தருண் தேஜ்பால் : சில சிக்கல்கள்

Tarun_Tejpal_20131024.jpg.ashxதருண் தேஜ்பாலுக்கு எதிரான குரல்கள் வலுத்துக்கொண்டிருக்கும் அதே சமயம், அவரை ஆதரித்தும் ஒரு சிறு கூட்டம் இயங்கி வருகிறது.

இவர்கள் தர்க்கத்தை, அதில் உள்ள பாவனைகளை விலக்கிவிட்டுப் பரிசீலித்தால் ஒரு எளிய உண்மை புலப்படுகிறது. குற்றச்சாட்டு இங்கே பின்னுக்குத் தள்ளப்பட்டு, குற்றம்சாட்டியவர் யார், அவர் பின்னணி என்ன என்பதும் யார்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவர் பின்னணி என்ன என்பதும் இங்கே முக்கியமாகியிருக்கிறது. நன்கறிந்த பிரபலம் ஒரு பக்கம். பெயர் கூட தெரியாத ஒரு பெண், இன்னொரு பக்கம். இந்த இருவரில் எதற்காக முகமற்ற, அடையாளமற்ற ஒருவரை நாம் ஆதரிக்கவேண்டும்?

தருண் தேஜ்பால் பலருக்கும் இங்கே ஓர் ஆதர்சமாகவும் திகழ்வது சிக்கலை அதிகரிக்கவே செய்கிறது.  குறிப்பாக, 2002 குஜராத் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஒரு புலனாய்வு பத்திரிகையின் நிறுவனர்மீது ஒரு சாதாரண பெண்  பாலியல் குற்றச்சாட்டை வீசி ‘களங்கப்படுத்துவதை’ எப்படி ஏற்பது? தெஹல்காவை இந்தக் காரணத்துக்காகவே எதிர்த்து வரும் ஒரு பெருங்கூட்டத்துக்கு இப்போது மெல்ல அவல் கிடைத்துவிட்டது அல்லவா? எனவே இது ஏன் ஓர் திட்டமிடப்பட்ட அரசியல் சதியாக இருக்கக்கூடாது?

இதுதான் அவர்களுடைய சங்கடத்தின் மையப்புள்ளி. இந்தச் சங்கடத்தை மறைக்கவே சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரை நோக்கி இவர்கள் மீண்டும் மீண்டும் எரிச்சலுடன் சந்தேகக் கேள்விகளை வீசுகிறார்கள்.

எந்தவொரு பிரபலத்தின்மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் இத்தகைய உத்தி புகார் சொல்பவர்மீது பிரயோகிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

இத்தனைக்கும் தருண் தேஜ்பால் தன் குற்றத்தைக் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அடுத்த சிக்கல் இங்கே எழுகிறது. ஆம் நான் பாலியலல் பலாத்காரம் செய்தேன் என்பதை தருண் தேஜ்பால் எப்படியெல்லாம் பூசி, மெழுகி வார்த்தை விளையாட்டுகள் விளையாடியிருக்கிறார் என்று கவனியுங்கள். எழுத்தாளர் அல்லவா? எனவே மோசமான ஒரு செயலையும் மூடி மறைத்து, வாசனைத் திரவியம் தெளித்து அழகாக முன் நிறுத்தும் கலை அவருக்குக் கைகூடியிருக்கிறது.

குற்றம் இழைத்திருப்பதால் அவருக்கும், அவரை ஓர் ஆதர்சமாகக் கருதுவதால் மற்றவர்களுக்கும் இத்தகைய சாமர்த்தியமான மழுப்பல்கள் தேவைப்பட்டிருக்கலாம்.

நமக்கல்ல.

நம் அன்றாட வாழ்விலும்கூட இப்படிப்பட்ட கடினமான முடிவுகளை நாம் எடுக்கவேண்டியிருக்கும். நமக்குப் பிடித்த ஆளுமைகள், நமக்கு நெருக்கமான மனிதர்கள் தவறிழைக்க நேரிடும். நம்மை ஈர்த்த தத்துவங்களில், கொள்கைகளில் குறைபாடுகள் இருக்கக்கூடும். இரு கண்களையும் காதுகளையும் மனதையும் திறந்து வைத்து நேர்மையாக குற்றங்களையும் குறைபாடுகளையும் நாம் பரிசீலிக்கவேண்டும்.

ஓர் அசாதாரணமான சூழல் ஏற்படும்போது நம் மதிப்பீடுகளை நாம் மீண்டும் கடினமான ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். விருப்பு வெறுப்பற்று, புதிய மதிப்பீடுகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

இது எனக்கும் பொருந்தும்.

Let’s learn to call a spade a spade.

0

மேலும் : தருண் தேஜ்பாலும் தெஹல்காவும்

வியக்க வைக்கும் பிரமிட்

The-Mysterious-Pyramids-Great-Sphinx-Giza-Egypt-1-1600x1200பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 21

கட்டடக் கலை

எகிப்திய நாகரிகம் பல்வேறு துறைகளில் ஜொலித்தது என்றபோதும், அதன் உச்சகட்டத் தனித்துவம் கட்டடக் கலைதான். எகிப்து மக்களுக்குச் செங்கல் தயாரிப்பது கை வந்த கலையாக இருந்தது. நைல் நதியிலிருந்து கிடைத்த களிமண்ணோடு, வைக்கோல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்தார்கள். இந்தக் கலவையைக் கால்களால் மிதித்து, உதைத்து, கலவை தேவையான பதத்துக்கு வந்தவுடன் வார்ப்புகளில் வைத்து, தேவையான வடிவங்கள் ஆக்கினார்கள். இவை வெயிலில் காய வைக்கப்பட்டு செங்கற்கள் ஆயின.

அரண்மனைகள், மாளிகைகள், கோட்டைகள், வீடுகள் ஆகியவை கட்டச் செங்கற்களையும், கோவில்கள், கல்லறைகளுக்குக் கற்களையும் உபயோகப்படுத்துவது வழக்கம்.  கோவில்களிலும், வீடுகளிலும் சுவர்களில் ஓவியங்கள்  தீட்டப்பட்டன, சிற்பங்கள் அழகு கூட்டின.

வீடுகள்

வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடிக் கட்டங்களாக இருந்தன. வீடுகளில் கட்டில்கள்,  பெட்டிகள், மேசைகள் போன்ற மரச் சாமான்கள் இருந்தன. பல வீடுகளில், வரவேற்பு அறை, வசிக்கும் அறை, படுக்கை அறைகள், குளியல் அறைகள், உணவு பாதுகாக்கும் அறைகள் எனப் பல அறைகள் இருந்தன.

பணக்காரர்கள் வீடுகளில், இன்னும் அதிகம் வசதிகள், சொகுசுகள். பெரிய, பெரிய அறைகள். வீட்டுக்கு நடுவில் பூச்செடிகள் நிறைந்த பூங்கா, பல குளியல் அறைகள், உள் சுவர்களிலும், உட் கூரைகளிலும் அழகிய ஓவியங்கள், கட்டில்கள், மரப் பெட்டிகளிலும் ஓவியங்கள், வேலைப்பாடுகள், கலைநயமான மண் பாண்டங்கள், சலவைக் கல் ஜாடிகள், பாத்திரங்கள்.

அரண்மனைகள் தனி நகரங்கள்போல் வடிவமைக்கப்பட்டிருந்தன. அரண்மனைக்கு உள்ளேயே கோயில்கள் இருந்தன.

பிரமிட்கள்

எகிப்து என்றவுடன் நம் கண்களின் முன்னால் விரிபவை பிரமிட்கள். சாதாரண மக்களை மட்டுமல்ல, பொறியியல் வல்லுநர்களையும் வியக்க வைக்கும் அமைப்புகள்.  ஒரிஜினல் ஏழு உலக அதிசயங்களில், இன்று நாம் காணக் கிடைக்கும் ஒரே அதிசயம் பிரமிட்கள்தாம்.

பிரமிட் என்றால்  கூம்பு வடிவம். அடிப்பகுதி நீண்ட சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும். இந்தப் பிரமிட்களுக்குள் ராஜா ராணிகள், விஐபிகள் ஆகியோரின் உடல்கள் அவர்கள் மறைவுக்குப்பின் மம்மிகளாக, உடல் கெடாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன. பிரமிட்களின் கூம்பு வடிவம் இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

பிரமிட்கள் எல்லாமே ஏன் கூம்பு வடிவில் மட்டுமே கட்டப்பட்டுள்ளன? வீடுகளை சாதாரணமாக, சதுர, செவ்வக வடிவங்களில் கட்டியவர்கள், பிரமிட்களை மட்டும் கூம்பு வடிவம் ஆக்கியது ஏன்?

ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகள் செய்த பரிசோதனைகளின் அடிப்படையில் தரும் விளக்கங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

  • பிரமிட் வடிவ அறைக்குள் காய்கறிகள், பழங்களை வைத்தால், மற்ற அறைகளில் வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்களைவிட அதிக நாட்கள் கெடாமல் இருகின்றன.
  • பிரமிட் வடிவக் கட்டங்களில் தூங்குபவர்களுக்கு, சாதாரண அறைகளில்  தூங்குபவர்களைவிட, அதிகம் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
  • பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் இறந்த ஒரு பூனையின் உடலை, மரத்தால் செய்த பிரமிட் வடிவப் பெட்டிக்குள் வைத்தார்கள். பல ஆண்டுகள் ஆன பின்னும் இந்த உடல் கெட்டுப் போகவில்லை.
  • பிரமிட் வடிவ அறைக்குள் இருக்கும் இரும்புப் பொருட்கள் எளிதாகத் துருப் பிடிப்பதில்லை.

இப்படி ஆச்சரியமான கண்டுபிடிப்புகள்!

கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து ஒரு வித மின்காந்த ஆற்றலை உள் வாங்குகிறது. பிரமிடின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை, பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப் பரவ வைக்கிறது. இதுதான் ரகசியம் என்கிறார்கள்.

இது முழுமையான விளக்கமா? சரி என்று ஒத்துக்கொண்டாலும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், எகிப்தியர்களுக்கு இந்த விஞ்ஞான உண்மை எப்படித் தெரிந்தது, புரிந்தது?

பெரிய பிரமிட்
 
கிஸா (Giza) நகரில் இருக்கும் பெரிய பிரமிட் சுமார் 476 அடி உயரமானது, 13.6 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டது 5,90,712 கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கம்ப்யூட்டர் கணக்கீடுகள் சொல்கின்றன. கற்களின் எடை ஒவ்வொன்றும் இரண்டில் இருந்து முப்பது டன் வரை. இந்தக் கற்களை தூரத்தில் இருக்கும் மலைப் பகுதிகளில் இருந்து எப்படிக் கொண்டு வந்தார்கள்? உச்சியை எட்டும்போது கற்களை 400 அடிகளுக்கு மேல் தூக்கிக் கொண்டு போயிருக்க வேண்டுமே? அவர்களிடம் கிரேன் மாதிரி எந்திரம் இருந்ததா? ஒரு லட்சம் தொழிலாளிகள் இருபது வருடம் பணியாற்றியிருந்தால் மட்டுமே பெரிய பிரமிட் உருவாகியிருக்கும் என்பது கட்டடக் கலை வல்லுநர்கள் கணிப்பு.

கோவில்கள்

பெரிய பிரமிட் பிரம்மாண்டம் என்று நினைக்கிறீர்களா? இதோ வருகிறது நிஜ பிரமாண்டம். கார்நாக் (Karnak) எகிப்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் கிராமம். ஆலயங்கள் நிறைந்த இடம். சிதிலமாகிவிட்ட பல கோவில்கள் நெஞ்சில் துயரம் பொங்க வைக்கின்றன.
இங்கே இருக்கும் ஆமுன் ரே (Amun Re) கோவில் எகிப்தின் மற்ற எல்லாக் கோவில்களையும்விட மிகப் பெரியது. ஆமுன் ரே எகிப்தியரின் முழுமுதற் கடவுள். நாட்டையும், மன்னர்களையும், மக்களையும், எல்லாத் துன்பங்களிலிருந்தும், எப்போதும் காப்பாற்றுபவர் என்பது பொது நம்பிக்கை.

ஆமுன் ரே கோவிலில் இருக்கும், கி.மு. 14 – ம் நூற்றாண்டில், இரண்டாம் ராம்சேஸ் மன்னரால் கட்டப்பட்ட அரங்கம் முக்கிய அம்சம். ஹைப்போ என்னும் வித்தியாசமான கட்டடக் கலைப் பாணியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. தாங்கும் வளைவுகள் இல்லாமல், வரிசையாகத் தூண்களை நிறுவி, அவற்றின்மேல் தட்டையான கூரை அமைக்கும் முறை இது.  அரங்கம் எத்தனை பெரியது தெரியுமா? பரப்பளவு 52,000 சதுர அடி. 16 வரிசைகளில், 134 தூண்கள் அரங்கத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை ஒவ்வொன்றின் சுற்றளவு 10 அடி. 122 தூண்களின் உயரம்  33 அடி: எஞ்சிய 12 தூண்களின் உயரம் 70 அடி. அம்மாடியோவ்!

தொழில்கள் – மீன் பிடித்தல்

விவசாயம்தான் முக்கிய தொழில். பெரும்பாலான மக்கள் மீனை விரும்பி உண்டதால்,
மீன்களுக்கான தேவை அதிகமானது. பலர் மீன் பிடித்தல், மீன் வியாபாரம் ஆகியவற்றை முழு நேர வேலைகளாகச் செய்யத் தொடங்கினார்கள். நாளாவட்டத்தில் மீன் பிடிக்கும் படகுகளையும் பயன்படுத்தினார்கள்.

சிற்பக் கலை

கோவில்களையும், வீடுகளையும் அற்புதச் சிற்பங்கள் அலங்கரித்தன. கடவுள்களுக்கு மட்டுமல்லாமல், அரசர்கள். பிரமுகர்கள் ஆகியோருக்கும் சிலைகள் வடிப்பது பண்டைய எகிப்து வழக்கம். கல் தச்சர்கள், சிற்பிகள் எனப் பல கலைஞர்களை இந்த வழக்கம் ஊக்குவித்தது. கல்லால் சிற்பங்கள் மட்டுமல்ல, அம்மி, ஆட்டுக்கல் போன்ற சமையல் சாமான்களும் தயாரிக்கப்பட்டன.

களிமண் பொருட்கள் தயாரிப்பு

செங்கற்கள் தயாரித்த முறையில், உணவு சமைக்கும் பாத்திரங்கள், தானியம், எண்ணெய், மாவு, தண்ணீர், ஒயின் ஆகியவற்றைச் சேமித்து வைக்கும் பெட்டிகள் ஆகியவையும் தயாரிக்கப்பட்டன.

பெண்களின் தொழில்கள்  

பெண்கள் வேலை பார்ப்பதைச் சமுதாயம் அனுமதித்தது. பேரிச்சை மர இலை, கோரம்புல் ஆகியவற்றால் பின்னப்பட்ட கூடைகளும் பல அகழ்வு ஆராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. கூடை பின்னுதல், வாசனைப் பொருட்கள் தயாரித்தல், ஆடைகள் தைத்தல், நகைகள் செய்தல் ஆகிய தொழில்களில் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தவர்கள் பெண்களே.

தொழிற்சாலைகள்

எகிப்தில் கிரானைட் கற்கள், பல வித மாணிக்கங்கள், தங்கம், ஈயம், இரும்பு சுண்ணாம்புக் கல், ஆகிய தாதுக்கள் ஆகியவை தாராளமாகக் கிடைத்தன. இவற்றின் அடிப்படையில் பல தொழிற்சாலைகள்  தொடங்கினார்கள். சிமெண்ட் தயாரித்தார்கள். கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பில் அவர்களுக்கு அபாரத் திறமை. கண்ணாடி ஜாடிகள், சிற்பங்கள், நகைகள் ஆகியவை பரவலாக உபயோகத்தில் இருந்தன.

வணிகம்

வணிகம் தழைத்து வளர்ந்தது. சந்தைகள் இருந்தன. அங்கே கல் எடைகள் பயன்படுத்தப்பட்டன.  உணவு தானியங்கள், உற்பத்திப் பொருட்கள், உப்பு, ஆகியவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மரக்கட்டைகள், வாசனைப் பொருட்கள், ஆலிவ் எண்ணெய் ஆகிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தொலைதூர ஆப்கானிஸ்தானிலிருந்து  லாப்பிஸ் வைடூரியங்களை இறக்குமதி செய்ததாக ஆதாரங்கள் சொல்கின்றன. பல வியாபாரிகள் இந்த ஏற்றுமதி இறக்குதி வாணிபத்தில் ஈடுபட்டார்கள். உள் நாட்டு வாணிபத்திலும், ஏற்றுமதியிலும் பண்டமாற்று முறைதான் உபயோகத்தில் இருந்தது.

0

இரண்டாம் உலகம் – திரைப்பட விமர்சனம்

13aரண்டு வேறு வேறு உலகத்தில் நடக்கும் கதை. ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு உலகம் இன்னொரு உலகத்துக்குள் ஊடுருவுகிறது. அதற்குப் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படம்.

ஓர் உலகம் இன்னொரு உலகத்துக்குள் ஊடுருவ இயலாது என்பதே உண்மை. எனவே அடிப்படையிலேயே இதில் லாஜிக் இல்லை. லாஜிக் இல்லாத திரைப்படங்களை எடுக்கும்போது, படத்துக்குள்ளேயான லாஜிக்கை மிக வலுவாகக் கட்டமைக்கவேண்டும். அப்போதுதான் அதன் சாத்தியங்களுக்குள் பெரிய விளையாட்டு விளையாடமுடியும்.

இன்று உலகத் திரைப்படங்களெல்லாம் நம் கைக்குள் கிடைக்கும் நிலையில், தமிழில் அதே போன்ற ஒரு முயற்சியை மேற்கொள்ளும்போது, நாம் செலுத்தவேண்டிய உழைப்பு பல மடங்கு கூடுதலாக இருக்கவேண்டும். இல்லையென்றால் சாமானிய பார்வையாளன், இதுல ஒண்ணுமே இல்லையே என்றோ, இதெல்லாம் நம்பற மாதிரி இல்லையோ என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போய்விடுவான். நம்பாத கதையைப் பற்றி யோசிக்கவிடாமல் படத்தின் திரைக்கதையும், அதன் பிரம்மாண்டமும், அதன் தொழில்நுட்பமும் அவனைக் கட்டிப் போட்டிருக்கவேண்டும். அப்போதுதான் அவன் கண்முன்னே திரை நிகழ்த்தும் மாயங்களை அவன் அதிசயித்துப் பார்ப்பான். இதை அவதார் ஏற்கெனவே நிகழ்த்தியிருக்கிறது.

உலகத்தில் பிற மொழிகளில் இப்படி திரைப்படம் எடுக்கும்போது ரசிக்கிறார்கள், தான் எடுக்கும்போது குறை சொல்லுகிறார்கள் என்று இந்தப் படத்தின் இயக்குநர் செல்வராகவன் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். இது உண்மைதான். அதேசமயம், அப்படி அனைவரும் சொல்வதற்கான காரணங்களை செல்வராகவன் யோசிக்கவேண்டும்.

இயக்குநர்கள் எடுப்பதை மக்கள் ஒத்துக்கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதீதமானது. மக்கள் நம்புவதை எடுக்கவேண்டும் என்பதோ திரை என்னும் ஊடகத்தின் கலைத்தன்மையையும் வலிமையையும் சிதறடிப்பது. இந்த இரண்டுக்கும் இடையில் ஏதோ ஒரு மாயம் நிகழவேண்டும்.

ஓர் உலகம் இன்னொரு உலகத்துக்குள் செல்லத்தக்க கதையை முதலில் செல்வராகவன் தயார் செய்திருக்கிறாரா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். வலுவிழந்த கதை. சரி, இந்த வலுவிழந்த கதையை திரைக்கதை மூலம் மெருகேற்றியிருக்கிறாரா என்றால், அதற்கும் இல்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. இப்படித் தொய்வான நம்ப முடியாத கற்பனை சாகசக் கதையைத் தாங்கிக்கொள்ள ஏதுவான தொழில்நுட்பம் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. வணிக ரீதியாகவாவது படம் பார்வையாளர்களை மகிழ்விக்கிறதா என்றால், அதுவுமில்லை. தன் படம் அறிவுஜீவிகளுக்கானது, ஆனால் அதைப் பார்ப்பவர்களோ சாமானியர்களாக இருக்கவேண்டும் என்ற முரணான ஆசை வெற்றியடையவே முடியாது. இந்த இரண்டையும் ஒரு கோட்டில் இணைக்க முயலும்போது, அது அறிவுபூர்வமான படைப்பாகவும் இல்லாமல், வணிக ரீதியான படமுமாக இல்லாமல் போய்விடும். இதுதான் இரண்டாம் உலகத்துக்கு நிகழ்ந்திருக்கிறது.

முதல் பாதி வரை வரும் காதல் எவ்வித வலுவும் இல்லாதது. அதைச் சுற்றி நிகழும் சில நகைச்சுவைக் காட்சிகளில் எவ்விதப் புதுமையும் இல்லை. பார்த்து பார்த்துச் சலித்துப்போன அதே காட்சிகளை மீண்டும் திரையில் காண்பது, அதுவும் செல்வராகவன் போன்ற இயக்குநர் ஒருவரின் படத்தில் காண்பது தரும் சோகத்தை இயக்குநர் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேபோல் ஓர் உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு கதாநாயகன் போவதற்குள் பார்வையாளனின் தாவு தீர்ந்துவிடுகிறது. எப்படியும் இது நம்பக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அதேசமயம் நம்பவைத்தாகவேண்டும் என்னும் இயக்குநரின் அடம் வெற்றியடையவில்லை. மிகச் சாதாரணமான, முத்து திரைப்படத்தில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு ரஜினி தாவுவது போலத்தான் காட்டப்படுகிறது. இதைக் காட்ட ஏன் அத்தனை அலட்டல்கள்?

இன்னொரு உலகம் எப்படி அச்சு அசலாக இந்த உலகம் போலவே இருக்கிறது என்றே தெரியவில்லை! அங்கே அங்கே பலப்பல வண்ணக் கோலங்களை அள்ளித் தெளித்துவிட்டால் அது இன்னொரு உலகமா? இன்னொரு உலகத்தை படைப்பதும், அதை நம்பவைப்பதும், அதற்குள்ளே பார்வையாளனைத் தடையின்றி அழைத்துச் செல்வதுமென்ன விளையாட்டா? அப்படி நம்பவைப்பது விளையாட்டல்ல என்பது செல்வராகவனுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது. அந்த சாகசத்தை நிகழ்த்த செல்வராகவன் செய்திருக்கும் முயற்சிகள் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகவே எஞ்சுகிறது. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் நினைவுகள் இன்னும் செல்வராகவனுக்குப் போகவில்லை. ஆனால் என்ன சோகம் என்றால், அத்திரைப்படத்தைவிட இப்படத்தில் கிராஃபிக்ஸ் மிக மோசமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்னொரு உலகம், இன்னொரு கடவுள், இன்னொரு எதிரி, ஆனால் அங்கே காதல் இல்லை. அத்தனையையும் தரும் கடவுளாலும் காதலைத் தரமுடியவில்லை. அதைத் தர இன்னொரு காதலன் நம் பூமியிலிருந்து. இத்தனை கற்பனையும் எழுத்திலும் நினைத்துப் பார்ப்பதிலும்  சுகமிருக்கத்தான் செய்யும். அதையே இன்னொரு பார்வையாளனுக்கு கடத்துவதில் பெரிய தோல்வியே ஏற்பட்டிருக்கிறது.

இதை ஒரு குழந்தைகள் படம் என்று சொல்லி 3டி படமாகவாவது வெளியிட்டிருக்கலாம். தமிழின் முதல் சீரியஸ் 3டி படம் என்ற பெருமையும் கிடைத்திருக்கும், போட்ட பணத்துக்கு கொஞ்சம் காசும் வந்திருக்கும்.

செல்வராகவன் சந்தேகமின்றி சிறந்த இயக்குநர்களில் ஒருவர். ஏதேனும் வித்தியாசமாகச் செய்ய அவர் நினைப்பது, அவர் எடுத்திருக்கும் திரைப்படங்களில் இருந்தே நமக்குப் புரியும். ஆனால் இதுபோன்ற ஃபேண்டஸிகளில் இருந்து அவர் வெளி வருவது நல்லது. அதற்கான உழைப்பு, முதலீடு, தியேட்டர்கள், மக்கள், பிரம்மாண்டம், தொழில்நுட்பம், கற்பனை, கதை என எதிலும் நாம் தயாராக இல்லை. அதுவரை செல்வராகவன் பொறுத்திருப்பதே சரியானது. அதுவரை சமூகத் திரைப்படங்களில் எத்தனையோ களங்கள் சொல்லப்படாமல் காத்திருக்கின்றன. அதை செல்வராகவன் முயலலாம்.

செல்வராகவனின் பேட்டி மீண்டும் நினைவுக்கு வருகிறது. தமிழ் ரசிகர்கள் மீதும் தமிழ் விமர்சகர்கள் மீதும் அவர் கொண்டிருந்த கோபம் நினைவுக்கு வருகிறது. அதில் உண்மை இருப்பது போல், விமர்சகர்கள் சொல்லும் கருத்திலும் உண்மை இருக்கலாம் என்று செல்வராகவன் யோசிப்பாராக.

ஆர்யாவின் உழைப்பு அபாரமானது. அனுஷ்கா யாரையாவது அடித்துக்கொண்டே இருக்கிறார். பின்னணி இசை பல இடங்களில் குழந்தைத்தனமாக உள்ளது. குறிப்பாக சிங்கத்துடன் சண்டையிடும் காட்சியில், கிராஃபிக்ஸும் இசையும் ஒன்றுக்கொன்று மோசமாகப் போட்டியிடுகின்றன. எதற்கு இத்தனை வெளிநாட்டுக்காரர்கள் நடித்தார்கள் என்பதே புரியவில்லை. அவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்தப் படத்தைப் பார்த்து ஒரே ஒரு தரப்பினர் மட்டுமே மகிழ்வார்கள். உலகின் முதல் குரங்கு தமிழ்க்குரங்கே என்னும் தரப்பினரே அவர்கள். இந்தப் படத்தில் காண்பிக்கப்படும் மூன்று உலகத்திலும் தமிழே பேசுகிறார்கள். தமிழ் உலகாளவில்லை, பிரபஞ்சமாள்கிறது!

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் செல்வராகவன்.

இரண்டாம் உலகம் – 38%

தமிழ்பேப்பர் திரை விமர்சனக் குழு

 

எழுத்துக்காரர் ஆகவேண்டுமா?

1459349_549616751792462_333555668_nஎழுத்தாளர் இரா. முருகனின் கதை – வசனத்தில் அமைந்த மூன்று நாடகங்களைச் சமீபத்தில் ஷ்ரத்தா (Shraddha) நாடகக்குழுவினர் சென்னை நாரதகனா சபாவில் அரங்கேற்றினர். ஆனந்த் ராகவின் சிறுகதைகள் உட்பட ஏற்கெனவே பல நாடகங்களை அரங்கேற்றிய அனுபவம் கொண்ட அவர்கள், இம்முறை முருகனின் ஆழ்வார், சிலிகான் வாசல், எழுத்துக்காரர் என்ற மூன்று நாடகங்களை வரிசையாக அரங்கேற்றினர்.

கதை, கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, திரைப்பட வசனம் என்று ஏற்கனவே படைப்புலகில் அழுத்தமாக தனது முத்திரையைப் பதிவு செய்திருக்கும் இரா.முருகன், நாடகத்துறைக்கு தற்போது ’லேட்’ ஆக வந்தாலும், ‘லேடஸ்ட்’ ஆக வந்திருக்கிறார். தனது குறும்பான வசனங்கள் மூலம் பல விஷயங்களை அவர் ‘சொல்லாமல் சொல்லி’ இருப்பது கூடுதல் சுவாரஸ்யம்.

ஆழ்வார்

1980கால கட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்ட நாடகம் இது. திரை மேலே உயர்ந்ததுமே அரங்க அமைப்பு கண்ணைக் கவர்கிறது. முதலில் கண்ணுக்குப் படுவது ‘வைதேகி காத்திருந்தாள்’ பட போஸ்டர். அதன் வலப்புறம் ராஜா டீ ஸ்டால். இடப்புறம் பொன்முடி திருத்தகம். (பொன்முடி முடி திருத்தகம்னு இருக்கணும். பாரு எப்படி எழுதியிருக்கான்னு என்று ஆழ்வார் இதற்கு பின்னால் ஒரு விளக்கம் கொடுப்பார்) அதற்கு முன்னால் ஒரு ரைஸ் மில். அதற்கு இடப்புறம் எதிரே ராஜ் மேன்ஷன். மாடியில் அமர்ந்து பாட்டுக் கேட்டுக் கொண்டே, அரட்டை அடித்துக் கொண்டே சீட்டாடிக் கொண்டிருக்கின்றனர் மூன்று இளைஞர்கள். அது சென்னையின் ஒரு தெரு என்பது உடனே தெரிய வருகிறது. நடுநாயகமாக நாற்காலி போன்ற ஒன்றில் அமர்ந்திருக்கிறார் நாமம் போட்ட ஒரு பெரியவர். அவர் கையில் ஒரு குடை.

சைக்கிளை ஒருவர் தள்ளிக் கொண்டு வருவதோடு காட்சி துவங்குகிறது. இரண்டு பேர் ரைஸ் மில்லில் இருந்து வெளியே வந்து மாவைக் கொட்டி அதில் விழுந்திருக்கும் போல்ட்-நட்டைத் தேடுகின்றனர். ‘அடேங்கப்பா எவ்ளோ கரப்பான்பூச்சி. ஒவ்வொண்ணும் நம்ம மாவைத் தின்னு சிக்கன் சைஸூக்கு வளர்ந்திருக்குப்பா’ என்கிறார் ஒருவர். அவர்கள் செல்ல, இளைஞர்களின் மேன்ஷன் அரட்டை + சீட்டாட்டம் தொடர, பெரியவர் தனது குடையால் காலைச் சுற்றி வரும் கரப்பான் பூச்சியை அவ்வப்போது தள்ளி விடுகிறார். பின் திடீரென்று எழுந்து கொண்டு ‘சடகோபன், சடகோபன்’ என்று உரக்கக் கூவுகிறார், மேன்ஷனைப் பார்த்து. பின் மீண்டும் சென்று அமர்கிறார்.

சிறிது நேரத்தில் மீண்டும் எழுந்து வந்து மேன்ஷனைப் பார்த்துக் குரல் கொடுக்கிறார். ஒருவேளை தூங்கிண்டிருக்கானோ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே மீண்டும் சென்று அமர்கிறார். அப்போது பிரசவலேகியமும், மூங்கில் குருத்து ஊறுகாயும் விற்கும் ‘கறுப்பு ராசாவைத்’ தேடி வருகிறார் ஓர் இளைஞர். அங்கிருந்துதான் ஆரம்பமாகிறது, ஆழ்வார் நாடகம்.

இறந்து விட்ட சடகோபனை இருப்பதாகக் கருதி வாழ்கிறார் ஆழ்வார். சடகோபன் அவருக்கு மாப்பிள்ளையாக வேண்டியவன். ஆழ்வாரின் மனைவி வியாதியில் போய்ச் சேர்ந்துவிட ஒரே மகளைக் கரை சேர்க்க வழியும் அறியாமல், வாழ்க்கை நடத்தவும் தெரியாமல் வறுமையில் திண்டாடுகிறார். இதில் வீட்டில் முன்னோர்களால் ஏளப்பண்ணப்பட்ட ஆஞ்சநேயருக்கு ஆராதனை வேறு. அதற்காகப் பணம் திரட்ட சடகோபனையும் அவன் நண்பர்களையும் நாடிச் செல்கிறார். சடகோபன் இறந்து போனது தெரியாமல் அல்லது தெரிந்தும் அதை நம்ப விரும்பாமல் பார்ப்பவர்களையெல்லாம் சடகோபனின் நண்பனாகவே நினைத்து பேசுகிறார். சிலரை ஆஞ்சநேயர் ஆராதனைக்கு என்று சொல்லி வீட்டுக்கும் கூட்டி வந்து விடுகிறார். அப்படி கறுப்பு ராசாவைத் தேடி வந்த ராஜுக்கும் சடகோபனுக்காகக் காத்திருக்கும் ஆழ்வாருக்கும் நடக்கும் உரையாடல் தான் நாடகத்தை நகர்த்திச் செல்கிறது.

‘இந்த சடகோபனும் இப்படித்தான் தெரியுமோல்லியோ, உன்ன மாதிரியே பின்னாடி கையக் கட்டிண்டு நடப்பான். திடீர்னு, மாமா என்ன சொன்னேள்னு கேட்பான். திருமண் இட்டுண்டு ஆபீஸ் போனா என்னன்னா, வந்து இட்டுண்டாப் போச்சும்பான். பேண்ட், சட்டையும் நெத்தியிலே திருமண்ணும் சரியா வராதோ என்னவோ… நீ என்ன சொல்ற!’ என்றெல்லாம் அவர் பேசப் பேச, கோர்ட், சிரஸ்தார், முன்சீப், முதலியார் என்றெல்லாம் அவர் சொல்லச் சொல்ல ராஜுக்கு ஒன்றுமே புரியவில்லை.

‘அனுமார்… திருக்கோளூர்லேர்ந்து வந்த ரூபம்… ஒரு மகான் கொடுத்துட்டுப் போனது… நோக்கு திருக்கோளூர் தெரியுமோல்லொயோ… அதாம்பா, உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம்னு வருமே ஒரு பாசுரம்’ என்று சொல்லி கன கம்பீரமாக அந்தப் பாசுரத்தை ஆழ்வார் பாட, பார்க்கும் எல்லாருக்கும் மெய் சிலிர்ந்துப் போகிறது. என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் கை கூப்பி வணங்கினார், கண்களில் வழிந்த கண்ணீரோடு.

பெரியவர் தொடர்கிறார். ‘அனுமார்னா பட்டாபிஷேகத்துலே பவ்யமா, ஒரு ஓரமா கையக் கூப்பிச் சேவிச்சுண்டு நிக்கற அனுமார்னு நினைச்சிடாதே… சதுர்புஜ அனுமாராக்கும்… கம்பீரமான ரூபம்… காலை இதோ இப்படிப் பரப்பி… இந்த உலகமே எனக்குத் தூசுங்கற பார்வையோட கையக் கட்டிண்டு கம்பீரமா இப்படி…’ என்று சொல்லி அவர் நின்று காண்பிக்கும்போது மேடைக்கு அனுமாரே வந்து விட்ட மாதிரிதான் தோன்றியது. சபாஷ் ஆழ்வார் (ஆழ்வாராக நடித்தவர் டி.டி.சுந்தர்ராஜன்).

ராஜூ அவரிடமிருந்து விலகிச் செல்ல நினைக்க, அவரோ அவனை கையைப் பிடித்து அழைத்து தன் வீட்டிற்கே அழைத்துச் சென்று விடுகிறார். வீட்டில் காத்திருக்கிறாள் வைதேகி. ஆழ்வாரின் மகள். சடகோபனுக்கு உரிமையாக வேண்டியவள், அவன் தீடீர் மறைவால் வாடி வயிற்றுப்பிழைப்பிற்காக வற்றல், வடகம் இட்டுப் பிழைக்கிறாள்.

வைதேகி – ராஜ் உரையாடல்கள் சிறப்பு. ‘கரண்ட்காரன் ஃப்யூஸைப் பிடுங்கிண்டு போனமாதிரி கட்டாத கடனுக்காக பேங்க்லே இந்த வடாத்தை எல்லாம் எடுத்துண்டு போவாளோ என்னமோ’ என்று அவள் கூறுவதில் அப்படி ஓர் அப்பாவித்தனம். குடும்பத்தின் நிலைமை ராஜுக்குப் புரிகிறது. அந்த வடகங்களை விற்பதற்காக தனது கடையே வாங்கிக் கொள்ளும் என்றும் மறுநாள் கடைக்கு வந்து என்னைப் பாருங்கள் என்றும் சொல்கிறான்.

வீட்டுக்கு வெளியே வாசலில் தையற்கடை வைத்திருக்கும் பாய் அழைத்ததில் வெளியே சென்று விட்டு வரும் ஆழ்வார், உள்ளே வந்ததும் “மனுஷாள்ல ஒருத்தரைப் பத்தி நாம நினைக்கறது எவ்வளவு சீக்கிரம் பிசகாப் போயிடறது” என்று சொல்வது, சில விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது. அவர், ராஜூவிடம் அனுமாரைச் சேவிக்கச் சொல்லி ஆராதனை நோட்டை எடுத்து நீட்ட, அதில் ரூபாயை வைத்து விட்டு, கடை விலாசமாக, தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையை வைதேகியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து செல்ல முற்படுகிறான் ராஜூ.

“உங்க பேர் எழுதலியே” என்கிறாள் வைதேகி.

“சடகோபன்னு வச்சுக்கங்க” என்கிறான் ராஜ்.

“கடைல வந்து அந்தப் பேரைச் சொன்னா உங்களைப் பார்க்க முடியுமா?”

“இல்ல. இல்ல. அடைக்கலராஜ்ன்னு சொல்லுங்க. முதலாளி என்னைக் கூப்பிட்டு விடுவார்” என்று சொல்லிச் செல்கிறான்.

வைதேகி திகைத்துப் போய் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

நாடகமும் முடிகிறது.

வைணவ ஆழ்வார்…. அவர் வீட்டு வாசலில் கடை வைத்து அவருக்கு வாடகை தரும் இஸ்லாமியத் தையல்காரர்… ஆழ்வாரின் கஷ்டம் புரிந்து அவர் குடும்பத்துக்கு உதவ முன்வரும் கிறித்துவ அடைக்கலராஜ்.

இரா.முருகன் மூன்று மதத்தையும் ஒருபுள்ளியில் இங்கே இணைத்து விட்டார். நாடகத்தில் நடித்தவர்கள் எல்லாமே மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். ஆழ்வாராக நடித்த டி.டி.எஸ். அசத்தி விட்டார். அவருக்கு நாடக உலகில் நாற்பதாண்டு அனுபவமாம். ஆனால் 30 வயது ளைஞர் பாத்திரத்தில் வரும் ராஜூவாக நடித்த அந்த இளைஞரும் டி.டி.எஸுக்குச் சமமாக நடித்திருந்தது சிறப்பு.

நாடகம் துவங்கும்போதே அது நிகழும் காலம் எது என்பதை அரங்க அமைப்பும், வைதேகி காத்திருந்தாள் பட போஸ்டரும், வானொலியில் ஒலிக்கும் பாடலும் சுட்டிக் காட்டி விடுகிறது. ஆந்திரா மெஸ், கோமதி சங்கர் மிட்டாய் கடை என்று வசனமும் காலம் காட்ட உதவுகிறது. ஆனால் வைதேகி காத்திருந்தாள் என்பது வெறும் படத்தை மட்டும் குறிக்கவில்லை. ஆழ்வாரின் மகள் வைதேகி காத்திருப்பதையும்தான் பூடகமாகக் குறிக்கிறது. ஆனால் அதை வெளிப்படையாக வசனத்தில் ஆழ்வார், “இங்க வைதேகியும் காத்திண்டு இருக்கா .. சினிமாகூட அந்தப் பேர்ல எடுத்துட்டான் பாத்தியோ” என்று சொல்லியிருக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து.

ராஜூவை ஆழ்வார் அழைத்துச் செல்லும் போது, அவர்கள் நடக்க நடக்க, கூடவே ஸ்க்ரீனும் நகர்வது போன்ற காட்சி அமைப்பு மிகவும் சிறப்பு. ஒலி, ஒளி இரண்டுமே நாடகத்துக்குக் கூடுதல் பலம்.

சிலிகான் வாசல்

இது ஐ.டி துறையினரின் சிக்கலைப் பேசும் நாடகம். இதற்கு மிக வித்தியாசமாக அரங்க அமைப்பு செய்திருந்தார்கள். சினிமே செட் போல அந்தச் சின்ன அரங்கத்திற்குள் ஒரு ஐ.டி. ஆஃபிஸையே கொண்டு வந்து விட்டிருந்தார்கள்.

கதாநாயகன் சோலையப்பனால் சொன்னபடி சொன்ன தேதிக்குள் ப்ராஜெக்டை முடிக்கமுடியவில்லை. வெளிநாட்டில் இருந்து வரும் துரை (தேவ்) கோபமுறுகிறார். வேலையை உடனடியாக முடி. இல்லாவிட்டால் வாசல் திறந்துதான் இருக்கு போ என்கிறார். அந்தச் சொல் சோலையப்பனை துன்புறுத்துகிறது. நண்பர்களோ இந்த வேலையை விட்டு விட்டு வா என்கிறார்கள் ஆனால் அவனுக்கோ வேலையை விட்டுப் போக மனமில்லை. விசுவாசம் தடுக்கிறது. மனமோ தன்னால் செய்ய முடியும் என்கிறது.

மனைவியோ வழக்கமான மனைவியாக இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளாமல் சோலையைப் படுத்துகிறாள். பிளாஸ்மா டி.வி. இல்ல. தண்ணிக்குக் கஷ்டப்பட வேண்டி இருக்கு. 300 ரூபாய்க்கு ரங்கநாதன் தெருவுல அலைஞ்சு ட்ரஸ் வாங்க வேண்டியிருக்கு என்று புலம்பல். 30 வயது கடந்த சோலையப்பன் தடுமாறுகிறான். ஆபிஸிலேயே தங்கி ஓய்வு, உறக்கம் இல்லாமல் உழைக்கிறான். சிற்றப்பா மகள் திருமண வரவேற்பிற்கு அழைத்துச் செல்ல முடியாமல் மனைவியிடம் திட்டு வாங்குகிறான்.

மேனேஜர் ஐயங்காரோ சோலைப்பனை விட சூசைதான் கெட்டிக்காரன் என்று ரகசியக் குறிப்பை மேஜை ட்ராயரில் எழுதி வைத்து விட்டு, நடு ராத்திரியில் தன் வீட்டிலிருந்து ஆபிஸுக்குப் போன் செய்து சோலையப்பனை வேலை வாங்குகிறார். அந்தக் குரலின் மிடுக்கும், நீ செய்துதான் ஆக வேண்டும் என்ற மறைமுக அதிகாரத் தொனியும், சோலையப்பன் புலம்புவதும் ரசனை.

கஸ்டமர் என்ற பெயரில் வரும் ஆடாது, அசையாது அமர்ந்திருக்கும் பாத்திரம் நல்ல உத்தி. சோலையப்பன் தடுமாறும்போதெல்லாம் அவனை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, அறிவுரை சொல்லி நண்பன் போல் இருக்கும் அந்த ‘கஸ்டமர்’, நாடக இறுதியில் அவனை ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலைக்குத் தூண்டுவது ஒரு நகை முரண். பேசும் கம்ப்யூட்டராக தலையில் கம்ப்யூட்டரைச் சுமந்து பதில் சொல்லும் பாத்திரமும் ஒரு புதுமை.

பேக் அப் எடுக்காததால் வரும் தொல்லையை, க்ளௌடில் அது ‘சேவ்’ ஆவதை, ஐ.டி. துறையினரின் இன்னும் பல பிரச்சனைகளை குறிப்பாகச் சொல்கிறது இந்த நாடகம். நாடகத்தின் நடு நடுவே தேவ் குறுக்கும் நெடுக்குமாக வந்து வாசல் அங்க இருக்கு, வாசல் அங்க இருக்கு என்று நாடகத்தின் தலைப்பை சுட்டிக் காட்டிச் செல்வது நல்லதொரு நகைச்சுவை.

ஐ.டி. துறையினர் என்றால் சுகவாசிகளாக, காசு, பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பர் என்று நினைத்திருந்த எனக்கு, ‘தண்ணிக் கஷ்டமா இருக்கு. 300 ரூபாய்க்கு ரங்கநாதன் தெருவுல அலைஞ்சு ட்ரஸ் வாங்க வேண்டியிருக்கு’ என்று சோலையப்பனின் மலைவி புலம்புவது போன்ற சொல்லாடல்கள் வியப்பைத் தந்தன.

நாடகத்தில் தேவ் ஆக நடித்து வாசலைக் காண்பித்தவரது உடல் மொழியும் அந்த திமிர் பேச்சும் அருமை. அவரே, பின்னர் எழுத்துக்காரர் நாடகத்தில் ரகு பாத்திரத்தில் அம்மாஞ்சி மாதிரி முகபாவம் காண்பித்து நடித்து மேலும் அசத்தி விட்டார். அதுபோல மேனேஜர் ‘ஐயங்காராக’ வந்தவரும் ரொம்ப அசால்டாக நடித்திருந்தார். அவரே பின்னர் மனைவி சொல் மந்திரவாதியாக எழுத்துக்காரரில் தலைகாட்டியிருக்கிறார். அதுபோல அந்த குறுந்தாடி + கண்ணாடி அணிந்த ஐ.டி. இளைஞரும் என்னை மிகவும் கவர்ந்தார். அசால்டான, அலட்சியமான ஐடி இளைஞர்களுக்கே உரிய பாடி லாங்குவேஜ். குடத்தைத் தூக்கிச் செய்யும் கிண்டல் வசனம் என சின்னச் சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தி இருந்தது எழுத்தாளர் மற்றும் இயக்குநரின் திறமையைக் காட்டியது.

குறிப்பாக அந்தக் குடங்கள். புதிய குடங்களாக இல்லாமல் நாம் வீட்டில் பயன்படுத்துகிற பழைய குடங்களாய்க் காண்பித்தது சிறப்பு.

எழுத்துக்காரர்

கடிதங்களை மின்னஞ்சல்களாக அனுப்புவதில் ஒரு அன்னியோன்னியம் இருப்பதில்லை என்று கருதும் நந்தினி பரணன் (பெயர் சரிதானா!?) தனது கணவரைக் கலந்தாலோசித்து சேவை.காம் நடத்தி வரும் ரகுவோடு ‘சாட்’ செய்வதாகத் துவங்குகிறது நாடகம். ஃபேஸ்புக்கில் எதற்கெடுத்தாலும் ‘லைக்’ போடுபவர்களின் தலையில் சற்று ஓங்கிக் கொட்டி விட்டே நாடகம் துவங்குகிறது. ரகுவிடம் தங்களுக்கு ஒரு எழுத்துக்காரர் வேண்டும் என்று கேட்கிறார் நந்தினி. அதற்காக அவர் போடும் கட்டளைகள்தான் சுவாரஸ்யம். அரங்கில் அப்போது தொடர்ந்த சிரிப்பொலி கடைசிவரை கேட்டுக் கொண்டே இருந்தது.

சில கட்டளைகள்….

எழுத்துக்காரர் தினசரி குளிப்பவராக, தூய்மையான ஆடை அணிந்தவராக இருக்க வேண்டும். மூக்குப் பொடி, வெற்றிலை, புகையிலை, பான்பராக் மெல்வது, சிகரெட் பிடித்தல் போன்ற எந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லாதவராக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் தினந்தோறும் ‘ஷேவ் ’ செய்து விட்டு வருவது அவசியம். இருப்பிடம் நான்காவது மாடியில் அமைந்த குடியிருப்பு என்பதையும், அவ்வப்போது லிப்ட் வேலை செய்யாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எங்கள் குழந்தை நஜனுடன் விளையாடக் கூடாது. போன் அடித்தால் இரண்டாவது மணியிலேயே எடுத்து விட வேண்டும். புத்தகங்கள் படிக்கலாம். ஆனால் அரசியல், சினிமா புத்தகங்கள் கொண்டு வரக் கூடாது. பாட்டு கேட்கக் கூடாது. நாற்காலியைச் சுவரோரம் போட்டு சுவரில் தலை சாய்த்து காலை நீட்டி அமரக் கூடாது. சிந்தாமல், சிதறாமல் மதிய உணவைச் சாப்பிட வேண்டும். உணவின் வாசனை அறையில் ஒருபோதும் இருக்கக் கூடாது. வரவேற்பறை தாண்டி பிற அறைகளுக்குச் செல்லக் கூடாது. கழிவறையைப் பயன்படுத்தக் கூடாது. அபார்ட்மெண்ட் கீழே உள்ள பொதுக் கழிவறையைப் பயன்படுத்திக் கொள்ள ஆட்சேபணை இல்லை.

சில கடிதங்களை ஐபேடில் செய்திருப்போம். அவற்றைக் கேட்டு அப்படியே copy செய்ய வேண்டும். இந்த வேலை பழகியதும், சொல்ல வேண்டியவற்றைச் சுருக்கமாகச் சொல்லியோ, கம்ப்யூட்டரில் எழுதியோ வைத்து விடுவோம். அவற்றை விரிவாக்கி, முந்தைய கடிதங்களோடு தொடர்பு படுத்தி முழுக் கடிதமாக எழுத வேண்டும். ஆனால் எங்களிடம் காண்பித்து அனுமதி பெற்றபின் தான் அனுப்ப வேண்டும்.

ரகசியம் காப்பவராக இருக்க வேண்டும்.

பக்கத்து பிளாட்டில் வசிப்பவர்கள், செக்யூரிட்டி இன்னபிறருடன் பேசக் கூடாது. புன்சிரிக்கலாம் தப்பில்லை. யாராவது தண்ணீர் கேட்டால் கொடுக்கலாம்.

இப்படியாக பல கண்டிஷன்களைப் போடுகிறார்.

நாடகத்தின் முடிவில் வரும் ட்விஸ்ட் ஒரு அவலத்தைச் சொல்கிறது. லைட்டிங்குக்கு ஏற்ப மாறி, மாறி நின்று அவர் கண்டிஷன்கள் போடுவது மாதிரியான உத்தி நாடகத்துக்கு மேலும் சுவை கூட்டியது.

கணவன் பரணன் எல்லாவற்றையும் மனைவி பொறுப்பில் விட்டு விடுவதும், நான் பேச வேண்டியதெல்லாம் நீயே பேசிட்டியே என்பதும் அழகான மனைவியின் அன்புப்பிடியில் இருக்கும் கணவர்களின் அடிமைத்தனம் என்று நினைத்தால் sorry. உண்மை அதுவல்ல. மனைவி அறிவாளியாக, புத்திசாலியாக இருந்தால் எல்லா பொறுப்புகளையும் அவள் தலையில் கட்டி விட்டு தான் மட்டும் எஸ்கேப் ஆகும், free ஆக வாழ நினைக்கும் ஆணாதிக்கவாதிகளைத் தான் பரணன் மூலம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார் முருகன்.

மொத்தத்தில் நாடகத்தில் நடித்தவர்கள் அனைவருமே உணர்ந்து நடித்திருந்தனர். அது செக்யூரிடியாக இருந்தாலும் சரி, வாட்ச்மேன் சாமிநாதனாக இருந்தாலும் சரி. சின்னப் பாத்திரம் என்றாலும் கூட அதை நிறைவாகச் செய்திருந்தனர். அரங்க அமைப்பு, ஒலி, ஒளி, மேக்கப் என்று எல்லாமே சிறப்பாக இருந்தது. ஒரு நல்ல டீம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை ’ஷ்ரத்தா’ வெற்றிகரமாக நிரூபித்திருக்கிறது.

சோலையப்பனைப் பற்றியும் (சிலிகான் வாசல்) நந்தினியைப் பற்றியும் (எழுத்துக்காரர்) ஒன்றுமே சொல்லவில்லை என்று பார்க்கிறீர்களா? அவர்கள் எங்கே நடித்தார்கள், அந்தப் பாத்திரமாக அல்லவா மாறி விட்டார்கள்!!

ஏற்கெனவே திரைக்கதை வசனத்தில் (உன்னைப் போல் ஒருவன்) தனி முத்திரை பதித்த இரா.முருகன், தற்போது நாடகத்துறையிலும் தன் தனித்தன்மையை நிரூபித்திருக்கிறார். தன் சிறுகதைகளை நாடகமாக்கும் அதே சமயம், நாடகத்திற்கென்றே புதிதாக அவர் நிறைய எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

0

இயந்திரப் புலி திப்பு சுல்தான்

tipuபெருங்கருணையும் பேராற்றலும் உடைய மாவீரராக, சமூக – சமயச் சீர்திருத்தவாதியாக, பொதுவுடைமைவாதியாக, நவீன தொழில்நுட்பவாதியாக, பிரிட்டிஷாருக்குச் சிம்மசொப்பனமாக, மைசூரின் புலியாக…. சிறந்த மன்னராகவும் நல்ல குடிமகனாகவும் வாழ்ந்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மாமனிதர் திப்புசுல்தான்.

திப்பு சுல்தான் பதவிக்கு வந்தது முதல் இறக்கும் வரை அவரின் முகத்துக்கு முன்னால் சில எதிரிகளும் முதுகுக்குப் பின்னால் பல துரோகிகளும் அவரைத் தாக்கத் தயார்நிலையில் காத்திருந்தனர்.  திப்பு சுல்தான் தன் மன, உடல், அறிவு வலிமையால் அவர்களைத் தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கியபடியே இருந்தார். உலகில் எந்தப் பேரரசருக்கும் இல்லாத நெருக்கடிகள் திப்புசுல்தானுக்கு இருந்தன. அவற்றைத் தகர்த்தபடியே அவர் தன்னை மைசூரில் நிலைப்படுத்திக்கொண்டார்.

அறப்பணியா, அரசுப்பணியா?   

ஹைதர் அலியின் முதல் மனைவி ஷாபாஸ் பேகம். அவருக்கும் ஹைதல் அலிக்கும் பெண்குழந்தைகளே பிறந்தன. ஆண் வாரிசு இல்லை. ஆதலால் ஷாபாஸ் பேகமின் வற்புறுத்தலின்பேரில் ஹைதர் அலிக்கு ஃபக்ர் உன்னிஸாவைத் திருமணம் செய்துவைத்தார்.ஃபக்ர் உன்னிஸா தனக்குப் பிறக்கும் முதல்குழந்தையை அல்லாவின் திருப்பணிக்கு நேர்ந்துகொள்ளவும் அடுத்த குழந்தையை வாரிசாக ஏற்றுக்கொள்ளவும் ஹைதர் அலியிடம் அனுமதிபெற்றுக்கொண்டார். அத்தம்பதியருக்கு ஐந்தாண்டுகள் குழந்தைப்பேறு இல்லை.

முதல் குழந்தையாகத் திப்பு சுல்தான் 20.11.1750ஆம் நாள் பிறந்தார். ஹைதர் அலி தன் இரண்டாம் மனைவி ஃபக்ர் உன்னிஸாவின் விருப்பப்படி திப்பு சுல்தானை இறைப்பணிக்கு ஒப்படைத்தார். ஹைதர் அலியின் முன்னோர்களின் சூஃபி மரபு இனி திப்பு சுல்தானால் தொடரும் என்று நம்பினார். ஆனால், அல்லாவின் கணக்குவேறு விதமாக இருந்தது.
திப்புசுல்தானுக்கு இஸ்லாமும் பிற இந்திய மதங்களும் கற்பிக்கப்பட்டன. அமைதி என்பது ஒரு மந்திரமாகவே திப்பு சுல்தானுக்குக் கற்பிக்கப்பட்டது. ஹைதல் அலி – ஃபக்ர் உன்னிஸா தம்பதியருக்கு இரண்டாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. கரீம் என்று பெயரிட்டனர். அவனையே தன் அடுத்த ஆட்சி வாரிசாக ஹைதர் அலி நினைத்தார்.

ஆனால், கரீம் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானான். ஹைதர் அலி கலங்கினார். அவர் திப்புசுல்தானைப் பார்க்கச் சென்றார். அப்போது திப்புசுல்தான் ஒரு பண்டிதரிடம் பாடம் படித்துக்கொண்டிருந்தார்.

அப்போதே ஹைதர் அலி தன் முதல் மகன் திப்பு சுல்தானின் மொத்த ஆன்மிகப் படிப்பையும் நிறுத்தினார். திப்பு சுல்தானின் கைகளில் தன் வாளை ஒப்படைத்தார். இனி திப்பு சுல்தான் ஆன்மிகப் பாதையில் பயணிக்க முடியாது. இனி அமைதியை அவர் போர்களத்தில்தான் தேடவேண்டும்.

வித்தியாசமானவர்

திப்பு சுல்தானுக்குப் போர்க்கலைகள் கற்பிக்கப்பட்டன. ஒரு தகுதிவாய்ந்த இளவரசராகத் திப்பு சுல்தான் உருவானார். அப்போது திப்பு சுல்தானுக்கு வயது 15. பெத்தனூர் அரசர் ஹைதர் அலியிடம் வாலா(ளா)ட்டினார். பாலம் என்ற இடத்தில் ஹைதர் அலியின் படைகள் பெத்தனூரை நோக்கி முன்னேறின. இந்தப் போரைக் காண்பதற்காக (அதாவது போர் குறித்த பிராக்டிகல் எக்ஸாமாக) திப்பு சுல்தானும் அழைக்கப்பட்டிருந்தார்.

ஹைதர் அலியும் அவரது படைகளும் பெத்தனூர் அரசனைப் பந்தாடின. திப்புசுல்தான் போர்க்களத்திலிருந்து சற்றுத் தொலைவிலிருந்தார். தன் தந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று கருதிய திப்பு சுல்தான் வேறுவழியில் ஹைதர் அலி போரிடும் பகுதிக்குச் சென்றார்.

அவ்வாறு போகும் வழியில் பெத்தனூர் அரசரின் குடும்பத்தாரைச் சந்தித்தார். அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவந்தார். இச்செய்தி பெத்தனூர் அரசருக்குத் தெரிந்ததும் அவர் ஹைதர் அலியிடம் சரணடைந்தார்.

திப்பு சுல்தான் பெத்தனூர் அரசரின் குடும்பத்தாரைப் பிணையக் கைதியாகப் பிடித்துள்ளார் என்பதனை அறிந்த ஹைதர் அலி மகிழ்ச்சியுடன் திப்பு சுல்தானைப் பார்க்க வந்தார். அதற்குள் ஹைதர் அலியின் தளபதி மக்பூல்கான் திப்பு சுல்தானிடம் வந்து, பிணையக் கைதிகளைப் பார்வையிட்டார். திப்பு சுல்தானின் வீரத்தைப் புகழ்ந்தார். பின் வழக்கம்போலப் பிணையக் கைதிகளிடம் வென்றவர்கள் நடத்தும் அத்துமீறல்களைச் செய்யத் துணிந்தான். அது திப்புசுல்தானுக்குப் பிடிக்கவில்லை. எச்சரித்தார். அவன் கேட்கவில்லை. திப்புசுல்தான் தன் கைத்துப்பாக்கியால் சுட்டார். திப்புசுல்தானின் அரசியல்கொலைகளின் எண்ணிக்கை மக்பூல்கான் கொலையிலிருந்து தொடங்கியது.

திப்புசுல்தான் பெத்தனூர் அரச குடும்பத்தாரைப் பாதுகாத்த்தும் மக்பூல்கானைக் கொன்றதும் ஹைதர் அலிக்குச் சரியாகவே பட்டது. திப்புசுல்தானின் விருப்பப்படி ஹைதர்அலி பெத்தனூர் அரசரையும் அவரது குடும்பத்தாரையும் விடுவித்தார்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

“எங்கெல்லாம் பிரிட்டிஷார் அத்து மீறி ஆக்கிரமிப்பு நடத்துகிறார்களோ அங்கெல்லாம் விரைந்து செல்லவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, நம் எதிரியாகவே இருந்தாலும் சரி, அவர்களுக்கு ஆதரவாகத் தோள்கொடுத்து நிற்கவேண்டும்.”

இதுதான் திப்புசுல்தானுக்கு அவரின் தந்தை ஹைதர்அலி சொல்லிச் சென்ற (மனத்தில் விதைத்துச் சென்ற) மகாமந்திரம். இதனைத் திப்புசுல்தான் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். அதனால்தான் அவர் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தார்.

முதல் வெற்றியும் தொடர் வெற்றிகளும்

கி.பி. 1776ஆம் ஆண்டு மராட்டியர்களுக்குச் சொந்தமான காதிகோட்டையைத் திப்புசுல்தான் கைப்பற்றினார்.

கி.பி. 1767ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையில் வந்த பிரிட்டிஷ் படையைத் திப்புசுல்தான் வாணியம்பாடியில் எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். அப்போது திப்புசுல்தானுக்கு வயது 17.

அன்றுமுதல் கி.பி. 1769ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பிரிட்டிஷ் படை அத்துமீறுகிறதோ அங்கெல்லாம் திப்புசுல்தான் தன் வாளை வீசி அவர்களை அடக்கினார்.
பின் கி.பி. 1780ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகத் தன் தந்தையுடன் இணைந்து போர்தொடுத்தார்.

மைசூர் சுல்தான்

07.12.1782 அன்று தன்னுடைய தந்தை ஹைதர் அலி இறந்தபின் 26.12.1782ஆம் நாள் மைசூர் சுல்தானாக ஆட்சிப்பொறுப்பினை ஏற்றார். அப்பொது திப்பு சுல்தானுக்கு வயது 32.
புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியைத் தன்னுடைய சின்னமாகப் பயன்படுத்தினார். துரோகிகளாக மதிமந்திரி பூர்ணையா தனக்கு அடையாளம் காட்டிய அத்தனைபேரையும் மறு பரிசீலனையே இல்லாமல் மன்னித்தார்.

சுல்தானின் அந்தப்புரம்

திப்புசுல்தானின் அதிகாரப்பூர்வமான மனைவியர்கள் நால்வர். அவர்கள் ருக்கையா பானு, ஆற்காடு ரோஷன் பேகம், புரந்தி பேகம், கதீஜா ஜமானி பேகம் ஆவர்.

திப்புசுல்தானுக்கு ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தன.
பீவி பேகம், அஸ்முலுன்னிஸா பேகம், உமருன்னிஸா பேகம், பாத்திமா பேகம், பதீயுன்னிஸா பேகம், நூருன்னிஸா பேகம், குலூமா பேகம், கதீஸா பேகம் ஆகிய எட்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

திப்புவின் ஆழ்மனது   

திப்புவின் இயந்திரப் புலி சுவாரசியமானது. ஒரு புலி ஒரு பிரிட்டிஷ் வீரரைக் கடித்துக் குதறுவது போன்று ஓர் இசை இயந்திரத்தை  பிரெஞ்சுக் கலைஞர் ஒருவரைக் கொண்டு திப்பு வடிவமைத்திருந்தார்.

ஒரு விசையை இயக்கியவுடன் அந்தப் புலி கர்ஜனையுடன் அந்த பிரிட்டிஷ் வீரனைக் கடித்துக் குதறும். வீரன் அலறுவான். புலியின் கர்ஜனையும் வீரனின் மரண ஓலமும் கூடிய இந்த இயந்திரப்புலி திப்புவுக்கு பிரிட்டிஷாரைப் பழிதீர்க்கும் எண்ணத்தை அவ்வப்போது நினைவூட்டிவந்தது.

இந்த இயந்திரப் புலி ஒரு குறியீடு. அது திப்புவின் ஆழ்மனது. அது திப்புவைத் திப்புவுக்கு நினைவூட்டியபடியே இருந்தது. திப்புவின் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வை வளர்த்துவந்தது. திப்புவின் இறப்பிற்குப் பின்னர் அது பிரிட்டிஷாரால் திருடப்பட்டு, இலண்டனுக்குக் கடத்தப்பட்டது. இப்போது அது அங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

பொற்கால ஆட்சி

திப்பு சுல்தான் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம்.

வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு பிரிட்டிஷார் நடத்திய போர்களுக்குப் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள் பொருளுதவிச் செய்து வந்தனர். ஆனால், வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்றியவர் திப்புசுல்தான்.

அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தன் அமைச்சரைக் கண்டித்த திப்புசுல்தான், “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். இந்தக்கேள்வியை நாம் இப்போது நம் அரசிடம் கேட்கவேண்டும்.

பிரிட்டிஷார் விவசாயிகளைக் கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியைத் திப்புசுல்தான் தடை செய்தார். பிரிட்டிஷார் பாலியல் தொழிலில் பணம் சம்பாதித்தபோது திப்புசுல்தான் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் பாலியல் தொழிலைத்தடை செய்ததோடு அநாதைச் சிறுமிகளைக் கோயிலுக்குத் தேவதாசியாகத் தானமளிப்பதையும் தடை செய்தார்.

அடிமை விற்பனையைத் தடை செய்வதற்காகத் திப்புசுல்தான் ‘எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என்று ஆணை பிறப்பித்தார். வரதட்சணைக் கொடுமையும் சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளையும் திப்புசுல்தான் நீக்கினார்.

கேரளத்தில் நம்பூதிரிகள் கொண்டிருந்த ஆச்சாரப் பழக்கவழக்கத்தில் உள்ள தீய முறையை நீக்கவேண்டியும் தன் மக்கள் தூயவாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கிலும்,  “உங்களுக்கு மத்தியில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்” என்றார்.

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தார் திப்புசுல்தான்.

மதச்சார்பின்றி அனைத்து மதத்தினருக்கும் அரசுப் பணத்தில் கொடைகள் வழங்கினார். இந்துக் கோயில்களுக்கும் அறநிலையங்களுக்கும் பிராமண மடங்களுக்கும் முஸ்லிம் ஸ்தாபனங்களுக்கும் திப்புசுல்தான் ஆண்டுதோறும் 2.34 லட்சம் வராகன்கள் செலவிட்டார்.
“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்திருக்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் மூன்று லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

சென்னை மாகாணத்தைப் போலில்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
கி.பி. 1792ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப்பின் திப்புசுல்தானிடமிருந்து பிரிட்டிஷார் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து பிரிட்டிஷாரின் வரிக் கொடுமை தாளாமல் 4,000 விவசாயிகள் திப்புசுல்தானின் ஆட்சிப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்ததைக் கி.பி. 1796ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரி தாமஸ் மன்றோ தன்னுடைய ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1792 ஆம் ஆண்டு தோல்விக்குப் பின்னரும் திப்புசுல்தான் தமது எல்லைக்குள் வாணிகம்செய்துகொள்ள பிரிட்டிஷாருக்கு அனுமதி தரவில்லை. உள்ளூர் வணிகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தைப் பிற உற்பத்தித் துறைகளுடன் இணைத்தார். பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்தினார்.

கி.பி. 1911ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக் கட்டும் பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்குக் கி.பி. 1798ஆம் ஆண்டு திப்புசுல்தான் அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். அக் கல்வெட்டில் “இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்“ என்று திப்புசுல்தான் ஆணையிட்டிருந்தார்.

“விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றினார்.
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்குத் திப்புசுல்தான் எழுத்துப் பூர்வமாக ஆணையிட்டார்.

பிரிட்டிஷாருக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய திப்புசுல்தான், “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும். தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்” என்று ஆணையிட்டார்.

இத்தனை நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி ஆட்சிபுரிந்த திப்புசுல்தானின் மீது வரலாற்றாசிரியர்கள் மதவாத, இனவாதக் கருத்துக்களைத் தூவி அவரின் புகழுக்குக் கலங்கம் விளைவித்தனர். சங்கும் சுட்டாலும் வெண்மைதரும் என்ற விதிக்கு ஏற்ப திப்புசுல்தானின் புகழ் இம்மியும் குறையவில்லை.

சுல்தானின் ராணுவம்

மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார்.

பிரிட்டிஷாரின் அத்துமீறல்களை அடக்குவதற்கு வாளும் வேலும் மட்டும் பயன்படாது தொழில் முறையில் பயிற்சி பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதைத் திப்பு சுல்தான் புரிந்துகொண்டார்.

ஆதலால் கடற்பயிற்சி பள்ளிகளை உருவாக்கி, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் பிரிட்டிஷாருக்கு நிகராக நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தானே.

திப்பு சுல்தானுக்கு மொத்தம் 3.20 லட்சம் வீரர்கள் இருந்தனர். மூன்று லட்சம் துப்பாக்கிகளும் 929 பீரங்கிகளும் 2.24 லட்சம் வாள்களும் இருந்தன. தன் தந்தை பயன்படுத்திய ஏவுகணைகளைத் திப்புசுல்தான் பிரெஞ்சு படைவீரர்களின் துணையுடன் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதுவகையில் பயன்படுத்தினார்.

மோதி விளையாடு

மேற்கு கடற்கரையிலிருந்து பிரிட்டிஷாரைத் துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால், பிரெஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்தினார். கி.பி. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4,000 சிப்பாய்கள் திப்புசுல்தானால் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் பிரிட்டிஷாருக்குத் திப்புவை நினைத்து பதறச் செய்தது.

கி.பி. 1790ஆம் ஆண்டு முதல் கி.பி. 1792ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர் யுத்தம் என்பது பிரிட்டிஷாரின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டதே. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனைப் போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராகப் போர் புரியத் தயாரானான்.

இச்சூழலில் திப்புசுல்தானுக்கு எதிராகப் போர் புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் பிரிட்டிஷாருடன் இணைந்து கொண்டனர். தனித்து நின்ற திப்புசுல்தான் அத்தனை  எதிரிகளையும் ஒருகைபார்த்தார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புசுல்தானின் கோட்டைக்குள் யாராலும் நுழைய முடியவில்லை.

சூது கவ்வியது

மூன்றாம் மைசூர் போரில் பிரிட்டிஷாரிடம் திப்பு தன் தோல்வியைத் தவிர்ப்பதற்காகச் சமாதான உடன்படிக்கைக்கு இசைவு அளித்தார்.

அதன்படி மைசூரின் ஒரு பகுதியையும் 3.3 கோடி வராகனும் கொடுக்க 26.02.1792ஆம் நாள் ஒப்புக்கொண்டார். முதல்தவணையாகத் திப்பு 1.65 கோடி வராகன் கொடுத்தார். திப்புவின் திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம், தேன்கனிக்கோட்டை, சேலம், கிருஷ்ணா நதியைச் சார்ந்த பகுதிகள் பிரிட்டிஷாரின் ஆளுகைக்குச் சென்றன.

முழுப்பணத்தையும் கொடுக்கும் வரை பிணையக்கைதிகளாகத் திப்புவின் பிள்ளைகளான பத்துவயதுடைய அப்துல் காலிக் மற்றும் எட்டு வயதுடைய மொய்சுதீன் கான் ஆகியோர் காரன் வாலிஸ் பிரபுவால் 10.03.1792ஆம் நாள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மீதியுள்ள 1.65 கோடி வராகனை மூன்று தவணைகளில் சுமார் இரண்டாண்டு அவகாசத்தில் திப்பு செலுத்தி தன் மகன்களை 29.02.1794ஆம் நாள் மீட்டார்.

தன் மகன்களைப் பிரிந்திருந்த இந்த இரண்டாண்டு காலத்தில் திப்புசுல்தான் அடுத்து போருக்குத் தன்னைத் தயார்செய்திருந்தார். திப்புசுல்தானின் மகன்கள் மனத்தளவில் இங்கிலாந்து கலாச்சாரத்திற்கு பிரிட்டிஷாரால் மாற்றப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்ல அவர்களுக்கு அல்லாவின் மீதும் வெறுப்பு ஏற்படும் படி பிரிட்டிஷார் மூளைச் சலவை செய்திருந்தனர்.

தர்மம் தலை காக்கவில்லை

இந்தமுறை பிரிட்டிஷார் திப்புசுல்தானின் அமைச்சர்களை விலைக்கு வாங்கினர். திப்புசுல்தானுக்கு உதவியாகப் படைதருவதாகக் கூறியிருந்த நெப்போலியனால் அப்போது உதவிக்கு வரமுடியவில்லை. எதிரிகளுக்கும் குள்ளநரிகளுக்கும் இடையில் தனியாகச் சிக்கிக்கொண்ட திப்புசுல்தான் தன்னுடைய கடைசி 11,000 வீரர்களுடன் தானும் ஒரு சிப்பாயாக வாளேந்திப் போரிட்டு 04.05.1799ஆம் நாள் மாண்டார்.

ஆயுதம், அறிவுத் திருட்டுகள்

நான்காவது மைசூர் யுத்தத்தில் வஞ்சகம்,  சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 04.05.1799ஆம் நாள் திப்புசுல்தானை வீழ்த்திய பிரிட்டிஷார்  அவரது அரண்மனைக்குள் புகுந்து அங்கிருந்த 9,700-க்கும் மேற்பட்ட நவீன ராக்கெட்டுகளை கைப்பற்றினர்.

திப்பு சுல்தான் தன் அரண்மனையில் அமைத்திருந்த ஓரியண்டல் லைப்ரரி என்ற பெயருடைய நூலகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், ராக்கெட் தயாரிப்பு சார்ந்த ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு திட்டக்குறிப்புகள் ஆகியவற்றைக் கொள்ளையிட்டனர்.

இங்கிலாந்தில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் திப்புசுல்தானின் அரண்மனையிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டவைதான்.

திப்புசுல்தானின் ராக்கெட் தயாரிப்பு சம்பந்தமான ஆய்வுக்குறிப்புகளைக் கொண்டு தனது ராணுவத்திற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்க விரும்பிய பிரிட்டிஷ் அரசு அதற்காக அப்போது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய கண்டுபிடிப்பாளர்  மற்றும் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சர் வில்லியம் காங்கிரிவ் என்பவரை அணுகியது.

சில ஆய்வுகளை மேற்கொண்ட வில்லியம் காங்கிரிவ்  திப்புசுல்தானின் தயாரிப்பு முறைகளில் இருந்த சில அடிப்படை தவறுகளைக் களைந்து  திப்புசுல்தானின் ராக்கெட்டை மேம்படுத்திக் கி.பி. 1804ஆம் ஆண்டு “காங்கிரிவ்“ என்ற ராக்கெட்டை  வடிவமைத்தார்.
16அடிகள் நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டி ஏவப்பட்ட “காங்கிரிவ் ராக்கெட்டுகள்“ ஒன்பது கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருந்தன.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே கி.பி. 1800களில் நடந்த பல யுத்தங்களில் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன.

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் தாம் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்குச் சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கு பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (DRDO) முன்னாள் தலைமை இயக்குநர் மற்றும் விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்’ என்றும்  ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது லண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்றும் கூறினார்.

இவர்களின் கருத்துகளிலிருந்து திப்புசுல்தானின் ஆயுதம் சார்ந்த தொழில்நுட்பத்தின் வெற்றியைப் புரிந்துகொள்ள முடிகிறது.

Tipu_Sultan_BLதிப்பு சுல்தானின் மரணத்திற்குப் பின்

திப்புவின் மரணத்துக்குப் பின் கி.பி. 1799ஆம் ஆண்டில் ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிரண்டு ஆண்குழந்தைகளும் குடும்ப உறுப்பினர்களும் திப்புவின் தளபதிகளில் சிலரும் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலுர் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே சமயம் திப்புவின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்த வீரர்களும் பக்கீர்களும் குடிமக்களும் மைசூரில் இருந்து புலம் பெயர்ந்து வேலுரைச் சுற்றி முகாமிட்டனர்.

சிறையில் அடைபட்டிருந்த திப்புவின் மைந்தர்களோடு இரகசியத் தொடர்பை எற்படுத்திக்கொண்டு, அலோசனை செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் திடீர்ப் புரட்சி செய்ய என்று முடிவு செய்தனர். ஆனால், அந்தப் புரட்சித் திட்டம் ஒற்றர்கள் மூலமாகக் கசிந்து அங்கிலேயருக்குத் தெரியவந்ததால் வேலுர் கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.

இதனை அறியாத திப்புவின் வாரிசுகளும் அவரது பற்றாளர்களும் 10.07.1806ஆம் நாள் அதிகாலை 2.00மணியளவில் அதிரடியாகப் புரட்சியில் இறங்கினர். 100க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களைக்  கொன்றனர். கோட்டையின்மேல் திப்புசுல்தானின் புலிக்கொடியைப் பறக்கவிட்டனர்.

இரண்டு நாட்களில் ஆற்காட்டிலிருந்து பிரிட்டிஷாரின் 19 லைட் ட்ரகூன்ஸ் என்ற 19ஆவது சிரிய குதிரைப் படை ஆயுதங்களுடன் வந்து அப்புரட்சியை முற்றிலும் முறியடித்தனர். 3000த்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். பிடிபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைப் பீரங்கி வாய்களில் கட்டி, பீரங்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொன்றனர்.

அந்தப் புரட்சிக்குப் பின் திப்புவின் குடும்பத்தினர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினர் மைசூருக்கும் மற்றொரு பிரிவினர் வங்கத்திற்கும் அனுப்பப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின் சில அண்டுகள் கழித்து திப்புவின் வாரிசுகளுக்கு மானியம் வழங்குவோம் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. ஆனால் வழங்கவில்லை. பிரிட்டிஷாரைப் போலவே நாமும் அவர்களைக் கைவிட்டு விட்டோம்.

எங்கக் கொள்ளுத் தாத்தா மைசூரின் சுல்தானாம்!    

திப்புவின் கொள்ளுப் பேரர்களில் ஒருவர் அன்வர்ஷா. அவருக்கு சன்வர், அன்வர், திலாவர், ஹஸன் ஆகிய நால்வரும் வாரிசுகள்.

அந்நால்வரும் அவர்களின் குடும்பத்தினரும் இன்று கல்கத்தாவிலுள்ள இளவரசர் அன்வர்ஷா தெரு  இன்று திப்புவின் பேரக்குழந்தையின் பெயராலேயே அழைக்கப்படும் தெருவில் உள்ள சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இதில் சன்வரும், அன்வரும் சைக்கிள் ரிக்க்ஷா  இழுத்துப் பிழைக்கிறார்கள். திலாவர் சிறிய டீக்கடை நடத்தி வருகிறார். ஹஸன் ஸ்கூட்டர்கள் மற்றும் ஆட்டோ ரிக்க்ஷாக்களுக்கு சீட் கவர் தைத்துக்கொடுக்கும் பணியைச் செய்கிறார்.

நமக்குத் திப்புசுல்தான் ஒரு வரலாற்று ராஜா. அவர்களுக்குத் திப்புசுல்தான் நம்பமுடியாத நிஜ ராஜா. அவர்களின் வாரிசுகள் திப்புசுல்தானின் வரலாற்றைப் படிக்காமல் இருப்பது நல்லது. படித்தால் “நம்ம கொள்ளுத்தாத்தாவா சுல்தானாக இருந்தார்?“ என்று நம்ப மறுப்பார்கள். அப்படித்தானே நாம் அவர்களை இப்போது வைத்திருக்கிறோம்!

திப்பு சுல்தான் (20 நவம்பர் 1750 – 4 மே 1799) பிறந்த தின  சிறப்புக் கட்டுரை.

0

முனைவர் ப. சரவணன்

ராவண தேசம் – விமர்சனம்

1391663_10153376723060790_1221028368_nழத் தமிழர்களின் இன்னல்களைப் படம்பிடித்துக் காட்டும் திரைப்படங்கள் இதுவரை தமிழில் வலுவாக வந்ததில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மேலோட்டமாக அந்தப் பின்னணியில் சுற்றி வளைத்துத் தொட்டுச் சென்ற படங்களே வந்துள்ளன. ஈழத்தில் ஈழ மக்களோடு நின்று ஈழ மக்களின் வாழ்வியல் அவலத்தை முதன்முறையாக ஒரு இந்தியத் தமிழ் திரைப்படம் வெளிக்கொண்டு வந்துள்ளது.

முள்ளி வாய்க்காலில் 2009ல் நடந்த சண்டையில் புலிகள் முழுவதுமாக ஒடுக்கப்படுகிறார்கள். அந்த நிகழ்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகப் படம் தொடங்குகிறது. இடைவேளைக்கு முன்பான பகுதிகளில் ஈழ மக்கள் சிங்கள ராணுவத்தால் எதிர்கொள்ளும் அராஜகங்கள் காட்டப்படுகின்றன. புலிகளின் தவறுகள் என்று எதுவும் காட்டப்படவில்லை. ஆனால் பொதுமக்கள் தங்களுக்குப் போரே வேண்டாம், உயிர்தான் வேண்டும் என்கிறார்கள். தன் படையினரைச் சேர்ந்தவர் ஒருவரையே சுட்டுக் கொல்லச் சொல்லி தலைவர் வீரமரணம் அடைகிறார். பொதுமக்கள் முள்ளிவாய்க்காலைவிட்டுச் செல்லக்கூடாது, அது பிறந்த மண்ணைக் கைவிடுவதற்குச் சமம், அதையும் மீறிச் சென்றால் அவர்களைக் கொல்லுவோம் என்று தமிழ்ப் போராளிகள் அறிவிக்கிறார்கள்.

இதையும் மீறிப் பத்து பேர் கொண்ட குழு தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இந்தியா செல்ல முடிவெடுக்கிறார்கள். படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் கடலிலேயே படமாக்கப்பட்டுள்ளது. கடலில் வழிதவறிப் பயணம் செய்யும் அக்குழு எதிர்கொள்ளும் உயிர்ப் போராட்டங்களே மீதிக் கதை. இடைவேளைக்குப் பிறகு வரும் இக்காட்சிகள் உயிரை உலுக்குவதாக உள்ளன. இதை அனுபவித்த ஈழத் தமிழர்களைத் தவிர, மற்றவர்கள் இதைப் புரிந்துகொள்ள இயலுமா என்பதுகூட யோசனையாகவே உள்ளது. சராசரித் தமிழ்ப்பட ரசிகர்கள் ‘ரொம்ப அதிகப்படுத்தி காமிக்கிறாங்க’ என்று நினைக்கூடும்.

முதன்முறையாக ஈழத் தமிழரின் இன்னல்கள் தமிழ் வெகுஜனத் திரைப்படம் ஒன்றில் காட்டப்படுவது பெரிய சாதனைதான். ஆனால் அது இத்தனை நாடகத்தனமாக இருப்பது பெரிய வேதனையைத் தருகிறது. இடைவேளை வரும் காட்சிகள் வலுவில்லாமல் வெறும் வீர வசனங்களால் நிரம்பியிருக்கின்றன.

பிரபாகரன் கொல்லப்படுவதற்குக் காட்டப்படும் காரணம் மேலோட்டமாக உள்ளது. அவர் சிங்களவர்களால் கொல்லப்படவில்லை என்று இயக்குநர் நம்புகிறார் போல. அதற்கு அவர் காட்சிப்படுத்தியிருக்கும் காட்சிகள் எவ்விதத்திலும் நியாயம் சேர்க்கவில்லை.

படத்தில் எங்கும் பிரபாகரன் என்றோ புலிகள் என்றோ ராஜபக்ஷே என்று ஒரு வார்த்தைகூட வரவில்லை! இத்தனை முக்கியப் படத்தைக்கூட இப்படித்தான் எடுக்கவேண்டிய நிலை உள்ளது வெட்கப்படவேண்டியது. ராவண தேசத்திலிருந்து ராம தேசத்துக்குச் செல்லும் மக்களின் இன்னலுக்கு ராம தேசம் என்ன விடை வைத்திருக்கிறது என்பதையும் இயக்குநர் காட்டப்போகிறார் என்று காத்திருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. ராம தேசத்தின் நிலையை ஈழத் தமிழர்களின் பார்வையில், கடலில் மரணிக்கும் தருவாயில் அவர்கள் சொல்லும் வசனங்களோடு விட்டுவிடுகிறார் இயக்குநர். பயணம் செய்து கிட்டத்தட்ட மரணத் தருவாயில் அவர்கள் ராமதேசம் வருவதோடு படம் முடிந்துவிடுகிறது.

ஈழத் தமிழ் இப்படத்தில் கொலை செய்யப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். அவர்கள் பேசும் தமிழ் ஈழத் தமிழ் போலும் இல்லாமல், தமிழ்நாட்டுத் தமிழ் போலும் இல்லாமல் இருந்து வதைக்கிறது. திடீரென்று தூய தமிழும் தலைக்காட்டுகிறது. எதிலேயும் ஒரு அக்கறை இல்லை. ஒரு முக்கியமான திரைப்படத்தை எடுக்கும்போது செய்திருக்கவேண்டிய பின்னணித் தகவல்கள் திரட்டும் பணி இப்படத்தில் ஒழுங்காகச் செய்யப்படவில்லை. அவர்களின் கஷ்டத்தைக் காட்டினால் போதும் என்று இயக்குநர் நினைத்துவிட்டதால், படம் மிகவும் மேலோட்டமாக உணர்வுகளைப் பேசுவதோடு நின்றுவிட்டது. சண்டையே வேண்டாம், உயிர் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் மனிதர்கள் அகதிகளாக ஆகக்கூட முடியாத அவலநிலையைச் சொல்லும் ஒற்றைப் பரிமாணத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகையப் படங்கள் இன்னும் ஆழமான ஆய்வோடும் தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளோடும் வெளியாவது நல்லது. தமிழில் மட்டுமே இந்நிலை சாத்தியமில்லாமல் உள்ளது. இனி வரப்போகும் அத்தகைய நல்ல படங்களுக்கு முதற்படியாக இப்படம் அமையும் வாய்ப்புள்ளது  என்பது மட்டுமே இப்படத்தின் சாதனை.

ராவண தேசம் – 40%

தமிழ்பேப்பர் திரை விமர்சனக் குழு

நரேந்திர மோடியா, ராகுல் காந்தியா?

21rahul1அமெரிக்க அதிபர் தேர்தலைப் போல் ‘அவரா, இவரா?’, ‘அந்தக் கட்சியா, இந்தக் கட்சியா?’ என்று எதிர்வரும் பொதுத் தேர்தலை மீடியா அலசுவதைப் பார்க்கும்போது நிஜமாகவே விவாதத்தின் மையத்தை விட்டு நாம் நகர்ந்துகொண்டிருக்கும் என்னும் உணர்வே ஏற்படுகிறது.

ஜனநாயகம் என்பது பன்முகத்தன்மை கொண்டது என்னும் காரணத்தை முன்வைத்து இந்தக் குறுகியப் பார்வையைச் சிலர் எதிர்க்கின்றனர். ‘காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இந்த இரண்டையும் விட்டால் இந்தியாவை ஆளும் வாய்ப்பு வேறு யாருக்கும் இல்லையா என்ன?’ மூன்றாவது அணி ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியத்தை மறுப்பது இவர்களைப் பொறுத்தவரை தவறு.

இனி தனிப் பெரும் பலம் எந்தவொரு கட்சிக்கும் சாத்தியமில்லை என்னும் நிலையில், கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு இரு பெரும் கட்சிகளை மட்டும் முன்னிறுத்துவது தவறு என்கிறார்கள் இவர்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் மாநிலக் கட்சிகளின் பலம் உயர்ந்து வருவதை இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் மீடியா மட்டுமல்ல இந்த இரு பெரும் தேசியக் கட்சிகளுமேகூட இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை மட்டுமே மக்களுக்கு அளிக்க விரும்புகின்றன. மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியையும் எழுச்சியையும் இவர்கள் ஓர் அச்சுறுத்தலாக மட்டுமே பார்க்கிறார்கள்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தவறுகளையும் சறுக்கல்களையும் பட்டியலிட்டு, பாஜகவை ஒரு வலிமையான மாற்றாக முன்வைக்கிறார் நரேந்திர மோடி. காங்கிரஸின் ‘போலி மதச்சார்பின்மையை’ மோடி கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளாக்கி நிராகரிக்கிறார். காங்கிரஸ் தன் பங்குக்கு வகுப்புவாதத்தை முன்னிறுத்தி பாஜகவை நிராகரிக்கிறது.

பால் பிராஸ் (Paul R Brass) தனது The Politics of India Since Independence நூலில் ஓரிடத்தில் இந்தப் பிரச்னையைச் சுருக்கமாக அலசுகிறார்.  சுதந்தரத்துக்கு முன்பும், பிறகும் இந்தியாவில் மூன்று பிரதான சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. முதலாவது, போர்க்குணம் கொண்ட இந்து தேசியவாதம். இரண்டாவது, பிரிவினைவாதச் சிந்தனைகள் கொண்ட இஸ்லாமியவாதம். மூன்றாவது, மதச்சார்பின்மை.

இந்து மதத்தையும் இந்து மதத்தைப் பின்பற்றுவோரையும் மையப்படுத்தி ஓர் அரசையும் நாட்டையும் உருவாக்க விரும்பியது இந்து தேசியவாதம். இந்துக்களோடு ஒன்றிணைந்து வாழ்வது சாத்தியமில்லை; இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்னும் லட்சியத்தோடும் செயல்பட்டது இஸ்லாமியவாதம். மதம், மொழி, கலாசாரம் போன்றவை பிரிவினையை மட்டுமே ஏற்படுத்தும், நமக்குத் தேவை மதச்சார்பற்ற ஓர் அரசு என்றது மூன்றாவது சிந்தனையோட்டம்.

ஜவாஹர்லால் நேரு மதச்சார்பின்மையை அடித்தளமாக முன்வைத்து சுதந்தர இந்திய அரசியலைத் தொடங்கிவைத்தார். இன்றுவரை காங்கிரஸின் பலமாகப் பலரும் கருதுவது இதைத்தான். 1947க்குப் பிறகு இஸ்லாமியப் பிரிவினைவாதத்துக்கான தேவை இங்கே இல்லாமல் போய்விட்டது. போர்க்குணமிக்க இந்து தேசியவாதத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் இடையில் இஸ்லாமியர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்தியாவும்தான். காங்கிரஸ், மதச்சார்பின்மையையும் பாஜக இந்து தேசியவாதத்தையும் முன்வைக்கின்றன. பாஜகவின் இந்து தேசியவாதத்தில் பாசிசத்தின் கூறுகள் இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு உண்மை காங்கிரஸின் மதச்சார்பின்மையில் கோளாறுகள் இருக்கின்றன என்பதும்.

இஸ்லாமியர்கள் இந்த இரு சிந்தனையோட்டத்தையும் நிராகரிப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் பால் பிராஸ். அயோத்தியும் 2002 குஜராத்தும் இந்துத்துவ அரசியலின் அபாயங்களை நேரடியாகச் சுட்டிக் காட்டுகின்றன.  இந்த இரு பயங்கரங்களும் அரங்கேறியதைத் தடுக்கத் தவறியபோது மதச்சார்பின்மையின் தோல்வி வெளிப்பட்டது.

இந்தப் பின்னணியில் நரேந்திர மோடியா ராகுல் காந்தியா என்னும் கேள்வியை நாம் இப்படியும் புரிந்துகொள்ளலாம். போர்க்குணம் கொண்ட இந்து தேசியமா அல்லது தோல்வியடைந்த மதச்சார்பின்மையா?

இந்து தேசியம், போலி மதச்சார்பின்மை இரண்டையும் நிராகரிக்கும் சிந்தனையாளர்கள் ஜனநாயகத்தின் சாத்தியங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தோல்வியடைந்த இந்த இரு பெரும் கருத்தாக்கங்களுக்கு மாற்றே இல்லையா என்று இவர்கள் வெளிப்படையாக ஏங்குகிறார்கள். போர்க்குணம் தொலைத்த இந்து தேசியமும் போலித்தனம் இல்லாத மதச்சார்பின்மையும் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார் ராமச்சந்திர குஹா.

அவரா, இவரா என்னும் ஆபத்தான எளிமைக்குள் சிக்கிக்கொள்ளாமல் சற்றே அகலமாக நாம் சிந்திக்கவேண்டிய தருணம் இது. மேலே நாம் கண்ட இரு பெரும் கருத்தாக்கங்களும் தோல்வியடைந்துவிட்டன என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா? எனில், இந்த இரண்டுக்கும் மாற்றாகத் திகழக்கூடிய இன்னொரு கருத்தாக்கம் என்னவாக இருக்கும்? அல்லது, இரண்டில் அபாயம் குறைந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே நமக்குள்ள ஒரே வாய்ப்பா? ஆம் எனில், ஜனநாயகம் என்பதன் பொருள்தான் என்ன?

0