குஜராத் : மாற்றமா ஏமாற்றமா? – ஆழம் நவம்பர் இதழ்

wrapper_Page_1

ஆழம் நம்பவர் 2013 இதழில் வெளிவந்துள்ள சில கட்டுரைகள் :

கவர் ஸ்டோரி

 •  குஜராத் : மக்கள் நம்பும் முன்னேற்றம் – ஹரன் பிரசன்னா
 • குஜராத்தைப் புரிந்துகொள்வது எப்படி? – மருதன்
 • குஜராத் : மின் உற்பத்தி சாதனைகளும் சவால்களும் – லஷ்மணப் பெருமாள்

விளையாட்டு

 • இனி கடவுள் இல்லை – சச்சின் பற்றிய விரிவான கட்டுரை – ச.ந. கண்ணன்

உலகம்

 • மெரிக்கன் ஷட் டௌன் : ஏன் எதற்கு எப்படி? – பத்ரி சேஷாத்ரி
 • 2013 நோபல் பரிசுகள் – ஓர் அறிமுகம் – சி. சரவணகார்த்திகேயன்
 • வெளிநாட்டு இந்தியர்களின் பிரச்னைகள் – ஆரோக்கியராஜ்

அரசியல்

 • ஏற்காடு இடைத்தேர்தல் – ஆர். முத்துக்குமார்
 • நோட்டா மாற்று அரசியலை ஏற்படுத்துமா? – கவின்
 • லாலு குற்றமும் தண்டனையும் – ரமணன்

தொடர்

 • திருப்புமுனை – போரஸ் முன்ஷி / தமிழில் : ராமன் ராஜா

பேட்டி

 • ச. தமிழ்ச்செல்வனுடன் B.R. மகாதேவன் நேர்காணல். கல்வி, கம்யூனிசனம், குஜராத், சமச்சீர் பாடங்கள், சமூகம், அரசியல் மற்றும் பல.

இலக்கியம்

 • முற்போக்கு இலக்கியத்தின் பங்களிப்பு குறித்து கடந்த ஆழம் இதழில் வெளிவந்த வண்ணநிலவனின் கட்டுரைக்கு வந்த காட்டமான எதிரொலிக்கு வண்ணநிலவன் இந்த முறை பதிலளிக்கிறார்.

0

மேலதிக விவரங்களுக்கு :

ஆழம் இணையத்தளம்

சந்தா விவரம்

ஆழம் முந்தைய இதழ்கள்

 

எகிப்து நாகரிகம் – மம்மியின் சாபம்

king-tut-mummy-1068400-swஎகிப்திய நாகரிகம் / அத்தியாயம் 18

எகிப்தின் நாகரிகம் பற்றிய அறிவுத் தேடல் எகிப்தியல் (Egyptology) என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடங்கிவைத்தவர் ஹொவார்டு கார்ட்டர்  (Howard Carter) என்கிற பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர். சிறு வயது முதலே, எகிப்துக்குப் போக வேண்டும் என்று அவருக்கு வெறித்தனமான ஆசை.

பதினேழாம் வயதில், தன் கனவு தேசத்துக்குப் புறப்பட்டார். பதினான்கு ஆண்டுகள் பழங்கால நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கும் அரசாங்க வேலையில் ஈடுபட்டார். பிரெஞ்சு நாட்டிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளோடு சின்னச் சண்டை ஏற்பட்டு வேலை பறிபோனது. அடுத்த நான்கு வருடங்கள் ஓவியம், பழங்கால சாமான்களை விற்பது என வயிற்றை நிறைத்து, மனத்தை நிறைக்காத பல வேலைகள் செய்தார்.

ஒரு கட்டத்தில் கார்ட்டருக்கு நல்ல காலம் பிறந்தது.  கார்னர்வான் பிரபு (Lord Carnarvon) கார்ட்டரின் அகழ்வாராய்ச்சிக்கு முழுப் பண உதவி செய்ய முன் வந்தார். கார்ட்டர் தன் முயற்சியை 1909ல் தொடங்கினார். எகிப்து நாட்டின் பல பாகங்களில், பல  ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி நடத்தினார். தோண்டிய இடங்களில் எல்லாம் ஒன்றுமே கிடைக்கவில்லை. தோல்வி, தோல்வி, தோல்வி.   ஆனாலும், கார்ட்டர் அயராமல்  தன் முயற்சிகளைத் தொடர்ந்தார்.

பன்னிரெண்டு ஆண்டுகள் ஓடின. கார்னர்வான் பிரபுவின் பொறுமை எல்லையை எட்டியது. ஒரு நாள் கார்ட்டரைக் கூப்பிட்டு கெடு கொடுத்தார். அடுத்த சில மாதங்களுக்கு மட்டுமே இந்த ஆராய்ச்சிக்குப் பணம் தருவதாக இருக்கிறேன். அதற்குள் ஆராயச்சிக்குப் பலன் கிடைக்கவேண்டும்.

கார்ட்டர் பயந்து நடுங்கினார். அவருக்குத் திருமணம் ஆகவில்லை. வீட்டின் தனிமை இந்த பயத்தை அதிகமாக்கியது. கார்ட்டர் ஒரு நாள் கடைக்குப் போனார். வழியில் ஒருவன் கானரி என்ற ஒரு வகைப் பறவையை விற்றுக் கொண்டிருந்தான். அந்தப் பறவை கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. கானரிப் பறவைகள் நம் ஊர்க் குயில்கள் மாதிரி. இனிமையாகப் பாடும். ஆனால், குயில் மாதிரிக் கறுப்பு நிறமல்ல. மஞ்சள் நிறமாக அழகாக இருக்கும்.

வேலையின் பயத்திலிருந்து விடுபட, தன் தனிமையில் துணை தர கானரியின் பாட்டு உதவும் எனக் கார்ட்டர் நினைத்தார். கூண்டோடு கானரியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அவருடைய வேலைக்காரன் எஜமானரின் கையில் இருந்த கானரியைப் பார்த்தான்.
அவன் சொன்னான், “கானரி அதிர்ஷ்டம் தரும் பறவை, தங்கப் பறவை. கடவுள் அருளால், நீங்கள் இந்த வருடம் தங்கம் கொட்டும் ஒரு கல்லறையைக் கண்டு பிடிப்பீர்கள்.”

அவன் வாக்கு பலிக்க வேண்டும் என்று கார்ட்டர் பிரார்த்தித்தார்.  வீட்டில் இருக்கும்போதெல்லாம் கார்ட்டர் கானரியைக் கொஞ்சிக் கொண்டிருப்பார், அதன் இனிமையான குரலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருப்பார்.  மற்ற வேளைகளில் அவருக்கு ஒரே கவலைதான். முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன. எப்படியாவது ஜெயிக்க வேண்டுமே!

தனக்குத் தெரிந்த கடவுள்கள், தேவதைகள், குட்டி தேவதைகள், எல்லோரிடமும் வேண்டினார். அவருடைய வேண்டுதல் பலித்தது. நவம்பர் 4, 1922. கி .மு. 1332 முதல் கி.மு. 1323 வரை ஆண்ட அரசர்.  துட்டன் காமுன் (Tutankhamun) என்ற மன்னனின் கல்லறையைக் கார்ட்டர் தோண்டினார். ஒரு படிக்கட்டு தெரிந்தது. கார்ட்டர் கீழே இறங்கினார்.

கார்ட்டர் சொல்கிறார், “படிக்கட்டில் இறங்கும்போது ஒரே இருட்டு. என் கையில் இருந்த மெழுகுவர்த்தி மட்டுமே வெளிச்சம், அதன் சுடர் காற்றில் ஆடியது. திடீரென, அறை முழுவதும் வெளிச்சம், அங்கே கொட்டிக் கிடந்த தங்க சாமான்களில் இருந்து வந்த வெளிச்சம்!”

வேலைக்காரனின் வார்த்தை பலித்துவிட்டது, அவருடைய கானரிப் பறவை வந்த நேரம், தங்கம் கொட்டும் கல்லறையைக் கார்ட்டர் கண்டுபிடித்துவிட்டார். மரத்தால் செய்யப்பட்ட கோவில். அதன்மேல் முழுக்கத் தங்கத் தகடுகள். கூரையில்  பிரதானமாய் இரண்டு பாம்புச் சிற்பங்கள்.   துட்டன் காமுனின் தங்க சிம்மாசனம் பளபளத்தது. தன் கைப் பிடிகளில் இரண்டு நல்ல பாம்புகள் செதுக்கப்படிருந்தன. ஃபாரோ மன்னர்களைப் பாதுகாக்க அவர்கள் அருகே விஷப் பாம்புகள் இருக்கும் என்பது புராணக் கதை. அதன் அடிப்படையில் இருந்தன இந்தப் பாம்புகள்.

துட்டன் காமுனின் மம்மி (பதம் செய்யப்பட்ட உடல்) கிடைத்தது. தங்கத்தால் செய்யப்பட்ட முக, உடல் கவசங்கள் மம்மியைப் பாதுகாத்தன. தங்க நகைகள், அற்புதக் கலை நயம் கொண்ட சிலைகள், மன்னரின் லினன் ஆடைகள், முகம் பார்க்கும் கண்ணாடி, மதுக் கோப்பைகள், எழுதுகோல், என ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள்!

கார்ட்டருக்கு எக்கச்சக்க சந்தோஷம், பதின்மூன்று வருட உழைப்புக்குப் பலன் கிடைத்துவிட்டது.   உலக அகழ்வு ஆராய்ச்சியில் கார்ட்டரின் இந்தக் கண்டுபிடிப்பை மிஞ்ச, இதற்கு முன்னும் பின்னும் யாருமே இல்லை.

எகிப்தில் கார்ட்டருக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால், எகிப்திய மத நம்பிக்கைகளின்படி, ஆராய்ச்சி என்ற பெயரில் மம்மிகளைத் தோண்டுதல், மிகப் பெரிய பாவ காரியம். அப்படிப் பாவம் செய்தவர்களைக் கடவுள் தண்டிப்பார் என்று அவர்கள் நம்பினார்கள். இந்தத் தண்டனைக்கு அவர்கள் வைத்த பெயர் மம்மியின் சாபம்.

பல ஆராய்ச்சியாளர்கள், மம்மியின் சாபம் தங்கள் மேல் விழுந்துவிடக் கூடாது என்று பயந்தார்கள். மம்மிகளைத் தொடுவது தவிரப் பிற ஆராய்ச்சிகள் செய்தார்கள். கார்ட்டருக்கு இந்த மூட நம்பிக்கை கிடையாது. தைரியமாக, துட்டன் காமுனின் மம்மியைப் பரிசோதித்தார்.

அன்று மாலை கார்ட்டர் வீடு திரும்பினார். வேலைக்காரர் அவசரமாக அவரிடம் ஓடிவந்தார். அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் கார்ட்டரின் அன்புக்குரிய கானரிப் பறவை சிதறிக் கிடந்தது.
“ஐயா, ஒரு நல்ல பாம்பு எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. திடீரென அதைக் கானரியின் கூண்டுப் பக்கத்தில் பார்த்தேன். கூண்டுக்குல் நுழைந்தது. கானரியை ரண களமாக்கிவிட்டுத் தோட்டப் பக்கமாகக் காணாமல் போய்விட்டது.”

பாம்பா? கல்லறையில், துட்டன் காமுனின் சிம்மாசனத்தில், பார்த்த பாம்பா? மம்மியின் சாபம் பொய்யல்ல, நிஜம் என்று எனக்கு எச்சரிக்கப் பாம்பு வந்ததா? இனிமேல் மம்மிகளைச் சீண்டாதே. சீண்டினால் உனக்கும் கானரி கதைதான் என்று  சொல்ல வந்ததா?

கார்ட்டருக்குப் புரியவில்லை. இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்த சில மாதங்களில், ஆராய்ச்சிக்குப் பண உதவி செய்த கார்னர்வான் பிரபு மரணம் அடைந்தார். மம்மியின் சாபம் அவரைக் கொன்றது என்றார்கள் மத நம்பிக்கைவாதிகள்.

இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு கார்ட்டர் ஆராய்சிகளில் இருந்து ஓய்வு எடுத்தார். இங்கிலாந்துக்குத் திரும்பினார். பழங்காலப் பொருட்களை சேமிக்கத் தொடங்கினார்.  பதினேழு ஆண்டுகள், தம் 65ம் வயதுவரை வாழ்ந்தார். மம்மியின் சாபம் உண்மையானது என்றால், கார்ட்டர் உடல் நலமாக வாழ்ந்தது எப்படி என்று கேட்கிறார்கள் பகுத்தறிவாளர்கள்.

மம்மியின் சாபம் உண்மையா, பொய்யா? மர்மங்கள் நிறைந்த எகிப்து நாகரிகத்தில் விடை காண முடியாத புதிர்!

கார்ட்டர் ஒய்வு பெற்றபோதும் அவருடைய கண்டுபிடிப்பு, நூற்றுக்கணக்கான அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு மாபெரும் உந்து சக்தியானது.

பிற நாகரிகங்களோடு ஒப்பிடும்போது எகிப்தியல் எளிதானது. பிற நாகரிகங்களில் எங்கே தோண்ட வேண்டும் என்று நிர்ணயிப்பதே  மிகக் கடினமான வேலை. பொக்கிஷங்கள் நாட்டில் எங்கேயும் புதைந்து கிடக்கலாம். எகிப்தில் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் பிரமிட்கள் ஆராய்ச்சியாளர்களின் கலங்கரை விளக்கங்களாக இருந்தன. அப்புறம், பண்டைய தலைநகரங்கள் எல்லாமே நைல் நதிக்கரை ஓரமாக வரிசையாக இருந்தன. எனவே தேடுதல் கொஞ்சம் சுலபம்.

எகிப்தின் பண்டைய தலைநகரான தீப்ஸ் அருகே நடந்த அகழ்வுகள் நிஜப் புதையல்கள். அந்த ஏரியா முழுக்க, தோண்ட தோண்ட, அற்புதமான பழங்காலப் பொருட்கள் கிடைத்தன. அரச குடும்பத்தைச் சேர்ந்த அறுபத்தி இரண்டு பேரின் கல்லறைகள் இங்கே கண்டெடுக்கப்பட்டன. அதனால், இந்த இந்தச் சுற்றுப்புறத்துக்கே “சக்கரவர்த்திகளின் சமவெளி” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெயர் வைத்து விட்டார்கள்.

indexகல்லறைகளுக்குள் இத்தனை நகைகள், வைடூர்யங்கள் எனச் செல்வங்களைப் புதைத்து விட்டு செக்யூரிட்டியா போட முடியும்? கி. மு. 1200 – ல் இருந்து கி. மு. 20 வரையிலான கால கட்டத்தில் பல கொள்ளைக்காரர்கள் இவற்றைச் சூறையாடி இருக்கிறார்கள். இவர்களின் கொள்ளைகளுக்குப் பிறகு மிஞ்சிய தடயங்களே எகிப்தின் நாகரிக அடையாளங்கள்.

இந்த அடையாளங்கள் காட்டும் நாகரிகம்,  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இப்படி ஒரு சமுதாயம் வாழ்ந்திருக்க முடியுமா? வாழ்க்கை முறை, அரசாட்சி, நிர்வாகம், கட்டடக் கலை, கணிதம், மருத்துவம், விவசாயம் ஆகிய பல்வேறு துறைகளில் இத்தனை சாதனைகளா?

0

வேற்றுமை உருபுகள்

passive-vs-active-voice2அம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 17

பள்ளியில் இலக்கணம் படிக்கும்போது, செய்வினை, செயப்பாட்டுவினை என்று படித்திருப்போம். அல்லது, ஆங்கிலத்தில் Active Voice, Passive Voice படித்திருப்போம். ஒரு வகை வாக்கியத்தை இன்னொரு வகையாக மாற்று என்று பரீட்சையில் கேள்வி கேட்பார்கள்.

‘நான் நடனம் ஆடினேன்’ என்றால் அது Active Voice, செய்வினை வாக்கியம். காரணம், நான் ஆடுகிற லட்சணத்துக்கு அந்த நடனத்தைப் பார்ப்பவர்கள் செய்வினை வைத்தாற்போல் பேஸ்த் அடித்துப் போய்விடுவார்கள்.

அதே வாக்கியத்தைக் கொஞ்சம் மாற்றி ‘நடனம் என்னால் ஆடப்பட்டது’ என்றால் அது Passive  Voice, செயப்பாட்டுவினை வாக்கியம். இதில் ‘ஆல்’ என்ற வேற்றுமை உருபு வந்திருப்பதைக் கவனியுங்கள். இது இவரால் “செய்யப்பட்டது” என்று சொல்வதால்தான் இதன் பெயர் “செயப்பாட்டு”வினை என்று ஆகிறது.

சென்ற அத்தியாயத்தில் ‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு என்று பார்த்தோம், இது ‘யாரை’ அல்லது ‘எதை’ என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும்.

அதேபோல், ‘ஆல்’ என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. இது ‘யாரால்’ அல்லது ‘எதனால்’ என்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லும்.

உதாரணமாக, ‘பாட்டு பாடப்பட்டது’ என்று ஒரு வாக்கியம். ‘யாரால் பாடப்பட்டது?’ என்று கேள்வி கேட்டால், ‘ஷ்ரேயா கோஷலால் பாடப்பட்டது’ என்று பதில் வரும்.

ஷ்ரேயா கோஷல் என்பது பாடியவரின் பெயர், அதோடு ‘ஆல்’ சேர்க்கும்போது, மூன்றாம் வேற்றுமை உருபு வருகிறது. பாடலைப் பாடியவர் அவர் என்கிற பொருள் இணைப்பு ஏற்படுகிறது.

அஃறிணைக்கும் மூன்றாம் வேற்றுமை உருபு உண்டு. உதாரணமாக, பால் குடிக்கப்பட்டது… எதனால் குடிக்கப்பட்டது? பூனையால் குடிக்கப்பட்டது!

இப்போது, இந்த வாக்கியத்தைக் கொஞ்சம் வேறுவிதமாக மாற்றுவோம். பால் வேண்டாம், காபியை எடுத்துக்கொள்வோம்!

ஒரு கோஷ்டி பெண் பார்க்க வருகிறது. மாப்பிள்ளை அசடு வழிந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறார். அலங்காரங்களோடு தயாராகும் பெண் கையில் காபி தம்ளரைக் கொடுத்து, ‘போய்க் கொடுத்துட்டு வா’ என்கிறார் அவரது தாயார்.

‘யாருக்குக் கொடுக்கறது?’

‘இதென்னடீ கேள்வி? மாப்பிள்ளைக்குதான்!’

இங்கே ‘யாருக்கு?’ என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு ‘கு’ என்ற நான்காம் வேற்றுமை உருபைப் பயன்படுத்திப் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

வழக்கம்போல், இதில் அஃறிணையும் உண்டு. உதாரணமாக, மாட்டுக்குத் தீனி போட்டேன், மாப்பிள்ளைக்குக் காபி கொடுத்தேன் (குறிப்பு: இரண்டு வாக்கியங்களுக்கும் தொடர்பில்லை!)

இதுவரை வந்த நான்கு வேற்றுமை உருபுகளும் நாம் இன்றுவரை பயன்படுத்துகிறவை. ஆகவே, அவற்றைப் புரிந்துகொள்வது சிரமமில்லை.

அடுத்து வரப்போகும் மூன்று வேற்றுமை உருபுகள் கொஞ்சம் பழைய வாடை அடிக்கும். ஆனாலும் பயப்படவேண்டாம், அவற்றைத் தூசுதட்டி வேறுவிதமாக இன்னும் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஐந்தாம் வேற்றுமை உருபு, ‘இன்’, இது ஒப்பீட்டுக்காகப் பயன்படுகிறது.

உதாரணமாக, ‘சச்சினின் சிறந்த கேப்டன் தோனி.’

இந்த வாக்கியத்தைப் படித்தவுடன் உங்களுக்கு என்ன அர்த்தம் தோன்றுகிறது? சச்சின் டெண்டுல்கர் பல கேப்டன்களுக்குக் கீழே விளையாடியிருக்கிறார். அவர்களில் தோனிதான் மிகச் சிறந்தவர். அதாவது, “சச்சினின்” என்ற வார்த்தையை நாம் “சச்சினுடைய” என்று புரிந்துகொள்கிறோம்.

ஆனால், உண்மையான அர்த்தம் அதுவல்ல, ‘இன்’ என்ற வேற்றுமை உருபின் இன்றைய வடிவம், ‘ஐவிட’ என்பது. இதே வாக்கியத்தை இப்படி மாற்றி எழுதிப் பாருங்கள்: ‘சச்சினைவிடச் சிறந்த கேப்டன் தோனி.’

இப்போது, நாம் ஆரம்பத்தில் பார்த்த அர்த்தம் முற்றிலும் மாறிவிட்டதல்லவா? இன்னோர் உதாரணம், ”பெப்ஸியின் சிறந்தது நீர்மோர்” என்ற வாக்கியம், “ஐவிட” என்ற நவீன வேற்றுமை உருபைச் சேர்த்துக்கொண்டு “பெப்ஸியைவிடச் சிறந்தது நீர்மோர்” என்று மாறும்.

ஆக, ஐந்தாம் வேற்றுமை உருபு இப்போது ‘இன்’ என்ற அதே பழைய வடிவத்தில் புழக்கத்தில் இல்லை. அதற்குப் பதிலாக ‘ஐவிட’ என்ற புது வேற்றுமை உருபை நாம் உருவாக்கிக்கொண்டுவிட்டோம்.

இதனால், ‘இன்’ சேர்த்து எழுதப்படும் ஒப்பீட்டு வாக்கியங்கள் கொஞ்சம் போரடிக்கும், அல்லது அர்த்தமே மாறிவிடும். காதலியிடம் ‘நஸ்ரியாவின் அழகி நீ’ என்றால் உதைதான் விழும்.

அடுத்து வருகிற வேற்றுமை உருபு, ‘அது’. அஃறிணையைச் சுட்டிக்காட்டப் பயன்படுகிற ‘அது’ அல்ல, அஜீத்குமார் அடித்தொண்டையில் அலறுகிற ‘அத்த்த்து’வும் அல்ல, இது வேறு.

மேஜைமேலே ஒரு பேனா இருக்கிறது. யாருடைய பேனா? என்னுடைய பேனா (தன்மை), அல்லது உங்களுடைய பேனா (முன்னிலை), அல்லது சரவணனுடைய பேனா (படர்க்கை).

இப்படி நாம் பயன்படுத்துகிற ‘உடைய’ என்ற சொல்லின் பழைய வடிவம்தான் ‘அது’, ஆறாம் வேற்றுமை உருபு. உதாரணமாக: சரவணனது பேனா.

ஏழாம் வேற்றுமை உருபு, ‘கண்’. முகத்தில் உள்ள கண் அல்ல, ஒரு விஷயம் யாரிடம் இருக்கிறது என்பதைக் குறிப்பிடும் விஷயம் இது.

உதாரணமாக, ‘சரவணனின்கண் பேனா இருந்தது’ என்று ஒருவர் சொன்னால், இன்றைய தமிழில் ‘சரவணனிடம் பேனா இருந்தது’ என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆக, ‘கண்’ என்ற ஏழாம் வேற்றுமை உருபை நாம் ‘இடம்’ என்ற புதிய வடிவத்துக்கு மாற்றிக்கொண்டுவிட்டோம்.

நிறைவாக, எட்டாம் வேற்றுமை உருபு. இது ரொம்ப ஈஸி. விளி. அதாவது, ஒருவரைக் கூப்பிடுதல். உதாரணமாக, ‘சரவணா, பேனா எங்கே?’

ஏற்கெனவே முதல் வேற்றுமை உருபில் ஒரு பெயரைமட்டும் பார்த்தோம் (சரவணன்), இப்போது அந்தப் பெயரை விளியாக்கி அந்த நபரை அழைக்கிறோம் (சரவணா).

சில நேரங்களில் இவை இரண்டும் ஒன்றாகவே இருப்பதுண்டு. முக்கியமாகப் பெண் பெயர்களில். உதாரணமாக, ‘சிநேகா வந்தாள்’ என்றால் முதல் வேற்றுமை உருபு, ‘சிநேகா, வா’ என்றால் எட்டாம் வேற்றுமை உருபு.

இந்த வேற்றுமை உருபுகள் ஒரு வாக்கியத்துக்கு ஒன்றுதான் என்று எந்தக் கணக்கும் இல்லை. அவை கலந்தும் வரலாம். உதாரணமாக, ‘என்னைப் பார்த்து உன்னுடைய தம்பி இந்தக் கேள்வியைக் கேட்கலாமா?’, ‘என்னுடைய பேனாவை நீ பயன்படுத்தலாம்’, ‘கண்ணா, உனக்கு இன்னொரு லட்டு வேண்டுமா?’.

இப்போது, எட்டு வேற்றுமை உருபுகளையும் தொகுத்துப் பார்ப்போம்:

* முதல் வேற்றுமை உருபு : பெயர்மட்டும் : உதாரணமாக, சித்ரா பாடினார்

* இரண்டாம் வேற்றுமை உருபு : ”ஐ” : யாரை? எதை? : சித்ரா பாட்டைப் பாடினார்

* மூன்றாம் வேற்றுமை உருபு : ”ஆல்” : யாரால்? எதால்? : சித்ராவால் பாட்டு பாடப்பட்டது

* நான்காம் வேற்றுமை உருபு : ”கு” : யாருக்கு? எதற்கு? : சித்ராவுக்குப் பாட்டுப் பாடுவது ரொம்பப் பிடிக்கும்

* ஐந்தாம் வேற்றுமை உருபு : “இன்” : யாரைவிட? எதைவிட? : சித்ராவின் ஜானகி நன்றாகப் பாடுவார் (அல்லது, இன்றைய தமிழில்) சித்ராவைவிட ஜானகி நன்றாகப் பாடுவார் (ஒருவேளை நீங்கள் பாடகி சித்ராவின் ரசிகர் என்றால், இந்த வாக்கியத்தை மாற்றிப் படித்துக்கொள்ளவும்!)

* ஆறாம் வேற்றுமை உருபு : ”அது” : யாருடைய? எதனுடைய? : சித்ராவது பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் (அல்லது, இன்றைய தமிழில்) சித்ராவுடைய பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்

* ஏழாம் வேற்றுமை உருபு : “கண்” : யாரிடம்? எதனிடம்? : சித்ராவின்கண் நல்ல பாட்டுத் திறமை உண்டு (அல்லது, இன்றைய தமிழில்) சித்ராவிடம் நல்ல பாட்டுத் திறமை உண்டு

* எட்டாம் வேற்றுமை உருபு : விளி / அழைத்தல் : சித்ரா, பாடு(ங்கள்)

சில நேரங்களில், வேற்றுமை உருபுகள் நேராக வராமல் ஒளிந்திருந்து விளையாடும். அதற்கு ‘வேற்றுமைத் தொகை’ என்று பெயர். அதாவது, வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது, ஒளிந்துள்ளது.

உதாரணமாக: ‘என் பேனா’… இதில் ஏதேனும் வேற்றுமை உருபு உள்ளதா?

நேரடியாகப் பார்த்தால், இல்லை. ஆனால் உண்மையில் அது ‘என்னுடைய பேனா’ (அல்லது) ‘எனது பேனா’ என்று இருக்கவேண்டும். ஆறாம் வேற்றுமை உருபு ‘அது’ தொக்கி நிற்கிறது. ஆகவே, வேற்றுமைத் தொகை.

இன்னோர் உதாரணம், ‘தோசை தின்றான்’… இது ‘தோசையைத் தின்றான்’ என்று வரவேண்டும், ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது. ஆகவே, வேற்றுமைத் தொகை.

இப்போது, ஒரு சின்னப் பயிற்சி. சில சினிமாப் பாடல் வரிகளைக் கீழே தந்துள்ளேன். இவற்றில் எந்த வேற்றுமை உருபுகள் அல்லது வேற்றுமைத் தொகைகள் வருகின்றன என்று கண்டுபிடித்து எழுதுங்கள். (குறிப்புகள்: சில வேற்றுமை உருபுகள் மேலே பார்த்த அதே வடிவத்தில் இருக்காது, அல்லது ஒளிந்திருக்கும், ஆனால் சரியான கேள்விகளைக் கேட்டால் சரியான பதில் வந்துவிடும். ஒரே வாக்கியத்தில் இரண்டு அல்லது மூன்று வேற்றுமை உருபுகள்கூட இருக்கலாம். எல்லாவற்றையும் கண்டுபிடிக்கப் பாருங்கள்).

* கண்ணா, வருவாயா? மீரா கேட்கிறாள்

* கண்ணன் மனம் என்னவோ, கண்டு வா தென்றலே

* எனக்குப் பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குமே

* உன்னால் முடியும் தம்பி, தம்பி!

* என்னைத் தாலாட்ட வருவாளா?

* என்னோட லைலா, வர்றாளே ஸ்டைலா

* பாட்டாலே புத்தி சொன்னார்

* உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

* மாமா, உன் பொண்ணைக் கொடு

* மாமாவுக்குக் குடுமா குடுமா, அறை ஒண்ணே ஒண்ணு

* இந்த மாமனோட மனசு மல்லிகப்பூ போலே பொன்னானது

* தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு

* தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்

* பூவே, செம்பூவே, உன் வாசம் வரும்

‘பெயர், ஐஆல்குஇன்அதுகண், விளி’ என்கிற எளிய சூத்திரத்தை இன்னொருமுறை நினைவுபடுத்திக்கொள்வோம். அடுத்த அத்தியாயத்தில் இந்த வேற்றுமை உருபுகளை வைத்துச் சில புணர்ச்சி விதிகளைப் பார்ப்போம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* மூன்றாம் வேற்றுமை உருபு : ஆல்
* நான்காம் வேற்றுமை உருபு : கு
* ஐந்தாம் வேற்றுமை உருபு : இன் (ஐவிட)
* ஆறாம் வேற்றுமை உருபு : அது (உடைய, இன்)
* ஏழாம் வேற்றுமை உருபு : கண் (இடம்)
* எட்டாம் வேற்றுமை உருபு : அழைத்தல்

0

ஆதிதிராவிடர்கள்

278607bigபறையர்கள் / அத்தியாயம் 23

சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் தொன்மையான நகர் நாகரிகத்துக்கு திராவிடர்கள் தான் சொந்தக்காரர்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடுவது ஆதி திராவிடர்களையேச் சாரும். ‘தமிழ் பேசும் தாழ்த்தப்பட்ட மக்கள்’ தமிழாதற்குதி (ஆதித் தமிழர்) என்று அழைக்கப்பட்டனர். (தமிழாதி – உயர்குல வகுப்பினர் எனக் கூறிக் கொள்வோர், தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்க இந்தச் சொல்லை கையாள்கின்றனர்).

ஒதுக்கப்பட்ட மக்கள் இன்று யாராலும் திருகுலத்தார் (புனிதக் குடும்பத்தைச் சார்ந்தவர்) என்றும், ஆதி திராவிடர் அதாவது முதல் தமிழர், முன்னைய தமிழர் என்றும் அழைக்கப்படுகின்றனர். தமிழ் பேசுவோர், தொன்று தொட்டுப் பேசுவோர், தமிழ் பற்றுடையோர், தமிழரிடைப் புறக்கணிக்கப்பட்டிருப்போர் இவர்கள் யாவரும் ஒருவகையாகத் ‘தமிழர்’ என்றே கூறப்படுகின்றனர். எனினும் ஆதிதிராவிடரே சிறப்பு வகையால் ‘முழுத் தமிழர்’ ஆவர் எனத் தோன்றுகிறது.

மத்திய காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூலாகிய ‘ஞான வெட்டியான்’ என்ற நூலில் ஆதி திராவிடர்கள் தங்கள் புலன்களை அடக்கி மனத்தை ஆண்டதற்கும் அதன் மூலம் ஆத்ம ஞானம் பெற்று உயர்ந்து நின்றதற்கும் ஆதாரமாக வெள்ளைக் குடையையும், வெண்சாமரத்தையும், கற்கள் பதித்த காதணிகளையும், வாளையும் பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது. இவை அனைத்தும் ஆதிதிராவிடர்கள் ஒரு காலத்தில் மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்பதை எடுத்துக்காட்ட வந்தவை எனக் கருதப்படுகிறது.

சுதந்தர இந்தியாவில் தீண்டாமை என்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டு வந்த போதிலும் இன்றளவும் ஆதி திராவிடர்கள் ஒதுக்கப்பட்டே வாழ்ந்து வருகின்றனர். மரபு வழியில் இவர்களைப் ‘பறையர்’ என்றும் அழைக்கின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் நலன் கருதி பண்டிதர் அயோத்திதாசர் தான் அமைத்திருந்த ‘பறையர் மகாசன சபை’ என்ற பெயரை 1910ம் ஆண்டுக்குப் பின்னர் ‘ஆதிதிராவிடர் மகாசன சபை’ என மாற்றினார். திராவிடர் என்னும் சொல் தென் இந்தியாவில் வாழ்ந்த அத்தனை மக்களையும் குறிக்கும் பொதுப்பெயராகக் கருதப்பட்டதால் பழங்குடி மக்கள் என்பதனைக் குறிக்கும் ‘ஆதி’ என்னும் அடைமொழியை இணைத்து ஆதிதிராவிடர் எனக் குறிக்கத் தொடங்கினார்கள்.
ஆதிதிராவிடர் மகாசன சபை 1918ல் அன்றைய சென்னை மாகாண அரசுக்குக் கொடுத்த கோரிக்கையில் மக்கள் கணக்கெடுப்பிலும் மற்ற அரசு ஆவணங்களிலும் ‘பறையர்’, ‘பஞ்சமர்’ என்னும் பெயர்களுக்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ எனும் பெயர் பெற்றது. ஆனால் அப்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி இதனை ஏற்கவில்லை. ஆந்திரத்திலும், கன்னடத்திலும் ‘ஆதி திராவிடர்’ என்னும் பெயரை ஏற்கத் தாழ்த்தப்பட்டோரில் எவரும் முவரவில்லை. இந்த நிலையை அந்த அதிகாரி சுட்டிக் காட்டினார். ஆனால், ஆதி திராவிடர் மகாசன சபை, பெயர் மாற்ற கோரிக்கையிலே பிடிவாதம் காட்டியது. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மத்தியில் பொதுக்கூட்டங்கள் போட்டு, இதற்காக தனது கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவைத் திரட்டியது. நீதிக்கட்சியினரும் அந்த மகாசனசபைக்கு உதவியாக இருந்தனர்.

அக்கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான டாக்டர் சி. நடேச முதலியார், ஆதி திராவிடர் மகாசன சபையின் கோரிக்கையை ஏற்குமாறு அரசினருக்குப் பரிந்துரை வழங்கும் தீர்மானம் ஒன்றை சென்னை மாநகராட்சிக் கூட்டம் ஒன்றில் முன்மொழிந்து அதை நிறைவேற்றுமாறு செய்தார். 1921ம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை ஆதி திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டு, குடி மதிப்பீட்டுக் கணக்கேட்டில் அதை ஏறும்படி செய்தனர். 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி, சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும். இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர். இது, தமிழக தாழ்த்தப்பட்டோரும் ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது. சென்னை மாகாணத்தின் இந்தப் பகுதிகளில் தங்களை ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள எவரும் முன் வரவில்லை.

1922ம் ஆண்டு மார்ச் திங்கள் 25ம் நாள் பஞ்சமர் என்ற இழி பெயர் நீக்கப்பட்டது. (ஆனால் பஞ்சமி நிலம் என்ற சொற்றொடரில் உள்ள பஞ்சமி என்ற சொல் மட்டும் இன்னும் நீக்கப்படாமல் பஞ்சமி நிலம் என்றே வழங்கப்படுகிறது). சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் ஆதி திராவிடர் என்னும் பெயரை அதிகாரபூர்வமாக ஏற்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று நீதிக்கட்சியினரால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றி வைக்கப்பட்டது. ‘பஞ்சமர்’ அல்லது ‘பறையர்’ என்பதற்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அரசு ஆணை பிறப்பித்தது.

இட ஒதுக்கீட்டு ஆணை, கல்லூரிக் குழுக்கள் ஆகியவற்றால் கல்வித்துறையிலும் அரசுப்பணியிலும் பார்ப்பனர்களின் ஏகபோகத்தைத் தடுத்தும், பஞ்சமர் பெயர் மாற்றத்தால் வைதீக சாதி அமைப்புகளைத் தகர்த்தும் செயல்பட்டது நீதிக்கட்சியின் அரசு. ஆனால் இந்தப் பெயர் மாற்றம் தமிழ் மாவட்டங்களில்தான் அமலில் இருக்குமென்றும் அரசு தெளிவுப்படுத்தியது. மற்றபடி, தெலுங்கு மாவட்டங்களில் ‘ஆதி திராவிடர்’ என்றும், கன்னட மாவட்டங்களில் ‘ஆதி கன்னடர்’ என்றும் வழங்கிவரும் என்பதாகவும் அரசு உறுதிப்படுத்தியது.

ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் ‘ஆதித் தமிழர்’ என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என்றே அழைக்கப்பட்டு, தமிழர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டனர். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின ஓவிய, சிற்பக் கலைஞர்களின் திறமைகளை மக்களிடையே கொண்டு செல்ல அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் ஆதி திராவிட நலத்துறை மூலமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் உதவித் தொகையில் நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் 2008 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் மட்டும் ரூ.1 கோடி மோசடி நடந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு உள்ள மக்களின் கல்வி முன்னேற்றத்துக்கு வழங்கப்படும் உதவித் தொகையின் இந்த மோசடியால் ஆதிதிராவிடரின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் தடைபடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதே போல் தமிழகத்தில் ஆதிதிராவிடர்களை ஓட்டுக்காக மட்டுமே அரவணைத்துக் கொள்ளும் போக்கு இருந்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு (தினகரன், 04.03.2012) நடந்த சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் ஆதிதிராவிடர்கள் ஓட்டுக்களைப்பெற ஒரு கட்சி புது திட்டம் அமைத்து சங்கரன் கோயில் தொகுதியில் மொத்தம் 45 ஆயிரம் ஆதி திராவிடர்களின் ஓட்டுகளை முழுவதும் பெற முயற்சி நடப்பதாகவும் அன்றைய செய்தித்தாளில் (உண்மையாக இருக்கலாம் அல்லது குறிப்பிட்ட கட்சியின் மீது கூறப்பட்ட இந்தப் புகார் காழ்ப்புணர்ச்சியாகவும் இருக்கலாம்) காண முடிந்தது.

0

பண்டைத் தமிழகத்திலும், இன்றும் ‘சேரி’ என்ற சொல் புழக்கத்தில் இருந்து வருகிறது. சேரி என்ற சொல் இன்று தீண்டப்படாதார் வாழும் இடமாக குறிக்கப்படுகிறது. ஆனால் பண்டைத் தமிழகத்தில் அவ்வாறு இல்லை. அப்பொழுது இருந்த சேரிகளில் குடியிருந்த மக்கள் பல இனங்களை, பல மொழிகளை, பல பண்பாட்டைக் கொண்டவராக இருந்தனர் என தொல்காப்பியம், அகம், புறம், பரிபாடல், மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய பல இலக்கியங்களில் பரவலாகக் குறிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக நகர்க்கரையில் அமைந்தது. நகர் எனப்பட்டது போல், ஊர்ந்து பெருகும் வாழிடங்கள் ஊர் எனப்பட்டது போல, சேர்ந்து வாழுமிடங்கள் சேரி எனப்பட்டது.
சேரி என்பது, பல வீடுகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் குடியிருப்பு. முற்காலத்தில் முல்லை நிலத்தூர்கள்  ‘சேரி’ என்னும் பொதுப்பெயர் பெற்றன. முல்லை நிலமக்கள் இடையராதலின், மருதநில நகர்ப்புறத்துள்ள பேரூரும் நகருமாகி, திணை மயக்கமும் தொழில் பற்றிய குலப்பாகுபாடும் உண்டானபின் ஒவ்வொரு பேரூரிலும் ஒவ்வொரு குலத்தாருடைய தனிக் குடியிருப்பும் ‘சேரி’ எனப்பட்டது. இவ்வாறு இடைச்சேரி, பறைச்சேரி, பார்ப்பனச் சேரி என்னும் வழக்கு எழுந்தது.

‘ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்’ (தொல். அகம் 37). நாளடைவில் குலப்பாகுபாடு, பிறப்போடு தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டப் பின் தாழ்த்தப்பட்டோர் பிற குலத்தாரோடு சேராது ஊருக்குப் புறம்பே வசிக்க நேர்ந்தது. அதிலிருந்து ‘சேரி’ என்னும் சொல் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பையே உணர்த்தி வருகின்றது.

கி.பி. 2ம் நூற்றாண்டின் முடிவில் மலபார் கரையில் உள்ள தமிழ்க்குடியிருப்புகள் வடக்கே தலைச் சேரிக்கு அப்பாலும், கிழக்கே மலைத் தொடர் அடிவாரம் வரையிலும் பரவியிருந்தது என்று பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை  (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்) குறிப்பிடுகின்றார். இதில் கூறப்பட்டுள்ள தலைச்சேரி என்ற பகுதி இருந்துள்ளதை அறியலாம்.

கொங்கு நாடானது பழங்காலத்தில் 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று ஆறை நாடு. இந்த ஆறை நாடு 6 உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. அதில் ஒன்று தணக்கு நாடு என்பது. இந்த தணக்கு நாடு என்பது ‘நடுவச் சேரி’யைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன்மூலம் ‘நடுவச்சேரி’ என்ற ஊர் இருந்துள்ளதை அறியமுடிகிறது.

சங்க கால மதுரை மாநகரில் புறமதிலுக்கும், அகமதிலுக்கும் இடையில் இருந்த வீதிகள் ‘புறஞ்சேரி’ என்று பெயர் பெற்றிருந்தன. அங்கு பெரும்பாலும் ஆயர்குல மக்கள் வாழ்ந்திருந்தனர்.

கபிலர் கூட குறிஞ்சித்திணை குறித்து விளங்குங்கால் ‘ஊர் அலம் சேரிச்சிறூர்’ என்று குறிப்பிடுகிறார். பெரிய ஊரல்லாது சேரிகளைக் கொண்ட சிற்றூர் என்பது இதன் பொருள்4
‘யவனச்சேரி’ இருந்ததை மணிமேகலை, பெருங்கதை ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. (யவனர் – கிரேக்கர், அரேபியர் மற்றும் ரோமர். பொதுவாக வெளிநாட்டவரை குறித்தாக இருக்கலாம்) இலங்கையில் ‘சாவகச் சேரி’ என்ற நகரம் உள்ளது.

தஞ்சை மாவட்டம் மாயூரம் வட்டம் ‘திருமணஞ்சேரி கோயில்’ உள்ளது. இதற்குப் பழைய பெயர் ‘திருக்கற்றாளி மகாதேவர் கோயில்’ என்பது. இப்போதைய பெயர் ‘உத்வாகநாத சுவாமி கோயில்’ என்பது.

சங்க காலப் பார்ப்பனப் புலவர் ஒருவரின் பெயர் முடமோசியார். இவர் உறையூர் ‘ஏணிச்சேரி’ முடமோசியார் என்று அழைக்கப்படுவார். மோசி என்பது ஒரு குடிப்பெயராக இருக்கலாம். மோசி என்பது ஊர்ப்பெயராகவும் இருக்கலாம். இம்மோசி என்னும் ஊர் தாராபுரம் வட்டம் மூலனூர்க்கு அருகில் உள்ளதாகக் கூறுவர். இவர் பாண்டிய நாட்டில் மோசி என்னும் குடியைச் சார்ந்தவர் என்றும் கூறுவர். இவர் உறையூர்ச் சோழன் கோப்பெருநற்கிள்ளியிடம் தங்கியிருந்தவர். ஏணிச்சேரி என்ற ஊரில் வாழ்ந்தவர் என்பர்.

பவானிக்கு மேற்கில் ஆறுகல் தொலைவில் ‘ஓரிச்சேரி’ என்னும் ஊர் உள்ளது. அது இன்று ‘ஓரிச்சேரி’ என்று வழங்கப்படுகிறது. சங்ககால வள்ளல்களில் ஒருவனான ஓரியின் பெயரால் ஓரிச்சேரி வழங்கப்பட்டது எனலாம்.

0

எகிப்து நாகரிகம்

pharaoh-167129-285-400பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 17

எகிப்திய நாகரிகம் ( கி.மு 3150 – கி.மு. 332 )

ஆரம்ப நாள்கள்

கரை புரண்டு  ஓடி வரும் உலகின் மிக நீளமான நைல் நதி. ஒட்டகங்கள் கம்பீர பவனிவரும் பரந்து விரிந்த சஹாரா  பாலைவனம். உயர்ந்து நிற்கும் பிரம்மாண்ட பிரமிட்கள். சிங்க உடலும், மனித முகமுமாகப் பிரமிக்க வைக்கும் ஸ்ஃபிங்க்ஸ் (Sphinx) சிலைகள். தன் சுட்டுவிரல் அசைவில் சாம்ராஜ்ஜியங்களைச் சுழலவைத்த பேரழகி கிளியோபாட்ரா… எகிப்தின் வரலாற்றுக்கும் நாகரிகத்துக்கும் பல்வேறு முகங்கள் உள்ளன. இவை நமக்குத் தெரிந்த முகங்கள். இவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான். எகிப்தின் நாகரிக வளர்ச்சி சரித்திர சமுத்திரம்.

நில அமைப்பு

ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களும் சந்திக்கும் இடத்தில் எகிப்து அமைந்துள்ளது. இஸ்ரேல், ஜோர்டான், லிபியா, சவுதி அரேபியா, சூடான் ஆகியவை எகிப்தின் அண்டை நாடுகள். மூன்று பக்கங்களில் கடல் – வடக்கில் மத்தியதரைக் கடல், தெற்கிலும் கிழக்கிலும் செங்கடல், தெற்கில் லிபியப் பாலைவனம். இந்தப் பூகோள அமைப்பு, பக்கத்து நாடுகளிலிருந்து இயற்கை தந்த பாதுகாப்பு.  இதனால், எகிப்தின் நாகரிகமும், தனித்துவத்தோடு வளர முடிந்தது.

எகிப்தின் இன்றைய அதிகாரபூர்வமான பெயர் எகிப்திய அரபுக் குடியரசு. இந்தப் பெயர்தான் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது தெரியுமா? நாகரிக ஆரம்ப காலங்களில், கெமெட்  (Kemet) என்று பெயர். கறுப்பு நிலம் என்பது இதன் பொருள். நைல் நதி அடிக்கடி வெள்ளப் பெருக்கெடுத்துப் பாய்ந்துவரும். பெருவெள்ளம் ஓயும்போது, கறுப்பு நிறக் கரிசல் மண்னை விட்டுச் செல்லும், அதனால், இந்தப் பெயர். சிவப்பு நிலம் என்று பொருள்படும் டெஷ்ரெட் (Deshret) என்றும் பலர் அழைத்தார்கள். எகிப்தின் நிலப்பரப்பில் 94.5 சதவிகிதம் பாலைவனம்.  இந்த நிலப்பரப்பு சிவப்பு மண் கொண்டது. அடுத்து வந்த பெயர் Hwt-ka-Ptah. நம் ஊர் கலைமகள்போல், எகிப்தியக் கலைஞர்களின் தெய்வம் Ptah. தங்கள் நாட்டுக் கலைகளிலும், கைவினைத் திறமைகளிலும் பெருமைகொண்ட குடிமக்கள் வைத்த பெயர். எகிப்துக்குப் பெருமளவில் கிரேக்கர்கள் வந்தார்கள். அவர்களுக்கு இந்தப் பெயர் வாயில் நுழையவில்லை. Aegyptus என்று உச்சரித்தார்கள். இதுவே மருவி, Egypt என்றாகிவிட்டது.

இதிகாச ரகசியம்  

எகிப்து “ரகசியங்கள் நிறைந்த நாடு” என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படி என்ன த்ரில்லர் ஸ்டோரி எகிப்துக்கு?  “இயற்கை பாதுகாக்கிற நாடு மட்டுமல்ல, இறைவன் விரும்புகிற நாடும் எகிப்துதான், கடவுள் முதலில் படைத்ததும் எகிப்துதான்” என்று பெருமையோடு அந்த மண்ணின் மைந்தர்கள் மார் தட்டுகிறார்கள். தங்களுடைய சுவாரஸ்யமான புராணக் கதைகளை அவர்கள் ஆதாரம்  காட்டுகிறார்கள்.

எகிப்து தோன்றுவதற்கு முன்னால், பிரபஞ்சம் எங்கும் ஒரே இருட்டு. நன் (Nun) என்கிற தண்ணீர்ப் பரப்பு மட்டுமே இருந்தது. நன் மிக சக்தி கொண்ட தண்ணீர். அது இருட்டிலிருந்து பளபளக்கும் ஒரு முட்டையை உருவாக்கியது. அந்த முட்டையின் பெயர் ரே (Re).

ரே மந்திர சக்தி கொண்ட முட்டை. ரேயால் எந்த சக்தியையும் படைக்க முடியும், எந்த மனித, மிருக உருவத்தையும் எடுக்க முடியும். அந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு ரேயின் பெயர் மாறும். ரே தன் உண்மைப் பெயரை மட்டும் யாரிடமும் சொல்லக்கூடாது. ரேதான் முழு முதற் கடவுள், சூரியக் கடவுள்.

ரே முதலில் படைத்தது இரட்டைக் குழந்தைகள். ஷூ (Shu) என்கிற ஆண் குழந்தைதான் காற்றுக் கடவுள். அடுத்து வந்த டெஃப்னட் (Tefnut) என்ற பெண்  குழந்தை மழைக் கடவுள். இவர்கள் இருவருக்கும் கெப் (Geb), நட் (Nut) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தன.

கெப் பூமிக் கடவுள். நட் வானத்தின் கடவுள். இவர்களுக்கு ஐஸிஸ் (Isis), ஓஸிரிஸ்
(Osiris), நெப்திஸ் (Nephthys), ஸெட் (Set) என்ற நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.

இந்தக் கடவுள்கள் அத்தனை பேரும் சேர்ந்து நைல் நதி எப்போதும் தண்ணீர் வரும்
ஜீவ நதியாக இருக்க வரம் கொடுத்தார்கள். எகிப்து நாடு வளங்கள் நிறைந்த பூமியானது. இந்தப் பொன் விளையும் பூமியில் வாழும் ஆண்கள், பெண்கள், மிருகங்கள். பறவைகள், மீன்கள் ஆகிய எல்லா ஜீவராசிகளையும் ரே படைத்தார்.

நாடு, மக்கள், மற்ற உயிரினங்கள், அத்தனையும் தயார். அவர்கள் நல்லவர்களாக, தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையோடு, வாழ்ந்தால்தானே எகிப்து நாட்டின் வருங்காலம் சிறப்பாக இருக்க முடியும்? அதற்கு அவர்களுக்கு வழி காட்ட நல்ல அரசர் தேவை. தானே அந்த அரசராக ரே முடிவு செய்தார்.

ரே மனித வடிவம் எடுத்தார். எகிப்து நாட்டின் முதல் அரசர் ஆனார். இந்த ராஜா அவதாரத்தில் அவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர் ஃபாரோ (Pharaoh). ரே  ஆயிரம் ஆயிரம், பல்லாயிரம் ஆண்டுகள் எகிப்தை ஆண்டார். கடவுள்களின்  நேரக் கணக்கு நம்மிடமிருந்து வித்தியாசமானது. நம் ஒரு வருடம் அவர்களுடைய ஒரு மணி நேரம், ஒரு நிமிட நேரமாகக்கூட இருக்கலாம்.

பல்லாயிரம் ஆண்டுகள் ஒடியபின் மெள்ள மெள்ள ரேக்கு முதுமை வரத் தொடங்கியது. வயதான அவருடைய கட்டளைகளை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். எகிப்து நாடு அழிவுப் பாதையில் நடை எடுத்து வைத்தது.

ரே கவலைப்பட்டார். மற்றக் கடவுள்களிடம் ஆலோசனை கேட்டார்.

அவர்கள் சொன்னார்கள்.

‘உங்கள் கண் பார்வை மிக சக்தி கொண்டது. அயோக்கியர்கள் பக்கம் உங்கள் கண்களைக் காட்டுங்கள். அப்போது ஷெக்மத் என்று ஒரு பெண் தோன்றுவாள். அவள் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவாள்.’

ரே தன் கண்களைக் கூர்மையாக்கினார். நம் ஊர்க் காளி சிலையோ, படமோ நினைவிருக்கிறதா? முகத்தில் ஆக்ரோஷம், நெருப்பாய்ச் சிவந்த கண்கள், கையில் ஒரு சூலாயுதம்!

ஷெக்மத் புறப்பட்டாள். ஈவு இரக்கம் இல்லாமல். அத்தனை அயோக்கியர்களையும் கொன்று தீர்த்தாள். எகிப்து மறுபடியும் நல்லவர்களின் நாடாயிற்று.

ரே தன் முடிவு நெருங்குகிறது என்பதை உணர்ந்தார். எகிப்தின் வருங்காலம் பாதுகாப்பாக இருக்க ஆட்சியை யாரிடம் நம்பிக்கையாக ஒப்படைக்கலாம் என்று  சிந்தித்தார்.

ரேயின் பேத்தி ஐஸிஸ் மிக புத்திசாலி. தன் ரகசிய சக்திகளை ஐஸிஸுக்குக் கற்றுக் கொடுத்தார்.  அவள் கணவர் ஓஸிரிஸ் எகிப்தின் மன்னரானார். அவர்தான் இரண்டாவது ஃபாரோ.

சில ஆண்டுகளில் ரே மறைந்தார். அவர் வகுத்த பாதையில், ஓஸிரிஸின் நல்லாட்சி
தொடர்ந்தது. இதற்குப் பிறகு வந்த அரசர்கள் எல்லோருமே ஃபாரோக்கள் என்றுதான் அழைக்கப்பட்டார்கள். தாங்கள் ரே கடவுளின் அவதாரங்கள், தங்கள் எல்லோருள்ளும் கடவுளின் சக்தி இருக்கிறது என்பதற்காக இந்த அடைமொழியை அவர்கள் வைத்துக்கொண்டிருக்கலாம்.  ரே, ஓஸிரஸ் இருவர்தான் கடவுள்கள். பிறகு வந்த அரசர்கள் அத்தனைபேரும் மனிதர்கள்தாம். ஆனாலும், மக்கள் அவர்களைக் கடவுளின்  அவதாரங்களாகக் கருதினார்கள், மதித்தார்கள்,  வணங்கினார்கள்.

இது இதிகாசம் சொல்லும் கதை. வரலாறு என்ன சொல்கிறது?

பழைய கற்காலத்தின் பிற்பகுதியில், அதாவது, சுமார் இரண்டரை அல்லது ஒன்றரை லட்சம் வருடங்களுக்கு முன்னால். ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் முதல் பெண் தோன்றினாள். ஆண் உதவி இல்லாமலே, வம்ச விருத்தி செய்யும் சக்தி இவர்களுக்கு இருந்தது. மனித இனம் பெருகியது. பழைய கற்காலத்தின் பிற்பகுதியில், பெரும்பாலும் பாலைவனமான ஆப்பிரிக்காவில் வெப்பம் அதிகமானது. காய்கறி, பழச் செடிகள் வாடின, வதங்கின, மறையத் தொடங்கின. பசுமை மறையும்போது, அவற்றை உணவாக நம்பி வாழ்ந்த விலங்குகள், பறவைகள் வேறு இடங்களுக்குப் போயின. மனிதர்களும் உணவு கிடைக்கும் இடங்களைத் தேடிப் போவார்கள். அவர்கள் பயணம், எகிப்து நாட்டின் செழிப்பு நிறைந்த நைல் நதிக் கரையில் சங்கமித்தது. இதுதான் எகிப்தின் சரித்திர, நாகரிக வளர்ச்சி ஆரம்பம்.

0

அம்பேத்கரும் தோழர்களும்

ambedkarபுரட்சி / அத்தியாயம் 22

எந்த இந்து மதத்தை அம்பேத்கர் தெளிவாகவும் ஆழமாகவும் எதிர்த்தாரோ அந்த இந்து மதத்தின் ஒரு பகுதியாக அம்பேத்கரை மாற்றிவிடும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சமூகத்தில் உள்ள அனைவரையும் சென்றடைவதற்காகவும் தனது ஆதார பலத்தைக் கூட்டிக்கொள்வதற்காகவும் தந்திரமாக சில உபாயங்களை இந்த அமைப்பு கடைபிடித்துவருகிறது. அதிலொன்றுதான் பகத் சிங், அம்பேத்கர் போன்றோரைத் தம் கூடாரத்துக்குள் இழுக்கும் முயற்சி. உயர் சாதி இந்துக்கள் மட்டுமல்ல அனைத்து இந்துக்களுக்கும் நாங்கள் காவலர்கள் என்று சொல்லும் முகமாக,  பிற்படுத்தப்பட்டவர்களையும் பழங்குடிகளையும் (இவர்களை வனவாசிகள் என்று அழைக்கிறார்கள்; ஆதிவாசிகள் என்று சொன்னால் ஆரியர்களுக்கும் முந்தையவர்கள் என்றாகிவிடும் அல்லவா?) தலித் பிரிவினரையும் அணைத்துக்கொள்ள ஆர்.எஸ்.எஸ் துடிக்கிறது. இந்து மதத்தில் பிறந்த நான் ஓர் இந்துவாக இறக்கமாட்டேன் என்று தெளிவாக அம்பேத்கர் அறிவித்தபிறகும், அவர் தேர்ந்தெடுத்த பௌத்தம், இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என்று தன்னைத்தானே ஆறுதல்படுத்திக்கொள்கிறார்கள் இவர்கள்.

புத்தரையே ஓர் இந்து கடவுளாக வெற்றிகரமாக மதம் மாற்றிவிட்டவர்களுக்கு அம்பேத்கரை ஓர் இந்துவாக மாற்றுவது பெரிய விஷயமில்லைதான். ஆனால் அவர்களுடைய நோக்கம் அத்துடன் முடிந்துவிடவில்லை. ஓர் இந்துவாக மட்டுமல்ல, தம்மைப் போலவே அவர் ஓர் இஸ்லாமிய எதிர்ப்பாளரும்கூட என்று நிறுவும் முயற்சியிலும் அவர்கள் இறங்கிவிட்டார்கள்.

இந்துத்துவப் பிரசாரகர்களின் பொய்க் கதைகளை எடுத்துக்கொண்டு உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆனந்த் டெல்டும்டே எழுதிய கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘முசுலீம்கள் குறித்து அம்பேத்கர்’ என்னும் அந்தப் புத்தகத்தின் பதிப்புரை இவ்வாறு குறிப்பிடுகிறது.

‘சமகால வரலாற்றையே திரித்து, பார்ப்பன இந்து மதத்தையும் சாதியத்தையும் தம் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடிய முன்னோடிகளை நம் கண் முன்னே களவாடிக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பை நிறுவனமயமாக்கும் இந்தச் சதியில் ஐயா வைகுந்தர், நாராயண குரு முதல் புரட்சியாளர் பகத் சிங் வரை அனைவரது மரபுக்கும் உரிமை பாராட்டும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், அம்பேத்கர் மீதும் கை வைத்துள்ளது… அம்பேத்கர் பிறந்த மராட்டியத்திலேயே இன்று சிவசக்தி, பீம்சக்தி, இந்துசக்தி என்ற முழுக்கத்தின் கீழ் தலித் மக்களைத் தன்பக்கம் இழுக்க முயன்று வருகிறது, சிவசேனா.’ குறிப்பாக தலித் மக்களிடையே இஸ்லாமிய எதிர்ப்பைப் பரப்பும் நோக்கில், ‘இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவவேண்டுமென்று விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக’ அம்பேத்கரைப் பிசைந்து உருவாக்குவதே இவர்கள் லட்சியமாக இருக்கிறது.

ஆனந்த் டெல்டும்டே தொடர்கிறார். ‘இந்து மதம் சார்ந்த ஒவ்வொன்றையும் அம்பேத்கர் தீவிரமான திறனாய்வுக்கு உட்படுத்தியபோது, தொடக்கத்தில் இந்துத்துவ சக்திகள் அவரிடம் கடுப்புக் கொண்டன. இந்துமதத்தைக் கைவிட்டு அவர் புத்த சமயத்தைத் தழுவியபோது அதற்காக அவரிடம் பிணக்கம் காட்டின. ஆனால், இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் குறைந்தது 16% ஆக இருக்கக்கூடிய தலித்துகளில் மிகப் பெரும்பான்மையானவர்களின் நாட்டங்களின் குறியீடாக அவர் விளங்குகிறார் என்பதையும், எனவே அம்பேத்கரைப் பற்றிய எவ்வித விமர்சனமும் ஒட்டுமொத்த தலித் மக்களையும் சங்கப் பரிவாரத்திலிருந்து அந்நியப்படுததிவிடக்கூடும் என்பதையும் விரைவிலேயே அவை கண்டுகொண்டன. உடனே அம்பேத்கரை தம்மவராகச் சேர்த்துக்கொள்ளும் நரித் தந்திரத்தை அவை கைக் கொண்டன.’

அதே சமயம், முழுமையாக அவரை ஏற்கவும் முடியாமல் அவர்கள் தடுமாறுவதையும் காணமுடிகிறது. அம்பேத்கரை ‘சங்கப் பரிவாரம் தன் தரப்பில் சேர்த்துக்கொண்டாலும்,சாதிகள் ஒழிப்பு என்ற அவரது குறிக்கோளைப் பற்றியோ, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவக் கொள்கை என்ற அடிப்படையில் இந்தியாவை உருவாக்கும் அவரது தரிசனத்தைப் பற்றியோ பேசுவதைக் கவனமாகத் தவிர்த்துவிடுகிறார்கள்.’

அம்பேத்கரைத் திரித்து காட்டும் முயற்சிகளை முறியடிக்கவேண்டுமானால் இந்துத்துவ முகாமில் இருந்து அம்பேத்கரை மீட்டு இடதுசாரி முகாமில் அவரை இணைக்கவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. இந்த இணைப்பு அத்தனை சுலபமானதல்ல. அம்பேத்கரால் அவர் வாழ்ந்த காலத்திலேயே இடதுசாரிகளுடன் ஒன்றிணைய முடியாமல் போய்விட்டது. அது ஏன் என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.

அம்பேத்கர் ஒரு சாதி எதிர்ப்புப் போராளி மட்டுமல்ல. அம்பேத்கர் தொடங்கிய இண்டிபென்டண்ட் லேபர் பார்ட்டி (ஐஎல்பி) தீண்டத்தகாதவர்களுக்கான பிரத்தியேகக் கட்சியாக இல்லாமல் அனைத்து உழைக்கும் மக்களுக்குமான கட்சியாக இருந்தது. முன்னதாக, ஷெட்யூல்ட் காஸ்ட்ஸ் ஃபெடரேஷன் என்னும் அமைப்பைத் தீண்டத்தகாதவர்களுக்காக அவர் தொடங்கியிருந்தார். ஆறாண்டு இடைவெளியில் இந்த இரு இயக்கங்களும் தொடங்கப்பட்டன. பரவலான மக்களைத் திரட்ட ஐஎல்பி. குறிப்பாக, ஒரு பிரிவினரின் நலன்களைப் பிரதிபலிக்க எஸ்சிஎஃப்.

இது அம்பேத்கர் எதிர்கொண்ட ஒரு முக்கியக் குழப்பம் என்கிறார் கிறிஸ்டோஃப் ஜேஃப்ரிலோ. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியாக இருந்து அவர்கள் பிரச்னைக்குக் குரல் கொடுப்பதா? அல்லது கவனத்தை அகலப்படுத்தி தொழிலாளர்களுக்குக் குரல் கொடுப்பதா? தீண்டத்தகாதவர்களில் ஒரு பெரும் பிரிவினர் தொழிலாளர்களாகவும் அல்லவா இருக்கிறார்கள்?

இந்த இடத்தில்தான், இந்தியத் தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் பிராமணியத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்பதை அம்பேத்கர் உணர்ந்துகொண்டார். இந்த இரண்டுமே ஒரே சமூகப் பிரிவினரைக் கொண்டதாக இருந்ததையும் அவர் கண்டுகொண்டார்.  தொழிலாளர்கள் குறித்த அம்பேத்கரின் பார்வையில் மார்க்சியத்தின் தாக்கம் காணப்படவில்லை என்கிறார் கிறிஸ்டோஃப் ஜேஃப்ரிலோ. மாறாக, அவர் கம்யூனிஸ்டுகளை விமரிசித்தே வந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

மார்க்சியத்தால் இந்தியாவுக்குப் பலன் எதுவும் இல்லை என்பதே அம்பேத்கரின் நிலைப்பாடாக இருந்தது.
கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களின் பிரச்னையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார். இவ்வாறு அவர் கம்யூனிஸ்டுகளை விமரிசித்ததற்கு ஒருவேளை ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உயர் சாதி தலைவர்களின் ஆதிக்கம் பரவியிருந்தது’ காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார் ஜேஃப்ரிலோ.

சாதிமுறை என்பது தொழில் பிரிவினையாக மட்டுமின்றி, தொழிலாளர்களின் பிரிவினையாகவும் விளங்குகிறது என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். சாதியின் பெயரால் பிளவுபட்டு நிற்கும் தொழிலாளர்களை வர்க்கத்தின் பெயரால் ஒன்றிணைக்கமுடியும் என்னும் நம்பிக்கை அவரிடம் காணப்படவில்லை. இதை அவர் அனுபவபூர்வமாகவே உணர்ந்திருக்கிறார். அம்பேத்கரை மகர்களின் தலைவர் என்றே பரவலாகப் பலர் கருதியதால் மாங்குகள், சாம்பர்கள் ஆகியோர் அவரை நெருங்கி வரவில்லை.

மார்க்சியம் கூறுவது போல் பொருளாதார அடிப்படையில் மக்கள் பிரிந்திருக்கவில்லை என்றார் அம்பேத்கர். இல்லையென்றால், ஒரு பைசாவும் இல்லாத சாதுக்களையும் ஃபகீர்களையும் ஏன் மில்லியனர்கள் வணங்குகிறார்கள்? இந்தியாவைப் பொருத்தவரை மதமே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பது அம்பேத்கரின் வாதம். அதனால்தான் ‘ஒரு மாஜிஸ்ட்ரேட்டை விட ஒரு மதகுருவின் வாக்கியத்துக்கு மக்கள் கட்டுப்படுகிறார்கள்.’

புரட்சிகர முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதைக் காட்டிலும் சாதியை ஒழிக்கவேண்டியது பிரதானமானது என்பது அம்பேத்கரின் திடமான நம்பிக்கை. மார்க்சியத்தை அவர் விமரிசித்ததன் பிரதான காரணம் இதுவே. சோஷலிசத்துக்கு ஏன் ஆதரவு கிட்டவில்லை என்பதையும் அவர் விளக்குகிறார். ‘புரட்சி சாத்தியப்பட்டால் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள், எந்த வேறுபாடும் காட்டப்பட மாட்டாது, சாதியின் பெயரால் நம்பிக்கையின் பெயரால் அவர்கள் வேறுபடுத்தப்படமாட்டார்கள் என்று நம்பினாலொழிய மக்கள் புரட்சிக்கு ஆதரவு தர மாட்டார்கள்… உண்மையிலேயே சோஷலிசத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சோஷலிஸ்டுகள் விரும்பினால், சமூகச் சீர்திருத்தம் அடிப்படையானது என்று அவர்கள் ஏற்கவேண்டும்.’

அம்பேத்கர் மார்க்சியத்தை விமரிசித்த ஒரே காரணத்துக்காக மார்க்சியவாதிகள் அம்பேத்கரையும் அம்பேத்கரியவாதிகள் மார்க்சியத்தையும் நிராகரிக்கவேண்டிய அவசியமில்லை. டபிள்யு.என். குபேர் எழுதுகிறார். ‘உழைக்கும் வர்க்கச் சிக்கலில், தலித் இயக்கமும், இடதுசாரி இயக்கமும் நெருங்கி வரவில்லை. அம்பேத்கர், ‘தொழிலாளர்களைக் காற்றுப் புகாத தனித் தனி அறைகளில் பிரித்து வைப்பதாக’ சாதியைக் கருதினார். ஆனால் மார்க்ஸ் சாதியை இனவழித் தொழிலாளர்கள் பிரிவினை என்று வகைப்படுத்தினார். இந்த இரண்டு விளக்கங்களும் வேறல்ல. ஒன்றே.’

எனில், மார்க்ஸையும் அம்பேத்கரையும் ஒன்றுசேர்க்கமுடியுமா? முடியும் ஆனால் அதற்கு அரசியல் தலையீடு தேவை என்கிறார் குபேர். ‘வர்க்க மோதலுக்கு சாதிச் சிக்கலும் தொடர்புடையதே என்பதையும் சாதியை அணி திரட்டுவதில் அதன் வர்க்க இயல்பைத் தவற விட்டுவிடக்கூடாது என்பதையும், மிகமிக அதிகமாகக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சாதிகள் சமுதாயப் புரட்சியில் ஒரு தலைமைப் பாத்திரத்தை வகிக்க வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுகிற ஓர் அரசியல் வழி நமக்குத் தேவைப்படுகிறது… அத்தகைய அரசியல்வழி, பருண்மையான சமூக அரசியல் போராட்டங்கள் என்ற பொருளில் சிந்திக்கவேண்டும்.’

அம்பேத்கர், மார்க்ஸ் இருவருடைய பெயரால் நடத்தப்படும் இயக்கங்களையும் அவற்றுக்கு இடையிலான முரண்பாடுகளையும் ஒப்பிடுகிறார் ஆனந்த் டெல்டும்டே. ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் தலித் விடுதலை இயக்கத்தையும் போல் முரண்பாடுகள் கொண்டது வேறு எதுவும் இருக்கமுடியாது. இரண்டு இயக்கங்களுமே கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் உதித்தன. ஒரே விஷயங்களைத்தான் பேசின. அல்லது ஒரே விஷயத்தை எதிர்த்துத்தான் பேசின. ஒரே மாதிரியாக வளர்ந்தன அல்லது பிளவுபட்டன. இரண்டு இயக்கங்களுமே இன்று நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கின்றன. இருந்தும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்ககூடத் தயாராக இல்லை.’

அம்பேத்கர் மார்க்சியத்தை விமரிசித்தார் ஆனால் முழுமுற்றாக நிராகரிக்கவில்லை என்கிறார் டெல்டும்டே. ‘அம்பேத்கர் ஒரு மார்க்சியவாதி அல்ல. கொலம்பிய பல்கலைக்கழகம், லண்டன் பொருளாதாரக் கல்லூரி என ஃபேபியர்களால் நிறுவப்பட்ட கல்வி மையங்களில் படித்தவர் என்பதால் அந்தச் சிந்தனைப் போக்கின் செல்வாக்கு அவரிடம் இருந்தது. தனது அறிவுசார் ஆளுமைக்கு முழுக் காரணம் என்று அம்பேத்கர் மதிக்கும் ஜான் தவே ஓர் அமெரிக்க ஃபேபியன்.

‘இந்தச் சித்தாந்தமும் சோஷலிசத்தையே விரும்புகிறது என்றாலும் மார்க்ஸ் விரும்பியதைப் போன்றது அல்ல இது. சோஷலிசத்தைப் புரட்சியின் மூலம் கொண்டுவரமுடியாது. இயல்பான பரிணாம வளர்ச்சிப் போக்கில் அது உருவாகும் என்று ஃபேபியன்கள் நம்பினார்கள். இத்தகைய பாதிப்புகள் இருந்தபோதிலும் மாக்ஸை ஏற்றுக்கொள்ளாமலேயே மார்க்சியத்தை முக்கியமானதாகக் கருதியதோடு தன் வாழ்க்கையின் அனைத்து முடிவுகளையும் உரைத்துப் பார்க்க உதவும் உரைகல்லாகவும் அம்பேத்கர் பயன்படுத்தியிருக்கிறார்.

‘பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, அம்பேத்கரின் அரசியல் மார்க்ஸின் கோணத்தில் இல்லை என்றாலும் வர்க்கம் சார்ந்ததுதான். அவர் தான் எழுதிய முதல் கட்டுரையில் சாதிகளை மூடுண்ட வர்க்கங்களாகத்தான் வரையறுத்திருக்கிறார். தீண்டப்படாதவர்களைச் சுட்டும்போதுகூட அவர்களை ஒரு வர்க்கமாகத்தான் சொல்லியிருக்கிறார். அந்த அணுகுமுறை, வர்க்க அலசல் என்பது வெறும் கோட்பாடு சார்ந்ததாகவோ வெட்டவெளியில் நிகழ்வதாகவே இருக்கக்கூடாது. நடைமுறை யதார்த்தத்தைக் கணக்கில் கொண்டதாக இருக்கவேண்டும் என்று சொன்ன லெனினுடன் அம்பேத்கருக்கு இருக்கும் ஒத்திசைவை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.’

அம்பேத்கர் தன் காலத்து கம்யூனிஸ்டுகளை நிராகரித்ததற்கு ஒரு வலுவான காரணம் இருந்தது என்கிறார் டெல்டும்டே. ‘அன்றைய மார்க்சியர்கள் மார்க்ஸ், லெனின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டகங்களை அப்படியே இந்திய சூழலில் திணித்தனர். மார்க்சியப் படிமங்களை யந்திரகதியில் புரிந்துகொண்டு இந்தியாவில் நடைபெற்ற சாதி எதிர்ப்புப் போராட்டங்களை ஒரு பொருட்டாக மதிக்க மறுத்தனர். பிராமணர்களைப் போல் ‘சித்தாந்த துய்மை’ குறித்த மோகம் கொண்டவர்களாகவும் ‘புனிதத்தை’ காப்பாற்றுபவர்களாகவும் இருந்தனர்.’
கம்யூனிஸ்டுகள் செய்த மாபெரும் தவறு அம்பேத்கரைத் தம்மில் ஒருவராக, ஒரு தோழராகக் காணாததுதான் என்கிறார் டெல்டும்டே. ‘அம்பேத்கரின் செயல்பாடுகள் தங்களுடைய பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதாக அவர்கள் பார்த்தனர். இதனால்தான் டாங்கே, 1952 தேர்தலில் உங்கள் வோட்டை செல்லாததாகக் கூட ஆக்கிக் கொள்ளுங்கள். ஆனால், அம்பேத்கருக்கு மட்டும் போட்டுவிடாதீர்கள் என்று சொல்லவைத்தது. அந்தத் தேர்தலில் அம்பேத்கர் தோற்கவும் செய்தார்.’

5892871வரலாற்றில் இருந்து நிறையவே கற்கவேண்டிய அவசியத்தில் இருக்கும் நாம் இதிலிருந்தும் ஒரு பாடத்தைக் கற்கவேண்டும். நமது இன்றைய தேவை என்ன? குபேர் எழுதுகிறார். ‘மார்க்சியப் புரட்சிகர வேலைத்திட்டத்தை, இந்திய சமூகக் கட்டமைப்பைப் பற்றிய அம்பேத்கரின் உள்நோக்கத்தோடு இணைக்கும் செயல்பாடுகள்தாம் இன்றைக்குத் தேவைப்படுகிறது. எனவே ‘மார்க்ஸ் அல்லது அம்பேத்கர்’ இல்லை. ‘மார்க்ஸ் மற்றும் அம்பேத்கர்’ என்பதே வருங்காலப் புரட்சிகர வேலைத் திட்டத்தின் வழிகாட்டும் கொள்கை. அப்போதுதான், மனிதத் தன்மைக்குக் கீழ்ப்பட்ட நிலைமைகளில் கட்டாயமாகத் தள்ளப்பட்டு உழலும் பல லட்சக்கணக்கான மக்களை விடுதலை செய்வதற்காக அந்த இரண்டு மாபெரும் தீர்க்கதரிசிகள் கண்ட கனவுகளை நிறைவேற்ற முடியும்.’

(அடுத்த பகுதி : ரஷ்யப் புரட்சியின் நாயகன்)

எழுவாய் – பயனிலை – செயப்படுபொருள்

ilakஅம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 16

ஒரு திருமணம். மாப்பிள்ளை பேர் முருகன், பெண் பெயர் வள்ளி. அவர்களுடைய திருமணத்தைப் பார்த்து மகிழ்ந்த பலர் இப்படி ரிப்போர்ட் எழுதுகிறார்கள்:

* முருகன் மாலையிட்டான்
* வள்ளி மாலையிட்டாள்
* முருகனுக்கு வள்ளி மாலையிட்டாள்
* முருகன் வள்ளிக்கு மாலையிட்டான்

இந்த வாக்கியங்கள் அனைத்திலும், சில பொதுவான அம்சங்களைப் பார்க்கிறோம்:

* முருகன்
* வள்ளி
* மாலை (அல்லது மாலையிடுதல்)

அதேசமயம், இவற்றை லேசாக மாற்றி அமைக்கும்போது, வெவ்வேறு அர்த்தங்கள் வருகின்றன. உதாரணமாக, ‘முருகன் மாலையிட்டான்’ என்று சொன்னால், முருகன் இன்னொருவருக்கு மாலையிட்டான் என்று பொருள். அதையே கொஞ்சம் திருப்பி ’முருகனுக்கு மாலையிட்டாள்’ என்று சொன்னால், இன்னொருவர் (அதாவது, வள்ளி) முருகன் கழுத்தில் மாலையிட்டதாகப் பொருள்.

இங்கே ‘கு’ அல்லது ‘க்கு’ என்ற சொல், முருகன், மாலை என்ற இரு சொற்களுக்கு நடுவே அமையும்போது அதன் அர்த்தம் அமைகிறது, அல்லது மாறுகிறது. இதேபோல் இன்னும் சில உதாரணங்கள்:

 • சரவணன் வென்றான் : சரவணனை வென்றான் : ‘ஐ’ என்ற சொல்லால் மாற்றம் ஏற்பட்டுள்ளது
 • சண்முகன் ஆப்பிள் சாப்பிட்டான் : சண்முகனால் ஆப்பிள் சாப்பிடப்பட்டது : ‘ஆல்’ என்ற சொல் சண்முகனையும் ஆப்பிளையும் இணைக்கிறது, ஆனால் அர்த்தத்தில் மாற்றம் இல்லை
 • கந்தன் கருணை : கந்தனின் கருணை : ‘இன்’ என்ற சொல், அர்த்தம் மாறவில்லை
 • கதிர்வேலன் கோயில் : கதிர்வேலனுடைய கோயில் : ‘உடைய’ என்ற சொல், அர்த்தம் மாறவில்லை

இப்படித் தமிழில் இருவேறு சொற்களுக்கு இடையே அமைந்து அவற்றினிடையே வேற்றுமை எப்படி ஏற்படுகிறது என்பதைத் தீர்மானிக்கும் சொற்களை ‘வேற்றுமை உருபு’கள் என்பார்கள். உதாரணமாக, மேலே நாம் பார்த்த ஐ, ஆல், கு, இன் போன்றவை.

வேற்றுமை உருபுகளில் மொத்தம் எட்டு வகைகள் உள்ளன. அவற்றின் பட்டியலைப் பார்க்குமுன், நாம் இன்னோர் அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்: எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்.

ஒரு பழைய ஜோக். வகுப்பில் ஆசிரியர் இலக்கணப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ஒரு பையன் கடைசி பெஞ்சில் உட்கார்ந்தபடி ராக்கெட் தயாரித்து பத்துத் திக்குகளிலும் அனுப்பிக்கொண்டிருந்தான்.

எரிச்சலான ஆசிரியர் அவன் தலையில் ஒரு குட்டு வைத்தார், ‘டேய் தம்பி, நீ எழுவாய், உன்னால் செயப்படுபொருள் இங்கே ஏதும் கிடையாது, உனக்கு நான் சொல்லிக்கொடுத்து ஏதும் பயனிலை, வெளியே போ!’ என்றார்.

எழுவாய் என்றால் எழுந்திரு, செயப்படுபொருள் என்றால் செய்யப்படுகின்ற பொருள், பயனிலை என்றால் பயன் இல்லை. இந்த மூன்று சொற்களின் மாற்று அர்த்தங்களை வைத்துச் சொல்லப்படும் வேடிக்கையான வாசகம் இது.

உண்மையில், இவற்றுக்கு இலக்கணரீதியில் என்ன பொருள்?

முதலில், “எழுவாய்”, இதற்குத் தோன்றுகின்ற / எழுகின்ற இடம் என்று பொருள். அதாவது, ஒரு வாக்கியத்தில் சொல்லப்படும் விஷயத்தைச் செய்தது யார்? (அல்லது எது?)

உதாரணமாக: முருகன் வள்ளிக்கு மாலையிட்டான் என்ற வாக்கியத்தில் மாலையிட்டது யார்? முருகன். அந்த ’அறு’முகன்தான் இங்கே ‘எழு’வாய். ஆங்கிலத்தில் இதனை “Subject” என்பார்கள். இது எப்போதும் ஒரு பெயர்ச்சொல்லாகவே இருக்கும்.

அடுத்து, ”பயனிலை”, ஒரு வாக்கியத்தின் பயனை, அதில் நிகழ்ந்த செயலைப் பூர்த்தி செய்கிற விஷயம் இது. அதாவது, எந்த விஷயம் செய்யப்பட்டது?

அதே “முருகன் வள்ளிக்கு மாலையிட்டான்” என்ற வாக்கியத்தில் எந்த விஷயம் செய்யப்பட்டது? மாலையிடுதல். அதுதான் இங்கே “பயனிலை”. ஆங்கிலத்தில் இதனை “Predicate” என்பார்கள். இது எப்போதும் ஒரு செயலாக, அதாவது வினைச்சொல்லாகவே இருக்கும்.

நிறைவாக, “செயப்படுபொருள்”. பெயரே தெளிவாக இருக்கிறது. செய்யப்பட்ட பொருள். பயனிலையில் சொல்லப்பட்ட விஷயம் யாரை முன்வைத்துச் செய்யப்பட்டது?

முருகன் (எழுவாய்) யாருக்கு மாலையிட்டான் (பயனிலை)? வள்ளிக்கு. ஆகவே, வள்ளிதான் செயப்படுபொருள். ஆங்கிலத்தில் இதனை “Object” என்பார்கள். இது எப்போதும் ஒரு பெயர்ச்சொல்லாகவே இருக்கும்.

இன்னோர் உதாரணத்துடன் பார்ப்போம்: ஜனாதிபதி கொடி ஏற்றினார்

* செயல் எது? ஏற்றுதல் : பயனிலை
* செய்தவர் யார்? ஜனாதிபதி : எழுவாய்
* ஜனாதிபதி எதை ஏற்றினார்? கொடி : செயப்படுபொருள்

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் மூன்றும் ஒரு வாக்கியத்தில் இந்த வரிசையில்தான் வரவேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. உதாரணமாக:

* நான் பாட்டுப் பாடினேன் (எழுவாய், செயப்படுபொருள், பயனிலை)
* பாட்டு என்னால் பாடப்பட்டது (செயப்படுபொருள், எழுவாய், பயனிலை)
* என்னால் பாடப்பட்ட பாட்டு பிரமாதமாக இருந்தது (எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்)

அதேபோல், ஒரு வாக்கியத்தில் இந்த மூன்றும் வந்தே தீரவேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும் கிடையாது. உதாரணமாக, ‘சோறு தின்றேன்’ என்ற வாக்கியத்தில் பயனிலை உண்டு (தின்றேன்), செயப்படுபொருள் உண்டு (சோறு), ஆனால் எழுவாய் இல்லை. “தின்றேன்” என்ற பயனிலைச் சொல் ’தன்மை’யில் வருவதால், இந்த வாக்கியத்தைச் சொன்னவர்தான் தின்றார் என்று நாமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

இதுபோல வெளிப்படையாகத் தெரியாத எழுவாய்களைத் “தோன்றா எழுவாய்” என்பார்கள். இதற்கு இன்னொரு நல்ல உதாரணம் இதோ:

* “அருமையாக ஆடினான்” : ஆடியது யார்? தெரியவில்லை! ஆனால் யாரோ ஒரு மூன்றாம் நபர், அதாவது படர்க்கை என்பதுமட்டும் தெரிகிறது
* இதையே “அருமையாக ஆடினாய்” என்று சொன்னால், ஆடியது யார் என்ற குழப்பமே இல்லை, முன்னால் நிற்பவர், அதாவது முன்னிலை).

இந்த உதாரணத்தில் தன்மை, முன்னிலை, படர்க்கை என்பதெல்லாம் என்ன என்று குழம்பினீர்களானால், நீங்கள் பழைய பாடங்களை ஒழுங்காகப் படிக்கவில்லை என்று அர்த்தம். கொஞ்சம் தேடிப் ப(பி)டியுங்கள்!

எழுவாய்போலவே, சில வாக்கியங்களில் செயப்படுபொருளும் விடுபட்டிருக்கக்கூடும். உதாரணமாக:

* நான் பாடினேன் (எதைப் பாடினேன்?)
* அரசன் வென்றான் (எந்த நாட்டை வென்றான்? எந்தப் போட்டியில் வென்றான்?)

“அது என் வீடு” என்பதுபோன்ற பயனிலை (செயலே) இல்லாத வாக்கியங்களும் உண்டு. ஆனால் செயலே இல்லாதபோது அந்த வாக்கியத்தை எழுவாய், செயப்படுபொருள் என்று பிரித்துப் பார்ப்பதிலும் அர்த்தம் இருக்காது.

ஆக, பயனிலை என்பது எஞ்சின்மாதிரி, எழுவாய் என்பது ஓட்டுபவர்மாதிரி, செயப்படுபொருள்தான் ஓட்டப்படும் கார். கூகுள் தொழில்நுட்பத்தில் ஓட்டுநர் (எழுவாய்) இல்லாமல் கார் ஓடலாம், ஒரு ரிப்பேர் கடையில் காரே (செயப்படுபொருள்) இல்லாமல் வெறுமனே எஞ்சின்மட்டும் ஓடலாம், ஆனால் எஞ்சின், அதாவது பயனிலை இல்லாவிட்டால் எதுவும் ஓடாது. இந்த வகை வாக்கியங்களுக்கு அதுதான் ஆதாரம்!

இப்போது, வேற்றுமை உருபுகளுக்குத் திரும்புவோம். அதில் மொத்தம் எட்டு வகைகள் என்று பார்த்தோம். அவை:

* முதலாம் வேற்றுமை உருபு (எழுவாய்)
* இரண்டாம் வேற்றுமை உருபு: ஐ
* மூன்றாம் வேற்றுமை உருபு: ஆல்
* நான்காம் வேற்றுமை உருபு: கு
* ஐந்தாம் வேற்றுமை உருபு: இன்
* ஆறாம் வேற்றுமை உருபு: அது
* ஏழாம் வேற்றுமை உருபு: கண்
* எட்டாம் வேற்றுமை உருபு (விளி)

இதை ஞாபகம் வைத்துக்கொள்ள ஓர் எளிய ஃபார்முலா பள்ளிக்கூடத்தில் சொல்லித்தந்திருப்பார்கள், பாடல்மாதிரி மனப்பாடம் செய்திருப்பீர்கள்: ‘ஐஆல்குஇன்அதுகண்’.

ஒரு விஷயம், ‘ஐ’ என்று பாடல் தொடங்குவதால் அது முதல் வேற்றுமை உருபு என்று எண்ணிவிடக்கூடாது, இந்தப் பாடல் இரண்டாம் வேற்றுமை உருபில் தொடங்கி ஏழுவரை செல்கிறது. அதற்கு முன்னால் எழுவாய், பின்னால் விளி என்று பொருத்திக்கொண்டால் எட்டும் நன்றாக ஞாபகத்தில் நிற்கும்!

முதலாவது வேற்றுமை உருபு என்பது, எழுவாய் தனித்து நிற்பது. உதாரணமாக: ’ராமன் சீதையைப் பார்த்தான்.’

இங்கே ராமன் என்பது எழுவாய். அது இயல்பாக அப்படியே வருகிறது, அதோடு எந்த வேற்றுமை உருபும் இல்லாமலே அது தனித்து நிற்கிறது.

அதே வாக்கியத்தைக் கொஞ்சம் மாற்றி எழுதுவோம்: ராமனைச் சீதை பார்த்தாள்’. இங்கே ராமன் என்பது வெறுமனே வரவில்லை, அதோடு ஓர் ‘ஐ’ சேர்ந்திருக்கிறது. ராமன் + ஐ = ராமனை.

இதனால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிட்டது?

முதல் வாக்கியத்தில் ராமன் என்பது எழுவாய், ஆனால் இரண்டாவது வாக்கியத்தில் ராமனைச் சீதைதான் பார்த்திருக்கிறாள், ஆகவே, சீதைதான் எழுவாய், ராமன் செயப்படுபொருள், அதாவது பார்க்கப்பட்ட பொருள்.

இதுதான் இரண்டாம் வேற்றுமை உருபு. ‘யாரை?’ என்ற கேள்விக்குப் பதில் சொல்லும். ஒரு பெயர்ச் சொல்லுடன் “ஐ” சேர்த்தால், அது இரண்டாம் வேற்றுமை உருபு. உதாரணமாக:

* ஐஸ்க்ரீமைச் சாப்பிட்டேன்
* உலகைச் சுற்றிய வாலிபன்
* தண்ணீரைக் காய்ச்சிக் குடித்தேன்
* உன்னைப் பார்த்தேன், என்னை மறந்தேன்

மற்ற வாக்கியங்கள் இருக்கட்டும், ‘என்னை மறந்தேன்’ என்ற நிறைவு வாக்கியத்தைமட்டும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு அலசுவோம். இந்த வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எவை?

* எழுவாய்: இல்லை (தோன்றா எழுவாய், “நான் என்னை மறந்தேன்” என்று வாசிக்கவேண்டும்!)
* பயனிலை: மறந்தேன்
* செயப்படுபொருள்: என்னை

ஆனால், செயப்படுபொருள் என்பது பெயர்ச்சொல்லாக அல்லவா இருக்கவேண்டும்? ‘என்னை’ என்று ஒரு செயப்படுபொருள் இருக்கமுடியுமா என்ன?

பிரச்னையில்லை, அதைப் பிரித்துவிடுவோம் என் + ஐ = என்னை. அவ்வளவுதானே?

ம்ஹூம், ”என்னை” என்ற சொல்லை நான் + ஐ என்றுதான் நாம் பிரிக்கவேண்டும், அதேபோல் “உன்னை” என்ற சொல்லை நீ + ஐ என்று பிரிக்கவேண்டும். “எங்களை” என்ற சொல்லை நாங்கள் + ஐ என்று பிரிக்கவேண்டும். “உங்களை” என்ற சொல்லை நீங்கள் + ஐ என்று பிரிக்கவேண்டும்.

ஆக, இங்கே செயப்படுபொருள் ‘என்னை’ அல்ல, ‘என்’ அல்ல, ‘நான்’!

இதேபோல் மேலும் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இன்னும் ஆறு வேற்றுமை உருபுகள் மீதமுள்ளன. அவற்றை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* வேற்றுமை உருபு (பெயர்ச் சொல்லைத் தொடர்ந்து வரும்)
* எழுவாய் (யார்? எது?)
* பயனிலை (என்ன செய்தார்கள்?)
* செயப்படுபொருள் (எது செய்யப்பட்டது?)
* எட்டு வகை வேற்றுமை உருபுகள் (எழுவாய், ஐ, ஆல், கு, இன், அது, கண், விளி)
* எழுவாய் வேற்றுமை உருபு (இயல்பாக வரும் பெயர்ச்சொல்)
* முதல் வேற்றுமை உருபு (யாரை? செயப்படுபொருளைக் குறிக்கும்)

0

Robin is involved that katherine is throwing out her, but just katherine indicates each goes additionally not, originally they go and pack to viagra sildenafil citrate buy.