எழுத்தும் பேச்சும்

Anne Franksபேசு மனமே பேசு / அத்தியாயம் 16

தன்னோடு பேசுதலின் அடுத்த வகை பேச்சையும் தாண்டியது. சிலருக்கு, ஒரே விஷயத்தைக் குறித்து, கோர்வையாக நினைக்கவோ, பேசவோ முடியாமல் போகலாம். ஆனால் உட்கார்ந்து எழுதுவது சாத்தியமான விஷயம்தான். நமக்குத் தேவையான அம்சங்களில் மாற்றம் காண விரும்பும் விஷயங்களைப் பற்றி தன்னோடு பேசுதல் முறையில் எவ்வாறு தயார் செய்கிறோம்? விஷயங்களைக் குறித்து, வார்த்தைக்கு வார்த்தை மாற்றம் செய்து மனத்தில் பதித்துக் கொள்கிறோம். அதே போலவே எழுதிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விஷயத்துக்கும், தனித்தனியாக நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதிக் கொள்ள வேண்டும். அதை தினமும் படிப்பதன் மூலம் நிச்சயம் நன்மை கிடைக்கும் என்பதை நீங்களே அனுபவத்தில் தெரிந்து கொள்வீர்கள்.

பேச்சுக்கு இருக்கும் சக்தி, நிச்சயமாக எழுத்துக்கும் இருக்கிறது. அதாவது, அதற்கு மதிப்பளித்துப் படித்தோம் என்றால் அதற்கான விளைவு மனத்திலும் செயலிலும் உருவாகும். நம்பிக்கையற்ற சூழ்நிலையிலும் இதுபோல எழுதிப் பார்த்துப் படிப்பது, அது போலவே நடந்து கொள்ள வைக்கும்.

இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லர் படையினரால் வேட்டையாடப்பட்ட எண்ணற்ற யூதர் குடும்பங்களில் பிராங்க் என்பவரது குடும்பமும் ஒன்று. இந்தக் குடும்பம் மட்டும் எதனால், பல வருடங்களுக்கு பின்னரும் நினைவில் கொள்ளப்பட்டு வருகிறது? இதற்கும் காரணம், அந்தக் குடும்பத்திலேயே வயது சிறியவளான, ஆனி பிராங்க்தான். 7 – 8 வயதிருந்த அந்தச் சிறுமியின் குடும்பத்தினரும், மற்றும் சிலரும் தாங்கள் வசித்து வந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான ஜெர்மானியரால் அல்லது அவர்களின் ஆதரவாளர்களால் எந்த நேரமும் தாக்கப்படலாம் என்ற அச்சத்துடன் வாழ்ந்தனர். இதே பயத்துடன், அவர்கள் இரண்டு வருடங்களாக மனத்தில் மிகுந்த நடுக்கத்துடன் வாழ்ந்து வந்தனர். ஏழே வயதுள்ள சிறுமி எவ்வளவு உயிரோட்டமாக, சுறுசுறுப்பாக இருப்பாள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனாலும், உயிருக்குப் பயந்து ஒரே அறையில் இரண்டு வருடங்கள் கழிக்க நேர்ந்தது ஆனிக்கு எந்த அளவுக்கு கடினமாக இருந்திருக்கும்?

தன் பொழுதைப் போக்க ஆனி டைரி எழுதி வந்தாள். அவளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாகத் தெரிந்தே இருந்தது. ஆனாலும், மனத்தில் உற்சாகத்தை வளர்த்துக்கொண்டாள். இந்தத் தன்மை அவளது எழுத்துக்களில் வெளிப்பட்டது. அதில் ‘போர் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு முடிந்த பின், நான் இன்னும் உற்சாகமாக இருப்பேன்.’ என்றும், இன்னும் ஒவ்வொரு நாளும், ‘இன்றைக்கு நாள் நன்றாக விடிந்திருக்கிறது. மனத்தில் உற்சாகம் வருகிறது’ என்றெல்லாம் தினமும் எழுதி வந்திருக்கிறாள். அவளது டைரிக் குறிப்புகள் முழுவதுமே, மனத்துக்கு சந்தோஷத்தை அளிக்கும் விஷயங்களாக இருந்தன. இது தவிர, அவள் சேகரித்த சிறு, சிறு படங்கள் ஆகியவை கூட சிறு பெண்ணின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்களாகவே இருந்தன.

உண்மை நிலை எப்படி இருந்தது என்றால், அவள் வசித்த அறை மிகவும் சிறியது. அதில் அவளுக்கான இடம் என்று எதுவுமே இல்லை. பெரியவர்கள் எப்போதுமே, எந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுவோமோ என்ற விஷயத்தைப் பற்றியே பேசிக் கொண்டும், பயந்து கொண்டும் இருந்தனர். (முடிவும் அவ்வாறேதான் இருந்தது.) இந்த பயத்தை, ஆனி தனது மனத்துக்குள் பரவ விடாமல் இருந்தாள். இதைச் செய்ய முடிந்ததற்கும் காரணம், தன்னோடு பேசுதலில், எழுத்து வடிவ முறையைக் கையாண்டதுதான். இதன் மூலமாக உயிரோடு ஒளிந்திருந்த இரண்டு வருடங்களையும் அவள் உற்சாகமாகக் கழித்திருக்கிறாள். இருக்கக்கூடிய சூழ்நிலை, எப்படிப்பட்டதாக இருந்தாலும், நமது மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது நாம்தான் என்பதை ஆனி பிராங்க் வாழ்ந்து காட்டி விட்டுப் போயிருக்கிறாள்.

இது மட்டுமின்றி, எழுத்துகளுக்கு நமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆற்றல் உண்டு. இதையே ஒரு விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து ஒரு துறையாகவும் உருவாக்கியிருக்கிறார்கள். எழுத்துக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி உண்டு என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும். ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம், வருத்தம், அவசரம், துக்கம், ஆத்திரம், சாதித்த உணர்வு, வெற்றி, தோல்வி போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களை மனத்தில் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தந்த உணர்வு இருக்கும்போது, உங்களது கையெழுத்தில் மாற்றங்கள் தானாக உருவாவதை கவனியுங்கள்.

அந்தந்த உணர்ச்சிகளின் பிடியில் மனம் இருக்கும்போது, நமது உடல் தசைகள், விரல்களின் அழுத்தம், இறுக்கம் ஆகியன எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இது பயிற்சிதான் என்றாலும் அந்த சமயத்திலும் கூட, உடல் இயக்கம், மனதோடு எந்த அளவுக்கு ஒன்றியிருக்கிறது என்பதை, நன்கு கவனித்தால் புரிந்து கொள்வீர்கள்.

எந்த ஒரு விஷயத்தில் குழப்பமாக இருந்தாலும், அதைக் குறித்து ஒரு முன்னுரிமைப் பட்டியல் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். குழம்பிய நிலையில், எதை முன்னால் செய்வது, அதற்கு அடுத்த நிலையில் சந்திக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பவை பற்றிய பட்டியல்தான், முன்னுரிமை செயல் பட்டியல். இதை மானசீகமாகச் செய்ய முடியும். அதையே இன்னும் சுலபமாக மாற்றுவதற்கு எழுதியும் கூடப் பார்க்கலாம். மனத்திலே கோர்வையாக சிந்தனை உருவாக, எழுதிப் பார்த்துக் கொள்வது பெரும் உதவிகரமாக இருக்கும்.

காலன் லிச் ஃபீல்ட் என்ற அமெரிக்க வர்த்தகர் இரண்டாம் உலகப் போரின் போது சீனாவில் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக இருந்தார். 1942ம் ஆண்டில், அவர் இருந்த ஷாங்காய் பகுதியில், ஜப்பானியர்கள், படையெடுத்து உள்ளே வந்தனர். அந்தப் பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும், ஜப்பானியர்களின் பெயரில் மாற்றும் வேலையில் இறங்கினர். கையாண்ட சொத்துக்களை, ஜப்பானியர்கள் பெயரில் மாற்றுவதற்கு, அவர் உதவி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரும் வேறு வழியின்றி அவ்வாறே செய்தார். நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு அமைப்பின் பங்குப் பத்திரங்கள் இருந்தன. அவற்றுக்கும், ஷாங்காய்க்கும் தொடர்பு இல்லாததால், அதை மட்டும் காலன் லிச் ஃபீல்ட் கணக்கில் கொண்டு வரவில்லை. இதனால் ஜப்பானியர்களின் உத்தரவை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதை அவர்கள் கண்டுபிடித்தால் என்னவாகும் என்பது பற்றிய அச்சமும், பயமும் அவரை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தன. அவர் எதிர்பார்த்தது மாதிரியே உண்மை கண்டறியப்பட்டது. அவரை எப்போது வேண்டுமானாலும், சித்திரவதை கூடத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்ற நிலை எழுந்தது.

அந்த சமயத்தில் என்ன செய்வது என்பது பற்றி என்ன யோசித்தும், சரியான முடிவுக்கு வர முடியவில்லை. ‘அவர் ஒரு காகிதத்தை எடுத்து, தனது மனதிலுள்ளவற்றை தெளிவாக எழுதினார். எதைப் பற்றி நான் கவலைப் படுகிறேன்? இது பற்றி என்னால் என்ன செய்ய முடியும்?’; முதல் கேள்விக்கான பதில், ‘என்னை நாளைக் காலையில் சித்திரவதைக் கூடத்துக்கு அனுப்புவார்கள். அதுபற்றி பயப்படுகிறேன்.’ – இரண்டாவது கேள்வி – இது பற்றி என்ன செய்ய முடியும்? இதற்கான பதில்கள், ‘நடந்ததைக் குறித்து ராணுவ அதிகாரிக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனால் மொழியிலிருந்து பல பிரச்னைகள். அதனால் முடியாது. தப்பிக்க முயற்சிக்கலாம். ஆனால் எந்த வகையிலும் அது சாத்தியம் இல்லை. பிடித்தவுடன் கேள்வி கேட்காமல் சுட்டுக் கொன்று விடுவார்கள். மூன்றாவதாக நாளைக்கு அலுவலகம் போகாமல் இருந்து விடுவது. ஆனால், அவர்களே தேடி வந்து பிடித்தால் நிலைமை மோசமாகிவிடும். நான்காவது, எதுவுமே தெரியாததுபோல நாளை (திங்கட்கிழமை) அலுவலகம் செல்லலாம். அப்போது கேள்வி எழுந்தால் நமது நிலைப்பாட்டைச் சொல்லலாம். அதுவுமின்றி, நடுவில் உள்ள இரண்டு நாட்களில் தாங்கள் கண்டுபிடித்தது பற்றிய சந்தோஷம், எனக்குத் தெரியாது என்ற எண்ணம் ஆகியன அவர்களை ஏதோ ஒரு விதத்தில் அமைதிப் படுத்தியிருக்கலாம்.

இவற்றை எழுதிய காலன் லிச் ஃபீல்ட், நான்காவது வழியைத் தேர்ந்தெடுத்து, அவ்வாறே செயல்படுத்தினார். அவர் எதிர்பார்த்தப்படியே நடந்தது. இது சாத்தியமானதிற்குக் காரணம், அவரது சிந்திக்கும் திறன், நல்லநேரம், தைரியம் ஆகியன மட்டும் காரணம் அல்ல. அவற்றையெல்லாம் எழுத்து வடிவில் வெளிக்கொண்டு வந்து, அதன் மூலம் எடுக்கப்பட்ட தெளிவான முடிவை, அவர் ஏற்று செயல்படுத்தியதுதான். (ஆபத்தான சந்தர்ப்பங்களில் மட்டும் என்றில்லாமல், நமது திட்டமிடுதலை, ஒவ்வொரு நாளும் எப்படி அமைய வேண்டும் என்ற விருப்பங்களையும் தெளிவாக எழுதி, அதைப் பிடித்து (நமக்குள் பேசி) ஏற்றுக்கொண்டால், அவ்வாறே நடப்பதற்கு சுலபமாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள். வெற்றி கிடைக்கும்.

0

பொலிவார் : விடுதலை வீரன்

bolivarபுரட்சி / அத்தியாயம் 14

தன் பயணங்களை முடித்துக்கொண்டு வெனிசூலா திரும்பியபோது இரு பெரும் பிரிவுகளாக மக்கள் பிளவுபட்டிருந்ததை பொலிவார் கண்டுகொண்டார். ஒரு பிரிவினர் ஸ்பெயினை ஆதரித்தனர். இன்னொரு பிரிவினர் ஸ்பெயினிடம் இருந்து விடுபடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த முயற்சிகளைத் தொகுத்துக்கொண்டு ஸ்பெயினிடம் இருந்து வெனிசூலாவை விடுவிக்க செபாஸ்டியன் ஃபிரான்சிஸ்கோ மிராண்டா என்னும் ராணுவ ஜெனரல் ஒரு பெரும் முயற்சியை மேற்கொண்டார். ஆனால் வெனிசூலாவின் வடக்குக் கரையை முற்றுகையிடும்போது அவர் தோற்கடிக்கப்பட்டார். ஜேம்ஸ் மாடிசன், தாமஸ் ஜெஃபர்சன் போன்ற அமெரிக்க அதிபர்களின் நண்பராக இருந்தவர் மிராண்டா. பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு ஜெனரலாகப் பங்கெடுத்தவர்.

லத்தின் அமெரிக்காவில் பரவிய புரட்சி அலைக்கு 1789ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி ஓர் முக்கிய உந்துதலாகத் திகழ்ந்தது. இன்னொரு புரட்சி எங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசாங்கங்கள் தீர்மானமாக இருந்த சமயம் அது. கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு உலகின் முக்கியச் சக்திகள் அனைத்துக்கும் இது ஒன்றே நோக்கமாக இருந்தது. ஆனால் இந்த எச்சரிக்கை உணர்வையும்மீறி புரட்சி அலைகள் பரவின. அரசாங்கங்களின் செயலற்ற தன்மையை 1815க்குப் பிறகான தலைமுறை தீர்மானமான முறையில் வெளிப்படுத்தியது என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ‘ஐரோப்பாவிலும் சரி உலகளவிலும் சரி, அடுத்தடுத்து பல இடங்களில் இவ்வளவு புரட்சிகள் நடைபெற்றது இதுவே முதல் முறை.’

சூழலையும் சூழலின் தேவையையும் புரிந்துகொண்ட பொலிவார் லத்தின் அமெரிக்காவின் விடுதலை ராணுவப் பாதையில் மட்டுமே சாத்தியப்படும் என்னும் முடிவுக்கு வந்து சேர்ந்தார். ஸ்பெயினின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து முதல்முறையாக பொலிவார் குரல் கொடுத்தபோது அவர் மேல்தட்டு கிரியோல்களின் நலன்களை மட்டுமே பிரதிபலித்தார் என்பதை நாம் கவனிக்கவேண்டும். ஸ்பெயினிடம் இருந்து விடுபடுவதுதான் நமக்கு லாபகரமானது என்று அவர் கணக்குப் போட்டார். இதே எண்ணத்தோடுதான் 1806ல் கிளர்ச்சியாளர்களின் ஒரு சிறு படையுடன் பொலிவார் இணைந்துகொண்டார்.

1808ம் ஆண்டு நெப்போலியன் ஸ்பெயின்மீது படையெடுத்து அரசர் ஏழாம் ஃபெர்டினாண்டைக் கைது செய்தபோது அதன் தாக்கம் வெனிசூலாவிலும் எதிரொலித்தது. தன்னையே பாதுகாத்துக்கொள்ள இயலாத ஒரு நாட்டிடம் இனியும் எதற்காக நாம் அடிமைப்பட்டுக் கிடக்கவேண்டும்? விரக்தி, கோபம், வெறுப்பு அனைத்தும் ஒன்று திரண்டு உருசேர்ந்தன. ஸ்பெயினும் ஸ்பெயினால் நியமிக்கப்பட்ட வெனிசூலா ஜெனரலும் பலகீனமாக இருந்த தருணத்தை கிளர்ச்சியாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். 19 ஏப்ரல் 1810 அன்று வெனிசூலா தாற்காலிக சுதந்தரப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. இதன் பொருள், ஃபெர்டினாண்டை இன்னமும் அவர்கள் தங்கள் அரசாரகவே கருதினார்கள். ஆனால், எங்களை நாங்களே ஆண்டுகொள்வோம் என்றனர்.

பொலிவார் விரும்பியது முழுமையான, நிபந்தனையற்ற சுதந்தரத்தை. பொலிவாரின் கருத்து பெரும்பாலானோரின் கருத்தாக மாறத் தொடங்கியபோது 5 ஜூலை 1811 அன்று முழுமையான சுதந்தரத்தை வெனிசூலா அதிகாரபூர்வமாக அறிவித்தது. எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிட்டன என்று பொலிவார் நினைத்த தருணத்தில் முடியாட்சிக்கு ஆதரவான குழுவினர் புதிதாக உருவான சுதந்தர அலையை அடக்கி ஒடுக்கினர். கிளர்ச்சியாளர்கள் வேட்டையாடப்பட்டனர். பொலிவார் மேற்கிந்தியத் தீவுகளுக்குத் தப்பிச்சென்றார்.

ஆனால் வரித்துக்கொண்ட லட்சியத்தில் இருந்த அவர் பின்வாங்கவில்லை. 1812ம் ஆண்டு நியுவா கிரானடா (புதிய ஸ்பெயின்) என்றழைக்கப்பட்ட கொலம்பியாவுக்கு வந்த பொலிவார் அங்கே ஒரு கிளர்ச்சிப் படையை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார். உருவான படைக்கு அவரே தலைமை தாங்கவும் முன்வந்தார். பொலிவாருக்கு இப்போது சில விஷயங்கள் தெளிவாகத் தெரிந்திருந்தன. படையை உருவாக்கினோம், போர் தொடுத்தோம், வென்றோம், சுதந்தரம் பெற்றோம் என்று எளிமையான நேர் வரிசையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை உருவாக்கிவிடமுடியாது. துன்பங்களையும் தொடர் தோல்விகளையும் கடந்து தீர்மானமாகவும் திடமாகவும் போரிடவேண்டும். எது வந்தாலும், என்ன நடந்தாலும் ஓரடிகூடப் பின்னால் நகராமல், உயிர் போனால் பரவாயில்லை என்று உறுதிபூண்டு போராடினால் மட்டுமே லட்சியத்தை நெருங்கமுடியும். ஏனென்றால், சுதந்தரம் விலை மதிப்பற்றது. அதைச் சுலபத்தில் பெற்றுவிடமுடியாது.

பொலிவார் தனது நீண்ட பயணத்தைத் தொடங்கினார். வெனிசூலாவில் இருந்து பெருவுக்குப் பல ஆயிரம் மைல்களை குதிரையில் கடந்து செல்லவேண்டியிருந்தது. மீண்டும் பெருவில் இருந்து வெனிசூலா. மலைகளையும் கானகங்களையும் கடும் குளிரையும் கடக்கவேண்டும். ஓய்வு, உறக்கமின்றி குதிரைமீதே பழியாகக் கிடக்கவேண்டும். ஆனால் இத்தனைக்கு இடையில் பொலிவாருக்குப் படிக்கவும் சிந்திக்கவும் நேரம் கிடைத்தது ஆச்சரியமளிக்கக்கூடியது. முழுமுற்றான ராணுவப் பாதையைத் தேர்ந்தெடுத்தபோதிலும், ஜனநாயகம் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் பிரெஞ்சுத் தத்துவ வரலாறு குறித்தும் விடாமல் அவரால் படிக்கமுடிந்தது.

பொலிவாரின் படையில் அப்போது 200 வீரர்கள் இருந்தனர். ஸ்பானிஷ் படைகளோடு ஒப்பிட்டால் இது மிக மிகச் சிறிய எண்ணிக்கை. இருந்தாலும் பொலிவாரின் தலைமை இந்தப் படையை பல மடங்கு பலம் கொண்ட வலிமையான சக்தியாக மாற்றியது. அவ்வப்போது கிடைத்த சிறு சிறு வெற்றிகள் அவர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைத்தன. இந்த வெற்றிகள் தந்த துணிச்சலில் மேலும் மூர்க்கத்துடன் அவர்கள் ஸ்பானியப் படைகளை எதிர்கொண்டு போரிட்டனர். பொலிவாரின் பெயரும் அவருடைய புகழும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. ஒரு முறை அவரும் அவருடைய சிறு படையும் 90 நாள்கள் பயணம் மேற்கொண்டு, 700 மைல்களைக் கடந்து, ஆறு யுத்தங்களில் பங்கேற்றார்கள். ராயல் படையின் ஆறு பிரிவுகளை பொலிவாரின் படைகள் அடித்து வீழ்த்தின. ஆகஸ்ட் 1813ல் பொலிவார் தனது பிறந்த மண்ணான காரகாஸுக்குள் நுழைந்தார். ஆரவாரத்துடன் அவரை வரவேற்ற மக்கள், ‘லிபரேட்டர்’ என்னும் பட்டத்தை அவருக்கு வழங்கினர்.

ஒரு கட்டத்தில், வெனிசூலாவும் நியுவா கிரானடாவும் பொலிவாரின் வசம் வந்து சேர்ந்தன. ஆனால் இந்த முறையும் சுதந்தரம் நீடிக்கவில்லை. 1815ல் பொலிவார் தோற்கடிக்கப்பட்டார். மீண்டும் மேற்கிந்தியத் தீவுகளுக்குத் தப்பியோடினார். மீண்டும் தன் படையைக் கட்டியெழுப்பினார். மீண்டும் போர்ப் பயிற்சிகள். மீண்டும் வெனிசூலாவுக்கு ஒரு பயணம். மீண்டும் ஒரு வெற்றி. கொண்டாடுவதற்குள் முடியாட்சிக்கு ஆதரவான ராணுவம் சீறிவரும். பொலிவார் தோற்கடிக்கப்படுவார். மீண்டும் தப்பியோட்டம்.

இந்தத் தொடர் படையெடுப்புகளும் தொடர் வெற்றிகளும் தோல்விகளும் பொலிவாரை மேலும் மேலும் உறுதியானவராக வளர்த்தெடுத்தன. கிரியோல்களின் நலன்களை முன்னிறுத்தி தன் போராட்டத்தைத் தொடங்கிய பொலிவார் இப்போது பரவலான மக்கள் நலன் நோக்கி சிந்திக்கத் தொடங்கியிருந்தார். முடியாட்சியிடம் இருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல நோக்கம். காலனியாதிக்கத்தில் இருந்தும் நாடுகள் விடுபடவேண்டும். மட்டுமின்றி, விடுதலையோடு சமத்துவமும் தோன்றவேண்டும் என்று தன் லட்சியத்தை இப்போது விரிவாக்கிக்கொண்டிருந்தார் பொலிவார்.

வெறும் வார்த்தைகளுடன்கூடிய சம்பிரதாயமான முறையில் அல்ல, சட்டரீதியிலான சமத்துவத்தையே பொலிவார் முன்வைத்தார் என்கிறார் ஜான் லிஞ்ச். பொலிவார் ஓரிடத்தில் இப்படி எழுதுகிறார். ‘ஒருவனுடைய வர்க்கப் பின்னணி என்னவாக இருந்தாலும் சரி, அவனுடைய நிறமோ நம்பிக்கைகளோ எப்படியிருந்தாலும் சரி, அவர்கள் அனைவரும் ஒன்றுபோல் சமமாகப் பாவிக்கப்படவேண்டும்.’ பொலிவாரை ஒரு ஜனநாயகவாதி என்று கொள்ளமுடியும். அரசாங்கம் மக்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும் மக்களுக்குப் பதில் சொல்லும் கடப்பாடு கொண்டதாக இருக்கவேண்டும் என்றும் பொலிவார் விரும்பினார். ‘பெரும்பான்மை மக்களே ஆள்வதற்குத் தகுதியானவர்கள். அவர்கள் இடத்தை ஆக்கிரமிக்கும் எந்தவொரு சர்வாதிகாரியும் ஆதிக்கவாதியாகவும் சுரண்டல்வாதியாகவும் கருதப்படுவார்.’

தென் அமெரிக்காவை ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்து நிரந்தரமாக விடுவிப்பது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவப்பூர்வமாக பொலிவார் உணர்ந்திருந்தார். தென் அமெரிக்கா இன்னமும் முழுமையான ஜனநாயகத்துக்குத் தயாராகவில்லை என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. நடைமுறை உண்மைகளுக்கு ஏற்ப பொலிவார் தன் சிந்தனைகளிலும் திட்டங்களிலும் மாற்றம் செய்துகொண்டே இருந்தார். ‘பொலிவாருக்குள்ளே ஒரு யதார்த்தவாதியும் ஒரு கனவுலகவாதியும் பின்னிப் பிணைந்திருந்தான்’ என்கிறார் ஜான் லிஞ்ச்.

சுதந்தரத்துக்காகப் போராடிய ஒரே காரணத்துக்காக மக்களைச் சிறைபிடித்து கொன்றொழித்த எதிரிகளை பொலிவார் இரக்கமற்ற முறையில் வீழ்த்தினார். அந்த வகையில், நாடு பிடிப்பதற்காகப் போரிட்ட நெப்போலியனிடம் இருந்து நாட்டை விடுவிப்பதற்காகப் போரிட்ட பொலிவார் துல்லியமாக வேறுபட்டு நிற்கிறார். ஸ்பெயினை எதிர்த்து வேறு நாகரிகமான முறையில் போரிடுவது சாத்தியமல்ல என்னும் முடிவுக்கு வந்தபிறகே பொலிவார் தன் குதிரைமீது ஆயுதத்துடன் ஏறி அமர்ந்தார்.

15 ஜூன் 1813 அன்று ட்ருஜிலோ என்னுமிடத்தில் பொலிவார் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். ‘அமெரிக்காவின் (லத்தின் அமெரிக்காவின்) சுதந்தரத்துக்காகக் குரல் கொடுக்காத ஸ்பானியர்கள் எதிரிகளாக கருதப்படுவார்கள். தவறிழைக்காதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் எதிரிகள்தாம். அதே சமயம், தவறுகள் இழைத்திருந்தாலும் அமெரிக்கர்கள் எதிரிகளாகக் கருதப்பட மாட்டார்கள்.’ இந்த முடிவுக்குப் பின்னால் ஒரு காரணம் இருந்தது. பொலிவாருக்கு எதிரான படையிலும்கூட பெருமளவில் அமெரிக்கர்கள் திரண்டிருந்தனர். உதாரணத்துக்கு வெனிசூலாவிலேயே முடியாட்சியையும் ஸ்பெயினையும் ஆதரிக்கும் அமெரிக்கர்கள் இருந்தனர். யுத்த நியாயத்தின்படி, முடியாட்சிக்கு எதிரான யுத்தம் மூளும்போது அவர்களும் எதிரிகளாகத்தான் கருதப்படவேண்டும். ஆனால் பொலிவாரால் தன் சொந்த மக்களுக்கு எதிராகப் போரிட முடியவில்லை. அவர்கள் தவறான முடிவை எடுத்திருந்தபோதும் வரலாற்றுத் தவறுகள் இழைத்த போதிலும் அவர்கள்மீது ஆயுதத்தைத் திருப்ப முடியவில்லை. எனவே ட்ருஜிலோ பிரகடனம் ஸ்பானியார்டுகளையும் அமெரிக்கர்களையும் வகைப்படுத்தி பிரித்துக் காட்டியது. படை வீரர்கள் யாரை, எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தது. நடப்பது ஸ்பெயினுக்கும் அமெரிக்காவுக்குமான யுத்தம் என்று சுட்டிக்காட்டியது.

முறையாக பயிற்சியளிக்கப்பட்ட படை வீரர்கள், கெரில்லா வீரர்கள் ஆகிய இருவரோடும் இணைந்து பணியாற்றினார் பொலிவார். இவர்கள் சில சமயம் தமக்குள்ளும் மோதிக்கொண்டனர். அவர்களை ஒழுங்குபடுத்தி ஒரே திசையில் செலுத்துவது கடினமான காரியம். பொலிவார் ஒரே சமயத்தில் படை வீரராகவும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்ததால் இந்த அசாத்தியமான காரியம் சாத்தியப்பட்டது. இந்த இடத்தில் ஜான் லிஞ்சின் வர்ணனை பொருத்தமானது. ‘பொலிவார் அதிகாரத்தையும் சுதந்தரத்தையும் ஒரே சமயத்தில் கோரினார். அவர் ஆட்சி புரிய விரும்பினார். மற்றொரு பக்கம் விடுவிக்கவும் விரும்பினார். ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காகவே அவர் போரிடவேண்டியிருந்தது.’

அந்த வகையில், போர்க்களத்தைக் கடந்தும் பொலிவாரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் இருக்கின்றன.

(அடுத்த பகுதி : பொலிவார் : புரட்சி வீரன்)

பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு

800px-Olaichuvadiபறையர்கள் /அத்தியாயம் 15

பறையர்கள் கிராமப் பொதுச் சபையில் இடம் பெற்றிருந்தனர். வரியை நிர்ணயிப்பதிலும் தமது கிராமப்பகுதி எந்த மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதை நிர்ணயிப்பதிலும் இவர்கள் முடிவுகளை மன்னர்கள் கேட்டுத் தெரிந்துகொண்டனர். பொதுச் சபையில் இடம் பெற்ற இம்மக்கள் ‘பறை முதலி’ என்ற பெயரைப் பெற்றுள்ளனர். ‘முதலி’ என்ற சொல்லுக்கு ‘முதல்வன்’ என்ற பொருள் இருந்தது சிலர் மன்னரின் கடற்படையிலிருந்தும், காவலராக இருந்தும் பணியாற்றியுள்ளனர். ‘ஐநூற்றுப் பறையர்’ என்ற பெயர் ஐநூறு வீரர்கள் அடங்கிய படை என்று தெரிகிறது. பறையர்களுக்கும் ஒரு காலத்தில் வள்ளுவநாடு, புலையர் நாடு போன்ற நாடுகள் இருந்து வந்தன. ‘நாஞ்சில் வள்ளுவன்’ போன்ற குறுநில மன்னர்களும் இருந்துள்ளனர்.

பழங்குடியினரான ஆதி திராவிடர்களுக்கு கிராமத்தின் எல்லைகள் நன்கு தெரிந்திருந்தன. இந்த அடிப்படையில் இவர்களில் சிலர் கிராம அடிப்படை ஊழியர் பதவிகளில் இருந்து வந்துள்ளனர். இன்றும் பலர் அந்தப் பதவிகளைப் பெற்று வருகின்றனர். இவர்கள் வாழ்ந்த பகுதிகள் பழங்கால கிராம ஏடுகளில் சேரி, நத்தம், புறம்போக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளை அவர்களிடமிருந்து எடுக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தமிழகம் முழுவதும் குடியிருப்புக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் இரண்டு பெயர்களில் அழைக்கப்பட்டன. ஒன்று கிராமம் என்ற வடமொழிப் பெயர். மற்றொன்று நத்தம் என்ற சேரிப்பகுதி. இவர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் நெடுங்காலத் தொடர்பு உண்டு என்பது இதனால் தெரிய வருகிறது.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வெள்ளாளர் என்பவர் தொண்டை மண்டலத்தை ஆதிக்கம் செலுத்திய போது, பறையர்களுக்கு நிலத்தின்மீது இருந்த உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நிலைத்த குடிகளாக வாழ்ந்த மக்கள் இவர்களில் பல குடியினர் இலங்கைக்கும், மொரிஷியஸ் தீவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும், மேற்கு இந்தியத் தீவுக்கும், பிஜி தீவுக்கும் குடிபெயர்ந்து சென்று வாழ்ந்து வருகின்றனர்.
பறையர்கள் தங்களுக்கென தனி புரோகிதர்களையும், ராணுவத் தலைவர்களையும் கொண்டு மிக உயர்ந்த சமூக அமைப்போடு வாழ்ந்து வந்தனர். பறையர்கள் சில சாதியினருக்கும் சமயக் குருவாக இருந்து பல சடங்குகளையும் நடத்தியுள்ளனர். எனவே சில பழங்கோயில்களில் அவர்களுக்குத் தனித்த மரியாதையும் அளிக்கப்பட்டிருக்கிறது.

அடல் அருந் துப்பின்………………..
……………….குருந்தே முல்லை என்று
இந் நான்கு அல்லது பூவும் இல்லை;
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே,

சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு,
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந் நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி,

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென,
கல்லே பரவின் அல்லது,
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே

திணை: வாகை. துறை: மூதின் முல்லை. பாடியவர் மாங்குடி கிழார். குரவு, தளவு, குருந்து, முல்லை என்ற நான்கு வகைகள். வேறு சிறந்த பூக்கள் கிடையாது. வரகு, திணை, கொள், அவரை என்பனவன்றி வேறு சிறந்த உணவுப் பொருள்கள் கிடையாது. துடியன், பாணன், பறையன், கடம்பன் இவரையன்றிச் சிறந்த குடிகள் கிடையாது. பகைவர் படைகளின் முன்னின்று மேலெதிர் வராதவாறு தடுத்து வென்று தாமும் வீழ்ந்து நடுகல்லானவரின் நடுகல்லைத் தொழுவதின்றி நெல்லும் பூவும் சொரிந்து வழிபடச் சிறந்த கடவுளும் வேறு கிடையாது. (இவை எல்லாம் புலவர் குறித்துப் பாடும் காட்டுத் தலைவன் நாடு பற்றியவையாகும்) எனக் குறிப்பிடப்படுகிறது.

பிறகுடிகள் பல இருந்தாலும் ‘இந்நான்கல்லது குடியும் இல்லை’ என்பது துடி கொட்டுபவன், யாழ் மீட்டுவோன், பறையறைபவன், வெறியாடுபவன் ஆகிய இவர்கள், மறவர்கள் போருக்குக் கிளர்ச்சிக்கு கொண்டு செல்லுதல் முதலாக, வாகைசூடிப் பரிசுப்பெறுதல் ஈறாக உடனிருந்து மகிழ்வித்தும், மறம்பாடியும் பணிசெய்வோர் என்பதுடன் இவர்களே தொன்மைக் குடிகளாக கூடி வாழ்ந்த கலைக் குடிகளாக வாழ்ந்தவர் என்று சிறப்புடன் குறிப்பிடப்படுகிறது.

‘பறையர்’ என்பது தமிழ்நாட்டில் இயற்கையாக ஏற்பட்ட பெயர். பறை என்பது பேரிகை. பூர்வ காலத்தில் நமது ராஜாக்கள் போர் செய்யப்போகும்போது ஜயபேரிகை கொட்டிச் செல்லும் தொழிலை பறையர் செய்து வந்தபடியால் பறையர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று என்று மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார்.

திருவள்ளுவர் காலத்திலும், சங்ககாலத்திலும் பறையர் சமுதாயம் செல்வாக்கும் பெருமையும் வாய்ந்ததாகவும் மேம்பட்ட சமுதாயமாகவும் இருந்தது என்பது உண்மை வரலாறு. பறையர் குடி தமிழ்நாட்டின் நிகரற்ற குடியாக 3000 ஆண்டுகளுக்கு முன்னரே விளங்கியதென 335வது சங்கப்பாடல் புறநானூறு கூறுகின்றது. இதை அறிந்துதான் புங்கனூர் இராமண்ணா, ‘பறையர் என்றால் அவர்தான் தமிழர்; தமிழர் என்றால் அவர்தான் பறையர்’ என்று கூறி, பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு, தமிழ் நாட்டின் வரலாறு, பாரத தேசத்தின் வரலாறு, பறையர் வரலாறு முழுமையாகத் தெரிந்து விட்டால் தமிழர் வரலாறும், தமிழ் நாட்டின் வரலாறும் முழுமையாகத் தெரிந்து விடும். தமிழ்நாட்டின் வரலாறு தெரிந்துவிட்டால் இன்றைய இந்தியாவின் வரலாறு தலைகீழாய் மாறிப்போகும் என்று குறிப்பிடுகிறார். (நூல் – பறையர் ஓர் வரலாற்றுச் சுருக்கம்).

இன்று ஷெட்யூல் சாதிகள் என்று சொல்லப்படும் மக்கள் தொகுதி பழங்காலத்தில் குலங்களாகவே இருந்தன. இன்று சில சலுகைகளை முன்னிட்டு அவற்றைச் சாதிகள் என்று அரசியல் சட்டத்திலும் வழக்கத்திலும் சொல்கிறோம் என்று நமது உச்ச நீதிமன்றம் மண்டல் கமிஷன் தீர்ப்பில் சுட்டிக் காண்பித்திருக்கின்றது. காரணம் இங்கு அந்நியர்களால் வருணாசிரம சாதி முறை புகுத்தப்பட்டபொழுது, அதை எதிர்த்தவர்கள் அன்று வலிமை வாய்ந்த பறையர் போன்ற மூத்த தமிழ்க்குடியினர் ஆவர். ஆகவே மிகவும் தீமை வாய்ந்த சாதி முறையை எதிர்த்தவர்களையும் சாதிகள் என்று சொல்வது முற்றிலும் பொருந்தாது என்பதே உச்சநீதிமன்றம் கூறும் காரணமாகும்.

31.12.1918 அன்று ஆங்கிலப் பேரரசின் தூணாக விளங்கிய மேன்மை தங்கிய சர். அலெக்சாண்டர் அவர்கள் இந்திய அரசுக்கு பார்ப்பனர், பறையர் ஆகிய இரு சமுதாயங்களையும் பல்வேறு கோணத்தில் ஆராய்ந்து குறிப்புரை ஒன்று சமர்ப்பித்தார். அந்தக் குறிப்புரையில் பார்ப்பனரை வெறும் பார்ப்பனர் என்றுதான் குறிப்பிடுகின்றார். ஆனால் பறையர்களைக் குறிப்பிடும்போது, ‘பெருமை வாய்ந்த பெரிய பறையர் சமுதாயம்’ என்று குறிப்பிடுகின்றார். அவர் பறையர் சமுதாயத்தினரைச் சாதி என்று குறிப்பிடவில்லை என்பது உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு உரம் சேர்ப்பதாக இருக்கின்றது. (அம்பேத்கர் எழுத்தும், பேச்சும் அடங்கிய 22வது பாகம் 444ம் பக்கம்).

ஆகவே, ஆரியர்கள் இங்கு காலடி எடுத்து வைத்து தமது கேடு விளைவிக்கும் வருணாசிரம தர்ம சாதிமுறையைப் புகுத்த முயன்றனர். தமிழ்ப் பண்பாடுகளையும் உயரிய மரபுகளையும் உயரப் பிடித்துக் கொண்டு கேடுகெட்ட சாதிமுறையைக் கடுமையாக எதிர்த்தவர்கள் பெருமை மிக்க பறையர்கள்.

0

 

ஓடு மில்கா ஓடு!

Bhaag_Milkha_Bhaag_SoHaMஇந்த ஒற்றை வாக்கியம்தான் படமே.

மில்கா சிங் இந்தியாவின் நம்பர் ஒன் ஓட்டப் பந்தயவீரர். ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை நூலிழையில் இழந்தவர். இந்தியா, தன் வலிமைக்கு நியாயம் செய்யும் வகையில் இன்னும் ஒலிம்பிக்கில் எந்தவொரு சாதனையையும் செய்து காட்ட முடிந்திருக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான் 1960-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மில்கா சிங் நான்காவது இடத்துக்கு வந்ததே மிகப் பெரிய சாதனையாக இருந்துவருகிறது. அந்தப் போட்டியில்கூட இறுதிப் போட்டிக்கு முன்பாக நடந்த சுற்றுகளில் மில்கா சிங் தன் போட்டியாளர்கள் அனைவரையும் வென்றுகாட்டியிருந்தார். இறுதிப் போட்டியில் கூட 250 மீட்டர் தூரம் வரையில் அவரே முன்னிலையில் இருந்திருக்கிறார். ஆனால், இறுதியில் நூலிழையில் தோற்றுவிட்டிருக்கிறார். இதற்கான காரணமாக மில்கா சிங் சொன்னது, 250 மீட்டர் ஓடியிருந்த நிலையில் அதே வேகத்தில் தொடர்ந்து ஓட முடியாது என்று மனதுக்குள் சிறு அச்சம் தோன்றியிருக்கிறது. சக போட்டியாளர்கள் எவ்வளவு  பின் தங்கி இருக்கிறார்கள் என்று ஒரு வினாடி லேசாகத் திரும்பிப் பார்த்திருக்கிறார். அந்த ஒரு வினாடியே முதலிடத்தில் இருந்த அவர் நான்காவது இடத்துக்குத் தள்ளிவிடப் போதுமானதாக இருந்திருக்கிறது. முதலிடம் பெற்றவர் 44.9 வினாடிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். மில்கா சிங் 45.73 வினாடிகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். ஒரே ஒரு நொடி மட்டுமே வித்தியாசம்.

அந்தத் தோல்வி மில்கா சிங்கின் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத தோல்வியாக ஆகிவிட்டது. இந்திய விளையாட்டுப் போட்டி சரித்திரத்தில் அதுவே ஒரு இந்தியர் எட்டிய ஆக உயர்ந்த வெற்றியாகவும் பல வருடங்களாக இருந்திருக்கிறது.

மில்கா சிங்கின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க முடிவு செய்தவர்கள் அந்த ஒலிம்பிக் போட்டியில் அவர் தோற்றதற்கு, அவருடைய வாழ்க்கையில் நடந்த ஏதேனும் ஒரு சம்பவம்  காரணமாக இருந்திருக்குமா என்று கற்பனைச் சுதந்தரம் எடுத்துக்கொண்டு சிந்தித்திருக்கிறார்கள் அந்தப் படைப்புச் சுதந்தரமே இந்தப் படத்தை சுவாரசியமான இந்தியப் படமாக ஆக்கியிருக்கிறது. ஆனால், மில்கா சிங்கின் வாழ்க்கையில் நடக்காத காதல்கள், இந்திய ராணுவத்தில் இருந்தபோது நடந்திராத வில்லனிய எதிர்ப்புகள் என படைப்பு சுதந்தரத்தை கொஞ்சம் அதிகமாகவே எடுத்துக் கொண்டதன் விளைவாக தரமான, சர்வதேச பார்வையாளர்களின் பார்வையில் இந்தப் படம் வெறும் ஓர் இந்தியப் படமாகவே முடங்கியும் விட்டிருக்கிறது.

இந்தியா துண்டாடப்பட்ட கொடூர நிகழ்வில் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லீமாக இல்லாத ஒரே காரணத்தினால் வெட்டிக் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானவர்களில் மில்காவின் குடும்பமும் அடங்கும். மில்கா சிங்கூட அந்தப் படுகொலையில் இருந்து தப்பியது பெரும் அதிசயமே. தன் கண் முன்னே தன் தந்தை வெட்டிக் கொல்லப்பட்டத்தைப் பார்க்க நேர்ந்த அப்பாவி அவர். அப்போது 12 வயதுதான் அவருக்கு ஆகியிருந்தது. பஞ்சாபில் ஒரு குக்கிராமத்தில் வசித்து வந்தார்.

நிற வெறி பிடித்த வெள்ளை கனவான்கள், இந்திய வரைபடத்தை மேஜையில் கிடத்தி ஒயின் அருந்தியபடியே, இந்தப் பக்கமெல்லாம் இந்தியாவுக்கு. அந்தப் பக்கமெல்லாம் பாகிஸ்தானுக்கு… என்று விக்டோரியா மகாராணியை வாழ்த்தியபடி, பிரிவினைக் கோட்டை வரைந்திருந்தனர்.

மில்கா சிங்கின் வீடு அந்த மரணக்கோட்டுக்கு அந்தப் பக்கம் இருந்தது. ஓட்டத் திறமையால்தான் அன்று அந்தக் கோட்டை அவரால் தாண்ட முடிந்திருந்தது. அவனுடைய அப்பா, உயிர் பிரியும் தருணத்தில் மகனைப் பார்த்து, ஓடு மில்கா ஓடு என்று அடி வயிற்றில் இருந்து கத்திய அலறல்தான் மில்காவை வாழ்நாள் முழுவதும் துரத்தி வந்தது. ஒலிம்பிக்கில் அவனுடைய பயிற்சியாளரும் அடி வயிற்றில் இருந்து ஆக்ரோஷமாக குரல் எழுப்பியபடி, ஓடு மில்கா ஓடு என்று சொன்னதைக் கேட்டதும் மில்காவுக்கு உயிர் பிரியும் தருணத்தில் தந்தை அலறியது நினைவுக்கு வந்துவிடுகிறது. ஒட்டு மொத்த உடலும் அதிர்கிறது. ஒரு வினாடி, ஒரே ஒரு வினாடி தான் ஓடிக் கொண்டிருப்பது ஒலிம்பிக் போட்டியில் என்பது மறந்துபோய், இல்லாத தந்தையைத் திரும்பிப் பார்க்கிறான். அந்த ஒரு நொடியில் கால்களில் ஏற்பட்ட தளர்ச்சி அவனிடமிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைத் தட்டிப் பறித்துவிடுகிறது.

நிஜ வாழ்க்கையில் தோற்றதற்கான காரணம் வேறென்றாலும் இந்தக் கோணத்தில் அதைப் பார்த்தது ஏற்றுக்கொள்ளத் தகுந்த விஷயமே. மில்கா சிங்கின் வாழ்க்கையை அப்படியே எடுப்பதாக இயக்குநர் சொல்லியிருக்கவும் இல்லை. எனவே, இந்த மாற்றம் ஒருவகையில் நியாயமானதே.

ஆனால், இது மிகவும் அபாயமான ஒரு மாற்றம்மும் கூட. ஓட்டப் பந்தய வீரனின் உத்வேகமூட்டும் கதை என்பதை அது பிரிவினையில் பாதிக்கப்பட்ட ஒருவன் அதில் இருந்து மீண்டெழுந்த கதையாக மாற்றுகிறது. இது மிகவும் எச்சரிக்கையாகக் கையாளவேண்டிய விஷயம். வெறும் விளையாட்டு அல்ல. இந்த இடத்தில்தான் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருந்த ஓம்பிரகாஷ் மெஹ்ரா தடுமாறியிருக்கிறார்.

இந்தியா துண்டாடப்பட்ட போது நடந்த கொடூர நிகழ்வுகளை மையமாக வைத்து திரைப்படத்தைக் கொண்டு செல்ல மிகுந்த துணிச்சலும் நேர்மையும் தேவைப்படும். இயக்குநரோ மில்கா சிங்கின் வாழ்க்கையை வைத்து சேஃப் கேம் விளையாடத் தீர்மானித்திருக்கிறார். எனவே, பிரிவினை நிகழ்வை நாலைந்து நிமிடக் காட்சிகளில் மட்டுமே காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார்.

இதற்குப் பின்னால் மிகப் பெரிய அரசியலும் இருக்கிறது. மில்கா சிங்கின் கிராமத்தினரைக் கொடூரமாகக் கொலை செய்தவர்கள் முஸ்லீம்கள். ஆனால், படத்தில் அந்தக் கொலைகாரர்கள் வரும்  காட்சிகள் சில் அவுட்டிலும் இஸ்லாமிய அடையாளம் எதுவுமே இல்லாமலும் காட்டப்படுகின்றன. பாகிஸ்தானில் இந்தியரால் கொல்லப்பட்ட குடும்பத்தில் இருந்து ஒருவர் இப்படி வெற்றி பெற்றிருந்தால், இந்திய குறிப்பாக இந்து அடையாளத்தை அழுத்தமாகவே காட்டியிருப்பார்கள். இந்தியாதான் செக்குலர் பூமியாயிற்றே. எனவே, ஒலிம்பிக் தோல்விக்கு பிரிவினைக் கொடூரத்தைப் படைப்புச் சுதந்தரத்துடன் இணைத்த இயக்குநர், அரசியல் தந்திரத்துடன் முஸ்லீம்களை நேரடியாகக் காட்டாமல் பதுங்கிக் கொண்டுவிடுகிறார்.

மில்கா சிங்கின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? இது தொடர்பாக இயக்குநருக்குச் சரியான புரிதல் இல்லை. மில்கா சிங்குக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு. இந்தியாவின் பெருமையை சர்வதேச அளவில் நிலை நாட்டிய சொற்ப சாதனையாளர்களில் ஒருவர் என்பது ஒன்று. இன்னொன்று பிரிவினை போன்ற உலகிலேயே மிகக் கொடூரமான நிகழ்வில் இருந்து மீண்டெழுந்து மனித இனத்துக்கே உத்வேகமாகத் திகழ்பவர் என்பது இரண்டாவது அடையாளம். முதலாவதை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருந்தால் அது வெறும் ஒரு ‘டாக்குமெண்டரி’ போல் இருந்திருக்கும். இரண்டாவதை மையமாக வைத்து படத்தை எடுத்திருந்தால் அது அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்கடிகளை உருவாக்கியிருக்கும். படத்தை வெளியிடவே முடிந்திருக்காது. எனவே, இயக்குநர் இரண்டையும் கலந்து கட்டி படத்தை எடுத்திருக்கிறார். இதில் வெளிப்படுவது அவருடைய வணிக சாமர்த்தியம் மட்டுமே. கலைத் திறமை, நேர்மை, உண்மை எல்லாம் பின்னங்கால் பிடறியில் பட எங்கோ ஓடி ஒளிந்துவிட்டன.

மில்கா சிங்கின் வாழ்க்கையை பிரிவினை நிகழ்வுகளையும் அது சார்ந்த உணர்வுகளையும் மையமாக வைத்தே அருமையாக எடுத்திருக்க முடியும். கொடூரமான எதிரியை எப்படி வெல்வது என்பதும் மனித இனம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம்தானே. எதிரியைக் கொல்வதன் மூலமும் வெல்லலாம். அவனை நண்பனாக்கிக் கொள்வதன் மூலமும் வெல்லலாம். இந்தப் படத்தில் அதற்கான அற்புதமான வாய்ப்பும் இருந்தது.

பாகிஸ்தானுடன் நட்புக்கரத்தை நீட்டும் நோக்கில் ரோம் ஒலிம்பிக் போட்டி நடந்த அதே 1960 வருடத்தில் பாகிஸ்தான் வீரர்களும் இந்தியவீரர்களும் பங்கெடுக்கும் போட்டி ஒன்று பாகிஸ்தானில் நடத்தப்பட்டிருக்கிறது. படத்தில் அதுவே க்ளைமாக்ஸாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குப் பின்னால் எந்தவித வலுவான உணர்வையும் வைக்காததால் அது வெறும் ஓட்டப் பந்தயமாகவே தேங்கிவிட்டிருக்கிறது. அந்தப் போட்டியில் மில்கா சிங் முதலில் கலந்து கொள்ள மறுக்கிறார் என்றபடிதான் படமே ஆரம்பிக்கிறது. பாகிஸ்தானுக்குச் செல்லும் இந்திய அணிக்கு அவரைத் தலைமை தாங்கும் படிக் கேட்டுக்கொள்ள இந்திய அதிகாரிகள் புறப்பட்டுச் செல்லகிறார்கள். அவர்களுக்கு மில்கா சிங்கின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை அவருடைய பயிற்சியாளர் சொல்வதாகத்தான் படமே நகர்கிறது.

ay_114007023பிரிவினைக் கால வேதனைதான் மில்கா சிங் பாகிஸ்தான் செல்ல மறுப்பதற்கான காரணம் என்பதும் சொல்லப்படுகிறது. ஆனால், திரைக்கதையோ மில்காவின் வாழ்க்கையில் பிரிவினையின் தாக்கம் துளியில் இல்லாதவகையில் நகர்கிறது. இந்த இடத்தில்தான் படத்தின் ஃபோகஸ் சிதைகிறது. க்ளைமாக்ஸ் பிரிவினையை நோக்கிக் குவிகிறது. முந்தைய காட்சிகள் வேறு எங்கோ அலைகின்றன. அவருடைய வாழ்க்கையை ஒரு இயல்பான இந்தியனுடைய வாழ்கையாகவே படம் முழுவதும் காட்டிவிடுகிறார்கள். வேலை வெட்டியில்லாமல் ஊருக்குள் லந்து செய்கிறார். அசட்டு காவலர் ஒருவருடன் சில்லரை மோதலில் ஈடுபடுகிறார். அப்பறம் காதல் இல்லாமல் ஏது இந்தியப்படம்… எனவே, வெட்டியாக ஊரைச் சுற்றும் ஒருவனைக் காதலிக்கும் பேரழகி படத்தில் நுழைக்கப்படுகிறார். அது போதாதென்று, தவம் செய்யும் முனிவர்களைக் கலைக்க மோகினிகள் வருவார்களே. அதுபோல் சர்வதேச போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று பயிற்சி செய்யும் மில்கா சிங்கைப் படுக்கையில் தள்ளும் அயல் நாட்டு மோகினி வேறு வருகிறார். அப்பறம் வில்லன்கள் இல்லையென்றால் போரடிக்குமே… எனவே, இந்திய ராணுவத்தில் இருக்கும் சிலர் கதாநாயகனுடைய காலில் பூட்ஸ் ஆணியால் ரத்தக் களறி ஆக்குகிறார்கள். இவை எல்லாம் மில்கா சிங் என்ற சாதனையாளரின் வாழ்க்கையை கேவலம் ஒரு டப்பா திரைப்பட நாயகனின் வாழ்க்கையாகக் குறுக்கிவிடுகின்றன.

பிரிவினைக் கொடூரத்தை அதன் அரசியலை நேரடியாக எதிர்கொள்ள பயந்ததால் வந்த வினைகள் இவை. பிரிவினையில் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் இருக்கும்போதும் ஆணாதிக்கம் வெளிப்படுவதை நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அகதிகள் முகாமில் ஒருவருடைய வீடு என்பது வெறும் ஒரு தார் பாலின் துணியால் உருவாக்கப்பட்ட டெண்ட்தான். அதிர்ஷ்டவசமாக, ஒரு குடும்பத்தில் நாலைந்து பேர் தப்பிப் பிழைத்திருந்தாலும் அவர்களுக்கு அந்த ஒற்றை தார்பாலின் குடைதான் வீடு. மில்காவின் அக்காவும் அப்படியான ஒரு குடிலில்தான் தன் கணவருடன் இருக்கிறார். இந்த நிலையில் தம்பி மில்கா சிங்கும் வந்துவிடவே பிரைவஸிக்கான இடம் குறைந்துவிடுகிறது. ஒரு திரையால் தடுப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்தப் பக்கம் மில்கா சிங். அந்தப் பக்கம் தம்பதியினர். இந்த நிலையில் இரவில் அக்காவின் கணவன் அவளை உடலுறவுக்கு அழைக்கிறான். தம்பி திரைக்கு மறு பக்கத்தில் இருப்பதைச் சொல்லிக் காட்டி அவள் மறுக்கிறாள். கணவனோ அவளை ஓங்கி அறைந்து புணர்கிறான்.

அகதிகளாக இருக்கும் நிலையிலும் ஆணாதிக்கம் வெளிப்படுவதை அந்த ஒரு காட்சியில் வெகு நுட்பமாகச் சித்திரித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரங்கள் சீக்கியர் என்பதால் அவரால் முடிந்திருக்கிறது. இந்துவாக இருந்திருந்தாலும் அது சாத்தியமாகித்தான் இருக்கும். முஸ்லீம் கதாபாத்திரமாக் இருந்தால் நிச்சயம் அப்படிக் காட்டியிருக்கமாட்டார்கள். நம்மவர்களின் கலைத் தூரிகைகள் எல்லாம் எந்தச் சித்திரங்களை மட்டும் சுதந்தரமாகத் தீட்டும் என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தானே.

bhaag-milkha23ஒரு நேர்மையான கலைஞன் நிச்சயமாக இந்தப் படத்தை வேறொரு கோணத்தில்தான் எடுத்திருப்பார். பிரிவினையால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன்… அவனுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அந்தக் கொடூரக் காட்சிகளே அவனைத் துரத்துகின்றன. ஓடத் தொடங்குகிறான். ஓட்டத்தை நிறுத்திவிட்டு கடந்த காலத்தை ஒரு நொடி திரும்பிப் பார்த்தாலும், ஓடு மில்கா ஓடு என்று தந்தையின் அலறலே அவனைத் துரத்துகிறது. தன் வெறியை எல்லாம் ஓட்டப் பந்தயத்தில் காட்டுகிறான். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் எதிரிகளின் தலையையும் கழுத்தையும் உடம்பையும் மிதித்தபடி முன்னேறுகிறது. எவ்வளவு ஓடியும் எதிரிகளைக் கடக்க அவனால் முடிவதே இல்லை என்று காட்டலாம். அல்லது அவனுடைய கிராமத்தினரின் உடல்கள் அவனது பாதையெங்கும் மறித்துக் கிடக்கின்றன. அவற்றில் இருந்து தப்புவதற்காக ஓடுகிறான். அவன் எவ்வளவு தூரம் ஓடினாலும் பிணங்களின் வரிசை கடக்க முடியாததாக அவன் கண் முன்னே நீண்டு செல்கிறது.

தன் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழிவாங்க கொள்ளைக்காரனாகிறான். அவனுடைய சகோதரனோ ராணுவத்தில் சேரு என்கிறார். அதுவும் நல்ல வழிதான் என்று அதில் சேருகிறான். அங்கு அவனுடைய ‘ஓட்டத் திறமை’ பிறருக்குத் தெரிய வருகிறது. ஓடுகிறான். ஓடுகிறான். ஓடிக் கொண்டே இருக்கிறான். இந்திய அளவிலான போட்டிகள், ஆசியா அளவிலான போட்டிகள், காமன் வெல்த் போட்டிகள் என அனைத்திலும் வெற்றிவாகை சூடுகிறான். அவன் ஓட ஆரம்பித்ததுமே ஓடு மில்கா ஓடு என்ற தந்தையின் கதறல் கேட்கிறது. அதுவே அவனுள் ஒருவித வெறியை ஊட்டுகிறது. அனைத்து எல்லைக்கோடுகளையும் கடந்து ஓடிக்கொண்டே இருக்கிறான். தன் மனத்தில் இருக்கும் கொலை வெறியை பந்தய வெறியாக மாற்றிக்கொள்கிறான்.

இந்த நேரத்தில்தான் ஒரு அதிசயம் நடக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் கடந்த காலப் பகைமையை மறந்து புதியதொரு எதிர்காலத்தைக் கனவு காணத் தொடங்குகின்றன. நேரு, மில்கா சிங்கை இந்திய அணியின் தலைவராக ஆக்குகிறார். 1958லேயே மில்கா சிங் பத்மஸ்ரீ விருது பெற்று இந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக ஆகிவிட்டிருந்தார். இப்போது மில்காவுக்கு பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. மில்காவின் மனத்தில் மீண்டும் கொலை வெறி எழுகிறது. சொந்த கிராமத்துக்குச் சென்று தன் தந்தையைத் தன் கண் முன் வெட்டிக் கொன்றவனைக் கொல்லத் தீர்மானிக்கிறார். ஆனால், இப்போதோ அவர் பழைய மில்கா சிங் அல்ல. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். இன்னும் சில மாதங்களில் ஒலிம்பிக் போட்டிவேறு வரப்போகிறது. ஒரு மனம் பாகிஸ்தான் சென்று பழி வாங்கு என்கிறது. இன்னொரு மனம் போகாதே என்கிறது. பயிற்சியின்போதும் ஓய்வின் போதும் கொலை செய்தது போலவும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுபோலும் மாறி மாறி எண்ணங்கள் துரத்துகின்றன. பாகிஸ்தானுக்கு விளையாட்டு வீரனாகச் சென்றால் கொலைகாரனாகத்தான் திரும்புவோமென்று தெரிகிறது. எனவே, வரவில்லை என்று சொல்லிவிடுகிறார்.

விஷயம் நேருவின் காதுகளை எட்டுகிறது. அவர் மில்கா சிங்கை அழைத்துப் பேசுகிறார். இதோ பார் மில்கா சிங்… உன் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். பொதுவாக எல்லா நாடுகளும் சுதந்தரத்துக்கான போராட்டத்தில்தான் பெரும் இழப்பை சந்திக்கும். நம் அதிர்ஷ்டம் நம்மிடம் காந்தி இருந்தார். நாம் சுதந்தரப் போராட்டத்தில் பெரிதாக எதையும் இழக்கவில்லை. ஆனால், நாம் முழுவதும் அதிர்ஷ்டசாலிகள் அல்ல. சுதந்தரம் கிடைத்த மறு நொடியில் இருந்து நாம் போட ஆரம்பித்த சகோதரச் சண்டையில் இந்த உலகில் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வன்முறையில் பெரு வெள்ளத்தை மடை திறந்துவிட்டிருக்கிறோம். உன் குடும்பத்தின் ரத்தமும் அந்த ஆறில் கலந்திருக்கிறது. உன் கண்ணீரும் அதில் கலந்திருக்கிறது. இது பதிலடி கொடுக்கும் நேரம். நம் பதிலடி என்பது பகைமையைக் கொல். பகைவனை அல்ல என்று சொன்ன காந்தியின் பதிலடி. எதிரியை அன்பால் வெல்லுவோம். செல் பாகிஸ்தானுக்கு செல். இந்தியாவின் தூதனாக நட்பின் தூதுவனாகச் செல். நீ வெறும் ஒரு விளையாட்டு வீரன் மட்டுமல்ல. பிரிவினையால் பாதிக்கப்பட்டவனும் கூட. ஸ்நேகத்தின் கரத்தை நீட்டச் சரியான நபர் நீதான். பாதிக்கப்பட்டவனுக்குத்தான் மன்னிக்கும் பாக்கியம் கிடைக்கும். இனிமேல் இதுபோல் ஒரு பயங்கரம் என்றுமே எங்குமே நடக்ககூடாது. போ. போய் பகையின் கடந்த காலத்தை அங்கு புதைத்துவிட்டு  சகோதரத்துவத்தின் எதிர்காலத்தை வாங்கிக் கொண்டு வா… என்று தோளோடு தோள் அணைத்து ஆறுதல் சொல்லி அனுப்புகிறார்.

மில்கா சிங் அந்த வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ச்சி அடைகிறார். பாம்பு சிறுகச் சிறுகச் சேகரித்துவரும் விஷமெல்லாம் ஒரு கட்டத்தில் மாணிக்கக்கல்லாக மாறுவதுபோல் மில்கா சிங் அது வரை மனதுக்குள் தேக்கி வந்த வேதனையும் பகைமையும் அன்பாக, நட்பாக மாறுகிறது. மில்கா சிங் பாகிஸ்தான் செல்கிறார்.

ஆனால், பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் அவரை மீண்டும் மூர்க்கம் கொள்ள வைக்கின்றன. பாகிஸ்தானில் பயிற்சியாளர்களும் பத்திரிகை நிருபர்களும் பிரிவினை விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்தி அவனைச் சீண்டுகிறார்கள். இரவில் தனிமையில் இருக்கையில் மில்காவின் மனம் பேதலிக்கிறது. ஒரு வாளை எடுத்துக்கொண்டு ஜீப்பில் ஏறி தன் சொந்தகிராமத்துக்குச் செல்கிறான். ஜீப்பை சற்று தொலைவிலேயே நிறுத்திவிட்டு வாளை உருவிக் கொள்கிறான். நிலவின் ஒளியில் அந்த வாள் பளபளக்கிறது.

தன் தந்தையைக் கொன்றது அதே கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்தான். அவருடைய வீட்டுக் கதவை உடைத்தபடி ஆவேசமாக பாய்கிறார். அங்கே அவர் காணும் காட்சி அவரை அதிர்ச்சியில் உறையச் செய்கிறது. மில்காவின் தந்தையை வெட்டிக் கொன்றவர் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக இருக்கிறார். வாளுடன் வந்த மில்காவைப் பார்த்ததும் அவருடைய முகம் பிரகாசமாகிறது. தட்டுத் தடுமாறி கீழே விழுந்து தரையோடு தரையாக தேய்த்து இழுத்தபடியே வந்து மில்காவின் காலைப் பிடித்தபடி கதறி அழுகிறார்.

எளிய மனிதர்கள் அப்படிப்பட்டவர்கள்தானே. அவர்களுக்கு அடிப்படைவாத, சித்தாந்த வெறியூட்டல்கள் ஏதும் இருந்திருக்காதே. வன்முறை வெள்ளம் பொங்கிப் பிரவகிக்கும்போது அவர்களும் அதில் அவர்களை அறியாமலேயே அடித்துச் செல்லபட்டுவிடுவார்கள். மில்கா சிங்கின் தந்தையைக் கொன்றவரும் அப்படியான ஒருவராகவே இருந்ததாக எடுத்துக்கொள்ளலாம்.

அன்று என்னை ஏதோ ஒரு சாத்தான் பிடித்து ஆட்டிவிட்டது. என் சகோதரன் ஒருவன் வெட்டப்பட்ட செய்தி கேட்டதும் கோபம் தலைக்கேறிவிட்டது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தேன். சுய நினைவு வந்து பார்த்தபோதுதான் என் கையில் ரத்தம் தோய்ந்த வாள் இருப்பது தெரிந்தது. அன்றில் இருந்து ஒவ்வொரு நொடியும் என்னால் கொல்லப்பட்டவர்களில் மரண ஓலம் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. உன்னை ஒரு நொடி கூட நிற்கவிடாமல் துரத்தும் அதே அலறல்தான் என்னை ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் முடக்கிவிட்டிருக்கிறது. என்னை மன்னித்துவிடு… இல்லை எனக்கு மன்னிப்பு கிடையாது. நீ வாளுடன் வந்தது சரிதான். என்னை வெட்டிக் கொன்றுவிடு. கைக்குக் கை… கண்ணுக்குக் கண்… உயிருக்கு உயிர்… கொன்றுவிடு மில்கா என்னைக் கொன்றுவிடு என்று காலில் விழுந்து கெஞ்சுகிறார்.

மில்காவின் கையில் இருந்த வாள் நழுவிக் கீழே விழுகிறது. அவரைத் தூக்கி நிறுத்தி கண்ணீர் மல்க அணைத்துக் கொள்கிறார். பகைமையைக் கொல் பகவனை அல்ல என்ற காந்தியின் வார்த்தைகள் அவன் காதில் ஒலிக்கின்றன. மெள்ள நிதானமடைகிறான். மறு நாள் நடக்கவிருக்கும் போட்டி பற்றிச் சொல்கிறான். பாக் மில்கா பாக்… நீ ஜெயிக்க வேண்டியவன். நாங்கள் வெற்றிக்கு அருகதையற்றவர்கள். நீ ஜெயித்தாகவேண்டும். பாக் மில்கா பாக் என்று உத்வேகமூட்டுகிறார்.

மறு நாள் போட்டி நடக்கிறது. மில்கா சிங் மனத்தில் எந்தச் சுமையும் இல்லாமல் ஓடுகிறான். இப்போது அவன் பாதையில் மறித்துக் கிடந்த பிணங்கள் எல்லாம் எழுந்து நின்று வழிவிட்டு வெற்றிக் கொடி அசைத்து உற்சாகப்படுத்துகின்றன. அந்த உற்சாகக் களிப்பில் காற்று போல் பறந்து எல்லைக் கோட்டைத் தொடுகிறான். பாகிஸ்தான் அதிபர், பரிசளிப்பு விழாவில், நீ ஓடவில்லை… பற்ந்தாய். இனிமேல் உன்னை ஃபிளையிங் சிங் என்று அழைக்கலாம் என்று பாராட்டுகிறார். இப்போதையை படத்தில் பாகிஸ்தானில் நடந்த போட்டி கடைசியாக வருகிறது. ஒலிம்பிக் போட்டி அதற்கு முன்னதாகவே நடப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

மில்கா சிங்கின் உண்மை வாழ்க்கையில் பாகிஸ்தான் போட்டி 1960 ஜனவரியில் நடக்கிறது. ஒலிம்பிக் 1960 நவம்பரில் நடக்கிறது. மில்கா சிங் தன் வாழ்க்கையில் சிறு சிறு கொள்ளைகளில் ஈடுபட்டுச் சில காலம் திரிந்திருக்கிறார். இராணுவத்தில் சேர்ந்திருக்கிறார். இப்படியாக, சரித்திரத்தைத் துளியும் மாற்றாமலேயே ஒரு திரைக்கதையை எழுதியிருந்தால் படம் தரமான, சர்வதேச பார்வையாளர்களையும் இந்திய பார்வையாளர்களையும் ஒரு சேரக் கவர்ந்திருக்கும். ஆனால், என்ன செய்ய? நம்மவர்களுக்கு இந்திய கைதட்டல்களே பொதுமானதாக இருக்கிறதே.

நிஜ வாழ்க்கையில் பாகிஸ்தான் போகவிரும்பாத மில்கா சிங், தனது தந்தையைப் போல் தான் மதிக்கும் நேரு கேட்டுக் கொண்டதால்தான் பாகிஸ்தான் போகிறார். படத்திலும் அப்படியே காட்டப்பட்டிருக்கிறது. போன இடத்தில் தனது பழைய கிராமத்தைச் சென்று பார்க்கிறார். அங்கு அவருடைய பால்ய கால நண்பனைச் சந்திக்கிறார் (இது நிஜத்தில் நடக்கவில்லை) அவர், முஸ்லீமாக மதம் மாறிவிட்டிருக்கிறார். ஒரு மவுல்விதான் அவரை எடுத்து வளர்த்திருக்கிறார் என்று காட்டுகிறார்கள். மவுல்விகளில் நல்லவர்கள் உண்டு அல்லவா. அது கட்டாயம் சித்தரிக்கப்படவேண்டிய ஒன்றும்கூட அல்லவா? அல்லது பிரிவினைக்கால கொடூரத்தில் இருந்து தப்பிப் பிழைத்த மில்கா சிங்கின் பால்ய கால நண்பனை எடுத்து வளர்த்தது மில்காவின் பெற்றோரைக் கொன்ற அதே நபர் என்று கூடக் காட்டியிருக்கலாம். மதம் தலைக்கேறியபோது கண்ணில் பட்டவர்களை வெட்டிச் சாய்த்திருக்கிறார். மதம் விலகியதும் மனிதனாகியிருக்கிறார். கடைத் தெருக்களில் பிச்சை எடுத்தபடி திரிந்துகொண்டிருந்த மில்காவின் பால்ய கால நண்பனை அவரே எடுத்து வளர்த்து ஆளாக்கியதாகக் காட்டியிருக்கலாம். அப்படி எல்லாம் எதுவுமே செய்யவில்லை. மில்காவின் வாழ்க்கையில் நடக்காத பல நிகழ்வுகளை இந்தித் திரைப்பட இலக்கணத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஒரே கீழான எண்ணத்தினால் புகுத்தி படத்தைக் கீழிறக்கியிருக்கிறார்கள்.

ஆனால், மில்கா சிங்காக நடித்திருக்கும் ஃபர்ஹான் அக்தரின் உழைப்பு பிரமிக்க வைக்கக்கூடியது. லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தால் நாமும் கடுமையாக கஷ்டப்படத் தயார்தான் என்றாலும் அந்தப் பணம் நமக்குத் தரப்படவில்லை. ஃபர்ஹான் அக்தருக்குத்தான் தரபட்டிருக்கிறது. அவரும் கடுமையாக உழைத்து இந்தப் படத்தில் ஒரு ஓட்டப் பந்தய வீரனாகவே வாழ்ந்திருக்கிறார். எனவே அவருக்கான பாராட்டைக் கட்டாயம் தெரிவித்தே ஆகவேண்டும்.

ஆனால், பிரபல சைக்ளிஸ்ட் லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை நீங்கள் படமாக எடுப்பதென்றால், புற்றுநோய் அவருடைய வாழ்க்கையை பாதித்த விதத்தையும் அவர் அதை மீறி வென்று காட்டியதையும்தான் சித்திரித்தாகவேண்டியிருக்கும். அவருடைய வாழ்க்கையின் உந்து சக்தியே அதுதானே. அதுபோல்தான் மில்கா சிங்கின் வாழ்க்கையையும் கலை சுதந்தரத்துடன் படமாக்குவதென்றால் பிரிவினை நிகழ்வுகளைத்தான் மையமாக எடுத்துக்கொண்டிருக்கவேண்டும்.

அலி, தி ஜேக்கி ராபின்சன் ஸ்டோரி, பிரைட் என எத்தனையோ அமெரிக்கப் படங்கள் கறுப்பர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் இன வெறி என்ற பிரச்னையை அதன் முழு வீச்சில் சித்திரித்து அதை மறுதலிக்கும் மனோபாவத்தை பார்வையாளர் மனத்தில் எழுப்பியிருக்கின்றன. சிவில் ரைட்ஸ் மூவ்மெண்டுக்கு அதுபோன்ற படைப்புகள் ஆற்றிய பங்கு கணிசமானது. ஒரு பிரச்னையைப் பேசினால்தானே அதைப் பற்றிய தீர்வைக் காண முடியும். இல்லவே இல்லை என்று கட்டிலுக்குக் கீழே மறைத்துவிட்டால் அது இல்லாமல் ஆகிவிடுமா என்ன? இந்திய பாகிஸ்தான் ஒற்றுமை என்பது இந்து முஸ்லீம், சீக்கியர் முஸ்லீம் ஒற்றுமை என்ற அடுக்குகளும் கொண்டதுதானே. பகைமையை முழு வீச்சில் காட்டினால்தானே நட்பின் வலிமைப் புரியவைக்கமுடியும். அந்த வகையில் மில்கா சிங் என்ற நம்பகத்தன்மை மிகுந்த கதையும் உத்வேகமூட்டும் கதாபாத்திரமும் கிடைத்த பிறகும் வழக்கமான இந்தி/ய சினிமாவின் தளத்தைவிட்டு ஒரு படிகூட மேலே எழும்பாமல் முடக்கியிருக்கிறார்கள். பறக்கும் வலிமை கொண்ட மில்கா சிங்கைப் படம் முழுக்க நொண்ட வைத்திருக்கிறார்கள். பிற இந்திய ராஜ நடைகளை ஒப்பிடும்போது மில்காவின் இந்த நொண்டியே அதி அற்புதம்தான் என்ற வகையில் இந்த மில்கா இந்திய மனங்களில் நீண்ட தூரம் வெற்றிகரமாக ஓடவே செய்வான். ஆனால், உலகம் இந்தியர்களால் மட்டுமே ஆனது அல்லவே.

0

சுமேரியர்களின் அறிவியல் முன்னேற்றம்

images (2)பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 8

உழுவதற்கான ஏர், நீர்ப்பாசன முறைகள், செங்கல், வளைவுகள், நகரமைப்புத் திட்டங்கள் போன்ற மனித குல முன்னேற்றத்தை விரைவாக்கிய ஏராளமான கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள் சுமேரியர்கள். இரும்பு, செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களைத் தயாரிக்கும் அறிவியல் முறை சுமேரியர்களுக்குப் பழக்கமானதாக இருந்தது. இந்த உலோகங்களால் விவசாயக் கருவிகள். வாள், ஈட்டி போன்ற யுத்த ஆயுதங்கள் தயாரித்தார்கள்.

கட்டடக் கலை, பொறியியல், வானியல், கணிதம் போன்ற பல்வேறு துறைகளில் சுமேரியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்த்திய சாதனைகள் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.

கட்டடக் கலை – வீடுகள்

விவசாயம் கல்லாவை நிரப்பியது. இந்த வருமானத்தால், சுமேரியர்கள் வசதியான வாழ்க்கை நடத்த முடிந்தது. களிமண்ணைப் பாளம் பாளமாகச் செய்து வெயிலில் காய வைத்து செங்கற்களால் வீடுகள் கட்டினார்கள். இவை சாதாரண வீடுகள் அல்ல. இரண்டு அல்லது மூன்று அறைகள் கொண்டவை. தங்கள் வசதிக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பலர் மாடி வீடுகள், பரந்து விரிந்த பங்களாக்கள் என வகை வகையாய்க் கட்டினார்கள். எல்லா வீடுகளின் நடுப்புறத்திலும் பெரிய முற்றம் இருக்கும். அறைகள் முற்றத்தை மையமாக வைத்துக் கட்டப்பட்டன. இதனால், வீடு வெயிலின் கடுமையால் பாதிக்கப்படாமல், குளிர்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை. இது அறிவியல் ரீதியான உண்மைதான் என்று இன்றைய சுற்றுப்புறச் சூழல் அறிஞர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்.

எல்லா வீடுகளும் குழாய்கள் மூலம் குடிநீர் பெறும் வசதி கொண்டவை. வீடுகளில் உலோகங்களாலான சமையல் பாத்திரங்கள் பயன்படுத்தினார்கள். பண்டமாற்று முறையில் இறக்குமதி செய்த மர வகைகளால் செய்யப்பட்ட நாற்காலிகள், மேசைகள், தட்டு முட்டுச் சாமான்கள் இருந்தன.

கட்டடக் கலை – அரண்மனைகள்

சாமானியர்கள் வாழும் வீடுகளிலேயே இத்தனை வசதிகள் என்றால், மன்னர்கள் வாழும் அரண்மனைகள் எப்படி இருக்கும்? பரந்த நிலப்பரப்புகளில் உயர்ந்து நின்ற படாடோபப் படைப்புகள் அவை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், காஃபாஜா (Khafajah), டெல் அஸ்மார் (Tel Asmar) ஆகிய இரண்டு இடங்களிலும் கட்டப்பட்டிருந்த அரண்மனைகள் பிரம்மாண்டமானவை. ஓவியங்கள், கலைப் பொருட்கள் ஆகியவற்றால் அற்புதமாக அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன.

உர் (Ur), மாரி (Mari) ஆகிய நகரங்களில் நடந்த அகழ்வாராய்ச்சி தந்திருக்கும் சிதிலங்கள், அரண்மனைகளின் சிறப்புகளுக்குச் சான்றுகள்.

பிற்காலங்களில், பிற நாடுகளில் எழுந்த மன்னர்களின் உறைவிடங்களுக்கும், சுமேரிய அரண்மனைகளுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. சுமேரிய அரண்மனைகளில் அரசர்களும், அவர்கள் குடும்பமும் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. இந்த வளாகத்தில், கட்டடப் பரமரிப்பாளர்கள், தச்சர்கள், கொத்தனார்கள், நீர்க்குழாய் பழுது பார்ப்பவர்கள், சிற்பிகள், ஓவியர்கள் ஆகியோரும் குடும்பத்துடன் தங்குவதற்கான வீடுகளை அரசர்கள் அளித்தார்கள். பட்டறைகள், உணவகங்கள், பொதுப் பொழுதுபோக்கு இடங்கள், அரங்கங்கள், கோவில்கள், இடுகாடுகள், ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில், அரண்மனை வளாகம் ஒரு வசதிகள் நிறைந்த நகரம்!

வாசல் கதவுகளிலும், முக்கிய கதவுகள் அருகிலும், பிரம்மாண்டமான கடவுள் சிலைகள் நிறுவப்பட்டன. உட்புறச் சுவர்கள் வரலாறு, கலை ஆகியவற்றின் பொக்கிஷங்கள். பெரிய கற்பாளங்களில், கலா நிகழ்ச்சிகள், அரச கட்டளைகள், அரசரின் போர் மற்றும் இதர வெற்றிகள் ஆகியவை செதுக்கப்பட்டு, சுவரில் பதிக்கப்பட்டன. அரண்மனையின் ஏராளமான இருக்கைகள் யானைத் தந்தங்களால் செய்யப்பட்டவை. அரியணை கலையம்சம் கொண்டதாக, தங்கம், முத்துகள் பதிக்கப்பட்டு காட்சியளித்தது. அரச சபை அருகே, பெரிய அரங்கம். முக்கிய நாட்களில், பொதுமக்களை மன்னர் இங்கே சந்திப்பார்.

கட்டடக் கலை – நகரங்கள்

மக்கள் கூடி வாழ்ந்த குடியிருப்புகள் நாளடைவில் நகரங்கள் ஆயின. இந்த நகரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குட்டி ராஜா வந்தார். இப்படி, பல நகரங்களைத் தன்னுள் அடக்கிய நாடாக மெஸப்பொட்டேமியா உருவானது. உர் நகரம்தான் உலகின் பழமையான நகரம். இது தவிர பாபிலோனா, உருக் (Uruk), எரிடு (Eridu), ஸிப்பர் (Sippar), ஷுரூப்பக் (Shuruppak), லார்ஸா (Larsa), நிப்பூர் (Nippur) ஆகியவையும் முக்கிய நகரங்கள்.

நகரங்கள், வீடுகள், கடைகள், பொது இடங்கள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. வீடுகள், வீதிகள், கடைகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என ஒவ்வொன்றும் எங்கெங்கே, எப்படி எப்படி அமையவேண்டும் என்று வரையறுக்கும் தெளிவான சட்டங்கள் இருந்தன. இந்த விதிகளை மன்னர்கூட மீற முடியாது.

கி.மு. 2100 ல் எழுதப்பட்ட கில்காமேஷ் காவியம் உருக் நகரத்தின் ஒவ்வொரு அம்சமும், எவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. எல்லா நகரங்களின் அருகிலும், விவசாய நிலங்கள், சிறு கிராமங்கள், கால்வாய் ஆகியவை கட்டாயமாக இருக்கவேண்டும். குடிநீர்த்தேவை, சாமான்கள் போக்குவரத்து ஆகியவை ஒழுங்காக நடப்பதற்காக இந்த ஏற்பாடு.

கட்டடக் கலை – தெருக்கள்

நகரங்களில், தெருக்கள் ஒழுங்கான வரிசை முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன. வரிசை வரிசையாக வீடுகள், அவை முடியும் இடத்தில் பிரம்மாண்டமாகக் கோவில். இந்தக் கோவில்களிலும் வீடுகளிலும் ஏராளமான சிற்பங்கள், வண்ண ஓவியங்கள், விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட உலோக வேலைப்பாடுகள் இருந்தன.

கட்டடக் கலை – பொறியியல்

கட்டக் கலைப் பொறியியலில் arch என்னும் வளைவுகள் மிக நுணுக்கமானவை, பல பிரம்மாண்டக் கட்டடங்கள், அணைகள், பாலங்கள் ஆகியவற்றுக்கு அடிப்படையானவை. இரண்டு தூண்கள் அல்லது தாங்கிகளுக்கு நடுவே இருக்கும் திறந்த இடைவெளியை இணைக்க, சாதாரணமாக, தூண் அல்லது உத்திரம் பயன்படும். வளைவான வடிவமைப்பைச் சுமேரியர்கள் கண்டுபிடித்தார்கள். பிற வடிவமைப்புகளைவிட, ஆர்ச்  பன்மடங்கு அதிகமான சுமையைத் தாங்கும். எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள் என்னும் கேள்வி, இன்றும் பொறியியல் வல்லுநர்கள் விடை காணாத வியப்புக் கேள்வி.

சக்கரங்கள் 

சுழற்சி என்றால் அசைவு, அசைவு என்றால் முன்னேற்றம். சுழற்சியைத் தருபவை சக்கரங்கள். மனிதகுல முனேற்றத்தில், சக்கரம் மிக முக்கியமானது. உராய்வு (friction) இல்லாமல் அசைவை உண்டாக்கச் சக்கரங்கள் அத்தியாவசியம். களிமண்ணால் செங்கற்கள் செய்து அணைகளும், வீடுகளும் செய்த சுமேரியர்கள், அடுத்து மண்பாண்டங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். முதலில் கைகளால் தயாரித்தார்கள். இயந்திரம் ஒன்று இருந்தால் வேலை சுளுவாகுமே என்று ஒரு சுமேரியன் மனதில் விளக்கு எரிந்தது: குயவர் சக்கரம் (Potter’s Wheel) வேலையை எளிமையாக்கியது, உற்பத்தியைப் பெருக்கியது.

சக்கரங்களை வைத்து, மாடுகள், குதிரைகள் பூட்டிய வண்டிகள் தயாரித்தார்கள். போக்குவரத்து தொடங்கியது. புதுப் புது இடங்களுக்குப் பயணம் செய்வது, புதிய மனிதர்களை சந்திப்பது, அவர்களோடு சமுதாய மற்றும் வியாபாரத் தொடர்புகள் தொடங்குவது. அவர்கள் கலாசாரத்திலிருந்து கற்றுக்கொள்வது என்று நம் மன ஜன்னல்களைத் திறந்துவைப்பதும், விசாலமாக்குவதும், போக்குவரத்துதான். இதைச் சாத்தியமாக்குவது சக்கரங்கள். இந்தச் சக்கரங்களைச் சாத்தியமாக்கியவர்கள் சுமேரியர்கள்.

சக்கரங்கள் இல்லையென்றால், நம் வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும். மாட்டு வண்டியால்தானே சைக்கிள் தோன்றியது, பிற இரட்டை சக்கர வாகனங்கள் வந்தன? கார்கள், விமானங்கள் வந்தன? இவை இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்துகூட நம்மால் பார்க்கமுடியுமா?

குயவர் சக்கரம் நம்மை எவ்வளவு தூரம் முன்னால் கொண்டுவந்திருக்கிறது தெரியுமா? எல்லா இயந்திரங்களின் உயிர்நாடியும் சக்கரங்கள்தாம். Gears  எனப்படும் பற்சக்கரங்கள் இல்லாவிட்டால், தொழிற்சாலைகளே கிடையாது.

கணித அறிவு

Babylonian_symbolsதீவாக வாழ்ந்த மக்கள் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். சமுதாய வாழ்கையை நெறிப்படுத்த, தங்களுக்குள்ளேயே ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள். தனி ஆளாக இவரால், நிர்வாகம் செய்ய முடியவில்லை. உதவியாளர்களைத் துணையாகச் சேர்த்துக்கொண்டார். நாள்பட நாள்பட, அரசாங்கம், அதிகாரிகள் என்னும் கட்டமைப்பு உருவானது. நிர்வாகச் செலவுக்குப் பணம் வேண்டுமே? ஒவ்வொரு குடும்பமும், அவர்களிடம் இருந்த நிலங்களுக்கு ஏற்றபடி. ஒரு குறிப்பட்ட தொகையை அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டும். வரிகளின் ரிஷிமூலம், நதிமூலம் இதுதான். எல்லோரும் ஒரே அளவு வரி தருவது நியாமல்ல. அதிக அளவு நிலங்களின் உடைமையாளர்கள் அதிக வரி தரவேண்டும், நில அளவுக்கு ஏற்ப வரி என்னும் சிந்தனை தொடங்கியது. நிலங்களின் நீளம், அகலம் அளக்கவேண்டுமே? கணிதம் பயன்படத் தொடங்கியது. மிக அடிப்படை நிலையில் இருந்த கணிதம் மாபெரும் வளர்ச்சிகள் கண்டதற்கு முக்கிய காரணம் வரி!

60 இலக்கங்கள் கொண்ட கணித முறையை சுமேரியர்கள் கண்டுபிடித்தார்கள்.

60 வது இலக்கம் எங்கே என்று தேடுகிறீர்களா? 1, 60 ஆகிய இரண்டு எண்களுக்கும் ஒரே இலக்கம்தான்.

100 என்கிற எண்தானே சாதாரணமாகப் பிரபலமானது? சுமேரியர்கள் ஏன் 60 இலக்கங்கள் கொண்ட கணிதமுறையைப் பயன்படுத்தினார்கள்? காரணம் இருக்கிறது.

நாம் கணிதம் படிக்கத் தொடங்கும்போது, எப்படி எண்ணுகிறோம், கூட்டல், கழித்தல் எப்படிக் கணக்குப் போடுகிறோம்? கை விரல்களால். பத்து விரல்களால். இதனால்தான், உலகின் ஏராளமான கணித முறைகள் 10 என்பதை அடிப்படையாகக்கொண்ட தசாமிச முறையில் (Decimal System) உள்ளன. சுமேரியர்களின் அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசம். நம் ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள். நம் கட்டை விரலில் 2 மூட்டுக்களும், மற்ற நான்கு விரல்களிலும் தலா 4 மூட்டுக்களும் உள்ளன. அதாவது ஒரு கையில், மொத்தம் 14 மூட்டுக்கள். சுமேரியர்கள் இவற்றுள் 2 மூட்டுக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, இரு கையில் 12 மூட்டுக்கள்தாம். 12 x 5 என்னும் அடிப்படையில் 60 இலக்கங்கள் கொண்டதாகக் கணித முறையை உருவாக்கினார்கள்.

நிலங்களை அளக்க மட்டுமல்ல, சதுரம், செவ்வகம், வட்டம் என நுணுக்கமான வடிவங்களின் பரப்பளவு காணவும் கணிதத்தைப் பயன்படுத்தும் தேர்ச்சி விரைவிலேயே அவர்களுக்கு வந்தது. ஒரு மணிநேரத்துக்கு 60 நிமிடங்கள் என்னும் கால அளவும், 60 இலக்க அடிப்படையில்தான் வந்திருக்கவேண்டும் என்பது அறிஞர்கள் கணிப்பு.

கணித அறிவு பொதுமக்களிடமும் பரவியிருந்தது. கூட்டல். கழித்தல், ஜியாமெட்ரி, ஆகிய கணக்கு வகைகளில் சாமானியருக்கும் தேர்ச்சி இருந்தது. பல கணிதச் சூத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அன்றாட வாழ்க்கையிலும், கட்டக் கலையிலும் மக்கள் இந்தச் சூத்திரங்களைப் பயன்படுத்தினார்கள்.

0

வரும்ம்ம்ம்ம், ஆனா வராது

shout-outஅம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 8

சில சினிமா வசனங்களைச் சொல்கிறேன், இவற்றிடையே என்ன ஒற்றுமை என்று கொஞ்சம் யோசியுங்கள்:

* அவ்வ்வ்வ்
* கெளம்பிட்டான்ய்யா… கெளம்பிட்டான்
* வரும்ம்ம்ம்ம், ஆனா வராது
* அவனாஆ நீஈ?
* அய்யோக்யப் பயலுகளா

இவை எல்லாம் காமெடி வசனங்கள், திரையில் வடிவேலு (அல்லது அவரது குழுவில் ஒருவர்) பேசிப் பெரும் புகழ் பெற்றவை, எந்த அளவுக்குப் புகழ் என்றால், இன்றைக்கும் குத்துமதிப்பாக ஏதாவது ஒரு சானலைத் தேர்ந்தெடுத்துப் போட்டால் அதில் இந்த வசனங்களில் ஏதாவது ஒன்று ஒலித்துக்கொண்டிருக்கும்.

ஆனால், மேலோட்டமாகப் பார்த்தால், இந்த வசனங்களில் நகைச்சுவை என்று பெரிதாக எதுவும் இல்லை. அவற்றைச் சொல்லும் விதத்தில்தான் புன்னகையோ பெருஞ்சிரிப்போ வருகிறது.

உதாரணமாக, ‘வரும், ஆனா வராது’ என்றால் கடுப்புதான் வரும், ‘வரும்ம்ம்ம், ஆனா வராது’ என்று சொன்னால் எப்படியோ சிரிப்பு வருகிறது. மற்ற வசனங்களும் இதேபோல்தான்.

இங்கே ‘வரும்’ என்ற சொல்லை வேண்டுமென்றே ‘வரும்ம்ம்’ என்று சற்றே அளவு நீட்டியிருக்கிறார் வசனம் பேசியவர். அதன்மூலம், தான் நினைத்த உணர்ச்சியை அங்கே கொண்டுவந்திருக்கிறார்.

வசனங்களில்மட்டுமல்ல, பாடல்களிலும் இந்த வழக்கம் உண்டு.

‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ என்று ஒரு பிரபலமான பாட்டைக் கேட்டிருப்பீர்கள். அதன் தொடக்கத்திலேயே, ‘காஆதல் கவிதைகள் படித்திடும் நேஏரம்’ என்று ஒலிப்பதைக் கேட்கலாம்.

அதே பாடலின் சரணத்தில், ‘பூ மாலைகள் கொஞ்சும், பாமாலைகள் கெஞ்சும்’ என்ற வரிகள் ‘கொஞ்சும்ம்’, ‘கெஞ்சும்ம்’ என்றுதான் ஒலிக்கின்றன. கேட்டுப்பாருங்கள்.

சினிமாவில்மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் இதைச் சாதாரணமாகப் பார்க்கலாம். ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் கிண்டலாகப் பேசியும்போது, ‘அவன் பெரிய்ய இவன்’ என்கிறோமே, அங்கே ‘பெரிய’ என்பது எப்படிப் ‘பெரிய்ய’ என்று மாறியது? ஏன் மாறியது?

சென்ற சில அத்தியாயங்களில் குறுக்கம், குற்றியலுகரம், குற்றியலிகரம் என்று சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட அளவில் ஒலிக்கும் சொல் ஒன்று, அதிலிருந்து குறைந்து ஒலிப்பதைப் பார்த்தோம். இப்போது அதற்கு நேர் எதிராக, ‘வரும்’ என்பது ‘வரும்ம்ம்ம்’ என்று நீள்வதுபோல, ‘பெரிய’ என்பது ‘பெரிய்ய’ என்று மாறுவதுபோல, சில எழுத்துகள் வெவ்வேறு காரணங்களுக்காக அளவில் மிகுந்து ஒலிப்பதைப் பார்க்கவிருக்கிறோம்.

இதற்கான இலக்கணப் பெயர், அளபெடை!

குறுக்கம், குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவற்றுக்கும் அளபெடைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம், அங்கே எழுத்துகள் தானாகக் குறுகும், அவை குறுகாமல் இயல்பாக ஒலிக்கும் வாய்ப்பே கிடையாது.

ஆனால் அளபெடை என்பது அப்படியல்ல, பெரும்பாலான நேரங்களில் எழுதுகிறவர் (அல்லது பேசுகிறவர்) வேண்டுமென்றே அதனை நீட்டுவார், அவர் விரும்பினால் அதனை நீட்டாமல் அப்படியே விடலாம். அப்போதும் அதற்குப் பொருள் இருக்கும்.

உதாரணமாக, ‘வரும்’ என்பது பொருளுள்ள ஒரு வார்த்தை, அதனை ‘வரும்ம்’ என்று இழுத்தால் அது அளபெடை. ஒருவர் தன் விருப்பப்படி இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

‘அளபு’ என்பதன் பொருள், ‘அளவு’, ஆங்கிலத்தில் Measurement. அளபெடுத்தல் என்றால், இந்த அளவுதான் இருக்கவேண்டும் என்று வரையறுத்த ஓர் எழுத்து, அதிலிருந்து மிகுந்து ஒலிப்பது.

உதாரணமாக, ‘வரும்ம்ம்ம்’ என்பதில் அரை மாத்திரை ஒலிக்கவேண்டிய ‘ம்’, நிறைய நீண்டு ஒரு மாத்திரைக்குமேல் ஒலிக்கிறது. ‘காஆதல்’ என்பதில் இரண்டு மாத்திரைகள்மட்டுமே ஒலிக்கவேண்டிய ‘கா’, அதைவிட இன்னும் அதிகமாக நீண்டு ஒலிக்கிறது.

அளபெடையைப் பல கோணங்களில் வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் அடிப்படையாக இரண்டு வகைகள், உயிரளபெடை, ஒற்றளபெடை.

பெயரைக் கேட்டாலே விளக்கம் தேவைப்படாது, உயிரெழுத்து (அல்லது அதன் குடும்பமான உயிர்மெய்யெழுத்து) அளவு மிகுந்து ஒலித்தால், உயிரளபெடை. மெய்யெழுத்து அளவு மிகுந்து ஒலித்தால், ஒற்றளபெடை.

உயிரெழுத்தில் ஏழு நெடில்களும் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ), அவற்றைச் சார்ந்த உயிர்மெய் எழுத்துகளும் தங்களுக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து நீண்டு ஒலிப்பதைதான் உயிரளபெடை (உயிர் + அளபெடை) என்கிறோம். உதாரணமாக, மேலே நாம் பார்த்த ‘காதல் கவிதைகள்’ என்பதில் முதல் எழுத்து ‘கா’ நீண்டு ஒலிக்கிறது.

ஆனால், எப்போது இப்படி நீட்டி உச்சரிக்கவேண்டும், எப்போது இயல்பாக உச்சரிக்கவேண்டும் என்கிற வித்தியாசம் வாசிப்பவர்களுக்குத் தெரியவேண்டுமல்லவா? அப்படி அளபெடையைக் குறிப்பிடுவதற்காக, உயிர் அல்லது உயிர்மெய் நெடிலைத் தொடர்ந்து அதன் இன எழுத்தை ஒருமுறை எழுதுவார்கள். இதற்கான தொல்காப்பியச் சூத்திரம்:

இன எழுத்துகளைப்பற்றி நாம் ஏற்கெனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். நினைவில் இல்லாவிட்டால் அந்த அத்தியாயத்தைத் தேடிப் பிடித்துப் படித்துவிடுங்கள்.

இங்கே, ‘காதல்’ என்பதைக் ‘காஅதல்’ என்று எழுதுவார்கள். ஏனெனில், ‘கா’ என்பதில் உள்ள ’ஆ’ என்பது நெடில், அதன் இன எழுத்து ‘அ’, ஆகவே, ‘காஅதல்’ என்று அளபெடையைக் குறிப்பிடுகிறோம்.

இன்னொரு பாட்டு, ‘கீதம் சங்கீதம்’ என்று வரும், அங்கே ‘கீ’ என்பது நீண்டு ஒலிக்கும், அதனைக் ‘கீஇதம்’ என்று எழுதவேண்டும். ‘ஈ’ நெடிலின் இன எழுத்து ‘இ’ குறில்.

ஆனால், ஐ, ஔ என்ற நெடில்களுக்குக் குறில் கிடையாதே. அவற்றை எப்படி அளபெடையில் குறிப்பிடுவது?

இதற்குத் தொல்காப்பியம் தரும் சூத்திரம்:

ஐ, ஔ என்னும் ஆ ஈர் எழுத்திற்கு
இகரம் உகரம் இசை நிறைவு ஆகும்

அதாவது, ஐ, ஔ என்ற எழுத்துகளின் இசையை நிறைக்க (அளவு நீளுதலைக் குறிப்பிட), முறையே இ மற்றும் உ என்ற எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.

ஆக, உயிரளபெடையில் மொத்தம் ஏழு வகை:

* ஆஅ
* ஈஇ
* ஊஉ
* ஏஎ
* ஐஇ
* ஓஒ
* ஔஉ

அது சரி, உண்மையில் இந்த அளபெடையின் நோக்கம்தான் என்ன? ‘காஅதல்’, ‘கீஇதம்’ என்று இல்லாமல் அதைக் ‘காதல்’, ‘கீதம்’ என்று உச்சரித்தால் என்ன கெட்டுப்போய்விடும்?

நீங்களே பாடிப் பாருங்கள், இசை கெட்டுப்போய்விடும் என்பது புரியும். பாடலின் தன்மைக்கு ஏற்ப ஒரு நெடிலைச் சற்றே நீண்டு ஒலிக்கச் செய்கிறார்கள். அது காதுக்கு இனிமையாக இருக்கிறது. தொல்காப்பியம் இதனை ‘இசை நிறைத்தல்’ என்று அழகாகக் குறிப்பிடும்.

ஏற்கெனவே, உணர்ச்சிகளைச் சரியான விகிதத்தில் தெரியப்படுத்துவதற்காக அளபெடையைப் பயன்படுத்தலாம் என்று பார்த்தோம், வடிவேலு காமெடி உதாரணங்களுடன்.

இந்த இரண்டு தவிர, இன்னும் சில காரணங்களும் உண்டு.

நிறைய சினிமா உதாரணங்களைப் பார்த்துவிட்டோம், இப்போது ஓர் இலக்கிய உதாரணம், திருக்குறளில் அளபெடையை நிறைய பார்க்கலாம். உயிரளபெடைக்கு உதாரணமாக இந்தக் குறள், இதுவும் ‘காஅதல் கவிதை’தான்:

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்

காதலன் லாப்டாப்பைத் தோளில் மாட்டிக்கொண்டு கம்பெனி பஸ்ஸில் புறப்பட்டுச் சென்றுவிடுகிறான். அவனைப் பிரிந்து வாடும் காதலி சொல்கிறாள், ‘அவனுக்கு வேலை முக்கியம், கிளம்பிப் போய்ட்டான், அவன் வருவான்னு ஆசைப்பட்டுகிட்டு நான் இன்னும் இருக்கேன்.’

அந்த ‘இன்னும் உளேன்’ என்பதில் உள்ள ‘உம்’முக்குள் பொங்கும் உணர்ச்சிகளை வியக்க இப்போது நேரம் இல்லை, நம் பாடத்துக்கு ஏற்ப ‘நசைஇ’ என்ற சொல்லைமட்டும் கவனிப்போம்.

‘நசை’ என்றால் விருப்பம். அதில் வரும் ‘சை’ என்ற எழுத்தை, அதில் வரும் ‘ஐ’ என்ற நெடிலைக் கொஞ்சம் நீட்டி, அதன் இன எழுத்தாகிய ‘இ’யைச் சேர்த்து ‘நசைஇ’ என்கிறார் வள்ளுவர்.

இங்கே அளபெடையின் நோக்கம் இசையை ஒழுங்கு செய்வது அல்ல, இந்த அளபெடுத்தலினால், பெயர்ச்சொல்(Noun)லாக இருந்த ‘நசை’, இப்போது வினைச்சொல்(Verb)லாகிவிட்டது. (இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினையெச்சமாகிவிட்டது, அதைப் பற்றிப் பின்னால் விரிவாகப் பார்க்கலாம்) அதாவது, ‘விருப்பம்’ என்பது மாறி, அது ‘விரும்பி’ என்ற பொருளைத் தரத் தொடங்கிவிட்டது.

இப்படி அளபெடை என்பது எதற்காகச் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அதில் பல வகைகள் உண்டு. அந்த பட்டியலைப் பார்ப்பதற்குமுன்னால், உயிரளபெடை எங்கெல்லாம் வரும் என்று தெரிந்துகொள்வோம்:

* ஒரு சொல்லின் தொடக்கத்தில்
* சொல்லின் நடுவே
* சொல்லின் நிறைவாக

உதாரணமாக, நாம் ஏற்கெனவே பார்த்த ‘காஅதல்’ என்பதில், சொல்லின் தொடக்கத்தில் உயிரளபெடை வருகிறது, ‘நசைஇ’ என்பதில், சொல்லின் நிறைவாக உயிரளபெடை வருகிறது. ’வருவதூஉம்’, ‘எடுப்பதூஉம்’, ‘செறீஇய’ போன்ற உதாரணங்களில் சொல்லின் நடுவே உயிரளபெடை வருகிறது.

‘நசைஇ’, ‘செறீஇய’ என்றெல்லாம் நாம் பேசுவதில்லையே, வேறு எளிய உதாரணங்களைத் தரக்கூடாதா?

தாராளமாக, சினிமாப் பாட்டிலேயே உதாரணம் சொல்லலாம், ‘ஆத்தாடி இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது சரிதானா’ என்ற பாடலின் முதல் வரியைக் கேளுங்கள்.

‘ஆத்தாடி’ என்ற சொல்லில் ‘ஆ’ இயல்பாகதான் ஒலிக்கிறது, ஆனால் ‘தா’ என்பது நீண்டு ஒலிக்கிறது, ‘டி’ என்ற குறில்கூட, ‘டீ’ என்று நீட்டப்பட்டு, பின்னர் இன்னும் நீண்டு ஒலிக்கிறது. இதேபோல் ‘சரிதானா’ என்பதிலும் ‘தா’ என்ற நெடில் இயல்பாக ஒலிக்க, ‘னா’ என்ற நெடில் நீண்டு ஒலிக்கிறது.

ஆக, இதனைச் செய்யுளில் எழுதினால் ‘ஆத்தாஅடீஇ’, ‘சரிதானாஅ’ என்று எழுதுவோம். அவற்றைப் படிக்கும்போது அந்தந்த இடத்தில் நீட்டிப் படிப்போம்.

இன்னும் சொல்லப்போனால், நாம் அதனைச் ‘சரிதானாஅ’ என்று எழுதுவதும் தவறு, ’சரிதானாஅஅ’ என்று எழுதினால்தான் சரி!

எதற்கு இரட்டைக் குறில்?

இதனை ‘ஈரளபெடை’ என்பார்கள். அதாவது, இரட்டை அளபெடை.

‘சரிதானா’ என்பதில், ‘னா’ என்ற நெடில் சாதாரணமான அளபெடையைவிட இருமடங்காக (அல்லது அதைவிடவும் அதிகமாக) நீண்டு ஒலிக்கிறது. அதனால்தான் ‘னாஅ’ என்று எழுதுவதற்குப் பதில் ‘னாஅஅ’ என்று இரட்டைக் குறில்களால் அதனைக் குறிப்பிடுகிறோம்.

நெடில் சரி, குறில் அளபெடுக்குமா?

சரியான பதில், ‘இல்லை’, ஆனால் கொஞ்சம் சுற்றி வளைத்து ’ஆமாம்’ என்றும் சொல்லலாம். காரணம், குறில் அளபெடுத்தால், தன்னுடைய இயல்பான அளவாகிய ஒரு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலித்தால், உடனே அது நெடிலாகிவிடுகிறது, அதன்பிறகு, அந்த நெடில் அளபெடுக்கமுடியும்.

உதாரணமாக, நாம் மேலே பார்த்த ‘ஆத்தாடி’ என்பதில் வரும் ‘டி’ என்ற குறில் ‘டீ’ என்ற நெடிலாக மாறி, அதன்பிறகு அளபெடுக்கிறது. வெறுமனே ‘டி’ என்ற குறில் தானாக அளபெடுக்கமுடியாது, வேண்டுமானால் சொல்லிப்பாருங்கள், கேட்பதற்கு நன்றாக இருக்காது.

ஆக, இரண்டு மாத்திரை நெடில் அளபெடுக்கும், ஒரு மாத்திரைக் குறில் அளபெடுக்காது. அப்படியானால், அரை மாத்திரை உள்ள மெய் எழுத்துகள்?

அவை தாராளமாக அளபெடுக்கும். ‘வரும்ம்ம்ம்’ என்று ஏற்கெனவே உதாரணம் பார்த்திருக்கிறோம்.

மெய்யெழுத்துகள் அளபெடுப்பதை ‘ஒற்றளபெடை’ என்று அழைக்கிறோம். ஒற்று + அளபெடை.

மொத்தம் பதினெட்டு மெய்யெழுத்துகள் உண்டு. ஆனால் அவை எல்லாம் அளபெடுக்காது. அவற்றுள் பத்து எழுத்துகளும், ஆய்த எழுத்து ஒன்றுமாக, ஒற்றளபெடையில் மொத்தம் 11 வகை:

அந்தப் பதினொரு எழுத்துகள்: ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், ஃ. இவை அளபெடுக்கும்போது (இயல்பிலிருந்து நீண்டு ஒலிக்கும்போது) அதே உயிரெழுத்தைப் பக்கத்தில் இன்னொருமுறை எழுதுவார்கள்.

உதாரணமாக, ‘வரும்’ என்றால் அது அளபெடை இல்லை. அதையே ‘வரும்ம்’ என்று எழுதினால், அங்கே மெய்யெழுத்து (ம்) நீண்டு ஒலிக்கிறது என்று பொருள்.

உயிரளபெடை சொல்லின் முதலில், நடுவே, நிறைவில் என மூன்று இடங்களில் வரும் என்று பார்த்தோம். ஒற்றளபெடை சொல்லின் நடுவிலும் நிறைவிலும்தான் வரும். காரணம், மெய்யெழுத்துகள் சொல்லின் தொடக்கத்தில் இடம்பெறாது.

உதாரணங்கள்:

* சொல்லின் நடுவே: அங்ங்கே பார்த்தேன், கெஞ்ஞ்சிக் கேட்டேன்!
* சொல்லின் நிறைவில்: தங்கம்ம், என்மேல் இரக்கம்ம் காட்டக்கூடாதா?

உயிரளபெடையும் சரி, ஒற்றளபெடையும் சரி, செய்யுள்கள், இசைப்பாடல்களில் குறியீடுகளாகக் காண்பிக்கப்படும், இயல்பாக நம் பேச்சிலும் பயன்படும், ஆனால் உரைநடையாக எழுதும்போது அவற்றை நாம் பயன்படுத்துவதில்லை. அப்படிப் பயன்படுத்தினாலும் தவறில்லை. வாசிப்பவர்களுக்குப் புரிந்தால் சரி.

உண்மையில், அளபெடை என்பது வெறும் இலக்கண உத்திமட்டுமல்ல, அதை இன்னும் Creativeஆகப் பயன்படுத்திப் பல நுட்பமான விஷயங்களைச் செய்யமுடியும், செய்திருக்கிறார்கள், உதாரணமாக, இந்தப் பாடல்:

‘மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்’ என்ப; யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇப் பசந்தன்று, நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே!

குறுந்தொகையில் கபிலர் எழுதிய பாடல் இது. மிகச் சுவாரஸ்யமான காஅதல் பாட்டு.

விஷயம் இதுதான், காதலியைப் பிரிந்து சென்றான் ஒரு காதலன், அப்போது ‘கடவுள் மேல் ஆணையாக இந்தத் தேதிக்குள் திரும்பி வருவேன்’ என்று அவளிடம் ஒரு சத்தியம் செய்தான்.

இந்த ஆம்பளைப் பயல்கள் எப்போ வாக்குப்படி நடந்திருக்கிறார்கள்? சொன்ன தேதியில் அவன் திரும்பி வரவில்லை. எப்போது வருவேன் என்று ஈமெயில்கூட அனுப்பவில்லை.

இப்போது, காதலிக்கு இரண்டு பிரச்னைகள், ஒருபக்கம், அவனைப் பிரிந்த துயரம், ’அவன் எப்ப வருவானோ!’ என்கிற ஏக்கம், இன்னொருபக்கம், சத்தியத்தை மீறியதற்காக அவனைக் கடவுள் தண்டித்துவிடுமோ என்கிற கவலை. அவள் கடவுளிடம் சென்று அவனுக்காகப் பரிந்து பேசுகிறாள்:

‘இந்த மன்றத்தின் மரங்களில் குடிகொண்டிருக்கும் முதிர்ந்த தெய்வங்களே, உங்களை வணங்குகிறேன்,

சொன்ன சொல் தவறுகிற கொடியவர்களை நீங்கள் தண்டித்துவிடுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும்.

என் காதலன் கொடியவன் அல்லன். என்னிடம் அவன் திரும்பி வருவதாகச் சத்தியம் செய்தது உண்மைதான். உரிய காலத்தில் திரும்பாததும் உண்மைதான்.

ஆனால், அவனால் என்னுடைய நெற்றியில் பசலை படர்ந்தது, தோளெல்லாம் நெகிழ்ந்துவிட்டது என்று ஊர் பேசுகிறது. இது உண்மை அல்ல, பொய்.

என்னுடைய மனத்தில் அவன்மீது காதல் தோன்றியது. அது பெருகிய வேகத்தால்தான் எனது நெற்றிமீது பசலை படர்ந்தது, எனது தோள்கள் நெகிழ்ந்தன, இதற்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, எனக்காகக் கோபப்பட்டு அவனைத் தண்டித்துவிடாதீர்கள்.’

என்னதான் காதலன் சொன்ன சொல்லைக் காப்பாற்றாவிட்டாலும், அவன்மீது இவளுக்குக் கோபம் இல்லை, அக்கறைதான், அவனைக் கடவுள் தண்டித்துவிடுமோ என்கிற பயம்தான். அதைப் பாட்டில் எழுத வரும் கபிலர், ஊரார் பேச்சை அவள் சொல்லும்போது வரிசையாக மூன்று அளபெடைகளைப் பயன்படுத்துகிறார்: ‘மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள் கொடியோர்த் தெரூஉம்’.

இந்த வரியை இன்னொருமுறை படித்துப் பாருங்கள், அவளுடைய குரல் பயத்தில் நடுங்குவதுபோல் கேட்கிறதல்லவா?

கபிலர் இதற்காகதான் அந்தப் பாடலை அளபெடைகளால் நிறைத்திருப்பதாக அ. வெ. சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். மிகவும் சுவாரஸ்யமான பார்வை!

அளபெடைகளைப்பற்றிச் சொல்வதற்கு இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது. அவற்றை அடுத்த வாரம் பார்க்கலாம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* அளபு, அளபெடுத்தல், அளபெடை
* உயிரளபெடை (7)
* ஒற்றளபெடை (11)
* சொல்லின் முதலில், நடுவே, நிறைவில் வரும் அளபெடைகள்
* ஈரளபெடை

0

அமர்த்தியா சென்னும் அதிகாரமும்

TH26_AMARTYA_SEN_19761fகடந்த பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற உலகப் புத்தகக் கண்காட்சியில் முதல் முறையாக அமர்த்தியா சென்னைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. கூகிள் ஹாலில்  (எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், கவிஞர் என்று தினம் ஒரு பிரமுகர் கலந்துகொண்டு உரையாடும் பெரிய அரங்கம் அது) முதல் நாள் அமர்த்தியா சென், நடிகர் ஷர்மிளா தாகூர் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். இருக்கையில் இடமில்லாததால் தரையில் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது. அரங்கத்தின் ஓரங்களில் வரிசையாக இன்னொரு கூட்டம். முண்டியடித்து செல்ஃபோனில் படம் பிடிக்க மற்றொரு தனிக்கூட்டம். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

பங்களாதேஷை இந்தியாவோடு ஒப்பிட்டுப் பேசினார் அமர்த்தியா சென். அடிப்படை சுகாதார வசதிகளில் இந்தியாவைவிட பங்களாதேஷ் முன்னேறியிருக்கிறது. இன்னமும் இந்தியாவில் சாலை, குடிநீர், சுகாதாரம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளே செய்துதரப்படவில்லை. இடது, வலது பேதமின்றி அரசியல் கட்சிகள் மக்கள் நலனை உதாசீனம் செய்கின்றன. இந்தியாவில் இன்னமும் பெரும்பலானானோருக்குக் கழிப்பிட வசதியே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி வருந்தினார். பங்களாதேஷ் இதில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளதைப் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார்.

அமர்த்தியா சென் இடதுசாரி அல்ல. அவர் உலகமயமாக்கலையும் சந்தைப் பொருளாதாரத்தையும் நிராகரிப்பவர் அல்லர். ஆனால் வளர்ச்சி சரியான விகிதத்தில் பங்கிடப்படவில்லை என்னும் ஆதங்கத்தை சுமந்து நிற்கும் ஒரு பொருளாதார நிபுணர். பசி குறித்தும் பஞ்சம் குறித்தும் ஆய்வு செய்தவர் என்னும் அடிப்படையில் இந்தியாவில் பசி இன்னமும் தீராத நோயாக இருப்பதையும் சந்தைப் பொருளாதாரம் பெரும்பாலான மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை என்பதையும் அவர் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறார்.

தற்போது அமர்த்தியா சென் இரு காரணங்களுக்காக விவாதத்தில் இருக்கிறார். ஒன்று, ஜகதிஷ் பகவதி விவகாரம். இதைப் பற்றி எளிமையான அறிமுகம் கிடைக்க இந்தக் கட்டுரையை வாசியுங்கள். இரண்டாவது, மோடி பற்றி அவர் உதிர்த்த கருத்து. மோடி பிரதமராவதை தான் விரும்பவில்லை என்று சொன்னதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட பாரத் ரத்னா விருதைப் பறிக்கவேண்டும் என்று பாஜக தரப்பில் இருந்து எழுந்துள்ள கண்டனத்துக்குரிய ஒரு குரல்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட சமயத்தில் அமெரிக்கப் பொருளாதார நிபுணரான ஜோசப் ஸ்டிக்ளிட்டிஸ் (Joseph Stiglitz) அரசின் பெயில் அவுட் திட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்த காரணத்தால் பராக் ஒபாமா அவரை ஒரு கட்டத்தில் கழற்றிவிட்டுவிட்டார்.

அமர்த்தியா சென்னைப் போலவே ஸ்டிக்ளிட்ஸும் நோபல் பரிசு பெற்றவர். சென்னைப் போலவே அவரும் இடதுசாரி அல்லர். மோடி பிடிக்கவில்லை என்று சொன்னால் அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவையும், முடிந்தால் நோபலையும் பறிக்கவேண்டும். ஒபாமா நிர்வாகத்தைக் குறை கூறினால் ஸ்டிக்ளிட்ஸ் விலகவேண்டும்.

தனக்குப் பிடித்த செய்திகளை, தனக்குப் பிடிக்கும் தொனியில் சொல்பவர்களை மட்டுமே அதிகாரம் விரும்புகிறது.

0