விதை நெல்லைப் பழிக்கும் கூட்டம்

vedasமக்களின் பேச்சு மொழியாகப் பயன்படவில்லையே; பின் எதற்காக சம்ஸ்கிருதத்தை மதிக்கவேண்டும் என்று சொல்வது சமைக்கத்தான் பயன்படுவதில்லையே; விதை நெல்லை எதற்காகப் பாதுகாக்கவேண்டும் என்று கேட்பதைப் போன்றது. இந்து, பவுத்த, சமண மதங்களின் பெரும்பாலான படைப்புகள் சம்ஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன. இந்தியாவின் கடந்த கால அறிவுச் செல்வத்தில் பெரும்பாலானவை சம்ஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன. விஞ்ஞான உலகின் அறிவுத்துறைகளுக்கான மொழியாக ஆங்கிலம் எப்படி இன்று இருக்கிறதோ அதுபோலவே கடந்த கால அறிவுச் செல்வத்துக்கான மொழியாக சம்ஸ்கிருதம் இருக்கிறது. சம்ஸ்கிருதத்தைப் பழிக்கும் ஓர் இந்தியர் அவருடைய முன்னோர்களின் அறிவை, வாழ்க்கையை, அனுபவத்தைப் புறக்கணிக்கிறார் என்றே அர்த்தம்.

சம்ஸ்கிருதத்துக்கு இன்னொரு பயன்பாடும் இருக்கிறது. அது வழிபாட்டு மொழியாக இருக்கிறது. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட இறைவனை வணங்க நாம் அன்றாடம் பேசும் மொழியைவிட புரியாமல் இருக்கும் மொழியே சிறந்தது. அதுதான் அந்தச் சடங்குக்கு ஒருவித பூடகமான தன்மையை அளிக்கும். கண்ணால் காண முடிந்தவர்களுடன் பேச ஒரு மொழி. காண முடியாத இறைவனுடன் பேச புரிந்துகொள்ள முடியாத மொழி. தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட இறைவனை வணங்க தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சடங்குகளே உகந்தது.

இறைவனின் இருப்பையே நிராகரிக்கும் நாத்திகம் இறைவனை வணங்க சம்ஸ்கிருதம் மட்டும் கூடாது என்றெல்லாம் சொல்லமுடியாது. பிற மொழிகளையுமே அந்த இடத்தில் நிராகரிக்கவே செய்யும். செய்ய வேண்டும். அது வேறு வகையான விவாதத்துக்கான விஷயம். ஆனால், இறைவனின் இருப்பை ஏற்பவர்களுக்குத் தாய் மொழியைவிட சம்ஸ்கிருதத்தில் பிரார்த்தனைகள் இருப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்கமுடியாது. சூத்திர, தலித் கோவில்களில் ஸ்பீக்கரில் முழங்கும் சம்ஸ்கிருத ஸ்லோகங்களே இதற்கான சாட்சி. இசை நயம் மிகுந்த கம்பீரமான சமஸ்கிருத மந்திரங்கள் அளிக்கும் மன நிறைவு புரிந்த மொழிகளில் இருக்கும் மந்திரங்களில் கிடைப்பதில்லை. பூக்களால் அலங்கரித்தல், பல்வகை திரவங்களால் அபிஷேகம் செய்தல், இருண்ட கர்ப்ப கிரகத்தில் கற்பூரம் ஏற்றுதல், பொன்னிற விளக்கொளியைப் படர விடுதல் என வழிபாட்டைக் கலையாக வளர்த்தெடுத்த குலம் பூஜைக்கான மொழியாக சம்ஸ்கிருதத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் சம்மதத்தோடுதான் முன்வைத்திருக்கிறது.

சம்ஸ்கிருதத்தின் மீதான காழ்ப்புணர்ச்சிக்கு முக்கிய காரணம் அது இந்துக்களின் குறிப்பாக பிராமணர்களின் மொழி என்ற மேலோட்டமான புரிதல்தான். இந்து மதம் மீதும் பிராமணர்கள் மீதுமான வெறுப்புக்குக் காரணம் அவர்கள்தான் சாதி அமைப்பை உருவாக்கி வளர்த்தெடுத்தார்கள் என்ற அரசியல் தீர்மானம்தான். இந்த உலகில் மதவெறி, இன வெறி, நிற வெறி, மொழி வெறி என ஏராளமான வெறிகள் இருக்கின்றன. அந்த வரிசையில் சாதி வெறி கடைசித் தட்டில் இருக்கும் ஒன்றுதான். ஆனால், மதம், இனம், நிறம், மொழி என அனைத்துவகை வெறியிலும் சிறந்து விளங்கும் கிறிஸ்தவ மேற்கத்திய சக்திகள் சொல்லிவிட்டன என்பதால் சாதி வெறியே உலகில் மிகவும் கொடூரமானது என்று இந்திய அறிவுஜீவி வர்க்கமும் கிளிப்பிள்ளைபோல் கூவிக்கொண்டு வருகிறது. தமது தவறை மறைத்துக் கொள்ள விரும்பும் சூத்திர தலித் ஜாதிப் போராளிகள், ஏகாதிபத்திய வெறி கொண்ட மேற்கத்திய கிறிஸ்தவ சக்திகள் இவற்றோடு வீசும் காற்றுக்கு ஏற்ப பாய் விரிக்கும் சமத்காரம் மிகுந்த அக்ரஹாரத்து அம்பிகள் என அனைத்து முனைகளிலும் இந்து/பிராமண மதிப்பீடுகளும் வாழ்க்கை முறையும் கட்டம் கட்டித் தாக்கப்படுகின்றன.

தொழில் புரட்சிக்கு முன்வரையான மன்னராட்சி காலகட்டத்தில் பிறப்பின் அடிப்படையில்தான் உலகின் எல்லா இடங்களிலும் எல்லாமும் தீர்மானமான நிலையிலும் இந்து சாதி அமைப்பு மட்டுமே கொடூரமானது என்றும் அதற்கு பிராமணர்களே காரணம் என்றும் சொல்லப்பட்டுவருகிறது. பிறப்பின் அடிப்படையில் அல்லாமல் குணத்தின் அடிப்படையில் சமூகத்தை இயக்கிவந்த வர்ணாஸ்ரம தர்மத்தை சாதியின் தோற்றுவாயாக முத்திரை குத்தித் தாக்கி வருகிறார்கள்.

இன்றைய நவீன சமூகம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகூடாது என்று சொல்வதைத்தான் வர்ணாஸ்ரம தர்மமும் சொல்கிறது. ஆரம்பத்தில் இந்தியாவில் அதுவே நடைமுறையில் இருந்தது. அனைவருக்கும் அனைத்துவிதமான கல்வி தரப்பட்டது. திறமைக்கும், விருப்பத்துக்கும், குண இயல்புக்கும் ஏற்ப வேலைகள் தீர்மானமாகின. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அனைவரும் கூடிக் கலந்து உரையாடி, வேலைகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் வரவே ஒரு தலைமுறைக்கு ஒரு வேலை என்று தீர்மானமானது. பல நூறு வருடங்கள் கழித்த பிறகு பெற்றோரின் தொழிலே பிள்ளைகளுக்கும் என்று தீர்மானமானது (அதாவது சாதி அமைப்பாக ஆனது).

ஒவ்வொரு தனி மனிதரும் தமது உள்ளார்ந்த வலிமையால் மேலெழ முடியும் என்றாலும் மரபணு, சுற்றுச் சூழல் ஆகியவையே ஒரு மனிதனுடைய சிந்தனையையும் செயல்பாடுகளையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையே. புரோகிதத் தொழில் போலவே எல்லாத் தொழிலும் உயர்ந்தவை என்பதை ஏற்க முடியாதவர்கள் குறைந்தபட்சம், எல்லாத் தொழிலும் சமூக மரியாதைக்கு உரியவையாக உயர்த்தப்பட முடிந்தவையே என்பதையாவது புரிந்துகொள்ளவேண்டிய காலம் வந்திருக்கிறது. கூடவே, எந்தத் தொழிலையும் உயர்த்திக் கொள்ள முடியாமல் யாரும் தடுத்திருக்கவில்லை என்ற உண்மையையும் சேர்த்து.

மேலும் நிறவெறி, மதவெறி, இன வெறி போன்றவை அதிகாரக் குவிப்பை அடிப்படையாகக் கொண்டவை. சாதி அமைப்போ அதிகாரப் பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே, அது எந்த நிலையிலும் பிற வெறிகளைப் போல் கொடூரமாக ஆனதும் இல்லை. இனி எப்போதும் ஆகவும் போவதில்லை. சாதிகளை ஒருங்கிணைத்து ’இந்து மதம்’ உருவானதுபோல் மொழிவாரி மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்திய தேசியம் உருவாகிவருகிறது. இன்று அதீத பிராந்திய (மொழி) தேசியம் பேசுபவர்கள் ஒருவகையில் சாதி வெறியாளர்களின் அப்கிரேடட் (டவுன்கிரேடட்?) வெர்ஷன்களே.

இந்து சாதி அமைப்புதான் பன்முகத்தன்மையை உயிர்ப்புடன் தக்கவைத்திருக்கிறது. இந்து சாதி அமைப்பு வழங்கியிருக்காத சமத்துவத்தை இஸ்லாமும், கிறித்தவமும் கூட வழங்கியிருக்கவில்லை. பாரம்பரிய வழிமுறையை தூக்கி எறிந்துவிட்டு முஸ்லீமாகவும், கிறிஸ்தவராகவும் ஒருவர் மாறினால்தான் சமத்துவம் கிடைக்கும் என்றால் அதன் பெயர் சமத்துவம் அல்ல. கையூட்டு, அழித்தொழிப்பு அல்லது பச்சை சந்தர்ப்பவாதம். இந்து சாதி அமைப்பு அப்படியான ஒரு சமத்துவத்தை முன்வைக்காததை அதன் பலமாகவே கொள்ளவேண்டும்.

இவையெல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படும் ஒருவருக்கு பிறப்பின் அடிப்படையில் வேலைகளைத் தீர்மானிப்பது தவறு என்ற நவீன மதிப்பீட்டைத்தான் வர்ணாஸ்ரம தர்மமும் முன்வைத்திருக்கிறது என்ற உண்மையும் இந்திய சாதி அமைப்பு ஒப்பீட்டளவில் குறைகள் குறைந்த சமூக அமைப்பு என்ற உண்மையும் புரியவரும் (அவருக்கு அதை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் எப்போது வரும் என்பது மேலை நாடுகளில் அந்தக் கருத்து எப்போது ஏற்றுக்கொள்ளப்படும் என்பதைப் பொறுத்தது என்பது வேறு விஷயம்). அந்த உண்மையைப் புரிந்துகொள்ளும்போது சம்ஸ்கிருதத்தின் முக்கியத்துவமும் மேன்மையும் புரியவரும்.

தண்ணீர் சிற்பம்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 24

அதிகாரம் – புலவி நுணுக்கம்)

nymph 3.jpg7f18a8a4-8308-45c9-a86e-2e5565945416Largeகுறள் 1311:

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

யான் தீண்டேன்

பெண்கள் கண்கள்

பிய்த்துத் தின்னும்

இவன் மார்பினை.

*

குறள் 1312:

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

சண்டையினூடே ஒரு

தும்மல் நுழைப்பான்

நூறாயிசு” சொல்லி

சமாதானமாவேனென.

*

குறள் 1313:

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

சன்ன அலங்காரம்

செய்து நின்றாலும்

எவளை மயக்கிட

இதெனக் கேட்பாள்.


*

குறள் 1314:

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

எவரையும் விட இது

உயர்காதல் என்றால்

எவரை விட? எனச்

சிணுங்கி ஊடுவாள்.


*

குறள் 1315:

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

இப்பிறவியில் பிரியேன்

என்றால் இனி வரும்

பிறவிகள் குறித்து இரு

கண்ணில் நீர் வைப்பாள்.


*

குறள் 1316:

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

நினைத்தேன் என்றால்

அதற்கு முன் கணம்

ஏன் மறந்தாய்? எனக்

கேட்டு பிணங்குவாள்.


*

குறள் 1317:

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.


தும்மினால் வாழ்த்திப்

பின் எவள் நினைப்பில்

வெடித்த தும்மல் என

விசாரணை வைப்பாள்.

*

குறள் 1318:

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

தும்மல் யுத்தங்கள்

தவிர்க்க அடக்கினால்

எவளை மறைக்கிறாய்

என்றொரு புது யுத்தம்.

*

குறள் 1319:

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

கோபத்தில் பேரழகு என

சமாதானம் முயன்றால்

மற்றவளையும் இப்படியா

மயக்குவாய் என்கிறாள்.


*

குறள் 1320:

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

கண்கள் கொட்டாது

அவளைப் புசித்தால்

எவளோடு ஒப்பிட்டு

ரசிப்பென சந்தேகம்.

0

பொய்க்கால் குதிரைகள்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 23

அதிகாரம் – புலவி

Viceroy_Butterflyகுறள் 1301:

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

பிரிவு ரணத்தை

அவனும் சற்று

அனுபவிக்கட்டும்

ஊடி விளையாடு!

*

குறள் 1302:

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

சமையல் குறிப்பில்

உப்பு தேவைக்கேற்ப;

மையல் கலையில்

ஊடல் அதே போல்.

*

குறள் 1303:

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

ஊடல் பெண்ணுரிமை;

லாவகமாய் உடைத்து

மெல்ல மனமிளக்கிக்

கூடல் ஆண் கடமை.

*

குறள் 1304:

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

ஊடல் கொண்டவளை

சமாதானம் செய்யாதது

சட்டப்படி குற்றமாகும்

.பி.கோ. செக்‌ஷன் 307.

*

குறள் 1305:

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

ஆண்மைக்கழகு

சலிக்காத கூடல்,

ஒரு பெண்ணின்

ப்ரியமான ஊடல்.

*

குறள் 1306:

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

சண்டையின் ருசியற்று

சீண்டாமல் தீண்டுதல்

சிறுவனோ கிழவனோ

செய்யும் விளையாட்டு.

*

குறள் 1307:

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

கூடித் திளைக்கும்

காலம் குறைக்கும்

ஊடல் என்பதால்

உண்டு சிறுவலி.

*

குறள் 1308:

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

வலியை அறிதலே

அன்பெனப்படுகிறது

அவனை நினைத்தே

இந்த வலி யாவும்.

*

குறள் 1309:

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

அன்புள்ளவனிடம்

ஊடல் பலிக்கும்

அஃதில்லையெனில்

அது பல் இளிக்கும்.

*

குறள் 1310:

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

ஊடலை அணைக்காத

அவனை அணைத்துக்

கூட ஏங்கும் நெஞ்சம்

அதன் பெயர் வேட்கை.

 

அது ஒரு காதல் காலம்

சங்க காலம் / தேடல் – 07

காமத்திலிருந்து காதலுக்கு

seed_Sunflowerமுதலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காமமே இருந்தது. அந்த முரட்டுக்காமம் காலவோட்டத்தில் தன்னிலையில் சற்று வீரியம் குறைந்து, காதலாகக் குவிந்து, பெண் மீதும் ஆண்மீதும் அன்பாக மலரத் தொடங்கியது. இதற்குக் காரணங்கள் பல. ஆண் பெண் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களாக இருக்கலாம். பெண்வழிச் சமுதாயத்தின் ஆளுகையாக இருக்கலாம். “வன்முறையால் எவற்றையும் அடைந்துவிடமுடியாது“ என்ற உயரிய சித்தாந்தமாகக்கூட இருக்கலாம்.

அந்த அன்புமலரைக் காதலாகவும் காமமாகவும் சற்றுக் கூடுதலாக முரட்டுக்காமமாகவும் மாற்றும் வித்தையை ஆணும் பெண்ணும் படிப்படியாக அறியத்தொடங்கினர். ஆம்! அவர்கள் காமத்தை அன்பாகவும் அன்பைக் காமமாகவும் கையாளக் கற்றுக்கொண்டனர். ஆனால், அவர்களால் அவற்றை ஒருபோதும் காதலாக மட்டும் வைத்துக்கொள்ள முடியவில்லை. குளிர்ந்த நீரானது பனிக்கட்டியாக உறையுமுன் உள்ள தனிநிலை போலவோ, பனிக்கட்டி வெப்பமாகிக் குளிர்ந்த நீராவதற்குமுன் உள்ள தனிநிலை போலவோ காதலும் ஒரு பிடிபடாத சமமற்ற தனிநிலை.

காதற்திணைகள்

தொல்தமிழர் தங்கள் நிலங்கள் நான்கினுள் பாலையையும் சேர்த்து அவற்றை மொத்தமாக “அன்பின் ஐந்திணை“ என்று கூறும் வழக்கம் உள்ளது. அதாவது, அவை காமம் கனிந்து, காதற்கனியாக விளைந்த அன்பின் ஐந்திணை. அந்த ஐந்து நிலத்திலும் காதல் இருந்தது. ஆனால், தன் வீரியத்தில் மாற்றங்களைப் பெற்றிருந்தது.

குறிஞ்சி என்றால் ஆண்பெண் சேர்க்கை (பின்னிப்பிணைந்த இல்லறம்), முல்லை என்றால் பெண் தன் கற்பினைக் காத்திருத்தல் (இடைவெளியோடு கூடிய இல்லறம்), மருதம் என்றால் ஆண்பெண் இல்லறவாழ்வில் இடைச்செருகலாக “சக கிழத்தி“ (சக்காளத்தி) வந்ததால் ஏற்பட்ட மனக்கசப்பு (ஊடல்), நெய்தல் என்றால் தலைவனைப் பிரிந்த தலைவி “அவன் வருவான்“ என்ற நம்பமுடியாத நம்பிக்கையில் இரங்கியிருத்தல் அல்லது புலம்புதல் (கேள்விக்குறியான இல்லறம்), பாலை என்றால் ஆண்பெண் இல்லறவாழ்வில் ஏற்பட்டுவிட்ட, தாற்காலிகத்திலிருந்து நிரந்தரத்தை நோக்கிய பிரிவு (கேள்விக்குறியான வாழ்க்கை).

இப்படி வேறுபட்ட இல்லற வாழ்வுடைய ஐந்நிலங்களிலும் காதல் இருந்ததா? இருந்தது. அது இல்லையெனில் நெய்தல் திணையிலும் பாலைத் திணையிலும் தலைவி உயிருடன் இருந்திருக்க மாட்டாள். ஆம்! தலைவி உயிர்த்திருக்க அருமருந்தாக இருந்தது காதல்தான். ஒருவிதத்தில் அது அவளின் உயிராகவும் இருந்தது.

காதலும் காதல் நிமித்தமும்

சங்க இலக்கியங்களை அதன் பாடுபொருள் சார்ந்து அகம், புறம் எனப் பாகுபாடுசெய்துள்ளனர். அகம் என்றால் அகத்திணை, புறம் என்றால் புறத்திணை. இங்குத் திணை என்பதனை ஒழுக்கம் என்ற பொருளில் கருதவேண்டும். ஆக, அகம் என்பது அகம் சார்ந்த ஒழுக்கம். அதாவது, அன்பு, காதல், காமம் மற்றும் பிறரிடத்தில் வெளிப்படையாகச் சொல்லத்தகாத அனைத்தும் அகத்திணையுள் அடக்கம். புறம் என்பது புறம் சார்ந்த, அகம் சாராத மற்ற ஒழுக்கங்கள். அவையனைத்தும் புறத்திணையுள் அடக்கப்படும். சங்க இலக்கியப் பாக்கள் 2381. அவற்றுள் அகத்திணையைச் சார்ந்தவை 1862. அதாவது, 78.20 சதவிகிதப் பாடல்கள் அகத்திணையைச் சார்ந்தவை.

காதல்“ என்ற சொல் சங்க இலக்கியத்தில் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது என்பதனைத் தானே எண்ணி, “89 இடங்களில் காதல் என்ற சொல் இடம்பெற்றுள்ளது“ என்ற கருத்தினை முனைவர் பெ. மாதையன் தெரிவித்துள்ளார்.iஅதாவது, புள்ளிவிவரப்படி பார்த்தால் 21 பாடலுக்கு ஒருமுறை “காதல்“ என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

எல்லாத்திணைகளிலும் காதல் இலைமறை காயாகத்தான் இருந்துவந்துள்ளது. அதனால்தான் அதனைக் களவு (திருட்டுத்தனம்) என்ற சொல்லால் நாசுக்காகக் குறிப்பிட்டனர். ஒழுக்கம் என்பது, பெற்றோருக்குத் தெரியாத, அவர்கள் ஏற்றுக்கொள்ளாத காதல் “களவொழுக்கம்“ என்றும் அவர்களுக்குத் தெரியவந்து, அது அவர்களால் ஏற்கப்பட்டால் அது “கற்பொழுக்கம்“ என்றும் இருவகையில் பொருள்படுத்தப்பட்டது.

தேவதைகள் காத்திருக்கிறார்கள்

தலைவியும் தலைவனும் முதன்முதலில் சந்திக்கும் இடமாகப் பூம்பொழில் (சோலைவனம்), நீர்நிலை (அருவி, குளம், ஆறு,), விளைநிலங்கள் (தினைப்புனம்), விளையாட்டு ஆயம் (ஆடுகளம்) ஆகிய நான்கும் இருந்தன. இந் நான்கு இடங்களும் தலைவி தன் பெற்றோரின் அனுமதியினைப் பெற்றுத் தன் தோழியுடன் உலாவும் அல்லது சிறுசிறு பணிகளைப் புரியும் இடமாக இருப்பதனால் அங்கு அவளைத் தனித்துக் காணத் தலைவனுக்கு வசதியாக இருந்திருக்கலாம்.

பூக்களைப் பறித்து மாலைகட்டி மகிழ பூம்பொழிலுக்குத் தலைவிசெல்வது உண்டு. குளித்துக் கரையேறவோ அல்லது நீராடி மகிழவோ நீர்நிலைகளுக்குத் தலைவிசெல்வதும் உண்டு. தன் வீட்டாருக்குச் சொந்தமான நிலங்களில் தினை, சோளம், சாமை, வரகு முதலான பயிர்களை விளையச் செய்திருந்தால், அவற்றின் கதிர்முற்றிய காலங்களில் அவற்றைப் பறவைகளிலிருந்து காக்கப் பரணமைத்து, கவன்கற்களின் உதவியுடன் அவற்றை விரட்டும் பணிக்குத் தலைவிசெல்வதும் உண்டு. பந்து விளையாட, மணல்வீடு கட்ட மற்றும் இன்னபிற விளையாட்டுகளில் பொழுதினைக் கழிக்கும் பொருட்டு தலைவி தன் தோழியுடன் விளையாட்டுத் திடலுக்குச் செல்வதும் உண்டு. இந்த இடங்களிலெல்லாம் இளம்பெண்கள் தங்கள் பெற்றோரின் துணையின்றி வருவார்கள் என்பது இளைஞர்களுக்குத் தெரியும். இங்கெல்லாம் இளைஞர்கள் தங்களைக் காண ரகசியமாக வருவார்கள் என்பது இளம்பெண்களுக்கும் தெரியும். தலைவியின் தாய்க்கும் தெரியும். அத்தாயும் ஒருகாலத்தில் தலைவியாக இருந்தவள்தானே! இருந்தாலும் மகள் மீது கொண்ட நம்பிக்கை அவள் கண்களை மறைத்துவிடுகின்றது.

காதற்தீ

தலைவி மருதநிலத்துக்காரியாகவோ முல்லைநிலத்துக்காரியாகவோ இருக்கலாம். அதேபோல, தலைவன் மலைநாடனாகவோ, நெய்தல்நிலத்துக்காரனாகவோ இருக்கலாம். இருவரும் எதிர்ப்படும்போது அவர்களுக்குள் இருக்கும் உணர்வுத் தீ அவர்களை இணைத்துப் பற்றிக்கொண்டால் போதும். பின்னர், அத் தீ அணையாமல் இருக்கத் தோழியும் பாங்கனும் (தலைவனின் நண்பன்) காவல் காப்பர்.

முதல்சந்திப்புக்குப் பின்னர் அடுத்தடுத்த சந்திப்புகளை ஒழுங்குபடுத்திக்கொடுப்பது தோழியும் பாங்கனும்தான். அவர்களின் பகற்சந்திப்பினைப் பகற்குறி என்றும் இரவுச்சந்திப்பினை இரவுக்குறி என்றும் அழைப்பர். சந்திப்பு என்பது வெறும் பேச்சுமட்டுமல்ல. உடல்சார்ந்த அன்புறவும்தான்.

அவர்களின் காதலை அதாவது நட்புறவினைக் குறுந்தொகைப் பாடல் நிலத்தைவிட, கடல்நீரைவிட, வானைவிடப் பெரியதாக உயர்த்திக் கூறியுள்ளது.

ஊர் சிரித்தது

தலைவியின் காதலை அவளின் நடவடிக்கைகளிலிருந்தும் அறிந்துகொண்ட ஊரார் நீர்த்துறைகளில் கூடும்போது தங்களுக்குள் பேசிக்கொள்வர். இதனைச் சங்க இலக்கியங்கள் “அம்பல்“ என்று குறித்துள்ளன. இவ்வாறு இவர்கள் பேசிக்கொள்வதனைத் தலைவியோ அல்லது தலைவியின் உறவினர்களோ அறியமாட்டார்கள். தலைவியை அவளது காதலனோடு இணைத்துக் கண்டுவிட்ட ஊரார் அவர்களின் உறவு பற்றி தலைவியின் உறவினர் அறியுமாறு வெளிப்படையாகவே பேசுவர். இதனைச் சங்க இலக்கியங்கள் “அலர்“ என்று சுட்டியுள்ளன. ஒரு பெண்ணைப் பற்றி “அலர்“ எழுந்தால், அது அப்பெண்ணின் கற்புக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும். இந்த அலர் ஊர்முழுவதும் பரவுவதனைத் தோழி, தலைவனுக்குத் தெரியப்படுத்துவாள். இதனை “அலர் அறிவுறுத்தல்“ என்று கூறுவர். “உங்கள் காதல் ஊராருக்குத் தெரிந்துவிட்டது. ஊர் சிரிக்கிறது. உடனே வந்து தலைவியை மணந்து கொள்“ என்பது இதன் உட்குறிப்பு.

நல்ல தோழி

இந்தக் களவு உறவு நீட்டித்தால் தலைவி கருவுற நேரிடும். ஆதலால், தோழி, தலைவன் தலைவியின் திருமணம் குறித்து (அதனை வரைவு என்பர்) தலைவனிடம் வலியுறுத்திக்கொண்டே இருப்பாள். திருமணத்துக்காகப் பொருள்தேட(செல்வம்) தலைவன் வெளியிடங்களுக்குச் செல்லத் துணிவான். அப்போது, தலைவி தன் தலைவனைப் பிரிந்து தனித்திருக்க நேரிடும். தலைவனின் பிரிவினைத் தாங்கிக்கொள்ள இயலாத தலைவியின் மனவோட்டத்தைச் சங்க இலக்கியப் பாடல்கள் பல எடுத்துக்கூறியுள்ளன. இரவில் அவள் தனித்து விழித்திருப்பாள். இரவுப் பொழுதில் ஏற்படும் சிறுசிறு ஒலிகளையும் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பாள். இதனால், அவள் உடல், தோள்வளைகள் மற்றும் கை வளையல்கள் நெகிழ்ந்து கழன்றுவிடும் அளவுக்கு மெலிவுறும். இதனைக் கண்ட தாய், தன் மகளைத் தெய்வம் அணங்கியதாகக் கருதி வேலனைக் கொண்டு வெறியாட்டு நிகழ்த்துவாள். இதுகுறித்து கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம்.

இத்தருணத்தில்தான், தோழி தன் தலைவியின் காதல் புராணத்தை விரிவாகவும் நுட்பமாகவும் தலைவியின் தாய்க்கோ அல்லது தலைவியின் செவிலித்தாய்க்கோ (வளர்ப்புத் தாய்) தெரிவிப்பாள். இப்பணியினைச் சங்க இலக்கியங்கள் “அறத்தொடுநிற்றல்“ என்று அருமையாகச் சொல்லியுள்ளது. அதாவது, உண்மையைப் போட்டுடைத்தல்.

களவா? கற்பா?

எந்தப் பெற்றோர்தான் காதலை ஏற்பர்? இக்காலப் பொற்றோர் மட்டுமல்ல அதற்குச் சங்ககாலப் பெற்றோரும் விதிவிலக்கல்ல. சங்ககாலக் காதல் பெரும்பாலும் களவுதான். பின்னர் தலைவியின் வீட்டில் தோழியும், தலைவனின் வீட்டில் பாங்கனும் அவர்களின் பெற்றோருக்கு எடுத்துக்கூறி, தலைவன் தலைவியின் களவொழுக்கத்தினைக் கற்பொழுக்கமாக மாற்ற முயல்வர். அம்முயற்சி கைகூடினால், பெற்றோர்கள் அவர்களுக்கு மணமுடித்து அல்லது அவர்களை ஏற்றுக்கொண்டு, தங்களுக்கு அருகிலேயே வைத்துக்கொள்ளவர். அம்முயற்சி கைகூடவில்லையெனில் தலைவன் தலைவி உடன்போக்கினை மேற்கொள்வர். அதாவது, குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசென்று, தங்களுக்கென்று ஓர் இல்லமைத்துக் கற்பொழுக்கத்தில் வாழ்வர்.

பெற்றோர்கள் தலைவன் தலைவியின் காதலை ஏற்காதுபோது அவர்களைத் தன்வழிப்படுத்துவதற்காகவும் அவர்கள் ஓடிப்போய்விடக்கூடாது என்பதற்காகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதும் உண்டு. தலைவின் பெற்றோர் தலைவியைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள “இச்செறித்தல்“ (இல்லத்தில் வைத்தல்) உண்டு. அதாவது, ஹவுஸ் அரெஸ்ட் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிடுதல். கூண்டுக்கிளியாக்கப்பட்ட தலைவியின் நிலையினைத் தலைவனுக்கு எடுத்துக்கூறித் தலைவி தன் உயிரைவிட்டுவிடுவாள். ஆதலால், எப்படியாவது அவளைக் காப்பாற்றி அழைத்துச்சென்று மணம்செய்துகொள் என்று தோழி, தலைவனிடம் மன்றாடுதல் உண்டு.

பெத்தமனம் பித்து

வீட்டைவிட்டுத் தன் தலைவனுடன் வெளியேறிய தலைவியின் நிலையினைக் குறித்துத் தாயும் செவிலித்தாயும் அடையும் துயரம் அளவற்றது. தன் மகள் விளையாடிய பாவைகள் (பொம்மைகள்), பந்து முதலானவற்றைப் பார்த்துப் புலம்பும் புலம்பல்கள் குறித்தும் தன் மகள் இவ்வழியே சென்றிருக்கலாம் என்று கருதி சில பாதைகளின் வழியே சென்று அவளைத் தேடி தந்தைகளின் ஆற்றாமை குறித்தும் யார்வழியாகவோ தன் மகள் இன்ன ஊரில் இன்ன இடத்தில் இப்படி வாழ்கிறாள் என்பதனைக் கேள்வியுற்று மனம்வெதும்பும் பெற்றோர்கள் குறித்தும் தன் மகள் எங்கிருந்தாலும் அங்கு அவள் நன்றாக இருக்கவேண்டும் என்று தன் தெய்வத்தை வணங்கும் தாயின் மனவோட்டம் குறித்தும் சங்க இலக்கியத்தில் பதிவுகள் பல உள்ளன. பிள்ளைகள் புதிய தம்பதியராக மாறி மகிழ்வுறும்போதும் அவர்களைப் பெற்ற பழைய தம்பதியரான பெற்றோர்கள் கலங்குவது ஒரு முரண்தான்.

அழியாக் காதல்

பெரும்பாலும் காதலுக்குத் தடையாக இருந்தவை நிலம்சார்ந்த வேறுபாடுகளும் வருவாய் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளும்தான். வயல்சார் வாழ்க்கையையுடைய தன் மகளை ஒரு மலைநாடனுக்கு மணம்முடித்துவைக்கத் தந்தை விரும்புவதில்லை. காரணம், மருதம், குறிஞ்சி என்ற நிலம்சார்ந்த வேறுபாடு. நாவாய்கள் (கப்பல்கள்) பல வந்துபோகும் துறைமுகத்துக்கு உரிமையுடையவர் தன் மகளை முல்லைநிலத்தில் பசுக்கள் சிலவற்றை மேய்க்கும் இளைஞனுக்கு மணம்முடித்துவைக்க விரும்புவதில்லை. காரணம், பொருளாதாரம் சார்ந்த ஏற்றத்தாழ்வு. இவையே இப்போதும் வேறுவடிவில் உள்ளன. அவற்றாலும் காதலை அழிக்க முடியவில்லை. காரணம், காதல் என்றும் அழிவதில்லை.

– – –

i மாதையன், பெ., சங்க இலக்கியத்தில் குடும்பம், . 38.

இசை, விளையாட்டு, குளியல், வாழ்க்கை

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 41

ரோம நாகரிகம் (கி. மு. 753  – கி. பி. 476 )

attila1வசதியுள்ளவர்களின் அன்றாட வாழ்க்கை    

அதிகாலை விழிப்பு. ஏழைகளுக்கு அன்னதானம். தன் நிலபுலன், விவசாயம் பற்றி விசாரித்துத் தகுந்த நடவடிகைகள் எடுத்தல், அரசாங்கப் பணிகள். அன்றாட வேலைகள் இத்துடன் முடிந்தன. லேசான சாப்பாடு, கொஞ்சம் தூக்கம். இதற்குப் பிறகு பொதுக் குளியல் அறைகளில் வெந்நீர்க் குளியல், பூங்காக்களில் உலா, உடற் பயிற்சிகள், புத்தகங்கள் படித்தல். மறுபடி வெந்நீர்க் குளியல், அடிமைகள் கொடுக்கும் மஸாஜ்.

குடும்பம்

ஆண்தான் குடும்பத் தலைவர். திருமணம் ஆனபிறகும், மகன் தன் வருமானம் முழுக்கத் தந்தையிடம் கொடுத்துவிட வேண்டும். அவர் காலம்வரை, அவன் தனக்கெனத் தனியாக எந்த சொத்துகளும் வைத்துக்கொள்ள முடியாது.

குடும்பத்தோடு வசித்து, அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து, ஆனால், தாமரை இலைத் தண்ணீர்போல் எஜமானர்களோடு ஒட்ட அனுமதிக்கப்படாத அடிமைகளின் வாழ்க்கை சோக காவியம். ஏழைகளும், கொடுத்த கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்களும், பிற நாடுகளிலிருந்து கைதிகளாகப் பிடித்துவரப்பட்டவர்களும் அடிமைகளாக்கப்பட்டார்கள். இவர்கள்  சொந்தக்காரரின் சொத்து. அவர் அடிமைகளை வாங்கலாம், விற்கலாம். அடிமைகளின் குழந்தைகளும் அடிமைகள்தாம். அடிமைகளை வாங்கவும் விற்கவும் அடிமைச் சந்தைகள் இருந்தன.

வீட்டு வேலைகள், விவசாயம், தொழிற்சாலைகள் ஆகிய பல தளங்களில்  அடிமைகள் பயன்படுத்தப்பட்டார்கள். பெரும்பாலான இடங்களில்,  அடிமைகளுக்கு அடி, உதை, அரைப் பட்டினி, அநியாய வேலைச்சுமை ஆகியவைதான் கிடைத்தன. அவர்களை அன்போடு நடத்தி, கல்வியறிவு கொடுத்து, வாழ்க்கை ஏணியில் ஏறவைத்த ஒரு சில நல்ல குடும்பங்கள் விதிவிலக்கானவை.

குழந்தைகள்   

மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் கொள்கை. எனவே, குழந்தையின் வரவு கோலாகலமாக வரவேற்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் அதை அப்பா முன்னால் கொண்டுவந்து வைப்பார்கள். அவர் குழந்தையைக் கைகளில் தூக்கினால், அது தன் குழந்தை என்று ஒத்துக்கொள்கிறார் என்று அர்த்தம். அப்படித் தூக்காவிட்டால், அந்தக் குழந்தை உயிர் வாழ வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை அவருக்கு உண்டு. ஆரோக்கியமில்லாத குழந்தைகளும், உடல் ஊனமுற்ற குழந்தைகளும் கொல்லப்படும் அல்லது பெற்றோரால் கைவிடப்படும். யாராவது எடுத்து வளர்ப்பார்கள். பின்னர்அவர்கள் அடிமைகள் ஆகிவிடுவார்கள்.

குழந்தை பிறந்த எட்டு நாட்கள் விதவிதமான பூஜைகள், சடங்குகள், பரிகாரங்கள் நடக்கும்.   முக்கியமாக, காத்து கருப்புகள் குழந்தைளைத் தொந்தரவு செய்யும் என்று நினைத்தார்கள்.    இதற்குப் பரிகாரமாக, வீட்டு வாசலை இரவில் மூடுவார்கள்.   வாசலில் மூன்று ஆண் அடிமைகள் ஒரு கையில் கோடரியும், இன்னொரு கையில் உலக்கையும் வைத்துக்கொண்டு காவல் இருபார்கள். வீட்டு வாசலைக் கோடரியாலும், உலக்கையாலும் பலமுறை தட்டுவார்கள். பிறகு வாசல்புறத்தைச்  சுத்தமாகப் பெருக்குவார்கள்.  இவற்றைச் செய்தால், துர்தேவதைகள் வீட்டுப் பக்கமே வராமல் பயந்து ஓடிவிடும் என்பது நம்பிக்கை.

குழந்தைகள் கழுத்தில், புல்லா  என்னும் தாயத்தைப் பூசாரி கட்டுவார். தங்கத்தால் செய்யப்பட்ட அதனுள் மந்திரித்த ஈயத்தகடு வைக்கப்பட்டிருக்கும். சிறுவர்கள் இளைஞர்களாகும்போது, சில மதச் சடங்குகள் செய்துவிட்டு, இந்தப் புல்லாவைக் கழற்றவேண்டும். பெண் குழந்தைகளுக்கு புல்லா கிடையாது.

சமூக வாழ்க்கை

ஆண்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். ஃபாரம் என்னும் நகரின் மையப் பகுதியில் சந்தித்துப் பேசினார்கள். பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரைகளைக் கேட்டார்கள். வீர விளையாட்டுகளில் ஈடுபட்டார்கள். அல்லது அவற்றைக் கண்டு களித்தார்கள். பெண்களுக்கு இத்தனை சுதந்தரம் இல்லை. கடைகளுக்கும் சொந்தக்காரர்களையும் நண்பர்களையும் சந்திப்பதற்கும் மட்டுமே தனியாக வீட்டைவிட்டு வெளியே போனார்கள். திருவிழாக்கள், சர்க்கஸ், கோவில், விருந்துகள் ஆகியவற்றுக்குக்  கணவனுடன் மட்டுமே போக அனுமதிக்கப்பட்டார்கள்.

சமூக உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் மூன்று விதமான மத அல்லது சமூகக் கொண்டாட்டங்களைத் திருவிழாக்களாக ஏற்பாடு செய்தது. இவை :

  • Feriae Stativae  –  ஒவ்வொரு வருடமும் குறிப்பிடப்பட்ட அதே நாட்களில் இந்த விசேஷங்கள் நடக்கும்.
  • Feriae Conceptivae-  இவற்றுக்குக் குறிப்பிட்ட நாள்கள் கிடையாது. பூசாரிகள் ஒவ்வொரு வருடமும் இவற்றுக்கான நாட்களைக் குறித்துக் கொடுப்பார்கள்.
  • Feriae Imperativae –  இவை வருடா வருடம் நடப்பவையல்ல. சாதாரணமாகப் போர்களில்  வெற்றி பெற்றால் கொண்டாடப்படும் விழாக்கள் இவை.

உணவுகள்

கோதுமைக் கஞ்சியும் ரொட்டியும்தான் முக்கிய உணவுகள். ரொட்டியைத் தேன், பாலாடை, முட்டை, சிக்கன், மீன்,  இறைச்சி ஆகியவற்றோடு சேர்த்துச் சாப்பிட்டார்கள். மீனும், சிப்பியும் சுவையான உணவுகளாகக் கருதப்பட்டன.  அவரைக்காய், வெங்காயம், பூண்டு, முட்டைக்கோசு ஆகிய காய்கறிகள் அவர்களுக்குப் பிடித்தமானவை. பழங்கள், தேன், வினிகர் என்னும் புளிச்சாறு ஆகியவற்றோடு சேர்த்து இறைச்சியும் காய்கறிகளும் சமைக்கப்பட்டன.

ரோமர்களுக்குப் பிடித்த பானம் ஒயின் என்னும் திராட்சை ரசம். ஆனால், இந்த ஒயின் போதைக்காக அருந்தப்படவில்லை. புளித்த திராட்சை ரசத்தில் தண்ணீர் ஊற்றி நீர்க்கவைத்துக் குடித்தார்கள். பால் குடிப்பது அநாகரிகமாகக் கருதப்பட்டது. பாலாடை செய்ய மட்டுமே பால் பயன்பட்டது.

பணக்காரர்களின் காலை உணவு பலமானது – பாலாடை, பழம், ரொட்டி, பால் அல்லது திராட்சை ரசம். பகல் உணவில் முதலில் முட்டை, மீன், பச்சைக் காய்கறிகள். அடுத்து வேகவைத்த மாமிசம், காய்கறிகள், கடைசியாகப் பழங்கள், இனிப்புக்கள். சோபாக்களில் படுத்துக்கொண்டு சாப்பிடுவார்கள். அடிமைகள் உணவு பரிமாறுவார்கள்.

உணவு சமைக்க மண், வெண்கலப் பாத்திரங்களும், பரிமாற மரம், வெண்கலம், வெள்ளி, எலும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட கரண்டிகளும் பயன்பட்டன. உணவைக் கை விரல்களால் சாப்பிட்டார்கள்.

ரோமன் ஆடைகள்

அன்றைய ரோமர்களின் ஆடைகள் அதிகமாகக் கிடைத்த ஆட்டு ரோமம், லினன் ஆகியவற்றால் நெய்யப்பட்டன. பட்டும், பருத்தியும் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பல உள்ளாடைகள் இருந்தன, பல வடிவங்களில் வந்தன. வடிவங்களுக்கேற்ப subligaculum, campestre, licium, cinctus என்னும் பல பெயர்களில் அழைக்கப்பட்டன. நம் ஊர்க் கோவணம் போன்ற இடுப்புத் துணியும் உண்டு. ஆண் பெண் இருபாலரும் இந்த உள்ளுடைகளை அணிந்தார்கள். இவற்றோடு பெண்கள் பிரா போன்ற மார்புக் கச்சு அணிந்தார்கள்.

மேலாடைகள் ட்யூனிக் என்று அழைக்கப்பட்டன. ஆண்களின் உடைக்கும், பெண்களின் உடைக்கும் ஒரே பெயர்தான். சாமானிய ரோமர்கள் உள்ளாடைகளுக்குமேல் ட்யூனிக் மட்டுமே அணிவார்கள். ஆண்களின் ட்யூனிக் அரைக்கைச் சட்டைபோல் இருக்கும்,  முட்டிவரை வரும். பெண்களின் ட்யூனிக்கில் சட்டை முழுக்கை. அவர்களின் கால்களை மூடித் தரையைத் தொடும் நீளம் இருக்கும்.

ரோமன் நாட்டுக் குடிமக்கள், வெளிநாட்டிலிருந்து வந்து ரோமில் வசிப்பவர்கள் ஆகிய எல்லோருமே ட்யூனிக் அணியலாம். ஆனால், ரோமன் பிரஜைகள் மட்டுமே அணிய அனுமதிக்கப்பட்ட உடை டோகா. போர்வைபோல் நீளமாக அரைவட்ட வடிவத்தில் இருக்கும். சுமார் 27 அடி நீளமும் 20  அடி அகலமும் சாதாரண அளவுகள். உடலின் மேல் பாகத்தையும் ஒரு கையையும் இது மறைக்கும்.  ஆரம்ப நாட்களில் வெற்றுடம்பில் டோகாவைப் போர்த்திக்கொள்ளூம் வழக்கம் இருந்தது. நாளவட்டத்தில் ட்யூனிக் அணிந்து அதன்மேல் டோகா போர்த்திக்கொள்ளும் நடைமுறை வந்தது.

ஆண்களும், பெண்களும் செருப்பு அணியும் வழக்கம் இருந்தது.

அழகுபடுத்துதல்

ஆண்கள் தாடி வளர்த்தார்கள், தினமும் சவரம் செய்துகொண்டார்கள். தலை முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டார்கள். இளம்பெண்கள் முடியைச் சுருட்டி முதுகுப் பக்கமாய்ப் பந்துபோல் வைத்துக்கொள்வார்கள். திருமணமான பெண்கள் தலைமுடியைச் சுற்றி வளைத்து தலை நடுவில் பந்துபோல் ரிப்பன்களால் கட்டி வைத்துக்கொண்டார்கள். பொய்முடிவைத்துக் கேசத்தின் அடர்த்தியை அதிகமாக்கிக்காட்டுவது சர்வ சாதாரணமாக இருந்தது.

பெண்கள் இரும்பு, வெண்கலம், தங்கம் ஆகியவற்றால் செய்த நகைகளை அணிந்தார்கள்.    தம்மை அலங்கரித்துக்கொள்ள அவர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள் – நெக்லஸ் போன்ற கழுத்தணி, காதுத் தொங்கட்டான்கள், கைகளில் ப்ரேஸ்லெட்கள் ஆகியவை.  தங்கத்தால் செய்யப்பட்ட இந்த நகைகளில் முத்துக்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

பொழுதுபோக்குகள்

விளையாட்டுப் போட்டிகள் – மக்கள் கூட்டம் அலைமோதிய இரண்டு நிகழ்ச்சிகள்  தேரோட்டப் போட்டிகளும், கிளேடியேட்டர் சண்டைகளும்தாம். தேரோட்டிகளுக்கு நாடு முழுக்க ரசிகர் கூட்டம் இருந்தது. தேரோட்டிகளுக்கு அடுத்தபடியாக மக்கள் ஆதரவு பெற்றவர்கள் கிளேடியேட்டர்கள். லத்தீன் மொழியில் கிளேடியேட்டர் என்றால் வாள் வீரர் என்று பொருள். இவர்கள் பெரும்பாலும் அடிமைகள் அல்லது கைதிகள். வாள் சண்டை விளையாட்டை  முழு நேரத் தொழிலாகக் கொண்டவர்கள்.

நாடக அரங்குகள் – விளையாட்டுகள் நடக்கும் நாள்களில் நாடகங்கள் அரங்கேறுவது வழக்கமாக இருந்தது. இதற்காக தியேட்டர்கள் என்னும் தனியான நாடக அரங்குகள் இருந்தன. நாடகங்களில் ஆண் அடிமைகள் மட்டுமே நடித்தார்கள். பெண் வேடங்கள் போடுவதும் இவர்கள்தாம். பாத்திரங்களுக்கு ஏற்ப முகமூடி அணிவார்கள். வயதைக் காட்ட வெள்ளை, கறுப்பு விக் போடுவார்கள். ஒரே நடிகர் இரண்டு வேஷம் நடிப்பதும் உண்டு. காமெடி, டிராஜெடி நாடகங்கள் ஆகிய இரண்டு வகைகளும் இருந்தன.

கி.மு. முதல் நூற்றாண்டில் ஊமைக்கூத்துக்கள் (pantomimes)  தொடங்கின. பாட்டு, நடனம் ஆகியவற்றின் துணையோடு நடிகர்கள் சைகைகளால் நடிப்பை வெளிப்படுத்துவார்கள். காலப்போக்கில் ஊமைக்கூத்துக்கள் ஆபாசக் களஞ்சியங்களாயின.

பொதுக் குளிப்பிடங்கள்  – ரோமன் பொழுதுபோக்குகளில் பொதுக் குளிப்பிடங்களுக்குத் தனி இடம் உண்டு. ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருமே இந்த வசதியை அனுபவித்தார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான குளிப்பறைகள் இருந்தன.

பொதுக் குளிப்பிடங்கள் 32 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தன. சில குளிப்பிடங்களின் சிதிலங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன. குளிப்பிடங்களின் மையப் பகுதியில் 200 அடிக்கு 100 அடி அளவில் நீச்சல் குளம் இருக்கும். அருகில் சூடான தண்ணீர் கொண்ட தனி  நீச்சல் குளமும் இருக்கும். நெருப்பின் மூலமாக நீராவியை உருவாக்கினர்கள். இதைத் தரையின் அடியில் ஓடும்  குழாய்கள் மூலமாக நீச்சல் குளத்தின் அடிப்பாகத்துக்குக் கொண்டு போனார்கள்.

குளிப்பதற்கு மட்டுமல்லாமல், மக்கள் சந்திப்பதற்கும் இந்தக் குளிப்பிடங்கள் உதவின. கடைகள், உணவு விடுதிகள், பூங்காக்கள், உடற் பயிற்சி மையங்கள், மஸாஜ் செய்யும் இடங்கள், நூல் நிலையங்கள், பொருட்காட்சி சாலைகள் ஆகிய வசதிகளும் இந்தக் குளிப்பிடங்களில்  வந்தன.

தினமும் ஒரு முறையாவது இங்கே வந்து குளித்துவிட்டுப் போவது எல்லா ரோமர்களின் பழக்கம்.

விளையாட்டுக்கள்  – அரசாங்கத்தால் அடிக்கடி நாடு தழுவிய விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தப் பொது விளையாட்டுகளுக்கு லத்தீன் மொழியில் லுடி என்று பெயர். இவை சாதாரணமாக ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் நடந்தன.

உடற் பயிற்சிகள் – தைபர் நதிக்கரையில் காம்ப்பஸ் என்னும் பெயரில் விளையாட்டு மைதானங்கள் இருந்தன. பொது மக்கள் ஓடவும், உடற்பயிற்சிகள் செய்யவும் இங்கே வருவார்கள். இளைஞர்கள் மேற்கொண்ட முக்கிய உடற்பயிற்சிகள் ஓடுதல், குதித்தல், குஸ்தி, மல்யுத்தம், நீச்சல் போன்றவை. காலால் பந்தை உதைத்தல், கையால் தூக்கி எறிந்து பிடித்தல் போன்றவை.

பணம்  படைத்தவர்களின்  சிறப்பான பொழுதுபோக்குகள் – ஆடம்பர விருந்துகள், பாட்டு,  நடனக் கச்சேரிகள், கவிதை அரங்குகள், பட்டிமன்றம் போன்றவை. இந்த வசதி இல்லாத சாமானியர்கள் சங்கங்கள் அமைத்தார்கள். இவைமூலமாக விருந்துகளும் பிற கோலாகலங்களும் நடத்தி, அந்தச் செலவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இசை ரசனை

ரோமர்கள் இசையை அனுபவித்தார்கள். குழந்தையின் பெயர் சூட்டு விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்கள், தனியார் விருந்துகள், மரண ஊர்வலங்கள் எனப் பிறப்பு முதல் இறப்புவரை ரோமர்கள் வாழ்க்கையில் இசைக்கு முக்கிய பங்கு இருந்தது.
ரோமின் தனித்துவமான சில இசைக் கருவிகள் இருந்தன. அவை:

வாயால் ஊதி வாசிக்கும் கருவிகள்: ட்யூபா என்னும் வெண்கல டிரம்பெட், கோர்னு (என்னும் ஆங்கில எழுத்து ஜி வடிவக் கருவி, புல்லாங்குழல் போன்ற ஒரு கருவி. சித்தாரா, லையர், லூட் ஆகியவை முக்கிய மீட்டும் இசைக் கருவிகள். ட்ரம், சிஸ்ட்ரம் போன்றவை நம் ஊர் மிருதங்கம்போல், தட்டுவதால் இசை எழுப்பும் இசைக் கருவிகள்.

0

குரோட்டன்களோடு கொஞ்ச நேரம்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 22

அதிகாரம் – நெஞ்சொடுபுலத்தல்

குறள் 1291:

அவர்நெஞ்சுஅவர்க்காதல்கண்டும்எவன்நெஞ்சே
நீஎமக்குஆகாதது.

 

Leaf_1_webசொல்பேச்சு கேட்கும்

ஆண் மனசு – இந்தப்

பெண் மனசு தான்

அடங்காப்பிடாரி!

 

*

 

குறள் 1292:

உறாஅதவர்க்கண்டகண்ணும்அவரைச்
செறாஅரெனச்சேறியென்நெஞ்சு.

 

முள் முனையளவும்

அன்பில்லாதவனைக்

கொஞ்சிக் கெஞ்சும்

வஞ்சியின் நெஞ்சம்.

 

*

 

குறள் 1293:

கெட்டார்க்குநட்டார்இல்என்பதோநெஞ்சேநீ
பெட்டாங்குஅவர்பின்செலல்.

 

என் ஒரே தோழி

சின்ன மனசையும்

களவாடிப் போன

கல்லூளி மங்கன்.

 

*

 

குறள் 1294:

இனிஅன்னநின்னொடுசூழ்வார்யார்நெஞ்சே
துனிசெய்துதுவ்வாய்காண்மற்று.

 

ஊடிப் பின் கூடும்

சுகம் புரியாத இந்த

முட்டாள் மனதோடு

பேசிப் பயனில்லை.

 

*

 

குறள் 1295:

பெறாஅமைஅஞ்சும்பெறின்பிரிவுஅஞ்சும்
அறாஅஇடும்பைத்தென்நெஞ்சு.

 

இல்லாவிட்டால்

“வர மாட்டானா?”

வந்து சேர்ந்தால்

“போய் விடுவானா?”

 

*

 

குறள் 1296:

தனியேஇருந்துநினைத்தக்கால்என்னைத்
தினியஇருந்ததென்நெஞ்சு.

 

தனிமையில் என்னை

மெல்ல முத்தமிட்டுக்

கொன்று செரித்திடும்

நினைவெனும் மிருகம்.

 

*

 

குறள் 1297:

நாணும்மறந்தேன்அவர்மறக்கல்லாஎன்
மாணாமடநெஞ்சிற்பட்டு.

 

அவனைத் துறக்காது

தீண்டித் தொடரும்

கிறுக்கு மனதோடு

வெட்கம் மறந்தேன்.

 

*

 

குறள் 1298:

எள்ளின்இளிவாம்என்றுஎண்ணிஅவர்திறம்
உள்ளும்உயிர்க்காதல்நெஞ்சு.

 

அவனைத் திட்டுதல்

சுயஇகழ்வு சமானம்

காத்திருக்கின்றன

உடம்பும் உயிரும்.

 

*

 

குறள் 1299:

துன்பத்திற்குயாரேதுணையாவார்தாமுடைய
நெஞ்சந்துணையல்வழி.

 

எல்லாத் துயிரிலும்

உடன் வரும் மனசு

காதல் மட்டும் இந்த

விதிக்கு மிக விலக்கு.

 

*

 

குறள் 1300:

தஞ்சம்தமரல்லர்ஏதிலார்தாமுடைய
நெஞ்சம்தமரல்வழி.

 

உடன் பிறந்த மனமே

துணை இருப்பதில்லை

காதலிக்காத அவனைக்

குறைபட ஏதுமில்லை.

 

***

 

பேயும் கடவுளும்

சங்க காலம் / தேடல் 6

மரணம் தந்த வரமும் சாபங்களும்

Demon-Dracula-HDதொல்குடித் தமிழர்கள் எதிர்கொண்ட முதல் மரணம் அவர்களுக்குள் இரண்டு வித அச்சங்களை உருவாக்கியது.

அச்சம் – 1. எல்லோரும் இறந்துவிடுவார்களா?

அச்சம் – 2. இறந்த பின்னர் என்னாவார்கள்?

அவர்கள் இவற்றைப் புரிந்துகொள்ளுவதற்கு இரண்டு மூடநம்பிக்கைகள் தடையாக இருந்தன.

மூடநம்பிக்கை – 1. இறந்தோர் உயிர்பெறுவர்.

மூடநம்பிக்கை – 2. இறந்தவர்கள் ஆவிகளாக நம்மைச் சுற்றியே வாழ்கிறார்கள்.

தொடர்ந்து பல மரணங்களைப் பார்த்த பின்னரும் அவர்களுள் ஒருவரும் உயிர்பெறவில்லை என்பதனை உணர்ந்த பின்னரும்கூட அவர்கள் இந்த மூடநம்பிக்கையை விட்டு மீளவில்லை. இப்போதும்கூடத்தான்.

இதன் தொடர்ச்சியாக அவர்கள், “நம்மவர்களின் ஆவிகள் நமக்கு நன்மை செய்யும். நமது எதிரிகளின் ஆவிகள் நமக்குத் தீமை செய்யும்“ என்றும் கருதினர். எதிரிகளின் ஆவிகளைப் “பேய்கள்“ என்று கருதினர்.

எதிரிகளிடமிருந்து தப்புவதும் அவர்களைக் கொல்வதும் தமிழர்களுக்கு எளிதாகவே இருந்தன. ஆனால், எதிரிகளின் ஆவிகளிடமிருந்து (பேய்களிடமிருந்து) தப்புவதும் அப்பேய்களை அழிப்பதும் அவர்களால் முடியாததாக இருந்தன. அந்த மனக்குழப்பம் அவர்களை நிலைகுலையச் செய்தது. அவர்கள் அவற்றைப் போக்கப்(நீக்கப்) பல மந்திரங்களையும் சடங்குமுறைகளையும் கைக்கொண்டனர். ஆனால், அவை அவர்களின் மனக்குழப்பத்தைச் சிறிதும் குறைக்கவில்லை. அவர்களுக்கு வலிமையான, நம்பகமாக ஓர் ஆவி தேவைப்பட்டது. அவர்கள் சிந்தித்தார்கள். “கடவுள்“ என்ற கருத்தாக்கத்தின் வழியாக அவர்களுக்கு நல்ல ஆவிகள் பல கிடைத்தன.

சங்கத் தமிழருக்குள் ஏற்பட்ட “பேய்“ என்ற சிந்தனை உருவாக்கமே, அவர்களைக் “கடவுள்“ என்ற ஒரு கருத்தாக்கத்தை உண்டாக்கத் தூண்டியது. “இறந்தோர் உயிர்பெறுவர்“ என்ற நம்பிக்கையே அவர்களிடையே “பேய்“ பற்றிய சிந்தனை விதையினை ஆழமாக ஊன்றியது.

மரணம் தந்த வரம் ஒன்று. அது, “இப்போது இருக்கும் ஒருவர் எப்போதும் இருக்கமாட்டார்“ என்ற நிலையாமைக் கருத்து. மரணம் தந்த சாபங்கள் இரண்டு. ஒன்று பேய். மற்றொன்று கடவுள். “பேய்“ என்பது தீய ஆவி. “கடவுள்“ என்பது நல்ல ஆவி. கிறித்துவர்கள் “பரிசுத்த ஆவி“ என்று கடவுளைக் கூறுவதை இங்கு ஒப்புநோக்கலாம். தொல்குடித் தமிழர் வளர்த்த இக் கடவுள் கோட்பாட்டினைச் சங்கத்தமிழர்கள் தங்களின் அச்சத்தின் உச்சியினாலும் கற்பனைத் திறத்தினாலும் பேருருவாக வளர்த்துக்கொண்டனர்.

ஆதிக் கடவுள்கள்

சங்கத் தமிழருக்கு இயற்கையே கடவுள். குறிப்பாக, இயற்கை தரும் மழையே அவர்களுக்கு எல்லாமுமாக இருந்தது. அந்த மழையினை உருவாக்க உதவும் கூட்டுழைப்புப் பருப் பொருள்களான மலை, கடல், கதிரவன், மேகம் ஆகிய நான்கும் அவர்களுக்குக் கடவுளாகவே தெரிந்தன. அவை, எந்நிலத்தில் உச்சம்பெற்றிருந்தனவோ (மலை – குறிஞ்சி, கடல் – நெய்தல், கதிரவன் – மருதம், மேகம் – முல்லை) அந்நிலங்களுக்குரிய கடவுளாகவே கருதப்பட்டன. இந்த நோக்கத்தில்தான் தொல்காப்பியர் பொருளதிகாரம் அகத்திணையியல் ஐந்தாவது நூற்பாவில்,[i]

  1. மாயோன் (கருமை நிறம்)   – மேகம்  – முல்லை (காடுறை – கானுறை[ii]),
  2. சேயோன் (செம்மை நிறம்)  – மலை – குறிஞ்சி (மைவரை),
  3. வேந்தன் (தலைவன்)  – கதிரவன்   – மருதம் (தீம்புனல்),
  4. வருணன்  – கடல் – நெய்தல் (பெருமணல் – பெருமதில்[iii])

என நான்கு இயற்கைகளை நிலம்சார் கடவுளாக இலக்கணப்படுத்தியுள்ளார்.

இந்த இயற்கைப் பருப்பொருட்களுக்குச் சங்கத் தமிழர்கள் மனித உருவம் கொடுத்து மாயோன் – திருமால், சேயோன் – முருகன், வேந்தன் – இந்திரன், வருணன் என வழிபடத் தொடங்கினார்கள். அவர்களின் வழிபாடு சடங்குகள் சார்ந்து இருந்தது.

சங்ககாலச் சடங்குகள்

சங்ககாலத்தில் அகவன் மகள், கட்டுவிச்சி ஆகியோரின் குறிசொல்லும் செயல்கள், விரிச்சி கேட்டல், மழையை வருவித்தல், வெறியாடல், இயற்கைசார் வழிபாடுகள் முதலியன சடங்கு சார்ந்து இருந்துள்ளன. மந்திர உச்சரிப்பு இல்லாமல் சடங்கு இருந்திருக்குமா?

தொல்காப்பியம் செய்யுளியல் 175ஆவது நூற்பாவில் செய்யுள் வகையில் ஒன்றாக “மந்திரம்“ என்பது குறிப்பிட்டுள்ளது. செய்யுளைப் புலவர்கள் எழுதுவது வழக்கம். இவ்வகைச் செய்யுளைப் புலவர்கள் எழுதியதாகக் கருதமுடியாது. அப்படியானால் யார் எழுதியது?

அதே நூற்பாவில், “நிறைமொழி மாந்தர்“ என்ற சொல் காணப்படுகின்றது. நிறைமொழி மாந்தர் என்பவர் தலைமை பூசாரியாகவோ மந்திரவாதியாகவோ இருக்கலாம். அப்படியென்றால் இவ்வகைச் செய்யுளை அல்லது செய்யுற் கருத்துகளை இவர்கள் கூற, மற்றவர் எழுதியிருக்கக்கூடும். மந்திரத்தை “மறைமொழி“ என்று அந்நூற்பா குறிப்பிட்டுள்ளது. ஆதலால், இம் மந்திரங்கள் வேதத்துக்கு நிகரானவை என்பது புலப்படுகிறது.

மந்திரம் என்பது சடங்கில் பயன்படுத்தப்படுவது. ஆக, பூசாரி, மந்திரவாதி, மந்திரம், சடங்கு, வேதம் ஆகியன பற்றித் தொல்காப்பியர் குறிப்புணர்த்தியுள்ளார். அப்படியானால் இச் சடங்கும் மந்திரமும் பேய்களுக்கா? கடவுள்களுக்கா?

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

சங்க இலக்கியத்தில் காணப்படும் பெருவழக்கான சடங்கு “வெறியாடல்“. இதனைச் சங்க இலக்கியங்கள் பேய் ஓட்டுதல், பேய் விழா என்று குறிப்பிட்டுள்ளன. அதாவது, முருகன் இளம்பெண்ணின் மீது உறைந்ததாகக் கருதி (அணங்குதல்), அந்த முருகனைச் சமாதானப்படுத்தி, அப்பெண்ணிடமிருந்து விலக்குவதே இச்சடங்கின் நோக்கம்.

தலைவி காதல் வயப்பட்டு தன்னிலை மறந்து இருத்தலைத் தாய் தன் பெண் மீது ஏதோ தெய்வம் உறைந்துவிட்டதாகத் தவறாக நினைத்துவிடுகிறாள். அதாவது, தன் மகளைப் பீடித்தக் காதல் நோயைப் பேய் அல்லது தெய்வம் பற்றியதாகக் கருதிவிடுகிறாள். ஆக, ஒரு தவறான புரிதல்சார்ந்த சரியான சடங்குமுறையே வெறியாடல். இதுபற்றிக் குறுந்தொகை – 111,263, பரிபாடல் 5:13-15, ஐங்குறுநூறு – 243,245,248, நற்றிணை – 273, 282, அகநானூறு – 22, 98 ஆகிய இலக்கியச் செய்யுள்களில் காணமுடிகிறது.

இச்சடங்கினைக் கட்டுவிச்சியைக்கொண்டோ, வேலனைக்கொண்டோ நிகழ்த்தியுள்ளனர். அகநானூற்றின் 270ஆவது பாடலில் இச்சடங்கினை ஆடுமகள் நடத்தியதாகவும் குறிப்புள்ளது. இச்சடங்கில் குருதிப்பலியும் இடம்பெற்றுள்ளது. “வெறியாடல்“ முருகனுக்கு மட்டுமல்ல தொல்தாய்த் தெய்வமான கொற்றவைக்கும் நடத்தப் பெற்றுள்ளது.

குறிஞ்சித்திணைக்கு முருகன் மட்டுமல்ல கொற்றவையும் தெய்வமே. குறிஞ்சி நிலத்துக்கு அகத்திணையிலும் புறத்திணையிலும் தெய்வம் முருகன், புறத்திணையில் கொற்றவையும் தெய்வமாகக் கருதப்பட்டுள்ளது. அதாவது, “குறிஞ்சிதானே வெட்சியது புறனே“ என்ற அடிப்படையில் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். குறிஞ்சித்திணையின் திரிபுதான் பாலை என்பதால் அங்கும் கொற்றவையே தெய்வமாகியது. ஒருவகையில் கொற்றவையின் புதல்வன்தான் முருகன்போலும். இதனைத் திருமுருகாற்றுப்படையின் 250 ஆவது அடியில் காணமுடிகின்றது. தெய்வங்களுக்குள் ரத்த உறவினைக் கற்பிதம்செய்துகொள்ளுதல் தொல்தமிழர் வழக்கம்.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள 63ஆவது நூற்பாவின்படி, அகத்திணையிலும் புறத்திணையிலும் முருகனுக்கு வெறியாடல் சடங்கு நடத்தப்பெற்றுள்ளதை அறிய முடிகிறது. அகத்திணையில் வெறியாடலை நடத்தும் வேலன் “குறிஞ்சி“ப் பூவையும் புறத்திணையில் வெறியாடலை நடத்தும் வேலன் “காந்தள்“ பூவையும் சூடுவது மரபாக இருந்திருக்கலாம்.

குறிஞ்சித்திணைத் தெய்வங்களுள் ஒருவரான முருகனுக்கு இரண்டு வித பரிமாணங்களைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. அகத்திணைப் பாடல்களில் முருகன் ஒரு பேரழகன் – குசும்புக்காரன் – காதல் தலைவன் – காதலுக்குக் காவல்காரன் – காமக்கடவுள். புறத்திணைப் பாடல்களில் முருகன் ஒரு மாவீரன் – முரடன் – மூர்க்கன் – சினம் மிக்கவன் – போர்த்தலைவன் – போர்க்கடவுள் – வெற்றிக்கடவுள். இதற்குச் சான்றுகள் புறநானூறு – 14,16, அகநானூறு – 158,266, பதிற்றுப்பத்து – 26, மதுரைக்காஞ்சி – 181, பொருநராற்றுப்படை – 131 ஆகிய இலக்கியங்களின் செய்யுட்களில் உள்ளன.

ஜெய் காளி

பாலை நிலத்தின் தனிப்பெரும் கொடுந்தெய்வம் கொற்றவை. வெற்றிக்குரிய தெய்வம். “கொற்றம் தருபவள்“ என்பதால் இவளுக்குக் “கொற்றவை“ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அந்நிலம் சார்ந்துள்ள நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இவளே தெய்வம். பாலைத் திணையில் பரவலாக இருக்கும் ஆறலைக் கள்வர்களாகிய எயினருக்குக்கும் வேட்டையாடும் வேட்டுவருக்கும் வெற்றியைத் தரும் தெய்வமாகவும் கொற்றவை இருந்திருக்கிறாள். ஆக, வேட்டைச் சமூகமாக இருந்த தொல்தமிழர்களின் ஆதித்தாய்த்தெய்வமே மறுஉருவில் கொற்றவையாக வணங்கப்பட்டுள்ளது. வேட்டைச் சமூகத்தினர் கொள்ளைச் சமூகத்தினராக மாறிய பின்னர் தங்களின் தெய்வத்தின் வடிவத்தையும் மாற்றிக்கொண்டனர்போலும். ஆநிரை கவரச்செல்லும் (திருடுதல்) எயினருக்கு அவள் வெற்றியைத் தருவதாகவும் அதற்குக் கைமாறாக அவர்கள் தம்மையே (நரபலி) பலியிட்டுக் கொண்டதாகவும் அறியமுடிகின்றது.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் 62ஆவது நூற்பா “கொற்றவை நிலை“ என்ற ஒரு புறத்திணைத் துறையினைச் சுட்டியுள்ளது. அது கொற்றவை வழிபாடு பற்றியதாக இருக்கலாம். கொற்றவை பற்றிய விரிவான தகவல்களைச் சங்க இலக்கியங்களின் வழியாகப்பெறஇயல்வதில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில் வேட்டுவவரியில் கொற்றவை வழிபாட்டினை விரிவாக அறியமுடிகிறது.

“மால்“ என்ற திருமால்

முல்லை நிலத்தின் தனிப்பெருங்கடவுள் மாயோனாகிய மால் அல்லது திருமால். ஆய்ச்சியர் தலைவர் – கோவலர் அரசன் – ஆநிரைக் காவலன். கலித்தொகையின் முல்லைக்கலியிலும் பரிபாடலில் திருமால் வழிபாட்டினை விரிவாகக் காணமுடிகிறது. வேதங்களில் இடம்பெற்றுள்ள விட்ணுவின் சித்திரத்தினை முல்லைப்பாட்டில் மூவுலகை அளந்த திருமால் பற்றிய குறிப்புப் புலப்படுத்துகிறது.

ஆனால், பரிபாடல் தரும் திருமால் சித்திரம் சங்க இலக்கியத்தில் இல்லை. தொல்காப்பியர் குறிப்பிடும் தொல்தமிழரின் மாயோன் இப்போது திருமால். பரிபாடல் காட்டும் திருமால் வைணவ சமயத்தோற்றத்தின் முதன்நிலையிலுள்ள திருமால். அப்படியென்றால் திருமால் இருவரா? ஒருவர்தான். இது குறித்து ந. சுப்புரெட்டியார், “வேதங்களில் காண்ப்பெறும் மூன்று நீண்ட அடிகளை உடைய இறைவனாகக் கருதப் பெறும் விட்டுணுவைப் பற்றிய கருத்தும் மெய்ப்பொருளியல் சார்ந்த நாராயணனைப் பற்றிய கருத்தும் ஆயர் இனக்கடவுளான கிருட்டிணனைப் பற்றிய கருத்தும் இணைந்தே “திருமால் சமயம்“ உருப்பெற்றது“[iv]என்று கருத்துத் தெரிவித்துள்ளார். கால வளர்ச்சியில் மக்கள் மாயோனை வெவ்வேறுவிதமாகத் தரிசிக்கத் தொடங்கியதன் விளைவே இது.

சங்கத் தமிழர்கள் நடத்திய “குரவைக்கூத்து“ எனும் நிகழ்ச்சி திருமால் வழிபாட்டோடு நேரடித் தொடர்புடையது. இக்கூத்து பற்றிய சித்திரத்தினைச் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையிலும் காணமுடிகிறது. கலித்தொகையின் முல்லைக்கலியில் ஏறுதழுவுதல் நடைபெற்று முடிந்தவுடன் மக்கள் ஒன்றுகூடிக் “குரவைக்கூத்து“ நிகழ்த்தித் திருமாலை வழிபட்டதாகக் குறிப்புள்ளது.

சங்க இலக்கியத்தில் மருதநிலக் கடவுளான “இந்திரன்“ பற்றியும் நெய்தல் நிலக் கடவுளான “வருணன்“ பற்றியும் விரிவான தகவல்கள் இல்லை. சிலப்பதிகாரத்தில் உள்ள இந்திரனை மையப்படுத்திய இந்திரவிழாகாட்சியைத் தவிர வேறு பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை.

மனிதர்கள் உருவாக்கிய கடவுள்கள்

சங்கத் தமிழர்கள் பேய்களிலிருந்து தப்பிக்கவும் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்குவதற்கும் தங்கள் இனத்தவர் அல்லாத ஒரு தனித்த, பெரிய சக்தியின் பேருதவி தேவைப்பட்டது. அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்யும் அனைத்து வகையான தவறுகளையும் பொருத்தருளும் அல்லது மன்னிக்கும் ஒரு பெரிய கருணையாளரின் துணை தேவைப்பட்டது. அதற்காக, அவர்கள் “கடவுள்“ என்ற கருத்தாக்கத்தை உருவ, அருவ, அருவுருவ அளவில் உருவாக்க முயன்றனர். அந்த முயற்சி முடிவற்றதாக அமைந்து, பின்னர் சமயமாகப் பெருகி நின்றது. ஆக, மனிதர்கள்தான் கடவுளையும் படைத்தனர்.

மனிதர்கள் பேயைக் கற்பனை செய்தனர்.அது அவர்களைப் பிடித்துக்கொண்டது. அதனை விரட்டக் கடவுளை உருவாக்கினர். இறுதியில் அவை இரண்டும் மனிதர்களைப் பிடித்துக்கொண்டன.

– – –

[i] http://www.tamilvu.org/courses/degree/p104/p1043/html/p1043222.htm

[ii] http://thiruththam.blogspot.in/2009/04/blog-post_11.html

[iii] http://thiruththam.blogspot.in/2009/04/blog-post_11.html

[iv] சுப்புரெட்டியார், ந., வைணவச் செல்வம், ப. 35.