலனியாதிக்க எதிர்ப்பை மேற்கொண்டதில்தான் அடங்கியிருக்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்க வேறுபாடு, வகுப்புவாதம், சமூக மாற்றம், பாலின வேறுபாடு ஆகியவற்றில் காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை.

0

தேசியவாதிகளின் வரலாற்றுப் பிரதிகள் காலனியாதிக்க வரலாற்றுப் பிரதிகளின் தொடர்ச்சியாக எழுதப்பட்டவை. காலனியாதிக்கத்தின் விளைவாக எழுதப்பட்டவை அல்லது காலனியாதிக்கத்தை எதிர்க்கும் நோக்கில் எழுதப்பட்டவை என்றும் இவற்றை அழைக்கமுடியும். பிபன் சந்திரா அடிப்படையில் ஓர் இடதுசாரி என்றபோதும் அவர் தேசியவாத வரலாற்றாசிரியராகவும் மதிப்பிடப்படுபவர். காந்தி, கார்ல் மார்க்ஸ் இருவரையுமே இவரால் ஏற்கமுடிந்தது. ஆனால் தீவிர இடதுசாரிகள் பிபன் சந்திரா போன்ற தேசியவாதிகளின் வரலாற்றுப் பார்வையை ஏற்பதில்லை.

1967ல் உருவான நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு தோற்றம் பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் நிறுவக உறுப்பினர்களில்ஒருவர், சுனிதி குமார் கோஷ். இந்திய தேசியவாதத்தை மட்டுமல்ல, அதன் நாயகமாக தேசியவாதிகளுக்குத் தோற்றமளிக்கும் இந்திய தேசிய காங்கிரஸின் பாத்திரத்தையும் சுனிதி குமார் கோஷ் கேள்விக்கு உட்படுத்துகிறார். தனது India & the Raj என்னும் புத்தகத்தின் முன்னுரையே இதனை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. ‘அந்நிய ஆட்சிக்கு எதிராக விடுதலையை நோக்கி இந்தியமக்களை வழிநடத்திச் சென்றது இந்தியத் தேசிய காங்கிஸே; முப்பதாண்டுகாலம் இதன் தலைவராக இருந்த காந்திதான் ஆழ்துயிலில் இருந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்; உலகிலேயே வலிமைவாய்ந்த பேரரசைத் தோற்கடித்தத் தனிச் சிறப்பான ஆயுதத்தை (சத்தியாகிரகத்தை) இம்மக்களுக்காக வடிவமைத்துத் தந்தவரும்இவரே; விடுதலை வேள்வியின் ஊடாக இந்த மாபெரும் தேசத்தை உருவமைத்தது இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைமையே; இந்தியராயினும் சரி, வெளிநாட்டினராயினும் சரி, வரலாற்றாளர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் பெரும்பாலும் இந்தக் கருத்தே கொண்டிருந்தனர்.’

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் இரண்டு சக்திகள் பங்கேற்றன என்று குறிப்பிடும் சுனிதி குமார் கோஷ் அந்த இரண்டின் பண்புகளையும் விவரிக்கிறார். ‘நீண்டகாலக் காலனிய ஆட்சியின்போது ஒன்றுடன் ஒன்று போராடும் இரண்டு சக்திகள் இந்தியச் சமூகத்தில் தோன்றின. ஒன்று, பழங்குடிகள், விவசாயிகள், கைத்தொழில்கள், ஆலைத் தொழிலாளிகள், நகர்ப்புறச் சிறுமுதலாளிகள் ஆகியோரின் அணி. இரண்டு, (வணிகம் சார்ந்த அல்லது தொழில் சார்ந்த) பெருந்த தரகு முதலாளிகள், பெரு நிலப்பிரபுக்கள், இளவரசர்கள் மற்றும் அந்நிய ஆட்சியாளர்களின் கருத்துகளில் ஊறித் திளைத்தவர்களும், அவர்களின் ஆட்சி இந்தியாவுக்கு நன்மை தரக்கூடியதென்றும், முற்போக்கானதென்றும் முழுமையாக நம்பி வந்தவர்களும், சலுகைகளை அனுபவித்து வந்தவர்களுமான மேல்தட்டு அறிவுஜீவிகள், அதாவது பெரும் வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், அரசாங்க உயர் அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய அணி. இரண்டாவதாகச் சொல்லப்பட்ட இந்த அணியினர் தம் இருப்புக்கும் செழிப்புக்கும் வசதிகளுக்கும் காலனிய ஆட்சிக்குக் கடன்பட்டிருந்தார்கள். ஏகாதிபத்தியத்துக்கு ஒத்துழைக்கும் அதனுடன் சமசரம் செய்துகொள்ளும் அரசியலைப் பின்பற்றினார்கள். முதலில் சொல்லப்பட்ட அணியினரோ ஏகாதிபத்தியத்தின் மற்றும் உள்நாட்டில் அதற்கு ஒத்துழைப்பாக இருந்தவர்களின் கொள்ளைக்கும் ஒடுக்குமுறைக்கும் பலியாகிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் அரசியல், போதுமான அளவில் தெளிவாக முன்வைக்கப்பட்டதோ, இல்லையோ ஏகாதிபத்தியத்துக்கும் அதன் சுதேசிக் கூட்டாளிகளுக்கும் எதிரான சமரசமற்ற போராட்ட அரசியலாக இருந்தது. ’

கோஷ் தொடர்கிறார். ‘இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையிலான எல்லை அரசியல்ரீதியாக தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்று குறிப்பிடும் கோஷ், அவற்றுக்கு இடையிலான உறவு மிகவும் சிக்கலானாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். விவசாயிகள், தொழிலாளர்கள், நகர்ப்புறச் சிறு முதலாளிகள் ஆகியோரின் பொருளியல் நலன்கள், ஏகாதிபத்திய மூலதனத்துக்கு இடைத்தரகர்களாகப் பணியாற்றிய இளவரசர்கள், நிலக்கிழார்கள், பெருமுதலாளிகள் ஆகியோரின் பொருளியல் நலன்களுடன் தீவிரமாக மோதிக்கொண்டன. இருப்பினும் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகள் சூழ்ச்சியாளர்களாக இருந்தனர். கடுமையாகச் சுரண்டப்பட்டுவந்த பொதுமக்களை ஏறத்தாழ முதல் உலகப்போரின் முடிவிலிருந்தே குழப்பி வந்தனர். சில நேரங்களில் அவர்களைத் தமக்குப் பின்னால் அணிதிரட்டிக் கொண்டனர். பிற நேரங்களில் பிரிட்டிஷ் அரசுடன் சதி செய்து அவர்களின் போராட்டங்களைத் தடம்புறளச் செய்தனர். திசை திருப்பினர். அடக்கி ஒடுக்கினர். இது முரண்பாடு போல் தோன்றினாலும் இதுதான் உண்மை.’

விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதாக அறியப்படும் தேசியவாதத் தலைவர்களின் நோக்கத்தை சுனிதி குமார் கோஷ் கேள்விக்கு உட்படுத்துகிறார். அவர்களுடைய நோக்கம் இந்திய விடுதலை அல்ல, அதற்கு எதிரானது என்னும் முடிவுக்கும் அவர் வந்து சேர்கிறார். ‘உண்மையான தேசிய விடுதலையை எதிர்த்த அவர்கள் (மேலே குறிப்பிட்டப்பட்டிருக்கும் இரண்டாம் அணியைச் சேர்ந்தவர்கள்) முன்யோசனையுடன் கூடிய செயலுத்தியாக காலனிய எதிர்ப்புப் போராட்டக் கொடியையும் உயர்த்திப் பிடித்தார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைத் தடுப்பதற்காக அவ்வப்போது கட்டாயத்தின் பேரில் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கங்கள், தலைமை வரையறுத்த வரம்புகளைத் தாண்டியபோது மட்டுமே உண்மையான தேசிய விடுதலைப் போராட்டத் தன்மையைப் பெற்றன.’

இந்திய விடுதலைப் போராட்டத்தின்முக்கிய மைல்கற்களாக கருதப்பட்டுவரும் பல இயக்கங்கள் இவ்வாறு வரம்புகளைத் தாண்டியவையேஎன்கிறார் சுனிதி குமார் கோஷ். 1919ல் நடைபெற்ற ரவுலட் சத்தியாக்கிரகம், 1920-22ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், 1930-31ல் நடைபெற்ற சட்டமறுப்பு இயக்கம் ஆகியவை வெற்றிகரமான தேசியவாதப் போராட்டங்கள் அல்ல. இவை தேசிய விடுதலைப் போராட்டத்தின் ‘தன்மையை அடையும்போல அச்சுறுத்தல் தோன்றியதுமே, அவசர அவசரமாகத் திடுதிடுப்பென திரும்பப் பெறப்பட்டன. அதனால் நாடு பலத்த ஏமாற்றத்துக்கும், உளச் சீரழிவுக்கும் உள்ளானது.’

படித்த, மேல்தட்டுப் பிரிவினர் விடுதலைப் போராட்டத்தில் வகித்த பாத்திரம் மக்களுக்கு விரோதமானதான அமைந்தது என்பதை பல மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி வாதிடுகிறார் கோஷ். மும்பையின் கவர்னராகவும் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினராகவும் இருந்த சர். பர்ட்டல் ஃபிரேரியின் கருத்து இது. ‘இப்போது நான் செல்லுமிடமெல்லாம் ஆங்கிலேய அரசாங்கத்தின் மிகச் சிறந்த கொள்கை விளக்குநர்களை, இந்திய மக்களுடைய தனித்தன்மைகளுக்குத் தக அந்தக் கொள்கையை மிகத் திறமையாக முன்வைக்கும் விளக்குநர்களை, படித்த சுதேசிப் பிரிவினரிடையே பார்க்கிறேன்.’

தாதாபாய் நவுரோஜியின் கருத்து இது. ‘அவர்கள் (இந்தியாவில் உள்ள படித்த வர்க்கங்கள்) பிரிட்டனுடன் இந்தியா மென்மேலும் உறுதியாகப் பிணைக்கப்படுவதற்கான பலம்வாய்ந்த இணைப்புக் கண்ணியாக இருக்கிறார்கள்.’ காலனியாட்சி படித்த வர்க்கங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது என்று வேறோரிடத்தில் அவர் எழுதுகிறார். ‘பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவு இந்தியாவுக்கு ஆசிர்வாதத்தையும் இங்கிலாந்துக்கு பெரும் புகழையும் தரும் என்றே நான் நம்புகிறேன். புவிமீது மிகச் சிறந்ததும் மிகுந்த மனிதத்தன்மை உள்ளதுமான தேசத்துக்குத் தகுதியான விளைவுதான் இது. ’

இந்திய நடுத்தர வர்க்கத்தைக் குறித்து ஆய்வு செய்துள்ள பி.பி. மிஸ்ராவின் வார்த்தைகள் இவை. அவரைப் பொருத்தவரை மேல் நடுத்தரவர்க்க அறிவாளிகள் ‘இந்தியாவின் உள்நாட்டுச் சமூகத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான அணைப்பாக அமைந்தார்கள். சார்லஸ் கிராண்ட், மெக்காலே, சர். சார்லஸ் உட் போன்றவர்களின் சமூக, அரசியல் கோட்பாடுகளின் பயன்பாட்டினால் உருவான ஆதாரகோல்களாக விளங்கினார்கள் .’

0

தங்கப் புல்லாங்குழல்

சீன இதிகாசக் கதைகள் / 3

79d156c0-83f3-4af2-826e-f963b2283042மலைக்கிராமத்திலே ஒரு பெண்ணும் அவளுடைய மகளும் இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய சிறிய நிலத்தில் வேலைகள் செய்வது வழக்கம். விதை தூவுவது, நடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, அறுவடைக் காலத்தில் அறுப்பது, கதிர் அடிப்பது என்று எல்லா வேலைகளையும் அவர்களே செய்வார்கள். அந்தப் பெண்ணின் மகள் சிவப்பு நிற உடைகளே அணிவாள். அதுவே அவளுக்குப் பிடிக்கும். அதனால் அவளை எல்லோரும் ‘சிவப்புச் சின்னவள்’ என்று அழைத்தார்கள்.

ஒருநாள் அந்தக் கொடுமை நடந்தது. ‘சிவப்புச் சின்னவள்’ தங்கள் கழனியிலே ஏதோ வேலையாக இருக்கும்போது, ராட்சச டிராகன் ஒன்று வானிலே பறந்து வந்தது. அது வந்தபோது அதன் இறக்கைகளின் அசைவிலே காற்று வேகமாக வீசியது. அதனால் மரங்களெல்லாம் ஆடின. மேகங்கள் கூட குலுங்கின. பார்ப்பதற்கு மிகவும் மூர்க்கமான, கோரமான, கடுஞ்சீற்றம் கொண்டதாக இருந்தது. வானிலே பறக்கும் பருந்து திடீரென்று பூமியில் பாய்ந்து கோழிக் குஞ்சை கவ்வுவது போல, சிவப்புச் சின்னவளை அப்படியே தன் கால்களால் அள்ளிக் கொண்டு போய்விட்டது. சிவப்புச் சின்னவளின் அவலக்குரல் அழுதுக்கொண்டே ஒலித்தது. அதைத்தான் அவளுடைய அம்மாவால் கேட்க முடிந்தது.

“அம்மா… என்னருமை அம்மா… பொறுத்திரு… பொறுத்திரு.

சகோதரனே சகோதரனே என்ன வந்து மீட்டு விடு!Ó

பெற்த் தாயின் கண்கள் கலங்கின; அவளின் ஆற்றாமையின் அழுத்தம் அவள் இதயத்தை பிசைந்தது. “பாவம், குழந்தை! அவளைப் போய் அந்த ராட்சசப் பேய் டிராகன் தூக்கிக்கொண்டு போய்விட்டதே! என்ன செய்வேன்? யாரிடத்தில் போய் கேட்பேன்! சிவப்புச் சின்னவளோ “சகோதரனே… சகோதரனே என்னை வந்து காப்பாற்று” என்றாளே… அவளுக்கு ஏது சகோதரன்… எனக்குப் பிறந்தது இவள் மட்டுந்தானே… பயத்திலே அப்படி உளறி இருக்கிறாள் போலும்” என்று நினைத்தாள். இப்படியெல்லாம் நினைத்து, தள்ளாடிக் கொண்டே வீட்டை நோக்கித் திரும்பினாள்.

திரும்பும் வழியிலே பாதி தூரம் வந்தபோது அவளுடைய நரைத்த தலைக் கூந்தலை யாரோ பிடித்து இழுப்பதுப்போல இருந்தது. சாலை ஓரத்தில் இருந்த புன்னை மரக் கிளை அது. காற்றில் ஆடித் தாழும்போது இவள் கூந்தல் மாட்டிக்கொண்டது போலும். வேறு வழியில்லாமல் கூந்தலை அறுத்தெடுத்துக் கொண்டு நடக்கின்ற போது,  நன்றாகச் சிவந்த சிவப்பு பெர்லி பழங்களைப் பார்த்தாள். கொஞ்சம் பறித்து எடுத்துக்கொண்டு நடந்தாள். அந்த சிவப்பு பெர்ரியை சுவைத்தாள்.

வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வீட்டீக்கு வந்தவுடனே அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவள் சாப்பிட்டச் சிவப்பு பெர்ரிப் பழம் அவளைக் கருக்கொள்ள வைத்தது. ஒரு நாளின் சில மணிகளிலே அவள் கர்ப்பம் முதிர்ந்து குழந்தையும் பெற்றெடுத்தாள். அது ஓர் ஆண்குழந்தை அதற்கு “சின்ன பேபரி” என்று பெயரும் சூட்டினாள். குழந்தையும் வட்டமான தலையுடனும் சிவந்த கன்னங்களுடன் பேபரி போலவே இருந்தான்.

சின்ன பேபரி பிறந்த சில நாட்களுக்குள்ளேயே வளர்ந்து ஓர் இளைஞனாக ஆகிவிட்டான். பதினான்கு அல்லது பதினைந்து வயதுக்காரனைப் போல தோற்றம் தந்தான். அவனைப் பார்க்கும்போதெல்லாம்அவனுடைய தாய்க்கு ராட்சச டிராகன் தூக்கிக் சென்ற அவளின் மகள் சொன்ன வாக்கியங்கள் தான் நினைவுக்கு வந்தது.

“சகோதரனே சகோதரனே என்னை மீட்பாயாக”

பெற்றவளோ அதை அவளிடம் சொல்லத் தயங்கினாள். சொல்வதற்கு வாய் வரும். ஆனால் மனம் தடுத்துவிடும். இவனுக்கு ஏதாவது விபரீதம் நேரிட்டால் என்ன செய்வது? இதனால் தான் அவள் வாய் மௌனிக்கும், கண்களோ கலங்கும்!

ஒரு நாள் ஒரு காகம் அவள் வீட்டின் கூரையில் அமர்ந்து, பின் அங்கிருந்து இறங்கி, கூரை இறக்கத்தில் இருந்துக் கொண்டு, “உனது தமக்கை துன்பத்தில் கிடக்கிறாள்; அவளை துன்பத்திலிருந்து மீட்டு வருவாயாக! டிராகன் பூதத்தின் குகையில் மடிகிறாள். வெற்றுக் கைகளால் குகையை சுரண்டி சுரண்டி தவிக்கிறான். அதனால் அவளது உடைகளிலும் ரத்தக் கறைகள் இருக்கிறது. உடனே சகோதரனே, உன் சகோதரியை மீட்டு வா”

இதைக் கேட்டவுடன் சின்ன பேபரிக்கு ஆச்சர்யமாக இருந்தது. “அம்மா… எனக்கு அக்கா இருக்கிறாளா? எங்கேப் போனாள்? ஏன் என்னிடம் மறைத்து விட்டாய்?” என்று கேட்டாள்.

“ஆமாம் மகனே… உன் அக்காவை ராட்சச டிராகன் தூக்கிக் கொண்டு போய்விட்டது. அந்த டிராகன் பலரைத் தூக்கிக் கொண்டு போய் சாப்பிட்டு விட்டது!” என்றாள்.

பேபரி உடனே ஒரு பெரிய உலக்கைப் போன்ற ஒரு தடியை எடுத்துக் கொண்டாள், “அம்மா… இதோ இப்பொழுதே போய் என் தமக்கையை மீட்டெடுக்கப் போகிறேன்… ராட்சச டிராகனை இந்தத் தடியால் அடித்து கொன்று விடுவேன்… இனிமேல் அவன் யாருக்கும் தீங்கு செய்யமுடியாத அளவுக்கு செய்துவிட்டு வருகிறேன்.” என்று சொல்லி புறப்பட்டான்.

அவனது தாய் கண்ணீரில் மறைத்த பார்வையோடு, கதவின் இடைவெளியிலே அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தில் மகிழ்ச்சியும் அச்சமும் ஒருங்கே எழுந்தன.

பேபரி, வெகு தொலைவுகள் நடந்தான். நடந்து, நடந்து எப்படியோ ஊர்க் கோடியிலுள்ள ஒரு மலைச் சாலையின் முடிவுக்கு வந்து விட்டான். அதன் பிறகு சாலையின் தொடர்ச்சி இல்லை. ஆனால் மிகப்பெரிய பாறாங்கல் ஒன்று பாதையை அடைத்தது போல் நின்றிருந்தது.

இந்தப் பாதையை கடந்து போக வேண்டுமானால் அந்தப் பாறையைத் தாண்டிக் குதிக்க வேண்டும். அப்படி குதித்தால் ஒரு காலடி தவறினால் கூட மலைக்கு கீழே அதள பாதாளத்துக்குள் போய் விழ வேண்டும். யாரும் அவ்வளவு பெரிய முயற்சி எடுப்பதில்லை. ஆனால் பேபரி அந்த பாறாங்கல்லை நகர்த்தி விட்டால் போதுமென்று நினைத்தான்.

பேபரி தான் எடுத்து வந்த கோலை அந்த பாறாங்கல்லின் அடியில் நுழைத்து, தன் பலங்கொண்ட மட்டும் அந்த கல்லை உயர்த்திடப் பார்த்தான். அவன் கொண்டு வந்த தடி இரண்டாக உடைந்தது. என்ன செய்வது? உடனே தன் இரு கைகளையும் பாறாங்கல்லின் அடியில் கொடுத்து அதை உருட்டப் பார்த்தான். எங்கிருந்துதான் அவனுக்கு அந்த பலம் வந்ததோ, ஆம் பாறாங்கல் அசைந்து கொடுத்தது, அவன் தன் பலத்தால் இயன்ற அளவு உயர்த்திக் கொண்டு அப்படியே பின்னால் தள்ளினான். பாறாங்கல் உருண்டு ஓடி பள்ளத்தாக்கில் போய் விழுந்தது.

அதே நேரம் அந்தப் பாறாங்கல் இருந்த இடத்திலே தகதகத்துக் கொண்டிருக்கும் தங்க புல்லாங்குழல் ஒன்று இருந்தது. பேபரி அதை கையிலெடுத்தாள். அதை துடைத்து விட்டு குழலில் காற்றை ஊதினான். அதில் ஓசை எழுந்தது. அதை மீண்டும் ஊதினான். அவ்வளவுதான் அந்த மலையிலே, மலைச்சாலையிலே உள்ள புழு பூச்சிகளும் தவளைகளும், பல்லிகளும் நாட்டியமாடத் தொடங்கின. புல்லாங்குழலை வேகமாக ஊதினால் வேகமாக ஆடின. “ஓ…. இது போதும், இதை வைத்தே அந்த ராட்சச டிராகனை ஒரு கை பார்த்து விடலாம்” என்று நெஞ்சத் துணியோடு நிமிர்ந்து நடந்தான்.

கொஞ்ச தூரம் நடந்து போனதும், பெரிய மலைப்பாறை தெரிந்தது. அவன் கஷ்டப்பட்டு அந்தப் பாறையின் மேல் ஏறிக்கொண்டான். அங்கிருந்து பார்த்தால் ஒரு குகையின் வழியை முழுதும் அடைத்துக்கொண்டு அந்த ராட்சச டிராகன் அமர்ந்திருந்தது. டிராகனைச் சுற்றிலும் எலும்புகள் குலியலாகக் கிடந்தன. எல்லாமே மனிதர்களைச் சாப்பிட்டுவிட்டுப் போட்ட எலும்புகளே.

அவனுக்கு அடுத்து ஒரு பெண் கண்ணீரோடு அமர்ந்திருப்பது தெரிந்தது. டிராகன் தன் நீண்ட கூரிய நகங்களால் அவளின் முதுகை கீறிக் கீறி கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தது. “அட நன்றிக்கெட்ட சிவப்புப் பெண்ணே! நீ என்னோடு இருக்கும் வரைக்கும் யாரும் உன்னைத் தொடமுடியாது. திருமணம் செய்துகொள்ளமுடியாது. எத்தனை நாளானாலும் சரி, எத்தனை குன்றுகளைத் தாண்டி வந்தாலும் யாரும் உன்னை என்னிடமிருந்து கைப்பற்ற முடியாது. அப்படி வந்தால் உன்னை சாகடித்து மண்ணுக்குள் போட்டிடுவேன்” என்று கூறிக் கொண்டிருந்தான்.

பேபரிக்கு அவள்தான் தன்னுடைய உடன் பிறந்தவள் என்று தெரிந்துவிட்டது. உடனே தானிருந்த இடத்திலிருந்து குரல் கொடுத்தான்.. “அடே கெட்ட புத்தி ராட்சசனே! என் அக்காவைக் கொடுமைப்படுத்தியதற்கு தண்டனைக் கொடுக்க நான் வந்துவிட்டேன். இந்தப் புல்லாங்குழலை ஊதி வாசித்தே உன்னை ஒரு வழி பண்ணப் போகிறேன்… உன் கதை முடிந்தது. உன் உயிர் இப்பொழுது என் கையில்” என்று சொல்லிவிட்டு புல்லாங்குழலை ஊதினான். வேக வேகமாக ஊதினான்.

அவன் புல்லாங்குழலை ஊத ஊத தனது பெருத்த உடலைத் தூக்கிக் கொண்டு ராட்சச டிராகன் ஆட ஆரம்பித்துவிட்டது. தன்னை மீறிய ஆட்டம். எது நடந்தாலும் என்ன செய்தாலும் உணர முடியாத ஆட்டம்!

இதுதான் தக்க தருணமென்று ‘சிவப்புச் சின்னவள்’ மெல்ல குகையை விட்டு வெளியே வந்தாள். வெளியில் நின்று ராட்சச டிராகன் போடும் ஆட்டத்தைப் பார்த்தாள். அதன்  கண்கள் செருகி இருந்தது. தன்னை மறந்த நிலையில் அது ஆடிக் கொண்டிருந்தது. அதன் கண்களிலிருந்து நெருப்பு ஜீவாலை வீசியது. மூச்சுக் காற்றாக கொதிக்கின்ற ஆவி வெளிவந்தது. வாயைத் திறந்து திறந்து மூடி மூச்சு வாங்கியது. தன் தம்பியிடம் பேச சிவப்புச் சின்னவள் முயன்றாள். பேபெரி கையால் சாடைக் காட்டினாள். அவன்  புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தினால், அவனையும் அவளையும் அவன் உயிரோடு கொன்று சாப்பிட்டுவிடுவான். எனவே அவன் புல்லாங்குழலை ஊதிக்கொண்டே இருக்க டிராகன் மூச்சு வாங்க ஆடியது, அதனால் இப்பொழுது முடியவில்லை. பெரிய வயிற்றை தூக்கிக் கொண்டு ஆட ஆட அதற்கு அது ஏதோ வேதனையாக இருந்தது. எனவே பேபரியிடம் கெஞ்சத் தொடங்கியது.

“தம்பி… புல்லாங்குழல் வாசிப்பதை கொஞ்சம் நிறுத்து.. நீ ஆற்றல் வாய்ந்தவன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இனிமேலும் என்னால் தாங்க முடியாது. ஐயோ, இந்த இம்சையைப் பொறுக்கமுடியவில்லை. புல்லாங்குழல் ஓசையைக் கேட்டு ஆடாமல் இருக்க முடியாது. அதுப்போல ஆடிக் கொண்டே இருக்கவும் முடியாது. கொஞ்சம் இரக்கம் காட்டு, உன் சகோதரியை விட்டு விடுகிறேன்.” என்றது டிராகன்.

ஆனால் அவன் நிறுத்துவதாக இல்லை. தன் அக்கா சொல்லியபடி இதே இடத்திலே இவனை விட்டு வைக்கக் கூடாது, அப்படி விட்டு வைத்தால் மறுபடி மனிதர்களைத் தூக்கிக்கொண்டுபோய் கொன்று தின்பான். இவனிடம் இரக்கம் காட்டக்கூடாது என்று நினைத்து, பேபரி மெல்ல நடந்துகொண்டே புல்லாங்குழலை வாசித்தான். அவள் தமக்கை அவனோடு சேர்ந்து நடந்தாள். பின்னாடியே, ராட்சச டிராகன் ஆடிக்கொண்டே வந்தது. அதுவும் இவன் வேகமாக வாசிக்க வாசிக்க அது நிலைக்கொள்ளாமல் ஆடிக்கொண்டே வந்தது. வழியில் ஒரு பெரிய குளம் இருந்தது. ராட்சச டிராகன் ஒன்றும் முடியாமல் நேராக குளத்தில் போய் விழுந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டது. குளத்தில் அது விழுந்தவுடன் பல அடி தூரத்துக்கு நீர் மேலேழுந்து அடித்தது. குளமே கொந்தளித்து வழிந்தது. அதே நேரம் ராட்சச டிராகனின் கண்களிலிருந்து நெருப்பு ஜுவாலை வீசியது, மூக்கிலிருந்து சுவாசக் காற்றாக கொதிக்கும் நீராவி வந்தது. வாயிலிருந்து மூச்சு சீறி சீறி எழுந்தது.

அது பேபரியிடம் கெஞ்சியது; “ஐயா, பெருமகனே… இதோடு வாசிப்பை நிறுத்தி விடுங்கள். இதே இடத்திலே நான் கிடந்து விடுகிறேன்…” என்றது.

“சரி… நீ யாருக்கும் துன்பம் இழைக்கக்கூடாது. கேடு புரியக்கூடாது. அப்படியானால் வாசிப்பை நிறுத்துவேன்” என்றான் பேபரி.

ராட்சச டிராகன் அதற்கு ஒத்துக்கொண்டது. அக்காவும் தம்பியும் வீடு திரும்பினார்கள். தாய் மகிழ்ச்சியில் தத்தளித்தாள்.

சில நாடள்களுக்குப் பின்னர் ராட்சச டிராகன் இருக்கின்ற குளத்திலே குளிக்கப் போனவர்கள் காணாமல் போனார்கள். அடி ஆழத்திலிருந்து மேலெழுந்து வந்து டிராகன் குளிக்க வருகிறவர்களை துன்புறுத்தலானது. சிலரை தூக்கிக் கொண்டு அடி ஆழத்துக்குச் சென்றது.

இதைக் கேள்விப்பட்டவுடன் பேபரி மறுபடியும் குழலுடன் குளத்தருகே வந்தான். குழலை வேக வேகமாக வாசித்தான். இப்படி ஏழு நாட்கள் வரை செய்தான். தண்ணீருக்குள் ராட்சச டிராகன் தண்டாமாலை ஆடியது. ஆடி, ஆடி, களைத்து வீழ்ந்தது. கடைசியில் செத்தும் போனது.

தமக்கையும் தம்பியும் மனநிறைவோடு வீடு திரும்பினார்கள். டிராகனின் மேல் தோலை எடுத்து வீடு கட்டிக் கொண்டனர். டிராகனின் எலும்புகளை தூண்களாகவும் கூரையைத் தாங்கும் வாரைகளாகவும் அமைத்துக் கொண்டனர். டிராகனுடைய கொம்பை வெட்டி எடுத்து அதை நிலத்தில் உழவுக்குப் பயன்படுத்திக்கொண்டனர்.

இவ்வாறு அக்காவும் தம்பியுமாக டிராகனின் உடலிலிருந்து. பலவகையில் பயன் பெற்றனர்.

முதல் போர் தொடங்கியது

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 4

partition 8இரு மருங்கும் ஊசி இலை மரங்கள் நிறைந்திருக்கும் அந்த  அழகிய சாலை காஷ்மீரின் வாசலான பாரமுல்லாவில் அமைந்துள்ளது. அது பாரமுல்லாவின் கத்தோலிக்கப் பள்ளி, விடுதி, புனித ஜோசப் மருத்துவமனை ஆகியவற்றைக் கொண்ட வளாகத்தை நோக்கி நீள்கிறது. அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் விரைந்து செல்கிறார். அவர் முகத்தில் ஒரு படபடப்பு. அவர் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஏற்படும் விளைவுகளை நினைத்து அவர் இதயம் துடித்தபடி இருக்க, வேகமாக வண்டியைச் செலுத்துகிறார்.

1947 அக்டோபர் 27 ஆம் தேதி பாரமுல்லாவில் ஒரு கொடிய நாளாக விடிந்தது. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் பெயர் மேஜர் சௌரப் ஹயத் கான். அவர் முன்னாள் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் பதான் அதிகாரி. இன்னும் சில நாள்களில், புதிதாக உருவான பாகிஸ்தானின் ராணுவ அதிகாரியாக பணியமர்த்தப்பட  உள்ளார். வளாகத்துக்குள் நுழைந்து மருத்துவமனை தோட்டத்துக்குச்  செல்கிறார். மோட்டார் சைக்கிளின் என்ஜினை  நிறுத்தி விட்டு அதிலிருந்து இறங்குகிறார். அது ஒரு புறம் விழ  கத்தியபடி வேகமாக ஓடுகிறார். “ நிறுத்துங்கள். நிறுத்துங்கள்.அவர்களைக் கொல்லாதீர்கள்”

அங்கே வரிசையாக பலர் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர் வருவதற்கு முன்பு அங்கு நுழைந்த இஸ்லாமிய பதான் பழங்குடி முஜாஹிதின் படை துப்பாக்கி முனையில் அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. முஜாஹிதின் என்பது பெர்ஷிய அரேபிய  பன்மைச் சொல். இது ஜிஹாத் போரில் பங்கு பெறும் முஸ்லிம் கொரில்லா வீரர்களைக் குறிக்கிறது. பெண் மருத்துவர் திருமதி பேரிடோ, நான்கு  கன்னிகாஸ்திரிகள் ஆகியோர் நடுங்கியபடி அங்கு  நின்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இருந்த கைக்கடிகாரம்,மூக்குக்கண்ணாடி போன்ற பொருள்களை வந்தவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள்.  அவர்களை எப்படியாவது அந்த மனித வேட்டையாடுபவர்களிடமிருந்து காப்பாற்றுவதே அவர் முதல் வேலை. ஆனால் அவர் அங்கு வருவதற்கு முன்னால் மருத்துவமனையில் இருந்த பலர் கொலை செய்யப்பட்டு விட்டார்கள்.

பழங்குடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் மருத்துவரின் கணவர் ஜோஸ் பேரிடோ;மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமதி கபூர்; திருமதி டைக்ஸ்; அவர் கணவர் கர்னல் டைக்ஸ்; அன்னை திரிசாலினா, பிலோமினா ஆகியோர் அடங்குவார்கள். கர்னல் டைக்ஸ் விடுமுறையின்போது தில்லியிலிருந்து அங்கு வந்திருந்தார். அன்னை திரிசாலினா இருபத்து ஒன்பது வயது நிரம்பியவர். சில வாரங்களுக்கு முன் தான் ஸ்பெயின் நாட்டிலிருந்து அங்கு வந்தார். திருமதி டைக்ஸ் புதிதாக தான் பெற்றெடுத்த ஆண் குழந்தையோடு இங்கிலாந்து புறப்படத் தயாராக இருந்தவர். அந்தக் குழந்தை அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியது. பாகிஸ்தான் ஏவிய படை மருத்துவமனையில் இருந்த உயிர் காக்கும் பொருள்களைச் சூறையாடிவிட்டு, அதைச் சூழ்ந்து கொண்டிருந்தது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான  முதல் போர் தொடங்கி விட்டதை அறிவித்துக் கொண்டிருந்தது அது.

இருபத்து நான்கு மணி நேரத்துக்குப் பிறகு கர்னல் டைக்ஸும், அன்னை திரிசாலினாவும் குண்டடிப்பட்ட காயத்தினால் இறந்து போனார்கள். மேஜர் சௌரப் ஹயத் கான் அட்டகாசம் செய்து கொண்டிருந்தவர்களில் தனது நம்பிக்கைக்குரிய சில பதான் வீரர்களோடு உயிர் பிழைத்தவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார். பெஷாவரில்  பள்ளி நாள்களில் கன்னிகாஸ்திரிகளே அவருக்குக் கல்வி புகட்டினார்கள். அப்போது அவர்கள் காட்டிய அன்பை அவரால்  மறக்க முடியவில்லை . அதனால்தான் கன்னிகாஸ்திரிகளையும், அங்கிருந்த மற்றவர்களையும் தான் காப்பாற்றியதாகப் பின்னாளில் அவர் கூறியிருக்கிறார்.

ஆன்ரூ ஒயிட் ஹெட் , ‘எ மிஷன் இன் காஷ்மீர்’ (2007) என்ற தமது நூலில் இந்திய பாகிஸ்தான் முதல் போர் தொடங்கிய போது பாரமுல்லாவில் நடந்தவற்றை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அங்கு நடந்த  படுகொலைகளைக் கண்டவர்களின் நேரடி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளார்.  ஒரு பிபிசி நிருபராக 1992 ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர், பல இடங்களுக்குப் பயணம் செய்து பலரைப் பேட்டி கண்டு உண்மைத் தகவல்களைத் திரட்டி எழுதியுள்ளார்.

பழங்குடிப் படை தாக்குதலின் போது உயிர் பிழைத்தவர் சகோதரி எமிலா. அவர் தாய் தந்தையரை இழந்த குழந்தையை வைத்துக் கொண்டு அதைக் காப்பாற்ற போராடி இருக்கிறார். மேலும் டைக்ஸ் தம்பதியினரின், இரண்டு வயதும், நான்கு வயதும் நிரம்பிய இரண்டு மகன்களையும் காப்பாற்றினார். மேஜர் சௌரப் ஹயத் கான் முதலில் உயிர் தப்பியவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்துள்ளார். ஆனால் அதற்குப் பிறகும் கொலைகள் தொடர்ந்தன. உயிர் தப்பியவர்களில் செவிலியர்கள், கன்னிகாஸ்திரிகள், போதகர்கள், நோயாளிகள், உள்ளூர் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், குழந்தைகள் என கிட்டத்தட்ட எண்பது பேர் இருந்தார்கள். அவர்களுள் புதிதாகப் பிறந்த குழந்தையும் அடங்கும். அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் ஒரு சிறிய வார்டில் ஒளிந்திருந்தார்கள். பசியோடும், பயத்தோடும் பதினோரு நாள்களை அங்கே கழித்தார்கள்.

லாரிகளில் பாரமுல்லா வந்து இறங்கிய சுமார் 5000 பேர் கொண்ட  பழங்குடிப் படை  இரண்டு நாள்கள் வீடுகளைச் சூறையாடியது. பலர் கொல்லப்பட்டார்கள். கோயில்கள் உடைக்கப்பட்டன. பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார்கள். அவர்களுள் ஐரோப்பிய கன்னிகாஸ்திரிகளும் அடங்குவார்கள். 10,000 பேர் தங்கள் வீடுகளைவிட்டு ஓடினார்கள். கொள்ளையடிப்பதிலும் பெண்களைக் கடத்துவதிலும் ஈடுபட்டிருந்த பழங்குடிப் படை அங்கிருந்து சுமார் 53 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஸ்ரீ நகருக்குச் செல்லவில்லை. அவர்கள் அங்கு சென்றிருந்தால் விமான தளம் எளிதாக அவர்கள் வசம் வந்திருக்கும். ஏனென்றால் அங்கு பாதுகாப்புக்கு யாரும் இல்லை.

பாகிஸ்தான் போரில் இறங்குகிறது என்றால் அதற்கான காரணங்களை ஆராய வேண்டியதில்லை. ஏனென்றால் பல சமயங்களில் அந்தக்  காரணங்களை உருவாக்குபவர்களும் அவர்களாகத்தான் இருப்பார்கள். 1947 இல்   சுதந்தரம் பெற்ற சமஸ்தானமாக காஷ்மீர் இருக்கிறது. அதன் விருப்பப்படி இந்தியாவுடனோ அல்லது  பாகிஸ்தானுடனோ  தன்னை இணைத்துக்கொள்ளலாம். காஷ்மீர் அரசர் ஹரி சிங் தனியாக இருக்க விரும்புகிறோம் என்றார். நேரு பொறுமை காத்தார். காஷ்மீரை உடனே இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள உண்மையிலேயே அவர் அவசரம் காட்டவில்லை. பாகிஸ்தானுக்கு  காஷ்மீர் வேண்டும். காஷ்மீர் அரசர் என்ன நினைக்கிறார் என்று தெளிவாகத் தெரியவில்லை. உடனே காஷ்மீரை முற்றுகையிட வேண்டும். அதுவும் கடுமையானதாக இருக்கவேண்டும். இந்திய ராணுவம் காஷ்மீரில் இறங்கி திருப்பித் தாக்கி விரட்ட வரும் என்பதும் பாகிஸ்தானுக்குத் தெரியும். இருந்தபோதும் சுதந்தரம் வாங்கிய தருணத்தில் குழப்பத்தோடு வெற்றியைக் கொண்டாடும் இந்தியாவுக்கும், வளைந்து கொடுக்காத காஷ்மீருக்கும், ஒரு பாடம் புகட்டியாகவேண்டும். போராளிகளைத் திரட்டுவதற்கு தயாராக எப்போதும் இருக்கிறது ஜிகாத் கோஷம்.

1947 ஆகஸ்டில்  இந்தியாவும், பாகிஸ்தானும் விடுதலை பெற்ற டொமினியன்களாயின. அதற்கு முன்னர் ஜூன் மாதத்தில் மவுண்ட்பேட்டன் காஷ்மீர் அரசர் ஹரி சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியத் தலைவர்கள் பலர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிடுமாறு அழுத்தம் கொடுத்தார்கள். ஹரிசிங்கைச் சுற்றி இருந்தவர்களும், அவர் உறவினர்களும் பாகிஸ்தானுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். கவர்னர் ஜென்ரல் மவுண்ட் பேட்டன் ஹரிசிங்கிடம் காஷ்மீர், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் தன்னை இணைத்துக்கொள்ளலாம் என்றார். அதற்கு முழு சுதந்தரம் உள்ளது என்றார். மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்னால்  விருப்பத்தைத் தெரிவித்தால் நல்லது என்று அரசரிடம் கூறினார். ஆனால் அவர் எந்தக் கருத்தையும் கவர்னர் ஜென்ரலிடம் கூறாமல் நழுவினார். அதன் காரணமாக இந்திய விடுதலைக்குப் பிறகு காஷ்மீர் தனி சமஸ்தானமாகத் தொடர்ந்து இருந்தது.

வி.கே.  கிருஷ்ணமேனன் 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி காஷ்மீர் தொடர்பாக ஐ. நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சில தகவல்களைத் தெரிவித்தார். அதன்படி இந்திய பாகிஸ்தான் விடுதலைக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக அதாவது  1947 ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஹரி சிங் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஒரே தேதியிட்ட தந்திகளை அனுப்புகிறார். அதில் 12 ஆம் தேதி முதல் தபால், போக்குவரத்து போன்ற  அடிப்படை சேவைகள் தொடர  ‘நிலை தொடரும் ஒப்பந்தம்’ செய்து கொள்ள வேண்டுகோள் வைக்கிறார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி பாகிஸ்தான் காஷ்மீருக்கு சம்மதம் தெரிவித்து தந்தி அனுப்பியது. இந்திய அரசாங்கம், காஷ்மீர் பிரதம மந்திரியோ அல்லது வேறு மந்திரியோ தில்லி வரவேண்டும் என்று தகவல் அனுப்பியது.மேலும் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன் பேச்சுவார்த்தை தேவை என்றது. பாகிஸ்தானுக்குக் காரணம் ஒன்று கிடைத்தாகிவிட்டது. இந்தியா அதில்  நிதானமாக செயல்பட்டது உண்மை. அப்போது இந்தியா தன் ராணுவத்தை காஷ்மீரை நோக்கி நகர்த்தவில்லை. ஆனால் காஷ்மீர் அமைச்சர் ஒருவர் தில்லி வருவதற்கு முன்பாக பாகிஸ்தான் பழங்குடிப் படையை காஷ்மீரை நோக்கி ஏவிவிட்டது.

வரலாற்றுத்  தகவல்களில் உண்மையைக் கண்டறிவது என்பது எப்போதுமே ஒரு சவால்தான். ஒயிட்ஹெட் கடுமையான முயற்சி எடுத்து,  1947 இல் காஷ்மீரில் நடந்த தாக்குதல் பற்றிய தகவல்களை தன் நூலில் தருகிறார். அவர் தன் கருத்துகளை முன் வைக்கும்போது படிப்பவர்களுக்கு சில ஐயப்பாடுகளும் வருகின்றன. இன்னும் முனைப்போடு  படையெடுப்பை பாகிஸ்தான் நடத்தியிருந்தால் காஷ்மீர் சமஸ்தானம் முழுவதும் பாகிஸ்தான் வசம் வந்திருக்கும். அதை ஏன் அவர்கள் செய்யவில்லை என்று ஒரு கேள்வியை தாமே எழுப்பி ஆதங்கப்படுகிறார். மேலும் 1947 அக்டோபர் 22 ஆம் தேதி முதல் பழங்குடியினர் படை தற்போதைய ஆசாத் காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத் வழியாக பாரமுல்லாவரை வன்முறையை நிகழ்த்திக் கொண்டு வந்தது.  அப்படி இருக்க, அக்டோபர் 27 ஆம் தேதி மவுண்ட்பேட்டன் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்டார்; அதே தேதியில் இந்தியா ராணுவத்தை விமானத்தில் ஏற்றி ஸ்ரீ நகர் அனுப்பி வைத்தது; அதே தேதியில் தான் பழங்குடிப் படையால் பாரமுல்லா மருத்துவமனை வளாகம் தாக்கப்பட்டது என்று பல முறை தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். 22 ஆம் தேதி முதல் காஷ்மீரில் பாகிஸ்தான் அனுப்பிய பதானியப் படையின் தாக்குதலும், ஆக்கிரமிப்பும்  நடக்கின்றன. அவற்றின் தொடர் நிகழ்வாக  காஷ்மீர் இணைப்பு நடந்தது என்பதை அவர் அலட்சியம் செய்வது போல் உள்ளது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்தான், பாகிஸ்தான் பதானியப் படையை காஷ்மீருக்கு அனுப்பியது என்னும் பொருள்பட அவர் எழுதுகிறார்.

உண்மையில்  நடந்தது என்னவென்றால் 24 ஆம் தேதியே அரசர் ஹரிசிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க  முடிவு செய்துவிட்டார். அக்டோபர் 26 ஆம் தேதி ஹரிசிங்  காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதை உறுதிபடுத்தும் இணைப்பு ஆவணத்தில் கையொப்பமிட்டு, வி.பி. மேனனிடம் கொடுத்து அனுப்பினார். அதை ஒப்புக்கொண்ட கவர்னர் ஜென்ரல் மவுண்ட் பேட்டன் 27 ஆம் தேதி காஷ்மீர் இணைப்பு ஆவணத்தில் தாமும் கையொப்பமிட்டார். ஒயிட்ஹெட் இந்தியா ராணுவத்தை அனுப்புகிறது என்று தெரிந்தவுடன் தான் பாகிஸ்தான் தன் படைகளை பழங்குடியினர் படையுடன் சேர்த்து காஷ்மீருக்கு  அனுப்பியது என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.இது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

நடு நிலையுடன்  ஆய்வை மேற் கொண்டு அதைப் பதிவு செய்த பிறகு தன் விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.அவர்கள் அவ்வாறு செயல்பட்டிருந்தால், இவ்வாறு நடந்திருக்கும் என்றெல்லாம் கூறுவது உண்மை நிகழ்வுகளை அறிய விரும்பும் சிலரிடம் குழப்பத்தை உண்டாக்கும்.மேலும் ஒயிட்ஹெட் கிளப்பும் சந்தேகங்கள் யாருக்கும் வரலாம்.எனவே அவர் ஐயப்பாடு பற்றியும்,ஆதங்கம் பற்றியும் பார்ப்பது எல்லோருக்கும் பயனுள்ளதாக  இருக்கும். இரண்டு காரணங்களின் அடிப்படையில் இந்தியா காஷ்மீரைத் தன் வசம் வைத்துக்கொண்டது என்கிறார் ஒயிட் ஹெட்.

  1. இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்துக்கொள்வதற்கு அரசர் ஹரிசிங்கும், ஷேக் அப்துல்லாவும் சம்மதித்தார்கள்.
  2. முறைப்படி காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக ஆன பின் தான் இந்தியப் படை ஸ்ரீ நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டாவது காரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக அவர் கருத்து தெரிவிக்கிறார்.அதற்குக் காரணம் வி.பி மேனனின் காஷ்மீர் இணைப்பு பற்றிய விரிவான அரசாங்க குறிப்பு என்கிறார். காஷ்மீர் அரசரிடம் இணைப்பு ஆவணத்தில் கையொப்பம் வாங்கிய இந்திய ஐ.சி.எஸ். அதிகாரி ராவ் பகதூர் வப்பல பன்குன்னி மேனன் என்ற  வி.பி. மேனன் காஷ்மீர் இணைப்பு பற்றிய அதிகாரபூர்வமான நீண்ட  அரசாங்கக் குறிப்பை அளித்தார். அதில் சில தவறான தகவல்கள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார் ஒயிட் ஹெட். மேலும் இந்திய ராணுவம் ஸ்ரீ நகர் விமான தளத்தில் தரை இறங்கிய பின்பு சில மணி நேரம் கழித்து தான்   காஷ்மீர் அரசர் இணைப்பு ஆவணத்தில் கையொப்பம் இட்டிருக்க வேண்டும். அதற்கே வாய்ப்புகள் அதிகம் என்கிறார். இவர் மறைமுகமாக  எதை வலியுறுத்த  முனைகிறார் என்று தெரியவில்லை. அவர் அக்டோபர் 27 ஆம் தேதியைப் பிடித்துக் கொள்கிறார். ஆனால் அக்டோபர் 22 இல் பழங்குடிப் படை  முசாபராபாத்தில் இருந்து ராணுவ லாரிகளில் புறப்படுகிறது. முசாபராபாத்துக்கும்,  பாரமுல்லாவுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 82 கிலோமீட்டர்கள்.  வழி நெடுகிலும் பதானியப்படை மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அக்டோபர் 27 இல்  பாகிஸ்தான் அனுப்பிய அந்தப் படை பாரமுல்லா வந்து சேர்கிறது.

எல்லையில் இருந்த,  இந்திய பிரிட்டிஷ் ராணுவ காலாட்படை  டோக்ரா பிரிவு வீரர்கள் கடுமையாகப் போராடி உள்ளே நுழைய முயன்றவர்களைத் தடுத்தார்கள். ஆனால் பழங்குடியினர் படை அவர்களை வெற்றி கொண்டு முன்னேறியது. வேறு வழி இல்லாமல் காஷ்மீர் அரசர் ஹரி சிங் அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியாவிடம் ராணுவ உதவி கோருகிறார். அக்டோபர் 25 ஆம் தேதி இந்திய பாதுகாப்புக் குழு கூட்டத்தில் ராணுவத்தை காஷ்மீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு தலைமை வகித்தவர் மவுண்ட் பேட்டன். இந்தத் தகவலை மெக்.ஆர்.ஜான்சன்  ‘நியூயார்க் ஹெரால்டு டைம்ஸில் எழுதியுள்ளார் (1956 மார்ச் 3 ஆம் தேதி).

அந்தக் கூட்டத்தில் மவுண்ட் பேட்டன் காஷ்மீர் முறைப்படி இந்தியாவுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் வரை பொறுமை காக்க வேண்டும் என்றார். அதன்படி வி.பி. மேனன் ஜம்முவுக்கு விமானம் முலம் சென்றார். ஹரி சிங் ஸ்ரீ நகரில் இருந்து  அங்கு வந்தார். வி.பி. மேனன் இந்தியாவின் நிலையைத் தெளிவுபடுத்தினார். ஹரி சிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்டார். மேலும் இந்திய ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்பும்படி மவுண்ட் பேட்டனுக்கு வேண்டுகோள் விடுத்து தான் எழுதிய கடிதத்தையும் வி.பி.மேனனிடம் கொடுத்தார். இதற்கு இடையில் ஹரிசிங் ,ஷேக் அப்துல்லாவை காஷ்மீரின் அவசரகால  நிர்வாகத்தின் தலைவர் ஆக்கினார். இணைப்பு ஆவணத்தில் இந்திய அரசின் சார்பாக மவுண்ட் பேட்டன் கையொப்பமிட்டார்.அவசர கால நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் காஷ்மீர் மக்கள் சார்பாகவும், காஷ்மீர் பிரதமர் மெகர்சந் மகாஜன் சார்பாகவும் ஷேக் அப்துல்லா கையொப்பமிட்டார். இந்த மெகர்சந் மகாஜன்  பின்னாளில் இந்தியாவில் சுப்ரீம் கோர்ட்டின் மூன்றாவது நீதிபதியாக பதவி வகித்தார்.

காஷ்மீர் பிரச்னையின் தொடக்கம்  பாகிஸ்தானின் படையெடுப்புத் திட்டத்தில் உள்ளது. அதன் மையம் பாகிஸ்தானில் உள்ள சிலரின் மனப்போக்கிலும், தொடர் செயல்பாட்டிலும் இருக்கிறது. காஷ்மீர் பிரச்னை வேகம் கொள்வதற்கும், இன்றும் அது வெடிப்பதற்குமான காரணங்கள் அவைதாம். இது யூகம் அல்ல.பாகிஸ்தான் ராணுவத்தை வழிநடத்திய சிலரின் வாக்குமூலங்களோடு தெளிவாக  நிறுவப்படும் உண்மை.

(தொடரும்)

 

 

 

 

முதலாம் பதுமை சொன்ன விக்கிரமாதித்தன் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 4
Meditation_Silhouette_by_leon433காட்டிலிருந்து அகழ்ந்தெடுத்த நவரத்தின சிம்மாசனத்தை தனது நாட்டுக்கு எடுத்து வந்த போஜராஜன் அதற்கென்றே அரண்மனையில் ஒரு பெரிய ஆயிரம்கால் மண்டபத்தைக் கட்டினான். அதை பூக்களாலும், பொன்னாரங்களாலும், வெள்ளிச் சரிகைகளாலும், தோரணங்களாலும் அலங்கரித்து மண்டபத்தின் நடுவில் கம்பீரமாக சிம்மாசனத்தை அமர்த்தினான்.

வேத விற்பன்னர்கள்  காசி, ராமேஸ்வரம் முதலான பலப்பல திவ்யக்ஷேத்திரங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்ட புனிதத் தீர்த்தங்களால் அந்தச் சிங்காதனத்தை அபிஷேகித்து, யாகம் வளர்த்து வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து புனிதப்படுத்தினார்கள். எல்லாம் முடிந்ததும் ஒரு நல்ல முகூர்த்த நேரத்தில் போஜ மன்னன் முப்பத்திரண்டு படிகள் கொண்ட சிம்மாசனத்தின் மீது ஏறி அமரப் போனான்.

அப்போது சிம்மாசனத்தின் முப்பத்திரண்டு படிகளிலும் உள்ள முப்பத்திரண்டு பதுமைகளும் ஏக காலத்தில் கலகலவெனச் சிரித்தன.

இதைக் கண்டு திகைத்துப் போன போஜ மன்னன், பதுமைகளைப் பார்த்து, ‘சிம்மாசனத்தின் வினோதப் பதுமைகளே, நான் சிம்மாசனம் ஏறப் போகும் சமயத்தில் எதற்காக சிரித்தீர்கள்? எனக்கொன்றும் விளங்கவில்லையே!’ என்று கேட்டான்.

உடனே முதல் படிக்குக் காவலாக நின்றிருந்த சுகேசி என்கிற வினோதப் பதுமை தனது இனிமையான பெண் குரலில், ‘போஜ ராஜனே, எங்களது சக்ரவர்த்திக்குள்ள வீரம், வேகம், தைரியம், நற்பண்பு, உயர்குடி பெருமை, நுண்கல்வி, மனதிட்பம் போன்ற குணங்கள் உனக்கிருக்கிறது என்று நினைத்தால் நீ இந்தச் சிம்மாசனத்தில் ஏறலாம்.’ என்றது.

இதைக் கேட்டு திடுக்கிட்ட போஜராஜன் அந்தப் பதுமையிடம், ‘ஏன் இப்படிச் சொல்கிறாய்? நீ கூறிய எல்லா குணங்களும் என்னிடமும் உள்ளன. தவிர ஈகையில் என்னைப் போல எவரும் இந்தப் பூவுலகில் இல்லை. யாசிப்பவர் எவராயினும் இல்லையென்று மறுத்துக் கூறாமல் அள்ளி அள்ளித் தருபவன் நான்!’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டான்.

சுகேசி மேலும் சிரித்தபடி, ‘இதோ இந்தச் சொல்லிக் காட்டும் தன்மையே உனது கீழ்மையான குணத்தைக் காட்டுகிறது. நற்குணம் கொண்ட ஒருவன், தான் செய்த உதவிகளை பெரிதுபடுத்திப் பேசுவும் மாட்டான்; மற்றவர்களது தவறுகளை உரக்கச் சொல்லித் திரியவும் மாட்டான். அது கீழானவர்களின் செயலாகும்.  எவனொருவன் தன்னைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொள்ளாமலும், மற்றவர்களுடைய குறைகளைப் பற்றி தண்டோரா போடாமலும் இருக்கிறானோ அவனே மனிதர்களில் சிறந்தவன் ஆவான்!’ என்றது.

சுகேசியின் சொற்களால் வெட்கமடைந்த போஜமகாராஜன், ‘ஆம்! நீ சொன்னது மிகவும் சரிதான். வலது கை கொடுப்பது இடது கைக்குக்கூடத் தெரியக்கூடாது என்பார்கள் பெரியோர். நான் என்னைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டது முட்டாள்தனம்தான்!’ என்று ஒப்புக் கொண்டான்.

சுகேசி மேலும் சொன்னது: ‘கேள்! போஜராஜனே! எங்கள் சக்கரவர்த்தி விக்கிரமாதித்த மகாராஜா ஐம்பத்தாறு தேசத்து மன்னர்களும் பணிந்து வணங்கி கப்பம் கட்டும்படியாகத் திகழ்ந்தவர். அவரது சகோதரரும், அறிவாளியுமான பட்டி என்கிற மதியூக மந்திரியுடன் இந்தப் பூலோகத்தை தேவலோக இந்திரனுக்கு நிகராக ஆண்டு ராஜ்ஜிய பரிபாலனம் செய்தவர். அவரைப் போல வீரதீர மகாராஜனல்லவோ இந்தச் சிம்மாசனத்தில் ஏறவேண்டும்!’ என்றது.

‘பதுமையே இந்த சிம்மாசனத்துக்கு சொந்தக்காரனான அந்த மகா வீரர் விக்கிரமாதித்த பூபதியைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என மிகுந்த ஆவலாக இருக்கிறேன். அவரது வரலாற்றைச் சொல்வாயா?’ என்று கேட்டான் போஜராஜன்.

‘ஆஹா! அதெற்கென்ன? அவரது பூர்வீகத்திலிருந்து சொல்கிறேன், கேளுங்கள் மகாராஜனே!’ – சுகேசி பதுமை சொல்லத் தொடங்கியது.

அந்தணனும் அலங்காரவல்லி தாசியும்…

ராஜமகேந்திரபுரம் அழகான ஊர். அந்த நகரத்தில் சந்திரவர்ணன் என்னும் பிராமணன் வாழ்ந்து வந்தான்.

சந்திரவர்ணன் மிகச் சிறந்த பண்டிதன். வேத விற்பன்னன். சகல சாஸ்திர புராணங்களைக் கரைத்துக் குடித்தவன். அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவன். ஆனாலும் தான் கற்ற வித்தைகளில் அவனுக்குத் திருப்தியில்லை. இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை, தெரிந்து கொள்ள வேண்டியவை அநேகம் உள்ளதாகக் கருதினான். அதையெல்லாம் கற்றுத் தருவதற்கு தகுந்த குருவைத் தேடிப் புறப்பட்டான்.

நாடோடியாக ஊர் ஊராக குருவைத் தேடித் திரிந்த சந்திரவர்ணன் ஒருநாள், கிராமம் ஒன்றைக் கடந்து காட்டு வழி செல்லும்போது, அங்கிருந்த குளம் ஒன்றில் முகம் கை கால்களை கழுவிக் கொண்டு தாகம் தீர தண்ணீர் அருந்தினான். பின் மிகுந்த களைப்பின் காரணமாக அந்த குளத்தோரத்தில் இருந்த ஆலமரத்தின் அடியிலேயே படுத்து தூங்கிப் போனான்.

சந்திரவர்ணன் படுத்து ஓய்வெடுத்த அந்த ஆலமரத்தில்தான் ஒரு பிரம்மராட்சஸன் வசித்து வந்தான். ரிஷியாக இருந்து சாபத்தினால் பிரம்மராட்சஸனாக மாறிப் போனவன் அவன். சாபவிமோசனம் வேண்டி, அந்த ஆலமரத்தில் தங்கி தவம் செய்து கொண்டிருந்தான். அன்றைய தவத்துக்குப் பிறகு கண் விழித்த பிரம்ம ராட்சஸன், மரத்தினடியில் உறங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து வியந்தான். அவன் யார் என்று தெரிந்து கொள்வதற்காக, ஓர் அந்தணனைப் போல் தனது உருவத்தை மாற்றிக் கொண்டு வந்து சந்திரவர்ணனை எழுப்பினான்.

‘ஐயா! பிராமணரே! யார் நீங்கள்? கள்வர்களும், கொடிய விலங்குகளும் நடமாடும் இந்தக் காட்டுப் பிரதேசத்துக்கு எதற்காக வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.

சந்திரவர்ணன் அவனை வணங்கி, ‘ஸ்வாமி! நான் ராஜமகேந்திரபுரம் என்கிற ஊரிலிருந்து வருகிறேன். வேத, சாஸ்திரப் புராணங்களில் மிகுந்த பாண்டித்யம் பெற்றவன் நான். ஆனாலும் கற்றுக்கொள்ள வேண்டிய சாஸ்திரங்கள், வித்தைகள் இன்னும் ஏராளம் உள்ளதால் அதற்கான தகுந்த குருவைத் தேடியே புறப்பட்டேன். தங்களைப் பார்த்தால் மாபெரும் பண்டித விற்பன்னர் என்று தோன்றுகிறது. என்னை தங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு மேலும் பல வித்தைகளையும் சொல்லித் தர வேண்டும்’ என்று வேண்டினான்.

பிரம்மராட்சஸனாகிய ரிஷி, புன்னகையுடன், ‘சந்திரவர்ணா,  உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்வதில் ஒன்றும் ஆட்சேபணையில்லை. ஆனால் ஒரு சின்ன நிபந்தனை. ஆறு மாத காலம், உணவு, உறக்கம் இரண்டையும் துறந்து நீ விரதம் இருக்கவேண்டும். நான் இந்த ஆலமரத்தின் மீதிருந்தபடியே அனைத்து வித்தைகளையும் உனக்குக் கற்பிக்கிறேன்!’ என்றார். முதல் காரியமாக, ஆறு மாத காலத்துக்கு பசி, தூக்கம் இரண்டும் சந்திரவர்ணனை பாதிக்காமல் இருக்க மந்திரம் ஒன்றை உபதேசித்தார். பின் வித்தை போதிக்கத் தொடங்கினார்.

பிரம்ம ராட்சஸன் மரத்தின் மீது அமர்ந்தபடியே ஆலமர இலைகளில் பாடங்களை எழுதிப் போட அவற்றைச் சேகரித்துக் கொண்டு, சந்திரவர்ணன் பசி, தூக்கம் முற்றும் துறந்து சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தான்.

ஆறு மாத காலம் விரைந்தோடிப் போனது. பிரம்ம ராட்சஸன், சந்திரவர்ணனுக்கு கல்வி கற்பித்தபடியே தனது தவத்தையும் முடிக்க, அவரது சாபம் நீங்கியது. தேவலோகத்திலிருந்து இந்திர விமானம் இறங்கி வந்தது. சாப விமோசனம் பெற்ற ரிஷி விமானத்தில் ஏறும் முன்பாக சந்திரவர்ணனிடம், ‘குருவுக்கு பெருமை சேர்க்கும் சிஷ்யன் நீ. இந்த உலகத்தில் உன்னளவுக்கு அறிஞர் வேறு யாருமில்லை. இனி நீ நகரம் திரும்பி ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டு, இல் வாழ்க்கையைத் தொடங்கு!’ என்று வாழ்த்திச் சென்றார்.

சந்திரவர்ணன் தனது ஊரான ராஜமகேந்திரபுரத்துக்கே புறப்பட்டான். வழியில் கன்னிகாபுரம் என்னும் நகரத்தை நெருங்கும்போது மாலைப் பொழுது முடிந்து இரவுப் பொழுது தொடங்கியது. நீண்ட தூரம் நடந்து வந்ததில் மிகவும் களைப்படைந்து அங்கே கண்ணில்பட்ட ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தான். சிறிது நேரத்திலேயே நினைவு தப்பி விழுந்தான். ஆறு மாத காலமாக பசி, தூக்கம் இல்லாமல் கிடந்ததன் காரணமாக அவனது உடல் கட்டை போல் ஆகிப்போனது.

சந்திரவர்ணன் விழுந்த கிடந்த வீடானது அலங்காரவல்லி என்னும் தாசியினுடையது. ராக்கால பூஜை முடிந்து கோயிலிருந்து திரும்பி வந்த அலங்காரவல்லி திண்ணையில் கிடந்த சந்திரவர்ணனைப் பார்த்து ஏதோ வழிப் போக்கன் என்று நினைத்து அவனுக்கு உணவிட்டு உபசரிப்பதற்காக எழுப்பினாள். திடுக்கிட்டாள்.

சந்திரவர்ணன் பிணம் போலக் கிடந்தான். மூச்சுக் காற்று மட்டும் வந்துகொண்டிருந்ததே தவிர உடலில் சிறிதும் அசைவில்லை. பதறிப் போன அலங்காரவல்லி உடனடியாக வைத்தியரை வரவழைத்தாள்.

அவர் சந்திரவர்ணனை பரிசோதித்து விட்டு, அலங்காரவல்லியிடம், ‘அம்மா! இந்த அந்தணன் நீண்ட காலங்களாக உணவும், உறக்கமும் இல்லாமல் கிடந்திருக்கிறான். அதன் காரணமாகவே இவன் இப்படி மூச்சு விடும் பிணம் போலாகி விட்டான். நான் ஒரு தைலம் காய்ச்சித் தருகிறேன். அதை இவன் உடல் முழுக்க நாளுக்கு மூன்று முறை தடவி வாருங்கள். உடலின் ரத்தநாளங்களில்  உணர்வு வந்து விடும். தவிர நான் தரும் இன்னொரு மருந்தை இவனுக்குப் புகட்டுங்கள். அது இது ஜீவ சக்தியைத் தந்து சுய நிலைக்கு மீட்டு விடும்!’ என்றார்.

அலங்காரவல்லி வைத்தியர் சொன்னது போலவே தைலம் தேய்த்து, மருந்து புகட்டி வர,  ஐந்தாம் நாள், சந்திரவர்ணன் பிரக்ஞை மீண்டான். நடந்தவைகளை அறிந்து அலங்காரவல்லிக்கு நன்றி சொல்லி விட்டு ஊருக்குப் புறப்படத் தயாரானான்.

அப்போது அலங்காரவல்லி, ‘ஸ்வாமி! நீங்கள் செய்வது நியாயமா? எனது வீட்டின் திண்ணையில் கிடந்த தங்களை எனது கணவனாகவே பாவித்துத்தான் வீட்டுக்குள் வைத்து இந்த  ஐந்து நாட்களாக பணி விடை செய்து வந்தேன். இப்போது உடல் குணமானதும் என்னை விட்டுப் போகிறேன் என்கிறீர்களே! நான், உங்களை விடவே மாட்டேன். தயவுசெய்து என்னை மணந்து உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.’ என்று வேண்டினாள்.

சந்திரவர்ணன் அதிர்ந்து போனான். ‘அடடா! என்னது இது! இது எப்படி நடக்கும்? பெண்ணே! நானோ அந்தணன்; நீயோ தாசி குலத்தவள். எப்படி உன்னை மணந்துகொள்வேன்? என்னால் முடியாது! சாஸ்திரம் இதை அனுமதிக்காது!’ என்று மறுத்தான்.

அலங்காரவல்லி கேட்பதாயில்லை. அவள் சந்திரவர்ணனை அழைத்துக்கொண்டு அந்த நகரத்து மன்னனிடம் சென்று  தன் வழக்கைக் கூறினாள். நீதி வழங்குமாறு கேட்டாள்.

ராஜா ரவிமாறவர்மன் இருதரப்பு நியாயங்களையும் கேட்டான். பின் அவன் மந்திரியிடமும் ராஜ பிரதானிகளிடமும் கலந்தாலோசிக்க,  ராஜகுரு எழுந்து,

‘அரசே! அந்தணன் ஒருவன், தாசி குலத்துப் பெண்ணை மணந்து கொள்வதை சாஸ்திரம் ஒப்புக் கொள்ளாது எனது உண்மைதான். ஆனால் அப்படி ஓர் அந்தணன் தனது குலத்தைத் தவிர வேறு குலத்துப் பெண்ணை மணந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் நேர்ந்தால் அப்போது அவன் நான்கு வர்ணத்திலுள்ள பெண்களையும் ஒரே சமயத்தில் ஒரே முகூர்த்தத்தில் மணந்து கொள்ளவேண்டும் என்று சாஸ்திரம் வழி சொல்கிறது!’ என்று கூறினார்.

வழக்குக்குத் தீர்வு கிடைத்ததென்று மன்னன் மகிழ்ந்து போனான்.

அவன் தனது ராஜகுருவிடம், ‘அப்படியானால் சத்ரிய குலத்தவளான எனது மகள் சித்ராங்கியையும், பிராமண குலத்துப் பெண்ணான உமது மகள் காஞ்சனையையும், வைசிய குல சோமசுந்தர செட்டியாரின் மகள் கோமளவல்லியையும், இவர்களுடன் தாசி அலங்காரவல்லியையும் சேர்த்து நால்வரையும் ஒரே முகூர்த்தத்தில்   இந்த அந்தணனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவோம்! எல்லோருக்கும் சம்மதம்தானே?’ என்று கேட்டான்.

மன்னன் சொல்லை யாரால் மறுக்க முடியும்!

ஒரு சுபமுகூர்த்த நாளில் சந்திரவர்ணன் நால்வரையும் மனைவிகளாக்கிக் கொண்டான். அந்நகரிலேயே தங்கி தனது நான்கு மனைவிகளுடன் சுக போகமாக வாழ்க்கை நடத்தினான்.

அவனது இனிய இல்வாழ்க்கையின் பயனாக  பிராமணப் பெண்ணுக்கு வல்லப ரிஷி என்கிற மகனும், அரசகுமாரி சித்ராங்கியின் மூலமாக விக்கிரமாதித்தன் என்னும் புதல்வனும், வைசியப் பெண்ணுக்கு பத்ரி எனும் புத்திரனும், கடைசியாக தாசி அலங்காரவல்லிக்கு பர்த்ருஹரி என்னும்  தனயனுமாக நான்கு குமாரர்கள் பிறந்தார்கள்.

இந்த இடைக்காலத்தில் ராஜா ரவிமாறவர்மன் உடல்நலம் குன்றி இறந்துபோக மருமகனான சந்திரவர்ணனே  அந்நகரத்தின் மன்னனாகி நல்லாட்சி நடத்தினான்.

***

வருடங்கள் கடந்தன. சந்திரவர்ணனின் புதல்வர்கள் நால்வரும் வளர்ந்து இளைஞர்கள் ஆனார்கள். பெரும் அறிஞர்களிடம் கல்வி கற்ற அவர்கள் அனைவரும் சிறந்த புத்திமான்களாகவும், இணையில்லா வீரர்களாகவும் திகழ்ந்தார்கள்.

நாளடைவில் சந்திரவர்மனும் வயோதிகம் அடைந்து உடல்நலம் குன்றினான்.

அவனது முடிவுநாள் நெருங்கும் நேரத்தில் நான்கு மகன்களும் சுற்றிச் சூழ்ந்திருக்க, சந்திரவர்ணன் தனது கடைசி மகனும் தாசி அலங்காரவல்லியின் புதல்வனுமான பர்த்ருஹரியைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினான். என்ன காரணமென்று மற்றவர்களுக்குப் புரியாவிட்டாலும் பர்த்ருஹரிக்குப் புரிந்து போனது.

‘தந்தையே தங்கள் வேதனை எனக்குப் புரிகிறது! தாசியின் மகனான நான் திருமணம் செய்து கொண்டு என் மூலம் சந்ததி ஏற்பட்டால் மேலுலகில் தங்களுக்கு மோட்சம் கிடைக்காது என்று சாஸ்திரம் சொல்கிறது. அதுதானே தங்கள் துன்பத்துக்குக் காரணம்? நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன். நான் திருமணம் செய்து கொண்டாலும் என் மூலமாக சந்ததி ஏற்படாது என்பது நிச்சயம்!’ என்று வாக்களித்தான்.

இதனால் மனத் திருப்தியடைந்த சந்திரவர்ணன், தனது மற்ற மகன்களிடம், ‘என் அன்பு குமாரர்களே, எனது மேலுலக நலனுக்காக தனது குல விருத்தியையே தியாகம் செய்த பர்த்ருஹரிக்கு நானும் பிரதிபலனாக ஏதாவது செய்ய ஆசைப்படுகிறேன். எனவே நான் இறந்த பிறகு இந்த நாட்டை ஆளும் அரசனாக பர்த்ருஹரிக்கே பட்டம் சூட்ட நினைக்கிறேன். நிறைவேற்றுவீர்களா?’ என்று கேட்க மற்ற மூன்று மகன்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

சந்திரவர்ணன் மன நிம்மதியுடன் இறந்து சொர்க்கம் போனான்.

தந்தை சொற்படியே பர்த்ருஹரி அந்நாட்டின் மன்னனானான். மற்ற மூன்று மகன்களுள் அந்தண குமாரனான வல்லபரிஷியோ தனது குல வழக்கப்படி தவம் செய்ய விரும்பி, மற்ற இரு சகோதரர்களான பட்டி, விக்கிரமாதித்தனை ராஜா பர்த்ருஹரிக்கு பக்க பலமாக இருக்கச் சொல்லி விட்டு, விடை பெற்றுக் கொண்டு தவம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்.

***

ராஜா பர்த்ருஹரியின் ஆட்சியில் கன்னிகாபுர ராஜ்ஜியம் மிகுந்த செல்வச் செழிப்போடு திகழ்ந்தது.

பிரதம மந்திரியான பட்டியின் துணையோடு மன்னன் நீதி நெறி வழுவாமல் தருமப் பரிபாலனம் நடத்தினான்.  இன்னொரு தம்பியான விக்கிரமாதித்தன் தனது வீரத்தால் அண்டை தேசத்து மன்னாதி மன்னர்களையெல்லாம் ஜெயித்து அனைவரையும் ராஜா பர்த்ருஹரியின் ஆட்சியின் கீழ் கப்பம் கட்டி பணிந்து நடக்கச் செய்தான். குடிமக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் சுபிட்சமாக வாழ்ந்திருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் ராஜா பர்த்ருஹரியின் வாழ்க்கையையே திசை மாற்றிப் போட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது!

ஒரு இனிப்பான பழத்தின் மூலம் கசப்பான நிகழ்வுக்கு வித்திட்டவன் சோமசர்மன் என்கிற ஓர் அந்தணன்!

(தொடரும்)

முரசொலியால் பயந்த நரி

பஞ்சு தந்திரக் கதைகள் / அத்தியாயம் 1.3

imagesமுன்னொரு காலத்தில் நரி ஒன்று காட்டில் உணவு கிடைக்காததால் அங்கும் இங்குமாக அலைந்து, திரிந்து பின்னர் சமவெளிப் பகுதிக்கு வந்தது. அங்கும் அதற்கு உணவு கிடைக்கவில்லை. மனச்சோர்வுடன் பசி மயக்கத்தில் தட்டுத் தடுமாறி மற்றோர் இடத்துக்கு வந்தது. அதுவொரு போர்க்களம் பூமி. அந்த இடத்திலும் போர் நிகழ்ந்து வெகு நாட்கள் ஆகிவிட்டிருந்ததால் நரிக்கு அங்கும் எந்த உணவும் கிடைக்கவில்லை.

களைப்பின் மிகுதியால் நரி அங்கேயே ஓர் ஓரமாக படுத்து உறங்கத் தொடங்கி விட்டது. அப்போது நரியின் செவிகளில் திடீரென்று ஒரு பேரொலி கேட்டது. அந்தச் சப்தம் மிகப் பயங்கரமாக இருந்தது. அதைக் கேட்டு நரி பதறிப் போய், ‘ஐயோ நான் செத்தேன்!’ என்று அலறி அங்கும் இங்கும் ஓடியது. பிறகு சற்று நிதானித்துக் கொண்டு சப்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்று முற்றும் பார்த்தது. சப்தம் வந்த திசையை நோக்கிச் சற்று அச்சப்பட்டவாறே மெல்ல மெல்ல நடந்து சென்றது.

அங்கு சற்றுத் தொலைவில் ஒரு மரம் இருந்தது. நரி அந்த மரத்தினை நெருங்கிப் பார்த்தது. அந்த மரத்தின் கீழ் ஒரு பெரிய போர் முரசு இருந்தது. எப்போதோ போர் நடந்த அந்த இடத்தில் தோற்றுப் போன படைவீரர்கள் அவர்களின் போர் முரசுகளில் ஒன்றினை அங்கேயே விட்டுச்சென்றிருந்தனர்.
‘சரி, யாரும் இல்லாதபோது, இந்த முரசு எப்படி ஒலித்தது?’ என்று புரியாமல் நரி குழம்பியது. முரசுக்குப் பக்கத்தில் அந்தக் கோலைப் பார்த்தது. அந்தக் கோல் பட்டுப்போன ஒரு மரக்கிளையின் பகுதி.

‘ஓஹோ! மரத்திலிருந்து பட்டுப்போன ஒரு கிளை ஒடிந்து கீழேயிருந்த போர்முரசின் மீது பட்டு, அதனை ஒலிக்கச் செய்துள்ளது’ என்று நரி ஊகித்துப் புரிந்துகொண்டது. சே! இதற்கா பயந்து போனோம் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷத்துடன் அங்கிருந்து விலகிப் போனது.

தோலும் கோலும் கதை சொல்லி முடித்த குட்டி நரி தமனகன், ‘ராஜா! எப்போதும் ஓர் ஒலியை மட்டும் கேட்டுவிட்டு நாமே பலவாறு கற்பனை செய்துகொண்டு பயப்படுவது சரியல்ல. எனது முன்னோரான நரியைப் போலத் தாங்களும் ஒலி வந்த திசைக்குச் சென்று, ஒலியை எழுப்பியது எது? என்பதனை ஆராய்ந்திருக்கவேண்டும்’ என்றது.

‘ஆம்! நான் அவ்வாறு செய்யவில்லை’ என்றார் சிங்கராஜா.

‘ராஜாவே! தாங்கள் அனுமதியளித்தால் நான் சென்று தாங்கள் கேட்ட ஒலியை எழுப்பியது எது என்பதனை ஆராய்ந்து வருவேன்’ என்று நயமாகக் கேட்டது தமனகன்.

‘நல்லது. அந்த ஒலியை எழுப்பியது யார் என்று நீயே அறிந்து வா’ என்று ராஜா, தமனகனிடம் பொறுப்பினை ஒப்படைத்தது.

ராஜா தமக்கு ஒரு வேலையைத் தந்துவிட்டார் என்று மகிழ்ந்த தமனகன், ராஜாவிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அந்த ஆற்றங்கரையை நோக்கிச் சென்றது.

ஆற்றங்கரைக்கு அருகில் புல்மேய்ந்துகொண்டிருந்த வண்டி மாடான சஞ்சீவகனைக் கண்ட தமனகன், தன்னை அறிமுகம் செய்துகொண்டு, அதன் பெயரைத் தெரிந்துகொண்டது.

பின்னர், ‘நீ எவ்வளவு பெரிய தவறுசெய்துவிட்டாய், தெரியுமா?!’ என்று அதட்டலான குரலில் கேட்டது.

திடுக்கிட்ட சஞ்சீவகன், ‘நானா? என்ன தவறு செய்தேன்? எப்போது செய்தேன்?’ என்று கேட்டது.

‘எதற்காக ஆற்றங்கரையில் அப்படியொரு சத்தத்துடன் மிகப்பெரிய ஓலமிட்டாய்?’ என்று தமனகன் விளக்கமாகக் கேட்டது.

‘ஓ! அதுவா, இந்தக் காட்டில் கரைபுரண்டு ஓடும் ஆற்றைப் பார்த்ததும் அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் சற்று அதிகமாகத்தான் கத்திவிட்டேன். அதனால் என்ன?’ என்று திருப்பிக்கேட்டது சஞ்சீவகன்.

‘அதனால் என்னவா? நீ போட்ட ஓலம் நம் காட்டு ராஜாவுக்குக்கூட கேட்டுவிட்டது’ என்று கூறிய தமனகன், சஞ்சீவகனின் முகத்தில் பயம் தெரிகிறதா என்று பார்த்தது.

‘ஐயோ! ராஜாவுக்குக் கேட்டுவிட்டதா?!’ என்று சற்று அரண்டுபோனது சஞ்சீவகன். சஞ்சீவகன் பயந்துவிட்டதை அறிந்துகொண்ட தமனகன் தன்னுடைய தந்திரப்பேச்சைத் தொடங்கியது.

‘ஆமாம்! நீ போட்ட ஓலத்தை ராஜா கேட்டுவிட்டார். மிகவும் கோபப்பட்டார். இந்தக் காட்டில் என்னைவிட யார் இங்கு அதிக சப்தமாக ஓலமிடுவது? அந்தத் துணிவு யாருக்கு உள்ளது? அந்த சப்தத்தை எழுப்பியது யார்? என்று கேட்டு, என்னை விசாரித்து வரச் சொல்லி அனுப்பியுள்ளார்’ என்றது தமனகன்.

தமனகனின் வார்த்தைகளை நம்பிய சஞ்சீவகன் நடுநடுங்கியது. ‘நான் தெரியாமல் ஓலமிட்டுவிட்டேன். நீ தான் எப்படியாவது ராஜாவிடம் கூறி என்னை மன்னித்துவிடும்படி கூறவேண்டும்’ என்று கெஞ்சியது.

‘சரி, நான் ராஜாவிடம் பேசிப்பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு தமனகன் சென்றது.

தமனகன், குகைக்கு வந்து ராஜாவைச் சந்தித்தது.

‘என்ன தமனகா, ஒலி எழுப்பியது யார் என்பதனை அறிந்து வந்தாயா?’ என்று கேட்டது சிங்கராஜா.

‘ஆம் ராஜா! தாங்கள் இட்ட கட்டளையை நான் நிறைவேற்றிவிட்டேன். தாங்கள் அச்சப்பட்டவாறே அந்த விலங்கு மிகவும் பெரிதாகத்தான் இருந்தது. நான் அதனுடன் நயமாகப் பேசினேன். உங்களைப் பற்றி உயர்வாகவும் பேசினேன். அது தங்களைச் சந்திக்க விரும்புகிறது. நான் அதனிடம், ‘என் ராஜாவின் அனுமதி பெற்றுவந்து, உன்னை அவரிடம் அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறினேன். தாங்கள் அனுமதியளித்தால், நான் அந்த விலங்கினை அழைத்துவந்து தங்களைச் சந்திக்க ஏற்பாடுசெய்கிறேன்’ என்றது தமனகன்.

‘நல்லது தமனகா. சிறந்த பணியினைச் செய்துள்ளாய். நீ போய் அந்த அந்த விலங்கினை அழைத்து வா!’ என்று அனுமதியளித்தது சிங்கம்.

ராஜா தனக்கு இரண்டாவதாக ஒரு வேலையினைக் கொடுத்துவிட்டாரே என்ற மகிழ்ச்சியில் மீண்டும் ஆற்றங்கரைக்குச் சென்ற தமனகன், ‘சஞ்சீவகா! நான் ராஜாவிடம் ஓலமிட்டது நீதான் என்பதனைக் கூறிவிட்டேன்’ என்றது.

‘ராஜா என்ன சொன்னார்?’ என்று தயங்கியபடியே கேட்டது சஞ்சீவகன்.

‘ராஜா முதலில் மிகவும் கோபப்பட்டார். நான் அவரிடம் நயமாகப்பேசி அவரது கோபத்தைத் தணித்து, உன்னைப் பற்றிக் கூறி, உன்மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறிவிட்டேன்’ என்றது தமனகன்.

‘மிக்க நன்றி நண்பா! எனக்கு எவ்வளவு பெரிய உதவிசெய்துள்ளாய். நீ செய்த இந்த உதவியை நான் மறக்கமாட்டேன்’ என்று மனம் நெகிழ்ந்தது சஞ்சீவகன்.

‘இது என்ன பெரிய உதவி! நான் உன்னை நம் ராஜாவுக்கே நண்பனாக மாற்றிவிடுகிறேன்’ என்றது தமனகன்.

தமனகனின் பேச்சை நம்பமுடியாத சஞ்சீவகன், ‘தமனகா! அது உன்னால் முடியுமா?’ என்று கேட்டது.

தமனகன், ‘என்னால் முடியாதது எதுவும் இல்லை. நான் அவ்வாறு உன்னை ராஜாவுக்கு நண்பனாக மாற்றிவிட்டால் நீயும் ராஜாவும் இணைபிரியாத தோழர்களாக மாறிவிடுவீர்கள். அதன்பின்னர் இந்த எளியவனை மறந்துவிடக்கூடாது’ என்றது.

‘அவ்வாறு நீ செய்துவிட்டால் நான் உன்னை என்றுமே மறக்கமாட்டேன்’ என்றது சஞ்சீவகன்.

தமனகன், சஞ்சீவகனை அழைத்துக்கொண்டு சிங்கராஜாவின் குகைக்குச் சென்றது. சிங்கராஜாவுடன் சஞ்சீவகனை அறிமுகப்படுத்தியது. அவர்கள் இருவரும் முதற்சந்திப்பிலேயே நல்ல நண்பர்களாகிவிட்டனர். பின்னர், அவர்கள் இருவரும் தமனகனின் உதவியின்றியே ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர்.

இவ்வாறே நாட்கள் பல கழிந்தன. சிங்கராஜா, தன் நண்பன் சஞ்சீவகனுக்குத் தன்னுடைய அரசவையில் முதன்மைப் பொறுப்பினை வழங்கித் தனக்குச் சமமானவனாக அதனை மாற்றியது.

குட்டி நரிகளான தமனகனுக்கும் கரடகனுக்கும் ஏமாற்றமாக இருந்தது. சிங்கராஜாவின் நட்பு கிடைத்தால் நல்ல உணவு கிடைக்கும், சுகபோகமாக இருக்கலாம். என்று நினைத்தது எதுவும் நடக்கவில்லை. உண்ண உணவும் கிடைக்காமல் இரண்டும் தாங்கள் செய்துவிட்ட தவறினை நினைத்து வருந்தின.

‘நாம்தான் நமது சிங்கராஜாவுக்கும் மாடான சஞ்சீவகனுக்கும் நல்ல நட்பினை ஏற்படுத்திக்கொடுத்தோம். அது மிகப்பெரிய தவறு என்று இப்போதுதான் புரிகிறது. நமக்குரிய உணவினை நாமே கைநழுவவிட்டுவிட்டோம்’ என்று தமனகன் வருந்திக் கூறியது. கரடகன் அமைதியாக இருந்தது.

‘நாம் செய்த இந்தச் செயல் யானை தன் மத்தத்தினைக் கொத்துகிறதற்குரிய அங்குசத்தைத் தானே தன் பாகனுக்குக் கொடுத்தது போலாகிவிட்டது. இது எப்படி இருக்கிறது என்றால், ஆட்டுக்கடா சண்டையில் நரி உட்புகுந்து இறந்தது போலவும், ஆஷாட பூதியின் நட்பால் சந்நியாசி பொருள் இழந்தது போலவும் இருக்கிறது’ என்றது தமனகன்.

உடனே! கரடகன், ‘அதென்ன ஆட்டுக்கடா சண்டை? சந்நியாசி எப்படிப் பொருள் இழந்தார்?’ என்று கேட்டது.

குட்டிநரி தமனகன் தன் தம்பியான கரடகனுக்குப் பணத்தைப் பறிகொடுத்த சாமியாரின் கதையைக் கூறத் தொடங்கியது.

1.4. பணத்தைப் பறிகொடுத்த சாமியார்

ஒரு நாட்டில் தேவசன்மா என்ற ஒரு சாமியார் இருந்தார். அவர் தவம் செய்யும் சாமியார் இல்லை. காவியணிந்துகொண்டு ஒரு வேலையும் செய்யாமல் மக்களிடம் பிச்சையெடுத்து உண்ணும் பொய்ச்சாமியார்.
அவர் தான் பிச்சையெடுத்துச் சம்பாதித்த அத்தனை பணத்தையும் தன்னுடைய அழுக்குக் கந்தை உடைக்குள் மறத்து வைத்திருந்தார்.
அவர் தன் கந்தை உடையில் அதிகளவு பணத்தை மறைத்து வைத்திருப்பதையும், மேலும் மேலும் பிச்சையெடுத்துச் சம்பாதிப்பதனையும் ஒரு திருடன் கண்டுவிட்டான். அவன் பெயர் ஆஷாட பூதி.

எப்படியாவது அந்தச் சாமியாரிடமிருந்து மொத்தப் பணத்தையும் திருடிவிடவேண்டும் என்று ஆஷாட பூதி திட்டம் போட்டான். ‘நல்லவன்போல நடித்து, சாமியாரை ஏமாற்றிவிடலாம்’ என நினைத்தான்.

மறுநாள் அந்தச் சாமியார் ஓய்வாக இருக்கும்போது, அவரிடம் வந்த அந்தத் திருடன், அவரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றான். பின்னர், தந்திரமாகப் பேசினான். ‘சாமி! என்னைத் தாங்கள் தான் கடைத்தேற்றவேண்டும். தாங்கள் தவ முனிவர் மட்டுமல்ல தாங்களே தெய்வமும்கூட. தங்களால் தான் என் பாவங்களைப் போக்க முடியும். தாங்கள் எனக்கு மந்திரதீட்ஷை அளித்து, என்னை உங்களின் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த பாவிக்கு இரக்கம் காட்டுங்கள்’ என்று கெஞ்சினான்.

‘இவனை சிஷ்யனாக ஏற்காவிட்டால் நாம் பொய்யான சாமியார் என்பது இவனுக்குத் தெரிந்துவிடுமே! என்ன செய்யலாம்?’ என்று நினைத்த சாமியார், வேறு வழியில்லாமல் அவனைத் தன் சிஷ்யனாக ஏற்க முடிவுசெய்தார்.
அவன் தலைமீது கைவைத்து, ‘கலங்காதே! நான் உன்னை ஆசீர்வதித்து, என் சிஷ்யனாக ஏற்றுக்கொள்கிறேன். உன் பாவங்கள் இன்றோடு கழியட்டும்’ எனக் கூறினார்.

சாமியார் நம்மை நம்பிவிட்டார் என்ற மனநிறைவோடு அந்தத் திருடன் , பின்னர், சாமியாரது நிழல்போல அவருடனே இருந்தான். அவர் கூறும் அனைத்து வேலைகளையும் கண்ணுங்கருத்துமாகச் செய்துமுடித்தவனின் கண்கள், எப்போதும் சாமியாருடைய கந்தையாடையின்மீதே இருந்தன. ‘தக்க சமயத்தில் அந்தக் கந்தையிலுள்ள பணத்தைத் திருடவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டிருந்தான். அதற்கான சமயமும் வந்தது.

இந்தப் பொய்ச் சாமியாரையும், திருடன் ஆஷாடபூதியையும் நல்ல குரு-சிஷ்யர் என்று நம்பிய ஓர் அந்தணர், இவர்களுக்குத் தன் வீட்டில் விருந்து படைத்தார். விருந்துண்ட பின்னர் இருவரும் மெதுவாக நடந்து வந்தனர்.
வழியில் கிடந்த ஒரு துரும்பினைச் சாமியாருக்குத் தெரியாமல் எடுத்துத் தன் தலையின் மீது வைத்துக்கொண்ட திருடன், ‘ஐயோ! நான் மிகப்பெரிய தவறினைச் செய்துவிட்டேன்’ என்று சாமியாரிடம் கூறினான்.

‘நீயா! என்ன தவறு செய்தாய்?’ என்று கேட்டார் சாமியார்.

‘நமக்கு விருந்து படைத்த அந்த அந்தணர் வீட்டிலிருந்து ஒரு துரும்பு என் தலையில் விழுந்துவிட்டது. நான் அதனை அறியாமல் அதனைச் சுமந்தபடி அவர் வீட்டைவிட்டு இவ்வளவு தொலைவு வந்துவிட்டேன். நமக்கு உணவிட்ட, அதுவும் ஓர் அந்தணர் வீட்டில் நான் திருடிவிட்டதாகத்தானே என்மீது பழிவரும்! ஐயோ! நான் இப்போது என்ன செய்வேன்?’ என்று பொய்யாக அழுதான் அந்தத் திருடன்.

தன் சிஷ்யன் எவ்வளவு நியாயவானாக, நல்லவனாக இருக்கிறான் என்று உள்ளம் உருகிய சாமியார், ‘கவலைப்படாதே! நீ அறியாமல் அது உன்னுடன் வந்துவிட்டதால் ஒரு பாவமும் உனக்கு வராது. நீ வேண்டுமானால் அந்தத் துரும்பினை அவர் வீட்டுக்குச் சென்று போட்டுவிட்டு வா’ என்று தன் சிஷ்யனிடம் கூறினார்.

அவன், ‘குருவே! நான் அடைய இருந்த இந்தப் பாவத்தைப் போக்கச் சரியான தீர்வினைக் கூறிவிட்டீர்கள். நான் உடனே சென்று அந்த அந்தணர் வீட்டில் இந்தத் துரும்பினைப் போட்டுவிட்டு, அவரிடம் மன்னிப்புக்கேட்டுவிட்டு வருகிறேன்’ என்று கூறினான்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படாத தன் சிஷ்யனின் வெள்ளை மனத்தை எண்ணி மகிழ்ந்த சாமியார், தன் சிஷ்யன் திரும்பி வரும்வரை அங்கேயே அமர்ந்திருந்தார்.

திருடன் ஆஷாடபூதி, அந்த அந்தணர் வீட்டிற்குச் செல்வதுபோலச் சென்றுவிட்டு, ஒரு புதர் மறைவில் சிறிது நேரம் அமர்ந்திருந்தான். பின்னர், அந்தத் துரும்பினை அங்கேயே போட்டுவிட்டு சாமியாரிடம் வந்தான். பின்னர் இருவரும் இணைந்து வெகு தூரம் நடந்துவந்தனர்.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு குளம் இருந்தது. சாமியார் தன்னுடைய மொத்தப் பணமும் உள்ள கந்தையாடையைக் கழற்றித் தன் சிஷ்யனிடம் ஒப்படைத்துவிட்டு, குளத்திற்குச் சென்று தன் கை, கால்களை நீரில் நனைத்துத் தூய்மைசெய்துகொண்டார்.

அப்போது அந்தக் குளத்தின் மறுகரையில் இரண்டு ஆட்டுக்கடாக்கள் ஒன்றையொன்று முட்டி, மோதிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அதனை அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

இதுதான் தக்க தருணம் என்று எண்ணிய அந்தத் திருடன் சாமியாரின் மொத்தப் பணமும் உள்ள அந்தக் கந்தையாடையோடு எங்கோ ஓடிச்சென்று தலைமறைவானான்.

அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களும் தங்களின் தலையில் ரத்தம் பெருக்கெடுத்து ஓடும் அளவிற்குச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
அவற்றின் சண்டையைப் புதர் மறைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரி, அவற்றின் புது ரத்தத்தைச் சுவைக்கலாம் என்று நினைத்து, ஓடிச்சென்று ஆடுகளுக்கு இடையில் பாய்ந்தது. அப்போது ஆட்டுக் கடாக்களின் கொம்புகளுக்குள் நரி அகப்பட்டுக்கொண்டது. அவற்றின் கொம்புகள் நரியின் வயிற்றைக் கிழித்தன. நரி இறந்தது.

தன்னுடைய பணமுள்ள கந்தையை சிஷ்யனிடம் கொடுத்ததை மறந்து சாமியார், இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர், குளக்கரைக்கு வந்த சாமியார் தன் சிஷ்யனைத் தேடினார். அவனைக் காணவில்லை. அவன் தன்னிடம் நல்லவன்போல நடித்துத் தன்னை ஏமாற்றிவிட்டதை அவர் உணர்ந்தார். தான் ஏமாந்ததைப் பற்றி அவர் யாரிடமும் கூறவில்லை. இவ்வாறு, தமனகன் பணத்தைப் பறிகொடுத்த சாமியாரின் கதையினை கரடகனுக்குக் கூறிமுடித்தது.

கதையினைக் கேட்ட கரடகன், ‘சரி, இனி நாம் செய்யவேண்டியது என்ன?’ என்று தமனகனிடம் கேட்டது.

‘கரடகா! எது நம்மை விட்டுச் சென்றதோ நாம் அதனை மீண்டும் பெறவேண்டும். எதனை நாம் சம்பாதிக்கவில்லையோ நாம் அதனைச் சம்பாதிக்கவேண்டும். அதற்குத் தடையாக வருவனவற்றைத் தகர்க்கவேண்டும். சிந்தித்துச் செயல்படுபவன்தானே மந்திரி! நாம் மந்திரியின் பிள்ளைகள் அல்லவா? சிங்கராஜா பிங்களனுக்கும் மாடான சஞ்சீவகனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பால்தான் நமக்கு உணவு கிடைக்கவில்லை. இவர்களின் நட்பை நாம் பிரித்துவிட்டால், நமக்கு உணவு கிடைத்துவிடும்’ என்று தமனகன் கூறியது.

‘அது எப்படி முடியும் தமனகா? ஒளிதரும் மாணிக்கக் கல்லிலிருந்து எப்படி ஒளியை மட்டும் பிரிக்க முடியும்? சிங்கராஜாவிடமிருந்து சஞ்சீவகனைப் பிரிக்க முடியுமா? அது என்ன சிறிய காரியமா? நம்மால் முடியுமா?’ என்று கரடகன் கேட்டது.

‘முடியும் கரடகா! நம்மால் முடியும். காகம், தங்கச் சங்கிலியால் பாம்பைக் கொன்றது உனக்குத் தெரியாதா?’ என்று கேட்டது தமனகன்.

‘அது எப்படி சாத்தியமாயிற்று?’ என்று கேட்டது கரடகன்.

குட்டிநரி தமனகன் தன் தம்பி கரடகனுக்குப் பாம்பைக் கொன்ற காகத்தின் கதையினைக் கூறத் தொடங்கியது.

(தொடரும்)