சிந்து சமவெளி நாகரிகம் – II

ancient-indus-mapபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 25

நகரங்கள், வீடுகள்

சிந்து சமவெளி கால நகரங்கள் அற்புதமாகத் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்தன.  ஒவ்வொரு நகரத்திலும் இரண்டு பகுதிகள்: ஒரு பகுதி தரை மட்டத்தில், இன்னொரு பகுதி செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்றின்மேல். இரு பகுதிகளையும் கோட்டைகள் பிரித்தன. உயரத்தில் இருந்த பகுதி அக்ரோப்போலிஸ் என்று அழைக்கப்பட்டது.  இங்கே, பொதுமக்கள் கூடும் அரங்கங்கள், கோயில்கள் , நெற்களஞ்சியங்கள் இருக்கும். மொஹெஞ்சதாரோ நகரத்தில் பொதுக் குளியலறை இருந்தது.

தரைமட்டப் பகுதிதான் மக்கள் வசிக்கும் இடம். இங்கே சாலைகள் 30 மீட்டர் அடி அகலம் கொண்டவை. எல்லாச் சாலைகளும் செங்குத்தாகச் சந்தித்தன. இதனால், சாலைகளுக்கு நடுவே இருந்த பகுதிகள் செவ்வக வடிவம் கொண்டவை.  இந்தப் பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டன.  கட்டுமானத்துக்கு உலையில் சுடப்பட்ட செங்கற்களைப் பயன்படுத்தினார்கள். இவை 1:2:4 என்னும் விகிதத்தில் உயரம், அகலம், நீளம் என சமச் சீரானவை. ஒரு சில வீடுகள் மிகப் பெரியவை. மாடி வீடுகளும் இருந்தன. பெரிய வீடுகளில் விசாலமான முற்றம் இருந்தது.

பண்டைய நாகரிகங்களில் சிந்து சமவெளியில்தான் மிகச் சிறந்த சுகாதார வசதிகள் இருந்தன. எல்லா வீடுகளிலும், குடிநீர் வசதிகளும், குளியல் அறைகளும், கழிப்பறைகளும் இருந்தன.  ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? நகரங்களில் கழிவுநீர் வடிகால் அமைப்பு இருந்தது. எல்லா வீதிகளிலும் மூடிய சாக்கடைகள் இருந்தன. வீடுகளின் அசுத்த நீர் இவற்றில் சென்று சேரக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன.  5000 வருடங்களுக்கு முன்னால், இத்தனை கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட நகரங்களும், வீடுகளுமா?

நெற்களஞ்சியங்கள் பிரம்மாண்டமானவை – 150 அடி நீளம், 75 அடி அகலம், 15 அடி உயரம். அதாவது, 1,68.750 அடி கொள்ளளவு. இவற்றுள் 3 வரிசைகள், 27 சேமிப்புக் கிடங்குகள்! இந்து சமவெளியின் விவசாயச் செழிப்புக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இன்னொரு முக்கிய அம்சம், பொதுக் குளிப்பிடங்கள். வட்டச் சுவர்கொண்ட உயரமான கிணறுகள், படிக்கட்டுகளுடன் நீள்சதுரப் பொதுக் குளியல் துறைகள், அதைச்சுற்றிலும் சிறிய குளியல் அறைகள்.  இவற்றுள் பிரம்மாண்டம், மொஹெஞ்சதாரோவில் இருந்த பெரும் குளியலறை (கிரேட் பாத்) 179 அடி நீளமும், 107 அடி அகலமும் கொண்ட பகுதி இது. மையத்தில் 39 அடி நீளம், 23 அடி அகலம், 8 அடி ஆழம் கொண்ட நீச்சல் குளம். அடியில் தண்ணீர் தேங்கி நிற்பதற்காகச் செங்கற்கள் நெருக்கமாகப் பதிக்கப்பட்டிருந்தன. குளத்தின் உள்ளே ஏறி, இறங்க வசதியாக இரண்டு பக்கங்களிலும் படிக்கட்டுகள் இருந்தன.

குளத்தைச் சுற்றி ஆடைகள் மாற்றுவதற்கான அறைகள் இருந்தன. அவற்றில்  கிணறுகள் இருந்தன. கிணறுகளுக்குள் தண்ணீர் இறைத்துக் குளத்துக்குள் பாய்ச்சலாம். குளத்தின் அழுக்கு நீரை வெளியேற்ற வடிகால் குழாய்கள் இருந்தன.

நகரங்களில் இருந்த கட்டடங்கள் வியக்க வைப்பவை. சுட்ட செங்கற்களால் அமைக்கப்பட்ட இவற்றில், சிமெண்ட் போன்ற சுண்ணாம்பும், செம்மண்ணும் சேர்ந்த ஒரு கலவையைப் பயன்படுத்தினார்கள். அருகருகே இரண்டு செங்கற்களை வைத்து, அவற்றின் நடுவே இன்னொரு செங்கல்லைப் பொருத்தி, கலவையைப் பூசினார்கள். உறுதியான கட்டடங்களை உருவாக்கும் இந்தப் பொறியியல் அறிவு நம்மை வியக்கவைக்கிறது.

நகரங்களுக்கு வெளியே, விசாலமான கோட்டைகள் இருந்தன. அவற்றுக்குள்ளும் வீடுகள் – சில மிகப் பெரியவை, பல சிறியவை. வெள்ளம், எதிரிகள் தாக்குதல் ஆகியவை நடந்தால், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, ஆட்சிபீடத்தில் இருந்தவர்கள் இந்தக் கோட்டைவீடுகளைப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஆட்சி முறை  

இத்தனை வரைமுறைகளோடும், ஒழுங்காகவும் நகரங்களும், கிரமங்களும் இருந்தமையால், நிச்சயமாகக் கட்டுக்கோப்பான ஒரு தலைமை ஆட்சி செய்திருக்கவேண்டும். அகழ்வில் கிடைத்திருக்கும் முத்திரைகளும் இதை நிரூபிக்கின்றன. வணிகர்களின் விற்பனைப் பொருட்களை மேற்பார்வையிடவும், அரசுக்கான வரிப்பணம் வசூலிக்கப்பட்டுவிட்டதா என்பதை மேற்பார்வை செய்யவும், இந்த முத்திரைகள் அடையாளங்களாக உதவியிருக்கலாம். ஆனால், இவற்றுள் பல முடிவுகளின் அடிப்படை ஆதாரங்கள், பல அனுமானங்கள். விடை இல்லாத பல வினாக்கள் உண்டு:

 • பரந்து விரிந்து கிடந்த சிந்து சமவெளி வட்டாரம் ஒரே பேரரசின் கீழ் இருந்ததா, எனில் பேரரசர் யார்?
 • ஒரே குடும்பம் தொடர்ந்து ஆண்டதா?
 • தலைநகரம் எது?
 • ஒரே மன்னர் ஆண்ட ஆட்சியா அல்லது ஏராளம் குறுநில மன்னர்களோடு பேரரசர் பகிர்ந்துகொண்ட கூட்டாட்சியா?
 • நிர்வாக அமைப்பு எப்படி வடிவமைக்கப்பட்டிருந்தது?

சமூக வாழ்க்கை

சிந்து சமவெளி நாகரிகம் ஆணாதிக்கச் சமுதாயமாக இருந்தது. இதைப் போலவே, சமூகத்தில் இரண்டு வர்க்கங்கள் இருந்தன. ஆட்சியாளர்கள், வியாபாரிகள், பூசாரிகள் ஆகியோரிடம் பணம் / பதவி / அதிகாரம் இருந்தது. இவர்கள் உயர் மட்டத்தினர். இவர்கள் வீடுகளுக்கும், சாமானியர்  வீடுகளுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். முதலாவதாக, வீடுகளின் அளவில் வித்தியாசம். பெரிய வீடுகளில் முற்றம், பல குளியலறைகள், ஏராளமான அறைகள் எனப் பல வசதிகள். சிறிய வீடுகளில் அடிப்படை வசதிகள் மட்டுமே.

உடையிலும், சாமானியர் எளிய சணல் ஆடைகளை அணிந்தார்கள். செல்வந்தர்கள் பருத்தி ஆடைகளில் பவனி வந்தார்கள். பெரும் குளியலறைகள் பணம், பதவி படைத்தவர்களின் ஏகபோக உரிமை. பொதுஜனங்கள் பொதுக் கிணறுகளில் குளித்தார்கள்.

வசதி படைத்தவர்கள் தங்கள் வீடுகளிலும் வியாபாரத்திலும் வேலைக்காரர்களையும், அடிமைகளையும் பயன்படுத்தினார்கள். அடிமைகள் எஜமானர்களின் “சொத்துக்கள்.”  அவர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். அடிமைகள் வியாபாரம் அனுமதிக்கப்பட்டிருந்தது. சிந்து  சமவெளி அடிமைகள் மெசப்பொட்டேமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது சாதாரண வழக்கம்.

தொழில்கள்

வியாபாரம்

ஏராளமானவர்கள் ஈடுபட்டிருந்த விவசாயம், வியாபாரத்துக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தது.  விவசாயிகள் உபரித் தயாரிப்பை நகரங்களுக்கும், அண்டைய நாடுகளுக்கும் விற்பனை செய்தார்கள். தானியங்களை எடைபோட்டு விற்க, எடைக் கற்களைப் பயன்படுத்தினார்கள். இவை கல், களிமண், உலோகம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை.

வியாபாரம் பண்டமாற்று முறையில் நடத்தப்பட்டது. பணம் புழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கிராமத்து விவசாயிகள் உணவுப் பொருள்களை  நகரத்தாரிடம் கொடுத்து, ஆடைகள், நகைகள் ஆகியவற்றைப் பகரமாகப் பெற்றார்கள். காலப்போக்கில், பிற தொழில்களுக்குத் தேவைப்பட்ட மாக்கல், செம்பு, வெண்கலம், தங்கம், வெள்ளி, பீங்கான், பருத்தி, கடல் சங்கு ஆகிய பொருள்களைப் பெறும் வழக்கம் வளர்ந்தது. சாலைச் சரக்குப் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிகள் பயன்படுத்தினார்கள்.

சிந்து நதியின் துணையால், படகுப் போக்குவரத்து எளிமையாக இருந்தது, பிற நாடுகளோடு வியாபாரம் நடத்த வழி வகுத்தது. இதனால், சிந்து சமவெளியினரின் வணிக உறவுகள் தொலைதூர மெசப்பொட்டேமியா வரை நீண்டன. சிந்து சமவெளிப் பொருட்களை விற்பதற்காகவே, ஆப்கனிஸ்தானில் தனிச்சந்தை ஒன்று இருந்தது. மத்திய ஆசியப் பகுதிகளுடன் வியாபாரம் செய்ய இந்தச் சந்தை உதவியது.

குஜராத் மாநிலத்தில் லோதால் நகரம், அகமதாபாத் பவநகர் பாதையில், அகமதாபாதிலிருந்து 85 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஏராளமான மணிமாலைகள், வளையல்கள், நகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், செம்பு உருக்கும் தொழிற்சாலைகள், வெண்கலத் தயாரிப்புத் தொழிற்கூடங்கள் இங்கே இருந்தன. இந்தத் தொழிற்கூடங்கள் 2400 சதுர அடியும், பதினான்கு அறைகளும் கொண்டவையாக இருந்தன. லோதாலின் முக்கிய ஏற்றுமதி மணிமாலைகளும், நகைகளும்: முக்கிய இறக்குமதி அரேபிய நாடுகளிலிருந்து செம்பு வார்ப்புக் கட்டிகள். ஏற்றுமதி, இறக்குமதியால் விறுவிறுப்பாகச் சுழன்ற லோதால் துறைமுகம் சிந்து சமவெளி நாகரிக ஏற்றுமதியின் மையப்புள்ளி.

கை நெசவு

அன்றைய சிந்து சமவெளியினர் சணலிலும், பருத்தியிலும் ஆடைகள் நெய்தார்கள். நூல் நூற்கும் தக்கிளிகள், தறிகள், சாயம் தோய்த்த பருத்தி ஆடைகள் என இதற்குப் பல ஆதாரங்கள்!

களிமண் பொருட்கள்  

களிமண், சிந்து சமவெளி முன்னேற்றத்தின் அற்புத வெளிப்பாடு. நகரங்களிலும், கிராமங்களிலும் சூளைகள் இருந்தன. நெருப்பின் சூடு எல்லாப் பாத்திரங்களுக்கும் சமமாகக் கிடைக்கும்படி சூளைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம், எப்படித்தான் செய்தார்களோ என்று நம்மை ஆச்சரியப்படவைக்கிறது.

களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள், சட்டிகள், கலயங்கள், ஜாடிகள், அடுக்களை சாமான்கள் குயவர் சக்கரத்தால் உருவாக்கப்பட்டு, உலைகளில் சுடப்பட்டன. சில பானைகளில் மயில் வடிவ ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.

0

மதயானைக் கூட்டம் – தமிழின் முக்கியமான படம்

Madha_Yaanai_Kootamசிறந்த தமிழ்த் திரைப்படங்கள் எவையுமே தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதில்லை என்பது நமது சாபம். அந்த சாபத்தைப் போக்கும் வகையில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வருவதுண்டு. விருமாண்டி, ஆடுகளம், வம்சம், சுப்ரமணியபுரம், காதல் போன்றவை. அந்த வகையில் இன்னொரு திரைப்படம், அதுவும் வம்சம், விருமாண்டி படங்களின் பலவீனங்கள் இல்லாமல் சிறப்பான ஒரு திரைப்படமாக ‘மதயானைக் கூட்டம்’ உருவாகியிருக்கிறது.

ஒருவனின் இரண்டு மனைவிகளுக்குள்ளான உணர்ச்சிகள், அவர்களின் வாரிசுகளுக்குள்ளே எழும் பிரச்சினைகளை மணி ரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ நகர்ப்புற எலைட்டுகளின் வாழ்க்கையை மையமாக வைத்துச் சொன்னது என்றால், மதயானைக் கூட்டம் அதே பிரச்சினைகளை கிராமத்தையும் ரத்தமும் சதையுமான மனிதர்களை முன்வைத்துப் பேசுகிறது. அதுவும் அக்னி நட்சத்திரம் செய்யத் தவறிய நுணுக்கங்களோடு.

திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்தே கதை தொடங்கிவிடுகிறது. கதையைச் சொல்லத் தொடங்கும் விதமும் அக்கதை மெல்ல நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் விதமும் அழகு. திரையெங்கும் உண்மையான மனிதர்களை உலவவிட்டது போன்ற நடிகர்களின் கச்சிதமான தேர்வு, நடிப்பு. நல்ல பின்னணி இசை (ரகுநந்தன்). காட்சிக்கேற்ற பாடல்கள். மிகத் திறமையான பாடல் வரிகள் (ஏகாதசி). மனதை அள்ளும் ஒளிப்பதிவு. அதிலும் காட்சிகளின் மாறும் தன்மைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறம் என எல்லாவற்றிலும் மதயானைக் கூட்டம் நம்மைக் கட்டிப் போடுகிறது.

திரைக்கதையை மிகச் செறிவாக மிகக் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள். ஒரு எதிர்பாராத சாவும், அதைத் தொடர்ந்து வரும் இரண்டு கொலைகளும் நம்மை பரபரப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. இந்த சாவுக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருக்கும் நுணுக்கமான விதம் தனியே சொல்லப்படவேண்டியது. பொதுவாகவே இயக்குநர்கள் நுணுக்கமான காட்சிகளில் அத்தனை கவனம் செலுத்துவதில்லை. கதை நிகழும் இடம், அதோடு தொடர்புடைய மனிதர்கள், அவர்கள் பேச்சு வழக்கு, அவர்களது பாரம்பரியம் என எல்லாவற்றையும் நுணுக்கமாகப் பார்த்துப் பதிவு செய்வது மிக முக்கியமானது. பார்வையாளர்கள் இதன் எல்லா நுணுக்கங்களையும் புரிந்துகொள்ளாமல் போகலாம். ஆனால் இந்த நுணுக்கங்கள் தரும் ஒட்டுமொத்த மனப்பதிவு அபாரமானது. அதையே மதயானைக் கூட்டம் சாதித்திருக்கிறது.

நம்மிடம் கதை இல்லை, எல்லாக் கதைகளும் எடுக்கப்பட்டுவிட்டன என்று சொல்வதெல்லாம் ஹம்பக் என்பதை இப்படம் மீண்டும் நிரூபிக்கிறது. எத்தனையோ கதைகளை நம் மண்ணோடு பொருத்தி மீண்டும் மிக அழகாக எடுக்கலாம் என்பதற்கு மதயானைக் கூட்டம் இன்னொரு உதாரணம். அந்த வகையில் இது முக்கியமான படம்.

ஒரு சில குறைகள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்னும் அளவுக்கு திரைப்படம் சிறந்து விளங்குகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். ஆனால் படத்துக்கு இசை ரகுநந்தன். இளம் படைப்பாளிகளின் இந்தப் போக்கு ஆரோக்கியமானது.

இப்படத்தில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். வீரச் சந்தானம் (அவள் பெயர் தமிழரசி), வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்) வரிசையில் இப்படத்தில் வேல ராமமூர்த்தி. விருதும் பெற்றுவிடுவார்.

பாடலாசிரியர் ஏகாதசி இதற்குமுன் என்ன என்ன பாடல்கள் எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. இப்படத்தில் பாடல்களை மிகச் சிறப்பாக, படத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு எழுதியிருக்கிறார்.

இப்படம் தேவர்களின் ஜாதிப் பெருமையைப் பேசுகிறது என்று மேம்போக்கான விமர்சனங்கள் எழக்கூடும். நம் வாழ்க்கையைப் பேசவேண்டுமென்றால், அதற்குரிய சில குணங்களை நாம் பேசித்தான் ஆகவேண்டும். அதை மட்டுமே இந்தப் படம் செய்திருக்கிறதே ஒழிய, வலிந்த ஜாதிப் புகழ் மாலைகள் இல்லை. மிகத் தெளிவாக இப்படம் ஒரே ஜாதிக்குள், அதாவது தேவர்களுக்குள் நிகழும் மோதலையே காட்சிப்படுத்தியிருக்கிறது. அவர்களே அவர்களைப் பற்றிய மிதமிஞ்சிய புகழுரைகளைப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களே அவர்களைப் பற்றிய இகழ்ச்சியையும் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களே நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாறி மோதிக் கொள்கிறார்கள். நம்பிக்கைத் துரோகிகளாகிக் கழுத்தை அறுத்துக் கொள்கிறார்கள்.

மிகச் சாதாரணமான கதையை, அதற்குரிய களத்தில், அக்களத்துக்குரிய விவரணைகளோடு வைத்து, நம் படத்தை நாம் திரையில் பார்க்கிறோம் என்கிற பெருமிதத்தைக் கொண்டு வந்திருக்கிறது மதயானைக் கூட்டம். பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்திருப்பதால், படத்தோடு எளிதில் ஒன்றிவிட முடிகிறது. ஆடுகளத்தில் வசனம் எழுதிய விக்ரம் சுகுமாரன் மிகச் சிறப்பாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். சிறந்த இயக்குநர் விருது நிச்சயம். இயக்குநர் விக்ரம் சுகுமாரனும், தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷும் பாராட்டுக்குரியவர்கள்.

மதயானைக் கூட்டம் – 56%

தமிழ்பேப்பர் திரை விமர்சனக் குழு

அணு ஆயுதப் போர் – தப்பிக்கும் வழிகள்

உலக நாடுகள், தங்களுக்குள் போர் செய்யும் போது, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், ஏராளமான உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதோடு, எதிர்கால சந்ததியினரையும் கடுமையாகப் பாதிக்கும். இந்தியா – பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாகத் தீராத சிக்கல்கள் உள்ளன. ஏற்கெனவே, மூன்று முறை  இரு நாடுகளிடையே போர் நடந்துள்ளது. எனினும் இனி வரும் காலங்களில் இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டால் அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு அணு ஆயுதப் பிரயோகம் நிகழ்ந்தால் 200 கோடி பேர் கடுமையாகப் பாதிக்கப்படுவர். இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஏராளமானோர் கொல்லப்படலாம்.

சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்களின் கருத்து இது.

Nuclear-War-Americaஇரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில்தான் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினார்கள். ஆனால்,  மூன்றாம் உலகப் போர் அல்லது அடுத்த இந்தியா – பாகிஸ்தான் போர் நடைபெற்றால், அதன் தொடக்கத்திலேயே அணு ஆயுதம் பயன்படுத்தப்படலாம். அப்போரில் பரிதாபமாகப் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்களே.

அணு ஆயுதத்தின் கொடூர விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள கூகுள் உதவியால், ஐப்பானில் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் விழுந்த அணுகுண்டுகளின் பின்விளைவுகளைப் பார்க்கவும். அவை சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட அணுகுண்டுகள். இப்போது போர் மூண்டால் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட நவீன அணுகுண்டுகள்தானே பயன்படுத்தப்படும். அவற்றின் தாக்கம் 50 மடங்குகளுக்கும் அதிகமாக இருக்கும்.

உலக மக்கள் அனைவரும் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். ஆனால், உலக அரசுகள் அவ்வாறு விரும்புகின்றனவா? சின்ன நாடுகள் கூடத் தன் வலிமையை ஆயுதத்தின் வழியாகத்தான் உலகுக்குக் காட்ட விரும்புகின்றன. உலகப் போர்களைப் பேசித் தீர்த்துக்கொள்ள எந்த நாடும் விரும்புவதில்லை. எந்த நாடும் தன் ஆயுதப் பலத்தால்தான் பெரும்போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளன. அணு ஆயுதத்தால் விளையும் அமைதி மயான அமைதி. அந்த அமைதியைத் தரிசிக்க வெட்டியான் கூட மிஞ்சமாட்டான்.

அணு ஆயுதப் போர் தொடங்கினால் அரசால் போரை முன்னின்று நடத்துவதற்குத்தான் நேரமிருக்கும். முதன்மைத் தலைவர்கள் தப்பியோடவே முனைப்பாக இருப்பர். அவர்களுக்குப் பொதுமக்களைக் காக்கும் வழி தெரியாது. அணு ஆயுதப் போரிலிருந்து இறைப் பிராத்தனைகளாலோ அல்லது அமைதிப் பேச்சுவார்த்தைகளாலோ தப்பிவிட முடியாது. தன் கையே தனக்கு உதவி எனப் பொதுமக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளவேண்டும். எப்படி?

அணு ஆயுதப் போருக்கான முகாந்திரம் தெரியவந்தால் உடனடியாகப் பொதுமக்கள் பின்வரும் 15 வழிமுறைகளை ஒருமனதாக மேற்கொள்ளவேண்டும்.

 1. உங்களுக்கு அசையாச் சொத்துக்கள் இருந்தால் உடனடியாக யார் கேட்டாலும் கேட்ட விலைக்கு விற்றுப் பணமாக்கவும்.
 2. உங்களின் இருக்கும் அசையும் சொத்துக்களை முடிந்தால் விற்கவும் அல்லது எடைக்குப் போட்டுப் பணமாக்கவும்.
 3. பாண்டுப் பத்திரங்கள் இருந்தால் முடிந்தால் அவற்றை உடனடியாகத் திருப்பிக் கொடுத்துப் பணமாக்கிக்கொள்க.
 4. வட்டிக்குப் பணம் கொடுத்திருந்தால் உடனடியாக வசூலித்துக்கொள்க. வட்டிக்குப் பணம் வாங்கியிருந்தால் வழக்கம்போல அதனைத் திருப்பிக்கொடுக்க மறந்துவிடுங்கள்.
 5. பங்குச்சந்தையில் பணம் முதலீடு செய்திருந்தால் நஷ்டமானாலும் அனைத்துப் பங்குகளையும் விற்றுப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
 6.  தனியார் சிட்பண்டு, வங்கி, தபால்துறையில் பணம் வைத்திருந்தால் அவற்றை முழுவதுமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
 7. வீட்டில் உள்ள, தங்களின் உடலில் உள்ள அனைத்து தங்க, வைர நகையையும் விற்று விடவும். வெள்ளிப்பொருட்களையும் விற்கவும்.
 8. இப்போது தங்கள் கையில் 50,000த்தை மட்டும் வைத்துக்கொண்டு மீதியுள்ள அனைத்து தொகைக்கும் (நிலம், வீடு, அசையும் சொத்துக்கள், நகைகளை விற்ற தொகை, பங்குச் சந்தையில் பெற்றவை போன்ற அனைத்து வகையிலும் வந்த முழுத் தொகைக்கும்) தரமிகுந்த வைரக் கற்களை வாங்கிப் பத்திரமாகக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். எக்காலத்திலும் எந்தநாட்டிலும் மீண்டும் விற்கக்கூடிய, விலையுயர்ந்த, சுமைகுறைந்த, மறைத்துவைக்க ஏற்ற பொருள் அது மட்டுமே.
 9. ஆளுக்கு மூன்று ஜோடி துணிமணிகளும் நடுநாள் கெட்டுப் போகாத தரமிகுந்த, சத்துநிறைந்த உணவுப் பொருட்களை உங்களால் சுமக்க முடிந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். நோயாளிகளாக இருந்தால் மருந்து, மாத்திரைகளை அதிக அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
 10. முக்கியமானப் பொருட்கள் அல்லது நினைவுச் சின்னங்கள் எவற்றையும் எடுத்துச் செல்லாதீர்கள். அவற்றை மனத்தில் மட்டுமே சுமந்துகொள்ளுங்கள். உங்களின் சுமை வைரமாகவும் உணவாகவும் மட்டுமே இருக்கட்டும்.
 11. உங்கள் வீட்டாரில் யாரேனும் நெடும் பயணத்திற்கு ஏற்றவராக இல்லை எனில் கல்மனத்தோடு அவர்களை அங்கேயே விட்டுவிடுங்கள். அதற்காக மனத்தைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
 12. உங்கள் வளர்ப்புப் பிராணிகளுக்குப் பிரியாவிடை தந்துவிடுங்கள்.
 13. அணுஆயுதப் போரின்போது பதுங்கு குழிகள் அமைத்துத் தப்பிக்க முடியாது. அணுக்கதிர்வீச்சு சில ஆண்டுகள் வரை வீரியமாகவே இருக்கும். எத்தனை ஆண்டுகளுக்குப் பதுங்கு குழிக்குள் உங்களால் இருக்க முடியும்?  ஆதலால், நாட்டை விட்டுச் செல்லுதலே சிறப்பு. (புலம்பெயர்தல் தமிழர்களுக்குப் புதிதல்லவே). “தாய்மண்ணே வணக்கம்!“ என்று நம் நாட்டுக்கு ஒரு கிரேட் சல்யூட் அடித்துவிட்டுப் புறப்படுங்கள்.
 14. வான்வழியாகவோ அல்லது கடல்வழியாகவோ அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் சென்றுவிடவும். அல்லது லட்சத்தீவுகளுக்கு அல்லது போரின் சுவடு இல்லாத ஏதாவது ஒரு குட்டி நாட்டுக்கு ஓடிவிடவும். பெரிய நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். காரணம், அங்கும் அணுகுண்டு விழலாம்.
 15. சட்டப்படியோ அல்லது அகதியாகவோ அங்கேயே சில ஆண்டுகள் தங்கிவிடுங்கள். அல்லது அங்கேயே வேர்ப்பதித்துக் கொள்ளுங்கள். மக்கள்தான் நாட்டுக்குச் சொந்தமில்லை. ஆனால், உலகம் அனைத்துயிருக்கும் (மக்களுக்கும்) சொந்தம்தானே!

உலக அரசுகளே! உணவுப் பொருட்களைப் போல ஆயுதங்கள் கெட்டுப்போகும் பொருட்கள் அல்ல. ஆதலால், அவற்றைத் தங்களால் முடிந்த அளவிற்குப் பயன்படுத்தாமலே வைத்திருங்கள்.

நம்காலத்திலும் நமக்குப் பின்னான காலத்திலும் போர், குறிப்பாக அணுஆயுதப்போர் நிகழாமல் இருக்க உலக அரசுகளை (இறைவனை அல்ல) வேண்டுவோம்.

0

சிந்து சமவெளி நாகரிகம்

310px-Mohenjodaro_Sindhபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 24

வெளிச்சத்துக்கு வந்த புதையல்!

சுமேரியன், சீனா, எகிப்து நாகரிகங்களைப் பார்த்துப் பிரமித்துவிட்டோம். ஆனால், சொர்க்கமே என்றாலும், நம்ம ஊரைப் போல் ஆகுமா? இப்போது வருவது சிந்து சமவெளி நாகரிகம்.

ஆரம்பம்

1856. ஜான் பிரன்ட்டன் (John Brunton) , வில்லியம் பிரன்ட்டன்  (William Brunton) ஆகிய இருவரும் சகோதரர்கள். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். பொறியியல் வல்லுநர்கள். கிழக்கு இந்தியக் கம்பெனி (இப்போது பாகிஸ்தானில் இருக்கும்) கராச்சிக்கும், முல்த்தான்  என்னும் நகரத்துக்குமிடையே ரயில் பாதை போடும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதை மேற்பார்வை செய்வதற்காகச் சகோதரர்களை இந்தியாவுக்கு அழைத்திருந்தது.

கட்டுமான வேலைக்குச் செங்கற்கள் தேவைப்பட்டன. அந்தச் செலவைக் கட்டுப்படுத்த விரும்பிய சகோதரர்கள், அருகில் இருந்த பிரமனாபாத் என்னும் ஊரில் பழைய காலச் செங்கற்கள் இருப்பதை அறிந்தார்கள். அவற்றைக் கொண்டுவந்தார்கள், பயன்படுத்தினார்கள்.  அடுத்து, ஹரப்பா*  என்ற ஊரிலும் பழங்காலச் செங்கற்கள் கிடைத்தன. அவையும் ரயில் பாதை அமைக்கப் பயன்பட்டன. பிரன்ட்டன் சகோதரர்களுக்குத் தெரியாது – அவர்கள் பயன்படுத்தியவை வெறும் செங்கற்கள் அல்ல, மறைந்துவிட்ட ஒரு மாபெரும் நாகரிகத்தின் நினைவுச் சின்னங்கள் என்று.  தாங்கள் அறியாமலே, சில புராதனப் பெருமைகளை அவர்கள் அழித்துவிட்டார்கள்.

1921. ராக்கல் தாஸ் பானர்ஜி (Rakhal Das Banerjee) என்னும் ஆராய்ச்சியாளர் இந்தியத் தொல்பொருள்  ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்தார். சிந்து நதிக்கரையில் இருந்த மொஹஞ்சதாரோ * நகரத்தில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த மத ஸ்தூபி பற்றி அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஸ்தூபியைச் சுற்றியிருந்த இடங்களில் தொழிலாளிகள் நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது மண்ணுக்குள் புதைந்துகிடந்த படிக்கட்டுகளைப் பார்த்துத் திகைத்தார்கள். பானர்ஜியை  அழைத்தார்கள். அவர் இன்னும் தோண்டச் சொன்னார். தோண்டத் தோண்ட, படிக்கட்டுகள் நீண்டுகொண்டே போயின.

(* பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் சாஹிவால் மாவட்டத்தில் ஹரப்பா இருக்கிறது. இங்கிருந்து 640 கிலோமீட்டர் -தூரத்தில் சிந்து மாநிலத்தின் லர்க்கானா மாவட்டத்தில் மொஹஞ்சதாரோ உள்ளது.)

படிக்கட்டுகளுக்கு அப்பால், சுவர்கள் – அத்தனையும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை; ஒரு மாபெரும் நாகரிகம் அங்கே நிலவியிருக்கிறது என்பதை நிரூபிப்பவை.  மொஹஞ்சதாரோ என்றால், சிந்தி மொழியில் “இறந்தவர்கள் மேடு’ என்று அர்த்தம். காரணமாகத்தான் இந்தப் பெயர் வந்தது என்பது பானர்ஜிக்குத் தெரிந்தது.

மொஹஞ்சதாரோ ஆதாரங்கள்

அகழ்வாராய்ச்சியைப் புதிய உத்வேகத்தோடு தொடர்ந்தார் பானர்ஜி. தோண்டத் தோண்ட, சரித்திரச் சுவடுகள் குவிந்தன. தன் மேலதிகாரி  சர் ஜான் மார்ஷலிடம் பானர்ஜி விவரங்களைத் தெரிவித்தார். இதே நேரத்தில் சிந்து நதிக்கரையில் இருந்த ஹரப்பாவிலும் இதேபோன்ற இடிபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட மண் சாமான்கள், கட்டடங்களின் சிதிலங்கள் ஆகியவற்றில் ஒற்றுமை இருப்பதை மார்ஷல் உணர்ந்தார்.

மொஹஞ்சதாரோவுக்கும் ஹரப்பாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது. தொடர்ந்துவந்த நாள்கள் பானர்ஜியின் கண்டுபிடிப்புகள் எத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நிரூபித்தன.

பானர்ஜிக்கும், மார்ஷலுக்கும் முன்னதாகவே, பல ஆராய்ச்சியாளர்கள் மொஹஞ்சதாரோ, ஹரப்பா  பகுதிகளில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். 1826 ல் சார்ல்ஸ் மேஸன்  என்னும் பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி, “மொஹஞ்சதாரோ பகுதியில், பூமிக்கடியில் செங்கற்களால் கட்டப்பட்ட கோட்டைகள் இருப்பதாகத் தெரிகிறது “ என்று குறிப்பு எழுதினார். அவர் அகழ்வியல் ஆராய்ச்சியாளரல்ல. எனவே, அவர் கருத்து அதிகக் கவனத்தை ஈர்க்கவில்லை.

அதுவரை, கங்கை சமவெளியில்தான் நாகரிகம் உருவாகி வளர்ந்ததாக நம்பப்பட்டு வந்தது. பானர்ஜியின் அறிக்கைகளின் அடிப்படையில், இந்த நம்பிக்கை தவறு, இந்திய நாகரிகத் தொட்டில் சிந்து சமவெளிதான் என்று நிரூபிக்கும் மாபெரும் வாய்ப்புக் கதவுகளைப் பானர்ஜியின் கண்டுபிடிப்புகள் திறப்பதை மார்ஷல் உணர்ந்தார். இரண்டு பகுதிகளிலும், விரிவான அகழ்வாராய்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்தார்.

தொடங்கின முயற்சிகள். உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதிக்கு வந்து குவிந்தனர். அவர்களது ஆராய்ச்சியில் இன்னும் பல ஊர்கள் தோண்டியெடுக்கப்பட்டன.  ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி கி.மு. 2500- 1700-ல் செழிப்பின் உச்சத்தில் இருந்த சிந்து சமவெளி நாகரிகம் வெளிச்சத்துக்கு வந்தது.

நிலப்பரப்பு

சிந்து சமவெளி நாகரிகம் பிரம்மாண்டமான பதின்மூன்று லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பஞ்சாப் மாநிலங்கள், இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளைத் தன்னுள்  அடக்கி, பாகிஸ்தான் தாண்டி பலூச்சிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரையும்  வியாபித்திருந்தது. சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள்.

கிடைத்த ஆதாரங்கள்

மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கிடைத்த பல்வேறு அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் அனைத்துக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. இவை அத்தனையும் ஒரே நாகரிகத்தின் சின்னங்கள்தாம் என்பதை இந்தப் பொதுத்தன்மை நிரூபிக்கிறது.  களிமண் சாமான்களை உருவாக்குதல், செங்கல் தயாரித்துக் கட்டடங்கள் கட்டுதல், நகர நிர்வாகம், குடியிருப்பு அமைப்புகள் போன்ற துறைகளில் அன்றைய சிந்து சமவெளியினர் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதை இந்த ஆதாரங்கள் சந்தேகமே இல்லாமல் நிரூபிக்கின்றன.

விவசாயம்

சிந்து சமவெளிப் பகுதி பல நகரங்களும், ஏராளமான கிராமங்களும் கொண்டது. மொத்த உணவுப் பொருட்களும் கிராம விவசாயிகள் தயாரித்தார்கள். விரிந்து பரந்த நிலங்களில் விவசாயம் செய்தார்கள். மாடுகளால் இழுக்கப்பட்ட ஏர்களை நிலம் உழுவதற்குப் பயன்படுத்தினார்கள். பல கலப்பை பொம்மைகள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. தங்கள் வாழ்வின் ஆதார சுருதியாக, அவர்கள் கலப்பைகளை மதித்ததால், இதன் அடையாளமாகத் தங்கள் குழந்தைகளுக்கு அவற்றை பொம்மைகளாகக் கொடுத்திருக்கலாம்.

மழை காலங்களில் சிந்து நதியில் வெள்ளம் பெருகி ஓடும். வெள்ளம் வடியும்போது, நிலங்களைச்  செழுமையாக்கும். அப்போது சிந்து சமவெளிச் சகோதரர்கள் விதை விதைப்பார்கள், விவசாயம் தொடங்குவார்கள். நதியிலிருந்து கால்வாய்கள் வெட்டி, விவசாயத்துக்குப் பயன்படுத்தினார்கள்.  கிணற்று நீரும் பயன்படுத்தப்பட்டது. கோடை காலங்கள், குளிர் காலங்கள் என்னும் இரு பருவ விவசாயம் நடத்தினார்கள். கோடை காலங்களில்  திணை, எள், பருத்தி ஆகியவை பயிரிட்டார்கள். கோதுமை, பார்லி, ஆளி விதை, கடுகு, பட்டாணி ஆகியவை குளிர்காலப் பயிர்கள். சணல் இரண்டு பருவங்களிலும் வளர்க்கப்பட்டது. நெல் விவசாயம் நடந்ததா என்று தெரியவில்லை.

உலகத்திலேயே, சிந்து சமவெளியில்தான்  பருத்தி முதன் முதலாகப் பயிரிடப்பட்டது. பருத்திக்குக் கிரேக்க மொழியில் சிந்தோன் என்று பெயர். சிந்து சமவெளியிலிருந்து, கிரேக்கத்துக்குப் பருத்தி ஏற்றுமதி ஆகியிருக்கவேண்டும் என்பதற்கு இது சான்று என்பது வரலாற்றாளர்களின் யூகம்.

அறுவடைக்காக, அரிவாள் போன்ற கருவிகள் பயன்படுத்தினார்கள். இவை பெரும்பாலும் கற்களாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்டிருந்தன.  உபரி தானியங்களைப் பாதுகாத்துவைக்கும் களஞ்சியங்களும் இருந்தன.

வீட்டு மிருகங்கள்

அகழ்வாராய்ச்சிகளில், ஏராளமான காளை மாடுகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. அன்றைய கால முத்திரைகளிலும், ஓவியங்களிலும் காளை மாடுகளின் உருவம் முக்கிய இடம் பெறுகிறது. ஏர் பூட்டி உழுவதற்கும், தானியப் போக்குவரத்துக்கும் பயன்பட்டு, அவர்கள் வாழ்வில் காளை மாடுகள் முக்கிய இடம் வகித்ததற்கு இவை முக்கிய அடையாளங்கள்.

பிற்காலத்தில் பசு வளர்ப்பு தொடங்கியது: பால் அன்றாட வாழ்க்கை உணவானது. ஆடுகள், யானைகள், ஒட்டகங்கள், கழுதைகள், நாய்கள், பூனைகள் ஆகியவை வளர்க்கப்பட்டன. ஆட்டு இறைச்சி உணவானது. அதன் ரோமம் குளிர்கால உடைகளின் மூலப் பொருளானது. வீட்டுக் காவலுக்கு நாய்கள். தானியங்களைச் சூறையாடும் எலிகளை அழிக்கப் பூனைகள். யானைகள், ஒட்டகங்கள், கழுதைகள் போன்றவற்றை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை.

உணவு

கோதுமை, பார்லி, திணை, பால், மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன்  ஆகியவை முக்கிய உணவுகள். விவசாயத்தோடு, வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ஆகியவையும் முக்கியத் தொழில்களாக இருந்தன. எருமையை ஒரு மனிதன் வேட்டையாடும் முத்திரைச் சின்னங்கள் கிடைத்துள்ளன. இன்னும் பல முத்திரைகளில் மீன், படகுகள், வலை ஆகிய உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

உடைகள்

பருத்தி உற்பத்தியில் சிந்து சமவெளி முன்னோடியாக இருந்தபோதும், உயர் மட்டத்தினர் மட்டுமே பருத்தி ஆடைகள் அணிந்தனர். எளிய மக்கள் சணல், கம்பளி ஆடைகளைப் பயன்படுத்தினார்கள்.

0

காகிதம் முதல் மம்மி வரை

mummy-in-casket_shutterstock_1533285பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 23

மொழி, இலக்கியம் ஆகிய நுண்கலைகளில் முன்னணியில் நின்ற எகிப்து, கட்டடக் கலையில் உச்சங்கள் தொட்டதைப் பார்த்தோம். அறிவியலின் பல துறைகளிலும் எகிப்தியர்கள் கொடி கட்டிப் பறந்தார்கள்.

கண்டுபிடிப்புகள்

காகிதம்

கி.பி. கே லுன் என்னும் சீன அறிஞர் சணல், துணி, மீன் பிடிக்கும் வலைகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கூழாக்கி, அவற்றால் மெல்லிய பாளங்களை உருவாக்கினார். இதுதான்  காகிதத்தின் தொடக்கம் என்று பார்த்தோம்.

எகிப்தின் ரசிகர்கள் சொல்லும்  வரலாற்றுச் செய்தி வித்தியாசமானது. Papyrus  என்னும் நாணல் நைல் நதிக் கரைகளில்  வளர்கிறது. இதற்குக் காகிதத் தாவரம் என்னும் காரணப் பெயரும் உண்டு. எகிப்தியர்கள் இந்த நாணலால் காகிதம் தயாரித்தாதர்கள். பேப்பர் என்னும் ஆங்கிலப் பெயரே, பேப்பிரஸ் என்னும் எகிப்திய வார்த்தையிலிருந்து வந்ததுதான். ஆகவே, காகிதம் கண்டுபிடித்தவர்கள் எகிப்தியரே என்பது இவர்களுடைய ஆணித்தரமான வாதம்.

கடிகாரங்கள்

கடிகாரத்தைப் பயன்படுத்தியவர்களில் எகிப்தியர்கள் முன்னோடிகள். ஆரம்ப நாட்களில், சூரிய நிழலை அடிப்படையாகக் கொண்ட சூரியக் கடிகாரங்களைப்  பயன்படுத்தினார்கள். நான்கு முகத் தூண் இருக்கும். இதன் நிழலை வைத்து, காலை, பகல், மாலை ஆகிய வேளைகளைக் கணக்கிட்டார்கள்.

அடுத்த கட்டமாக நீர்க் கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன.  கி.மு. 1400 வாக்கில் இவை புழக்கத்தில் இருந்தன.  தலைகீழ்க் கூம்பு வடிவத்தில் கல்லால் செய்யப்பட்ட பாத்திரம் இருக்கும், இதன் அடிப்பாக ஓட்டை வழியாக, தண்ணீர் வெளியேறும். பாத்திரத்தில் 12 அளவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். பாத்திரத்தில் தண்ணீரின் அளவை வைத்து எகிப்தியர்கள் நேரத்தைக் கணக்கிட்டார்கள்.

நேரம் அளக்கத் தெரிந்துவிட்டது. அடுத்தது என்ன? நாள்காட்டிகள் என்னும் காலெண்டர்களும் எகிப்தியரால் கண்டுபிடிக்கப்பட்டன.

மருத்துவம்

அந்தப் பிராந்தியத்தில் சிறந்த டாக்டர்கள் எகிப்தில்தான் இருந்தார்கள். பக்கத்து நாட்டு நோயாளிகள் சிகிச்சை பெற எகிப்து வருவது வழக்கம். இந்த டாக்டர்கள், நோயாளிகளின் உடலை நன்றாகச் சோதித்த பின், எந்தச் சிகிச்சை அவருக்குச் சரியாகும் என்று சிந்தித்து முடிவெடுத்தார்கள். மூலிகை மருந்துகள்,  தாயத்துகள் போகப் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.

எகிப்து மருத்துவர்கள் அறுவை சிகிற்சையிலும் நிபுணர்கள். அவர்கள் காயங்களுக்குத் தையல் போட்டார்கள், எலும்புகள் முறிந்தால் கட்டுகள் போட்டார்கள். ஏன், சில சமயங்களில் உறுப்புகளைத் துண்டிக்கும் அறுவை வைத்தியம்கூட செய்திருக்கிறார்கள்.
அறுவை சிகிச்சைக்கு அவர்கள் பயன்படுத்திய வகை வகையான கருவிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.

காயங்கள் குணமாக, அவற்றின் மேல் மாமிசம், தேன் ஆகியவற்றை வைத்து அதன்மேல் பாண்டேஜ் கட்டினார்கள். தேன் நல்ல கிருமிநாசினியாம். காயம் அழுகாமல் இருக்க, பரவாமல் இருக்க, தேன் உதவியது. காயங்களால் ஏற்படும் வலியைக் குறைக்க அபின் என்ற போதை மருந்து பயன்பட்டது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்த்தால், ஆரோக்கியம் பெருகும், ஆஸ்த்மா போன்ற நோய்கள் அண்டாது என்பது அவர்கள் கண்டறிந்த உண்மை.

மம்மிகள்

எகிப்தியரின் மருத்துவத் துறை முன்னேற்றத்துக்கு மம்மிகள் அற்புதமான உதாரணங்கள். மம்மி என்றால் புதைப்பதற்காகப் பாதுகாக்கப்பட்ட உடல். உள் உறுப்புகளை எடுத்தல், உப்புத் தொட்டிக்குள் அமிழ்த்தி வைத்தல், மெழுகுகொண்டு பதனிடுதல், பின் லினன் துணிகளால் பாண்டேஜ்போல் சுற்றுதல் ஆகிய முறைகளைப் பயன்படுத்தினார்கள்.  Mumo என்றால் மெழுகு. அதனால்தான் இந்த மேக்கப் போட்ட உடலுக்கு  மம்மி என்று பெயர். மம்மி செய்ய உடற்கூறு, அறுவை சிகிச்சை, மருத்துவம் ஆகிய துறைகளின் அறிவு தேவை. எகிப்தியர்கள் அறிந்திருந்தார்கள்.

இறந்த பின்னும், கடவுள் அவதாரங்களான மன்னர்கள் உயிர் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில், மம்மி வடிவத்தில் அவர்கள் உடல் கெடாதவாறு பாதுகாத்து, அவற்றின் மேல் பிரம்மாண்ட பிரமிட்கள் கட்டினார்கள் . விஐபிக்கள், முக்கியமாக, ராஜா ராணிகளின் மன்னர்களின் உடல்களை “மம்மி”யாக்குவது முக்கிய எகிப்திய வழக்கம். இது சாதாரண வேலையல்ல. உடற்கூறு, அறுவை சிகிச்சை, மருத்துவம் ஆகிய துறைகளை அறிந்த நிபுணர்கள் இதற்குத் தேவை. ஏன் தெரியுமா?

இறந்தவர் உடலின் வயிற்றுப் பாகத்தில் துளை போடுவார்கள். நுரையீரல், குடல் ஆகிய அங்கங்களை லாவகமாக வெளியே எடுப்பார்கள். மருத்துவப் பச்சிலைகளை வயிற்றுக்குள் நிரப்பித் துளை போட்ட இடத்தைத் தைத்து மூடுவார்கள். உடல் கெடாமல், அழுகாமல் இருக்க இந்த மூலிகைகள் உதவும். இதயம்? அது அப்படியே விடப்படும்.

மூளை? மூக்கு வழியாக மூளை உறிஞ்சி எடுக்கப்படும். சில சமயங்களில் கண்கள் அகற்றப்பட்டு செயற்கைக் கண்கள் பொருத்தப்படும். அடுத்ததாக, உடலை உப்புத் தொட்டிக்குள் நாற்பது நாட்களுக்கு வைப்பார்கள். உடலில் உள்ள திரவங்களை வெளியேற்றும் வழி இது. உடல் அழுகுவது உடலின் உள்ளே உள்ள திரவங்களால். உப்பு இந்தத் திரவங்களை உறிஞ்சுவதால், உடல் அழுகுவது தடுக்கப்பட்டு விடுகிறது.

இத்தோடு வேலை முடிந்ததா? இல்லை. உடலை வெளியே எடுத்து அதன்மீது மெழுகு பூசுவார்கள்.  இதன்மேல் லினன் துணிகளால் பாண்டேஜ் போல் சுற்றுவார்கள். மம்மி, ராஜாவா, ராணியா, குட்டி மன்னரா, மந்திரியா, தளபதியா என்கிற சமூகத் தகுதியின் அடிப்படையில் தங்க, வைர வைடூரிய நகை அலங்காரங்கள் அணிவிப்பார்கள். இப்போது மம்மி தயார். சுமார் 3000 ஆண்டுகள் தாண்டியும், பல் மம்மிகள் இன்று கிடைத்துள்ளன. எகிப்து நாட்டு மம்மி செய்யும் முறை காலத்தை வெல்லும் மருத்துவ முறைதான்!

கணித அறிவு

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அத்தனையும் அவர்களுக்கு அத்துப்படி. முக்கோணங்கள், சதுரங்கள், செவ்வகங்கள், பெட்டிகள், பிரமிட்கள், வட்டங்கள், ஆகியவற்றின் பரப்பளவு, கொள்ளளவு கண்டு பிடிக்கும் சூத்திரங்களையும் அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். பிரமிட் கட்டுவதில் பல கணித சூத்திரங்கள் பயன்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

நாகரிக வீழ்ச்சி

இப்படிப் பாரம்பரியப் பெருமை கொண்ட எகிப்தின் நாகரிகம் முற்றுபெற்றுவிட்டது. கி.மு. 1279 முதல் கி.மு. 1213 வரை ஆண்ட இரண்டாம் ராம்சேஸ் மன்னரின் ஆட்சி எகிப்தியப் பொற்காலம். அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. இயற்கையின் கருணையில் விளைச்சல் செழித்தது, உள்நாட்டு, வெளிநாட்டு வியாபாரங்கள் அமோகமாக நடந்தன. மக்கள் சொர்க்கபோக வாழ்க்கை நடத்தினார்கள்.

எகிப்தின் வளம் அண்டைய நாடுகளின் பொறாமையைத் தூண்டியது. அடிக்கடி அவர்கள் எல்லை மீறி எகிப்துக்குள் நுழைந்தார்கள். இரண்டாம் ராம்சேஸ் மறைவுக்குப் பின்னர் இந்த ஊடுருவல்கள் அதிகரித்தன. குறிப்பாக, இன்றைய வட ஈராக்கில் அசிரியா  என்னும் பேரரசு இருந்தது, அசிரியர்கள் எகிப்துமீது தொடர்ந்து படையெடுத்தார்கள்.  மெள்ள, மெள்ள, ஒவ்வொரு பகுதியாகக் கைவசம் கொண்டுவந்தார்கள். கி. மு. 667 -இல் எகிப்து அசிரியர் ஆட்சியின்கீழ் வந்தது. ஆனால், அவர்களால், எகிப்தைக் கட்டியாள முடியவில்லை.  கி.மு. 525 – இல் எகிப்தியக் குறுநில மன்னர்களிடம் நாட்டை விட்டுவிட்டு வெளியேறினார்கள். நாடு சிதறுண்டது. காலம் காலமாகக் கட்டிக் காத்த நாகரிகம் சிதிலத்தில்!  வெற்றிடத்தில் பாரசீகம் புகுந்தது. எகிப்தில் பாரசீக ஆட்சி ஆரம்பம்.

சுமார் 200 ஆண்டுகள் ஓடின. கி. மு. 325. எகிப்திய மக்களுக்குப் பாரசீக மன்னர்கள்மேல் அளவுகடந்த வெறுப்பு. தங்களைக் காப்பாற்ற ஒரு தேவதூதனை எதிர்பார்த்தார்கள். அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய், எகிப்துமீது படையெடுத்து வந்தார் மாவீரன் அலெக்சாண்டர். மக்கள் அவரை வரவேற்றார்கள். அதிகம் ரத்தம் சிந்தாமலே, எகிப்து அலெக்சாண்டருக்கு மண்டியிட்டது.  எகிப்து கிரேக்க நாட்டின் ஒரு பகுதியானது. எகிப்திய நாகரிகம் முடிவுற்றது.

இப்போது உங்கள் எல்லோர் மனங்களிலும் ஒரு கேள்வி வரும். நம்மில் ஏராளமானவர்களுக்குப் பேரழகி கிளியோபாட்ரா எகிப்தின் முக்கிய அடையாளம். கிளியோபாட்ராவைப் பற்றி ஏன் குறிப்பிடவேயில்லை? கிளியோபாபட்ரா இல்லாத எகிப்திய நாகரிகமா, வரலாறா?

சில அதிர்ச்சியான உண்மைகள்:

கிளியோபாட்ராவின் எகிப்தியரே அல்ல: அவர் உடலில் ஓடியது கிரேக்க ரத்தம். அலெக்சாண்டரின் மெய்க்காப்பாளர்களாக ஏழு வீரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் முதல் தாலமி. அலெக்சாண்டர் கிரேக்கம் திரும்பும்போது, எகிப்தின் ஆட்சியைத் தாலமியிடம் ஒப்படைத்தார். அலெக்சாண்டர் அகால மரணமடைந்ததால், தாலமி மன்னரானார்: அவர் வம்சம் எகிப்தை ஆண்டனர். இந்த வம்சாவளியில் வந்த கிளியோபாட்ரா கிரேக்கப் பெண்.

கிளியோபாட்ரா வாழ்ந்த காலம் கி.மு. 69 முதல் கி.மு. 30 வரை. அதாவது, அவர் பிறப்பதற்கு  263 ஆண்டுகளுக்கு முன்பாகவே எகிப்திய நாகரிகம் “மம்மி”யாகிவிட்டது.

0

டப்பிங் சீரியல் ஏன் பிடிக்கிறது?

tv 2சித்தியிலும் மெட்டிஒலியிலும் சரவணன் மீனாட்சியிலும் மயங்கிக் கிடந்த தமிழ்ப் பெண்களின் மனத்தை, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘உள்ளம் கொள்ளை போகுதே’, ‘என் கணவன் என் தோழன்’, ‘தெய்வம் தந்த வீடு’, ‘சிந்து-பைரவி’, ‘இது காதலா’, ‘மதுபாலா’ போன்ற டப்பிங் மெகா சீரியல்கள் எப்படிக் கொள்ளையடித்தன?

தமிழ் மெகா சீரியல்களை மாய்ந்து மாய்ந்துப் பார்த்த, அழுதும் புலம்பியும் பார்த்த பெண்கள் இப்போது டப்பிங் மெகா சீரியல்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கியதன் காரணங்கள்தான் என்ன?

90களில் நாடகங்கள் தொடர்களாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. வாரம் தோறும் அல்லது வாரம் இருமுறை என்ற அமைப்பிலும் 13 வாரத்தொடர் என்ற அமைப்பிலும் வெளிவந்தன. பெரும்பான்மையாக அவை ஸ்டூடியோவுக்குள் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை. ஒருவிதத்தில் அவை “வீட்டுக்கு வந்த மேடைநாடகங்கள்” என்ற அளவில் இருந்தன. அவற்றால் மக்கள் தங்களின் மனத்தைத் திரைப்படத்திலிருந்து சற்று விலக்கிக் கொண்டனர்.

2000த்தில் நாடகங்கள் திரைப்படத் தரத்தில் பெருந்தொடராக (மெகா சீரியல்) நாள்தோறும் வெளிவரத்தொடங்கின. அப்போதும் பிறமொழி நாடகங்கள் தரமற்ற மொழிபெயர்ப்பில் வெளிவந்தன. ஆதலால், அவற்றை மக்கள் வரவேற்கவில்லை. அதேவேளையில் தமிழ் மெகா சீரியர்கள் தரமுடன் தயாரிக்கப்பட்டன. வெளிப்புறப் படப்பிடிப்பு, தெளிவான ஒளி-ஒலி,  பெண்களின் குடும்பப் போராட்டங்களை மையப்படுத்திய கதையமைப்பு, பாடல்கள், சண்டைக் காட்சிகள் என அவை தம்மைத் திரைப்படங்கள் போலவே பாவித்துக்கொண்டன. அதில் மனத்தைப் பறிகொடுத்தத் தமிழ்ப் பெண்கள் அவற்றைத் “தொடர்த் திரைப்படங்கள்” என்று கருதுகின்றனர்.

2010களில் பிறமொழி மெகா சீரியல்கள் தமிழில் தரமாக மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவரத்தொடங்கின. குறிப்பாக ஹிந்திமொழி மெகா சீரியல்கள் பல 2013இன் தொடக்கத்தில் தமிழ் மொழியாக்கத்தில் வெளிவரத் தொடங்கின. அவற்றின் தரம் தமிழ்ப் பெண்களைத் தமிழ் மெகா சீரியல்களுக்கு இணையாக ரசிக்கும் அளவுக்குச் செய்துள்ளன.

70களிலிருந்து தமிழர்கள் தமிழ்ப் படங்களுக்கு இணையான வரவேற்பை ஹிந்திப் படங்களுக்கும் வழங்கிவருகின்றனர். அதைப் போலவே தமிழ்ப் பெண்கள் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்பப்படும் ஹிந்தி மெகா சீரியர்களுக்கும் இப்போது வரவேற்பு அளிக்கின்றனர்.

எந்தெந்த விதத்தில் அவை தமிழ் மெகா சீரியல்களைவிடச் சிறந்துள்ளன?

 1. டப்பிங் மெகா சீரியல்களின் புதுவிதமான கதைதான் தமிழ்ப்  பெண்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. தமிழ் மக்கள் அனுபவிக்காத, கேட்டறியாத புதுக்கதைகள். குறிப்பாக, பெரிய இடங்களில் நடந்துகொண்டிருக்கும் உண்மைக்கதைகள்.
 2. சின்னத்திரைக்கதை அமைப்பு யாரும் கணிக்க இயலாத வகையில் திருப்பங்களைக் கொண்டிருக்கும். நம் பெண்களுக்கு அவை ஒரு த்ரில்லர் அனுபவத்தைக் கொடுக்கின்றன.
 3. வசன அமைப்பு செறிவாக இருக்கிறது. ஒரே விஷயத்தை ஒவ்வொரு கதைமாந்தரும் ஒவ்வொருவிதத்தில் பேசி போரடிப்பதில்லை. வசனத்தின் குறுக்கே பின்னணி இசை ஒருபோதும் வருவதில்லை.
 4. கதைமாந்தர்களின் உடையலங்காரம், சிகையலங்காரம், பின்னணிக் காட்சி அமைப்பின் பிரம்மாண்டம், காமிரா நகர்வு போன்றவை பெரிய பட்ஜெட் திரைப்படத்துக்கு இணையானவை.
 5. ஒரு எபிசோடில் மூன்று காட்சிகளும் ஒவ்வொருகாட்சியிலும் இரண்டுக்கும் குறையாத திருப்பு முனைகளும் இருக்கும். சுவாரஸ்யம் கூடியபடியே இருக்கிறது.
 6. இந்தியப் பண்பாடு சார்ந்த வழக்கங்களைத் தற்காலத்துக்கு ஏற்ப முற்போக்காக மாற்றிப் பல காட்சிகளை இடம்பெறச் செய்கின்றனர். இரண்டு குழந்தைகளைப் பெற்ற ஒரு விதவைக்கு மறுமணம் செய்துவைத்தல் போன்றன.
 7. நகைச்சுவை என்ற பெயரில் “மொக்கை“  போடுவதில்லை.
 8. மாமியார் – மருமகள் சண்டைக்காட்சிகள்கூட இயல்பாக, அதிகக் காழ்ப்புணர்ச்சி இன்றிக் காட்டப்படுகின்றன. மாமியார்களை எதிரியாச் சித்தரிக்கும் போக்கு இருப்பதில்லை.
 9. இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கதைமாந்தர்களின் செயல்பாடுகளை நிதானமாகக் காட்டி, நேரத்தை ஓட்டிப் பார்வையாளர்களுக்கு அலுப்பூட்டுவதில்லை.
 10. எல்லாக் கதைமாந்தர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். டிவிஸ்ட் தருவதாக எண்ணித் திடீரென ஒரு புதுக்கதைமாந்தரை அறிமுகப்படுத்திப் பார்வையாளரைக் குழப்புவதில்லை.
 11. அழுகைக் காட்சிகளில் கதைமாந்தர்களின் கண்கள் இயல்பாகச் சிவக்கின்றன. அவர்களின் கண்களில் கண்ணீர் அரும்புகிறது.  அவர்களின் மனச் சோகத்தை இசையே பார்வையாளர்களுக்கு ஊட்டிவிடுகிறது. அந்த இயல்பான அழுகைப் பார்வையாளரின் உள்ளத்தை ஊடுறுவுகிறது.
 12. பிரிந்துள்ள தம்பதிகள், காதலர்கள் ஆகியோரின் காதல் மற்றும் அன்புறவுகளைச் சின்னச்சின்ன சலனங்களுடன் எடுத்துக் காட்டுவதில் டப்பிங் மெகா சீரியல்கள் உச்சத்தில் நிற்கின்றன.
 13. சீரியலை அப்டுடேட் செய்கிறேன் என்ற போக்கில் நாட்டு நடப்பு நிகழ்ச்சிகளை சீரியலுக்குள் திணித்து, வலிந்து காட்சிப் படுத்துவதில்லை. ஒரு வசனமாகக்கூட அவை வெளிப்படுத்துவதில்லை.
 14. கதாமாந்தர்களின் குணத்தைப் பிறரின் வசனங்களின் வழியாகத் தெரியப்படுத்தாமல் அந்தந்தக் கதாமாந்தர்களின் செயல்களின் வழியாகவே காட்டுகின்றனர்.
 15. ஒரு எபிசோடில் அத்தியாவசியமான தருணத்தில் மட்டுமே தீம் மியூசிக் வெளிப்படுகிறது.
 16. திருமணம் சார்ந்த விழாக்கள் அனைத்தும் சங்கடங்களின்றி மிகுந்த உற்சாகத்துடன் காட்டப்படுகின்றன. ஆனால், தமிழ் மெகா சீரியல்களோ திருமணக்கட்சிகள் என்றாலே ஏகப்பட்ட சண்டைகளும் மனக் கசப்புகளுமாகக் காட்டி “அவைதான் நம் வழக்கம்“ என்பதுபோலப் பாவனைசெய்கிறார்கள்.

தற்போது தமிழ்த் தொலைக்காட்சிகள் பரவலாக டப்பிங் மெகா சீரியர்களைப் ஒளிபரப்பத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், தமிழ் மெகா சீரியல்கள் வீட்டுப்பெண்களின் விரும்பங்களை நிறைவேற்றிச் சின்னத்திரையில் தாக்குப்பிடிக்குமா?

0

சேரி

slum_quarter_in_th_1_galleryfull2பறையர்கள் / அத்தியாயம் 24

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஆலஞ்சேரி’ என்னும் ஊர்ப் பெயர் உண்டு. சென்னையில் வேளச்சேரி, சேலத்தில் மேச்சேரி என்னும் ஊர்ப் பெயர்களும் உண்டு. கொச்சியில் ‘மட்டாஞ்சேரி’ என்ற ஊர் உண்டு. சிவகங்கை சமீனில் ‘இரவுச்சேரி நாடு’ என்ற பகுதி இருந்துள்ளது. கேரளாவில் ‘சங்கனாச்சேரி’ என்ற ஊர் உண்டு. பரமக்குடிக்கு அருகில் ‘பெரும்பச்சேரி’ என்ற ஊர் உள்ளது. நாகர்கோவிலில் ‘ஒழிகினச்சேரி’ என்ற ஊர் உண்டு.

தமிழகத்தில் பனங்காட்டுச் சேரி, பனஞ்சேரி, பனையஞ்சேரி ஆகிய பெயர்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் வயல்களுக்கு நடுவே உள்ள சிறிய ஊர் புரவசேரி. நாகர்கோவிலின் ஒருபகுதி, அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் ‘வடசேரி’ என்ற ஊர் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவானை வட்டத்தில் இப்போது வீரநாராயண மங்கலம் என்ற ஊரின் பழைய பெயர் ‘வீரநாராயணன் சேரி’.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் வீமனேரி: வீரநகரி, ‘வீமனசேரி’, உள்ளதை அறியலாம். நாஞ்சில் நாட்டில் கி.பி.1472ம் ஆண்டு அடிமை ஓலைப் பிரமாணம் ஒன்று தென்னாட்டுக் குறுநாட்டு ‘ஆளூர் சேரி’யில் வாழ்ந்த பறையர் சாதி என்று குறிப்பிட்டுள்ளதில் ‘ஆளூர் சேரி’யைக் காணலாம்.

பெருங்குன்னூர்க் கிழார் குடக்கோ இளஞ்சேரிரும்புரை என்ற மன்னனின் பெயரில் ‘சேரி’ என்ற சொல் பொதிந்துள்ளதைக் காண்க.

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை அரும்பத உரையுடனும், அடியார்க்கு நல்லார் உரையுடனும் தென்கலைச் செல்வர் டாக்டர் உ.வே.சாமிநாதையர் வெளியிட்டார். அதில் ‘சேரிப் பரதர் வலை முன்றில்’ கூறப்பட்டுள்ளது. சேரிப்பரதர்….. பரதர் என்னும் வகுப்பினர் மட்டும் சேர்ந்து செறிவாக வாழ்ந்ததால் ‘சேரி’ எனப்பட்டது. இதுபோல் பார்ப்பனச் சேரி, ஆயர்சேரி என்றும் பண்டு அழைக்கப்பட்டுள்ளன. இன்றும் வடுகச்சேரி, செட்டிச்சேரி என்னும் ஊர்கள் இருப்பதையும் நினைவில் கொள்க.

சோழர் காலத்தில் அவரவர் சாதிக்குப் பின்னால் (கிராமத்தை) தூய தமிழில் சேரி என்னும் பெயரைச் சேர்த்துக்கொண்டனர். அந்த வகையில் கண்மானச்சேரி, பறைச்சேரி, ஈழச்சேரி, வலைச்சேரி மற்றும் தீண்டாச்சேரி ஆகியவை உருவாயின. தீண்டாச்சேரி என்பது கைவினைஞர் குடியிருப்பு, பறையர் குடியிருப்பு, ஈழவர் குடியிருப்பு, வலைஞர் குடியிருப்பு மற்றும் தீண்டத்தகாதோர் குடியிருப்பு ஆகியவை. பார்ப்பனர் குடியிருப்புக் கூட, ‘சேரி’ என்ற நிலையில்தான் குடியிருப்புகள் அமைந்திருந்தன.

வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக, ஆதிக்க சாதிகளால் கூறப்படும் உத்திரமேருர் வைகுந்த பெருமாள் கோயில் கல்வெட்டு கி.பி. 14ம் நூற்றாண்டின் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தில் கூட, இந்த 12 சேரிகளிலுமுள்ள முப்பது குடும்பத்துக்கும் குடவோலை முறைப்படி தேர்தல் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மேற்கண்ட குடியிருப்புகளும் சோழர்காலத்தில் உயர்குடி மக்களாகவே வாழ்ந்துள்ளனர்.

உத்திரமேரூருக்கு ஒரு கிலோ மீட்டர் முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் கிழக்கில் அருணாச்சலப்பிள்ளை சத்திரம் சேரி, தென் கிழக்கில் நல்லூர்ச்சேரி, தெற்கில் குப்பைய நல்லூர் சேரி, மேட்டுச்சேரி, காட்டுப்பாக்கம் சேரி, மேற்கில் வேடபாளையம் சேரி, வடக்கில் மல்லிகாபுரம் என்கிற கீழ்சேரி (இது மல்லிகாபுரத்திற்கும் உத்திரமேரூருக்கும் நடுப்பகுதியில் வயல் வெளியில் அமைந்த சேரிப்பகுதியாகும். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள இடத்திற்கு இடம் பெயர்ந்ததோடு 1970களில் மல்லிகாபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது). இதையொட்டி மேற்கில் கல்லஞ்சேரி என்கிற கல்லமா நகரின் பெயரும் 1970களில் மாற்றப்பட்டதாகும். மேற்கண்ட அனைத்துக் குடியிருப்புகளும் பறையர் குடியிருப்புகளாகும்.

கேரளத்தின் பறையடிமை ஆவணங்களில் அடிமையானவர்களைக் குறிப்பிடும்போது சேரமாதேவிப் ‘புறஞ்சேரி’யில் கிடக்கும் பறையரில்… என்றும் (1459), ‘ஆளூர் புறஞ்சேரி’யில் கிடக்கும்… (1472, 1728) என்னும், ஆரைவாய் பாலபொய்கை புறஞ்‘சேரி’யில் கிடக்கும்…… என்றும் (1827), தாழைக்குடி பெரும் பறைச்‘சேரி’யில் கிடக்கும்… என்றும் (1832) குறிப்பிடப்படுகிறது. இவற்றில் கூறப்பட்டுள்ளபடி கி.பி. 14ம் நூற்றாண்டுகளில் கேரளாவில் சேரியில் குடியிருந்தவர்கள் பறையரே என்பதைச் சுட்டுகிறது. இன்றும் கேரளாவில் ‘சேரி’ என்ற பொருள் கூறும் ஊர்ப் பெயர்கள் பல உண்டு.

போதி சத்தர் கோதமர் பின்னர் புத்தர் ஆனார். அவன் முன் பிறவிகளைப் பற்றியவையே ஜாதகக் கதைகள் என்பது. இக்கதையில், இவர் ‘சேரி நாட்டில்’ பானை சட்டி விற்பவராகப் பிறந்து ஆந்தபுரம் (ஆந்திரம்) சென்றார் என்று கூறப்படுகிறது. இக்கதையின் கூற்றுப்படி ‘சேரிநாடு’ என்று ஒன்று இருந்துள்ளதை அறியமுடிகிறது.

தமிழ் ஆடற்கலை 1925 வரை சின்னமேளம்/சதிர்க்கச்சேரி என்றே அழைக்கப்பட்டது. அப்பெயரை மாற்றி ‘பரதநாட்டியம்’ எனப் புதுப் பெயரிட்டவர் ஈ.கிருஷ்ண ஐயர். தமிழர் ஆடற்கலைக்கு, பரதநாட்டியம் என்று பெயர் வைத்ததை கண்டித்து பாரதிதாசன்  பல நூல்களில் விளக்கி அவரைக் கண்டித்துள்ளார். தமிழ் ஆடற்கலையான சின்னமேளம்/சதிர்க்கச்சேரி – பெயர்களில் உள்ள ‘சேரி/மேளம்’ என்ற சொற்களை நோக்குக.

சிலம்பில் மாதவிக்குப் பொன் அளிக்கப்பட்ட செய்தியைப் பேசும் இளங்கோவடிகள், ‘இக் கோவிலில் உள்ள ஐவர் மலைத் தேவருக்கு அவிப்புறம் முதலியவற்றிற் கென ‘குவளைச் சேரி’யைச் சேர்ந்த வட்டம் வடுகி என்பவர் இரண்டு கழஞ்சு பொன் அளித்துள்ளார்’ என்ற கல்வெட்டுக் குறிப்பின் வாயிலாக, குவணச்சேரி என்ற ஊர் இருந்துள்ளதை அறிகிறோம்.
பண்டைத் தமிழகத்தில் சேரிகளில் குடியிருந்த மக்கள் பல இன, மொழி, பண்பாட்டைக் கொண்டவராக இருந்தனர் என தொல்காப்பியம், அகம், புறம், பரிபாடல், மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய பல இலக்கியங்களில் பரவலாகக் குறிக்கப்பட்டுள்ளன.

கலைமகிழ் ஊரான் ஒலிமணி நெடுந்தேர்
ஒல்லிழை மகளிர் ‘சேரி’ப் பண்ணாள். (அகம் 146-5-6)
பாடுவார் பாக்கங் கொண்டென
ஆடுவார் ‘சேரி’யடைந்த தென. (பரிபாடல் 7-32)
மீன் சீவும் பாண் ‘சேரி’ (புறம் 348-4)
வலை வாழ்நர் ‘சேரி’ வலை வணங்கும் முன்றில் (சிலம்பு – கானல் 4-60 சிலம்பு – கானல் – 38)
உறை கிணற்றுப் புறஞ்‘சேரி’ (பட்டினப்பாலை -75)
மன்றுதோறும் நின்ற குரவைச்‘சேரி’  (மதுரைக்காஞ்சி -615)
‘சேரி’ வாழ்வின் ஆர்ப்பெருந்தாங்கு (மதுரைக்காஞ்சி – 619)

என இலக்கிய நூல்கள் கூறியுள்ள சான்றுகளைப் பார்த்தால் சேரிகளில் வாழ்ந்தவர்கள் பெருமளவு வேற்று நாட்டினரும், வேறு திணை நிலங்களில் வாழ்ந்த மக்கள் என்பது புலனாகும்.

கி.பி. 9ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த இடைக்கால சோழராட்சியில் அருண்மொழித் தேவச்சேரி, ராச மார்த்தாண்டச் சேரி, குந்தவைச் சேரி, சன நாதச் சேரி, நித்த வினோதச் சேரி, சோழ சுந்தரிச் சேரி, தனிச்சேரி, பறைச்சேரி, வண்ணாரச் சேரி, கம்மான் சேரி, ஆரிய பார்ப்பனர் சேரி, தீண்டாச்சேரி போன்ற பல சேரிகள் இருந்ததாகவும், இந்தக் குடியிருப்புகளில் பல இனமக்கள் கலந்து வாழ்ந்ததாகவும் இம்மக்கள் சேர்ந்து வாழும் இடத்தைச் ‘சேரி’ என்றும் பாவாணரின் ‘பழந்தமிழராட்சி’ என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.

சேரிகளில் வாழ்ந்தவர்கள் பேசும் மொழிக்கும் ஊர், நகரங்களில் வாழ்ந்தவர் பேசும் மொழிக்கும் வேற்றுமை இருந்த காரணத்தால் அதனை சேரி மொழி என வழங்கியுள்ளனர். கஞ்சி, உறங்கு போன்ற சொற்கள் பழந்தமிழ்ச் சொற்கள். இச்சொற்களைப் பேசுவோர் சேரிகளில் வாழ்ந்தவர்கள். அலை வாழ்நர், பரதவர், இடையர், வலையர், ஆடுவார், பாணர், பறையர், துடியர், கடம்பர், விறலியர், பரத்தையர், ஒளியர், அருவாளர், ஈழவர், யவனர், ஆரியப் பார்ப்பனர் போன்றவரும் மற்றும் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த மோரியார், கோசர், மழவர் போன்றவர்களின் படைவீரர்களில் சிலர் தமிழகத்தில் நிலைத்து, தமிழ் வேந்தர் படையில் சேர்ந்து பணியாற்றியவர்களும் இச்சேரிகளில் வாழ்ந்தவர்களாவர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

மேலும் ரோமர், கிரேக்கர்கள் வணிக நோக்கோடு தமிழகத்துக்கு வந்து இங்கு அரண்மனை வாயில் காப்பாளராகவும், அரண்மனைப் பணிப் பெண்களாகவும் இருந்துள்ளனர் என்றும், பல்லவர் படையெடுப்புடன் வந்து தமிழகத்தில் நிலைத்துவிட்ட களப்பிரரும் (ஆய்வுக்குரியது), விஜய நகரப் பேரரசு படையெடுப்புடன் வந்து தமிழகத்தில் நிலைத்துவிட்ட அருந்ததியரும் ஆகிய பல இனத்தவர், பல நாட்டினர், பல மொழியினர் கலந்து வாழ்ந்த இடத்தைச் சேரி என்றும், அவர்கள் திருத்தமான மொழி பேசாமல் கொச்சை மொழிப் பேசியதால் ‘சேரி மொழி’யென்றும் வழங்கியுள்ளனர்.

பல்லவர் காலத்திலும் அந்தணச் சேரி, முட்டிகைச் சேரி, பரத்தையர் சேரி, புறம்பனைச் சேரி என்று பல சேரிகள் இருந்துள்ளன. தமிழ் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் ஆடுவார் சேரி, பாண்சேரி, வலை வாழ்நர் சேரி, பரதவர் சேரி, புறஞ்சேரி, முத்துக் குளிப்பவர் சேரி, சங்கு அறுப்பவர் சேரி எனப்பல சேரி வகைகள் இருந்ததாக இலக்கியங்கள் காட்டுகின்றன.
பல இனமக்களும் சேர்ந்து வாழுமிடத்தைக் குறித்த ‘சேரி’ என்பது பின்னர் தீண்டாமையின் அடையாளமாக்கப்பட்டுவிட்டது.

0