ஜெ : சில குறிப்புகள்

J

சட்டத்துக்கு விரோதமான முறையில் சொத்துகள் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்திருக்கிறது.   இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா, வி.என். சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் அளிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் முதல்வர் பதவியைப் பறித்து அவரைச் சிறையிலும் தள்ளியுள்ள இந்தத் தீர்ப்பு வழக்கத்துக்கு மாறான சில எதிர்வினைகளையும் அசாதாரணமான ஒரு சூழலையும் இங்கே ஏற்படுத்தியிருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

1) நிலப்பிரபுத்துவ மனோபாவம்

அஇஅதிமுக மீது பெரிதளவு பற்றோ ஆர்வமோ இல்லாத   திரளான மக்களும்கூட (குறிப்பாக, பெண்கள்) ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெயலலிதா இழைத்த குற்றங்கள் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டபிறகும்   அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு அவரைக் கொண்டாடாடும் மனோபாவமும் அவர் தண்டிக்கப்பட்டவுடன் உடைந்து அழும் மனநிலையும் நீடிப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்?

நிலப்பிரபுத்துவக் கண்ணோட்டம் நம் சமூகத்தில் வலுவாக வேறூன்றியிருப்பதன் விளைவே இது. நம்மை ஆளும் ஒருவர் கடவுளாகவோ அல்லது குறைந்தபட்சம் எஜமானராகவோதான் இருக்கமுடியும் என்று கருதும் எளிய அதே சமயம் ஆபத்தான இந்த மனோபாவம் தமிழகத்தில் (ஏன், முழு இந்தியாவிலும்கூட) பலமாக வளர்ந்துள்ளது. இந்த எஜமான விசுவாச மனோபாவத்தை ஆட்சியாளர்கள் இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்தி வளர்த்தெடுக்கிறார்கள். ஒன்று, பாப்புலிசம். இரண்டு, அச்சுறுத்தல். ஜெயலலிதா இந்த இரண்டையும் திறமையாகக் கையாண்டவர். ஆனாலும் பின்னதைக் காட்டிலும் முந்தையதே பளிச்சென்று வெளியில் தெரிவதால் அவருடைய பதவி இழப்பைத் தங்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாக மக்கள் கருதுகிறார்கள்.

2) சந்தர்ப்பவாத அமைதி

ஜெயலலிதா அரசின் குறைபாடுகளும் அத்துமீறல்களும் வெளியில் தெரியாமல் போனதற்கும் அவருடைய நல்ல முகம் மட்டுமே பிரகாசமாக வெளியில் தெரிவதற்கும் காரணம் மீடியா (குறிப்பாக, அச்சு மற்றும் காட்சி ஊடகம்). நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து மக்களை மீட்டெடுத்து ஆட்சியாளர்கள் குறித்த மாயைகளை உடைத்தெறிந்து உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டிய கடமை மீடியாவுக்கு உள்ளது. ஆனால் அவர்கள் இவற்றைச் செய்வதில்லை என்பதோடு ஆட்சியாளர்களின் மாய பிம்பங்களை மேற்கொண்டு வலுவாகக் கட்டமைக்கும் பணியையே மேற்கொள்கிறார்கள்.

அரசியல், புலனாய்வு, ஆய்வு என்றெல்லாம் பெயர்கள் இட்டு அவர்கள் உற்பத்தி செய்யும் எழுத்துக்குவியல்கள் கதநாயாக(கி) வழிபாட்டுணர்வை மேலும் ஆழமாக்குகின்றனவே தவிர குறைக்கவில்லை. ஜெயலலிதா அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை வசதியாக மறைத்துவிட்டு தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களையே செய்திகளாக இவர்கள் வழங்குகிறார்கள். செய்தித்தாள்கள், பத்திரிகைகள், டிவி சானல்கள் அனைத்தும் ஜெயலலிதாவை அப்பழுக்கற்ற ஒரு தூய நபராக, புனிதமான ஓர் அரசியல் தலைவராக, துதிபாடத்தக்க ஒரு கடவுளாக மக்கள் முன்னால் தூக்கி நிறுத்துகின்றன. அரை உண்மையான அல்லது போலியான இந்தப் பிம்பங்களை மட்டுமே நீண்டகாலமாக உட்கொண்டு வளர்ந்த மக்களால் திடீரென்று ஜெயலலிதாவை ஓர் ஊழல்வாதியாகக் காணமுடியவில்லை. இந்த முரண்பாடு அழுத்தும்போது கோபமும் சோகமும் வெடிக்கின்றன. மக்களின் இந்தத் தடுமாற்றத்துக்கு மீடியாவும் அதில் இயங்குபவர்களும் ஒரு வகையில் பொறுப்பேற்கவேண்டும்.

3) செயல்படாத கட்சிகள்

ஜெயலலிதாவின் சட்டவிரோதச் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி மக்களுக்கு அரசியலறிவும் விழிப்புணர்வும் ஊட்ட இங்கே எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை. குறிப்பாக, திமுக. தற்போது அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக இயங்கவில்லை என்றபோதும் வரலாறு நெடுகிலும் அதிமுகவை எதிர்த்து அரசியல் களத்தில் செயல்பட்டு வந்த திமுக, தற்போதைய இந்த அசாதாரணமான சூழ்நிலையை கிட்டத்தட்ட அமைதியாகவே கடந்துசெல்ல விரும்புகிறது. இத்தனைக்கும் ஜெயலலிதா மீதான வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டதற்கும் அவருக்குப் பாதகமான (எனவே திமுகவுக்கு அனுகூலமான) தீர்ப்பு அங்கிருந்து வெளிவந்ததற்கும் காரணம் திமுக. இருந்தும் திமுக இந்த வாய்ப்பைத் தன்னுடைய அரசியல் லாபத்துக்காகக்கூடப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்குகிறது. காரணம் திமுகமீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் நீடிப்பதுதான். அதனாலேயே ஜெயலலிதாவைத் தனிமைப்படுத்தி அவரை எதிர்க்கவும் விமரிசிக்கவும் முடியாத நிலைக்கு திமுக தள்ளப்பட்டுவிட்டது. அந்த வகையில், ஆளுங்கட்சியின் தவறுகளை வலுவாகவும் துணிவாகவும் எதிர்க்க இன்று அரசியல் களத்தில் கிட்டத்தட்ட யாருமில்லை.

தமிழகத்தில் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும் ஏன் மத்தியில்கூட இப்போது இதுதான் நிலை. எதிர்க்கட்சி என்பது ஆளுங்கட்சியின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம். பலகட்சி ஜனநாயகத்தின் அடிப்படையும்கூட இதுதான். ஆனால் நடைமுறையில் எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. அவர்களுடைய அரசியல், சமூக, பொருளாதாரக் கண்ணோட்டமும் கொள்கையும் ஒன்றுபோலவே இருக்கின்றன. எனவே, ஊழலிலும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். சிற்சில வேறுபாடுகள் கடந்து இரண்டும் மக்களை ஒன்றுபோலவே ஏய்த்துப் பிழைக்கின்றன.

இந்த உண்மை தெரிந்தும், ஜெயலலிதாவை இன்றுவரை ஒரு புனித பிம்பமாக மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் மீடியா கருணாநிதியை அவ்வாறு பாவிப்பதில்லை என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. கருணாநிதி என்று வரும்போது மட்டும் மீடியாவின் அற உணர்வும் விமரிசனப் பார்வையும் திடீரென்று கூர்மையடைந்துவிடுவதன் பொருள் என்ன? அச்சமா? ஜெயலலிதாமீதான அனுதாபமா? எனில், இந்த அனுதாபத்தின் அடிப்படை என்ன?
இடதுசாரிக் கட்சிகளின் தோல்வியையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். சமரசங்கள் கைவந்தால் மட்டுமே இங்கே தேர்தல் அரசியல் சாத்தியம் என்னும் நிதர்சனத்தை சிபிஐ, சிபிஎம் கட்சிகள் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டுவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். மேலே கண்ட முக்கியக் குறைபாடுகளான நிலப்பிரபுத்துவ மனோபாவம், தனிநபர் வழிபாடு, அரசியல் உணர்வற்ற நிலை, மீடியாவின் சார்புத்தன்மை போன்றவற்றுக்கு எதிராகப் போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இடதுசாரிக் கட்சிகள் போதுமான உழைப்பைச் செலுத்தவில்லை, போதுமான அளவுக்கு மக்களை நெருங்கவில்லை.

4) மழங்கடிக்கப்படும் அறிவு

வேலை, வீடு, குடும்பம், பிரச்னைகள் என்று ஒரு சிறிய வட்டத்தில் சிக்கி, மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களால் ஆட்சிமுறை குறித்தோ அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்தோ ஆராயவோ, விவாதிக்கவோ முடிவதில்லை. இவர்களில் பலர் அரசியலை சினிமாவின் நீட்சியாக, அதாவது மற்றொரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்கின்றனர். தம்மைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளின் அடிப்படைகளைக்கூட தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புவதில்லை. அரசியல் என்பது அவர்களுக்குப் படிக்கவும் பார்க்கவும் கிடைக்கும் சுவாரஸ்யமூட்டும், பதைபதைப்பூட்டும், பிரமிக்கவைக்கும், அதிர வைக்கும் கதைகள் மட்டுமே. தாம் வாசித்துக்கொண்டிருப்பது (அல்லது பார்த்துக்கொண்டிருப்பது) நிஜமா, கற்பனையா என்று தெரிந்துகொள்ளக்கூட அவர்கள் விரும்புவதில்லை.

அரசியல் உணர்வற்ற, அரசியலற்ற இத்தகைய மக்கள் மிக எளிதாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள். அவர்களைத் தேவைப்படும்போது தூண்டிவிடமுடிகிறது. தலைவருக்காக இவர்களில் சிலர் உயிரைக் கொடுக்கவும், எடுக்கவும் முன்வருகிறார்கள். இவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்திக்கொள்ளமுடிகிறது. தேவைப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினரை இன்னொன்றுக்கு எதிராகத் திருப்பிவிட முடிகிறது. மக்களின் அறிவு மழங்கடிக்கப்பட்ட நிலையில் இருக்கும்வரை குருட்டுத்தனமான தலைவர் ஆராதனையும் இன்னபிற சமூக அவலங்களும் தொடரவே செய்யும். இதைத்தான் அரசியல் கட்சிகளும்  விரும்புகின்றன.

5) மத அரசியலும் சீர்திருத்தமும்

ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆர்வமும் வேகமும் தற்போதைக்கு பாஜகவிடம் மட்டுமே இருக்கிறது என்பதைப் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். இது உடனடியாகச் சாத்தியப்படும் என்று சொல்லமுடியாது என்றபோதும் பாஜக அந்தத் திசையில்தான் இனி செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தில் காலூன்ற இரு வழிகளை  பாஜக கையாளும் என்று எதிர்பார்க்கலாம். ஒன்று, இந்து மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது.  இரண்டு, திராவிட அரசியலுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்துவது.

பிற மாநிலங்களைப்போலன்றி மத அடையாளங்கள் தமிழகத்தில் முக்கியத்துவம் பெறாமல் இருப்பதற்குக் காரணம் அத்தனை குறைபாடுகளையும் கொண்டிருக்கும் இந்த இரு பெரும் திராவிட அரசியல் கட்சிகள்தாம் என்பதை மறுப்பதற்கில்லை. தற்போதைய வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொண்டு பாஜக தனது மதவாத அரசியலை இங்கே பரப்பத் தொடங்கும்போது அதை எதிர்கொண்டு முறியடிக்கவேண்டிய அவசியம் திமுகவுக்கு இருக்கிறது. வேறு காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், பதவிக்காகவாவது இதனை திமுக செய்தாகவேண்டும். அப்போது திமுக சில சமரசங்களைச் செய்தாகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.

பெரும்திரளான மக்கள் பாஜக பக்கம் நகர்ந்து செல்வதைத் தடுக்க திமுகவுக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, தனது நாத்திகவாதத்தை (என்றால் மிச்சமிருக்கும் அதன் கூறுகள் அனைத்தையும்) அது முற்றிலுமாகக் கைவிடவேண்டும். அல்லது, தனது நாத்திகவாதக் கொள்கையைத் தீவிரமாக்கி, வகுப்புவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிராக இப்போதிருந்தே குரல் கொடுத்துப் போராடத் தொடங்கவேண்டும். கிட்டத்தட்ட இதே இரு வழிகள்தான் இடதுசாரிக் கட்சிகளுக்கும் உள்ளன.

0

உற்பத்தி

சங்க காலம் / தேடல் – 14

Agriculture_farm_Pune_Maharashtra_India

தொல்தமிழர்களின் தன்னிச்சையான உணவு உற்பத்தி பெரும்பாலும் நிலம் சார்ந்ததாகவே அமைந்திருந்தது. அவர்கள் தங்களை உழுகுடிகளாகவே அடையாளம் கண்டனர். வயல்வெளியில் அவர்களின் வாழ்வு மையம் கொண்டது. உழுதல் அவர்களுக்கு உடலுழைப்பின் அருமையினைக் கற்றுத் தந்தது. உழுது உற்பத்தி செய்வதையே அவர்கள் நாகரிகமாகக் கருதினர்.

செய்“ என்றால் “வயல்“ என்று பொருள். நிலத்தினை அதன் தன்மைக்கு ஏற்ப பல சொற்களில் குறிப்பிட்டுள்ளனர். வெவ்வேறு தன்மைகொண்ட நிலங்களைக் குறிக்கும் சொற்களின் பட்டியல் வருமாறு – “1.ஆற்றுவைப்பு ஆற்றின் ஒதுக்கத்தால் சாகுபடியாகும் நிலம் 2. அருக்கக் கொல்லை ஆற்றோரத்தில் உள்ள நிலம் 3. படுகை ஆற்றோரத்து நிலம். 4. கரைவழி ஆற்றோரமான நிலம். 5. காற்புரவு ஆற்றுப் பாய்ச்சல் நிலம். 6. வெளிவாய்ப் படுகை ஆறு, குளங்களை அடுத்துப் புறம்பாக உள்ள நிலம். 7. இறைப்புப் பட்டரை கிணற்றுப் பாய்ச்சலுள்ள நிலம். 8. ஏற்றப்பட்டரை ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழ்ந்த நிலம். 9. தூர்வை கிணற்றைச் சேர்ந்த நிலம். 10. ஆயக்கட்டு ஒரு நீர்நிலையை ஆதாரமாகக் கொண்ட நிலம். 11. நன்செய்நிலம் நீர்வளம் நிறைந்துள்ள நிலம். 12. புன்செய் நிலம் வானம் பார்த்த நிலம், கொல்லை நிலம். 13. அளக்கர் திணை கடலாற் சூழப்பட்ட நிலம். 14. வானம் பார்த்த நிலம் மழைநீரால சாகுபடி செய்யப்படும் நிலம் 15. எரங்காடு பருத்தி விளையும் புன்செய் நிலம். 16. நாற்றங்கால் விதைகளை விதைத்து நாற்று பயிரிடும் நிலம். 17. சாட்டி அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம், உரமிடப்பட்டிருக்கும் நிலம். 18. குளக்கீர் குளத்தில் மதகையடுத்துள்ள வயல், குளம் பார்த்த வயல் 19. நகரி அரசுக்குரிய புறம்போக்கு. 20. பெரும்பேறு அரசுக்குரிமையான நிலம். 21. சூன் புறம்போக்கு நிலம். 22. குடிவார நிலம் குடிகட்குப் பயிரிடும் உரிமையுள்ள நிலம். 23. பள்ளத்தாக்கு இரண்டு மேடுகட்கு நடுவேயுள்ள நிலம். 24. பள்ளம் பள்ளத்தில் உள்ள நிலம், தாழ்ந்த நிலம். 25. தில்லியம் புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம். 26. உறாவரை பிறர் உள்ளே வராத எல்லையை உடைய நிலம். 27. எடார் வெளிநிலம். 28. செய்யுள் விளைநிலம் 29. தொய்யில், செறிப்பு உழுநிலம். 30. பண்ணை வயல் 31. செந்திரம் செய்தல் நிலம். 32. பாசல் பசிய விளைநிலம் 33. நன்னிலம், நன்செய் நெல் விளையும் புலம். 34. படப்பு கொல்லை. 35. துடவை உழவுக் கொல்லை. 36. விதைப்புனம் புதுக்கொல்லை. 37. முதை பழங்கொல்லை. 38. பின்னைவீட்டுக் கொல்லை 39. திருத்து நன்செய் நிலம். 40. தாக்கு நெல் வயல். 41. வற்புலம் மேட்டு நிலம். 42. தகர், தராய் மேட்டு நிலம். 43. கருஞ்செய் நன்செய் நிலம். 44. காங்கவீனம் தினைவிளையும் நிலம். 45. தினைப்புனம் தினைவிளையும் நிலம். 46. மலைப்புனம் தினைவிளையும் நிலம். 47. சேற்றுப்புழி உழப்பட்ட நிலம். 48. விரைகால் விதைக்குரிய நிலம். 49. தடி சிறு வயல். 50. காணியாட்சி உரிமை நிலம். 51. காடாரம்பம் நீர்ப்பாசனமில்லாத நிலம். 52. வட்டகை அடைப்பு நிலம். 53. எகபலி ஒருபோக நிலம். 54. ஓராண் காணி ஒருவனுக்கே உரிய நிலம். 55. காணி நிலம் நூறு குழி அளவுள்ள நிலம். 56. கந்தக விரைப்பாடு ஐந்து ஏக்கர் அளவுள்ள நிலம்.45

நன்செய்ப் பயிர்கள்

நீராதாரம் உள்ள நல்ல நிலத்தை நன்செய் அல்லது நஞ்செய் என்றனர். இதில்தான் நெல்லும் கரும்பும் விளைவித்தனர்.

தரமான நெல்லை விளைவிக்க வேண்டுமெனில், நிலம் நன்கு பண்படுத்தப் பட்டிருக்கவேண்டும். அக்காலத்தில் நிலத்தை எவ்வாறு பண்படுத்தினர் என்பதனைப் பெரும்பாணாற்றுப்படையின் 197 முதல் 201 வரையிலான அடிகள் விளக்கியுள்ளன.

நெல் வயலுக்கு அருகில் உணவுப் பொருள்களால் நிறைந்த குடியிருப்புகளை உடைய உழவர்கள் நிலத்தைப் பல முறை உழுதனர். உழவுத் தொழிலில் நன்கு பயின்ற பெரிய எருதுகளைக் குடியிருப்பின் முன்பகுதியில் நுகத்தடியில் பூட்டி உழுவதற்குச் செல்வர். பெண் யானையின் வாய்போன்று வளைந்த வாயை உடைய கலப்பையின் உடும்பு முகம் போன்ற கொழு, நிலத்தில் முழுவதும் அழுந்தும்படி வளைய உழுதனர். ஒருமுறை உழுதலை “ஒரு சால் உழவு“ என்றும் இருமுறை உழுதலை “இருசால் உழவு“ என்றும் கூறுவர். எனவே, “செஞ்சால் உழவர்“ என்றதால் நிலத்தைப் பலமுறை உழுதனர் என்பது தெரியவருகின்றது. உழவு சீராய் அமைய இரு எருதுகளும் ஒத்து நடக்க வேண்டும். இதனையே “நடை நவில் பகடு“ என்று அவ் அடிகளில் குறிக்கப்பெற்றுள்ளது. பெண் யானையின் வாய் போன்ற கலப்பை, உடும்பு முகம் போன்ற கொழு என்ற உவமைசார்ந்த விளக்கங்கள் இன்றைய கலப்பையின் அமைப்பினை ஒத்துள்ளன.

அக்காலம் முதல் இக்காலம் வரை நாம் கலப்பையின் அமைப்பினையும் கொழுவின் அமைப்பினையும் மாற்றவில்லை. “உடுப்புமுக முழுக்கொழு மூழ்க ஊன்றி“ என்ற அடியால் நிலத்தை ஆழ உழுதனர் என்பது தெரியவருகின்றது. நிலத்தைப் பல ஏர்களைக் கொண்டு உழும்போது ஒவ்வொரு ஏரும் ஒரு வளையமாகப் போட்டு நிலம் முழுவதும் உழுது முடிப்பது வழக்கம். அவ் வழக்கம் இன்றும் (இயந்திரம் கொண்டு உழுதாலும்) பின்பற்றப்படுகின்றது. அதே வழக்கம் அக்காலத்திலும் இருந்துள்ளது என்பதனை “வளா கோலுதல்“ அல்லது “தொடுப்பெறிந்து உழுதல்“ என்ற சொற்களால் அறியமுடிகின்றது. “தொடுப்பெறிந்து உழுதல்“ என்பது, கலப்பையால் வளைய உழுதல் என்ற பொருள்படும்.

அக்காலத் தமிழர் உழவுக்கு எருதினை மட்டுமல்ல எருமையினையும் பயன்படுத்தினர் என்பதனை நற்றிணையின் 60வது பாடல் உணர்த்தியுள்ளது. எருமை உழவு வேகமாக நடைபெற்றதா என்பது ஐயம்தான். சங்க கால எருமை மாடு மட்டும் சுறுசுறுப்பாகவா இருந்திருக்கும்?

அக்கால மக்கள் நெல் வித்தில் பல வகைகளை உருவாக்கியிருந்தனர். சான்றாக, கருடன் சம்பா, சம்பா, சீரகச் சம்பா, சின்னச் சம்பா, பெரிய சம்பா, வாடைச் சம்பா, மல்லிகை சம்பா, கம்பன் சம்பா, குண்டு சம்பா, கைவளை சம்பா, குங்குமச் சம்பா, புனுச் சம்பா, காடைச் சம்பா, குன்றிமணிச் சம்பா, தோரை, வெண்ணெல், கார், அன்னதானம், குறுவை, அறுபதாங்கோடை, மிளகி, செம்மிளகி, சிறுமணி போன்றவற்றைக் காட்டலாம்.

தேர்ந்தெடுத்த விதைநெல்லினைக் கொண்டு நாற்றினை உருவாக்கினர். பின்னர் அந்த நாற்றுகள் உரிய அளவு விளைந்தவுடன் உழவர்களும் உழத்தியர்களும் இணைந்து நாற்றினை நட்டுள்ளனர். இதனை நற்றிணையின் 60 ஆவது பாடல் தெரிவித்துள்ளது. அப்பாடலில், நிலத்தில் சிறிது நீரினைத் தேக்கிவைத்து நாற்று நடுதல் செயல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பெற்றுள்ளது. அதே முறையைத்தான் இப்போதும் நம் உழவர்கள் பின்பற்றிவருகின்றனர்.

நெற்பயிர்கள் தழைத்து, வளர்ந்து, தூர்பல விட்டுக் கிளைத்த பின்னர், கருப்பிடித்து, கதிர் முற்றின. விளைந்த பயிரின் முற்றிய கதிர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி காற்றில் ஒலி எழுப்பிய காட்சியினை அகநானூற்றின் 243ஆவது பாடல் காட்டியுள்ளது. அந் நெற்பயிர்கள் மெல்லிய வாழைத்தாறின் நுனியில் தொங்கும் பூவை அசையச் செய்கின்ற அளவுக்கு வயல்களில் நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்திருந்தன என்று நெற்பயிர்களின் உயரத்தை நற்றிணையின் 400 ஆவது பாடல் அளந்து கூறியுள்ளது. இது மிகைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அக்காலத்தின் நெல்லின் தரம் அவ்வாறு இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவை இக்கால நெற்பயிர்களைப் போலச் செயற்கை உரம் உண்டு வளர்ந்தவை அல்ல!

நெல்வயலைக் கால்நடைகளிலிருந்து பாதுகாப்பதற்காக வயலைச் சுற்றி வேலியமைப்பது இக்கால வழக்கம். அக்காலத்தில் வேலியாகக் கரும்பினைப் பயிரிட்டுள்ளனர். இதனைப் புறநானூற்றின் 386ஆவது பாடலால் அறியமுடிகின்றது. ஒரு பயிரைக் காக்க வேறு ஒரு பயிர் வேலியாக அமைக்கப்பட்டுள்ளமை தொல் தமிழரின் உற்பத்திப் பெருக்க நுட்பத்துக்கு ஒரு சான்று. நெல்வயலைத் தொடர்ந்து கரும்புப் பாத்திகளை அமைத்துள்ளனர். இதனை அகநானூற்றின் 306ஆவது பாடல் சுட்டியுள்ளது.

எவ்வளவு விளைந்தது?

புறநானூற்றின் 391ஆவது பாடலில் ஒரு புலவர் ஒரு மன்னரை வாழ்த்துகிறார். அவ் வாழ்த்தில் உன் நிலங்களில் உரிய காலத்தில் மழை பொழிந்து, ஒரு வேலி நிலத்துக்கு ஆயிரம் கலம் நெல் விளையட்டும் என்று குறிப்பி்ட்டுள்ளார். இவ் வாழ்த்து மிகைப்படுத்தியது அல்ல. அரிதானது என்றாலும் அது நிகழக்கூடியதுதான். அக்காலத்தில் ஒரு வேலி என்பது இ்க்காலத்தில் ஏழு ஏக்கர். காவிரி நதியிலிருந்து நீர் பெற்ற நிலங்களில் இத்தகைய விளைச்சல் இருந்துள்ளது. அது குறித்துப் பொருநராற்றுப்படையின் 242 முதல் 248வரையிலான அடிகள் விளக்கியுள்ளன. நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை அரிவாளால் அறுத்து குவித்தனர். அது மலைபோல் இருந்தது. அவற்றைப் பதரடித்து நெல் மணிகளாக்கி மூடைகளில் அடைத்தனர். அந்த மூடைகள் எங்கும் பரவியிருந்தன. இவ் இலக்கியத்தில் உழவர்களைக் “களமர்“ என்றும் நெல்லை “வத்தம்“ என்றும் புலவர் குறித்துள்ளார்.

சோழநாட்டுப் (சோணாடு) பயிர்வளம் பற்றிப் பட்டினப்பாலையின் 13 முதல் 19 வரையிலான அடிகள், “குலைகளை உடைய தென்னை, தார்களை உடைய வாழை, காய்களை உடைய கழுகு, மணங்கமழும் மஞ்சள், சுவையுள்ள கனிகளைத்தரும் மாமரங்கள், குலைகளை உடைய பனை, கிழங்கினை உடைய சேம்பு, முளையை உடைய இஞ்சி“ என ஒரு பட்டியல் தந்துள்ளன.

கரும்பு விளைவித்தலும் அதனைப் பிழிந்து சாறு எடுத்துப் பாகுகாய்ச்சி வெல்லம் செய்தலும் தமிழரின் மற்றுமொரு முதன்மைத் தொழிலாக இருந்துள்ளது. இதுபற்றிப் பதிற்றுப்பத்தின் 75ஆவது பாடலில் குறிப்பு உள்ளது.

கரும்பு வளம் மிகுந்திருந்ததால்தான் சேற்றில் சிக்கிய வண்டிச்சக்கரங்களை மீட்கக் கரும்புக்கட்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை அகநானூற்றின் 116ஆவது பாடல் தெரிவித்துள்ளது. கரும்பு வளம் தன்னிகரற்று இருந்ததால் கரும்பினைப் பிறருக்கு இலவசமாகவும் வழங்கியுள்ளனர். இதுபற்றிப் புறநானூற்றின் 28ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது. கரும்பு மிகுந்திருந்ததால் அவற்றைப் பிழிய மனித உழைப்பு மட்டும் போதுமானதாக இல்லை. ஆதலால், கரும்பினைப் பிழிய எந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். அந்த ஒலி ஆண் யானை பிளிறுவதுபோல் இருந்ததாக ஐங்குறுநூற்றின் 55ஆவது பாடலும் மதுரைக்காஞ்சியின் 258ஆவது பாடலும் பெரும்பாணாற்றுப்படையின் 259, 260 ஆகிய அடிகளும் மலைபடுகடாமின் 340, 341ஆகிய அடிகளும்தெரிவித்துள்ளன. கரும்புச்சாறையும் விரும்பியோருக்கு இலவசமாகத் தந்ததாகவும் கரும்புச்சாறினைக் காய்ச்சிக் கட்டியாக்கி வெல்லப்பாகு செய்ய ஆலைகள் இருந்ததாகவும் அந்த ஆலைகளிலிருந்து எழும் புகை மண்டியதாகவும் பெரும்பாணாற்றுப்படையின் 260 முதல் 262 வரையிலான அடிகளும் அகநானூற்றின் 237ஆவது பாடலும் கூறியுள்ளன. இந்த அடிகளில் “விசயம்“ என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இச்சொல் கருப்பஞ்சாறு, கட்டி ஆகிய பொருளில் ஆளப்பட்டுள்ளது. இவ் வெல்லப்பாகினால் செய்யப்பட்ட பால் கலந்த இனிப்புப்பண்டமும், தின்பண்டங்களும் விருந்தினருக்கு அளிக்கப்பட்ட செய்தியினைப் புறநானூற்றின் 381ஆவது பாடல் தெரிவித்துள்ளது. இப்பாகிலிருந்து “தீஞ்சேற்றுக்கடிகை“ என்ற கற்கண்டினைச் செய்ததாக மதுரைக்காஞ்சியின் 532ஆவது அடி தெரிவித்துள்ளது.

புன்செய்ப் பயிர்கள்

மழையை மட்டுமே நம்பியிருக்கும் நிலத்தைப் புன்செய் அல்லது புஞ்செய் என்றனர். இதனை மானாவாரி நிலம் என்றும் அழைக்கின்றனர். இந்நிலத்தில் பருத்தி, தினை, வரகு போன்றன விளைவித்தனர்.

புன்செய் நிலத்தில் மழைக்காலம் முடிந்ததும் அம் மண்ணைப் பக்குவப்படுத்தி வரகு அல்லது தினை விதைத்தனர். அவை முளைத்தவுடன் அவற்றுடன் இணைந்து முளைத்த களைகளையும் நெருக்கமாக முளைத்துவிட்ட வரகு அல்லது தினைப் பயிர்களையும் நீக்குவதற்காகப் “பல்லியாடுதல்“ என்ற செயலினைச் செய்தனர். இச்செயல் குறித்த தகவலைப் புறநானூற்றின் 120ஆவது பாடலில் காணமுடிகின்றது. “பல்லியாடுதல்“ குறித்த விளக்கத்தினை த. சாமிநாதன், “நெருங்கி முளைத்த பயிர்களைக் கலைக்கவும் எளிதில் களை எடுப்பதற்கும் கூரிய இரும்பு ஆணிகள் பலகையில் கீழ் நோக்கி இருக்குமாறு பொருத்தப்பட்டு வளையங்களில் கயிறுகட்டி, வாய்ப்பூட்டு மாட்டப்பட்ட உழவுக் காளை பூட்டி உழுதல் பல்லியாடுதல் எனப்படும்“ என்று தந்துள்ளார்.

வரகு அல்லது தினை அறுவடைக்குப்பின்னர் அந்நிலத்தல் தொடர்ச்சியாக வேறு பயிர்களையும் விளைவித்துள்ளனர். வரகு, தினை, கேழ்வரகு, கவ்வை (எள்), அவரை, பசிய பயற்றம் (பாசிப்பயறு), உழுந்து, பெரும்பயறு போன்றவற்றைச் சுழற்சிமுறையில் தொடர்ந்து விதைத்து, விளைவித்துள்ளனர். இதனையும் அப் பாடலடிகளின் வழியாக அறியமுடிகின்றது. வெவ்வேறு பயிர்களைச் சுழற்சிமுறையில் பயிரிடுவதால் மண் வளம் காக்கப்படுவதோடு, பல்வேறுபட்ட தானிய இருப்பும் கிடைக்கப்பெறும். ஊடுபயிராகவும் அவரை பயிரிடப்பட்ட செய்தியினை அகநானூற்றின் 294 மற்றும் குறுந்தொகையின் 82 ஆகிய பாடல்கள் தெரிவித்துள்ளன. பலா மரத்தின் மீது மிளகுக் கொடியினைப் படரவிட்டும் அதன் கீழ் மஞ்சள் செடியைப் பயிரிட்டும் இருந்தமையைச் சிறுபாணாற்றுப்படையின் 42 முதல் 44 வரையிலான அடிகளின் வழியாக அறியமுடிகின்றது. “ஊடுபயிரால் முதன்மைப் பயிருக்கு எத்தகைய இடையூறும் இல்லை“ என்பதனையும் “ஊடுபயிர்களின் வளர்ச்சியால் முதன்மைப் பயிருக்குப் பாதுகாப்பும் வளமும் உண்டு“ என்பதனைத் தொல் தமிழர் உணர்ந்திருந்தனர்.

ஒரு சிறுவன் பெரிய தேங்காயை உண்டுவிட்டு, அது திகட்டவே, தன் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள வைக்கோல் போரின் மீது ஏறி பனம்பழத்தைப் பறிக்க முயன்றதாகப் புறநானூற்றின் 61ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது. இப் பாடலில் மூன்று வகையான வளங்கள் சுட்டப்பெற்றுள்ளன. பனைமரம் உயரத்துக்கு வைக்கோல் போர். அதாவது, நெல்வளம் மிகுதி என்பது புலப்படுத்தப்படுகின்றது. தேங்காயும் பனையும் சிறுவர்கள் விளையாட்டாக உண்டு மகிழும் வகையில் பெருமளவில் விளைந்திருந்தமை.

குடிசைகளின் முன் மஞ்சள் பயிரிட்டனர். அவர்களின் குடிசைக்கு அருகிலிருந்த தோப்புகளில் பலா மரங்கள் சக்கையற்ற சுளைகளைத் தருவனவாக இருந்தன. இத்தோப்பில் இளநீர், வெண்ணிற வாழைப்பழங்கள், நுங்கு போன்றன விளைந்திருந்தன. இச்செய்திகளையெல்லாம் பெரும்பாணாற்றுப்படையின் 353 முதல் 362 வரையிலான அடிகள் குறிப்பிட்டுக் கூறியுள்ளன. அவர்கள் மஞ்சள், இஞ்சி, மிளகு, வள்ளிக்கிழங்கு போன்றனவற்றையும் விளைவித்தனர். மலைப் பகுதிகளிலிருந்த சந்தன, அகில் மரங்களை வெட்டி நிலத்தைப் பண்படு்த்திக் குட்டையான கதிர்களை உடைய தோரை என்ற நெல்வகையினையும் நெடிய தாளை உடைய வெண்சிறுகடுகுகையும் ஐவனநெல் என்ற வெள்ளிய நெல்வகையையும் இஞ்சி, மஞ்சள், மிளகு முதலியவற்றைப் பயிரிட்டனர். இச்செய்திகளை மதுரைக்காஞ்சியின் 286 முதல் 289வரையிலான அடிகள் உரைத்துள்ளன.

காத்தல்

தினைப்புனத்தைக் காக்கப் பெருமளவில் மகளிர் பணியாற்றியுள்ளனர். அவர்கள் அத்தினைப் புனத்தை விலங்குகள், பறவைகளிடமிருந்து காப்பதற்காக வள்ளைப்பாட்டுப் பாடியும் கவண் கல் எறிந்தும் பறைகொட்டியும் பாடுபட்டமை பற்றி மலைபடுகடாம் நூலின் 342, 343 ஆகிய அடிகள் தெரிவித்துள்ளன.

காட்டுப் பலா மரங்களில் விளைந்து கனிந்த பலாப் பழங்களைக் குரங்குகளிடமிருந்து காக்கக் கானவர்கள் ஓர் உத்தியினைப் பயன்படுத்தினர். பழுத்தப் பழம் நிறைந்த பலா மரங்களில் வலையை மாட்டியுள்ளனர். இச்செய்தியினைக் குறுந்தொகையின் 342ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

தொல்தமிழர்கள் தங்களின் உழவு நடவடிக்கைகளை மருதநிலம் சார்ந்த நன்செய் நிலங்களில் மிகுதியாக மேற்கொண்டனர். அவர்கள் பெருமளவில் விளைவித்தது நெல்லும் கரும்பும் மட்டுமே. இயற்கையாகவே இவ்விரண்டும் அந்நிலச் சூழலுக்கு ஏற்ற பயிராகவும் இருந்தன. நெல்லிலிருந்து பெறப்படும் அரிசியும் அதனால் உண்டாக்கப்பட்ட உணவும் மருதநில மக்களின் நாகரிகமான வளமாகவும் பொருளாதாரமாகவும் இருந்தன.

அடிக்குறிப்புகள்

  1. http://tamilarnaagarigam.blogspot.in/2012/09/blog-post_2907.html

  2. சாமிநாதன், ., சங்க காலத் தொழில்நுட்பம், பக்.5,6.

 – –

காலனியத்தின் புதிர்கள்

அத்தியாயம் 2
article-1298569-02F49E4C0000044D-94_468x286

ஐரோப்பாவில் முதலாளித்துவம் வளர்ச்சி கண்டதற்கும் தொழில்மயமாக்கல் துரிதமடைந்ததற்கும் காலனியம் பேருதவி புரிந்தது. ஐரோப்பிய முதலாளித்துவத்தைப் பிறப்பிப்பதற்கு காலனியம் ஒரு மருத்துவச்சியாகப் பங்காற்றியது என்றுகூடச் சொல்லலாம் என்கிறார் அனியா லூம்பா. ஐரோப்பிய காலனயாதிக்கத்துக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை 19ம் நூற்றாண்டு மற்றும் 20ம் நூற்றாண்டு பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஐரோப்பிய அறிவை நீட்டிப்பதன்மூலம் இந்தியத் துணைகண்டத்தை முன்னேற்றலாம் என்று 1854ம் ஆண்டு கல்வித் துறை சார்ந்த ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆங்கிலக் கல்வி இந்தியாவை வளர்த்தெடுக்கும் என்று பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகள் மட்டுமல்ல பல இந்தியர்களும்கூட நம்பினர். இந்தியாவின் பரந்து விரிந்த இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் திறன் ஆங்கிலக் கல்விமூலம் இந்தியர்களுக்குக் கைக்கூடும் என்பது அந்த நம்பிக்கையின் ஒரு பகுதி. கவர்னர் ஜெனரல் லார்ட் ஆம்ஹெர்ஸ்ட் என்பவருக்கு ராஜா ராம்மாகன் ராய் எழுதுகிறார். சமஸ்கிருதம் மற்றும் அரபி பெர்ஷியன் கல்விக்கு அரசு ஆதரவு அளித்தால் அது ’இந்தியாவை இருளில்தான் வைத்திருக்கும்’.

கார்ல் மார்க்ஸ் காலனியத்தை மனிதச் சாரத்தைக் கொள்ளையடிக்கும் முதலாளித்துவமாகக் கண்டார். பணத்துக்கும் பண்டத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முதலாளித்துவம் மனிதர்களையும் ஒரு பண்டமாகவே பார்க்கிறது. காலனியம் மனிதர்களைச் சுரண்டுவதோடு நின்றுவிடாமல் மனிதப் பண்புகளையும் அழித்துவிடுகிறது. இவ்வாறு செய்யும்போது அது காலனியவாதிகளையும் சேர்த்தே தரம் தாழ்த்துகிறது.   Discourse on Colonialism என்னும் நூலில் Aimé Césaire  இதனை எளிமையாக்கித் தருகிறார். ‘காலனியாதிக்கம் என்பது அனைத்தையும் பண்டமாக்கும் முறை’.

காலனியத்தின் மிக முக்கியமான அதே சமயம் மிக விநோதமாகத் தோற்றமளிக்கக்கூடிய சில பண்புகளை பிபன் சந்திரா சுட்டிக்காட்டுகிறார். காலனியம் சில சமயம் காலனி நாட்டுக்கு சில நன்மைகளை அல்லது அவ்வாறு தோற்றமளிக்கக்கூடிய சில செயல்களைச் செய்கிறது. காலனி நாட்டில் உள்ள உயர் வர்க்கத்தினருக்கு எதிராகச் சில சட்டத்திட்டங்களை அது ஏற்படுத்துகிறது. தொழிற்சாலைச் சட்டம், குத்தகை மற்றும் கந்து வட்டிக்கு எதிரான சட்டங்கள் ஆகியவற்றை அது கொண்டுவருகிறது. சிறுபான்மைச் சமூகங்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறது. காலனி நாட்டில் நிலவும் சில பிற்போக்குக் கூறுகளுக்கு எதிராகச் சில சீர்திருத்தங்களை முன்மொழிந்து செயல்படுத்தவும் ஆரம்பிக்கிறது. இந்த முரண்பாட்டை பிபன் சந்திரா ஆராய்கிறார். தான் அடிமைப்படுத்த விரும்பும் ஒரு நாட்டில் உள்ள சில முறைகேடுகளைக் களையவேண்டும் என்று ஏன் ஒரு காலனி நாடு பிரயத்தனப்படுகிறது? இந்தியாவில் உள்ள வளங்களைச் சுரண்டுவதுதான் பிரிட்டிஷ் காலனியத்தின் நோக்கம். அது எதற்கான இங்குள்ள சிறுபான்மையினர்மீது அக்கறை கொள்கிறது? எதற்காக இங்குள்ள செல்வந்தர்களின் அதிகாரத்தைக் கலைக்கப் பார்க்கிறது? இந்தியாவில் தொழிலாளர் நலச்சட்டங்களை ஏற்படுத்தவேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் அமைப்பு ஏதேனும் குரல் கொடுக்கலாம். ஒரு காலனிய அரசு ஏன் அதைச் செய்யவேண்டும்? இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் குறித்து லண்டன் தொழிலதிபர்கள் வருத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியுமா? யூத, அரேபிய இன எதிர்ப்பாளர்கள் இந்தியச் சிறுபான்மையினர் நலன் குறித்து அக்கறையுடன் சிந்திக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா? இன வேறுபாட்டைக் களையமுடியாத ஓர் வெள்ளை அரசு இந்தியா சாதி வாரியாகப் பிரிந்திருப்பதைப் பற்றி மட்டும் கவலைக்கொள்கிறது என்று எடுத்துக்கொள்ளமுடியுமா?

பிபன் சந்திரா இந்த விசித்திரத்தை விளக்குகிறார். ‘சில குறிப்பிட்ட காலத்துக்கு, சில குறிப்பிட்ட நிலைமைகளில் காலனிய அரசு நிலப்பிரபுக்கள் மற்றும் குத்தகை விவசாயிகள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள், உயர் சாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆகியோரை எதிரெதிராக நிறுத்தவு இது வழிவகுக்கின்றது. அனைத்து வகையான பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினரை ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்தவும் இது வழிவகுக்கின்றது.’

இதன் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் ஆட்சியை இங்குள்ள செல்வந்தர்களும் நிலப்பிரபுக்களும்கூட எதிர்க்கத் தொடங்கினர். அதாவது காலனி அரசின் ஆளும் வர்க்கத்துக்கும் காலனி நாட்டின் ஆளும் வர்க்கத்துக்கும் இடையில் மோதல்கள் வெடித்தன. பிபன் சந்திரா எழுதுகிறார். ‘போலந்து அல்லது எகிப்தைப் போல, காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்துக்கு பெரும் நிலப்பிரபுக்கள்கூட தலைமை தாங்கமுடியும்.’ இந்தப் போராட்டத்தை மேலும் நுணுக்கமாக ஆராயும் பிபின் சந்திரா ஒரு புதிய வெளிச்சத்தை அளிக்கிறார். ஒடுக்க வந்த ஆளும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஆளும் வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் அல்லது போட்டி தேசியவாதம் என்னும் கருத்தாக்கத்தைத் தோற்றுவிக்கிறது. அதாவது, ‘உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர் வர்க்கத்தவருக்கு இடையில் அதிகாரத்துக்காக நடக்கும் போராட்டத்தின் விளைவே தேசியவாதம் எனும் கோட்பாடு.’
train-e1366715162410

காலனிய அரசு என்பது அடிப்படையில் ஒரு முதலாளித்துவ அரசு என்பதையும் பிபன் சந்திரா நிறுவுகிறார். ‘ஒரு காலனிய அரசு முதலாளித்துவச் சட்டங்களையும், சட்ட அமைப்புகளையும், முதலாளித்துவச் சொத்துறவுகளையும், சட்டத்தின் ஆட்சியையும், அதிகார வர்க்க நிர்வாகத்தையும் பல்வேறு கட்டங்களில் புகுத்துகின்றது. ஆதலால் காலனியாதிக்க முதலாளித்துவ நாட்டுக்கு ஏற்ப அது எதேச்சதிகார அரசாகவோ அல்லது ஆப்பிரிக்காவிலுள்ள பல காலனிகளைப்போல் பாசிச அரசாகவோ அல்லது இந்தியா போல் அரை எதேச்சதிகார மற்றும் அரை ஜனநாயக அரசாகவோ இருக்கலாம். அது எப்போதும் முழுமையான ஜனநாயக அரசாக இருக்கமுடியாது.’

ஒரு காலனி அரசு இப்படித்தான் தனது காலனி நாட்டிடம் நடந்துகொள்ளும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. காலனி நாட்டின் பண்பு, கலாசாரம், வரலாறு, பொருளாதார முறை ஆகியவற்றின் அடிப்படையில் காலனி அரசு தன் ஆட்சியையும் நிர்வாக முறையையும் வடிவமைத்துக்கொள்கிறது. வன்முறை அவசியம் என்றால் அதனைப் பிரயோகிக்கத் தயங்குவதில்லை. காலனி சமூகத்தில் சில சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்று ஒரு காலனி அரசு கருதினால் அதனை மேற்கொள்ளவும் அது தயங்குவதில்லை.

தொடக்கத்திலிருந்தே காலனியம் உள் முரண்பாடுகள் நிறைந்த ஒரு கட்டமைப்பாகவே திகழ்ந்தது. இந்த முரண்பாடுகளைக் கண்டறிந்து புரிந்துகொள்வதன்மூலமே காலனியத்தையும் அதன் பல்வேறு கட்டங்களையும் புரிந்துகொள்ளமுடியும். 1840கள் மற்றும் 1850களில் முதலாளித்துவத்தின் வர்க்க முரண்பாடுகள் யதார்த்த வாழ்வில் தோன்றியபோது கார்ல் மார்க்ஸ் அறிவியல் ரீதியாக முதலாளித்துவத்தை ஆராயத் தொடங்கினார் என்கிறார் பிபன் சந்திரா.  இந்தியாவிலும் அத்தகைய உள் முரண்பாடுகளை காலனியம் சந்தித்தது. அவற்றில் சிலவற்றை பிபன் சந்திரா பட்டியலிடுகிறார்.

1) வளமும் சுரண்டலும்

வளங்களைச் சுரண்டுவது என்பது காலனியாதிக்கத்தின் முக்கிய அம்சம். அதே சமயம் கிடைக்கும் அனைத்தையும் சுரண்டிவிட்டு ஓடிவிடுவது என்பது ஒரு காலனி அரசின் நோக்கமாக இருக்கமுடியாது. லாபம் ஈட்டவேண்டுமானால் உற்பத்தி பெருகவேண்டும். அப்போதுதான் உபரியும் பெருகும். எனவே பொன் முட்டை இடும் வாத்தை அறுப்பதற்கு பிரிட்டன் தயாராகயில்லை. எனவே தவிர்க்கவியலாதபடிக்கு காலனி நாட்டின் பொருளாதாரத்தை மறு உற்பத்தி செய்யவேண்டிய அவசியம் அதற்கு ஏற்பட்டது. பிரிட்டன் வங்கத்தைச் சுரண்டிய அதே சமயம், அதன் உற்பத்தியையும் பெருக்கியது இந்தக் காரணத்துக்காகத்தான்.

2) நலன்கள், ஆதாயங்கள்

கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர்கள் தங்கள் நலனைப் பெருக்கிக்கொள்வதில் தீராத ஆர்வம் கொண்டு ஆதாயங்களைத் தேடிக்கொண்டனர். இது அவர்களுடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவியது. இந்த இரண்டு நலன்களுக்காகவும் இந்தியா சுரண்டப்பட்டது. சுரண்டலோடு சேர்ந்து உற்பத்திப் பெருக்கமும் நிகழும் என்று பார்த்தோம் அல்லவா? அந்த வகையில் இந்திய முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவும் இந்தியப் பொருளாதாரத்தின் நலன்களுக்காகவும்கூட காலனியத் தொழில் முயற்சிகள் உதவின. இந்தக் காரணங்களுக்காகவும் இந்தியா சுரண்டப்பட்டது.

3) நவீனமயமாக்கல்

காலனியம் அதன் அடுத்தகட்ட வளர்ச்சியைச் சந்தித்தபோது, இந்தியாவை நவீனமயமாக்கவேண்டிய தேவை எழுந்தது. மேலும் ஆற்றல் கொண்டதாக, விரிவாக்கப்பட்டதாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றவேண்டுமானால் அடிப்படை அம்சங்களை நவீனமயமாக்கவேண்டியது அவசியம் என்பதை பிரிட்டன் உணர்ந்திருந்தது. ‘இந்தியாவை வளர்ப்பது ஏகாதிபத்திய பிரிட்டனின் தேவையாக இருந்தது. நிதிக் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் இந்தத் தேவை எழுந்தது.’ இந்தியப் பொருளாதாரம் தேக்கமடைந்திருந்தால் குறைவான பலன்களே காலனிய அரசுக்குக் கிடைக்கும். தேவைப்படும் வரிகளை விவசாயிகள் மற்றும் இதர பிரிவினர்மீது விதிக்கமுடியாது. ஏற்கெனவே பொருளாதாரம் சுணக்கமடைந்திருக்கும் நிலையில் வரிச்சுமையையும் சுமத்தினால் அவர்கள் அதிருப்தி தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். இது காலனிய அரசின் அடித்தளத்தேயே பாதிக்கும்.  அதற்காக வரி விதிக்காமல் இருக்கவும் முடியாது. கிடைக்கும் பலன்களே போதும் என்று நினைக்கவும் முடியாது. சிவில், ராணுவச் செலவுகளைச் சமாளிக்க கூடுதல் வருவாய் அவசியம். ஆக மொத்தகம் இந்தியாவைக் கட்டுப்படுத்தவேண்டும். அதே சமயம் இந்தியாவை வளர்க்கவும் வேண்டும்.

4) விவசாய வளர்ச்சி

தொழில்துறையைப்போலவே விவசாயத்தை வளர்க்கவேண்டிய தேவை பிரிட்டனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை பிபன் சந்திரா விவரிக்கிறார். ‘விவசாயிகளை பிரிட்டிஷ் பொருள்களை வாங்கக் கூடியவர்களாகவும், விவசாயத்தில் முதலீடு செய்பவர்களாகவும், தேவையான கச்சாப் பொருள்களை உற்பத்தி செய்பவர்களாகவும் மற்றும் பொதுவாக விரிவாக்கப்பட்ட அளவில் விவசாயத்தை மேற்கொள்பவர்களாகவும் ஆக்குவதற்காக அவர்கள் சேமிப்பதற்கு உதவவேண்டும். பேரரசின் பாதுகாப்புக்கும், விரிவாக்கத்துக்கும், அதன் நிர்வாகத்துக்கும் வளர்ச்சிக்கும் விவசாயியை வரி கொடுக்கும்படிச் செய்யவேண்டும் என்கிற எதிர்த் தேவையும் இருந்தது. மற்றும் ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான சமூக உபரியை விவசாயி வழங்கவேண்டியும் இருந்தது.’ இந்நிலை ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தியது. அதைச் சமாளிக்க விவசாயத்தை வளர்த்தெடுக்கவேண்டிய நிலை பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? ‘முதலாளித்துவ அடிப்படையில் விவசாயத்தை வளர்ப்பதற்கான அனைத்துத் திட்டங்களும் விவசாயத்தில் ஜமீன்தாரி முறையைப் புகுத்துவதில் போய் முடிந்தது. பிரிட்டிஷ் அதிகாரிகள் எவ்வளவு அதிகமாக லேவாதேவிக்காரர்களைத் தவறாகப் பயன்படுத்தினார்களோ அவ்வளவு அதிகமாக அரசாங்கமும், விவசாயிகளும் வரி வாங்கவும் கொடுக்கவும் அவர்களையே சார்ந்திருக்கவேண்டியதாயிற்று. விவசாயிகள் தாங்கள் உயிர் பிழைத்திருப்பதற்கே அவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.’

5) காலனியும் போராட்டமும்

மறு உற்பத்தி செய்யும் ஒரு காலனியாக இந்தியாவை மாற்றுவதற்கு பிரிட்டன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பிரிட்டனுக்கு எதிரான போராட்ட அலைகளை ஏற்படுத்தியதும்கூட ஒரு முரண்பாடுதான். தன்னுடைய ஆதாயத்துக்காகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த பிரிட்டன் விரும்பியது. ஆனால் நேர் எதிரான விளைவுகளையே இது ஏற்படுத்தியது. இந்த முரண்பாடு இந்திய பிபன் சந்திரா குறிப்பிடுவதைப்போல் காலனியத்துக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான முரண்பாடாக வளர்ந்தது. தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் இது வழி வகுத்தது. ‘இந்தியாவைப் பயனுள்ள ஒரு காலனியாக ஆக்குவதற்குத் தேவையான ஒரு வரம்புக்குட்பட்ட மாறுதலும்கூட காலனியத்தை எதிர்க்கின்ற, அதற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்துகின்ற சமூக சக்திகள் தோன்றுவதற்கு இட்டுச் சென்றது.’

0

மேற்கொண்டு வாசிக்க :

1) Nationalism and Colonialism in Modern India, Bipan Chandra, Orient Blackswan

2) காலனியம், பிபன் சந்திரா, தமிழில்: அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம்

3) Colonialsm/Post-Colonialism, Ania Loomba, Routledge

நெருப்பும் நேரமும்

சங்க காலம் / தேடல் – 13

அறிவொளி

Large_bonfireஉலகின் ஒரு மூலையில் ஒரு காட்டில் மூங்கில்களின் கணுக்கள் மிகுதியான காற்றால் ஒன்றுடன் ஒன்று உரசித் தீப்பொறிகளை உருவாக்கின. அவை மூங்கிலின் காய்ந்த இலைகளை எளிதில் பற்றவைத்தன. பற்றிய தீ அணைய சில மணிநேரங்களாகின. அம்மூங்கில் காட்டில் சிக்கிக்கொண்ட விலங்குகள் தீக்கிரையாகின. அவற்றை எடுத்துச் சுவைத்த மனிதன் தீயால் வெந்த விலங்கின் தசைச் சுவையைத் தன் நாவில் ஏற்றிக்கொண்டான். மீண்டும் மீண்டும் அச்சுவை அவனுக்குத் தேவைப்பட்டது. காத்திருந்தான் மீண்டும் ஒரு காட்டுத்தீக்காக.

உடனடியாகவா அது நிகழ்ந்துவிடும்? காலம் சென்றன. பின்னர் அவன் சிந்தித்தான். காற்று, மூங்கில், உரசல், தீ என இந்நான்கின் இணைப்பையும் கூர்ந்து நோக்கி, அவற்றைச் சிறிய அளவில் கூட்டிணைப்புச் செய்து, தீப்பொறிகளை உருவாக்கக் கற்றுக்கொண்டான். தீயை உருவாக்கவும் அதனைப் பெருக்கவும் அவற்றை அணைக்கவும் மீண்டும் தீயை உருவாக்கவும் கைதேர்ந்தான். தீயின் ஒளியால் அறிவொளிபெற்றான்.

உலக அளவில் மனிதன் இவ்வாறுதான் தீயினை அறிந்தான். தொல்தமிழரும் அவ்வாறே தீயினைத் தம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினர்.

காட்டுத் தீயும் வீட்டுத் தீயும்

அகநானூற்றின் 39ஆவது பாடலில், நெடுந்தொலைவில், முற்றிய மூங்கில் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, தீப்பொறிகளை உருவாக்கின. அத்தீப்பொறிகள் மூங்கிற் சருகுகளைப் பற்றிக்கொண்டன. பின்னர் உலர்ந்த ஊகம் புற்களைப் பற்றி எரித்தன. பின்னர் காற்றடிக்கும் திசையெல்லாம் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு காட்டையே தீக்கிரையாக்கின என்று இடம்பெற்றுள்ள ஒரு வர்ணனை காட்டுத் தீயை நம் மனக்கண்முன் கொண்டுவந்துள்ளது.

இக்காட்டுத் தீயின் பிறப்பினை அறிந்த தமிழர் அதனைத் தன் முயற்சியால் தன் வீட்டளவில் உருவாக்க மரக்கட்டையைக் கையாண்டனர். கல்லின் மீது அம் மரக்கட்டையைக் கடைந்து, (மத்துகொண்டு தயிர் கடைவதைப் போல) அதன் அருகில் எளிதில் தீப்பிடிக்கும் சருகுகளை வைத்துத் தீப்பொறியை உருவாக்கினர். இம் மரக்கட்டைக்குத் “தீக்கடைக்கோல்“ என்று பெயர். இதனை “ஞெலிகோல்“ என்று இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. சான்றுகள் – ஐங்குறுநூறு 307, புறநானூறு 331.

மாடுமேய்க்கும் இடைச்சிறுவன் தன்கைகளால் முயன்று தீக்கடைக்கோலினால் தீ மூட்டிய தகவலைப் பெரும்பாணாற்றுப்படையின் 179வது அடி தெரிவித்துள்ளது.

இச்சிறிய எளிய தீக்கடைக்கோலால் காட்டை அளிக்க வல்ல மிகப்பெருந்தீயினை உருவாக்க முடியும்“ என்ற செய்தியினைப் புறநானூற்றின் 315ஆவது செய்யுளில், நெடுமான் அஞ்சியின் வீரத்துக்கு உவமையாகத் தீக்கடைக்கோலினைக் காட்டியுள்ள புலவரால், “இச்சிறிய எளிய தீக்கடைக்கோலால் காட்டை அழிக்க வல்ல மிகப்பெருந்தீயினை உருவாக்க முடியும்“ என்ற செய்தியினை அறியமுடிகின்றது.

உப்பு விற்கும் வணிகர்கள் தீக்கடைக்கோலினைப் பயன்படுத்திய செய்தியினை அகநானூற்றின் 169ஆவது செய்யுளில் காணமுடிகின்றது. புலி கொன்று தின்று ஒதுக்கிய யானையின் உடற்பகுதியின் ஒரு பகுதியைப் பாலை நிலத்தின் கள்வர்கள் எடுத்துச்சென்றனர். மீதமுள்ள பகுதியை உப்பு வணிகர்கள் தீக்கடைக்கோலால் உண்டாக்கப்பட்ட தீயில் வதக்கி, நீரில் உலை கூட்டி ஊன்சோறு சமைத்தனர் என்று அச்செய்யுள் குறிப்பிட்டுள்ளது.

அகநானூற்றின் 274ஆவது செய்யுளில் செம்மறியாட்டுக் கூட்டத்தையும் பசுக்கூட்டத்தையும் மேய்க்கும் இடையன், தன் கைப்பொருள்களுள் ஒன்றாகத் தீக்கடைக்கோலினை வைத்திருந்ததாக ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது.

நற்றிணையின் 142ஆவது செய்யுளில் பால் விற்கும் இடையன் தன்னிடம் ஞெலிகோல் வைத்திருந்ததாகச் சுட்டப்பட்டுள்ளது.

இடையர்கள் தன் மேய்ச்சல் விலங்குகளைப் பல்வேறு நிலப்பகுதிகளுக்கு அழைத்துச்சென்று தங்கவைக்கும் இயல்பினர். அவர்கள் மாலைப்பொழுதில் இரவில் வெளியிடங்களில் தங்குவது என்பது இயல்பானதொன்று. அப்போது அவர்கள் தங்களுக்கான ஒளியினை உருவாக்க தீக்கடைக்கோலினைத் தன்னோடு ஒரு தீப்பெட்டியைப் போல (வத்திப்பெட்டி), இன்றைய டார்ச்சு லைட்டைப் போலக் கொண்டுசென்றுள்ளனர்.

அந்தத் தீக்கடைக்கோல் மழையில் நனைந்துவிடாமல் இருப்பதற்காகவும் குளிரில் ஈரப்பதமாகிவிடாமல் இருப்பதற்காகவும்அதனைத் தேற்பையில் கலப்பை அதள் போட்டுச் சுருக்கிக்கொண்டனர் என்ற செய்தியினை நற்றிணையின் 142ஆவது செய்யுள் குறிப்பிட்டுக்காட்டியுள்ளது.

இடையர்களிடம் மூங்கிலால் உருவாக்கப்பட்ட புல்லாங்குழலும் இருந்தது என்பதனை நாம் நினைவில்கொள்ளவேண்டும். அப்புல்லாங்குழலில் இடப்பட்ட துளைகள் தீக்கடைக்கோலால் உண்டாக்கப்பட்ட தீயினால் உருவாக்கப்பட்டவை என்ற செய்தியினைப் பெரும்பாணாற்றுப்படையின் 177 முதல் 179 வரையிலான அடிகள் தெரிவித்துள்ளன.

காத்தலும் அழித்தலும்

புறநானூற்றின் 247ஆவது செய்யுளில், யானை கொண்டுவந்த உலர்ந்த மரத்தின் விறகை ஞெலிகோலின் உதவியால் கானவர் தீயிட்டுக் கொளுத்தினர் என்றும் அத்தீயொளியால் உறங்கிக்கொண்டிருந்த மான் கூட்டம் விழித்துக்கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. காடுகளில் பரணமைத்து இரவில் தங்கும் கானவர்கள் தம்மைக் காட்டு விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள இவ்வாறு பெருந்தீயினை உருவாக்கியுள்ளனர். தீப்பந்தத்தைப் பரணில் ஏற்றிவைத்தும் விலங்குகளை அச்சுறுத்தியுள்ளனர்.

அத் தீப்பந்தத்திற்கு (கொள்ளிக்கட்டை) “ஞெகிழி“ என்று பழந்தமிழர் பெயரிட்டிருந்தனர். “ஞெலி“ என்ற சொல், தீப்பற்றி எரிதலைக் குறிக்கும். “ஞெகிழ்“ என்ற சொல் தீயைக் குறித்தது. சான்று கலித்தொகையின் 101ஆம் பாடல். ஞெலிகோலால் உண்டாக்கப்பட்ட தீயைக் கொண்டு உருவாக்கப்பட்ட கொள்ளிக்கட்டைக்கு அல்லது தீப்பந்தத்துக்கு “ஞெகிலி“ என்று பெயரிட்டது மிகச் சரியே! இந்த “ஞெகிலி“ என்ற சொல் குறுந்தொகையின் 357ஆவது செய்யுளில் இடம்பெற்றுள்ளது. “விலங்குகள் நெருப்பை நெருங்காது“ என்பதனைத் தொல் தமிழர்கள் உணர்ந்திருந்தனர்.

தொல் தமிழர் நெருப்பினை ஆக்கத்துக்கு மட்டுமல்ல அழிவுக்கும் பயன்படுத்தினர். தீக்கடைக்கோலால் உண்டாக்கப்பட்ட சிறுதீயினைக்கொண்டு உணவு சமைத்தனர். அத்தீயினைப் பெருக்கிப் பகைவரின் விளைநிலத்தையும் ஊரையும் அழித்தனர்இதற்குப் புறநானூற்றின் 57ஆவது செய்யுளும் பதிற்றுப்பத்தின் 71ஆவது செய்யுளும் சான்றாகவுள்ளன.

நெருப்பின்றி அமையாது உலகு

காட்டுத் தீயினைக் கண்டு அஞ்சிய தொல்தமிழன் அதனைத் தெய்வமாக வணங்கினான். பின்னர் அத்தெய்வத்திடம் ஒரு பூசாரியைப்போல நெருங்கினான். அத்தெய்வத்தை எழுப்பும் வித்தையைக் கண்டான். பின்னர் அவனே ஒரு தெய்வமாகிவிட்டான். ஆம்! தாமே நெருப்பினை உருவாக்க கண்டறிந்த அந்த ஆதிமனிதன் என்னளவில் ஒரு தெய்வம்தான். நீரின்றி மட்டுமல்ல, நெருப்பின்றியும் அமையாது உலகு.

நிகழ்காலம் அறிதல்

தொல் தமிழர்கள் நேரங்காலம் பாராமல் உழைத்தனர். சூரிய உதயத்தில் விழித்து, உழைக்கத் தொடங்கி, சூரிய அஸ்தமனத்தில் ஓய்வுகொண்டனர். உதயம் பகற்பொழுதினையும் அஸ்தமனம் மாலைப் பொழுதினையும் அவர்களுக்கு உணர்த்தியது. மற்ற பொழுதுகள் அவர்களால் கணிக்க முடியாத அளவுக்குப் போக்குக்காட்டின. இரவில் கேட்கவே வேண்டாம். நள்ளிரவில் நேரங்காலமா தெரியப்போகிறது?

பகற்பொழுதின் காலத்தினைச் சூரிய நகர்வைப் பார்த்துக் காலத்தைக் கணித்தனர். தன் உடல் நிழலின் நீளத்தைத் தன் காலடியால் அளந்தும் கணித்தனர். இரவுப்பொழுதில் சந்திரனின் நகர்வைப் பார்த்தும் ஒருவகையில் காலத்தைக் கணித்தனர். சூரியன் வலதுபுறமாக இருக்குமாறு நின்றுகொண்டு கைவிரல்களில் சுட்டுவிரலை உயர்த்தி அதன் நிழல் மடக்கப்பட்ட எவ்விரலில் விழுகிறதோ அதனை வைத்துக் காலத்தைக் கணித்தனர். பீர்க்கு, நெருஞ்சி, இருள்நீக்கி முதலிய செடிகளில் மொக்கு மலர்வதை வைத்தும் காலத்தைக் கணித்தனர். மலர உள்ள மொக்கின் முனைப்பு நிலையைப் “போது“ என்பர். ஒரு நாளின் தொடக்கப் பொழுதினை (காலத்தினை) உணர்த்தியதால் அதற்குப் “போது“ என்று பெயரிட்டனர். இவற்றின் வழியாக ஒரு குத்துமதிப்பாகத்தான் காலத்தினை அவர்களால் கணிக்க முடிந்தது. எல்லாக் காலநிலைகளிலும் சரியான நேரத்தைக் கணக்கிடுவது என்பது தமிழருக்குக் குதிரைக் கொம்பாகத்தான் இருந்தது.

காலக் கூறுகள்

தமிழர்கள் காலத்தினைப் பெரும்பொழுது, சிறுபொழுது என்று இருவகையாகப் பகுத்தனர். “பெரும்பொழுது“ என்பது, ஓர் ஆண்டின் ஆறு கூறுகள். அதாவது தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஒவ்வொன்றுக்கும் இணையான மாதங்களைச் சேர்ந்தது ஒரு பெரும்பொழுது என்றனர். அவை கார் (மழை) – ஆவணியும் புரட்டாசியும், கூதிர் (குளிர்) – ஐப்பசியும் கார்த்திகையும், முன்பனி – மார்கழியும் தையும், பின்பனி – மாசியும் பங்குனியும், இளவேனில் – சித்திரையும் வைகாசியும், முதுவேனில் – ஆணியும் ஆடியும் என்பனவாகும்.

குறிஞ்சி நிலத்துக்குரிய பெரும்பொழுதுகளாகக் கூதிரும் முன்பனிக்காலமும் கருதப்பட்டன. முல்லை நிலத்துக்குரிய பெரும்பொழுதாகக் கார்காலம் மட்டும் கருதப்பட்டது. பாலை நிலத்துக்குரிய பெரும்பொழுதுகளாகப் பின்பனி, இளவேனில் முதுவேனில் ஆகியன கருதப்பட்டன. மருதத்திணைக்கும் நெய்தல் திணைக்கும் ஆறு பெரும்பொழுதுகளும் உரியவையாகக் கருதப்பட்டன.

சிறுபொழுது“ என்பது ஒரு நாளின் 24 மணி நேரத்தை ஆறு கூறுகளாக்குவது. அதாவது ஒரு சிறுபொழுது என்பது நான்கு மணிநேரத்தை உள்ளடக்கியது. அவை நள்ளிரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை “வைகறை“, காலை 6 மணிமுதல் 10 மணிவரை “காலை“ (விடியல்), முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை “நண்பகல்“, பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை “எற்பாடு“, மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை “மாலை“, இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை “யாமம்“ என்பனவாகும்.

குறிஞ்சி நிலத்துக்குரிய சிறுபொழுதாக யாமமும் முல்லை நிலத்துக்குரிய சிறுபொழுதாக மாலையும் பாலை நிலத்துக்குரிய சிறுபொழுதாக நண்பகலும் கருதப்பட்டன. வைகறையும் எற்பாடும் ஐந்நிலத்துக்கும் பொதுவான சிறுபொழுதுகளாகக் கருதப்பட்டன.

தமிழர்கள் சிறுபொழுதுகளை மணிக்கணக்கில் பிரிக்காமல் நாழிகைக் கணக்கில் பிரித்தனர்.

நாழிகை“ என்பதுபழங்காலக் காலக்கணக்கீட்டின் ஓர் அலகு.  24 நிமிடங்கள் ஒரு நாழிகை. ஒரு மணிநேரம் என்பது இரண்டரை நாழிகைகள். பகல் என்பது 30 நாழிகைகள். இரவு என்பது 30 நாழிகைகள். ஒருநாள் என்பது 60 நாழிகைகள். அதாவது 24 மணிநேரம்.

ஒருநாளின் பகுதிகளைச் சிறுபொழுதுகளாகப் பிரித்திருந்தனர் என்றனர். சிறுபொழுதுகள் மொத்தம் ஆறு. அவை ஒவ்வொன்றும் 10 நாழிகைகளை உள்ளடக்கியிருந்தன. அதாவது, நான்குமணிநேரங்களை.

இந்த நாழிகையைக் கணக்கிட ஒரு கருவியினைக் கண்டறிந்தனர். வட்டில் ஒன்றில் நீர் நிரப்பி, ஒரு சிறு துளை வழியே அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசியவிட்டு, எஞ்சிய நீரை அளந்து பொழுதினைக் கண்டறியும் விதத்தில் ஒரு கருவியினை உருவாக்கினர். அதனைக் கொண்டு பகலிலும் இரவிலும் துல்லியமாகக் காலத்தைக் கண்டறிய முடிந்தது. இக்கருவிக்குக் “குறுநீர்க்கன்னல்“ அல்லது “நாழிகை வட்டில்“ என்று பெயரிட்டனர். இக்கருவி பற்றிய செய்தி மணிமேகலையிலும் இக்கருவியினைக் கொண்டு காலத்தினைக் கணக்கிட்ட நாழிகைக் கணக்கர் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்திலும் இடம்பெற்றுள்ளன.

இக் கருவிகொண்டு நாழிகையை அளந்து இத்துணை என்று அறியும் பொய்த்தலில்லாத நாழிகைக் கணக்கர்கள் மன்னனைத் தொழுது, வாழ்த்தி கடல் சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லச் செல்கின்றவனே! உன்னுடைய நாழிகை வட்டிலில் சென்ற நாழிகை இத்துணை என்று அறிவித்த செய்தியினை முல்லைப்பாட்டின் 55 முதல் 58 வரையிலான அடிகள் வெளிப்படுத்தியுள்ளன.

உலகம் அஞ்சுமாறு, மேகமூட்டத்துடன் பெருமழை பெய்தலின் நிலமும் வானும் ஒன்றாகப் பொருந்தினாற் போன்று தோன்றும் கார் காலத்தே, கதிரவனைக் கொண்டு காலமறிய இயலா நிலையில் குறுநீர்க் கன்னலைக் கொண்டு பொழுதறிவிக்கும் கணக்கரையே நம்பி மக்கள் இருந்த செய்தியினை அகநானூற்றின் 43ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளன.

0

காலனியம் : ஓர் அறிமுகம்

நவீன இந்திய வரலாறு / அத்தியாயம் 1

india

இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியாவைக் கட்டுக்கோப்பான பலத்துடன் ஆட்சி செய்துவந்த முகலாயர்களின் சாம்ராஜ்ஜியம் 18ம் நூற்றாண்டின் முதல் பாதியில் சரிந்து படிப்படியாக உடையத் தொடங்கியது. இந்தியப் பிரதேசங்களின் பெரும் பகுதியை ஆண்டுவந்த முகலாயர்களிடம் ஒரு கட்டத்தில் டெல்லியின் ஒரு சில சதுர மைல்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அதுவும்கூட நாளடைவில் பிரிட்டன் வசம் செல்ல, வரலாற்றுப் புகழ்மிக்க முகலாய சக்கரவர்த்தி பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து உதவித் தொகை பெறும் ஒரு சாமானியராகச் சுருங்கிப்போனார்.  முகலாயர்களின் வீழ்ச்சி மத்தியகால இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் கட்டுமானங்களின் குறைபாடுகளையும் போதாமைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

1757 பிளாசி போரின் முடிவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா வந்து சேர்ந்தது. 1857ம் ஆணடு சிப்பாய் புரட்சி வெடித்தபோது அதைக் கட்டுப்படுத்திய பிரிட்டன் இந்தியாவை ஒரு காலனி நாடாகத் தன்னுடைய நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்தது. ஆனால் முந்தைய முகலாய சாம்ராஜ்ஜியத்தைப் போலவே பிரிட்டிஷ் பேரரசும் பலமிழக்கத் தொடங்கியபோது இந்தியா உள்ளிட்ட தனது காலனி நாடுகளைவிட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முகலாய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி இரண்டையும் மிகவும் விரிவாகப் பல வரலாற்றாசிரியர்கள் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பதிவு செய்துள்ளனர். நவீன இந்தியாவைப் பற்றிய நமது இந்தத் தேடல் காலனியத்தையும் அதன் பங்களிப்பையும் ஆராய்வதில் இருந்து தொடங்குகிறது.

ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின்படி Colonialism என்பது காலனியா (வயல், குடியிருப்பு) என்னும் ரோமானிய வார்த்தையில் இருந்து உருவான ஒருசொல்லாகும். பிற இடங்களில் குடியேறிச் சென்ற ஆனால் தொடர்ந்து ரோமானியர்களாக நீடித்த மக்களைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது. முழுமையான அகராதி விளக்கம் இது: ஒரு புதிய நாட்டில் உருவான குடியிருப்பு… தாய்நாட்டின் தொடர்பைத் துண்டித்துக்கொள்ளாமல்  ஒரு புதிய பகுதியில் குழுவாகச் சென்று குடியேறிய மக்கள் கூட்டம்… முதல் முறையாகக் குடியமர்ந்தவர்கள் அல்லது அவர்களுடைய வழித்தோன்றல்கள்.

எல்லா இடங்களிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு முறைகளில் இத்தகைய காலனியாதிக்கக் குடியேற்றங்கள் நிகழ்ந்தன  என்றாலும் ஒரு பொதுவான  அடிப்படையை அவற்றில் காணமுடியும் என்கிறார் காலனியம், பின்காலனியம் ஆகிய கோட்பாடுகளை ஆராய்ந்துள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் அனியா லூம்பா. ஒரு புதிய பிரதேசத்துக்குள் நுழையும் காலனியக் குழுக்கள் ஏற்கெனவே அங்கு வசித்துவந்தவர்களுடன் இணக்கமான உறவு கொள்வதில்லை. மாறாக, மனித குல வரலாற்றின் மிகவும் குழப்பமான, வலி மிகுந்த உறவுகளில் ஒன்றாக இந்த இருவருக்கும் இடையிலான உறவுமுறை அமைகின்றது என்கிறார் லூம்பா. காலனியம் குறித்த அகராதி விளக்கத்தையும் அவர் கேள்விக்கு உள்ளாக்குகிறார். ‘ஏற்கெனவே ஒரு சமூகம் குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்ந்துவந்தபோது அங்குச் சிலர் குழுவாக வந்து குடியமர்ந்தனர் என்றால் அது எப்படி ‘புதிய பகுதி’ என்று அழைக்கப்படும்? ஒரு குழு அல்லது மக்கள் கூட்டம் ஒரு புதிய பிரதேசத்தில் குடிபுகுந்தபோது அங்கிருந்தவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களைக் குறிப்பதற்கு ஏன் சொற்கள் உருவாக்கப்படவில்லை?’

ஒரு காலனி நாடு தான் கண்டுபிடித்த ஒரு புதிய பகுதியில் தனது சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னால் முந்தைய சமூகத்தையும் அதன் கட்டமைப்பையும் நொறுக்கித் தகர்க்கிறது. வணிகம், கொள்ளை, பேச்சுவார்த்தை, போர், இனப்படுகொலை, ஒடுக்குமுறை, அடிமைப்படுத்துதல் ஆகியவற்றின்மூலம் ஒரு புதிய சமூக முறையை காலனி நாடு உருவாக்குகிறது. வரலாற்றில் இத்தகைய ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ஜியம் ஆர்மினியா முதல் அட்லாண்டிக் வரை பரந்துவிரிந்திருந்ததற்குக் காரணம் காலனி ஆக்கிரமிப்புகள். 13ம் நூற்றாண்டில் செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் மத்திய கிழக்கையும் சீனாவையும் ஆக்கிரமித்தனர். 15ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு சமஸ்தானங்கள் விஜயநகரப் பேரரசின்கீழ் கொண்டுவரப்பட்டன. தற்போதைய துருக்கியில் ஒரு சிறிய இஸ்லாமியப் பிரதேசமாக இருந்த ஒட்டமான் சாம்ராஜ்ஜியம் பெரும்பாலானா ஆசியா மைனர் மற்றும் பால்கன் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டு தன்னைப் பலப்படுத்திக்கொண்டது.  வரலாறு நெடுகிலும் இத்தகைய பல உதாரணங்கள் விரவிக்கிடக்கின்றன.

Bipan Chandraஇந்தியாவில் காலனியம் இயங்கிய விதத்தைப் புரிந்துகொள்ள சரியான தொடக்கப்புள்ளி பிபன் சந்திரா (1928- 2014). இந்திய தேசியவாதிகளும் அறிவுஜீவிகளும் காலனியத்தை எப்படி அணுகினர், எப்படிப் புரிந்துகொண்டனர், எப்படிப் பதிவு செய்தனர் என்பதை பிபன் சந்திரா தனது படைப்புகளில் விரிவாக ஆராய்ந்துள்ளார். அவரைப் பொருத்தவரை தேசியவாதிகள் தொடக்கத்திலேயே காலனியம் குறித்து ஆராயவும் விவாதிக்கவும் தொடங்கிவிட்டனர் என்றபோதும் அவர்களுடைய படைப்புகள் முழுமையான, விரிவான ஒழுங்கமைக்கப்பட்ட பார்வையை அளிக்கவில்லை. கே.டி. ஷா, சி.என். வகீல், பால் கிருஷ்ணா, வாடியா, மெர்ச்சண்ட் போன்ற சில பொருளாதார ஆய்வாளர்கள்  ‘ஆரம்பால தேசியவாத அணுகுமுறைக்கு அனுபவ அறிவுரீதியான, தத்துவரீதியான ஆதரவைத் தொடர்ந்து வழங்கிவந்தனர்.’ ஆனால் ‘காலனியம் பற்றிய தீவிர ஆய்வுகள் மட்டுமல்ல அடிப்படையான அலசல்கள்கூட மிகச் சமீபத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டன.’

பிபன் சந்திராவின் கருத்துப்படி ‘ஒரு சமூக ஆதிக்க அமைப்பை முழுமையாக வலியுறுத்தும் ஒரு நவீன வகையாகக் காலனியம் என்கிற சொல் 1920களில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு தீர்மானத்தின் மூலமும், உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரசாரம் மற்றும் போராட்டங்களின் மூலமும் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. அன்றிலிருந்து ஏறக்குறைய மார்க்சிஸ்டுகள் மட்டுமே காலனியம் என்கிற கருத்து மற்றும் யதார்த்த நடைமுறை குறித்து மேற்கொண்டு நடந்த ஆய்வுக்குப் பங்களித்துள்ளனர்!’

முதன்மையான ஏகாதிபத்திய நாடுகளாக இருந்த பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு பல்கலைக்கழகங்கள் காலனியத்தைத் தொடக்கத்தி வெளிப்படையாக ஆதரித்துள்ளன. 1945க்குப் பிறகு உலகம் தழுவிய அளவில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்த காலகட்டத்திலும்கூட காலனியம் குறித்த ஆய்வுகள் தீவிரமடையவில்லை. 1945க்குப் பிறகான இருபதாண்டுகளில் சோஷலிச நாடுகள் நீங்கலாக வேறு எங்கிருந்தும் காலனியம் குறித்த காத்திரமான ஆய்வுகள் வெளிவரவில்லை என்கிறார் பிபன் சந்திரா. காலனியத்தைத் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் ஆய்வு செய்து விமரிசனம் செய்துவந்ததால் கம்யூனிஸ்டுகள் பல்கலைக்கழகங்களில் இருந்தும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்தும் தேடித்தேடி விரட்டியடிக்கப்பட்டனர்.

1965ம் ஆண்டு வாக்கில் நிலைமை மாறியதற்குக் காரணம் தேசிய அளவில் நடைபெற்ற முக்கியப் போராட்டங்களும் அவற்றுக்குக் கிடைத்த கவனமும்தான். உதாரணத்துக்கு, கியூபப் புரட்சி, அல்ஜீரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேச விடுதலைப் போர்கள் மற்றும் பிரேசில், சிலி, அர்ஜெண்டினா உள்ளிட்ட லத்தின் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற மக்கள் எழுச்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றைத் தொடர்ந்து காலனியம் குறித்து பல அடிப்படைக் கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்பட்டன. காலனியாதிக்கத்துக்கு உட்படும் ஒரு நாடு எத்தகைய அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களைச் சந்திக்கிறது? இந்த மாற்றங்கள் எல்லாமே தீமையானவை என்று சொல்லமுடியுமா? ஆதிக்கம் செலுத்தும் நாட்டின் பண்புகள் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கும் நாட்டிடம் காணப்படுமா? காலனியாதிக்கத்துக்கு உட்படாமல் போயிருந்தால் ஒரு நாடு மேலான வளர்ச்சியை அடைந்திருக்குமா?

எந்தவொரு காலனி நாடும் தன் நோக்கங்களை நியாயப்படுத்தவே செய்யும். பிரிட்டனும் இங்கே அதைத்தான் செய்தது. இந்தியாவை ஒரு முதலாளித்துவ நாடாக மாற்றிக்காட்டுவோம் என்னும் முழக்கத்தை 19ம் நூற்றாண்டில் பல பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்துடன் முன்வைத்தனர். இதற்கு இந்தியாவிலேயே பலருடைய ஆதரவும் கிடைத்தது. இந்தியா போன்ற ஒரு பின்தங்கிய நாட்டை பிரிட்டனின் ஆட்சி மேம்படுத்தவே செய்யும் என்று இவர்கள் வாதிட்டனர். விவசாயம், வர்த்தகம், ரயில்வே என்று இந்தியாவில் காலனியம் ஏற்படுத்திய மாற்றங்களைச் சுட்டிக்காட்டி காலனியத்தை இவர்கள் உயர்த்திப்பிடிக்கவும் செய்தனர். முதலாளித்துவ வளர்ச்சிக்கும் தேச வளர்ச்சிக்கும் இத்தகைய மாற்றங்கள் உறுதுணையாக இருக்கும் என்றும் மதிப்பிட்டனர்.

அப்படியென்றால் பல சமூகத் தளங்களில் ஏன் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை? பிரிட்டனின் வருகைக்கு முன்னால் நிலவிவந்த நிலப்பிரபுத்துவத்தின் கூறுகள்  ஏன் களையப்படவில்லை? இன்னமும்கூட இந்தியா ஏன் வளரும் நாடாகவே உள்ளது? அதற்குக் காரணம் காலனியம் அல்ல, இந்தியச் சூழல்தான் என்று காலனிய ஆதரவாளர்கள் வாதிட்டனர். ‘காலனிகளில் உட்புகுந்து வெல்லமுடியாத அளவு நெருக்கமாக இருந்த சமூக, பொருளாதார, புவியியல், மக்கள்தொகை மற்றும் கலாசார நிலைமைகளே இந்நிலைக்குக் காரணம்’ என்றனர். காலனிய ஆதரவாளர்களைப் பொருத்தவரை முதலாளித்துவ வளர்ச்சியின் குறைபாடுகளுக்குக் காரணம் முதலாளித்துவமோ அதை அறிமுகப்படுத்திய ஆட்சியாளர்களோ அல்ல; மிகவும் தொடக்க நிலையில் இருந்து செயல்படவேண்டியிருந்த இந்திய நிலைமைதான். இன்றும்கூட இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்படுவதை ஒருவர் காணமுடியும்.

கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருக்கும் காலனியாதிக்கத்தின் அடிப்படை நோக்கம் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் சந்தேகம் எதுவும் இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இதைத் தெளிவுபடுத்துவதை பிபன் சந்திரா சுட்டிக்காட்டுகிறார். முதலாளித்துவம் ஓர் உலக அமைப்பு என்கிற வகையில் ‘அது அழிவின் விளிம்பில் இருக்கும் உலக நாடுகள் அனைத்தையும் முதலாளித்துவ நாடுகளாக ஆகுமாறு கட்டாயப்படுத்துகிறது. ஒரு வார்த்தையில் கூறினால், அது தன்னுடைய உருவத்தையொத்த ஒரு உலகத்தை உருவாக்குகின்றது’. முதலாளித்துவத்தால் ஒரு ஒற்றை நாட்டுக்குள் அல்லது பகுதிக்குள் முடங்கிக்கிடக்கமுடியாது; அதன் இயல்பு அப்படி என்பதை மார்க்ஸ் முதல்முதலில் உணர்த்தினார். ஒரு காலனியாதிக்க முதலாளித்துவ நாடு காலனி நாட்டிலும் தன்னுடைய முதலாளித்துவப் பண்பையே மறுஉற்பத்தி செய்யும் என்னும் மார்க்ஸ், எங்கெல்ஸின் கருத்தை ராஜாராம் மோகன் ராய் ஏற்றுக்கொண்டார்.

வளர்ச்சியடைந்த ஒரு முதலாளித்துவ நாட்டால் ஆக்கிரமிக்கப்படும்போது காலனி நாட்டிலும் முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதை திறந்துவிடப்படும் என்று கருதுவது தவறு என்கிறார் பிபன் சந்திரா. காலனியாதிக்கம் ஒரு நாட்டை நிச்சயம் உருமாற்றும் ஆனால் அது ஆராக்கியமான மாற்றமல்ல.  ‘முதலாளித்துவம் ஒரு ஒற்றை உலக அமைப்பாகவும், காலனிகள் அதன் அடிப்படை உறுப்புகளாகவும் இருந்தாலும், அவை காலனியாதிக்க நாடுகளைப்போல அதே வகையில் முதலாளித்துவ நாடுகளாக ஆகிவிடுவதில்லை. முதலாளித்துவம் ஒரு உலக அமைப்பு. ஆனால் அது ஏகாதிபத்திய நாடுகளில் ஒரு முகத்தையும், காலனி நாடுகளில் வேறொரு முகத்தையும் கொண்டுள்ளது… ஏகாதிபத்தியம் காலனிகளை அச்சு அசலாக வளர்ந்த நாடுகளைப் போல் மாற்றவோ அல்லது காலனிகளை வளர்ப்பதில் அது வெற்றிபெறவோ இல்லை. அது அவற்றை வளர்ச்சி குன்றச் செய்கின்றது. அவற்றைக் காலனியச் சமுதாயங்களாக ஆக்குகின்றது. ஏகாதிபத்தியம் காலனி நாடுகளில் முதலாளித்துவத்தையும் முதலாளித்துவ உற்பத்தி முறையையும் முதலாளித்துவச் சொத்துறவுகளையும் புகுத்துகின்றது. ஆனால் வளர்ச்சியை அறிமுகப்படுத்துவதில்லை. அது பழைய பொருளாதாரத்தையும் சமூக வடிவத்தையும் அமைப்பையும் அழித்து மாற்றுகிறது. ஆனால் புதிய காலனிய பொருளாதாரமும் சமூக அமைப்பும் பிற்போக்குத்தனமானவையாக இருந்தன.’

சமூக வளர்ச்சியில் முதலாளித்துவம் என்பது ஒரு முன்னேறிய கட்டம். ஆனால் காலனியம் அப்படியானதல்ல என்கிறார் பிபன் சந்திரா. ‘அது காலனியாதிக்க முதலாளித்துவத்தின் ஒரு பிம்பம். ஆனால் எதிர்மறை பிம்பம்; அதன் எதிர்ப்பக்கம். அதன் வளர்ச்சியற்ற பகுதி.’ காலனியம் என்பது ஒரு உற்பத்தி முறையல்ல என்னும் முடிவுக்கும் வந்து சேர்கிறார் பிபன் சந்திரா. ‘3காலனியம் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறை உள்பட பல்வேறு உற்பத்தி முறைகளும், உற்பத்தி உறவுகளும், சுரண்டல் வடிவங்களும் ஒத்து நிலவும் ஒரு சமூக அமைப்பாகும். நிலப்பிரபுத்துவம், அரை நிலப்பிரபுத்துவம், அடிமை முறை, கொத்தடிமை முறை, சிறு சரக்கு உற்பத்தி, வணிக மற்றும் கந்துவட்டிச் சுரண்டல், விவசாய, தொழில் மற்றும் நிதி முதலாளித்துவம் ஆகியவை ஒத்து வாழ்கின்றன. ஆனால் அவை அமைதியாகவோ அல்லது விரோதமின்றியோ உடனொத்து வாழ்ந்தன என்று கூறமுடியாது. காலனியப்படுத்தலின் முறைகளில் வெவ்வேறு வகையான கலவை வெவ்வேறு காலனிகளில், வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு கட்டங்களில் வேறுபட்டது. அனைத்து வேறுபட்ட உற்பத்தி முறைகளும் ஏகாதிபத்திய மூலதனத்துக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருந்தன.’

காலனியக் கட்டமைப்பின் மூன்று அடிப்படைப் பண்புகளை பிபன் சந்திரா சுட்டிக்காட்டுகிறார்.

1) அந்நிய நலன்கள்

காலனி நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டு நலன்கள் மற்றும் தேவைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை.காலனியாதிக்க நாட்டின் பொருளாதாரம், அதன் முதலாளித்துவ வர்க்கத்தின் தேவைகள், நலன்கள் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. உலக முதலாளித்துவம், உலகச் சந்தை ஆகியவற்றுடன் காலனி நாட்டின் பொருளாதாரம் ஒருங்கிணைக்கப்படுவதில்லை. மாறாக, அவற்றுக்குக் கீழ்படிந்திருக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறது.

2) சமமற்ற வேலைப்பிரிவினை

பரிவர்த்தனைகள் சமமற்றதாக இருக்கும். இந்தியத் தொழில்துறையின் நலன்களுக்கு அல்ல, பிரிட்டிஷ் உற்பத்தியின் தேவைகளுக்குச் சேவை செய்வதே நோக்கமாக இருக்கும். மார்க்ஸ், எங்கெல்ஸ் சுட்டிக்காட்டியதைப் போல் காலனி நாடுகள் கச்சாப் பொருள்களை உற்பத்தி செய்யும். தயாரிக்கப்பட்ட பொருள்கள் காலனியாதிக்க நாடுகளால் உற்பத்தி செய்யப்படும். காலனியாதிக்க நாடு உயர் தொழில்நுட்பம், உயர் உற்பத்தி ஆற்றல், உயர் ஊதியம் தேவைப்படும் சரக்குகளை உற்பத்தி செய்யும். காலனி நாடு கீழான தொழில்நுட்பம், கீழான உற்பத்தி ஆற்றல், குறைவான ஊதியம் தேவைப்படும் சரக்குகளை உற்பத்தி செய்யும். மொத்தத்தில், ஒரு சர்வதேச வேலைப்பிரிவினையைக் காலனியாதிக்கம் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

3) சுரண்டல்

ஒரு காலனியாதிக்க நாடு காலனி நாடுகளின் செல்வத்தைச் சுரண்டி தன்னிடத்துக்குக் கொண்டுசென்று சேர்ப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கும். இந்தியாவின் வறுமை, வளர்ச்சியின்மை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள இந்தச் சுரண்டலையும் நாம் புரிந்துகொண்டாகவேண்டும். காலனி நாட்டின் செல்வம் அந்நாட்டின் பொருளாதாரத்திலும் மறு உற்பத்தியிலும் நுழையாமல் ஏகாதிபத்திய நாட்டின் பொருளாதாரத்துக்குள் நுழைந்துவிடுகிறது. இது ஒரு பக்கம் ஏழைமையையும் இன்னொரு பக்கம் செல்வத்தையும் அதிகரிக்கிறது.

0

மேற்கொண்டு வாசிக்க :

1) History of Modern India, Bipan Chandra, Orient Blackswan

2) Nationalism and Colonialism in Modern India, Bipan Chandra, Orient Blackswan

3) காலனியம், பிபன் சந்திரா, தமிழில்: அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம்

4) Colonialsm/Post-Colonialism, Ania Loomba, Routledge

5) கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்

 

அழகு

சங்க காலம் / தேடல் – 12

யாருக்காக?

15_madurai1நலமும் வளமும் அழகிலிருந்துதான் தொடங்குகின்றன. அழகு ஒருவருக்குத் தன்னம்பிக்கையைத் தருகின்றது. அது இயற்கையழகாகவோ செயற்கையழகாகவோ இருக்கலாம். ஆனால், அழகு முதன்மைத்தேவைதான். யாருக்காக ஒருவர் அழகாக இருக்கவேண்டும் என்ற வினாவுக்கான உண்மையான விடை, “அவரவர்களுக்கான அழகு“ என்பது அல்ல. “எல்லோருக்குமான அழகு“ என்பதுதான். உண்மையில், பிறருக்காகத்தான் நாம் நம்மை அழகாக்கிக்கொள்கிறோம்அக்கால மக்கள் தமது உணவுத் தேவைக்குப் பின்னர் உடைத்தேவையிலும் அலங்காரத் தேவையிலும் கவனம் செலுத்தினர். ஆம்,மனிதன் உடையிலும் அலங்காரத்திலும்தான் புறவயமாக விலங்கிலிருந்து வேறுபடுகின்றான்.

ஆடைகள் ஆயிரம்

தொல்தமிழர்கள் தழைகளையும் பூக்களையும் மரல்நாராலும் நறைநாராலும் கோத்து ஆடையாக அணிந்து வந்தனர். விலங்குகளின் தோலால் உருவாக்கப்பட்ட ஆடைகளையும் கம்பளி ஆடைகளையும் அணிந்தனர். பஞ்சையும் பட்டு நூலையும் கொண்டு நெய்து துணிகளை உருவாக்கினர். மலை எலியின் முடியினையும் சிறு விலங்குகளின் முடிகளையும் துணிகளை உருவாக்கப் பயன்படுத்தினர். அத்துணிகள் புகையைப்போல, பால் ஆவியைப் போல, பாம்புச் சட்டையைப் போல, மூங்கிலின் உரியைப் போல மிக மெல்லியதாக இருந்தன.

இடையன் ஒருவன் பசுமையான இழைகளால் தொடுக்கப்பட்ட கண்ணியையும் மாசுபடிந்த ஆடையையும் அணிந்திருந்ததாகப் புறநானூறின் 54ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளது.

பெண்கள், மரப் பட்டைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளையும் தழைகளால் செய்யப்பட்ட ஆடைகளையும் அணிந்திருந்ததாகத் திருமுருகாற்றுப்படையின் 201 முதல் 204 வரையிலான அடிகளும் முழுவதும் பூவால் உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்ததாகப் புறநானூற்றின் 116ஆவது செய்யுளும் தலைவியும் அவளது தோழியும் 99 வகையான பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்து, அவற்றின் புறவிதழ்களை நீக்கித் தழையாடை செய்து அணிந்ததாகக் குறிஞ்சிப்பாட்டும் தெரிவித்துள்ளன.

பனையோலைகளையும் தென்னை ஓலைகளையும் பனையகணி, நறைநார், மரல்நார் ஆகியவற்றைக் கொண்டு வலை, பெட்டி, வட்டி, பிழா, கடகம், பேழை போன்றவற்றை உருவாக்கிப் பயன்படுத்திய பழந்தமிழர்கள், நார்களை விடுத்து நூலுக்கு மாறியது காலக்கொடைதான்.

காலப்போக்கில் பருத்தியின் பயன்பாட்டினைப் புரிந்துகொண்ட தமிழர்கள் அவற்றைக் கொண்டு நூல் உருவாக்கவும் அவற்றை நெய்து ஆடை செய்யவும் கற்றுக்கொண்டனர்.

காருகம்“ என்பது, துணியைக் குறிக்கும் சொல். “காருகர்“ என்பது, நெசவாளரைக் குறித்தது. “துகில்“ என்ற சொல், பெரும்பான்மையாகப் பருத்தித்துணியையே குறித்தது.

சங்க காலத்தில் பருத்தி பயிரிடப்பட்ட செய்தியைப் புறநானூற்றின் 299ஆவது மற்றும் 324ஆவது செய்யுள்களும் அகநானூற்றின் 129ஆவது செய்யுளும் எடுத்துக்கூறியுள்ளன.

பழந்தமிழர்கள் பருத்தியை மூட்டை மூட்டையாக விளைவித்த செய்தியினைப் புறநானூற்றின் 393ஆம் செய்யுளும் வில்லால் அடித்து, நுரைபோன்ற தூய்மையான பஞ்சினை உருவாக்கிய செய்தியினை நற்றிணையின் 247ஆவது மற்றும் 299ஆவது செய்யுள்கள் குறிப்பிட்டுள்ளன.

பருத்தியை நூலாக்கும் பணியில் பெரும்பாலும் பெண்களே ஈடுபட்டனர். நூல் நூற்கும் பெண்கள் வைத்துள்ள கோது நீக்கப்பட்ட பஞ்சு பற்றிப் புறநானூற்றின் 125ஆவது செய்யுளும் நூல் நூற்கும் பெண்கள் ஒளிக்காக ஏற்றியுள்ள விளக்கொளி பற்றிப் புறநானூற்றின் 326ஆவது செய்யுளும் குறிப்பிட்டுள்ளன. விடியவிடிய இப்பணியினை அவர்கள் செய்ததாகப் புறநானூற்றின் 326ஆம் செய்யுளும் நற்றிணையின் 353ஆவது செய்யுளும் கூறியுள்ளன. இதனால் அவர்களின் வீட்டைச் சுற்றிப் பஞ்சுத் தூசி படர்ந்திருந்தமையைப் புறநானூற்றின் 116ஆவது செய்யுள் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆடைகளுக்குப் பூவேலைப்பாடுகள் செய்து அழகுப்படுத்தினர். துணிகளுக்கு நறுமணமூட்டினர். பூந்துகில் வகையிலான துணிகள் மிகவும் வழவழப்பாக இருந்தன. அவ் ஆடைகள் நுண்மையும் மென்மையும் வாய்ந்தவையாக இருந்தன. அவை, “அகன்ற பகன்றை மலர்“ போன்று இருந்ததாகப் புறநானூற்றின் 390ஆவது செய்யுளும் “நீலநிறமுடைய பூந்தொழில் செய்யப்பட்ட ஆடை“ என்று புறநானூற்றின் 274ஆவது செய்யுளும் “சிவந்த நிறமுடைய பூந்தொழிலுடைய துகில்“ என்று திருமுருகாற்றுப்படையின் 15ஆவது அடியும் “புகையை நுகர்தால் போல மாசடையாத ஆடை“ என்று திருமுருகாற்றுப்படையின் 138ஆவது அடியும் குறிப்பிட்டுள்ளன.

மெல்லிய துணிகளால் ஆடைகள் மட்டுமன்றி அரசருக்குரிய குடைகளும், கொடிகளும், பதாகைகளும் உருவாக்கப்பட்டன.

தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களின் அழுக்கான ஆடைகளை நீக்கிப் புத்தாடைகள் அணியுமாறு கூறிய மன்னர், அவர்களுக்கு நுண்ணிய வேலைப்பாடுகளுடைய பட்டாடைகளைக் கொடையாக வழங்கினார் என்றும் பூவேலைப்பாடுகளையுடைய ஆடைகளை வழங்கினார் என்றும் புறநானூற்றின் 398ஆவது செய்யுள் தெரிவித்துள்ளது.

பட்டாடைகள் பல வகைப்பட்டிருந்தன. அவை, இறஞ்சி,  இரட்டு, கவற்றுமடி, கத்தூலம், கரியல், குருதி, குஞ்சரி, கோங்கலா, கோசிகம், சில்லிகை, சித்திரக்கம்மி, சுண்ணம், செம்பொத்தி, தத்தியம், திருக்கு, துரியம், தேவாங்கு, தேவகிரி, பஞ்சு, பச்சிலை, பரியட்டக்காசு, பணிப்பொத்தி, பங்கம், பாடகம், பீதகம், புங்கர்க்காழகம், பேடகம், நுண்டுகில், வடகம், வண்ணடை, வெண்பொத்தி, வேதங்கம் என வழங்கப்பட்டன.1 

ஆடைகளைத் தூய்மைப்படுத்த காழியர்கள் (வண்ணார்) உவர்மண்ணைத் துணிகளில் தோய்த்துத் துவைத்ததாக அகநானூறின் 89ஆவது செய்யுள் சுட்டியுள்ளது. ஆறுகளில் வண்ணார் துணிகளைத் துவைக்கும் துறைக்கு (இடத்துக்கு) “துறைபோகு“ என்று பெயர்.

நல்ல ஆடைகளை எப்போதும் புதிதாகவே இருக்குமாறு புலத்தியர்கள் (துணியைத் துவைப்பவர்கள்) அவ் ஆடைகளுக்குப் பசைதோய்த்து (கஞ்சி), கல்லில் அடைத்து, முறுக்கி நீர் உலர்த்தித் துவைத்துக்கொடுத்த செய்தியைக் குறுந்தொகையின் 330ஆவது செய்யுளும் மதுரைக்காஞ்சியின் 721ஆவது அடியும் குறிப்பிட்டுள்ளன. அவ் ஆடைகள் நறுமணத்தோடு இருக்க அவற்றுக்கு அகிற்புகையூட்டிய செய்தியை மதுரைக்காஞ்சியின் 554ஆவது அடியும் புலத்தியர் இரவும் பகலும் இப்பணியில் ஈடுபட்டனர் என்ற செய்தியை நற்றிணையின் 90ஆவது செய்யுளும் தெரிவித்துள்ளன.

அக்காலத் தமிழர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த துகிலினையும் துக்கத்தை வெளிப்படுத்த கலிங்கத்தையும் உடுத்தினர். கணவனைப் பிரிந்த பெண்கள் மாசேறிய கலிங்கத்தையும் கணவனைக் கூடிய பெண்கள் பூவேலைப்பாடுகளை உடைய துகிலையும் உடுத்தியதாக இலக்கியங்கள் சுட்டியுள்ளன.

நுண்வினை“ என்று குறிப்பிடப்படும் சாயத்தொழிலும் அக்காலத்தில் இருந்துள்ளது. அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் பழந்தமிழர்களின் “சாயத்தொட்டிகள்“ கண்டெறியப்பட்டன. அவை நான்கு மீட்டர் நீளமும் மூன்று மீட்டர் அகலமும் உடையனவாக இருந்தன. சுடுமண்ணால் செய்யப்பட்ட நூல் நூற்கும் “தக்களி“யும் அவ் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.2அவுரி முதலான பல செடிகள் சாய நிறங்களை உருவாக்கப் பயன்பட்டன. கொன்றை மரப் பட்டைகளிலில் வேதிப்பொருட்களைச் சேர்த்துக் கருமை நிறத்தைக் கண்டுபிடித்தனர். கடுக்காயையும் கொன்றையையும் கலந்து வேறொரு நிறத்தைக் கண்டுபிடித்தனர். சாயவேரையும் காசுக்கட்டியையும் இணைத்து அடர்சிவப்பு நிறத்தைக் கண்டுபிடித்தனர். இந்நிறங்களைத் துணிகளில் ஏற்றும் சாயத்தொழில்நுட்பத்தில் அவர்கள் தேர்ந்திருந்தனர். நீல ஆடைகளை உருவாக்கியமை பற்றிக் கலித்தொகையின் 7, 11, 15, ஆகிய செய்யுள்களும் கருமை நிற ஆடைகளை உருவாக்கியமை பற்றி மதுரைக்காஞ்சியின் 638ஆவது அடியும் தெரிவித்துள்ளன.

பணக்காரப் பெண்கள் பகலில் பட்டாடையையும் இரவில் மெல்லிய துகிலையும் உடுத்தினர். அரசமாதேவியர் தம் மார்பில் “வம்பு“ எனும் கச்சினைக் கட்டியிருந்தனர். இரவுக்காவலர்கள் நீலநிறக் கச்சினையும் படம் எனும் சட்டையையும் அணிந்திருந்தனர். இறைவழிபாடு செய்வோர் நீராடியபின்னர் தங்களின் கீழாடையாகக் “காழகம்“ என்பதனை அணிந்தனர். “அறுவை“ என்ற தூய்மையான ஆடையினை அரசர்கள் புலவர்களுக்கு வழங்கினர்.

பெண்கள் வண்ணப் புடைவை (புட்டகம் அல்லது முருங்காக் கலிங்கம்) அணிந்தமை பற்றிப் பரிபாடலின் 12ஆவது பாடலும் நீராடுவதற்குரிய ஆடையினை அணிந்தமை பற்றிப் பரிபாடலின் 6ஆவது மற்றும் 7ஆவது பாடல்களும் சுட்டியுள்ளன.

கச்சு“ என்ற ஆடை மார்பில் அணியப்படுவது என்பதனைப் பெரும்பாணாற்றுப்படையின் 71ஆவது அடியிலிருந்து அறியமுடிகின்றது. அது இடுப்புவரையில் அணியத்தக்க ஆடை என்று அகநானூற்றின் 376ஆவது செய்யுளிலிருந்து உணரமுடிகின்றது. பூவேலைப்பாடுகள் மிக்க கச்சு என்ற செய்தியினைக் குறிஞ்சிப் பாட்டின் 125ஆவது அடியிலிருந்து அறியமுடிகின்றது. போர் வீரர்களும் கடவுளர்களும் மகளிரும் கச்சி அணிந்திருந்தனர் என்ற செய்திகளை நற்றிணையின் 21ஆவது செய்யுளும் சிறுபாணாற்றுப்படையின் 238, 239ஆகிய அடிகளும் முல்லைப்பாட்டின் 46, 47ஆகிய அடிகளும் உணர்த்துகின்றன.

மனிதர்கள் மிகுதியாகக் கூடும் கூட்டத்துக்குச் செல்லும்போது சில பெண்கள் தன் உடலை முழுவதும் மறைத்துக்கொள்வதற்காக மெய்யுறை அணிந்ததாகப் பரிபாடலின் 12ஆவது பாடல் தெரிவித்துள்ளது. இதனை “மெய்யாப்பு“ என்றும் குறிப்பிடுவர். “முழுஉடல்உடை“ என்று கூறலாம். இஸ்லாமியப் பெண்கள் “பர்தா“ அணிவதைப்போல.

அழகுக்கு அழகூட்டுதல்

பொன்“ தமிழ்நாட்டில் விளைவதல்ல. அது பிற இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றுதான். பழம்பாடல்கள் இரும்பு போன்ற பிற அனைத்து உலோகங்களையும் “பொன்“ என்றே சுட்டியுள்ளன. அச்சொல் இடம்பெரும் சூழலைப் பொருத்துதான் அது தங்கத்தைக் குறிக்கின்றதா என்று அறிந்துகொள்ளமுடியும். தங்கத்தைப் “பொன்“ என்றும் “பொலம்“ என்றும் தமிழர்கள் குறிப்பிட்டனர். பொன் என்பது, “சாதரூபம்“, “கிளிச்சிறை“, “ஆடகம்“, “சாம்பூநதம்“ என நான்கு வகைப்படும். இந்நான்கு சொற்கள் குறித்துப் புறநானூற்றின் 377ஆம் செய்யுளிலும் மதுரைக்காஞ்சியின் 410ஆவது அடியிலும் திருமுருகாற்றுப்படையின் 18ஆவது அடியிலும் காணமுடிகின்றது.

பொன் நகை செய்ய அப்பொன்னுடன் செம்பினைக் கலப்பர். செம்பின் அளவுக்கு ஏற்ப பொன்னின் மாற்று கூடும் அல்லது குறையும். பொன்னின் மாற்றினைக் காண உரைகல் பயன்படும். அதனைப் பழந்தமிழர்கள் கட்டளைக்கல் என்று அழைத்தனர். இதனைப் பெரும்பாணாற்றுப்படையின் 220ஆம் செய்யுளிலும் அகநானூற்றின் 178ஆவது செய்யுளிலும் நற்றிணையின் 3, 25 ஆகிய செய்யுள்களிலும் குறுந்தொகையின் 192ஆவது செய்யுளிலும் காணமுடிகின்றது.

பொன் நகையில் பலவித மணிகளைப் பதித்துப் பல்வேறுபட்ட வடிவங்களில் நகைகளைச் செய்த “கம்மியர்கள்“ அக்காலத்தில் இருந்தனர்.

நகைகளில் மகளிர் அணிவன, ஆடவர் அணிவன என இரண்டு பொதுவகைகள் காணப்பட்டன. மகளிர் அணிந்த நகைவகைகள் குறித்துச் சிலப்பதிகாரத்தில் விரிவான பட்டியல் இருக்கிறது. முத்து, மாணிக்கம் அல்லது பிற கற்களைப் பரல்களாக உள்ளடக்கிய சிலம்பு (நூபுரம்), கால்விரல் மோதிரம், பரியகம், அரியகம், பாடகம், சதங்கை, குறங்குசெறி, அரையில் அணியும் முத்துவடம், முப்பத்திரண்டு வடத்தாலான முத்துமேகலை, மாணிக்கமும் முத்தும் இழைத்த தோள்வளையல்கள், மாணிக்கமும் வயிரமும் அழுத்திய சூடகம், செம்பொன் வளை, நவமணி வளை, சங்கவளை, பவழவளை, வாளைமீனைப் போன்று செய்யப்பட்ட மாணிக்க மோதிரம், மோசை என்னும் மரகதக் கடைசெறி, கழுத்திலணியும் வீரச் சங்கிலி, நேர்ச் சங்கிலி, பொன் ஞாண், அரிநெல்லிக்காய் மணிமாலை, முகப்பில் கட்டின இந்திர நீலத்திடையே வயிரம் இழைத்த குதம்பை என்னும் காதணி, சீதேவியார், பூரப்பாளை, தென்பல்லி, வடபல்லி, தொடி, அரையணி, இரத்தினம் கட்டின அடுக்காழி, கழுத்தணி, கலாபம், காஞ்சி, காதணி, காலணி, கால் விரலணி, கால் மோதிரம், குறங்கு செறி, கொக்குலாய், கையணி, கைவிரலணி, சரப்பளி, சங்குவளை, சிலம்புதண்டை, சூடகம், தலையணி, தாறாருவி, தொடையணி, தோடு, தோளணி, பருமம், பாதசாலம், பிடர் அணி, பீலி, புல்லகம், பூரம்பாளை, பொன்வளை, பொன்னரிமாலை, நவரத்தினவளை, நீலக்குதம்பை, நுண் ஞாண் சாவடி, நுழைவினை, நேர்சங்கிலி, மகரக்குழை, மகரப் பகுவாய், மகரவாய் மோதிரம், மாணிக்க வளை, மேகலை, முத்தாரம், முஞ்சகம், முத்துவளை, வல்லிகை, வாளைப்பகுவாய், மோதிரம், விரிசிகை, வீரசங்கிலி,இடையில் அணிந்த பட்டிகையான மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என ஐவகை அணிகள், காதில் அணியும் குதம்பை, வளர்ந்த காதில் அணியும் கடிப்பிணை, பலவகையான பூத்தொழில் குயிற்றப்பட்ட கைவளைகள், முத்தால் இழைக்கப்பட்ட கைவளைகள் எனப் பற்பல நகைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.3

இவற்றையெல்லாம் அணிந்திருந்த பழந்தமிழச்சி பொற்தேவதைதானே! அந்தப் பொற்தேவதைகளுள் ஒன்று புதுமணலில் நடந்துவந்த செய்தியினைப் புறநானூற்றின் 253ஆம் பாடல் தெரிவித்துள்ளது. “புதுமணல்“ என்பது மங்கல நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பரப்பப்படுவது. ஆதலால், இந்தத் தேவதை மணமகளாகவும் இருக்கக்கூடும்.

பல வகையான ஆபரணங்களை அணிந்த இளம்பெண் பந்தாடிய செய்தியையும் பொற்கழங்காடிய செய்தியையும் பெரும்பாணாற்றுப்படையின் 327 முதல் 335வரையுள்ள அடிகள் தெரிவித்துள்ளன.

வறுமையில் வாடும் விவசாயப் பெண்கள் (வெறுந்தேவதைகள்) வயலில் களைச்செடிகளாக விளைந்த குவளை, ஆம்பல், வள்ளி போன்ற பூச்செடிகளின் தண்டுகளை வளைத்துத் தமக்கு வளையல்கள் செய்து அணிந்ததாகப் புறநானூற்றின் 352ஆம் செய்யுள் தெரிவித்துள்ளது.

மகளிருக்கான அடைமொழிகளை அவர்கள் அணிந்திருந்த நகைகளை மையப்படுத்தியும் உருவாக்கியுள்ளனர். சான்றாக, “செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்“ (புறநானூறு – 36), “ஒண்டொடி மகளிர்“ (புறநானூறு – 24), “வாலிழை மங்கையர்“ (புறநானூறு – 11) இத்தொடர்களைக் காட்டலாம்.

குழந்தைகள் தெய்வமல்லவா! அவர்களுக்கான அலங்காரம் தனிப்பட்டதாகவே இருந்தது. குழந்தைகளின் நெற்றியில் சுட்டியும் பிறையும், மூவடம் கோத்த பொன் சங்கிலி, கழுத்தில் ஐம்படைத் தாலியும், புலிப்பல் தாலியும், கை விரல்களில் சுறாமீனைப் போன்றும் இடபத்தைப் போன்றும் இலச்சினைகள் பொருத்தப்பட்ட மோதிரங்கள், மணிகள் உள்ளிட்ட சதங்கைகள், கால்களுக்குப் பொன் இரட்டைச் சரிகள், மணியும் பவழமும் கோத்த அரைஞாண், வாய்கள் தேரையின் வாய்போல் அமைக்கப்பட்ட வாய்ப்பூட்டுடைய சதங்கைகள், கிண்கிணி எனப் பலவும் அணிவிக்கப்பட்டன. குழந்தைக்காகச் செய்யப்பட்ட இரு வடங்களினாலான காற்சரி என்ற பாதசரம், பொடி வைத்து இணைக்கப்பட்டமை வெளியில் தெரியாதவாறு மீண்டும் நெருப்பிலிட்டு ஒளியூட்டப்பட்ட செய்தியினைக் கலித்தொகையின் 85ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

ஆடவர்கள் அணிந்த நகைகள் மிகக் குறைவுதான். மதாணி, முத்துமாலை, வெள்ளிக் கம்பியில் கோத்த பொற்றாமரை மலர்கள், கைவளைகள் (காப்பு போன்றன) ஆகியன மட்டுமே அணிந்திருந்தனர். விலைமதிப்பற்ற பல மணிகள் கோர்க்கப்பட்ட பாம்புபோல வளைந்த ஆரத்தையும் சேரமான் வஞ்சன் அணிந்திருந்ததாகப் புறநானூறின் 398ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளது.

பொற்றொழில்

யானையின் முன் மண்டையிலிருந்து துதிக்கை வரை அணியப்படும் பொன்னகைக்கு அணிஓடை, பொற்பட்டம், முகபடாம் என்று பெயர்கள் உண்டு. ஓடைப் பொன் சிறந்த பொன்னாகக் கருதப்பட்டது. பொன்னால் செய்யப்பட்டு, வெள்ளி நாரால் தொடுக்கப்பட்ட தாமரைப் பூவைச் (பொற்றாமரை) சிறந்த குரல்வளமுடைய பாணருக்குப் பரிசிலாக வழங்கியுள்ளனர். பொன்னை உருக்கிக் கட்டியாக்கிப் பின்னர் அதனை அடித்து கடகம், கங்கணம், காப்பு என விதவித அணிகலன்களை செய்துள்ளனர்.

பொற்தகடுகளால் ஆன கூண்டுகள் அரங்கு ஆகியவற்றைப் பதித்து அதன் மேல் இரத்தினங்களையும் பதிக்கும் செயலுக்குக் குந்தனவேலைப்பாடுகள் என்று பெயர். கெட்டிப் பொன்னில் பலவிதக் கற்களைப் பதித்தலுக்குக் கட்டடவேலை என்று பெயர். பொற்தகடுகளில் சித்திர வேலைப்பாடுகளைச் செய்து கடையலங்காரம், சடைபில்லை, அட்டிகை, பொத்தான் ஆகியவற்றைச் செய்தவற்கு நகாசுவேலை என்று பெயர். குந்தன வேலைப்பாடுகளுக்குரிய அச்சுகளில் இரத்தினப் பொடிகள், பலநிறக் கண்ணாடிகள் ஆகியவற்றைப் பதிக்கும் வேலைக்கு மின்னக் காய்ச்சு வேலை என்று பெயர். பொன்னாலான ஒட்டியாணம் செய்வதற்குப் பிடிப்போகரை என்று பெயர். அக்காலப் பொற்கொல்லர்கள் பொற்தொழிலில் கைதேர்ந்திருந்தனர்.

கார்கூந்தல் பெண்ணழகு

கறுத்து, நீண்டு, நெளிந்த கூந்தல் உடைய பெண் அழகு மிக்கவளாகக் கருதப்பட்டாள். பெண்கள் கொண்டை, குழல், பனிச்சை, சுருள், முடி என ஐந்து வகையாகத் தலைக்கோலம் செய்து கொண்டனர். மகளிரின் கூந்தலுக்கு “ஓதி“ என்ற பெயர் உண்டு. கூந்தலுக்கு “ஐம்பால்“ என்ற ஒரு பெயரும் உண்டு. அதாவது, குழல், அகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை (குறுந்தொகை – 229) என ஐந்துவகையாகக் கூந்தலை அழகுபடுத்துவதால் அதற்கு அப்பெயர் வந்தது.

பெண்கள் தங்களின் கூந்தலை ஆற்றில் நீராடியும் துவர்ப்பொருள் கொண்டு தோய்த்தும் தூய்மைப்படுத்தினர் என்றும் கூந்தலில் படிந்துவிட்ட மாசுக்களையும் எண்ணெப் பசையையும் நீக்க இழைதுகள்களைப் பயன்படுத்தினர் என்றும் பரிபாடலின் 10ஆவது பாடலின் 89 முதல் மற்றும் 91 வரையிலான அடிகள் தெரிவித்துள்ளன.

நீராடிய பெண்கள் தங்களின் கூந்தலின் ஈரத்தை நீக்குவதற்காக வெயிலில் உலர்த்தி, எண்ணெய் தடவி, “தகரம்“ என்ற மரத்தின் சாந்து பூசி, அகிற்புகையூட்டியதாகக் குறுந்தொகையின் 107 முதல் 110 வரையிலான செய்யுள்கள் குறிப்பிட்டுள்ளன. கூந்தல் மணக்கவேண்டும் என்பதற்காக மானின் கஸ்தூரிக் குழம்பினைத் தடவியதாகச் சிலப்பதிகாரம் 29 மற்றும் 30ஆவது அடிகள் சுட்டிக்காட்டியுள்ளன. அக்கருவிகொண்டு அழகுபடுத்தப்பட்ட கூந்தல் கார்மேகத்தைப் போல சீராக இருந்ததாகக் கலித்தொகையின் பாலைக்கலி 31 மற்றும் 35ஆவது பாடல்கள் வருணித்துள்ளன.

கூந்தலைச் சீர்படுத்த கழல்மணிக்கொடியின் கனியைப் பயன்படுத்தினர் என்ற செய்தியைப் புறநானூற்றின் 97ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

சீர்படுத்தப்பட்ட கூந்தலினைக் கதுப்பு, கொண்டை, அளகம், குழல், பின்னல் எனப் பலவாறு அமைத்துக்கொண்டனர். அக்கூந்தல் மேகம் கால் இறங்கியதுபோல இருந்தது என்று அகநானூற்றின் 323ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளது.

பெண்கள் தங்களின் கூந்தல் ஒப்பனைக்கு நூறுவகைப் பூக்களைப் பயன்படுத்தினர். மகரவாய், வகிர் போன்ற தலையணிகளை அணிந்தனர். மாணிக்கமாலையுடன் வெண்ணூலில் கோத்த மலர்களையும் பெண்கள் அணிந்தனர். மலர் அணியப்படாத கூந்தலுடைய பெண்ணை இழிவாகக் கருதினர். கூந்தலுக்குக் களிமணைத் தோய்த்து தூய்மைப்படுத்தும் வழக்கம் இருந்தது. கூந்தலுக்கு வாசனையூட்ட அகிற்புகையைத்தான் பெரும்பான்மையாகப் பயன்படுத்தினர்.

கண்ணுக்கு மையழகு

முக அலங்காரத்திற்காக மெய்க்கலவையைப் பயன்படுத்தினர். இக்கலவை மணம்மிக்கது. இதனை முகத்துக்கும் கை, கால்களுக்கும் தடவினர். பெரும்பாலும் அக்கால மகளிர் தம் மார்புகளுக்குச் சந்தனக்குழம்பு பூசுவது உண்டு. அச்சந்தனச் சாந்தினைவிட மணம்மிக்க அகிற்புகையின் மனம்மிக்க சந்தனச் சாந்தினைத் தேர்ந்தெடுத்து ஒரு பெண் தன் மார்பில் தடவியதாகப் பரிபாடலின் 12ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

மகளிர் தம் கண்களுக்குக் கருமையிட்டனர். மைதீட்டும் குச்சியினைக் “கோல்“ என்று அழைத்தனர். பெண்களின் மையிட்ட கண்கள் பற்றிய வர்ணனை பல செய்யுள்களில் இடம்பெற்றுள்ளது. சான்றாக நற்றிணை – 252, கலித்தொகை பாலைக்கலி – 26, பரிபாடல் -7, 18 ஆகிய பாடல்களைக் காட்டலாம்.

நெற்றியில் திலகமிடுதலை மகளிர் தவறாது கைக்கொண்டனர். மகளிர் தமக்குத் திலகமிட்டுக் கொண்டதனை நற்றிணையின் 62ஆம் செய்யுளும் கலித்தொகையின் 92ஆவது செய்யுளும் குறிப்பிட்டுள்ளன.

தன்னை முழுவதுமாக அலங்கரித்துக்கொண்ட பெண் தன்னழகைத் தாம் பார்த்து மகிழ்வதற்காகக் கண்ணாடிகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஒளி ஊடுறுவும் கண்ணாடியை “பாண்டில்“, “வயங்கல்“, “வயங்குமணி“ என்று குறிப்பிட்டனர். “வயங்குமணி“ என்பது பளிங்குக் கல்லையும் குறிக்கும். ஒளியை எதிரொளிக்கும் கண்ணாடியை “ஆடி“, “மண்டிலம்“ என்று குறிப்பிட்டனர். அதில் தெரியும் பிம்பத்தை, நிழலுருவைப் “பாவை“ என்றனர். இக்கண்ணாடிகள் கையடக்கமாகச் சிறியதாகவும் ஆளுயரத்தில் பெரியதாகவும் இருந்துள்ளன. இதனைப் பரிபாடலின் 12ஆவது பாடலும் குறுந்தொகையின் 8 ஆவது பாடலும் தெரிவித்துள்ளன.

இவ்வாறாகத் தன்னை அழகுபடுத்திக்கொண்ட பெண்கள், தம் வாய் மணக்கும் வகையில் வாசனைப் பொருள் கலந்த பாக்கினை வாயில் அடக்கிக்கொண்டனர். நெடிய தொலைவுவரைக்கும் மணக்கும் வாசனைப் பொருள்களைத் தன்மீது தடவிக்கொண்டனர்இச்செய்திகளைப் பரிபாடலின் 12ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

ஆண்களின் அலங்காரம்

ஆடரின் முடிக்கு “ஓரி“ என்ற பெயர் உண்டு. ஆடவர் தம் தலைமுடியினைக் குடுமியாக முடிந்தனர். முன் மண்டையில் (நெற்றிக்குமேல்) முடிகளைக் களைந்திருந்தனர். அது சாத்திரத்துக்காக அல்ல; முன்மண்டையில் வெயில் படவேண்டும் என்பதற்காக. ஆண்களும் தலையில் பூச்சூட்டிக்கொண்டனர். அதற்கு கண்ணி என்று பெயர். பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தில் இடம்பெற்றுள்ள சேரமன்னருக்குக் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்று பெயர். புறத்திணையில் போருக்குச் செல்லும் வீரர்கள் தலையில் அடையாளப் பூக்களைச் (வெட்சிப்பூ, கரந்தைப்பூ, நொச்சிப்பூ, வகைப்பூ போன்றன) சூடினர். பிற ஆண்கள் பூமாலை அணிவதும் உண்டு.

உணவு உயிர்வாழத் தேவையானது. “அழகு“ வாழ்க்கையை வாழத் தேவையானது. அக்காலம் முதல் இக்காலம் வரை ஒப்பனைகள் சார்ந்த பொருட்கள், கருவிகள் இன்னபிற மாறி வந்தாலும் மனிதர்களின் மனத்தில் உள்ள, “தன்னை அழகாக்கிக்கொள்ளுதல்“ என்ற அழகுணர்ச்சி மட்டும் மாறவேயில்லை. மானுடம் வாழ்ந்திருக்க அதுவே பெரிய உந்து சக்தி.

அடிக்குறிப்புகள்

  1. http://tamilacademy.org

  2. சாமிநாதன், ., சங்க காலத் தொழில்நுட்பம், . 30.

  3. http://www.keetru.com

– – –

புதிய பகுதி : நவீன இந்திய வரலாறு

நவீன இந்திய வரலாறு : ஓர் அறிமுகம்

Old books

நவீன இந்திய வரலாறை அதன் அத்தனை சிக்கல்களோடும் சவால்களோடும் இரண்டு அட்டைகளுக்கு இடையில் முழுமையாக அடக்கிவிடவேண்டும் என்னும் அசாத்தியக் கனவுடன் இதனை நான் ஆரம்பிக்கவில்லை. 1947க்குப் பிறகான இந்திய அரசியல் களத்தை மையப்படுத்தி அமையப்போகும் இந்தத் தொடர் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும், ஒவ்வொரு அரசியல் நிகழ்வையும், ஒவ்வொரு சமூக மாற்றத்தையும் பதிவு செய்யப்போவதில்லை. இதன் இலக்கு சற்றே விரிவானது.

ஒரு தேசத்தைப் புரிந்துகொள்ள பல வழிகள் உள்ளன. அந்நாட்டின் ஆட்சியாளர்களையும் அவர்களுடைய அரசியல் செயல்பாடுகளையும் பரிசீலித்து அந்தச் செயல்பாடுகள் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று கவனித்து மதிப்பிடுவது ஒரு வழிமுறை. இந்த அணுகுமுறையைப் பின்பற்றி எழுதப்படும் பிரதிகளின் அடிப்படை அதிகாரத்தில் இருப்பவர்களே வரலாறைத் தீர்மானிக்கிறார்கள் என்பதுதான். செல்வாக்கு மிக்கவர்களை மையப்படுத்தி மேலிருந்து கீழாகப் பார்த்து எழுதப்படும் இத்தகைய பிரதிகளைப் புறந்தள்ளிவிட்டு கீழிருந்து மேலாக, அதாவது அதிகாரத்துக்கு உட்பட்டிருந்த மக்களை மையப்படுத்தி வரலாறை அவர்கள் பார்வையில் அணுகும் முறை வரலாற்றுத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது. இது மிகச் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு திசை மாற்றம்.  E.P. தாம்ஸன் எழுதிய The Making of the English Working Class, ஹோவர்ட் ஜின் எழுதிய A People’s History of the United States, க்ரிஸ் ஹார்மன் எழுதிய A People’s History of the World உள்ளிட்ட புத்தகங்கள் வரலாறை ஆராயும், எழுதும் மற்றும் வாசிக்கும் முறையை முற்றிலும் மாற்றியமைத்தன.

இந்திய வரலாறு குறித்த அத்தகைய வரலாற்றுப் பிரதிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து எளிமையாக அறிமுகம் செய்வதே இத்தொடரின் நோக்கம். ஆங்கிலத்தோடு ஒப்பிடும்போது தமிழில் எழுதப்படும், மொழிபெயர்க்கப்படும் வரலாற்றுப் படைப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. (இது வேறு பல துறைகளுக்கும்கூட பொருந்தும்). இந்த வெற்றிடத்தை பிரபல வரலாற்றுப் புத்தகங்கள்பிடித்துக்கொண்டுவிட்டன. தேவைக்கு அதிகமாக எளிமைப்படுத்தப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட, மேலோட்டமான தகவல்களை வைத்துக்கொண்டு வாசிப்பதற்கு அழகான முறையில் சித்திரிக்கப்பட்ட இந்தப் பிரதிகளே வரலாறு என்னும் பெயரில் அதிகம் வெளிவந்துள்ளன. இந்தத் தவறுகள் அனைத்தையும் என்னுடைய பல முந்தைய புத்தகங்களில் நானே செய்துமிருக்கிறேன். இந்தத் தவறுகளைத் திருத்திக்கொள்ள, அதைவிட முக்கியமாக இவை தவறுகள் என்று உணர்ந்துகொள்ள சில புத்தகங்கள் பெரிதும் உதவின. வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்று மட்டுமல்ல எவ்வாறு வாசிக்கப்படவேண்டும் என்பதையும் இவை கற்றுக்கொடுத்தன.

சுவாரஸ்யமான வரலாற்றுப் பிரதிகளுக்கான அவசியத்தை நான் மறுக்கவில்லை. ஓர் அறிமுகம் என்னும் வகையில் வரலாற்றுத் துறையை நோக்கி வாசகர்களை ஈர்க்கும் தூண்டில்களாக இவற்றால் செயல்படமுடியும். ஆனால் இந்தத் தூண்டில்களில் சிக்கும் சிறு மீன்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு முழுக் கடலையும் தெரிந்துகொண்டுவிட்டதாக நாம் திருப்திபட்டுக்கொண்டால் இழப்பு நமக்குத்தான்.

வரலாறை அதனை முறைப்படி ஆய்வுசெய்த வரலாற்றாசிரியர்களிடம் இருந்து கற்பதே சரியான அணுகுமுறை. அவ்வாறு கற்கும்போது இதுவரை நாம் தெரிந்துவைத்திருக்கும் கதைகளையும் நிகழ்வுகளையும் சம்பவங்களையும் கடந்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறுகிறோம். கொடுப்பதை வெறுமனே உள்வாங்கிக்கொள்ளாமல் கேள்விகள் எழுப்பத் தொடங்குகிறோம்.நாம் அறிந்துவைத்துள்ள பிரபலப் பிரதிகளிடமிருந்தும் அவை உணர்த்தும் உண்மைகளிலிருந்தும்விலகிச் செல்கிறோம். தேடல் விரிவடைகிறது. சமூகவியல், பொருளாதாரம், கலை, அரசியல். தத்துவம் என்று பல துறைகளிலிருந்து திரட்டிக்கொண்ட வெளிச்சங்களை வரலாற்றின்மீது பாய்ச்சி நம் புரிதலை விசாலப்படுத்திக்கொள்கிறோம்.

இறப்பதற்குமுன் ஒருவர் அவசியம் படிக்கவேண்டியவை என்னும் தலைப்பில் துறை வாரியாகச் சிறந்த படைப்புகளைப் பட்டியலிட்டு எழுதினார் ஓர் அமெரிக்க எழுத்தாளர். ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய் போன்றோரைக் குறிப்பிடும்போது அவர் ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தினார். மற்றவர்களைப் போல் இவர்களை அணுகமுடியாது. இவர்களைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் நாமும் சில பயிற்சிகளை எடுத்துக்கொண்டு நம்மைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டும். மலையேறுவதற்கு ஒப்பான இந்த முயற்சியில் நாம் பலமுறை சறுக்கக்கூடும், தடுமாறி விழக்கூடும். ஆனால் ஒன்று நிச்சயம். இவர்களைக் கற்றுத் தேர்வதல்ல; கற்க முயற்சி செய்வதேகூட ஒரு நல்ல அனுபவம்தான்.

அத்தகைய ஒரு முயற்சிதான் இது.

0