வீரவாளும் வெற்றிவேலும்

சங்க காலம் / தேடல் – 19

640px-Puhar-ILango

தம் வீர வாளினைச் சுழற்றிய திசையெங்கும் வேந்தர்களுக்கு வெற்றிதான். அவர்களுக்கு உதவியாக இருந்த படைவீரர்கள் வேலேந்தினர். வாளும் வேலும்கொண்டு படையை நடத்தி, குடிகாத்து, நாட்டினை விரிவாக்கினர். முடியுடை மூவேந்தர் மரபினரின் வெற்றிகள் அனைத்தும் இவ்வகையில் பெறப்பட்டவையே. ஒரு விதத்தில் போர்களின் வழியாகத்தான் வேந்தர்களை நாம் அடையாளம் காணமுடிகின்றது.

மூவேந்தர்களின் மரபில் சங்ககாலச் சேரர்கள், சங்ககாலச் சோழர்கள், சங்ககாலப் பாண்டியர்கள் பற்றியும் அவர்களுக்கு நட்பாக அல்லது எதிரியாக இருந்த வேளிர்கள், சிற்றரசர்கள் பற்றியும் அறிந்துகொண்டால்தான் சங்க காலத்தில் நிகழ்ந்த போர்களைப் பற்றிய தெளிவான ஒரு வரைபடம் நமக்குக் கிடைக்கும்.

போர்

மூன்று வேந்தர் மரபினரும் தங்களிடம் மூன்றினைத் தவறாது வைத்திருந்தனர். அவை, குடை, முடி, கோல் என்பனவாகும். “வெண்கொற்றக்குடை“ என்பது, காவல் தொழிலையும் “மணிமுடி“ என்பது, அரசியல் தலைமையையும் “செங்கோல்“ என்பது நீதியையும் குறிக்கும் குறியீடுகளாகத் திகழ்ந்தன. இவை மூன்றும் தமக்கு நிலைக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே போர் மேற்கொண்டனர். போர் இரண்டு நிலைகளில் நடைபெற்றது. ஒன்று தன் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள. மற்றொன்று தன் நாட்டை விரிவாக்கிக்கொள்ள.

அக்காலப் போர்க்களத்தில் வில், அம்பு, வாள், வேல், குந்தம், கோல், கைக்கோடரி, எஃகம், முசலம் போன்றவற்றை ஆயுதங்களாகவும் இரும்பாலான மெய்மறைகள், கடுவாத்தோலால் செய்யப்பட்ட சட்டை, கேடயம், உடலில் போர்த்தும் கவசம் ஆகியன தடுப்பாயுதங்களாகவும் பயன்படுத்தினர். போரைத் தொடங்கும் முன்பு கொம்பு, சங்கு, முரசு போன்றவற்றை முழக்கினர். முரசில் வீரமுரசு, தியாக முரசு, நியாய முரசு என மூன்று வகைகள் இருந்தன. போரில் வீர முரசினை முழக்கினர். பகைவர் போரைத் தவிர்க்க விரும்பினால் அவரிடமிருந்து திறைப்பொருளினைப் பெற்றுக்கொண்டனர்.

எதிரிகளின் கோட்டை வாயில்களையும் சுற்றுச் சுவர்களையும் உடைக்க யானைப் படையினைப் பயன்படுத்தினர். வேந்தர்களுக்கு யானைகளே தாம் உலா வரும் வாகனமாகவும் போர்க்கள வாகனமாகவும் பயன்பட்டன. போர்க்களத்துக்குச் செல்லும் முன் படையானைகளுக்கு மதுவினை ஊட்டி வெறியேற்றியுள்ளனர். தேர்கள் மிகுதியாகப் பொதுவாழ்வில் பயன்படுத்தப்பட்டன. சிறுபான்மையாகப் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன. தேர்ப்படையில் பலவகைத்தேர்கள் அணிவகுத்தன. தேர், நெடுந்தேர், கொடுவஞ்சித்தேர் என்பன அத்தேர்களுள் முதன்மையானவை. பெரும்பாலும் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களையே பயன்படுத்தினர். யானைகள் பூட்டப்பட்ட தேர்களும் இருந்துள்ளன. குதிரைப் (இவுளி) படைகள் பெரும்பாலும் போர்வீரர்களால் பயன்படுத்தப்பட்டன. வாளும் வேலும் ஏந்திய வீரர்கள் குதிரைமீது சென்று எதிரிகளைத் தாக்கினர். தமிழக வேந்தர்கள் இக் குதிரைப் படைகளால்தான் தமிழகத்தின் மீது படையெடுத்த வம்பமோரியர்களையும் மோரியர்களின் தடுத்தனர். நூறு எண்ணிக்கையிலான வேல் ஏந்திய காலாட்படை வீரர்கள் தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்து, அணிவகுத்தனர். இப் படையினைத் தூசுப்படை என்றனர். போரில் இப்படையினரே முன்சென்றனர். கடல்வழியாக வரும் எதிரிகளைத் தாக்கக் கப்பற்படையினையும் வேந்தர்கள் வைத்திருந்தனர். இது அவர்களின் கடல் வாணிபத்திற்குப் பாதுகாப்பாக இருந்தது. சேரர்களின் கப்பற்படையும் யானைப் படையும் புகழ்பெற்றவை. ஈழத்தை இக் கப்பற்படையினால்தான் இரண்டாம் கரிகாற்சோழன் (பெருந்திருமாவளவன்) வெற்றிகொண்டார்.

ஒவ்வொரு வேந்தரும் நிலையான படைகளை வைத்திருந்தனர். போர்க்காலத்தில் கூடுதல் படைக்காக வாட்குடி மக்களைத் திரட்டிப் படையினைப் பெருக்கிக்கொண்டனர். அப்படையில் மறவர், எயினர், மழவர், மல்லர் போன்ற மறக்குடியினரே இருந்துள்ளனர். தனக்குக் கீழ் உள்ள சிற்றரசுகளின் படைகளை உரிமையோடு தம் படையுடன் இணைத்துக்கொண்டனர். படைவீர்ர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளித்தனர். இப் போர்ப் பயிற்சிப் பட்டறைக்கு “முரண் களரி“ என்று பெயர். போரற்ற காலங்களில் பொதுமக்களின் பார்வைக்காகவும் படையினரின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன. இதனை “வாளுடைவிழா“ என்றனர்.

போருக்குச் செல்லுதலை ஒரு விழாவாகவே கொண்டாடியுள்ளனர். இதற்காகப் பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. நன்னிமித்தம் பார்த்தல், நற்சொல்கேட்டல் (வரிச்சி), போர்வாளினை நீராட்டுதல், குடை மற்றும் முரசினைக்கொண்டு அணிவகுப்பினை நடத்துதல், வஞ்சின மொழி கூறுதல், கொற்றவை வழிபாடு (பலியிடுதலுடன்), மரபுக்குரிய மாலையணிதல், தங்கள் சின்னம் தாங்கிய கொடியினை ஏந்துதல், அடையாளப் பூவினைச் சூடுதல் போன்றன போருக்குச் செல்லும்முன் செய்யப்பெற்ற சடங்குகளாகும். வேந்தர் தன் வீரர்களுக்கு உணவளித்து மகிழ்விப்பார். இதனைப் “பெருஞ்சோற்றுநிலை“ என்பர்.

போர் நிகழும் இடத்துக்குச் சற்று தூரத்தில் வேந்தர் பாசறை அமைத்துத் தங்குவதும் உண்டு. இது கூதிர் பாசறை, வேனிற் பாசறை என இரண்டு வகைப்படும். இந்தப் பாசறை ஓர் ஊர் போலத்தோன்றும். ஆதலால், இதனைக் “கட்டூர்“ என்றனர். பாசறைப் பணியாளர்களுள் பெண்களும் இருந்தனர்.

போருக்குப் பின்னரும் சில சடங்குகள் செய்யப்பட்டன. போரில் வீரமரணம் அடைந்தவருக்கு நடுகல் எடுத்துள்ளனர். அந் நடுகல்லைச் சுற்றி வேல் நட்டி, அரண் அமைத்துக் கோவிலும் அமைக்கப்பட்டது. அங்கு நெல் உகுத்து, நீராட்டி, நாட்பலி ஊட்டி, விளக்கேற்றி வழிபட்டுள்ளனர். போரில் வெற்றிபெற்றால் வேந்தர் வீரர்களுடன் சேர்ந்து துணங்கைக் கூத்தாடுதலும் நடைபெற்றுள்ளது. வேந்தர் தம் வீரர்களுக்கு “உண்டாட்டு“ நடத்துவர். இதில் கள்ளும் உண்வும் மிகுதியா இருக்கும். பகைநாட்டில் கொள்ளையிட்ட பொருட்களின் சில பகுதியை வரிசையறிந்து வீரர்களுக்கு வழங்குவதும் உண்டு.

தாம் வெற்றிபெற்ற நாட்டில், கொள்ளையிட்ட பின்னர் தீயிட்டு அழித்தல் (மழபுல வஞ்சி, கொற்றவள்ளை ஆகிய துறைகள் இவை பற்றி விளக்கியுள்ளன), வயல்களைக் கழுதைபூட்டப்பட்ட ஏர்கொண்டு உழுதல், நீர் நிலைகளில் யானையை இறக்கிப் பாழாக்குதல், பெண்களின் கூந்தலை அறுத்தல், ஆண்களின் பற்களைப் பிடுங்குதல் போன்ற வன்முறைகளை மேற்கொண்டனர். தாம் போர்தொடுத்த நாட்டில், ஊரில் உள்ள காவல்மரத்தை அழித்தனர். ஏன் காவல் மரத்தை அழிக்கவேண்டும்? அதன் பின்னணியில், “ஒரு குலத்தின் கருவறுத்தல் சார்ந்ததொரு பெரிய நம்பிக்கை“ இருக்கின்றது.

ஓர் இனக்குழு, மூதாதையர் உறவு வைத்துக்கொள்ளும் உயிரினமே குலக்குறி. எருமை, புலி, சிங்கம், பாம்பு, கங்காரு, மீன், பல்வேறு வகை மரங்கள், செடி – கொடிகள், புறா, கோழி, மயில், முதலான பறவைகள் இனக்குழு வாழ்வில் குலக்குறியாகக் கொள்ளப்பெற்றன. இக்குலக்குறி அந்த இனத்தின் அடையாளச் சின்னமாக அமைந்தன.

புறப்பாடல்களில், மூவேந்தர்கள் பகைவர்களை வெற்றிகொள்ளும்போது அவர்களுடைய காவல் மரங்களையும் காவல் மரங்கள் இடம்பெற்றுள்ள காவற்காட்டினையும் கோடரியால் வெட்டி எரிக்கின்ற செயல் விரித்துக்கூறப்பெற்றுள்ளன. பதிற்றுப்பத்தில் நெடுஞ்சேரலாதன் பகைவர்களின் கடம்ப மரத்தை வெட்டிய செய்தி விரிவாகக் கூறப்பெற்றுள்ளது. புறநானூற்றின் 3, 23, 59 ஆகிய பாடல்கள் “காவல்மரம்“ பற்றி எடுத்துரைத்துள்ளன. காவல் மரங்கள் சூரிய ஒளிக்கதிர்கள் நுழைய முடியாதவாறு அடர்ந்த சோலைக்குள் (காவு) இருந்ததாகச் சுட்டியுள்ளன. சங்க காலத்தில் இனக்குழு மக்களால் காவல் மரங்கள் புனிதமானவையாகவும் வழிபாட்டிற்குரியனவாகவும் கருதப்பெற்றிருத்தல் வேண்டும். சங்க இலக்கியங்கள் காவற்காட்டினைக் காவு, கடிமிளை என்று குறிப்பிட்டுள்ளன.

காவல் மரம் வழிபாட்டுக்குரிய புனிதப் பொருளாகக் கருதப்பட்டதால்தான் அதனை அவமதிக்கும் வகையில் வேந்தர் அதனை இழிவுபடுத்தும் நோக்கோடு அதில் தமது யானைகளைக் கட்டுதல், வெட்டுதல், எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். “ஓர் இனத்தினை அழிக்கும்போது அவ் இனத்தின் உயிர் ஆற்றலாகவும் வளமாகவும் இருக்கும் குலக்குறியினை அழித்துவிட்டால் அவ் இனம் முற்றாக அழிந்துவிடும்“ என்ற நம்பிக்கையில் இச்செயல்கள் மேற்கொள்ளப்பெற்றுள்ளன.

சிறந்த படைத்தலைவருக்கு வேந்தர், “ஏனாதிப் பட்டம்“ வழங்கினார். இப்பட்டம் அமைச்சருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கும் குடியிருப்புப் பகுதிக்கு “ஏனாதிப்பாடி“ என்ற பெயரும் இருந்துள்ளது.

சங்கச் சேரர்கள்

கொங்கணக் கடற்கரைக்குத் தெற்கேயுள்ள மேற்குக் கடற்கரையும் கெங்குநாடும் இணைந்த பகுதி சேரநாடாகும். மங்களுருக்கு அருகில் கடலோடு கலக்கும் சந்தகிரி ஆற்றுக்குத் தெற்கிலுள்ள மலைப்பாங்கான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சேரநாடு அமைந்திருந்தது. சேரர்கள் மலைநாட்டுக்காரர்கள். “சேரல்“ என்பது மலையைக் குறிக்கும். மலைவேடர்களுக்கு வில்லும் அம்பும் வேட்டை ஆயுதமாக இருந்ததால், அவற்றையே தங்களின் சின்னமாகக் கொண்டனர். கரூவூர், தொண்டி, நறவு, மாந்தை, வஞ்சி முதலானவை சேரநாட்டின் முதன்மையான பெரிய ஊருகளாகும். சேரநாடு “உம்பற்காடு“ என்றும் “வேழக்காடு“ என்றும் அழைக்கப்பட்டது. சேரர்களைச் சேரர், வானவர், வில்லவர், குடவர், குட்டுவர், பொறையர், மலையர் என்று அழைத்தனர்.

சேரரில் இரண்டு கிளைவழியினர் உண்டு. 1. உதியன் சேரலாதன் கிளைவழி, 2. இரும்பொறை கிளைவழி. உதியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன், பெருஞ்சேரலாதன், செங்குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முதலியோர் உதியன் கிளைவழியில் தோன்றியவர்கள். அந்துவன் சேரல் இரும்பொறை, செல்வக்கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை, யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரலிரும்பொறை, கணைக்கால் இரும்பொறை முதலியோர் இரும்பொறை கிளைவழியினர்.

சேர நாட்டின் தெற்கில் உதியன் சேரலாதன் மரபினரும் வடக்கில் இரும்பொறை மரபினரும் ஆதிக்கம் செலுத்தினர். இரும்பொறையினர் கரூரைத் தலைநகராமாகக் கொண்டு ஆட்சிசெய்தனர்.

சேரநாட்டை முதன்முதலில் வரிவாக்கம் செய்தவர் உதியன் சேரலாதன். இவர் குழுமூரில் இருந்துகொண்டு, சேரநாட்டைச் சிறுகச்சிறுக விரிவாக்கினார். இவ் ஊரில் உள்ள ஏழை, எளியவருக்கு இவர் தொடர்ந்து உணவளித்துள்ளார். ஆதலால், இவ் ஊர் “உதியன் அட்டில்“ என்று அழைக்கப்பட்டது. இவர், பாடலிபுத்திரத்தினை ஆண்ட இறுதி நந்த மன்னரின் காலத்தைச் சேர்ந்தவர். அக்காலத்தில், இறந்தவர் நினைவாக இருப்போருக்கு உணவளிக்கும் வழக்கம் (பெரும்பிடி, பொருஞ்சோறு) தமிழகத்தில் மிகுதியாக இருந்துள்ளது. அதனைப் பின்பற்றி இவர் முன்னோர் வழிபாட்டுச் சடங்கினைப் பெரியளவில் நடத்தினார். முன்னோர் நினைவாகத் தம் படையினருக்குப் “பெருஞ்சோறு“ அளித்துள்ளார். ஆதலால், இவரைப் “முதியர்ப் பேணிய உதியன் சேரலாதன்“ என்று சிறப்பித்துள்ளனர். பாடலிபுத்திரத்தில் நந்த மன்னருக்கும் சந்திரகுப்தமோரியருக்கும் இடையே போர் ஏற்பட்டபோது, நந்த மன்னருக்கு உதவியாகப் படைநடத்திச் சென்றுள்ளார். வேணாட்டு வேளிர்கள் இவருக்கு வேண்டியவர்களாக இருந்ததால், காலம் கனிந்தபோது தம் நாட்டுக்குத் தெற்கே தென்குமரியைச் சூழ்ந்திருந்த தென்பாண்டி நாட்டை வென்று, தென் கடற்கோடியைத் தம் நாட்டுக்கு எல்லையாக்கினார். இவர் இரண்டாம் நன்னனைப் போரில் வென்றார்.

உதியன் சேரலாதன், வெளியன் வேண்மாள் நல்லினி தம்பதியருக்குப் பிறந்தவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவர் வடஇந்தியாவரை படையெடுத்திச் சென்றுள்ளார். யவனர்களுடனும் கடற்கொள்ளையருடனும் போரிட்டு வென்றுள்ளார். இவர் கடம்பர்களை வென்று அவர்களின் காவல் மரத்தினை வெட்டித் தனக்கு முரசு செய்தார். இவர் காலத்தில் பாடலிபுத்திரத்திற்கும் தமிழகத்திற்கும் நட்புறவு நீடித்தது. அது இந்தியாவின் உள்நாட்டு (வட, தென் இந்திய) வாணிபத்திற்கு உதவியது. இவரைக் “குடக்கோ நெடுஞ்சேரலாதன்“, “குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்“, “சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்“ என்றெல்லாம் அழைத்துள்ளனர். 58ஆண்டுகள் ஆட்சிசெய்த இவர், போர்வை என்ற இடத்தை ஆண்ட சோழவேந்தர் “பெருவிறற்கிள்ளி“ என்று அழைக்கப்பட்ட வேல் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியுடன் போஓர் என்னுமிடத்தில் போரிட்டு மாண்டார்.

இவருக்குப் பின்னர் இவரது தம்பி பல்யானை செல்கெழுகுட்டுவன் ஆண்டார். இவர், மலை நாட்டுப் பகுதியில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சிற்றூர்களைக் கொண்ட “உம்பற்காடு“ எனும் பகுதியைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டுவந்தார். இவர் காலத்தில் “கொற்றவை“ வழிபாடு சிறப்புற்று இருந்தது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் வேளாவிக் கோமான் பதுமனின் மகளுக்கும் பிறந்தவர் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல். இவர், “தான் சேர நாட்டிற்குரிய அனைத்துப் பகுதிகளையும் ஆளும் வரை மணிமுடி அணியாமல், களங்காயால் செய்த கண்ணியும் நாரால் செய்த முடியும் அணிந்துதான் அரசாட்சி புரிவேன்“ என்று கூறி, அவ்வாறே அரச பதவியினை ஏற்றமையால் இவருக்கு இப்பெயர் வந்தது. இவர் நேரிமலையில் இருந்து சேர நாட்டினைச் சீர்ப்படுத்தினார். இவர் சேர நாட்டையொட்டி மேலைக் கடற்கரையில் வியலூரை ஆண்ட மூன்றாம் நன்னன்வேண்மானை வாகைப் பெருந்துறையில் எதிர்கொண்டு அழித்தார். அவ்வெற்றியின் வழியாகச் சேரநாடு இழந்திருந்த பகுதிகளைத் திரும்பப் பெற்றார்.பூழிநாட்டின் மீது படையெடுத்து அதனையும் சேரநாட்டுடன் இணைத்தார். சேர நாட்டுப் பெருவழிகளில் இருந்த கள்வர் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தினார். பசும்பூண் பாண்டியருக்கும் தனக்கும் பகையாக இருந்த நெடுமிடல் என்ற மன்னரை அழித்ததோடு, அம் மன்னனின் வளமான நாட்டினையும் அழித்தார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் மணக்கிள்ளியின் மகளான நற்சோணை தம்பதியருக்குப் பிறந்த வெல்கெழுகுட்டுவன் ஆட்சிக்கு வந்தார். இவரைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள “செங்குட்டுவன்“ என்று வரலாற்றாசிரியர்கள் பலர் தவறாகக் கணித்துள்ளனர். இவர் கடற்கொள்ளையரை முற்றாக அழித்தார். ஆதலால், இவருக்குக் “கடலோட்டிய வெல்கெழுகுட்டுவன்,“ “கடற்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவன்“ போன்ற சிறப்புப் பெயர்கள் வழங்கலாயிற்று. இவர் காலத்தில் மோகூரைப் பழையன் என்பவர் ஆண்டுவந்தார். அவர் மீது வெல்கெழுகுட்டுவனின் நண்பர் அருகை என்பவர் பகைகொண்டார். பழையன், அருகையைப் போரில் வென்று, அவரைப் புறமுதுகிடச்செய்தார். அருகை தலைமறைவானார். இதனை அறிந்த வெல்கொழுகுட்டுவன் பழையன் மீது போர்தொடுத்தார். “மோகூர்“ என்ற பெயரில் பல ஊர்கள் இருந்துள்ளன. தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சிக்கு அருகில், மதுரை மாவட்டத்திலுள்ள மேலூருக்கு அடுத்து, பொதியமலைக்கு அருகில் என இருந்த இ்ம் மூன்று மோகூர்கள் அல்லாத ஒரு மோகூரை ஆண்ட பழையனை அழித்து, அந்த மோகூரை வெல்கெழுகுட்டுவன் கைப்பற்றினார். பழையனின் காவல் மரமான வேம்பினை வெட்டிப் பழையனின் மனைவியரின் கூந்தல்களை அறுத்து, அவற்றைக் கொண்டு கயிறுதிரித்து, அக்கயிற்றின் (மயிர்க்கயிறு) ஒரு முனையினை வீழ்த்தப்பட்ட வேம்புமரத்தினைப் பிணைத்து, மறுமுனையினை யானைக் காலில் கட்டி, யானையால் அம் மரத்தினை இழுக்கச்செய்தார். அந்த அதன் நினைவாக அப்பகுதியில் இருந்த ஒரு ஊருக்கு “குட்டுவனஞ்சூர்“ என்ற பெயரிடப்பட்டது. இது “குட்டுவன் அஞ்சிய ஊர்“ அல்ல. இதனைக் “குட்டுவனைக் கண்டு அஞ்சிய ஊர்“ என்று பொருள் கொள்ளவும். இவர் வியலூர், கொடுகூர், நேரிவாயில் போர்களில் வெற்றிபெற்றார்.

இவரது மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சிக்கு வந்தார். இவரது இயற்பெயர் “அத்தி“. இவர் இளமையில் ஆடற்கலையில் சிறந்து விளங்கி “ஆட்டனத்தி“ என்ற பெயரினைப் பெற்றவர். இவர் இயல், இசை, நாடகம், ஆடல், பாடல் ஆகிய கலைகளைக் கற்றும் கற்பித்தும் வந்தார். இவர் முதற்கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தியை மணந்தார். கழாஅர் முன்துறையில் காவிரி நீரில் இவர் நடனமாடும்போது ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரை மருதி என்பவள் காப்பாற்றி அவரை மணந்துகொண்டாள். தன் கணவரைத் தேடிவந்த ஆதிமந்தியிடம் மருதி இவரை ஒப்படைத்துவிட்டு, கடலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாள். இவரது நாட்டின் வடஎல்லையில் வாழ்ந்திருந்த ஓரினத்தவர் இவரது நாட்டிற்குள் புகுந்து ஆட்டு மந்தையினைக் கவர்ந்து சென்றனர். இவர் தாமே சென்று அவ் ஆட்டுமந்தையினை மீட்டுவந்தமையால் இவருக்கு, “ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்“ என்ற அடைமொழி ஏற்பட்டது.

இவருக்குப் பின்னர் அந்துவன் சேரல் முதலான சிலர் ஆட்சிக்கு வந்தனர். அப்போது சோழநாட்டினை முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி ஆண்டுவந்தார். இச்சேரர்களின் காலத்தில் பூழிநாடும் கொங்குநாடும் சேரநாட்டுடன் இணைக்கப்பெற்றன.

இவர்களைத் தொடர்ந்து செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் காலூன்றியது. இவ் வேந்தரும் மற்ற சீறூர் மன்னர்களும் வணிகர்களும் பௌத்த துறவிகள் தங்குவதற்காகக் குகைகளைச் செப்பம்செய்து வழங்கினர். புகழூர்க் கல்வெட்டு குறிப்பிடும் “கோ ஆதன் செல்லிரும் பொறை“ இவராகவும் இருக்கக்கூடும்.

இவரது மகன் பெருஞ்சேரல் இரும்பொறை ஆவார். இவர் “அஞ்சி“ என்ற மன்னரை எதிர்த்துத் தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டார். யார் இந்த அஞ்சி? வரலாற்றில் இரண்டு அஞ்சிகள் உள்ளனர். ஒருவர் அதியமான் நெடுமான் அஞ்சி. மற்றொருவர் இவரின் முன்னோரான அஞ்சி. இருவரையுமே “அஞ்சி“ என்றே குறிப்பிட்டுள்ளனர். தகடூரைத் (தருமபுரி) தலைநகராகக் கொண்டு குதிரைமலை (குதிரை மூக்கு மலை) உள்ளிட்ட நாட்டினை ஆட்சிபுரிந்தவர் அதிய மரபினரான அதியமான் நெடுமான் அஞ்சி. “எழினி“ என்பது, இவருக்குரிய குடிப்பெயராகும். இவரைக் “கொங்குநாட்டு மழவர்“ என்றும் குறிப்பிடுகின்றனர். அஞ்சி தன்னைப் பகைத்த ஏழு அரசர்களையும் எதிர்த்தவர். அஞ்சி மலையமான் திருமுடிக்காரியின் மீது படையெடுத்துச் சென்று அவருடைய திருக்கோவலூரை அழித்தார். திருமுடிக்காரி தம்பியோடிச் சென்று சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் கொல்லிமலை ஓரியும் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் பகையில் இருந்தார். காரியின் துணையுடன் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை ஓரியின்மீது படையெடுத்தார். இதனை அறிந்த பாண்டியரும் சோழரும் அதியமானுக்குத் துணையாகப் படைகொண்டுவந்தனர். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை பகைவர் அனைவரையும் துணிந்து தாக்கித் தோல்வியடையச் செய்தார். அதியமானைக் கொன்று, களவேள்வி செய்தார். இவரின் தகடூர் வெற்றியைத் “தகடூர் யாத்திரை“ என்ற நூல் விரித்துரைத்துள்ளது. “முன்னொரு காலத்தில் 14 வேளிர்கள் ஒன்றுகூடிக் காமூரை எறித்தார்கள்“ என்று புலவர் பரணர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய காமூர் நாட்டை ஆண்டவர் கழுவுள். இவர் ஆயர்குலத் தலைவர். இவர் மூவேந்தருக்கும் அடங்காமல் இருந்தார். இவரைப் பெருஞ்சேரல் இரும்பொறைத் தாக்கி, காமூரை எறித்து, கழுவுள் கோட்டையினைக் கைப்பற்றினார். சேரநாட்டின் எல்லைக்கு வெளியிலிருந்த பூழி, கொல்லிக்கூற்றம் ஆகிய பகுதிகளைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தார். இவரது காலத்தில் பாண்டிய நாட்டில் அறிவுடை நம்பியும் சோழ நாட்டில் கோப்பெருஞ்சோழனும் ஆட்சியிலிருந்தனர். அவ் இருவருக்கும் இணையான பெருவேந்தராக இவர் விளங்கினார்.

இவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் இளஞ்சேரல் இரும்பொறை. இவரது காலத்தில் சோழரும் பாண்டியரும் சேரநாட்டின் மீது படையெடுத்தனர். அவர்களை இவர் வென்றார். விச்சி மலையினையும் அதனைச் சூழ்ந்திருந்த காட்டையும் குறுநிலங்களையும் ஐந்து பெருங்கோட்டைகளையும் கைப்பற்றினார்.

இவருக்குப் பின்னர் ஆண்ட யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் தலைநகர் தொண்டியாகும். இவரது இயற்பெயர் “வேழநோக்கின் விறல்வெஞ் சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை“ என்பதாகும். இவரது கண் யானையின் கண்போன்று இருந்தமையால் இவ் அடைமொழியைப் பெற்றார். இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் தலையாலங்கானப் போரில் தோல்வியடைந்து கைதியானார். பின்னர் இவருக்கும் சோழன் இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் இடையே போர் ஏற்பட்டபோது, சோழருக்குத் துணையாக வந்த முள்ளூர் மலைப்பகுதியினை ஆண்ட மலையமான் திருமுடிக்காரியிடம் (இவர் மூவேந்தரில் யார் படையுதவிகோரினாலும் உதவுவார்.) சேரர் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தோல்வியுற்றார்.

இவருக்குப் பின்னர், குட்டுவன்கோதை ஆண்டார்.“வானவன்“ என்று அழைப்பர். வானவன் சேரமான் குட்டுவன் கோதையின் படைத்தலைவர் பிட்டன். இவரைப் பிட்டங்கொற்றன் என்றனர். அதியர் குடியைச் சேர்ந்த அஞ்சிக்கும் எழினிக்கும் உரிமையாக இருந்த குதிரைமலைப் பகுதியைச் சேரர் கைப்பற்றித் தன் படைத்தலைவராகிய பிட்டங்கொற்றனுக்கு வழங்கினார். அதன்பின்னர் பிட்டங்கோற்றன் குதிரைமலைப் பகுதியினை ஆண்டுவந்தார். இவர் கொங்கு நாட்டிலுள்ள குறும்பொறைக்குக் கிழக்கேயுள்ள ஆமூரை ஆண்டக் கொடுமுடியைத் தாக்கினார். கொடுமுடி வென்றார். சோழநாட்டிலும் ஆமூர் உள்ளதால், இந்தக் கொடுமுடியைச் சோழரின் படைத்தலைவர் என்று கருதலாம்.

வானவன் சேரமான் குட்டுவன் கோதைக்குப் பின்னர் திருக்குட்டுவன், இளம்கடுங்கோ ஆகியோர் ஆண்டனர்.

அதன் பின்னர் கோக்கோதை மார்பன் மாரிவெண்கோ ஆட்சிக்கு வந்தார். மாந்தரஞ்சேரல் இறந்தவுடன் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளிவளவன் வஞ்சிமாநகரை முற்றுகையிட்டார். கோக்கோதை மார்பன் கோட்டைக்குள் ஒளிந்திருந்தார். “ஒளிந்திருக்கும் வேந்தரைத் தாக்குவது உமது சிறப்பிற்கு அழகல்ல“ என்று புலவர் ஆலத்தூர் கிழாரும் புலவர் மாறோக்கத்து நப்பசலையாரும் கூறியதைப் புறக்கணித்துவிட்ட கிள்ளிவளவன், வஞ்சிமாநகரின் அகழியையும் நீர்நிலைகளையும் மதிலையும் ஊர்களையும் அழித்தார். தொண்டியைத் தலைநகராகக்கொண்டு சேரநாட்டினை ஆண்டதாக மற்றொரு கோக்காதை மார்பனும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இவர், கிள்ளிவளவன் மதுரைப் பாண்டியரைத் தாக்கமுயற்சித்தபோது, அவரைத் தடுத்துப் போரிட்ட, பழையன்மாறன் என்பவரிடம் தோல்வியுற்றதனை அறிந்து, மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பு உள்ளது.

சேரப் பேரரசு தொய்வடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டபோது சேரலாதன் ஆட்சிக்கு வந்தார். இவர் ஞாயிற்றுச் சோழனுடைய மகள் நற்சோணையை மணந்தார். இத்தம்பதியருக்குப் பிறந்தவர் சேரன் செங்குட்டுவன்.

சேரன் செங்குட்டுவன்தான் சேரர் குலம் மீண்டும் உயர்வடையக் காரணமாக இருந்தார். இவரது மனைவி இளங்கோவேண்மாள். இவரது காலத்தில் இலங்கையை முதலாம் கயவாகு ஆண்டுவந்தார். “கயவாகு பொ.யு.171 முதல் பொ.யு. 193 வரை ஆண்டார்“ என்று இலங்கை வரலாற்று நூலான மாகவம்சத்தைப் புதுப்பித்த கெய்சர் குறிப்பிட்டுள்ளார். சாதவாஹனர் ஸ்ரீ சதகர்ணியும் இவரது காலத்தவரே. கொடுங்கூரை ஆண்ட கொங்கரை எதிர்த்துச் செங்களத்தில் செய்தபோரிலும் வட ஆரியரோடு புரிந்த வண்டமிழ்ப் போரிலும் கங்கை நதிக்கரையில் நடைபெற்ற போரிலும் இமயத்தை நோக்கிய படையெடுப்பிலும் வெற்றிபெற்றார். இமயத்தில் கல்லெடுத்து, அதனைக் கங்கையில் நீராட்டி, கண்ணகிக்குச் சிலைசெய்து, கோயில் அமைத்துப் பத்தினித் தெய்வ வழிபாட்டினை நடத்தினார். அவ் விழாவில் இலங்கை வேந்தர் கயவாகுவும் கலந்துகொண்டார். இது தொடர்பான செய்திகளைச் சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டத்தில் காணமுடிகின்றது.

சங்கச் சேரர் குலத்தின் இறுதி வேந்தர் கணைக்கால் இரும்பொறை ஆவார். இவர் சோழ வேந்தர் வெங்கணானிடம் தோல்வியுற்றார்.

சங்கச் சோழர்கள்

காடுகளை அழித்துக் கழனிகளாக்கிய (கழனி – விளைநிலம்) பெருமையுடையோர் சோழர்கள். இவர்கள் நாட்டைச் “சோழநாடு“ அல்லது “சோணாடு“ என்று அழைத்தனர். வடக்கில் நெல்லூரிலிருந்து தெற்கில் புதுக்கோட்டை வரையுள்ள பகுதி சோழநாடு. காடுகளில் வாழ்ந்த புள்ளிப்புலிகளின் நினைவாக இவர்கள் தமது கொடியில் புலிச்சின்னத்தைப் பொறித்தனர். சோழர்களைச் சென்னி, செம்பியன், வளவன், கிள்ளி என அழைத்துள்ளனர். புகார், உறையூர், அழுந்தூர், ஆவூர், குடமூக்கு போன்றன சோழநாட்டின் முதன்மையான நகரங்களாகும். வளம்மிகுந்த நன்செய் நிலங்களை உடைய இப்பகுதியில் நெல்விளைச்சல் மிகுதி. முதற்சோழன் வேல் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி. இவர் இங்கு ஆட்சிசெய்தபோது வட இந்தியாவில் நந்தர்கள் ஆண்டனர். சேரநாட்டினை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆண்டார். சேரரும் சோழரும் பகைகொண்டு, போர்க்களத்தில் கடும்போர் புரிந்து, அக்களத்திலேயே இருவரும் மாண்டனர்.

இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர் சோழன் உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி. வரலாற்றில் “இளஞ்சேட்சென்னி“ என்ற பெயரில் நால்வர் உள்ளனர். உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி, நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி, வம்ப வடுகரை ஓட்டிப் பாழியை அழித்த இளம்பெருஞ்சேட்சென்னி. இவர்கள் நால்வரும் ஒருவரே என்ற கருத்தும் உள்ளது.

இவரது காலத்தில் சேரநாட்டினை வெல்கெழு குட்டுவனும் பாண்டிய நாட்டினைக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் ஆண்டுவந்தனர். மோரியர் மற்றும் கோசர்கள் இணைந்து கூட்டுப்படை நடத்திவந்து எதிர்த்தபோது, அப் படைகளைச் சோழன் உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி எழில்மலை பாழிகோட்டையில் எதிர்கொண்டார். வெற்றிபெற்றார். இவரது படையில் தேர்ப்படைக்கு முதன்மைத்தன்மை தரப்பட்டுள்ளது. இவர் வம்பவடுகரை வென்றார். இவர் வேளிர் குலத்துடன் மணவுறவு கொண்டவர். இவரின் மனைவி கருவுற்றிருந்த போது, இவர் ஒரு போர்க்களத்தில் மாண்டார். குழந்தை பிறந்தது. அக் குழந்தைதான் முதலாம் கரிகாற்சோழன் (கரிகால் வளவன்). இவரை இவரது தாய்மாமன் இரும்பிடர்த் தலையார் (பிடாத்தலையன்) வளர்த்தார். கரிகால் வளவனை அழிக்கப் பெரும் எரியூட்டும் சதி நடந்தது. அதிலிருந்து தப்பும்போது இவரது கால் தீயால் கருகிப் புண்ணாகியது. அதனால் “கரிகாற்சோழன்“ என்று குறிப்பிடப்பட்டார். அதன் பின்னர் பல எதிர்ப்புகளையும் தாண்டி, தன் தாய்மாமன் உதவியுடன் ஆட்சிக்கு வந்தார்.

முதலாம் கரிகாற்சோழன் தன் இளம்வயதிலேயே ஒரு பெரும்போரினை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. சிறுவன்தானே எளிதில் வென்றுவிடலாம் என்ற தவறான கணிப்புடன், சேரரும் பாண்டியரும் வேளிர் ஒன்பதுபேர்களுடன் கூடிப் பெரும்படைநடத்தி, நீடாமங்கலத்திற்கு அருகில் உள்ள “வெண்ணி“ என்ற ஊரின் வாசலில் (கோவில்வெண்ணி), முதலாம் கரிகாற்சோழனை எதிர்த்தபோது, துணிவுடன் போராடி அனைவரையும் அழித்தார். இவர் சேரன் பெருஞ்சேரலாதன் மீது எறிந்த வேல், பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்து, முதுகின் வழியாக வெளிப்பட்டது. முதுகில் புண் ஏற்பட்டதால், அவமானமடைந்த பெருஞ்சேரலாதன் போர்க்களத்தில் வடக்கு திசைநோக்கி அமர்ந்து, உண்ணா நோம்பிருந்து (உண்ணாவிரதம்) இருந்து உயிர்நீத்தார். அப்போர் நடந்த ஊர் “வெண்ணிவாயில்“ என்றும் அவ் ஊரின் வெளிப்புறங்கள் போர்க்களமாகப் பயன்படுத்தப்பட்டதால் “வெண்ணிப் பறந்தலை“ என்றும் இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளது. இவர் காலத்தில் தமிழகத்தின் வடக்கில் கோசர்கள் ஆண்டுவந்தனர். முதலாம் கரிகாற்சோழன் முதலில் உறையூரையும் பின்னர் புகாரையும் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்தார். இவர் தன் மகள் ஆதிமந்தியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்று அறியப்பட்ட அத்திக்கு (ஆட்டனத்தி) மணம்செய்து கொடுத்தார். இவர் ஆட்டனத்தி கழாஅர் முன்துறையில் (கழுதகாரன் துறை) நடனம் செய்ததனைக் கண்டுகளித்துள்ளார். வலிமையான கடற்படையை நிறுவி, இலங்கைமீது படையெடுத்து வென்றார். ஊளியர், அருளாளர், வடவர், வேளிர் குலத் தலைவர் இருக்கோவேள் ஆகியோரையும் வென்றார். கழாஅர் முன்துறையை ஆண்டவர் “மத்தி“. இவர் பரதவர் குலச் சிற்றரசர். இவர் கரிகாற்சோழருக்குக் கீழ்ப் பணிந்திருந்தார். ஒருமுறை யானை பிடிக்கக் கடமைப்பட்டிருந்த எழினி என்பவர் வராததால், கரிகாற்சோழர் சினம்கொண்டார். அவரது ஏவலின்பேரில் மத்தி, எழினியைத் தேடிச்சென்றார். நெடுந்தொலைவில் இருந்த எழினியைக் கண்டுபிடித்து அவரின் பல்லினைப் பிடுங்கி, அதனை வெண்மணி வாயில் கோட்டைக் கதவில் பதித்தார். தன் பெயர் எழுதிய கல்லை அவ் ஊரின் நீர்த்துறையில் அமைத்தார்.

கரிகாற்சோழருக்குப் பின்னர் தித்தன் ஆட்சிக்கு வந்தார். கடற்கரைப் பட்டினமான வீரையை ஆண்ட வெளியன் என்ற வேளிரின் மகன் தித்தன். இவர் சோழரின் மகளை மணந்து சோழரானார். இவரது முழுமையான பெயர் “வீரை வேண்மான் வெளியன் தித்தன்“ என்பதாகும். ஆர்க்காட்டுத் தலைவர் ஆட்சியில் இருந்த உறையூரை வென்று அங்குச் சோழ அரசினை நிறுவினார். உறையூரைச் சுற்றிலும் காவற்காட்டினை அமைத்து உறையூரைப் பாதுகாப்பான நகராக மாற்றினார். இவருக்குக் கோப்பெருநற்கிள்ளி, வெளியன் என்ற மகன்களும் ஐயை என்ற மகளும் இருந்தனர். வெளியனின் பெயர் “தித்தன் வெளியன்“ என்பதாகும். பொருநன் என்பவர் உறையூரைத் தாக்கியபோது, தித்தனுக்கு உதவியாகப் போர்வையை (போஓர்) ஆண்ட பொருநற்கிள்ளி என்பவர் உதவ விரும்பினார். ஆனால், தித்தன் அவர் உதவியைப் பெறாமலே, பொருநனை எதிர்கொண்டார். தித்தன் கொடைத்தன்மை மிகுந்தவராகவும் இருந்துள்ளார். இவரது காலத்தில் “பெருந்துறை“ சோழர்களின் முதன்மையான துறைமுகமாக இருந்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் இங்குப் பெருகியிருந்தது. தித்தன் வெளியனின் படைத்தளபதியாகப் “பிண்டன்“ என்பவர் இருந்தார். இவர், தித்தன் வெளியனின் கட்டளைப்படி முதலாம் நன்னனின் தலைநகரான பாழியைத் தாக்கியபோது, நன்னனால் தேற்கடிக்கப்பட்டார்.

தித்தனின் மகன் கோப்பெருநற்கிள்ளி. இவர் ஆட்சிக்கு வரும்முன்னரே ஆமூர் மல்லனை வென்றார். இவர் போர்வை (போர்அவை, போஓர்) கோப்பெருநற்கிள்ளி என்று அறியப்பட்டார். ஆட்சிக்கு வந்தபின்னர் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியானார். “இராஜசூயம் யாகம்“ செய்ததால் இவரை “இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி“ என்று அழைத்தனர். இவரது காலத்தில் கரூரைத் தலைநகராகக்கொண்டு மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆண்டுவந்தார். பாண்டிய நாட்டினைக் கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி ஆண்டுவந்தார். இவர் உறையூர்ப் பகுதியை ஆட்சிசெய்த போது அழுந்தூர்ப் பகுதியைப் பெரும்பூண் சென்னி ஆண்டதாகக் கூறுகின்றனர். இவரே கழுமலத்தில் வெற்றிவாகை சூடியதாகக் கூறப்படுகின்றது.

இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைத் தொடர்ந்து கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன் ஆகியோர் ஆண்டனர்.

இரண்டு சோழ வேந்தர்களான நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே போட்டி நிலவியுள்ளது. நலங்கிள்ளிக்கு அஞ்சி உறையூர், ஆவூர் ஆகிய இடங்களில் உள்ள கோட்டைகளில் மாறிமாறி நெடுங்கிள்ளி ஒழிந்துகொண்டார். பின்னர், காரியாறு என்ற இடத்தில் அவர் கொல்லப்பட்டார்.

நலங்கிள்ளிக்குப் பின்னர் அவரின் மகன் கிள்ளிவளவன் ஆட்சிக்கு வந்தார். இவரின் தந்தைப் பெயரின் பின் பின்னொட்டான “கிள்ளி“ (நலங்கிள்ளி) என்பதனையும் அவரின் தந்தைப் பெயரின் பின்னொட்டான “வளவன்“ (கரிகால்வளவன்) என்பதனையும் இணைத்து இவருக்குக் “கிள்ளிவளவன்“ என்று பெயரிட்டுள்ளனர். இவர் பாண்டியன் பழையன் மாறனை வென்று கூடல்நகரினைக் கைப்பற்றினார். இவர் வடதிசையில் இருந்த கோசரையும் அழித்துள்ளார். பாண்டிய நெடுஞ்செழியன் மதுரையிலும் சோழன் கிள்ளி வளவன் உறையூரிலும் ஆட்சியிலிருந்தபோது தொண்டையர் கடல்வழியாக்க் கூடூருக்குள் நுழைந்து வேங்கடலைப் பகுதியில் ஊடுருவினர். அவ்வாறு வந்த தொண்டையர் மரபில் மூத்தவர் திரையன். இவர் காஞ்சிபுரத்தினைத் தலைநகராகக்கொண்டு ஆண்டார். இவர் கடலரசர் குடியைச் சேர்ந்தவர். இரண்டாம் கரிகாற்சோழன் சிறுவனாக இருந்தபோது, இத்திரையன் சோழப்பேரரசினைக் கைப்பற்றியுள்ளார். இவரைப் பல்வேல் திரையன், தொண்டைமான் இளந்திரையன் என்றும் போற்றியுள்ளனர். கிள்ளிவளவனால் பாடப்பெற்ற புகழையுடைய சிற்றரசன் “பண்ணன்“. இவர் அருமனையை அடுத்துள்ள சிறுகுடியை ஆண்டவர். இவர் வயதில் முதியவர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியநெடுஞ்செழியன் காலத்தில் இருந்து வாழ்ந்துவருபவர். இவர் காலத்தில் செம்பியனும் சேரனும் மற்ற ஐவரும் தலையாலங்கானத்தில் கொல்லப்பட்டனர். இவரது உதவியால் சோழநாடு நெடுஞ்செழியனின் மேலாண்மைக்கு வந்த்து. இவர் பாண்டியரோடும் நல்லுறவு கொண்டிருந்தார். இவர் துறவி இயக்கனுக்குப் பாழி (சமணர் படுக்கை) அமைத்துக்கொடுத்துள்ளார். இவர் “செழியன் பெருங்குளம்“ என்ற பெயரில் ஒரு குளத்தை வெட்டியுள்ளார். இவரின் முதுமையைப் போக்கக் கிள்ளிவளவன் தன் இளமையைத் தர விரும்பினார்.

சோழன் கிள்ளி வளவனுக்குப் பின்னால் பெருந்திருமாவளவன் (இரண்டாம் கரிகாற்சோழன்) ஆட்சிக்கு வந்தார். அதற்கு முன் இவர் சிறைப்பட்டிருந்தார் என்று குறிப்புகள் உள்ளன. இவர் காவிரிக்குக் கரை எழுப்பினார். இவர் வெட்டிய வாய்க்கால்களுள் ஒன்று “பெருவளவாய்க்கால்“ ஆகும். இவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் வடக்கில் திரையர்கள் வலிமையுடன் இருந்துள்ளனர். காஞ்சியைத் தொண்டைமான்களின் மரபினர் ஆண்டனர். இரண்டாம் கரிகாற்சோழன் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றி, அங்கிருந்த வீரர்களை அடிமைகளாக்கிச் சோழநாட்டின் நிர்மாணப் பணிகளுக்குப் பயன்படுத்தினார்.

இவருக்குப் பின்னர் செங்கணான், நல்லுருத்திரன் போன்றார் ஆட்சிக்கு வந்தனர். செங்கணான் சிவாலயங்கள் பலவற்றை ஏற்படுத்தினார். இவர் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளிவளவனின் சமகாலத்தவர். செங்கணானைப் ‘பெரும்பூட்சென்னி’ என்றும் அழைத்துள்ளனர்.இவரது கழுமலப்போர் குறிப்பிடத்தக்கது. சங்கச் சேரர் குலத்தின் இறுதி வேந்தரான கணைக்கால் இரும்பொறையை இவர் கைதுசெய்தார்.

சங்கப் பாண்டியர்கள்

வடக்கில் வெள்ளாறிலிருந்து தெற்கில் கன்னியாகுமரி வரையிலும் கிழக்கில் சோழமண்டலக் கரையிலிருந்து மேற்கில் கேரளாவிற்குச் செல்லும் அச்சன் கோயில் கணவாய் வரையிலும் உள்ள பகுதி பாண்டியநாடு. பாண்டியர்களின் கொடியிலுள்ள சின்னம் மீன். பாண்டியர்களை மீனவர், கவுரியர், பஞ்சவர், தென்னர், செழியர், மாறர், வழுதி, தென்னவர் என்றெல்லாம் அழைத்துள்ளனர். பாண்டியர் மரபில் பழைமையானவராகக் கருதப்படுபவர் முந்நீர் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன். அவருக்குப் பின்னர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் நிலந்தரு திருவிற் பாண்டியன்.

பாண்டியருக்கு முன்னர் மதுரையை (கூடல்) ஆண்டவர் அகுதை. இவர் ஆண்ட கூடல் நகரினை “அகுதைகூடல்“ என்று புலவர் கபிலர் குறிப்பட்டுள்ளார். இவர் வெளியன் வேண்மான் ஆஅய் எயினனுடன் நட்புடன் இருந்தார். ஆஅய் எயினன் புன்னாட்டினை ஆண்டவருடன் நட்புடன் இருந்தார். புன்னாட்டின் மீது பாழிநாட்டை (இது சேரநாட்டின் வடகோடியில் உள்ள எழிற்குன்றத்திற்கு அருகில் உள்ள மலைப்பகுதி) ஆண்ட முதலாம் நன்னன் தொடர்ந்து போர்தொடுத்து அம்மக்களை வாட்டினான். இந்த அறமற்ற செயலைக்கண்டு வருந்திய ஆஅய் எயினன், நன்னனின் பாழி நாட்டின் மீது போர்தொடுத்தார். அப்போரில் நன்னனின் படைத்தலைவர் மிஞிலி, ஆஅய் எயினனுடன் மோதினார். இப்போரில் ஆஅய் எயினன் மாண்டார். போர்க்களத்தில் இருந்த ஆஅய் எயினனின் உடலை அப்புறப்படுத்த விரும்பாத நன்னன் அதனைப் பறவைகள் உண்ணட்டும் என்று இருந்துவிட்டார். இக்கெடுமையைக் கண்டு கொத்தித ஆஅய் எயினனின் நண்பர் அகுதை பாழிநாட்டின் மீது படையெடுத்தார். ஆஅய் எயினனின் உறவினரின் துன்பத்தை அகுதை நீக்கியதாகக் குறிப்புகள் உள்ளன. ஆஅய் எயினன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரரின் படைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் படைத்தலைவரைக் கொன்ற நன்னன்மீது களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் படையெடுத்துச்சென்றுப் பெருந்துறைப்போரில் நன்னனை அழித்தார் என்பது தனிவரலாறு.

வலிமை மிக்க அகுதையைப் பூதப்பாண்டியனின் மகனான நெடியோன் விரட்டியடித்துவிட்டு, கூடலில் பாண்டியப் பேரரசிற்குக் கடைக்காலிட்டார். தப்பியோடிய அகுதைக்குக் கோசர் அடைக்கலம் தந்தார். நிலம் தரு திருவின் நெடியோன் என்ற பாண்டியர்தான் பாண்டிய நாட்டினை விரிவாக்கம் செய்தார். ஆதலால், இவரைப் “பன்னாடு தந்த பாண்டியன்“ என்று சிறப்பிக்கின்றனர்.

இவரை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர்வழுதி ஆவார். இவரைப் புகழந்து இரும்பிடர்த் தலையார் (பிடாத்தலையன்) பாடியுள்ளார். இவர் முதற்கரிகாற்சோழனின் தாய்மாமன் ஆவார். இவரது காலத்தில் சேரநாட்டினைப் பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் சோழநாட்டினை உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னியும் ஆண்டுவந்தனர்.

இவரை அடுத்து உக்கிரப் பெருவழுதி என்பவர் ஆண்டுள்ளார். இவரது காலத்தில் சேரநாட்டினை மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழநாட்டினை முடித் தலைக்கோ பெரு நற்கிள்ளியும் ஆண்டனர். இவர் வேங்கை மார்பன் என்ற அரசரின் பெரிய கோட்டையினைக் கைப்பற்றியதால் “கானப்பேரெயில்கடந்த“ என்ற அடைமொழியினைப் பெற்றுக் “கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி“யானார்.

இவரைத் தொடர்ந்து அறிவுடைநம்பி என்ற பாண்டியர் ஆண்டார். இவர்காலத்தில் சேரநாட்டினைக் கருவூர் ஏறிய பெருஞ்சேரல் இரும்பொறையும் சோழநாட்டினைக் கோப்பெருஞ்சோழனும் ஆண்டனர்.

இவருக்குப் பின்னர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆட்சிக்கு வந்தார். “ஒல்லையூர்“ என்பது, புதுக்கோட்டை மாவட்டம் ஒலியமங்கலத்து வட்டத்தில் உள்ள ஒரு பகுதியாகும். இது சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. இதனை மீட்டுத் தன்வசப்படுத்தியதால் இவருக்கு “ஒல்லையூர் தந்த“ என்ற அடைமொழி ஏற்பட்டது.

இவரை அடுத்துத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சியினை ஏற்றார். இவரது காலத்தில் சேரநாட்டினை யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆண்டுவந்தார். அவ் வேந்தரைத் தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் இருக்கும் தலையாலங்கானம் (ஆலங்கானம்) என்ற இடத்தில் எதிர்கொண்டு வெற்றிபெற்றார். அவரைக் கைதுசெய்து தன் சிறையில் அடைத்தார். அச் சிறையிலிருந்து யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் தப்பிச் சென்றார். இவரை எதிர்த்துச் சோழரும் சேரரும் பெரும்படையோடு “கூடற்பறந்தலை“ என்ற இடத்தில் இவருடன் மோதினர். இவர் அவ் இருவரின் படையோடும் கடுமையாகமோதினார். அவர்கள் தமது வெற்றிமுரசினைப் போர்களத்தில் விட்டுவிட்டுப் புறமுதுகிட்டனர். அவர்களைத் துரத்திச் சென்றபோது அவர்கள் தலையாலங்கானம் என்ற இடத்தில் இவரை எதிர்த்து எழுவர் (சேரர், சோழர், திதியன், எழினி, எருமையூரன், இளங்கோ வேண்மான், பொருநன்) ஒன்றாகப் படைதிரண்டனர். அவர்கள் அனைவரையும் நெடுஞ்செழியன் ஒருபகற்பொழுதிலேயே வீழ்த்தி வெற்றிபெற்றார். இவர் பாண்டிய நாட்டினை நல்லூர் வரை விரிவுபடுத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்புக்கோயில் என்று அழைக்கப்படும் அழும்பில் என்ற இடத்தை ஆண்டுவந்த விறல்வேள் என்பவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எதிர்த்துத் தன் நாட்டினை இழந்தார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியருக்குப் பின்னர் அழும்பில் சோழர் கைக்குச் சென்றது. பின்னாட்களில் விறல்வேள் மரபினர் தம்மை “அழும்பில்வேள்“ என்ற பெயரில் அழைத்துக்கொண்டு அழும்பிலை ஆளத்தொடங்கினர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை “வென்வேற்செழியன்“ என்றும் “நெடுஞ்செழியன்“ என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவரின் படைத்தளபதி அதிகன் என்பார் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் கொங்கரை எதிர்கொண்டார். கொங்கர் பாண்டியரின் யானைப் படையினை அழித்தார். செய்தியறிந்த நெடுஞ்செழியன் வாகைப் பறந்தலைக்கு விரைந்தார். கொங்கரை அழித்து, கொங்கருக்குரிய நாடுகள் பலவற்றைக் கைப்பற்றினார். இவரைத் “தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்“ என்றும் “பாண்டிய நெடுஞ்செழியன்“ என்றும் குறிப்பிடுகின்றனர். இவரது படைத்தலைவன் “கடலன் வழுதி“. இவர் “விளங்கில்“ என்ற ஊரில் ஆட்சிசெய்தவர். துறவி இயக்கனுக்கு மலைக்குகையில் படுக்கை (சமணப் பாழி) வெட்டிக்கொடுத்தவருள் இவரும் ஒருவர். இவர் கணிய நந்தி என்பவருக்கும் பாழி அமைத்துக்கொடுத்துள்ளார். இதனை மாங்குளம் மலைக்குகைக் கல்வெட்டு தெரிவித்துள்ளது.

சங்க இலக்கியங்களில் “நெடுஞ்செழியன்“ என்ற பெயரில் இரண்டு பாண்டிய அரசர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஒருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மற்றொருவர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். “செழியன்“ என்ற பெயர் சங்க இலக்கியத்தில் 23 இடங்களில் வந்துள்ளது. இச் சொல் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே குறித்துள்ளது. இவரையே பசும்பூட்செழியன், பசும்பூண் பாண்டியன், பசும்பூண் வழுதி என்றும் குறித்துள்ளனர்.

இவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தர் உக்கிரப் பெருவழுதியாவார். இவரே, சித்திரமாடத்துச் துஞ்சிய நன்மாறன் என்று கருத இடமுள்ளது.

பசும்பூண் பாண்டியன் என்ற வேந்தர் பற்றிய செய்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவரைப் பாண்டியர் மரபில் எவ் இடத்தில் இணைப்பது என்று தெரியவில்லை.

கூடல்நகரில் பாண்டிய அரசினை நிறுவிய நெடியோனின் மகன் பசும்பூண் பாண்டியர் ஆவார். இவர் யானைப் படையுடன் சென்று கொல்லிமலையை ஆண்ட சிற்றரசரான அதிகனை வென்று, அங்குத் தன் யானைப்படையின் வெற்றி அணிவகுப்பினை நடத்தினார். அதன்பின் அதிகன் இவருக்கு நண்பராகி, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் தன் நாட்டினை இழந்து, பாண்டியருக்குப் படைத்தலைவராக மாறினார். அதிகன் கீழைக் கொங்கர்களின் தலைவராக இருந்தார். இவர் பாண்டியருக்கு நண்பராகியதால் அவர்களும் பாண்டியருக்கு நண்பர்களாகினர். இச் சூழலில் மேலைக் கொங்கர்கள் பொறையர் குடியைச் சேர்ந்த சேர வேந்தர்களுடன் இணைந்து கீழைக் கொங்கர்கள் மீது படையெடுத்தபோது, கீழைக்கொங்கர்களுக்கு ஆதரவாகப் படைநடத்திய பசும்பூண் பாண்டியர் மேலைக்கொங்கரை வென்றார். இவருக்குப் படைத்தலைவராக இருந்தவர் “அதிகன்“ என்றும் “நெடுமிடல்“ என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவரை வில்கெடு தானைப் பசும்பூட் பாண்டியன், நாடுபல தந்த பசும்பூட் பாண்டியன், பலர்புகழ் திருவிற் பசும்பூட் பாண்டியர், இயல்தேர்ச்செழியன், கைவன் செழியன், கொடித்தேர்ச் செழியன், கொற்றச் செழியன், மறப்போர்ச் செழியன் என்றெல்லாம் சிறப்பித்துள்ளனர்.

சங்கப் பாண்டியரின் இறுதி வேந்தர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆவார். இவரைப் பற்றிச் சிலப்பதிகாரத்தில் விரிவாகக் காணமுடிகின்றது.

– – –

விற்பனை வெறி

FL31DAM_2151616g
கடன்கள் மூலம் பொதுத்துறை நிறுவனங்களுக்கான செலவினத்துக்கு நிதி திரட்டுவதற்கு பதில், மத்திய அரசு அதன் பங்குகளை விற்பதில் மிகவும் அவசரம் காட்டி வருகிறது.  இந்த அவசரத்தில் அது வழங்கிய கடன்களுக்குக் கட்டவேண்டிய வட்டியைக் காட்டிலும் அதிகமான வருமானத்தை இழக்கிறது என்பது உண்மை.  மேலும் இருக்கின்ற வளங்கள் விரைவில் தீர்ந்து போகும் நிலையில் இருப்பதால், இந்த முயற்சியும் அதிக நாட்களுக்கு நீடிக்கப்போவதில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவுடனே அரசு தனியார்மயத்துக்கு அதிக முனைப்பு கொடுத்து வருகிறது.  அரசின் முதல் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்) அறிவித்துவிட்டதை தொடர்ந்து, இந்தப் பங்கு விற்பனை குறித்த முதல்படிக்கான துவக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் கடந்த செப்டம்பர் திங்களிலேயே கொடுத்து விரைவுபடுத்தி வருகிறது.  தற்போதைய சந்தை விலையின் மதிப்பீட்டில் சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டுவதற்காக மத்திய அரசின் லாபம் ஈட்டும் மிகப் பெரும் மூன்று பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கை நில வாயு கழகம் (ஓஎன்ஜிசி), நிலக்கரி கழகம் (சிஐஎல்), தேசிய நீர் மற்றும் மின்சக்தி கழகம் (என்ஹெச்பிசி) ஆகியவற்றின் பங்குகளை விற்க முடிவெடுத்துள்ளது.  உண்மையில் இந்த மூன்று கழகங்களும் அதிக விலை மதிப்புள்ள, பாதுகாப்பான பங்கு விலை கொண்டுள்ளன என்பதோடு, வருங்காலங்களிலும் எத்தகைய பங்குச் சந்தை நிலவரத்தையும் எதிர்கொள்ளும் பலம் உடையது.

அரசின் பங்கு விற்பனைமூலம் தனியார்மயத்தை முன்னெடுத்துச் செல்வதன் நோக்கம் இந்த மூன்று பொதுத்துறை நிறுவனங்களில் இந்திய நிலக்கரிக் கழகத்தின் 10 சதமான பங்குகளையும் (இது ரூ 23,600 கோடி தேறும்) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் 5 சதமான பங்கையும் (ரூ.19,000 கோடி) மற்றும் தேசிய நீர் மற்றும் மின் கழகத்தின் 13.3 சதமான பங்கையும் (ரூ. 3100 கோடி) விற்பதன்மூலம் இந்தக் கழகங்களின் பங்கு மதிப்பின் வீரியத்தைக் குறைக்கும் முயற்சியாகும்.  ஆனால் தற்போது இந்த மூன்று கழகங்களில், மத்திய அரசின் மூலதன விகிதம் முறையே இந்திய நிலக்கரி கழகத்தில் 89.65% ஆகவும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் 68.94% ஆகவும், தேசிய நீர் மின் கழகத்தில் 85.96% ஆகவும் இருக்கிறது.  இந்த விற்பனைக்குப் பின்னும், பெரும்பான்மை சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் இருப்பதால், இந்த முயற்சியை ‘தனியார்மயம்’ என்பதற்கு பதில் ‘பங்கு விற்பனை’ என வரையறுத்துக் கொண்டுள்ளனர்.

மறுபுறம், இந்த விற்பனை முயற்சி முடிவில் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள நிதிக்குச் சமமாக ரூ 48,425 கோடி வரை திரட்ட முடியும்.  இத்துடன் சேர்ந்து அரசு சிறுபான்மை பங்குகளைக் கொண்டுள்ள அரசு சார்பற்ற தனியார் நிறுவன பங்குகளின் மூலமாக ரூ.15,000 கோடி திரட்டமுடியும். மொத்தமாக ரூ.63,425 கோடி வரை இந்தப் பங்கு விற்பனை மூலம் 2014-15ம் ஆண்டுக்குத் திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தாராளப் பொருளாதார கொள்கை அமல்படுத்தப்பட்ட காலங்களிலிருந்து கடந்த 2012-13 ஆண்டு காலத்தில் திரட்டப்பட்ட நிதியைக் காட்டிலும் இந்தப் பங்கு விற்பனைமூலம் வந்த ரூ.25,890 கோடி என்ற தொகை மிக அதிகமானதாகும்.  ஆனால், பங்குச்சந்தையில் காளையின் வேகத்தோடு, இந்த மிகச் சிறந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முன்வருவதன்மூலம் நிதிப்பெருக்கம் என்பது பெரிய அளவில் வரைகோட்டை மீறுவதாக அமையும்.

தவறான கணிப்பு

தற்போது கவனிக்க வேண்டியதெல்லாம் அரசின் இந்த முயற்சி சாத்தியமா என்பதற்குப் பதில் சரியான முடிவா என்பதுதான். அரசின் கணக்கின்படி, கடன் பெறுவதன்மூலம் ஏறிக்கொண்டே வரும் கடன் சுமையிலிருந்து காத்துக்கொள்ளமுடியும்.  ஆனால் பட்ஜெட் பற்றாக்குறையை நிவர்த்திக்க, (இது எப்போதும் வருமானத்தைக் காட்டிலும் செலவினம் அதிகமாவதால் உண்டாவது) லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பது, வரவு-செலவு கண்ணோட்டத்தில் வைத்துப் பார்க்கையில் சரியானதாக தெரியவில்லை.  பொதுத்துறைப் பங்குகளை வாங்கும் தனியார் தாங்கள் வாங்கும் பங்குகளுக்கு லாபகரமான வரவைத்தான் எதிர் பார்க்கிறார்களேயொழிய, பொதுக் கடன் பற்றிய கவலை அவர்களுக்கு இருக்காது.  ஏனென்றால் அரசின் கடன் பத்திரங்கள் அல்லது பொதுக்கடன் திரட்ட அரசு கொடுக்கும் உறுதிப் பத்திரங்களுக்கு, அரசின் முழு உத்திரவாதம் இருப்பதால், எந்தவித நஷ்டத்துக்கும் இட்டுச் செல்லாது என்பதுதான் இதற்குக் காரணமாகும்.  இதன் அர்த்தம் என்னவென்றால், அரசின் பாதுகாப்பான கடன் பத்திரங்கள், உறுதி பத்திரங்கள் மூலமாக வரும் வட்டியைக் காட்டிலும், இந்தப் பொதுத்துறை பங்குகளை வாங்குவதில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்ற தனியாரின் கணிப்பேயாகும்.  எனவேதான், இந்தப் பங்கு விற்பனை ஏற்புடையதாகும் என்றால், கடன் பெறுவதற்குப் பதில் இந்தப் பங்கு விற்பனையே, பற்றாக்குறை பட்ஜெட்டைச் சமன் செய்யும் என்றிருந்தாலும், அரசு கடனுக்கான வட்டி விகிதத்தைக் காட்டிலும், வேறு வகை வருமானத்தை அரசு விட்டுக் கொடுக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

நிலைமை இப்படியிருக்க ஏன் அடுத்தடுத்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மற்றும் தற்போதைய தேசிய முற்போக்கு அணி அரசு வரை இந்தப் பங்கு விற்பனையை அதிக முக்கியத்துவம் கொடுத்து நடைமுறைப் படுத்தி வருகின்றன? இந்தப் போக்குக்கு இரண்டு காரணிகள் உள்ளன.  முதல் காரணம், அரசின் செலவினங்களுக்கான நிதியை வரிகள் மூலம் திரட்ட முடியாதது.  அரசு தனது செலவினத்தை குறைத்து, நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த சமூகநலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும், மூலதன செலவினத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துவரும் இந்தச் சூழலில் இந்த அரசின் திட்ட நோக்கத்தைப் பார்க்கவேண்டும்.  இது எதை உணர்த்துகிறது என்றால், கடந்த முப்பது ஆண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சிறப்பாக இருந்தாலும், அரசு குறைக்கப்பட்ட பொதுச் செலவினத்தை சார்ந்திருப்பதற்கான நிதி கூட இன்றி தவிக்கிறது.  ஏனென்றால் வரிமூலம் வரும் வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் குறைவாக இருப்பதோடு, சமயத்தில் பின்னடைந்தும் விடுவதே.
இந்தப் போக்கை வேறு வார்த்தையில் சொன்னால், தற்போதைய ‘தாராளமயம்’ அல்லது

‘பொருளாதார சீர்திருத்தம்’ என்பதன் உள்ளடக்க நியதியின் அடிப்படையில் பார்த்தால், தனியார் மூலதனத்தை ஊக்குவிக்கவும், விரிவாக்கத்துக்கான இந்த முயற்சியில் ‘வரி விதிப்பில்’ சகிப்புத்தன்மை காட்டவேண்டும்.  இதை நடைமுறைப்படுத்த, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில் குறைந்த வரி விகிதங்கள், விதிவிலக்குகள், வகைகள் மற்றும் ‘வரி விதிப்புகள்’ அளிக்க வெண்டுமென்பதோடு, மறைமுக வரிவிதிப்பபையும் முறைப்படுத்தி வரிச் சுமையைக் குறைக்கவேண்டிய வகையில் கொள்கை முடிவு எடுப்பதன்மூலம் முதலீடுகளை ஊக்கப்படுத்தமுடியும்.  இதன் விளைவாக, சர்வதேச தரத்தில் ஒப்பிடுகையில் நாட்டின் மொத்த உற்பத்தி விகிதத்திற்கும் குறைவாக வரிவிதிப்பு உள்ள நாடாக இருப்பதால், அரசின் செலவினங்கள் குறைந்தாலும், நிதிப்பற்றாக்குறை குறிப்பிட்ட அளவிற்கு உள்ள ஒரு நாடு என கணிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலையைப் பலப்படுத்த கோட்பாடு

நிதிநிலையை பலப்படுத்த வேண்டுமென்பதே, தனியார்மயத்தை அவசியமானதாக ஆக்காது.  இரண்டாவது காரணி, உலகின் பல நாடுகளின் மொத்தப் பொதுக்கடன் மொத்த உற்பத்தி விகிதாச்சாரத்திற்கு அதிகமாக இருந்தாலும், நிதி விவேகம், நிலத்திறன் மேம்பாட்டிற்கு பொதுக் கடன் அளவிற்கு வரம்பு வைக்க வேண்டும்.  நீடித்திருக்கும் நிதி பற்றாக்குறையை தீட;வு செய்ய கடன் மூலமான வருமானத்தைக் காட்டிலும், மூலதனத்திற்கான பிறவகை வருமானங்கள் உயர்த்தப்படவேண்டும்.  இங்குதான் தனியார்மயம் நோக்கி அரசு திரும்பியுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், யாரெல்லாம் தனியார்மயத்தை வலியுறுத்துகிறார்களோ, அவர்கள் நிதி நிலை திறம்படுத்த அல்லது அரசுக் கடன் வகை வருவாயைக் குறைக்க குரல் கொடுப்பார்கள்.  எதிர்பார்த்தபடியே, இத்தகைய உத்தி எதுவென்றால், குறைந்தகால அல்லது நீண்ட கால முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் பொதுச் சொத்துகளை வாங்குவதில் ஆர்வம் காட்டும் தனியார் முதலாளிகள்தான்.
இதில் கவனிக்கப்படவேண்டியது ஒன்று, இந்தப் பொதுத் துறை சொத்து, மூலதன தாக்கம் உள்ள பகுதிகளில் முதலீடு செய்யப்பட்டவையாகும்.  இந்தப் பகுதிகளும் வெளி உதவி மற்றும் அந்தப் பிரிவின் வேறு கூறுகளிலிருந்து ஏற்றம் கொடுக்கும் வகையிலான உதவியுடன் சிறப்பாக செயல்படும் துறைகளாகும்.  மேலும், இத்தகைய துறைகளின் செயல்பாட்டை அதிகப்படுத்தும் முகமாக உற்பத்திச் செலவைக் குறைத்து வளர்ச்சியை உறுதிப்படுத்த, நன்கு திட்டமிட்டு நிர்வகிக்கப்பட்ட விலை நிர்ணய முறை கடைப்பிடிக்கப்படுகிறது.  இதன் முடிவாகவே, மிகவும் லாபகரமான துறையில் முதலீடு செய்வதை தவிர்த்ததால், பொது முதலீடு அவசியமானது.  எனவேதான், இந்தத் தனியார் முதலாளிகள் தற்போது இந்தப் பொதுத்துறை பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருவது அல்லது பொதுத்துறை சொத்துக்கள்மீது ஆதிக்கம் செலுத்தத் துடிப்பது புதிராக உள்ளது.

தனியார் துறைகளுக்கு அப்படியென்ன ஆர்வம்?

இந்தியாவிலுள்ள தனியார் துறை சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தக் காலத்தில் மிகப் பெரிய அளவிலான மூலதனத்தை முதலீடு செய்யவும், அதை நிர்வகிக்கவுமான அளவிற்கு வளர்ந்துள்ளது என்பது இதற்கு எனது பதிலாக இருக்கும்.  முன்பெல்லாம் தீண்டத்தகாதவையாக இருந்த பகுதிகள் முழுவதும் தற்போது மிகப்பெரிய அளவிலான முதலீட்டுக்கான பகுதியாக மாறிவிட்டது.  போதாததற்கு, தாராளமயம், கட்டுப்பாட்டை தளர்த்தியதுடன், விலைவாசியையும் கட்டுப்பாடற்றதாக்கியதுடன், எந்தெந்த தனியார் துறையில் விலைவாசி நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் அரசு நிதி உதவி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.  விலைவாசி நிர்ணயிப்பதும், நெகிழ்ந்து கொடுப்பதும் இருப்பதால், இந்தத் துறைகளை முன்பு வெறுத்த அல்லது ஒதுக்கிய தனியார் தற்போது அதிக லாபம் ஈட்டும் சாத்தியங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.  முன்பெல்லாம் பொதுத்துறை நிறுவனங் களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட பங்கு விற்பனையை வாங்க தற்போது தனியார்களும் ஆர்வம் காட்டுகின்றனர். சிறிய அளவில் பங்குகளை வாங்கி அதைப் பிற ஆர்வமுள்ள தனியார் துறையினருக்கு விற்று லாபம் பார்க்கின்றனர்.  எனவே, எங்கெல்லாம் லாபம் ஈட்ட முடியுமோ அங்கெல்லாம் பங்கு விற்பனை வெற்றிகரமானதாகவே இருக்கிறது.
இந்தச் சந்தர்பத்தில்தான், கடன் பெற்று பற்றாக்குறை பட்ஜெட்டை சமன் செய்வதைக் காட்டிலும், இந்த வகை பங்கு விற்பனை மூலம் சரி செய்ய முடியும் என்ற வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன.  இத்தகைய அரசு கடன் வாங்கும் திட்டத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து முன் வைக்கும் ஒரு மோசமான விவாதம், இந்தக் கடன் பெறுதல் என்பது பொது சேமிப்பின் பெரும் பகுதியை கையகப்படுத்துவதன்மூலம் தனியார் முதலீட்டை மூட்டை கட்டி அனுப்பிவிடும் என்றும் அல்லது வட்டி விகிதத்தை உயர்த்துவதுடன், மூலதன செலவையும் அதிகரித்துவிடும் என்பதே.  ஆகவே, தனியார் துறைதான் மாற்று என்றால் அதைத் தொடரட்டும்.  சில தனியார் துறை ஆதரவாளர்களுக்கு இந்த நளினத்திற்கான நேரம் கூட கிடைப்பதில்லை.  அவர்கள் சொல்வதெல்லாம், பொதுத் துறை அதிகாரிகளுக்கு லாபம் ஈட்ட நிர்வாகத் திறமையில்லை என்பதும், அல்லது ஊழல் நிறைந்தவர்களாகவும் உள்ளனர் என்பதோடு, அரசு இத்தகைய தொழிலில் தலையிடக் கூடாது என்பதுதான்.

நீடிக்காத கொள்கை

இத்தகைய விவாதங்கள் இந்தக் கொள்கைகள் நீடித்த செயலாக்கம் இல்லாதது என்ற அடிப்படையை மறந்து பேசுவதாகும்.  அரசு இத்தகைய வரி சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடிக்கும் வரை, தற்போதைய பற்றாக்குறை பட்ஜெட்டே தொடரும் என்பது, அரசின் நிதி உதவி பெறும் தனியார் நிறுவனங்கள் ஏற்காது என்பதிலிருந்து தெளிவாகிறது.  பொதுக் கடன் பெறுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை விடாப்பிடியாக இருக்கும்வரை, பொதுத் துறை பங்கு விறபனை தவிர்க்க முடியாததுதான்.  ஆனால் அதிலும் முரண்பாடுள்ளது. இந்தப் பங்கு விற்பனை வரவு என்பது, வரி வருமானம் போலன்றி ஒரு முறை வருமானமே. ஒரு முறை விற்பனை செய்த சொத்தை மறுபடியும் பெற்று மற்றொருவருக்கு விற்க முடியாது.  எந்த ஒரு முயற்சியிலும், வருமானத்திற்கான வழிகள் குறைந்து செலவினம் கூடுகிறதோ, அந்தத் தொழில் முயற்சி நீடிக்காது.

பல்வேறு காரணங்களுக்காக, இத்தகைய முயற்சிகளுக்கு மிக விரைவில் ஒரு வரையறை அல்லது எல்லை வந்துவிடும்.  ஒரு துவக்கமாகச் சொன்னால் லாபகரமான அல்லது லாபகரமாக விற்க இயலும் பங்குகளை விற்பதன்மூலமே இந்தப் பங்கு விற்பனை என்ற முயற்சி பலனளிக்கும்.  அதுபோல சில நிறுவனங்கள் உள்ளன.  எனவேதான் அவற்றின் பங்கு மட்டும் விற்பனைக்கு அடிக்கடி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.  இது பங்கு விற்பனைக்கும், தனியார்மயமாக்குதலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை காட்டுவதை நாளடைவில், அரசின் பங்குகள் விகிதம் சிறுபான்மையாகி முடிவில் எந்தச் சொத்துகள் தற்போதைய அரசின் செலவினங்களைச் சந்திக்க பயன்பட்டதோ அந்தச் சொத்துக்கள் கரைந்துவிடும்.

இது எதிர்பார்ப்புக்குப் புறம்பாக மிக விரைவில் நடந்துவிடும். இந்தப் பங்கு விற்பனை சந்தை மூலமாக விற்கப்படுமானால், அந்தப் பங்குகளின் மதிப்பு அதன் ‘உண்மையான’ மதிப்பில் நிர்ணயிக்கப்படாமல், சந்தையில் உள்ள வெவ்வேறு சக்திகளின் தாக்கத்தின் அடிப்படையில் மதிப்பு நிர்ணயிக்கப்படும்.  என்னதான் பங்குச் சந்தை (காளை) ஏற்றம் இருந்தாலும், பங்குச் சந்தையின் அடிப்படை காரணிகள், மேலோங்கி, பங்குகளின் சரிவைப் பதிவு செய்யும்.  விளைவு, ஒரு குறிப்பிட்ட அளவு சொத்துக்களை பெற, அதிக அளவிலான பங்குகளை விற்கவேண்டும் என்பதுடன், முடிவில் லாபகரமான பங்குகள் முற்றாக தீர்ந்து போகும் நிலை ஏற்படும்.

மேலும், பங்குச்சந்தை பலவீனமாகும்போது, அரசுப் பங்குகளை விற்க வேறு வகையில் முயற்சிக்க வேண்டி வரும்.  ஓர் உதாரணம் சொல்லப்போனால், அரசு ஒரு வணிக தந்திரமாக தனியாரை அதிகப்படியான (26 சதவீதம்) பங்கை வாங்க வைக்க அதிகப்படியான நிர்வாக மேலாண்மை பொறுப்பையும் கொடுக்கிறார்கள்.  பங்கை வாங்குபவர், அரசு நிர்ணயித்த விலைக்கே விற்க திறந்த அழைப்பு விடுக்க வேண்டுமென்ற நிலையே அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அப்படியும் அந்தப் பங்குகளின் மதிப்பு தேவையான நிர்வாகக் கட்டுப்பாட்டை பெறும் அளவிற்கு இருக்காது. மேலும், இத்தகைய பங்கு விற்பனையில் வாங்குபவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அந்தப் பங்குகளை விற்பதற்கு பங்குகளின் விலையை குறைத்து மதிப்பிடவேண்டும்.  இந்தப் பங்கு விற்பனை தனியார் மயம் மூலமாகத்தான் நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட் செலவினத்தைச் சந்திக்க வழி என்றால், இந்தப் பங்கு விற்பனையை விரைவுபடுத்த வேண்டும்.

சுருங்கச்  சொன்னால், தற்போதைய புதிய தாராளமயக் கொள்கையை கடைப்பிடிப்பதில் தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அவசரம் காட்டுமேயானால், அந்த நடைமுறை அரசுப் பணத்தில் பெருமுதலாளிகளை மேலும் செல்வந்தர்களாக்கும் ஒரு நீடித்திரா நேர்மையற்ற நிதிக் கொள்கையாக மட்டுமே இருக்கும்.  இது மறுபுறம், இந்தப் பொதுத்துறை உறுதிசெய்து வரும் அதன் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அவர்கள் போராடிப் பெற்ற நியாயமான வேலைநிலை மற்றும் ஊதியம், சலுகைகள்மீது எதிர் விளைவை உண்டாக்கும்.

நன்றி: Frontline

காலனியமும் கல்வியும்

அத்தியாயம் 5

schoolingtheworld4

கரீபிய நாவலாசிரியரான ஜார்ஜ் லாமிங் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘காலனியம் என்பது வரலாற்றில் ஒரு கட்டத்தில் வந்து இன்னொரு சமயம் மறைந்து ஓடிவிடுகிற ஒரு விஷயமல்ல. அது தொடர்ச்சியானது; வாழ்ந்துகொண்டிருப்பது. காலனிய சூழல் முடிவுக்கு வந்தபிறகும்கூட நினைவுகளில் அது தொடர்ந்து வாழ்கிறது.’

2012ம் ஆண்டு பிரிட்டன் ஹை கமிஷனர் சர் ஜேம்ஸ் பெவன் உறையாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சீக்கியர் எழுந்து நின்று இடைமறித்தார். ‘நான் ஒரு சுதந்தரப் போராட்ட வீரர். ஜனநாயகம் வேண்டும் என்று கேட்டுப் போராடியதற்காக நீங்கள் என்னைச் சிறையில் அடைத்தீர்கள். அதற்காக ஏன் பிரிட்டன் இப்போது மன்னிப்பு கேட்கக்கூடாது?’ இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி சார்லஸ் ஆலென் தி டெலிகிராஃப் இதழில் எழுதுகிறார். ‘அந்த சீக்கிய அதிகாரியிடம் பிரிட்டிஷ் அதிகாரி திருப்பிக்கேட்டிருக்கவேண்டும். ஜனநாயகம் குறித்தும் தேசியம் குறித்தும் யோசிக்கவேண்டும் என்று முதலில் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தவர் யார்? தவிரவும் காலனியாதிக்கத்துக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்பது என்பது ஜோன் ஆஃப் ஆர்க் கொல்லப்பட்டதற்காக இப்போது மன்னிப்பு கேட்கச் சொல்வதற்கு ஒப்பானது.’

சார்லஸ் ஆலெனைப் பொருத்தவரை காலனியம் என்பது ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினர்மீது தங்கள் கருத்துகளைப் பலவந்தமாகத் திணிப்பது. இந்திய வரலாற்றை ஆராயும்போது இத்தகைய ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்துள்ளதைப் பார்க்கலாம் என்கிறார் ஆலென். உள்ளூர் ஆதிவாசிகள்மீதான ஆரியர்களின் ஆக்கிரமிப்பை மகாபாரதம் புகழ்ந்து போற்றுகிறது. வேத காலத்தில் ஆக்கிரமிப்பாளரே ஆட்சியாளராக இருந்துள்ளார். அவருடைய கடமை தனது ஜனபதாவை (ராஜ்ஜியம்) மகாஜனபதாவாக (சாம்ராஜ்ஜியம்) மாற்றுவதுதான். ஆக்கிரமிப்புகள்மூலமே இது சாத்தியம். என்னைப் பொருத்தவரை இவையனைத்துமே ஏகாதிபத்தியம்தான் என்கிறார் சார்லஸ் ஆலென். பௌத்தத்துக்கு மாறிய பிறகு அசோகர் இத்தகைய ஆக்கிரமிப்புகளை எதிர்த்தார் ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்கிறார் ஆலென்.

மைசூரைக் கிழக்கிந்திய கம்பெனி மட்டுமல்ல ஹைதர் அலியும்கூடத்தான் ஆக்கிரமித்தார். ராஜபுத்திர ராஜ்ஜியங்களை மராத்தியர்கள் ஆக்கிரமித்தனர். பஞ்சாபை சீக்கியர்கள் ஆக்கிரமித்தனர். இதில் பிரிட்டனின் காலனியாதிக்கம் பிறவற்றில் இருந்து எப்படி, ஏன் மாறுபடுகிறது? ஏன் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார் ஆலென். அதற்கான பதிலை அவரே அளிக்கிறார். இந்தியப் பொருளாதாரத்தை அதிகம் சீரழித்தது பிரிட்டனின் காலனியம்தான். மான்செஸ்டரும் பிர்மிங்ஹாமும் செழித்து வளர்ந்தபோது இந்தியாவின் கிராமப்புறங்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாயின. மற்றவர்களைப் போலன்றி இந்தியக் கலாசாரத்தை பிரிட்டன் தாழ்வாகப் பார்த்தது. ஆங்கிலத்தை இந்தியா முழுமைக்கும் சிபாரிசு செய்த தாமஸ் மெக்காலே ஓர் உதாரணம்.

இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்த மற்ற ஆட்சியாளர்களுக்கும் பிரிட்டனுக்கும் உள்ள மற்றொரு முக்கிய வேறுபாட்டை ஈ.எம்.எஸ். நம்பூதரிபாட்  சுட்டிக்காட்டுகிறார். மற்ற ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவை ஓர் அந்நியப் பிரதேசமாகவே கருதி ஆட்சி நடத்தினார்கள். இந்தியாவுடன் அவர்கள் ஒன்றவில்லை. தங்கள் கலாசாரத்தை, தங்கள் பண்பாட்டை, வழிபாட்டு முறையை, சமூக மதிப்பீடுகளை அவர்கள் இந்தியாமீது திணிக்க முயன்றனர். பிரிட்டனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் முகலாயர்கள் பிரிட்டனைப்போலன்றி இந்தியர்களுடன் ஒன்று கலந்தனர்.

பிரிட்டனின் பாடப்புத்தகங்களில் மாற்றங்களைக்கொண்டுவரவேண்டும்; காலனியம் பற்றிக் குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தானில் பிரிட்டன் இழைத்த கொடுமைகள் பற்றிப் போதிக்கவேண்டும் என்கிறார் வில்லியம் டால்ரிம்பிள். ‘என் குழந்தைகள் ட்யூடர்கள் குறித்தும் நாஜிகள் குறித்தும் திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் காலனியத்தால் கொல்லப்பட்டதை அவர்கள் கற்பதேயில்லை. மலையளவு குவிந்துகிடக்கும் மண்டையோடுகளின்மீதுதான் காலனிய ஆட்சி நடைபெற்றது என்பதை மக்கள் தெரிந்துகொண்டாகவேண்டும்‘ என்கிறார் டால்ரிம்பிள்.

பிரிட்டிஷ் மாணவர்கள் மட்டுமல்ல காலனியத்தின் தாக்கத்துக்கு உட்பட்டுக்கிடக்கும் இந்தியர்கள் குறிப்பாகக் காலனியம் பற்றி விரிவாகக் கற்கவேண்டியிருக்கிறது. அதற்கு முதல் படியாக தனது கலாசார அடையாளத்தை இந்தியா கண்டெடுக்கவேண்டும் என்கிறார் பவன் கே வர்மா. இந்தியர்களின் உள்ளத்திலும் கலாசார பழக்கவழக்கங்களிலும் பிரிட்டிஷ் ராஜ் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு நம்முடைய கலாசார வேர்களைச் சென்றடைவதுதான் நம்முன் இப்போதுள்ள மிகப் பெரிய சவால் என்கிறார் பவன் கே வர்மா. யூனியன் ஜாக் கொடியைக் கீழிறக்கி மூவர்ணக் கொடியை ஏற்றிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருளில்லை. நூறாண்டுகளுக்கு மேலாக ஒரு நாட்டை இன்னொன்று ஆண்டிருக்கிறது என்னும்போது கடந்தகாலம் நிச்சயம் நிகழ்காலத்தோடு கலந்தே இருக்கும் என்கிறார் வர்மா.

சமூகக் கட்டமைப்பில் பிரிட்டன் கொண்டுவந்த முக்கிய மாற்றம் உயர்குடிகளைக் கொண்டிருந்த ராணுவத் தலைமையை மாற்றி நிர்வாகக் கட்டுப்பாட்டையும் ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவத்தையும் கொண்டுவந்ததுதான் என்கிறார் ஆங்கஸ் மாடிசன். மற்றொரு மாற்றம் ஆங்கிலத்தை கல்வி மொழியாக  அறிமுகப்படுத்தியது. பிரிட்டனின் வருகைக்கு முன்பு பெருமளவில் மதம் சார்ந்த போதனைகளே உயர் கல்வி என்னும் பெயரில் அரபி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் கற்பிக்கப்பட்டன. தொடக்கத்தில் பிரிட்டன் இந்தக் கல்விமுறையை ஊக்குவிக்கவே செய்தது. கல்கத்தாவிலுள்ள மதராஸாவுக்கும் பெனாரஸ் சமஸ்கிருத கல்லூரிக்கும் பிரிட்டன் நிதியுதவி அளித்தது. கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹாஸ்டிங்ஸ் சஸ்கிருதம், பெர்ஷியன் உள்ளிட்ட மொழிகளை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். சர் வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருத இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததோடு 1785ம் ஆண்டு ஏஷியாடிக் சொஸைட்டி ஆஃப் பெங்கால் என்னும் அமைப்பை உருவாக்கவும் செய்தார்.

Thomas Babington Macaulay

Thomas Babington Macaulay

ஆனால் தாமஸ் மெக்காலேவுக்கு ஓரியண்டல் காதல் இல்லை. இந்திய இலக்கியங்களால் பயன் எதுவும் இல்லை, அவற்றை ஆதரிப்பது வீண் வேலை என்பது அவர் கருத்து. ஆய்வுகள் என்னும் பெயரில் பிரிட்டன் பணத்தை இந்தியாவில் வீணடிக்கிறது. இந்திய இலக்கியங்களை மொழிபெயர்ப்பது, அச்சடிப்பது ஆகியவற்றால் காகிதங்கள்தான் பாழாகின்றன. இந்திய வரலாறு, தத்துவம், மதம், அறிவியல் அனைத்தும் முட்டாள்தனமாவை என்று மெக்காலே அறிவித்தார். பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப்போல் எனக்கு சமஸ்கிருதம், அரபி இரண்டும் தெரியாது என்றும் பெருமிதப்பட்டுக்கொண்டார். இந்தியா, அரேபியாவில் எழுதப்பட்ட அனைத்து இலக்கியப் பதிவுகளையும்விட ஒரே ஒரு அலமாரி நல்ல ஐரோப்பிய இலக்கியம் மேலானது என்பது மெக்காலே வந்தடைந்த முடிவு.

இந்த மனநிலையோடுதான் ஆங்கிலம் இங்கே நுழைக்கப்பட்டது. இது நல்லதுதானே, ஆங்கிலம் நம் அறிவின் வாசலை அல்லவா திறந்து வைத்தது? வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இதற்காக மட்டுமாவது நாம் காலனியத்துக்கு நன்றி செலுத்தவேண்டாமா என்று சிலர் கேட்கலாம். அதற்கான பதில் மெக்காலேயிடமிருந்தே வருகிறது. ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் என்ன என்பதை அவரே சொல்கிறார். ‘இங்குள்ள மக்கள் கூட்டம் அனைவருக்கும் கல்வி போதிப்பது என்பது முடியாத செயல். அப்படியொரு முயற்சி மேற்கொள்வதற்குக்கூட நம்மிடம் வசதியில்லை. நாம் ஆளப்போகும் லட்சக்கணக்கானவர்களுக்கும் நமக்கும் பாலமாகச் செயல்படக்கூடிய ஓர் இடைநிலை வர்க்கத்தை உருவாக்குவதே நம்முடைய இப்போது பணி. இவர்கள் நிறம், உடலில் பாயும் ரத்தம் ஆகியவை இந்தியர்களுடையதாகவே இருக்கும். ஆனால் இவர்களுடைய ரசனை, சிந்தனைகள், அறம், அறிவு அனைத்தும் ஆங்கிலேயர்களுடையதாக இருக்கும். இந்நாட்டின் பல்வேறு வட்டார வழக்குகளை மேம்படுத்தும் பணியை இந்த வர்க்கத்தினரிடம் நாம் விட்டுவிடலாம்.’

இந்தப் பணி என்னவானது? ஆங்கிலக் கல்விமுறையால் விளைந்த பலன் என்ன? 1857ம் ஆண்டு கல்கத்தா, மெட்ராஸ், பாம்பே ஆகிய இடங்களில் மூன்று பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.  ஆனால் இவை மேற்பார்வையிடும் நிறுவனங்கள் மட்டுமே. அரசு அனுமதியுடன் நடத்தப்பட்ட பிற பல்கலைக்கழகங்களில் இரண்டாண்டு பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மனனம் செய்து எழுதும் பாடமுறையே இங்கு கையாளப்பட்டது. இங்கிருந்து வெளியேறும் பட்டதாரிகள் அரைகுறை ஆங்கில அறிவு, மேற்கத்திய மோகம் ஆகிய இரண்டையும் மட்டுமே சம்பாதித்துக்கொண்டனர். 19ம் நூற்றாண்டு முழுக்க பெண்களுக்குக் கல்வி சென்று சேரவில்லை. ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கல்வியைக் கொண்டு மூட பழக்கவழக்கங்களை அகற்றியிருக்கமுடியும். மத ஆதிக்கத்தை மட்டுப்படுத்தியிருக்கமுடியும். பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கமுடியும். ஆனால் கல்வியை அப்படியொரு உபகரணமாகப் பயன்படுத்தும் நோக்கம் மெக்காலேவுக்கும் இல்லை, பிரிட்டனுக்கும் இல்லை. அவர்கள் எதிர்பார்த்தபடி படித்த, சிறிய இடைநிலை வர்க்கத்தை மட்டும் இந்தக் கல்விமுறை உருவாக்கியது.

காந்தி 1921ம் ஆண்டு கீழ்வருமாறு எழுதினார்.

‘தற்போது ஆங்கிலம் கற்பிக்கப்படும் வழிமுறை, இந்திய மாணவர்களின்மீது அதிகச் சுமையை ஏற்றி, ஆங்கிலம் பயின்ற இந்தியர்களை வலிமையற்றவர்களாக மாற்றிவிட்டது என்பது என் முடிவான கருத்து. அது நம்மைப் போலிகளாக ஆக்கிவிட்டது. பிராந்திய மொழிகள் ஆங்கிலத்தால் ஒதுக்கப்பட்டது ஆங்கிலேயர்களின் தொடர்பினால் நடந்த மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஆங்கிலத்திலேயே சிந்திக்கவும் எண்ணங்களை ஆங்கிலத்துக்கு மாற்றிக்கொள்ளவும் வேண்டிய நெருக்கடி இருந்திருக்காவிட்டால், ராம் மோகன் ராய் இன்னும் பெரிய சீர்திருத்தவாதியாகவும், லோகமான்ய திலகர் மேலும் பெரிய அறிவாளியாகவும் இருந்திருப்பார்கள்.

அவர்கள் ஆங்கில இலக்கியம் என்னும் புதையலில் இருந்து நல்ல அறிவை அடைந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவை அவர்களுடைய தாய்மொழியிலேயே கிடைத்திருக்கவேண்டும். மொழிபெயர்ப்பாளர்கள் எனும் இனத்தை உருவாக்குவதால் என்றுமே எந்த ஒரு நாடும் தேசமாகிவிடாது. பைபிளின் அதிகாரபூர்வமான பிரதி கிடைத்திராவிட்டால், ஆங்கிலம் (ஆங்கிலேயர்கள்) என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். சைதன்யர், கபீர், நானக், குரு கோவிந்த் சிங், சிவாஜி மற்றும் பிரதாப் ஆகியோர் ராம் மோகன் ராய், திலகர் இவர்களைவிடச் சிறந்தவர்கள் என்று நம்புகிறேன். ஆங்கில மொழி அறிவு இன்றி ராஜாவும் லோகமான்யரும் இந்தவிதமாகச் சிந்திருக்கமுடியாது என்பதை நம்ப மறுக்கிறேன்.

சுதந்தர உணர்ச்சியை மக்களிடம் விதைப்பதற்கும் சரியான எண்ணங்களை உருவாக்கி வளர்ப்பதற்கும் ஆங்கில அறிவு மிகவும் அவசியம் என்பதுதான் இந்தியாவிலுள்ள அனைத்து மூட நம்பிக்கைகளிலும் மிகவும் பெரியது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒரே மாதிரியான கல்வித் திட்டம்தான் இருந்தது என்பதையும், ஒரே மொழியில்தான் அவை நம்மீது திணிக்கப்பட்டன என்பதையும் நாம் நினைவுகூர வேண்டும். அதனால் இப்போதுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்தக் கல்வி இல்லாவிட்டால் என்ன ஆகியிருப்போம் என்று தெரிந்துகொள்ள நம்மிடையே எந்தத் தகவல்களும் இல்லை. ஒன்று மட்டும் தெரியும். இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று ஏழ்மையாக இருக்கிறது. கல்விமுறைதான் இதில் மிகவும் பழுதடைந்த பகுதி. சுதேசக் கல்விமுறை பயனில்லாதது மட்டுமல்ல மிகவும் மோசமானது என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள உண்மையாகவே நம்பினர். அவர்கள் முன்வைத்த கல்விமுறை தவறிலேயே பிறந்தது. இந்தியர்களின் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றைக் கூனிக் குறுகச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அது உருவாக்கப்பட்டது.’

நேருவும் இதையேதான் வலியுறுத்தினார் என்று சுட்டிக்காட்டுகிறார் பவன் கே வர்மா. ஆங்கிலம் கற்ற இந்திர்கள் தனியொரு உலகில் பிற இந்தியர்களிடம் இருந்து விலகி வாழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு அவர் வருந்தினார். ‘இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆங்கிலம் வரும் என்று சிலர் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். சொற்பமான மேல் தட்டு அறிவுஜீவிகளுக்கு மட்டுமே பயன்தரக்கூடிய ஒன்றாக அது இருக்கும் என்றே எனக்குப் படுகிறது. பெரும்பாலானோருக்கான கல்வி, கலாசாரத்தைப் பற்றி பிரச்னைகளுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. தொழில்நுட்பம், விஞ்ஞானம், வியாபாரம் முதலியவற்றில் அதுவும் உலகளவில், அதிகமாக உபயோகப்படும் மொழியாக ஆங்கிலம் ஆகப்போகிறது என்பது உண்மைதான். ஆனால் உலகைப் பற்றிய சமநோக்கோடு கூடிய சித்திரம் கிடைக்கவேண்டுமென்றால், நாம் ஆங்கிலம் என்னும் மூக்குக் கண்ணாடியின்மூலம் மட்டுமே பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும்.’

1947 வாக்கில் 88 சதவிகித இந்தியர்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டி பிரிட்டனின் நோக்கங்களை வெளிப்படுத்துகிறார் மாடிசன். பிரிட்டிஷ்  அதிகாரிகள் தங்களை ஆளும் வர்க்கமாகவும் ஆளும் சாதியினராகவும் வலுப்படுத்திக்கொண்டனர். இந்திய உயர் சாதியினரைப் போலவே இவர்கள் தாழ்ந்த சாதியினருடன் நெருங்கி பழகாமலும் அவர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ளாமலும் தனித்து நின்றனர். அவர்களுடைய குழந்தைகள் பூர்விக இந்தியக் குழந்தைகளுடன் ஒன்று கலக்கவில்லை. (ஆனால் முகலாயர்கள் இப்படி விலகி நிற்காமல் இந்தியாவுடன் ஒன்று கலந்தனர் என்பதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்). மொத்தத்தில், பிரிட்டனின் ஆட்சி மேல்மட்ட அளவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தன என்றபோதும் பெருமளவிலான மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நல்ல முன்னேற்றங்கள் எதையும் ஏற்படுத்தவில்லை என்கிறார் ஆங்கஸ் மாடிசன்.

மேற்கொண்டு வாசிக்க :

  1. The history of India is a history of colonialism, Charles Allen, The Telegraph
  2. Class Structure and Economic Growth, Angus Madisson
  3. Becoming Indian, Pavan K Varma, Penugin/Viking
  4. இந்தியன் ஆவது எப்படி? பவன் கே. வர்மா, கிழக்கு பதிப்பகம்

தென்னிந்திய நிலவியல்

சங்க காலம் / தேடல் – 18

DSC00769இந்தியாவின் பழம்பெயர் “நாவலம்“ என்பதாகும். சிலப்பதிகாரம் இப்பகுதியினை ‘நாவலந் தண்பொழில்’ என்று குறிப்பிட்டுள்ளது. இது வடபகுதி, தென்பகுதி எனப் பிரிக்கப்பட்டிருந்தது. சங்க காலத்தின் இறுதியில் ஒட்டுமொத்த இந்தியாவின் தென்பகுதியில் இருந்த முதன்மையான இடங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். ஆபிரர், புளிந்தர், கலிங்கம், சாதவாஹனப் பேரரசு, பூழிநாடு, குடநாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, புனல்நாடு, பன்றிநாடு, பாண்டிநாடு, வேணாடு, அஜந்தா, சோபாரா, கன்ஹேரி, நாஸிக், பைத்தான், தந்தபுரம், ஹதிகும்ப, கார்லெ, பாஜா, தெரா, பிஷ்டபுரம், வேங்கி, அமராவதி, மஸாலியா, நாகார்ச்சுனகொண்டா, பட்டிப்ரோலு, ஏற்றகுடி, வனவாசி, சித்தபுரம், சிரவணபெல்கொளா, வேங்கடம், காஞ்சி, எய்தபட்டினம் (சொபத்மா), தலைக்காடு, தொண்டி, கரூர், முசிறி, உறையூர், காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், வஞ்சி, தலையாலங்கானம், நெல்கின்றா, வைக்கரை, மதுரை, சாலியூர், கொற்கை, கோட்டியற, குமரி.

ஒட்டுமொத்த இந்தியாவின் கீழ்த் தென்பகுதி முடியுடை வேந்தர் மூவரால் ஆளப்பட்டது. இம் மூன்று வேந்தர் பரம்பரையினரைச் சங்க இலக்கியங்கள், “தமிழ்கெழு மூவர்“, தண்டமிழ்க் கிவர் … மூவர்“ என்றெல்லாம் அழைத்துள்ளன. அவர்கள் ஆண்ட அந்த மொத்தப் பகுதியைத் “தமிழகம்“ என்றனர். பிட்டங்கொற்றனைப் புகழ்ந்து பாடிய கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார், “வையக வரைப்பில் தமிழகம் கேட்ப“ என்று தமிழகம் என்ற சொல்லி்னைப் பயன்படுத்தியுள்ளார். ஆக, “தமிழகம்“ என்ற சொல், சங்க காலத்திலேயே வழக்கிலிருந்துள்ளது. தமிழ்மொழியைப் பேசும் மக்களின் எல்லையாக வடக்கில் வேங்கடமலையும் தெற்கில் குமரிமுனையும் இருந்தன. சோழ மன்னரால் ஆளப்பட்ட சோழநாடு காவிரியாற்றினால் நீர்வளம் பெற்றுச் சிறந்திருந்தது. அதன் தென் பகுதி வளம் குன்றி இருந்தது. பாண்டியரால் ஆளப்பட்ட பாண்டிநாட்டின் வடபகுதியில் எயினர்களின் இருப்பிடங்களும் காடும் இடையிடையே தண்பூங்காக்களும் தடந்தாழ் வயல்களும் இருந்தன. வையை நதியால் வளம்பெற்றது. சேர மன்னரால் ஆளப்பட்ட சேரநாடு பேரியாற்றின் வழியாக நீர்வளம் பெற்றுச் சிறந்திருந்தது. இதற்குக் “குடநாடு“ என்றும் பெயருண்டு. சேர, சோழ, பாண்டிய நாடுகளும் கொங்குநாட்டின் பகுதிகளும் பண்டைத் தமிழகத்திற்குரிய நிலப்பரப்பாக இருந்தன.

வச்சிரம், அவந்தி, கலிங்கம், மகதம், மத்திம நாடு, ஆரிய நாடு, யவனர் வளநாடு, குடகு, கொங்கணம், கருநடம், பங்களம், கோசர் நாடு போன்றவைத் தமிழகத்திற்கு வெளியிலுள்ள நாடுகளாக இருந்தன.

பழைய நாடுகள்

செந்தமிழ்நாட்டில் தென்பாண்டி, குடநாடு, குட்டநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு, சீதநாடு, மலைநாடு, புனல்நாடு எனப் பன்னிரு உட்பிரிவுகள் இருந்ததாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். இவை தவிர குறும்பொறை நாடு, பொறைநாடு, வானமலை நாடு, கொண்கானம், கடுங்கோநாடு, பாயல்நாடு, வள்ளுவநாடு, வைநாடு போன்றவற்றையும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பழைய ஊர்கள்

பழந்தமிழர்கள் வாழ்ந்த ஊர்களுள், 240 ஊர்களின் பெயர்களை மட்டும் இலக்கியங்களிலிருந்து அறியமுடிகின்றது. அவற்றைக் கொண்டு பழந்தமிழ்நாட்டின் வரைபடத்தினை உருவாக்கலாம். அவ் ஊர்களின் பெயர்கள் சில பின்வருமாறு – அட்டவாயில், அரிமணவாயில், அலைவாய், அழுந்தை, அழும்பில், அள்ளூர், ஆமூர், ஆலங்கானம், ஆலமுற்றம், ஆன்பொருநை, இடையாறு, உறத்தூர், உறந்தை, உறந்தைக்குன்றம், ஊனூர், எருமை நன்னாடு, ஏழில், கடிகை, கண்டீரம், கருவூர், கவிரம், கழாஅர், கழுமலம், கள்ளில், கள்ளூர், காமூர், குடந்தை, குடவாயில், குடநாடு, குடபுலம், குடவரை, குதிரை மலை, குறுக்கைப் பறந்தலை, குறுக்கை, குறும்பொறை, குழுமூர், குன்றம், கூடல், கூடற் பறந்தலை, கொடுங்கால், கொல்லி, கோடி, கோடை, கோவல், சாய்க்கானம், சிறுமலை, செல்லி, செல்லூர், தகடூர், தலையாறு, தேமுதுகுன்றம், நியமம், நீடூர், நெடுவரை, பட்டினம், பரங்குன்றம், பருவூர்ப் பறந்தலை, பவத்திரி, பறம்பு, பாக்கம், பாரம், பாணாடு, பாழி, பாழிப் பறந்தலை, பாணன்நாடு, புகாஅர், புறந்தை, புன்னாடு, பெருந்துறை, பொதியில், போஓர், பொதினி, மருங்கூர்ப்பட்டினம், மாங்காடு, மாந்தை, மிளைநாடு, முசிறி, முள்ளூர், மோகூர், வடவரை, வல்லம், வாகைப் பறந்தலை, வாகை, வீரை, வியலூர்,விளங்கில், வெண்ணி, வெண்ணிப் பறந்தலை, வெண்ணி வாயில், வெண்ணிமணிவாயில், வெளியம், வேங்கடம், வேம்மி, வேளூர்.

பெரும்பாலும் நிலம் அடிப்படையில் சில சொற்குறியீடுகளோடு ஊர்ப்பெயர்கள் அமைக்கப்பெற்றுள்ளன. குறிஞ்சி நிலப்பகுதியாக இருந்தால் “சிறுகுடி“, “குறிஞ்சி“, “குன்றம்“ என்றோ, முல்லை நிலப்பகுதியாக இருந்தால் “பாடி“, “சேரி“, “பள்ளி“ என்றோ, மருத நிலப்பகுதியாக இருந்தால் “ஊர்“ என்றோ, நெய்தல் நிலப்பகுதியாக இருந்தால் “பட்டினம்“ என்றோ, பாலை நிலப்பகுதியாக இருந்தால் “பறந்தலை“ என்றோ பின்னொட்டுடன் ஊர்ப்பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இல்லாமலும் பல ஊர்களின் பெயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறப்பு மிக்க சில நகரங்களைப் பற்றிப் பார்ப்போம்.

வஞ்சி

சேரர் ஆண்ட பகுதி “வஞ்சிமாநகர்“ எனப்பட்டது. “கருவூர்“ என்றும் சுட்டப்பெற்றது. சேரர்கள் ஆண்ட பகுதிகளில் சிவன்கோவில், ஆடக மாடம், குணவாயில், வேண்மாடம் முதலிய பகுதிகள் ஒன்றோ சிலவோ அமைக்கப்பட்டன. “முசிறி“, “தொண்டி“ என்னும் துறைமுகங்கள் இந்நாட்டுக்குரியன. சேர மன்னர் செங்குட்டுவன், மைசூரிலும் அதைச் சுற்றி உள்ள கங்க நாட்டுக்காரர்களையும் கிழக்கில் தமிழ் வழங்கிய எல்லையில் இருந்த கட்டி நாட்டுக்காரர்களையும் கங்கரின் எருமை நாட்டுக்கு வடக்கிலிருந்த கருநடரையும் கொண்கானத்தின் வடக்கெல்லையான வானியாற்றின் வடபுறம் இருந்த பங்கள நாட்டினரையும் துளு நாட்டுக்கு வடக்கே இருந்த கொங்கணத்தவரையும் தமிழகத்தின் வடக்கில் கோதாவரி, கிருஷ்ணா ஆற்றுப் பகுதிகளில் பரவியிருந்த கலிங்கரையும் வென்றுள்ளார். ஆக, சேரரின் நிலப்பரப்பு இவ்வகையில் விரிவுபெற்றது.

புகார்

சோழ மன்னருக்குரிய காவிரியாறு சங்கமத்துறைக்குரிய “புகார்“ என்ற பெயர் அவரது நாட்டிற்கும் உரியதாகியது. காகந்தி, கோலப்பட்டணம், சம்பாபதி, பூம்புகார், காவேரிப் பட்டணம், காவிரிப்பூம்பட்டினம் போன்ற பெயர்களாலும் இந்நகர் குறிக்கப்பெறுகின்றது. இது நீர், நில, தொழில், வாணிப, கலை ஆகிய பலவளங்களை உடைய துறைமுகநகரம். இது மருவூர்ப் பாக்கம், பட்டினப்பாக்கம் என இரண்டு பிரிவுகளை உடையது. இவ் இரண்டிலும் நாளங்காடிகள் இருந்தன. நாளங்காடியில் காவல் பூதப்பீடிகை இருந்தது. ஐந்து மன்றங்களும் இரண்டு ஏரிகளும் பதினெட்டு கோவில்களும் புகாரில் இருந்தன.

மருவூர்ப்பாக்கத்தில் பல்வேறு தொழிலாளர்களும் வேற்று நாட்டவரும் குடியிருந்தனர். பண்டகசாலைகளும் பெரும்பாணிருக்கையும் கூலமறுகும் நெய்தலங்கானலும் இருந்தன. கூல மறுகில் அல்லங்காடி செயல்பட்டது.

பட்டினப்பாக்கத்தில் மன்னர், அரசு ஊழியர், மருத்துவர், வானநூல் வல்லோர், பன்முறைக் கருவியர், படைப்பிரிவினர், கணிகையர், வேதியர், வணிகர், வேளாளர், சங்குவளை செய்வோர், மணிகளைத் துளையிடுவோர் முதலியோர் முறைப்படி தனித்தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். காமன் கோவிலும் இரண்டு ஏரிகளும் இருந்தன.

பட்டினப்பாக்கத்தில் உலகஇடைகழியும் அதையடுத்து நகரின் எல்லையில் இலவந்திகைச் சோலையும் அங்கிருந்து காவிரியின் கடைமுகத்திற்குச் செல்லும் பாதையும் இருந்தன. மேற்கு நோக்கிய உறையூர்ச்சாலை காவிரியின் கடைமுகத்தில் தொடங்கி நீண்டது. வச்சிரக்கோவில், தருக்கோவில், திருமால் கோவில், சமணர் மற்றம் பௌத்தர் வழிபாட்டிடங்களும் பட்டினப்பாக்கத்தில் இருந்தன.

மதுரை

பாண்டிய மன்னர் ஆண்ட “மதுரை“ பழம்பெரும் நகரமாகும். கடல்கோளுக்குப் பின்னர் புலவர் பலர் கூடிய இடம் என்ற பொருளில் “கூடல்“ என்ற பெயரினைப் பெற்றது. கோட்டை வாயில்களின் மேல் இருந்த கோபுரங்களால் இது “மாடக்கூடல்“ எனப்பட்டது. இப்பகுதியில் மருத மரங்கள் மிகுதியாக இருந்தமையால் “மருதை“ என்று அழைக்கப்பட்டு, பின்னர் அச்சொலல் மருவி மதுரையானது. இதுகுறித்து அ. முத்துவேலன், “கொள்ளிடமும் காவிரியும் குலவிடும் திருவரங்கம்போல் வடபுலத்தில் வையை ஆறு வளங்கொழித்திடச் செய்ய தெற்கில் ஓர் தேனாறாய்த் திகழ்ந்த கிருதமால் நதி திரட்டித் தந்த மருதநிலத் திரவியத்தால், மருதை என்று துலங்கியது மருவி, மதிரையாக மாறி, மதுரை என்று திரிநது வழங்கிவருகிறது“55 என்று கருத்துத் தெரிவித்துள்ளார். கொங்கர்கள் மதுரையை முற்றுகையிட்டபோது பசும்பூண் பாண்டியன் கொங்கரை எதிர்த்து வென்றார்.

மதுரை, “கொற்கை“ என்ற பெரிய துறைமுகத்தினை உடைய நகரம். வையை ஆறு தற்போது ஓடவில்லையெனினும் சங்க காலம் முதல் இன்றுவரை தன் ஓடுபாதையினை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால், அதன் அகலமும் ஆழமும் மாறிவிட்டன. நில, நீர், பூ வளமுள்ள மதுரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாணிபத்திற்குச் சிறப்புபெற்றுத் திகழ்ந்தது. சிவன், திருமால், முருகன், கொற்றவை, பலதேவன் முதலிய பெருந்தெய்வங்களுக்கும் மதுராபதி, இயக்கி போன்ற சிறுதெய்வங்களுக்கும் இங்குக் கோயில்கள் இருந்தன. சமண, பௌத்த பள்ளிகளும் இருந்தன. பல்வேறு கொடிகள் ஏற்றப்பட்ட இந்நகரினைச் சுற்றிக் கோபுரம் கொண்ட நான்கு வாயில்களுடன் பலபொறிகளை உடைய கோட்டையும் அகழியும் காவற்காடும் கிழக்குப் பகுதியில் புறஞ்சிறை மூதூரும் இருந்தன. அந்த மூதூர்தான் இன்றைய மதுரை. நகருக்குள் காவற்கணியர் வீதியும் ஆடற்கத்தியர்க்கு இரண்டு பெரிய வீதிகளும் அங்காடி வீதியும் பொற்கடை வீதியும் இரத்தினக்கடை வீதியும் அறுவைக் கடை வீதியும் கூலக்கடை வீதியும் ஆய்ச்சியர் குடியிருப்பும் குறுந்தெருக்களும் சந்திகளும் முடுக்குகளும் இருந்தன.

kJமதுரை நகரில் சங்க காலத்திலேயே சமண முனிவர்கள் வாழ்ந்து வந்தமை பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிட்டுள்ளது. குன்றைக் குடைந்து செய்விக்கப்பெற்ற சமணப் பள்ளிகளில் (சமணர்களின் வாழிடம்) சமண முனிவர்கள் வாழ்ந்தனர். இம் முனிவர்களை, இல்லறத்தில் உள்ள பொதுமக்கள் பூவும் புகையும் கொண்டுசென்று பணிந்து வணங்கினர் என்ற குறிப்பினை மதுரைக்காஞ்சியில் காணமுடிகின்றது. இலக்கியத்தில் உள்ள இக்குறிப்பினை மெய்ப்பிக்கும் வகையில், மதுரை அணைப்பட்டி அருகிலுள்ள குன்றக்குகைத்தளப்பள்ளியில் தமிழி எழுத்தில் செதுக்கப்பெற்றுள்ள கல்வெட்டு அமைந்துள்ளது. இக் கல்வெட்டின் காலம் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டு. இக்கல்வெட்டில், “மதிரை அமணன் அதினன்“ என்பவரது பெயர் இடம்பெற்றுள்ளது. பூலாங்குறிச்சி, சித்தன்னவாசல், சமணர் மலை, சித்தர்கள் நத்தம் போன்ற இடங்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் மதுரையில் சமணர்கள் வாழ்ந்த செய்தியைத் தெரிவித்துள்ளன. மதுரையில் சமணர்களின் இருத்தல் (குடியிருத்தல்), எண்ணற்ற இடையூறுகள் பலவற்றைக் கடந்தும் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை (பொ.யு. 2014) நீட்டித்துவருகின்றது.

காஞ்சி

இந்தியாவில் உள்ள ஏழு புண்ணிய நகரங்களுள் ஒன்று காஞ்சி மாநகரம். காஞ்சிக்குப் பொ.யு. 640ஆம் ஆண்டு வந்த சீனப் பயணி யுவான்சுவாங், பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டில் புத்தர் காஞ்சிக்கு வநது பௌத்த சமயக்கொள்கைகளைப் பரப்பியதாகவும் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகரால் கட்டப்பட்ட ஸ்தூபிகள் பழுதுபட்டுக்கிடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நகரம் சார்ந்த பகுதியினைத் “தொண்டைமண்டலம்“ என்று சங்க இலக்கியங்கள் தெரிவித்துள்ளன. பெரும்பாணாற்றுப்படையில் இந்நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்நகரம் அக்காலத்தில் நான்கு பகுதிகளாக விளங்கியது. சிவக்காஞ்சி, விஷ்ணுக்காஞ்சி, ஜீனக்காஞ்சி, பௌத்தக்காஞ்சி. “சிவக்காஞ்சி“ என்பது, இன்றுள்ள பெரியகாஞ்சிபுரம். “விஷ்ணுக்காஞ்சி“ என்பது, இன்றுள்ள சின்னக்காஞ்சிபுறம். “ஜீனக்காஞ்சி“ என்பது, திருப்பருத்திக்குன்றம். “பௌத்தக்காஞ்சி“ என்பது, இன்றுள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள். அக்காலத்தில் காஞ்சியில் பௌத்தர்கள் மிகுதியாக வாழ்ந்திருந்தனர்.

தொல்லியல் துறையினர் காஞ்சியில் அகழாய்வுசெய்தபோது, பௌத்த விகாரை ஒன்றைக் கண்டறிந்தனர். இவ் விகாரையில் சுட்ட செங்கற்களும் வட்டவடிவிலான சிறிய ஸ்தூபியின் அடிப்பகுதியும் காணப்பட்டன. பௌத்த ஸ்தூபி அமைப்புடைய கட்டடம் நான்கு வரிசையிலான செங்கற்களைக் கொண்டிருந்தது. கீழ் இரண்டு வரிசை வட்ட வடிவிலும் மேல் வரிசைகள் நீண்ட செவ்வக அமைப்பிலும் இருந்தன. இந்த ஸ்தூபியின் காலம் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கணிக்கப்பெற்றுள்ளது. இதன் கீழ் உள்ள மண் அடுக்கில் கண்டெடுக்கப்பெற்ற மட்கல ஓட்டில் “புதலதிச“ என்ற சொல் தமிழி எழுத்துருவில் பொறிக்கப்பெற்றிருந்தது.56

பொ.யு. இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவனின் தம்பி இளங்கள்ளி காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு தொண்டை நாட்டை ஆண்டார். அப்போது அவர் புத்தருக்குக்கோயில் கட்டியதாக மணிமேகலையின் 28ஆவது காதையில் குறிப்பு உள்ளது.

பிற நகரங்கள்

முடியுடை மூவேந்தருக்கு உட்பட்ட இம் மூன்று பெருநகரங்களைத் தவிர்த்து, சிங்கபுரம், உறையூர், நாகநீள்நகர், குமரிக்கோடு, குமரியம் பெருந்துறை, உஞ்சை (அவந்தி), வடவேங்கடம், அரங்கம், மாங்காடு, கொடும்பை, திருமால்குன்றம், அயோத்தி, தொண்டி, வயலூர், கபிலபுரம். நெடுவேள் குன்றம், தலைச்செங்கானம், தங்கால், வாரணம், செந்தில், வெண்குன்று, ஏரகம், செங்களம், அழும்பில், நீலகிரி, பறையூர், குயிலாலுவம், வியலூர், நேரிவாயில், இடும்பில், அகப்பா, காப்பியத்தொல்குடி 32 நகரங்களைப் பற்றிய குறிப்புகளைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிகின்றது. சிறப்பு மிக்க சில ஊர்களைப் பற்றிப் பார்ப்போம்.

உறையூர்

சோழர்கள் வாழ்ந்த ஊர் உறையூர். “உறந்தை“ என்ற பழம்பெயர்கொண்ட இவ் ஊரில் புலவர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்களின் பெயரின் முன்னொட்டுச் சொல்லாக “உறையூர்“ குறிக்கப்பெற்றுள்ளது. சான்றாக, உறையூர் இளம்பொன் வாணிகனார், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், உறையூர்க் கதுவாய் சாத்தனார், உறையூர்ச் சல்லியன் குமரன், உறையூர்ச் சிறுகந்தன், உறையூர்ப் பல்காயனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், உறையூர் முதுகூத்தனார், உறையூர் முதுகொற்றன் முதலிய புலவர்களின் பெயர்களைச் சுட்டிக்காட்டலாம். உறையூர்க்குக் “கோழி“ என்ற பெயரும் இருந்துள்ளது. “ஊர் என்றால் அது உறையூர்தான்“ என்ற பொருளில் நக்கீரர் இறையனார்க் களவியலுரையில் குறி்ப்பிட்டுள்ளார். உறையூரிலிருந்த “அறங்கூறும் அவையம்“ (நீதிமன்றம்) அக்காலத்தில் புகழ்பெற்றது. இந்த அவையின் சிறப்பினை நற்றிணையின் 400, அகநானூற்றின் 93, புறநானூற்றின் 39, 58 ஆகிய பாடல்கள் புகழ்ந்துள்ளன. இங்கு நன்செய் நிலங்கள் மிகுதியாக இருந்துள்ளன. மலையும் காடும் ஆறும் இந்த ஊரில் இருந்துள்ளன. ஆதலால், இவ் ஊர் வளம்மிக்கதாகவும் இயற்கையான அரண்களை உடையதாகவும் இருந்துள்ளது.

கழுமலம்

“கழுமலம்“ என்ற பெயர் பிற்காலத்தில் “காழி“ என்றாகி, இப்போது சீர்காழி என்றுள்ளது. கரிகாற்சோழனை வேந்தராகத் தேர்ந்தெடுத்த யானை கழுமலத்திலிருந்து அனுப்பப்பட்டதாகத் தெரியவருகிறது. கரிகாற்சோழன் இவ் ஊரிலிருந்து ஆண்டதாகக் கூறப்படுகின்றது. பின்னர் இவ் ஊர் சேர மன்னர் குட்டுவனுக்குரியதாக மாறியது. அவரிடமிருந்து இவ் ஊரினைக் கைப்பற்ற சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி முயற்சி செய்தார். இதனை அறிந்த குட்டுவன் தனக்குக் கீழ் உள்ள சிற்றரசர்களுக்கு ஓர் அவசர ஓலையினை அனுப்பித் தனக்குப் படைபலம் தருமாறு ஆணையிட்டார். நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை ஆகிய சிற்றரசர்கள் தமது படையுடன் குட்டுவனுக்கு உதவ வந்தனர். இந்தக் கூட்டுப்படைக்குக் கணையன் என்பவர் ஒட்டுமொத்த படைத்தளபதியாக இருந்தார். கணையன் நன்னனின் நண்பர்.அழுந்தூரை ஆண்ட சோழன் கண்ணீப் பெரும்பூண் சென்னி என்பவர் இளஞ்சேட் சென்னிக்கு உதவியாகத் தனக்குக் கீழிருந்து, “போர்“ எனும் ஊரினை ஆளும் பழையன் என்பவரைத் தலைமையாகக் கொண்டு பெரும்படையினை அனுப்பினார். எதிரிகளின் பாசறையைத் தாக்கி அழித்த பழையன், தானும் மாண்டார். இதனை அறிந்த கண்ணீப் பெரும்பூட் சென்னி தானே முன்னின்று படை நடத்திச் சென்று, கணையனைக் கைதுசெய்தார். கழுமலத்தினைக் கைப்பற்றினார்.இவ் வெற்றியினைத் தன் தலைநகரான அழுந்தூரில் கண்ணிப் பெரும்பூட் சென்னி கொண்டாடியதாகக் குறிப்புள்ளது. இவரைச் “செங்கணான்“ என்றும் குறித்துள்ளனர். இருப்பினும் “சென்னி“ என்பது, சோழர்களின் பொதுப் பெயர்களுள் ஒன்று என்பதால் இங்குக் குறிப்பிடப்படும் “சென்னி“, கண்ணிப் பெரும்பூட் சென்னியா அல்லது நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியா அல்லது உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியா என்பது விவாதத்திற்குரியது.

கருவூர்

அக்காலத்தில் மூன்று கருவூர்கள் இருந்துள்ளன. அதில் சேரர்கள் ஆண்ட கருவூர், “சேரபோத்ரர்களின் அரண்மையுள்ள கரோரா“ என்று தாலமியால் சுட்டப்பட்டு்ள்ளது. இது கொங்குநாட்டில் ஆன்பொருநை நதிக்கரையில், சேரர்களின் இரும்பொறை மரபினரால் ஆளப்பட்ட கருவூர் ஆகும். இதற்கு “வஞ்சி“ என்ற வேறொருபெயரும் உண்டு. இது இன்றைய “கரூர்“ ஆகும். மற்ற இரண்டு கருவூர்களுள் ஒன்று மேலைக்கடற்கரையிலும் மற்றொன்று தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ளது. தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ள கருவூரைச் சேரர்களின் குட்டுவன் மரபினரால் ஆளப்பட்டுவந்துள்ளது.

இன்றைய கரூர் அன்றைய காலத்தில் செல்வச் செழிப்புள்ள நகரமாக இருந்துள்ளது. இது அயல்நாட்டு வாணிபத்தோடு மிகுந்த தொடர்புடையது. இங்கு நடத்தப்பட்ட அகழாய்வுகளில் யவனர்களின் காசுகள் பல கிடைத்துள்ளன.

குடவாயில்

சோழன் கண்ணிப் பெரும்பூட் சென்னிக்குரிய ஊர் “குடவாயில்“. இதனைக் “குடந்தை“ என்றும் “குடந்தைவாயில்“ என்றும் குறிப்பிடுகின்றனர். இன்று “குடவாசல்“ என்று அழைக்கப்படுகின்றது. தஞ்சை நன்னிலம் வட்டத்தில் திருவாரூர் – கும்பகோணம் சாலையில் உள்ளது. அக்காலத்தில் இங்குப் பழைய நெல்லை மிகுதியாகச் சேமித்துவைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் சோழர்களின் கருவூலமாகவும் (கஜானா) இது இருந்துள்ளது. அதனால், இவ் ஊருக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அரண்களும் மதில்களும் இவ் ஊரினைச் சுற்றி இருந்துள்ளன. அவற்றைச் சுற்றி அகழிகளும் இருந்துள்ளன. இது மக்கள் தொகை பெருகிய ஊராகவும் இருந்துள்ளது. சோழன் செங்கணான் கழுமலப்போரில் தன்னால் கைதுசெய்யப்பெற்ற சேரன் கணைக்கால் இரும்பொறையை இவ் ஊரில் சிறைப்படுத்தினான். அந்தப் பகுதி இப்போது “கோட்டவம்“ என்று அழைக்கப்படுகின்றது.

தொண்டி

இரண்டு தொண்டிகள் உள்ளன. ஒன்று சேர நாட்டின் மேற்குப்பகுதியிலும் மற்றொன்று பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரையின் பகுதியிலும் உள்ளன. பாண்டிய நாட்டிலுள்ள தொண்டியில் கீழ்க்கடல் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு அகில், துகில், ஆரம், வாசம், கற்பூரம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இப்போது இராமநாதபுரத்திற்கு அருகில் ஒரு சிற்றூராகத் தொண்டி முடங்கிப்போனது. சேர நாட்டிலுள்ள தொண்டி இன்று ஆழப்புழை ஆற்றின் கரையில் இருந்துள்ளது. ஊருக்குச் செல்லும் வழி இருக்கிறது. ஆனால், ஊர்தான் இல்லை. தொண்டிக்குச் செல்லும் வழியில் “தொண்டிப்போயில்“ என்ற சிற்றூர் மட்டுமே உள்ளது. தொண்டி இல்லை.

பரங்குன்று

கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாகக் கருதப்படும் திருப்பரங்குன்றம் பழங்காலத்தில் பரங்குன்று என்று அழைக்கப்பட்டுள்ளது. இது மதுரையின் தென்மேற்கில் உள்ளது. இக்குன்றின் மேலுள்ள குகைத்தளங்களில் சமண முனிவர்களின் கற்படுக்கைகளும் பாறைகளில் தமிழி எழுத்தில் பொறிக்கப்பெற்றுள்ள வாசகங்களும் உள்ளன. சங்ககாலப் புலவர் நல்லந்துவனாரின் பெயரும் அவ் வாகசத்தின் ஓரிடத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளது. இராவணன் கைலாய மலையைப் பெயர்க்கும் காட்சி சிற்பவடிவில் உள்ளது. இது பிற்காலத்தது.

அறுபடை வீடுகள் பற்றிப்பேசும் திருமுருகாற்றுப்படையும் முதல் படைவீடாகத் திருப்பரங்குன்றத்தையே சுட்டுகிறது. எண்பெருங்குன்றங்களை வரிசைப் படுத்தும் சமணப் பழம்பாடல் ஒன்றும் திருப்பரங்குன்றத்தையே முதல் சமணத் தலமாகக் குறிப்பிட்டுள்ளது. புலவர் மருதன் இளநாகனார் அகநானூற்றின் 59ஆவது பாடலில், திருப்பரங்குன்றத்தை “முருகன் குன்றம்“ என்று சுட்டியுள்ளார். அதே நூலில் 149ஆவது பாடலில் புலவர் எருக்காட்டூர் தாயங் கண்ணனார் திருப்பரங்குன்றத்தை “ஒடியா விழவின் நெடியோன் குன்றம்“ என்கிறார். மதுரைக்காஞ்சியின் 264ஆவது அடியில் “தனிமழை பொழியும் தண் பரங்குன்றம்“ என்று குறிப்பிடப்பெற்றுள்ளது.பரிபாடலில் உள்ள பாடல்களுள் ஏழு பாடல்கள் பரங்குன்றின் முருகனைப் பற்றியதாக அமைந்துள்ளன. அவ் ஏழ் பாடல்களுள் ஒன்றில் பரங்குன்றத்தில் எழுத்து நிலை மண்டபம் ஒன்று இருந்ததாகவும் அங்குப் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பெற்றுள்ளது. இவற்றைக்காண வந்த மதுரை மக்கள் அங்கிருந்த ரதி, மன்மதன், அகலிகை, கௌதமர், பூனை உருக்கெண்ட இந்திரன் ஆகியோரை அடையாளங்கண்டு வியந்ததாகவும் சுட்டப்பெற்றுள்ளது. பெரும்பான்மையான சங்க இலக்கியப் பாடகல்கள் பரங்குன்றை முருகனோடு இணைத்துப் பேசியுள்ளன.

திருப்பரங்குன்றத்தில் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே சமணத்துறவியர் வாழ்ந்ததற்காக சான்றுகள் உள்ளன.57 அவர்கள் வாழ்ந்த குகைகளின் முகப்புகளிலும் குகைக்குள் அவர்கள் படுத்துத் தூங்கிய கற்படுக்கைகளிலும் தமிழி எழுத்தில் அமைந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சான்றாக, “அந்துவன் கொடுபிதவன்“, எருகாடூர் இழகுடும்பிகன் போலாலயன் செய்தான் ஆய்சயன நெடுநாதன்“, “மாரயது கயம“ இம்மூன்றினையும் குறிப்பிடலாம்.

பாழி

எழிமல்லைப் பகுதியில் “பாழி“ என்ற ஒரு நகரம் இருந்துள்ளது. அதனைத் தலைநகராகக் கொண்டு நன்னன் ஆண்டுவந்தார். இந்நகர், வடநாட்டிலிருந்து மேற்குக் கடற்கரை வழியாகத் தமிழ்நாட்டின் கிழக்கி நோக்கி நுழைய ஒரு வாசலாக இருந்தமையால், பலரும் இதனைப் பயன்படுத்தித் தமிழகத்திற்குள் அத்துமீறி நுழைய முடிந்தது. அவர்களை எதிர்த்து நம்மவர்கள் தொடர்ந்து போர் புரியவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நகர் தொடர்ந்து போர்க்களமாகவே இருந்துவந்தது. ஆதலால், இந்நகரத்திற்குச் “செருப்பாழி“ (செரு-பகை,போர்) என்ற மற்றொரு பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

வேங்கடம்

“கடம்“ என்றால், பாலைநிலம் என்று பொருள். வேங்கடமலைக்கு வடக்கிலுள்ள பாலைநிலத்தைக் குறித்த இச்சொல் பின்னர் அங்கிருந்த மலைக்குரிய பெயராக மாறிவிட்டது. இதனை “வெங்கடம்“ என்றும் அழைத்துள்ளனர். தொல்காப்பித்திற்குச் சிறப்புப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் தமிழ்மொழி பேசும் மக்களின் வாழிட எல்லையை “வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து“ என்று இம்மலையைத் வடதிசை எல்லையாகக் காட்டியுள்ளார். இம்மலைப்பகுதியினை ஆதனுங்கன், புல்லி, கரும்பனூரன், தொண்டைமான், தொண்டைமான் வழியினர், திரையன் ஆகியோர் ஆண்டுள்ளனர். இம் மலைப்பகுதியிலிருந்துதான் பாண்டிய நாட்டிற்கு யானைகள் பல கொண்டுவரப்பட்டன.

நெடுவழிகள்

ஒவ்வொரு நகரினையும் இணைக்கும் வழிகளும் பல வகையில் இருந்துள்ளன. பண்டைத் பெருவழிகளும் சிறுவழிகளும் குறுக்கும் நெடுக்குமாக அமைக்கப்பெற்று ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைத்துள்ளன. புகாரிலிருந்து காவிரியின் வடகரை வழியாகத் திருவரங்கத்திற்குச் செல்லும்பாதை இப்போது மேலையூருக்கும் கீழையூருக்கம் இடையே மாற்றம் பெற்றுள்ளது. உறையூரிலிருந்து கொடும்பாளூர் வழியாக மதுரைக்கு வரும் பாதைகள் சேத்துப்பட்டி என்ற ஊரையடுத்து மூன்றாகப் பரிந்துள்ளன. இதனால் சூலம் போன்ற அமைப்பினை இன்றும் காணமுடிகின்றது. இவற்றுள் ஒன்று சிறுமலை வழியாகவும் மற்றொன்று நத்தம் கணவாய் வழியாகவும் பிரிதொன்று அழகர்மலை வழியாகவும் மதுரையை அடைந்துள்ளன. இன்று திருச்சியிலிருந்து கொடும்பாளுர் வழியாகத் துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி ஊர்களைக் கடந்தபின்னர் வேறுபாதையில் பிரிந்து மதுரையை அடைகின்றது. மதுரையிலிருந்து வையையின் தென்கரை வழியே நெடுவேள்குன்று வரை பாதை இருந்துள்ளது. சோழ நாட்டிலிருந்து பொதிய மலையைக் கடந்து சேரநாட்டினை அடையமுடிந்துள்ளது. சேரநாட்டிலிருந்து கூமாபட்டி கணவாய் வழியாகத் தங்கால் ஊரினை அடைந்தனர். வஞ்சியிலிருந்து நீலகிரி நெடும்புறம் வரை பாலக்காட்டுக் கணவாய் வழியாக ஒரு பெருவழி இருந்துள்ளது. tவடதிசையிலுள்ள கனகவிசயரை வென்று, கண்ணகிக்குச் சிலைசெய்ய இமயத்தில் கல்லெடுத்து, அதனைக் கங்கையில் நீராட்டி வஞ்சிக்கு வந்த சேரன் செங்குட்டுவன் வஞ்சி முதல் கங்கை வரை ஒரு பெருவழியினைப் பயன்படுத்தியிருப்பாரே! கங்கையிலிருந்து குமரி முனைக்குப் புனித நீராட வந்தவர்கள் ஒரு நெடுவழியினைப் பயன்படுத்தியிருப்பனரே! இவ் வழிகள் வட, தென் இந்தியாவை இணைத்த நிலப் பாதைகள்தானே!

தலைமை

சங்க காலம் / தேடல் – 17

king

வேட்டை நிகழ்வுக்காகத்தான் தனிமனிதர்கள் ஒருவரோடு ஒருவர் இணங்கிக் கூட்டுச்சேர வேண்டியிருந்தது. பின்னர் அக்கூட்டத்தினரை வழிநடத்திச்செல்ல நாலும் தெரிந்த ஒரு வீரர் அவர்களுக்குத் தேவைப்பட்டார். அவரின் ஆலோசனையின்படி அக்கூட்டத்தினர் செயல்பட்டனர். அவ் வீரரே அக்கூட்டத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார். பின்னாளில், கால்நடைகளை மேய்ப்பதற்கும் வயல்வெளிகளில் உற்பத்திசெய்யவும் தனிமனிதர்கள் பலரோடு இணைந்து, கூட்டாகப் பணியாற்ற வேண்டியிருந்தது. அதற்காகத் தனிமனிதர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களை வழிநடத்தவும் ஒரு தலைவர் தேவைப்பட்டார். இத் தலைமைநிலைதான் பின்னாளில் “அரசு“ என்ற ஒன்று உருவாவதற்கான அடிக்கல்.

நால்வகை தலைமைகள் 

பழந்தமிழர் வரலாற்றில் நான்கு வகையான தலைமைகள் படிப்படியாகத் தோன்றின. 1. சீறூர் மன்னர், 2. முதுகுடி மன்னர், 3. குறுநில மன்னர், 4. வேந்தர்.

“சீறூர் மன்னர்“ என்பவர், “தான் மக்களுள் ஒருவர்“ என்ற நிலையில் வாழ்ந்தார். “முதுகுடிமன்னர்“ என்பவர், “தன் மக்களுக்காகத் தான்“ என்ற மனநிலையில் மக்களை ஒருங்கிணைத்தார். “குறுநில மன்னர்“ என்பவர்கள் பெரும்பாலும் மக்கள் பிரதிநிரிகளாகவும் வள்ளல்களாகவும் இருந்துள்ளனர். “வேந்தர்“ என்பவர், “அரசுக்காகத்தான் மக்கள்“ என்ற நிலையில் தன்னுடைய அதிகாரத்தினைச் செலுத்தினார். இந் நான்கு தலைமைகளுக்கும் இடையேயுள்ள வேற்றுமைகள் அவர்களின் நிலப் பொருளாதாரம்,நிலவிரிவு, அரசாளுமை சார்ந்து ஏற்பட்டன.

சீறூர் மன்னர்

பழந்தமிழரின் சீறூர் மன்னர் பற்றிய சித்திரத்தினைச் சங்க இலக்கிய அடிகளிலிருந்து உருவாக்கிக்கொள்ளமுடிகிறது. குச்சுப்புல் நரைத்தது போன்ற நிறமுள்ள தாடியை உடையவர். ஊரைவிட்டு வேறெங்கும் செல்லாதவர். பகைவர் பசுக்கூட்டங்களை விரைவில் கவரும் திறமுடையவர். தனக்கென எந்தச் சொத்தும் இல்லாதவர். விருந்தினரை உபசரிக்கத் தன் வாளினை அடமானம் வைப்பவர். விதைநெல்லைக் கொண்டும் விருந்து உபசரித்துள்ளார். தன் வீட்டில் தனக்காக இருந்த பழைய உணவினையும் விருந்தினருக்கு அளித்துள்ளார். காலையில் கள்ளைக் குடித்துவிட்டுத் தூசி நிறைந்த முற்றத்தில் உறங்குபவர். தான் கவர்ந்துபெற்ற செல்வத்தினை ஊராருக்கு வாரிக்கொடுப்பவர். விலையுயர்ந்த ஆபரணங்கள் ஏதும் இல்லாதவர். போர்க்காலத்தில் தலைவனாகச் செயல்படுபவர். அவருக்கு யாரும் கடனுக்குக் கள் தருவதில்லை. யானைத் தந்தத்தை ஈடாக வைத்து அவர் கள் வாங்கிப் பருகினார். இவர்கள் காட்டு நாட்டார். பெரும்பாலும் இவர்களின் நிலப்பகுதி காடுசார்ந்தே அமைந்துள்ளது. நெல் விளையாத புன்செய் நிலமுடையவர். வரகும் தினையும் விளையுமிடத்தினர். கள்ளிச் செடி வளர்ந்த புன்செய் நிலத்தினர். பருத்திச் செடியினை வேலியாக உடைய ஊரினர். அரிய மிளையில் வாழ்பவர்.

இவரது சிறியவீட்டின் முற்றம் கூளம் நிறைந்தது. முஞ்ஞைக் கீரையும் முசுண்டைக் கொடியும் படர்ந்து நிழல் தருவதால் பந்தல் வேயவேண்டியதில்லை. இருப்பினும் வயிரம் பாய்ந்த மரக்கால்களை நாட்டிப் பந்தல் போடப்பெற்றது. இம் முற்றத்தில் வளர்ந்த அறுகம் புல்லையும் முஞ்ஞைக் கொடியையும் முயல், மான் போன்ற மெல்விலங்குகள் வந்து கறிக்கும். இங்குக் கூதாளிப் பூவும் காட்டு மல்லிகையும் வளர்ந்திருந்தன.

ஊருக்கு வெளியில் இருந்த மன்றத்தில் அமர்ந்து பொதுச்சிக்கல்களைத் தீர்த்தார். இந்த மன்றம் “பொதியில்“, “நாள் மகிழ் இருக்கை“, “நாள் இருக்கை“, “நாள் அவை“, “நாள் மகிழ்“, “நறவு மகிழ் இருக்கை“ என்றெல்லாம் அழைக்கப்பட்டது. ஓர் ஊருக்கு வருகைதரும் பாணர் முதலான கலைஞர்கள் இந்தப் பொது அவையில்தான் தன் இசைக்கலையினை முதலில் வெளிப்படுத்துவர். இம்மன்றத்தில்தான் ஆய்ச்சியர் குரவைக்கூத்தினை நிகழ்த்தினர். காதற்தலைவியைப் பெறுவதற்காகத் காதற்தலைவன் மடலூர்வதும் இத்தகைய மன்றத்தின் முன்தான். ஆக, மன்றம் ஊர்ப்பொது அவையாக இருந்துள்ளது. அதுவே சீறூர் மன்னரின் அவைக்களமாக இருந்துள்ளது. அவரது வாழிடம் ஊருக்குள் இருந்துள்ளது.

இத்தகவல்களைப் புறநானூற்றின் 123, 125, 180, 150, 151, 157, 168, 197, 257, 258, 265, 285, 287, 299, 302, 308, 313, 316 – 320, 322, 324 – 326, 328, 330, 331, 333 – 335, 373, 387, 388, அகநானூற்றின் 61, 76, 97, 245, குறுந்தொகையின் 298, கலித்தொகையின் குறிஞ்சிக்க்கலி 22, முல்லைக்கலி 2, பதிற்றுப்பத்தின் 13, 23, 25, 43, 30 ஆகிய செய்யுட்களின் வழியாகப் பெறமுடிகின்றது.

சீறூர் மன்னரைச் “சீறூர் மதவலி“, “சிறுகுடிக்கிழான்“, “சீறூர் வண்மையோன்“, “சீறூர் நெடுந்தகை“ என்றெல்லாம் சிறப்பித்துள்ளனர். இவர் மறவர் பெருமகனாக, கோவலர் வீரராக, புன்புலத்து வேலோனாகத் திகழ்ந்தார். இவர்களுள் சிலர் வள்ளல்களாகவும் இருந்துள்ளனர்.

இத்தகைய சீறூர் மன்னர்களை மட்டுமே பாடிய புலவர்களாக அடைநெடுங்கல்வியார், அள்ளுர் நன்முல்லையார், ஆலங்குடி வங்கனார், ஆலியார், உறையூர் இளம்பொன் வணிகனார், உறையூர் முதுகூத்தனார், எருமை வெளியனார், ஒக்கூர் மாசாத்தியார், ஒரூஉத்தனார், ஓரம்போகியார், கோடைபாடிய பெரும்பூதனார், தங்கால் பொற்கொல்லனார், நெடுங்கழுத்துப் பரணர், நொச்சி நியமங்கிழார், பாலை பாடிய பெருங்கடுங்கோ, பூங்கண் உத்திரையார், பொன்முடியார், மதுரை அறுவை வணிகன், இளவேட்டனார், மதுரை இளங்கண்ணி கௌசிகனார், மதுரைக் கணக்காயனார், மதுரைத் தமிழ்க் கூத்தனார், மதுரைப் பூதன் இளநாகனார், மதுரை வேளாசான், மோசி சாத்தனார், வடமோதங்கிழார், விரிச்சியூர் நன்னாகனார், விரியூர் நக்கனார், வீரை வெளியனார், வெள்ளைமாளர், வெறிபாடிய காமக்கண்ணியார், வேம்பற்றூர்க் குமரனார் ஆகியோர் உள்ளனர். இவர்கள் முதுகுடி மன்னரையோ, குறுநிலமன்னரையோ, வேந்தரையோ பற்றிப் பாடவில்லை.

இப்புலவர்கள் “வல்லாண்முல்லை“ என்னும் துறையமைந்த பாடல்களால் மட்டுமே சீறூர் மன்னர்களைப் புகழ்ந்துள்ளனர். இப்புலவர்கள் இச்சீறூர் மன்னர்களின் மனைவியரை “மூதின்முல்லை“ என்னும் துறையமைந்த பாடல்களால் மட்டுமே போற்றியுள்ளனர். இவ் இரண்டு துறைகளில் அமைந்த பாடல்களில் சீறூர் மன்னரின் பெயரோ அவர்களின் மனைவியர் பெயரோ குறிப்பிடப்படுவதில்லை.

சீறூர் மன்னருக்கும் மக்களுக்கும் இடையில் எந்தவித வேறுபாடும் இல்லை. இவர் மக்களுள் ஒருவர்தான். மக்கள் இவரைத் தன் தலைவராக நினைத்தனர். இவருக்காக வேறு சிறப்பு உரிமைகளையோ, சலுகைகளையோ ஏதும் அவர்கள் தந்துவிடவில்லை. ஒருவகையில் இவர்தான் அந்த ஊர் மக்களுக்குக் காவற்காரர், ஊர்த்தலைவர்.

முதுகுடி மன்னர்

பழந்தமிழரின் சீறூர் மன்னரைவிடச் சற்றுச் செல்வாக்கும் சொல்வாக்கும் நிலவிரிவும் உடையவர் முதுகுடி மன்னர். இவரை “ஓரெயில் மன்னர்“, “தண்பணைக்கிழவன்“ (கிழவன்-தலைவன்), “தொல்குடி மன்னன்“ என்றெல்லாம் சிறப்பித்துள்ளனர். இவர்களின் நிலப்பகுதி வயல்சார்ந்தது. இவர்களைப் பற்றிப் பாடிய பாடல்கள் அனைத்தும் “மகட்பாற்காஞ்சி“ என்னும் துறையைச் சார்ந்ததாகவே உள்ளன. புறநானூற்றின் 336 முதல் 355 வரையிலான பாடல்கள் முதுகுடி மன்னர்கள் பற்றியவை. பெரும்பாலும் இவர்கள் நிலவுடைமையாளர்கள். இவர்கள் வேந்தரை எதிர்த்துப் போரிட்டு அழிந்தவர்களே ஆவர்.

குறுநில மன்னர்

குறுநில மன்னர்களின் வாழ்விடம் பெரும்பான்மையாக மலைசாரந்த பகுதியாகவே உள்ளன. அதியமான், பாரி, காரி, ஆய், பேகன், கண்டீரக் கோப்பெருநள்ளி, இளவிச்சிக்கோ, ஓரி, கொண்கானங்கிழான், ஏறைக்கோன், குமணன், பிட்டங்கொற்றன் போன்ற குறுநில மன்னர்கள் குறிஞ்சி நிலத்தையே தன்னிடமாகக்கொண்டு ஆட்சிபுரிந்துள்ளனர். இவர்களின் நிலஎல்லைகள் பற்றிப் புறநானூற்றின் 91, 109, 123, 128, 143, 148, 150 – 152, 154, 157, 158, 168 ஆகிய பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. பாரி,காரி,ஓரி,நல்லி,பேகன்,ஆய்,அதியன் என்ற கடையெழு வள்ளல்கள் கொடைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றினர். இவர்கள் சேர,சோழ,பாண்டி ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்றபோதிலும் தத்தம் ஆட்சிப் பகுதிகளில் வலிமையும் புகழும் பெற்றுத் திகழ்ந்தனர்.

வேந்தர்

நால்வகை நிலத்தினையும் தனித்தனியே ஆண்ட நிலைமாறி நால்வகை நிலத்தையும் ஒருவரே ஆளும் சூழல் ஏற்பட்டபோது “வேந்தர்“ உருவானார். ஆற்றுப்படை இலக்கியங்கள் நானிலத்தை ஆண்ட வேந்தர்கள் பற்றி விரிவாகக் கூறியுள்ளன. பாண்டிய நெடுஞ்செழியனை நான்கு நிலத்தையும் தனித்தனியே ஆண்ட குறுநில மன்னர்கள் வணங்கியமையைப் புறநானூற்றின் 17ஆவது பாடல் தெரிவித்துள்ளது. சேரமான் கோக்கோதை மார்பன் மூன்று நிலத் தலைவர்களுக்கும் தலைவர் என்பதால் அவரை “நாடன்“ (குறிஞ்சி), “ஊரன்“ (மருதம்), “சேர்ப்பன்“ (நெய்தல்) என்று புறநானூற்றின் 49 பாடல் புகழ்ந்துள்ளது. வேந்தர்கள் பழங்குடியினரையும் சீறூர் மன்னர்களையும் முதுகுடி மன்னர்களையும் குறுநில மன்னர்களையும் வென்று தமது ஆட்சியை விரிவுபடுத்தினர். இதற்குப் பல சான்றுகளைக் கூறமுடியும். “கூடல்“ நகரை ஆண்ட அகுதையிடமிருந்து அப்பகுதியைப் பாண்டியர் கைப்பற்றினர். கோப்பெருநற்கிள்ளி ஆமூர்மல்லனை வென்று “ஆமூர்“ நகரையும் பழையனை வென்று “போர்வை“ நகரையும் கைப்பற்றினார். சேந்தன் என்பவனிடமிருந்து “உறந்தை“ என்ற நகரினை சோழன் வெளியன் தித்தன் கைப்பற்றினார்.

பெருஞ்செல்வமும் நிலவிரிவும் ஆளுமைத்திறனும் முரசு, காலாற்படை, யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, வெண்கொற்றக்குடை, ஆணைச்சக்கரம், மணிமுடி, ஆகியவற்றை உடையவரே “வேந்தர்“. பனம்பூ, வேப்பம்பூ, அத்திப்பூ ஆகிய அடையாளப் பூக்களைக் கொண்டிருந்தனர். புலிக்கொடி, வில்கொடி, மீன்கொடி என அடையாளக் கொடிகளையும் வைத்திருந்தனர்.

இவர்கள் குளிர்ந்த மருத நிலம் சூழ்ந்த தளராத இருக்கையர். விழாக்கள் சிறந்து விளங்கும் பழைமையான ஊரினர். ஊரைவிட்டு என்றும் நீங்காத பழங்குடிமக்களை உடையவர். நெற்கூடுகள் நிறைந்து நிற்கும் வளமான நாட்டினை உடையவர். செங்கற்களால் கட்டப்பட்ட, காவல் மிகுந்த, உயர்ந்த பெரிய அரண்மனை, சுண்ணாம்பால் செய்யப்பட்ட மாடம், நீண்ட பெரிய இல்லங்கள், ஆராய்ச்சி மணியுடைய முற்றம் என வேந்தர்கள் மிகுந்த பாதுகாப்போடு வளமான வாழ்வினை வாழ்ந்தனர்.

அரசரின் செல்வங்களைக் காப்பதற்காக மதில்களும் கிடங்குகளும் “ஞாயில்“ எனப்படும் மதில் உறுப்புகளும் அரண்களும் மிகுதியான அளவில் அமைக்கப்பட்டன. சங்க இலக்கியங்களில் மதில் 42 இடங்களிலும் ஞாயில் 10 இடங்களிலும் எயில் 53 இடங்களிலும் அரண் 32 இடங்களிலும் புரிசை 20 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன.

குறுநில மன்னர்களைப் போல இவர்கள் வாரி வழங்கவில்லை. இவ்வேந்தருக்குப் போர்த்தொழிலில் அடியாட்களாகச் சீறூர் மன்னர்களும் முதுகுடிமன்னர்களும் குறுநில மன்னர்களும் செயல்பட்டனர். இதனை இலக்கியங்கள் “வேந்துவிடுதொழில்“ என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளன. இந்த அடியாட்கள் சிறப்புற பணியாற்றினால் அவர்களுக்கு வேந்தர் ஊதியம் வழங்கியுள்ளார். அவ் ஊதியத்தினை இலக்கியங்கள் “வேந்து தரு விழுக்கூழ்“ என்று சிறப்பித்துள்ளன. தன்னால் வேந்தர் வெற்றி பெற்றால், அதனைத் தன்னுடை வெற்றியாக நினைத்து, மகிழ்ந்து கொண்டாடியுள்ளனர். இதனை இலக்கியங்கள் “வேந்நாட்டு அரவம்“ என்று குறிப்பிட்டுள்ளன.

பாண்டியருக்கு அதியன், தந்துமாறன், நம்பிநெடுஞ்செழியன், பண்ணி, பாண்டியன் கீரஞ்சாத்தன், நாலைகிழவன் நாகன் ஆகிய குறுநில மன்னர்கள் போர்க்கால அடியாட்களாக இருந்தனர். சோழர்க்கு மலையமான், ஈர்ந்தூர் கிழான் தோயன்மாறன், சிறுகுடிகிழான் பண்ணன், மத்தி, மலையமான் சோழிய ஏனாதி திருக்குட்டுவன் ஆகியோரும் சேரருக்கு நாஞ்சில் வள்ளுவன், பிட்டங்கொற்றன் ஆகியோரும் உதவினர். மலையமான் திருமுடிக்காரி என்ற வள்ளல் மூவேந்தரில் யார் படைஉதவி கோரினாலும் உடனே முன்வந்து உதவுபவராக இருந்துள்ளார். மூவேந்தரை “வம்பவேந்தர்“ என்று இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

இத்தகவல்களைப் புறநானூற்றின் 3, 31, 35, 38, 39, 45, 75, 84, 115, 119, 122, 127, 126, 139, 171, 172 – 174, 179, 197, 205, 239, 265, 284, 281, 285, 287, 307, 316, 319, 320, 324, 333, 339, 345, 350, 351, 360, 369, 378, 380, 388, 390, 396, கலித்தொகையின் முல்லைக்கலி 8, அகநானூற்றின் 13, 162, 226 ஆகிய பாடல்களின் வழியாகவும் பெரும்பாணாற்றுப்டையின் 405, 411, மலைபடுகடாமின் 479 ஆகிய அடிகளின் வழியாகவும் பெறமுடிகின்றது.

சேரர்

கேரளப் பகுதியில் சேரர்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களது தலைநகரம் வஞ்சி. முக்கிய துறை முகங்கள் தொண்டி மற்றும் முசிறி. பனம்பூ மாலையை அணிந்தனர். பொ.யு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப் பத்தும் கூறுகிறது.

அந்துவன் சேரேல் இரும்பொறை கருவூரிலிருந்தும் உதியன் சேரல் குழுமூரிலிருந்தும் ஆட்சி செலுத்தினர். இவ்வாறு இருவழிச் சேர அரசர் ஒரே காலத்தில் ஆண்டு வந்தமையை அறியமுடிகின்றது.

பெரும்சோற்று உதியன் சேரலாதன்,இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,சேரன் செங்குட்டுவன் ஆகியோர் சேர மரபின் சிறந்த அரசர்களாவர். சேரன் செங்குட்டுவன் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவரது இளவலான இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். செங்குட்டுவனின் படையெடுப்புகளுள் இமயமலையை நோக்கிய படையெடுப்பு குறிப்பிடத்தக்கதாகும். இமாலயப் படையெடுப்பின்போது பத்தினிசிலை வடிப்பதற்கான கல்லைக்கொண்டு வந்தார். பல்வேறு வட இந்திய ஆட்சியாளர்களை அவர் முறியடித்தார். தமிழ்நாட்டில் “கற்புக்கரசி கண்ணகி“ அல்லது “பத்தினி தெய்வம்“ வழிபாட்டைச் செங்குட்டுவன் அறிமுகப்படுத்தினார். அக்கோவில் குடமுழுக்கு விழாவில் இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு உள்ளிட்ட பல அரசர்கள் கலந்து கொண்டனர்.

சோழர்

திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் சோழ நாடு எனப்பட்டது.

இருவழிச் சோழ அரசினர், தொடக்கக் காலத்தில் உறந்தையிலும் அழுந்தூரிலும் இருந்து ஆண்டு வந்தனர். உறந்தையில் “கிள்ளி“ பரம்பரையினரும் அழுந்தூரில் “சென்னி“ பரம்பரையினரும் இருந்தனர்.

சோழர்களின் தலைநகரம் முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் கரிகாற்சோழன். இவரின் இளமைக்காலம்,போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது. சேரர்கள்,பாண்டியர்கள்,பதினொரு குறுநில மன்னர்கள் அடங்கிய பெரிய கூட்டிணைவுப் படைகளைக் கரிகாலன் வெண்ணிப் போரில் முறியடித்தார். இந்த நிகழ்ச்சி சங்கப் பாடல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் மேற்கொண்ட மற்றொரு சிறப்புமிக்க போர் வாகைப் பறந்தலைப் போராகும். அதில் ஒன்பது குறுநில மன்னர்களை மண்டியிடச் செய்தார். கரிகாலனின் போர் வெற்றிகள் தமிழ்நாடு முழுவதையும் சோழர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. அவரது ஆட்சிக் காலத்தில் வாணிகமும் செழித்தோங்கியது. காடுகளைத் திருத்தி விளை நிலமாக்கியவர் கரிகாலன். இதனால் நாட்டின் செல்வச் செழிப்பு பெருகியது. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி, தடையற்ற நீர்ப்பாசன வசதிக்கு வித்திட்டார். வேறு பல நீர்ப்பாசன ஏரிகளையும் அவர் வெட்டுவித்தார்.

பாண்டியர்

தென் தமிழகத்தில் சங்ககாலப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலைநகரம் மதுரை. அகுதை என்பவர் ஆட்சிபுரிந்த “கூடல்“ நகரைப் பாண்டியர் கைப்பற்றி ஆட்சிபுரியத் தொடங்கினர். நெடியோன்,பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, முடத்திருமாறன் போன்றோர் முற்காலத்திய பாண்டிய மன்னவர்களாவர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவன் கொல்லப்படவும் கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கவும் காரணமாக இருந்தவர். மற்றொருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். தற்கால தஞ்சை மாவட்டத்திலிருந்த தலையாலங்கானம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எதிரிகளை வீழ்த்தியதால் அவருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இவ்வெற்றியின் பயனாக,நெடுஞ்செழியன் தமிழகத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். நக்கீரன் மற்றும் மாங்குடி மருதனார் ஆகிய புலவர்களால் போற்றப்பட்டவர். செழிப்பான துறைமுகமான கொற்கை பற்றியும்பாண்டிய நாட்டின் சமூக, பொருளாதார நிலைமைகளைக் குறித்தும் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விவரித்துள்ளார். உக்கிரப் பெருவழுதி மற்றொரு சிறப்பு மிக்க பாண்டிய அரசராவார். களப்பிரர்களின் படையெடுப்பின் விளைவாகச் சங்க காலப் பாண்டியர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.

மரபு வழி அரசும் ஆட்சிமுறையும்

சங்க காலத்தில் மரபுவழி முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. அமைச்சர், அவைப்புலவர், அரசவையோர் போன்றவர்களின் ஆலோசனையை அரசர் கேட்டு நடந்தார். வானவரம்பன், வானவன், குட்டுவன், இரும்பொறை, வில்லவர் போன்ற விருதுப் பெயர்களை சேர மன்னர்கள் சூட்டிக் கொண்டனர். சென்னி, வளவன், கிள்ளி என்பன சோழர்களின் பட்டப் பெயர்களாகும். தென்னவர், மீனவர் என்பவை பாண்டிய மன்னர்களின் விருதுப் பெயர்களாகும். ஒவ்வொரு சங்ககால அரச குலமும் தங்களுக்கேயுரிய அரச சின்னங்களைப் பெற்றிருந்தனர். பாண்டியர்களின் சின்னம் மீன். சோழர்களுக்கு புலி,சேரர்களுக்கு வில்,அம்பு.

அக்கால மன்னரின் வாரிசுரிமை தாய்வழிச் சார்ந்ததா அல்லது தந்தை வழிச் சார்ந்ததா என்பதில் கருத்துவேறுபாடுகள் நீடிக்கின்றன. சேர நாட்டில் வாரிசுரிமை தாய்வழிச் சார்ந்தது எனவும் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் தந்தைவழிச் சார்ந்தது என்றும் கருதுகின்றனர். ஆனால், மூவரசுகளிலும் ஒரே தன்மையான வாரிசுரிமையே பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது. காரணம் சோழ, பாண்டியர்களின் வழக்கத்தை மட்டுமன்றித் தமிழகம் முழுவதுக்குமான வழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்ற தொல்காப்பியர் “தாயத்தின அடையாத் தாயம்“என்று குறிப்பிட்டுள்ளார். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனுக்குப் பதிற்றுப்பத்தில் அரிசில் கிழார் என்ற புலவர் “இந்நிலவுலகத்து வாழ்வார்பொருட்டுச் சால்பும் நடுவுநிலையும் உள்ளிட்ட பிற நற்பண்புகளும் நாடு காத்தற்கு வேண்டும் அரசியலறிவு வகை பலவும் முற்றும் கற்றுத் துறை போகிய சிறப்பும் நிறைந்த நன் மகனைப் பெற்றுள்ளார்“என்று பாராட்டியுள்ளார். இதன் வழியாக அக்காலச் சமூகம் “தந்தைவழிச் சமூகம்“ என்பது தெளிவாகின்றது. இம்முறை தமிழகம் முழுமைக்கும் பொதுவானதாக இருந்திருக்கவேண்டும். வாரிசுரிமை மூத்த மகனுக்கோ அல்லது தந்தை வழிச் சார;ந்தோருக்கு உரியதாயிற்று.

மன்னர்கள் தங்களைச் “சூரிய குலத்தினர்“என்றோ “சந்திர குலத்தினர்“என்றோ கூறிக்கொள்ளவது மரபு. சோழர்கள் சூரியக் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களின் செப்பேடுகள் குறிப்பிட்டுள்ளன. வீர ராஜேந்திரனின் கல்வெட்டு தங்கள் குலமுதல் பரிதி என்றும் சோழ மன்னர்கள் காசியப கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கின்றது. காசியபர், அத்திரி ஆகிய இருவரும் அவர்களின குடி முதல்வர்களாகக் கருதப்படுகின்றனர்.

வாரிசு இல்லாமல் அரசர் இறந்துவிட்டால் புதுமையான முறையில் புதிய அரசரைத் தேர்ந்தெடுக்கும் பணியினை அமைச்சர் பெருமக்கள் மேற்கொண்டனர். பட்டத்து யானையின் துதிக்கையில் ஒரு மாலையை அளித்துத் தெருவில் அதை உலாவச் செய்து அது யாருக்கு அந்த மாலையினை இடுகிறதோ அவரையே அரண்மனைக்கு அழைத்து வந்து அரசராக்கினர். இம் முறையில் கரிகாற்சோழன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

அரசன் அரியணை ஏறியதை ஒரு விழாவினைப் போல் கொண்டாடியுள்ளனர். அரசு கட்டில் ஏறுதல் அல்லது முடிசூட்டு விழா என்று அதனை அழைத்தனர்;. அப்போது அந்த அரச குடும்பத்தில் மூத்தோரால் அல்லது பரம ஆலோசகர்களால் அரசுக்குரிய சின்னங்கள் கொடுக்கப்பட்டு அல்லது அணிவிக்கப்பட்டு முடிசூட்டும் விழா நடத்தப்பட்டது. அன்றுமுதலே ஆட்சி செலுத்தி ஆண்டு குறிக்கப்பெற்றது. இவ்விழாவினைச் சிறந்த மண்ணுமங்கலம் என்று அழைத்தனர்.

முடியுடை வேந்தர்களும் சிற்றரசர்களும் தங்களுக்கெனத் தனித்தனி அவைகளைக் கொண்டிருந்தனர். தொல்காப்பியம் பாயிரத்தில் அவையம் என்ற சொல் காணப்படுகின்றது. அரசனின் மன்றமானது அரசவை,ஓலக்கம்,இருக்கை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. அரசவையில் அரச குடும்பத்தினர்மட்டுமின்றி, குறுநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் அரசு அலுவலர்களும்குறிப்பிட்ட பொதுமக்களும் இடம்பெற்றனர்;. இது அரசனுடைய தனிப்பட்ட ஆலோசனை சபையாக இருக்கவில்லை. இது “நாளிருக்கை“ என்றும் “நாள் மகிழிருக்கை“ என்றும் அழைக்கப்பட்டது. “மந்திராலோசனை“ என்ற சபையே அரசரின் தனிப்பட்ட ஆலோசனை சபையாக இருந்தது. நடுவுநிலைமை தவறாத சிறப்புத் தன்மை கொண்டதாக உறையூர் அவை பாராட்டப்பட்டது. இதனை நற்றிணையின் 400,புறநானூற்றின் 39 ஆகிய பாடல்களில் அறிய முடிகின்றது.

ஆட்சியில் அரசருக்கு உதவியாக, பெரும்திரளான அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். அமைச்சர்கள், அந்தணர்கள் (சான்றோர்), படைத்தலைவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள். சங்க காலத்தில் படை நிர்வாகம் திறம்பட சீரமைக்கப்பட்டிருந்தது. அரசின் முதன்மையான வருவாய் நிலவரி (புரவு). அயல்நாட்டு வாணிகத்தின் மீது சுங்கமும்(உல்கு) வசூலிக்கப்பட்டது. புகார் துறைமுகத்தில் நியமிக்கப்பட்டிருந்த சுங்க அதிகாரிகள் பற்றிப் பட்டினப்பாலை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. போரின்போது கைப்பற்றப்படும் கொள்ளைப் பொருட்கள் அரசுக் கருவூலத்திற்குரிய முதன்மையான வருவாயாக இருந்தன. சாலைகளும் பெருவழிகளும் நன்கு பராமரிக்கப்பட்டுவந்தன. கொள்ளை மற்றும் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக இரவும் பகலும் அச்சாலைகளும் பெருவழிகளும் கண்காணிக்கப்பட்டன.

சொற்குறியீடுகள்

அரசு என்ற நிறுவனப்படுத்தப்பட்ட அதிகாரநிலையைக் கைப்பற்றி ஆட்சி புரிபவர்களை இறை, கோ, கிழவன், கிழான், மன்னர், மன்னவன், வேந்து, வேந்தன், அரசு, அரசன், குருசில், குரிசில், கொற்றம், கொற்றவன் எனப் பல்வேறு சொற்களால் பழந்தமிழ் இலக்கியங்கள் சுட்டியுள்ளன.

இச்சொற்கள் ஒன்றுக்கொன்று மிக நுண்ணிய பொருள்வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. பழங்காலத்தில் இச்சொற்களைப் பயன்படுத்துவதில் குறிப்பிட்ட எளிய ஒழுங்குமுறைமட்டுமே பின்பற்றப்பட்டுள்ளது. குறுநில மன்னரை அல்லது மன்னரைக் “கோ“ அல்லது “இறை“ என்று அழைப்பர். ஆனால், குறுநில மன்னரை அல்லது மன்னரை “அரசன்“ அல்லது “வேந்தன்“ என்று அழைக்கமாட்டார்கள். ஆனால், அரசரை “இறை“, “கோ“, “மன்னன்“ என்ற சொற்களாலும் அழைப்பதுண்டு. இக்குழப்பமான சொற்குறியீட்டு மாற்றங்கள் எதிரில் உள்ள தலைமை நபரின் அரசு நிர்வாக அதிகார விரிவினைப் பொறுத்து அமைவுகொள்கின்றன எனலாம்.

இறை என்ற சொல்லைவிட கோ என்ற சொல் உயரிய மதிப்புடையது. இறை என்பது இறைவன், தலைவன், குடிமக்கள் செலுத்தும் வரி எனப் பல பொருட்களில் ஆளப்படக்கூடியது. இனக்குழுத் தலைவனையும் ஒரு கூத்துக் குழுவின் தலைவனையும் இறை அல்லது கோ என்றும் அழைத்தனர். அந்த இனக்குழுத்தலைவரோ அல்லது அக் கூத்துக்குழுவின் தலைவரோ குறுநில மன்னர் முன் நிற்கும்போது, அத்தலைவரைச் சார்ந்தோர்கள் அக்குறுநில மன்னரைக் கோ என்றும் இத்தலைவரை இறை என்றும் அழைப்பதுதான் முறையான மதிப்புநிலையாக அக்காலத்தில் கருதப்பட்டது. இந்தத் தகுதிப்பாடு குறித்த சொற்பயன்பாட்டினைப் புறநானூற்றின் 156ஆவது பாடல் நுட்பமாக உணர்த்தியுள்ளது.

சங்க இலக்கியச் செய்யுள்களில் 141 செய்யுள்களில் குறுநில மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் 71 செய்யுள்கள் மட்டுமே குறுநில மன்னர்களின் பெயரினைச் சுட்டியுள்ளன. ஆனால், 138 செய்யுள்களில் வேந்தர்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் 45 செய்யுள்கள் மட்டுமே வேந்தர்களின் பெயரினைச் சுட்டியுள்ளன. இதிலிருந்து வேந்தருக்குப் புலவர்கள் வழங்கியுள்ள மதிப்பினை அறியமுடிகின்றது.

வேளிரைத் தவிர்த்து பிற தலைமையாளர்களைக் கிழவன், கிழார் என்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளனர். இதற்குச் சான்றுகளாகப் புறநானூற்றின் 129, 131, 152, 163 ஆகிய செய்யுட்களைக் காட்டலாம். வேளிர்கள் குறுநிலத் தலைவர்களே என்றாலும் அவர்கள் வேந்தருக்கு இணையாக மதிக்கப்பெற்றுள்ளனர். பதிற்றுப்பத்தில் “வேந்தரும் வேளிரும்“ என்ற சொற்றொடர் நான்கு இடங்களில் வந்துள்ளன. வேளிர்கள் வளமான பகுதிகளில் ஆண்டுள்ளனர். குறிப்பாக, நீலகிரியில் குன்னூர், தென்னாற்காட்டில் திருக்கோவலூர், தர்மபுரியில் தகடூர்.

“தாமின்றி மக்கள் இல்லை“ என்ற கருத்தாக்கத்தினைத் தன்னுள்ளும் மக்களின் மனத்தினுள்ளும் விதைத்தவர்களாக மன்னர்கள் இருந்துள்ளனர். அதனால்தான் புறநானூற்றின் 86ஆவது பாடல், “மன்னர் உயிர்த்தே மலர்தலை உலகம்“ என்று உறுதிப்படுத்தியுள்ளது.

“மன்னன்“ என்ற சொல் “மன்னு“ என்னும் வினையடியாகப் பிறந்தது. “மன்னு“ என்ற சொல்லுக்கு, நிரந்தரமாக இரு, நீண்ட காலத்திற்கு இரு, ஏற்றுக்கொள்ளுதல், அழியாது பாதுகாத்தல், உறுதியாயிருத்தல், நிரம்பியிருத்தல் என்று பல பொருள்கள் உள்ளன. இச்சொல்லுக்குரிய பொருள்களை இணைத்து, அதாவது “மக்களை ஏற்றுக்கொண்டு அவர்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருந்து அவர்களின் மனத்தில் நிறைந்திருத்தல்“ என்பதே “மன்னன்“ என்ற சொல்லுக்கான விரிவான விளக்கமாகக்கொள்ளலாம்.

“கோ“ அல்லது “மன்னன்“ அரசராகப் பதவியேற்கப் “பிள்ளையாட்டுச் சடங்கு“ என்ற ஒரு சடங்கு முறை பின்பற்றப்பட்டுள்ளது. இதனைப் புறத்திணையியல் 60ஆம் நூற்பா குறிப்பிட்டுள்ளது.

அரசும் அதிகாரமும்

“வேந்தர்“உருவாக்கம் தமிழகத்தில் முறைப்படுத்தப்படாத அரசியல் அமைப்பினைக் காலூன்றச் செய்துவிட்டது. “அரசு“ குறித்த குறிப்புகள் தமிழ்நாட்டில் உயரதிகார அரசியல் நிறுவன அமைப்பின் தொடக்க நிலையை உணர்த்துகின்றன.

“அரசு“ என்னும் எண்ணக்கரு மூவேந்தரோடு மட்டுமே பொருந்துகின்றது. இதனைப் புறநானூற்றின் 34, 55 ஆகிய பாடல்களிலும் பொருநராற்றுப்படையின் 159ஆவது அடியிலும் காணலாம். “வேந்து“ என்பது, அரசதிகாரம் குறித்து உள்நாட்டில் தோன்றி வளர்ந்த சொல்லாகும். அரசு துணைமை வடிவம் போல் தோன்றுகிறது. மூன்று வேந்தர்களுக்குரிய ஒவ்வொரு அரசும் “அரசு“ எனக் கொள்ளப்பட்டது. பதிற்றுப்பத்தின் 89 ஆவது பாடலிலும் மதுரைக்காஞ்சியின் 191 ஆவது அடியிலும் “அரசியல்“ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல் “நீதி“ என்ற உட்பொருளில் கையாளப்பட்டுள்ளது.

“அரசு“ என்பது, நிலையான படையுடன் தொடர்புடையது. புறநானூற்றின் 55, 197 ஆகிய பாடல்களின் வழியாகவும் பதிற்றுப்பத்தின் 43ஆவது பாடலின் வழியாகவும் “அரசு“ என்பது, நால்வகைப் படையுடனேயே முழுமை பெறுகிறது என்பதனைத் தெரிந்துகொள்ளமுடிகின்றது. தொல்காப்பிய மரபியல் 81ஆவது நூற்பாவில் அரசனுடைய அடையாளச் சின்னங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. படை வல்லமை மிக்க ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர், “வேந்தனின் நடவடிக்கைகள் அனைத்தும் அறநெறிப்பட்டதாகவே இருக்கவேண்டும்“ என்ற அறிவுரைகள் புலவர்களால் வழங்கப்பட்டுள்ளன. அரசு அலுவலர்களைவிடப்புலவர்களே அரசர்க்கு அறநெறிகளை வழங்கும் உரிமையைப் பெற்றிருந்தனர். “அருளும் அன்பும் நீங்காது,குழந்தைகளைப் பாதுகாக்கும் தாயரென நாட்டைப்பாதுகாப்பாயாக“என்பது நரிவெரூஉத்தலையார் சேரமான் கருவூரேறிய ஒள்;வாள் கோப்பெருஞ்சேரலிரும்பொறைக்கு அறிவுரை கூறியுள்ளார். “நமரெனக் கோல் கோடாது,பிறரெனக் குணங்கொல்லாது அறநெறி செலுத்துக“என்று பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்கு மதுரை மருதன் இளநாகனாரின் அறிவுரை கூறியுள்ளார். புலவர்கள் அரசருக்கு அறிவுரை நல்கியமைக்குச் சான்றுகளாகப் புறநானூற்றின் 35, 55 ஆகிய பாடல்களைக் காட்டலாம். இலக்கியங்கள் இதனைச் “செவியறிவுறுத்தல்“ என்கின்றன. வேந்தருக்குச் செவியறிவுறுத்திய புலவர்கள் வரிசையில் முரஞ்சியூர் முடி நாகராயர், இரும்பிடர்த் தலையார், நரிவெரூஉத் தலையார், காரிகிழார், வெள்ளைக்குடி நாகனார், ஆவூர் மூலங்கிழார், மதுரை மருதன் இளநாகனார் சிராந்தையார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

“அரசு“ என்ற சொல் சங்க இலக்கியத்தில் “அரைசு“ என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. சான்றாகப் பட்டினப்பாலையின் 34 அடியினையும் புறநானூற்றின் 26, 42, 354 ஆகிய பாடல்களையும் காட்டலாம். சங்க இலக்கியங்களில் தலைமையைக் குறிக்கக் “குருசில்“ என்ற சொல் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. சில இடங்களில் “குரிசில்“ என்றும் இது குறிக்கப்படுகிறது. சான்றாக, மதுரைக்காஞ்சியின் 151, மலைபடுகடாமின் 186 ஆகிய அடிகளையும்ஐங்குறுநூற்றின் 306, 471, 473, 480, பதிற்றுப்பத்தின் 24, 31, 32, 53, 55, 72, 88, புறநானூற்றின் 16, 50, 68, 161, 198, 210, 285, 290, 321, 333, 341, 377,அகநானூற்றின் 184 ஆகிய பாடல்களையும் குறிப்பிடலாம்.இச்சொல்அரசர், மன்னர்மற்றும் குறுநிலத் தலைவர்களோடு தொடர்புபடுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, ஈட்டியோடும் அதுவன்றிப் படையோடும் இச்சொல்குறிப்பிடப்படுகின்றது. “குரிசில்“ என்னும் சொல் ஆளுவதற்கான உரிமையைச் சுட்டுகிறது.

வேந்தரின் பணியாளா மன்னர்?

மன்னருடைய ஆட்சி மற்றும் நிறுவப்பட்ட அவருடைய அதிகாரத்தின் தன்மையை நெடுநல்வாடையின் 78ஆம் அடியில் கூறப்பெற்றுள்ளது. அதில், “அதிகாரப் பொறுப்புடைய ஒருவர்ஏனையோரிடமிருந்து வேறுபட்டுப் பெருமனை (பெரியவீடு) ஒன்றைத் தமக்குரியதாகக் கொண்டிருப்பர்“ என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சுவர்அமைந்த குடியிருப்புகளில் மன்னர் வாழ்ந்தார் என்பதற்கு அகநானூற்றின் 373 ஆவது பாடலும் சிறுபாணாற்றுப்டையின் 274ஆவது அடியும் பட்டினப்பாலையின் 277 மற்றும் 278ஆகிய அடிகளும் சான்றுகளாக உள்ளன.

எங்கு வேளாண்மை வளர்ச்சியுற்றதோ அங்கு “மன்னன்“ என்னும் பெயர்வழக்குத் தோன்றியிருக்கலாம். வளர்ச்சியுறும் அப்புதிய பகுதியை அழிவினின்றும் அவன் பாதுகாக்கவேண்டும். மன்னர், “காவல் மன்னன்“ என்றும் புறநானூற்றின் 331ஆவது பாடலில் குறிப்பிடப்பெறுகிறார். ஆகவே, காப்பவரே “மன்னர்“ ஆகிறார். அவனுடைய அதிகாரத்துக்குட்பட்ட நிலவெல்லை வரையறைக்குட்பட்டதாகவே இருந்திருக்கும்.

எளியனாய் இருந்தபோதிலும் மன்னர் கொடையளிப்பவராகவும் இருந்துள்ளமையைப் புறநானூற்றின் 320, 327, 328 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றது. மன்னர் தன் கடமையை எண்ணிச் செயல்பட்டார் என்று நற்றிணையின் 146ஆம் பாடல் குறிப்பிட்டுள்ளது.

வேந்தர்கள் மன்னர்களிடமிருந்து மணமகளைத் தேர்ந்தெடுப்பதும் நடைபெற்றுள்ளது. இதனைப் புறநானூற்றின் 336, 337ஆம் பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. இது “மகட்கொடை“ எனப்பட்டது. வேந்தர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து மன்னர்களுக்கு எதிராகப் போர்புரிந்ததும் உண்டு. அதுகுறித்து புறநானூற்றின் 374 ஆவது பாடலும் அகநானூற்றின் 174 ஆவது பாடலும் தெரிவித்துள்ளன.

“மன்னன்“ என்பவன் ஒரு நிலப்பகுதியைப் பாதுகாத்து அதற்குத் தேவையானவற்றை வழங்கி ஆட்சி புரிந்தவன் ஆவான். இவ்வாறாக, மன்னன் உருவாகியது, தமிழகத்தில் “அரசன்“, “அரசு“ உருவாவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

“வேந்து“ அல்லது “வேந்தர்“ என்ற சொல், ஆளுவோரிடையே ஆற்றல் மிக்க போர்த் தன்மையுள்ள ஆட்சியாளர்உருவாவதனைக் காணமுடிகின்றது. ஆட்சியின் பலம், அதிகாரத்தைப் பொறுத்தளவில், வேந்தர்தான் மிக்க படைபலம் உடையவர். அவருடைய படைகளோடு தொடர்புபடுத்தியே அவர் எப்பொழுதும் குறிப்பிடப்படுகின்றார். இதனைப் புறநானூற்றின் 38, 278, 322, 390 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றது.

தொல்காப்பியப் புறத்திணையியலில் “மன்னன்“ என்னும் சொல் இடம்பெறவில்லை. பாசறை வேந்தனுடன்தான் தொடர்புபடுத்தப்படுகிறது. “வேந்தரின் தலைமையின் கீழ்ப் போர்செய்தல்“ என்பது, மன்னர் நிலையிலிருந்து தொடங்குகின்றது. இதனை “வேந்துவிடுதொழில்“ என்று இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. குறிப்பாகப் புறநானூற்றின் 285, 296, 301, 304, 306, 318 – 320, 322, 326, 332 ஆகிய பாடல்கள் விரித்துரைத்துள்ளன. “வேந்தரின் போர் அடியாள்களின் தலைவர் மன்னர்“ என்ற கருத்திலிருந்து மன்னரின் பதவியை, நிலையை நாம் அறிந்துகொள்ளலாம். அத்தகைய போர் அடியாள்களின் தலைவர்கள் குதிரைகளை மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளனர். அதற்கான சான்றுகளைப் புறநானூற்றின் 299ஆம் பாடலும் நற்றிணையின் 81ஆம் பாடலும் காணமுடிகின்றது. இத்தகைய தொழில் புரிவோருக்கமைந்த பாசறை குறித்து நெடுநல்வாடையின் 18 ஆவது அடியும்புறநானூற்றின் 22, 31, 33, 62, 69, 298, 294, 361, 304 ஆகிய பாடல்களும் பட்டினப்பாலை 16, 50, 61, 64, 84, 88 ஆகிய அடிகளும் கூறியுள்ளன. வேந்தருக்காப் பாடுபட்டுப் போர்புரிந்து வெற்றியைத் தேடித்தந்த மன்னர்களுக்கு வேந்தர்கள் நெல், பொன், யானை முக படாம் போன்றவற்றைப் பரிசாக வழங்கியுள்ளனர். இதனைவிட மேலாக அம்மன்னர்களுக்கு நல்ல வாழ்க்கையினையும் சிறந்த வசதிகளையும் ஏற்படுத்தித்தரவேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களுக்கு நிலப்பகுதிகளை வழங்கியுள்ளனர். இதனைத் “தண்ணடைநல்கல்“ என்று இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வேந்தன் தன் படையுடைமை அதிகாரத்தின் வலிமை காரணமாக, பிற அதிகாரங்களையுடைய இத்தகையோரிடமிருந்து வேறுபடுகின்றான். போர்சார்நிறுவனத்தை வைத்துக்கொள்வது வேந்தனுக்கு எளியதுதான். ஆனால், நிலையான படை அமைப்பு இருந்தது என்று சொல்வதற்குச் சான்று கிடைக்கவில்லை. போர்வீரர்களுடைய போரற்ற கால வாழ்க்கை குறித்து எந்தக் குறிப்பும் கிடைக்கப்பெறவில்லை.

மன்னனுடைய நிர்வாக அமைப்பு குறித்த குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. மாறாக, “வேந்துவினை“ காரணமாக மக்கள் வெளியே செல்வது போன்ற வேந்தனைப் பற்றிய குறிப்புகளை ஐங்குறுநூற்றின் 426, அகநானூற்றின் 104, 254 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றது.

மக்கள் தாம் மேற்கொண்ட பணிகளால் பல மாதங்கள் வெளியிடங்களில் இருக்க வேண்டியதாயிற்று. இதன் காரணமாகவே மிகவும் விரிவடைந்த நிருவாக இயந்திரம் வேந்தன்கீழ்தான் இருந்தது என்பதனை ஏற்கமுடியவில்லை. முடிமன்னரைச் சுட்டும் “கொற்றம்“ என்னும் சொல் இவ்வகைப்பட்ட ஆளுவோருடன் தொடர்புபடுத்தப்பட்டது. இதனைப் பதிற்றுப்பத்தின் 62, 64, 69 மற்றும் புறநானூற்றின் 21, 37, 338,367 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றது.

ஆற்றுப்பாசனம் சார்ந்த வளர்ச்சி நடவடிக்கை வேந்தரோடு தொடர்புடையது என்பது முதன்மையான கருத்தாகும். சேர, சோழ, பாண்டியர்களைக் குறிக்க மட்டுமே “வேந்து“ என்னும் தொடரைப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் இல்லை. இம்மூன்று பெரிய நிலப்பரப்புகளை ஆண்டவர்களே வேந்தர்கள் எனக் குறிக்கப்படுவது மரபுவழி வந்ததாகும். மரபு அவர்களை “மூவேந்தர்“என்றே குறிக்கிறது. மூன்றாமவரைப் புகழும்போது மற்ற இருவரையும் குறிக்கும் மரபும் உள்ளது. இதனை அகநானூற்றின் 96, புறநானூற்றின் 42 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றது. ஏனைய வேந்தர்களுடைய ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்போடு ஒப்பிடுகின்றபொழுது, இம்மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட நிலப்புரப்பு ஆற்றுப் படுகைகளில் விரிந்துள்ளமையை அறியமுடிகின்றது. ஆற்றுப்பாசனம் சார்ந்த வளர்ச்சி நடவடிக்கை வேந்தரோடு தொடர்புடையது என்பது முதன்மையான கருத்தாகும்.

வேந்தருக்குக் கீழ்ப்பட்ட குறுநிலத் தலைவர்கள் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. சான்றாகப் புறநானூற்றின் 179ஆவது பாடலைக் காட்டலாம். “மன்னன்“ என்னும் ஆட்சிப் பொறுப்பிடம், “வேந்தன்“ என்பதைவிடக் கீழானது என்பதைப் புறநானூற்றின் 319ஆவது செய்யுள்வழியாக அறியமுடிகின்றது. இச்செய்யுள், “வேந்தன் அனுப்ப, அவன் வகுத்தளித்த செயலை நிறைவேற்ற மன்னன் சென்றான்“ என்று குறிப்பிட்டுள்ளது. மன்னனுக்கு வேந்தனுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் புறநானூற்றின் 333 மற்றும் 338 ஆகிய செய்யுட்களில் காணமுடிகின்றது.

அரசருக்குரிய கூட்டத்தைக் குறிக்கும் “வேத்தவை“ என்ற சொல் வேந்தரோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இச்சொல்லின் சொற்பிறப்பே இதற்கான சாட்சியமாகிறது. வேந்தனின் “கூட்டம்“ (அவை) என்பதே அதன் பொருள். இச்சொல்லினைப் புறநானூற்றின் 382 ஆவது பாடலிலும் மலைபடுகடாமின் 39ஆவது அடியிலும் காணமுடிகின்றது.

இருப்பினும், இக்கூட்டம் நிரந்தரமான நிர்வாக அமைப்புக் கூட்டமோ நிரந்தரமான நிர்வாக இயந்திரமோ அல்ல. இறை, கோ நிலையிற் காணப்பட்ட சுற்றமே வேந்து நிலையில் இந்த விரிவான பொருளினைப் பெற்றிருக்கலாம். சில குறுநிலத் தலைவர்களும் மன்னர்களும் இத்தகைய சுற்றம் உடையவராய் இருந்தனர். இனக்குழு இயல்புடன் தொடர்புடைய இம்மரபு “நாள் மகிழிருக்கை“யில் தெளிவுபெறுகிறது.

நாள்மகிழிருக்கையில் ஆள்வோன், தன் குழுவைச் சேர்ந்த முதியவர்களுடன் சேர்ந்தமர்ந்து கள் பருகுவான் என்பதனைப் புறநானூற்றின் 29, 54, 123, 324, 330 ஆகிய பாடல்களும்பெரும்பாணாற்றுப்படையின் 441 முதல் 447 வரையிலான அடிகளும் தெரிவித்துள்ளன. இருக்கை நாளடைவில் கூட்டமாக வளர்ச்சி பெற, அக்கூட்டத்தில்தான் அரசன் மக்களுடைய குறைகளைக் கேட்டறிந்தான். “முடிசூடுதல்“என்ற சடங்கு வேந்தர்க்கு மட்டுமே உரியது. ஆதலால்தான் “முடியுடை மூவேந்தர்“என்ற சொற்றொடர் ஏற்பட்டிருக்க வேண்டும். “வேந்தர்“ என்பவர் மன்னருக்கு மேலானவர். “மன்னர்“ எப்போதும் வேந்தரின் படைசார்ந்த பணியாள்தான்.

0

மெட்ராஸ் – லும்பன் நகரம்

karthi-madras-1

இந்தப் படம் உண்மையில் பொருட்படுத்திப் பேசத்தகுந்த படமே அல்ல. ஆனால், இந்தப் படத்துக்கு முட்டுக்கொடுத்து தூக்கிவிட கலகக் கவிஞர்கள், சமூகப் போராளிகள், சமூக வி()ஞ்ஞானிகளில் ஆரம்பித்து பெப்பேராசிரியப் பெருந்தலைகள்வரை களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தப் படம் பற்றிப் பேசவேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டிருக்கிறது.

இயக்குநரைப் பொறுத்தவரையில் படத்தின் ப்ரமோவுக்கு ரஜினிசாரைச் சந்திப்பதில் ஆரம்பித்து அவர் தெளிவாகத்தான் இருக்கிறார். ஐஞ்சு ஃபைட், நாலு சாங் வகை படத்தைத்தான் எடுத்திருக்கிறார். அதேநேரம் புத்தர் சிலை, நீலக் கலர் ஜிங்கிச்சா, அயோத்தி தாசர் சிலைகள், அம்பேத்கர் படங்கள், இவற்றோடு பிட் பட நாயகிகள் கடைசிக் காட்சியில் கற்பின் மகிமைபற்றிப் பேசுவதுபோல் படம் முழுவதும் வெட்டும் குத்துமாகத் திரியும் கதாநாயகன் கடைசி கால் நிமிடத்தில் கல்வியின் மகிமையைப் பற்றிப் பேசுவது எனத் தெளிவாகவே செயல்பட்டிருக்கிறார். ஆனால், நம் கலக மற்றும் புரட்சிப் பெருந்தலைகள் மட்டுமே இந்தப் படத்தை வட சென்னைவாழ் தலித் மக்களின் வாழ்க்கையைச் சாறு பிழிந்து தந்திருக்கும் காவியமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த இட ஒதுக்கீட்டுச் சலுகை மனோபாவம் திரைத்துறையைத் தவிர வேறு எங்கும் இந்த அளவுக்குக் கேடுகெட்ட நிலையை அடைந்திருக்கவில்லை. கல்வித்துறையில் பார்த்தால் மேல் சாதியினருக்குச் சற்றும் சளைக்காமல் படித்து அவர்கள் அளவுக்கு மதிப்பெண்கள் பெற்று முன்னேறும் நிலையை தலித்கள் எட்டிவிட்டிருக்கிறார்கள். கலைத்துறையில் மட்டும் எதற்காக இந்தப் பரிதாபமான கை தூக்கி விடும் மனநிலை செயல்படுகிறது என்றே தெரியவில்லை. இதுமாதிரியாகத்தான் சேரனையும் தங்கர்பச்சானையும் மிஷ்கினையும் ராமையும் சம்பந்தப்பட்ட க்ரூப்பினர் காலி செய்தார்கள். மிஸ்டர் ரஞ்சித், ப்ளீஸ் பிவேர் ஆஃப் தீஸ் லும்பன்ஸ் (இஃப் யு ஆர் நாட் ஒன் அமாங் தெம்).

இந்தப் படத்தின் பலமென்பது ஒளிப்பதிவு, இசை, க்ளைமாக்ஸுக்கு முன்புவரையிலான (அடக்கி வாசிக்கப்பட்ட) திரைக்கதை, நடிகர் தேர்வு, லொகேஷன் இவைதான். அந்த அம்சங்களில் பிற தமிழ் அடிதடி படங்களைவிட இது நிச்சயம் மேலான படமே. அதிலும் இசையும் அலட்டல் இல்லாத ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட்கள். இந்தப் படத்தை திராவிட அரசியலைத் தோலுரிக்கும் தலித் காவியம் என்று சொல்லும்போதுதான் சிக்கல்கள் ஆரம்பிக்கின்றன.

ஒரு தாய்க் கட்சியில் இருந்து கிளைபிரியும் இரண்டு கட்சியினருக்கு இடையிலான மோதலே படம். அந்த இரண்டு கட்சியினரும் ஒரே சாதியினர் என்று நம்ப விரும்புபவர்களுக்கும் இரண்டு வெவ்வேறு சாதியினர் என்று நம்ப விரும்புபவர்களுக்கும் அவரவருக்கான குறிப்புகள் தரப்பட்டுப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இரண்டு தலித் சமூகத்தினரிடையே நடக்கும் மோதல் என்று மேல் சாதித் தயாரிப்பாளருக்குத் தலையையும் ஆதிக்க சக்திகளுக்கும் தலித் சமூகத்துக்கும் இடையிலான மோதலென்று விமர்சனத் திலகங்களுக்கு வாலையும் காட்டும் ஜந்துவாகவே இந்தப் படம் உருவாகிவிட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால், ஆதிக்க சாதி/கட்சி அடையாளங்கள் முறையாகச் சித்திரிக்கப்படாத நிலையிலும் தயாரிப்பாளர்/இயக்குநரின் போட்ட பணத்தை எடுத்தாகவேண்டிய நிர்பந்தத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டும் தமது படை பலத்தைக் காட்டும் நோக்கிலும் பாராட்டு மழையைப் பொழிய ஆரம்பித்துவிட்டிருக்கிறார்கள்.

இரு கோஷ்டியினருக்கு இடையிலான மோதலுக்குக் காரணமாக ஒரு சுவர் சொல்லப்படுகிறது. அதாவது சாதியின், ஆதிக்கத்தின் குறியீடாக அந்தச் சுவர் காட்டப்படுகிறது. அந்த சுவரை அடைவதால் ஒரு பிரிவினருக்கு என்ன லாபம்? அது இல்லாததால் என்ன நஷ்டமென்பது படத்தில் மேலோட்டமாகக்கூடச் சித்திரிக்கப்படவில்லை. இரண்டு கோஷ்டியினருடைய ஈகோ பிரச்னையாகவே அது படத்தில் முழுக்க முழுக்க இடம்பெறுகிறது. இப்படி ஒன்றுக்கும் உதவாத ஒருவிஷயத்துக்காக இரண்டு பிரிவினர் சண்டை போடுகிறார்கள் என்று சொல்லும்படத்தை அபாரமான தலித் படைப்பு என்று சொல்பவர்கள் உண்மையில் என்ன சொல்லவருகிறார்கள். நிஜத்தில் தலித்கள் போடும் சண்டையும் இப்படியான வெத்து வேட்டு சண்டை என்றா? அவர்களுடைய குறியீட்டு ஒப்புமையை இப்படிக் கொஞ்சம் லேசாக நீட்டினால் ஏற்படும் அபாயம் புரிந்துதான் செய்கிறார்களா?

அதோடு படத்துக்குள்ளேயேகூட தலித் கதாபாத்திரங்களுக்குத் துரோகம் செய்வதும் இன்னொரு தலித் கதாபாத்திரமாகவே இருக்கிறது. அதாவது பிரதான வில்லனும் தலித்தே. அப்படியானால் தலித்கள் முதலில் தலித் தலைவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டுமென்று சொல்லப்படுவதைத்தான் சிறந்த தலித் கண்டுபிடிப்பு என்று பாராட்டுகிறார்களா? உண்மையில் சுவர் என்று உங்கள் மனத்தில் ஓர் எண்ணம் வந்தால் உத்தப்புரம்தானே வரவேண்டும். மக்களுக்கிடையே மாபெரும் மலைப்பாம்புபோல் அல்லவா அது விழுந்து கிடக்கிறது. இந்தப் படத்தில் வரும் அதிகாரத்தின் குறியீடான சுவர் நெடுக்குவாக்கில் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் தேமேன்னுதானே இருக்கிறது. சாதி அல்லது கட்சி அரசியல் அதிகாரமும் அப்படி சாதுவானதென்று குறியீடு காட்டுகிறார்களா? இப்படி படத்தின் காட்சிகளில் தெளிவாகத் தென்படும் குறியீடுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு பூடகமாக ஒவ்வொரு விமர்சகரும் தனது படத்தை ஓட்டிக்கொண்டிருப்பது ஏன்? தமிழகத்தில் அபிராமணராகப் பிறப்பது அவ்வளவு அட்வாண்டேஜான விஷயமாக இருப்பதைப் பார்க்கும்போது மனதுக்குள் லைட்டாகப் பொறாமைதான் ஏற்படுகிறது.

மாரி தனது தளபதியான அன்புவை எதற்காகக் கொல்கிறான் என்பது படத்தில் குறைந்தபட்ச தர்க்கத்தோடு கூட நிறுவப்படவில்லை. பெருமாளின் அப்பா கண்ணன் தன் மகனை அன்புதான் கொன்றிருப்பான் என்று நினைத்து அவனைக் கொல்ல ஆத்திரம்கொள்கிறான். காவல்துறையும் அவனுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. வெகு நிதானமாக அன்புவை எளிதில் அவனால் கொன்றுவிட முடியும். ஆனால், அவனோ அன்புவின் தலைவனான மாரியிடம் போய் டீல் பேசுகிறான். அன்பு பெரிய ஆளாகிவிட்டால் உனக்கும் கஷ்டம்தான் எனவே, எனக்காக இல்லாவிட்டாலும் உனக்காக அவனைக் கொல் என்கிறான். மாரியும் அன்பை இரவெல்லாம் தன் ஆட்களின் கஸ்டடியில் வைத்திருந்துவிட்டு காலையில் கோர்ட் வளாகத்தில் வைத்துக்கொல்கிறான். அன்புவின் வளர்ச்சி மாரிக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்பதை படத்தின் எந்தவொரு காட்சியிலும் காட்டியிருக்கவே இல்லை. அதனால் மாரியின் மன மாற்றம் வெறும் திடுக் திருப்பமாக மட்டுமே படத்தில் இடம்பெறுகிறது.

மாரிதான் கொன்றான் என்ற உண்மையானது காளிக்குத் தெரியவரும் காட்சி இருக்கிறதே படு பேத்தலாக இருக்கிறது. காளி திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் அம்சமாக செட்டிலாகிவிட்டிருக்கிறான். ஒருநாள் தன் மனைவியுடன் ஹோட்டலுக்கு போயிருக்கும்போது மாரியின் கையாள் அணிலை யதேச்சையாகச் சந்திக்கிறான். எப்படிடா இருக்க என்று தோளில் கைபோடப் போகிறான் காளி. உடனே அணில் அலறி நடுங்கியபடி, மாரிதான் அன்புவைக் கொல்ல ஸ்கெட்ச் போட்டான் என்று உளறிக் கொட்டுகிறான். இப்படி ஓர் அசடு இந்த உலகில் இந்தப் படத்தில் மட்டுமே இருக்க முடியும். உண்மையில் படத்தில் பைத்தியமாக வரும் ஜானி மூலமாக இந்த உண்மை காளிக்குத் தெரியவருவதாகக் காட்டியிருக்கலாம். மாரி அன்புவைக் கொன்ற விஷயத்தை வேறு ஒருவரிடம் பேசுவதை ஜானி எப்படியோ கேட்டுவிடுவதாகவும் ஜானியை மாரி கொன்றுவிடுவதாகவும் ஒரு பாவமும் அறியாத அவன் எதனால் கொல்லப்பட்டான் என்று காளி விசாரித்துக்கொண்டு செல்ல மாரியைத்தான் கடைசியாக சந்தித்தான் என்பது தெரியவருவதாகவும் அதில் இருந்து அன்புவின் கொலை பற்றி காளிக்குத் தெரியவருவதாகவும் காட்டியிருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் காளி தன் நண்பர்களுடன் விளையாட்டாக ஏப்ரல் ஃபூல் அன்று அணிலைக் கொல்ல வருவதுபோல் மிரட்ட அவன் பயந்துபோய் மாரியைக் காட்டிக்கொடுப்பதாகக் காட்டியிருக்கலாம். மனைவியுடன் குஷாலாக வந்திருப்பவனைப் பார்த்து அதுவும் அந்தக் கொலை நடந்து பல நாட்கள் ஆன பின் இப்படி ஒருவன் வாண்டடா உண்மையை ஒப்புக்கொள்வது நம்பமுடிவதாக இல்லை.

அட இதுகூடப் பரவாயில்லை, முன்னால் எம்.எல்..வான கண்ணன் தேர்தல் நேரத்தில் மாரியைக் கூப்பிட்டு பெரும் பில்டப்புடன் டீல் பேசுகிறான். அதாவது, நீ எம்.எல்.. பதவிக்குப் போட்டி போட்டுக்கோஆனா அந்த சுவத்தை மட்டும் எனக்குக் கொடுத்துடு என்று பேசுகிறான். இது எப்படி என்றால், ஜெயலலிதாவிடம் கருணாநிதி, அன்புச் சகோதரியேமுதலமைச்சர் பதவியை நீயே வைத்துக்கொள். ஆனால், அந்த முதல்வர் நாற்காலியை மட்டும் எனக்குக் கொடுத்துவிடு என்று கேட்பதைப் போன்றது. தேர்தலில் எம்.எல்.. பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு தேர்தலுக்கான விளம்பரச் சுவரைக் கைப்பற்றி என்ன வெங்காயத்தை ஒருவரால் சாதிக்க முடியும்?

படத்தின் க்ளைமாக்ஸில் வரும் இந்தக் குழப்பங்கள் படத்தின் ஜீவனையே சிதைத்துவிடுகின்றன. அதுபோல் அன்புவை பெருமாள் தன் ஆட்களுடன் இரவில் துரத்தித் துரத்திக் கொல்லப்பார்க்கிறான். வந்தாரை வாழவைக்கும் வட சென்னையோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் அன்புவின் கோட்டை அது. குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளினூடாக அன்புவும் காளியும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரே ஒரு கூக்குரல் அவன் கொடுத்தால் போதும் ஒட்டு மொத்த குடியிருப்பே படை திரண்டு வந்துவிடும். அவனோ மனித நடமாட்டமே இல்லாத வனாந்திரத்தில் ஓடுவதுபோல் ஓடிக்கொண்டேயிருக்கிறான்.

இவையெல்லாவற்றையும்விட படத்தின் ஆதார அம்சத்தை இயக்குநர் தொடத் தவறி இருக்கிறார். இந்தப் படம் இரு சமூகங்களைக் காலகாலமாகப் பிரித்துப் போட்டிருக்கும் சுவரொன்றைப்பற்றிய படம். இந்தச் சுவரின் ஒரு பக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கும் மறு பக்கத்தில் இருக்கும் பையனுக்கும் இடையில் மலரும் காதலானது இந்தச் சுவரின் கொடூரத்தை மக்களுக்கு உணர்த்துகிறது. ஆதிக்க சக்திகள் அந்தக் காதலர்களை அந்தச் சுவரின் மேலே கொன்று போடுகிறார்கள். அதைக் கண்டு வெகுண்டெழும் இரு தரப்பு எளிய மக்கள் கூட்டமும் ஆதிக்க அரசியல் சக்திகளை அடித்து விரட்டி அந்தச் சுவரை உடைத்து எறிகிறார்கள். உடைந்து விழும் செங்கல்களினூடாக புதிய சூரியன் தன் பொன்னிறக் கதிர்களுடன் முளைக்கிறது என்று முடித்திருக்க வேண்டிய படம். ஆனால், இயக்குநரோ 60 மார்க் எடுத்தாலே நமக்குத்தான் சீட் கிடைத்துவிடுமே எதற்காக 90க்கு மேல் மார்க் எடுக்கச் சிரமப்படவேண்டுமென்று நினைத்துச் செயல்பட்டிருக்கிறார். அவருடைய தீர்மானம் சரிதான் என்பதையே இந்தப் படத்துக்கான ஆதரவு எடுத்துக்காட்டுகிறது. உண்மையில் நிஜ தலித் சமூகம் தனது வெற்றிகளோடும் வலிகளோடும் வேறு எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கிறது.

காளி அருள் பெறுவதற்கு முந்தைய காளிதாசன் கண்ணை நோண்டுவேன், மூச்சில குத்துவேன் என்று கை விரல்களைக் காட்டிப் பேச அதற்கு அரசவைப் பண்டிதர் தத்துவார்த்த விளக்கங்கள் கொடுப்பது போல இருக்கின்றன இந்தப் படத்துக்குக் குவியும் ஆதரவு விமர்சனங்கள். எந்த ஆதிக்க சாதியை/ எந்த அரசியல் கட்சியை விமர்சிக்கிறாம் என்பது எளிதில் புரியும்படியாக இருக்கக்கூடாது என்பதில் ஆரம்பித்து சுவரை நீல நிறத்தினால் மட்டுமல்ல அனைத்து நிறங்களையும் ஊற்றி அழிக்கும் சமரசம் வரை செய்துகொண்ட ஒரு படைப்பை இப்படி தலித்திய நோக்கில் தூக்கிப் பிடிப்பதைப் பார்க்கும்போது, அதிலும் அதிரடி அணுகுமுறைக்குப் பெயர்போன ஈ.வே.ரா.வும் பிறந்த மண்ணில் இப்படியான ஒரு விமர்சனத்தைப் பார்க்கும்போது, அந்த மக்கள்மீது பரிதாபமே மிஞ்சுகிறது. கும்பிடறேனுங்க சாமி என்னும் கூழைக் கும்பிடைக்கூட கலகத்தின் வெளிப்பாடாகச் சொல்லும் இந்த கைப்புள்ள வின்னர்களை நம்பியா அந்தப் பெரும் சமூகம் வாழ்ந்தாக வேண்டும்?

படம் பார்க்காதவர்களுக்காகக் கதைச் சுருக்கம்

கிருஷ்ணப்பன், கண்ணன் (மகன்), பெருமாள் (பேரன்) இது ஒரு கோஷ்டி. கருணாகரன், மாரி (மகன்), அன்பு (கட்சித் தொண்டன் தளபதி) இது இன்னொரு கோஷ்டி. குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பில் பிரதான பிளாக்கின் சுவரில் யார் தன்னுடைய கட்சிச் சின்னத்தை வரைவது என்பதில் இரு கோஷ்டிக்கும் இடையில் பெரும் தகராறு நடக்கிறது. கண்ணன் வட்டச் செயலாளராக இருக்கும்போது தன் செல்வாக்கைப் பயன்படுத்தித் தன் அப்பா கிருஷ்ணப்பனின் படத்தை அந்தச் சுவரில் வரையச் செய்து அந்த சுவரைத் தனக்குச் சொந்தமாக ஆக்கிக்கொண்டுவிடுகிறான். மாரியும் அன்பும் அதை மீட்கப் போராடுகிறார்கள். பெருமாள் ஒரு தகராறில் கோபப்பட்டு அன்புவைக் கொல்ல ஆட்களுடன் வருகிறான். அன்புவின் நண்பனான காளி (கதாநாயகன்) நண்பனைக் காப்பாற்றுவதோடு, பெருமாளை ஆத்திரத்தில் கொன்றும்விடுகிறான். ஆனால், அவன் கொன்றது வேறு யாருக்கும் தெரியாது என்பதால் போலீஸ் அன்புதான் கொன்றிருப்பானென்று அவனைத் தேடுகிறது. அன்பு நீதிமன்றத்தில் சரணடைந்துவிடும்படி மாரி ஆலோசனை சொல்கிறான். ஆனால், நீதிமன்ற வளாகத்தில் வைத்து அன்புவை அடையாளம்தெரியாத சிலர் வெட்டிக் கொன்றுவிடுகிறார்கள். பெருமாள்தான் கொலை செய்திருப்பானென்று காளி பெருமாளைக் கொல்லப் புறப்படுகிறான். ஆனால், அவனுடைய காதலியும் குடும்பத்தினரும் அடிதடியை விட்டுவிடும்படிச் சொல்லவே அவனும் அவர்கள் சொல்வதைக் கேட்டு திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டிலாகப் போய்விடுகிறான்.

தேர்தல் வருகிறது. இந்த இரண்டு கோஷ்டியினரும் எந்தக் கட்சியில் இருக்கிறார்களோ அதன் தலைவர்கள் கூட்டணி வைத்துக்கொண்டுவிடுகிறார்கள். இதனிடையில் கண்ணன் அரசியலைவிட்டே விலகப் போவதாகச் சொல்கிறான். மாரியை எம்.எல்..வாக நிற்கச் சொல்கிறான். மாரியும் சம்மதிக்கிறான். பதிலுக்கு அந்தச் சுவரில் தன் அப்பாவின் படமே நிரந்தரமாக இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறான். மாரி அதற்கும் சம்மதிக்கிறான். இதனிடையில் அன்புவைக் கொல்லச் சொன்னது மாரிதானென்பது காளிக்குத் தெரியவருகிறது. அந்த துரோகத்தத் தாங்க முடியாமல் மாரியை காளி அடித்துத் துவைக்கிறான். மாரி உயிர் பிச்சை கேட்கவே காளி அவனைக் குற்றுயிரும் குலைஉயிருமாக விட்டுவிட்டுச் செல்கிறான். ஆனால், மாரியை பெருமாளின் ஆளான விஜி என்னும் இன்னொருவன் கொன்றுவிட்டு அவனுடைய இடத்தைப் பிடித்துக்கொள்கிறான். பெருமாள் அவனிடமும் போய் என் அப்பாவின் படத்தை சுவரில் வரைந்துகொடு என்று கேட்கிறார். காளி தலித் குழந்தைகளுக்கு சமூக அரசியலையும் பகுத்தறிதலையும் கல்வியாக குடும்பத்தோடு கற்றுத் தர ஆரம்பிக்கிறான். படம் அதோடு முடிகிறது.

0

காலனியம் : ஆதரவும் எதிர்ப்பும்

அத்தியாயம் 4

empire_main
பிரிட்டிஷ் முடியாட்சியை நீண்டகாலம் தலைமை தாங்கி நடத்திய விக்டோரியா மகாராணி தனது அறுபதாவது ஆண்டுவிழாவை ஜூன் 1897ம் ஆண்டு விமரிசையாகக் கொண்டாடினார். உலகின் வண்ணமயமான, வளமான சாம்ராஜ்ஜியமாக பிரிட்டன் அப்போது செழிப்புடன் இருந்தது. 1860 வாக்கில் பிரிட்டனின் நிலப்பரப்பு 9.5 மில்லியன் சதுர மைல். 1909 வாக்கில் இந்த எண்ணிக்கை 12.7 மில்லியன். உலகின் நிலப்பரப்பில் இது 25 சதவிகிதம். ஒப்பீட்டளவில் பிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்தைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம். ஜெர்மானிய சாம்ராஜ்ஜியத்தைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம். பிரிட்டனின் ஆளுகையின்கீழ் 444 மில்லியன் மக்கள் ஆப்பிரிக்கா, தூரக் கிழக்கு, மலேயா, நியூ கினியா, பசிபிக் தீவுகள் என்று தொடங்கி உலகம் முழுவதும் வாழ்ந்து வந்தனர். ஒரு கண்டம், நூறு தீபகற்பங்கள், இரண்டாயிரம் நதிகள், ஆயிரக்கணக்கான ஏரிகள், பத்தாயிரம் தீவுகள் ஆகியவை பிரிட்டனுக்குச் சொந்தமாக இருந்தன. விக்டோரியா மகாராணி நிச்சயம் மன நிறைவுடன் தனது வைர விழாவைக் கொண்டாடியிருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த மனநிறைவு வேறு பலரிடமும் இருந்தது. உலகம் இதுவரை கண்ட நன்மைகளில் சிறந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் என்றார் லார்ட் கர்ஸன். மனித வரலாற்றிலேயே மிகப் பரவலான ஒழுங்கமைக்கப்பட்ட சுதந்தரம் என்றால் அது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம்தான் என்று பெருமிதத்துடன் அறிவித்தார் ஜெனரல் ஸ்மட்ஸ். புகழ்பெற்ற ஸ்காட்டிஷ் வரலாற்றாசிரியரான நீல் ஃபெர்குசன் இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் தன் பாணியில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை இன்றளவும் உயர்த்திப் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் மனிதாபிமான முகம் கொண்டது என்று கர்ஸன், ஸ்மட்ஸ் ஆகியோரைப் போல் நீல் ஃபெர்குசன் நிறுவ முயற்சி செய்யவில்லை என்றபோதும் பிரிட்டனின் பங்களிப்பு அதன் அனைத்துக் குறைபாடுகளையும் கடந்து பிரகாசித்துக்கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.

18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் அடிமைகளைப் பயன்படுத்தி செல்வம் குவித்தது உண்மை. அதைப் பெருமிதமாக அந்நாடு கருதியதும் உண்மை. ஆனால் எந்த அளவுக்குத் தீவிரமாக அடிமைகளைக் குவித்துக்கொண்டதோ அதே தீவிரத்துடன் அடிமை ஒழிப்பிலும் ஈடுபட்டது என்கிறார் ஃபெர்குசன். கடுமையாக இனப் பாகுபாட்டைக் கடைபிடித்த அதே பிரிட்டன் இன்று மாறிவிட்டது. 1857ம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் திரண்டு எழுந்தது. ஜமைக்காவில் 1831 மற்றும 1865ம் ஆண்டுகளிலும், தென் ஆப்பிரிக்காவில் 1899ம் ஆண்டும் இதே போன்ற எதிர்ப்புகள் கிளம்பின. அப்போதெல்லம் பிரிட்டன் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி கலகக்காரர்களை ஒடுக்கியது. அயர்லாந்தில் 1840களிலும் இந்தியாவில் 1870களிலும் பஞ்சம் பரவியபோது பிரிட்டன் அவ்வளவாக அசைந்துகொடுக்கவில்லை. பல சமயங்களில் பஞ்சத்துக்கு அதுவே காரணமாகவும் இருந்திருக்கிறது. இவையனைத்தையும்மீறி வரலாற்றில் பிரிட்டன் வகித்த முக்கியப் பாத்திரத்தை நாம் மறந்துவிடக்கூடாது என்கிறார் ஃபெர்குசன்.

Nial Ferguson

Niall Ferguson

19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் பண்டங்கள், மூலதனம், உழைப்பு ஆகியவற்றின் சுதந்தரமான நடமாட்டத்தை பிரிட்டன் அளவுக்கு வேறு எந்த நாடும் உயர்த்திப் பிடித்ததில்லை என்கிறார் இவர். மேற்கத்திய சட்டம், ஒழுங்கு, ஆட்சிமுறை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டுசென்ற பெருமை பிரிட்டனையே சேரும். சிற்சில விதிவிலக்குகள் போக, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் ஊழல் இருந்ததில்லை. இத்தனைப் பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றிருந்தும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் சரிந்தது ஏன்? பலரும் நினைப்பதுபோல் டப்ளின் தொடங்கி டில்லி வரை பரவிய தேசியவாதப் போராட்ட அலை அல்ல நிஜக் காரணம். பிரிட்டனுடன் போட்டிப் போட்ட பிற சாம்ராஜ்ஜியங்களே அதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் ஃபெர்குசன்.

காங்கோவில் பெல்ஜியம் இழைத்த கொடுமைகள் அதீதமானவை. ரப்பர் தோட்டங்களும் ரயில்வே பாதைகளும் காங்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் பலன்கள் அனைத்தும் பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்ட் வசமே சென்று சேர்ந்தது. இவர் ஆட்சியில் ஏற்பட்ட படுகொலை, பஞ்சம், நோய் ஆகியவற்றின் காரணமாக பத்து லட்சம் காங்கோ மக்கள் உயிரிழந்தனர். மொத்த மக்கள் தொகையில் இது சரி பாதி. இதே காங்கோவை ஆண்ட பிரெஞ்சும் இத்தகைய ஆட்சியையே நடத்தினர். அல்ஜீரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் பிரான்ஸின் காலனியாதிக்கம் அளவற்ற உயிரழப்புகளையே ஏற்படுத்தியது. இப்படி பெல்ஜியம், பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி என்று பிற நாடுகள் உலகைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த சூழலில் பிரிட்டன் இந்தப் போட்டியைச் சமாளிக்க அவர்களுடன் மோத வேண்டியிருந்தது. இந்த மோதல் பிரிட்டனின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. எனவே பிரிட்டன் வேறு வழியின்றி தனது காலனியக் கொள்கையைக் கைவிட்டது.

இந்த வாதத்தின்மூலம் நீல் ஃபெர்குசன் இரண்டு அம்சங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று, ஒப்பீட்டளவில் பிற காலனியாதிக்கச் சக்திகளைவிட பிரிட்டன் அதன் காலனிகளிடம் நியாயமாகவே நடந்துகொண்டது. காலனிகளின் நலனுக்காக, அவர்களை உய்விப்பதற்காகத்தான் காலனியாதிக்கம் தோன்றியது என்று சொல்லமுடியாவிட்டாலும் இறுதியில் பிரிட்டன் தீமைகளைக் காட்டிலும் நன்மைகளையே அதிகம் வழங்கியது. ஒருவேளை பிரிட்டனின் காலனியாக இல்லாமல் போயிருந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம், தனிமனித சுதந்தரம், ஆங்கில மொழி போன்ற உயர்வான பங்களிப்புகள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஃபெர்குசன். இரண்டாவது, பிரிட்டன் தன் காலனியக் கொள்கைகளைக் கைவிட்டது பெரும் உலக நன்மைக்காக. இது ஒரு தியாகம். இந்தத் தியாகத்தின் பலனாக அதன் பிற தீமைகள் அனைத்தும் உதிர்ந்து சிதறிவிட்டன.  அதாவது, அச்சு நாடுகளின்  அணியில் இருந்த ஜெர்மனி மற்றும் இத்தாலி பெரும் ஆதிக்கச் சக்திகளாக நீடித்திருந்தால் உலகம் வேறு பாதையில் சென்றிருக்கும். அதனைத் தடுக்கவேண்டுமானால் அவர்களுடைய காலனிகள் உதிர்ந்து அவர்களுடைய பலம் குறைந்தாகவேண்டும். அதற்கு முன்நிபந்தனையாக பிரிட்டன் முதலில் தன் காலனிகளை உதறித் தள்ளியது.

ஃபெர்குசனின் வாதத்தை பங்கஜ் மிஷ்ரா திட்டவட்டமாக மறுக்கிறார்.  ஐரோப்பாவை, மேலை நாட்டு மதிப்பீடுகளை, வெள்ளை நிறவெறியை உயர்த்திப் பிடிக்கும் போக்கு வரலாற்றில் நீண்டகாலமாகவே நிலவிவருகிறது என்கிறார் மிஷ்ரா. வெள்ளை நிறத்தவரே உலகை ஆளும் திறமை வாய்ந்தவர்கள் என்பதை அவர்கள் தொடர்ச்சியாகச் சொல்லிவருகின்றனர். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளை நிறவெறியுடன் கூக் க்ளக்ஸ் கிளான் குழுவினர் கறுப்பின மக்களை எரித்துக்கொன்றனர். வெள்ளையினம் அழிந்துவிடப்போகிறதே என்று அஞ்சினார் தியோடர் ரூஸ்வெல்ட். இஸ்லாமியர்கள் உலகின்  விரோதிகள் என்று பலர் வெளிப்படையாகவே எழுதினர். நாஜிகளின் இனவெறுப்பு சித்தாந்தத்துக்கு மேற்குலகில் பல ஆதரவுக் குரல்கள் எழுந்தன. பலமானதே உலகை ஆள்வதற்கு வல்லது என்னும் கருத்து வலுவாக ஆதிக்கம் செலுத்தியது. நீல் ஃபெர்குசன் அத்தகையோரில் ஒருவர் என்கிறார் பங்கஜ் மிஷ்ரா. பிரிட்டனின் காலனியாதிக்கத்தை மட்டுமல்ல அமெரிக்காவின் ராணுவ ஆதிக்கத்தையும்கூட ஃபெர்குசன் நியாப்படுத்தவே செய்கிறார் என்பதையும் மிஷ்ரா எடுத்துக் காட்டுகிறார்.

நாகரிகமற்றோரை முன்னேற்றுவதைக் கடமையாக வரித்துக்கொண்ட வெள்ளைக்காரர்களின் சுமையைக் கண்டு பரிதாபப்படும் ஃபெர்குசனின் அணுகுமுறை வலதுசாரிகளின் எழுச்சியால் முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் பிரிட்டனைவிட அமெரிக்காவில் இத்தகைய குரல்களுக்கு ஆதரவும் மரியாதையும் பெருகியிருப்பதையும் பங்கஜ் மிஷ்ரா சுட்டிக்காட்டுகிறார். நீல் ஃபெர்குசனின் சிவிலைசேஷன் : தி வெஸ்ட் அண்ட் தி ரெஸ்ட் என்னும் புத்தகத்தின் தலைப்பே அவருடைய போக்கை உணர்த்திவிடுகிறது. அனைத்து பலங்களையும் கொண்ட, அற்புதங்கள் நிறைந்த, மனித குலத்துக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரும் ‘தி வெஸ்ட்’ ஒரு பக்கம். இவையனைத்துக்கும் எதிராக உள்ள ‘தி ரெஸ்ட்’ இன்னொரு பக்கம். இப்படித்தான் உலகை ஃபெர்குசன் பிரிக்கிறார். அவரைப் பொருத்தவரை நாகரிகம் என்பது என்ன? மனித வாழ்வில் தொடர்ச்சியாக முன்னேற்றங்களைக் கொண்டுவரும் திறன். கடந்த ஐந்நூறு ஆண்டுகளை எடுத்துவைத்துப் பார்க்கும்போது உலகின் பிற நாடுகளைவிட அதிக அளவிலான முன்னேற்றங்களை மனித வாழ்வில் ஏற்படுத்தியது மேலை நாடுகள்தாம். மேற்கத்திய நாகரிகம் 1500ம் ஆண்டு தொடங்கி ஆறு முக்கிய அம்சங்களில் பிற நாடுகளில் இருந்து வேறுபடுகிறது என்கிறார் ஃபெர்குசன். சொத்துரிமை, போட்டி மனோபாவம், அறிவியல், மருத்துவம், நுகர்வோர் சமூகம், பணி சார்ந்த விழுமியங்கள் ஆகியவையே நாகரிகத்தை இயக்கும் ஆறு ‘கில்லர் ஆப்ஸ்’ ஆகும். இவற்றைக் கொண்டே மேற்கு பிறவற்றைவிட முன்னேறியது; பிறவற்றை ஆளவும் செய்தது.

வலிமையானது பலவீனமானதை ஆள்வது இயற்கையானது, இயல்பானது என்று நிறுவ முயலும் ஃபெர்குசனை ஏற்க மறுக்கிறார் பங்கஜ் மிஷ்ரா. முதலாளித்துவ நவீனத்துவத்தை வந்தடைந்து அதன்மூலம் உலகமயமாக்கலை மேற்கு தோற்றுவித்தது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் ஃபெர்குசன். மேற்கு உண்மையில் பிற நாடுகளைவிடச் சிறந்துள்ளதா என்று அவர் பார்க்க விரும்வில்லை. அது ஏன் சிறந்த விளங்குகிறது என்று மட்டுமே கேட்கிறார். அதாவது, மேற்கு உயர்ந்தது, மற்றவை தாழ்ந்தது என்னும் முன்முடிவுடன் தன் ஆய்வை அவர் தொடங்குகிறார். இது தவறான அணுகுமுறை என்கிறார் பங்கஜ் மிஷ்ரா. வரலாறு இவ்வளவு தட்டையானதோ எளிமையானதோ அல்ல. ஃபெர்குசனின் வாதத்தை மறுக்க சி.ஏ. பெய்லியின் வாதம் ஒன்றை மிஷ்ரா எடுத்துக் காட்டுகிறார். பெய்லியின் பார்வையில், நவீன ஐரோப்பா மற்றும் நவீன அமெரிக்காவின் உருவாக்கத்தில் ஆசியாவின் பங்களிப்பு அழுத்தமாகவே உள்ளது. ஹாம்பர்க், நியூ யார்க் பூர்ஷ்வா முதலாளிகளைப் போலவே சீன முதலாளிகளும் தென் கிழக்கு ஆசிய வர்த்தகத்துக்கும் பண்ட பரிமாற்றங்களுக்கும் பங்காற்றியுள்ளனர். வர்த்தகம் மட்டுமல்ல கலை, அறிவியல், கலாசாரம் என்று பல துறைகளில் ஆசியாவின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடும் வழக்கம் மேற்கத்திய ஆதரவாளர்கள் மத்தியில் நிலவிவருகிறது. காலனியாதிக்கம் சரியானதுதான் என்று வாதிடுபவர்களில் பலர் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்தாம்.

ஃபெர்குசனின் மதிப்பீட்டின்படி பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் என்பது உலகம் பின்பற்றப்படவேண்டிய ஒரு மாடல். தற்போதுள்ள நிலையில் பிரிட்டனின் இடத்தைப் பிடிப்பதற்கான தகுதி கொண்ட ஒரு நாடு அமெரிக்கா. அமெரிக்கா பிரிட்டன் வழியில் நடக்கவேண்டும் என்பது அவர் விருப்பம். ‘செயல்திறன் மிக்க ஒரு லிபரல் சாம்ராஜ்ஜியம் உலகுக்கு இன்றும் தேவைப்படுகிறது என்று நான் நம்புகிறேன்.  அந்தப் பாத்திரத்தை வகிக்க அமெரிக்கா பொருத்தமான நாடு. அதன் பாதுகாப்புத் தேவைகளுக்காக மட்டுமல்ல, மனிதாபிமான நோக்கத்தின்  அடிப்படையிலும் அமெரிக்கா இந்தப் பதவிக்குப் பொருத்தமானதுதான். அதற்கான தனித்துவம் மிக்க தகுதிகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது.’

அதே சமயம் அமெரிக்காவிடம் சில குறைபாடுகளும் உள்ளன என்கிறார் ஃபெர்குசன். அதன் அரசியல் கலாசாரம், பொருளாதார அமைப்பு, சமூகத் தோற்றம் ஆகியவற்றில் சில மாற்றங்களை அமெரிக்கா செய்யவேண்டியிருக்கும் என்கிறார் அவர். பிரிட்டனின் பாதையில் சென்று அதே சமயம் பிரிட்டனின் சில தவறுகளைச் செய்யாமல் இருந்தால் அமெரிக்கா ஓர் வலுவான சாம்ராஜ்ஜியமாக உருமாறும், உலகையும் உருமாற்றும் என்பதே ஃபெர்குசனின் நம்பிக்கை. அமெரிக்காவுக்கு அடுத்த சக்தி அவரைப் பொருத்தவரை சீனா. இந்த இரண்டும் ஒன்றுசேரவேண்டும் என்னும் தன் கனவையும் ஃபெர்குசன் இன்னோரிடத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவும் சீனாவும் கைகுலுக்கிக்கொண்டால் ஒன்றின் குறையை இன்னொன்று நிறைவுசெய்யும் வகையில் அந்தக் கூட்டணி அமையும் என்று அவர் கருதுகிறார்.

உலகின் முன்னேற்றத்துக்கு ஒரு வலிமையான தலைமை தேவையா? பின்தங்கிய நாடுகளை இத்தகைய வலிமையானதொரு தலைமை தத்து எடுத்துக்கொள்வது அவசியமா? தொடக்கத்தில் கார்ல் மார்க்ஸ் இத்தகைய நம்பிக்கையே கொண்டிருந்தார். 1853ம் ஆண்டு நியூ யார்க் டெய்லி ட்ரிப்யூனில் எழுதும்போது  பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் அடிப்படைப் புரட்சியை ஏற்படுத்துகிறது என்றும் ஆசியாவின் சமூக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்றும்தான் குறிப்பிட்டார். இந்த நடைமுறை வலி மிகுந்தது என்றபோதும் பல ஆண்டுகளாக குவிந்துகிடக்கும் பிசகுகள் அகல இந்த ஆட்சிமுறை உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பதை அவர் வெகு விரைவில் கண்டுகொண்டார். தன் கருத்தை உடனடியாகத் திருத்திக்கொள்ள அவர்  தயங்கவில்லை.

0

மேற்கொண்டு வாசிக்க :

  1. Why we ruled the world, Niall Ferguson, niallferguson.com
  2. The Global Empire of Niall Ferguson, Janet Tassel, Harvard Magazine
  3. Watch This Man, Pankaj Mishra, London Review of Books
  4. Civilization : The West and the Rest, Niall Ferguson
  5. Empire: How Britain Made the Modern World, Niall Ferguson