அம்பேத்கர் : தீண்டாமையும் அடிமைமுறையும்

Young_Ambedkarபுரட்சி / அத்தியாயம் 20

சாதி ஆதிக்கத்துக்கும் தீண்டாமைக்கும் எதிராக அம்பேத்கர் தொடுத்த போரின் முக்கியத்துவத்தை உணரவேண்டுமானால் அவரது சிந்தனைகளும் ஆளுமையும் வளர்ந்த பின்னணியை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

அம்பேத்கர்மீது தாக்கம் செலுத்திய முதல் பெரும் சக்தி, பௌத்தம். சமத்துவம், நீதி, அகிம்சை, உண்மை ஆகியவற்றை அம்பேத்கர் உயர்த்திப் பிடித்தற்கு பௌத்தத்தின்மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடே காரணமாக இருந்தது. புத்தரைத் தனது முதல் குரு என்றும் கபீரை இரண்டாவது குரு என்றும் அவர் அழைத்தார். இன்னோரிடத்தில், சிந்தனையளவில் தன்னை முதலில் பாதித்தவர் ஜோதிராவ் புலே என்று அம்பேகர் குறிப்பிட்டிருக்கிறார். சமூகநீதிக்கான போராட்டத்தை நடைமுறையில் எப்படி நடத்தவேண்டும் என்பதை அவர் புலேயிடம் இருந்தே கற்றிருக்கவேண்டும். சூத்திரர்கள் யார் என்னும் நூலை, ‘நவீன இந்தியாவின் மிகப் பெரிய சூத்திர்’ மற்றும் ‘அடித்தட்டில் இருந்த இந்துக்களுக்கு அவர்களுடைய அடிமைத்தனத்தைப் புரியவைத்தவருமான’ புலேவுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார் அம்பேத்கர். அந்நிய நாட்டிடம் இருந்து விடுதலை பெறுவதைக் காட்டிலும், சமூக ஜனநாயகம் முக்கியம் என்னும் கருத்தை அம்பேத்கர் புலேயிடம் இருந்தே பெற்றுக்கொண்டார்.

தீண்டத்தகாதோர் யார், அவர்கள் ஏன் அந்நிலையை அடைந்தார்கள்? என்னும் நூலை நந்தனார், ரவிதாஸ், சொக்கமேலா ஆகியோருக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார் அம்பேத்கர். அவர்கள், ‘தீண்டப்படாதவர்களாகப் பிறந்திருந்தும் தங்கள் பண்பால் அனைவருடைய மரியாதையையும் பெற்றவர்கள்.’

அமெரிக்கா அம்பேத்கர்மீது செலுத்திய தாக்கம் முக்கியமானது. 1913 முதல் 1917 வரை அம்பேத்கர் அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றார். அதற்குக் காரணமாக இருந்தவர் பரோடா மகாராஜா சாயாஜி ராவ் கெய்க்வாட். பத்தாண்டுகள் பரோடாவில் பணியாற்றுவேன் என்று உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து அம்பேத்கரின் பயணம் மற்றும் படிப்புச் செலவை சாயாஜி ராவ் ஏற்றுக்கொண்டார். கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு ஒரு புதிய தரிசத்தைக் கொடுத்தது என்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள தனஞ்செய் கீர். சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அருமையை அம்பேத்கர் அங்கேதான் தெரிந்துகொண்டார் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தனது எம்.ஏ., பிஹெச்டி பட்டங்களை அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக்கொண்டார்.

மேற்கத்திய கலாசாரம் அம்பேத்கர்மீது குறிப்பிடத்தகுந்த தாக்கத்தைச் செலுத்தியதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணத்துக்கு, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி அவசியம் என்பதை அம்பேத்கர் மேற்கு உலகிடம் இருந்தே உணர்ந்துகொண்டார் என்கிறார்கள். இந்தியாவில் எத்தகைய மாற்றங்கள் தேவை, சமூகச் சீர்திருத்தங்கள் எந்த வழியில் செய்யப்படவேண்டும் போன்றவற்றைக் குறித்து அம்பேத்கர் சிந்திக்கத் தொடங்கியதும் இந்தத் தாக்கத்தின் தொடர்ச்சியாகத்தான். அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டமும், குறிப்பாக 14வது சட்டத் திருத்தமும் அம்பேத்கரின் கவனத்தைக் கவர்ந்தது. அம்பேத்கர்மீது அமெரிக்கா செலத்திய முதல் பெரும் தாக்கம் இந்தச் சட்டத்திருத்தமே என்கிறார் தனஞ்செய் கீர்.

அடிமைத்தனத்தை முன்வைத்து 1860ல் அமெரிக்காவில் நடைபெற்ற சிவில் யுத்தத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார் அம்பேத்கர். 1861 தொடங்கி 1865 வரை நடைபெற்ற இந்தப் போரில் ஐக்கிய அமெரிக்க நாடுகளும் (யூனியன்) தென் மாநிலங்களும் கலந்துகொண்டன. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அடிமைமுறை நிலவிவந்ததோடு அது விரிவாக்கமும் பெற்று வந்தது. ஆபிரகாம் லிங்கன் யூனியனின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், ஏழு தென் மாநிலங்கள் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதாக அறிவித்தன.  ‘யூனியனைக் காப்பாற்ற ரிபப்ளிகன் போரிட்டது. இந்தப் போரில் நீக்ரோக்களின் உதவியையும் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். போர் முடிவில் 13வது சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி நீக்ரோக்கள் அடிமைகள் அல்ல என்பது சட்டப்பபடி உறுதி செய்யப்பட்டது. ஆனால், இதனால் நீக்ரோக்களால் அரசாங்கத்தின் பங்கேற்கமுடிந்ததா? வாக்காளர்கள் ஆக முடிந்ததா?’

கறுப்பினத்தவரைச் சமமாகப் பாவிக்கவேண்டும் என்று தெற்குப் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன என்றாலும் நடைமுறையில் அவ்வாறு நிகழவில்லை. 14வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு கறுப்பினத்தவருக்குக் குடியுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் இதுவும்கூட சட்டப்படியான ஒரு நடவடிக்கை மட்டுமே. இதன் தாக்கத்தை நடைமுறையில் காணமுடியவில்லை.

அதைவிட மோசம், வெள்ளை இனவெறி கொண்ட கூ கிளாஸ் கான் என்னும் ரகசிய அமைப்பு உருபெற்று எழுவதையும் கறுப்பினத்தவர்கள் தாக்கப்படுவதையும் அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதையும் அம்பேத்கர் கண்டார். சட்டங்கள், சட்டத் திருத்தங்கள் ஆகியவை மட்டும் போதாது; அரசியல், சமூக மாற்றங்கள் நிகழவேண்டுமானால் முதலில் மன மாற்றம் நிகழவேண்டும் என்பதை அம்பேத்கர் புரிந்துகொண்டார்.

இதையே நோக்கமாகக் கொண்டு லிபரேட்டர் என்றும் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்த வில்லியம் காரிசன் என்னும் அமெரிக்கரால் அம்பேத்கர் ஈர்க்கப்பட்டார். நீக்ரோக்கள் விடுதலைப் பெறவேண்டிய அவசியத்தைப் பிரசாரம் செய்து மன மாற்றத்தை ஏற்பட முனைந்தது இந்தப் பத்திரிகை.  காரிசனின் அணுகுமுறையால் கவரப்பட்ட அம்பேத்கரும் தன் பங்குக்கு பஹிஷ்க்ரித் பாரத், மூக் நாயக், ஜனதா ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கினார்.

எட்மண்ட் பர்க், ஜான் ஸ்டூவர்ட் மில், வால்டேர் ஆகியோரின் தாக்கமும் அம்பேத்கரிடம் காணப்பட்டது. 1789 பிரெஞ்சுப் புரட்சியால் அம்பேத்கர் உத்வேகம் கொண்டார். அதே சமயம், மனித குலத்தின் மூன்று அடிப்படை உரிமைகளை முன்வைத்துப் போராடிய முதல் பெரும் இயக்கம் என்று மற்றவர்கள் போல் பிரெஞ்சுப் புரட்சியை அம்பேத்கர் மதிப்பிடவில்லை. மாறாக, புத்தரின் முக்கியத்துவத்தை பிரெஞ்சுப் புரட்சி உறுதிசெய்திருப்பதாகவே அவர் எடுத்துக்கொண்டார்.

ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும் தீண்டப்படாதவர்களையும் அம்பேத்கர் நேரடியாக ஒப்பீடு செய்ததில்லை என்கிறார் எலியோனர் ஜீலியட். ‘ஆனால் அமெரிக்க கலாசார முறையைக் கொண்டு இந்திய கலாசார முறையை அவர் ஒப்பிட்டார்.’ அதே போல், அடிமை முறையையும் தீண்டாமையையும் அம்பேத்கர் ஒப்பிட்டிருக்கிறார். இரண்டுமே மனிதத்தன்மையற்றது. இரண்டுமே பாதிக்கப்பட்டவர்களிடையே பெரும் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் இரண்டுக்கும் சில வேறுபாடுகளும் உள்ளன. ‘ஒரு முறை அடிமையாக்கப்பட்டவன் எப்போதும் அடிமையாகவே இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. தீண்டாமையைப் பொருத்தவரை அதிலிருந்து விடுதலை இல்லை. தீண்டப்படாதவன் இறுதிவரை தீண்டப்படாதவனாக நீடிக்கிறான்.’

மற்றொரு முக்கிய வேறுபாட்டை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். ‘அடிமைமுறையில் ஒரு மனிதனின் சுதந்தரம் அவன் கண்முன்னால் பறிக்கப்படுகிறது. இதனால் தான் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை ஓர் அடிமை உணர்கிறான்… ஆனால் மறைமுகமாகச் சுதந்தரம் பறிக்கப்படும்போது, தான் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்னும் உணர்வே அவனுக்கு இருப்பதில்லை. அதனால் தீண்டாமை என்பது மறைமுக அடிமைமுறை.’ தான் அடிமை என்பதை உணர்வதே அடிமைத்தனத்தில் இருந்து மீள்வதற்கான முதல் படி. ஓர் அடிமைக்கு இந்த உணர்தல் சாத்தியமாகிறது. ஆனால், தீண்டப்படாதவர்களுக்கு இது சாத்தியப்படுவதில்லை என்றார் அம்பேத்கர்.

தான் தீண்டப்படாத பிரிவைச் சேர்ந்தவன் என்பதை அம்பேத்கர் தனது ஒன்பதாவது வயதில் உணர்ந்தார். சதாராவில் இருந்து தன் தந்தையைக் காண மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு உணவு கொடுக்க யாரும் முன்வரவில்லை. குடிக்க நீர், ஒதுங்குவதற்கு இடம் எதுவும் கிடைக்கவில்லை. பிற மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து படிப்பது தவறு என்பதையும் தம்முடைய துணிகளை யாரும் துவைத்துத் தரமாட்டார்கள் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். படித்து முடித்து இந்தியா திரும்பி பரோடாவில் பணியாற்றச் சென்றபோது அவரை வரவேற்க யாரும் ரயில் நிலையத்துக்கு வரவில்லை. மிகுந்த சிரமப்பட்டு ஒரு பார்ஸியின் விடுதியில் தங்க இடம் கிடைத்தது. ஆனால் அவரும்கூட ஒரு நாள் உண்மையறிந்து அவரை விரட்டியடித்துவிட்டார். 1934ல் தவுலத்பாத் எனுமிடத்தில் அம்பேத்கரும் அவருடைய நண்பர்களும் அருகிலிருந்த ஒரு குளத்தில் முகம், கை, கால் கழுவிக்கொண்டபோது அருகிலிருந்த இஸ்லாமியர்கள் அவர்களைத் துரத்தியடித்தனர்.  இத்தகைய அனுபவங்கள் அம்பேத்கருக்கு உணர்த்திய பாடம் ஒன்றுதான். தீண்டப்படாதவன் என்று இந்து மதம் ஒதுக்கிய ஒருவனை பிற மதத்தினரும்கூட ஒதுக்கியே வைக்கிறார்கள். தீண்டாமை என்பது நிரந்தரமானது, அழிவில்லாதது.

தீண்டாமை ஒழிக்கப்படவேண்டியதே என்று பலரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் தீண்டாமை முறையைத் தோற்றுவித்து, அதற்குப் பலம் கொடுத்து, வாழவைத்துக்கொண்டிருக்கும் அடித்தளத்தைப் பற்றி நேர்மையாக மனம் திறந்து உரையாடவும் தீர்வு காணவும் அவர்கள் தயங்குவார்கள். மூன்று சாத்தியங்களை அம்பேத்கர் முன்வைக்கிறார். முதல் வழி, இந்து மதத்தின் நல்ல நம்பிக்கைகள் மற்றும் நெறிகள் பக்கம் மக்களைத் திருப்புவது. தீண்டப்படாõதவர்களை நேசியுங்கள், உங்களில் ஒருவராகக் கருதுங்கள் என்று எடுத்துச் சொல்லும் முறை இது.

இரண்டாவது, இந்துக்களின் புரிதல்களை நெறிப்படுத்தி, தீண்டாமையை ஊக்குவிக்கும் மத வழக்கத்தைவிட்டு விலகுமாறு அவர்களை அறிவுறுத்துவது. அதாவது, சாதியத்தையும் தீண்டாமையையும் ஆதரிக்கும் சாத்திரங்களையும், அவற்றை முன்மொழிபவர்களையும், சாதுக்களையும் எதிர்ப்பது. மூன்றாவது, சாதியை ஒழிப்பது. சாதியத்தை முற்றிலுமாகக் கைவிடுங்கள் என்று கேட்டுக்கொள்வது.

இந்த மூன்றில் முதலிரண்டு வழிகள் சுலபமானவை, மூன்றாவது வழி கடினமானது என்கிறார் அம்பேத்கர். இந்துக்கள் புனிதமாகக் கருதும் ஒரு சமூக ஒழுங்கைத் தாக்கியழிப்பது உண்மையிலேயே கடினமானது. வேதங்களையும் சாத்திரங்களையும் அழித்தொழிப்பது சாதாரண காரியமல்ல. என்னைப் பொருத்தவரை இது சாத்தியமில்லாதது என்கிறார் அம்பேத்கர். சமூக மாற்றத்தைப் பிராமணர்கள் விரும்ப மாட்டார்கள். காரணம், சாதியமுறை ஒழிக்கப்பட்டுவிட்டால் பிராமணர்களை அது பாதிக்கும். தங்கள் நலனுக்கு எதிரான ஒரு விஷயத்தில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?

எல்லாப் பிராமணர்களும் ஒன்றுபோல் இருக்கமாட்டார்களே; மதச்சார்பற்ற பிராமணர்கள் இருப்பார்கள் அல்லவா? சமூக மாற்றத்துக்கு அவர்கள் முன்வருவார்கள் அல்லவா? அம்பேத்கர் இந்த வாதத்தை மறுக்கிறார். மதவாத பிராமணர்களுக்கு எதிராக மதச்சார்பற்ற பிராமணர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது என்கிறார் அவர். இவர்கள் இருவரும் நகமும் சதையும் போன்றவர்கள். எப்படி ஒரு கிறிஸ்தவ போப்பால் புரட்சியாளராக மாறமுடியாதோ அவ்வாறே ஒரு புரோகிதராலும் புரட்சியாளர் ஆகிவிடமுடியாது என்கிறார் அம்பேத்கர்.

சாதிமுறையை ஒழிப்பதில் உள்ள இன்னொரு பெரும் சிக்கலை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். சாதிமுறை, முதலில் ‘மனிதர்களை இரண்டு சமூகமாகப் பிரிக்கிறது. இரண்டாவதாக, இந்தப் பிரிவுகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிவைக்கிறது. சமூக மதிப்பைப் பொருத்தவரை, ஒவ்வொரு சாதியும், வேறு சில சாதிகளைக் காட்டிலும் தாம் மேலானவர்கள் என்று நினைத்து பெருமையும் ஆறுதலும் கொள்கிறது.’ இதனால் சாதிமுறையை எதிர்ப்பதற்கு ‘ஒன்றுபட்ட ஒரு தளம்’ கிடைப்பதில்லை.

சாதி அமைப்பு என்பது கத்தி முனையில் வைத்துப் பராமரிக்கப்படும் ஒரு சட்டப்பூர்வ ஏற்பாடு என்று மதிப்பிடுகிறார் அம்பேத்கர். சாதி அமைப்பு ஏன் நீடித்து நிற்கிறது?  ‘ஆயுதங்களை ஏந்துவதிலிருந்து மக்கள் தடுக்கப்பட்டிருப்பதாலும், கல்வி கற்கும் உரிமையை மக்களுக்கு மறுத்திருப்பதாலும் சொத்துரிமையை அடைவதில் இருந்து மக்கள் தடுக்கப்பட்டிருப்பதாலும் சாதியமைப்பு நீடித்து நிற்கிறது. எனவே, சாதி அமைப்பு இயற்கைக்கு அப்பாற்பட்டதற்கான காரணம், அதை ஆளும் வர்க்கங்கள் அடிமை வர்க்கங்களின் மீது திணித்ததே ஆகும்.’ என்று அம்பேத்கர் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுகிறார் டபிள்யு.என். குபேர்.

சாதி அமைப்பு ஒருவருடைய பிறப்பின் அடிப்படையில் அவருக்குச் சில கடமைகளை வழங்குவதை அம்பேத்கர் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறார். சாதி என்பது சமூக அமைப்பு மட்டுமல்ல, பொருளியல் அமைப்பும்கூட. ‘இது தீங்கு செய்யும் ஒரு நிறுவனமாகும்… மனிதனின் இயல்பான திறமைகளையும் விருப்பங்களையும் சமூக விதிகளின் உடனடித் தேவைகளுக்குக் கீழ்படியச் செய்யக் கூடியதாகச் சாதி அமைந்து உள்ளது. சாதியால் பொருளியல் திறமை உண்டாவதில்லை. அது இனத்தை மேம்படுத்தாது. இது இந்துக்களை முற்றிலும் அமைப்புச் சிதைவுக்கும் ஒழுக்கச் சிதைவுக்கும் உள்ளாக்கியது.’ (சாதி ஒழிப்பு). இனத் தூய்மை, ரத்தத் தூய்மை போன்ற வாதங்களை எதிர்கொள்ளும் அம்பேத்கர், உலகம் முழுவதிலும் எல்லா இனங்களும் கலந்தே உள்ளன என்று சுட்டிக்காட்டுகிறார்.

சாதி வேண்டாம், நாம் இந்துக்களாக இருப்போம் என்போரின் முழக்கங்களில் உள்ள முரண்பாடுகளை அம்பேத்கர் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். இந்து உணர்வு என்று எதுவுமில்லை, ஒவ்வொரு இந்துவிடமும் இருப்பது சாதி உணர்வே என்கிறார் அவர். முகமதியர் படையெடுப்புக்கு முன்பு இந்து என்னும் சொல் இருந்ததில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அவரைப் பொருத்தவரை இந்துக்கள், பல சாதிகளின் தொகுப்பு. மட்டுமின்றி, தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்ற, தன்னல நோக்கம் கொண்ட குழுக்கள். சாதிகளுக்கு இடையிலான ஒற்றுமை என்பது இந்து மதத்தில் சாத்தியமில்லாதது என்றும் அறிவித்தார் அம்பேத்கர்.

மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் கருத்தாக்கத்துக்கு எதிராக இந்து மதமும் சாதியமும் செயல்படுவதை அம்பேத்கர் நேரடியாக உணர்ந்தார். அடிப்படையிலேயே முரண்பாடுகள் நிறைந்த இந்து மதத்தில் இருந்து வெளியேற தன் சமூகத்துக்கு அவர் அளித்த ஆலோசனை இன்றளவும் சர்ச்சைகளைக் கிளப்பக்கூடியது.

0

பதவி – போதை – போர்

OpiumWarCousinMontaubanCampaignOf1860Wikiபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 15

12. கி. பி. 1644 முதல் கி.பி. 1911 வரை –  கிங் வம்ச (Qing Dynasty) ஆட்சிக்
காலம்

சீனாவின் முதல் மன்னராட்சி கி. மு. 1600 முதல் கி. மு 1046 வரை தொடர்ந்த ஷாங் வம்ச (Shang Dynasty) ஆட்சி. 3511 ஆண்டுகளுக்குப் பின், இந்தச் சகாப்தம் முடிந்தது.  சீனாவின் கடைசி மன்னராட்சி தந்தவர்கள் என்னும் பெருமை இவர்ளைச் சாரும்.

சீனா இன்று உலகச் சந்தையில் வகை வகையான பொருள்களைக் கொண்டுவந்து குவிக்கிறது. இதற்கு முதல் புள்ளி வைத்தவர்கள் கிங் சக்கரவர்த்திகள். கி.பி. 1700-ல், வெளிநாட்டவர் சீனாவில் தொழிற்சாலைகள் தொடங்க அரசாங்கம் அனுமதி கொடுத்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் போன்ற பல

நாடுகள் 13 தொழிற்சாலைகள் ஆரம்பித்தார்கள். சீன வணிக வரலாற்றில், இது ஒரு முக்கிய ஆரம்பம். இதன் அடுத்த கட்டமாக, கிழக்கு இந்திய கம்பெனி, குவான் ஜோ(Guangzhou) என்னும் துறைமுக நகரத்தில் கிளை திறந்தார்கள். ஏற்றுமதி, இறக்குமதி அமோகமாக வளரத் தொடங்கியது.

மஞ்சூ சக்கரவர்த்திகளில், சீனாவை உச்சத்துக்குக் கொண்டு போனவர்கள் இருவர். அவர்கள் ஒரு தாத்தாவும் அவர் பேரனும், தாத்தா –   காங்ஸி பேரரசர் (Kangxi Emperor).இவர் கி.பி. 1667 முதல் கி.பி. 1722 வரை 55 ஆண்டுகள் நல்லாட்சி செய்தார். எதிரிகளிடமிருந்து சீனாவைப் பாதுகாக்க, எல்லைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தினார். இலக்கிய வளர்ச்சியில் காங்ஸி பங்கு மகத்தானது. அறிஞர்கள் குழு அமைத்தார். சீன வரலாற்றையும், புராதனப் பெருமை கொண்ட இலக்கியங்களையும் புதிப்பித்து வெளியிடுவது இவர்கள் பணி. பழம்பெருமை போற்றியவர், சீனாவின்

கலாசார ஜன்னல்களையும் விசாலமாகத் திறந்தார். இங்கிலாந்து, ஸ்வீடன், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகளின் கல்விமுறைகளை அறிமுகம் செய்தார். 18 , 19 நூற்றாண்டுகளில், அற்புதமான புதினங்களும், நாடகங்களும் படைக்கப்பட்டன. காங்ஸி விதைத்த ஐரோப்பியத் தாக்கம் இதற்கு முக்கிய காரணம். சீனக் கதவுகள் வெளிநாட்டவர்களுக்காக அகலத் திறந்தன.  1793- ல், இங்கிலாந்தோடு அரசு முறையிலான உறவு தொடங்கியது, இங்கிலாந்து நாட்டுத் தூதர் சீனா வந்தார். ராஜாங்க மரியாதைகளோடு வரவேற்கப்பட்டார்.

பேரர் – கியன்லங் பேரரசர் (Qianlong Emperor). 1735 முதல் 1796 வரை 61 ஆண்டுகள் இவர் செங்கோல்தான் சீனாவின் தலைவிதியை நிர்ணயித்தது. ராணுவ யுக்திகளில் வித்தகரான இவர், பத்து முக்கியப் போர்கள் நடத்தினார், அனைத்திலும் வெற்றி. மங்கோலியா, திபெத், நேபாளம், மத்திய ஆசியப் பகுதிகள் எனப் பல நாடுகளை வென்று சீனாவை விரிந்த சாம்ராஜ்ஜியமாக்கினார்.

கியன்லங் போர்களில் மட்டும் தன் திறமையைக் காட்டவில்லை. இவர் மாபெரும் கலாரசிகர், இலக்கிய ஆர்வலர். ஓவியங்கள், பித்தளை, பீங்கான், இனாமல், அரக்குக் (lacquer)  கலைப்பொருட்கள் என இவர் சேமித்துவைத்த பொக்கிஷங்கள் இன்றும் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.

கியன்லங் ஒரு கவிஞர், எழுத்தாளர். 40,000 கவிதைகளும், 1300 கட்டுரைகளும் படைத்திருக்கிறார். இந்த ஆர்வம், மற்றொரு மாபெரும் சாதனை படைக்க அவரைத் தூண்டியது. சீனாவில் அதுவரை வெளியாகியிருந்த அத்தனை தத்துவ, வரலாற்று, இலக்கியப் படைப்புகளையும் தொகுப்புகளாக்கி வருங்கால சந்ததியினருக்கு அழியாச் சொத்துகளாக விட்டுப்போகவேண்டும் என்னும் பேராசை கியன்லங்குக்கு வந்தது. இதை நிறைவேற்றியும் காட்டினார்.

361 அறிஞர்கள் 1773 முதல் 1782 வரை ஒன்பது வருடங்கள் அயராது உழைத்து, இந்தத் தொகுப்பை உருவாக்கினார்கள். இதற்காக அவர்கள் 10,000 நூல்களைப் படித்தார்கள், அவற்றுள் 3461 நூல்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஸிக்கு க்வான்ஷூ  (இந்தச் சீன வார்த்தைக்கு, இலக்கியத்தின் நான்கு பகுதிகளின் மொத்த நூலகம் என்று பொருள்) என்ற தலைப்பில் அறிஞர் குழு தயாரித்த தொகுப்பு, 36,381 அத்தியாயங்களும், 23

லட்சம் பக்கங்களும் கொண்ட மாபெரும் நூல்! இதை வார்த்தைகளில் வடிக்க 15,000 எழுத்தர்கள் தேவைப்பட்டார்கள். இந்தத் தொகுப்புக்கு மட்டுமல்ல, பேரரசர் கியன்லங் அவர்களுக்கும் வரலாற்றில் அழியாத இடம் கிடைத்தது.

கலை, இலக்கிய  தாகங்களும், தேடல்களும் அபாயகரமானவை. கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால், இவை ஆள்களை விழுங்கிவிடும். பேரரசர் கியன்லங் விஷயத்திலும் இதுதான் நடந்தது. எழுத்தையும், கலைகளையும் பின் தொடர்ந்த சக்கரவர்த்தி ஆட்சியை, மக்களை மறந்தார். நாடு கை நழுவத் தொடங்கியது. சீனாவின் பல்வேறு பாகங்களில் உள்நாட்டுக் கலவரங்கள் ஆரம்பித்தன. இதன் வெளிப்பாடு, 1794-ல் தொடங்கி, பத்து வருடங்கள் நீடித்த வெள்ளைத் தாமரைக் கிளர்ச்சி (White Lotus Rebellion).

பேரரசர் தொடங்கியதால், தடி எடுத்தவர்கள் எலோரும் தண்டல்காரர்கள் ஆனார்கள். பொதுமக்களிடம் வரி என்ற பெயரில் பணம் வசூலித்தார்கள், கட்டைப் பஞ்சாயத்து நடத்தினார்கள். இதற்கு எதிராகப் பொதுமக்கள் வெள்ளைத் தாமரைச் சங்கம் என்னும் அமைப்பைத் தொடங்கினார்கள். நாட்டின் பல பாகங்களில் போராட்டங்கள் எழுந்தன.

அரசின் ராணுவம் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. அடக்கப் பத்து வருடங்கள் எடுத்தது. ஜெயித்தாலும், எப்போது எரிமலை குமுறுமோ என்னும் பயம்! என்றும் கவிழ்ந்துவிடலாம் என்னும் கலக்கம் பேரரசர்கள் மனங்களில் முளைவிடத் தொடங்கிவிட்டது.

கிங் வம்ச ஆட்சியிலும், சீன வரலாற்றிலும், அபினிப் போர்கள் (Opium Wars) மிக முக்கியமானவை.  இவை வர்த்தகப் போர்கள். முதல் அபினிப் போர் (1839 – 1842), சீனாவுக்கும், இங்கிலாந்துக்குமிடையே நடந்தது: இரண்டாம் அபினிப் போரில் (1856 – 1860), ஓரணியில் சீனா, மறு அணியில், பிரிட்டிஷ், பிரெஞ்சு நாட்டுப் படைகள் கை கோர்த்து நின்றன.

பிரிட்டிஷாரின் வியாபாரம் எப்போதுமே அவர்கள் அரசியல் ஆசைகளின் நுழைவாயிலாக இருந்தது.  இந்தியாவில் வியாபாரிகளாகப் புகுந்த கிழக்கு இந்தியக்  நாட்டையே அடிமைப்படுத்தவில்லையா? சீனாவிலும், இதே நாடகம் நடத்த முனைந்தார்கள்.

இங்கிலாந்தில், சீனப் பட்டுக்கு ஏகக் கிராக்கி. இங்கிலாந்தின் இறக்குமதி எக்கச்சக்கம். சீனர்களுக்கு இங்கிலாந்துத் தயாரிப்புகளில் அத்தனை மோகம் இருக்கவில்லை. சீனா தன் ஏற்றுமதிக்கு வெள்ளியைப் பண்டமாற்றாகக் கேட்டது. இந்த நிலை தொடர்ந்தால், தன் வெள்ளிக் கையிருப்பு சரியும் என இங்கிலாந்து பயந்தது. இதைச் சரிக்கட்ட, அவர்கள் கண்டுபிடித்த குறுக்கு வழி – அபினி.

சீனாவில், கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதலாகவே அபினி வீடுகளில் சர்வ சாதாரணமாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்து. பதினேழாம் நூற்றாண்டில், சீனா வந்த ஐரோப்பியர்கள், புகையிலையோடு அபினியைச் சேர்த்துப் புகைப்பதையும், சுகபோக மயக்கத்தில் புரள்வதையும் சீனர்கள் பார்த்தார்கள். அபினி மருந்து மட்டுமல்ல, போதைப் பொருளும்கூட, என்னும் பாலபாடம் ஆரம்பமானது.   இந்த போதை ஆசையை பிரிட்டிஷார் தங்கள் வளர்ச்சிக்குப் பகடைக்காயாக்கினார்கள்.

இந்தியாவின் வங்காளத்திலும், காசியிலும் அபினித் தொழிற்சாலைகள் தொடங்கினார்கள். பிரிட்டீஷார் உபயத்தில், சீனக் கடைத்தெருக்களில், இந்திய அபினி குவிந்தது. சீனா அபினியைத் தடை செய்ய முயற்சித்தது. இந்தச் சலசலப்புக்கா இங்கிலாந்துக் குள்ளநரி பயப்படும்? நேர் வழிகளிலும், கடத்தல் மார்க்கங்களிலும், பிரிட்டிஷார் சீனாவில் போதைப்பொருளைக் கொண்டுவந்து கொட்டினார்கள்.

சீனாவின் சமுதாய வாழ்க்கையும், பொருளாதாரமும் சின்னாபின்னமாகத் தொடங்கின. நாட்டின் வருங்காலமே கேள்விக்குறியாவதைப் புரிந்துகொண்ட சீன அரசு, அபினி வர்த்தகத்தை நிறுத்துமாறும், கையிருப்பை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும், இங்கிலாந்து வியாபாரிகளுக்கு  ஆணையிட்டது. அவர்கள் மறுத்தார்கள், அரசுத் தடையை மீறினார்கள்.  வியாபாரிகள் கைது செய்யப்பட்டார்கள், சீனச் சிறைகளுக்குள் தள்ளப்பட்டார்கள். சீனாவுக்கும், இங்கிலாந்துக்குமிடையே நடந்த பேச்சு வார்த்தைகள்

முறிந்தன.  இதற்குத்தானே இங்கிலாந்து காத்திருந்தது? பெரும் கப்பற்படையை இந்தியாவிலிருந்து அனுப்பியது. சீனத் துறைமுகங்களைத் தாக்கியது. ஏராளமான சீனக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தியது. கியன்லங் ஆட்சிக்கால முடிவிலிருந்தே, சீனா பலவீன தேசமாக இருந்தது. ஆகவே, இங்கிலாந்திடம் தோற்றது, மண்டியிட்டது,

1842. பிரிட்டீஷார் கட்டளையிட்ட இடத்தில் சீனப் பேரரசர் கையெழுத்திட்டார். சீனா முழுக்க,தடைகளே இல்லாமல் அபினி வியாபாரம் நடத்தும் உரிமையைத் தந்தார்.        பதினான்கு வருடங்கள். தன்மானம் பறிபோய்விட்டதே என்று நாடு குமுறிக்கொண்டிருந்தது. 1856 – இல் இந்த ஆதங்கம் வெடித்தது. அபினி தாங்கிவந்த இங்கிலாந்துச் சரக்குக் கப்பலைச் சீன அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். இப்போது இங்கிலாந்தோடு பிரெஞ்சுப் படைகளும் கை சேர்ந்தன. இரண்டாம் அபினிப் போர் நான்கு ஆண்டுகள் நடந்தது. சீனாவுக்குப் படு தோல்வி. அபினி வியாபாரம் அரசு ஒப்புதல் பெற்றது. சீனாவின் பல முக்கிய துறைமுகங்கள் அபினி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதிக்காக ஐரோப்பிய வியாபாரிகளுக்குத் திறந்துவிடப்பட்டன.

அடுத்த ஐம்பது வருடங்கள். ஐரோப்பியர்களின் தெனாவெட்டும், தாய்நாட்டின் கையலாகாத்தனமும், மக்களிடையே எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டிவிட்டன. நாட்டின் பல்வேறு பாகங்களில் கலவரங்கள் வெடித்தன. விரைவில் அக்னிக் குஞ்சுகள் கொழுந்துவிடும் நெருப்பாயின. பேரசரசருக்கு எதிரான இயக்கங்கள் தோன்றின.

விரக்திக்குத் தீர்வுகாணும் நம்பிக்கை நட்சத்திரமாய் இப்போது தோன்றினார், சன் யாட்-சென் (Sun Yat-Sen).  மருத்துவரான இவர் நாடு படும் அவமானங்களுக்கு முடிவுகட்ட விரும்பி, அரசியலில் நுழைந்தார்.  1905 – இல்,  புரட்சி அணிகள் சன் யாட்-சென்னைத் தலைவராக ஏற்றுக்கொண்டன. ஒவ்வொரு மாகாணமாக, புரட்சியாளர்கள் கைகளில் விழுந்தது.

ஏழே வருடங்கள். 1912. கி.மு. 2852 -இல் ஃப்யூ க்ஸீ (Fu X) தொடங்கிவைத்த
மன்னராட்சியை, கி.பி. 1912 – இல், பேரரசர் புயி (Puyi) முடித்துவைத்தார். மக்கள் பிரதிநிதியான சன் யாட்-சென்னிடம் ஆட்சியை ஒப்படைத்தார். மன்னராட்சி முடிந்தது, மக்களாட்சி மலர்ந்தது, சீன நாட்டின் வரலாற்றில் புத்தம் புதிய பாதை தொடங்கியது.

0

விகாரம், புணர்ச்சி

chain-linkஅம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 15

சென்ற அத்தியாயத்தில் ‘பகுதி’ என்கிற முக்கியமான பகுபத உறுப்பைப்பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அதற்கு இரண்டு மாறுபட்ட உதாரணங்களைக் குறிப்பிட்டோம்:

* நடந்தான் : பகுதி ‘நட’
* வந்தான் : பகுதி ‘வா’

இதில் ‘நடந்தான்’ என்ற சொல்லிலேயே ‘நட’ என்கிற பகுதி உள்ளது. ஆனால் ‘வந்தான்’ என்பதில் ‘வா’ இல்லை, வெறும் ‘வ’தான் உள்ளது.

‘வா’ என்ற நெடில், ‘வ’ என்கிற குறிலாக மாறியுள்ளதல்லவா? இந்தத் தன்மையைதான் விகாரம் என்ற பெயரில் தனியான பகுபத உறுப்பாகக் குறிப்பிடுகிறோம்.

‘விகாரம்’ என்றால், ஒன்று மற்றொன்றாக இயல்பு மாறிக் காணப்படுவது.

நம் முன்னே யாராவது ஒருவர் ஐந்து கண், ஏழு மூக்குகள், பதினேழு காதுகளோடு முன்னே வந்தால், ‘விகாரமான தோற்றம்’ என்போம். காரணம், பொதுவாக மனிதர்களுக்கு இரண்டு கண், இரண்டு காது, ஒரு மூக்குதான் உண்டு. அந்த இயல்பான எண்ணிக்கை அங்கே மாறியுள்ளது. ஆகவே, அதனை ‘விகாரம்’ என்று அழைக்கிறோம்.

அதுபோல, மற்ற பகுபத உறுப்புகள் தங்களுடைய இயல்பான நிலைமை மாறி அமைவதற்குப் பெயர்தான் விகாரம். மேலும் சில உதாரணங்கள்:

* சென்றான் : பகுதி ‘செல்’, அது ‘சென்’ என மாறியுள்ளது விகாரம்
* வந்தான் : பகுதி ’வா’, அது ‘வ’ என மாறியுள்ளது விகாரம், சந்தி ‘த்’, அது ‘ந்’ என மாறியுள்ளதால், அது இன்னொரு விகாரம்

இந்த விகாரம் ஒரு சொல்லினுள் மட்டுமல்ல, இரண்டு சொற்கள் ஒன்றாகச் சேர்கிற இடத்திலும் உண்டு. அதையும் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

பொதுவாக இரண்டு சொற்கள் சேருவதைத் தமிழில் ‘புணர்ச்சி’ என்பார்கள். இந்தச் சொல்லைப் பாலியல் சார்ந்த அர்த்தத்திலேயே பயன்படுத்திப் பயன்படுத்தி, யாராவது இதைச் சொன்னாலேயே கூச்சம் வருகிறாற்போல் மாறிவிட்டோம்.

‘புணர்தல்’ என்பதன் நிஜமான பொருள், சேர்தல், கூடுதல் என்பதுதான். அது பாலியல் நோக்கத்துக்கும் பொருந்தும் என்றாலும், எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, திருவருட்பாவில் வள்ளலார் எழுதிய ஓர் அருமையான வெண்பா:

அருள் அளித்தான், அன்பு அளித்தான், அம்பலத்தான் உண்மைப்
பொருள் அளித்தான், என்னுள் புணர்ந்தான், தெருள் அளித்தான்,
எச்சோதனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்,
அச்சோ! எனக்கு அவன்போல் ஆர்!

இங்கே சிவபெருமானின் அருளையும் அன்பையும், அவன் தந்த உண்மைப் பொருளையும் சொல்லவரும் வள்ளலார், அந்த அம்பலத்தான் எனக்குத் தெளிவு கொடுத்தான், எந்தச் சோதனையும் தராமல் என்னை ஆட்கொண்டான், அவனைப்போல் எனக்கு யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் நெகிழும்போது, நடுவில் ‘என்னுள் புணர்ந்தான்’ என்கிறார். அதன் அர்த்தம், ‘எனக்குள்ளே கலந்துவிட்டான்’ என்பதுதான்.

இந்தப் பாடலை இங்கே சொல்லக் காரணம், ‘புணர்ச்சி விதிகள்’ என்றதும் அக்கம்பக்கம் பார்க்கவேண்டியதில்லை. கூச்சப்படாமல் தொடர்ந்து படிக்கலாம்!

இரு சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது, இரண்டு வகைப் புணர்ச்சிகள் நிகழக்கூடும்:

* இயல்புப் புணர்ச்சி
* விகாரப் புணர்ச்சி

இயல்புப் புணர்ச்சி என்றால், இரு சொற்களும் எந்தவிதத்திலும் மாறாது. காந்தத்தை அருகருகே வைத்தால் பச்சக் என்று ஒட்டிக்கொள்வதுபோல் ஒட்டிக்கொண்டு, அதேபோல் நிற்கும்.

உதாரணமாக, பூ + மாலை = பூமாலை. இந்தப் புதிய சொல்லில் ‘பூ’வும் உள்ளது, ‘மாலை’யும் உள்ளது, இரண்டும் இயல்பாகச் சேர்ந்துள்ளன. ஆகவே, அது இயல்புப் புனர்ச்சி.

இப்போது, ‘பூ’வை அப்படியே வைத்துக்கொள்வோம், ‘மாலை’க்குப் பதில், அதே பொருள் தரும் இன்னொரு சொல்லாகிய ‘சரம்’ என்பதைப் பயன்படுத்துவோம். பூ + சரம் என்பது எப்படிப் புணரும்?

‘பூசரம்’ என்று புணர்ந்தால் அது இயல்புப் புணர்ச்சி. ஆனால் அவை ‘பூச்சரம்’ என்றுதான் புணரும்!

இங்கே நடுவில் ஓர் ‘ச்’ ஏன் வந்தது, எப்படி வந்தது என்றெல்லாம் பின்னர் விரிவாகப் படிக்கலாம், இப்போதைக்கு, ‘பூமாலை’ என்பதும் ‘பூச்சரம்’ என்பதும் ஒரேமாதிரி புணர்ச்சி அல்ல என்பதைமட்டும் கவனித்தால் போதும்.

‘பூமாலை’ என்ற சொல்லில், ‘பூ’, ‘மாலை’ ஆகிய சொற்கள் இயல்பாக அமைந்திருப்பதுபோல, ‘பூச்சரம்’ என்ற சொல்லில் ‘பூ’, ‘சரம்’ ஆகியவை அமையவில்லை. ஏதோ விகாரம் நடந்திருக்கிறது.

இதைதான் ‘விகாரப் புணர்ச்சி’ என்கிறோம். அதில் மொத்தம் மூன்று வகைகள் உண்டு:

* தோன்றல் (ஒரு புதிய எழுத்து தோன்றுதல்)
* கெடுதல் (ஏற்கெனவே உள்ள ஓர் எழுத்து நீங்குதல்)
* திரிதல் (ஓர் எழுத்து இன்னோர் எழுத்தாக மாறுதல்)

உதாரணங்களுடன் பார்ப்போம், முதலில்:

பூ + சரம் = பூச்சரம்

இங்கே ‘பூ’, ‘சரம்’ ஆகியவற்றுடன், ‘ச்’ என்ற புதிய எழுத்து தோன்றியிருக்கிறது. அதுதான் ‘தோன்றல் விகாரம்’.

இன்னும் சில உதாரணங்கள்:

சிவப்பு + கொடி = சிவப்புக் கொடி
நாய் + சங்கிலி = நாய்ச் சங்கிலி
நேர் + சிந்தனை = நேர்ச் சிந்தனை

அடுத்து, கெடுதலுக்கு உதாரணமாக, ‘தங்கச் சங்கிலி’யை எடுத்துக்கொள்வோம்.

தங்கம் + சங்கிலி = தங்கச் சங்கிலி

இங்கே புதிதாகத் தோன்றிய ‘ச்’ என்பது தோன்றல் விகாரம். ஆனால் நாம் கவனிக்கவேண்டியது, ‘தங்கம்’ என்ற சொல்லில் இருந்த ‘ம்’ என்ற எழுத்து எங்கே போனது?

அதுதான் ‘கெடுதல் விகாரம்’, நல்ல பிள்ளைகளோடு சேரும்போது நம் கெட்ட குணங்கள் காணாமல் போவதுபோல (அல்லது, Vice Versa) இந்தப் புணர்ச்சியால் ஓர் எழுத்து கெட்டுவிட்டது.

நிறைவாக, திரிதல். இதற்கு உதாரணம், ‘பொற்கலசம்’

பொன் + கலசம் = பொற்கலசம்

இங்கே ‘கலசம்’ என்ற சொல் அப்படியே வந்துள்ளது. ஆனால், ‘பொன்’ என்ற சொல்லின் நிறைவில் இருக்கும் ‘ன்’ என்ற எழுத்து, ‘ற்’ என்று மாறிவிட்டது.

அது ஏன் அப்படி மாறவேண்டும் என்று அப்புறம் பார்ப்போம். இப்போதைக்கு, திரிதல் விகாரம் என்றால், ஓர் எழுத்து இன்னொன்றாகத் திரிவது, மாறுவது, அவ்வளவுதான்!

‘விகாரப் புணர்ச்சி’ என்று ஒருமையில் பெயர் சூட்டிவிட்டதால், இதில் ஏதேனும் ஒன்றுதான் வரும் என்று நினைத்துவிடாதீர்கள், ஒரே புணர்ச்சியின்போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்களும் வரலாம்.

உதாரணமாக, நாம் ஏற்கெனவே பார்த்த ‘தங்கச் சங்கிலி’ என்ற உதாரணத்தில் தோன்றல், கெடுதல் ஆகிய இரண்டு விகாரங்களும் உள்ளன.

இப்போது, உங்களுக்கு ஒரு பயிற்சி, இந்தச் சொற்களில் எவையெல்லாம் இயல்புப் புணர்ச்சி, எவையெல்லாம் விகாரப் புணர்ச்சி, அதிலும் குறிப்பாக, எது தோன்றல், எது கெடுதல், எது திரிதல், எங்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் உள்ளன என்று கண்டுபிடியுங்கள்:

* செந்தாமரை
* நாய் வால்
* உலகத் தமிழர்கள்
* பழரசம்
* மதுரசம்
* மதுக்குடம்
* பழக்குடம்
* தென்னந்தோப்பு
* பனைமரம்
* ஆற்றங்கரை

மேலே நாம் பார்த்த மூன்று விகாரங்கள்தவிர, இன்னும் ஒன்பது வகை விகாரங்கள் உள்ளன. நல்லவேளையாக, இவை தினசரி வாழ்க்கையில் பயன்படாது, செய்யுள் எழுதும்போதுமட்டும்தான் நாம் இவற்றைப் பயன்படுத்துவோம். ஆகவே, இவற்றுக்குச் ‘செய்யுள் விகாரம்’ என்று பெயர்.

செய்யுளுக்கென்று விசேஷமாக விகாரம் எதற்காக?

மரபுக் கவிதையில் சொற்கள் இப்படிதான் அமையவேண்டும் என்று நெறிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால், இலக்கணப் பிழையாகிவிடும்.

ஆனால், சில நேரங்களில் சில சொற்கள் பாடலில் கச்சிதமாக உட்கார்ந்துகொண்டு எழ மறுக்கும். அவற்றை மாற்றினால், செய்யுளின் அழகு போய்விடும்.

அதுபோன்ற சந்தர்ப்பங்களில், அந்தச் சொல்லை வேண்டுமென்றே கொஞ்சம் மாற்றி (விகாரப்படுத்தி) எழுதிச் சமாளிப்பார்கள் புலவர்கள். இதுதான் செய்யுள் விகாரம்.

உதாரணமாக, திருநாவுக்கரசர் எழுதிய இந்தப் பிரபலமான பாடலைப் பாருங்கள்:

மாசு இல் வீணையும், மாலை மதியமும்
வீசு தென்றலும், வீங்கு இள வேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே,
ஈசன் எந்தை இணை அடி நீழலே!

என்னுடைய தந்தையாகிய இறைவன், அவனுடைய திருவடி நிழல் எப்படிப்பட்டது தெரியுமா?

குற்றமில்லாத இசையைத் தருகிற ஒரு வீணையைப்போன்றது, மாலை நேரத்தில் தோன்றுகின்ற குளிர்ச்சியான சந்திரனைப்போன்றது, வீசுகின்ற தென்றலைப்போன்றது, செறிவான இளவேனிலைப்போன்றது, வண்டுகள் சத்தமிட்டபடி மொய்க்கிற பொய்கையைப்போன்றது!

அதெல்லாம் இருக்கட்டும், பாடலின் நிறைவுச் சொல்லைக் கவனியுங்கள். ‘நீழலே’ என்கிறார் திருநாவுக்கரசர், அது ‘நிழலே’ என்றல்லவா இருக்கவேண்டும்?

இதுதான் செய்யுள் விகாரம். படிக்கிறவர்கள் அர்த்தத்தைப் புரிந்துகொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் லேசாகச் சொற்களை மாற்றி எழுதுவது.

இப்படி ஒன்பது வகையான செய்யுள் விகாரங்கள் உண்டு என்று பார்த்தோம். அவை:

* வலித்தல்
* மெலித்தல்
* நீட்டல்
* குறுக்கல்
* விரித்தல்
* தொகுத்தல்
* முதற்குறை
* இடைக்குறை
* கடைக்குறை

பெயர்கள் ஒருமாதிரி பயமுறுத்தினாலும், உதாரணத்துடன் பார்த்தால் இவை மிக எளிமையாகிவிடும். இவற்றில் முதல் ஆறும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான பங்காளிகளாக இருப்பதால் சட்டென்று புரிந்துகொண்டுவிடலாம்.

ஒரு விஷயம், இங்கே செய்யுளில் வருவதுபோன்ற பழந்தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே எளிய உதாரணங்களைத் தந்துள்ளேன். ’இதையெல்லாம் இப்படி மாத்தி எழுதுவாங்களா என்ன?’ என்று சந்தேகப்படவேண்டாம், சும்மா புரிந்துகொள்வதற்காகமட்டும்தான் இது!

1. வலித்தல்

ஒரு மெல்லின எழுத்தை வல்லினமாக மாற்றுவது. உதாரணமாக, ஒரு பெண்ணின் பெயர் ‘அம்பிகா’, அவளை ஒருவர் ‘அப்பிகா’ என்று (சும்மா கிண்டலுக்குதான்) அழைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இங்கே, ’ம்’ என்ற மெல்லின எழுத்து ‘ப்’ என்ற வல்லின எழுத்தாக மாறியுள்ளதால், அது வலித்தல் விகாரம், பதிலுக்கு அவள் அவருடைய கன்னத்தில் ஓர் அப்பு அப்பினால், அவரது முகத்தில் வலித்தலும் ஏற்படும், விகாரமும் ஏற்படும்!

2. மெலித்தல்

‘மெலித்தல் விகாரம்’ என்றால், சிலர் ஒரு நாளைக்கு ஏழு அரிசிகளைமட்டும் சாப்பிட்டு சைஸ் ஜீரோ ரேஞ்சுக்கு மெலிந்து எலும்பும் தோலுமாக இருப்பதல்ல. வலித்தல் விகாரத்துக்குப் பங்காளி இது, ஒரு வல்லின எழுத்தை மெல்லினமாக மாற்றுவது.

உதாரணமாக, ‘தொப்பி’ என்ற சொல்லை ‘தொம்பி’ என்று மாற்றிச் சொல்வது மெலித்தல் விகாரம், காரணம், இங்கே ‘ப்’ என்ற வல்லின எழுத்துக்குப் பதில் ‘ம்’ என்ற வல்லின எழுத்து வந்துள்ளது.

3. நீட்டல்

சிலர் கண்ணுக்கு மை தீட்டுகிறேன் பேர்வழி என்று தீட்டித் தீட்டி அதைக் காதுவரை நீட்டிவிடுவார்கள், அது பார்ப்பதற்கு ரொம்ப விகாரமாக இருக்கும்.

ஆனால் இலக்கணத்தில் வரும் நீட்டல் விகாரம் அதுவல்ல, குறிலை நெடிலாக நீட்டி எழுதுவது. இதற்குச் சிறந்த உதாரணமாக‘நிழல்’ என்ற சொல் ‘நீழல்’ என்று (குறில் ‘நி’க்குப் பதில் நெடில் ‘நீ’) மாறி வருகிற நீட்டல் விகாரத்தை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம்.

4. குறுக்கல்

நீட்டல் விகாரத்துக்குப் பங்காளி இது, நெடிலைக் குறிலாகக் குறுக்கி எழுதுவது. உதாரணமாக, ‘வாத்து’ என்பதை ‘வத்து’ என்று சொல்வது. ‘வா’ நெடிலுக்குப் பதில் ‘வ’ என்ற குறில் வருவதால் இது குறுக்கல் விகாரம்.

5. விரித்தல்

சொல்லில் இல்லாத ஓர் எழுத்தை அறிமுகப்படுத்துவதுதான் விரித்தல். உதாரணமாக, ‘அடடா’ என்பதை ‘அடடடடா’ என்று சிலர் விரிப்பார்களே, அந்தமா‘திரி!

6. தொகுத்தல்

‘தொகை’ என்றால் ஒளிந்திருத்தல் என்று அர்த்தம். ஒரு சொல்லில் ஏற்கெனவே இருக்கும் ஓர் எழுத்தை ஒளியவைத்துவிடுவதுதான் தொகுத்தல் விகாரம், இது விரித்தல் விகாரத்துக்குப் பங்காளி.

உதாரணமாக, ‘சிறிய பறவை’ என்பதை ஒருவர் ‘சிறி பறவை’ என்று எழுதினால், அது தொகுத்தல் விகாரம். அதையே ‘சிறு பறவை’ என்று எழுதினால் விகாரம் இல்லை. காரணம், தமிழில் ‘சிறு’ என்ற சொல் உண்டு, ‘சிறி’ என்ற சொல் இல்லை, அது ‘சிறிய’ என்பதன் தொகுத்தல் விகாரம்.

7. முதல் குறை

ஒரு சொல்லின் முதல் எழுத்தை நீக்கிவிடுவது. உதாரணமாக, ‘தாமரை’ என்ற சொல்லைச் சில பாடல்களில் ‘மரை’ என்று குறிப்பிடுவார்கள். அப்போதும் அது ‘தாமரை’தான் என்று புரியும். ‘பழம்’ என்றாலே ‘வாழைப் பழம்’ என்று நாம் புரிந்துகொள்வதைப்போலதான்!

8. இடைக் குறை

டயட் இருந்தால் ‘இடை குறை’யும். ஆனால் இது வேறு, நடுவில் ‘க்’ உண்டு, ‘இடைக் குறை’, அதாவது, ஒரு சொல்லின் நடுவே இருக்கும் எழுத்தை நீக்கிவிடுவது.

உதாரணமாக, ’முத்து’ என்ற சொல்லை ‘முது’ என்று மாற்றி எழுதினால் அது இடைக் குறை.

9. கடைக் குறை

’கடை’ என்றால் ‘கடைசி’ என்று அர்த்தம். ஒரு சொல்லின் கடைசியில் இருக்கும் எழுத்தை நீக்கிவிட்டால் அதனைக் ‘கடைக் குறை’ என்பார்கள்.

உதாரணமாக, ’வந்தாச்சு’ என்பதைச் சிலர் ‘வந்தாச்’ என்று எழுதுவார்கள். கடைசி எழுத்தாகிய ‘சு’ இல்லாமலே அதன் அர்த்தம் புரிகிறதல்லவா?

இந்த ஒன்பது விகாரங்களையும் தெரிந்துகொண்ட கையோடு அவற்றைப் பயன்படுத்தக் கிளம்பிவிடாதீர்கள். இவை செய்யுள் விகாரங்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். ஒருவேளை நீங்கள் செய்யுள் எழுதி, அதில் ஒரு வார்த்தை சரியாக உட்கார மறுத்தால்மட்டுமே இவற்றைப் பயன்படுத்தலாம்.

‘அடடா, வட போச்சே’ என்று வருத்தப்படவேண்டாம், SMS எழுதுங்கள், அதில் உள்ள பெரும்பாலான சொற்கள் விகாரம்தானே? do u undrstnd?

விகாரப்பட்டது போதும், இயல்புக்குத்திரும்புவோம், அடுத்த அத்தியாயத்தில் வேற்றுமை உருபுகளைப்பற்றிப் பார்ப்போம்!

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* விகாரம்
* புணர்ச்சி இலக்கணம் என்றால் என்ன?
* இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி
* தோன்றல், கெடுதல், திரிதல்
* செய்யுள் விகாரம்
* வலித்தல், மெலித்தல்
* நீட்டல், குறுக்கல் (வல்லினம் <> மெல்லினம்)
* விரித்தல், தொகுத்தல் (குறில் <> நெடில்)
* முதல் குறை, இடைக் குறை, கடைக் குறை

0

ஆறு மனமே ஆறு

6-Movie-Pre-Release-Posterடேக்கன் – 2008, டேக்கன் – 2012, சிக்ஸ் புல்லட்ஸ் – 2012.

ஆறு – 2013 (2011-ல் ஆரம்பிக்கப்பட்டது).

இந்தப் படங்களுக்கெல்லாம் உள்ள ஓர் ஒற்றுமை, இவை எல்லாமே குழந்தைக் கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரில்லர்கள். இந்த வருடம் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பபட்டிருக்கும் படமான தி குட் ரோடு படம் கூட காணாமல் போன சிறுவனைத் தேடுவதை மையமாகக் கொண்டதுதான்.

இதுபோல் வேறு பல படங்களும் வந்திருக்கக்கூடும். ஆனால், ஷாம் நடித்து, துரை இயக்கி, ஜெயமோகன் வசனம் (கிரெடிட் தரப்படாவிட்டாலும் திரைக்கதையும் அவருடையதாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஏனெனில் கதைக் களம் ஒருவகையில் ஏழாம் உலகத்தோடு தொடர்புடையது) எழுதியிருக்கும் ஆறு (மெழுகுவர்த்திகள்) படம், தமிழின் பிற படங்களை ஒப்பிடுகையில் பல மடங்கு உயர்ந்து நிற்கிறது.

ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடும் சிறுவன் கவுதம் பெற்றோருடன் கடற்கரையில் ஜாலியாக இருக்கையில் கடத்தப்பட்டுவிடுகிறான். அதன் பிறகு அவனுடைய தந்தை ராம் அவனை எப்படித் தேடிக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.

கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருக்கும் பகுதி நேரப் பிச்சைக்காரனிடம் இருந்து குழந்தை ஆந்திராவுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் கிடைக்கிறது. அங்கு போய் விசாரித்தால் அந்த புரோக்கர் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிடுகிறான். அதன் பிறகு ஒரு டாக்ஸி டிரைவர் மூலம் வாரங்கல்லுக்குக் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. அங்கு போய் பார்க்கிறார்கள். குழந்தை அங்கிருந்து கரீம் நகர் என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அங்கு போய் விசாரித்தால் போபாலுக்குக் கொண்டு செல்லப்பட்டது தெரிகிறது. இப்படியாக ஒவ்வொரு இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு கதை நகர்கிறது. இதன் மூலம் குழந்தைக் கடத்தல் தொழில் நடக்கும் பாதாள உலகம் ஒன்றின் கதவுகள் லேசாகத் திறந்து காட்டப்படுகிறது.

ஏராளமான வில்லன்கள் நிறைந்த இந்தப் படத்தில் அவர்கள் அனைவருமே வெகு சிறப்பாகவும் அழுத்தமாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். திவாகரன் (நாயர்) எளிதில் முதலிடத்தைப் பிடித்துவிடுகிறார்.

நாயகனைப் பொறுத்தவரையில் அவர் எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு தகுந்த அளவுக்கான நடிப்பு வெளிப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியவில்லை. பெரும்பாலும் திரைக்கதையின் பலத்திலேயே காட்சிகள் உயிரோட்டத்தைப் பெற்றிருக்கின்றன.

பொதுவாக, தமிழ்ப் படங்களில் கதைக் கருவானது தமிழ் மக்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டதாக இருக்காது. கதை யதார்த்தமாக இருந்தால் திரைக்கதை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும். இந்தப் படத்திலும் திரைக்கதை, கதாநாயகனின் அதீத சாகசங்களை மையமாகக் கொண்டதுதான். என்றாலும் கதையின் கரு மிகவும் வலுவாக இருப்பதால், படத்துடன் எளிதில் ஒன்றிவிட முடிகிறது. பத்து ரவுடிகளை சாமானியன் ஒருவனால் அடித்துப் போடமுடியுமா என்ற கேள்விக்கு, மகனைப் பறிகொடுத்த தந்தைக்கு அது நிச்சயம் முடியும் என்ற பதில் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இருக்கிறது.

ஆங்கிலப் படங்களில் இந்தக் கேள்வியை வேறோரு கோணத்தில் அணுகியிருப்பார்கள். டேக்கன் படத்தின் நாயகன் அமெரிக்க உளவுத் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரியாக இருப்பான்.  சிக்ஸ் புல்லட்ஸ் படத்தின் நாயகன் இதுபோன்ற கடத்தல்காரர்களைப் பிடிப்பதில் நிபுணனாக இருப்பான். போதாத குறையாக, அதில் குழந்தையைப் பறிகொடுத்த தந்தையும் சண்டைக் கலையில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். ஒரு எளிய மனிதனால், படுபயங்கரமான கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்களை எப்படிப் போராடி ஜெயிக்க முடியும் என்ற நியாயமான கேள்விக்கு அவர்கள் நம்பும்படியான பதிலைத் தரும் நோக்கில் திரைக்கதையை அப்படி அமைத்திருப்பார்கள். தமிழில் கதாநாயகனால் முடியாதது எதுவுமே இல்லை என்பதால், அவனை சாஃப்ட்வேர் இன்ஜினியராகவே சித்திரித்திருக்கிறார்கள்.

படத்தின் அரசியல் என்று பார்த்தால், இந்தக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருமே ஊரில் நல்லவர்களாக, குறிப்பாக தெய்வ பக்தி மிகுந்த, அப்பாவி இந்துக்களாக வேடம் போட்டுக்கொண்டு மிகக் கொடூரமான செயலைச் செய்பவர்களாகப் படத்தில்   சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். தீவிரவாதத்தை (திரைப்பட) முஸ்லீம்கள் குத்தகைக்கு எடுத்திருப்பதுபோல் இந்தக் கடத்தல் தொழிலை இந்துக்களுக்கு பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. நாயகனுக்கு உதவும் இந்து கதாபாத்திரங்களின் இந்துத்தன்மை படு மேலோட்டமாகவும் அவனுக்கு உதவும் இஸ்லாமிய கதாபாத்திரத்தின் அடையாளம் படு தூக்கலாகவும் காட்டப்பட்டிருக்கிறது. நாயகி இயேசு நாதரை மனமுருகப் பிரார்த்திக்கிறாள். அவளுடைய இந்து கணவனோ (மதம் மாறினானா தெரியவில்லை) கடவுளால எல்லாம் முடியாது. என் பையன் நான் வந்து காப்பாத்துவேன் என்று காத்துக்கிட்டிருப்பான் என்று வசனம் பேசுகிறான்.

திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் குறிப்பிட்ட ஓர் அடையாளத்துடன் காட்டப்பட்டால் அந்த அடையாளத்தைப் பின்பற்றும் அத்தனை பேரும் அப்படி என்று சொன்னதாக அர்த்தமில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரம் அந்த அடையாளத்துடன் சித்திரிக்கப்பட்டிருப்பதில் ஒரு தெளிவான அரசியல் இருக்கத்தான் செய்கிறது என்பதும் உண்மைதானே. ஆனால், இந்த அம்சங்களையும் தாண்டி படம் சில உச்சங்களைத் தொடுகிறது என்பதுதான் இந்தப் படத்தை முக்கியமானதாக்குகிறது.

தன் குழந்தையைப் பறிகொடுத்த ஒருவன் அதுபோல் பல குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும் காட்சிகளில் எப்படி நடந்துகொள்கிறான் என்பது இந்தப் படத்தை பிற படங்களில் இருந்து (ஆங்கில மூலப்படங்களில் இருந்துகூட) ஒரு சில படிகள் மேலே உயரவைத்திருக்கிறது.

நாயகனுக்கு உதவி புரியும் டாக்ஸி டிரைவர் ரங்கன் பாத்திரம் அருமையாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. சம்பந்தமே இல்லாத அவன் எதற்காக இவ்வளவு உதவி செய்கிறான் என்ற கேள்விக்கு கதையில் சொல்லப்பட்டிருக்கும் பதிலானது வெறும் திரைக்கதையின் சாமர்த்தியங்களில் ஒன்று மட்டுமே அல்ல.

கதாநாயக சாகசத்தை வெறும் அடிதடியாக மட்டுமே காட்டவில்லை. அவன் புத்திசாலித்தனமாக சில செயல்கள் செய்கிறான். வாரங்கல்லில் அரிசி வியாபாரம் செய்வதாகச் சொல்லும் வில்லன் ஒருவனை அவன் குழத்தைக் கடத்தல்  தொழிலில் ஈடுபடுபவன்தான் என்பதைக் கண்டுபிடிக்கும் காட்சி அதற்கான உதாரணம். அதுபோல் மலையாள வில்லன் ஒருவனை அவன் குடிக்கும் மலபார் பீடி மூலம் கண்டுபிடிக்கும் இடமும் அப்படியான ஒன்றே. இவை படத்தின் சுவாரசியத்தன்மையைத் தக்கவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

குழந்தையைத் தொலைத்தல் என்ற மிகவும் உணர்ச்சிமயமான ஒரு கருவை எடுத்துக்கொண்டு அந்தத் தொழிலில் ஈடுபடும் வில்லன்களைத் தேடிப் பந்தாடும் திரில்லர் படமாகக் கொண்டுசென்றிருப்பதை விமர்சிப்பதானால், கைக்காசைப் போட்டு, இதே கதையை ஒரு எளிய மனிதனின் (குடும்பத்தின்) வேதனைப் போராட்டமாகச் சித்திரித்த பிறகுதான் செய்யவேண்டியிருக்கும். எனவே, ஒரு பார்வையாளராக இந்தப் படத்தில் சாத்தியமாகியிருக்கும் சில உணர்வெழுச்சித் தருணங்களை முன்வைத்து இந்தப் படத்தை தமிழ் பார்வையாளர்கள் வரவேற்கவேண்டும்.

படம் முடிந்து வெளியே வந்தபோது, திரையரங்கின் பணியாளர் ஒருவரைப் பார்த்தோம். சொற்ப எண்ணிக்கையில்தான் கூட்டம் வந்திருந்தது. சேது படம் போல் லேட் பிக் அப் ஆகும் படத்தை ஒரு வாரத்தில் தூக்கிவிடாதீர்கள் என்றோம். ஒரு வாரத்தில் பிக் அப் ஆகாவிட்டாலும் நிச்சயம் தூக்கமாட்டோம். வேறு குப்பைப் படங்களைத் திரையிட்டு நாலு காசு சம்பாதிப்பதைவிட இந்தப் படத்தை 25-30 நாள் ஓட்டி நாலு காசை இழந்தாலும் பரவாயில்லை என்றார். தமிழ் பார்வையாளர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் மிகவும் துல்லியமான நபர்களில் அவரும் ஒருவர் என்பதால், இந்தப் படம் நிச்சயம் ஓடும். ஓட வேண்டும்.

0

அம்பேத்கர் : ‘இந்துக்களின் தோட்டத்தில் ஒரு நச்சுப் பாம்பு!’

ambedkarபுரட்சி /அத்தியாயம் 19

இந்து மதத்தைச் சீர்திருத்தவேண்டும் என்னும் விருப்பத்துடன் தொடங்கப்பட்ட ஜாத்-பட்-தோடக் மண்டல் தன் வாழ்நாளின் மிகப் பெரும் தவறொன்றை 1936ம் ஆண்டு இழைத்தது. ஆரிய சமாஜத்தின் ஒரு கிளையான இந்த அமைப்பு, லாகூரில் நடக்கவிருந்த கருத்தரங்குக்குத் தலைமை தாங்கும்படி அம்பேத்கரைக் கேட்டுக்கொண்டது. ‘நீங்கள் மாபெரும் சிந்தனையாளர். உங்கள் அளவுக்கு சாதிப் பிரச்னையைப் பற்றி ஆராய்ந்தவர் வேறு யாருமில்லை. சாதி அமைப்பு எந்த மதக் கருத்துகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த மதக் கருத்துகளை அழித்தொழிக்காமல் சாதியை ஒழிப்பது சாத்தியமில்லை என்ற உங்கள் புதுக்கருத்தை விவரமாக  அறிய ஆவலாக உள்ளேன்.’ என்று மண்டலின் செயலாளர் அம்பேத்கருக்கு கடிதம் எழுதினார்.

தொடக்கத்திலேயே அம்பேத்கர் மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தையும் அவரே பதிவு செய்திருக்கிறார். ‘பொதுவாக சாதி இந்துக்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்வதில்லை. சமூகச் சீர்திருத்தம் பற்றிய அவர்களின் நிலைப்பாட்டுக்கும் என் நிலைப்பாட்டுக்கும் ஒத்துபோவதில்லை. எனவே அவர்களுடன் சேர்ந்து இயங்குவது கடினமாக உள்ளது.’

ஆனால் அம்பேத்கரின் மறுப்பை மண்டல் ஏற்கவில்லை. தனது பிரதிநிதி ஒருவரை மும்பைக்கு அனுப்பி வைத்து அம்பேத்கரைத் தனிப்பட்ட முறையில் மரியாதையுடன் மீண்டுமொருமுறை வரவேற்றார்கள். அம்பேத்கரும் தலைமை தாங்க ஒப்புக்கொண்டார். அவர்களுடைய விருப்பத்துக்கிணங்க தனது தலைமை உரையை அம்பேத்கர் முன்கூட்டியே அவர்களுக்கு அனுப்பிவைக்கவும் செய்தார்.

பிரச்னை ஆரம்பமானது. 22 ஏப்ரல் 1936 அன்று ஜாத்-பட்-தோடக் மண்டலைச் சேர்ந்த ஹர் பகவான் என்பவர் அம்பேத்கருக்கு எழுதினார்.

‘…உங்கள் உரையின் இறுதிப் பகுதி எங்களுக்குக் கிடைத்ததும் அது மிக நீண்டு இருப்பது கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவ்வளவையும் வெகு சிலரே படிக்க முடியும் என்பதே எங்கள் அச்சத்துக்குக் காரணம். மேலும் அதில் நீங்கள், இந்து சமூகத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்துவிட்டதாகவும் ஒரு இந்து என்ற முறையில் அதுவே உங்கள் கடைசி உரையாக இருக்கும் என்றும் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வேதங்கள் முதலான இந்துக்களின் புனித நூல்களின் அறத் தன்மையையும் அறிவார்ந்த தன்மையையும் அநாவசியமாகத் தாக்கியுள்ளீர்கள். இந்து மதத்தின் சட்டப் பகுதியை விஸ்தாரமாக ஆராய்கிறீர்கள். எடுத்துக்கொண்ட பிரச்னையுடன் இது எவ்வித தொடர்புமற்றது. சில பகுதிகள் முற்றிலும் தலைப்புக்குப் பொருத்தமற்றதாகவும் சம்பந்தமற்றதாகவும் இருக்கிறது…

‘…மேற்சொன்ன பகுதிகளை நீக்கிவிடுங்கள்… அனாவசியமாகத் தூண்டிவிடும் விதமாக உரையை அமைப்பது அறிவுடைமையாகப்படவில்லை.

‘…உரையை முழுசாகத்தான் பதிப்பிக்க முடியும் என்று இன்னமும் நீங்கள் வற்புறுத்தினால் அது சாத்தியப்படாது என்று மிக்க வருத்தத்துடன் கூறுகிறோம்.

‘…சாதியமைப்பைப் பற்றிய உங்கள் உரை இது வரை எழுதப்பட்டவற்றிலேயே மதிப்புமிக்கது, அதை எழுதியதன்மூலம் எங்கள் மனதில் அழியாத இடம்பெற்றுவிட்டீர்கள் என்பதையும் நாங்கள் கூறவேண்டும். இதைத் தயாரிப்பதில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கெல்லாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.’

நான்கு தினங்கள் கழித்து அம்பேத்கர் பதில் அனுப்பினார்.

‘..நானும் என் பதிலைக் கூறியாகவேண்டும். சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி என் உரையைக் கத்தரித்தே ஆகவேண்டுமென மண்டல் வற்புறுத்தினால் நானும் கருத்தரங்கை ரத்து செய்யவே கூறுவேன்.

‘…என் முடிவு உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் தன் உரையைத் தயாரிப்பதற்கு ஒவ்வொரு தலைவருக்கும் உரிமை உண்டு. மாநாட்டில் தலைமை தாங்கும் கௌரவத்துக்காக அந்த உரிமையை விட்டுத்தர என்னால் முடியாது.’

படிக்க கஷ்டமாக இருக்கும் என்று மண்டலால் தீர்ப்பளிக்கப்பட்ட, மாற்றியெழுதுங்கள் என்று அறிவுறுத்தப்பட்ட அந்த நீண்ட உரையை அம்பேத்கர் தானே ஒரு தனி நூலாக வெளியிட்டார். அணணடிடடிடூச்tடிணிண ணிஞூ இச்ண்tஞு என்று ஆங்கிலத்திலும் சாதி ஒழிப்பு என்று தமிழிலும் வெளிவந்த அம்பேத்கரின் புகழ்பெற்ற அந்த நூல் குஜராத்தி, தமிழ்,மராத்தி, இந்தி, பஞ்சாபி, மலையாளம் என்று பரவலாக அவர் காலத்திலேயே மொழிபெயர்க்கப்பட்டு கடும் சர்ச்சைகளையும் வரவேற்பையும் ஒருசேர ஈர்த்தன. மண்டல் அமைப்பினரும் அம்பேத்கரும் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் இந்நூலின் தொடக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

மண்டலுக்கு பதிலளிக்கும் ஒரு கடிதத்தில் அம்பேத்கர் ஓரிடத்தில் எழுதுகிறார். ‘சாதியை ஒழிக்க மிகச் சிறந்த வழி என நான் கண்ட முடிவு (உங்களுக்குத்) திகைப்பூட்டுவதாகவும் வேதனை அளிப்பதாகவும் இருக்கலாம். என் ஆய்வுமுறை தவறானது என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் சாதியின் பிரச்னைகளை அலசும் உரையில் சாதியை எப்படி ஒழிக்கமுடியும் என்பது பற்றி வெளிப்படையாக நான் விவாதிக்கக்கூடாது என்று நீங்கள் சொல்லமுடியாது.’

இன்னோரிடத்தில் எழுதுகிறார். ‘நான் இந்துக்களை விமரிசித்து இருக்கிறேன். இந்துக்களால் பூஜிக்கப்படுகிற மகாத்மாவின் மேலாண்மையை மறுத்திருக்கிறேன். இந்துக்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்களுடைய தோட்டத்தில் உள்ள நச்சுப் பாம்பாக என்னை அவர்கள் பார்க்கிறார்கள். அப்படி இருக்க, மரியாதை மிக்க இந்தப் பொறுப்பை ஏற்கும்படி என்னை அழைத்தது ஏன் என்ற அரசியல் அறிவுள்ள இந்துக்கள் கேட்கப்போகும் கேள்விக்கு மண்டல்காரர்கள் விளக்கம் தந்தாக வேண்டும்.’

சாதி அமைப்பின் தோற்றுவாய், வளர்ச்சி, சமூகத்தில் அது செலுத்தும் தாக்கம், அதனால் பெரும் பிரிவு மக்கள் அனுபவிக்கும் தீங்குகள் என்று விரிவாக ஆராயும் அம்பேத்கர்,சாதியின் அடித்தளத்தை நேரடியாகவே தாக்குகிறார்.  ‘உங்களுடைய சமூக அமைப்பை மாற்றினாலொழிய நீங்கள் முன்னேறவே முடியாது என்பதே என் கருத்து. தாக்குதலுக்கோ தற்காப்புக்கோ மக்களை ஒன்று திரட்ட உங்களால் முடியாது. சாதி என்கிற அஸ்திவாரத்தின்மேல் எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும். முழுமை அடையாது.’

ஒரு காட்டுச்செடியைப் போல் சுயமாக முட்டி மோதி வளர்ந்து உச்சத்தைத் தொட்ட பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் (14 ஏப்ரல் 1891 – 6 டிசம்பர் 1956) வாழ்க்கை தேவதைக் கதைகளை ஒருவருக்கு நினைவுபடுத்தக்கூடும். தீண்டப்படாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதும் இந்த அளவுக்கு தீர்க்கத்துடன் போராடுவதும் சாத்தியம்தானா என்னும் வியப்பையும் அச்சத்தையும் நம்பிக்கையையும் ஒருசேர அவரால் பல தரப்பினருக்கு அப்போது ஏற்படுத்தமுடிந்தது. தனது சொந்த அனுபவங்கள் மூலமாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்வியல் ஏற்படுத்திய அதிர்ச்சிகளாலும், விரிவான வாசிப்பின் வாயிலாகவும் அம்பேத்கர் தனது உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
செயற்பாட்டாளர், அரசியல் தலைவர், சமூக விஞ்ஞானி, பொருளாதார அறிஞர், சட்ட வல்லுநர் போன்ற எண்ணற்ற அடையாளங்களைத் தாண்டி அவர் அடிப்படையில் ஓர் அறிவுஜீவியாகவும் திகழ்ந்ததால் எதொன்றையும் நுணுக்கமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் அணுகி ஆராயும் போக்கு அவரிடம் இருந்தது. அவரது படைப்புகளிலும் செயல்பாடுகளிலும் இந்தப் போக்கு இறுதிவரை இடம்பெற்றிருந்தது.

இதனாலும்கூட அம்பேத்கர் பல சமயங்களில் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியாத, சுலபமாகத் தொகுத்துக்கொள்ள முடியாத ஒரு சிந்தனையாளராக இருக்கிறார். ஜோதிராவ் புலே, பெரியார் போன்றவர்களிடம் இருந்த எளிமையான, நேரடியான கருத்துப் பரிமாற்ற முறை இவரிடம் இல்லாததற்குக் காரணம் இவர் ஒரே சமயத்தில் பல அறிவுத் துறைகளில் தொடர்ச்சியாக இயங்கி வந்ததும், தனது கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பரிசிலீத்து, மாற்றிவந்ததும்தான்.
தீவிரமாக விமரிசித்து இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்தத்தைத் தழுவிய பிறகும், இந்துத்துவச் சிந்தனையாளர்களால் இன்றும் அம்பேத்கரை தம்மில் ஒருவராக உரிமை கொண்டாட முடிவதன் காரணம் இதுதான். அம்பேத்கரின் படைப்புகளில் இருந்து ஆங்காங்கே சில வாசகங்களை உருவிப்போட்டு அவரை ஓர் இந்து விசுவாசியாக, இஸ்லாமிய எதிர்ப்பாளராக, சந்தைப் பொருளாதார ஆதரவாளராக, மதவாதியாக, முதலாளித்துவ ஆதரவாளராக சிலரால் முன்னிறுத்தமுடிவதும் இதனால்தான்.

அம்பேத்கர் தனது சமூகத்தின் விடுதலைக்காகவும் தனது நிலையில் உள்ள பிற பிரிவினரின் விடுதலைக்காகவும் சிந்தித்தார். தொடக்கத்தில் காந்தி போன்ற சீர்திருத்தவாதிகளாலும், கோயில் நுழைவுப் போராட்டம் உள்ளிட்ட அணுகுமுறையாலும் அவர் ஈர்க்கப்பட்டது உண்மைதான். ஆனால், இவை விடிவை அல்ல ஆபத்தையே கொண்டுவரும் என்பதை அவர் விரைவிலேயே புரிந்துகொண்டார். சாதி எப்படி இயங்குகிறது, எங்கே வேர் கொள்கிறது, எப்படித் தன் கிளைகளைப் பரப்புகிறது, எங்கிருந்து பலம் பெறுகிறது, மாறும் சூழலில் எப்படித் தன்னை தகவமைத்துக்கொள்கிறது உள்ளிட்ட அனைத்தையும் அவர் முழுமையாகத் தெரிந்துகொண்டார்.

கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் எப்படி அவர் காலத்துத் தேவைகளை எதிர்கொண்டனவோ அவ்வாறே அம்பேத்கரின் சிந்தனைகளும் அவர் காலத்திய தேவைகளைப் பிரதிபலித்து, அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்தன. ‘உயர்சாதியினர் என்று அழைக்கப்படும் இந்துக்கள் அம்பேத்கரின் சமூகத்துக்கு ஒழுங்கு மீறிய கொடுமைகளை இழைத்தனர். இதனால் அம்பேத்கருக்குக் கடுமையான மன நிறைவின்மை ஏற்பட்டது. இந்த மனநிறைவின்மையில் இருந்துதான் அம்பேத்கரின் சிற்தனை எழுந்தது.’ என்கிறார் அம்பேத்கரிய ஆய்வாளர் டபிள்யூ.என். குபேர்.

மார்க்ஸைப் போலவே சமூகத்தை மாற்ற அம்பேத்கர் முன்மொழிந்த வழிமுறைகளிலும் கற்பனாவாதத் தன்மை இருக்கவில்லை. ‘அம்பேத்கர் ஒரு கற்பனாவாதி அல்லர். ஒரு செயல்முறை கோட்பாட்டாளர். அவர் ஒரு வலிமையான கருத்தியல் கோட்பாட்டைக் கொண்டிருந்தார். ’ என்கிறார் குபேர். இந்தக் கோட்பாட்டோடு முரண்படுபவர்கள் மார்க்ஸைப் புறக்கணித்ததைப் போலவே அம்பேத்கரையும் புறக்கணித்தனர்.

அம்பேத்கர் இந்திய அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் இருந்து எவ்வாறு ஓரங்கட்டப்பட்டார் என்பதை விவரிக்கும்போது கிறிஸ்டோஃபே ஜேஃப்ரிலோட் (Christophe Jaffrelot) தனது நூல் ஒன்றில் அடுக்கிக் காட்டும் சில உண்மைகளைப் பார்ப்போம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்திருந்த போதிலும் 1990ம் ஆண்டு வரை அம்பேத்கரின் உருவப் படம் இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெறவில்லை. அவுரங்காபாத்தில் உள்ள மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்டவேண்டும் என்னும் கோரிக்கையுடன் 1978ல் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஒன்றுதிரண்டு குரல் கொடுத்தபோது, அதிர்ச்சியடைந்த மேல்சாதி மாணவர்கள் அவர்கள்மீது வன்முறையைச் செலுத்தினர். ஆயிரம் தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர். வி.பி. சிங் ஆட்சியில் 1990ம் ஆண்டுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.

இத்தகைய புறக்கணிப்புகள் உணர்த்தும் தெளிவான ஓர் உண்மை, இன்னமும் இங்கே சாதி வெறி மறையவில்லை; எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் நிலை உயரவில்லை என்பதைத்தான். இன்றைய சமூகத்தில் அம்பேத்ரின் தாக்கத்தையும் தேவையையும் மதிப்பிடும்போது நாம் முதலில் தெரிந்தகொள்ளவேண்டிய உண்மை இதுவே.

(அடுத்த பகுதி : அம்பேத்கர் : சாதி எதிர்ப்பும் அரசியலும்)

பகுபதம் : எப்படி உடைப்பது?

imagesஅம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 14

பேனா என்பது நமக்கு எழுதும் சமாசாரம். அதையே ஒரு சின்னக் குழந்தை கையில் கொடுத்தால், அரை விநாடியில் இப்படிப் பிரித்துக் கையில் கொடுத்துவிடும்:

* மூடி
* கீழ்ப்பகுதி
* அதன்மீது வைத்துத் திருகக்கூடிய மேல் பகுதி
* மைக்குச்சி எனப்படும் ரீஃபிள்

உலகம் முழுக்க எல்லாப் பேனாக்களிலும் இந்த பாகங்கள்தான் இருக்குமா?

இல்லை. ரீஃபிள் இல்லாத பேனாக்கள் உண்டு, கீழ்ப்பகுதி, மேல் பகுதி என்று தனித்தனியே பிரியாமல் ஒன்றாக இருக்கும் பேனாக்கள் உண்டு. மூடி இல்லாத பேனாக்கள் உண்டு, இன்னும் கூடுதலாக ஸ்ப்ரிங் உண்டு, ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களில் ரீஃபிள்களைக் கொண்டிருக்கும் மல்ட்டி கலர் பேனாக்கள் உண்டு. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆக, ஒரு பேனாவைப் பகுக்கமுடியும் என்பதுமட்டும் உண்மை. அதை எப்படிப் பகுப்பது, எத்தனையாகப் பகுப்பது என்பதெல்லாம் அந்தந்தப் பேனாவைப் பொறுத்து மாறுபடும்.

பகுபதமும் அப்படிதான். அதைப் பல துண்டுகளாகப் பகுக்கமுடியும். ஆனால், எத்தனை துண்டுகள் என்பது சொல்லைப் பொறுத்து மாறும்.

ஆனால் ஒன்று, பகுபதத்தில் அதிகபட்சம் இத்தனை துண்டுகள்தான் உண்டு என்று இலக்கணம் தெளிவாகச் சொல்கிறது, அவை எந்த வரிசையில் வரக்கூடும் என்பதையும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.

அந்த ஆறு துண்டுகளும், பகாப்பதங்களாக இருக்கும். அதாவது, ஒரு பகுபதத்துக்குள் அதிகபட்சம் ஆறு பகாப்பதங்கள் இடம்பெறமுடியும். அவை:

* பகுதி
* விகுதி
* இடைநிலை
* சந்தி
* சாரியை
* விகாரம்

இந்த ஆறையும் சேர்த்து ‘பகுபத உறுப்பிலக்கணம்’ என்று அழைப்பார்கள். இவை என்னென்ன, சொல்லில் எங்கே எப்படி வரும் என்று உதாரணங்களுடன் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒரு விஷயம், பகுபத உறுப்புகளாகிய இந்த ஆறையும் நாம் இப்போது பார்க்கப்போகும் வரிசை வேறு, சொற்களில் அவை தோன்றுகிற வரிசை வேறு. உதாரணமாக, பகுதிக்குப்பிறகு விகுதி, அதன்பிறகு இடைநிலை என்று அமையாது.

ஆகவே, நம்முடைய கருத்துத் தெளிவுக்காக முதலில் இந்த ஆறு பகுதிகளையும் தனித்தனியே தெரிந்துகொள்வோம். அதன்பிறகு, அவற்றைப் பொருத்திப் பார்ப்போம். இப்போதைக்கு வரிசையைத் தாற்காலிகமாக மறந்துவிட்டு விஷயத்தைமட்டும் பாருங்கள்.

முதலில், பகுதி. எல்லாப் பகுபதங்களிலும் இதுதான் முதலில் வரும், நேரடிப் பொருள் தரும், அந்தச் சொல்லையே அதுதான் உருவாக்கும்.

உதாரணமாக, ‘நடந்தான்’ என்ற சொல்லில் உள்ள ‘நட’ என்பதுதான் பகுதி. அதிலிருந்துதான் அந்தச் சொல் ‘நட’ப்பதைக் குறிப்பதாக மாறுகிறது.

இங்கே ‘நட’ என்ற பகுதியை எடுத்துவிட்டுப் ‘பற’ என்ற இன்னொரு பகுதியைச் சேர்த்தால், அந்தச் சொல் ‘பறந்தான்’ என்று மாறிவிடும், ‘பற’ப்பதைக் குறிப்பதாகிவிடும்.

சில நேரங்களில் பகுதி இப்படி நேரடியாக வராது, உருமாறிக் காணப்படும், வளைத்துதான் வெளியில் எடுக்கவேண்டும். உதாரணமாக, ‘வந்தான்’ என்ற சொல்லின் பகுதி, ‘வா’, ‘சென்றான் என்ற சொல்லின் பகுதி, ‘செல்’.

அடுத்து, விகுதி. இது சொல்லின் நிறைவாக நிற்கும். பகுதியில் தொடங்கிய பொருளை முழுமை செய்யும். இதை மாற்றினால் சொல்லின் தன்மையும் மாறக்கூடும்.

உதாரணமாக, அதே ‘நடந்தான்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்:

* தொடக்கத்தில் வரும் ‘நட’ என்பது பகுதி
* நிறைவாக வரும் ‘அன்’ என்பது விகுதி

இங்கே ‘அன்’ என்ற விகுதிக்குப் பதிலாக ‘அள்’ என்ற விகுதியைச் சேர்த்தால், இந்தச் சொல் ‘நடந்தாள்’ என்று மாறிவிடும். ஆண்பால் பெண்பாலாகிவிடும்.

அதே இடத்தில் ‘அள்’க்குப் பதில் ‘அது’ என்ற விகுதியைச் சேர்த்தால், இந்தச் சொல் ‘நடந்தது’ என்று மாறிவிடும். உயர்திணை அஃறிணையாகிவிடும். இதேபோல் நடந்தது, நடந்தன, நடந்தனர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

முக்கியமான விஷயம், இந்தச் சொற்கள் அனைத்திலும் பகுதி ஒன்றுதான் (நட), ஆனால் விகுதி மாற மாற, அந்தச் சொல்லின் தன்மை, பயன்பாடு எல்லாமே மாறிவிடுகிறது.

ஆக, பகுதி என்பது சொல்லின் பொருளை உருவாக்குகிறது, விகுதி என்பது அதை வேறுபடுத்துகிறது. ஆண், பெண், அஃறிணை, உயர்திணை, ஒருமை, பன்மை என்று பிரித்துக் காட்டுகிறது.

இதைப் புரிந்துகொள்ள ஓர் எளிய உதாரணம் வேண்டுமென்றால், பெரிய உணவகங்களுக்குச் சென்று பாருங்கள். அவற்றைப் பல பகுதிகளாகப் பிரித்திருப்பார்கள்:

* சுய சேவை(Self Service)ப் பிரிவு
* வழக்கமான சேவை(Regular Service)ப் பிரிவு
* குளிர்பதன அறைச் சேவை (A/C Service)
* வீட்டுக்குப் பொட்டலம் கட்டும் பார்சல் சேவை
* உங்கள் வீட்டு விழாக்களுக்குப் பரிமாறும் (Catering) சேவை

இப்படிப் பல பிரிவுகள் இருந்தாலும், அனைத்துக்கும் சமையலறை ஒன்றுதான். அங்கே சமைக்கப்படும் உணவு தென்னிந்திய வகையா, வட இந்திய வகையா, சைவமா, அசைவமா, துரித உணவா என்கிற மாற்றங்கள் இருக்கும். இவைதான் ஒரு சொல்லின் பகுதியைப்போல.

சமையலறையில் ஒரு குறிப்பிட்ட உணவு சமைக்கப்பட்டபிறகு, அது எங்கே பரிமாறப்படுகிறது என்பதைப் பொறுத்து விலையும் மாறும், மரியாதையும் மாறும். ஒரே இட்லியை செல்ஃப் சர்வீஸில் சாப்பிட்டால் பத்து ரூபாய், உள்ளே உட்கார்ந்து சாப்பிட்டால் பன்னிரண்டு ரூபாய், ஏஸி அறை என்றால் பதினைந்து ரூபாய்.

அதுபோல, பகுதிதான் ஒரு சொல்லின் பொருளை உருவாக்குகிறது (சமைக்கிறது), விகுதி அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தீர்மானிக்கிறது (பரிமாறுகிறது).

ஆக, பகுதி, விகுதி இரண்டும் ஒரு பகுபதத்துக்கு முக்கியம். மற்ற நான்கு உறுப்புகளும் இல்லாவிட்டால்கூட, இவை இரண்டுமட்டுமே ஒரு சொல்லை உருவாக்கிவிடமுடியும்.

உதாரணமாக, ‘நம்மை’ என்ற சொல்லில், நாம் + ஐ எனப் பகுதி, விகுதிமட்டுமே வந்துள்ளது. மற்ற பகுபத உறுப்புகள் எவையும் இல்லை.

அடுத்து, இடைநிலை. பெயரைக் கேட்டதும் புரிந்திருக்கும், பகுதிக்கும் விகுதிக்கும் நடுவே இருக்கும் உறுப்புதான் இது.

உதாரணமாக, ’வருகிறான்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை எப்படிப் பிரிப்பீர்கள்?

இதில் ‘வா’தான் பகுதி என்பது புரிகிறது, நிறைவாக வரும் ‘ஆன்’ விகுதி என்பதும் புரிகிறது. இரண்டுக்கும் நடுவில் ‘கிறு’ என்று ஏதோ இருக்கிறதே.

அதுதான் இடைநிலை. வா + கிறு + ஆன் = வருகிறான்.

பகுதி என்பது ஒரு பெயரையோ செயலையோ காட்டும், விகுதி என்பது ஆண், பெண், உயர்திணை, அஃறிணை, ஒருமை, பன்மை வித்தியாசத்தைக் காட்டும், இடைநிலை என்ன செய்யும்?

அது காலத்தைக் காட்டும். உதாரணமாக இந்த மூன்று சொற்களைப் பாருங்கள்: செய்தான், செய்கிறான், செய்வான்.

இந்த மூன்றிலும் பகுதி ஒன்றுதான் (செய்), விகுதியும் ஒன்றுதான் (ஆன்), ஆனால் இடைநிலை மாறுகிறது. இப்படி:

* செய் + த் + ஆன்
* செய் + கிறு + ஆன்
* செய் + வ் + ஆன்

‘த்’ இடைநிலையாக உள்ளபோது, அந்தச் சொல் கடந்த காலத்தைக் குறிக்கிறது, அதே சொல்லில் ‘கிறு’ இடைநிலையாக இருந்தால், நிகழ்காலம், ‘வ்’ இடைநிலையாக இருந்தால், எதிர்காலம். இப்படி ஒரு பகுபதத்தின் இடைநிலையை வைத்து அது எப்போது நிகழ்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்:

கடந்த காலத்தைக் காட்டும் இடைநிலைகள் நான்கு. அவை, த், ட், ற், இன். இந்த நான்குக்கும் உதாரணங்கள், செய்தான், உண்டான், விற்றான், பாடினான்.

நிகழ் காலத்தைக் காட்டும் இடைநிலைகள் மூன்று. அவை கிறு, கின்று, ஆநின்று. இவற்றுக்கு உதாரணங்கள்: செய்கிறான், செய்கின்றான், செய்யாநின்றான்.

இதில் ‘ஆநின்று’ என்பது இப்போது புழக்கத்தில் இல்லை. சும்மா தெரிந்துவைத்துக்கொள்வோம்.

எதிர் காலத்தைக் காட்டும் இடைநிலைகள் இரண்டு: ப், வ். இவற்றுக்கு உதாரணங்கள்: உண்பான், செய்வான்.

இப்போது, உங்களுக்கு ஒரு பயிற்சி. இந்த அத்தியாயத்தில் நாம் இதுவரை தெரிந்துகொண்ட விஷயங்களை வைத்து இந்தச் சொற்களைப் பகுதி, விகுதி, இடைநிலை என்று பிரித்துப் பாருங்கள்.

* வந்தான்
* வருவான்
* நடக்கின்றான்
* படித்தான்
* உண்டோம்
* உண்போம்
* எழுதுவேன்
* பாடினாள்
* குதித்தது
* குதிக்கின்றனர்

இந்தச் சொற்களில் பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றை எளிதாகக் கண்டுபிடித்திருப்பீர்கள். அவைதவிர வேறேதும் கண்ணில் பட்டதா?

உதாரணமாக, ‘படித்தான்’ என்ற சொல்லைப் பிரிப்போமா?

* ‘படி’ பகுதி
* ‘ஆன்’ விகுதி
* நடுவில் ’த்’ என்பது இடைநிலை

அப்படி எஸ்கேப் ஆகமுடியாது நண்பீர். கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். அங்கே ஒரு ‘த்’ இல்லை, இரண்டு ‘த்’ இருக்கிறது. படி + த் + த் + ஆன்.

இவற்றில் ஒரு ‘த்’ இடைநிலை, புரிகிறது, இன்னொரு ‘த்’?

அதற்குப் பெயர் ‘சந்தி’. மேலே நாம் பார்த்த பகுபத உறுப்பிலக்கணப் பட்டியலில் நான்காவதாக உள்ளது.

ஒருவரை நேரில் பார்த்துப் பேசும்போது, அதைச் ‘சந்திப்பு’ என்கிறோம். பல ரயில் பாதைகள் ஒருங்கிணையும் இடத்துக்கும் ‘சந்திப்பு’ என்றுதான் பெயர்.

ஆக, ‘சந்தி’ என்றால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்கள் ஒன்றுகூடுவது. பகுபத உறுப்பிலக்கணத்தில் பகுதி, இடைநிலை ஆகியவற்றைச் சேர்ப்பது சந்தி.

‘படித்தான்’ என்பதை நான்காகப் பிரித்துப் பார்ப்போம். முதலில் வருவது (1) ’படி’, நிறைவாக வருவது (4) ’ஆன்’, நடுவில் வருபவை (2) ’த்’ மற்றும் (3) ’த்’.

இதில் (1) ‘படி’ பகுதி, (4) ‘ஆன்’ விகுதி என்பதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இருக்காது. (2), (3) என வரும் ‘த்’களில் எது இடைநிலை, எது சந்தி?

இதுமாதிரி குழப்பம் வரும்போது, விகுதிக்குப் பக்கத்தில் இருப்பதுதான் இடைநிலை என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவது (3) ‘த்’ இடைநிலை.

அப்படியானால், (2) ‘த்’ சந்தி. அது என்ன செய்கிறது? (1) ‘படி’ என்கிற பகுதியையும், (3) ‘த்’ என்கிற இடைநிலையையும் சேர்க்கிறது.

இப்போது, மீண்டும் ஒரு பயிற்சி, மேலே நாம் பார்த்த அதே பத்து சொற்களில் எங்கெல்லாம் சந்தி வருகிறது என்று இன்னொருமுறை உங்களுடைய கணக்கைச் சரி பாருங்கள்.

அடுத்து, ‘கண்டான்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை எப்படிப் பிரிப்பீர்கள்?

* காண் : பகுதி
* ட் : இடைநிலை
* ஆன் : விகுதி

இதையே கொஞ்சம் மாற்றி ‘கண்டனன்’ என்று எழுதுவோம். இது நாம் சாதாரணமாகப் பயன்படுத்துகிற சொல் இல்லைதான். ஆனாலும், இலக்கணப் பாடத்துக்காக ஒருமுறை அப்படி எழுதிப் பார்ப்போம். தவறில்லை!

‘கண்டனன்’ என்ற சொல்லை நீங்கள் எப்படிப் பிரிப்பீர்கள்?

காண் + ட் + அன் + அன்

வழக்கம்போல், இவற்றுக்கு நம்பர் போடுவோம். (1) ‘காண்’, (2) ‘ட்’, (3) ‘அன்’, (4) ‘அன்’.

இதில் (1) ‘காண்’ பகுதி, (4) ‘அன்’ விகுதி. அதில் சந்தேகமில்லை. நடுவில் வரும் (2) ‘ட்’, (3) ‘அன்’ ஆகியவற்றை என்னவென்று அழைப்பது?

’ட்’ என்பது கடந்த காலத்தைக் காட்டுகிறது. ஆகவே (2) ‘ட்’தான் இடைநிலை.

அப்படியானால் (3) ‘அன்’ சந்தி. இல்லையா?

ம்ஹூம், இல்லை. சந்தி என்பது பகுதி, இடைநிலைக்கு நடுவே வரவேண்டும். ஆனால் இந்த ‘அன்’, இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவே வருகிறது. விகுதியைச் சார்ந்து வருவதால் அதன் பெயர் சாரியை.

சந்திக்கும் சாரியைக்கும் நாம் தந்துள்ள இலக்கணங்கள் பெரும்பாலும் இப்படி அமைபவை. சில நேரங்களில் இந்த ஒழுங்கு மாறுவதும் உண்டு.

உதாரணமாக, ‘மனத்தில்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதில் ‘மனம்’ என்பது பகுதி, ‘இல்’ என்பது விகுதி, நடுவில் வரும் ’அத்து’ என்பது இடைநிலையா?

இல்லை. அது காலம் காட்டுவதில்லையே. ஆகவே, ‘அத்து’ என்பது இடைநிலை அல்ல, சாரியை.

இப்படிப் பதினேழு வகையான சாரியைகள் உண்டு. அவை: ‘அன்’, ‘ஆன்’, ‘இன்’, ‘அல்’, ‘அற்று’, ‘இற்று’, ‘அத்து’, ‘அம்’, ‘தம்’, ‘நம்’, ‘நும்’, ‘ஏ’, ‘அ’, ‘உ’, ‘ஐ’, ‘கு’, ‘ன’.

சந்தியுடன் ஒப்பிடும்போது, நாம் தினசரி பயன்படுத்தும் சொற்களில் சாரியை அதிகம் வருவதில்லை. பத்துக்கு ஒன்று தென்பட்டாலே அதிகம்.

ஆக, நாம் இதுவரை பார்த்துள்ள ஐந்து அம்சங்களைத் தொகுத்தால்:

* பகுதி என்பது பகுபதத்தின் முதல் பகுதி
* விகுதி என்பது பகுபதத்தின் நிறைவுப் பகுதி
* பகுதிக்கும் விகுதிக்கும் நடுவே அமைந்து காலம் காட்டுவது இடைநிலை
* (பெரும்பாலும்) பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவே அமைவது சந்தி
* (பெரும்பாலும்) இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவே அமைவது சாரியை

ஒரு வகுப்பில் ஐந்து மாணவர்கள் எப்போதும் (அல்லது பெரும்பாலான நேரங்களில்) ஒரு குறிப்பிட்ட வரிசையில்மட்டுமே அமர்ந்திருப்பதுபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள். இதை நினைவில் வைத்துக்கொள்வது எளிது.

இன்னும் மீதமுள்ளது விகாரம் ஒன்றுதான். அதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* பகுபத உறுப்புகள் (6)
* பகுதி
* விகுதி
* இடைநிலை
* சந்தி
* சாரியை

0

நாளைய வல்லரசின் நேற்றைய சாதனை – V

indexஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 11

பி.பி. எண்ணெய்க் கசிவு
மெக்ஸிகோ வளைகுடாவில் …
நடுக்கடலில் இருந்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய் கசிவு
பெட்ரோலிய நச்சினாலும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதாலும் கடல் வாழ் உயிரினங்களுக்கு பேராபத்து!
34,000 பறவைகள், 1200 வகை மீன்கள், 1400 மெல்லுடலிகள், 1,500 வகை நத்தைகள், 4 வகை கடல் ஆமைகள், 29 கடல் பாலூட்டி விலங்குகளின் வாழ்க்கை பரிதாபத்துக்குள்ளாகும் நிலையில் இருக்கிறது.
கடற்கரை மணல் வெளியில் சூரியக் குளியல் எடுத்தும், கடல் சறுக்கு விளையாடியும், படகுச் சவாரி செய்தும் விடுமுறையைக் கொண்டாட நினைத்த ஆயிரக்கணக்கானோர் கடலில் எண்ணெய் கசிந்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சுற்றுலாவை நம்பியிருந்த கடலோர விடுதிகளுக்கு பெரும் இழப்பு
கடலோர வீடுகளின் விலையும் வெகுவாகச் சரிந்துவிட்டது.
மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் போக முடியவில்லை.
பி.பி. நிறுவனம் எல்லாரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
பிரிட்டன் பிரதமருக்கு அமெரிக்க அதிபரின் மிரட்டல்
கேட்டதற்கு அதிகமாகவே கொடுத்து ஈடுகட்ட முழுமனதுடன் ஒப்புக் கொண்டுள்ளது.
மனித உயிர்கள் இழப்பு : 11
போபாலில் இறந்தவர்கள் : 30,000க்கும் மேல்; இன்றும் நோயால் இறந்து கொண்டிருப்பவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல்
எண்ணெய் கசிவு நஷ்ட ஈடு : 20 பில்லியன்
போபால் விஷ வாயுக் கசிவு நஷ்ட ஈடு : 478 மில்லியன் டாலர். அதாவது மெக்ஸிகோ எண்ணெய் கசிவுக்குக் கொடுத்ததைவிட சுமார் 200 மடங்கு குறைவு.
அனைத்து நச்சைக் கழிவையும் தன் சொந்தச் செலவில் அகற்றுவதாக விபத்துக்குக் காரணமான பி.பி. வாக்குறுதி.
போபால் நச்சுக் கழிவை அகற்ற யூனியன் கார்பைடு திட்டவட்ட மறுப்பு
இந்தியா தானே அகற்ற ஏகமனதாக முடிவு..!
சாரே ஜஹான்சே அச்சா… இந்துஸ்தான் ஹமாரா பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

பிரேக் முடிந்து நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது.

பெண் அறிவிப்பாளர் : லெட்ஸ் வெல்கம் அவர் நெக்ஸ்ட் எண்டர்டெய்னர்.
முக்காடு போட்ட ஒரு பெண்மணி அரங்குக்குள் நுழைகிறார்.

ஆண் (அவரைப் பார்த்து சிரிக்கிறார்) : எங்க ஊர்ல எல்லாம் மதில் எட்டிக் குதிச்சு தப்பு காரியம் செய்யப் போகும்போதுதான் இப்படி தலைல முக்காடு போட்டுப்போம்.

முக்காடு போட்ட பெண் : எங்க ஊர்ல இதுதான் வழக்கம்.

ஆண் : எது மதில் எட்டிக் குதிச்சு போய் தப்புக் காரியம் செய்யறதா..?

அனைவரும் சிரிக்கிறார்கள். முக்காடு அணிந்த பெண் தர்ம சங்கடத்தில் நெளிகிறார்.

ஆண் : ஓ.கே. நாம நிகழ்ச்சிக்குப் போவோம்.  டிசம்பர் மூணாந் தேதியன்னிக்கு எங்க இருந்தீங்க? எப்படி இருந்திங்க..? விஷ வாயு கசிஞ்ச போது என்ன செஞ்சிட்டிருந்தீங்க?

மு. பெண் : நல்லா தூங்கிட்டிருந்தேன். திடீர்னு இருமல் அதிகமாச்சுது. எழுந்திரிச்சுப் பார்த்தேன். மங்கலான விளக்கொளியில அறை பூரா புகை பரவியிருந்தது தெரிஞ்சது. ஓடு ஓடுன்னு வெளியில எல்லாரும் கத்தற சத்தம் கேட்டுச்சு. என் கண்ணெல்லாம் எரிய ஆரம்பிச்சிது. மூச்சை இழுத்து விழும்போது ஏதோ தீயை உறிஞ்சறது மாதிரி ஒரே எரிச்சல். கைக்குழந்தை எரிச்சல் தாங்க முடியாம வீல்ன்னு அழ ஆரம்பிச்சிடுச்சு. வீட்டில இருந்த எல்லாருமே இருமிட்டிருந்தாங்க.

நாம எல்லாரும் ஆஸ்பத்திரிக்குப் போயாகணும்னு என் மாமியார் சொன்னாங்க. என் கைக்குழந்தையை இடுப்புல தூக்கிக்கிட்டேன். என்னோட சின்ன பொண்ணை கையைப் பிடித்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டேன். என் நாத்தனார் அவரோட ரெண்டு குழந்தையை கையைப் பிடிச்சு கூட்டிக்கிட்டு புறப்பட்டாங்க. என் மாமனார் தன்னோட ஐந்து வயது செல்லப் பேரனை தூக்கிக்கிட்டாரு.

ஆண் : குழந்தைகள்லாம் எங்கயோ எஸ்கர்ஷனுக்குப் போறதா நினைச்சு சந்தோஷப்பட்டிருக்கும். இல்லையா..?

மு. பெண் : நாங்க எல்லாரும் இரவு உடையிலயே புறப்பட்டோம். வேற எதையுமே எடுத்துக்கலை. வெளிய ஒரே குளிரா இருந்தது. ஆனா அதைப் பற்றியெலாம் கவலைப்படற நிலைல நாங்க இல்லை. தப்பிச்சு ஓடணும். அது ஒண்ணுதான் எங்களோட நோக்கமா இருந்தது.

தெருவில பார்த்தபோது, ஏதோ கலவரம் நடந்து முடிஞ்சது மாதிரி செருப்பும், போர்வையும் பையும் பொருட்களும் தாறுமாறாக் கிடந்தது. நிறைய பேர் உயிரைக் கையில பிடிச்சிட்டு ஓடிப் போயிருக்காங்க. மேகம் மாதிரி ஒரு புகை மண்டலம் எல்லா இடத்திலயும் பரவியிருந்தது. தெருவிளக்குகள் ரொம்பவும் மங்கிப் போய் தெரிஞ்சுது. கூட்டமா ஓடினதுல நிறைய பேர் குடும்பத்துல இருந்து பிரிஞ்சு போயிருந்தாங்க. அம்மாக்கள் குழந்தைகளைத் தேடி அலைஞ்சிட்டிருந்தங்க. குழந்தைங்க அம்மாக்களைத் தேடி அழுது கொண்டிருந்தன. எங்க குடும்பமும் பிரிஞ்சு போயிடிச்சிது. நாத்தனார் எங்கயோ வேற வழியில ஓடிட்டாங்க. வழி நெடுக நிறைய பேர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருந்தாங்க.

கொஞ்ச தூரம் ஓடியிருப்போம். அப்போ தூரத்துல ஒரு டிரக் போறது தெரிஞ்சுது. எங்க மாமனார் எங்க எல்லாரையும் ஏறச் சொன்னாரு. எங்களால ஏற முடியலை. ரொம்ப உயரமா இருந்தது. எங்க மாமியார்  இதய நோயாளி வேற. அவரால நடக்கவே முடியலை. ஆஸ்பத்திரியோ ரொம்ப தூரத்துல இருந்துச்சு. என் கைக்குழந்தை மயங்கி போயிருந்தது. கன்னத்துல தட்டி தட்டி உசிர் இருக்கான்னு பார்த்தபடியே ஓடினேன். சின்ன பொண்ணு வாந்தி எடுத்துட்டே இருந்துச்சு. எப்படியும் ஆஸ்பத்திரிக்குப் போயிடணும் அந்த ஒரே ஒரு எண்ணம் மட்டும்தான் இருந்தது. இன்னும் கொஞ்சம் தூரம் ஓடினதும் எல்லாரும் கீழ விழ ஆரம்பிச்சிட்டோம். நான் நாலு மாச கர்ப்பமா இருந்தேன். விழுந்ததும் அந்த இடத்துலயே நடுத் தெருவிலயே கரு கலைஞ்சு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது. இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதுங்கற மாதிரி ஆகிடிச்சு. என் ரத்தத்துலலே விழுந்து புரண்டேன். வாந்தியும் பேதியும் ஆரம்பிச்சிடுச்சு. எல்லாம் ரத்தத்துல கலந்துச்சு.

கண்ணு மங்க ஆரம்பிச்சது. என்ன நடந்துச்சுன்னே எங்களுக்குப் புரியலை. அங்க இருந்து தப்பிச்சுப் போகலைன்னா செத்துருவோம் அப்படிங்கறது மட்டும் நல்லா புரிஞ்சது. ஏன்னா தரையில மயங்கி விழுந்ததா நாங்க நினைச்சவங்க உண்மையிலயே செத்துப் போனவங்கங்கறது மெதுவாத்தான் தெரிஞ்சது. அந்தப் பக்கமா போன வண்டிகள்ல ஆட்கள் ஏராளமா தொத்திட்டுப் போறது தெரிஞ்சது. நாம செத்தாலும் பரவாயில்ல குழந்தையை எப்படியும் காப்பாத்திடணும்னு பலத்தையெல்லாம் திரட்டி அந்த வண்டியை நோக்கி ஓடினேன். ஏத்தமா இருந்ததுனால வண்டி மெதுவா போயிட்டிருந்துச்சு. யாரோ கை கொடுத்து தூக்கி விட்டாங்க. எப்படியோ ஏறி அந்தக் கூட்டத்துக்குள்ள விழுந்தேன். ஆனா கூட்டம் அதிகமானதுனால வண்டி குடை சாய்ஞ்சிடுச்சு. வேற வழியில்லாம எல்லாரும் உயிரைக் கையில பிடிச்சிட்டு ஓட ஆரம்பிச்சோம். வழி நெடுக பிணங்களா இருந்துச்சு. வேற வழியில்லாம மிதிச்சு தள்ளிட்டு ஓடினோம்.

அப்படியே ஒரு குழில விழுந்தோம். கண் முழிச்சுப் பார்த்தபோது பொழுது விடிஞ்சிருந்தது. விஷ வாயுக் கசிவை தடுத்து நிறுத்தியாச்சு. நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குத் திரும்பலாம்னு ஸ்பீக்கர்ல அறிவிக்கறதைக் கேட்டோம். நாலைஞ்சு பேர் குழில கிடந்த எங்களைத் தூக்கி பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க. தண்ணி கொடுத்தாங்க. உடம்பைக் கழுவிக்கிட்டோம். புது டிரஸ் கொடுத்தாங்க அதை போட்டுக்கிட்டோம். டீ போட்டுக் கொடுத்தாங்க. ஆனா குடிக்க முடியலை. அப்பயும் எங்க தொண்டை எரிஞ்சிட்டுத்தான் இருந்தது. கழுத்தைப் பிடிச்சி யாரோ நெரிக்கற மாதிரி மூச்சு முட்டிக்கிட்டுத்தான் இருந்தது.

வீட்டுக்குத் திரும்பினோம். வீட்டுல இருந்த எல்லா பொருள்லயும் நீலம் பாரிச்சிருந்தது. எதையும் சாப்பிடலை. கொடுங் கனவு போல இருந்த இரவு முடிஞ்சிடுச்சு. ஆனா, அதைத் தொடர்ந்து புறக்கணிப்பின் விடியல் ஆரம்பிச்சிருந்தது. வேதனையின் சூரியன் எங்கள் வாழ்வில் அஸ்தமிக்கவே இல்லை. அனலாய்த் தகிக்கிறது எங்கள் பூமி… கானல் கடல் எங்கள் முன் அலையடித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் இந்தியராகப் பிறந்திருக்கவே கூடாது.

அரங்கில் பெரும் மவுனம் நிலவுகிறது. முக்காடு போட்ட பெண் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.

ஆண் : ஓ.கே. நல்லா சொன்னீங்க உங்க கதையை. டியர் வியூவர்ஸ் மறுபடியும் சொல்றோம். இந்த நிகழ்ச்சியோட உண்மையான ஜட்ஜஸ் நீங்கதான். போபால் சம்பவத்துக்கு யார் காரணம் ஆப்ஷன் ஏ : யூனியன் கார்பைடு. ஆப்ஷன் பி இந்திய ஆளுங்கட்சி. ஆப்ஷன் சி இந்திய எதிர்கட்சி. ஆப்ஷன் டி : இந்திய மக்கள். உங்க பதிலை எங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க. பரிசு உங்கள் வீடு தேடி வரும். ஓ.கே. நாம இப்ப சின்ன பிரேக் எடுத்துப்போம். நிவாரணங்கள் தொடர்பான நிறைய விஷயங்கள் அடுத்த செக்மண்ட்ல இருக்கு. அதனால எங்கயும் போயிடாதீங்க.

ஆண் : பாருங்க …
பெண் : பாருங்க…
ஆணும் பெண்ணும் சேர்ந்து : பார்த்துக்கிட்டே இருங்க.

0

இடம் : ஹின்க்லி, கலிஃபோர்னியா
வருடம் : 1996
நிறுவனம் : பசிஃபிக் கேஸ் அண்ட் எலக்ட்ரிக்கல் நிறுவனம்
வழக்கு : நிலத்தடி நீரில் ஹெக்ஸாவேலண்ட் க்ரோமிய நச்சு கலந்ததாக குற்றச்சாட்டு
குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு : 1993
தீர்ப்பு வழங்கப்பட்ட ஆண்டு : 1996
தீவிர பாதிப்பு : சுமார் 40-50 பேர் கருக்கலைப்பு, புற்றுநோய்
மிதமான பாதிப்பு : சுமார் 400-500 பேர் மருத்துவ செலவுகள் அதிகரிப்பு
நிறுவனத்தின் பலம் : கோடிக்கணக்கான டாலர்
செட்டில்மெண்ட் : 1952-1966 வரையில் நிலத்தடி நீரை மாசுபடுத்தியதற்கு சுமார் 333 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு
பாதிக்கப்பட்டவர்களுக்கு சராசரியாக ஐம்பது லட்சம் ரூபாய் + அதுவரை செய்த ஒட்டு மொத்த மருத்துவச் செலவு.
எதிர்த்துப் போராடியவர் : ஒரே ஒரு பெண்… வக்கீல் அலுவலக கிளார்க் ஆன எரின் ப்ரோகோவிச்!

அமெரிக்க நீதி மன்ற வரலாற்றிலேயே மிக அதிக நஷ்ட ஈடு கொடுக்கப்பட்ட வழக்கு
ப்ரோகோவிச்சின் சுய சரிதம் : வாழ்க்கை ஒரு போராட்டம்தான்… ஆனால், நீங்கள் அதில் நிச்சயம் வெல்ல முடியும்
போபால் மக்களின் சுய சரிதம்..?

பிரேக் முடிந்து ஷோ ஆரம்பிக்கிறது.

ஆண் : இந்தியத் தலைவர்களோட பங்களிப்பு இல்லைன்னா இந்த சாதனையைச் செஞ்சிருக்க முடியாதுன்னு ஆரம்பத்துல சொன்னீங்களே அதைக் கொஞ்சம் விரிவாச் சொல்ல முடியுமா?

ஆண்டர்சன் : ஓ ஷ்யுர். உண்மையில ஒரு நதியோட போக்கைத் தீர்மானிப்பது கரைகள்தான்னு சொல்வாங்க. அதுமாதிரி எங்களோட செயல்பாடுகளைத் தீர்மானிக்கறது எங்களை விமர்சனபூர்வமா கண்காணிக்கறவங்கதான். அந்தவகையில அமெரிக்காவுல எங்களோட நடவடிக்கைகளை அங்க இருக்கற அதிகாரவர்க்கத்தினர், எதிர்கட்சிகள், பத்திரிகைகள் அப்படின்னு நிறைய பேர் கட்டுப்படுத்துவாங்க. இந்தியால ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் எங்களுக்கு ரொம்ப ஆதரவா தோளோடு தோள் கொடுத்து நின்னாங்க. அதனாலதான் எங்களால நாங்க விரும்பின மாதிரி இருக்க முடிஞ்சது. இதுல அவங்களோட முக்கியமான பங்குன்னு பார்த்தா அந்த சம்பவத்துக்குப் பிறகு அவங்க நடந்துக்கிட்ட விதம் இருக்கே அதுதான் ரொம்பப் பிரமாதம். அதுக்கு முன்னால கம்யூனிஸ்ட் கட்சிங்க என்னவோ கூட்டம் போடுவானுங்க. உண்டியல் பிரிப்பானுங்க. பட்டினியாக் கெடக்கறவங்களைக் கூப்பிட்டு உண்ணாவிரதம் நடத்துவானுங்க. அவங்க சொல்றதை யாருமே காதுல போட்டுக்கவே மாட்டாங்க. விஷயம் என்னன்னா நிறைய பேருக்கு இந்த ஃபேக்டரி எவ்வளவு சக்தி வாய்ந்தது… அது வெடிச்சா என்ன ஆகும்னு எதுவும் தெரியாது. அதனால, எங்களை எதிர்த்து அப்போ நடந்த விஷயங்களுக்கு எந்த வலுவும் கிடையாது. நாங்க அதையெல்லாம் ரொம்ப ஈஸியா சமாளிச்சிட்டோம். ஆனா, இந்த சம்பவம் நடந்ததுக்குப் பிறகு இந்த அரசுகள் செய்த உதவி இருக்கே அதுதாங்க கிரேட்.

பெண் : என்னவெல்லாம் பண்ணினாங்க… வரிசையா சொல்லுங்களேன்.

ஆண்டர்சன் : இந்த நம்பவம் நடந்தபோது நான் என் வீட்டுல இருந்த பார்ல திராட்சை மது குடிச்சிட்டிருந்தேன். போபால்ல கேஸ் லீக் ஆயிடிச்சுன்னு சொன்னாங்க. சோ வாட். அது அடிக்கடி நடக்கற விஷயம்தான அப்படின்னு கேட்டேன். இல்லை. இது ரொம்பப் பெரிய அளவுல லீக் ஆகிடிச்சு. ஆயிரக்கணக்குல செத்துட்டாங்க. நீங்க உடனே புறப்பட்டு வாங்க. அப்படின்னு சொன்னாங்க. சரின்னு கிளாஸ்ல ஊத்தினதை அப்படியே ஒரு முழுங்கு முழுங்கிட்டு ஃபிளைட் பிடிச்சு இந்தியா வந்து சேர்ந்தேன். உடனே இந்திய அரசு என்னை கைது பண்ணிடிச்சு.

ஆண் : உங்களைக் கைது பண்ணிச்சா..?

மன்மோகன் சிங்ஜி : அப்படி எங்க மனசு நோகறமாதிரி எதுவும் பேசாதீங்க. நாங்க உங்களுக்கு வெறும் பாதுகாப்பு கொடுத்தோம். அவ்வளவுதான். ஹவ் டேர் வி அரெஸ்ட் யு சார்..?

ஆண்டர்சன் : ஓ.கே. ஒருவகையில அதை பந்தோபஸ்துன்னும் சொல்லலாம். ஆனா என்னைக் கைது பண்ணனும்னுதான் எல்லாரும் சொன்னாங்க. அந்த நேரத்துலதான் எஜமான விசுவாசம்னா என்ன அப்படிங்கறதை நான் பார்க்க முடிஞ்சது. அப்போதைய முதலமைச்சர், உள்துறை அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி அப்படின்னு ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் உத்தரவுகள் பறக்குது. எனக்கு எந்த அசம்பாவிதமும் நடந்துடக்கூடாது அப்படின்னு. நான் போபால் ஃபேக்டரி இருக்கற இடத்துக்குப் போறேன்னு சொன்னேன். வேண்டாம்னு ஜனாதிபதி என்னை தன்னோட மாளிகைக்கு அழைச்சுட்டிப் போயி தலைவாழை இலை போட்டு வடை பாயாசத்தோட ஒரு விருந்து கொடுத்தாரு. இந்தியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள் அப்படின்னு சொல்றது சும்மா ஒண்ணுமில்லை. சாப்பிட்டு முடிச்சு பீடாவெல்லாம் போட்டுட்டு வந்தேன். வெளிய ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு பன்ணியிருந்தாங்க. இந்திய அரசு எப்ப விசாரணைக்குக் கூப்பிட்டாலும் நான் வந்து பதில் சொல்லத் தயார்ன்னு சொன்னேன். புஷ்பக விமானம் மாதிரி ஒரு சொகுசு விமானம் இந்திய ஏற்பாடு பண்ணிக் கொடுத்துச்சு. ஜம்னு ஏறி உட்கார்ந்தேன். அது ஜிவ்வுன்னு மேல ஏறும்போது என் காலுக்குக் கீழ இருந்த இந்தியாவை கடைசியா ஒரு தடவை பார்த்தேன். வழியனுப்ப வந்த அதிகாரிகள் கண்ணுல அப்படியே ஆனந்தக் கண்ணீர். என்ன பத்திரமா அனுப்பி வெச்ச அந்தக் காட்சியை என்னால வாழ்நாள்ல மறக்கவே முடியாது.

அத்வானிஜி : யு டிசர்வ் இட் சார்.

ஆண்டர்சன் : அந்த விசுவாசம் இன்னிக்கு வரைக்கும் தொடருது. இதோ கடைசியா ஒரு தீர்ப்பு கொடுத்திருக்காங்க. அதுல என் பேரே குற்றவாளிங்க பட்டியல்ல இல்லை பாருங்க. இதுக்கு முன்னால 1996-ல் ஒரு தீர்ப்பு வந்துச்சு. அதுலயும் இப்படித்தான். டிரைவர் தாறுமாறா வண்டியை ஓட்டி பலரைக் கொன்னா அதுக்காக வண்டியோட உரிமையாளரைக் கைது பண்ண முடியுமான்னு லாஜிக்கா ஒரு கேள்வியைக் கேட்டாரு பாருங்க.

ஆண் : அது நியாயமான கேள்விதான..? அதுல உங்களுக்கு எந்த ஃபேவரும் செஞ்சதாத் தெரியலையே..?

ஆண்டர்சன் : என்ன தம்பி… நீங்களும் இப்படிக் கேக்கறீங்களே… பிரேக் இல்லாத வண்டியைக் கொடுத்து ஓட்டச் சொன்னா யார் மேல குத்தம். அதுவும் போக வேகமோ தாறுமாறா  போறமாதிரி ஏத்தி வெச்சிருந்தோம். அப்போ, உரிமையாளர் மேலதான குத்தம்.

ஆண்: அது சரிதான்.

ஆண்டர்சன் : தம்பி நீ இன்னும் வளரணும் தம்பி. உங்க அரசாங்கம்தான் அந்தமாதிரி கேள்வியெல்லாம் வராம பார்த்துக்கிட்டது. இதுக்கெல்லாம் நான் எப்படி கைம்மாறு செய்யப் போறேனோ. எனக்கு மறு பிறவியில நம்பிக்கை கிடையாது. இருந்தா அது சம்பந்தமா ஏதாவது சொல்லலாம்.

அத்வானிஜி : இந்த ஜென்மத்துலயே நீங்க எங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க. அதுக்கு நாங்கதான் உங்களுக்கு நன்றிகடன் பட்டிருக்கோம்.

ஆண்டர்சன் : நிச்சயமா சொல்றேன். இந்தமாதிரியான விசுவாசம்தான் என்னை எப்பவுமே திகைக்க வைக்குது. போபால் சம்பவம் நடந்ததுமே இன்னொரு முக்கியமான நிகழ்ச்சி நடந்தது. நிறைய பேர் சாக ஆரம்பிச்சிடாங்கன்னதும் மருத்துவர்கள் எங்களுக்கு ஃபோன் போட்டு அந்த பூச்சிக் கொல்லியோட வேதியல் மூலக்கூறுகளைப் பத்திக் கேட்டாங்க.

ஆண் : எதுக்கு..?

ஆண்டர்சன் : அப்பத்தான அது உடம்புல என்ன பாதிப்பை ஏற்படுத்தும் அதை எப்படி தடுக்கறதுன்னு தெரிஞ்சிக்க முடியும். ஆனா நாங்க என்ன பண்ணினோம். அதைச் சொல்ல முடியாது. வர்த்தக ரகசியம் அப்படின்னு சொல்லிட்டோம்.

பெண் : ஏன் சார்..?

ஆண்டர்சன் : ஆமா. பின்ன அந்த விஷயம் தெரிஞ்சா போட்டி கம்பெனிங்க அதே மாதிரி தயாரிச்சு எங்களை வியாபாரத்துல தோற்கடிச்சிடுவாங்களே… நமக்கு ஒரு நல்லதுன்னா நாலு பேர் சாகறதுல தப்பே கிடையாது இல்லியா..?

ஆண் : சரியாச் சொன்னீங்க. ஒருவேளை அந்த பூச்சிக் கொல்லியோட மூலக்கூறை தெளிவா சொல்லியிருந்தா நிறைய பேரைக் காப்பாத்தியிருக்க முடியும் இல்லையா..?

ஆண்டர்சன் : ஆமா நிச்சயமா…  ஆனா, அதை உங்க மருத்துவர்கள் நாங்க சொல்லாமலேயே கண்டுபிடிக்கவும் செஞ்சிட்டாங்க..?

பெண் : என்னது… மாற்று மருந்தை கண்டுபிடிச்சிட்டாங்களா..?

ஆண்டர்சன் : ஆமா… செத்தவங்களோட உடம்பை போஸ்ட்மார்டம் பண்ணி, என்ன கொடுத்தா விஷத்தை முறிக்க முடியும்னு அருமையா கண்டுபிடிச்சிட்டாங்க. ஆனா இங்கதான் உங்க அரசாங்கம் எங்களுக்கு ஒரு பெரிய உதவி செஞ்சாங்க. அதை வாழ்நாள்ல ஒருபோதும் மறக்க முடியாது. மருத்துவர்கள் கண்டுபிடிச்ச அந்த தயோசல்பேட்டை பாதிக்கப்பட்டவங்களுக்குக் கொடுக்கக்கூடாதுன்னு ஒரு உத்தரவு போட்டாங்க பாருங்க. அதை இப்ப நினைச்சாலும் புல்லரிக்குது.

ஆண் : விஷ முறிவு மருந்து கொடுத்துக் காப்பாத்தக் கூடாதுன்னு சொன்னாங்களா..? ஏன்..?
ஆண்டர்சன் : ஏனா? எங்களைக் காப்பாத்தறதுக்குத்தான். அந்த மருந்தைக் கொடுத்திருந்தா பூச்சிக் கொல்லி மருந்துல சயனைட் இருந்தது உறுதியாகிடும். நாங்கதான் எங்க பூச்சிக் கொல்லி ரொம்பவும் சாதுவானது. எந்த பெரிய பாதிப்பும் வராதுன்னு சொல்லிட்டிருக்கோமே. அதுல விஷம் இருந்தது உறுதியாயிடிச்சின்னா எங்களுக்கு எக்கச்சக்கம் நஷ்டைஈடு கொடுக்க வேண்டிவந்திருக்குமே. அதனாலதான் அந்த மருந்தைக் கொடுக்கக்கூடாதுன்னு மருத்துவர்களை விட்டே சொல்ல வெச்சாங்க உங்க அரசியல்வாதிங்க.

பெண் : ரியலி நைஸ். நான் நீங்க ஏதோ பெருந்தன்மையிலதான் இது ஒரு டீம் எஃபர்ட்ன்னு சொல்றீங்கன்னு நினைச்சேன். இப்பத்தான்  புரியுது. நீங்க ஒரு எளிய உண்மையைத்தான் சொல்லியிருக்கீங்க.

ஆண்டர்சன் : நிச்சயமா..? அவங்களோட சாதனை உண்மையிலயே மகத்தானதுதான். இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்க. விஷ வாயு படலம் நடந்து முடிஞ்சதும் நஷ்ட ஈடு கேட்கும் படலம் ஆரம்பிச்சது. இந்திய அரசு 3.2 பில்லியன் நஷ்ட ஈடு கேட்டுச்சு. ரொம்பவும் நியாயமான ஒண்ணுதான். இப்ப மெக்ஸிகோல எண்ணெய் கசிவு நடந்தபோது நாங்க கேட்டோமே 20 பில்லியன்… அது மாதிரி அன்னிக்கு ரேட்ல அது நியாயமான ஒரு தொகைதான். இன்னும் சொல்லப் போனா அது கொஞ்சம் குறைச்சல்ன்னு கூடச் சொல்லலாம். ஆனா, நாங்க 478 மில்லியன் தர்றேன்னு சொன்னோம். இந்திய அரசியல்வாதிங்க ரொம்ப சந்தோஷம்னு அதை வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டாங்க. ஐ மீன் பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுக்க வாங்கி வெச்சுக்கிட்டாங்க.

பெண் : 3.2 கேட்டதுக்கு 478 கொடுத்தீங்களா… ரொம்பப் பெருந்தன்மையோடதான் நடந்துக்கிட்டிருக்கீங்க.

ஆண்டர்சன் : இல்லை தம்பி. அவங்க கேட்டது பில்லியன். நாங்க கொடுத்தது மில்லியன்.

பெண் : எனக்கு இந்த மில்லியன் பில்லியன் கணக்கே புரியாது கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.

ஆண்டர்சன் : தாராளமா… இந்திய அரசு 3000 ரூபா கேட்டுச்சு. நாங்க 3 ரூபா கொடுத்து, தோள்ல தட்டிக் கொடுத்து போயிட்டு வாங்கன்னு சொன்னோம். அவங்களும் அதை வாங்கிட்டு ஒரு சலாம் வேற வெச்சிட்டுப் போனாங்க.

ஆண் : பிரமாதம். இப்ப நீங்க சொல்றதையெல்லாம் பார்த்தா இந்திய அரசோட பங்குதான் அதிகமா இருக்கும் போலயிருக்கே.

ஆண்டர்சன் : நிச்சயமா. இப்ப கூட பாருங்க. எல்லா நச்சுக் கழிவை நாங்களே அகற்றிக்கறோம்னு சொல்லிட்டாங்க. நஷ்ட ஈடு இன்னும் அதிகமா தர்றோம்னு சொல்லியிருக்காங்க. மன்மோகன் சிங்ஜி என்ன தன் பாக்கெட்ல இருந்தா கொடுக்கப் போறாரு. காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையிருக்கும் பாரதத் தாயின் தவப்புதல்வர்கள் அல்லவா போபால் மைந்தர்களுக்குக் கொடுக்கப் போறாங்க.

ஆண் (மன்மோகன் சிங் ஜியைப் பார்த்து) : சார் உங்களை என்னமோ நினைச்சேன். பெரிய ஆள் சார் நீங்க. அமைதியா பொம்மை மாதிரி இருந்துட்டு என்னவெல்லாம் அடிச்சு தூள் கிளப்பறீங்க.

மன்மோகன் சிங் ஜி : என் கைல என்னங்க இருக்கு. மேடம் சொல்றாங்க. நான் பண்ணறேன்.

ஆண் : என்னே ஒரு பணிவு… என்னே ஒருபணிவு… ஓ.கே. ஒரு காலர் லைன்ல இருக்காரு… சொல்லுங்க சார்.

குரல் : நான் நாமக்கல்லுல இருந்து கூமுட்டை பேசறேன்…

ஆண் : என்னது கூமுட்டையா..?

குரல் : ஆமாங்க.

ஆண் : ரொம்ப வித்தியாசமான பேரா இருக்கே..?

குரல் : ரொம்பப் பொருத்தமான பேருன்னும் நிறைய பேரு சொல்லுவாங்க.

ஆண் : அப்படிங்களா… ரொம்ப சந்தோஷம். என்ன கேட்கப் போறீங்க..?

குரல் : எனக்கு கில்லி படத்துல இருந்து இலைய தலபதியோட அப்படிப் போடு… போடு…ங்கற பாட்டு போடுங்களேன்.

ஆண் (லேசாக அதிர்ந்து) : அப்படிப் போடு சாங்கா..? சார்… நீங்க வேற ஷோவுக்கு போட வேண்டிய நம்பரை போட்டுடீங்கன்னு நினைக்கறேன். இது பாட்டுப் போடற ஷோ இல்லை. போபால்ல நடந்த சம்பவம் பற்றியும் அதுல கஷ்டப்பட்டவங்க பத்தியுமான நிகழ்ச்சி.

குரல் : அதனால என்னங்க. சும்மா போட்டு விடுங்க. அங்க கஷ்டப்படறவங்க இலைய தலபதியோட இந்தப் பாட்டைப் பார்த்ததும் உற்சாகமா எந்திரிச்சு ஆட ஆரம்பிச்சிடுவாங்க.

ஆண் : ரொம்ப நல்ல யோசனைதான். நானும் கூட இந்த ஷோவுக்கு நடுவுல ரெண்டு குத்துப் பாட்டைப் போடலாம்னுதான் பார்க்கறேன். விடமாட்டேங்கறாங்க. சரி நாம் இனிமே வாசகர்களோட இந்த கோரிக்கைகளை மனசுல வெச்சு அடுத்து இது மாதிரி நடத்தற ஷோவை கொஞ்சம் அதிரடியா நடத்தறோம். உங்களோட ஆலோசனைக்கு ரொம்ப நன்றி.

அத்வானிஜி : இந்த காலரோட யோசனை நல்லாத்தான் இருக்கு. நீங்க இந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமா ஏதாவது பாட்டு போடலாம்.

பின்னணி இசையமைப்பாளர், போனால் போகட்டும் போடா பாடலைப் போடுகிறார்.
கூட்டம் ஸ்தம்பித்துப் போய் கேட்கிறது. ஆண்டர்சனும், அத்வானிஜியும், மன்மோகன் சிங்ஜியும் மெய் மறந்து ரசிக்கிறார்கள்.

0