நீர்க்கோல வாழ்வை நச்சி

காதல் அணுக்கள் / அத்தியாயம் 16

அதிகாரம் – உறுப்புநலனழிதல்

let goகுறள் 1231:

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

 

பிரிவின் வலியில்

அழுகை அணிந்து

பூக்களிடம் தோற்ற

என்னிரு கண்கள்.
*

 

குறள் 1232:

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

 

அவனின்மையை

அன்பின்மையை

பறையறிவிக்கும்

விழியோரத்துளி.

 

*

குறள் 1233:

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

 

அவன் பிரிவினில்

இறுக்கம் தளர்ந்து

தொளதொளக்கும்

என் ப்ரேஸியர்கள்.

 

*

 

குறள் 1234:

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

 

பிரிவின் சோகம்

மெலிந்த தேகம்

நழுவி அவிழும்

கை வளைகள்.

 

*

 

குறள் 1235:

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

 

கழல்கிற வளையல்

சுருங்கும் தோள்கள்

காதல் கொடூரனின்

உயிரியல் ஊடகம்.

 

*

 

குறள் 1236:

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

 

பிரிவில் இளைத்தால்

பிடுங்கும் நஷ்டஈடாய்

அவனை ஊர் திட்டும்

அதெனக்குக் குத்தும்.

 

*

குறள் 1237:

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.

 

மனமே, என்னழகைத்

திருடிப் போனவனிடம்

தூது போய்ச் சொல் நீ,

உடம்பின் விசும்பலை.

 

*

 

குறள் 1238:

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

 

ஸ்பரிசம் நின்றவுடன்

தரிசாகிக் கருகிடும்

விளைந்து கொழித்த

செம்பெண் தேகம்.     
*

 

குறள் 1239:

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

 

நிரம்பித் ததும்பும்

தழுவலினூடே சற்று

காற்று நுழைந்தால்

அழுவாள் கொஞ்சம்.

 

*

 

குறள் 1240:

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

 

பிரிவின் வலியில்

பிறைநுதல் ஆகும்

குறைநிலவு – அது

கண்டுடையும் கண்.

 

***

 

சாதி ஒழிய என்ன தேவை?

2007042307350401அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் இனப்பிரிவினை பார்க்கக்கூடாது என 1968 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு Fair Housing Act என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட வெள்ளை இனத்தவரின் சம்மதத்துடனே சட்டம் நிறைவேறியது. சட்டத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள முரண் இனப்பிரிவினையிலும் தொடர்ந்து இருக்கிறதா என்பதை அறிய ஹுபர்ட் ஓ கோர்மான் என்பவர் ஓர் ஆய்வை மேற்கொண்டார்.

அமெரிக்க வெள்ளையர்களிடம் முதலில் அவர் தொடுத்த கேள்வி, நீங்கள் இனப் பிரிவினை பார்ப்பவரா? இனப்பிரிவினை பார்ப்பது தவறென நினைக்கிறீர்களா?. இக்கேள்விக்கு 82% வெள்ளையர்கள் தாம் இனப்பிரிவினை பார்ப்பவரல்ல என்று பதிலளித்துள்ளனர். இதைக் கணக்கில் கொண்ட கோர்மான் சில மாதங்களுக்குப் பிறகு தாம் ஆய்வு செய்த அதே அமெரிக்கர்களிடம் கேள்வியை மாற்றிப் போட்டார்.

இம்முறை அவரின் கேள்வி சற்று வித்தியாசமானது. பதிலிலிருந்து கேள்வியை எழுப்பினார். நீங்கள் இனப்பிரிவினைப் ( racist) பார்ப்பவரல்ல, ஆனால் உங்களைச் சுற்றியுள்ள வெள்ளையர்களோ, உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வெள்ளையர்களோ இனப்பிரிவினை பார்க்கிறார்களா? என்ற கேள்வியை முன் வைத்தார். பதிலளித்தவர்கள், ஆமாம், எனக்குத் தெரிந்து நிறைய வெள்ளையர்கள் வீடுகளை கறுப்பர்களுக்குக் கொடுக்க விரும்புவதில்லை. அவர்களின் மீதுள்ள நம்பிக்கையின்மையே வீடுகளையோ அல்லது அவர்கள் வாழும் பகுதிகளில் கறுப்பர்கள் வாழ விருப்பப்படாதவர்களாகவே தாங்கள் சந்தித்த பல வெள்ளையர்களும் உள்ளதாகப் பதில் அளித்தனர்.

இந்த ஆய்வை அப்படியே தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டால் பதில் எவ்வாறு இருக்கக்கூடும். நீங்கள் சாதி, மதம் பார்த்து நட்பு கொள்பவரா? அல்லது நீங்கள் சாதிய சிந்தனைகள் உள்ளவரா? இதை நேரடியாகக் கேட்டால் அமெரிக்காவில் சொன்னது போலவே நான் அனைத்து சாதியினரிடமும் நட்புப்பாராட்டுபவன் என்றே பதிலமையும். என்னுடைய நண்பர்கள் இவர்கள்தான் என்று அடையாளப்படுத்தவும் முனைவார்கள்.

கோர்மான் கேட்ட இரண்டாவது கேள்வியை நம்மூரில் இவ்வாறு கேட்டால் பதில் எவ்வாறு இருக்கும். நீங்கள் சாதி பார்த்துப் பழகுவதில்லை. ஆனால் உங்கள் வீட்டிலோ உங்கள் அக்கம்பக்கத்தாரோ சாதி பார்த்து மதம் பார்த்து வீட்டை வாடகைக்கு விடுகிறார்களா? பணம் யார் தருவார்கள் எனப் பார்த்து விடுகிறார்களா? என்ற கேள்வியை வைத்தால் பதில் மேலே பார்த்த அமெரிக்கர்களின் பதிலைப் போலவே இருக்கும். ஆம், எங்கள் வீட்டிலும் சரி, அக்கம்பக்கத்திலும் சரி, குறிப்பிட்ட சாதியினருக்கோ, அல்லது பிரச்னை செய்யாத சாதியரா? என்று பார்த்து விட்டே பெரும்பாலும் வீடுகளை வழங்குவதாக அவர்கள் சொல்லக்கூடும். சில சாதியினர் வாடகைக்கு வந்த பின் பணம் தராமல் போகக்கூடும் அல்லது வீட்டைக் காலி பண்ண மாட்டேன் என்று பிரச்னை பண்ணுவார்கள். ஆதலால் அவர்களிடம் மல்லுக்கு நிற்பதற்குப் பதிலாக, முதலிலேயே ஆள் பார்த்து விடுகிறார்கள் என்றே தாம் புரிந்து கொள்வதாக விளக்கம் அளிப்பார்கள்.

ஜெயமோகன் தமது ஒரு கட்டுரையில் சாதி பற்றிக் குறிப்பிடும் போது, தமிழகத்திலுள்ள பெரும்பாலோர் தாம் பழகும் நபர் என்ன சாதி என்று உள்ளுக்குள் அறிய விரும்புபவர்களாகவே உள்ளனர் என்று கூறுகிறார். அதன் மூலம் அவரிடம் பழகுவதை அவர்கள் நிறுத்தப்போவதில்லை. ஆனால் அவர்களிடம் எதைப் பற்றி எவ்வாறு பேச வேண்டும் என்ற முன்னெச்செரிக்கையுடன் பழகுகிறார்கள்.

மேற்கூறிய இரண்டு நிகழ்விலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது, அடிப்படையில் மனிதர்கள் தனிப்பட்ட முறையில் சாதி வெறியோடோ, இனப்பாகுபாட்டுடனோ இருப்பதில்லை. ஆனால் அவர்கள் சார்ந்த சமூகத்தில் பலர் அவ்வாறு உள்ளதாக நினைக்கிறார்கள். பலரும் சாதி வெறியரோ, இனப்பிரிவினை பார்க்கிற அளவுக்கு கொடூரமானவர்களுமல்ல, அதேபோல தான் பார்ப்பதில்லை என்று சொல்லிக் கொண்டே, மற்றவர்கள் இவ்வாறே இருக்கிறார்கள் என்ற பரவலான எண்ணம் அவர்களையும் தான் சார்ந்த சமூகச் சிந்தனைக்குள் பயணிக்கச் செய்கிறது. இந்தக் கேள்விகளை வரதட்சணை,  ஆட்சி, அதிகாரம், ஜனநாயகம், வளர்ச்சி எனப் பலவாறாகக் கேட்டாலும் பதில்கள் இதைப் போலவே அமையக்கூடும்.

இந்தப் பிரச்சினையிலிருந்து அல்லது இவ்வெண்ணத்திலிருந்து மனிதர்கள் விடுபட என்ன வழி? நாம் பெரும்பாலும் வழி நடப்பவர்களாகவே இருக்கிறோம். சட்டத் திட்டங்கள் என வரையறுக்கப்பட்டவற்றை கேள்வி எழுப்புபவராகப் பெரும்பாலும் இருப்பதில்லை. இதுகுறித்த ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் அமைவதில்லை. இரு பக்கமும் அடுத்த பக்கத்தினரின் அராஜகம் பற்றியே கேள்வி எழுப்புகிறோம். சமூக வாதிகள் என சொல்லிக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களின் பக்கமே நியாயம் பேச இயலும் என ஓரணியும், அரசின் அனைத்து சலுகைகளையும் வாங்கிக் கொண்டும், எண்ணிக்கையில் பலம் பெற்றவர்களாக இருப்பதால் இன்று ஒடுக்கப்பட்டவர்கள் வேண்டுமென்றே பிரச்னை செய்கிறார்கள் என்று அடுத்த பக்கம் மட்டுமே நியாயம் பேசும் வரையிலும் இப்பிரச்சினைகளுக்கு முடிவுகள் கிடைக்கப்போவதில்லை.

இந்த ஒற்றைச் சார்பு மனநிலையோடு சாதிகள் ஒழிய வேண்டும் என்று நியாயம் பேசுவது வெறும் முற்போக்கு, பிற்போக்கு அடையாளமாகவே பார்க்கப்படும். மாறாக இரு பக்கமும் உள்ள தவறைப் புரிந்து கொள்ளும் மைய எண்ணத்தைக் கொண்ட சமூகவாதிகள் தான் இன்றைய தேவை. அவர்களாலும், கல்வியறிவு, விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றின் மூலமே இப்பிரிவினை எண்ணங்கள் ஒழியக்கூடும்.

0

கலையும் கலை சார்ந்த வாழ்வும்

creation1பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 37

கி. பி. 250 –  900 காலத்தின் சிதிலம் அடைந்த கட்டடங்களை ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்திருக்கிறார்கள். எகிப்தின் பிரமிட் போன்ற கட்டடங்கள், மன்னர்களின் அரண்மனைகள், கோவில்கள் ஆகியவை மிகுந்த கலைநயத்தோடு விளங்குகின்றன. குறிப்பாக மனித வடிவங்கள் மிகவும் துல்லியமாகப் படைக்கப்பட்டுள்ளன.

மாயர்கள் காலத்தில் மாடுகள், குதிரைகள் போன்ற உழைப்புக்குப் பயன்படும் மிருகங்கள் இருந்ததாக ஆதாரங்கள் இல்லை. அதனால், மனித முயற்சியும் உழைப்புமே இந்தக் கட்டடங்களை உருவாக்கப் பயன்பட்டன. கருங்கல், தண்ணீர் கலந்த சுண்ணாம்பு ஆகிய பொருட்கள்தாம் கட்டட மூலப்பொருட்கள்.

அரண்மனைகள் நகரங்களின் மையப்புறத்தில் இருந்தன. இவை பல மாடிக் கட்டடங்கள். ஏராளமான அறைகள் கொண்டவை. மன்னர்,  பிரபுக்கள் என தங்குபவர்களின் சமுதாய அந்தஸ்துக்கு ஏற்ப, அறைகளின் எண்ணிக்கைகள், வசதிகள், கலை நயங்கள் ஆகியவை இருந்தன.

மாயர்கள் அற்புதமான சிற்பங்களைக் கல்லிலும் மண்ணிலும் படைத்தார்கள். வகை வகையான வடிவ மண் பாண்டங்கள், பீங்கான் பாத்திரங்களின் மேல் தீட்டப்பட்ட ஓவியங்கள் ஆகியவை ரசிகர்களைப் பிரமிக்க வைக்கின்றன. மரப் பட்டைகளில், கடவுள்கள், இயற்கைக் காட்சிகள், மிருகங்கள். பறவைகள் ஆகிய ஓவியம் வரைவது மிகப் பிரபலமாக இருந்தது.

தங்கம், வெள்ளி, செம்பு, பவழங்கள், ரத்தினங்கள் போன்ற இயற்கைச் செல்வங்கள் அவர்களிடம் இல்லை. ஆனால், தங்கத்தில் அவர்கள் ஆலய மணிகளையும் கடவுள்கள் வடிவ முகமூடிகளையும் உருவாக்கினார்கள்.

ஜேட் (என்கிற பச்சை மணிக்கல்லால் செய்த காதணிகள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்திருக்கின்றன. இவை பெரும்பாலும் கடவுள்கள், மிருகங்கள் ஆகிய உருவங்களைத் தாங்கி இருக்கின்றன.

மாயர்களின் மத நம்பிக்கைகள்  

மாயர்களின் வாழ்க்கையில் கடவுள்கள் மிக மிக முக்கியமானவர்கள். சாக்லெட்டுக்கு ஒரு கடவுள், சோளத்துக்கு ஒரு சாமி. மழை, காற்று, வானம், பிறப்பு, மரணம், கல்வி, சூரியன், சந்திரன், அன்பு, வியாபாரம், பாதாள உலகம் என எல்லாவற்றுக்கும் கடவுள்கள்!

மரணக் கடவுள் பெயர் ஆ புக் (Ah Puch). இடிக் கடவுள் பேக்காப் (Becab). நாலு பேக்காப்கள் பிரபஞ்சத்தின் நான்கு மூலைகளையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது மாய ஐதீகம்.

சாக் (Chaac) மாயர்களின் வருண பகவானான மழை தெய்வம். காமஸோட்ஸ் (Camazotz) என்பவர் வௌவால் சாமி.  தற்கொலை செய்பவர்களைக் காப்பாற்றும் கடவுள் இக்ஸ்டாப் (Ixtab) ஸிப்கானா (Zipcana) பாதாள உலக பூதம்.

மாயர்களுக்கு 166 கடவுள்கள் இருந்ததாக ஆதாரங்கள் சொல்கின்றன.

மாயர்களின் கடவுள் நம்பிக்கை மிக ஆழமானது. கடவுள்கள்மேல் வைத்திருந்த பக்தியின் சின்னங்களாக அவர்கள் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டினார்கள். இந்தக் கோயில்கள் பிரமிட்களின் உச்சியில் இருந்தன.

எகிப்து பிரமிட்கள் உலகப் புகழ் பெற்றவை. பிரமிட் என்றால் கூம்பு வடிவம். அடிப்பகுதி நீண்ட சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும். மாயர்களின் பிரமிட்கள் இதே வடிவக் கட்டடங்கள்தாம்.

உச்சியில் இருக்கும் கோயில்களுக்குப் போக, பிரமிட்களின் பக்கப் பகுதிகளில் படி வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. கோயில்களை அழகிய சிற்ப வேலைகள் செய்யப்பட்ட கற்களால் கட்டினார்கள். தரையில் ஓவிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. சுவரிலும் ஓவியங்கள்!

கோயில்கள் மதச் சடங்குகளுக்கும், மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் சமுதாய
விழாக்களுக்கும் பயன்பட்டன. எனவே கோயில்களுக்கு மாய நாகரிகத்தில் மிக முக்கிய இடம் உண்டு.

கோயில் பூசாரிகளுக்கு சமுதாயத்தில் மிக உயர்ந்த மதிப்பு இருந்தது. அவர்கள் அறிவில் சிறந்தவர்களாக விளங்கினார்கள். கணிதம், வானியல் ஆகிய துறைகளில் அவர்களுக்கு மிகுந்த புலமை இருந்தது.

காலண்டர் கண்டுபிடித்த மாயர்களுக்கு நல்ல நாள், கெட்ட நாள் என நாள் பார்ப்பதில் அதிக நம்பிக்கை. வருடத்தில் ஐந்து நாட்கள் அதிர்ஷ்டம் கெட்ட நாட்கள். அந்த நாட்களில் ஒரு நல்ல காரியமும் தொடங்க மாட்டார்கள். பூசாரிகள்தான் நல்ல நாள், கெட்ட நாள் குறித்துக் கொடுப்பார்கள்.

மாயக் கோவில்களில் பலி கொடுப்பது வழக்கம். மனித பலி சாதாரணமாக இருந்தது.
கைதிகள், அடிமைகள், குழந்தைகள் ஆகியோரைப் பலி கொடுத்தால், ஆண்டவன் மிக்க மகிழ்ச்சி கொள்வார் என்று மாயர்கள் நம்பினார்கள். மன்னர் குடும்பத்தில் வாரிசு பிறக்கும் நாட்களிலும் மன்னர் பதவி ஏற்கும் தினங்களிலும் மனித பலி கொடுத்தேயாக வேண்டும். அப்போதுதான் ஆண்டவன் அவர்களையும் நாட்டையும் பத்திரமாகக் காப்பாற்றுவார்.

இந்தப் பலிகள் இரவு நேரங்களில், மைதானம் போன்ற பெரிய திறந்த வெளிகளில் நடக்கும். மக்கள் பெரும் கூட்டமாகக் கூடி இவற்றைப் பார்த்து ரசிப்பார்கள். பலர் தீப்பந்தங்கள் கொண்டு வருவார்கள், சங்கு ஊதுவார்கள். ஒரே கோலாகலக் கொண்டாட்டம் நடக்கும்.

மாயர்களின் நாகரிகத்தில் அவர்களுடைய இறுதிச் சடங்குகள் முக்கிய இடம் பிடித்தன. மரணம் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சிதான், இறப்பவர்களில் பெரும்பாலோனோர் மறுபடி பிறப்பார்கள் என்று நம்பினார்கள்.

உலகத்தில் நல்ல காரியங்கள் செய்பவர்கள், நாட்டுக்காக உழைப்பவர்கள், போர் வீரர்கள், பிறக்கும்போது இறக்கும் குழந்தைகள் ஆகியோர் மறு பிறவிகள் இல்லாமல் நேரடியாக சொர்க்க உலகம் போவார்கள் என்பது மாயர்களின் சித்தாந்தம். இந்த நம்பிக்கைகள் நம் இந்து மதத்தின் பிறப்பு-இறப்பு தத்துவங்கள் போலவேதான்.

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் இந்து, மாய நம்பிக்கைகள் மாறுபடுகின்றன. தற்கொலை செய்து கொள்பவர்கள் பேய்களாக வேப்ப மர உச்சியில் வசிப்பார்கள், உலகத்தைச் சுற்றுவார்கள்,  மனிதர்களுக்குத் துன்பங்கள் தரும் வில்லன்கள் என்கிறது இந்து மதம். மாயர்களோ, தற்கொலை செய்து கொள்பவர்கள் மரணத்துக்குப் பின் நேராக சொர்க்கம் போகும் அதிர்ஷ்டசாலிகள்.

மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும் என்றும் மாயர்களுக்குத் தெளிவான எண்ணம் இருந்தது. சாதாரண மக்கள் மரணத்துக்குப்பின் பாதாள உலகம் போவார்கள். பணக்காரர்களும் பிரபுக்களும் சொர்க்கம் போவார்கள்.

வாழ்க்கையில் பாவம் செய்தால், கெட்டவர்களாக வாழ்ந்தால், அதற்குரிய தண்டனை மரணத்துக்குப் பின் கிடைத்தே தீரும். ஊருக்கு உழைக்கும் உத்தமர்களுக்கு மறு பிறவி கிடையாது. அவர்கள் மனித நிலையில் இருந்து கடவுள்கள் ஆவார்கள். இறந்தவர்களுக்கு மரியாதைகள், படையல்கள் செய்து அவர்களின் ஆவிகளை சந்தோஷமாக வைத்திருக்கப் பல சடங்குகள் வைத்திருந்தார்கள்.

மாயர்களின் இறுதிச் சடங்குகளிலும் நம் ஊர் சம்பிரதாயங்கள்போல் பல நடைமுறைகள் உள்ளன. நம் ஊரில் மரணம் அடைந்தவர்களின் வாயில் அரிசி போடுவார்கள். அவர்கள் சொர்க்கம் அல்லது நரகம் போவதுவரை அவர்களுடைய பசி தீர்க்க இந்த அரிசி உதவும் என்பது நம் நம்பிக்கை.

மாயர்களும் இப்படித்தான். இறந்தவர்களின் வாயில் அவர்கள் ஊர் “அரிசி”யான சோளம் போட்டார்கள். மாயர்களைப் பொறுத்தவரை சோளம் வாழ்க்கையின் அடையாளம். சோளத்தோடு மறு உலகம் போனால் இறந்தவர்களின் மறுபிறவி வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
அமரர் ஆனவர்கள் மேல் உலகம் போக வழிச் செலவுக்குப் பணம் வேண்டுமே?
ஜேட் போன்ற விலை உயர்ந்த மாணிக்கக் கற்களும் அவர்களுடைய உடல்கள்மீது வைக்கப்பட்டன

இன்னொரு வினோதப் பழக்கமும் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட விசில் மறைந்தவர்கள் உடல்களோடு  வைக்கப்பட்டது. இவை கடவுள்கள், மிருகங்கள் ஆகிய வடிவங்களில் இருந்தன. இந்த விசில்கள் உயிர் இழந்தவர்களைப் பத்திரமாக மேல் உலகம் கொண்டு சேர்க்கும் என்று நம்பினார்கள்.

சிவப்பு நிறம் பிறப்பு, மறு பிறவி ஆகியவற்றோடு தொடர்பு கொண்ட நிறமாகக் கருதப்பட்டது. உடலின் மேல் குங்குமம் போன்ற சின்னபார் என்ற சிவப்பு நிறத் தூள் தாராளமாகத் தூவப்பட்டது.  இது ஒரு தாதுப் பொருள்.

உடல்கள் புதைக்கப்பட்டு கல்லறைகளும் அவற்றின்மேல் கோவில்களும் கட்டப்பட்டன. இந்த பந்தாக்கள் எல்லாம் கடவுள்களுக்கும் பணக்காரர்களுக்கும்தான். ஏழைகளை வெறுமனே புதைப்பதோடு சரி.

சில கல்லறைகளின் மேல் பிரமிட் போன்ற கட்டடங்கள் எழுப்பப்பட்டன. சில பிரமிட்களுக்கு 13 படிகள். சொர்க்கத்தில் 13 வகை உலகங்கள் இருப்பதாக மாயர்கள் நம்பியதன் பிரதிபலிப்பு இது. மற்றும் சில பிரமிட்களில் ஒன்பது படிகள் மட்டுமே. பாதாள உலகத்தில் ஒன்பது வகை உலகங்கள் இருப்பதாக அவர்கள் நம்பியது இதற்குக் காரணம்.

கல்லறைகளில் அழகிய பீங்கான் கைவினைப் பொருட்கள், ஜேட் ஆபரணங்கள், முகமூடிகள் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் மறைந்தவரின் உடலோடு சேர்த்துப் புதைப்பது வழக்கம். சில சமயம், மறைந்தவரின் வேலைக்காரர்களையும் தங்கள் எஜமானர்களோடு சேர்த்துப் “பரலோகம்: அனுப்புவதுண்டு.

காடுகளில் பிசாசுகள் இருக்கும் என்ற நம்பிக்கையும் பயமும் மாயர்களுக்கு உண்டு,  அவற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பல வகையான  தாயத்துகளை அவர்கள் அணிந்தார்கள்.

0

2014 – கணிப்பும் கனவும் : 8

Varanasi-201213-inner3உங்கள் கணிப்பைப் பொய்யாக்கிவிட்டு மோடி பிரதராகிவிட்டார்.

என் கணிப்பு மட்டுமல்ல பலருடைய கணிப்புகளைத் தவிடுபொடியாக்கிவிட்டிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா தமிழகத்தில் அமோக வெற்றியைப் பெற்றுவிட்டிருக்கிறார். மோடியின் வெற்றியைவிட அதிக பயத்தை அதுதான் தருகிறது.

மோடியின் வெற்றி பயத்தையா தருகிறது உங்களுக்கு. முதல் வேலையாகத் தன் தாயிடம் ஆசிகள் வாங்கியிருக்கிறார். அத்வானியின் காலில் விழுந்து மூத்தோர்களுக்கான மரியாதையை வெளிப்படுத்தியிருக்கிறார். கங்கையில் ஆரத்தி வழிபாட்டில் பங்கெடுத்திருக்கிறார். அகமதாபாத்திலும் வாரணாசியிலும் அவர் ஆற்றிய உணர்ச்சிமயமான உரைகள் நம்பிக்கையைத் தரவில்லையா..? அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் தன்னுடைய தாரக மந்திரம் என்று அவர் தெளிவாக அறிவித்த பிறகும் உங்களுக்கு பயமா?

நீங்கள் சொன்னவை எல்லாமே மிகுந்த மன நிறைவையே தருகின்றன. அவர் தாயின் காலில் விழுந்து வணங்கியதை பெண்கள் மீதான பக்தியாகப் பார்க்கிறேன். அவர் அத்வானியின் காலில் விழுந்து வணங்கியதை முன்னோர்களின் நம் பாரம்பரியத்தின் மீதான மரியாதையாகப் பார்க்கிறேன். அவர் கங்கைக் கரையில் மக்களை உறுதிமொழி எடுக்க வைத்ததைப் பார்க்கும்போது ஒவ்வொரு தனி நபரும் திருந்தினால்தான் தேசம் வளர்ச்சி அடைய முடியும் என்ற வளர்ச்சியின் துல்லியமான செயல்திட்டமாகப் பார்க்கிறேன். இன்னும் சொல்லப்போனால், சிக்கலான அயோத்தி பிரச்னையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கங்கையைச் சுத்தப்படுத்துதல் என்ற லட்சியத்தில் இந்து சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம் சுமுகமான சூழலை உருவாக்கமுனைந்திருக்கிறார். இது அற்புதமான மாஸ்டர் ஸ்ட்ரோக்தான். திரிசூலத்தின் இந்தப் புதிய முகங்களை வரவேற்கவே செய்கிறேன். காந்தி எப்படி சுதந்தரப் போராட்டத்தை மக்களின் போராட்டமாக ஆக்கினாரோ அதுபோல் வளர்ச்சிக்கான தனது கனவை அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்துதான் சாத்தியப்படுத்த முடியும். அனைவரும் ஒன்று சேருங்கள் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். பிரித்தாளும் ஆட்சிக்கு முடிவு கட்டியாகிவிட்டது. இனிமேல் இணைத்து ஆளும் ஆட்சி வந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார். அவர் அப்படிச் செய்ய ராமர் மட்டுமல்ல, குரு கோவிந்தும் அல்லாவும் ஏசுவும்கூட அவருக்கு அருள் புரியட்டும். மோடியின் தலைமையில் இந்தியா உண்மையாகவே ஒளிரும் என்றால், அதைவிட வேறு என்னதான் வேண்டும் ஒருவருக்கு? ஆனால், அவர் சுதேசித் தொழில்கள், சுதேசி நலன் சார்ந்து எந்த அளவுக்குச் செயல்படுவார் என்ற சந்தேகம் இருக்கிறது. அது நடக்காமல் வளர்ச்சி சாத்தியமில்லை. அல்லது அந்த வளர்ச்சி ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கவே செய்யும். இந்தியா போன்ற பன்மைத்துவ தேசத்தில் பலன்கள் பகிர்ந்தளிக்கப்படுவதே சுமுகமான சூழலை சாத்தியப்படுத்தும். இல்லையென்றால் அந்த வளர்ச்சியானது நீர்க்குமிழியின் உப்பல்போல் எந்த நிமிடமும் வெடித்துச் சிதறிவிடும்.

அந்த பயம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், காந்தியைக் கொன்ற இயக்கத்தின் ஆதரவுடன் வந்த ஒருவர் காந்தியை முன்னுதாரணமாகச் சொல்வதைக் கேட்டபோது கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது.

நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொல்லவில்லை என்ற வழக்கமான பாடலைப் பாடப்போகிறீர்களா..?

நிச்சயமாக இல்லை. உச்ச நீதிமன்றம் காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் சம்பந்தம் இல்லை என்று மிகத் தெளிவாகச் சொன்ன நிலையிலும் ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தமே காந்தியின் கொலைக்கு அடிப்படையாக இருந்தது என்ற அளவில் காந்தியை ஆர்.எஸ்.எஸ்தான் கொன்றது என்றே சொல்கிறேன். ஆனால், காந்தியை அவர்கள் கொன்றது தவறு என்று நான் நினைக்கவில்லை.

என்ன சொல்கிறீர்கள்?

ஆமாம். ஆர்.எஸ்.எஸ். காந்தியைக் கொன்றது சரிதான். இது உங்களுக்குப் புரியவேண்டுமென்றால் ஆர்.எஸ்.எஸ். எந்த காந்தியைக் கொன்றது என்று நீங்கள் பார்க்கவேண்டும். காந்திக்கு பல முகங்கள் உண்டு. அவர் ஹரிஜன்களுக்காக பாடுபட்டார். அந்த காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொல்லவில்லை. ஏனென்றால், ஆர்.எஸ்.எஸும் காந்தியைவிட ஒருபடி மேலாகவே சாதியை எதிர்க்கத்தான் செய்கிறது. காந்தி கிராமப்புறப் பொருளாதாரத்தை ஆதரித்தார். அந்த காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொல்லவில்லை. இன்று ஆர்.எஸ்.எஸ். சுதேசிப் பொருளாதாரத்தில் இருந்து விலகி வந்துவிட்டிருக்கிறது என்றாலும் 1960கள் எழுபதுகள்வரை அது சுதேசிப் பொருளாதாரத்துக்குத்தான் ஆதரவாக இருந்தது. அதிலும் காந்தி கொல்லப்பட்ட காலத்தில் காந்தியைவிட சுதேசிப் பொருளாதாரத்துக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸே கூடுதல் முக்கியத்துவத்தைத் தந்தது. பசுவதையை காந்தியைப் போலவே ஆர்.எஸ்.எஸும் எதிர்த்தது. இரண்டு பேருக்குமே ராம ராஜ்ஜியம்தான் லட்சியம். எந்த எளிமையையும் தியாகத்தையும் காந்தி முன்வைத்தாரோ அதை ஆர்.எஸ்.எஸ்ஸினர் அவரைவிட அதி தீவிரமாகக் கடைப்பிடிக்கவே செய்கின்றனர். அந்த காந்தியை எல்லாம் ஆர்.எஸ்.எஸ். கொல்லவில்லை. முஸ்லிம் பிரச்னையில் காந்தி நடந்துகொண்டவிதம் மட்டும்தான் ஆர்.எஸ்.எஸுக்கு உவப்பாக இருக்கவில்லை. அதிலும் ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களை அடியோடு வெறுப்பதால் அப்படிச் செய்தார்கள் என்று நிச்சயம் சொல்ல முடியாது. காந்தி முஸ்லிம்களிடம் மட்டுமல்ல முஸ்லிம் தீவிரவாதிகளிடமும் அன்புடன் நடந்துகொள்ளச்சொன்னார். அதைத்தான் ஆர்.எஸ்.எஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இஸ்லாமியர்கள் மீதான ஆர்.எஸ்.எஸ். அல்லது பிற இந்து அடிப்படைவாத அமைப்பின் தாக்குதல் என்பது எதிர்வினையாகத்தான் இதுவரையும் இருந்திருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கவும் செய்யும். எதிர்த்துத் தாக்கும்போது அப்பாவி முஸ்லிம்களையும் கொல்கிறார்களே என்ற விமர்சனத்தைத்தான் வைக்கமுடியுமே தவிர தாமாகவே இஸ்லாமியர்களை அடித்ததாக ஒருபோதும் சொல்லவே முடியாது. ஆனால், டைரக்ட் ஆக் ஷன் டே என்றும் பிரிவினை என்றும் ஆயிரக்கணக்கான இந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்று குவித்த இஸ்லாமியத் தீவிரவாதிகளிடம் அன்புடன் நடந்துகொள்ளச் சொன்னார் காந்தி. அந்த காந்தியைத்தான் கோட்ஸே கொன்றான். நினைத்துப் பாருங்கள்… கோட்ஸேக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு இருந்திருந்தால் அவர்களைத்தானே கொன்றிருப்பான். ஆனால், அவன் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரித்த காந்தியை மட்டும்தானே கொன்றான்.

காந்தி இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரித்தை அவருடைய இடத்தில் இருந்த பார்த்தால் சரியாகவே தோன்றக்கூடும். சிறுபான்மை என்னதான் கோபத்தில் செயல்பட்டாலும் பெரும்பான்மை பொறுமையாகத்தான் நடந்து கொள்ளவேண்டும். நாய் என்னதான் குரைத்தாலும் பெரிய சத்தம் வராது. ஆனால், சிங்கம் கர்ஜித்தால் காடே கிடுகிடுங்கிவிடும். பத்து பேர் என்னதான் சண்டை போட்டாலும் ப்த்து பேருக்குத்தான் கஷ்டம் வரும். ஆனால், 90 பேர் திருப்பி அடித்தால் அது மிக மிக மோசமான விளைவை ஏற்படுத்திவிடும் என்று அவர் பயந்தார். மேலும் அடிப்பவனை திருப்பி அடிப்பதன் மூலம் வெல்ல முடியாது. தீயை இன்னொரு தீயால் அணைக்க முடியாது என்று அவர் நம்ப்னார். ஆனால், அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்ல முடியாதே. எல்லாருமே ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டிக் கொண்டா நிற்பார்கள். ஒரு சிலர் திருப்பி அடிக்கவும் விரும்புவார்கள் அல்லவா. அதைக் கூடாதென்று தடுத்தால் தடுப்பவர் மேல்தானே நம் கோபம் திரும்பும்.

இன்று தமிழ் தேசியவாதிகளிடமோ விடுதலைப் புலிகளிடமோ ராஜ பக்சே மீதும் சிங்களர்கள் மீதும் அன்புடன் நடந்துகொள்ளச் சொல்லி ஈ.வே.ரா. போராடியிருந்தார் என்றால் ஆண்மையுள்ள ஏதாவது ஒரு ஒரு தி.க. காரரின் கையால்தானே அவர் சாகடிக்கப்பட்டிருப்பார். அந்தத் தி.க.காரருக்கு ஈ.வே.ரா. செய்த பிற நல்ல செயல்கள் எதுவுமே கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டிருக்கும். உணர்ச்சிபூர்வமான ஒரு விஷயம் மட்டுமே முன்னால் வந்து நிற்கும். கோட்ஸேக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் அதுவே வந்து நின்றது. எனவே, அந்த காந்தியை கோட்ஸே கொன்றதிலும் அதற்கான நியாயத்தை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கித் தந்ததிலும் எந்தத் தவறும் இல்லை. இன்றைய முற்போக்காளர்களும் இன்ன பிற போராளிகளும் இஸ்லாமியத் தீவிரவாதத்தைப் பொறுத்தவரையில் காந்தியின் குரலில்தான் பேசிவருகிறார்கள். கோட்ஸேவின் மறு அவதாரத்துக்கான நேரம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் மோடி வளர்ச்சியின் பாதையில் தேசத்தை அழைத்துச்சென்று அதன்மூலம் வெறுப்பையும் அதிருப்தியையும் போக்கவேண்டும். குஜராத்தில் செய்து காட்டியதுதானே. என் பயம் ஜெயலலிதாவின் ராட்சஸ வெற்றியைக் குறித்துத்தான்.

அவருடைய தயவில்லாமலேயே ஆட்சி அமைக்க முடிந்துவிட்டிருக்கிறதே… இன்னும் என்ன பயம்?

அது பயத்தை அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஒருவேளை தி.மு.க. 37 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், இந்துத்துவ அலை தேசம் முழுவதிலும் வீசிய நிலையிலும் பெரியார் மண் அதை எதிர்த்து நின்றிருக்கிறது என்று உங்களுக்கு பயம் வந்திருக்கும் அல்லவா?

ஆமாம். ஆனால் அப்படி நடக்கவில்லையே. சொல்லப்போனால், மோடியின் அலை தமிழகத்திலும் வீசியிருக்கிறது. ஜெயலலிதாவை மோடியின் இந்துத்துவத்தின் சகோதரியாகத்தான் மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால்தான் வாக்குகளை அள்ளி வீசவும் செய்திருக்கிறார்கள். அவர் என்னதான் தன்னுடைய வெற்றி என்று சொல்லிக் கொண்டாலும் தமிழகத்திலும் மோடி ஃபேக்டர் நிச்சயம் செயல்பட்டிருக்கிறது.

அவையெல்லாம் உண்மைதான். ஆனால், ஜெயலலிதா அதை ஏற்றுக்கொண்டு நடப்பார் என்று சொல்லவே முடியாது. அவர் தன் இயல்பில் இந்துத்துவத்தின் கூட்டாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் சுதந்தரமாக இயங்க அனுமதிக்கப்பட்டால்தான் அந்தக் கூட்டு வலுப்பெறும். இல்லையென்றால் அவர் விஷ முள்ளாக இருந்து விபரீதத்தை விளைவித்துக்கொண்டேதான் இருப்பார்.

ஜெயலலிதாவின் சுதந்தரத்துக்கு என்ன குறை? பேரரசியாக வானுக்கும் மண்ணுக்குமாக அல்லவா நிமிர்ந்து நிற்கிறார்.

அது வெளிக்குத் தெரியும் தோற்றம். ஊழல் வழக்குகளிலும் வேறு பல வலைகளிலும் சிக்கியும் கிடப்பவர் அவர். அவரைப் போன்றவர்களின் கூந்தல் யார் கைக்குக் கிடைக்கிறதோ அவர்களால் அவரை எளிதில் சாமியாடவும் வைக்க முடியும். சாந்தமாகவும் இருக்கவைக்க முடியும்.

இது அபாண்டமான அபத்தமான ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

இது போன்றவற்றுக்கெலாம் ஆதாரம் தர முடியாதுதான். ஆனால், நடக்கும் விஷயங்களில் எதையெதை எங்கெங்கு வைத்துப் பார்க்கவேண்டுமோ அப்படிச் செய்தால் உண்மையைக் ஊகித்துவிட முடியும். வாழ்க்கை ஒரு புதிர். கலைந்து கிடக்கும் துண்டுகளை சரியாகப் பொருத்தினால் ஒழுங்கான உருவம் கிடைத்துவிடும். சரி… உங்களுக்குப் புரியம்வகையில் சொல்கிறேன். ஜெயலலிதா இந்துத்துவர் என்பதுதானே உங்கள் கருத்து. அப்படியானால், ஜெயேந்திரர் கைதை எப்படி விளக்குவீர்கள்?

அது அவர் கொலையில் சம்பந்தப்பட்டிருந்தார். அதனால் கைது செய்யப்பட்டார். அதோடு ஜெயலலிதாவைத் தரக்குறைவாகப் பேசியதாகவும் ஜயங்கார்-ஐயர் பகைமையோடு அதுவும் சேர்ந்துகொள்ளவே சிறைச்சாலை வா வா என்று அவரை அழைத்துவிட்டது.

இவையெல்லாம் தோதான சூழல்கள். நம்பும்படியான முகாந்தரங்கள். உண்மை அது அல்ல. ஜெயேந்திரரை அவர் மூலம் இந்து மதத்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் ஜெயலலிதா முடுக்கிவிடப்பட்டார். கைது படலம் நடந்தேறியது. பின்னால் இருப்பவர்கள் சாவி கொடுப்பதற்கு ஏற்ப பொம்மை ஆடித்தானே ஆகவேண்டும். ஜெயலலிதாவின் மீதான பயம் உண்மையில் அவர் குறித்தது அல்ல. அவரைப் பின்னால் இருந்து இயக்குபவர்களைக் குறித்தது.  இந்திய விரோத சக்திகள் இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கின்றன. ஜெயலலிதா போன்ற ஊழல் பேர்வழிகள் அவர்களுக்கு லகுவான வலுவான துருப்புச் சீட்டுகள்.

ஜெயேந்திரர் குற்றமற்றவர் என்று நினைக்கிறீர்களா? அந்த வழக்கில் 83 பிறழ் சாட்சியங்கள் என்பது ஒன்றே போதுமே, உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள?

அதைத்தான் நானும் சொல்கிறேன். 83 பிறழ் சாட்சியங்கள் என்பது உண்மையில் அரசு(சி) பொய்யாக ஜோடித்த வழக்கு அது என்பதைத்தானே காட்டுகிறது.

வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொன்ன ஒருவரை எப்படி உங்களால் நியாயப்படுத்த முடிகிறது?

பெரும்பாலானவர்களின் மனோபாவமே இதுதான். கொலையில் அவருடைய பங்கு என்ன என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. ஜெயேந்திரர் பிற்போக்கானவர். எனவே, அவர் மீதும் அவருடைய நிறுவனம் மீதும் இருக்கும் கோபத்தையெல்லாம் வழக்கில் காட்டிவிட்டார்கள். காலச்சுவடு போன்ற ஈலக்கியப் பத்திரிகைகளில் ஆரம்பித்து அம்பை போன்ற ஜான்சிராணிகள் வரை அனைவரும் ஜெயேந்திரரின் அந்த ஒற்றை வாக்கியத்தை மையமாக வைத்துத்தான் அவரை நிராகரிக்கிறார்கள். விமர்சிக்கிறார்கள். ஜெயேந்திரர் விஷயத்தில் தர்மாவேசம் கொள்பவர்கள் அவரைவிட பல மடங்கு தவறுகள் செய்பவர்களுடன் எந்தக் கூச்சமும் இன்றி கொஞ்சிக் குலாவுவதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம். ஆதாயத்துக்கு இழுக்கு வராத இடங்களில் மட்டும் அறச்சீற்றம் அல்லது சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிப்பது என்பதெல்லாம் தேவையான ஒரு பண்புதான். பிழைப்பு நடந்தாகவேண்டுமே… ஆனால், என்றாவது உண்மையின் பக்கமும் வந்துபோவது நல்லது.

சங்கரர் பெயரில் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள், பள்ளிகள், பிற நலப்பணிகள் செய்யும் அறக்கட்டளைகள் நடத்தப்பட்டுவருகின்றன. அவை எல்லாவற்றிலும் பெருமளவில் பணி புரிவது பெண்கள்தான். அதிலும் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் 80-90 சதவிகிதம் பெண்கள்தான். இப்போது உங்கள் முன்னால் இரண்டு உண்மைகள் இருக்கின்றன. ஒன்று அவர் சொன்ன ஒற்றை வாக்கியம். இன்னொன்று பல ஆண்டுகளாக பணிக்கு வரும் பெண்களை கவுரவமாக நடத்தும் ஒரு நிறுவனம். ஒன்று சொல். இன்னொன்று செயல். எதைவைத்து முடிவெடுக்கவேண்டும் என்பது நீங்கள் முகமூடியை அணிய விரும்புகிறீர்களா முகத்துடன் வலம் வர விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்தது.

ஜெயலலிதா சுதந்தரமாக நடப்பவராக இருந்தால் ஜெயேந்திரர் விஷயத்தில் இவ்வளவு பதற்றமும் ஆவேசமும் கொண்டிருக்கமாட்டார். அந்த அடிப்படையில்தான் அவரைப் பின்னால் இருந்து இயக்குபவர்களைப் பற்றிய அச்சங்களை முன்வைக்கிறேன். இப்போது அவர் இந்து-இந்திய விரோத சக்திகளின் பிடியில் இருப்பதாக அஞ்சுகிறேன். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஓரளவுக்கு உறுதியான நிலையில் அவர் ஆற்றிய உரையைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? ஏதோ தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்ததுபோலவும் இந்தியா, மோடி, பி.ஜே.பி எல்லாம் அந்நிய நாட்டு நிகழ்வுகள் போலவும் அவர் பேசிச் சென்றதைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? புதிதாக அமையவிருக்கும் ஆட்சிக்கு வாழ்த்துகள் என சொல்லிச் சென்ற இரண்டு பேர் யார் தெரியுமா? ஒருவர் தியாகத் திரு உருவம் சோனியா அம்மையார்… இன்னொருவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் சரியான விடை கிடைக்கும்.

இவ்வளவு ஏன், தமிழ் தேசியவாதிகள் கருணாநிதியை எதிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதாவை எதிர்ப்பது இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடங்கிவிடுவார் என்று அஞ்சுவதாகச் சொல்வார்கள். அவருடைய பிம்பத்துக்கு ஏற்ற யூகம்தான். உண்மை அது அல்ல. பொன் முட்டையிடும் வாத்தைத் தடவித்தானே கொடுக்கவேண்டும்.

இப்போது மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ராஜ பக்சேவை அழைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறாரே…

அதுதான் சொல்கிறேனே… இதுபோன்று மெள்ள மெள்ள ஜெயலலிதா மூலமாக இந்திய விரோத நடவடிக்கைகள் தமிழகத்தில் முன்னெடுக்கப்படும். காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை என மத்திய அரசு பல விஷயங்களில் தமிழர் நலனுக்கு ’விரோதமாகவே’ செயல்படப்போகிறது. அவையெல்லாம் ஜெயலலிதாவுக்கும் அவரைப் பின்னின்று இயக்குபவர்களுக்கும் கிடைத்த நல் வாய்ப்புகள். உண்மையில் ஊழல் வழக்குகளில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்புவரும் என்ற பயத்தில் ஈழத்தாயாகவும் தமிழ் அன்னையாகவும் அவதாரமெடுப்பார்.

உண்மையிலேயே அவர் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவராகவும் இருக்கலாம் அல்லவா?

அது இல்லைஎன்பதைத்தான் பல சந்தரப்பங்களில் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்களே. தமிழர் நலனின் அக்கறை கொள்வதென்றால் முதலில் தமிழ் நாட்டுப்பள்ளிகளில் ஆங்கிலத்தை திணிப்பதை நிறுத்தவேண்டும். மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிவழிக்கல்வியை நிறுத்தவேண்டும். ஆனால், அதையெல்லாம் ஜெயா அக்காவும் செய்யமாட்டார். கருணாநிதிஜியும் பண்ணமாட்டார். இருவரும் ஈழ விஷயத்தில் அக்கறைகொள்வதுபோல் வேடம் போட்டுத் தங்கள் செல்வாக்கை மீட்க முயற்சி செய்வார்கள். ஈழத்தமிழர் போராட்டமானது இலங்கையில் முடிந்துபோன ஒன்று. ஆனால், அதைவைத்து இந்திய விரோதத்தை வளர்க்க முடியும். ஆண்டுதோறும் தெவசம் செய்வதுபோல் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருவரும் தமிழ் தேசியக் குஞ்சுகள் அதையொட்டி இங்கு படபடப்பதும் ஒரே லட்சியத்தைக் கொண்டே முன்னெனெடுக்கப்படுகின்றன. அது தமிழ் நாட்டை இந்திய தேசியத்துக்கு எதிராகக் கொண்டு நிறுத்துவதுதான். அதற்கு ஜெயா போன்ற ஊழல்வாதிகள் அவர்களுக்குக் கிடைத்த துருப்புச் சீட்டு. மடியில் கனம் இருப்பவர்களுக்கு வழியில் பயம் இருந்துதானே தீரும். எனவே, அந்த பயத்தை வைத்து மறைமுக இலக்குகளை பின்னால் இருந்து இயக்குபவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள். அதே நேரம் அது வெளியில் தெரியாமல் இருக்க அபரமான நியாயங்களை இதுபோல் உருவாக்கித் தரவும் செய்வார்கள். மோடியிடம் அண்டை நாட்டுடன் நல்லுறவை உருவாக்குங்கள் என்ற போர்வையில் ராஜ பக்சேவை அழைக்கச் சொல்வார்கள். ஜெயாவிடம் எதிர்க்கச் சொல்வார்கள். சதுரங்கத்தின் இருபக்கமும் அமர்ந்துகொண்டு அவர்களே ஆடுவார்கள்.

பெரியார் மண் எப்போதும் இந்திய – இந்து தேசியத்துக்கு எதிராகத்தானே இருக்கும்.

பெரியார் மண்ணா… அது பெரியாரிஸ்ட்களின் தலைக்குள் மட்டுமே இருக்கிறது. இங்கு பெரியாரின் தாக்கம் என்றைக்காவது இருந்திருந்தது என்றால் தமிழகத்தில் பெருகியிருக்கும் கோவில்களை பக்திப் பிரவாகத்தை எப்படி விளக்குவீர்கள். இன்றும் இரட்டைகுவளைமுறை, காலில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது, கலப்பு மணத்துக்கு எதிர்ப்பு என நடந்துகொண்டிருப்பதை எப்படி விளக்குவீர்கள்?

பெயர்களுக்குப் பின்னால் சாதியைச் சேர்ப்பதை தடுத்து நிறுத்தியிருக்கிறார்களே…

உண்மைதான். இத்தனை ஆண்டுகால பெரியாரிய அலை செய்திருக்கும் ஒரே விஷயம் இதுமட்டுமே. எஞ்சிய மாற்றங்கள் எல்லாம் நவீனத்துவத்தின் வருகையாலும் காமராஜர் போன்றவர்கள் முன்னெடுத்த தொழில் வளர்ச்சியின் விளைவாலும் உருவானவையே.

0

கண்ணீர்ப் பூக்கள்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 15

sunset_081904அதிகாரம் : பொழுதுகண்டிரங்கல்

குறள் 1221:

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

 

காதல் பிரிவில்

அந்திக் காலம்

சாதல் நோக்கும்

அந்திமக் காலம்.

 

*

குறள் 1222:

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

 

மந்தமாய்த் துவளும்

மாலை வேளையும்

என்னைப் போலவே

பிரிவின் நிமித்தமோ!

 

*

குறள் 1223:

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

 

அவன் உடனிருக்கையில்

அருகில் வரவே அஞ்சிய

அந்தி என் சவப்பெட்டிக்கு

ஆணி அடிக்கிறது இன்று.

 

*

 

குறள் 1224:

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

 

அவன் இல்லாத போழ்து

வரும் மாலைப் பொழுது

ஒரு துப்பாக்கி மற்றும்

சில தோட்டாக்களுடன்.

 

*

 

குறள் 1225:

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

 

காலைக்கு மாலையும்

மாலைக்கு காலையும்

நீட்டியது போலுள்ளது

காதல் பிரிந்தவள் நிலை!

 

*

 

குறள் 1226:

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

 

அடேய் அன்புக் காதலா,

அஸ்தமனம் கசக்குமென

ஒருபோதும் நீயெனக்குச்

சொல்லித் தரவில்லை.

 

*

 

குறள் 1227:

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

 

விடியலில் ஜனித்து

மதியத்தில் வளர்ந்து

மாலையில் ருதுவாகும்

பெண் போல காதல்.

 

*

 

குறள் 1228:

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

காற்று கிழித்து வரும்

ஒரு புல்லாங்குழலிசை

என்னையும் கிழிக்கிறது

இந்த சாயுங்காலத்தில்.

 

*

 

குறள் 1229:

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

 

என்னைத் துரத்திய

சந்தியா காலம்

ஊரையும் துரத்தும்;

உலகைத் துரத்தும்.

 

*

 

குறள் 1230:

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

 

பிரிந்த கணத்தை விடவும்

மஹாரணமாய்க் கனக்கும்

ஆறு மணிக்குப் பிந்தைய

ஒவ்வொரு நுண்கணமும்.

 

***

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 14

அதிகாரம் – கனவுநிலையுரைத்தல்

dreaming-goddess-eric-singletonகுறள் 1211:
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

சிகை சொறிந்து நின்று
லஞ்சம் கேட்பதில்லை
காதல் தூது சென்ற
வானவில் கனவுகள்.

*

குறள் 1212:
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

பிரிவைப் பரிசளித்த
பிரியக் காதலனிடம்
துக்கம் சொல்வேன்
தூக்கம் கிடைத்தால்.

*

குறள் 1213:
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

ப்ரியத்தின் வாடையற்ற
ஒரு மூச்சுத் திணறலில்
கனவுகளைச் சுவாசித்து
உயிர் தரித்திருக்கிறேன்.

*

குறள் 1214:
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

அவன் இல்லை, அவன்
ஸ்பரிசங்கள் இல்லை,
அவனை அழைத்து வரும்
கனவுகளே சுயஇன்பம்.

*

குறள் 1215:
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

கனவுகளிலும் கூட
காண்பதும் கலப்பதும்
கரைவதும் என்றவன்
இனித்துக் கிடக்கிறான்.

*

குறள் 1216:
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

நனவெனும் அராஜகம்
இருந்திருக்காவிட்டால்
கனவில் அவனுடனே
பிரியாதிருந்திருப்பேன்.

*

குறள் 1217:
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.

நேரில் நெருங்கி
புன்னகை தராதவன்
கனவில் நுழைந்து
கண்ணீர் தருகிறான்!

*

குறள் 1218:
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

இரவில் துயிலில் கனவில்
சில்மிஷங்கள் செய்தவன்
விடியலில் பதுங்குகிறான்
எந்தன் நெஞ்சுக்குழிக்குள்.

*

குறள் 1219:
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

பிரிந்த காதலனைக்
கனவில் காணும்
எந்தக் காதலியும்
புலம்புவதில்லை.

*

குறள் 1220:
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

அவன் என்னைப்
பிரிந்து போனதாய்
கதைகள் பேசும்
கனவுக்குருடர்கள்.

***

கவரிங் மீன்கள்

05-thanga-meengal-12-600

இந்திய தேசிய விருது பெற்ற இன்னொரு தமிழ்ப் படம். தமிழ் தேசிய அரசியல் பின்புலம் உடைய இயக்குநரான ராமுக்கு இந்த விருது தரப்பட்டதையும் அதை அவர் கவுரவமாகப் பெற்றுக்கொண்டதையும் பார்க்கும்போது ஓர் இந்தியத் தமிழனாக என் அரசியல் மனம் பூரிப்படையவே செய்கிறது. தகுதியற்ற படைப்பு என்றாலும் தரமற்ற விருதுதான் என்பதால் என் கலை மனமும் பெரிதாக வருத்தமெல்லாம் அடையவில்லை. எனவே, இது சார்ந்த வாழ்த்துகளை இரு தரப்பாருக்கும் முதலில் தெரிவித்துவிடுகிறேன்.

அப்பறம், திரைப்படம் என்பது காட்சிபூர்வமாகக் கதை சொல்லும் கலை என்றாலும் கதை, திரைக்கதை, வ்சனம் என்ற அடிப்படை அம்சங்கள் சிறப்பாக இருந்தால்தான் காட்சிபூர்வ அணுகுமுறை என்பதுபற்றிப் பேசவே முடியும். திரைக்கதை சரியாக இல்லாத ஒரு படத்தின் காட்சி மொழியும், கலர் டோனும் கேமரா நகர்வும் என்னதான் சிறப்பாக இருந்தாலும் அது விளக்கமாத்துக்குக் கட்டின பட்டுக் குஞ்சலமாகத்தான் இருக்கும். மேலும் தமிழ் திரைப்படத்தில் காட்சி மொழி சார்ந்து எந்தப் பெரிய பாய்ச்சலும் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. கிரேன் ஷாட்டோ, டிராலி ஷாட்டோ, மழைக் காட்சியோ, லொகேஷன்களோ எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளர் எந்த அளவுக்குத் தலையைக் காட்டிக்கொண்டு அமர்கிறார் என்பதை மட்டுமே பொறுத்தது; கதைக்கும் காட்சிக்கும் பெரிதாக எந்த சம்பந்தமும் இருப்பதில்லை. எனவே, தமிழ் திரைப்பட விமர்சனம் என்பது பெரிதும் திரைக்கதை பற்றிய விமர்சனமாக மட்டுமே இருப்பதை இன்னும் சிறிது காலத்துக்குத் தவிர்க்கவே முடியாது. இந்த விமர்சனமும் அப்படியான ஒன்றே.

இனி படத்துக்குள் நுழைவோம்.

இந்தப் படம் வெளியாகத் தாமதமானபோதும் வெளியானபோதும் தமிழ் தேசிய அரசியலின் நேரடி மற்றும் மறைமுக விசுவாசிகள் தங்களுடைய ஊடகச் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, இயேசு பெருமகனாரின் இரண்டாம் வருகையை சுவிசேஷப் பிரசங்கிகள் சற்றும் மனம் தளராமல் கொண்டாடுவதைப்போல் சிலிர்த்தெழுந்து பரவசமடைந்தார்கள். ஆனால், இந்தப் படம் வெளியானபோது விசுவாசிகள் நீங்கலாகப் பொது ஜனமும் பார்க்க நேர்ந்ததால், ஒரு சில எதிர்மறை விமர்சனங்களும் எழுந்தன. இயக்குநர் ராம் ஒரு கலைஞனின் அறச் சீற்றத்தோடு தார்ப் பாய்ச்சிக்கொண்டு களமாடினார். ஒரு கலைஞன் தன் படைப்பு விமர்சிக்கப்படும்போது கோபப்படுவது நியாயம்தான். ஆனால், ராம் ஏன் கோபப்பட்டார் என்பதைத்தான் இன்றுவரையும் புரிந்துகொள்ளமுடியவில்லை.

மகளைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்த்தியில்லை என்பது என்ற அபத்த வாக்கியத்தில் ஆரம்பிக்கும் படம் அதே தடத்தில் வஞ்சமில்லாமல் சர சரவெனப் பயணித்து ஓர் அபத்தக் கட்டுரையோடு முடிவடைகிறது. இடையிடையே ஏராளமான அசட்டு உச்சங்களும் மிகை உச்சங்களும் உண்டு.

பேரன்பு கொண்ட அப்பா, அதைவிட பாசம் கொண்ட மகள் என்ற கரு ஒருபக்கம்… கல்வியை வியாபாரமாக்கும் தனியார் பள்ளிகள் மீதான விமர்சனம் இன்னொரு பக்கம்… பணத்தை முக்கியமாகக் கருதாத எளிய கிராமத்தான் என்ற கரு இன்னொரு பக்கம்… உலகமயமாக்கலின் கோர முகத்தின் மெல்லிய தீற்றல் வேறொரு பக்கம் எனப் பல அரிய விஷயங்களைப் படத்தில் காட்சிப்படுத்தியிருப்பதாக இயக்குநர் பேட்டிகள் தந்தும் கோனார் நோட்ஸ்கள் எழுதியும் தமிழ் உலகுக்குச் சொல்லிக்காட்டினார். நல்ல உன்னதமான நோக்கங்கள்தான். ஆனால், படம் பார்த்தவர்களுக்கும் இந்த அம்சங்கள் படத்திலிருந்தே புரிய வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அல்லது குறைந்தபட்சம் படத்தின் டிக்கெட்டோடு இந்த கோனார் நோட்ஸையும் தந்திருந்தார் என்றால், ஓஹோ இதைத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறாரா என்று பார்வையாளர்கள் புரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கும். இனி வரும் படங்களில் ராம் முன்கூட்டியே இந்தத் திருப்பணியைச் செய்துவிட்டால் சிறந்த இயக்குநர் விருதோடு நல்லாசிரியர் விருதையும் சேர்த்தே தந்துவிடலாம்.

குழந்தை மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு தந்தைக்கு வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மதில்ச்சுவர் இல்லாத குளம் எந்த அச்சுறுத்தலையும் தந்திருக்காதா என்ற அடிப்படைக் கேள்வியில் இருந்து ஆரம்பிக்கிறேன். படத்தின் க்ளைமாக்ஸ் நிகழ்வுக்கு அவசியம் என்பதால், அந்தக் குழந்தையை வீட்டிலும் ஊரிலும் இருக்கும் அனைவரும் எந்தக் கண்காணிப்பும் இன்றி அந்தக் குளத்தில் ஆடிவிளையாட அனுமதிக்கிறார்கள் (அதிலும் அந்த கிராமத்துக் குளத்தில் துணி தோய்க்கும் ஒருவரையோ குளிக்கும் ஒருவரையோ உட்கார்ந்து கல் எறியும் ஒருவரையோ கூட நாம் பார்க்க முடிவதில்லை. ராமின் கனவுக் குளம் என்பதால் அவருடைய கதாபாத்திரங்கள் தவிர வேறு யாரும் நெருங்கவே முடியவில்லை போலிருக்கிறது). அதிலும் க்ளைமாக்ஸில் பூட்டியிருக்கும் வீட்டையே திறந்துகொண்டு அதிகாலையில் குழந்தை குளத்துக்கு வந்துவிடுகிறது. இவ்வளவு அலட்சியத்துடன் இருக்கும் ஒரு அப்பாவை எப்படிப் பேரன்பு கொண்டவனாக ஏற்றுக்கொள்வது?

இதுகூடப் பரவாயில்லை. படத்தின் டைட்டிலை நியாயப்படுத்தும்வகையில் அந்த அப்பா சொல்லும் அசட்டுக் கதை இருக்கிறதே… கேட்டாலே உடம்பைப் பதற வைக்கிறது. அதாவது, காட்டில் இறப்பவர்கள் மரங்களாகிவிடுவார்கள். மலையில் இறப்பவர்கள் மேகங்களாகிவிடுவார்கள். குளத்தில் இறப்பவர்கள் தங்க மீன்களாகிவிடுவார்கள் என்று சொல்கிறார். குழந்தை தங்க மீனாகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு குளத்துக்குள் குதித்துவிடுகிறது. பின் என்ன செய்யும்? இறுக்கமான பள்ளிக் கல்விக்கு மாற்றாக குழந்தையின் படைப்பூக்கத்தைத் தூண்டும் வகையில் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அப்படிச் சொல்லும் விஷயங்களைக் குழந்தைகள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்பதையும் யோசித்துத்தானே நாம் பேசவேண்டும். அதைத்தானே குழந்தை மீது அன்பு கொண்ட அப்பாக்கள் செய்வார்கள். ஆனால், இந்தப் படத்தில் வரும் நாயகனோ தடுப்பு இல்லாத குளத்துக்குக் குழந்தை தனியே வந்து போவது தொடர்பாக எந்த அக்கறையும் இல்லாதவனாக இருப்பதோடு, குழந்தை குளத்தில் குதித்து இறப்பதற்குத் தோதான கதையைச் சொல்பவனாகவும் இருக்கிறான்.

படத்திலேயே இப்படியான இரண்டு அபாயமான சம்பவங்கள் கிட்டத்தட்ட நிகழவும் செய்கின்றன. படத்தின் தொடக்கத்திலேயே குழந்தை தன்னந்தனியாக குளத்தில் தங்க மீனைத் தேடிக் கொண்டிருக்கிறது. பதறியபடியே ஓடிவரும் அப்பா என்ன செய்கிறார் என்றால், குளம் ஆழம் என்பதை குளத்தில் இறங்கிக் காட்டுகிறார். அதோடு குழந்தை இனிமேல் குளத்தில் ஆழமான இடத்துக்குச் செல்லாது என்று நிம்மதி அடைந்துவிடுகிறார். குழந்தையை சுதந்தரமாக எல்லா இடத்துக்கும் சென்றுவர அனுமதிக்கவேண்டும் என்பது அப்பாவின் நோக்கமாக இருந்தால் குளத்துக்கு அருகே வீடு இருக்கும் தந்தை முதலில் குழந்தைக்கு நீச்சல் அல்லவா கற்றுத் தரவேண்டும். அதுதானே அன்பான தந்தை செய்யும் முதல் செயலாக இருக்கும்.

இன்னொரு காட்சியில் இதுபோல் குழந்தை குளத்தில் இறங்கி விளையாடிக்கொண்டிருக்கையில் குழந்தையின் தாத்தா சரியான நேரத்தில் வந்து காப்பாற்றிவிடுகிறார். அப்போதுகூட அவர் குழந்தைக்கு நீ சொல்லிய கதை அவளுடைய உயிரையே பறிக்கவிருந்தது என்று சொல்லி மகனிடம் கோபப்படுகிறார். அதற்கு நாயகனோ, என் கதையைக் கேட்டு குழந்தை செத்தால் சாகட்டும். அவள் என் குழந்தைதானே என்று எகிறுகிறார். இதுதான் பேரன்பு கொண்ட தந்தையின் லட்சணமா?

இப்படிச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதோடு நின்றிருந்தால் கூடப் பரவாயில்லை. செய்ய வேண்டாததைச் செய்பவராகவும் நாயகன் உருவாக்கப்பட்டிருக்கிறார். குழந்தை ஒரு நாய்க்குட்டி வேண்டும் என்று ஆசையாகக் கேட்கிறது. அதன் விலையோ 25,000. இது தெரியவந்ததும் ஒரு அப்பா என்ன செய்வார்? அதிலும் 2000 ரூபாய் பள்ளிக்கு ஃபீஸ் கட்டவே முடியாத அப்பா அவர். மகளைக் கூப்பிட்டு அடிக்குரலில் அதெல்லாம் ரொம்ப விலை அதிகம். தெரு நாய்க்குட்டி ஏதாவது ஒன்றை வளர்த்துக்கொள். அல்லது விலை குறைந்த நாய் ஒன்றை வாங்கித் தருகிறேன் என்றுதானே சொல்வார். ஆனால், இந்த நாயகனோ செய்ய முடியாத, செய்ய வேண்டாத அந்தச் செயலுக்காகப் படாதபாடு படுகிறார். போதாத குறையாக, மனஸ்தாபத்தில் இருக்கும் குழந்தையைத் திருப்திப்படுத்த பரிசுகள் வாங்கித் தருவது சகஜம்தானே என்ற ஜஸ்டிஃபிகேஷன் வேறு. தேரோட்டத்துக்குப் போன குழந்தை தேர் பொம்மை வேண்டும் என்று கேட்டால் வாங்கித்தரலாம். தேரே வேண்டும் என்று கேட்டால்..? என்னதான் அதிஅன்பான அப்பாவாக இருந்தாலும் தலையில் ஒரு கொட்டு கொட்டித்தானே அந்தக் குழந்தையைச் சமாதானப்படுத்துவார். அதைவிட்டு விட்டு திருவிழா நிர்வாகக் கமிட்டியிடம் சென்று தேரை விலை பேசவா செய்வார். இப்படியான அதீத கதாபாத்திர உருவாக்கம் நாயகன் மீது அன்புக்கு பதிலாக எரிச்சலையே உருவாக்குகின்றன.

ஆயிஷா என்றொரு கதை. பலரும் படித்திருப்பீர்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி படு சுட்டியாக இருப்பாள். மாவட்ட நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்துப் படித்து ஆசிரியர்களுக்கே கற்றுக்கொடுப்பாள். அவர்களைக் கேள்விகளால் துளைத்து எடுப்பாள். 11-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தெரியாத கணக்கைக்கூட அவர்களுக்கு வெறுமனே சொல்லிக் கொடுப்பதோடு நிற்காமல், இம்போசிஷ்ன் போல் எல்லாருக்கும் எழுதிக் கொடுக்கும் அளவுக்கு படிப்பில் ஆர்வமானவள். சுருக்கமாகச் சொல்வதானால், அவள் ஒரு லட்சிய மாணவி. கல்வித்துறை எப்படி இருக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கே கற்றுக் கொடுக்கும் தகப்பன் சாமி. ஆனால், அந்தக் கதையில் என்ன நடக்கிறதென்றால், அந்த ஆயிஷா உடம்பு மரத்துப் போகும் மயக்க மருந்தை தானாகவே உடம்பில் செலுத்திக்கொண்டு இறந்துவிடுகிறாள். அதாவது ஆசிரியர்களின் பிரம்படியில் இருந்து தப்பிக்க அவள் அப்படிச் செய்துகொள்கிறாளாம்.

உண்மையில் இந்தக் கதை வெளியான 90களின் பிற்பகுதியில் பள்ளிகளில் மாணவர்களை அடிப்பது அறவே நின்றுபோய்விட்டிருந்தது. அதிலும் அப்படியான ஒரு பிரச்னைக்கு எந்தவொரு குழந்தையும் இப்படி ஒரு அபாயகரமான அசட்டுத்தனமான செயலை யதார்த்தத்தில் செய்ததே இல்லை. படைப்பூக்கம் மிகுந்த லட்சிய மாணவியான ஒருத்தி அப்படிச் செய்து இறந்துபோனதாகக் காட்டியதன் மூலம் ஆசிரியர் என்னதான் சொல்லவருகிறார். நாமக்கல் அன்கோவுக்கு மிகப் பெரிய துருப்புச் சீட்டு அல்லவா அது. இதனால்தான் நாங்கள் பாடத்தைத் தவிர வேறெதிலும் குழந்தையின் கவனம் குவிய விடுவதில்லை. க்ரியேட்டிவிட்டி என்று அவர்களுக்கு சுதந்தரம் தந்தால் இப்படித்தான் ஏடாகூடமாக எதையாவது செய்துகொள்வார்கள் என்று சொல்லிக் காட்ட ஒரு வாய்ப்பை அல்லவா உருவாக்கித் தருகிறார்.

படைப்பூக்கம் மிகுந்த குழந்தை மிகப் பெரிய சாதனைகளைச் செய்ததாகக் காட்டுவதுதானே பள்ளிகளிலும் படைப்பூக்க உலகின் கதவைத் திறந்துவிட வைக்கும். தன் கட்சிக்காரருக்குத் தானே தூக்குத் தண்டனையை வாங்கித் தரும்படியாகவா ஒரு வக்கீலின் வாதம் இருக்கவேண்டும். இதே அசட்டுத்தனம்தான் ராமிடமும் வெளிப்படுகிறது.

அடுத்ததாக, தனது உன்னத கருத்துகளுக்காக இவர் அமைத்திருக்கும் திரைக்கதையைப் பார்த்தால், ராம், நீங்கள் கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுகொள்ளுங்களேன் என்று கையெடுத்துக் கெஞ்சவேண்டும் போலிருக்கிறது. உலகமயமாக்கலினால் பாதிக்கப்பட்ட ஒரு தொழிலைக் காட்சிப்படுத்த மனதுக்குள் நினைத்திருக்கிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் தொழில் என்ன தெரியுமா… பாத்திரத்துக்கு பாலிஷ் போடும் தொழில். டவுனில் இருக்கும் கடைக்காரர்கள் தாங்களே பாலிஷ் போட ஆரம்பித்ததால் கிராமத்தில் இந்தத் தொழிலைச் செய்தவர்கள் நசிவடைய ஆரம்பித்துவிட்டார்களாம். அப்படியே நடந்தாலும் அது உள்ளூர் போட்டியால் நடக்கும் மாற்றம்தானே. இதில் உலகமயமாக்கல் என்ன பாவம் செய்தது? பன்னாட்டு கம்பெனியா பாத்திரத்துக்கு பாலிஷ் போட ஆரம்பித்துவிட்டிருக்கிறது. காளி மார்க் சோடாவை கொக்ககோலா அழித்தது. ஆட்டுக்கல், அம்மிக் குழவிகளை உள்ளூர் கிரைண்டரின் வருகைதானே இடம்பெயர்த்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என நவீனத்துவத்தின் வருகையால் நடந்த ஒரு மாற்றம் தானே இது. அதுபோல்தானே பாத்திரங்களுக்கான கிராமத்து பாலீஷ் தொழிலை டவுன் எந்திரம் இடம்பெயர்ப்பது என்பதும். மேலும் படத்தில் சொல்லிக் காட்டுவதுபோல் இந்த பாலிஷ் தொழிலானது வயதாகி இறக்கும் நிலையில் இருக்கும் பாரம்பரியத் தொழில் ஒன்றும் கிடையாதே… விஷயம் என்னவென்றால், தன் குழந்தைக்கு சில்வர் மேனாக இருக்க விரும்பி அந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். உலகமயமாக்கல், பன்னாட்டு நிறுவனம் என அதில் அரசியல் பேச ஆரம்பித்ததுதான் அபத்தமாகப் போய்விட்டிருக்கிறது.

இதுதான் இப்படியென்றால், குழந்தைக்கு ஒரு டீச்சரின் மீது மிகுந்த நேசம் ஏற்படுகிறது. அந்த டீச்சரின் பெயரையே தனக்குச் சூட்டிக் கொண்டு மகிழ்கிறது. அந்த ஆசிரியரைத் தன் தாயைவிட அதிகமாக நேசிக்கிறது. இதற்கு ராம் அமைத்திருக்கும் திரைக்கதை இருக்கிறதே… அப்பப்ப்பா… அதாவது, பள்ளியில் பிரேயர் நடக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் இறந்துவிட்டதால் பள்ளிக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கிறார்கள். இந்தக் குழந்தை கைதட்டி மகிழ்கிறது. உடனே வகுப்பாசிரியர் அந்தக் குழந்தையைக் கண்டித்து முட்டிக்கால் போடும்படி தண்டனை கொடுக்கிறார். போதாதென்று உன் அப்பா செத்தாலும் இப்படித்தான் பண்ணுவியா என்று படு கொடூரமாகக் கேட்கிறார். உடனே நம் லட்சிய ஆசிரியர், அறைக்குள் நுழைந்தபடியே இப்படியா குழந்தையிடம் பேசுவார்கள் என்று சொல்லி வகுப்பாசிரியரைக் கண்டித்து அந்தக் குழந்தையை எழுந்து தன் வகுப்பறைக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறார். இவ்வளவுதான் செய்கிறார். அந்தக் குழந்தைக்கு வானில் இறந்து இறங்கி வந்த தேவதைபோல் அந்த ஆசிரியர் ஆகிவிடுகிறார். மாவட்ட ஆட்சியாளர் இறந்ததெற்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்களா என்ற கேள்விகளையெல்லாம் கேட்டால் நமக்குத்தான் மனம் புண்ணாகும் என்பதால் விட்டுவிடுவோம். வேறு வகுப்பின் ஒரு ஆசிரியர் ஒரே ஒரு நாள் அன்பாக ஒரு வார்த்தை பேசியதும் அந்த ஆசிரியரையே தன் ஹீரோவாக ஒரு குழந்தை நினைத்துக்கொண்டுவிடுமா… அன்பு தேடிப் பாலையில் அலையும்போது ஒற்றை மழைத்துளி பேரின்பத்தைத் தரும் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் அந்த ஆசிரியரை, அவருடைய கருணையை இன்னும் விரிவாக அல்லவா காட்சிப்படுத்தியிருக்கவேண்டும். நாலைந்து தூரிகைத் தீற்றல்களில் ஒரு உருவத்தைக் கொண்டுவருவது என்பது வேறு. ரூல்ட் நோட்டில் மார்ஜின் லைனைப் போட்டுவிட்டு பார்வையாளனையே முழு ஓவியத்தை வரைந்து கொள்ளச் சொல்வது என்பது வேறு.

அடுத்ததாக, தமிழ் சினிமாவின் க்ரானிக் நோயான மிகை. சினிமாவுக்கு நாடகீயம் தேவைதான். ஆனால், அதிலும் ஒரு கலை நயம் இருக்கவேண்டும். கட்டுப்பாடு இருக்கவேண்டும். இடைவேளைக்குப் பின்வரும் ஒரு காட்சியில் குழந்தையை அவளுடைய அம்மா ஒரு சடங்கு வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். இதற்கு முந்தின காட்சியில்தான் இரண்டாம் வகுப்பில் ஃபெயிலான அந்தக் குழந்தைக்கு மூன்று நாளில் மறு தேர்வு எழுதி அதில் பாஸானால்தான் பள்ளியில் சேர்த்துக்கொள்வோம் என்று சொல்லியிருப்பார்கள். அம்மாவும் குழந்தையை வீட்டுக்குள் பூட்டி வைத்து படிக்கச் சொல்லியிருப்பார். குழந்தை படிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கவே, ஒழுங்கா மரியாதையா படி. அப்பத்தான் சடங்கு வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போவேன் என்று சொல்வாள் அம்மா… என்ன இழவுடா இது… பெயிலான குழந்தைக்கு மறு தேர்வு நடக்கும் முக்கியமான நேரத்திலா சடங்கு வீட்டுக்கு சுற்றுலா போவார்கள்.

இதுதான் இப்படியென்றால், அந்தச் சடங்கு வீட்டில், சிறு வயதிலேயே குழந்தைகள் வயதுக்கு வந்துவிடுவதாகச் சொன்னதும் சாப்பாட்டைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு எழுந்துவந்துவிடுவாள் அம்மா. குழந்தை வயதுக்கு வருவது பற்றி  வெகுளியாகக் கேட்கவே ஹிஸ்டீரியா வந்தவர்போல் தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுகிறார். கேட்டால், தன் குழந்தையும் சிறு வயதிலேயே வயதுக்கு வந்துவிட்டால் படிக்க முடியாமல் போய்விடும் என்ற பதற்றமும் பயமும் அவரை அப்படி பேய் போல் நடந்துகொள்ளவைக்கிறதாம். கர்த்தரே… இவர்கள் செய்வது என்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். மன்னித்தருளும்.

இதுபோல் ரெயின் மேக்கர் என்ற புல்லாங்குழலைக் கண்டுபிடிக்கும் காட்சியாக படத்தில் ஒன்று வருகிறது. அதாவது, தன் செல்லக்குழந்தை கேட்கும் வோடஃபோன் நாய்க்குட்டியை வாங்க நாயகனுக்கு 25,000 ரூபாய் உடனடியாகத் தேவைப்படுகிறது. ஒரு கலைப்பொருள் சேகரிப்பாளர் அரிய பழங்குடிப் புல்லாங்குழல் ஒன்றைக் கண்டுபிடித்துக் கொண்டுவந்து தந்தால் 25,000 ரூபாய் தருகிறேன் என்று சொல்லியிருப்பார். கூகுளில் தேடினால் எளிதில் கிடைத்திருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், நாயகன் கால்நடையாகவே அந்தப் புல்லாங்குழலின் படத்தை கண்ணில் தென்படுபவர்களிடமெல்லாம் காட்டி இதைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டுத் தேடுவான். ஐம்பது வருடங்களுக்கு முந்தைய படங்களிலும் காணாமல் போனவர்களை இப்படிப் புகைப்படத்தைக் கையில் தூக்கிக்கொண்டு திரிந்துதானே கண்டுபிடிப்பார்கள். எனவே, இன்றும் அப்படியே தேடுகிறார் நாயகன்.

அதோடு இந்த ரெயின் மேக்கர் என்ற புல்லாங்குழலானது உண்மையில் கேரளப் பழங்குடிகளிடம் இருந்திருக்கவில்லை. அப்படியே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் கலைப் பொருள் சேகரிப்பாளருக்கு அதன் புகைப்படமும் பழங்குடிகளிடம் இருக்கும் விவரமும் தெரிந்திருக்கும் நிலையில் அது எந்த மலைக்கிராமத்தில் இருக்கும் என்பதும் தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம். சிவப்புத்தோலுடன் போய்க் கேட்டுப் பார்த்துக் கிடைக்காமல் போயிருக்கும் என்பதால், உள்ளூர் எடுபிடிகளின் உதவியை அவர்கள் நாடியிருக்கவேண்டும். எனவே, எந்த கிராமம் என்பதைத் தேட வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால், இயக்குநர் ராமின் மூளை இதை வைத்து ஓர் அதி அபாரமான ஒரு காட்சியை யோசித்துவிட்டிருப்பதால், கதையின் நாயகன் ஊரெல்லாம் தேடித் தேடி அலைகிறான். கடைசியில் அதிர்ஷ்டவசமாக ஒரு வெள்ளைக்கார தம்பதி லேப் டாப்பில் அந்த ரெயின் மேக்கர் பற்றிய வீடியோவைப் பார்த்துக் கொண்டிருப்பதை நாயகன் பார்த்துவிடுவான். இந்த இடத்தில் நீங்களோ நானோ இருந்தால் என்ன செய்வோம். நம்முடைய ஓட்டை ஆங்கிலத்தில் ஐ வான்ட் திஸ் பீஸ்… ஃபுல் லாங் குழல்… வேர் கெட் என்று பேசி விஷயத்தைத் தெரிந்து கொண்டிருப்போம். ஆனால், தமிழ் திரை நாயகன் அல்லவா… எனவே லேப் டாப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பயந்து மிரளும் படியாகத் தன் தாடி மண்டின முகத்தை பின்பக்கமாக இருந்து அவர்கள் முன் நீட்டுகிறான். அவர்கள் பயந்து ஓடிப்போகவே இவனும் துரத்துகிறான். அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏறவே இவனும் பாய்ந்து ஏறி லேப் டாப்பைப் பிடுங்கிக் கொண்டு ஓடுகிறான். இப்படியெல்லாம் செய்தால் திருடன் என்று அடித்து நொறுக்கிவார்களே என்று அவன் மனத்தில் தோன்றவே இல்லை. ஏனென்றால், அவன் மனத்தில் குழந்தையின் மீதான பேரன்பும் அந்தக் குழந்தை கேட்டதை வாங்கிக் கொடுக்கத் தேவைப்படும் புல்லாங்குழலும் மட்டுமே நிறைந்திருக்கிறதாம்.

சரி இதுதான் இப்படியென்றால் அந்த புல்லாக்குழல் இருக்கும் பழங்குடி கிராமத்தைத் தேடி நாயகன் புறப்படும் சாகசப் பயணம் இருக்கிறதே… இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது. இப்படி அசட்டு மிகைக் காட்சிகளை அமைத்துவிட்டு நாங்கள் மேட்டுக் குடிபோல் இழவு வீட்டில் நாசூக்காக கர்ச்சீப்பால் கண்களை ஒற்றிக் கொள்பவர்கள் அல்ல. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழும் வர்க்கத்தைச் சேர்ந்த்வர்கள். எனவே எங்கள் எல்லா உனர்ச்சி வெளிப்பாட்டிலும் மிகை இருக்கத்தான் செய்யும் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. இத்தகைய படு மட்டமான நியாயப்படுத்தல்கள் பல காலமாகத் தமிழில் வேரூன்றியிருக்கிறது. கலையழகுடன் படமெடுக்கத் தெரியாமல் இருப்பதை மறைக்கச் சொல்லப்படும் மோசமான வாதம் இது.

உண்மையில் ஒப்பாரி போன்ற உணர்ச்சிமய நேரங்கள் நீங்கலாக கடை., இடை நிலை சாதியினரும் உணர்வுகளை படு நுட்பமாக வெளிப்படுத்தும்  இயல்பு கொண்டவர்க்ளே. பூமணி, சோ தர்மன், பாமா போன்றவர்களில் ஆரம்பித்து ஜாதிக் கதாபாத்திரங்களை உரிய அடையாளங்களுடன் உயிர்ப்புடன் உலவவிட்டவர்களின் கதைகளை எடுத்துப் பார்த்தால் அந்தப் பிரிவு மக்கள் எவ்வளவு நுட்பமாக விஷயங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பது புரியும். ஐந்து நட்சத்திர விடுதியில் க்வாட்டர் அடிச்சுக் குப்புறப் படுத்தபடி எழுதிய காட்சிகளை மண்ணின் மணம் கமழும் காட்சிகள் என்று சொல்லிக் கொண்டுவந்தால், தமிழ் சமூகமே எட்டி உதைக்கத்தான் செய்யும். காலம் இந்தக் குப்பைகளை நிதானமாக அதன் இடத்துக்குத் தள்ளி வந்திருப்பதைப் பார்த்த பிறகுமா இந்த மிகை மீது இத்தனை காம வெறி?

குளத்தில் மூழ்கி இறக்க இருந்த பேத்தியைக் காப்பாற்றிய தாத்தா, பொறுப்பில்லாத தன் மகனை அடித்துவிடவே ரோஷம் கொள்ளும் மகன் வீட்டை விட்டு ஓடிப் போய்விடுகிறான். எங்கு போனான் என்ன ஆனான் என்பதே சில நாட்கள் யாருக்கும் தெரியவில்லை. பள்ளி ஃபீஸுக்கு 2000 ரூபாய் சம்பாதித்துவர போயே போய்விடுகிறான். மாதக் கணக்கில் இரவும் பகலும் உழைத்து ஓடாகத் தேய்கிறான். இடையில் காய்ச்சல் வேறு வருகிறது. பயங்கரமாக இரும வேறு செய்கிறான். அதற்குள் காச நோயோ வந்துவிட்டதோ என்று பயந்துவிடேன். அப்படி அவர் உழைத்து ஓடாகத் தேய நம்பர், ஆறு, விவேகானந்தர் தெரு துபாய் குறுக்குத் தெரு, துபாய் மெயின் ரோடு, துபாய் பஸ் ஸ்டேன்ட் அருகில் போய்விட்டாரா என்றால் அதெலாம் இல்லை. ஒரு மாலையில் ரயில் ஏறினால் மறுநாள் காலையில் வீட்டை அடைந்துவிட முடியுயக்கூடிய கொச்சினுக்குத்தான் போயிருக்கிறார்.

பேரன்பு கொண்ட அப்பாவுக்குக் குழந்தையைப் பார்க்காமலேயே எப்படி இத்தனைநாள் இருக்க முடிகிறது? குழந்தைக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுத்தானே சில பல ஆண்டுகளாக சில்வர் மேன் வேலையில் இருந்து வந்திருக்கிறார். அந்த வைராக்கியத்தை பார்வையாளர்களுக்காக எதற்காக மாற்றிக் கொள்ளவேண்டும்? அவனுடைய அப்பா இதற்கு முன் திட்டியிருக்கவே மாட்டாரா? சரி அப்படியே அப்போதுதான் ரோஷம் வந்தது என்றாலும் குழந்தையைப் பார்க்காமலே இருக்கும்படி அப்படி என்ன ஆத்திரம். வாரத்துக்கு ஒரு தடவை வந்துபோகவேண்டியதுதானே. குழந்தை வோட போன் நாயைக் கேட்பதும் அதற்கான பணத்தைத் தேடி அலைவதும் சிறிது காலம் கழிந்த பிறகுதானே நடக்கிறது.

இதில் இன்னொரு பலவீனம் என்னவென்றால், நாகர்கோவிலில் நடக்கும் கதையில் ஒரு கதாபாத்திரம் கூட நாக்ர்கோவில் தமிழைப் பேசவில்லை. கேரளாவில் கதை நடக்கும்போது மலையாளி கதாபாத்திரங்கள் சிறப்பாக மலையாளத் தமிழில் பேசுகிறார்கள். நாகர்கோவில் தமிழிலும் கொஞ்சம் மலையாள வாசனையைக் கலந்திருந்தால் கதையின் நம்பகத்தன்மையும் பார்வையாளர்களுக்கான ஈர்ப்பும் அதிகரித்திருக்குமே. கே.எஸ்.ரவிக்குமார் கூட கோயம்புத்தூர் கதாபாத்திரங்களை கோயம்ம்புத்தூர் தமிழில் பேச வைப்பாரே… அந்த குறைந்தபட்ச நேர்த்திகூட இல்லாமல் படமெடுத்துவிட்டு நான் மட்டுமே கலைஞன் என்று மார் தட்டித் திரிய வெட்கமாக இல்லையா? அதிலும் நாகர்கோவிலில் முதியவர்களைப் பெரிசு என்றா அழைப்பார்கள். பாட்டியை ஆச்சி என்றா அழைப்பார்கள். அம்மாவை அம்மே (அம்மை) என்றும் அப்பாவை அச்சன் என்றும் பாட்டியை அம்மச்சி என்றும் அழைப்பதாகக் காட்டினால்தானே அது டிபிக்கல் நாகர்கோவில் வாசனையைக் கொண்டுவரும்.

அதுபோல் வசனங்களில் இருக்கும் அபத்தத்தைப் பற்றிப் பேசுவதானால் பேசிக்கொண்டே செல்லலாம். குழந்தைக்கு பள்ளிக்கு ஃபீஸ் கட்ட 2000 பணம் வேண்டுமென்று நண்பனிடம் கதாநாயகன் கடன் கேட்கிறான். அவனோ பணம் இல்லை என்று சொல்வதோடு நிறுத்தாமல், உன் குழந்தையை ஃபீஸே கேட்காத அரசு பள்ளியில் சேரு என்று ஆலோசனை சொல்வான். உடனே நாயகனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும். உடனே என்ன சொல்வான் தெரியுமா… பணம் இல்லாதவங்கன்னா முட்டாள்னு நினைக்காதீங்கடா… நண்பன் சொன்ன அறிவுரையில் முட்டாளாக நினைக்கும் தொனி எங்கே இருக்கிறது? பணம் இல்லாதவனுக்கு புள்ளை மேல பாசம் இருக்ககூடாதா… நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கணுங்கற ஆசை ஏழைகளுக்கு இருக்ககூடாதா என்றுதானே கேட்டிருக்கவேண்டும். முட்டாள் என்ற வார்த்தை இங்கு எதற்கு வரவேண்டும். அப்பா குதிருக்குள் இல்லையென்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருக்க என்ன அவசியம்?

இன்னொரு இடத்தில் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழியை வைத்து சொற் சிலம்பம் ஆடுவார் பாருங்கள். அந்தக் காக்காவே தூக்கில் தொங்கியிருக்கும் அதைக் கேட்டால். அதாவது, குழந்தைக்கு டேன்ஸ் ஆடத் தெரியவில்லை என்று ஆசிரியர் திட்டியிருப்பார். அப்பாவோ, என் மகளுக்கு ஆடத் தெரியாதுன்னு உங்களுக்குத் தெரியுமா… அவ நன்றாக ஆடுவாள் என்று சொல்வார். எல்லா அப்பாவும் இப்படித்தான் சொல்வாங்க. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று ஆசிரியர் கடிந்துகொள்வார். உடனே, நாயகன் வெகுண்டெழுந்து காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு காக்கா வந்து உங்க கிட்ட சொல்லிச்சா என்று ஆவேசமாகக் கேட்பார்.

இந்த இடத்தில் இந்தக் கேள்வி எதற்காக வருகிறது? என் மகள் திரைப்படப் பாடல்களுக்கெலாம் நன்றாக ஆடுவாள். நான் என் மகளுக்கு நிறைய நடனப் பாடல்களின் கேசட் வாங்கிக் கொடுத்து பயிற்சி கொடுத்திருக்கிறேன். அவள் நன்றாக ஆடுவாள். என் மகள் என்பதற்காக நான் சொல்லவில்லை என்று எதையாவதுதானே சொல்லியிருக்கவேண்டும். காக்கா வந்து சொல்லிச்சா என்று கேட்பவரிடம் எந்தப் பழமொழியையும் சொல்லவே முடியாதே… பாம்பின் கால் பாம்பறியும் அப்படின்னு சொன்னா பாம்பு வந்து சொல்லிச்சா என்பார்… ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் அப்படின்னா மாடு வந்து சொல்லிச்சா என்று கேட்பார் போலிருக்கிறது. ஒரு பழமொழியை எப்படிப் பயன்படுத்தவேண்டும்… எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதுகூட தெரியாமல் என்னதான் எம்.ஏ. தமிழ் இலக்கியம் படித்து முடித்தாரோ தெரியவில்லை.

ஹேய்… இட்ஸ் பீன் சோ லாங்… வேர் ஹேவ் யு பீன்… ஓகே. ஹேவ் அ குட் டே… சீ யூ சூன்… இந்த உரையாடலைக் கொஞ்சம் பாருங்கள். தொலைபேசியில் ஒருவர் இன்னொருவருடன் பேசும் வசனங்கள் இவை. எதிர்முனையில் இருப்பவரை நீண்ட காலத்துக்குப் பிறகு தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. நீண்ட நாள் கழித்துப் பேசுபவரிடம் நாலைந்து வார்த்தைகள் கூடுதலாகப் பேசுவதுதானே இயல்பு. காட்சிப்படி குறுகிய உரையாடல் இடம்பெற வேண்டிய இடத்தில் நீண்ட நாள் நண்பருடன் பேசும் பேச்சு எதற்கு? ஆஸ் ஐ ஆம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் ப்ளீஸ் க்ராண்ட் மீ டூ டேய்ஸ் லீவ் என்பதைத் தாண்டி நமக்கு எதுவும் தெரியாதென்றால் எந்த விஷப்பரீட்சையும் எடுக்காமலேயே இருந்திருக்கலாமே… அல்லது ஒரு குறுகிய உரையாடலைத் தமிழில் எழுதிவிட்டு அதை ஆங்கிலத்தில் மொழி மாற்றிக் கொண்டிருக்கலாமே… எதற்கு தமிழ் எம்.ஏ. ராம், பீட்டராக முயற்சி செய்யவேண்டும்?

அதிலும் இயக்குநர் வடிவமைத்திருக்கும் கதாபாத்திரத்தின் மன உலகை அவர் கோனர் நோட்ஸ் போட்ட பிறகும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பெரும் செல்வந்தர் வீட்டு ஏழையாகக் கதாநாயகனைக் காட்சிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? ஒரு பரம ஏழை தன் மகளை உருகி உருகி நேசிப்பதையும் இந்த உலகம் ஏளனம் செய்யத்தானே செய்யும். உன் புள்ளைக்கெல்லாம் பெரிய பள்ளிக்கூடத்துல படிப்பு எதுக்கு… வீட்டு வேலைக்கு அனுப்பினா நாலு காசாவது கிடைக்குமே என்று வார்த்தைகளில் தேன் தடவி நஞ்சைப் புகட்டும் சமூகம்தானே இது. அதுதானே பார்வையாளர்களுக்கும் நாயகன் மேல் கூடுதல் கரிசனத்தைக் கொண்டுவரும். எதற்காகப் பணம் இருக்கறவங்க மத்தியில பணம் இல்லாமல் தவிக்கும் ஒருவரை கதையின் நாயகனாக தேர்ந்தெடுக்கவேண்டும். அவனுடைய உணர்வுகள் எல்லாமே வறட்டுப் பிடிவாதமாகவும் வீண் கவுரவமுமாகத்தானே இருக்கின்றன. அவன் ரொம்பவும் கஷ்டங்களை அனுபவிப்பதாகக் காட்டும்போது அது நம்மைத்தொடுவதே இல்லையே. குடையை மடக்கிக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு செருப்பைத் தலையில் மாட்டிக்கொண்டு நடக்கும் ஒருவன், வெய்யில் என்னை எப்படியெல்லாம் வாட்டுகிறது என்று நம் முன் நின்று கதறினால் நமக்குப் பரிதாபமா வரும். எரிச்சல்தானே வரும்.

இப்படிப் படம் முழுக்க செய்ய வேண்டியதைச் செய்யாமலும் செய்ய வேண்டாததைச் செய்தபடியும் தந்தைப் பாசம் என்ற பெயரில் நம்மை வெகுவாகச் சோதித்துவிட்டு, கடைசியில் ஒரு பிரம்மாஸ்திரத்தை வீசுவார் பாருங்கள்… மர்மம் கலங்கிப் போய்விடும். அதாவது, அப்பாவிடம் வறட்டுக் கோபப்பட்டு வீட்டை விட்டு ஓடிப் போய், குழந்தையின் அதிகப்படியான ஆசை ஒன்றை நிறைவேற்றுகிறேன் என்ற போர்வையில் காடு மலையெல்லாம் ஏறி கஷ்டப்பட்டுவிட்டு வீடு திரும்புவார். சொன்ன நேரத்தில் அப்பா நாய்க்குட்டியுடன் வரவில்லையென்றதும் அந்தக் குழந்தை அப்பா ஆசைகாட்டியபடியே குளத்துக்குள் குதித்து தங்கமீனாக ஆக முடிவெடுக்கிறது.

க்ளைமேக்ஸ் பரபரப்புகளுக்குப் பிறகு குழந்தையைக் காப்பாற்றிவிடுகிறார். தான் சொன்ன கதையும் குழந்தையின் இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொள்ளாமல், குழந்தையைப் ஃபெயிலாக்கின பள்ளி மீதும், பணம் சம்பாதிக்கத் தெரியாத தன்னைத் திட்டிய குடும்பத்தினர் மீதும் பழியைத் தூக்கிப் போடுகிறார். ஃபீஸே கேட்காத அரசுப் பள்ளியில் குழந்தையைச் சேர்க்கிறார். சொல்லிவைத்தாற்போல் லட்சிய ஆசிரியையும் அந்த அரசுப் பள்ளியிலேயே சேர்ந்துவிட்டிருக்கிறார். திருமணத்துக்காக தனியார் பள்ளிப் பணியில் இருந்து நின்றவர், அரசுப் பள்ளியில் எப்படியோ சேர்ந்துவிட்டிருக்கிறார். அவர் இருப்பதால், அந்தக் குழந்தையும் நன்றாகப் படித்து கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றுவிடுகிறது. எப்படிச் சொல்லிக் கொடுத்தார்… குழந்தையின் கற்றலில் இருந்த குறைபாடு எப்படித் தீர்ந்தது என்பது பற்றியெல்லாம் ஒரு காட்சியும் கிடையாது. ஏழைக் கதாநாயகன் ஒரே பாடலில் கோடீஸ்வரன் ஆகிவிடுவதைப் பார்த்து வளர்ந்த கூட்டம்தானே… இந்த லட்சணத்தில் நான் உலக சினிமா எடுத்துவிட்டிருக்கிறேன் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. உலகம் என்பது ராமின் குடும்பத்தினர் வாழும் வீட்டில் ஆரம்பித்து உதவியாளர்கள் படுத்துறங்கும் ஆஃபீஸில் முடிவடையும் ஒன்றா என்ன?

மெதுவாகக் கற்றுக் கொள்ளும் குணம் கொண்ட ஒரு சிறுமி… அந்தக் குழந்தையைக் கட்டம் கட்டித் தாக்கும் பள்ளி… குழந்தையின் எதிர்காலம் குறித்து அதீத பயம் கொள்ளும் குடும்பம்… குழந்தையின் மீது நம்பிக்கையும் பாசமும் கொண்ட தந்தை… அருமையான கதை முடிச்சு அல்லவா? பள்ளியில் குழந்தையை நடத்தும் விதம் குறித்து தொடர்ந்து சண்டை போடுகிறான். ஒருகட்டத்தில் நாங்கள் சொல்லித் தருவது தவறு என்று தோன்றினால் நீங்களே சொல்லிக் கொடுங்கள் என்று பள்ளியில் சொல்கிறார்கள். அப்பாவும் அந்த சவாலை ஏற்றுக்கொள்கிறார். குழந்தையை எந்தப் பள்ளிக்கும் அனுப்பாமல் வீட்டில் வைத்தே சொல்லித் தருகிறார். அக்கம் பக்கத்தில் இருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று வரலாறு கற்பிக்கிறார். வயல் வெளிக்கு அழைத்துச் சென்று தாவ்ரவியல் கற்றுத் தருகிறார்.

கோவிலுக்கு அழைத்துச் சென்று கலைகளையும் தமிழையும் பக்தியையும் பணிவையும் கற்றுத் தருகிறார். தேவாலயத்துக்கும் மசூதிக்கும் அழைத்துச் சென்று மத நல்லிணக்கத்தைக் கற்றுத் தருகிறார். கிராமத்தில் இருக்கும் பாட்டிகளிடம் அழைத்துச் சென்று பாரம்பரிய மருத்துவம் கற்றுத் தருகிறார். தச்சுக்கூடத்துக்கு அழைத்துச் சென்று மரவேலை கற்றுத் தருகிறார். சுற்றுப்புறங்களில் நடக்கும் கைவினைத் தொழில்களை அறிமுகம் செய்துவைக்கிறார். கிராமப்புறங்களில் நிலவும் சாதிய ஒடுக்குதல்களைச் சொல்லிக் காட்டி சக மனிதர்களுடன் அன்பாக நடந்துகொள்ளவேண்டும் என்று கற்றுத் தருகிறார்.

இப்படியாக பத்தாம் வகுப்பு வரை தன் குழந்தைக்குத் தானே ஆசிரியராக இருந்து பாடங்களோடு பல நல்ல விஷயங்களைச் சொல்லித் தருகிறார். இதனால் குடும்பத்தினருடன் சண்டைகள், பணியிடத்தில் சிக்கல்கள், நண்பர்களுடன் உரசல்கள் ஏற்படுகின்றன. எல்லாவித இழப்புகளையும் அவமானங்களையும் தாங்கிக்கொண்டு குழந்தையைப் படிக்கவைக்கிறார். பத்தாம் வகுப்பு மாநிலத் தேர்வு வருகிறது. குழந்தை மாவட்ட அளவில் முதலிடம் வருகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பரிசு கொடுக்கிறார்கள். நாமக்கல் அன்கோ பிரதிநிதி அந்தக் குழந்தையின் மேல் நிலைப் படிக்குப்பான முழு செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக ஏக கரகோஷத்துக்கு நடுவே சொல்கிறது. வேறு பல நிறுவனங்களும் குழந்தைக்கு உதவ முன்வருகின்றன.

குழந்தையோ நிதானமாக, தாய் மொழியில் இல்லாத கல்வி, மனப்பாடத்தையும் மதிப்பெண்ணையும் மட்டுமே இலக்காகக் கொண்ட கல்வி, தேவையற்ற நெருக்கடிகள், அநியாயக் கட்டணம் என அவர்களுடைய கல்வியில் இருக்கும் குறைகளைச் சொல்லிக் காட்டிவிட்டு, நான் என் கல்வியை ஓர் ஆசிரியரிடம்தான் பெற விரும்புகிறேன்… வியாபாரியிடம் அல்ல என்று சொல்லி தந்தையின் கையைப் பிடித்தபடி அந்த அரங்கை விட்டு கம்பீரமாக வெளியேறுகிறது. அதுவரை அவமானப்படுத்திய குடும்பத்தினரும் நண்பர்களும் தலைகுனிந்து நிற்கிறார்கள் என படத்தை எடுத்திருந்தால் அது தந்தைப் பாசத்தையும் வியாபாரக் கல்வி மீதான விமர்சனத்தையும் உருப்படியாக வைத்த படமாக வந்திருக்கும். என்ன செய்ய? தங்க மீன் என்ற கவித்துவ படிமமும் மலையேறும் சாகசங்களும் பொருள் வயிப் பிரிவின் சோகங்களும் (?) சேர்ந்து ராமைக் குழப்பியடித்திருக்கின்றன.

உலக விழாக்களில் பங்கு பெற்றது குறித்தும் புலம் பெயர் சொந்தங்கள் வழங்கும் சர்வதேச விருதுகள் பெற்றது குறித்தும் இந்திய அரசின் விருது பெற்றது குறித்தும் ராமுக்கு பெருமிதங்கள் இருக்கக்கூடும். ஆனால், உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது ராம். ஊர்க்குருவி வந்து யாரிடமும் சொல்லாமலேயே எல்லாருக்கும் தெரிந்த விஷயம் இது. நீங்கள் ஊர் குருவி வந்து சொன்னால்தான் நம்புவேன் என்று அடம் பிடித்தால் உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

ஆமென்…