காமக்கடும்புனல்

2008-11-22_75538_FIghZ4xkdG3SbYXu1aகாதல் அணுக்கள் / 3  

(அதிகாரம் – புணர்ச்சிமகிழ்தல்)

 குறள் 1101:

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.

 

விழி செவி நாசி நாவு

1¾ சதுர மீட்டர் தேகம்

என எல்லாவற்றுக்கும்

போதை ஏற்றுகிறாள்.

 

*

 

குறள் 1102:

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து.

 

முள் முள்ளெடுக்கும்

இவள் அணைப்பினில்

இவள் நினைவுகளை

எரிக்க‌ முயல்கிறேன்.

 

*

 

குறள் 1103:

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.

 

வைகுண்டம் கைலாயம்

இந்திரலோகம் சொர்க்கம்

எங்கேனும் கண்டதுண்டா

அவள் மடிதுயிலும் சுகம்!

 

*

 

குறள் 1104:

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்.

 

நீங்கச் சுடும் அருகில்

நெருங்கிடக் குளிரும்

சுவாரஸ்ய விசித்திரம்

இந்தக் கன்னிச் செந்தீ.

 

*

 

குறள் 1105:

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்.

 

எந்தப்பூவை நினைத்து

உனைத் தீண்டினாலும்

அந்தப்பூவின் வாசமென‌

மலர்ந்து கிடக்கிறாயடி!

 

*

 

குறள் 1106:

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்.

 

ஒவ்வொரு ஸ்பரிசத்திலும்

புதிய‌தாய்ப் பிரசவிக்கிறாள்

என்னை – அவள் தேகமென்ன

அமிர்தம் அடைத்த கலசமா!

 

*

 

குறள் 1107:

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு.

 

ஒரு ஜீவகாருண்யம் போல்

ஒரு விருந்தோம்பல் போல்

சுகமான சுமுகமான செயல்

ஒரு பெண்ணைக் கலத்தல்.

 

*

 

குறள் 1108:

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.

 

இவளை இனிக்க இனிக்க

இறுக்கி அணைத்து நிற்க

மூச்சுத் திணரும் காற்று

முனை மழுங்கிய முலை.

 

*

 

குறள் 1109:

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்.

 

ஒரு சண்டை ஒரு சமாதானம்

என்றும் மறவாத நீள்புணர்ச்சி

காதலெனும் நெடுந்தொடரின்

அவஸ்தையான கதைசுழற்சி.

 

*

 

குறள் 1110:

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.

 

தொட்டனைத்தூற

பாமரத்தனம் புரியும்

தொட்டணைத்தூர‌

காதல் நிறம் தெரியும்.

 

*******

அற்புதம் அம்மாவே… உங்களை ஆதரிக்க முடியும்; உங்களை வைத்து நடக்கும் அரசியலை எப்படி ஆதரிக்க முடியும்?

imagesமரண தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசியல்/கொள்கை சம்பந்தப்பட்ட கைதிகளுக்கானாலும் சரி… சாதாரண கைதிகளுக்கானாலும் சரி… ஏனென்றால், அரசியல் விஷயத்தில் எந்தத் தரப்பின் பக்கமும் முழு நியாயம் இருப்பதில்லை.  சாதாரண கைதிகளோ ஒரு உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டிருப்பார்கள். அவர்களுக்குத் திருந்த ஒரு வாய்ப்பு தரவேண்டும். இந்தக் காரணங்களினால் மரண தண்டனை என்பது தார்மிக ரீதியிலும் தவறு. சட்டரீதியிலும் சரியாக இருக்க வாய்ப்பு குறைவு. அதிலும் ஓர் அரசு என்பது பல்வேறு ஊழல்கள் மலிந்த அமைப்பு. எனவே அதன் கையில் ஓர் உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை ஒருபோதும் தரவே கூடாது.

இது பொதுவான ஒரு கருத்து. ஆனால், குற்றங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகைப்பட்டவை என்பதால் அதற்கான தீர்ப்பும் பொத்தாம் பொதுவாக இருக்கவும் முடியாது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிக்கியவர்கள் சிலர். தப்பித்தவர்கள் பலர். சிக்கியவர்களில் அந்தப் படுகொலையில் சொற்ப பங்களித்தவர்களில் ஆரம்பித்து கொஞ்சம் கூடுதலாகப் பங்களித்தவர்கள்வரை பல அடுக்குக் குற்றவாளிகள் உண்டு. இவர்களில் யாரும் நிச்சயமாக இந்தக் குற்றத்தைப் பொறுத்தவரையிலும் மரண தண்டனை தரவேண்டிய அளவுக்குக் குற்றவாளிகள் அல்ல. இத்தனை வருடங்கள் சிறையில் அடைக்கப்படும் அளவுக்கான குற்றம் செய்தவர்களும் அல்ல. எனினும் பிடிபட்டவர்கள் அந்த முக்கிய குற்றவாளிகளைக் காட்டிக்கொடுக்காமல் இருந்து வந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாகச் சொல்லி பயமுறுத்தி வந்ததில் ஒருவித நியாயம் இருக்கவே செய்கிறது.

இந்த வழக்கில் இன்னொரு விந்தையான விஷயம் என்னவென்றால், காவலர்களின் பிடியில் இத்தனை ஆண்டுகள் இருந்த பிறகும் எந்தவொரு குற்றவாளியும் கிடைத்த ஆதாரங்களுக்குக் கூடுதலாக ஒற்றை வார்த்தைகூட வழக்கு தொடர்பாக கக்கியிருக்க இல்லை. பிரதான குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கவும் இல்லை. இவர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியவர்கள் அந்த அளவுக்கு சாமர்த்தியசாலிகள் என்பது மட்டுமே இதற்கான காரணமாக இருக்கமுடியாது. விசாரணை நடந்தவிதத்திலும் பல குழறுபடிகள் இருக்கின்றன. பிரதான குற்றவாளிகளை நோக்கி ஒருபோதும் விசாரணை போய்விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் தேர்தல் நெருங்கும் இந்தப் பொன்னான நேரத்தில் காங்கிரஸ் அரசுக்கு தமிழகத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பைத் தரும் வகையில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததோடு மத்திய அரசு விரும்பினால் இவர்களை விடுதலைகூடச் செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. கருணை மனு தொடர்பாக முடிவெடுப்பதில் தாமதம் செய்யப்பட்டால், அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கருணை மனு தொடர்பாக இத்தனை நாட்களுக்குள் முடிவெடுத்தாகவேண்டும். மவுனம் சாதித்தால், தண்டனைக்கு ஒப்புக்கொள்வதாகவே அர்த்தம் என்று கடைசியாக ஒரு கெடுவை நிதிமன்றம் விதித்திருக்கவேண்டும். ஆனால், அது தொடர்பாக எந்த அழுத்தமான தீர்மானமும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களின் தண்டனையை மட்டும் குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்போடு நாடகம் நிறைவுற்றிருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது எளிதாகியிருக்கும். ஆனால், அப்படியான ஒரு சாதகமான சூழல் எதிரணிக்குப் போவதைத் தடுக்கும் நோக்கில் ஜெயலலிதா ஏழு பேரையும் விடுதலை செய்வதாக பதறிக்கொண்டு அறிவித்தார். அது உண்மையிலேயே ஈழ அரசியல் அன்கோவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்தான். ஏனென்றால் ஈழப் போராலிகள் தொடர்பாக ஜெயலலிதா இதுவரை எடுத்துவந்திருக்கும் நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவருக்கு அது மிகப் பெரிய பின்னடைவே. எனவே அவரை அந்த முடிவை எடுக்கவைத்தவர்களின் சாமர்த்தியம் என்றுதான் அதைச் சொல்லவேண்டும்.

ஏனென்றால், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததன் மூலம் காங்கிரஸ் தலைமையில் தேமுதிக, திமுக கூட்டணி உருவாகியிருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதன் மூலமாக மக்கள் மத்தியில் அந்தக் கூட்டணிக்கு செல்வாக்கு அதிகரித்துவிடும் என்று ஜெயலலிதா நம்பியது ஒருவகையில் மிகப் பெரிய தவறு. அவர்கள் தனித்தனியாக இருந்தால் அதிமுகவுக்கு எவ்வளவு சாதகமோ அதைவிட அதிக பலன் அவர்கள் கூட்டாகச் சேர்வதில் உண்டு. ஏற்கெனவே மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் அதுநடந்துகொண்டவிதம் தொடர்பாக கோபம் இருக்கிறது. போதாத குறையாக ஊழல் தொடர்பாக பெரும் வெறுப்பும் அந்தக் கட்சி மீது இருக்கிறது. இந்தநிலையில் காங்கிரஸுடன் யார் சேர்ந்தாலும் அவர்களுக்கு அது பின்னடைவையே தரும். எனவே ஜெயலலிதா அந்தக் கூட்டணியைக் கண்டு இந்த அளவுக்குப் பயந்து தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமே இல்லை. எனினும் அவர் திரைப்படங்களில் வாழ்க்கையில் துடுக்குத்தனம் மிகுந்த பெண்ணாக நடித்துப் பெற்ற வெற்றியை மனத்தில் கொண்டு அரசியல் வாழ்க்கையில் அதிரடிப் பெண்மணியாக ஒரு பிம்பத்தை வளர்த்தெடுக்க விரும்பியிருக்கிறார். சந்தர்ப்ப சூழல் அதற்குத் தோதாக அமைந்திருக்கவே அவரும் அந்த வேடத்தை இதுநாள் வரை வெற்றிகரமாக நடிக்கவும் முடிந்திருக்கிறது. இன்றைய சூழலில் அவருடைய இலக்கு இந்திய இறையாண்மைக்கு எதிராகக் காய் நகர்த்தும் அதிரடியாக மாறியிருக்கிறது (அவருடைய பிரதமர் கனவு நிறைவேறினால் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பைவிட அவர் ஆகாவிட்டால் கூடுதலாக நடக்கும் என்பதே இப்போதைய யதார்த்தம்).

ராஜீவ் கொலை என்ற வழக்கில் பேரறிவாளர் என்ற அப்பாவியும் அற்புதம்மாள் என்ற போராளியும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னிலைப்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ளமுடியும். இது மிகவும் தந்திரமான வலை.

இலங்கைத் தமிழர் பிரச்னையின் பிற அனைத்து விஷயங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒரு அப்பாவியைத் தூக்கிலிடலாமா என்ற தார்மிகக் கேள்வியில் வந்து நிற்கிறது. இதனூடாக இந்தியாவின் அற உணர்வு இன்று கேள்விக்குபடுத்தப்பட்டிருக்கிறது.

பேட்டரி செல் வாங்கிக் கொடுத்தார் என்ற பூஞ்சையான குற்றச்சாட்டுடன் ஒருவரை நளினி, முருகன், சாந்தன் போன்ற ஒரிஜினல் குற்றவாளிகளுடன் கோர்த்துவிட்டதில் இருக்கிறது கிரிமினல் சாணக்கியத்தனம். ராஜீவ் கொலையாளிகள் அனைவரும் அந்த அப்பாவியின் பின்னால் ஒளிந்துகொண்டு எளிதாக வெளியே வந்துவிட ஒரு வழி அன்றே ஏற்படுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலையை நியாயப்படுத்துபவர்கள் அதை வெளிப்படையாகச் செய்வது சிரமம் என்பதால் அவர்களுக்கு ஒரு துருப்புச் சீட்டு பேரறிவாளர் உருவில் அழகாக உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது.

அவர் சொல்லாததைச் சொன்னதாக வாக்குமூலம் பதிவு செய்தேன் என்று காவலர் இன்று சொல்லியிருக்கிறார். அன்று அவருக்கு (மே)லி(டம்) இட்ட உத்தரவின்படி பொய் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார். உண்மைக் குற்றவாளிகளைத் தப்புவிக்க உள் நுழைக்கப்பட்ட பலியாடுதானே பேரறிவாளர். அல்லது தெரிந்தே இந்த தியாகத்தை அவர் செய்ய முன்வந்திருக்கலாம். நிச்சயம் இந்தக் கொலை வழக்கில் தூக்குதண்டனை வழங்கப்படமாட்டாது என்ற உத்தரவாதம் நம்பத் தகுந்தவட்டாரங்களில் இருந்து வந்திருக்கும். எனவே இந்தப் பிரச்னையை போராளித் தாய் – அப்பாவி மகன் ஆகியோரின் பாசப் போராட்டம் என வெறும் உணர்ச்சிமயத்தோடுமட்டுமே ஆராய்ந்து கொண்டிருந்தால் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுவோம்.

ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் சொல்லாமல் விடும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவையே இந்தப் பிரச்னையின் முக்கிய கூறுகள். மரண தண்டனை தரலாமா கூடாதா என்பதெல்லாம் உண்மையான பிரச்னையே அல்ல.

உண்மையில் ஏழு பேருக்கு விடுதலை தரவேண்டும் என்பவர்களின் மனத்தில் இருக்கும் முக்கியமான ஒரு விஷயம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை; அமைதிப்படையை அனுப்பி இலங்கைத் தமிழர்களை அவர் கொன்றொழித்தார். எனவே, அவருக்கு தக்க தண்டனை தரப்பட்டது என்பதுதான்.

இதுதான் பேரறிவாளரின் விடுதலையை விரும்புபவர்களில் பெரும்பாலானவர்களின் மனத்தில் இருக்கும் விஷயம். ஆனால், அநது தொடர்பான கேள்வி அவர்களிடம் கேட்கப்படுவதில்லை. பேட்டரி வாங்கிக் கொடுத்தவருக்குத் தூக்கா என்ற வசனத்தை அவர்கள் தர்ம ஆவேசத்துடன் கேட்க மற்றவர்கள் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

ஒரு கோட்டை அழிக்காமலேயே அதைச் சிறியதாக ஆக்கவேண்டும்னெறால், பக்கத்தில் இன்னொரு பெரிய கோட்டை வரை என்றுசொல்வார்களே அதுபோல் ஒரு கொலைகாரனை கொலைப் பழியில் இருந்து தப்புவிக்கவேண்டுமென்றால், ஒரு அப்பாவியை அவனோடு கோர்த்துவிடு. அப்பாவியின் வெகுளித்தனத்தை மட்டுமே பேசிப் பேசி கொலைகாரனையும் எளிதில் வெளியில் கொண்டுவந்துவிடலாம். இந்த தந்திரமே இங்கு கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உண்மை புரியவேண்டுமென்றால், அப்பாவி பேரறிவாளரை விடுதலை செய்துவிடுகிறோம். எஞ்சியவர்களைத் தூக்கில் இடுகிறோம் உங்களுக்கு இது சம்மதமா என்று கேட்டுப்பாருங்கள். அமைதிப்படைப் படையின் படுகொலைகளில் போய் அந்த பதில் முட்டிக்கொண்டு நிற்கும்.

இந்த இடத்தில் இந்த அடிப்படை விஷயம் தொடர்பான தெளிவு பிறந்தாக வேண்டியிருக்கிறது.

உண்மையில் அமைதிப்படையினர் தமிழ் பெண்களைக் கற்பழித்தல், ஈழத் தமிழ் போராளிகளையும் அப்பாவிகளையும் கொன்றழித்தல் என அத்துமீறினார்களா? இந்தக் குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? சிங்கள அண்ணனும் தமிழ் தம்பியும் சேர்ந்துகொண்டு இந்திய அமைதிப் படையை இலங்கை மண்ணில் இருந்து விரட்டியடிக்க நடத்திய நாடகத்தின் ஓர் அங்கமா இந்திய அமைதிபடையின் மீதான அவதூறுகள்? அப்படியே அமைதிப்படையினர் அத்துமீறி நடந்திருந்தாலும் அதற்காக ராஜீவைக் கொன்றது எந்தவகையில் நியாயம்? தமிழர்களை நிர்மூலமாக்கு என்று சொல்லியா அவர் அமைதிப்படையை அனுப்பினார். மத்தியில் கூட்டாட்சி… மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய கோட்பாட்டின்படி இலங்கையின் ஒரு மாநிலமாக ஈழம் இருக்கட்டும் என்பதுதானே அவருடைய அமைதிப் பேச்சுவார்த்தையின் சாராம்சம். பங்களாதேஷைப் போல் தனி நாடாகப் பிரிக்கப்பட முடிந்த நாடு அல்லவே இலங்கை. இந்த அமைதி முயற்சியை வெற்றி பெற வைக்கத்தானே ராஜீவின் அரசு அமைதிப்படையை அனுப்பியது. யாழ்பாணம் சிங்களப் படைகளால் முற்றுகையிடப்பட்டபோது பூமாலை ஆப்பரேஷன் நடத்தியதுகூட தமிழர்களின் நலனுக்காகத்தானே. அமைதிப்படை செய்த அல்லது செய்ததாகச் சொல்லப்படும் அத்துமீறல்களுக்கு ராஜீவை எப்படிப் பொறுப்பாக்க முடியும்? எப்படி அவரைப் படுகொலை செய்ய முடியும்? இந்தக் கேள்விகள் எதற்குமே விடை கிடையாது.

உண்மையில் இரண்டாம் முறை ராஜீவ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அமைதிப்படையை அனுப்பும் வாய்ப்பு மிகவும் குறைவே. ஆனால், அவர் இந்தியப் பிரதமரானால், தனி நாடு கிடைக்கும் வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் ஆகிவிடும் என்ற அச்சமே அவரைக் கொல்லக் காரணமாக இருந்திருக்கிறது. அமைதிப்படையின் அட்டூழியங்கள் என்பவை அதற்கான நியாயப்படுத்தலாகக் கண்டடையப்பட்டிருக்கிறது. எனவே, ராஜீவைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு என்பது எந்தவகையிலும் நீதியின்பாற்பட்டதாக இருக்க முடியாது.

அப்படியே அமைதிப் படை செய்த தவறுகளுக்கு ராஜீவைக் கொன்றது சரி என்றால், 18 அப்பாவி காவலர்களையும் பொதுமக்களையும் கொன்றதற்கு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கியதில் என்ன தவறு இருக்கிறது?

ஈழப் போராட்டத்தில் சக போராளிக் குழுக்களைக் கொன்றது, முஸ்லீம்களை அகதிகளாக வீட்டை விட்டுத் துரத்தியது, அவர்களைப் படுகொலை செய்தது, போரை விரும்பாத மக்களையும் மிரட்டி பண வசூலில் ஆரம்பித்து படையில் சேர்த்துப் பலி கொடுத்ததுவரை எத்தனையோ அநீதிகளை பிரபாகரன் தரப்பும் செய்திருக்கிறது. அதற்கு யார், என்ன தண்டனை தருவது? இந்தியாவில் இனி யாரும் பிரபாகரன் பெயரை உச்சரிக்கவோ, படத்தைப் பயன்படுத்துவதோ கூடாதுஎன்ற குறைந்தபட்ச தண்டனையாவது அவர்களுக்கு விதிக்க முடியுமா? அல்லது அவர்களாகவே பொறுப்புணர்ச்சியுடன் அந்த முடிவை எடுப்பார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரையில் நீதி, தார்மிகம் எல்லாம் அவர்களுக்குத் தரப்படும் தண்டனைகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்படவேண்டும். அவர்களுடைய செயல்களில் அந்த நற்பண்புகளை யாரும் தேடக்கூடாது. ஏனென்றால் அவர்கள் ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத்தில் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் செய்வது எல்லாமே சரி. அல்லது சூழ்நிலை அவர்களை அப்படிச் செய்ய வைக்கிறது. ஆனால், மற்றவர்கள் யோக்கியர்களாக இருந்தாகவேண்டும். ஒரு நாட்டின் தலைவரை அவர்களுடைய நாட்டில் வைத்துக் கொன்றாலும் அவர்கள் மட்டும் நீதியின்படி நடந்துகொண்டாகவேண்டும்.

உண்மையில் ஈழப் பிரச்னை என்பது இன்று தமிழர்களை/தமிழகத்தை இந்திய அரசுக்கு / ஒட்டுமொத்த இந்தியாவுக்கு எதிரானதாக ஆக்கும் நோக்குடனே முன்னெடுக்கப்படுகின்றன. ஒட்டு மொத்த இந்தியா ராஜீவைக் கொன்ற பயங்கரவாத இயக்கமாக புலிகள் இயக்கத்தைப் பார்க்கிறது. அவர்களுக்கு ஆதரவாகப் பேசும் தமிழர்களை பிரிவினைவாதிகளாகப் பார்க்கிறது. தமிழ் போராளிகள் தரப்போ ஈழம் கிடைக்காமல் போனதற்கு இந்தியாதான் காரணம் என்று சொல்லிக்கொண்டு ஒட்டு மொத்த இந்தியாவைத் தன்னுடைய எதிரியாகப் பார்க்கிறது. இப்படியாக எதிரும் புதிருமான இரண்டு சக்திகள் உருட்டி விளையாடும் பகடைக் காய்களே இந்த ஏழு உயிர்கள். எனவே இந்த ஏழு உயிர்களின் அம்மா அப்பாக்கள், மகன் மகள்கள், மாமன் மச்சான்கள், தம்பி தங்கைகள் கோணத்தில் இருந்து பிரசனையைப் பார்ப்பது எந்தவகையிலும் சரியாக இருக்காது.

சுய முனைப்பு இல்லாமல் தோற்பது அல்லது சாதகமாக இருந்த அநீதியான சூழல் மாற்றி அமைக்கப்படும்போது ஏற்படும் இழப்புகளை அராஜகமாகச் சித்திரிப்பது, வெறுப்பை அடிப்படையாக வைத்து பிரிவினை நெருப்பை மூட்டிக் குளிர் காய நினைப்பது போன்ற வழிகளைப் பின்பற்றுபவர்களைவிட கூடுதல் பொறுப்பு உணர்வும் அற நெறியும் நிச்சயம் ஒரு தேசத்துக்கு இருந்தாகவேண்டும். அந்த வகையில் அது ஏழு பேரை நிச்சயம் விடுதலை செய்தாகவேண்டும். ஆனால், அந்த தேசம் வேறு சில உத்தரவாதங்களையும் பெற்றுக்கொண்டாக வேண்டும்.

உங்களை விடுவிக்கிறேன். பதிலுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்.? உங்கள் பிரிவினைவாத கோஷங்களைக் கைவிடுவீர்களா? ராஜீவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து விழுந்து வணங்குவீர்களா? 18 அப்பாவித் தமிழர்களின் உருவப்படங்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி புலிகளால் கொல்லப்பட்ட சக குழுக்களின் தலைவர்களின் படங்களும் அங்கு வைக்கப்பட்டிருக்கும். மசூதிகளில் தொழுகை நடத்தியபோது கொல்லப்பட்ட இஸ்லாமியத் தமிழர்களின் திருவுருவப்படங்களும் அங்கு இருக்கும். வலுக்கட்டாயாமாக துப்பாக்கி திணிக்கப்பட்டு போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களும் அங்கு இருக்கும். அந்த நினைவு மண்டபத்தில் ஒரு மிதியடியும் போடப்பட்டிருக்கும். அதில் பிரபாகரனின் உருவப்படம் பதித்திருக்கும். அதை மிதித்தபடி சென்று நீங்கள் அத்தனை படங்களுக்கும் அஞ்சலி செலுத்தவேண்டும் செய்வீர்களா போராளி அற்புதம் அம்மாவே… அப்பாவி பேரறிவாளரே… உங்களைப் போலவே அப்பாவிகள்தானே கொல்லப்பட்ட அத்தனை பேர்களும். அவர்களைக் கொன்ற இயக்கத்தின் சார்பில்தானே இன்றும் நீங்கள் இயங்கிவருகிறீர்கள். உங்களை ஆதரிக்க முடியும். ஆனால், உங்களை முன்வைத்து நடத்தப்படும் அரசியலை எப்படி ஆதரிக்க முடியும்?

அற்புதம் அம்மா… உங்கள் மகன் இன்னமும் உயிருடன் இருக்கிறான். நீதி கேட்டு மன்றாட ஓர் இடம் இந்த இந்தியாவில் இன்றும் இருக்கிறது. பிரபாகரனின் ஈழத்தில் அப்படியான ஒரு இடம் ஒருபோதும் இருந்ததே இல்லையே. திராவிட இயக்கப் பின்புலம் இருந்த பிறகும் சுய சிந்தனை கொண்டவராக நீங்கள் இருக்கக்கூடும். உங்கள் நிஜமான கண்ணீர்த்துளிகளைக் கொஞ்சம் இவர்களுக்காகவும் சிந்துங்களேன். ஒட்டு மொத்த இந்திய மனசாட்சியை நோக்கி அல்லவா உங்கள் மன்றாடல்களை முன்வைக்கிறீர்கள். நீங்களும் அதன் பெருங்கருணைக்குக் கொஞ்சம் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்களேன். ஏனென்றால் உங்கள் மகன் வெறும் உங்கள் மகன் மட்டுமே அல்ல. துரோக நாடகத்தின் துருப்புச் சீட்டு. பிரிவினை விளையாட்டின் பிரதான அம்பு.

***

கிரேக்க நாகரிகம் – III

imagesபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 30

குடும்பங்கள்

கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் என்ற அளவில் நின்றுவிடாது. தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, மாமன், மாமி, பேரன், பேத்தி என்று அத்தனை சொந்தங்களும் சேர்ந்து வசிப்பார்கள்.

கிரேக்கச் சமுதாயத்தில் ஆண்களே முக்கியமானவர்கள். பெண்களுக்குச் சம உரிமை கிடையாது.  ஆண்கள் சாப்பிடும் அறையில் பெண்கள் சாப்பிடக்கூடாது. கடைகளுக்கும், தெருவுக்கும் போகக்கூடாது.

பெண்கள் பிறந்த வீட்டில் அம்மாவுக்கு உதவியாக இருக்கவேண்டும். சமைப்பது, ஆடைகள் நெய்வது, வீடைச் சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். கூடுதலாகப் பாட்டு, நடனம் கற்கவேண்டும். பண்டிகை மற்றும் விழா நாட்களில் உறவினர்கள் முன்னால் திறமைகளை வெளிப்படுத்தவேண்டும்.

புகுந்த வீட்டில் குழந்தைகள்  பராமரிப்பும், வீட்டு வேலைகளும் முழுக்க முழுக்கப் பெண்கள் பொறுப்பு. செல்வந்தர் வீடுகளில் பெண்கள் தங்கள் உடல் வருந்த வேலை செய்யவேண்டாம். ஆனால், அடிமைகள் மூலமாக இதை முடிக்கவேண்டியது அவர்கள் பொறுப்பு. வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் ஆண்கள் துரும்பைக்கூடத் தூக்கிப் போடவேண்டாம்.

திருமணங்கள்

பெண்களுக்கு 14 முதல் 18 வயதுக்குள்ளும், ஆண்களுக்கு இருபதுகளிலும் திருமணம் நடக்கும்.  ஆண்கல் 30 வயதில்கூட மணம் செய்துகொள்வதுண்டு. பெற்றோர்கள்தாம் வரன் தேடுவார்கள், பேசி முடிப்பார்கள். வரதட்சணை கேட்பதும் வாங்குவதும் சாதாரணம், பெற்றோர்  தேர்வு செய்த வரனைத்தான் பெண்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டிய கட்டாயம். தங்கள் வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கும் சுதந்திரம் ஆண்களுக்கு இருந்தது.

ஆண்கள் முப்பது வயதுவரை ராணுவ சேவை கட்டாயம் செய்யவேண்டும்,. எனவே, எந்த வயதில் மணம் முடித்துக்கொண்டாலும், இல்லற வாழ்க்கையை முப்பது வயதுக்குப் பிறகுதான் தொடங்கினார்கள்.

திருமணங்களில் சடங்குகள் உண்டு, ஆனால், புரோகிதர்களோ, பூசாரிகளோ கிடையாது. ஆண்களும், பெண்களும் குளித்து, புத்தாடை உடுத்தித் தயாராகவேண்டும். மாப்பிள்ளை ரதம் அல்லது குதிரை வண்டியில் மாமனார் வீட்டுக்குச் சுற்றமும், நண்பர்களும் புடைசூழ ஊர்வலமாகப் போவார். அங்கே விமரிசையாக விருந்து நடக்கும்,

வயிறாரச் சாப்பிட்ட மாப்பிள்ளை, பெண்ணோடு தன் வீட்டுக்கு வருவார். அவரை அவர் குடும்பத்தார் மனமார வரவேற்று உட்காரவைப்பார்கள். பிறகு எல்லோரும் அவர்கள் மேல் பழங்கள், பழக் கொட்டைகள் ஆகியவற்றைச் சொரிவார்கள். இது ஒரு வகையான ஆசீர்வாதம். இது முடிந்தவுடன், கணவனும் மனைவிக்கும் சாந்தி முகூர்த்தம்!

கனவன் மனைவிக்குள் மனக் கசப்பு வந்தால், விவாகரத்து பெறும் உரிமை ஆண்களுக்கு இருந்தது. பெண்களுக்குக் கணவன் சரியாக அமையாவிட்டால், சுமையை வாழ்நாள் முழுக்கத் தாங்கி நடக்கத்தான் வேண்டும். வேறு வழி கிடையாது.

குழந்தைகள்

ஆண் குழந்தைகள்தான் பெற்றோரின் முதல் தேர்வு. குழந்தைகள் பிறந்து பத்து நாட்களுக்குப் பிறகுதான் பெயர் சூட்டினார்கள். ஏனென்றால், பெரும்பாலான குழந்தைகள் அதற்குள்ளாகவே அகால மரணமடைவது சாதாரணமாக இருந்தது. குழந்தைகள் நோஞ்சானாகவோ, உடல் ஊனம் கொண்டவர்களாகவோ இருந்தால், இந்த மரணத்தைக் குழந்தையின் அப்பா முடிவு செய்வார். அடிமைகளின் கைகளில் சிசுவைக் கொடுப்பார். அவர்கள் ஏரி, குளங்களில் வீசி எறிவார்கள். இதில் தப்பிப் பிழைக்கும் குழந்தைகள் கண்டெடுக்கப்படுபவர்களால் அடிமைகளாக்கப்படுவார்கள் .

பணக்கார வீட்டுப் பெண்கள் மட்டுமே பள்ளிகளுக்குப் போனார்கள். மற்றவர்களுக்கு, வீட்டில் அம்மா தரும் பயிற்சிதான். ஆண் குழந்தைகள் இதற்கு நேர் எதிர். ஆறு வயதானதும் கட்டாயம் பள்ளிக்குப் போகவேண்டும். கல்வியோடு, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியும் கட்டாயம். இத்தோடு, ஈட்டி எறிதல், குத்துச் சண்டை ஆகியவையும் பயிற்றுவிக்கப்பட்டன.   ஸ்பார்ட்டா நகரத்தில் மட்டும், ஏழு வயதானவுடன் சிறுவர்கள் ராணுவக் கூடாரங்களுக்குப் போயாகவேண்டும். முப்பது வயதுவரை கல்வியும், ராணுவப் பயிற்சியும் அவர்களுக்கு அங்கே அளிக்கப்படும், பிற நகரங்களில், ஏழு முதல் பதினெட்டு வயதுவரை பள்ளிக்கூடம். அதற்குப் பின் முப்பது வயதுவரை ராணுவப் பயிற்சி.

தெய்வ நம்பிக்கை

கிரேக்கர்கள் ஏராளமான கடவுள்களையும், தேவதைகளையும் நம்பினார்கள், வணங்கினார்கள். அவர்களுடைய முழு முதற் கடவுள் ஜீயஸ்.

சூரியக் கடவுள் அப்பல்லோவுக்கும் தெய்வங்கள் வரிசையில் உயர்ந்த பீடம். நோய்கள் வராமல் உடல் நலம் காப்பவர் இவர்தான்.

கிரேக்க நாடுகளுக்குள் பொழுதொரு சச்சரவு, தினமொரு சண்டை. ஆகவே, ஆரெஸ் (Ares) என்னும் யுத்தக் கடவுள் மிக முக்கியமானவர், சின்னத் தகராறுகள்கூட ஆரெஸ் பூசை, படையல் ஆகியவறோடுதான் ஆரம்பிக்கும். ஆயுதம் ஏந்தலாம் என்று ஆரெஸ் முதலில் ஆசீர்வாதம் தரவேண்டும்.

அறிவுத் தேடலும், கல்வியும் அத்தியாவசியமானவை. நம்மூர்க் கலைமகள்போல் கிரேக்கத்தில் அத்தீனா (Athena).

மக்கள் அடிக்கடி வழிபட்ட தெய்வம் டெமெட்டர் (Demeter) என்னும் பூமாதேவி. இதற்குக் காரணங்கள் உண்டு. நாடு மலைப் பிரதேசம். வறண்ட பூமி, வானம் பார்த்த பூமி. சாப்பிட உணவு வேண்டுமே விளைச்சல் கிடைக்கவேண்டுமே? டெமெட்டர் விவசாயிகளின் தேவதையானார். விதை விதைக்கும்போது, விதைத்தவுடன் மழை வேண்டி, மழை பெய்தவுடன், நல்ல விளைச்சலுக்குப் பிரார்த்தித்து, அறுவடைக்குப் பின் என சதா சர்வகாலமும் டெமெட்டர் நினைவுதான், பாராயணம்தான்.
வீரத்துக்கு, அறிவுக்கு, விவசாயத்துக்குத் தனியாகத் தெய்வங்கள் இருக்கும்போது,அழகுக்கு, ஆசைக்கு,காமத்துக்கு, காதலுக்கு வேண்டாமோ? இருந்தார் கவர்ச்சிக் கடவுள் அஃப்ரோடைட் (Aphrodite). வாரிசுகள் பெருக, மக்கள் வழிபடுவது இந்த அம்மனைத்தான்.

இவர்கள் தவிர அக்னி, வாயு,கடல், எமதர்ம ராஜா என்பதுபோன்ற பகவான்கள். இவை போதாதென்று பாம்பு, பசு, பன்றி போன்ற மிருகங்களையும் பய பக்தியோடு கும்பிட்டார்கள்.

வீடுகளில் பூசை அறைகள் இருந்தன. தெரு முனைகளிலும் தேவதைகள் பிரசன்னமாகியிருந்தார்கள். இத்தனை இருந்தபோதும், பிரம்மாண்டக் கோயில்கள் கட்டி அங்கேபோய்க் கும்பிட அவர்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொரு கடவுளுக்கும் எந்த மாதிரியான பூசைகள் நடத்தவேண்டும், எத்தகைய நைவேத்தியங்களும், படையல்களும் சமர்ப்பிக்கவேண்டும் என்று விலாவாரியான செயல்முறைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. விசேட நாட்களில் ஆண்டவர்கள் வீதி உலா வருவதும், பக்தகோடிகள் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்குவதும் சாதாரண நிகழ்வுகள்.

இத்தனை ஆழமான  தெய்வ நம்பிக்கை இருக்கும்போது, பரவலான மூட நம்பிக்கைகள் இருந்தாகவேண்டுமே? ராட்சசன், பேய், பிசாசு, துஷ்ட தெய்வங்கள் ஆகியவை இருக்கின்றனவென்று நினைத்தார்கள், பயந்தார்கள், பரிகாரங்கள் செய்தார்கள். செய்வினை, பில்லி சூன்யம் ஆகிய அடுத்தவரை ஒழித்துக்கட்டும் வேலைகளிலும் சர்வ சாதாரணமாக ஈடுபட்டார்கள்.

ஏழு புனிதமான, அதிர்ஷ்டமான எண். எதையுமே ஏழின் வடிவமாகப் பார்த்தால் ராசி. ஒரு நல்ல காரியத்தைச் செய்யும்போது ஏழு பேர் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என்பது எல்லோரும் ஒத்துக்கொண்ட கருத்து.

வருங்காலம் பற்றித் தெரிந்துகொள்வதிலும், குறி கேட்பதிலும் எக்கச்சக்க ஈடுபாடு இருந்தது. எல்லா ஊர்களிலும் கோவில்களில் குறி சொல்பவர்கள் இருந்தார்கள். இவர்கள் கடவுள்களின் அவதாரங்களாகக் கருதப்படார்கள். ஆகவே, இவர்கள் கோவில்களில் மட்டுமே வருங்காலதைக் கணிப்பார்கள். மன்னர்களேயானாலும், இவர்களை அரண்மனைக்கு அழைக்க முடியாது. இவர்களிடம்தான் போக வேண்டும்.

நாடி ஜோசியம் என்றாலே, நினைவுக்கு வருவது வைத்தீஸ்வரன் கோவில். இதைப்போல்.  அந்த  நாட்களில் குறி கேட்பது என்றாலே, புகழ் பெற்ற இடம் டெல்ஃபி (Delphi) என்னும் ஊர், அங்கே இருக்கும் அப்பலோ கோவில்.

இறந்தவர் சடங்குகள்

ஒரு வீட்டில் மரணம் நடந்தால், உற்றார், உறவினர், நண்பர்களுக்குச் சேதி அனுப்பப்படும். உடலைக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, மலர் மாலைகளால் அலங்கரிப்பார்கள். அவர் வாயில் நாணயம் ஒன்று வைக்கப்படும். துக்கம் விசாரிக்க வருபவர்கள் கறுப்பு ஆடை அணிந்து வரவேண்டும். இரண்டு நாள்கள் உடல் வீட்டிலேயே, மூலிகைகளால் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். மூன்றாம் நாள் ஊர்வலமாகச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள், மயானத்தில் எரி மூட்டுவார்கள்.  மறுநாள் அஸ்தியைப் பானையில் போட்டுக் குழிதோண்டிப் புதைப்பார்கள். வீட்டுக்கு வந்ததும் விருந்து நடக்கும், இதற்குப் பிறகு எந்தச் சடங்கும் கிடையாது.

கோயில்கள்  

மலைகளில் கற்கள் எராளமாகக் கிடைத்ததால், வீடுகள் போலவே கோவில்களும் கருங்கல், சுட்ட களிமண் செங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றால் கட்டப்பட்டன. கோவில்களின் கட்டமைப்புக்கு மார்பிளும், சிலைகள், தூண்கள் ஆகியவற்றுக்கு மார்பிள், யானைத் தந்தம் ஆகியவையும் உபயோகப்படுத்தப்பட்டன.

மூன்றுவிதமான கட்டுமானப் பாணிகள் இருந்தன. அவை – டோரிக், அயானிக், கோரிந்தியான். டோரிக் பாணி, மிக எளிமையான பாணி, இத்தகைய கட்டடங்களில் தூண்கள் உருளை வடிவில் இருக்கும். நேர்கோடு தூண்களின் உடல் முழுக்க ஓடும். மேற்பாகம் தட்டையான உருவம் கொண்டது. ஏதென்ஸ் நகரத்தில், அக்ரோப்போலிஸ்  என்னும் குன்றின்மேல்  இடத்தில் இருக்கும் பார்த்தினான் கோயில் டோரிக் பாணியிலானது. இது அத்தீனா என்னும் கல்வி தெய்வத்தின் கோயில். கி.மு. 5 – ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

கோயிலின் அகன்ற பிரகாரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தால், தந்தம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் செய்யப்பட்ட  40 அடி உயர அத்தீனா சிலை. (அந்தச் சிலை நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், சிலை பற்றிய முழு விவரங்களும், உருவ அமைப்பும் கிடைள்ளன.) போர்வீரன் உடை, கையில் பாம்பு, வெற்றிச்சின்னம். பாரசீகத்தோடு நடந்த போரில் கிடைத்த வெற்றிக்கு நன்றியாக, இந்தக் கோவிலும், சிலையும் அமைக்கப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

அயானிக் பாணிக் கட்டடங்கள், டோரிக்கைவிட அழகானவை, அதிக உயரமானவை, தூண்களில்  வேலைப்பாடுகள் கொண்டவை. பார்த்தினான் கோவிலிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள இரிக்தியம் (Erechtheum) அயானிக் வகைக் கோவில். கி.மு. 421 – 407 காலகட்டத்தில் கட்டப்பட்ட அழகான ஆலயம். அத்தீனா, பொஸைடான் (கடல் தெய்வம்), முன்னாள் மன்னர் இரிக்தியஸ் ஆகியோர் இங்கே வழிபடப்பட்டார்கள்.

கோரிந்தியான், கலைநயத்தில், கை நுணுக்கத்தில் அயானிக் பாணியைவிட உச்சமானது. தூண்களின் உடல் பாகத்தில் பல நேர்க்கோடுகள் ஓடும்: உச்சியில் இலைகளும், பூக்களும் செதுக்கப்பட்டிருக்கும், மெஸ்ஸினியா  என்னும் பகுதியில் சூரியக் கடவுள் அப்பல்லோ ஆலயம் இருக்கிறது. இது, டோரிக், கோரிந்தியப் பாணிகள் இரண்டும் சேர்ந்த  அழகுக் கலவையின் அற்புதப் படைப்பு.

இப்படி எத்தனையோ கோயில்கள், கிரேக்கக் கட்டடக் கலைத் திறமையின் உச்ச வெளிப்பாடுகளாக  அமைந்துள்ளன.

0

அனுபவச் சித்தனின் குறிப்புகள்

digital_art_CG_my_girlகாதல் அணுக்கள் / 2

(அதிகாரம் – குறிப்பறிதல்)

குறள் 1091:

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

 

அவள் கண் வசீகரத்தில்

போதையென மிதக்கும்

கொஞ்சமாய் பேக்டீரியா

லேசாய் ஆன்டிபயாட்டிக்.

*

குறள் 1092:

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.

 

அவள் ஓரப்பார்வையின்

சில்மிஷத்துக்குச் சமம்

தூயதொரு கலவியின்

முக்காலே மூணு வீசம்.

 

*

 

குறள் 1093:

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.

 

கொஞ்சும் பார்வையும்

கொஞ்சம் வெட்கமும்

தின்று கண்டமேனிக்கு

காதல் கொழுக்கிறது.

*

குறள் 1094:

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

 

முதுகு தான் பார்க்கிறாள்

முதுகையே காட்டுகிறாள்

சும்மாவா சொன்னார்கள்

பெண் புத்தி பின் புத்தி!

*

குறள் 1095:

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்.

 

பார்க்கவில்லை தான்

என்னைஆனால்

பார்த்துக் கொண்டும்

இருக்கிறாள் தானே!

*

குறள் 1096:

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்.

 

திட்டுகிறஉதட்டுக்கும்

தீண்டுகிற உளத்துக்கும்

நெடுந்தூரமனப் புரியும்

நாளையோ மறுநாளோ.

*

குறள் 1097:

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

 

ஒட்டாத வன்சொல்லும்

ஒப்பாது முறைப்பதுவும்

காதலின் ரகசியத்தைக்

காட்டிக் கொடுக்கிறது.

 

*

 

குறள் 1098:

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.

 

பாவமாய்ப் பார்க்கையில்

ஒரு டீஸ்பூன் அன்பூற்றிப்

புன்னகைத்துப் போகிறாள்

ஒயில்நடை வனப்புக்காரி.

 

*

 

குறள் 1099:

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.

 

நீ யாரோ நான் யாரோ

என்ற நடிப்பின் அதீதம்

ஊருக்கே உமிழ்கிறது

காதல் FLASH NEWS-ஐ.

 

*

 

குறள் 1100:

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.

 

காதல் கண்கள் பேச

ஆரம்பித்து விட்டன

வாயே, நீ கொஞ்சம்

மூடிச் சும்மா இரு!

0

கிரேக்க நாகரிகம் – II

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 29

சமுதாய அமைப்பு

சமூகத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன.

  • உயர் குடியினர்
  • நடுத்தர வர்க்கத்தினர்
  • அடித்தட்டு மக்கள்
  • அடிமைகள்

parthenonஉயர் குடியினர்  என்பவர்கள், எந்த வேலையும் பார்க்காதவர்கள். ஏராளமான சொத்து சுகம் படைத்தவர்கள். கணக்கற்ற அடிமைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். எல்லா வேலைகளுக்கும்  இவர்களால் அடிமைகளை ஏவ முடியும், ஒவ்வொரு நாளின் 24 மணி நேரத்தையும் தங்கள் விருப்பம்போல் செலவிடும் சுதந்தரம் கொண்டவர்கள்.  கலைகள், இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை வளர்க்கவும், அரசியல், நிர்வாகம் ஆகிய சமுதாயத் துறைகளில் பணியாற்றவும், வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டுவிட்ட  இவர்களால்தான் முடியும் என்று கிரேக்க சமுதாயம் நம்பியது.

நாட்டு சேவைக்கும், வருங்கால சமுதாயத்தை உருவாக்கவும் முக்கியமானவர்கள் என்பதால்,  இவர்களைச் சமூக ஏணியின் உயர்தட்டில் தூக்கிவைத்து மதித்தார்கள்.
வியாபாரிகள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், கைத்தொழில் விற்பன்னர்கள்,   போன்றோர் நடுத்தர வர்க்கத்தினர். இவர்கள் பணபலம் படைத்தவர்கள். இவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. இவர்கள் தங்கள் வர்க்கம், அடித்தட்டு மக்கள் ஆகியோரோடு மட்டுமே திருமண உறவு வைத்துக்கொள்ள முடியும். உயர்குடியினரோடு திருமணம் செய்துகொள்வது சமூகத்தாலும், சட்டங்களாலும் தடுக்கப்பட்டிருந்தது.

அடிமைகளாக வாழ்க்கையைத் தொடங்கிய சிலர் கல்வி அறிவு பெற்றார்கள், வியாபாரிகளாக, கலைஞர்களாக, கைத்தொழில் விற்பனர்களாக, தங்கள் எஜமானர்களின் குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக  உருவெடுத்தார்கள். இவர்கள் சமுதாய மூன்றாம் படியில், அடித்தட்டு மக்களாக  ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.
அடிமைகள் பரிதாபத்துக்குரிய ஆத்மாக்கள். யுத்தக் கைதிகள், அநாதைகள், குற்றவாளிகள், அடிமைக் குடும்ப வாரிசுகள் ஆகியோர் அடிமைகள். ஒரு சில கருணைமிக்க குடும்பங்கள் இவர்களை அன்போடு நடத்தியதும், கல்வி கற்க அனுமதித்ததும் நிஜம் என்றபோதும், பெரும்பாலான குடும்பங்களில் அரை வயிற்றுச் சோறு, தூக்கமே இல்லாமல் இடுப்பு ஒடியும் வேலை, சின்னச் சின்னத் தப்புக்கும் ரத்தம் பீறிவரும் சாட்டை அடி என ஓடியது இவர்கள் வாழ்க்கை.

அன்றாட வாழ்க்கை

வீடுகள்

மலையும், மலை சார்ந்த குறிஞ்சிப் பிரதேசமாக நாடு இருந்ததால், தாராளமாகக் கிடைத்தவை கற்கள்: கண்ணில் எப்போதோ பட்டவை மரங்கள். இதனால்,வீடுகள் பெரும்பாலும் கருங்கல், செங்கல், சுண்ணாம்பு ஆகியவை கலந்து கட்டப்பட்டன. களிமண் செங்கல், சுண்ணாம்பு ஆகியவை.  மர சாமான்கள் ஒரு சில வீடுகளில் மட்டுமே இருந்தன. அகன்று விரிந்த முற்றம், அதைச் சுற்றி அறைகள். இதுதான் பொதுவாக வீடுகளின் அமைப்பு.

முற்றம்தான் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும் இடம், விருந்தோம்பும் இடம்.

வீட்டில் பெரிய அறை ஆன்ட்ரான் (Andron). இது ஆண்கள் மட்டுமே பயன்படுத்தும் அறை. நிறையப் பேருக்கு விசேட நாட்களில் விருந்துகள் நடத்தவும் ஆண்ட்ரானைப் பயன்படுத்தினார்கள், இதேபோல் பெண்களின் உபயோகத்துக்காகவே இருந்த அறை கினைக்கான் (Gynaikon). வீட்டில் விசேஷங்கள் நடக்கும்போது ஆண்கள் கூட்டம் ஆன்ட்ரானில் கூடும்: பெண்கள் கினைக்கானில் சந்திப்பார்கள்.

கிரேக்கர்கள் கலைப் பிரியர்கள். எல்லா வீடுகளிலும் சிற்பங்கள் இருந்தன. பெண்கள் கிண்ணங்கள், கூஜாக்கள், தொட்டிகள், பானைகள் ஆகிய மண்பாண்டங்கள் செய்தார்கள். அவற்றில் அழகான ஓவியங்கள், கதைக் காட்சிகள் ஆகியவற்றைத் தீட்டினார்கள்.  இவையும்,  கைவினைக் கலைஞர்களின்  படைப்புக்சளும் வீடுகளை அலங்கரித்தன.

வீடுகளில் பூஜை அறைகள் இருந்தன. அங்கு நெருப்பு குண்டங்கள் வைத்திருப்பார்கள். மூதாதையர்கள் அக்னி வடிவில் தங்களைப் பாதுகாப்பதாக அவர்கள் நம்பிக்கை. விசேட நாட்களில் நெருப்பில் சாம்பிராணி போடுவார்கள். விக்கிரகங்களுக்கு ஆலிவ் எண்ணெய்  அபிஷேகம் செய்யும் பழக்கமும் உண்டு.  வழிபாட்டில் டிதிர்ரம் (Dithyram) என்ற கடவுள் உச்சாடனப் பாடல்கள் பிரபலம்.

உணவு

கோதுமை ரொட்டி முக்கிய உணவாக இருந்தது. காலை, பகல், இரவு என எல்லா வேளைகளிலும் ரொட்டி. சூரியன் உதயமானவுடன் ரொட்டியைத் திராட்சை ரசத்தில் தோய்த்துச் சாப்பிடுவார்கள், மதியம் திராட்சை ரசத்தில் முக்கிய ரொட்டி, ஆலிவ், அத்திப் பழங்கள், பாலாடை, சமைத்த மீன். இரவுச் சாப்பாடு சூரியன் மறையும் வேளையில் நடக்கும்,விலாவாரியாக இருக்கும். சமைத்த காய்கறிகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், மீன், தேன் ஊற்றிய இனிப்புகள் என ஏராளம் ஐட்டங்கள். கிரேக்கர்களுக்குக் கரும்பு, சீனி ஆகியவைபற்றித் தெரியாது. இனிப்புச் சுவைக்குத் தேன் மட்டுமே பயன்பட்டது.

கோவில் திருவிழாக்களில் மாடு, பன்றி ஆகியவை நூற்ற்க்கணக்காகப் பலியிடப்படும். அந்த மாமிசம் சமைக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. பணக்காரர்கள் தவிர்த்த மற்றையோர் மாமிசம்  உண்டது அப்போது மட்டும்தான்.

ஏழையரும், செல்வந்தரும் எப்போதும் அருந்திய பானம் திராட்சை ரசம். பழ ரசம், புளிக்கவைத்த ஒயின் என இருவகைகளிலும் ரசிக்கப்பட்டது. ஒயினை அப்படியே குடிப்பது நாகரிகமற்ற செயல். தண்ணீர் சேர்த்துத்தான் பருகினார்கள். சாப்பிடக் கரண்டிகள் கிடையாது, கைகள்தாம்.

உடைகள்

கம்பளி, லினன் ஆகியவற்றால் ஆண்களுடையவும், பெண்களுடையவும் உடைகள் செய்யப்பட்டன.  ஆடைகளை வீட்டுப் பெண்கள் தைத்தார்கள். செல்வந்தர் வீடுகளில் அடிமைகள் வீட்டுப் பெண்களின் மேற்பார்வையில் தைப்பார்கள். இறுக்கமான உடைகளை அணிவது பண்பற்ற செயல். ஆண், பெண் ஆகிய இருபாலரின் உடைகளும் ட்யூனிக் (கூதணடிஞி) என்று அழைக்கப்பட்டன. பெண்களின் ட்யூனிக் முட்டிவரை நீளம்: ஆண்களின் ட்யூனிக் இன்னும் குட்டையானது.குளிர் காலங்களில் தடிமனான கம்பளிப் போர்வைகள் அணிவார்கள்.

ஆடுகளின் உடலிலிருந்து கம்பளி நூலை எடுப்பார்கள். சுடு தண்ணீரில் ஊறவைத்து எண்ணெய்ப் பசை, அழுக்குகள் ஆகியவற்றை நீக்குவார்கள். பணக்காரர்கள் மட்டுமே கம்பளி நூலைச் சாயங்களில் ஊறவைத்து வண்ண வண்ண ஆடைகள் அணிந்தார்கள். ஓக் மரப் பட்டை, மர வேர்கள், செடிகளின் தண்டுகள், உலர்ந்த இலைகள் ஆகியவை சாயம் பூசும் மூலப் பொருட்கள்.

லினன் ஆடைகள் தயாரிப்பது இன்னும் சிரமான காரியம். செடிகளைப் பிடுங்கிவரவேண்டும், தண்டுப் பகுதியைப் பிரித்து எடுக்கவேண்டும், நாரை எடுக்கவேண்டும், நாரில் ஊடுருவி இருக்கும் வித்துக்களை அகற்றவேண்டும்,

வீடுகளில்  தறிகள் உண்டு. கம்பளி, லினன் ஆகியவற்றின் நூலை வீட்டுப் பெண்கள் தறிகளில் ஆடைகளாக நெய்வார்கள்.

ஆண்களும், பெண்களும் காலணி அணியும் பழக்கம் இருந்தது, மிருகங்களின் தோல் இதற்குப் பயன்பட்டது. இறந்த மிருகங்களின் தோலை உரித்து எடுப்பார்கள். அவற்றை வெந்நீர், புறாக்களின் எச்சம் கலந்த சுடுநீர் ஆகியவற்றில் ஊறப் போடுவார்கள். அப்போது உரோமங்கள், தோலில் ஒட்டியிருக்கும் மாமிசத் துண்டுகள் ஆகியவை போய்விடும், இந்தத் தோலில் எண்ணெய் போட்டுத் தேய்த்து மிருதுவாக்குவார்கள். பிறகு, எண்ணெய், மூலிகைகள் ஆகியவற்றில் பல வாரங்களுக்கு ஊறவைப்பார்கள். காலணிகளும், பை போன்ற பொருட்களும் செய்ய இப்போது தோல் தயார்!

ஒப்பனை

சிகை அலங்காரம் காலப்போக்கில் பல மாற்றங்கள் கண்டது. ஆரம்ப காலங்களில் ஆண்கள் நீண்ட தலைமுடியும், தாடியும் வளர்த்தார்கள். பின்னாட்களில், தாடி வளர்ப்போர் எண்ணிக்கை குறைந்துபோனது.

பெண்களுக்கு நீளத் தலைமுடி அழகின் அடையாளம்,  தலைமுடியைச் சுருட்டையாக்குவது ஆரம்ப காலங்களில் ஃபேஷனாக இருந்தது: பின்னுக்குச் சீவிக் கொண்டை போட்டுக்கொள்வதாக இது மாறியது. அடிமைப் பெண்களின் தலைமுடி எப்போதும் குட்டையாகத்தான் இருக்கவேண்டும். இதற்கு ஏற்றபடி, அவர்கள் கேசம் அடிக்கடி வெட்டப்பட்டது.

கறுப்பு நிறத்துக்கு மவுசு இல்லை. வெண்மைத் தோல் கொண்டவர்கள் மட்டுமே அழகர்கள்,  அழகிகள். கறுப்பு நிறப் பெண்கள் தங்கள் சருமத்தை வெண்மையாக்க, ஈயத்தால் ஆன களிம்பு தடவிக்கொண்டார்கள் . இது அவர்கள் உடல் நிலையைப் பாதித்தது இன்னொரு சமாச்சாரம். கறுப்பை வெண்மையாக்கிக்கொள்ள பவுடர் போன்ற சுண்ணாம்புப் பொடியையும் பூசிக்கொள்வார்கள். கன்னங்களுக்கு ரோஜா நிறப் பொடி (இது எதனால் செய்யப்பட்டது என்று தெரியவில்லை) பூசும் மேக்கப் கலையும் இருந்தது.  வேல்விழிக் கண்களின் கவர்ச்சியை கூட்ட மை தீட்டிக்கொண்டார்கள் .

ஆண்கள் நகைகள் அணிவதில்லை. பெண்கள் வகை வகையான காதணிகள், வளையல்கள், கழுத்துச் செயின்கள் ஆகியவை அணிந்தார்கள். ஏனோ, கி.மு. நான்காம் நூற்றாண்டு வாக்கில் பெண்கள் நகை அணியும் பழக்கமும் மறையத் தொடங்கிவிட்டது.

வாசனைப் பொருட்கள்மேல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனிப் பிரியம் உண்டு. துளசி, லவங்கப் பட்டை, பாதாம், ரோஜா, லில்லி, லாவென்டர் ஆகியவற்றின் சாரம் எடுத்து, எண்ணெய்களோடு சேர்த்துக் காய்ச்சி வீடுகளில் வாசனைப் பொருட்கள் தயாரித்தார்கள்.

0

தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகள்

2144958026_1391342812காதல் அணுக்கள் / ஒன்று

(அதிகாரம் – தகையணங்குறுத்தல்)

குறள் 1081:

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

 

ஜிமிக்கியின் அதிர்வில்

மிக‌ நினைவூட்டுகிறாள்

ஒரு ப‌ச்சைநீல‌ மயிலை

ஒரு வான் தேவதையை.

*

குறள் 1082:

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து.

 

கொஞ்சம் பார்க்கிறேன்

நிறைய முறைக்கிறாள்

பத்மவியூகத்துள் புகுந்த

வீர‌அபிமன்யு ஆகிறேன்.

 

*

 

குறள் 1083:

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு.

 

ஒரு பெண்ணின் கண்களை

அதன் வசீகரத்தைப் பற்றிய‌

குறிப்புகள் நிறைந்திருக்கும்

என் மரண வாக்குமூலத்தில்.

 

*

 

குறள் 1084:

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண்.

 

Satin போல், Velvet போல்

மென்மையானவள் தான்

திருஷ்டிப் பொட்டாயிந்த

உயிர் தின்னும் கண்கள்.

 

*

 

குறள் 1085:

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து.

 

சிறுக்கிச் சிறுபார்வை

எனைத் தீர மேய்ந்து

மானாய் மருள்கிறது

எமனாய் அருள்கிறது.

 

*

 

குறள் 1086:

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண்.

 

கண்ணை ஒளிக்கத் தவறிய‌

புருவக்கோணல் – அன்றேல்

மனசு நேராயிருந்திருக்கும்

மப்பு நேராதிருந்திருக்கும்.

 

*

 

குறள் 1087:

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்.

 

மதங்கொண்டு வதஞ்செய்யும்

முரட்டுத்திமிரான‌ யானைக்கு

முகமூடி அணிவித்தது போல்

அவள் இளஞ்சிவப்பு துப்பட்டா.

 

*

 

குறள் 1088:

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு.

 

உலகம் என் காலடியில்

மொத்தமும் ரத்து செய்து

அரைப்பிறை ஒளிர்நுதல்

கண்டு மண்டியிடுகிறேன்.

 

*

 

குறள் 1089:

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ ஏதில தந்து.

 

தீராத வரதட்சணையாய்

வாங்க வேண்டும் அவள்

24 கேரட் அச்சத்தையும்

37 கிராம் நாணத்தையும்.

*

குறள் 1090:

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.

 

பிடித்துக் குடித்தால் தான்

மிதக்கும் கள்ளின் போதை

படித்தாலும் பார்த்தாலும்

தெறிக்கும் காதல் போதை.

 

0

புதிய தொடர் : காதல் அணுக்கள்

2010011733391700000041683b9e160d182ca6edcead1620b218காதலர் தினத்தையொட்டி சி. சரவணகார்த்திகேயன் எழுதும் காதல் அணுக்கள் தொடர் நாளை முதல் தமிழ்பேப்பரில் வாரம் ஒருமுறை வெளியாகும்.

0

முப்பால் என்று அழைக்கப்படும் திருக்குறள் அறம், பொருள், இன்பம் மூன்றையும் வகைப்படுத்தி பேசுகிறது. இந்தத் தொடர் காமத்துப்பால் குறள்களுக்குப் புதிய முறையில் உரை விளக்கம் அளிக்கிறது.

0

ஒவ்வொரு வெள்ளியும் வாரம் ஓர் அதிகாரம் (10 குறள்கள், 10 கவிதைகள்) வெளிவரும்.

0